Kathambari Novels
அன்றைய நாள் சுடருக்கு சாதாரணமாக ஆரம்பித்திருந்தது. சாவகாசமாக எழுந்து, குளித்து, காலை உணவை முடித்து வந்தவள் எண்ணத்தில் இரண்டு சம்பவங்கள் வந்து விழுந்தன.
ஒன்று! நுழைவுத் தேர்வு செய்திகளைத் திருத்தியமைக்கையில், லதா கூப்பிட்டதும், கீழே போய்விட்டு வரும் பொழுது, கணினித் திரையின் பக்கம் மாறி இருந்தது.
அன்று அறையில் இருந்தது ராஜா மட்டும்தான்.
மற்றொன்று! தினா, ‘பேப்பர்ஸ்’ என சொல்லி ராஜாவிடம் கொடுத்த கோப்பு என்னவாக இருக்கும்? கட்சி சம்பந்தமான கோப்பு என்றால் ராஜா ஏன் அதைப் பத்திரப்படுத்த வேண்டும்?
அக்கோப்புக்குள் ‘என்ன இருக்கும்?’ என அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. அதற்கும் நுழைவுத் தேர்வு பற்றிய செய்திகளுக்கும் சம்பந்தம் இருக்குமோ? என்ற கேள்வி வந்தது.
உடனே கைப்பேசி எடுத்து ராஜாவிற்கு அழைத்தாள். கைப்பேசி வழியே, “ம்ம் சொல்லு சுடர்” என்ற குரல் கேட்க, “ராஜாண்ணா எங்க இருக்க?” என்றாள்.
“தாம்பரத்தில இருக்கேன். வீட்டுக்கு வர்றதுக்கு ஒரு த்ரீ அவர்ஸ் ஆகும்”
“ம்ம் சரி” என்று சொன்னதும், “என்ன சுடர்? பார்க்கணுமா?” என கேட்டதற்கு, “வேண்டாம்! சும்மாதான் கால் பண்ணேன்” என்று மறுத்துவிட்டாள்.
“சரி! வச்சிடுறேன். வேலை இருக்கு” என்று அழைப்பைத் துண்டித்தான்.
கைப்பேசியை வைத்து பத்து நிமிடங்கள் கழித்த பின்பும் ‘என்ன பேப்பர்ஸ்?’ என்ற கேள்விக்குள் சுழன்றாள். பேசாமல் ராஜாண்ணா வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டால் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது.
அடுத்த கணமே எழுந்தவள், வேறு உடை மாற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
கடகடவென மாடிப்படிகளில் இறங்கி வரும் மகளைப் பார்த்த லதா, “எங்க கிளம்பிட்ட?” என்று கேட்டதற்கு, “ராஜாண்ணா வீட்டுக்கு” என்று சொல்லும் பொழுது, கீழே இறங்கி வந்திருந்தாள்.
“நான் போயிட்டு, டூ அவர்ஸ்ல வந்திடுறேன்” என சுடர் சொன்னதும், “நானும் வரட்டுமா?!” என்று லதா கேட்டார்.
அவள் ஏதோ நினைவில் அமைதியாக நிற்கவும், “வர்றேனே சுடர்?! ராஜாக்கு சமைச்சிக் கொடுத்து ரொம்ப நாளாச்சு” என்று ஏக்கமாகக் கேட்டதும், “சரி வாங்க” என்று கூட்டிச் சென்றாள்.
ராஜா வீடு!
வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து, காரை போர்டிகோவில் கொண்டு வந்து சுடர் நிறுத்தினாள். லதா இறங்குவதைக் கண்டதும், தோட்ட வேலை செய்து கொண்டிருந்த சிலர் வந்து, “எப்படி இருக்கீங்க-ம்மா?” என்று கேட்டனர்.
“நல்லா இருக்கேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபடியே லதா கார் கதவை அடைத்தார்.
“நல்லா இருக்கோம்மா! ரொம்ப நாளாச்சு நீங்க வந்து” என்றும்… “சுடர் கூட அன்னைக்கு வந்திச்சு. நீங்கதான் வரலை” என்றும்… சொல்லிக் கொண்டே அவருடன் படிக்கட்டுகளில் ஏறினார்கள்.
அதற்கெல்லாம் பதில் சொல்லாமல், “ராஜா எங்க?” என லதா ஆர்வத்துடன் கேட்டதும், “அண்ணே இங்க இல்லையேம்மா. வெளியே போயிருக்காங்க” என்று சொன்னார்கள்.
உடனே லதா திரும்பிச் சுடரைப் பார்க்க, “ம்மா ராஜாண்ணா த்ரீ அவர்ஸ்ல வந்துருவாங்க. நீங்க சமைக்க ஆரம்பிங்க” என்று உள்ளே சென்றாள்.
தோட்ட வேலையாட்களைப் பார்த்து, “நீங்க போய் வேலையைப் பாருங்க” என்று லதாவும் வீட்டின் உள்ளே சென்று சமயலறைக்குள் நுழைந்தார்.
அங்கிருந்த பெண்கள், “வாங்கம்மா!” என்று வரவேற்றனர். “குடிக்க எதுவும் வேணுமா?” என்று கேட்டனர். பின் நலன் விசாரித்தனர்.
“ஒன்னும் வேண்டாம். சமையல் முடிஞ்சிடுச்சா?” என்றதும், “இப்போதான் ஆரம்பிக்கப் போறோம்” என்றனர்.
“என்னென்ன காய்கறி இருக்கு?” என்று கேட்டதற்கு, “பசங்க இருகாங்கம்மா. எதுனாலும் வாங்கிக்கலாம்” என சமையலில் அவருக்கு உதவ ஆரம்பித்தனர்.
எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கிப் போனதும்… சுடர், அன்று ராஜா கோப்பினை வைத்த அலமாரிக் கதவைத் திறந்தாள்.
சட்சட்டென்று ஒவ்வொரு இழுப்பறையாகத் திறந்து பார்த்தாள். எதனுள்ளும் எதுவும் இல்லை. ‘பிளேஸ் சேஞ் பண்ணிட்டாங்களா?’ என்று யோசித்துக் கொண்டே நடந்தவள், ராஜா அறையின் முன் வந்து நின்றாள்.
‘ஒருவேளை இங்க இருக்குமோ?’ என சந்தேகம் வந்து அறை கதவைத் திறக்க போகையில், “சுடர்” என்ற ஓர் அழைப்பு கேட்டு, பட்டென திரும்பிப் பார்த்தாள்.
“ஏதும் குடிக்க வேணுமா?” என இலகுவாக கேட்ட பெண்ணிடம், “டீ கொண்டு வாங்க” என சொல்லி அவரை அனுப்பிவிட்டு, ராஜா அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
நுழைந்ததுமே தெரியும்படி மாட்டியிருந்த பெரிய அளவிலான ராஜா, கவிதா புகைப்படத்தைப் பார்த்ததும், அப்படியே நின்றுவிட்டாள். விபத்து நிகழ்ந்த பின்னரான தருணங்கள் எல்லாம் கண்முன்னே வந்து போனது.
சட்டென, ‘ஏன் பைல்ல பார்க்கணும்? ராஜாண்ணாவைச் சந்தேகப்படுறியா?’ என மனசாட்சி கேள்வி கேட்டு, முன்னே செல்லவிடாமல் உறுத்தியது.
ஆனால் அதே நேரத்தில் ராஜா நடந்து கொள்ளும் விதம், அவனிடம் தெரியும் மாற்றங்கள் என எல்லாம் சேர்ந்து ‘முன்னே செல்’ என்று உந்தித் தள்ளியது.
‘ரிலாக்ஸ் சுடர்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அறைக்குள் சென்று தேட ஆரம்பித்தாள்.
சிறிய அலமாரிகள், வார்டுரோப்கள் என தேடிக் கொண்டிருக்கையில் ஒருவர் வந்து, “அக்கா டீ” என்று தேநீர் கோப்பையை வைத்துவிட்டுச் சென்றார்.
கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்ளும் விதமாக, தேநீரை குடித்தவளின் கண்களில் கட்டிலின் இழுப்பறை தென்பட்டது.
கோப்பையை வைத்துவிட்டுச் சென்று, அதனைத் திறந்து பார்த்தாள். நிறைய கோப்புகள் இருந்தன. அன்று தினா கொண்டு வந்து தந்த கோப்பின் நிறத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தாள்.
அது நீல நிறத்தில் சிவப்பு வர்ண கோடுகள் போடப்பட்டிருந்த கோப்பு என்ற ஞாபகம் வந்ததும், அதை எடுப்பதற்காக மற்ற கோப்புகளை வெளியே எடுத்துப் போட்டாள்.
எட்டிற்குமேல் கோப்புகளை எடுத்ததுமே, அவள் தேடும் கோப்பு கிடைத்தது. நன்றாக அமர்ந்து அந்தக் கோப்பிற்குள் இருந்த தாள்களை ஒவ்வொன்றாக எடுத்துக் பார்த்தவளுக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
அருகிலிருந்த கட்டிலில் தலை சாய்த்து, ‘என்ன செய்ய?’ என புரியாமல் மனம் தடுமாறி கொண்டிருந்தது. ஆனால் இதெல்லாம் சற்று நேரம்தான். அதன்பின் படித்த படிப்பிற்கான மூளை வேலை செய்தது.
பரப்பி போடப்பட்டிருந்த தாள்களையெல்லாம் படபடவென்று எடுத்து, அதே கோப்புக்குள் அடுக்கி வைத்தாள். மற்ற கோப்புகளை, அதது இருந்த இடத்தில் அடுக்கி வைத்தாள்.
பின், தேவையான கோப்பை எடுத்துக் கொண்டு, அவசர அவசரமாக ராஜா வீட்டிலிருந்து கிளம்பினாள். அந்த அவசரத்தில், தன் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டாள்.
அத்தனை வேகமாக கார் ஓட்டி வந்தவள், வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் புகுந்து, கதவை அடைத்த பிறகே ஆசுவாசமாக மூச்சு விட முடிந்தது.
கணினி முன்பு சென்று அமர்ந்ததும், கருவிழிகள் இங்கும் அங்கும் செல்ல ஓரிரு நிமிடங்கள் குழம்பிக் கொண்டிருந்தாள். பின் கண்களை மூடி ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்து, கைப்பேசியில் மதியை அழைத்தாள்.
“ஹலோ அக்கா!” என்றதுமே, “நான் சொல்றதை கவனமா கேளு மதி” என்று ஆரம்பித்தாள்.
“சொல்லுங்க”
“ஒரு நியூஸ் மதி. என்ட்ரன்ஸ் எக்ஸாம் பத்தி முதல ஒரு நியூஸ் போட்டோம்ல அதோட கன்டினியூஷன் இது” என்றதும், “பட் அக்கா அந்த நியூஸ் அப்லோட் பண்றப்போ பார்ட் ஒன்னுனு போடலையே?” என்றான்.
“அதெல்லாம் தேவையில்ல மதி. நான் சொல்ற மாதிரி செய்” என்று கட்டளை போல் சொன்னதும், “சரிக்கா” என ஒத்துக் கொண்டான்.
“என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல காப்பி பண்ண ஹெல்ப் பண்றது, ஆள்மாறாட்டம்னு ரெண்டு விதமான தப்பு சொல்லிருந்தோம்ல, அதுக்கு சில எவிடன்ஸ் இருக்கு”
“எப்படிக்கா கிடைச்சது?” என்று ஆச்சரியப்பட்டவன், “எந்தெந்த இயர்க்கு இருக்கு?” என்று கேட்டான்.
“எனக்கு இந்த இயர்க்கு மட்டும்தான் கிடைச்சது. மத்த இயருக்கும் நான் ட்ரை பண்றேன்”
“ம்ம் சரிக்கா” என்றவன், “பட் இந்த நியூஸ் போட்டா பிரச்சனை எதும் வருமா?” என்று தயக்கம், பயம் நிறைந்த குரலில் கேட்டான்.
“சான்ஸ் இருக்கு. ஸோ, நீ சேஃபா இரு. நான் நியூஸ் எடிட் பண்ணித் தர்றேன். நீ பேசி அப்லோட் பண்ணிடு. அப்புறம் நம்ம பிரண்ட்ஸ் சர்க்கிள்ல இதை ஷேர் பண்ணுவோம்” என்று சொன்னதும், “சரிக்கா” என ஒப்புக் கொண்டான்.
“என்கிட்ட இருக்க எவிடன்ஸ் காப்பி வந்து வாங்கிக்கிறியா?” என கேட்டதற்கு, “எங்கன்னு சொல்லுங்க?” என்றதும், சென்னையில் ஓர் இடத்தைச் சொல்லி, அழைப்பைத் துண்டித்தாள்.
பேசி முடித்ததும், ‘ஏன் ராஜாண்ணா இதை மறைச்சி வைக்கணும்?’ என்ற கேள்வியில், தலை விண்விண்ணென்று வலித்தது.
அந்த நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்க, ‘யாராக இருக்கும்?’ என்று எழுந்து செல்லும் பொழுதே, கதவு தட்டப்படும் சத்தத்துடன் “சுடர்” என்ற லிங்கத்தின் அழைப்பும் கேட்டது.
கதவைத் திறந்து, “என்னப்பா?” என்றதும், “சாப்பிட வந்தேன் சுடர். அம்மா எங்க?” என லிங்கத்தின் கேள்வியில்தான், லதாவை ராஜா வீட்டிலிருந்து அழைத்து வராதது நியாபகத்தில் வந்தது.
“ராஜாண்ணா வீட்ல இருக்காங்க” என்றாள்.
“என்ன திடிர்னு? ராஜா வரச் சொல்லியிருந்தானா?”
“இல்லைப்பா. நானும் அம்மாவும் சும்மாதான் போனோம். அவசரமா வந்ததுல அம்மாவைக் கூட்டிட்டு வர மறந்துட்டேன்” என்றவள், “நீங்க போய் கூட்டிட்டு வரமுடியுமா?” என்று கேட்டாள்.
“அப்பா இப்ப திருச்சி கிளம்பனும். அதான் வீட்டுக்கு வந்தேன்” என்றவர், “இரு, பசங்ககிட்ட சொல்றேன்” என கீழே நின்ற கட்சி ஆள் ஒருவரிடம் விடயத்தைச் சொல்லிவிட்டு, மீண்டும் சுடர் முன் வந்து நின்றார்.
மகளின் சோர்வான முகத்தைப் பார்த்தவர், “ஏன் ஒருமாதிரி இருக்க?” என்று கேட்டார்.
ராஜா வீட்டில் கிடைத்த ஆதாரங்களைச் செய்தியாக வெளியிடுவதைத் தவிர, வேறு யாரிடமும் பேச விருப்பமில்லாதால், “ராஜாண்ணா ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியுமா?” என்று வேறொரு கேள்வி கேட்டாள்.
“எப்படி?”
“அம்மாகூட பேசாம”
‘தெரியாது’ என தலையசைத்தவர், “நான் கேட்டுப் பார்க்கவானு அம்மாகிட்ட கேட்டேன். அதுக்கு உன் அம்மா சுடரை கேட்க சொல்லிருக்கேன்னு சொன்னா. நீ கேட்டியா?” என்றார்.
“கேட்டேன். ஆனா ராஜாண்ணா சரியா பதில் சொல்லலை”
“அதான் இப்படி இருக்கிறியா?” என்று கேட்டதற்கு, அமைதியாக நின்றாள்.
உடனே மாடியிலிருந்து கீழே வேலை செய்தவர்களிடம், “டீ கொண்டு வாங்க” என்று சொல்லிவிட்டு திரும்புவதற்குள் கதவருகிலிருந்த சுடர் உள்ளே சென்று, மெத்தையில் அமர்ந்திருந்தாள். லிங்கமும் மகளருகில் சென்று அமர்ந்தார்.
இன்னும் முகம் சரியில்லாமல் இருந்த மகளிடம், “அவனும் படிச்ச படிப்ப வேஸ்ட் ஆக்கிக்கிட்டு இருக்கான். நீயும் இப்படி இருந்தா, எங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லு?” என்று கேட்டார்.
“ஐயோ… நான் வேலை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்பா” என்று வேகமாக சொன்னவள், “இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் நியூஸ் தெரியுமாப்பா?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்! பேப்பர்ல பார்த்தேன். அதுக்கென்ன?”
“ஜூனியர் ஒருத்தனோட யூடூயூப் சேனலுக்கு, அதைப் பத்தின நியூஸ் எடிட் செஞ்சிக் கொடுத்தேன். இன்னமும் இருக்கு” என சொல்லும் பொழுது, ஒருவர் தேனீர் கொண்டு வந்து சுடரிடம் தந்துவிட்டுப் போனார்.
தேனீர் அருத்திக் கொண்டிருந்தவளிடம், “சுடர், படிச்ச படிப்புக்கான வேலை செய்ற. அது சந்தோஷமா இருக்கு. அப்படியே சேனல் ஸ்டார்ட் பண்றதைப் பத்தியும் யோசி” என ஆசையுடன் சொன்னார்.
பின், “டயர்டா தெரியற. கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்திட்டு, வேலையே கன்டினியூ பண்ணு” என்று அக்கறையுடன் சொல்லி எழுந்து கொண்டதும், தேநீர் கோப்பையை வைத்துவிட்டு படுத்துக் கொண்டாள்.
அவள் தூங்கட்டும் என்று கிளம்பப் போனவருக்கு, இந்த வழக்கு சம்பந்தமாக மாணவன் மரணம் பற்றிய செய்தி நியாபகம் வந்ததும், மீண்டும் மகள் அருகில் வந்து நின்றார்.
கண்மூடி இருந்தவளிடம், “உனக்குப் பிடிச்சதை செய் சுடர். ஆனா கவனமா செய்யணும். சரியா?” என்றவரிடம், “சரிப்பா நீங்க போங்க. உங்களுக்கு டைம் ஆகப் போகுது” என்றதும் லிங்கம் கிளம்பினார்.
சற்று நேரம் படுத்திருந்தவளுக்கு மனச்சோர்வாய் இருந்தது. மாறனிடம் பேசினால் மனம் இலகுவாகும் என்று தோன்றியது. ஆனால் அவன்தான் இரண்டு நாட்கள் பேச முடியாது என்று சொல்லிவிட்டானே?
‘பேசணும்னு நினைக்கிறப்ப பேச முடியாது’ என்று முணுமுணுத்தவள், ‘இவன் இன்னைக்கு மட்டுமில்ல என்னைக்கும் இப்படித்தான்’ என்றவளுக்கு கல்லூரி கால நாள் ஒன்று கண்முன் தெரிந்தது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 7
அன்று இரண்டாவது நாளாக அவனைப் பார்க்க இயலவில்லை. இதுவரை மாறனைப் பார்த்த பொழுதெல்லாம் பார்வையாலே பேசினவளுக்கு, இன்று பார்க்காத பொழுது, வார்த்தைகளைத் கொட்டித் தீர்க்க வேண்டுமென்ற ஆவல் வந்திருந்தது.
தேடினாள். இறுதி ஆண்டு கட்டிடம் முழுவதும் அவனைத் தேடினாள்.
கடைசியில் தேடித் திரிந்த அசதியில், மனம் வாடிப் போய்தான் அன்றைய நாளும் முடிவடைந்தது.
யாழோவியம் அத்தியாயம் – 8 தொடர்கிறது…
இன்றும் அவனுடன் பேச வேண்டும் என்று நாடிய மனது அலைப்புற்று, அசதி வந்ததில், அப்படியே சுடர் கண் அயர்ந்துவிட்டாள்.
**************
ராஜா வீடு!
தாம்பரத்திலிருந்து கிளம்பி ராஜாவின் கார் போர்டிகோவில் வந்து நின்றதும், ஒரு பக்கத்திலிருந்து தினா இறங்கினான்.
ஓட்டுநர் இருக்கையிலிருந்து ராஜா இறங்கி வீட்டின் படிக்கட்டுகளில் ஏறும் பொழுதே, “நான் இப்படியே கிளம்புறேன் ண்ணே” என்று தினா சொல்லிக் கொண்டு நின்றான்.
“வா தினா. வந்து சாப்பிட்டு போ” என்று ராஜா உரிமையாகச் சொன்னதும், இருவரும் சேர்ந்தே வீட்டிற்குள் சென்றனர்.
முன்னறை, வரவேற்பறையைக் கடந்து சாப்பாட்டு மேசைக்கு வந்த பொழுது, லதா அமர்ந்திருப்பதைக் கண்டு ராஜா தயங்கி நின்றான்.
தினாதான், “வாங்கம்மா! எப்படி இருக்கீங்க? சுடர் வரலையா?” என்று கேட்டு அருகில் வந்து நின்றான்.
லதா பதில் சொல்லாமல் ராஜாவைப் பார்த்து இருக்க, “அக்கா வந்து, கொஞ்ச நேரம் இருந்தாங்க. என்ன ஆச்சோ திடிர்னு கிளம்பிப் போயிட்டாங்க” என்று ஒரு வேலைக்காரப் பெண் கூறிச் சென்றார்.
சமைத்த பாத்திரங்களைக் கொண்டு வந்து வைத்த மற்றொரு பெண், “கேட்ட டீ கூட குடிக்காம வேக வேகமா போயிடுச்சி” என்று சொன்னார்.
கைப்பேசியில் சுடர் கேட்டது, இங்கே அவள் நடந்து கொண்ட விதம், என்று
ஆராய்ந்து கொண்டு நின்ற ராஜாவிடம், “சாப்பிட வா. உனக்காகத்தான், உனக்குப் பிடிச்சதை சமைச்சிருக்கேன்” என்று லதா சொன்னார்.
“ம்ம்ம்” என்று மட்டும் சொன்ன ராஜா, “தினா! நீ சாப்பிடு. கொஞ்ச நேரத்தில வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.
போகிறவனையே பார்த்துக் கொண்டிருந்த லதாவிடம், “ம்மா இப்ப அண்ணே வந்திரும்” என்று ஆறுதலாக சொல்லிவிட்டு, தனக்கு சாப்பாடு போட்டு தினா உண்ண ஆரம்பித்தான்.
அறைக்குள் நுழைந்த ராஜா ஒருசில நிமிடங்கள் எதுவும் செய்யத் தோன்றாமல் நின்றான். பின் பார்வை அவனறியாமல் கட்டிலின் கீழ் பொருத்தப்பட்டிருந்த இழுப்பறைக்குச் சென்றது.
கருவிழிகள் கொஞ்சமும் அசையாமல், மெதுவாக நடந்து கட்டிலின் அருகே சென்று, நின்ற நிலையிலேயே குனிந்து இழுப்பறையை இழுத்தான்.
இதற்குமுன் அடுக்கி வைத்தது போல் கோப்புகள் இல்லை என்று தெரிந்ததும், திடுக்கிட்டு அப்படியே அமர்ந்துவிட்டான். இருந்தும் தினா கொண்டு வந்த கோப்பைத் தேடினான். சில நிமிடங்களில் ‘சுடர் அதை எடுத்துச் சென்று விட்டாள்’ என்று புரிந்தது!
அப்படி ஒரு கோபம் ராஜாவின் முகத்தில் தெரிந்தது. அந்தக் கோபத்தில், ‘ஏன் சுடர் இப்படிப் பண்ண?’ என்று முணுமுணுத்து, கட்டில் பக்க மேசையிலிருந்து பொருட்களையெல்லாம் தள்ளிவிட்டான்.
மேலும் மேலும் சில பல கண்ணாடிப் பொருட்களையெல்லாம் தள்ளிவிட்டு உடைத்துக் கொண்டிருந்தான்.
ராஜா அறைக்கு வெளியே… தினா சாப்பிட்டுக் கொண்டிருந்தான். லதா எண்ணமெல்லாம் ராஜாவிடம் இருக்க, பேச வேண்டுமே என்ற கடமைக்கு தினாவிடம் பேசினார்.
அப்பொழுதுதான் ராஜா தள்ளிவிட்ட பொருட்கள் சுவர்களில் முட்டி மோதிக் கீழே விழும் சத்தம் கேட்டது. லதா பதற்றத்துடன் எழுந்து கொள்ளவும், “ம்மா! அண்ணே கோபத்தில இருக்கு போல. நீங்க உட்காருங்க” என்றான்.
உட்காராமல் நின்ற லதா, ‘இவனுக்கு என்னாச்சு?’ என்ற கவலையில் ராஜா அறை நோக்கிப் போகையில், “தொந்தரவு பண்ண வேண்டாம். அண்ணனே வெளிய வரட்டும்” என்று தினா தடுத்துவிட்டான்.
‘என்ன செய்வதென்று?’ தெரியாமல் அப்படியே அமர்ந்தார். ஐந்து நிமிடங்கள் கழித்து, “ம்மா! நான் சாப்பிட்டேன். கிளம்புறேன்” என்று தினா சொன்னதும், ‘சரி’ என சம்மதித்து தலையாட்டினார்.
“உங்களை வீட்ல கொண்டு போய் விடட்டும்மா?” என கேட்டுப் பார்த்ததற்கு, ‘வேண்டாம்’ என்று மறுத்ததும், தினா கிளம்பிவிட்டான்.
நேரம் கடந்தது. வேலையாட்கள் வந்து, “நீங்க சாப்பிடறீங்களாம்மா?” என்று கேட்டுப் பார்த்தனர். அதற்கு, ‘வேண்டாம்’ என தலையசைத்தார். பின், “எங்க சாப்பாட்டு நேரம். நாங்க சாப்பிடப் போறோம்” என்றனர். ‘சரி’ என்றார்.
அந்த பெரிய வரவேற்பு அறையில், அவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். அடிக்கடி, ராஜா அறைக் கதவு திறக்குமா? என்று திரும்பிப் பார்த்தபடியே இருந்தார்.
இதற்கிடையே லிங்கம் கைப்பேசியில் அழைத்து, ‘திருச்சிக்குப் போகணும் லதா. உன்னை கூப்பிட ஆள் அனுப்பியிருக்கேன்’ என்று சொல்லியிருந்தார்.
வெகு நேரத்திற்குப் பின் ராஜா அறையிலிருந்து வெளிவந்தான். அடுத்த நிமிடமே, “என்னாச்சு ராஜா? என்ன சத்தம்?” என்று பதற்றமாகக் கேட்டதற்கு, ‘ஒன்னுமில்லை’ என்று தலையாட்டினான்.
யாருமில்லாத அறையைச் சுற்றிப் பார்த்தவனிடம், “எல்லாரும் சாப்பிடப் போயிருங்காங்க” என்று அவன் பார்வைக்குப் பதில் சொன்னார்.
பின் அவரே, “நேரமாயிடுச்சே. சாப்பிடுறியா? பசிக்கப் போகுது” என்று கேட்க, ‘வேண்டாம்’ என்று மறுத்து தலையசைத்து, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
அதன்பின் இரண்டொரு நிமிடங்கள் நிசப்தமே நிலவியது.
கண்ணாடிப் பொருட்களைத் தட்டிவிட்டதால், அவன் கையில் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளைப் பார்த்தவருக்கு வலியுடன் கூடிய பெருமூச்சொன்று வெளி வந்தது. அலமாரியிலிருந்து முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவனருகில் அமர்ந்தார்.
அசையாமல் இருந்தான். மிக லேசாக ரத்தம் கசிந்திருந்த இடங்களைப் பஞ்சு கொண்டு துடைத்தார். பின் அதற்கு மருந்திட்டார். அதில் ஒரு சிறு எரிச்சல் உணர்ந்து கையைச் சுருக்கியவனிடம், “வலிக்குதா” என கேட்டுப் பார்த்தார். அப்படியே அசையாமல் இருந்தான்.
அதன்பிறகு அவரும் அமைதியாக அமர்ந்திருந்தார். இரண்டு வயதிலிருந்து அவர்தான் வளர்த்திருக்கிறார். அவன் பேச ஆரம்பித்ததும் அவரிடம்தான். அதிகமாகப் பேசி இருப்பது அவரிடம்தான்.
எந்தச் சூழ்நிலையிலும் அவனிடமிருந்து இப்படியொரு அமைதி வருமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. மனம் கேட்காமல், “ராஜா… நீ ஏன்…” என்ற போதே, “அம்மா! டிரைவர் வந்துட்டாரு” என்று வேலையாள் வந்து சொன்னார்.
உடனே, “இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கவா ராஜா?” என்று கேட்டுப் பார்த்ததற்கு, ‘வேண்டாம்’ என்று மறுத்து தலையசைத்தான். “சுடர் அப்பா வண்டி அனுப்பியிருக்காரு. அம்மா கிளம்பட்டுமா?” என கேட்டதும், ‘சரி’ என சம்மதித்தான்.
அவர் சென்றபின்பும், வெகு நேரம் அப்படியே தனியாக அமர்ந்திருந்தான்.
****************
இதேநாளில் சென்னையின் மற்றொரு பகுதி!
தலைமைச் செயலகம்!!
மாநிலத்தின் செயல்களை, செயலகங்களை ஒருங்கிணைக்கும் தலைமைச் செயலகத்திற்கு சசியும் மாறனும் வந்திருந்தனர்.
முதலமைச்சருடனான சந்திப்பிற்காகத் தலைமைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு மாறன் பேசியதில், இன்று மூன்று மணியளவில் சந்திப்பிற்கான நேரத்தை ஒதுங்கியிருந்தார். அதற்காகத்தான் தலைமைச் செயலகம் வந்து சசியும் மாறனும் காத்துக் கொண்டிருந்தனர்.
மூன்று மணியாகி பத்து நிமிடங்கள் கடந்திருந்த போது, ஒருவர் வந்து மாறன், சசி இருவரையும் முதலமைச்சர் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.
முதலமைச்சர் அலுவலக அறை!
முதல்வர் இருக்கையில் ஐம்பத்தெட்டு வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்தார். அவர்முன் அரைவட்ட வடிவ மேசை இருந்தது. அதில் ‘சீஃப் மினிஸ்டர்’ மற்றும் ‘முதலமைச்சர்’ என எழுதியிருந்த பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.
சசி, மாறன் உள்ளே நுழைந்ததும், லேசான தலையசைப்பு செய்து முதல்வர் அவர்களை வரவேற்றார். இருவரும் ‘குட் ஈவினிங் சார்’ என்று, மேசை முன்னே இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்.
இவர்களுடன் அங்கே முதலமைச்சரின் நேரடி உதவியாளர், தலைமைச் செயலாளர், சென்னை மாகாணத்தின் காவல்துறை ஆணையர் இருந்தனர்.
வழக்கு பற்றி தலைமைச் செயலாளரிடம் மாறன் சொல்லியிருந்தான். அவர் அதை முதலமைச்சரிடம் சொன்ன பிறகே, இந்தச் சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கப்பட்டது.
மாறன், சசி தயார் செய்திருந்த அறிக்கையை முதலமைச்சரின் உதவியாளர் கொண்டு வந்து மேசையில் வைத்தார்.
அதைத் திறந்து பார்த்தபடி, “டிஸ்ட்ரிக்ட் ஆக்ட்டிவிட்டிஸ் எப்படி போய்கிட்டு இருக்கு?” என்று மாறனை நோக்கிப் பொதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.
“நல்லா போய்க்கிட்டிருக்கு” என்றதும், “சொல்லுங்க, என்ன ப்ராபளம் இந்த என்ட்ரன்ஸ் டெஸ்ட்ல?” என்று விடயத்திற்கு வந்தார்.
“என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல நிறைய பிராடு நடக்கு. அதைப் பத்தின டீடெயில்ஸ்” என்று சமர்ப்பித்த அறிக்கையைச் சுட்டிக் காட்டி, “இதுல இருக்கு” என்றான்.
“சீஃப் செக்ரட்டரி சொன்னாரு. செங்கல்பட்டு ஸ்டுடென்ட் டெத் பத்தி நானும் நியூஸ்ல பார்த்தேன். நீங்க பர்தர் இன்வெஸ்டிகேஷனுக்கு ஆர்டர் இஸ்யூ
பண்ணீங்கள?” என மாறனைப் பார்த்துக் கேட்க, “ஆமா சார்” என்றான்.
“நீங்க பாலோவ் பண்றீங்கள?” என சசியைப் பார்த்துக் கேட்டார்.
“யெஸ் சார்! ஸ்டேஷன் எஸ்ஐகிட்ட விசாரிச்சிருந்தா நிறைய உண்மைகள் தெரிய வந்திருக்கும். பட் அவரோட ட்ரான்ஸ்பரால அது முடியலை” என்று, வழக்கிற்கு முட்டுக்கட்டையாக இருந்ததைக் குறிப்பிட்டான்.
முதல்வர் கொஞ்சம் அமைதியானார். பின் அந்த இளைஞர்கள் இருவரையும் பார்த்தார். பின், சென்னை காவல் ஆணையரைப் பார்த்தார்.
அந்தப் பார்வைக் கேட்ட கேள்வி தெரிந்ததால், “செங்கல்பட்டு டிஐஜி இப்படி எதுவும் சொல்லலை” என முதல்வரைப் பார்த்துச் சொன்ன ஆணையர், “நீங்க அப்பவே சொல்லிருக்கலாமே?!” என்று சசியிடம் கேட்டார்.
மாறனைத் தவிர அறையிலிருந்த அனைவரும் சசியைப் பார்த்தனர். ‘ஏன், டிஐஜிக்கோ, டிஜிபிக்கோ இது தெரியாதா?’ என்ற எண்ணம் வந்ததும், சசி அமைதியாக இருந்தான்.
அதை அறிந்த மாறன், “இப்போ நீங்க பெர்மிஷன் கொடுத்தாலும் எஸ்ஐகிட்ட விசாரிக்கலாம்” என துணிந்து பேசியதும், அனைவரின் பார்வையும் மாறன் மீது வந்தது.
உடனே, “சார்! இது செங்கல்பட்டுல மட்டும் நடக்கலை. அக்ராஸ் தி தமிழ்நாடு நடந்திருக்கு. நடந்துக்கிட்டிருக்கு. அதனால முறையான விசாரணை வேணும்” என்று உடைத்துப் பேசினான். கூடவே சில விவரங்களையும் சொன்னான்.
“புரியுது” என்ற முதல்வர், “எஜூகேஷனல் மினிஸ்ட்டர வர சொல்லிருந்தேன்” என்று தலைமைச் செயலாளரைப் பார்த்ததும், “மேடம் பிஏகிட்ட கேட்டேன். வந்துக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னாரு” என்றார்.
மெல்ல தலையசைத்த முதல்வர், “உங்க டிஸ்ட்ரிக்ட்ல இன்வெஸ்டிகேஷனை கன்டினியூ பண்ணுங்க” என்று சசியைப் பார்த்துச் சொன்னார்.
‘அது மட்டும் போதாது என்றுதானே இங்கு வந்தோம்’ என்று சசி உள்ளுக்குள் கொதித்தாலும், “ஓகே சார்” என்று ஒப்புக் கொண்டான்.
சென்னை காவல் ஆணையரைப் பார்த்து, “எல்லா டிஸ்ட்ரிக்ட் ஸ்டேஷன்லயும் ப்ராப்பர் இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லுங்க” என்று முதல்வர் சொல்ல, அவரும் “சரி சார்” என்றார்.
‘இத்தனை வருடங்கள் நடந்திராதது, இனிமேல் நடக்குமா? இல்லை, நடக்க விடுவார்களா?’ என்ற ரீதியில் சசியும் மாறனும் அமர்ந்திருந்தார்கள்.
மேலும் முதல்வர், புன்னகையுடன் மாறனைப் பார்த்து, “குட் ஒர்க்! நாளைக்கு கலெக்டர்ஸ் மீட்ல பார்க்கலாம்” என்றார்.
‘இவ்வளவுதானா, வேறு ஒன்றுமில்லையா?’ என்று தோன்ற, “சார்! விசாரணை பத்தி…’ என்று கேட்டதற்கு, “எஜூகேஷனல் டிபார்ட்மென்ட்கிட்ட பேசிட்டு, முடிவெடுக்கலாம்” என்று சொல்லி முடித்தார்.
அதன்பின், ‘சந்திப்பு முடிவடைந்தது’ என்பது போல உதவியாளரைப் பார்க்க, மேசையிலிருந்த அறிக்கை அடங்கிய கோப்பை அவர் எடுத்துக் கொண்டார்.
மாறனுக்கு, ‘நீ இனி இதில் தலையிடாதே!’ என்று சொல்வது போல் இருந்தது.
அவனுடைய அதிகார எல்லைக்குள் செய்ய வேண்டியதைச் செய்தாயிற்று என்பதால், முறைப்படி விடைபெற்று சசியுடன் கிளம்பி வெளியே வந்தான்.
வெளியே வந்த சசிக்கும் மாறனுக்கும், ‘இவர்களிடமிருந்து முறையான விசாரணை நடப்பதற்கான உத்தரவு வருமா?’ என்ற சந்தேகம் எழுந்தது.
இந்தச் சந்திப்பே ஏதோ ஒரு கண்துடைப்பாகத்தான் தெரிந்தது.
சசியுடன் சேர்ந்து நடந்து கொண்டே, “இவங்க நடவடிக்கை எடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை” என்று மாறன் பொருமினான்.
அவனுடன் நடந்து சசி, “அடுத்து என்ன செய்யலாம்னு யோசி” என்றதும்,
“இதுக்கு மேல என்ன செய்ய?” என இயலாமையுடன் கேட்டான்.
மேலும், “எந்த ஒரு ஸ்டேஷன்லயும் இன்வெஸ்டிகேஷன் ப்ராப்பரா நடக்க விட மாட்டிக்கிறாங்க. சிஎம்மும் சரியா இன்ட்ரெஸ்ட் காட்டலை. என்ன பண்ண?” என்று கொதித்துப் போய் பேசினான்.
“எனக்கும் தெரிஞ்சது. பட் இன்னைக்கு ஏன் எஜூகேஷனல் மினிஸ்டர் வரல?” என சசி சந்தேகிக்கும் போதே, எதிரே காசி வந்து, “சார் ப்ரெஸ்ஸ மீட் பண்ண போறீங்களா?” என்று மாறனிடம் கேட்டார்.
கொஞ்சம் யோசித்த பின், ‘ஆமாம்’ என்று அவன் தலையசைத்ததும், காசி சென்றுவிட்டார்.
“வா பிரஸ்ஸ மீட் பண்ணிட்டு வந்திடலாம்” என்று மாறன் சொல்ல, “சீஎம்தான் எஜூகேஷனல் டிபார்ட்மென்ட்கிட்ட இதை பத்தி பேசறேன்னு சொன்னாருல? அதுக்கு முன்னாடி இதெதுக்கு மாறன்??” என்றான்
“அவங்ககிட்டருந்து பேர் டெசிஷன் வரும்னு நம்புறியா சசி?”
“நம்பலை. பட் இது வேண்டாம்னு தோணுது. அவங்களைக் கோபப்பட வைக்கும்”
“ஏன், இப்போ அவங்களுக்கு நம்ம மேல கோபம் இல்லையா?”
“இருக்கு. ஆனா இது வேற. இதுவரைக்கும் எனக்கும் உனக்கும் தெரிஞ்ச ஒரு விஷயத்தை, எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டப் போற”
“சசி! நம்மளை வேற போஸ்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்றதுக்கு முன்னாடி, என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யலாமே! தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சப்பறம் விட்டுட்டுப் போக முடியலை. அட்லீஸ்ட் கேஸை நெக்ஸ்ட் லெவெலுக்கு புஷ் பண்ணி விடுவோமே?
வேற யாரைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம். நாம எதுக்காக வந்தோம்னு சொல்லலாம்” என மாறன் சொல்ல, அதற்குமேல் சசி யோசிக்கவில்லை.
இருவரும் சேர்ந்து ஊடகத்தினரைச் சந்தித்தனர். சில கேள்விகள், சில பதில்கள் என்று ரீதியில் அந்தச் சந்திப்பு சென்றது. கடைசியில் ‘எதற்காக
முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு?’ என்று கேள்வி வந்தது.
“செங்கல்பட்டு விசாரணையில, இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல முறைகேடு நடந்துக்கிட்டு இருக்கிறது தெரிய வந்தது. அதைப் பத்தி டீடெயில் ரிப்போர்ட் முதலமைச்சர்கிட்ட சப்மிட் பண்ணி, சரியான முறையில விசாரணை நடக்க கேட்டிருக்கோம்” என பதில் சொல்லி, மாறன் சந்திப்பை நிறைவு செய்தான்.
அனைத்து ஊடங்களிலும், இந்தச் செய்தி இரவு நேர முக்கிய செய்தியாக ஒளிபரப்பபட்டது. மேலும் அடுத்தநாள், ‘நுழைவுத் தேர்வில் முறைகேடு’ என்று பெரிய எழுத்துக்கள் கொண்ட முதல் பக்கச் செய்தியாகப் பத்திரிக்கைகளில் இடம்பெற்றது.
ஒவ்வொரு நாளும் அதிகாரத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டே போனான் யாழ்மாறன்!!
