Kathambari Novels
ஏற்கனவே நான்கு நாட்கள் நடைப்பயிற்சி இல்லாதது, இன்றும் ஜீவனைக் காண முடியாதது என்ற காரணங்களால் பவானி மனநிலை மனஅழுத்தம் கொண்டது.
ஜீவன் வாங்கித் தந்திருந்த நூல் வேலைப்பாட்டிற்கான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். பாலா, பல்லவி ஒரு வித்தியாசமானப் பார்வையை வீசிவிட்டுக் கிளம்பினார்கள்.
நிரம்ப நாட்களுக்குப்பின் செய்வதாலோ, உளநோயின் மனஅழுத்தத்தின் ஒரு பகுதியான கவனமின்மை காரணமாகவோ, சரியான முறையில் பூக்கள் வரவில்லை.
நூலைப் பிரித்தாள். திரும்பவும் தைத்துப் பார்த்தாள். இந்த முறையும் பூக்கள் சரியில்லை. மறுமுறை முயற்சிக்கலாம் என்று, நூலைப் பிரித்துத் தைத்துப் பார்த்தாள்.
இம்முறையும் பவானிக்குத் திருப்தியில்லை. இது திரும்பத் திரும்ப நடந்தது. இதனால் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை இழந்து, அனைத்தையும் வைத்துவிட்டு சமயலைறயில் இருந்த தந்தையிடம் சென்றாள்.
“அப்பா”
“சொல்லும்மா பவானி”
“ஏதாவது ஹெல்ப் பண்ணவா?”
“வேண்டாம். அப்பா பார்த்துக்குவேன். நீ ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தியே, அதைப் போய் பண்ணும்மா”
“அது சரியாவே வர மாட்டிக்கு. அதான் ஒருமாதிரி இருக்கு. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கப்பா”
“அப்போ விட்ரும்மா. அப்பாவுக்கு வேலை இருக்கு பாரு. பேசாம ரெஸ்ட் எடு பவானி” என்று சொல்லி, மகளை அனுப்பி விட்டார்.
வெளியே வந்து கட்டிலில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள். யாருக்குமே பிரயோஜனம் இல்லாமல் தான் வாழ்கிறோமோ… தனக்கும் யாரும் உதவ மாட்டார்களோ என்ற எண்ணங்கள் மேலோங்கி இருந்தது.
இதுவும் உளநோயின் தன்மையே! தனக்கு யாரும் உதவ மாட்டார்கள் என்ற எண்ணம் வருவது!! இருந்தும் ஜீவனின் ‘உன்னால முடியும்’ என்ற வார்த்தை மனதில் நிறுத்தி, திரும்பவும் நூல் வேலையை ஆரம்பித்தாள்.
ஜீவன் சாரின் மனப்பிரதேசத்தின் நிலை! தனிமையில் இருக்கின்றேன் என்ற பேர்வழியில், பவானி நீங்கிய பொழுதுகளில் ஏங்கிய மனதை என்ன செய்ய என்று தெரியாமல் திண்டாடினார் ஜீவன்!!
இரண்டு நாட்களுக்குப் பின்! வாடைக்காற்று வானிலையில் மலைப்பிரதேசம் குளிர் பிரதேசமாக மாறியிருந்தது. பவானி வீட்டில் பாலாவும் நாதனும் பேசிக் கொண்டிருந்தனர்.
“இன்னைக்கு பவானியை கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகணும்” – நாதன்.
“நானும் நினைச்சேன். இடையில நாலு நாளும் ரொம்ப மோசமா இருந்தாள?”
“ஆமா பாலா. இந்த ரெண்டு நாள்கூட கொஞ்சம் கவனமில்லாம இருக்கிறா. அதான் கேட்கிறேன்”
பாலாவுக்கு நாதன் கேட்பது புரிந்ததால், தன் சட்டைப் பையிலிருந்து எழுநூறு ரூபாய் எடுத்து நீட்டினான். நாதன் வாங்கிக் கொண்டார்.
“இவ்வளவுதான் இருக்குப்பா. மருந்து மாத்திரையெல்லாம் பாதிப் பாதியா வாங்கிக்கோங்க. மிச்சத்தை அப்புறமா வாங்கித் தரேன்”
“இல்லடா, பார்ட் டைம் வேலைக்குப் போனதுல கொஞ்ச பணம் இருக்கு”
“வேலைக்குப் போகக் கூடாதுனு சொன்னா கேட்கிறீங்களா?”
“விடுப்பா. நம்ம பவானிக்காகத்தான”
“உங்க உடம்பையும் பார்த்துக்கோங்க. மாத்திரை சரியா சாப்பிடறீங்களா?
“சாப்பிடறேன்டா”
“அப்புறம் அப்பா, அப்படியே மதன் வீட்டுக்கும் போயிட்டு வந்துருங்க”
“ஏன்டா?”
“மலை அடிவாரம் வரைக்கும் போறவங்க, மதன் வீட்டுக்குப் போகலைன்னா நல்லா இருக்காது”
மலையின் அடிவாரத்தில் மருத்துவமனையும்… மதன் வீடும் அமைந்துள்ளது என்பதால், “சரிடா” என்று தேவையானப் பொருட்களை எடுத்து வைத்தார்.
“இதே பவானி மதன் வீட்டுக்குப் போய்ட்டா, இந்தச் செலவெல்லாம் நமக்கு இருக்காது” என்று சலித்துக் கொண்டே சொல்லிவிட்டுச் சென்றான் பாலா.
சிறுபிள்ளையை, மனைவியை பாலா பிரிந்து இருப்பதால் வந்த வார்த்தைகள் என்றாலும், பெற்றவரால் அதை சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை.
இவர்கள் உரையாடல் அத்தனையும், பவானி எந்த உணர்ச்சியும் காட்டாமல் கேட்டிருந்தாள்.
சற்றுநேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு, பவானியும் நாதனும் கிளம்பினார்கள்.
மலைப்பிரதேசத்தின் அடிவாரத்தை சென்றடைய ஜீப் வசதி உண்டு. அதில் ஒன்றில் பவானியும் நாதனும் ஏறி அமர்ந்தனர். சன்னலோர எதிர்காற்றாய் பனிக்காற்று வர, மலைப் பாதை வளைவுகளில் பயணம் தொடங்கியது.
“அப்பா”
“என்னம்மா?”
“மதன் வீட்டுக்குப் போகக் கூடாது”
“சரிம்மா”
“ஆனா பாலண்ணா சொல்றப்போ… நீங்களும் சரினு சொன்னீங்க”
“அதெல்லாம் யோசிக்காத பவானி. அப்பா அப்படிச் செய்யவே மாட்டேன்”
“ம்ம்ம், சரிப்பா” என்று சொன்னவள் நாதனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“பவானி என்ன யோசிக்கிற?”
“அப்… அப்பா என்னால யாருக்குமே யூஸில்லயோ??”
“பவானிம்மா இப்படி நினைக்க கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்கள?”
“ம்ம்” என்று சொல்லி மேலும் வாகாக சாய்ந்து கொண்டாள்.
“பவானி அழறியாமா?”
“இல்லப்பா. ஜீவன் சார் அழவே கூடாதுனு சொல்லிருக்காங்க” என்று கண்மூடி நிம்மதியாகத் தூங்க, நாதனின் நிம்மதி பனிக்காற்றோடு பறந்து போனது!
மலைஅடிவாரத்தில் நடத்திவரும் புற நோயாளிகளுக்கான மருத்துவமனை அது. ஒரேயொரு தளம் கொண்ட சின்ன கட்டிடம். அந்தத் தளத்தில் நீளமான நடைக்கூடத்தில் வரிசையாக நாற்காலிகள் இருந்தன. சில ஆட்கள் மட்டுமே இருந்தனர்.
பவானியின் மனநல மருத்துவர் இங்கு வருவது ஒருசில பிரத்யேக தேதிகளில் மட்டும். அந்தசமயம், நாதன் மகளை அழைத்து வருவார். இந்த மருத்துவரின் சொந்த மருத்துவ மனையில்தான் பவானி பித்து நிலையில் இருந்தபோது ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் பவானிக்கு இதுபோல ஆலோசனைகள், ஒரு குறிப்பிட்டக் கால இடைவெளியில் தேவைப்படும். இதுபோன்ற ஆலோசனைகளை பவானியின் மனநல மருத்துவர், இந்த மருத்துவமனையில் கொடுத்து வருகிறார்.
கட்டணம் சற்று குறைவு என்பதால் நாதன் வழமையாக இங்கேதான் மகளை அழைத்து வருவார். மருத்துவர் அறை வெளியே தந்தையும் மகளும் அமர்ந்து கொண்டு மருத்துவர் வருகைக்காக காத்திருந்தனர்.
பவானியின் முகத்தில் இன்னும் ‘தான் எதற்குமே உபயோகம் இல்லை’ என்ற எண்ணம் தெரிந்தது. இருந்தும் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நடைக்கூடத்தின் மற்றொரு பகுதியில் ஜீவன் இருந்ததைத் தற்செயலாகக் கவனித்தாள்.
பெரிய இடைவெளி இல்லை என்பதால், ஜீவன் இடது கையில் போடப்பட்டக் கட்டு தெரிந்தது. ‘என்னாச்சு?’ என்று பதறியவாறே எழுந்தாள்
“என்னம்மா?” – நாதன்.
“ஜீவன் சார் அங்க இருக்காங்க. போய் பார்த்திட்டு வந்திடுறேன்”
“வேண்டாம் பவானி. இப்போ டாக்டர் வந்திடுவாங்க”
“இல்லப்பா” என்று அவள் ஆரம்பிக்கும் போதே, “என்ன இல்லப்பா” என்ற குரல் வந்தது. இருவரும் பின்னால் திரும்பிப் பார்த்தனர். மருத்துவர்தான், “என்ன பவானி… எப்படி இருக்கீங்க?” என்று சிரித்துக் கொண்டு இருந்தார்.
இவர் நாதனை விட பத்து வருடங்கள் வயதில் பெரியவர். நல்ல அனுபவம் நிறைந்த மனநல மருத்துவர்!
“ம்ம்ம்… ஜீவன் சாரைப் பார்க்கணும்” – பவானி.
“எங்க இருக்காங்க??” – மருத்துவர்.
“அங்க இருக்காங்க” என்று ஜீவன் இருக்கும் திசை நோக்கிக் கை காட்டினாள்.
“பவானி, டாக்டர் வந்தாச்சு. பேசாம இரு” – இது நாதனின் வசனம்.
“ஏற்கனவே சொல்லிருக்கேன்ல. பவானியை ரெஸ்ட்ரிக்ட் பண்ணாதீங்கனு” – மருத்துவர்.
“டாக்டர் அது வந்து…” – நாதன்.
“விடுங்க, பவானி நீங்க போங்க. நான் வெயிட் பண்றேன்” என்று மருத்துவர் சொல்ல, “தேங்க்ஸ் டாக்டர்” என்று விரைவாக நடக்க ஆரம்பித்தாள்.
அவள் போனதும், “சொல்லுங்க நாதன்… பவானி எப்படி இருக்காங்க??” என்று மருத்துவர் கேட்டார்.
“இந்த ரெண்டு நாளா, கொஞ்சம் கவனமில்லாம இருக்கிறா டாக்டர். அப்புறம் வர்றப்போ ‘நான் யாருக்கும் பயனில்லையா?’னு கேட்டா”
“ஓகோ! சரி, நான் பேசுறேன்” என்று சொல்லிவிட்டு, பவானி சென்ற திசையில் ‘என்ன நடக்கிறது?’ என்று பார்க்க ஆரம்பித்தார்.
இதேநேரம் ஜீவன் அருகே சென்ற பவானி, அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு இரு நாற்காலிகள் தள்ளி அமர்ந்தாள்.
“ஜீவன் சார்” – ஏழாம் சுவையாய் ஒலித்தது பவானி குரல். அழைப்புக் கேட்டுத் திரும்பியவன் பவானியைப் பார்த்ததும், ஒரு ஸ்நேக புன்னகைத் தந்தான்.
“என்ன பவானி இங்க வந்திருக்க?”
“அது… அது… உங்களுக்குக் கையில என்னாச்சு?” என்று ஜீவன் இடது கையில் இருந்த, கட்டினைப் பார்த்துக் கேட்டாள்.
“ப்ச்… அது ஒன்னுமில்லை பவானி. உடைஞ்ச மரம் குத்திருச்சி”
“ஏன் இப்படி? பார்த்துப் போங்கனு சொன்னேன்ல ஜீவன் சார்” என்று பவானி விழிநீர் சிந்தினாள்.
“நானும்தான் சொன்னேன்… அழக் கூடாதுன்னு! நீ கேட்கிறீயா??” என்று தன் கண்களால் அவள் கண்ணீரைச் சுட்டிக்காட்டினான்.
“அது… ம்… அது…” எனத் தடுமாறியவள், “எனக்காகத்தான அழக்கூடாதுன்னு சொன்னீங்க” என்றாள்.
“ப்ச், புரியல”
முந்தானையால் விழிநீரை துடைத்தபடியே, “இது… இது உங்களுக்காக” என்ற வாக்கியம் சொல்லி, ஜீவனை விழ வைத்தாள்.
தனக்காக அழ ஒரு ஜோடி கண்கள் இருக்கின்றன என ஜீவன் நினைப்பதால் அமைதி பேசிய தருணங்கள் – இவை.
அதன்பின், “பவானி ரிலாக்ஸாக ஒரு ஜோக் சொல்லலாமா?” என்று கேட்டான்.
“இல்ல இல்ல ஜீவன் சார்! நான் ரிலாக்ஸ்தான்”
திரும்பவும் ஜீவனின் புன்னகை செய்தான். நடைக்கூடத்தின் கடிகார முட்கள் பயணிக்கும் ஓசை கேட்கும் அசத்தம் நிறைந்த தருணங்கள் – இவை.
“ஜீவன் சார்… பார்த்து இருக்கனும். சரியா?”
“ம்ம்ம்”
“சரி கட்டு போட்டாச்சே, இன்னும் இங்கயே ஏன் இருக்கீங்க?”
“தலை சுத்தற மாதிரி இருக்கு பவானி. அதான் கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டு போகலாம்னு”
“ஓ”
“பவானி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”
“என்ன ஹெல்ப்??”
“இதுல இருக்கிற மருந்தை கொஞ்சம் வாங்கிட்டு வந்து தர்றியா?” என்று ஒரு மருந்துச்சீட்டை அவளிடம் நீட்டினான்.
“நானா??” என்று ஐயம் கொண்டு கேட்டு, அதனை வாங்க மறுத்தாள்.
“ப்ச்… நீதான்ம்மா”
தானும் ஒருவருக்கு உதவ முடியும் என்ற உற்சாகத்துடன் பவானி இருப்பதால், உரையாடல் உறைந்த தருணங்கள் – இவை.
“பவானி”
“ம்ம்ம், கொடுங்க”
“இந்தா” என்று சில நூறு ரூபாய் நோட்டுக்களையும், மருந்துச்சீட்டையும் நீட்டினான். பவானி வாங்கிக்கொண்டாள்.
“ஹாஸ்பிட்டல் வாசல்ல இறங்கி லெப்ட்ல நடந்தா, மூணாவது கடை… அங்க கேட்டுப்பாரு”
“ம்ம்”
“அங்க இல்லைனா வந்திடனும். வேற எங்கேயும் போக கூடாது. சேஃப் இல்ல. நான் வேற இடத்தில வாங்கிப்பேன்”
“ஏன்? எங்க அப்பாக்குப் பதில் சொல்லணுமா??” என்றதும், ஜீவன் புரியாமல் பார்த்தான்.
ஜீவன் சார், அன்றைய நடைப்பயிற்சி நாளில் நீங்கள் சொன்னதுதான் இது. – ஞாபகம் வைத்திருக்கும் நாம்.
இப்போது புரிந்துவிட்டது போல புன்னகை புரிந்த ஜீவன், “உங்க அப்பாகிட்ட கேட்டுட்டுப் போய் வாங்கிட்டு வா பவானி” என்றான்.
பவானி கேட்டதால், ‘நாதன் சார்’ ‘உங்க அப்பாவாக’ மாறிவிட்டது! ஜீவன் சார் உங்களுக்குள் நிதமும் நிகழும் மாற்றத்தைக் கவனிக்கிறோம்!! – நாம்.
நேராக நாதனை நோக்கிச் சென்ற பவானி, “அப்பா, ஜீவன் சாருக்கு மெடிசின் மட்டும் வாங்கிக் கொடுத்திட்டு வந்திடறேன்” என்றாள்.
“பவானி… டாக்டர் வந்துட்டாங்க. அதனால நீ போக வேண்டாம். அப்பா போய் வாங்கிட்டு வரேன்” என்றதும், ‘இந்த வேலையாவது செய்றேனே அப்பா’ என்று கெஞ்ச வேண்டும் போல் இருந்தது பவானிக்கு.
“இல்ல, பவானி போகட்டும். நான் வெயிட் பண்றேன். நீங்க போங்க பவானி” – இதுவரை நிகழ்ந்தவற்றை தூரத்தில் இருந்துக் கவனித்த மருத்துவர்.
பவானி சென்றதும், “நாதன்… வாங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று நாதனை அழைத்துவிட்டு, மருத்துவர் அறைக்குள் சென்றார்.
வெளியே குளிர் அதிகம். எனவே புடவை முந்தானையைத் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டு நடந்தாள். எட்டு மாதங்கள் கழித்துத் தனியாகச் சென்று ஒரு வேலை செய்ய போகிறாள். ஜீவன் சொன்னது போல் இடதுபுறம் இறங்கி, சாலையில் நடக்க ஆரம்பித்தாள்.
ஜீவன் கைக்கடிகாரத்தின் வினாடி முட்கள் பதினைந்து முறை நகன்ற பிறகு, பவானி அவன் இருக்கும் இடத்திற்கு வந்தாள். இம்முறை ஒரே ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர்ந்தாள். ஒரு கையில் மருந்துகள், மற்றொரு கையில் சாப்பாட்டுப் பொட்டலம் இருந்தது.
“இந்தாங்க” என்று சாப்பாட்டுப் பொட்டலத்தை நீட்டினாள்.
“என்னது பவானி? மருந்துதான வாங்கிட்டு வரச் சொன்னேன்” என்று கோபம் கொண்டான்.
ஜீவன் பேசும் போதே பொட்டலத்தைப் பிரித்து, “பேசாம சாப்பிடுங்க. தலை சுத்துதுனு சொன்னீங்கள. அதான்” என்றாள்.
“ப்ச். சீரியசா சொல்றேன், எனக்கு பசிக்கவே இல்ல” என்றான் எரிச்சலாக.
அக்கறையாக, “ப்ளீஸ், எனக்காக சாப்பிடுங்க” என்று பிரித்த பொட்டலத்தை அன்புடன் நீட்டியதும், இதற்கு முன்பு சாப்பிட்ட தருணங்கள் எல்லாம் ஜீவன் கண்முன் வந்து போயி… கண்கள் கலங்கின.
“ம்ம்ம் சாப்பிடுங்க” – பவானி.
அந்த அன்பிற்காகவா, அந்த அக்கறைக்காகவா இல்லை, அவளுக்காகவா?
இவற்றில் ஒன்றிற்கு அடிமையாகி… சாப்பாட்டை அள்ளினான் ஜீவன்.
ஒரு நாற்காலி இடைவெளிவிட்டு இருந்ததால் சாரியாக எட்டவில்லை. எனவே ஜீவன் எழுந்து, எவ்வித இடைவெளியும் இல்லாமல் பவானி அருகில் அமர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
அன்று, ‘சாப்பிடறப்ப அன்பு, அக்கறைனு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எதுக்கு?’ என்ற ஜீவன் சார், இன்று பவானியின் அன்பு அக்கறைக்காக சாப்பிட்டார். – நாம்.
அவன் சாப்பிட்டு முடித்ததும், “இதுல இருக்க பெயின் கில்லர் போடுங்க” என மருந்துப்பையை நீட்டினாள். அப்படியே செய்தான். பின் பவானி “இது மிச்சக் காசு” என்று உள்ளங்கையில் சில்லறை வைத்து நீட்டினாள்.
இன்றும் ஒரு முழு வினாடி ‘என்ன செய்ய’ என்று யோசித்தான்!
சற்று ஏமாற்றத்துடன் பவானி உள்ளங்கையை மூடிக் கொண்டாள். அவளின் அந்தச் செய்கையைப் பார்த்த ஜீவன், அவளது கரத்தைப் பிடித்து, ஒவ்வொரு விரலாக திறந்து உள்ளங்கையிலிருந்து சில்லறையை அள்ளினான்.
என்ன சொல்லவதென்று தெரியா நிலையில்! – நாம்.
அக்கணம் ஒரு இளம்வயது பெண் இவர்கள் இருவரையும் பார்த்தபடி கடந்து சென்றாள். பவானியும் அப்பெண் மறையும் வரை அவளையே பார்த்தாள்.
“என்னாச்சு பவானி?” – ஜீவன்.
திரும்பி ஜீவனைப் பார்த்தவள் முகத்தில் பயம் தெரிந்தது.
“பவானி… யாரந்த பொண்ணு?”
“மதனோட தங்கிச்சி”
“ஓ! மதனுக்கும் அவர் தங்கச்சிக்கும் ஒரே மாதிரி பேஸ்கட்… இல்லையா??”
‘ஏன் இப்படி ஜீவன் சார்?’ – இது நாமும் பவானியும்.
“ப்ச், எதுக்கு இப்படிப் பார்க்கிற பவானி?” – ஜீவன்.
“அவங்க மதன்கிட்ட சொல்வாங்க. அதான் பயமா இருக்கு சார்”
“பயப்படாத, நான் பார்த்துக்கிறேன்”
“ம்ம்ம்”
தங்களைப் பற்றிய விடயம் மதன் காதுகளுக்குப் செல்லப் போகிறது, ‘என்ன முடிவெடுக்க?’ என ஜீவன் யோசிப்பதால் வார்த்தைகள் இல்லா தருணங்கள் – இவை.
“ஜீவன் சார்”
“சொல்லு”
“இங்கதான் மதன் வீடு இருக்குது”
“அதுக்கென்ன?”
“அதனால ஹாஸ்பிட்டல்ல டாக்டர பார்த்திட்டு வரும்போது, மதன் வீட்டுக்குப் போயிட்டு வரணும்னு பாலாண்ணா சொன்னாரு”
“யார் சொன்னாலும் போகாத” – அடுத்த நொடியே பதில் வந்தது.
“ம்ம்ம்”
“யார் சொல்லியும் எதும் செய்யாத. உனக்கு தோணுனா மட்டும் செய்யணும்”
இதை எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது – நாம்.
“என்ன சொல்ல வர்றீங்க ஜீவன் சார், எனக்கு எப்படி அப்படி தோணும்?” என கோபமாக சொல்லிவிட்டு, பவானி எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
தவறான வார்த்தைக் கோர்ப்பு என்று ஜீவனுக்குப் புரிந்துவிட்டது. எனவே கீழ் கண்ட எதிர்வினைப் புரிந்தான்.
“பவானி… நான் அந்த அர்த்தத்தில சொல்லல பவானி” என்று அவள் பின்னே போனான். அவள் நிற்காமல் நடந்தபடி, “எப்படி உங்களால அப்படிச் சொல்ல முடிஞ்சது?” என்று கண்களைச் சுருக்கிக் கோபத்தைக் காட்டினாள்.
“பவானி. உனக்குப் பிடிச்ச மாதிரி இருன்னு சொல்ல வந்தேன். அவ்ளோதான்”
இப்படியே ஜீவன் கொஞ்சியபடி… சமாதானம் அடையாமல் பவானி கோபம் கொண்டு நடந்து மனநல மருத்துவர் இருக்கும் அறைக்கு வந்திருந்தனர்.
‘எப்படிச் சமாதானப்படுத்த?!’ என்று தெரியாமல் ஜீவன், “பவானிம்மா” என்று நாதன் சொல்வது போல் கூப்பிட்டான். அவன் அழைத்ததும்… நாதன் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்ததும் கடிகாரத்தின் ஒரே நொடியில் நடந்தது.
அதாவது ‘பவானிம்மா’ என்ற ஜீவன் அழைப்பு நாதனுக்கும் கேட்டது.
நாதனைப் பார்த்தவன், “சுத்தம்” என்று அடிக்குரலில் சொல்லித் தலையைத் திருப்பிக் கொண்டான்.
ஜீவன் சார்! தலையைக் கொஞ்சம் திருப்பிப் பாருங்கள். அப்பொழுதான் பெண்ணைப் பெற்றவர் எப்படி முறைக்கிறார் என்று தெரியும். – நாம்.
“அப்பா”
“பவானி… எவ்வளவு நேரம்? டாக்டர் வெயிட் பண்றாங்க தெரியும்ல?” என்று கனிவாய் கடிந்தார் நாதன்.
“இல்லப்பா. ஜீவன் சாரோட கையில அடிபட்டிருக்கு. அதான்…”
நாதன், “தேவையில்லாத வேலை பார்த்தா, இப்படித்தான்மா நடக்கும்” என்று ஜீவனை அர்த்தமாக பார்த்தார். ஜீவனும் நாதனை ஆழமாக பார்த்தான்.
“என்னப்பா சொல்றீங்க? ” – பவானி.
“நான் பொதுவா சொன்னேன் பவானி” – நாதன்.
“பவானி” – ஜீவன்.
“சொல்லுங்க சார்”
“எது தேவை… எது தேவையில்லைன்னு எனக்கே தெரியும்” என்று நாதனை அர்த்தமாகப் பார்த்தான். நாதன் ஜீவனை ஆழமாகப் பார்த்தார்.
“புரியலை ஜீவன் சார்” – பவானி.
“ப்ச், நானும் பொதுவா சொன்னேன் பவானி ” – ஜீவன்.
“பவானி, நீ வாம்மா” என்று நாதன் பவானியை உள்ளே அழைத்தார். “வரேன் ஜீவன் சார்” என விடைபெற்று, அறைக்குள் தந்தையும் மகளும் நுழைந்தனர்.
இருவரும் அறைக்குள் வரவும், “வாங்க பவானி” என்றார் மருத்துவர். அவர் முன்னே வந்து அமர்ந்தனர்.
“எப்படி இருக்கீங்க?” – மருத்துவர்.
“ம்ம்ம், நல்லா இருக்கேன்” – பவானி.
“குட்”
“அப்பா பேக் தாங்க” என்று தந்தையிடமிருந்த பையை வாங்கி, அதிலிருந்து செய்தித்தாள் சுற்றப்பட்ட பொருளை எடுத்து, மருத்துவரிடம் நீட்டினாள்.
“என்னது பவானி?” – நாதன்.
“என்னது? இவ்ளோ லேசா இருக்கு” – பொருளை பெற்றுக்கொண்ட மருத்துவர்.
“ஓப்பன் பண்ணிப் பாருங்க டாக்டர். உங்களுக்குத்தான்”- பவானி.
பிரித்துப் பார்த்தார். சிறு வெள்ளைக் கைக்குட்டை! அதன் ஓரத்தில் சிறிய பூவேலைப்பாடு! அத்தனை நேர்த்தியாக இல்லை! ஆனால் எட்டு மாதங்கள் கழித்து பவானியின் முயற்சி!
“நாதன், பவானிக்கு கவனமில்ல. தன்னால எந்த பிரோயோஜனமும் இல்லனு பீல் பண்றான்னு சொன்னீங்க. பாருங்க, பவானி எனக்காக எவ்ளோ அழகான கிஃப்ட் கொண்டு வந்திருக்கான்னு”
“பிடிசிருக்கா டாக்டர்? அழகா இருக்கா?? ” – பவானி.
“ரொம்ப அழகா இருக்கு”
“முதல எதும் சரியா வராதப்ப, அப்பா சொன்ன மாதிரிதான் பீல் பண்ணேன்”
“ஓ! அப்புறம் எப்படி?”
“ஜீவன் சார் சொன்னாங்க உன்னால முடியும்னு. அதான் செய்ய முடிஞ்சது”
நாதன்… சந்தோஷமும் சங்கடமும் சரிவிகிதத்தில் உணர்ந்தார். சந்தோசம் மகளின் முயற்சி! சங்கடம் முயற்சிக்குக் காரணமானவன்!!
“சூப்பர் பவானி. அப்புறம் ஜீவன் சார் யாரு?”
“ஜீவன் சார் யாருனா… யாருனா??” என்று யோசித்தவள், “ஜீவன் சார், ஜீவன் சார்தான்” என்று முடித்துவிட்டாள்.
“ஓகே ஓகே… பவானி இதேமாதிரி எனக்கு இன்னும் வேணும். என்னோட பேர பிள்ளைங்களுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து விடறதுக்கு. செய்ய முடியுமா?”
“ம்ம்ம்… ட்ரை பண்றேன் டாக்டர்.”
“ஆனா அதுக்கு நான் பணம் தருவேன். வாங்கிக்கனும். இது பவானியோட சின்ன பிசினஸ் மாதிரி. ம்ம் சரியா??”
“சரி டாக்டர்”
“எவ்வளவு பவானி சொல்வீங்க… ஒரு கர்சீப் ரேட்??”
“அது ஜீவன் சாருக்குத்தான் தெரியும். நான் அவர்கிட்ட கேட்டுச் சொல்றேன்”
“ஓகே. கேட்டுச் சொல்லுங்க”
“டாக்டர் இப்பெல்லாம் வாக்கிங் கூட போறேன்”
“ரியலி. பவானிகிட்ட பயங்கர இம்ப்ரூவ்மென்ட். ஆனா பவானி, இப்பதான் நான் சொன்னதைக் கேட்க தோணிச்சா?”
“நீங்க சொன்னதால இல்ல டாக்டர். ஜீவன் சார் சொன்னாங்க. அதான்” என்று உண்மையைச் சொன்னாள்.
“பவானி இப்படிப் பேசக் கூடாது” – நாதன்.
“நாதன், நீங்க கொஞ்சம் வெளியே இருங்க” – மருத்துவர்.
நாதன் யோசித்தார்.
“ப்ளீஸ், நான் பவானிகிட்ட தனியா பேசணும்”
நாதன் வெளியே சென்றுவிட்டார்.
“அப்புறம் பவானி நைட் ஸ்லீப் எப்படி இருக்கு?”
“தூக்கமே வரமாட்டிக்குது டாக்டர். அப்பதான், அப்பதான்… ஒரு மாதிரி… ஒரு மாதிரி…” என்று திணறினாள்.
“பவானி ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்”
சட்டென, “நான் ரிலாக்ஸாக ஜீவன் சார் ஜோக்லாம் சொல்வாரு” என்றாள்.
“ஓ!”
இப்படியே பேச்சு வார்த்தைக்களும் ஆலோசனைகளும் தொடர்ந்தது.
“பவானி நீங்க போயிட்டு, அப்பாவ உள்ளே அனுப்புங்க” – மருத்துவர்.
“ம்ம்” என்று வெளியே சென்றாள்.
நாதன் உள்ளே வந்து, “சொல்லுங்க டாக்டர்” என்றார்.
“நீங்கதான் சொல்லணும்”
நாதன் அமைதியானார்.
“எட்டு மாசமா பவானிய பார்க்கிறேன். ஃபர்ஸ்ட் டைம் அவங்களா முன்வந்து நிறைய விஷயம் பேசுறாங்க. நிறைய கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டாங்க. நல்ல முன்னேற்றம்”
இன்னும் அமைதியாக இருந்தார் நாதன்.
“காரணம் ஜீவன் சார். கரெக்டா?”
“ம்ம்ம். அவரை மாதிரியே மதனும், பாலாவும் இருந்தா நல்லா இருக்கும்”
“நாதன்… நாம நினைக்கிறவங்கதான் நமக்குப் பிடிச்ச மாதிரி இருக்கணும்னு நினைக்காதீங்க. நமக்குப் பிடிச்ச மாதிரி இருக்கிறவங்களை நினைக்க முடியாட்டியும்… மதிக்க ஆரம்பிங்க”
“அதெப்படி ஒத்துவரும் டாக்டர். ஆனா நீங்க எனக்கும் கவுன்சலிங் கொடுக்க பார்க்கிறீங்க” என்று சிரித்தார்.
“போறதைப் பார்த்தா… பவானியை விட்டுட்டு உங்க எல்லாருக்கும்தான் கவுன்சிலிங் கொடுக்கணும் போல”
மேலும் நாதன் சிரித்துக் கொண்டார்.
“வேற ஏதாவது பவானி பத்திச் சொல்லனுமா?” – மருத்துவர்.
“நாலு நாள் ரொம்ப கோபமா இருந்தா… அப்புறம் ரெண்டு மூணு தடவ விடாம அழுதா டாக்டர்”
“இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். அந்த சமயத்தில பவானி கன்ட்ரோல்ல இருக்காங்களா?? அதாவது சமாளிக்க முடியுதா??”
“சமாளிக்க முடியுது டாக்டர்”
“அப்போ ஓகேதான். சமாளிக்க முடியலைனா சொல்லுங்க”
“சரி டாக்டர்”
“அவங்க மனசுக்கு என்ன பிடிக்குதோ அதைப் பண்ணட்டும். நீங்க எதையும் ஃபோர்ஸ் பண்ணாதீங்க”
“ம்ம்ம்”
“மருந்து மாத்திரை கூட ஃபோர்ஸ் பண்ணி கொடுக்காதீங்க” என்றவர், “இந்த தடவைக் வேற மெடிசின் எழுதறேன். இனிமே இதைக் கொடுங்க” என்று ஒரு தாளில் எழுத ஆரம்பித்தார்.
“சரி டாக்டர்”
“வேற ஏதாவது கேட்கணுமா?”
“ஏன் டாக்டர் பவானிக்கு இப்படி?”
ஒவ்வொரு முறை வரும் போதும், நாதனின் மனக்குமுறல் கேட்டிடும் கேள்வி இது.
“ஏற்கனவே சொல்லிட்டேன் நாதன். இது மூளையில கெமிக்கல் இம்பேலன்ஸ் ஆனதால வந்திருக்கு. பிளஸ் அவங்க சின்ன வயசில இருந்து குடும்பத்தைப் பார்த்துக்கிட்டதால வந்த ஸ்ட்ரெஸும் ஒரு காரணம்”
‘ஏன்? என் பெண்ணுக்கு இப்படி?’ என்று நாதனின் முகத்தோற்றம் சொன்னது.
“நீங்க திரும்பத் திரும்ப அதையே யோசிக்காதீங்க. எப்படிப் பவானியைப் பார்த்துக்கலாம்னு மட்டும் யோசிங்க. வேற ஏதாவது?”
“இது சரியாகாதா டாக்டர்?”
“நீங்களே இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா, கடைசி வரைக்கும் இதேமாதிரி மெயின்டெயின் பண்ணிக்கலாம். வேற??”
“இன்னொரு கேள்வி இருக்கு டாக்டர்” என்று தயங்கினார்.
“சொல்லுங்க”
“ஜீவன் சார் மேல, ஏன் பவானிக்கு இவ்வளவு…” என்று நிறுத்திவிட்டார்.
மருத்துவருக்குப் புரிந்ததால், “பாருங்க… எனக்கு ஜீவன் யாரு, என்ன எதுவுமே தெரியாது. ஆனா பவானிக்கு அவர்மேல ஒரு நம்பிக்கை இருக்கு” என்றார்.
“அதான் ஏன் டாக்டர்?”
“ஏன்னா அவளைச் சுத்தி இருக்கிற நீங்கதான் காரணம்”
“நாங்களா?”
“ம்… எனக்கு பாலா பத்தி தெரியும். மதன் பத்தியும் தெரியும். ரெண்டு பேரும் பவானியோட நோய் பத்திச் சொல்லிச் சொல்லியே கஷ்டப்படுத்துறாங்க”
“ஆனா நான் அப்படியில்லையே”
“கண்டிப்பா. ஆனா நீங்க பவானியைக் கவனிச்சிக்கிற விதம், அன்பா பேசுற விதம்… அவங்களுக்கு தன்னோட நோயை ஞாபகப்படுத்தலாம்”
“புரியல டாக்டர்”
“எப்படி சொல்றது? ஜீவன் அப்படிங்கிற கேரக்டர் பவானிகிட்ட இருக்க நோய் பத்திப் பேசறது கிடையாது போல. ஜெனரலா பேசுறார். அவளுக்குப் பிடிச்சது என்னன்னு கேட்டு, அத பண்ண வச்சிட்டார். வீட்டுக்குள்ள இருந்த பொண்ண வாக்கிங் கூட்டிட்டுப் போறாரு. பவானி மேல ஒரு நம்பிக்கை வச்சி, ஹெல்ப் கேட்கிறார். அதுதான் அவளுக்கு வேணும்”
“ம்ம்ம்…புரியுது.”
“இது ஒரு வகையில டாக் தெரபி. அவர் பேசறது பவானியை மாத்துது”
“….. “
“சந்தோசமா இருங்க நாதன். பவானிகிட்ட கொஞ்சம் சேஞ்ச் வந்திருக்கு”
நாதன் முகத்தில் சந்தோசம் தெரியவில்லை.
“இங்க பாருங்க நாதன், சப்போஸ் உங்களுக்கு எதும் காரணத்தால, அவரைப் பிடிக்கலைனா… ஏன்னா பவானி மேரீடு வேற… ம்ம்ம் எப்படி சொல்ல?” என்று யோசித்தார்.
“என்ன டாக்டர்? “
“உங்களுக்கு அவரைப் பிடிக்கலைனா… ஆரம்பத்திலே ஸ்டாப் பண்ணிருங்க. இப்ப விட்டுட்டு அப்புறமா தடுக்க நினைச்சா… அது நம்ம பவானியைத்தான் பாதிக்கும்” என்று சொல்லி முடித்துவிட்டார் மருத்துவர்.
“சரி” என்று சொல்லி, மருத்துச் சீட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினார்.
*********
மருத்துவமனை வெளியே தந்தையும் மகளும் வந்தனர். குளிர்காற்று போய் மழைக்கான காற்று வீசியது. அந்த மதிய வேலையிலும், மழை மேகங்களால் மாலைவேளைப் போல் காட்சியளித்தது.
சற்றுதூரம் இருவரும் நடக்கும் போதே, தூவானம் தூவ ஆரம்பித்தது. குடை விரித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.
“பவானி” என்ற குரல், மழைக் கம்பிகளைத் தாண்டிக் குடைக் கம்பிகளுக்குள் கேட்டது. இருவரும் திரும்பினர். ஜீவன்தான் அழைத்திருந்தான். ஓடிவந்து அவர்கள் அருகே நின்றான்.
“பவானி என்னோட ஜீப்ல போலாமா? மழை வர்றமாதிரி இருக்கு” – கேள்வி பவானிக்கு, பார்வை நாதனுக்கு என்றவாறு ஜீவன்.
“நீங்க எப்படி டிரைவ் பண்ணுவீங்க?” – பவானி.
“டிரைவர் அரேஞ்ச் பண்ணிருக்கேன்” – ஜீவன்.
“அப்பா போகலாமா??” – பவானி.
“வேண்டாம் பவானி. ஒரு டெஸ்ட் எடுக்கணும். கொஞ்சம் லேட்டாகும். அவர் தனியாவே போகட்டும்” என்று அந்தத் ‘தனியாவே’ வார்த்தையில் அழுத்தம் கொடுத்தார், நாதன்.
“நீங்க போங்க ஜீவன் சார். நாங்க டெஸ்ட் எடுத்திட்டு வர்றோம்” – பவானி.
“சரி பவானி. ஆனா நாளைக்கு வாக்கிங் போகலாம். சரியா?” – ஜீவன்.
“நாளைக்கு வேண்டாம். நீங்க ரெஸ்ட் எடுங்க”
“ப்ச்”
“அதுக்கு அடுத்த நாள் போகலாம். சரியா??”
“சரி”
“பவானி வாம்மா போலாம்” என்று நாதன் திரும்பி நடந்தார்.
“போய்ட்டு வரேன் ஜீவன் சார்” என்று பவானியும் தந்தையுடன் நடந்தாள்.
குடை பிடித்து நடந்து போகையில், “என்னப்பா டெஸ்ட் எடுக்கணும்” என்றாள்.
“…”
“அப்பா, என்ன டெஸ்ட் சொல்லுங்கப்பா?”
“பேசாம வா பவானி” என்று மகளின் கையை இறுக்கமாகப் பிடித்து நடக்க ஆரம்பித்தார். நிறைய கேள்விகளைத் தனக்குள்ளே கேட்டுக் கொண்டார். அவை பின்வருவன…
பவானி திருமண பந்தத்தை ஒட்ட வைக்கும் முயற்சியில் இருக்கும் பாலாவை மீறி, தான் எந்த மாதிரி ஒரு புது வாழ்வை பவானிக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியும்?
பவானியைப் பார்த்துகொள்ளும் பொறுப்பான இடத்தில், ஜீவனைப் போன்ற ஒருவனை எப்படி இருத்திப் பார்க்க முடியும்??
ஜீவனைப் பற்றிய பவானிக்குத் தெரிய வரும்போது எப்படி உணர்வாள்??
எல்லாவற்றையும் விட, இதையெல்லாம் தன்னால் சமாளிக்க முடியுமா??
பவானியைப் பற்றிய கவலையுடன், விடையில்லா… விடை எழுத விரும்பா வினாக்களும் சேர்ந்து கொண்டு நாதன் மனதை மேலும் கலங்கச் செய்தது. கடைசியில், ‘பேசாமல் பாலாவிடம் சொல்லிவிடலாம். அதான் நல்லது’ என்று முடிவெடுத்தார்.
ஆகமொத்தத்தில் இன்றைய நாள் நிகழ்வுகள் அனைத்தும்… நாளைய நாளில், பாலா மற்றும் மதன் செவிகளுக்குச் சென்றடைய போகிறது என்று பதற்றம் கொள்வோமாக!!
