Kathambari Novels
அத்தியாயம் – 15
அவனது அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போதே வானம் பூந்தூரல் தூவ ஆரம்பித்திருந்தது. எதையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை! மீண்டும் அவள் இருந்த இடத்திற்கு வந்துவிட்டாள். எந்த அறைக்குள்ளும் செல்லாமல், முன்னறையிலேயே அமர்ந்துவிட்டாள்.
அவள் வந்ததைப் பார்த்த மாவ்ஷிக்கு, ‘ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? என்ன பிரச்சினையாக இருக்கும்? வேறேதும் சிக்கலில் மாட்டிக் கொண்டாளா?’ என நிரம்ப சந்தேகம் வந்தது. அவளருகில் வந்து அமர்ந்து கொண்டு, “என்ன எதும் பிரச்சனையா?” என்று கேட்டார்.
“இல்ல மாவ்ஷி” என்றாள் விழிகள் அலைப்புற!
என்றும் இல்லாத விதமாக, “தம்பி நல்லா இருக்கானா?” என்று விசாரித்தார்.
“ம்… நல்லா இருக்கான் மாவ்ஷி”
சமீப காலமாக தோன்றிய அக்கறையின் விளைவாக, “உனக்கு என்னாச்சு? ஏன் இப்படி இருக்க?” என்றார்.
‘இப்படியெல்லாம் மாவ்ஷி யாரிடமும் கேட்டது கிடையாது. இப்போதெல்லாம் அவரிடம் நிறைய மாற்றம் இருக்கிறது’ என புரிந்தவள், “இல்ல. அப்படி எதும் இல்லை. நல்லாதான் இருக்கேன்” என்றாள்.
“யாராவது ஏதாவது பிரச்சனை பண்றாங்களா? அப்படின்னா சொல்லு” என்று கேட்டவர் பார்வை அவளது முகத்திலேயே இருந்தது. அவள் பதில் கூறாததால், ‘ஏதோ மறைக்கிறாள்’ என்று நினைத்து எழுந்து சென்றுவிட்டார்.
அப்படியே உறைந்திருந்தவளுக்கு, தன் முட்டாள்தனமான பேச்சால் அவனை இழந்து விட்டோமே என்று வருந்தினாள். ஒருபக்கம் ‘தன்னை எப்போது காண வருவான்’ என்று மனம் ஏங்கியது. மறுபக்கம் அவனது, ‘வெளியே போ!’ என்ற வார்த்தையில் மனம் கோபம் கொண்டது.
கோபம்!? தம்பிக்கு அடுத்து ஒருவன் மேல் எனக்கு கோபம் வருகிறது. அப்படி என்றால் அவனை உறவாகவும் நினைக்கிறேனா? அவனைக் கடந்து போவது அத்தனை எளிதானதல்ல என்று புரிந்தது. அதே இடத்தில் இரவுவரை அமர்ந்து இருந்தாள், குழப்பங்களுடன்!
இரவும் வந்தது!!
இன்னமும் வானம் தூறிக்கொண்டு இருந்தது. அந்தக் கட்டிடத்திற்குள் எவ்வித தயக்கமும் இல்லாமல் நுழைந்தன நீலவிழிகள். வந்த பொழுது எந்த இடத்தில் இருந்தாளோ அதே இடத்தில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து நின்றுவிட்டான்!
அவனைப் பார்த்த மாவ்ஷி, “கோன்?” என்று கேட்டு வந்தார்.
அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான்!
‘இவன்தான் இவளின் பிரச்சனையா?’ என்று நினைத்தவர், “பதா து கோன் ஹே (நீ யாருனு சொல்லு)” என்றார் சத்தமாக.
அப்பொழுதுகூட அவளின் நிலையிலிருந்து அவள் அசையவில்லை!
“தமிழ்லயே பேசுங்க” என்று ஆரம்பித்தான்.
அந்தக் குரலில் உறைந்திருந்தவள் உருகி உயிர் வந்தவளாய் உடனே நிமிர்ந்து பார்த்தாள். மீண்டும் இவனைப் பார்க்க முடியாதோ என்று நினைத்தவளுக்கு, அவன் வரவைக் கண்டு, சந்தோஷம் கொண்டு எழுந்தாள். ஆனால் எதற்காக வந்தான் என்ற கேள்விக்கான விடையில் அவளிடம் தயக்கம் வந்தது!
தவறான முடிவு எடுத்துவிட்டேன் என நான் நினைத்தால், இவன் செயல் அதை ஆமோதிப்பது போல் இருக்கிறதே என்று நடந்து வந்து அவனெதிரே நின்றாள். இருவருக்குமிடையே மாவ்ஷி நின்றிருந்தார்.
அவனைப் பார்த்து, “சொல்லு. யார் நீ?” என்றார்.
“இந்தப் பொண்ணுகிட்ட கேளுங்க” என்று எதிரில் நிற்பவளைக் காட்டினான்.
அவனை ஒருமாதிரி பார்த்தபடியே அவளிடம் திரும்பி, “இவனை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
“தெரியும். காலையில பார்க்கப் போனது இவனைத்தான்” என்றாள்.
“நீதான் இவகிட்ட பிரச்சனை பண்றீயா?” என்று மாவ்ஷி நேரடியாக கேட்டார்.
“நான் பிரச்ச… பிரச்சன” என வார்த்தைகளை விழுங்கியவன், ‘என்னைப்பத்தி இப்படித்தான் சொல்லி வச்சிருக்கியா?’ என்பது போல் அவளைப் பார்த்தான்.
“மாவ்ஷி, அவன் எதுவும் பிரச்சனை பண்ணல” என்றாள்.
“ஏன் அதை அவன் சொல்ல மாட்டானா? பிரச்சனை எதுவும் இல்லனா நீயேன் இப்படி இருக்க?” என்று மறுபடியும் கேள்விகளால் அவளைத் துளைத்தார்.
பழுப்பு விழிகள் மெளனப் பார்வைகள் பேசின.
“இவ ஏன் இப்படி இருக்கிறான்னு உனக்காவது தெரியுமா? ” என்று அவனைப் பார்த்தார் மாவ்ஷி.
“ம்ம்ம் தெரியும்” என்றான்.
“அப்ப சொல்லு”
‘சொல்லவா?’ என அவளைப் பார்த்தான். ‘என்ன சொல்ல போகிறானோ?’ என அதிர்ந்தவள், “மாவ்ஷி… ஒரு நிமிஷம். ஒரே ஒரு நிமிஷம். இவன்கிட்ட தனியா நான் பேசணும்” என்று சொல்லிவிட்டு, அவனை அங்கிருந்த ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
மாவ்ஷிக்கும் அங்கிருந்த பெண்களுக்கும் ‘ஏன் இவள் இப்படிச் செய்கிறாள்?’ என்றே புரியவில்லை!
அவனை கைப்பிடித்து இழுத்தபடி அறைக்குள் வந்தவள், கதவைத் தாழிட்டு, கூட்டி வந்த வேகத்திலேயே அவன் கையை உதறிவிட்டு, அவனெதிரே நின்று கொண்டாள்! நான்தான் முட்டாள்தனமான முடிவு எடுத்தேன் என்றால், அதே முட்டாள்தனமான முடிவை அவனும் எடுத்திருக்கிறானே? ஒருவேளை அவன் தன்னைக் கடந்து செல்ல நினைக்கிறானோ!?
கோபத்தில் அவள் முகம் சிவந்தது.
அவனுக்கு விளையாட்டாய் இருந்தது அவளின் செயல்கள் அனைத்தும்!
“கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலமா?? இல்லனா கடந்து போறதைப் பத்தி யோசிக்கலமா?” என்றான் அவளைச் சீண்டிடும் விதமாக.
ஆனால் சிந்தனைகள் எல்லாம் சிக்கலாக இருந்ததால், அவளுள் சீற்றத்தை ஏற்படுத்தியது அது! “நீ கடந்து போறதைப் பத்தியே யோசிக்கலாம். அதான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது” என்று அழுத்தமாக சொன்னாள்.
இவ்வளவு சொல்லியும் அடம்பிடிக்கும் அவளைக் கண்டு அதிருப்தி ஆனவன், “அப்புறம் உன் இஷ்டம்” என்று, அவள்… அவனைக் கடந்து சென்றிட வைக்கும் முயற்சியில் இறங்கினான்!
அவனது முதல் தீண்டலே அவளுக்கு பெரும் அவஸ்தையாக இருந்தது. இதற்கு முந்தைய அவன் தொடுகையில் உணர்ந்திட்ட நேசம், அக்கறை, பாசம் என்ற உணர்வுகள் எதையுமே அவளால் உணர முடியவில்லையா?! இல்லை, அவன் உணர்த்த விரும்பவில்லையா?!
விடையறிய முடியாமல் உள்ளுக்குள் உடையத் தொடங்கினாள்!
அவன் கைகள் எல்லை மீறிப் போகும் முன்பே தட்டிவிட்டாள்.
அவளின் மறுப்பு உணர்த்திடும் காதலை ரசித்தவன், “நீ, என்னைக் கடந்து போறது அவ்வளவு ஈசி இல்ல. இப்பவாவது புரியுதா?” என்று அவள் சொல்ல மறுக்கும் காதலை, யாசித்தன அவன் விழிகள்!
ஆனால் அவனை நிமிர்ந்துகூட அவள் பார்க்கவில்லை. அவன் செயல்களால், அவனைப் பார்க்கும் சக்தி அவளுக்கு இல்லை. மறுப்பாக தலையசைத்தாள்!
மீண்டும் எல்லை மீறின அவன் கைகள். அந்த அறையின் மங்கிய ஒளி! மழை பொழிந்திடும் இரவு! தன்னவள், தனக்கானவள் என்கிற உரிமையுடன் கூடிய உறவுக்குச் சொந்தமாகப் போகிறாள்! இப்படி அவனுக்குள் தோன்றிய சின்ன சலனத்திற்கு… வாதம் புரிந்திட வார்த்தைகள் தேடுவது நியாயமற்றது!
மெது மெதுவாக பழுப்பு விழிகள் நிமிர்ந்து நீல விழிகளைப் பார்த்தன. அதில் காதல் காட்டப்படவில்லையோ!? அவளுக்கு அது காதலை தவிர்த்த வேறு ஓர் உணர்வு காட்டியதோ? அவ்வளவுதான்!
பழுப்பு விழிகள் பளபளத்து… பரிதவித்தன. சில நொடிகளிலே பரிதவிப்புகள் பயங்கரமாக தோன்றியது! அகத்தில் அறியப்பட்ட பயங்கரங்களை புறத்தில் கண்ணீராய் காட்ட ஆரம்பித்தன!!
அங்கே நிலவிய அமைதி, அவளது மெல்லிய விசும்பல் சத்தத்தை அவனுக்குக் காட்டிக்கொடுத்தது.
அவள் கண்கள் வடிக்கும் கண்ணீர் கண்ட, அவன் விழிகள், சட்டென்று சலனம் தொலைத்து சங்கடத்தைக் காட்டின. தன்னை… தன் செயலை உணர்ந்தவன், ‘இனி தன் பேச்சைக் கேட்பாள்’ என்று சமாதான பேச்சை பேச நினைத்தான்.
ஆனால் அதற்கு முன்பே… குரல் தழதழுக்க, “வேண்டாம்…நீ… நீயும்… இப்படிப் பார்… பார்க்காத” என கண்ணீர் வடிய கெஞ்சிக் கேட்டவள், அழுது கொண்டே நடந்து சென்று கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.
அவன் உடைந்து போய் நின்றிருந்தான். அவள் கூறிய வார்த்தைகளிலிருந்து மீண்டு வர இயலவில்லை. அன்று கேட்டானே, ‘ஏன் கண்ண மட்டும் பார்க்க!?’ என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது! அது, அவளுக்கு காதலை மட்டும் காண்பிக்கும் விழிகள் என்று புரிந்தது அவனுக்கு!
அதில் சின்னதாய்கூட ஒரு சலனத்தை, அவள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளைச் சமாதானப்படுத்த வேண்டும் என வந்தவன், தன்னையே சமாதான படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தான்!
உள்ளுக்குள் வெடித்தவள், இப்போது உடல் அளவிலும் வெடித்துச் சிதறினாள். இத்தனை நாள் வாய்மூடி அழுதவள், இன்று வாய் திறந்து அழுதாள். அவளின் ஓரிரு துளி கண்ணீரை, கலங்கிய கண்களைப் பார்த்தவன்… இன்று அளவே இல்லாமல் அவள் சிந்தும் கண்ணீர் கண்டு கலங்கி நின்றான்.
காயத்திற்கு மறுந்திட வந்தவனே காயப்பட்டு நின்றான்!
அக்கணத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. ‘அவளின் அழுகுரல் கேட்டுக் கதவைத் தட்டுகிறார்கள்’ என்று நினைத்தவன், கதவைத் திறக்க சென்றான். திறந்தால் மாவ்ஷி நின்றிருந்தார். அவனைக் கோபமாக பார்த்தவர், எதுவும் கேட்காமலே அழுது கொண்டிருந்தவளை நோக்கிச் சென்றார்.
மாவ்ஷியைப் பார்த்தவுடனே அவள் அழுகையும், கண்ணீரும் அதிகமாயின!
“என்னாச்சு?” எனக் கேட்டபடியே கட்டிலில் வந்து அமர்ந்தார் மாவ்ஷி. எதிரே இருந்தவர் மடியில் படுத்துக்கொண்டன பழுப்பு விழிகள்.
திரும்பவும், “என்னாச்சு சொல்லு?” என்றார். இடையிடையே அவன்மீது கோப பார்வைகள் வீசினார்.
“என்னை ஏன் இங்க கூட்டிட்டு வந்தீங்க? என் தம்பிகூடவே விட்டிருக்கலாமே? ஏன் இப்படி பண்ணீங்க? இனிமே எனக்கு இதெல்லாம் வேண்டாம்… என்னால முடியவே முடியாது! என்னை விட்டுருங்க. நான் எங்கயாவது போறேன்” என்று கதறினாள்.
தான் செய்த அநியாயத்திற்கு தன் மடியில் படுத்து நியாயம் கேட்கும் அந்தப் பெண்ணைப் பரிதாபமாக பார்த்தார். என்ன பதில் சொல்ல என தெரியாமல், அவனையும் அவளையும் மாறி மாறி பார்த்திருந்தார்.
ஆனால் இப்போது அவர், அவனைப் பார்த்த பார்வையில் கோபம் இல்லை!
‘எங்கயாது போறேன்’ என்ற வார்த்தையில் துணுக்குற்றவனாய், அவளருகில் வந்து நின்றுகொண்டு, “எங்கயாவது போறீயா? அப்போ நான் என்ன பண்ண? இப்பவாது உனக்கு புரியுதா??” என்று அவளிடம் இறைஞ்சின அவனும், அவன் காதலும்!
“நல்லா புரியுது! ஆனாலும் வேண்டாம். நீ வேண்டவே வேண்டாம். போ” என்று கண்ணீருடன் கத்தினாள்.
ஓரளவிற்கு மாவ்ஷிக்குப் புரிந்தது. இருந்தும் அவள் அழுகையைப் பார்த்தவர், “நீ போப்பா” என்றார் சற்று கடுமையாக!
“ஏங்க… போறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டது!? போறதுனா… என்னைக்கோ போயிருக்க மாட்டேனா?” என்றான் மெல்லிய குரலில் வேதனையுடன்!
“நீ கஷ்டப்படவே வேண்டாம். போனா மட்டும் போதும். காலைல சொன்னேல ‘டிஸ்டர்பா இருக்குது. வெளிய போ’னு!! எனக்கு எப்படி இருந்திச்சு தெரியுமா? நான் உனக்கு டிஸ்டர்ப்பா? சொல்லு…” என்றவள் சற்றும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை!
இதைக் கேட்ட இருவருக்குமே சந்தேகம்! அவள் கடிந்து கொள்கிறாளா? இல்லை காதலைக் காட்டுகிறாளா? என்று!!
“அவ உங்கிட்டதான் கேட்கிறா, பதில் சொல்லு” என்றார் மாவ்ஷி, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்!
இதற்கிடையில், “நான் சொல்றது… உங்களுக்குப் புரியுதுல மாவ்ஷி. அவனை வெளிய போகச் சொல்லுங்க. அவன் எனக்கு வேண்டாம்” என்றாள் பிடிவாதம் முற்றிப் போனவளாய்.
அவளை, அவள் நிலையை நன்கு புரிந்தவராக, “எனக்கு புரியுதுமா” என்றவர், ‘உனக்குப் புரிஞ்சிடுச்சா?’ என்பது போல் அவனைப் பார்த்தார்.
“நல்லா புரிஞ்சிடுச்சு” என்றான்,
“அப்ப வெளிய போ! அவதான் சொல்றால?” என்றார் மாவ்ஷி அதிரடியாக.
அவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், சற்றும் அசையாமல் நின்றவன், “அப்படியெல்லாம் என்னால போக முடியாது. நீங்க விடுங்க. நான் பேசிக்கிறேன்” என்றான், அவருக்கு கொஞ்சமும் சளைக்காமல்.
அந்தக் கணத்தில்… அவனையுமே புரிந்து கொண்டார் மாவ்ஷி. தன் மடியில் இருந்தவளை எழுப்பி விட்டு, எழுந்து, “சரி வெளிய வா… உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்.
இவளிடம்… தன் காதலைப் புரிய வைக்கவா? தன் செயலுக்காக மன்னிப்பு கேட்கவா? இரண்டுமே இல்லாமல் இவர் சொல்வது போல் கேட்கவா? என்று புரியாமல் குழம்பி, அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
ஆனால் அவள் தவறியும் அவனை, அவன் கண்களைப் பார்க்கவில்லை!!
அதைக் கண்டவர், “வாப்பா” என்று அவனை அழைத்துச் சென்றார். வெளியே கூட்டி வந்தவர்… நேற்று நடந்தவற்றை, காலையிலிருந்து அவளின் நிலையை, அவனிடம் கூறினார்!
நேற்றைய அவளது நிலைமையை நினைத்து மனம் துடித்தது. ஆனால் அவள் எதிர்ப்பை காட்டியவிதம் கண்டு அவன் மனம் துணிவு கொண்டது.
எனவே, “உங்களுக்கெல்லாம் என்னங்க பிரச்சனை? எப்ப பார்த்தாலும் நேத்து நேத்துனு பழசை பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்க?! அவளுமே இப்படித்தான். நீங்க விடுங்க. நான் அவளைக் கூட்டிட்டுப் போறேன்” என அவரைத் தாண்டி திமிறிச் செல்லப் போனான்.
“இருப்பா” என்று இழுத்துப் பிடித்து நிறுத்தினார்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நின்றவனைப் பார்த்து, “ஏன்னா… நீ பழசுனு சொல்றதுலதான் அவ புது வாழ்க்கையும் சிக்கிட்டிருக்கு” என்றார்.
“நான்தான் எல்லாத்தையும் மறந்துட்டு வான்னு சொல்றேன்ல?” என மீண்டும் செல்ல முயன்றான்.
திரும்ப அவனைப் பிடித்து நிறுத்தி, “நீ மறக்க சொல்ற இடத்தில இருக்க! அவ மறக்க வேண்டிய இடத்தில இருக்கா. அவ வலி உனக்குத் தெரியாது” என்றார்.
“எல்லாம் தெரியும்ங்க. என்னை விடுங்க. நான் அவகிட்ட பேசியே ஆகணும். நான் பேசினாலே சரியாயிடுவா. இது வேறங்க. உங்களுக்கு புரியாது” என்று போராடினான்!
“அவ சொல்லிதான உனக்குத் தெரியும். ஆனா அவ அதை அனுபவிச்சிருக்கா. உனக்குத்தான் புரியாதுப்பா” என்றார் விடாமல்.
அறையிலிருந்து அவளின் அழுகுரல் வந்தது. அவளைச் சமாதானப்படுத்தவும் முடியாமல்… இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவும் இயலாமல், காதல் தாகம் கொண்டு வார்த்தை வற்றி நின்றான்!
அவனைச் சற்றுச் சமாதானப்படுத்தும் விதமாக, “நீ நல்லவன்தான். என்ன ஒன்னு அவளைப் புரிஞ்சிக்கிட்டு நல்லவனா இரு” என்றார்.
“சரிங்க புரிஞ்சிக்கிறேன். போதுமா? இப்ப அவளைக் கூட்டிட்டுப் போகவா?” என்று திரும்பவும் ஆரம்பித்தான்!
‘என்ன மனுஷன்யா நீ?’ என்பது போல் பார்த்தவர், “இப்போ எப்படி வருவா? நீதான் அவளை வெளிய போன்னு சொல்லிருக்கியே?” என்றார்.
“ஏங்க, அது சின்ன பிரச்சனை! நான் பேசி, அதை சரி பண்ணிருவேன்” என்று மன்றாடினான்.
“மத்தவங்களுக்கு அது சாதாரண சண்டையா இருக்கலாம். ஆனா அவளுக்கு? நீ ‘வெளிய போ’னு சொன்னா, அவ எங்க போவானு யோசிச்சியா? இங்கதான திரும்பி வரணும்?! அதான் அவளுக்கு உன் மேல கோபம்” என்று அவனுக்குப் புரிய வைத்தார்.
அவர் எடுத்துக் கூறிய பிறகே அவனுள் ஒரு கேள்வி, ‘போ’ என்று சொல்லிருக்க கூடாதோ என்று!! அப்படிச் சொல்லாமல் இருந்திருந்தால் இப்பொழுது நடந்த சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாமே… என்றும்!
அவன் முகத்தில் இருந்த குழப்பங்களைக் கவனித்து, “உன்னை நம்பி ரெண்டு தடவை வெளிய வந்த பொண்ணு. திரும்பியும் இங்க வந்திருக்கானா, அவளை நீ சரியா புரிஞ்சிக்கலைனுதான அர்த்தம்? அப்படி முடியலனா விட்டிருப்பா!” என்றார்.
“விடவா? ஏங்க ஒரு நாளைக்கே உயிர் போகுது. நீங்க வேற” என்று சாதாரண வார்த்தைகளில் தன் சகலமும் அவள்தான் என்று உணர்த்தினான்.
“அப்ப ஏன் வேண்டாம்னு சொல்றானு யோசி”
“அதையும் எத்தனை தடவை அவகிட்ட கேட்டேன் தெரியுமா?” என்றான் சங்கட சலிப்புடன்!
“தம்பி, நான் உன்னை யோசிக்க சொல்றேன்”
“நல்லாதானங்க இருந்தா? அன்னைக்கு மார்க்கெட்ல எவ்வளவு சந்தோஷமா பர்சேஸ் பண்ணா. ஆனா அதுக்கப்புறம்தான் என்னாச்சினே தெரியலைங்க. சொல்லவும் மாட்டிக்கிறா” என்றவன் குரலிலும், முகத்திலும் ஆற்றாமைகள் அரங்கேற்றம் செய்தன!
அப்பொழுது பின்னே நின்ற ஒரு பெண் வந்து, மாவ்ஷியின் காதில் ஏதோ முணுமுணுத்து விட்டுச் சென்றாள்.
“அவங்க என்ன சொன்னாங்க?” என்று மாவ்ஷியிடம் கேட்டான்.
“மார்க்கெட்ல வச்சி இந்தப் பொண்ணு அவளைப் பார்த்தப்போ ‘பர்சேஸா?’னு கேட்டுச்சாம். அதைச் சொல்றாப்பா”
“புரியலங்க”
“தம்பி அவளை இந்த உலகம் தப்பாதான் பார்க்கும். ஆனா அவகூட சேர்ந்து நடக்கறப்ப உன்னையும் தப்பாதான பார்க்கும்?! அதான் அவளோட பயமா இருக்கலாம். அதைத்தான் அவ யோசிக்கிறா? அதுவும் சரிதான?!” என்றார் வேதனையுடன்.
இதுவரை, தன் பழைய வாழ்க்கையை நினைத்து தன்னிரக்கம் கொண்டே, இந்த வாழ்க்கையை வேண்டாம் என்கிறாள் என்று நினைத்தான். ஆனால் தனக்காகவே யோசிக்கிறாள் என்ற ஒரு விஷயமே அவனின் விஸ்வரூபக் காதலை விடாப்பிடியாக பிடிக்கச் சொன்னது.
அவனின் முகத்தில் தெரிந்த நம்பிக்கையைப் பார்த்தவர், “நான் அவகிட்ட பேசிப் புரிய வைக்கிறேன். நீ காத்துகிட்டு இரு” என்றார்.
“சரிங்க நான் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்றேன். அவளை நீங்க சமாதான படுத்தின உடனேயே நான் கூட்டிட்டுப் போயிருவேன்” என்றான், அதற்குமேல் அவளைப் பிரிந்திருக்க இயலாதவனாய்!
மேலும் அவனுக்குப் பயம்… அவளை இங்கே விட்டுப் போவதற்கு! அது அவன் பேச்சில் நன்றாகவே தெரிந்தது! மாவ்ஷிக்கும் அது புரிந்தது!!
“பாருப்பா, இங்க இருக்கிறவங்களுக்கு இனிமேலாவது நல்லது செய்யலாம்னு தினமும் நினைக்கிறேன். அப்படி இருக்கிறப்ப, நீயே வந்து இப்படி சொன்னா, நான் அதுக்கு தடையா இருக்க மாட்டேன். என்னை நம்பு. அவகிட்ட கொஞ்சம் பேசணும். பேசிட்டு சொல்றேன். காலையில வந்து, நீ கூட்டிட்டுப் போ” என்று தன் பின்னே நிற்கும் பெண்களைக் காட்டினார்.
அதுவரை எதையும் கவனிக்காதவன், அந்தப் பெண்களை அப்போதுதான் பார்த்தான்!
“சரி, நீங்க பேசுங்க. காலைல வந்தே கூட்டிட்டுப் போறேன். ஆனா வெளியில வெயிட் பண்றேன். அவ தூங்கினதுக்கப்புறமா சொல்லுங்க. பேசலைனாலும், அட்லீஸ்ட் ஒரு தடவையாவது அவளைப் பார்க்கணும்” என்று, தன் காதலின் கண்ணியத்தைக் காட்டினான்.
‘சரி’ என்று தலையசைத்து விட்டு, அவள் அறை நோக்கிச் சென்றார். அவனும் வெளியே சென்று நின்று காத்திருந்தான்
காதலன் காதலிக்காக காத்திருப்பதில் வியக்கத்தக்க விடயங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் எங்கு என்ற ஒரு கேள்வி வருமல்லவா?
இவனோ விதிகளை மீறிக் காத்துக் கொண்டிருக்கிறான். அந்தக் கட்டிடத்தின் வெளிச்சுவரில் சாய்ந்து கொண்டு… மங்கிய விளக்கொளியில் சாலையைப் பார்த்துக் கொண்டு… மழைச் சாரலை வாங்கிக் கொண்டு… அவள் தன்னை மன்னிப்பாளா என்று ஏங்கிக் கொண்டு… சமூகம் பார்க்கும் பார்வையைத் தாங்கிக் கொண்டு… காத்திருக்கிறான்!
காதலே அவனின் காதலை மதித்து, அவனிடத்து காதல் கொண்டது!! கன்னி காதல் சொல்வாளா?
