Kathambari Novels
அத்தியாயம் – 14
அவனைக் காண போகிறோம் என்ற சந்தோஷத்தைவிட, எடுத்த முடிவினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ என்ற பயம்தான் அதிகமாக இருந்தது!
நேற்றைய நிகழ்வின் தாக்கத்தினால் எடுத்த முடிவு! முந்தைய தினம் செய்த செயலிற்காக ‘அவள் மனம் சரியில்லை. சின்னப்பெண்’ என்று சப்பைக்கட்டு கட்டவே முயன்றிருந்தார் மாவ்ஷி. தான் செய்தது சரியென்று கைகோர்த்துக் கொள்ள தன்னுடன் இருப்பவர்களே முன்வரவில்லை என்றால், சமூகம் எப்படி முன்வரும்?
அந்த சமூகத்தில்தானே அவனுடன் சேர்ந்து வாழவேண்டும். அப்போது அவன் என்னென்ன சங்கடங்கள் சந்திக்க நேரிடுமோ என்ற கவலை அவளுக்குள் சஞ்சலங்களாக மாறியதால்… இந்த முடிவுவை எடுத்திருந்தாள்!
அவனிடத்து முடிவை சொல்வதற்காக தயாரானவள், மாவ்ஷியிடம் சென்று நின்றாள். ‘திரும்பவும் எதற்கு வந்து நிற்கிறாள்’ என்று பார்த்தார் மாவ்ஷி.
“கொஞ்சம் நேரம் வெளியே போகணும்” என்று அனுமதி கேட்டாள்.
இதைக் கேட்டிட அவளுக்கு முழுதாக ஒரு நிமிடம் தேவைப்பட்டது. அத்தனை தயக்கம் கேட்பதில்! அத்துனை தெளிவின்மை மனதில்! விழிகள் பதட்டத்தில் அங்குமிங்குமாக சுழன்றன! அங்கங்கே வியர்வைத் துளிகள்கூட அரும்பியது! சம்மதிப்பாரா என்று சந்தேகமும் வந்தது!!
ஆனால் மாவ்ஷி, “போ” என்றார் எளிதாக. அவரை ஆச்சரியமாகப் பார்த்தன பழுப்பு விழிகள். “போன்னு சொல்றேன்ல” என்றார்.
சரியென வெளியேறியவளைப் பார்த்திருந்த மாவ்ஷிக்குள் பல சந்தேகங்கள். இவளுக்கு என்னாயிற்று? யாரிடமும் சென்று மாட்டிக் கொண்டாளா? இப்படி இன்னும் பல!
‘திரும்பி வருவாளா?’ என்றுகூட சந்தேகம் இருந்தது!
***********************
ஆட்டோ பிடித்து அவனது வீட்டிற்குச் சென்றாள். அங்கே அவன் இல்லாததால், ஒருகணம் என்ன செய்ய என்று தெரியாமல் நின்றாள். அப்போதுதான், அவன் ‘ரிசார்ட் வேலையில் பிஸியா இருப்பேன்’ என்றது ஞாபகத்தில் வந்தது.
வீடு இருந்த சாலைக்கு இணையான பின்புறச் சாலைக்கு ஆட்டோவைப் போகச் சொன்னாள். அந்தச் சாலையில் பல கட்டிடங்கள் இருந்தன. அவன் சொன்னதை மீண்டும் யோசித்துப் பார்த்தாள். ‘ஸ்டார் டவர்ஸ்’ என்று அவன் சொன்னது ஞாபத்தில் இருந்தது.
ஆட்டோவிலிருந்து இறங்கியவள், ‘ஸ்டார் டவர்ஸ்’ என்ற பெயர் கொண்ட ஒரு கண்ணாடி கட்டிடத்தினுள் நுழைந்தாள். அவன் சொன்னது போல் ஐந்தாவது தளத்தை நோக்கி நடந்தாள்.
தளத்தை வந்தடைந்தவளுக்கு அதன்பின் எட்டுகள் வைத்திட மிக தயக்கமாக இருந்தது. ஏனெனில் அவள் எடுத்த முடிவு அப்படியொரு பெரிய தயக்கத்தை அவளுக்குள்ளே ஏற்படுத்தியிருந்தது. இந்த முடிவு சரியா? தவறா? என்றுகூட தெரியவில்லை.
தனக்கு சரியாக தெரியாத ஒன்றை அவனுக்கு எப்படி தன்னால் புரிய வைக்க முடியும்? அவன் எப்படி இதை எடுத்துக் கொள்வானோ? தவறான அடி எடுத்து வைக்கிறோமோ? யாருடைய அறிவுறையோ, அக்கறையோ கிடைக்குமா என ஏங்கினாள்.
தளம் முழுவதும் அவன் அலுவலகமா? தெரியவில்லை. அங்கே அமர்ந்திருந்த செக்யூரிட்டியிடம் வந்து நின்றாள். அவர், ‘என்ன வேண்டும்?’ என்று இந்தியில் கேட்டார். ‘சார் பார்க்கனும்’ என்று அவளுக்கு தெரிந்த இந்தியில் கூறினாள்.
“ஷாப் மத்லப் கோன் சே ஷாப்? நாம் கியா ஹே? (பெயர் என்ன)”
அவளுக்குத்தான் பெயர் தெரியாதே! என்ன சொல்வதென்று யோசித்தவள், “ரிசார்ட் கா ஓனர்” என்று சமாளித்தாள்.
“அப்பாயின்மென்ட் ஹே கியா யா நஹி? (அப்பாயின்மென்ட் இருக்கா இல்லயா)”
“நஹி, லேக்கின்…” என்று வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள்.
“அப்பாயின்மென்ட் நஹி ஹே தோ கெய்சே மில்லேங்கே? (அப்பாயின்மென்ட் இல்லைனா எப்படி பார்க்க முடியும்?)”
ஏதோ அவள் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதுதான், அந்தப் பக்கமாக வந்து அலுவலகத்தினுள் போவதற்காக ஒருவன் நின்றான். இவள் செக்யூரிட்டியிடம் மன்றாடுவதைப் பார்த்து, ‘யார்?’ என்று விவரம் கேட்டான்.
‘எம்டி சார பார்க்கணுமாம். ஆனா அப்பாயின்மென்ட் இல்ல’ என்று இந்தியில் விளக்கம் தந்தார் பாதுகாவலர். சரியென அந்தப் புதியவன் சென்றுவிட்டான்.
அலுவலகத்தின் உள்ளே… புதிய விருந்தினர் விடுதிக்கு (Resort) சிறுசிறு வேலைகளுக்கான ஆட்கள் எடுப்பு, விளம்பரம் தொடர்பான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. ‘பார்மல் மீட்டிங்’ என்று சொல்வார்களே… இங்கே அதுபோல் கிடையாது!
நண்பர்களாக நின்று பேசினால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது. அவரவர் பகிர்ந்து கொள்ள நினைக்கின்ற கருத்துக்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அந்தப் புதியவன் உள்ளே வந்து, “டூட்(dude), எ கேர்ள் இஸ் அவுட்சைட் அண்ட் ஷீ வான்ட்ஸ் டூ மீட் யூ” என்று நீலவிழிகளிடம் சொல்லிவிட்டு, அவனுக்கான இடத்தில் அமர்ந்து கொண்டான்.
நீலவிழிகளுக்குப் புரிந்து போயிற்று யாரென்று! “கைய்ஸ் ஒன் மினிட்” என்று வெளியே ஓடி வந்தவனிடம், “ஸாப் யே லடுக்கி?” என்றார் பாதுகாவலர்.
“முஜ்யெ பதா ஹே (எனக்கு தெரியும்)” என்று சொல்லி, சுவரில் சாய்ந்து நின்று தனக்குத்தானே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்துவிட்டு, சிரித்தபடி அவளருகில் வந்து நின்றான். அவள் கோபமாகப் பார்த்தாள்.
“ஹே! நான் என்ன பண்ணேன்?”
இன்னும் கோபம் தீராதவளாய் அவனை முறைத்தாள்.
“அப்புறம் சொல்லு… இவ்ளோ நேரம்தான் நான் இல்லாம உன்னால சமாளிக்க முடியுமா?” என்றான், தீராத நேசத்தால் ஓயாத காதலைத் தரும் காதலனாய்!
அந்தத் திகட்டாத தித்திப்பில் திக்குமுக்காடினாள்!
“இது உனக்கு தேவையா? உன்னோட ஆபிஸ்ல நீயே வெளிய நிக்க வேண்டிய நிலைமை” என்றான்.
அதுவரை பிடித்து வைத்திருந்த பொறுமை போனவளாய், “முதல இவர்கிட்ட பர்மிஷன் கேட்டு… என்னை உள்ள கூட்டிட்டுப் போ” என்று பாதுகாவலரைக் கைகாட்டினாள்!
“சூப்பர்! நல்லா கன்பீயூஸ் ஆகிருக்க போல” என்றான், அன்றைய அவளின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டவனாய்!
ஒருகணம் அவளுக்கு, ‘அவன் சொல்வது போல குழப்பத்தில் இருக்கிறேனோ? அதனால்தான் இப்படி ஒரு முடிவோ?’ என்று உடல் நடுங்கியது. இருந்தாலுமே, “ஏன் இப்படி சொல்ற?” என்றாள்.
“ஹே என்ன கேள்வி இது? நான் ஏன் அவர்கிட்ட கேட்கணும்? உள்ள வா” என்று
அவளை உள்ளே அழைத்து வந்து, “நீ சொல்லிருக்கணும்” என ஆரம்பித்தான்.
“என்ன சொல்லணும்?”
“இன்னும் கொஞ்ச நாள்லயே நமக்கு மேரேஜ் ஆகப்போதுனு, நான்தான் உங்க ப்யூச்சர் பாஸா ஆகப்போறேன்னு! அதனால என்னை உள்ளே விடுங்க அப்படி இப்படினு நீ சொல்லிருந்தா, எந்த கேள்வியும் கேட்காம உள்ள விட்டுருப்பாரு” என்று அலப்பறைகள் செய்தான்.
“எனக்கு இவ்வளவு நீளமா ஹிந்தி பேச வராதே” என்றாள் மனதில் இருப்பதை இம்முறை மறைக்காமல்!
“அப்போ தெரிஞ்சா இதைத்தான் சொல்லிருப்பியா?” என்றான் ஆர்வங்கள் அணிவகுக்க!!
“நானே அவர் உள்ள விடலைன்னு கோபமா இருக்கேன். நீ வேற”
“அதுக்கும் நீதான் காரணம்”
“நானா… நான் எப்படி?” என்றாள் சந்தேகமாக.
“பேர்தான் வேண்டாம்னு சொன்ன, அது புரிஞ்சிக்க முடியுது! பட் என் ஃபோன் நம்பர் வாங்கிருக்கலாம்ல?”
“அது இருக்கட்டும். நீ என் நம்பர் வாங்கினியே… எனக்கு ஃபோன் பண்ணியா? சொல்லு ஃபோன் பண்ணியா?” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாகக் கேட்டாள்
அர்த்தங்கள் கொண்ட பார்வையுடன், “நேத்து நான் ஃபோன் பண்ணுவேன்னு நீ எக்ஸ்பெக்ட் பண்ணியா?” என்றான்.
‘எதற்காக வந்தோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்?’ என்று நினைத்து, “போதும் போதும். ம்ம், ம்ம்ம்” என்று இடைவெளிவிட்டு யோசித்தவள், “ப்ளீஸ் இப்ப பேசினதெல்லாம் மறந்திடு. நான் வந்த விஷயமே வேற” என்றாள்.
“உனக்கு வேணா மறக்கறது ஈஸி. எனக்கு அப்படியில்ல. சரி, சொல்லு” என்று அவள் நிரப்பாமல் இடைவெளிவிட்டுச் செல்லும் இடங்களையெல்லாம், அவன் காதலைக் கொண்டு நிரப்பினான்!
“உங்கிட்ட தனியா பேசணும்” என்றவள் முகத்தில் சொல்ல வந்த விஷயத்தால் பதற்றம் பரவியது!
“இப்ப என்ன மீட்டிங்லயா இருக்கோம். இங்கயே சொல்லு”
“ப்ளீஸ் தனியா…”
“சரி. அந்த கிளாஸ் டோர ஓபன் பண்ணா ஒரு ஸிட்அவுட் வரும். அங்க போய் இரு. வர்றேன்” என்று கை காட்டினான்.
அவன் கைகாட்டிய இடத்தை அடைய கூட்டம் கூட்டமாக அங்கங்கே நிற்கும் அலுவலக ஊழியர்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். அவளுக்கு அது சங்கோஜமாகத் தெரிந்தது!
அதனால், “வாசல் வரைக்கும் வாயேன். எல்லாரும் இருக்காங்க. ஒருமாதிரி இருக்கு” என்று சொல்லி, கண்களால் கெஞ்சினாள்.
“ஹே வாழ்க்கை ஃபுல்லா வர்றேன்னு சொல்றேன்… இந்த வாசல் வரைக்கும் வரமாட்டேனா?” என்றான் வம்பாக.
அவள் முடிவால் அவளுக்கு ஏற்பட்டிருந்த மனநிலையையும் தாண்டி சிரிப்பு வந்தது!
“வா” என்று அவளை அழைத்துச் சென்று சிட்அவுட்டில் விட்டு, “உட்கார்ந்திரு. பைவ் டூ டென் மினிட்ஸ் பேசிட்டு வந்திடுவேன்” என்று சென்றுவிட்டான்.
பகடை போன்று போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள். கண்ணாடிக் கதவின் வழியே உள்ளே பார்த்தாள். அந்தப் பெரிய அறையின் ஒரு புறத்தில், புதிய விருந்தினர் விடுதியின் மாதிரி கட்டிடம் இருந்தது. அவன் அதனருகில் நின்றுதான் பேசிக் கொண்டிருந்தான்.
அவனையே பார்த்திருந்தாள்!
சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன், “எப்படி இருக்கு ஆபிஸ்?” என்றான்.
“நல்லா இருக்கு”
“கூல்டிரிங்ஸ் ஏதாவது?” என்று கேட்டு, அவளருகில் அமர்ந்தான்.
“வேண்டாம்” என்று மறுத்துவிட்டாள்.
“சரி சொல்லு என்ன பேசணும்? ரொம்ப முக்கியமான விஷயம்னா வீட்டுக்குப் போய் பேசலாமா?” என்றான். எப்படியாவது அவளைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் சென்றிட வேண்டுமென்ற எண்ணம், ஆசை, காதல் அவனுக்கு!
“இங்கயே பேசலாம்” என்று அதற்கும் மறுத்துவிட்டாள்.
“சரி பேசு” என்று அவளை நன்றாக பார்த்து அமர்ந்து கொண்டான்.
“எனக்கு… எனக்கு… என் பழைய வாழ்க்கையை… பத்து வருஷ வாழ்க்கையை, இதுவரை கடந்து வந்த வாழ்க்கையை…” என்று தயங்கி நிறுத்தினாள். அதற்கு மேல் எப்படி சொல்லவென்று தெரியாமல் திணறினாள்.
“நீ சொல்ற மூணுமே ஒன்னுதான்” என்று சிரித்தான்.
அவன் சிரிப்பை பார்த்தவளுக்கு, தான் எதை வேண்டி இங்கே வந்திருக்கோம் என்று தெரியாமல் சிரிக்கிறானே என்று உள்ளம் துடித்தது. ஆனால் அவளிடம் அவன் வேண்டிய காதல் கிடைத்துவிட்டால், இந்த உலகம் அவனைப் பார்த்து சிரிக்காதா?
அதை தன்னால் சகித்துக் கொள்ள முடியுமா? தன் காதலைவிட அவனுடைய நிம்மதி முக்கியம் என்று நினைத்து, “ம்ம்… அதை தொடர முடியல” என்றாள்.
“நல்லது! இந்த பைவ் டேய்ஸ் லைஃப கண்டினியூ பண்ணு” என்றான் எளிதாக!
“அது முடியாது. அது வேண்டாம். வேண்டவே வேண்டாம்” என்றாள் பிடிவாதம் மேலோங்கிய குரலில்.
“அதுக்கு இப்போ நான் என்ன பண்ணனும்?” என்றான். அவள் தன்னை ஏற்றுக் கொள்ள வந்திருக்கிறாள் என்று நினைத்தவனுக்கு இது பெருத்த ஏமாற்றமாக இருந்தது! அது அவன் குரலில் நன்றாகத் தெரிந்தது!!
“அது… அது… வந்து… வந்து… நீ அன்னைக்கு அங்க வந்தேல. முதல் நாள்” என்று இழுத்தாள்.
“இதையே எத்தனை நாள் நீ சொல்லி காட்டுவ?!” என்றவன் குரல் எரிச்சலைத் தாங்கி வந்தது. திரும்பத் திரும்ப பிரச்சனைகள் பின்னேயே சுற்றித் திரிவேன் என்று சொன்னால் யாருக்குத்தான் பிடிக்கும்?!
“என்னை முடிக்க விடு”
“இது ஏற்கனவே முடிஞ்ச விஷயம். சரி சொல்லு” என்றான் சலிப்புடன்.
“அன்னைக்கு நீ எதுக்காக வந்தியோ, அதை விட்டுவிட்டு… இப்படிக் கோவாவ சுத்தி பார்த்ததுனாலதான இந்த கஷ்டம் நமக்கு?” என்று மீண்டும் தெளிவாக சொல்லாமல் சுற்றி வளைத்தாள்!
“எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை” என்றான் பட்டென்று!
“சரிப்பா, எனக்குதான் கஷ்டம். அதனால…”
“ம் அதனால?” என்று அவளைக் கூர்ந்து கவனித்தான். அவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்துவிட்டது. இருந்தும் கோபத்தைக் காட்டாமல், அமைதியாக இருந்தான்.
“நீ எனக்கு வித்தியாசமா தெரிய கூடாது. எல்லார் மாதிரிதான் நீயும் எனக்கு”
“சரி அதுக்கு?”
“நீ எதுக்காக வந்தியோ… அதை…”
பொறுமையற்று போனவன், “போதும், போதும்! புரிஞ்சிடுச்சி. ஆனா என்னை என்னென்னு நினைச்சி நீ இப்படிப் பேசற? அன்னைக்கு வந்ததே நான் தப்புனு நினைக்கிறேன். இதுல இன்னொரு தடவை! ச்சே!!” என்று கத்தினான்.
“ஏன் இப்படிக் கத்தற? எல்லாரும் என்ன நினைப்பாங்க? மெதுவா பேசு” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“தெரியுதல? சத்தம் போட்டு பேச முடியாத விஷயத்த நீ பேசறேன்னு”
“தெரியும்… ஆனா…”
“என்ன தெரியும்? எப்படி உன்னால இப்படிக் கேட்க முடிஞ்சது? என்கூடதான இந்த அஞ்சு நாள் இருந்த? அப்படி என்னைக்காவது உன்னை… ச்சே உங்கிட்ட பேசறதே வேஸ்ட்” என்று அவள் கையை உதறிவிட்டான்.
இந்த பேச்சின் அர்த்தங்கள் அவனின் மீதான, மதிப்பு, மரியாதையை மேலும் மேலும் கூட்டியது. ஆனாலும், “நான் சொல்றத புரிஞ்சுக்கோ… இது… இதுதான் சரி” என்றாள்.
“ஃபர்ஸ்ட் நான் சொன்னதெல்லாம் உனக்கு புரிஞ்சதானு சத்தியமா எனக்குத் தெரியல. அதான் இப்படி பேசிக்கிட்டு இருக்க. முதல அத புரிஞ்சுக்கோ” என பெருமூச்சு விட்டு எழுந்து நின்றான்.
அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
“இதான் சொல்ல வந்த விஷயம்னா, தயவுசெஞ்சி கிளம்பிப் போயிடு”
என்ன நினைத்தாளோ, “ஏற்கனவே அங்க வந்தவன்தான! திரும்ப வர்றதுக்கே இவ்வளவு யோசிக்கிறவன், அங்கயே இருந்த பொண்ண எப்படிக் கல்யாணம் பண்ண முடியும்? அதை யோசிச்சியா?
எனக்கு உன்னைக் கடந்து போகணும். அதுக்கு இதுதான் ஒரே வழி” என்று தன் இயலாமையை எல்லாம் அவன் தலையில் இடியாக இறக்கினாள்.
“ஆமா வந்தேன்! நான் இல்லைனு சொல்லலையே!? அதேநேரம் அன்னைக்கு வந்ததுதான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்”
அவனை ஏற்கமுடியாத விரக்தியில், “அதை எப்படி நான் நம்பறது!?” என தன் உதட்டளவு பேச்சால் அவனை நோகடித்தாள். ஆனால் உள்ளுக்குள்ளே இப்படி ஒருவன் நேசத்தை மறுக்க வேண்டிய நிலையில் உள்ளோமே என்ற ஒருவித ஆற்றாமையில் இருந்தாள்.
“ம்ம் தேங்க்ஸ்! நேத்து வீட்ல வச்சி வேற பொண்ண லவ் பண்ணுனு சொன்ன. இன்னைக்கு இப்படிச் சொல்ற?! கேட்க சந்தோஷமா இருக்கு. எங்கூட லைஃப் ஃபுல்லா வரப் போற பொண்ணு என்னப்பத்தி இவ்வளவு மோசமா நினைச்சா, எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா?” என்றான் இறங்கிப் போன குரலில்.
அவளுக்கு, அவனின் பேச்சில் வந்த ‘வலி’ என்ற வார்த்தையைக் கூட தாங்க முடியவில்லை. எப்படி அவன் வாழ்க்கையில் வலியை உண்டாக்குவாள்.
“அய்யோ நான் உன்னை…” என்று மறுத்து பேச நினைத்தவளை, “போதும் நீ பேசறத கேட்கவே பிடிக்கல. நீ நினைக்கிறது நடக்கும். இப்ப கிளம்பு” என்று முடித்தான்.
“ப்ளீஸ்… நான் சொல்றத கேளு”
“அதான் கேட்கிறேன்னு சொல்லிட்டேன்ல. பட் அன்னைக்கு நீ சொன்ன பாரு தேவையில்லாத வேலை பார்க்கிறேன்னு. அது ரொம்ப கரெக்ட்! எனக்கு இது, சத்தியமா தேவை இல்லாததுதான்! நீ என்னை ஈஸியா கடந்து போயிடலாம். கவலைப்படாதே. போ” என்று அவளுக்கு இணையாக அவனும் அவளுக்குள் இடியாக இறங்கினான்.
அவள் கட்டிய காதல் கோட்டை மணலால் ஆனது. சிறு அலைக்கே தாங்காது. அவனின் பேச்சுகள் பேரலையாக வந்து மோதினால் அது எப்படித் தாங்கும்?? சரிந்து விழுந்தது. இருந்தும் அவள் ஏதோ பேச யத்தனித்தாள்.
ஆனால் அவள் ஆரம்பிக்கும் முன்பே, “நீ கிளம்பலாம்” என்று கட்டளையிடும் குரலில் கூறிவிட்டு, அங்கிருந்து போய்விட்டான்.
தன் காதலை, அவன் தன்மீது கொண்ட காதலை, மொத்தத்தில் காதலையே அவமானப்படுத்திய உணர்வு அவளுக்குள்! அப்படியே அமர்ந்துவிட்டாள்!!
வெகு நேரம் அங்கே இருந்தவளுக்கு, ‘அவன் திரும்ப வந்து பேச மாட்டானா?’ என்றிருந்தது! அவன் பேசினால், அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தாள். இல்லை, இல்லை! மன்னிப்பு வேண்டாம், மனதை சொன்னால் போதும், அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது.
சிறிது நேரத்தில் அவனும் வந்தான்! அவனைக் கண்டவளுக்கோ அத்தனை திருப்தி முகத்தில்!!
ஆனால் அவனோ அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல், “இப்போ எங்களுக்கு ரெஃப்ரெஸ்மென்ட் டைம். நீ இங்கருந்தா எனக்கு, எல்லாருக்கும் டிஸ்டர்ப்பா இருக்கும். ஸோ வெளிய போறீயா?” என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளால், அவளை தேவைக்கு அதிகமாகவே காயப்படுத்தினான்.
இதன்பின் அவனிடம் என்ன பேசுவது என நினைத்துக் கொண்டே, கண்களில் கூட மெளனங்கள் நிரம்பியவளாய் அவனைக் கடந்து சென்றாள்!
அவனும் ஒரு முடிவெடுத்திருந்தான்!
அது… காதல் கடிதம், கவிதை என்று வார்த்தைகளால் உணர வைக்கப்படும் காதல் இல்லை இது!! வலிக்க வலிக்க மருந்து போடவேண்டிய காதல் காயம் என்று நினைத்தான்!!
விரும்பி அருகில் நின்று காட்டிடும் காதலைவிட, சற்றுத் தள்ளி விலகி நின்று காட்டும் காதல் நன்றாக உணரப்படும் என்று நினைத்தான். அந்த விலகலும், இன்றைய இரவு வரைதான். அதற்குமேல் அவனாலுமே விலகளைத் தாங்கிட தாங்க முடியாது.
எந்த இடத்தில் அவளை முதன் முறை பார்த்ததுவோ, அதே இடத்தில் வைத்தே, அவளது காதலை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும் என்று அந்த நீலவிழிகள் உறுதி கொண்டன!
ஆனால் பழுப்பு விழிகளோ… தன் காதல் கோட்டை உடைய தானே காரணம் ஆனோமோ என்று நிம்மதியில்லாமல் உழன்று கொண்டிருந்தன!!
