Kathambari Novels
அவர்கள் பேசுவதற்கு முன்பு, சவுரவ் பூஜாவை பார்த்து வெளியே இருக்குமாறு சைகையில் கூற, ‘என்ன செய்ய?’ என்பது போல் அவள் அரவிந்தை பார்த்தாள்.
“வெளிய இரு பூஜா. நான் பேசிட்டு வர்றேன்” என்று அவன் சொன்ன பின்னரே அங்கிருந்து சென்றாள்.
அவள் போனதுமே அவர்கள் மூவருக்குள் பெங்காலியில் பேச்சு ஆரம்பித்தது. ஒரே ஒருமுறை பூஜாவை, அவள் அப்பாவைப் பார்த்துப் பேச அனுமதியுங்கள் என்று அரவிந்த் கேட்டிருந்தான்.
அதற்கு சவுரவ், ‘விசாரணையின் போது எப்படிக் குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்கு அனுமதிக்க முடியும். அது விதிமீறல். நீயும் ஒரு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்தான? நீ விதிமுறையை மீறும் இதுபோன்ற ஒன்றை அனுமதிப்பாயா?’ என்று மறுத்தார்.
அவர் அப்படி ஒரு கேள்வி கேட்டபின் அவனால் எதுவுமே கேட்க முடியவில்லை. அமைதியாக இருந்தான்.
குணால் அவனைப் பார்த்தார். ஏதாவது பேசுவான் என்று நினைத்தார். ஆனால் அவன் பேசுவது போல் தெரியவில்லை என்றதும் அவர் பேச ஆரம்பித்தார்.
“சவுரவ் சார்… ஃபர்ஸ்ட் மர்டர் நடந்த நாள்ல, சேகரன் கார் ரிப்பேர் பண்ண விட்ருந்தாருனு அவர் பொண்ணு சொல்றா. இதுலருந்தே தெளிவா தெரியுது, அவர்மேல பழி வர்ற மாதிரி யாரோ பண்ணிருக்காங்கனு. கொஞ்சம் இத கன்சிடர் பண்ணி… அவளை அவ அப்பாவ பார்க்க விடுங்க” என்றார்.
சவுரவ், “அன்னைக்கு நான் கூப்பிட்டு உனக்குத் தெரிஞ்சதைச் சொல்லுனு கேட்டப்போ, இத ஏன் அவ சொல்லல? அப்போ என்ன அர்த்தம், இப்போ அவ அப்பாவ காப்பாத்த இப்படி சொல்றானுதான?” என்றார்.
“அவ அப்பாமேல இருக்க சந்தேகம் போகணும்னு பூஜா நினைக்கா. ஆனா அதுக்காக பொய் சொல்ற பொண்ணு இல்ல. அன்ட் இதுபத்தி என்கிட்ட சொல்லியிருந்தா” என்றான் அரவிந்த்.
“கேஸ் இந்த ஸ்டேஷன்லதான இருக்கு. அப்போ என்கிட்டதான அவ இத சொல்லிருக்கணும்?” என்றார் சவுரவ்.
அரவிந்த் அமைதியானான்.
குணால், “நீங்க சொல்றது கரெக்ட்தான். ஆனா இந்த கார் விஷயம், நீங்க சேகரன்கிட்ட கேட்டுப் பாருங்களேன்” என்றார்.
“இத அவரே சொல்லிருக்கலாம்… இருந்தாலும் கேட்கிறேன் குணால். ஆனா அதுக்கு அவர் வாயைத் திறந்து பதில் சொல்லணுமே” என்று சற்று இடைவெளிவிட்டவர், “இதுக்கு ரெசிப்ட் எதுவும் இருக்கா?” என்று கேட்டார்.
குணால் அரவிந்தைப் பார்க்க, “வீட்ல பூஜாவை தேட சொல்லிருக்கேன் சார். கிடைச்சதும் உங்ககிட்ட கொண்டுவந்து கொடுத்திடுவா” என்றான்.
“சோ இப்போதைக்கு அவ சொல்றதுக்கு ஆதாரம் இல்ல” என்று மட்டும் சவுரவ் சொன்னார். வேறு எதுவும் சொல்லவில்லை.
மூவரும் பேசாமல் அங்கே அமைதி நிலவியது. அதன்பின் குணால், “சவுரவ் சார்… நாங்க கேட்டது பத்தி…” என்று மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்.
“லாயரா நீங்க வேணா போய் பார்த்துக்கோங்க குணால்”
“அது நான் பார்த்துப்பேன். அதுக்கு இவ்ளோ பேசணும்னு அவசியமில்ல. நான் பேசறது அந்தப் பெண்ணுக்காக. ஒருதடவை அவளை அவ அப்பாவ பார்க்க விடுங்கன்னுதான்”
“கிடைச்சிருக்க ஆதாரம் எல்லாம் அவருக்கு எதிராதான் இருக்கு. அவருக்கு ஆதரவா எதும் கிடைக்கட்டும், நீங்க கேட்டது பத்தி யோசிக்கிறேன். அன்ட் ரூல்ஸ்க்கு அகைன்ஸ்ட்டா என்னய எதுவும் பண்ண சொல்லாதீங்க” என்று படபடவென பேசினார்.
“சவுரவ் சார்… ரூல்ஸ் பார்க்கிறது சரிதான். ஆனா இத அப்படிப் பார்க்காம, சேகரனைப் பேச வைக்க ஒரு முயற்சியா நினைச்சுக்கோங்க. ‘போலீஸ்கிட்ட பேசுங்க’னு அவ அப்பாகிட்ட அந்த பொண்ண சொல்ல சொல்லுங்க.
இல்லனா, உங்களுக்கு இருக்க கேள்வியெல்லாம் அவகிட்ட சொல்லி அனுப்பி, அத அவர்கிட்ட கேட்க சொல்லுங்க” என்று குணால் பொறுமையாக பேசினார்.
சவுரவ் அமைதியாக இருந்தார்.
குணால், “பாவம் சார் அந்தப் பொண்ணு… இப்பதான் கொல்கத்தா வந்திருக்கு. துணைக்கு வேற யாரும் இல்ல. வந்ததும் இப்படினா… எப்படி இருக்கும்னு சொல்லுங்க.
இல்ல நான் இதலாம் பார்க்க மாட்டேன்னு சொன்னீங்கனா, ஓகே சார்… ஓகே.
நான் புரிஞ்சிப்பேன். ஆனா உங்க கேள்விக்குப் பதில் கிடைக்கிறதுக்காவது அந்தப் பொண்ண அவ அப்பாகிட்ட பேச விடுங்க” என்று மிக நிதானமாக குணால் பேசினார்.
சற்று யோசித்து, “விடலாம் குணால்” என்று இறங்கி வந்த சவுரவ், “ஆனா அவ திருப்பி என்கிட்ட வந்து ரூல்ஸ் பேசி ஆர்க்யூ பண்ணுவா. எனக்குத்தான் பிரச்சனை அது. எதுக்கு சொல்லுங்க?” என்றார்.
அடுத்தநொடி அரவிந்த், “நான் கியாரண்டி தர்றேன். பூஜா எதுவும் உங்ககிட்ட பேசமாட்டா சார்” என்றதும், சவுரவ் யோசிக்க, “சார்… ரொம்ப நேரமெல்லாம் வேண்டாம் ஒரு பிஃபிடீன் மினிட்ஸ் விடுங்க” என்றார் குணால்.
இன்னும் யோசித்துவிட்டு சவுரவ், “ஓகே, ஜஸ்ட் டென் மினிட்ஸ்” என்றவர், சில கேள்விகளை அரவிந்திடம் சொல்லி, “அவளை இத கேட்க சொல்லு” என்றார்.
குணாலும் அரவிந்தும் நன்றி தெரிவித்தனர்.
வெளியே வந்த அரவிந்த், “உன் அப்பாவைப் பார்த்து… பேச, சவுரவ் சார் டென் மினிட்ஸ் உனக்கு பர்மிஷன் கொடுத்திருக்காரு” என்றதும், “தேங்க்ஸ்! தேங்க் யூ ஸோ மச்” என்று கண்கள் கலங்க நன்றி தெரிவித்தாள்.
“ரொம்ப எக்ஸைட் ஆகாத. போய் அழுதுக்கிட்டு இருந்து இந்த சான்ஸ வேஸ்ட் பண்ணிடாத. அழணும்னா அப்புறமா என்கிட்ட சொல்லி அழுதுக்கோ. எங்களுக்கு சில கேள்வி இருக்கு. அதை நீ உன் அப்பாகிட்ட கேட்கணும்”
“நீங்களே கேட்கலாமே… நான் ஏன்?” என்று சந்தேகமாக கேட்க, “சவுரவ் சார் கேட்டாரு. ஆனா உன் அப்பாதான் பேசவே இல்லையே?!” என்றான்.
“அப்ப இந்த கேள்வியெல்லாம் கேட்கிறதுக்குத்தான்… என்னை என் அப்பாவ பார்க்க விடறீங்களா?” என்று சரியாக கணித்து கேட்கையில் அரவிந்திற்கு அலைபேசி அழைப்பு வந்தது.
தொடுதிரையைப் பார்த்தபடி, “நீ இந்த மாதிரி ரூல்ஸ் பேசுவனுதான்… சவுரவ் சார் முதல ஒத்துக்கல. குணால் பேசி ஒத்துக்க வச்சிருக்காரு. ஸோ இப்படிக் கேள்வி கேட்காத” என்று அழைப்பை ஏற்றான்.
சில வினாடிகள் பெங்காலியில் பேசிவிட்டு அவளைப் பார்த்தவனிடம், “என்ன டென்ஷனா இருக்கீங்க?” என்று கேட்க, “என் கண்ட்ரோல்லயும் ஒரு ஸ்டேஷன் இருக்கு… அங்கயும் கம்ப்ளைன்ட்ஸ் வரும். அதையும் நான் பார்க்கணும். அது உனக்கு தெரியுமா… தெரியாதா?” என்றான்.
தான் பேச்சிற்கான கோபமென புரிந்ததும், “கேள்வி என்னென்னு சொல்லுங்க. கேட்கிறேன்” என்றதும், “கொலை செய்யப்பட்டவங்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு ஐடி எம்பிளாய் பிரணாப் வீட்டுக்குப் போனாரு? கார் எங்க ரிப்பேர் பார்த்தாரு?” என்று நிறுத்தினான்.
“நானும் ரெசிபிட் தேடினேன். ஆனா பாருங்க எல்லாம் பெங்காலியில இருக்கு. கண்டுபிடிக்க முடியலை”
“முதலயே இப்படினு சொல்லிருக்கலாம். நான் வந்து தேடித் தந்திருப்பேனே? சரி ஈவினிங் வந்து பார்க்கிறேன்” என்றவன், மேலும் சில கேள்விகள் சொல்ல, ஒரு காவலர் வந்து பெங்காலியில் ஏதோ சொல்லிச் சென்றார்.
“என்ன சொன்னாங்க?” என்று கேட்கவும், “உன்னை உள்ள போக சொல்றாங்க. கேள்வி எதையும் மறந்திடாத” என்று அவளை அனுப்பினான்.
காவல்நிலைய முன்னறையைத் தாண்டி வந்தவளிடம் ஒரு காவலர் லாக் அப் அறைகள் இருக்கும் பக்கத்தைக் காட்ட மெல்ல நடந்து அங்கே சென்றாள்.
லாக்அப் எண் இரண்டின் முன் வந்தவள் அறையினுள் திண்டில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்ததும் கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாம் மறந்து போய் கண்ணீர் துளிகள் மளமளவென கீழிறங்க, “ப்பா” என்றாள்.
“பூஜா” என்று விரைந்து மகளருகே வந்தவர், “நீ ஏன் இங்க வந்த?” என்றுதான் கேட்டார்.
அவள் பதில் சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை. அழுதபடி இருந்தவள் கம்பியைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்துவிட்டாள்.
அவரும் உட்கார்ந்து கொண்டு, “பூஜா அழக்கூடாது. ஒன்னுமில்லமா. எல்லாம் சரியாயிடும்” என்று ஆறுதல் சொன்னார்.
கண்ணீரைத் துடைத் துவிட்டு, “ப்பா… எப்படிச் சரியாகும்? நீங்க பேசினாதான் சரியாகும். ஏன்… ப்பா பேச மாட்டிக்கிறீங்க?” என்று கோபப்படவும், “போலீஸ் இதை என்கிட்ட கேட்க சொன்னாங்களா?” என்று கேட்டார்.
அவள் அழுது கொண்டே இருந்தாள்.
“அப்பா இப்படிச் செய்றது சரியா… தப்பானு தெரியல பூஜா. ஆனா அப்பா இப்படித்தான் இருக்கணும்” என்று கம்பி வழியே மகளின் கண்ணீரைத் துடைத்துவிட்டார்.
“இல்லை ப்பா… என்ன பிரச்சனைனு சொல்லுங்க? என்னால என்னென்னு தெரிஞ்சிக்க முடியல. ப்ளீஸ் ப்பா” என்று அழுதாள்.
“பூஜா, இதைக் கண்டுபிடிக்க போலீஸ் இருக்காங்க. நீ எதும் தெரிஞ்சிக்க வேண்டாம்” என்றார் தெளிவாக.
“யார்மேல தப்புனு சொல்லுங்களேன் ப்பா… இல்லனா என்ன தப்புனாவது சொல்லுங்களேன்” என்று கெஞ்சினாள்.
“அத போலீஸ் பார்த்துப்பாங்க. எனக்கு அவங்கமேல நம்பிக்கை இருக்கு” என்றார்.
எதையெதையோ யோசித்தவர், “பூஜா, என்னடா அப்பா இப்படிப் பேசறாரேனு நினைக்காதமா. என்ன தப்பு… அது எங்க நடக்குதுனு நாங்க கண்டுபிடிக்க போய் இப்படியொரு நிலைமை அப்பாக்கு வந்திருக்கு… நீயும் இப்படி தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற.
அநியாயமா… மூணு உயிர் போயிருக்கு பூஜா. இனிமே ஒரு உயிரும் இதுக்காக போக கூடாது. அதான் உன்கிட்ட சொல்றேன் போலீஸ் பார்த்துப்பாங்க. என்ன தப்புனு அவங்க கண்டுபிடிப்பாங்க.
நீ எதுலயுமே இன்வால்வ் ஆகாத பூஜா. அப்புறமா தப்பு செஞ்சவங்க உன்மேல கோபத்தை வளத்துக்கிட்டு உன்னயும் டார்கெட் பண்ணுவாங்க. உன்னோட எதிர்காலம் என்னாகும்னு யோசிச்சுப்பாரு” என்றார்.
அவர் அவ்வளவு பேசின பின்னரும், “என்ன சொல்றீங்கனு புரியல ப்பா” என்று பூஜா அழுது கொண்டே இருந்தாள்.
சேகரனுக்கு கண்கள் கலங்குவது போல் இருந்தது. ‘எப்படி மகளை தேற்ற?’ என்று தெரியாமல் அவரும் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார்.
தன்னை தைரியப்படுத்திக் கொண்டவர், “அப்பா உன்கூட இருந்ததேயில்லை. அப்பாக்கு உன்கூட இருக்கணும்னு அப்படி ஒரு ஆசை. இப்போயில்ல. எப்பவும் உண்டு பூஜா” என்றார்.
“எனக்கும்தான்… முன்ன இல்லை. இப்பதான் ப்பா” என்று சிறுபிள்ளையாய் கண்ணீர் வடித்தாள்.
“அழாதடா. அது நிச்சயம் நடக்கும். எல்லாம் சரியாயிடும். நம்ம நம்பிக்கையா இருப்போம் சரியா? நீ அழாத” என்று அவளைத் தேற்றினார் “அப்புறம் பூஜா, எதாவது பண்ணி உனக்குப் பிரச்சனை இழுத்து வச்சிக்காத. சரியா? பேசாம நீ தமிழ்நாடு போயிடு”
“நீங்க இப்படி இருக்கிறப்ப… எப்படிப்பா போவேன்னு நினைக்கிறீங்க?” என்று அழுதுகொண்டே கோபப்பட்டாள்.
“சரிம்மா போக வேண்டாம். ஆனா வெளிய போறப்பவும் வர்றப்பவும் கவனமா இருக்கணும்” என்றார் அறிவுரை சொல்வது போல். “சாப்பிடறியா?” – மகள் மெலிவை, சோர்வைப் பார்த்துக் கேட்டார்.
“நீங்க?” என்று பதில் சொல்லாமல் கேட்டுவிட்டு, “ப்பா… இங்க சாப்பாடு கொடுப்பாங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம்” என்றார்.
அதற்குள் காவலர் ஒருவர் வரவும், “அப்பாவை வெளிய கொண்டு வரணும்னு போலீஸ் ஸ்டேஷன், லாயர்னு தனியா அலைஞ்சிகிட்டு இருக்கியோ?” என்று சவுரவ் சொன்னதை ஞாபகம் வைத்துக் கேட்டார்.
“தனியா அலையலைப்பா… அரவிந்த் இருக்காங்கல… அவங்கதான் ஹெல்ப் பண்றாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. ப்ச், நீங்க சொல்றப்ப நான்தான் புரிஞ்சிக்கல” என்றாள்.
சேகரன் மகளின் முகத்தைப் பார்த்தார். அவளும் அப்பாவைப் பார்த்தாள்.
அதற்குமேல் இருவரும் அதைப் பற்றிப் பேசவில்லை!
அக்கணம் வந்த காவலர் பூஜாவை அழைக்கவும், “சரி கிளம்பு. இன்ஸ்பெக்டர் போக சொல்றாரு போல” என்றார் சேகரன்.
“இன்னும் ஒரு ஐஞ்சு நிமிஷம் கொடுக்க சொல்லுங்களேன்” என்றாள்.
எழுந்து கொண்டவர், “விடமாட்டாங்க… நீ கிளம்புமா… அப்பா வந்திடுவேன். நீ அழாம தைரியமா இருக்கணும் பூஜா… நேரத்துக்கு சாப்பிடணும். ம், கவனமா இருக்கணும்” என்று ஒவ்வொன்றாய் ஞாபகப்படுத்திச் சொன்னார்.
“ம்ம்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.
எழுந்தவள் கண்ணீர் வர, ‘போறேன்…’ என்பது போல் தலையசைக்க, அவரும் தலையசைத்துக் கொண்டார். அப்பாவை திரும்பிப் பார்த்தபடியே போனவள் முன்னறையைக் கடந்து வெளியே நிற்கும் அரவிந்த் அருகில் சென்றாள்.
அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, வந்தவள் அமைதியாக இருந்து கொண்டாள். அவள் வந்ததை பார்த்தாலும் முழுவதும் பேசி முடித்தவன், “அமி ஆதா ஹோண்ட்டே மோதே சீகேனே ஆஸ்ஹா” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
பின் பூஜாவைப் பார்த்து, “வா, உள்ள போகலாம்” என்றதும், இருவரும் சவுரவ் அறைக்குச் சென்றனர்.
சவுரவும் குணாலும் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் வந்ததுமே அவர்கள் பேச்சை நிறுத்த, “என்ன சொன்னாரு பூஜா?” என்று அரவிந்த் ஆங்கிலத்தில் ஆரம்பித்தான்.
“அப்பாவை இப்படிப் பார்க்க கஷ்டமா இருக்குது அரவிந்த்… எனக்கு ஃபர்ஸ்ட் பேச்சே வரலை” என்று தமிழில் தொடங்க, “ப்ச்… நான் என்ன கேட்கிறேன். நீ என்ன சொல்ற பூஜா?” என்று அவனும் சட்டென தமிழில் கேட்டுவிட்டான்.
“என்ன பேசிக்கிறீங்க ரெண்டு பேரும்?” என்றார் சவுரவ்.
“சாரி சார்” என்று அவர்கள் பேசியதை அவருக்குச் சொல்லிவிட்டு, “என்னதான் உன் அப்பா சொன்னாரு?” என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
“நான் தேவையில்லாம இதுல இன்வால்வ் ஆக வேண்டாம்… ப்ராபளம் வரும். போலீஸ் இருக்காங்க. அவங்க பார்ப்பாங்கனு அப்பா சொல்றாங்க. அப்பா தெளிவா இருக்காங்க அரவிந்த். நான்தான் குழம்பிட்டேன்” என்றாள்.
பூஜா சொன்னதை அவள் இடத்தில் இருந்து பார்த்தால் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் காவலர்கள் இடத்திலிருந்து கேட்ட இருவருக்குமே, இதை அப்படி எடுத்துக் கொள்ள இயலவில்லை.
மூன்று உயிர்கள் போயிருக்கிறது. அப்படியிருக்கையில், ‘இது என்ன மாதிரி பேச்சு?’ என்று அவர்களுக்கு அப்படியொரு கோபம் வந்தது.
அதிலும் சவுரவ், “சரியான சுயநலம் பிடிச்ச ஆளு… ” என்று வெளிப்படுத்தவும் செய்ய, “ப்ளீஸ் சார்… இப்படி நீங்க பேச வேண்டாமே” என்று அரவிந்த் அவரை சமாதானப்படுத்தினான்.
அதீத கோபம் இருந்தாலும்… அவர் அமைதியாக இருந்தார்.
ஆனால் பூஜாவிற்கு, தன் அப்பாவைச் சொன்னதால் வந்த கோபத்தில், “யாரு சுயநலம் பிடிச்சவங்க. நீங்களா… என் அப்பாவா? உங்களால விசாரணையில என் அப்பாவ பேச வைக்க முடியலனதும்… அவரைப் பார்க்க என்னய அலோவ் பண்ற மாதிரி பண்ணி… அவரைப் பேச வைக்க பார்த்தீங்க… அப்போ யாரு செல்பிஷ்… நீங்கதான?” என்றாள்.
குணால், ‘என்ன இங்கே நடக்கிறது? ஏன் இவர்கள் எதையெதையோ பேசிக் கொள்கிறார்கள்?’ என்று புரியாமல் இருந்தார்.
‘சவுரவ்கிட்ட எவ்ளோ பேசி, கெஞ்சி அவ அப்பாவ பார்க்க வச்சா இப்படிப் பேசறாளே?’ என்று அரவிந்திற்கு கோபம். “ப்ச் கூட கூட பேசாத பூஜா. கொஞ்ச நேரம் பேசாம இரு” என்றான்.
ஆனால் அவன் பேசி முடிப்பதற்குள், “பாரு… எப்படிப் பேசறானு? முதலயே பார்க்க விடமாட்டேன்னு சொன்னேன்ல. நீதான விடுங்கனு சொன்ன… இப்போ எப்படி பேசிக்கிட்டு இருக்கானு பாரு” என்று இருந்த கோபத்தை எல்லாம் சவுரவ் அரவிந்த் மேல் காட்டினார்.
‘எதற்காக இப்படி இன்னொருவரிடம்… இன்னொரு காவல் நிலையத்தில் வந்து பேச்சு கேட்க வேண்டுமென எண்ணம் அரவிந்திற்கு வந்திருந்தாலும், “பூஜா, நீ தேவையில்லாம பேசாத. பேசறப்ப நல்லா யோசிச்சி… சரியா பேசு” என்று எச்சரித்தான்.
“நான் சரியாதான் பேசறேன் அரவிந்த். போலீஸ்தான் சரியா பேசல” என்று சவுரவைப் பார்த்துச் சொன்னாள்.
பேச்சு வேறு திசையில் போனதால், “நான் கிளம்பறேன்” என்று குணால் எழுந்து சென்றுவிட்டார்.
சவுரவ் பூஜாவைக் கோபமாக பார்த்தார். அவளுமே அப்டித்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரு வார்த்தை பேசாமல் இருந்தனர்!
ஆனால் அரவிந்த், ‘போலீஸ்’ என்று பூஜா பொதுவாக பேசியதால், “உன் மாமா ஒரு போலீஸ். அவர் மேல உனக்கு நல்லெண்ணம் இல்ல. அத ஒவ்வொரு தடவை எங்ககூட பேசறப்பவும் ப்ரூவ் பண்ற” என்று கோபப்பட்டான்.
சட்டென பார்வை மாற, “அப்படியில்ல… நான் இவரத்தான் சொன்னேன்” என்று சவுரவைக் காட்ட,
“எதுக்கு பிரிச்சிப் பேசற?! நானும் அவனும் ஒன்னுதான். போலீஸ் கேட்டகரி” என்றார் அவர்.
உடனே பூஜா அரவிந்தைப் பார்த்தாள். சவுரவ் சொல்வதை ஒத்துக் கொள்வது போன்று அமைதியாக அவன் இருந்தான்.
‘ஐயோ இவனைக் கோபப்படுத்துவது போல் பேசிவிட்டோமோ?’ என்று நொந்து கொண்டாள். மேலும் இனி இப்படிப் பேசக்கூடாது… பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தாள்.
அந்த நேரத்தில், “நீ சொல்லு அரவிந்த். இந்தப் பொண்ணு மாமா பத்தி” என்று சவுரவ் கேட்க, அவர் லஞ்சம் வாங்கியதைப் பற்றி சொன்னான்.
“ஓகோ! ஏற்கனவே குடும்பத்தில ஒருத்தர் தப்பு பண்ணிருக்காரு. ஸோ இவ அப்பாவும் தப்பு பண்றதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு” என்றார் சவுரவ்.
இதைக் கேட்ட பூஜாவால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அப்பாவைத் தவறாக சொல்கிறார் என்ற கோபத்தில், “ஓ! அப்படி சொல்றீங்களா? என் மாமா ஒரு போலீஸ். நீங்களும் போலீஸ்! அவர் லஞ்சம் வாங்கிறாரு. ஸோ நீங்களும் அப்படித்தானு நான் சொல்லவா?” என்று காட்டமாக கேட்டாள்.
அதைக் கேட்ட அடுத்த கணமே அரவிந்த், “அப்படி சொல்லித்தான என்னை வேண்டாம்னு சொன்ன பூஜா?” என்று தமிழில் கேட்டான்.
ஓரிரு நொடிகள் என்ன பேசவென்றே தெரியாமல் நின்றவள், “அரவிந்த்… இப்ப அ… அது எதுக்கு?!” என்று தமிழில் தடுமாறினாள். பின், “இப்போ அப்படிச் சொல்ல மாட்டேன்” என்றாள் தன்னை அறியாமல்.
அரவிந்த் அதைக் கவனித்தானா… இல்லையா என்றே தெரியவில்லை. நேரே சவுரவைப் பார்த்தபடி நின்று, “சார், போலீஸா எனக்கு தெரிஞ்ச உண்மையை உங்ககிட்ட சொல்லிடறேன். இது உங்க ஸ்டேஷன். அதுல இருக்கு ஒரு கேஸ்! என்ன வேணாலும் பண்ணிக்கோங்க” என்றான்.
“ஏன் இப்படிப் பேசறீங்க?” என்று பூஜா கேட்பதை அவன் கவனிக்கவில்லை.
“என்ன உண்மை… சொல்லு” என்றார் சவுரவ்.
‘என்ன சொல்ல போகிறான்?’ என்று பூஜா பதைப்புடன் பார்த்தாள்.
“கிரைம் சஸ்பெக்ட் சேகரன்… அவரோட மொபைல் கால் ஹிஸ்டரியை டெலீட் பண்ணி வச்சிருக்காரு. கொலை செய்யப்பட்ட நிர்மல், பிரணாப்கிட்ட… அவர் பேசிக்கிட்டு இருந்திருக்காரு. என்ன பேசினாருனு தெரியலை… ஆனா அதை மறைக்க நினைச்சிருக்காரு.
அன்ட் கிரைம் என்னென்னு அவருக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. ஆனா அதயும் மறைக்கிறாரு. பேசாம ஹைடிங் தி அபன்ஸ்னு அவர்மேல ஒரு கம்ப்ளைன்ட் போட்ருங்க சார்… தன்னால வழிக்கு வருவாரு” என்றான்.
அவரோ, “இது என் ஸ்டேஷன். இங்க நான் என்ன பண்ணனும்னு நீ சொல்ல அவசியமில்லை” என்றார்.
அரவிந்திற்கு ஒருமாதிரி ஆயிற்று.
அரவிந்த் பேச்சை கேட்க கேட்க… உதவுகிறேன் என்று கூடவே இருந்துவிட்டு இன்று இப்படிப் பேசுகிறானே என எழுந்த கோபத்தில் பூஜா, “ஏய்!” என்று கை உயர்த்தியவள், “என் அப்பா எந்தவொரு தப்பும் பண்ணல. பண்ணிருக்கவும் மாட்டாரு… சும்மா உன் இஷ்டத்துக்குப் பேசாத” என்று கத்தினாள்.
அவள் உயர்த்திய கையைப் பார்த்த அரவிந்த், “இவ்ளோ நாள் உனக்கு நான் ஹெல்ப் பண்ணதுக்கு நல்ல மரியாதை கொடுத்திட்ட… இனி ஹெல்ப் கேட்டு என் முன்னாடி வந்து நின்னுடாத!” என்று கடுங்கோபத்துடன் சொல்லிப் போய்விட்டான்.
அரவிந்த் பேச பேச பூஜாவின் மனமும், விழியும் கலங்க ஆரம்பித்திருந்தது! அவன் பேசி முடித்து போனதும் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர் தரதரவென கீழிறங்கியது!!
