Kathambari Novels
அத்தியாயம் – 14
சயனா அப்படிக் கேட்டதும், “என்னாச்சி ட்டேபீ? ஏன் திடீர்னு வரச் சொல்ற?” என்றது காதல்.
“குழப்பமா இருக்கு. அதான் கேட்கிறேன்” – அவள் குரல் வலிமை இழந்து வந்தது.
“இத்தனை நாள் வரேன்னு சொன்னப்ப வேண்டாம்னு சொன்ன. இப்போ என்ன?”
“உன்னய பார்க்கனும்னு தோனுது. அதான்” – குரலில் அன்பும், அடமும் இருந்தது.
“ஓகே…ஓகே… வரேன்” – அன்பாய் சொன்னாலே கேட்டுக் கொள்ளும் காதல் இது. அடமும் சேர்ந்து கொள்ள… காதல் அடிமைப்பட்டது.
“நிஜமாவேவா?” – காதலைச் சந்தேகப்படும்படி கேட்டாள் சயனா!
“கண்டிப்பா வரேன். நீ என்னாச்சினு சொல்லு?”
அன்றைய அலுவலக நிகழ்வுகளைக் கொட்டித் தீர்த்தாள்.
“ஓ!! சக்திவேலுக்கு ஏதாவது ஆயிடும்னு பயப்படுறியா?”
“ச்சே ச்சே.. சக்திக்கு என்ன ஆகும்? அவன் சேஃப்பாதான் இருப்பான்”
“அவங்கதான் அவனை வரச் சொல்லி இருக்காங்களே”
“ஆனா நான் சக்திய வரச் சொல்லப் போறது இல்ல”
“ஏன்? உனக்கு அவன் இருக்கிற இடம் தெரியாதா?”
“அதலாம் தெரியும். அந்தக் காப்பகத்தில அவன் அம்மாகூடதான் இருப்பான்”
“அப்ப அவன்கிட்ட சொல்லி வரச் சொல்ல வேண்டியதுதானே”
“அது சரியா வராது. சக்தி ஒரு ரெண்டு நாளு சேஃப்பான இடத்தில இருக்கனும். அதுக்கு காப்பகம்தான் பெஸ்ட்”
“பட், அவன் வரலைனா உனக்கு பிரச்சினை வராதா? நீ என்னதான் யோசிக்கிற?”
“ஓகே. டிடெயில்லா சொல்றேன் கேளு. குறுக்கப் பேசக்கூடாது”
சற்று நேரத்திற்கு பிறகே இங்கே தொடரும்….
இதேநேரம் அமைச்சர் சொகுசு விடுதியில்…
மாடி மூலையிலுள்ள அறையில் தரையில் அமர்ந்திருந்தார் அமைச்சர்!
உள்ளுக்குள்ள ஆயிரம் கோபங்கள்!
இதுவரை சயனாவின் அத்துமீறல் பேச்சுக்களைப் பழிவாங்கும் கணக்கின் கீழ் கொண்டு வந்ததே கிடையாது!
ஆனால் இன்று அவள் பேசிய பேச்சை அவரால் கடந்து போக முடியவில்லை!
‘நீ, வா-னு பேசறா! என்கிட்டயே டீல் பேசறா! எவ்ளோ தைரியம்! அவள சும்மா விடக்கூடாது’ – கண்கள் கோபத்தைக் கொப்பளிக்க அமர்ந்திருந்தார்.
தன் அரசியல் முகத்தை அவளிடம் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருக்கிறார்!!
நால்வர் கூட்டணியை, அவள் பிரித்தாளும் சூழ்ச்சி செய்ததை… அவர் கண்டு கொண்டார். அதற்காகவும் அவள் மீது கோபம் இருக்கிறது.
மாலையில் அமைச்சர் தொழிலதிபரிடம் சமாதானமாகப் பேசப் பார்த்தார்.
ஆனால் அவரோ, ‘அதிகாரத்தின் உதவி தொழில் செய்யத் தேவைதான். ஆனால் அந்த அதிகாரம் நீயாதான் இருக்கணும்னு அவசியமில்லை’ என்றுவிட்டார்.
இதனால் சயனா மீதான கோபம் இன்னும் அதிகரித்தது அமைச்சருக்கு.
இந்தப் பிரச்சனை முடிந்ததும் அவளைத் தட்டி வைக்க நினைத்திருந்தவர், இப்போது அவளை விட்டு வைக்க கூடாது என்று நினைக்கிறார்.
அந்தக்கணம் காவல் அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே வந்தது.
“வாய்யா. எல்லாம் முடிச்சிட்டியா?” – அமைச்சர்.
“பாத்துக்கிட்டே இருக்கேன். ஏன் தரையில போய் உட்கார்ந்திருக்கீங்க?”
“சும்மாதான். வா வந்து உக்காருய்யா. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”
“என்ன விஷயம்? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க. அதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சில” – காவல் வந்து தரையில் அமர்ந்து கொண்டது.
“என்ன முடிஞ்சிருச்சி? இல்ல என்ன முடிஞ்சிருச்சி?” – கோபம் மொத்தத்தையும் அமைச்சர் தன் குரலில் காட்டினார்.
“கோபப்படாதீங்க. அவதான் நாம சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாள”
“அவ சொன்னத நாம ஒத்துக்கிட்டு வந்திருக்கோம். அதான் உண்மை”
“ஐயா, என்ன சொல்றீங்க?”
“அவ சொல்லி நான் கேட்கிறதா… அதுக்கு நான் விடமாட்டேன். நான் சொல்றத கவனமா கேளு. குறுக்க பேசக்கூடாது!”
சில நொடிகளுக்குப் பின் இங்கே தொடரும்…
சயனாவின் அறையில்…
“இன்னைக்கு நான் டீல் பேச வேண்டிய அவசியமே இல்லை. அவங்க பண்ணின தப்பு எல்லாம் எனக்குத் தெரியும். இதுக்குமேல அவங்க கனலினிய எதும் செய்ய முடியாதுனும் தெரியும். அப்படி இருந்தும் நான் பேசியிருக்கேன். இத அவங்க யோசிச்சா… எனக்கு பிரச்சனை ஸ்டார்ட் ஆயிடுச்சின்னு அர்த்தம்” என்றாள்.
அமைச்சரின் அறையில்…
“இன்னைக்கு அவ டீல் பேச என்ன அவசியம் இருக்கு? அதும் கனலினிய வச்சி. அதுவே பைத்தியமா ஆகி உட்கார்ந்திருக்கு… அத என்ன பண்ணிடுவோம். இல்ல இந்த நேரத்தில அத எதும் பண்ணா மாட்டிக்கிட மாட்டோமா? ஆனாலும் அத வச்சி டீல் பேசறானா, அதுல ஏதோ இருக்கு” என்றார் அமைச்சர் காவலிடம்.
சயனாவின் அறையில்…
“சக்தி பத்தி எனக்கு எல்லாம் தெரிஞ்சும், அவங்ககிட்ட சொல்லாம இருந்திருக்கேன். அது ஏன்னு யோசிப்பாங்கள… நான் அவனை காப்பாத்த நினைக்கிறேன்னு புரியும்ல…? இப்படி இருக்கப்ப, நான் சக்திய கொல்றதுக்கு ஒத்துகிட்டத எப்படி நம்புவாங்க??” என்றாள் சயனா.
அமைச்சரின் அறையில்…
“இத்தனை நாளா அந்த ஹேக்கர நம்மகிட்ட காட்டிக் கொடுக்காம சயனா இருந்திருக்கா. இன்னிக்கு திடீர்னு கொல்றேன்னு ஒத்துகிட்டானா, அங்க ஏதோ தப்பா தெரியலையா? இங்கேயும் அவனைக் காப்பாத்ததான நினைப்பா?
அவளுக்கும் அவனுக்கும் இடையில் ஏதோ ஒரு கருமம் இருக்குது. அதான் சொல்றேன், அவ அவனை கொல்ல மாட்டா. காப்பாத்ததான் நினைப்பா” என்று அமைச்சர் சயனாவைக் கணித்தார்.
சயனாவின் அறையில்…
“எனக்கு என்னோட டார்கெட் செட் பண்றது ரொம்ப முக்கியம். இப்ப என்னோட டார்கெட் அந்த போலீஸ் மட்டும்தான்! அடுத்ததுதான் அமைச்சர்!!” என்றாள்.
அமைச்சரின் அறையில்…
“இந்த நிமிஷம் என்கிட்ட யாராவது வந்து உன் எதிரி யாருன்னு கேட்டா, நான், அவ பேரத்தான் சொல்வேன்” என்றார் அமைச்சர் காட்டமான குரலில்.
“அப்போ அந்த ஹேக்கர்?” – உடனே போலீஸ் குறுக்கிட்டது.
“அவனால நமக்கு இனி எந்த ப்ராப்ளமும் வராது. வெளிய வந்து நாந்தான் ஹேக் பண்ணேன்னு சொல்ல மாட்டான். சொன்னா ஜெயிலுக்கு போகணும். அம்மா இப்படி இருக்கப்ப, அந்த ரிஸ்க் எடுக்க மாட்டான். அதோட நாமதான் வரி கட்டினதா சொல்லிட்டோமே, இப்ப அவன் என்ன பண்ண முடியும்”
அமைச்சர் சக்தியை மாட்டிவிட நினைக்கவில்லை. அது, கனலினிமீது பொய்யாகப் போட்ட வழக்குப் பற்றித் தோண்டித் துருவிக் கேள்விகளை எழுப்பும் என்று!!
“சயனா கூட இருக்க ரெண்டு பேர்… கனகா, ரேவ்” – மீண்டும் போலீஸ் குறுக்கீடு செய்தது.
“நீ அடிக்கிறப்ப என்னய்யா செஞ்சாங்க, சும்மாதான இருந்துச்சுங்க. அவளுங்க ஒன்னும் செஞ்சிகிட மாட்டாளுங்க” என்றவர், “ஆனா இவ அப்படியில்ல! எதிர்ல நின்னு பேசறா! அடிக்கிறா!! என் அரசியல் வாழ்க்கைக்கே செக் வைக்கிறா. அதான் என் டார்கெட் அவதான்! அவ மட்டும்தான்” – அமைச்சர் கண் முழுவதும் செவ்வரளியின் சிவப்பு, மஞ்சள் அரளியின் விஷம்.
சயனாவின் அறையில்…
“ஒரு போலீஸ்காரன் அவன் ‘கன்’-ன எடுத்து வந்து என்கிட்ட கொடுப்பானாம். அதுவும் சிஐடி ஆபீஸ்ல வச்சி கொடுக்கப் போறானாம். அப்படிச் செய்றதால அவனுக்குப் பிரச்சனை வராதா?” என்று சயனா தன் சந்தேகத்தைச் சொன்னாள்.
அமைச்சரின் அறையில்…
“நீ உன் ‘கன்’-ன அவகிட்ட கொடுத்தா, அது உனக்குத்தான் பெரிய பிரச்சனையா வந்து சேரும்” என்றார் அமைச்சரும்.
“ஐயோ என்ன சொல்றீங்க?” – காவல் குறுக்கிட்டது.
“ஆமா உன் ‘கன்’ அவகிட்ட இருந்தா, பிரச்சனை உனக்கு மட்டும்தான்”
இங்கே, ‘உனக்கு மட்டும்’ என்பது காவல் மனதில் விதைக்கப்பட்டது. “அப்ப வேற கன் அரேஞ்ச் பண்றீங்களா?”
“நீ மட்டும் வேற ‘கன்’ கொடுத்தனா, கண்டிப்பா அவ அலர்ட் ஆயிடுவா”
சயனாவின் அறையில்…
“அவன், அவனோட ஸ்டேஷன் ‘கன்’ கொடுக்காம வேற ‘கன்’ கொடுத்தா அவங்க பிளான் வேற. அப்போ நான் அலர்ட் ஆகனும்!” என்றாள் சயனா.
அமைச்சரின் அறையில்…
“கவலப்படாத! நீ கொடுத்த ‘கன்’-ன அவகிட்டருந்து எடுத்து உன்கிட்ட கொடுக்க வேண்டியது என்னோட வேலை” என்றார் அமைச்சர்.
காவல் நிம்மதி அடைந்தது.
“அதனால நீ உன்னோட ‘கன்’-னயே எடுத்துக் கொடு”
“சரி ஐயா, ‘கன்’ திருப்பி வந்தா எனக்குப் போதும்”
சயனாவின் அறையில்…
“கன் என்கிட்ட வந்தப்புறம் திரும்ப அந்த போலீஸ்கிட்ட போகக் கூடாது” என்று சயனா திட்டவட்டமான குரலில் சொன்னாள்.
அமைச்சரின் அறையில்…
“கண்டிப்பா அவ அங்க தனியாதான் வருவா. கூட யாரும் வர மாட்டாங்க”
“ஐயா, அந்த ஹேக்கர்… சக்தி” – திரும்பவும் போலீஸ் குறுக்கீடு.
“கண்டிப்பா அவ அவனை கூட்டிட்டு வரமாட்டா. அவ தனியாதான் இருப்பா. அது அவளுக்கு மைனஸ். நமக்கு பிளஸ்” என்றார் அமைச்சர் நம்பிக்கையாக.
சயனாவின் அறையில்…
“அங்க நான் தனியா இருக்கப் போறதில்ல. என்கூட பீட்டர் இருப்பாரு. அது அவனுங்களுக்குத் தெரியாது. அது எனக்கு பிளஸ். அவனுங்களுக்கு மைனஸ்” என்றாள் சயனாவும் நம்பிக்கையாக.
அமைச்சரின் அறையில்…
“அவ அப்படி வரலைனா, என்ன ஐயா பண்றது” – காவல் குறுக்கிட்டு கேட்டது.
“அவ கண்டிப்பா வருவா. அப்படி வரலைனா, அடுத்த நாள் அந்த ஹேக்கர்தான் நம்ம டார்கெட்”
சயனாவின் அறையில்…
“கன்-ன வாங்கிட்டு நான் போகாம இருக்கலாம். இதனால எனக்குப் பிரச்சனை வராது. ஏன்? ஈஸியா நான் அடுத்த மூவ் பண்ண முடியும். ஆனா, அடுத்த நாளே சக்திய டார்கெட் பண்ணுவாங்க. ஸோ, கண்டிப்பா நான் போயே ஆகனும்.”
அமைச்சரின் அறையில்…
“அப்போ நான் அவகூட ஸ்பாட்டுக்கு போக வேண்டாமா?” – காவல்.
“போயிராத! என் பிளான் மொத்தமும் சொதப்பிரும். அவளே கூப்பிட்டாலும் போயிடாத!!” – அமைச்சர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
சயனாவின் அறையில்…
“என்ன ஒன்னு, அந்த போலீஸ் என்கூட ஸ்பாட்டுக்கு வரக் கூடாது. அப்படி வந்தா நான் நினைக்கிறத, நடத்த முடியாது” – ‘என்ன செய்ய?’ என்ற யோசனையுடன் சயனா சொன்னாள்.
அமைச்சரின் அறையில்…
“நாளைக்கு நைட், 1:00 டூ 3:00 நானா… அவளானு? முடிவு பண்ற நேரம்ய்யா…”
சயனாவின் அறையில்…
“நாளைக்கு நைட், 1:00 டூ 3:00 நானா… அந்த போலீஸானு முடிவு பண்ற நேரம்…”
இங்கே குறுக்கிடாதே என்று சொன்ன பின், காதல் குறுக்கே வரவில்லை. ஆனால் காவல்… அமைச்சர் பேச்சைக் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தது.
சும்மா ஒரு குறிப்பு!
இனி சற்றுநேரம் அமைச்சர் அறையில் …
“பிளான்னு சொன்னீங்கய்யா, அது என்ன பிளான்?” என்று காவல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே… ஒருவர் உள்ளே நுழைந்தார்.
அவர் அமைச்சரின் உதவியாளர்.
அமைச்சர் கோபமாகப் பார்த்தார். “என்னய்யா?” – கடுமையாகவே கேட்டார்.
ஆனால் இந்த ஒட்டு மொத்தக் கோபமும் உதவியாளர் மீதானதல்ல. காலையில் வார்த்தைகளால் அவரை உலுக்கி எடுத்த சயனா மீதானது!
“ஜயா மன்னிச்சிருங்க. உங்களைப் பார்க்க நம்ம ஆளுங்க ரெண்டு பேர் வந்திருக்காங்க. அதான்” – மிகவும் பயந்து ஒலித்தது உதவியாளர் குரல்.
“ஓ, வந்தாச்சா. ம், வர சொல்லு” என்று அமைச்சர் எழுந்து சோபாவில் அமர்ந்தார்.
காவலும் எழுந்து மேலே அமர்ந்தது.
இருவர் உள்ளே நுழைந்தனர்! அந்த இருவரும், அமைச்சர் தினம் தினம் நடத்தும் அரசியல் அடாவடித்தனங்களை அரங்கேற்றும் நாயகர்கள் போல் இருந்தார்கள்.
“ஐயா, கூப்பிட்டேங்கனு பசங்க சொன்னாங்க” – பவ்வியமாக வந்தது குரல்.
‘வா வந்து உட்காரு’ என்று வந்தவர்களிடம் சைகை செய்தார் அமைச்சர்.
“இல்லய்யா. நாங்க நிக்கிறோம். என்ன விசயம்னு சொல்லுங்க?” – அடியாள் விசுவாசத்துடன் பேசினான்.
“ஒரு சின்ன பிரச்சனை… நீங்க முடிச்சி வைக்கணும்” என்றார் அமைச்சர்.
“ஐயா, என்ன பிரச்சனை, என்ன பண்ணனும் சொல்லுங்க. அத பண்ணதான நாங்க இருக்கோம்”
“ஒரு பொண்ண போட்டுத் தள்ளனும். இதுக்கு மேல அவளை விட்டு வெச்சா எனக்கு நல்லதில்ல” – வேண்டுதல் தேங்காய் போல், தன் வேண்டுதலைப் போட்டு உடைத்தார் அமைச்சர்.
“ஆள் யாருன்னு காமிங்க ஐயா. நம்ம பசங்கள வச்சி முடிச்சிரலாம்” – இவர்கள் சயனாவை, மிகக் குறைவாக எடை போடுகிறார்கள்!!
“பசங்க வேண்டாம். நீங்க ரெண்டு பேரும்தான் போகனும். ஏன்னா? அவ, நீ நினைக்கிற மாதிரி கிடையாது”
சயனாவை எளிதாக எடைபோட்டு அதனால் வந்த எதிர்வினையை அமைச்சர் புரிந்து கொண்டார். எழுந்து சென்று, அங்கே மேசையில் இருந்து ஒரு கவரையும், கைப்பேசியையும் எடுத்து வந்தார்.
கைப்பேசியில் இருந்த சயனா புகைப்படத்தை எடுத்து அவர்களிடம் காட்டினார்.
“இதான் அந்த பொண்ணு. நல்லா பாத்துக்கோங்க. வேணும்னா, உன் மொபைல எடுத்து வச்சுக்கோ”
“கொடுங்கய்யா” என்று வாங்கிப் பார்த்தனர்.
புகைப்படத்தை அவர்கள் கைப்பேசிக்கு அனுப்பியும் கொண்டனர். “பிளான் எப்ப ஐயா?”
“முதல்ல இந்த ‘கன்’-ன வச்சிக்கோ. சைலன்ஷர் ‘கன்’. சரியா” என்று, அடியாள் கைகளில் கவரைத் திணித்தார்.
“டைம் சொல்லுங்க ஐயா”
“நாளைக்கு ராத்திரி ஒன்னுலருந்து மூனுக்குள்ள”
“ஐயா, எந்த ஏரியா?”
“அதலாம் இவரு நாளைக்குச் சொல்வாரு. நீங்க அவர்கிட்ட கேட்டுக்கோங்க.” – காவலைக் கைகாட்டினார்.
காவலைப் பார்த்து அந்த அடியாட்கள் இருவரும் ‘ஒரு வணக்கம்’ வைத்துக் கொண்டனர். காவலும் ஒரு கையால் எதிர் வணக்கம் செய்தது.
“யாரும் அவகூட இருக்க மாட்டாங்க. ஏரியாவ போலீஸ் கிளியர் பண்ணி வச்சிருவாரு. அவமட்டும் தனியாதான் வருவா” என்றார் அமைச்சர்.
“எத்தனை பேர் கூட வந்தாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்ல ஐயா”
“ம்ம்ம், அவளை ஷூட் பண்ணிட்டு, அந்த இடத்திலிருந்து உடனே கிளம்பிறனும்”
“சரிங்கய்யா”
“கவனமா செய்யனும். யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது. நீங்க எஸ்கேப் ஆகுறது ரொம்ப ரொம்ப முக்கியம். இன்னொரு விஷயம். அவ கைலயும் ‘கன்’ இருக்கப் போகுது. அதனால சொல்றேன் கவனமா இருங்க”
“ஐயா, நீங்க பயப்படாதீங்க, நாங்க பார்த்துப்போம்”
“அவளை கொன்னதும் அந்த ‘கன்’-ன கொண்டு வந்து இந்த போலீஸ்கிட்ட கொடுக்கனும்”
“அப்பவே கொடுக்கனுமா?”
“நீ என்னய்யா சொல்ற? ” என்று அமைச்சர் காவலைப் பார்த்துக் கேட்டார்.
யோசித்தது காவல்.
“அவன் யோசிச்சி சொல்லட்டும். அவகிட்ட அந்த ‘கன்’ இருக்கவே கூடாது. அது ரொம்ப ஆபத்து. அதனால முதல்ல நீ ‘கன்’-ன எடுக்க மட்டும் செய்” என்றார் அமைச்சர் அடியாட்களிடம்.
“சரிங்கய்யா”
“மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம்” என்று அமைச்சர் சொன்னதும், அடியாட்கள் போய்விட்டனர்.
‘எப்படி என் பிளான்’ என்பது போல் அமைச்சரின் பார்வை காவலைப் பார்த்துக் கேட்டது. அதில் பழிவாங்கும் வெறி தெரிந்தது.
சயனாவைப் பழிவாங்கப் போகிறோம் என்ற நினைப்பில் சிரித்தார் அமைச்சர்.
காலையில் அவள் செய்த செயலுக்கு இதுவே சரியான பாடம் என்று நினைத்து காவலும் சிரித்தது.
இதேநேரத்தில் அலைபேசியில் இருந்த சயனா…
“உன் பிளான்தான் என்ன?” – காதல்.
“சூப்பரா கேட்ட. நான் என்ன செய்யப் போறேனா, அந்த ‘கன்’-ன எனக்கு பேவரா யூஸ் பண்ணிக்கப் போறேன்”
“புரியல ட்டேபீ”
“ஒரு போலீஸ்காரனுக்கு ‘கன்’ மிஸ்ஸிங் அப்படிங்கிறது எவ்ளோ பெரிய பிரச்சனை தெரியுமா? அதான் பிளானே! கன் மிஸ்ஸிங். டிஜிபிக்கு இன்பார்ம் பண்ணிடுவேன். அவர் செக் பண்ணா, அந்த போலீஸ் மாட்டுவான்”
“பட், ‘கன்’ உன்கிட்ட இருக்குதே”
“அது யாருக்கும் தெரியாதுல. அதுக்கப்புறம் அந்த கேஸ ஹேண்டில் பண்ணவே அவனுக்கு நேரம் சரியா இருக்கும். அதுக்கப்புறம் அமைச்சர் தனியா இருப்பாரு. அப்போ பாத்துக்கலாம் அவர”
“பீட்டர் எதுக்கு இதுல. உனக்கு ஹெல்ப் பண்ணவா??”
“பீட்டர் எதுக்காகனா, என் பிளான் வொர்க் அவுட் ஆகாம போனா? அப்போ பீட்டர்கிட்ட ‘கன்’-ன குடுத்திட்டு நான் எஸ்கேப் ஆயிடுவேன்”
“ஓ, ஆப்ஸன் வச்சிருக்க”
“அத திரும்பி சேஃப்பா, அவங்க ஸ்டேஷன்க்கு கொண்டு போறது, அவரோட வேலை. அதுக்குதான் பீட்டர்”
“அது அவ்ளோ ஈஸியா?”
“கஷ்டம். எப்படி மேனேஜ் பண்ண போறார்னு தெரியல. திருப்பி ‘கன்’-ன அவங்க ஸ்டேஷனுக்கே கொண்டு போனாலும்… அத கரெக்டான இடத்தில் வைக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது”
“அப்புறம் ஏன் அவர்?”
“உண்மைய சொல்லனும்னா அவர் மேல எனக்கு பெரிய நம்பிக்கை இல்ல. அவர் எவ்ளோ தூரம் ஹெல்ப் பண்ணுவாருனும் தெரியல”
‘அவர் உதவுவார் சயனா! அவர்மேல் நம்பிக்கை கொள்’ – நாளைய இரவை இன்றே கணித்து, குறி சொன்னது காலம்.
“ஏன் ஹெல்ப் பண்ண மாட்டாருனு நினைக்க?” – காதல் கேட்டது.
“ரொம்ப நியாயவாதி போல! அதுல தப்பில்ல. ஆனா அப்படிபட்ட ஒருத்தர வச்சிக்கிட்டு… அமைச்சர், அந்த போலீஸ்காரன் மாதிரி ஆளுங்கள எதிர்க்கிறது ரொம்பவே கஷ்டம்…
அவனுங்ககிட்ட கொஞ்சம் அநியாயமா நடந்துகிட்டாதான், நம்மள நாம காப்பாத்திக்க முடியும். அதான் சொல்றேன் பீட்டர் எனக்கு ஹெல்ப் பண்ணுவாரான்னு தெரியல.”
‘சயனா, அவரைக் குறைத்து எடை போடாதே! உன் நிலை கண்டு, உனக்கு உதவப் போகும் ஒரு ஜீவன்!’ – குறி கூறும் காலம்.
“எப்படி என்னோட பிளான்? கிளியரா இருக்கா?” என்று கேட்டாள்.
“சூப்பர். லவ் யூ ட்டேபீ ” – காதல் பெருமை கொண்டது.
“தயவுசெஞ்சு இப்படிச் சொல்லாத. சக்திக்கு மட்டும்தான் இத சொல்ல ரைட்ஸ் இருக்கு”
“இத்தனை நாளா சொன்னப்ப ஒன்னும் சொல்லல. இப்ப ஏன் சொல்ற?”
“ஏன்னா, இப்ப நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்”
“இதென்ன புதுசா?”
“புதுசெல்லாம் இல்ல. நேத்தே லவ் சொல்லிட்டான்”
பிறந்தநாளன்று நடந்த பிரியங்களை, தன் மேல் பிரியம் கொண்டவனிடம் பகிர்ந்து கொண்டாள்.
“அவன் உன்கிட்ட பேசவே இல்ல. நாம எவ்ளோ பேசிருக்கோம். சோ இதான் லவ்”
“பட், சக்திய நேர்ல பார்த்திருக்கேன். ஆனா உன்னய பார்க்கல. சோ எங்க லவ்தான் பெஸ்ட்”
“ஹே!! இப்படிலாம் கம்பேர் பண்ணுவியா நீ?” – காதல், அவள் பேச்சில் வியந்து போனது.
“இன்னும் நிறைய இருக்குது” – ட்டேபீ
“சொல்லு…சொல்லு” – காதல் மற்றொரு காதல் பற்றிக் கேட்கிறது! அடடே!!
“நானும் அவனும் ஒரே பைக் வச்சிருக்கோம், தெரியுமா?”
“ப்ச் எதுக்கு ரெண்டு பைக். எனக்கு உன் பைக்கே போதும்”
“சக்தி பிளாக் கலர் ஷர்ட் போட்டிருந்தான், நான் வொயிட் கலர் ஷர்ட். பிளாக் அண்ட் வொயிட் கோம்போ(combo) சூப்பர்ல”
“என்கிட்ட வொயிட் ஷர்ட்டே இருக்கு ட்டேபீ. பெர்பெக்ட் கோம்போ” – வெள்ளை நிற காதல் ஜோடிப் புறாக்கள் போல் நாம் என்று காதல் சொன்னது!!
“அப்புறமா, அவனுக்கு அவங்க அம்மாவ ரொம்பப் பிடிக்கும், எனக்கும் அம்மாவ பிடிக்கும்”
“எல்லாருக்குமே அம்மாவ பிடிக்கும்”
“அட போப்பா” – சிணுங்கல் குரலில் சயனா சொன்னாள்.
“என்ன ட்டேபீ நீ? சின்னப் பிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க”
காதலே! இவள் உன்னிடம் மட்டும்தான் இப்படி மழலையாக மாறுகிறாள்!!
“இதலாம் லவ் வந்ததுக்கு அடையாளமா? பேஸிக்கா ஒன்னு இருக்கு. அத நீ மறந்திட்ட. நான்தான், உனக்கு ஐ லவ் யூ சொல்லியிருக்கேன், அவன் இல்ல” – கூஃபி.
“ஓ, அதான் பிரச்சனையா?? அப்போ நல்லா கேட்டுக்கோ! ஐ லவ் சக்தி.. ஐ லவ் சக்தி.. ஐ லவ் சக்தி.. போதுமா?”
“ஆனா, அவன் சொல்லலைல?”
“காதல்ல யாராவது ஒருத்தர் ஐ லவ் யூ சொன்னாலே போதும்”
இது புதிதாய் இருக்கிறதே!! காதல் கிரகத்திற்கு மட்டுமான, புதிய காதல் தத்துவம் போல!!
“ரியலி. மாத்த மாட்டேயே??” – காதல் கேட்டது.
“ம்கும்”
“அப்போ, அதே ரூல் எனக்கும் அப்ளே ஆகும்ல” – சட்டம் தெரிந்த காதல் போல!
“அடடா” என்று அடக்கமாட்டாமல் சிரித்தாள் சயனா. சிறிது நேரத்திற்குப் பின், “ப்ளீஸ், புரிஞ்சுக்கோ கூஃபி, நான் சக்தியதான் லவ் பண்றேன்” என்று தீவிரமான குரலில் சொன்னாள்.
“நீ புரிஞ்சுக்கோ ட்டேபீ…”
“என்ன? எதை?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிரிக்கக் கூட முடியல… தெளிவா யோசிக்க முடியலனு சொன்ன. ஆனா இப்போ சிரிக்கிற! ரொம்பத் தெளிவா யோசிச்சி பிளான் போட்ருக்க!! அவ்வளவுதான்”
வார்த்தைகளால் அவளை வழிக்கு கொண்டு வரும் வாழ்வியல் கற்றது போல, இந்தக் காதல்!!
“தேங்க்ஸ் அன்ட் ஆலிவ்…” என்று அவள் முடிக்கும் முன்னே…
“ஏய்!! சொல்றதா இருந்தா, தமிழ்ல சொல்லு. இல்லன்னா வேண்டாம்”
“ஓகே”
“சொல்லப் போறியா?”
“அய்யோ அது வேற ஓகே” – ஒருமுறை சிரிப்பதே முடியாது என்ற நிலையில் இருந்தவள், மறுமுறையும் சிரித்தாள்.
“இனி உன்கிட்ட பேசுனா, நேர்ல உன் முன்னாடி வந்து நின்னுதான் பேசுவேன். சரியா ட்டேபீ??”
“ம்ம்ம்” – காதல் கிரகத்திலிருந்து காதல் வருகிறது! கன்னிக்குள் களிப்புகள்.
“கவுன்ட் தே ஹவர்ஸ் ட்டேபீ” – காதல் இதனைச் சொன்ன விதம், அவள் காதிற்கு வெகு அருகில் வந்து ரகசியமாய் சொன்னது போல் இருந்தது.
“பை ட்டேபீ” – காதல் கிரகம், தன் ஒட்டுமொத்த காதலைத் தூக்கிக்கொண்டு, அவளைச் சந்திக்க வரப்போகிறது.
காய்ந்து போன பூச்செண்டை அணைத்துக்கொண்டு, காதில் ஒலித்த ‘கவுண்ட் தே டேய்ஸ்’ நினைத்துக் கொண்டாள். இருமிய இதயத்தின் ஒவ்வொரு திசுக்களும் தித்திப்பினை உணர்ந்தது போல இருந்தது.
மெல்ல மெல்ல உறக்கத்திற்குப் போனாள்.
சாவகாசமாக, சாதுரியமாக உத்திகள் அமைப்பது மிக எளிது!
சங்கடமான சூழலில் சமயோசிதமாக புத்தியைப் பயன்படுத்துபவர் மட்டுமே வெற்றி பெறுவார்கள்!!
நியாயத்தை நிலை நாட்ட அநியாயப் போர்க்களத்தில் நிற்கும் சயனா! அந்தப் போர்க்களத்தை அமைத்த அமைச்சர்! யார் வெற்றி பெறப் போகிறார்கள்?
