Kathambari Novels
அத்தியாயம் – 13
காதல் வானில் சிறகு விரித்துப் பறக்க நினைத்த தன் ஜோடிப் பறவையைத் தனியே தத்தளிக்க விட்டுவிட்டு, தன் கூண்டினுள் வந்து அடைந்து கொண்டது அந்தப் பறவை!
அந்தக் கட்டிடத்தினுள் நுழைந்தவள் மீது அங்கிருக்கும் சில பெண்கள் ஸ்நேக புன்னகை வீசினர். யாருக்கும் பதில் புன்னகை தரும் நிலையில் அவளில்லை! யாரையும் நிமிர்ந்து பார்க்கவும் பிடிக்கவில்லை அந்தப் பழுப்பு விழிகளுக்கு!!
பத்து வருடங்களாக இருந்த இடம்தான்! ஆனால் என்னமோ இன்றைக்கு சற்று அருவருப்பாக இருந்தது. யாருடனும் பேசிடவே பிடிக்காமல், நிம்மதி கிடைக்க வேண்டும் என்று ஒரு அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அந்தத் தனிமையும் அவள் வேண்டிய நிம்மதி தரவில்லை. மாறாக அவனைப் பற்றிய நினைவுகள் ஆக்கிரமித்தன. வெடித்துச் சிதறும் அளவிற்குப் பொங்கி வந்தது அழுகை.
ஆனால் அழுது என்ன பயன் என்று அதனை அடக்கிக் கொண்டாள்!
எங்கே ஆரம்பித்தது இது? அன்றைய இரவு அவன் பேச்சுகள்! அதன் உண்மை தன்மையில் தெளிவாகத் தன்னைத் தொலைத்திருந்தது தெரிந்தது. அன்றே அவனுடன் செல்வதைத் தவிர்த்து இருக்க வேண்டும். அந்தவொரு தவறான முடிவால்தானே இன்று இத்தனை அல்லல்கள்!
அது தவறான முடிவா?!
தான் யார்… தன் கடந்த காலம் என்ன… என்பதை மறந்து, எப்படி இந்த ஆசை நெஞ்சத்தில் புகுந்தது? ஆசையா அது? ஆசையே இல்லை?! பேராசை! பெரிய பெரிய ஆசைகள்!!
ஏன் நான் ஆசைப்படக் கூடாதா? அதற்கு எனக்கு உரிமை இல்லையா?? தகுதி இல்லையா?? என்று அவளுக்காக அவளது காதல் மனம் வாதம் செய்தது.
தகுதி! இந்த இடத்தில்தானே நான் இடறுகின்றேன். நான் ஆசைப்படக்கூடாது, காதலிக்க கூடாது என்று எதிர்வாதம் புரிந்தது அவள் கடந்து வந்த பாதையை நினைத்த மனம்!
திரும்பத் திரும்ப அவனுடன் சுற்றிய நாட்கள்தான் ஞாபகத்தில் வந்தன. அது, அவனை அவள் மனது முழுவதுமாக நிரப்பியது. அதிலும் நேற்றைய இரவின் ‘பீச் ஷெக் டைனிங்’! அவனுடன் அளவளாடிய தருணங்கள், தடையில்லாமல் கண்களில் தெரிந்தது.
பீச் ஷெக் டைனிங்… நேற்றைய இரவு
மெல்லிய மேற்கத்திய இசை! தூரத்தில் கடல்! துணையாக அவளின் அவன்! அருகிலிருந்த இருக்கை அனைத்திலுமே காதல் ஜோடிகள். அதையெல்லாம் ரசித்துப் பார்த்துவிட்டு, “இங்க வர்றவங்க எல்லாருமே லவ்வர்ஸ்தான் போல, இல்ல?” என்றாள் அவனிடம் ரகசியமாக.
“நம்மளை வச்சே மத்தவங்களையும் ஜட்ஜ் பண்ண கூடாது. சரியா?” என்றான் அவனும் அவளைப் போல ரகசியமாக!
‘எப்ப பாரு இப்படியே பேசிக்கிட்டு இருக்கியே?’ என்பது போல் பார்த்தாள்.
“நாளைக்கு எங்க போகணும்னு ஏதாவது ஆசை இருக்கா?” என்றான்.
‘உனக்குத்தான் பேச தெரியுமா, எனக்கும் தெரியும்’ என்று, “நாளைக்கேதான் போகணுமா? இன்னொரு நாள் மெதுவா பார்த்துக்கலாம்” என்றாள்.
“நிறைய நம்பிக்கை தர்ற! சொதப்பிடாத”
“அதை விடு. உனக்கு ஏதாவது ஆசை இருக்கா? அதுபத்தி சொல்லேன்”
“ஏற்கனவே சொல்லிருக்கேன்ல. பிஸ்னஸ், ரெஸார்ட்! அவ்ளோதான்”
அவள் முறைத்ததும், “ஓ, நீ ஜென்ரலா கேட்கிறியா?” என்றான்.
உதட்டைச் சுழித்துக் கொண்டே “ஆமா சொல்லு” என்றாள்.
“பைக் ரைடிங் மை பேஸன். ஒரு லாங் டிரைவ்… பிடிச்ச பொண்ண பின்னாடி உட்கார வச்சி தாறுமாறான வேகத்தில போகணும். அப்படியே முடியெல்லாம் கன்னா பின்னான காத்துல பறக்கணும். எதிர்ல வர்றவனுக்கெல்லாம் அல்லு விடனும்” என்று, கைகளை சடார் சடாரென காற்றில் அசைத்தபடி சொல்லி முடித்தான்.
‘இதலாம் ஒரு ஆசையா’ என்று தோன்ற, “அதான் காலைல போனோமே” என்றாள்
“அதெல்லாம் ஒரு ரைடா? ஃபர்ஸ்ட் சாரீ கட்டிக்கிட்டு பைக் ரைடா? காமெடி பண்ணாத” என்று சிரித்தான்.
“ஏன் உனக்கு சாரீ பிடிக்காதா?” என்று இத்தனை நாள் மெனக்கெடல் எல்லாம் வீணாய் போன நிராசையில் கேட்டாள்.
“சுத்தமா பிடிக்காது”
“வேற என்னதான் பிடிக்கும்?”
“வேற, வேற…” என பார்வையைச் சுற்றி இருந்த பெண்களிடம் திருப்பினான்.
“எந்த டிரஸ் பிடிக்கும்னுதான் நான் கேட்டேன். எந்தப் பொண்ண பிடிக்கும்னு கேட்கல? என்றாள் எரிச்சலை அடக்கிக் கொண்டு!
“ஹே எனக்கு பொண்ணுங்க டிரஸ் பத்தி தெரியாது. அதான் இந்த டிரஸ்தானு காட்டலாம்னு நினைச்சேன். டிரஸ்ட் மீ! பேசிக்கலி ஐம் எ ஜென்டில்மேன்”
“நம்பிட்டேன்”
“ப்ராமிஸா எனக்குத் தெரியாது”
“உனக்கு… தெரியாது?”
“எஸ்… எனக்கு… தெரியாது!”
“இதை என்னை நம்ப சொல்றியா?”
“ஏன்… ஏன் நம்ப மாட்ட?”
“முதநாள் சொன்னயே அந்தப் பொண்ணோட டிரஸ் பத்தி! கிராப் டாப். அதுல ஹார்ட் டிசைன். அப்பறம் ஏதோ ஒரு ஜீன்ஸ். பத்தாததுக்கு கலர் வேற”
‘இவ்ளோ டிடெயிலாவா சொல்லி வச்சிருக்கேன். மாட்டியாச்சு. சமாளிப்போம்’ என்று நினைத்து, ” நீ சொல்றது புரியல” என்றான்.
“இப்ப புரியும்! உன்னோட ரிசார்ட்டுக்குக் கூட்டிட்டுப் போனேல, அன்னைக்கு நான் என்ன கலர்ல ஸேரி கட்டிருந்தேனு சொல்லு” என்றாள்.
“ஹே இதென்ன ஸ்டுபிட் கொஸ்டின்”
“தெரியலைனா தெரியலைனு சொல்லு. அதவிட்டு ஸ்டுபிட் அது இதுன?” என்றாள் ஒற்றை விரல் நீட்டி கோபத்துடன்!
“சத்தியமா தெரியாது”
அவன் பதில் அவளுக்கு ஒருவகையில் திருப்தியின்மையைத் தந்தது. அவளது முகமும் அந்த உணர்வைப் பிரதிபலித்தது. அதைப் பார்த்தவன் எழுந்து வந்து, அவள் இருக்கையருகே மண்டியிட்டு அமர்ந்து, “பீக்காக் கலர்” என்றான்.
திடுமென திருப்தியின்மை தித்திப்பாய் மாறிவிட, “தெரிஞ்சிக்கிட்டே…” என்று அவன் முதுகிலும், தோள்களிலும் குத்தினாள்.
போதும் என்பது போல் அவள் கைகளைப் பிடித்தவன், “கலர் சொல்றதுக்கும், காதலுக்கும் சம்பந்தம் இல்லை. புரியுதா?” என்றான்.
அதற்கும் அவன் தோள்களில் அடித்தாள்!
“எல்லாரும் பார்க்கிறாங்க”
“ம்ம்ம்… நாம நமக்காகத்தான் வாழனும். புரியுதா?” என்றாள்.
அன்று கிளிப்பிள்ளையாக அவன் சொன்னதைச் சொன்னவள், உரிமையுடன் இன்று சொல்லிவிட்டாள். வேறென்ன வேண்டும் அவனுக்கு! அந்த ஆனந்தம் நீலவிழிகளில் நன்றாகத் தெரிந்தது.
இதழில் புன்னகையுடன் பழுப்பு விழிகளும் அதையே பார்த்தன!
திடீரென “நீயேன் என் கண்ண மட்டும் பார்க்கிற?” என்றான்.
சட்டென புன்னகை மறைந்து, “கண்டிப்பா சொல்லனுமா?” என்றாள்.
“ச்சே ச்சே… கேட்டேன்” என்று அவள் தலையில் விளையாட்டாய் தட்டிவிட்டு எழுந்தான்.
அவன் தட்டுவதைத் தவிர்த்திட கை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் அங்கு இல்லை! சுற்றி முற்றிப் பார்த்தாள்! அறைக்குள் அமர்ந்திருந்தாள்!
நனவுலகிற்கு வந்தாள்!!
இன்றுதானே அவனைப் பிரிந்த முதல்நாள். ஆதலால்தான் இத்தனை தவிப்பு! நாட்கள் போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று தன்னைத் தேற்றினாள்.
தெளிவாக ஓடிக் கொண்டிருந்த என்று சொல்ல முடியாவிட்டாலும்… ஓய்வில் இருந்த ஒரு நீரோடையின் மேல் கல் எறிந்து குழப்பங்களை ஏற்படுத்திவிட்டு, அவன் அங்கே நிம்மதியாக இருக்கிறானே!
நிம்மதியாக இருப்பானா? தன்னை நினைத்துக் கொண்டு இருப்பானா? என்ற கேள்வி வந்தது பழுப்பு விழிகளுக்கு!!
******************
அவளிடம் ஏதும் சொல்லிக் கொள்ளாமல் அறைக்குள் வந்து படுத்தவன்தான், இன்னும் அவன் எழவில்லை! அவள் ஏற்படுத்திய தாக்கம் அப்படியிருந்தது!
இது ஒன்றும் அவன் முதல் காதல் இல்லையே! அதுபோல் இது ஒன்றும் அவன் முதல் தோல்வியும் அல்லவே!? ஆனால் முதல் காதலைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தபோது இப்படி இல்லையே! அப்படி என்றால் என்ன அர்த்தம்??
இந்த ஐந்து நாட்களும் அவளுக்காக… அவள் சந்தோஷத்துக்காக வாழ்ந்தான். அன்று அவள், ‘என்னை ஏன் பிடிக்கும்?’ என்று கேட்டதற்கு, காரணம் சொல்ல முடிந்தவனால், இன்று அதே கேள்வியை அவள் கேட்டாள் காரணம் சொல்ல முடியாது!!
ஏனெனில் அவன் காதல் அந்த அளவு அதிகமாயிருந்தது! காரணம் ஏதுமின்றி வருவதுதானே காதல்! அதிலும் நேற்றைய அவள் பேச்சுகள், நடவடிக்கைகள் அவனை வெகுவாக கவர்ந்திருந்தது!
என்ன செய்து கொண்டிருப்பாள்?
அவனுக்கு மிகப்பெரிய நம்பிக்கை, கண்டிப்பாக அந்தக் கட்டிடம் திரும்பிச் சென்றிருக்க மாட்டாள் என! தம்பியிடம் சென்றிருப்பாள் என்று நம்பினான்! இருந்தும் பயம் வந்தது. எதற்கும் ஒருமுறை பேசிடலாம் என்று கைபேசியை எடுத்தான். ஆனால் அவளின் ‘தொந்தரவு பண்ற’ என்ற வார்த்தையில் சற்று தயங்கினான்.
தன்னை நினைப்பாளா? என்று ஏங்கியது மனது!
அவளது ஒவ்வொரு செயலும் அவன் கண் முன் வந்தன. அவள் புடவை கட்டிய விதங்கள்! பூங்காவில் தன் கைப்பிடித்து அவள் பேசியபடி நடந்தது! கோட்டை மேலே நடந்த நிகழ்வுகள்! சாப்பாட்டு மேசையில் வைத்து அவளது கூந்தலை ஒதுக்கிவிட்டது!
நீர்வீழ்ச்சியில் தன்மீது அவளின் உரிமையுடன் கூடிய கோபம்! அவளது உடல் நலமின்மை அறிந்து, தான் அவளைக் கவனித்தது! மார்க்கெட்டில் ஒவ்வொரு கடைக்கும் சென்று, அவளது சின்ன சின்ன ஆசைகளை… தான் நிறைவேற்றி வைத்தது!
கடைசியாக அந்த அணைப்பு நினைவுக்கு வந்தது!
அது இன்றும் அவன் முகத்தில் புன்னகை வரவழைத்தது! ‘போக விட்டிருக்க கூடாதோ?’ என்று இப்போது தோன்றியது!!
‘இப்படியே இருக்க கூடாது. வெளியே செல்லலாம்’ என்று எழுந்து அமர்ந்தான். ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்தது போலிருந்தது. அவன் ஆசை ஆசையாக கட்டிய வீடுதான்! ஆனால் இன்று வெறும் கட்டிடமாகத் தோன்றியது. அவன் அறையில் இருந்த அவளது புகைப்படங்கள், பீங்கான் பூஜாடி, ஏன் அவள் மௌனங்களும் அந்த வீட்டை நிரப்பி இருந்தன!
இல்லை ஆக்கிரமித்திருந்தது! திரும்பவும் சுருண்டு படுத்துக் கொண்டான்!!
****************
அவனை விட்டுப் போனவளுக்கும்… ஒருகணம் தம்பியைக் காண வேண்டும் என்ற நினைப்பு வந்தது. ஆனால் இந்த மனநிலையில் அவனைச் சந்தித்தால், ‘தன்னைப் பற்றி சொல்லி விடுவோமோ?’ என்று எண்ணி விட்டுவிட்டாள்.
வெறுமை சூழ்ந்த அந்த நொடி கதவு தட்டப்படும் ஓசை கேட்டது! ‘யார்’ என்று பார்க்க, எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
அங்கே நின்றது மாவ்ஷி!
“பூட்டிக்கிட்டு என்ன பண்ற?” என்றார்.
“அது… அது…” என்று அத்தனை நொடிகள் இழுத்தும் பதில் கூறவில்லை.
பொறுமை இழந்த மாவ்ஷி, “ப்ச் கஸ்டமர் வந்திருக்கான். ஊப்பர் ஜாவ்” என்று சொல்லிவிட்டு செல்லப் போனவர், “இப்படியே போகாதே. மூஞ்சில கொஞ்சம் மேக்கப் போட்டுட்டு போ” என்றார்.
எதற்கும் பதில் இல்லை பழுப்பு விழிகளிடம்! அவர் சென்றவுடன், ‘தான் எப்படி இதை மறந்தோம்?’ என்று யோசனையுடனே கதவைத் தாழிட்டாள்.
மறக்கவில்லை! மறக்கடித்திருக்கிறான்! ஐந்தே ஐந்து இனிப்பான நாள்களில், பத்து வருட கசப்பான வாழ்க்கையை மறக்கடித்து விட்டான்.
இருந்தும் மாவ்ஷி சொன்னபடி தயாரானாள். அவள் முகம் அரிதாரம் பூசிக் கொண்டது. கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். அந்த அளவிற்கு அழுதது தெரியவில்லை. ஆனால் மனம் இன்னும் அழுது கொண்டிருந்தது.
அது அழுவதை எந்த அரிதாரம் பூசி மறைப்பாள்? அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள். மனதிற்கு எதற்காக அரிதாரம்? இங்கே யார் அதைப் பார்க்கப் போகிறார்கள் என்று!!
மீண்டும் கண்ணாடி முன் தன் பிம்பம் பார்த்தாள். உள்ளே விழுந்த பிம்பம் அவளா? இல்லை உள்ளுக்குள் அழுகின்ற உருவம் அவளா? தெரியவில்லை.
மாவ்ஷி சொன்ன அறை நோக்கி நடக்க யத்தனித்தாள். ஒவ்வொரு அடியிலும் அத்தனை தயக்கம் இருந்தது. தயக்கங்கள் அவளைத் தடுத்தது. எனினும் ஒரு கட்டத்தில் அறையின் வாயில் வந்து. கதவு திறந்து உள்ளே நுழைந்தாள்.
பழுப்பு விழியின் பார்வைக்கு ஒரு உருவம் அமர்ந்திருப்பது தெரிந்தது!
அடுத்த நொடி அன்றைய இரவின் நினைவுகள் வந்தது. அறை முழுதும் அந்த நீலவிழிக்குச் சொந்தக்காரனே தெரிந்தான். அத்தனை காதல் ஆசையுடன், அவனின் அழகான கண்களைப் பார்த்தாள்.
அவனது மென்மையான அணைப்பில்தான் எவ்வளவு காதல்!? அது மட்டுமா? அன்று நெற்றி, கழுத்து என அவன் தொடுகையில் உணர்ந்தது அன்பு! அன்பு! அன்பு மட்டுமே!!
திடுமென அவள் கழுத்தில் ஒரு கைபட்டது. சுயம் உணர்ந்தாள். சூழல் அறிந்து கொண்டாள். என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்தது.
சிறிது நேரங்களுக்குப்பின், நீண்ட நேர வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது கஷ்டமருக்கும் மாவ்ஷிக்கும் இடையே இந்தியில்! இவர்கள் பேச்சு புரியாமல் சிலர் இருந்தனர். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான்.
அது, இன்று பழுப்புவிழிகளின் கை அந்த ‘கஷ்டமரை’ ஆக்ரோஷமாகக் கண்ணத்தில் தொட்டிருந்தது! அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும் என்றால், ‘ப்ளார்’ என்று அவள் ஓங்கி அறைந்து இருந்தாள் அந்த ஆளை!!
***********
ஒரு வழியாக கஸ்டமரை சமாதனம் செய்து அனுப்பினார் மாவ்ஷி. பின்னர் பழுப்பு விழிகளிடம் வந்தார். தன்னையும் ஏதாவது கடிந்து கொள்வார் என்று பார்த்தன அந்த விழிகள்.
ஆனால் பார்த்த வழிகளில் துளியும் பயமில்லை, துளியும் சோகமில்லை, ஒரு துளி கண்ணீர்கூட வரவில்லை!
அதில் தெரிந்தது, ‘தான் செய்தது சரியே’ என்ற திமிரும், கர்வமும்தான்!
ஏதும் சொல்லாமல், “போய் தூங்கு” என்று சொல்லிவிட்டு சென்றார் மாவ்ஷி.
அவருக்கும் புரிந்தது! இவள் சில நாட்களாகவே சரியில்லை என்று! தன்னிடம் எதையோ மறைக்கிறாளென்று தெரிந்தது. அந்த ஐந்து நாட்களுக்குப் பின்னே இவள் இப்படி இருக்கிறாள் என்று தோன்றியது.
காரணம் என்னவென்று அவரும் குழம்பினார்!
எழுந்து வேறு அறைக்குச் சென்றது பழுப்பு விழிகள். இது ஒன்றும் தனி அறை கிடையாது. அவளுடன் இன்னும் ஐந்து பேர் அங்கே இருந்தனர். அமைதியாக உள்ளே வந்தவள் தன் இடத்தில் வந்து படுத்துக் கொண்டாள்!
அவள் நினைவுகள் அவனை நோக்கிச் சென்றன. அவன் ஆரம்பித்ததுதானே இதெல்லாம் என கோபம் வந்தது காதல் கொண்ட அவள் மனதிற்கு! ‘பழைய வாழ்க்கைக்குள் போக விருப்பமில்லை, புது வாழ்வினை ஏற்க முடியவில்லை’ என்ற நிலையில் அவள் மனம் ஊசலாடியது!!
இதற்கு என்ன தீர்வு என்று யோசித்தாள்! யோசித்து… யோசித்து கடைசியாக இதுதான் சரியென நினைத்து, இதுவே தீர்வு என்றம் ஒரு முடிவிற்கு வந்தாள்!
முடிவு எடுத்தாயிற்று என்ற நினைப்போ, இல்லை நாளை அவனைச் சந்திக்க போகிறோம் என்ற நினைப்போ நிம்மதியாக உறங்கினாள்!!
