Kathambari Novels
அத்தியாயம் – 16
தோள் பட்டையில் அதீத வலி சயனாவிற்கு! தாங்கிக் கொண்டு நின்றாள்!!
அவர்கள் அடுத்தும் சுட்டார்கள். கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று புரிந்தது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ‘என்ன செய்ய… என்ன செய்ய’ என்று யோசித்தாள்.
துப்பாக்கியைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டைத் தூக்கிப் போட்டாள். கையிலிருந்த துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தாள். அவளுக்கு உருவங்கள் இருந்தது ஓரளவே தெரிந்தது.
முட்டியின் கீழாவது சுட்டு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!
முதலில் பின்புறம் இருந்த உருவம் இருக்கும் திசையில் சுட்டாள்! அடுத்து முன்புறம் அவளை நோக்கி வந்து கொண்டிருந்த உருவங்கள் மீது இரண்டு முறை சுட்டாள்.
சுட்ட பின், உடனே அவள் வெளியே வரவில்லை. மரத்தின் மறைவில் ஒளிந்தே இருந்தாள். செவியைக் கூர்மையாக வைத்துக் கொண்டு, காலடிச் சத்தங்கள் கேட்கிறதா என்று பார்த்தாள். எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.
அதன்பின்தான் வெளியே வந்தாள்.
துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டதால் பீட்டர் வந்தார்.
வரும் வழியில் கிடந்த இரண்டு உருவங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். ஒரு உருவத்தின் அருகில் கிடந்த துப்பாக்கியைக் காலால் தள்ளிவிட்டு வந்தார்.
அவருக்கு அந்த உருவங்களைப் பற்றி நின்று யோசிக்க முடியவில்லை. மனம் முழுவதும் ‘சயனாவிற்கு என்ன ஆகியிருக்குமோ?’ என்று பதட்டம் கொண்டது.
பதறி ஓடி வந்து பார்த்தார்! அவர் கண்டது… சயனா இடது தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழிந்ததை!!
நிலை குலைந்து விட்டார் மனிதர். ‘என்ன செய்வது’ என்று தெரியாமல், கற்சிலை காட்டிடும் கவலையாய் அவர் முகம்.
அடுத்த நொடியே சுதாரித்தார். “சீக்கிரம் வா, ஹாஸ்பிட்டல் போலாம்” – அவர் குரலில் இன்று ஒரு உரிமை தெரிந்தது.
சூழலில் அமைதி; திருப்பி எந்தத் தாக்குதலும் இல்லை. அப்படியென்றால் தன் குறி தப்பவில்லை. மூன்று பேரைச் சுட்டிருக்கிறேன்.
கையிலிருந்த துப்பாக்கியைப் பார்த்தாள். குற்றவுணர்வு மேலோங்கி இருந்தது.
அதிகாரத்தின் சூழ்ச்சியால் அதிகாரிகள் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.
முதலில் கனலினி கைது, அடுத்து ரேவ் அவமானப்பட்டு நின்றது.
இப்போது நானும் அந்த வரிசையில்!
“ஏமாத்திட்டானுங்க அண்ணே, நல்லா ஏமாத்திட்டானுங்க” – பீட்டரின் உரிமை பேச்சில்… அவளும் ‘அண்ணே’ என்ற அழைத்து புலம்பினாள். “மூனு பேரச் சுட்டிருக்கேன். வேலை போய்டுமோனு தோணுது” என்று பயந்தாள்.
“அதலாம் ஒன்னும் ஆகாது. நீ பர்ஸ்ட் ஹாஸ்பிடலுக்கு வாம்மா” – அவர் குரலில் அத்தனை வலியுறுத்தல்.
“அண்ணே, நான் இந்த வேலைல இருக்க அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா. இப்போ எல்லாம் போகப் போது”
சற்றுத் தொலைவில் கிடந்த இரண்டு உருவங்களைப் பார்த்தார். “அவங்க உன்னய சூட் பண்ண வந்தாங்களா?”
‘ஆமாம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
“எனக்கு கேட்கவே இல்லையே”
“சைலன்சர் ‘கன்’ போல” – மனதின் வலி அவள் வார்த்தைகளில் தெரிந்தது.
“திருப்பி அவங்கள சூட் பண்ணியா?”
அதற்கும் ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டினாள்.
“உன் கைல ‘கன்’ எப்படி வந்தது?” – அவருக்குத் திட்டம் என்ன என்று தெரியாதே!
“உங்க ஸ்டேஷன்லருந்து போலீஸ் எடுத்துக் கொடுத்தான்”
“அதான் ஏன்?”
“சொல்ல முடியாதுண்ணே. அதை மட்டும் கேட்காதீங்க”
“அவன்கிட்ட மாட்டிக்கிட்டயா?”
“ம்ம்ம்… நல்லா”
“அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்பவே சொல்லிருக்கலாமே. நான் கொஞ்சம் அலர்ட்டா இருந்திருப்பேன்ல”
அதுவரை உடலில் எந்த அசைவும் இன்றி, உதடுகள் மட்டும் அசைந்து பதில் சொன்னவள், அவரை நிமிர்ந்து பார்த்தாள். ‘நான், உங்களை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கவே இல்லை’ என்று அவள் மனக்குரல் சொல்லியது.
“சரி வா ஹாஸ்பிடல் போலாம். நான் கூட்டிட்டுப் போறேன்”
‘இல்லை, வர முடியாது’ என்பதுபோல அழுத்தமாக நின்றாள்.
சயனா, சங்கடத்தின் உச்சியில் இருந்தாள். விடியப் போகும் வானத்தை நோக்கி, இருளாகிப் போன தன் வாழ்வை நினைத்து ‘அம்மா’ ஆங்காரமாய் கத்தினாள்.
அதற்குமேல் அவளின் கவலையைக் காண முடியவில்லை பீட்டரால்.
நியாயத்திற்காக போராட நினைத்தவள், அநியாயத்தின் சூழ்ச்சியில், சுழலில் அகப்பட்டுக்கொண்டு அழுகிறாள்.
ஏற்கனவே ஒரு பெண் அதிகாரி இதுபோல் அதிகாரத்தின் பிடியில் சிக்கி வேலையிழந்து, மனம் பிரண்டு வாழ்கையைத் தொலைத்து நிற்கிறார். இன்று இன்னொரு பெண்! இவளும் அவரைப் போல் சிக்கித் தவிக்கப் போகிறாளோ?
அவர் மனம் அதற்கு விரும்பவில்லை.
மனம் அதை ஏற்க மறுத்தது.
தன்னால் ஆன மட்டும் உதவியைச் செய்ய நியாய மனம் நினைத்தது.
அந்தக் கணம் முடிவெடுத்தார். பார்த்துக் கொள்ளலாம்! என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று!
சயனா கையில் பிடித்திருந்த துப்பாக்கியை வாங்கினார்.
வான்நோக்கி பார்த்த அவள் முகம் துப்பாக்கியை வாங்கிய முகத்தைப் பார்த்தது.
“அன்னைக்கே சொன்னேன்ல ரெண்டு பொய் சொல்வேன்னு. அதுல இது ஒன்னு. நான் சுட்டதாவே இருக்கட்டும்” என்றவர், “நீ, யோசிமா… நிதானமா யோசி.. உன்கூட நான் நிக்கிறேன்” என்றார்.
எவ்வளவு எளிதாகச் சொல்கிறார். இவரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்று நினைத்தேனே! ‘ச்சே நான் அப்படி நினைத்திருக்க கூடாது’ என்று தலை குனிந்தாள்.
“ஸ்டேஷன்ல அந்த போலீஸ் பண்ற அநியாயத்துக்கு அளவே இல்ல. இதுவரை என்னால எதுவும் பண்ண முடியாம கஷ்டப்பட்டு கடந்திருக்கேன். இன்னைக்கு உன்கூட சேர்ந்தாவது, அவனுக்கு ஒரு பதில் கொடுத்துகிறேன். அதுக்காக என்ன வேணாலும் பண்ண நான் ரெடி”
உண்மை, நியாயம் என்று இருந்த மனிதரையே, இப்படிப் பேச வைத்திருக்கிறார்கள் என்றால் என்ன சொல்லுவது??
ஆனால் அவர் வார்த்தை, அவள் இழந்த நம்பிக்கை துளிர்விடச் செய்தது.
‘யோசி சயனா யோசி, உன்னால முடியும் யோசி’ என்று அவள் மதி திரும்பத் திரும்ப திடமிழந்த அவள் மனதிடம் மன்றாடியது.
சற்றுநேரத்தில் அவள் மனம் திடம் பெற்றது. திடம் வந்த அடுத்தநொடியே முடிவெடுத்தாள். ‘அவர்களை முடிக்க வேண்டும்’ என்று முடிவெடுத்து விட்டாள்.
“அண்ணே, அந்தப்பக்கம் ஒருத்தனைச் சுட்டேன். உயிரோட இருக்கானான்னு பாருங்க” – திரும்பவும் பழைய சயனாவாகிய சயனா!! “நான் இவனுங்களைப் பார்க்கிறேன்” என்று முன்புறம் இருந்த அடியாட்கள் பக்கம் போனாள்.
‘கையில் தோட்ட உரசிச் சென்றிருக்கிறது. இவளுக்கு வலி தெரியாதா?’ – இது இரவின் குரல்.
போகும் போதே, “அண்ணே, இன்னும் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியல. அதனால கவனமா இருங்க” என்றாள்.
“சரி, நீயும் கவனமா இரு”
சயனா, சுற்றிப் பார்வையைச் சூழல விட்டுக்கொண்டே அடியாட்கள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றாள். இன்னும் ஆட்கள் மறைந்து இருப்பார்களோ என்ற பயம் வேறு.
அதே பயம் பீட்டருக்கும் இருந்தது!
இரவின் மடியில்… இருளில் பிடியில் யாரும் ஒளிந்திருக்கவில்லை. பாவம் அது அவர்களுக்குத் தெரியாது அல்லவா. பயந்து பயந்து ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைத்தார்கள்.
ஏற்கனவே தன்னால் அவளைக் கை காயத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இனிமேல் இது போன்ற நிலைக்கு அவளைத் தள்ளக்கூடாது என்று நினைத்தார், பீட்டர். ஆதலால் அவரது முழுக் கவனமும் சயனா மீதே இருந்தது.
முதல் அடியாளின் பக்கம் வந்து பார்த்தாள். அவனது வயிற்றுப் பகுதியில் துப்பாக்கியின் தோட்டா துளைத்திருந்தது. உயிரும் பிரிந்திருந்தது.
‘என்ன முட்டாள்தனம் செய்தேன்’ என்று அவள் மீதே அவளுக்கு கோபம் வந்தது! ‘சரி, விடு… பார்த்துக்கலாம்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
அடுத்த அடியாளைப் பார்த்தாள். அவனுக்கு முழங்காலின் கிழே தோட்டா துளைத்ததிருந்தது. ரத்தம் சிறிதளவே வெளியேறி இருந்தது.
உயிரோடு இருக்கிறானா?
சந்தேகத்தில், அவன் நாசியின் அருகே விரல் வைத்துப் பார்த்தாள். அதற்குள் அவள் கைகள் அப்படி நடுங்கின. உயிர் இருக்கா? மயக்கத்தில் இருக்கானோ? அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
‘சயனா ஒழுங்கா பாரு’ என்று தனக்குள் சொல்லி, பதற்றம் இல்லாமல் இன்னும் அருகில் சென்று, உயிர் இருக்கிறதா என்று பார்த்தாள்.
அதே நேரத்தில் பீட்டர் சயனாவின் பின்புறம் இருந்த உருவம் நோக்கிச் சென்றார். அதுவும் அசைவில்லாமல் கிடந்தது. அந்த உருவம் இருந்த இடம் சற்று இருள் விழுங்கிய இடமாய் இருந்தது. அருகில் சென்று தோளைத் தொட்டுத் திருப்பிப் பார்க்கலாம் என்று நகர்ந்தார்.
ஆனால் அதற்குள், “பீட்டர் அண்ணே” என்ற சயனா குரல். “அண்ணே.. அண்ணே இங்க வாங்க” என்று சயனா கத்தினாள்.
அவ்ளோதான்!
பீட்டரால், அங்கே அசைவற்று கிடந்த உருவம் மீது சரியாகக் கவனம் செலுத்த இயலவில்லை. அதன் அசைவின்மை காரணமாக, ‘உயிர் இல்லை’ என்று முடிவுக்கு வந்து விட்டார்.
சாயனவை நோக்கி ஓடிவந்தார்.
“என்னம்மா?”
“இவனுக்கு உயிர் இருக்கு… உயிர் இருக்கு”
அவளுக்கு ஏன் இத்தனை சந்தோஷம் என்று பீட்டருக்குத் புரியவில்லை.
“கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வாங்க அண்ணே”
பீட்டர் சுற்றிப் பார்த்தார். எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு சிறிய உணவகத்தின் வெளியே, உடைந்த அழுக்கான குடத்தில் தண்ணீர் இருந்தது. ஓடிச்சென்று அந்தக் குடத்தை எடுத்துக்கொண்டு வந்தார்.
சயனா, இரு கைகளால் நீரை அள்ளி அந்த அடியாள் முகத்தில் தெளித்தாள்.
சற்று நேரத்தில் அவன் மயக்கத்தில் இருந்து தெளிந்தான்.
பீட்டர், தன்னிடம் இருந்த தூப்பாக்கியை அவன் தலைக்கு நேரே பிடித்துக் கொண்டார்.
விழித்துப் பார்த்தவனுக்குப் புரிந்து விட்டது. தான் மாட்டிக் கொண்டோம் என்று. அவன் விழிகளில் மரண பயம் தெரிந்தது.
அந்தப் பயத்தைக் கூட்டும் அளவிற்கு கடும் கோபத்தில் சயனாவும் பீட்டரும் நின்றார்கள்.
அமைச்சர் சொன்னது ஞாபகத்தில் வந்தது. ‘எஸ்கேப் ஆகிறது ரொம்ப முக்கியம்’ என்ற அவரது வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
ஆனால் ‘இனிமேல் எப்படி?’ என்ற கேள்வியும் வந்தது.
முதலில் அவன் கைகளைக் கட்ட வேண்டும்! சயனா சுற்றும் முற்றும் பார்த்தாள். அதே உணவு விடுதியின் முன்னே பழைய துணி கிடந்தது.
“பார்த்துக்கோங்க ண்ணே. இதோ வரேன்” என்று, போய் அதை எடுத்து வந்தவள், ‘எந்திரிச்சி போய் அந்த மரத்தில சாய்ஞ்சி உட்காரு’ என்று கட்டளை இட்டாள்.
அவனுக்கு இனி வேறு வழி இல்லை. சொன்னதைச் செய்தான்.
அவன் அமர்ந்ததும், அவனது கைகளை மரத்தின் பின்புறமாக கொண்டு வந்து, அந்தப் பழைய துணியால் இறுக்கிக் கட்டினாள்.
பீட்டர், தூப்பாக்கியை இன்னும் அடியாள் தலைக்கு நேரே பிடித்திருந்தார். ‘அசைஞ்சா சுட்டுடுவேன்’ என்று சொல்லலாமல் சொல்வது போல்.
அவனை நன்றாக இறுக்கி கட்டியதும், கைகளிலிருந்த தூசியைத் தட்டி விட்டுக்கொண்டே பீட்டரின் அருகே வந்தாள்.
இருவரும் அடியாள் கட்டப்பட்ட மரத்தின் பக்கமிருந்து தள்ளி வந்து நின்று கொண்டனர். அவர்கள் பார்வை முழுவதும் அவன் மேல்தான் இருந்தது. ஆனால் அவர்கள் பேசுவது அவனுக்கு கேட்காது.
“அண்ணே அந்தப்பக்கம் பார்த்தாச்சா?”
“ம்ம்ம், பார்த்தாச்சி. அவன் கொஞ்சம் கூட அசையவேயில்லை”
“சரி விடுங்க, போறான்” – அவள் கவனம் முழுதும் உயிரோடு கண் முன்னே இருப்பவன் மேல் மட்டும்தான்.
பீட்டருக்கும் திரும்பப் போக விருப்பமில்லை. அங்கே கிடப்பவன் உயிரோடு இருக்கிறானா… இல்லையா என்று சோதிக்கத் தோன்றவில்லை. காரணம், சயனாவை அந்தக்கணம் கூடத் தனியாக விட மனம் வரவில்லை.
அவருக்கு மனம் மட்டுமே வேலை செய்தது!
சயனாவிற்கு மூளை மட்டுமே வேலை செய்தது!!
“ஏதாவது பிளான் இருக்காமா?”
“மூனு பேர்தானா? வேற யாரும் இருக்காங்களா?”
“தெரியலையே. போய் தேடவா?”
“ச்சே, ச்சே வேண்டாம். நான் அதுக்கு கேட்கல. அலர்ட்டா இருக்கனும். அதுக்காகச் சொன்னேன்”
“சரிம்மா. என்ன பிளான் சொல்லு?”
“அண்ணே, என்னய கொல்றதுக்கு பிளான் போட்ருக்கானுங்க, சரியா? அப்போ பிளான் முடிஞ்சவுடனே, இவனுங்க போய் ரிப்போர்ட் பண்ணனும். அதுக்கு, ஏதாவது டைம் இருக்கும். ஒன் அவர் இல்லனா டூ அவர்னு. இவனுங்க இங்கருந்து போகலனா, அவனுங்ககிட்ட ரிப்போர்ட் பண்ண முடியாது”
“ஆமா”
“அந்த நேரம் அவனுங்ககிட்ட இருந்து ஃபோன் இங்க வரும். அந்த ஃபோன் கால், அதுல பேசப் போறது நமக்கு உதவும்னு நினைக்கிறன்” என்று ஒரு பெருமூச்சு விட்டவள், “கால் வரும்னு நம்பறேன் ண்ணே” என்றாள்.
“நம்பிக்கையா இரு… நீ நினைக்கிறது நடக்கும். ஆனா யார் கால் பண்ணுவா? அமைச்சரா இல்ல போலீசா?”
“உங்க போலீஸ் இருக்கான்ல, போலீஸூ, அவன் சரியான டைம்ல தப்பான முடிவு எடுப்பான்” – அவள் குரலில் நய்யாண்டி தெரிந்தது. அந்த நய்யாண்டிக்குப் பின்னால் கோபம், ஏமாற்றம் எல்லாம் இருந்தது. “வாங்க வெயிட் பண்ணலாம்”
இருவரும் மரத்தில் கட்டப்பட்டிருந்த அடியாளின் அருகில் சென்றனர். அந்தத் தார் ரோட்டில், அவனை நேருக்கு நேராகப் பார்த்தபடி அமர்ந்து கொண்டாள்.
‘என்ன திட்டம்?’ என்று தெரியமால் குழம்பினான் அடியாள். கொலை செய்யப் போகிறார்களா என்ற உயிர் பயத்தில், முகம் வேர்த்தது.
‘ஏதோ விருந்துக்கு வந்தவ மாதிரி உட்காந்திருக்கா!’ – இது அடியாள் மனக்குரல்.
‘ஏய்! அவள் விருந்துக்கு வரவில்லை, வேட்டையாட வந்தவள்’ – இது இரவின் குரல்.
சயனா உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பீட்டர் பயந்தார். ஆதலால் துப்பாக்கியைக் கையில் வைத்தபடி அவளைச் சுற்றி வந்தபடியே இருந்தார். இன்னும் எத்தனை பேர் வருவார்களோ என்ற பயம் வேறு.
ஒரு தாய் கோழி, தன் குஞ்சுகளை எப்படிக் காக்குமோ அப்படி இருந்தது அவரது பாதுகாப்பு.
சயனாவிற்கு, ‘இவர் யார்? ஏன் என்னைப் பாதுகாக்க வேண்டும்?’ என்ற கேள்வி.
காரணங்கள் எதுவும் பெரிதாக இல்லை. மனது இப்படி இரு என்று சொல்கிறது. மனதின் பேச்சைக் கேட்கிறார். அவ்வளவுதான்.
அவருக்குள் ஒரு குற்றவுணர்வும் இருக்கிறது.
நியாயத்தை நிலைநிறுத்த உதவி என்று தன்னிடம் வந்தாளே! அவளுக்கு ஒரு அநியாயம் நடந்திருக்கையில், அவரால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
இதுவரை அவரால் அந்த ‘காவலை’ நேரடியாக எதிர்க்க முடிந்ததில்லை. இப்போது ஒருத்தி எதிர்க்க இருக்கிறாள். அவளுக்கு உதவியாக இருக்கலாமே என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.
அவளால் எதிர்க்க முடியும் என்று நம்புகிறார். அவள் அமர்ந்து இருக்கும் தோரணை அவருக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தது.
உடல் முழுக்க வேர்த்துக் கொட்டி… கைகளில் இருந்து இரத்தம் வடிந்து முடிந்து, உறைந்து விட்டிருந்தது. அவளது வெள்ளைச் சட்டை சிவப்பாக மாறியிருந்தது.
‘இவளுக்கு வலிக்காதா! ‘ – இது இரவின் குரல்.
சயனாவும், பீட்டரின் பாதுகாப்பை உணர்ந்தாள்! சில மனிதர்களைப் ‘போகிற போக்கில் சந்தித்த மனிதர்கள்’ என்று கடந்து போக முடியாது. அதுபோல்தான் பீட்டர்… சயனா வாழ்வில்.
சற்று நேரத்தில்…. சயனாவின் கணிப்பு நடந்தது.
அடியாளின் அலைபேசி அலறியது.
சயனா, கைகளில் இருந்த கைப்பேசியைத் தூக்கிப் பீட்டரிடம் காண்பித்தாள்.
பீட்டருக்கு தெரிந்தது… அது காவலின் கைப்பேசி எண் என்று. என்ன செய்ய வேண்டும் என்றும் புரிந்தது. அடியாள் அருகில் சென்று நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தார்.
சயனா, அடியாள் முன்னே சென்று கைப்பேசியை பிடித்தாள். “உயிர் மேல ஆசை இருக்கா?” – புருவங்கள் மேலேற, கண்கள் அலட்சியம் காட்ட, குரலில் எள்ளல் துள்ள, சயனா கேட்டாள்.
‘ஆமாம்’ என்று பயத்தில் வேகமாகத் தலையாட்டினான்.
“அப்போ, நான் சொல்ற மாதிரி பேசு” – அவள் குரலில் அப்படியொரு அழுத்தம்.
“என்ன பேசனும்னு சொல்லுங்க” – சோர்வாக வந்தது அடியாள் குரல்.
“உங்க போலீஸ் கேள்வி கேட்கட்டும், அதுக்கு நான் என்ன பதில் சொல்லச் சொல்றேனோ, அத சொல்லு”
“சரி, சரி சொல்றேன்! ஆனா என்னய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனும்” – அடியாள் என்றாலும், அவனும் மனிதன் தானே! எல்லா மனிதனுக்கும் உயிர் பயம் உண்டு!
“ம்ம்ம் கண்டிப்பா. ஆனா, நீ இப்ப அடியாள் இல்ல அப்ரூவர், ஓகேவா”
இதற்குள் காவலிடமிருந்து வந்த கைப்பேசி அழைப்பு நின்றுவிட்டு, திரும்பவும் அழைப்பு தொடரப்பட்டிருந்தது,.
இம்முறை கைப்பேசி அழைப்பு ஏற்கப்பட்டது.
ஸ்பீக்கரில் மோடில் கைப்பேசி.
மற்றும் அந்தப் பேச்சுவார்த்தை பதிவும் செய்யப்படுகிறது!!
காவலில் பேச்சுகள் முதன் முதலில் முதலாக என்றானது, சயனாவிற்கு. அதே நேரம் உள்ளுக்குள் உதறலும் இருந்தது, ‘என்ன பேச போறானோ என்று!’
“ஹலோ” – காவல்.
“ஹலோ, சொல்லுங்க சார்” – அடியாள்.
“அந்தப் பொண்ண கொன்னாச்சா?”
‘எந்தப் பொண்ண?’ என்று சயனா சைகையால் கேட்கச் சொன்னாள். அடியாள் கேட்டான்.
“அதான் அந்த சிஐடி ஆபிசர் சயனா”
“சுட்டாச்சு” என்றான் அடியாள். சயனா ‘ஆமாம்’ என்று சைகை செய்திருந்தாள். அதனால் அப்படிச் சொன்னான்.
“சரி, நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகிடுங்க”
‘சரி சரி’ என்று சொல்லு என்பது போல் கண் அசைத்தாள், சயனா.
“என்னோட ‘கன்’ன எப்போ என்கிட்ட தருவீங்க?” – காவல்.
‘அடுத்த ஒரு மணி நேரத்தில்’ என்று தன் மணிக்கட்டின் கடிகாரத்தைப் காட்டிச் சைகை செய்தாள். அவளது முகத்தில் லேசான அலட்சியப் புன்னகை வந்தது.
“அமைச்சரோட ‘கன்’-ன எப்போவேனாலும் கொடுங்க. ஆனா என்னோட ‘கன்’ எனக்கு உடனே வேணும். திருப்பி வைக்கலனா பிரச்னை ஆயிடும்.” – காவல் தன் பெயரில் தானே எப்ஐஆர் போட்டுக் கொண்டது.
பெரு விரலைத் தூக்கிச் சைகை செய்தாள், சயனா. “சரி” என்றான் அடியாள்.
அத்துடன் அழைப்பைத் துண்டித்தாள்.
பீட்டரும், சாயனவும் ‘கைஃப் பைவ்’ செய்து கொண்டார்கள்.
வான் நோக்கி தலை நிமிர்ந்து, தன் கையை இதழ் மீது வைத்து, எடுத்து ஒரு முத்தத்தை நீட்டினாள்!
அது அவள் அம்மாவிற்கு!!
திரும்பவும்… பீட்டரும் சயனாவும் தனியே சென்றார்கள்.
“இப்போ என்னம்மா செய்ய?”
“அண்ணே, இவன கவர்மென்ட் ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டுப் போங்க. பத்திரமா சரியா. உங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து, யாராவது உங்களுக்கு உண்மையா இருப்பாங்கள, அவங்களைக் கூப்பிட்டுக்கோங்க”
“ம்ம்ம்”
“அப்புறம் உங்க ஸ்டேஷன் ஏரியால இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்குனு மட்டும் சொல்லுங்க. ஆனா, எப்ஐஆர் போட வேண்டாம்”
“ஏம்மா?”
“முதல டிஜிபிகிட்ட பேசனும். டிஜிபியே எப்ஐஆர் போடச் சொல்லனும். அப்பதான் கேஸ் ஸ்டார்ங் ஆகும்”
அதற்கு அடுத்தும் பேசினாள். பேசிவிட்டு, “அண்ணே புரிஞ்சதா?? எங்க நான் சொன்னதைத் திருப்பிச் சொல்லுங்க” என்றாள்.
“நீ இந்த ரோட்ல வர்றப்ப, உன்னய கொலை பண்ணப் பார்த்தாங்க. ஏன்னா நீ கனலினி கேஸ எடுத்திருக்க”
“திரும்பக் கைல எடுத்திருக்க… அப்படிச் சொல்லுங்க”
“சரிம்மா சரி. அது இந்தக் கேஸ்ல சம்பந்தப்பட்டவங்களுக்குப் பிடிக்கல. அதான், உன்னய சுடப் பார்த்தாங்க. ஆனா குறி தவறி உன் தோள்ல பட்டுப் போயிருக்கு. அடுத்த குண்டு மரத்தில பட்டிருக்கு”
“ம்ம்ம், கரெக்ட்”
“நான் ரௌண்ட்ஸ்க்கு வர்றப்போ, இதைப் பார்க்கிறேன்”
“நம்புவாங்களாண்ணே… இந்த ரௌன்ட்ஸ் மேட்டர”
“இந்த ஏரியா, எங்க ஸ்டேஷன் கீழதான் வருது. அதனால நம்புவாங்க” என்றவர், “உன்னய காப்பாத்த, அவனுங்க கூட நடந்த போராட்டத்துல அவனுங்கள நான் சுட வேண்டியதாப் போயிருச்சி” என்றார்.
“வேண்டாம் அண்ணே, இதுமட்டும் வேண்டாம். நான் சுட்டத்தாவே இருக்கட்டும்”
“பேசாம இரு.” – உரிமையுடன் கண்டித்தார்.
அவள் கட்டுப்பட்டாள். ஆனால் அவர் மாட்டிவிடக் கூடாது! அதற்கும் யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
“அதுல ரெண்டு பேர் ஸ்பாட்லயே இறந்தாச்சு. ஒருத்தன் அப்ரூவர். ஹாஸ்பிட்டல்ல இருக்கான். ஒகேவா” – பீட்டர்.
“ஓகே அண்ணே. நீங்க, அவனை அட்மிட் பண்ணிட்டு டிஜிபி ஆபீஸ் வாங்க. நான் அங்கதான் இருப்பேன்”
‘டிஜிபி ஆபீஸா? இவளுக்கு வலிக்கவில்லையா’ – இதுவும் இரவின் குரல்.
“ப்ச் முதல நீ ஹாஸ்ப்பிட்டல் போற. அப்புறம்தான் டிஜிபி ஆபீஸ்” – பீட்டர் சற்று கடுமை, அளவற்ற அக்கறை கலந்த குரலில் சொன்னார்.
“சரிண்ணே” என்றவள், “பிரபு சார்கிட்ட பேசறப்ப, நீங்க உங்க பார்ட் மட்டும் சொல்லுங்க. நான் என்னோட சைடு சொல்லுவேன்” என்றாள்.
“சரிம்மா”
“கண்டிப்பா போலீஸ் பேசுவான். அத நானே சமாளிச்சிப்பேன்”
“சரி, போதும்! ஹாஸ்பிட்டல் போ”
“இருங்க அண்ணே, அமைச்சர் பேர நாம சொல்ல வேண்டாம்”
“ஏன்?”
“அமைச்சர் பேர் இந்த ரெக்கார்டிங்ல இல்ல. சோ நாம சொல்ல வேண்டாம். பில்டரோ, போலீஸோ சொல்வாங்க. இல்லன்னா சொல்ல வைக்கனும்”
“பில்டர் வருவாரா?”
“வர வைப்பேன். காலைல டிஜிபி முன்னாடிதான், இந்த கேஸ்க்கு முடிவுரை எழுதணும்… கண்டிப்பா எழுதிடுவேன்” என்றாள் நம்பிக்கையாக.
பின், இருவரும் சேர்ந்து அந்த அடியாளின் கைக்கட்டை அவிழ்த்து ஆட்டோவில் ஏற்றினர்.
ஏற்றுவதற்கு முன்பு, “ஆமா இந்த ரெண்டு கன்னும் எப்படி உன்னோட கைக்கு வந்தது” என்று கேட்டாள் அடியாளிடம்.
“அதான் போலீஸ் சொல்லிட்டார்ல” – அடியாள் காவல் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருப்பான் போல… எதுவும் சொல்ல மாட்டான் என்று! ஆனால் ‘போலீஸ்’ எல்லாம் சொன்னதில், அடியாள் குரலில் ஏமாற்றம் மற்றும் கோபம் தெரிந்தது.
“நீ சொல்லு” – சயனா.
“ஒன்னு அமைச்சர் தந்தாரு, இன்னொன்னு போலீஸ் தந்தாரு. அப்படித்தான சொல்லனும்”
“போலீஸ் பேரு சொல்லு” – இங்கும் அமைச்சர் பெயரை, சயனா கேட்கவில்லை. அவளின் ‘டார்கெட்’ காவல்தான்.
தெளிவாய் பெயர் சொல்லிவிட்டான் அடியாள்.
ஆட்டோவில் அடியாளை ஏற்றிய பின், “நீயும் வாம்மா” என்றார் பீட்டர்.
“இல்லண்ணே. என் வண்டியே போதும். நான் அதுலயே போயிருவேன்”
அதற்குமேல், பீட்டர் சயனாவை வற்புறுத்தவில்லை. காரணம்… அவள் வண்டி இங்கே நிற்பதும் தேவையில்லாத கேள்விகளை உண்டாக்கலாம்!
துப்பாக்கிகளை பீட்டர் எடுத்துக் கொண்டார். அமைச்சர் கொடுத்திருந்த துப்பாக்கியில் கைரேகை படாமல் பார்த்துக் கொண்டார். டிஜிபியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக.
ஆட்டோ கிளம்பியது.
‘ஏதோ யோசித்து.. ஏதோ நடந்திருக்கு’ என்று நினைத்துக் கொண்டே நடந்து வந்தாள். நடந்ததை டிஜிபியின் முன்னிலையில் எவ்விதமாகச் சொல்லப்படப் போகிறது என்பதிலே இந்த வழக்கின் வெற்றி இருக்கிறது! கவனமாகப் பேச வேண்டும் என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.
என்பீல்ட் அருகே வந்தாள்.
ராயலின் மீது ஏறியவள்… அதனைச் உறுமச் செய்ய உதைத்தாள்.
என்பீல்டு உறும மறுத்தது.
டிஜிபி முன் நடக்கப் போகும் விசாரணையைத் தனக்குள்ளேயே ஒத்திகைப் பார்த்தபடி, மீண்டும் உதைத்தாள்.
இப்போதும் என்பீல்டு உறும மறுத்தது.
வழக்கு வெற்றியடைந்தால் சக்தி, ‘எப்படி உணர்வான்?’ என்ற நினைப்பு வந்தது.
மீண்டும் மீண்டும் காலால் ஓங்கி உதைத்தாள்.
என்பீல்டு உறும மறுத்தது.
சட்டென்று காவல் அடியாளிடம் அலைபேசியில் சொன்னது ஞாபகத்தில் வந்தது.
‘நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகிடுங்க!’
இதற்கு என்ன அர்த்தம் என்று யோசித்தாள்!
‘அப்போ மூன்றாவது நபர் யார்?’ என்று யோசித்தபடியே உதைத்தாள் .
என்பீல்டு உறும மறுத்தது.
அதேநேரம் இதயம் இரும ஆரம்பித்தது.
பின்புறமாக நடந்த துப்பாக்கிச் சூட்டைப் பற்றி யோசித்தாள்.
சக்திதானே எப்பொழுதும் தன்னை பின்தொடர்கிறான்.
இதயம் இருமுகிறதே! ‘சக்தி இங்கேயும் வந்து விட்டானா? அந்தக் கேள்வி அவள் உயிரை எடுத்து விட்டது!!
வண்டியிலிருந்து வேகமாக இறங்கினாள்.
“சக்தி… சக்தி..” என்று, தன் சக்தி தீர கத்தியபடி ஓடினாள்.
பின்புறமிருந்த உருவத்தின் திசை நோக்கி ஓடியவள், அதன் அருகில் சென்று அமர்ந்தாள். நடுங்கிய கரங்களைக் கொண்டு, அந்த உருவத்தின் தோள்களைப் பிடித்துத் திருப்பினாள்.
சக்திதான்!
சயனாவின் சக்திவேல்தான்!!
அவனுக்கும் தோட்டா துளைத்திருந்ததால், தொடைப் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் அத்தனை உதவி செய்த பீட்டரின் மீதுகூட கோபம் வந்தது! அவர் சரியாகப் பார்க்கவில்லை என்று!!
அதுதானே காதல்!!!
மூச்சை சோதித்துப் பார்த்தாள்.
சக்திக்கு உயிர் இருந்தது.
அந்தக்கணத்தில்தான் சயனாவிற்கு உயிர் வந்தது.
சட்டென்று யோசித்தவள், அங்கிருந்து எழுந்து தண்ணீர் குடம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றாள். தண்ணீர் எடுத்து வந்தவள், இரு கைகளாலும் அதை அள்ளி எடுத்து சக்தியின் முகத்தில் தெளித்தாள்.
சிறிய நொடிப்பொழுதில் சக்திக்கு உணர்வு வந்தது. விழித்தவன் அருகில் இருந்த சயனாவைப் பார்த்தான்.
சக்தியின் கண்களில்… காதல் கிரகத்தின் ஒட்டு மொத்த காதலும் காட்டப்பட்டது.
“சக்தி.. சக்தி…” – காதலனைத் தூக்கி பிடித்துக்கொண்டாள் காதலி.
காதலியின் அருகண்மையை… காதல் கிரகமும், காதலும், காதலனும் உணர்ந்தனர்.
“எதாவது பேசு சக்தி??” – காதலியின் ஒட்டு மொத்த காதல் ஏக்கம், அவள் குரலில்.
காதல் கிரகத்தின் காதல்… மௌனம் காத்தது.
“ப்ளீஸ் சக்தி, இதுக்கு மேல முடியாது, பேசு” – காதலி யாசித்தாள்.
“கனலை விழுங்கிய என் இரும்பியே” – அந்த ‘ழ’கரத்தில், சக்திவேல் தந்த அழுத்தத்தில் அவள் அழுத்தம் கொண்டாள். சயனா கண்கள் இரும்பை ஒத்த கடினமாய் மாறிவிட்டன!
அது காதலன் மீது கனலை வாரிக் கொட்டியது. சயனாவின் தோள்பட்டைக் காயத்தைப் பார்த்தான். “என்னாலதான ட்டேபீ உனக்கு இப்படி ஆயிடுச்சி” என்று காதல் வருந்தியது.
‘இவளுக்கு இப்போது வலிக்கிறது. காயத்தால் அல்ல… காதலால். காதலனின் அழைப்பால்’ – இது இரவின் குரல்.
சக்தி உச்சரித்த வார்த்தை ஒவ்வொன்றும், சயனா உணர்ந்து கொண்டிருந்த தோள்பட்டை வலியை விட பல மடங்காக இருந்தது. அதிலும் ‘ட்டேபி’ என்ற அந்த விளிப்பு உணர்த்திய உண்மை… அவளுக்கு வலிக்கச் செய்தது.
“ட்டேபீ, எனக்கு உன்னய ரொம்ப பிடிச்சது” – காதலனால் உணரப்பட்ட காதல், காதலிக்கு உணர்த்தப்பட்டது.
காதலி எதையுமே உணரவில்லை. ஒன்றைத் தவிர! அது காதலன் உணர்த்திய காதலின் ஏமாற்றம்!!
காதலன் குரலும், காதல் கிரகத்தில் இருந்து வந்த குரலும் ஒன்றுதான்… இத்தனை நாளாக அலைபேசி வழியே பேசியது சக்திதான் என்று சயனா உணர்ந்தாள். ஆனால் அந்த உருவமோ, குரலோ உணர்த்திடும் காதலை… இப்போது அவள் உணர விரும்பவில்லை.
“எப்பருந்து… ஏன்னு சொல்…” என்று சக்தி முடிக்கும் முன்பே, சயனா அவனைக் கீழே விட்டுவிட்டாள்.
எந்த உயரத்தில் அந்தக் காதலனைப் பிடித்திருந்தாளோ, அதே உயரத்தில் இருந்து, அந்தக் காதல் கிரகத்தின் காதலைக் கிழே போட்டுவிட்டு, வண்டியை நோக்கி ஓடினாள்.
“சயனா! ட்டேபி!” – சக்தியின் காதல் யாசித்து, அழைத்து அழைத்துப் பார்த்தது.
