Kathambari Novels
அத்தியாயம் – 15
ராஜா அழைப்பைக் கேட்ட லதா, ‘இது போதுமே’ என்ற உணர்வில் இருந்தார் என்றால், ‘இதெப்படி?’ என்ற உறுத்தலில் லிங்கம் இருந்தார்.
தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவரை, “இங்க வாங்க-ம்மா! என்னென்னு சொல்லுங்க?” என்றதும், “ராஜா” என்று அழுகை, ஆனந்தம் கலந்த உணர்வில் அழைத்து, அவன் அருகில் வந்தார்.
நிறைய பேச நினைத்தார். ஆனால் முடியவேயில்லை. ‘ஏன் இத்தனை நாள் பேசவில்லை?’ என்ற கேள்வி இருந்தும், எதையும் கேட்க முடியாமல் லதா தவித்துக் கொண்டிருந்தார்.
அவர் நிலை புரிந்தவன், “மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் மா! இப்போ என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?” என்றான்.
“அது… அது” என்று சொன்னாரே தவிர, சந்தோஷத்திலா… சங்கடத்திலா வேறு எதையும் சொல்ல முடியவில்லை.
பார்வை லதாவை நோக்கி இருக்க, “இந்த ஆளு இப்படினு உங்களுக்கு எப்போ தெரியும்?” என்று ராஜா லிங்கத்தை நோக்கி கைநீட்டி கேட்டான்.
“முன்னமே. பேப்பர்ல வந்த…” என்று முடிக்கும் முன்னரே, “இந்த ஆளை பத்தி தெரியாதப்போ இங்க இருந்தீங்க சரி. தெரிஞ்சப்புறமும், ஏன் இருக்கணும்? வீட்டுக்கு வர வேண்டியதுதான?” என்றான் உரிமையுடன்.
ஒன்றரை வருடத்திற்குப் பின்னரான அவனது உரிமையான பேச்சில், “ராஜா, நான்…” என்று தடுமாறினார்.
இதற்குள் லிங்கம், “இங்க என்ன…” என்று வர, “நானும் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்கோம்ல, நீயேன் நடுவில வர்ற?” என்றான் ராஜா கோபத்துடன்.
லிங்கம் அதிர்ந்து நின்றார்!
“நீங்க சொல்லுங்கம்மா” என்றான் ராஜா.
அவன் இருக்கும் தைரியத்தில், “இவர்… என்னை…. ரொம்ப அடிக்கிறாரு. இப்ப கூட அடிச்சாரு” என்று லதா மகனிடம் முறையிட்டார்.
“அம்மாவ அடிச்சியா? எங்க தைரியம் இருந்தா இப்ப அடி பாப்போம்” – ராஜா லிங்கத்தைப் பார்த்து சவால்விட்டான்.
“என்னடா! இத்தனை நாள் இல்லாத உன் பாசம், இன்னைக்கு புதுசா வருது?” – லிங்கம் கோபமாகக் கேட்டு, அவன் முன்னே வந்து நின்றார்.
லிங்கத்தின் கண்களில் தெரிந்த காட்டத்தைக் கண்டதும் லதா பயந்தார்.
ராஜா லிங்கத்தை நெருங்கி நின்று, “அம்மாகிட்ட நான் பேசாம இருந்தேன்னு சொல்லு. பாசமா இல்லைனு சொல்லாத” என்றான்.
லிங்கம் ‘என்ன சொல்ல வர?’ என்பது போல் நின்றார்.
“என்ன புரியலயா?” என்றவன், “ம்மா! இந்தாளு உங்களை எதுக்கு அடிச்சான்?” என்று லதாவிடம் கேட்டான்.
“ராஜாக்கு ‘ஏன் இப்படி பண்ணீங்க?’னு கேட்டதுக்காக” என்றார் கண்ணீருடன்.
அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டான். “இதுக்காகத்தான் உங்ககிட்ட பேசாம இருந்தேன்” – வருத்தம் மிகுந்த குரலில் சொன்னான்..
லதா புரியாமல் பார்த்தார்.
“ம்மா! உங்ககூட பேசினா… என்னால எதையும் மறைக்க முடியாது. இந்தாளு எனக்கு செஞ்சதெல்லாம் சொன்னா… இப்படி கேள்வி கேட்பீங்கன்னு தெரியும்.
இப்ப அரெஸ்ட் ஆகப்போறதுனால, அடிக்க மட்டும் செய்றான். ஆனா இதுக்கு முன்ன அப்படியில்லயே? எனக்காக பேசி உங்களுக்கு ஏதும் ஆயிடுச்சினா?
நீங்களும் இல்லனா… நான்… எனக்கு யாரு…” என்று தவித்தவன், “பேசாம இருந்ததுக்கு வேற எந்த காரணமும் இல்லம்மா! பயம்…. உங்களையும் எதும் செஞ்சிடுவானோன்னு பயம்” – மனம் கலங்கிச் சொன்னான்.
அவன் கண்ணில் தெரியும் பாசத்தைப் பார்த்த நிம்மதியில், லதா கண்ணீரும் களிப்பும் சேர்ந்த முகத்தோற்றத்துடன் நின்றார்.
“மத்தது அப்புறமா சொல்றேன்” என்றதும், லிங்கத்தின்… இன்றைய பேச்சை, மருத்துவமனையில் அவரது கோபம் எல்லாம் நினைத்துப் பார்த்த லதா, ‘சரியென்று’ தலையசைத்தார்.
அதுவரை அமைதியாக இருந்த லிங்கம், “என்னடா? இத்தனை நாளா அடங்கி இருந்தவன்… நான் அரெஸ்ட் ஆகப் போறேன்னு தெரிஞ்சதும், ஓவரா பேசற!?” என்று சத்தமிட்டார்.
“அடங்கி இருந்தேனா? அப்படின்னு நீ நினைச்ச!!”
“என்னடா சொல்ற? புரியிற மாதிரி சொல்லு”
“முதலதான் நீ இவ்வளவு மோசமானவன்னு தெரியாது. அதான் நீ பண்ற தப்பு தெரிஞ்சதும்… சரி வளர்த்தவரு… சொல்லிப் பார்ப்போமேன்னு நினைச்சேன். ஆனா அது… எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு நல்லா உறைக்கிற மாதிரி புரிய வச்சிட்ட?!” என்று விபத்தின் நினைவில் வருந்திச் சொன்னான்.
இழப்பை நினைத்து அவன் கலங்குவதைப் பார்த்து லிங்கம் சிரித்தார்.
“ஏ சிரிக்காத!” என்று ஒற்றை வார்த்தையில் அவரை எச்சரித்தான்.
அதன்பின்னும் சிரித்துக் கொண்டிருந்தவரிடம், “சிரிக்காதனு சொல்றேன்ல?” என்று கோபப்பட்ட, “சிரிச்சா என்னடா பண்ணுவ?” என்று திமிராய் கேட்டார்.
“உன்னைப் பார்த்து நானும் சிரிப்பேன்” என்றான்.
‘எதற்கு?’ என்ற யோசனையுடன் லிங்கத்தின் சிரிப்பு குறைந்தது.
“உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கேன்ல? அதுக்காக!” என்று சொன்னான் ராஜா.
“நீ என்ன பண்ண? அந்த கலெக்டர்தான எல்லாம் பண்ணது?” – லிங்கம்.
இப்போது ராஜா சிரித்தான்.
“சிரிக்காத! ஒழுங்கா சொல்லுடா” – கட்டுப்பாட்டை இழந்து லிங்கம் கத்தினார்.
“கத்தாத சொல்றேன்! இது எல்லாத்துக்கும் ஆரம்பப் புள்ளி எதுனு தெரியும்ல? செங்கல்பட்டு கலெக்டர் ஆபிஸ்கு வந்த மனு” என்று அழுத்தமாக ஆரம்பித்து, “அதை எழுதிக் கொடுத்தது நான்தான்!” என்று அமைதியாக முடித்தான்.
லிங்கத்திற்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
“அரசியல்வாதியா நான் இதை முன்னெடுத்திட்டுப் போனா, அதுக்கு ஆயிரம் அரசியல் சாயம் பூசி கேஸ ஒன்னுமில்லாம ஆக்கிடுவீங்கனு தெரியும்” என்று அரசியல் நிலவரத்தை, நிதர்சனத்தைச் சொன்னான் ராஜா.
மேலும், “ஆனா அதுவே ஒரு நேர்மையான அதிகாரி இத முன்னெடுத்திட்டுப் போனா? அந்த அதிகாரிக்கு இந்த தப்ப தட்டிக் கேட்கிற அக்கறை இருந்தா? அவனே, உங்க அரசியல் செல்வாக்கு, பணபலத்துக்கு அடிபணியாதவனா இருந்தா? கூடவே, உங்க மிரட்டலுக்கு பயப்பிடாதவனா இருந்தா?” என்று ஆவேசமாகக் கேள்வி கேட்டான்.
ஒரு சிறு இடைவெளிக்குப் பின், “அவன்தான் மாறன்! கலெக்டர் யாழ்மாறன்” என்று சொன்னதும், லிங்கத்தின் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது.
“யார் கைக்கு கேஸ் போனா, ஆக்ஷன் எடுப்பாங்கனு நான் யோசிச்சு பண்ண விஷயம். நான் எதிர்பார்த்தது வீண்போகல. மாறன் தெளிவா ரிப்போர்ட் ரெடி பண்ணி, சிஎம் வரைக்கும் வந்தான். ஆனா அப்புறமும், ராகினி மூலமா கேஸ் மூவ் ஆகாம பார்த்துக்கிட்டிங்க. கரெக்டா?”
‘நீ சொல்வது சரி!’ என்பது போல் அலட்சியப் புன்னகையை லிங்கம் தந்தார்.
ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துக் கொண்டான். “என்ன செஞ்சா கேஸ் அடுத்த கட்டத்துக்குப் போகும்னு யோசிச்சேன். சிஎம் மீட் பண்ணிட்டு வந்த மாறன் ‘முறையான விசாரணை வேணும்னு’ கேட்டதா ப்ரெஸ்கிட்ட சொன்னான்.
ஸோ ஒரு ப்ரோபோஸர்கிட்ட விஷயத்தைச் சொல்லி, அதே கோரிக்கையோட பொதுநல வழக்கு போட முடியுமானு கேட்டேன். அவரும் ஒத்துக்கிட்டாரு”
நீதிமன்றம், அரசை கேள்வி கேட்ட பின்னர்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்றது ஞாபகத்தில் வந்ததும், லிங்கத்தின் அலட்சியம் எல்லாம் ஆத்திரமாக மாறியிருந்தது.
“அதுக்கடுத்து விசாரணை கமிஷன் அமைச்சி… ரிப்போர்ட் சப்மிட் பண்ணி, மீடியா பேசினது எல்லாம் சரிதான். அப்புறமும் தப்பு செஞ்சவங்க யாருன்னு தெரிஞ்சப்புறமும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை.
திரும்பவும் இந்த விஷயம் பேசணும். அதுக்கு என்ன பண்ணனு யோசிச்சேன்.
அதான் ரிப்போர்ட்டர மாறன்கிட்ட கேள்வி கேட்க வச்சேன். கேட்கிற கேள்வி எப்படியிருந்தாலும் பொறுமையா பதில் சொல்லுவான்… ஸ்கேம் பத்தி பேச ஒரு சான்ஸா எடுத்துப்பான்னு நம்பினேன்!
அங்கயும் அவன் என்னை ஏமாத்தல. தெளிவா பேசி கவர்மென்ட் நடவடிக்கை எடுப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை கொடுத்தான். அப்புறம்தான் ஸ்டுடென்ட்ஸ் போராட்டம், மீடியால டிபேட் அது இதுன்னு திரும்ப இதுபத்தி பேசினாங்க” என்று திட்டமிட்ட தன் நகர்த்தலைச் சொன்னான்.
அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க லிங்கத்தின் ஆத்திரங்கள் அடங்கா கோபமாக மாறியிருந்தது.
“அதுக்கடுத்து நடந்தது உனக்கு தெரியுமே? இதோ இப்ப அரஸ்ட் ஆகிற நிலையில நீ நிக்கிற வரைக்கும்” என்று, அவர் கண்களுக்குள் சென்று ராஜா திருப்தியுடன் சொன்னான்.
கண்கள் சிவந்த கோபத்துடன், “ஸோ பிளான் பண்ணி என்னை ஜெயிலுக்கு அனுப்புற?” என்று லிங்கம் கேட்டார்.
திட்டம் பலித்துவிட்ட திடத்துடன், “பிளான் பண்ணது நான், அதை நடத்தி முடிச்சது மாறன்” என்றான்.
அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளி நிறுத்தி, “இப்ப என்னடா? என்னை கைது பண்ணப் போறாங்கனு சந்தோஷமா இருக்கியா? இதோட என் அரசியல் வாழ்க்கை முடிஞ்சிரும்னும் நினைக்கிறியா?” என்று வெறியுடன் கேட்டார்.
ராஜா பதில் சொல்லவில்லை. ‘முழுசா சொல்லி முடி’ என்பது போல் நின்று கொண்டிருந்தான். லதாதான் இருவருக்குள்ளும் கைகலப்பு வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தார்.
விஷம் தோய்த்த புன்னகை ஒன்றைத் தந்து, “நானும் உன் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆகிட்டுதான்டா வந்திருக்கேன்” என்றார்.
ராஜா கொஞ்சமும் அலட்டாமல் நின்றான். லதாதான், ‘ஐயோ! என்ன பண்ணி வச்சிருக்கிறார்?’ என்ற புருவ முடிச்சுகளுடன் நின்றார்.
லிங்கம், “தலைவர்கிட்ட இடைத்தேர்தல்ல உனக்கு சீட் கொடுக்க கூடாதுனு சொல்லிட்டேன்” என்று நக்கலாகச் சிரித்தார்.
“நீ எனக்கு பண்ண ஒரே நல்ல காரியம் இதுதான்!” என்றான் ராஜா.
புரியாமல் பார்த்தார் லிங்கம்.
“என்ன பார்க்கிற? ஒரு வருஷமா கட்சிக்காக நான் எதும் பண்ணல. என் கட்சிக்காரனே எனக்காக ஓட்டு கேட்க மாட்டான். மத்தவங்க எப்படி ஓட்டு போடுவாங்க? நானே தலைவர்கிட்ட சொல்ல நினைச்சேன். நீ சொல்லிட்ட!”
அடங்கிவிட்டான் என்று நினைத்ததெல்லாம் பொய் என்பது போல, இப்படி எதிரில் வந்து பேசுகிறானே!? மனதிற்குள் நினைத்ததை லிங்கத்தின் முகம் வெளியே காட்டியது.
லிங்கத்தின் அமைதியைக் கண்டு, “என்ன? நான் அடங்கிட்டேனா? இல்லை, உன்னை அடக்கிட்டோமா?” என்று அழுத்தமாகக் கேட்டு நின்றான்.
எரிமலை குழம்பாய் எரிக்கும் கோபத்துடன், “இங்க பாருடா! உன்மேல, அந்த கலெக்டர் மேல இருக்கிற கோபம்… இந்த ஜென்மத்தில குறையாது. பார்த்து இருந்துக்கோங்க” என்று, அந்த நிலையிலும் மிரட்டினார்.
அடக்கப்பட்ட ஆத்திரத்துடன், “ஈவு இரக்கமே இல்லாம எத்தனை பேர் உயிர் போக காரணமா இருந்திருக்கிற? உன்னை கொல்லனும் போல வெறி வருது. ஆனா இவங்க ரெண்டு பேரையும் நான்தான் பார்த்துக்கணும். அதனால உன்னை உயிரோட விடறேன்” என அமைதியாக முடித்தான்.
மேலும், “ம்மா! வாங்க போகலாம். இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம்” என்றவன், “சுடர் வா” என்று கூப்பிட்டதும் அவளும் எழுந்து வந்தாள்.
“டேய்… அவளைக் கூட்டிட்டுப் போ. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று லதாவைச் சொன்னவர், மகள் மேல் கொண்ட பாசத்தில், “என் பொண்ண ஏன் கூட்டிட்டுப் போற?” என்று அதிருப்தி தெரிவித்தார்.
அவரை அலட்சியமாகப் பார்த்தவன், “சுடர் வா” என்றான் மீண்டும்.
ராஜாவை ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு, “சுடர்! நீ நினைக்கிற மாதிரி சேனல் ஆரம்பிச்சித் தர என்னாலதான் முடியும். அவனாலெல்லாம் அதைக் செஞ்சி தர முடியாது” என்று சொல்லி, மகளைத் தடுக்கப் பார்த்தார்.
“ஒரு அண்ணனா… நியாயமா சம்பாதிச்சு, உனக்கு என்ன செய்ய முடியுமோ அத செய்வேன் சுடர். நீ வா” என ‘நியாயத்தில்’ ஒரு அழுத்தம் கொடுத்துச் சொன்னான்.
‘பேசாமல் இரு?’ என்பது போல ராஜாவை முறைத்துவிட்டு, மகளிடம் சென்று “சுடர், அவன் சொல்றதைக் கேட்காத. அப்பா சொல்றதைக் கேளு. இங்கருந்து போகாத” என கெஞ்சினார்.
அதற்கு… அத்தனை நேரம் அமைதியாக இருந்த சுடர் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், “ராஜாண்ணா போகலாமா?” என்று கேட்டாள்.
லிங்கத்தின் கெஞ்சல் தோரணை குறைந்து, ‘நீயும் அவனுக்கு சப்போர்ட்டா?!’ என்பது போல் பார்த்தார். பின், “தாராளமா போ! ஆனா நான் சொன்னதை மறந்திடாத” என்று எச்சரித்துவிட்டு, திரும்பிக் கொண்டார்.
அவர், ‘எதைச் சொல்கிறார்’ என்று புரிந்ததும் சுடர் கண்கலங்கி நின்றாள்.
ராஜாவிற்கு, ‘இவர் என்ன சொன்னார்? சுடர் ஏன் இப்படி?’ என புரியவில்லை. இருந்தும் லிங்கம் கைது செய்யப்படும் நேரத்தில் அவர்கள் இங்கே இருக்க வேண்டாம் என்று நினைத்தான்.
எனவே, அதற்கு மேல் தாமதிக்காமல் தன்னுடன் இருவரையும் அழைத்துச் சென்றுவிட்டான்.
செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா!
அன்று உதவியாளரிடம் கேட்ட விவரங்கள் வந்திருந்தன. முன்னறையில் நின்று, மாறன் அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மனு வந்த அன்று செங்கல்பட்டு அரசுமருத்துவமனை வந்தவர்கள், பொதுநல வழக்கு போட்ட பேராசிரியர், கேள்வி கேட்ட நிருபர் விவரங்கள்… அனைத்தும் பார்த்து முடிக்கவும், ‘ராஜா ஏன் இதைச் செய்யணும்?’ என்ற கேள்வி வந்தது.
சுடரிடம்தான் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
அக்கணம் அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசி முடித்ததும், மீண்டும் அழைப்பு வந்தது. அதையும் பேசிவிட்டு உள்ளே வந்தான். வரவேற்பறையில் திலோ டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
டிவியில் இரவு நேரத்து முக்கிய செய்திகளாக லிங்கம் கைது செய்யப்படும் காட்சிகள், குற்றவாளிகளான ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கைதான தருணங்கள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்தவாறே திலோ அருகில் வந்தமர்ந்தவன், “சசியும்… அலெக்ஸ் அங்கிளும்… ஃபோன் பண்ணியிருந்தாங்க. இதைப் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம்” என லிங்கம் கைது செய்யப்படும் காட்சிகளைக் காட்டினான்.
திலோ அமைதியாக இருந்தார்.
நிரம்ப திருப்தியுடன், “ரெண்டு பேருமே சூப்பர் ஹேப்பி மூட்ல இருக்காங்க” என்று கொஞ்சம் முக மலர்ச்சியுடன் சொன்னான்.
ஏதும் சொல்லாமல், “சாப்பிடலாமா?” என்றார் திலோ.
‘அப்பா நினைவோ?’ என்று நினைத்து டிவியின் ஒலி அளவைக் குறைத்தான். “அப்புறமா சாப்பிடலாம். நீங்க ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” என்று கேட்டான்.
கவனத்தை டிவி காட்சியிலிருந்து எடுக்காதவர், “மாறன், அப்பா ஆக்சிடென்ட் கேஸ்… அதுக்கும் இவர்தான காரணம்?” என்று மெல்ல ஆரம்பித்தார்.
“நான் பாலோவ் பண்றேன்-மா. இன்னும் கொஞ்சம் எவிடென்ஸ் கிடைச்சதும் எப்ஐஆர் போடுவாங்க” என்றவன், “அதை நான் பார்த்துகிறேன். உங்களுக்கு என்னாச்சுனு சொல்லுங்க?” என்று டிவியை ஆஃப் செய்தான்.
“உனக்கு எக்ஸ்ட்ராவா செக்யூரிட்டி அரேஞ் பண்ணிருக்காங்களாமே?! காசி சொன்னாரு. அப்படினா, உனக்கும் ஏதாவது ஆபத்து இருக்கா மாறன்?” என்று பயத்துடன் கேட்டார்.
“ம்மா! இன்னைக்கு அரெஸ்ட் இருக்கிறதாலதான் இந்த அரேஞ்சமென்ட். நீங்க இதை நினைச்சி பயப்படாதீங்க” என்று தைரியம் சொன்னான்.
“ம்” என்றவர், “இன்னைக்கு வெளிய போயிருந்தேன்” என்று மட்டும் சொன்னார்.
என்ன நடந்ததென்றே தெரியாததால், “பொட்டிக் போனீங்களா? அதான் டயர்டா இருக்கிறீங்களா?” என்று எதார்த்தமாக கேட்டான்.
“இல்லை! அந்தப் பொண்ண பார்க்க போயிருந்தேன்” என்றார்.
‘சுடரையா?! எதற்காக? என்ன பேசியிருப்பார்கள்?’ என்ற கேள்விகளுக்குள் உறைந்து கிடந்ததால், பேசாமல் இருந்தான் மாறன்.
திலோவே, “உன் மொபைலருந்து அவங்க நம்பர் எடுத்தேன். ஃபோன் பண்ணி பார்க்கணும்னு சொன்னேன். ‘சரின்னு’ வந்தாங்க. அதான்… நானும் போய், பார்த்திட்டு வந்தேன்” என்று விவரமாகச் சொன்னார்.
“ஓ!” என்று சாதாரணமாகச் சொன்னாலும், “ஏன் அவளைப் பார்க்கணும்?” என கேட்கையில் அசாதாரண வேகத்தில் மாறன் இருதயம் துடித்தது.
“சில விஷயம் பேச நினைச்சேன். அதான்! அதை உன்கிட்டயும் சொல்லணும். சொல்லட்டுமா…? சொல்லலாமா?” என்று தயங்கிக் கேட்டார்.
அம்மா என்ன பேசியிருப்பார்? அதற்கு, சுடர் என்ன சொல்லியிருப்பாள்? என்ற எதிர்பார்ப்பு கேள்விகளில் இருந்தவன், “ம்ம்ம்” என்றான்.
சற்று யோசித்தார். பின், பேசியது அனைத்தையும் மகனிடமும் சொன்னார். முழுதும் கேட்டு முடிக்கும் வரை அவன் குறுக்கிடவே இல்லை. பேசி முடித்த பின்பும் எதுவும் பேசவில்லை.
இந்தப் பேச்சுக்கள் சுடரை காயப்படுத்தியிருக்கும்! அதை நினைத்து அவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.
திலோ மெதுவாக, “மாறன்! ஒன்னுமே பேச மாட்டிக்கிற? என்ன நினைக்கிற?” என்று கேட்டார்.
அப்போதும் அவன் பேசவில்லை.
திலோவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அந்த நேரத்தில் கணவரின் இழப்பு அதிகமாகத் தெரிந்ததாலும்… தன் பேச்சு அதிகப்படி என நினைக்கிறானோ? என்ற வினாவிலும்… திலோ விழிகளில் கண்ணீர் தேங்கியது.
அம்மா, மகன் இருவருக்கும் இடையே நீளமான ஒரு அமைதி நிலவியது.
மெல்ல நடந்து… அதைக் கடந்து வந்த திலோ, “ஏதாவது தப்பா பேசியிருந்தா சாரி” என்று குறைந்து போன குரலில் சொல்லி எழுந்த போதுதான், மாறன் நிகழ்கணத்திற்கு வந்து அம்மாவைப் பார்த்தான்.
கலங்கிய கண்களுடன்… கையைப் பிசைந்து கொண்டு நின்றவரிடம், “ம்மா, உட்காருங்க… பேசலாம்” என்றதும் அவனருகில் அமர்ந்து, “நான் பேசினது தப்புன்னு நினைக்கிறியா?” என முகத்தில் கலவரத்தோடு கேட்டார்.
“முதல… என்கிட்ட எதுக்கு சாரி கேட்கிறீங்க? பேசணும்னு நினைச்சிருக்கீங்க. பேசிட்டிங்க. அவ்வளவுதான்”
‘சரி’ என்ற உடல்மொழியுடன், “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. அவங்களை ஊழல் செஞ்ச அரசியல்வாதி பொண்ணா… நான் பார்க்கிற பார்வையில தப்பு இருக்கா?” என்றார்.
பொறுமையாகவே, “இன்னைக்கு இருக்கிற நிலைமையில எல்லாரும் சுடரை இப்படித்தான் பார்ப்பாங்க. நீங்களும் அதேமாதிரி பார்த்திருக்கீங்க” என்று, ‘தவறா? சரியா’ என்ற கேள்விக்குள்ளே போகாமல் பதில் சொன்னான்.
தன் கேள்விக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்பதால், “நீ எப்படிப் பார்க்கிற?” என்றொரு கேள்வி கேட்டார்.
அதைவிட பொறுமையான தொனியில், “எல்லாரும் பார்க்கிற மாதிரி நானும் பார்த்தா… அப்புறம் மத்தவங்களுக்கு எனக்கும் என்ன வித்தியாசம்?” என்று மற்றொரு கேள்வியையே பதிலாகத் தந்தான்.
ஆனால் அந்தக் கேள்வியே திலோவிற்குப் போதுமான பதிலாக இருந்தது. “அப்போ நான் பார்க்கிற பார்வை தப்புன்னு சொல்றியா?” என்று கேட்டார்.
“ச்சே… ச்சே… அது உண்மையா இருக்கிறப்போ, அதெப்படி தப்புன்னு சொல்ல முடியும்?” என்றவனை குழப்பத்துடன் திலோ பார்க்க, “அப்படிப் நான் பார்க்க மாட்டேன்னு சொல்றேன்” என்று தெளிவாகச் சொன்னான்.
ஏதோ ஒரு அவசரத்தில் “அந்த பொண்ணுக்கே… அந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கு மாறன்” என்றார்.
“இருக்கலாம்! ஆனா நான் அப்படிப் பார்க்க மாட்டேன்னு சுடர் நம்பிக்கையா இருப்பா. அந்த நம்பிக்கையைக் கொடுத்தது என்னோட காதல்னா… அதைக் காப்பாத்திறதலயும்… என் காதல் இருக்கு” என அவசரப்படாமல் சொன்னான்.
“அப்பா இல்லாததுக்கு காரணமானவரோட பொண்ணுனு உனக்கு தோணவே இல்லையா?” என்றவர் குரலில் அடங்கா துயரம் வெளிப்பட்டது.
இழந்தவரின் வலி! அது தந்த கேள்வி! ‘இல்லை’ என்றால் காதல் ஜெயிக்கும். பாசம் தோற்கும். ‘ஆம்’ என்றால் பாசம் இருக்கும். காதல் இருக்காது.
இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!!
இதைத்தவிர வேறு பதிலே இல்லையா? இருந்தது. பதில் இருக்கின்றது. அது, சுடரை அவளுக்கென்ற குணங்களுடன் பார்ப்பது. அது அவனால் மட்டுமே முடியும். இக்கணத்தில் வேறு யாராலும் முடியாது. திலோவாலும் முடியாது.
ஆதலால் அமைதியாக இருந்தான். ஆனால் மாறன் முகம் முழுதும் யோசனை ரேகைகள் பேசியபடி இருந்தன.
அதைக் கண்டவர், “என்ன யோசிக்கிற?” என்று கேட்க, “ஒன்னுமில்லை ம்மா. நீங்க பேசுங்க” என்று, பதில் சொல்வதைத் தவிர்த்தான்.
“ஏற்கனவே ஒருதடவை ‘இது சரிவராதுனு’ சொன்னதா நீ சொன்னேல. அப்ப, அத சுடர் புரிஞ்சிருப்பாங்கள. இப்பவும் சூழ்நிலையைச் சொல்லி, சரிவராதுனு சொன்னா… புரிஞ்சிக்க மாட்டாங்களா” என்று கேட்டார்.
‘அவள் புரிந்து கொள்வாளா? மாட்டாளா?’ என்ற கேள்விக்கு முன்னே, ‘நான் எப்படி அதைச் சொல்வேன்?’ என்ற கேள்வி வந்ததால், அமைதியாக இருந்தான்.
பேசாமல் இருந்தவனிடம், “மாறன்” என்றதும், பதில் என்பதைத் தாண்டி… தன் நிலையைச் சொல்ல ஆரம்பித்தான்.
“அன்னைக்கு சுடர் பத்தி எதும் தெரியாது. பத்து நிமிசத்துக்கு மேல பேசினது கிடையாது… பிடிச்சிருக்குனு வார்த்தையால சொன்னதில்லை… அவளுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு புரிஞ்சிக்கலை”
‘என்ன சொல்ல வருகிறான்?’ என்பது போல் திலோ பார்த்தார்.
“அந்தமாதிரி ஒரு சூழ்நிலையிலே, அவளோட அப்பாவ காரணம் காட்டி… ‘இது சரிவராது’னு சொன்னதில ஒரு சின்ன நியாயம் இருந்தது”
இன்னும் அவன் சொல்ல வருவது புரியாததில், நெற்றி முடிச்சுகளுடன் திலோ இருந்தார்.
“இப்ப… அவளைப் பத்தி நல்லா தெரியும்… நிறைய பேசியிருக்கேன்… இப்பவும் நாங்க பிடிக்குதுனு வார்த்தையால சொல்லிக்கல. ஆனா அவளுக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு தெரியும்”
‘கேள்விக்கான பதில் எப்போது வரும்?’ என்று மகனையே பார்த்தார்.
“இதுக்கப்புறமும் அவ அப்பாவைச் சொல்லி… வேண்டாம்னு சொன்னா அதுல நியாயமில்லைனு சொல்லவா? இல்ல காதலே இல்லைனு சொல்லனுமா?” என, கேள்வி கேட்டவரிடமே கேள்வி கேட்டு நிறுத்தினான்.
ஒருவித சோர்வில், “டைரக்ட்டா கேட்கிறேன் மாறன். இவ்ளோ நடந்தபுறமும், அவங்களைத்தான் மேரேஜ் பண்ண நினைக்கிறியா?” என்று கரகரத்த குரலில் கேட்டார்.
மீண்டும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!
‘ஆமாம்-இல்லை’ என்று எதிரெதிர் முனைகள். எதில் நின்றாலும், ஒன்று ஏறும், மற்றொன்று இறங்கும். ‘என்ன சொல்ல?’ என்று யோசித்தான்.
பின் மெதுவாக, “இந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை. ஆனா என்கிட்ட இருக்கிற ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்”
“நீங்க ‘வேண்டாம்னு’ சொல்ற காரணத்துல ஒன்னு அவளால மாத்த முடியாது” என்று அப்பாவின் மரணத்திற்குக் காரணம் லிங்கம் என்பதைக் குறிப்பிட்டு, அம்மாவைப் பார்த்தான்.
“புரியுது”
“இன்னொன்னு ஊழல் செஞ்சவரோட பொண்ணுங்கிற ஒரு அடையாளம். அது இருக்கும். ஆனா, அந்த அடையாளத்தை அவ கண்டிப்பா மாத்திடுவா. எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்தத் திறமையும் அவளுக்கு இருக்கு.
என்ன ஒன்னு? அது நடக்கிறதுக்கு நிறைய டைம் எடுக்கும். ‘இப்படி இருக்காத! உன்னால முடியும் சுடர்’னு நான் கைப்பிடிச்சி நின்னா… கொஞ்சம் சீக்கிரமா நடக்கும்” என்று இடைவெளி விட்டான்.
திலோ, கண்கள் கலங்க மாறனைப் பார்த்தார்.
“பட் இப்ப என் நிலைமை, என் பதவி, எனக்கு இருக்க பொறுப்பு, என் கடமை, அரசியலவாதிகளுக்கு என்மேல இருக்கிற கோபம்… அதுக்கு விடாதுனு தெரிஞ்சிடுச்சி” என்று இன்றைய நிதர்சனத்தைப் புரிந்து பேசினான்.
ஓர் அமைதி வந்தது. புரிந்து பேசியதை உணர்ந்து பார்த்தான் மாறன். புரிந்து பேசுவதும்… உணர்ந்து பார்ப்பதும்… வேறுவேறு அல்லவா? ஆகையால் பேசிய வார்த்தைகளை உணர்ந்ததும் அது உள்ளத்தில் ஒரு வலியை உண்டாக்கியது.
மகன் நிலை கண்ட திலோவிற்கு கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.
அதே வலியுடன் மாறன், “பக்கத்தில நின்னுதான் தைரியம் சொல்ல முடியாது. அட்லீஸ்ட் தூரமா நின்னாவது சொல்றேனே?! அதுகூட இல்லைனா, நான் லவ் பண்ணதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்” என ஏக்கத்துடன் முடித்தான்.
திலோ ஏங்கி ஏங்கி அழுதார். ஏக்கத்தின் தாக்கத்தில் இருந்தவனுக்கு, முதலில் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின், அம்மா அழுகிறார் என்பதை உணர்ந்து, எழுந்து சென்று தண்ணீர் குடித்தான்.
தண்ணீர் எடுத்து வந்து திலோவிடம் கொடுத்தான். அவர் மறுத்துவிட, “ஏன்மா அழறீங்க?” என்று கண்ணீரைத் துடைத்தவனிடம், “கஷ்டமாயிருக்கு… அப்பா இருந்திருந்தா, இதுமாதிரி பேச்சே வந்திருக்காதுல?” என்று மீண்டும் அழதான் செய்தார்.
“ம்மா! ப்ளீஸ் இப்படி அழாதீங்க”
“தியாகுவ கன்வின்ஸ் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா, இப்போ என்னை நானே கன்வின்ஸ் பண்ண முடியாம இருக்கேன்னே?!” என்று அழுதார்.
“ம்மா!”
“உன்னை மாதிரி என்னால அவங்களைப் பார்க்க முடியலையே. அது ஏன் மாறன்?” என்று கண்களில் கண்ணீருடன், மகனைப் பார்த்துக் கேட்டார்.
“ஏன்னா? நீங்க ‘அப்பாக்கு பிடிக்காது’-ங்கிற இடத்தில இருந்து பார்க்கிறீங்க. ‘எனக்குப் பிடிக்கும்’-ங்கிற இடத்தில இருந்து பார்க்கலை. அதான்”
“அப்போ நான் பண்றது தப்புதான், இல்லையா?” என அழுதவர், “தியாகு நீங்க இப்படி ஒரு சிச்சுவேஷன்ல என்னை விட்டுட்டுப் போயிருக்க கூடாது” என்று கதறினார்.
அவர் தவிப்பை பார்த்தவனுக்கு என்ன செய்யவென தெரியவில்லை!
பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய், “நீங்க பண்றது தப்பில்லை-ம்மா! அப்பாக்கு இப்படி ஒன்னு நடந்திருக்கிறப்ப, உங்களால எனக்காக யோசிக்க முடியாது. யோசிக்கவும் வேண்டாம்” என்றான்.
சிறு சிறு கேவல்களுடன், “அப்ப இதுக்கு என்னதான் முடிவு?” என்று கேட்டார்.
“ம்மா! இப்பவே முடிவெடுக்கணும்னு என்ன அவசியம்? எதுக்கிந்த அவசரம்? கொஞ்சம் டைம் எடுத்துக்குவோமே? எல்லாம் மாறும்” என, காலம் காயத்தை ஆற்றும், அது தன் காதலைப் போற்றும் என்ற நம்பிக்கையில் சொன்னான்.
“உண்மை எப்படி மாறும்?” என்று, காயம் ஆறினாலும்… வடு இருக்குமே என்ற வேதனையில் கேட்டார்.
“மாறாது! அட்லீஸ்ட் மறக்க முடியுமில்லயா?” என, வடு இருக்கலாம் ஆனால், இவ்வளவு வேதனை இருக்காதல்லவா? என்று பொருளில் கேட்டான்.
அதற்கு அவரிடம் பதிலில்லை. அதோடு நிறுத்திக் கொண்டான்.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை எதிர்பாரா நேரத்தில் எதிர்பாரா விதத்தில் தொலைத்தவரிடம், இதற்குமேல் பேசி கஷ்டப்படுத்த அவன் விரும்பவில்லை. மேலும், அவனுக்கும் ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயம் வேறு திலோவிற்கு இருக்கிறது.
எல்லாவற்றயும் யோசித்தவன், ஆழ்ந்த மூச்சை எடுத்து, “மா போதும் அழுதது. வாங்க ஒரு வாக் போகலாம்” என்று சொல்லி, எழுந்து நின்றான்.
எழாமல் இருந்தவரிடம், “ம்மா!” என அழுத்தமாகச் சொன்னவுடன், எழுந்தார். பின் அவரை முகம் கழுவச் சொல்லி… தண்ணீர் குடிக்க வைத்து… சாப்பிடச் சொல்லி… வெளியே அழைத்துச் சென்றான்.
சற்று நேரத்தில்… வீட்டின் சுற்றுவட்டாரத்தில் இருவரும் நடந்தனர். சுற்றுச் சுவர்களின் விளக்கொளியில், அம்மாவும் மகனும் பேசியபடியே நடந்தனர்.
திலோவின் பேச்சு தியாகுவைப் பற்றியே இருந்தது. முயற்சி செய்து பேச்சின் போக்கை மாறன் மாற்றப் பார்த்தான்.
ஆனாலும் முடியவில்லை.
கடந்து போன நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தால் மட்டுமே, அதைக் கடந்து வர முடியும். ஆனால் அதற்கு காலஅவகாசம் தேவை என மாறனுக்குப் புரிந்தது.
அதை அவருக்கு கொடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை எனப் புரிந்தது.
வெகு நேரமாக நடந்த பின்னர், “போதும் மாறன்” என்றதும், இருவரும் உள்ளே வந்தனர். திலோ படுத்ததும், ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அவர் அருகில்தான் இருந்தான்.
அழுது அழுது சிவந்த கண்களை மூடாமல் மகனையே பார்த்தவரிடம், “ம்மா! என்னை கஷ்டப்படுத்தறோமேன்னு நினைச்சி… நீங்க கஷ்டப்படாதீங்க. இப்ப தூங்குங்க” என்றான்.
திலோ எதுவும் சொல்லவில்லை. ஆனால் மெல்ல மெல்ல விழி மூடியவர், சற்று நேரத்தில் உறங்கிவிட்டார். அவர் தூங்கியதும் மெதுவாக எழுந்தான். பின்னர் ஒவ்வொரு அறையிலும் எரியும் விளக்குகளை நிறுத்திவிட்டு, வெளியே வந்து நின்றான்.
அம்மாவின் மகனாக, பதிவிக்குரிய பொறுப்புடன், சூழ்நிலையை புரிந்து, வயதிற்கான பொறுமையுடன், அரசியல் சூழலை அறிந்து பேசிவிட்டான்.
ஆனால் அவனுக்குள்ளும் இளமை துள்ளலுடன் துறுதுறுவென்ற காதல் ஒன்று இருக்கிறதுதானே? அது, அவன் உள்ளத்திலிருந்து வெளியே வந்து… எதிரே நின்று… குறுகுறுவென்று பார்த்தது!
காதலின் அந்தப் பார்வை, ‘என்னை என்ன செய்யப் போகிறாய்?’ என்று, கண்ணீர் விட்டு, மாறனை கேள்வி கேட்பது போல் இருந்தது!
மாறன், உயிர்வலியை உணர்ந்த தருணம் அது!!
அப்படியே உடைந்து போய் வாசற்படியில் அமர்ந்து கொண்டான். சுடருக்கு அழைத்துப் பார்த்தான். இம்முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை.
செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் பெரிய தூரம் ஒன்றுமில்லை. இங்குதான் இருக்கிறது. ஆனால் இன்றைய அவன் நிலைமை வானுக்கும் பூமிக்கும் உள்ள தூரமாகத் தோன்றச் செய்திருந்தது.
ஆனால் அன்று டெல்லியில் அவ்வளவு தூரத்தில் இருக்கும் போதுகூட இப்படித் தோன்றவில்லையே என்றதும், மனம் அந்த நாட்களை நோக்கிச் சென்றது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 14
கல்லூரியை விட்டுச் சென்ற பிறகு, சுடரிடம் எப்படியாவது பேச வேண்டும் என நினைத்தான்.
எனவே சுடரின் சமூக வலைதள முகவரியைத் தேடினான். ஆனால் ‘சுடர்’ என்ற பெயரில் நிறைய முகவரிகள் இருந்தது. அதன் பதிவுகள் அனைத்தும் பகிர்வுகளாகவும், அவளைக் கண்டுபிடிக்கும் வகையில் இல்லாததாலும் தேடித் தேடி ஓய்ந்து போயிருந்தான்.
அன்று ‘சரி வராது’ என்று சொன்னது முட்டாள்தனமான முடிவு என ஒவ்வொரு நொடியும் யோசிக்கும்படி, அவளின் நினைவுகள் அவனை வாட்டி எடுத்தது.
தன் வாழ் நாட்களையும், நாளைகளையும் ஆக்கிரமித்தவளிடம் பேசாமல் இருப்பதால் அவன் இதயதேசம் இருண்ட பகலாக, வறண்ட சோலையாக மாறியது.
நிறைய நாட்கள் கடந்திருந்த நிலையில், டெல்லியில் இருந்த ஆட்சியர் பணி தேர்வுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்திருந்தான்.
ஒரு காலஅட்டவணை போட்டுக் கொண்டு, நேரத்தை வீணடிக்காமல் படித்து வந்தான். அவனது கனவை நோக்கிச் செல்லச் செல்ல காதல் பின்னுக்குத் தள்ளப்பபட்டது. ஆனால் உள்ளுக்குள்தான் இருந்தது.
காதல் ஒரு விசித்திர ஓட்டம்!
நிஜங்கள் எல்லாம் முன்னோக்கி ஓட, நினைவுகள் எல்லாம் பின்னோக்கி ஓட, ஒரே நேரத்தில் நாளை நோக்கியும்… நேற்றை நோக்கியும்… இன்று ஓடப்படும் விசித்திர ஓட்டம்.
யாழோவியம் அத்தியாயம் – 15 தொடர்கிறது…
நினைவிலிருந்து மீண்டவன் சுடருக்கு அழைத்துப் பார்த்தான். இம்முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை.
அவள் தன்னை விட்டுத் தூரமாக போய் கொண்டிருப்பது போல் தோன்றியது. பக்கத்தில் நிறுத்திக் கொள்ள முடியாவிட்டாலும், ஏற்கனவே இருக்கின்ற தூரத்திலாவது இருத்திக் கொள்ள வேண்டுமென ஆசைபட்டான்!
ஆனால் அதற்கே அவளிடம் பெரிய பெரிய பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருக்குமோ என்ற எண்ணத்தில்… நிலவொளியில் நிம்மதியின்றி தவித்தான், யாழோவியத்தின் ஒருபாதியான யாழ்மாறன்!!
