Kathambari Novels
அத்தியாயம் – 16
ராஜா வீடு!
மூவரும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். லதா, சுடர் இருவரையும் வற்புறுத்திச் சாப்பிட வைத்திருந்தான். அதன்பின் கட்சி ஆட்கள் வந்ததால், அவர்களிடம் பேச சென்றிருந்தான்.
அவன் போனதும், சுடரிடம் பேசிவிட்டு லதா தூங்க சென்றிருந்தார். தனியாக சுடர் வரவேற்பறையில் மட்டும்தான் இருந்தாள். அங்கிருந்த டிவியில் லிங்கம் கைது செய்யப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்க்க பார்க்க ஒருமாதிரி இருந்தது. உடனே டிவியை ஆஃப் செய்துவிட்டாள்.
மாறன் அடிக்கடி அழைத்துக் கொண்டிருந்தால், அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, சோஃபாவில் படுத்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
*************
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பங்களா!
வீட்டின் வாசற்படியில் அமர்ந்திருந்தான். சுடரிடமிருந்து வந்த ‘கொஞ்ச நேரம் கழிச்சி பேசறேன்’ என்ற குறுஞ்செய்தியை மீண்டுமொருமுறை பார்த்தான்.
அவளிடம் பேசாமல் தூங்கவே முடியாது என்ற மனநிலையில் இருந்தவனுக்கு, இன்று எப்படியும் பேசிவிடுவாள் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால் இத்தனை நாட்களாக பேசாமலிருந்துவிட்டு, இன்று பேசலாம் என்பவள், ‘என்ன பேசப் போகிறாளோ?’ என்று ஒருவித அழுத்தமான மனநிலையில் இருந்தான்.
அந்த மனநிலை… முன்னொரு நாளில் அவளைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலுடனும் பார்த்தாலும் பேசுவாளா? என்ற அச்சத்துடனும் காத்திருந்த நாளிற்கு அவனை அழைத்துச் சென்றது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 15
ஜார்கண்ட்!
ப்ரீலிம்ஸ் முடித்திருந்தான். அந்தச் சமயத்தில், ‘அடுத்த வாரம் நம்ம கிளாஸ் ஸ்டுடென்ட்ஸ் மீட் இருக்கு. ரீசன் எதுவும் சொல்லாம வந்திடு மாறன்’ என்று ஆஷிக்கிடமிருந்து அழைப்பு வந்தது.
தமிழ்நாடு செல்லக் காரணம் தேடிக் கொண்டிருந்தவன், இதையே சொல்லி, பெற்றோரிடம் அனுமதி வாங்கியிருந்தான். வாரநாட்களில்தான் நண்பர்கள் சந்திப்பு என்பதால் நிச்சயம் சுடரைப் பார்த்துவிடலாம் என்று நம்பினான்.
ஆனால், பார்த்தால் பேசுவாளா? என்ன பேசுவாள்? முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது வேண்டுமென்று சொன்னால் எப்படி எதிர்வினை புரிவாள்? என்றெல்லாம் எண்ணி, அவளைப் பார்க்கும் நாளிற்காகக் காத்துக் கிடந்தான்.
யாழோவியம் அத்தியாயம் – 16 தொடர்கிறது…
இதோ இன்றும் கையிலிருந்த கைப்பேசியைக் கீழே வைக்காமல், அவளுடன் பேசும் நாழிகைக்காக காத்துக் கிடக்கிறான்.
************
ராஜா வீடு!
ராஜா திரும்ப வரும்போது, சுடர் சோஃபாவில் படுத்திருந்தாள். ‘தூங்கிட்டா’ என்று நினைத்தவன் அறைக்குள் வருகையில், தூங்காமல் லதா திவானில் அமர்ந்திருந்தார். அவர் பார்வை டிவியிலே நிலைத்திருந்தது.
அன்றைய முக்கிய செய்தி லிங்கத்தின் கைது என்பதால், அவர் முகம்தான் அனைத்து ஊடகங்களிலும் தெரிந்தது. மேலும் அவர் குற்றத்தைப் பற்றியத் தொகுப்புகள் வேறு!
கணவரின் பேச்சுகளும், செயல்களும், எத்தனை உயிரைப் பறித்திருக்கிறார் என்ற உண்மையும் அவரை வெகுவாகத் தாக்கியது.
வாழ்க்கை இப்படியாகும் என கற்பனைகூட செய்து பார்த்ததில்லை என்பதை அவர் முகத்தின் வேதனை பறைசாற்றியது. கணவர் கைது செய்யப்படும் காட்சிகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
உள்ளே வந்த ராஜா டிவியை பார்த்துவிட்டு, ‘இதை ஏன் பார்க்கிறீங்க?’ என்பது போல் டிவியை ஆஃப் செய்து, அவரருகில் வந்தமர்ந்தான். மெல்ல, “தூக்கம் வரலையா ம்மா?” என்று கேட்டான்.
‘வரவில்லை’ என்று தலையசைத்தார்.
அதன்பின் ஓர் அமைதி நிலவியதில் சுடரை வீட்டில் விட வருகையில், தனக்கு சமைத்து வைத்திருந்தது… வேலையாட்களை மறுத்துவிட்டு, தனக்காக காஃபி போட்டது, ஜூஸை கையில் கொடுத்துவிட்டு, தன் முகம் பார்த்துக் கொண்டே நின்றது… கையிலிருந்த சிறு காயங்களுக்கு மருந்திட்டது…
இப்படி தன்னால் அவர் மனம் காயப்பட்டிருக்கும் தருணங்களை நினைத்துப் பார்த்தான். என்னதான் காரணம் சொன்னாலும் பேசாமல் இருந்ததற்கு வருந்தியிருப்பார் என்று தெரியும்.
ஏதாவது கேட்பார், அப்படிக் கேட்டால், ‘இது இதுனால், இது இப்படி’ என்று ஆறுதலாகப் பதில்கள் சொல்ல வேண்டுமென நினைத்துக் கொண்டான்.
ஆனால் அவ்வளவு நேரம் ஆகிய பின்னும் லதா எதும் கேட்கவில்லை. மேலும் சற்றுநேரம் அமைதியாக இருந்தவன், அவர் எதுவுமே கேட்கப் போவதில்லை என்று புரிந்ததும், நடந்தவைகளைப் பற்றிய பேச்சை அவனே ஆரம்பித்தான்.
“ம்மா! ஏற்கனவே சொன்னதுதான். பேசினா எல்லாத்தையும் சொல்வேன். அது உங்களுக்குத்தான் ஆபத்து. அதான் அப்படி இருந்தேன்” என்றான்.
மேலும், “இன்னொன்னு உங்ககிட்ட எல்லாம் சொல்லி அழுதா, நான் பலவீனம் ஆயிடுவேன். அப்புறம் என்னால யோசிச்சி எதையும் செய்ய முடியாது” என்று, வழக்கிற்காக அவனின் திட்டமிடலைச் சொன்னான்.
லதா அவன் முகத்தைப் பார்த்து, “உனக்கெதுக்கு இந்த வேலை. இதெல்லாம் யார் பார்க்கணுமோ அவங்க பார்க்கட்டும். நீ கட்சி வேலை மட்டும் பாரேன் ராஜா” என்று கோரிக்கை வைத்தார்.
கூடவே, “சுடர் அப்பாக்கு உன்மேல இருக்கிற கோபத்தை நினைச்சா, பயமா இருக்கு. அதான் இப்படிக் கேட்கிறேன்” என வெளிப்படையாக சொன்னார்.
அவரின் பாசம், பாசத்தினால் வந்த பயம் இரண்டும் புரிந்தது. “கண்ணு முன்னாடி தப்பு நடக்கிறப்ப எப்படி விட்டிட்டுப் போக முடியும்? தட்டிக் கேட்க வேண்டாமா?” என்று கேட்டு, அவன் குணத்தைக் காட்டினான்.
முறைகேடு வழக்குப் பற்றி லதாவிற்கு முழுதாக தெரியாவிடிலும், இதற்காக செயல்பட்டவர்கள் பங்களிப்பை பாராட்டி வரும் செய்திகளை, பார்க்கத்தான் செய்கிறார்.
ராஜா சொன்னதை வைத்து, இதில் அவன் பங்களிப்பும் இருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் அது வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. பாராட்டும் கிடைக்கப் போவதில்லை.
அதை அறிந்தும் இவ்வளவு தூரம் செயல்பட்டிருக்கிறான் என்ற அவன் குணம், அவர் வேதனையைக் குறைத்தது. அது அவர் முகத்திலும் தெரிந்தது.
அதைக் கண்டவன், “என்ன ம்மா?” என்று கேட்டான். முதலில், “ஒன்னுமில்லை” என்றார். பின், “கவனமா இருக்கணும்” என்றார்.
‘சரி’ என்று தலையாட்டி, “சுடருக்கு என்னாச்சு? வீட்லயே ஒருமாதிரி இருந்தா?” என்று கேட்கையில், சகஜமாக இருவருக்கும் இடையே பேச்சு தொடங்கியது.
அவன் வருவதற்குமுன் லிங்கம் நடந்து கொண்டது அனைத்தையும் கொட்டித் தீர்த்தார். கூடவே மாறன் குடும்பம் பற்றி கேட்டறிந்தார்.
“சுடர் விஷயமா, அவ அப்பா அவர் முடிவை சொல்லிட்டாரு. நானும் யோசிச்சு பார்த்தேன். எனக்கென்னமோ இது சரியா வராதுன்னு தோணுது” என்று, தன் முடிவைச் சொன்னார்.
“ஏன் ம்மா இப்படிச் சொல்றீங்க?”
“அந்த பையனோட அப்பா இல்லாததுக்கு காரணம் சுடர் அப்பாதான்! அப்படி இருக்கிறப்ப, அந்த வீட்ல போய் இவ வாழ முடியுமா?”
“மா அந்தப் பையன் இப்படி யோசிக்கிறவன் இல்ல” என்று ராஜா தொடங்கும் போதே, “நான் அந்தப் பையனை சொல்லல. பொதுவா சொல்றேன்” என்றார்.
மேலும், “கல்யாணம் முடிஞ்சப்புறம் அந்த பையனோட சொந்தக்காரங்க, கூட வேலை பார்க்கிறவங்க இப்படி யோசிச்சா பேசினா நம்ம சுடர் தாங்குவாளா? அவளுக்கு எப்படி இருக்கும்? அந்த வலி அவளுக்கு வேண்டாமே?!” என்று ஒரு அம்மவாக யோசித்துப் பேசினார்.
ராஜா எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தான்.
“அதோட இன்னொரு பயமும் இருக்கு” என்றார்.
“என்ன பயம்?” என்றான்.
“இந்தக் கல்யாணம் நடந்தா, ‘அந்தப் பையனோட அப்பாக்கு நடந்ததுதான் அவனுக்கும்’-ன்னு சுடர் அப்பா சொல்றாரு. அப்புறம் எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?
சரி இவர்தான் வெளிய இல்லயேனு கல்யாணத்தை நடத்தினாலும், விஷயம் தெரிஞ்சி… கோபத்தில அந்தப் பையனை ஏதாவது செஞ்சிட்டா?
வேற இடத்திலருந்து வந்திருக்காங்கனு சொல்ற. அந்தம்மா அங்கருந்து இங்க வந்து வீட்டுக்காரரை இழந்திட்டு நிக்கிறாங்க. பையனுக்கும் எதும் ஆச்சுனா, அவங்க தனியால நிக்கணும்? அது பாவமில்லையா?
உன்மேல, அந்தப் பையன் மேல இருக்க கோபம், இந்த ஜென்மத்தில போகவே போகாதுனு சொல்றாரு… அதுக்கப்புறமும் நாம சுடருக்காக மட்டும் யோசிக்க கூடாது. அந்தப் பையனுக்காகவும் யோசிக்கணுமில்லையா?
உனக்கு ஒன்னுன்னா எனக்கு எப்படிக் கஷ்டமாயிருக்கும்??! அதேமாதிரிதான அந்த பையனோட அம்மாக்கும் இருக்கும்.
அதான் ராஜா, இது வேண்டாம்-னு சொல்றேன். சுடர்கிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவோம்” என்று ஒரு சக மனுஷியாகவும் முடிவெடுத்தார்.
லிங்கத்தின் எச்சரிக்கைகள், அவர் மீதிருக்கும் கொலை குற்றச் சாற்றுக்கள், அவரது கோபங்கள் எல்லாம் சேர்ந்து லதாவை இப்படித்தான் பேச வைத்தது. இவ்வளவுதான் யோசிக்க வைத்தது.
அவர் பேசி முடிக்கும் வரை ராஜா குறுக்கிடவேயில்லை. கடைசியில், “முதல அவ வேலை பார்க்கட்டும். படிச்சிட்டு சும்மாவே இருக்கா…” என்று சொல்லி ராஜாவைப் பார்க்கும் பொழுது, அவன் கண்கள் கலங்கியிருந்தன.
பதறிப்போய், ‘ஏன்? என்னாச்சு?’ என்ற கேள்வி வந்தது. லதா அதைக் கேட்க நினைக்கையில், அவன் கலக்கம் எதற்கு என்று புரிந்துவிட்டது. அதெப்படி அவருக்குப் புரியாமல் போகும்? அவன் பேசாமல் இருந்த போது, ‘எதையோ மறைக்கிறான்?’ என்று புரிந்தவற்கு… இது எப்படி புரியாமல் போகும்?
புரிந்துவிட்டது. தன் பேச்சிலிருந்த சில வார்த்தைகள்… அவனுக்கு, அவனது இழப்புகளை நினைவு படுத்தியிருக்கும் என தெளிவாகப் புரிந்துவிட்டது.
அந்த விபத்திற்குப் பின், அவன் அழவேயில்லை. அப்படிச் சொல்ல முடியாது. அவன் அழுதிற்கலாம். ஆனால் அவன் அழுது அவர் பார்த்ததில்லை.
இப்போது ராஜாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீரின் அளவு கூடிக் கொண்டே போனது.
அவனது இழப்பிற்காக வருந்தப் போகிறான் என்று தெரிந்தது. உடனே, அவன் அழுதால் தன்னால் தாங்க முடியுமா? என்ற கேள்வி வந்தது. நிச்சயம் தாங்க முடியாதுதான்.
ஆனால் அடுத்த நொடியே அந்தக் கேள்வியைத் தூக்கிப் போட்டார். காரணம்? தன்னைத்தவிர வேறு யாரிடமும் அவன் வேதனைகளைச் சொல்லமாட்டான். சொல்லி அழமாட்டான்.
தன்னிடம் மட்டும்தான் அதையெல்லாம் பகிர்ந்து கொள்வான்!
எனவே, ‘திடமாக இருந்து, அவனுக்கு தைரியம் சொல்லணும்’ என மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். அவனை, ‘எப்படித் தேற்ற?’ என்று ஆறுதல் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கையில், “ம்மா” என்று குரலில் நடுக்கத்துடன் அழைத்தான்.
“என்ன ராஜா?” என்று அவனைப் பார்த்தார்.
கண்கலங்க, “ம்மா” என்று மீண்டும் அழைத்து, லாதவைப் பார்த்தான். அவன் முகம்முழுதும் வேதனையின் சாயல் மட்டுமே இருந்தது.
லதாவிற்கு, என்ன பேசி அவனைச் சமாதானம் செய்யப் போகிறோம் என்றே தெரியவில்லை. இருந்தும், “சொல்லு ராஜா” என்றார்.
“ம்மா கஷ்டமாயிருக்கு” என்ற போது அவன் குரல் உடையத் தொடங்கியது.
அவன் கைகளில் தட்டிக் கொடுத்தபடி, “ம்ம், என்ன சொல்லணுமோ சொல்லு” என்றதும், “ம்மா” என்றழைத்து, அத்தனை நாட்கள் உள்ளுக்குள்ளே அடைத்து வைத்திருந்த வேதனையை சொல்ல ஆரம்பித்தான்.
“இந்த கேஸ்ல நிறைய பேர் இறந்திருக்காங்க மா. எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில கேஸோட தொடர்பு இருக்கும். ஆனா அம்மா, கவி மட்டும்தான் எதுவுமே தெரியாம உயிரை விட்ருக்காங்க?” என்று புலம்பினான்.
கமறிய குரலில், “அம்மா, கவி… ரெண்டு பேரும், ப்ச் பாவம்” என்று வருந்தினான். மனம் தாளாமல், “என்னால முடியலை… கஷ்டமாயிருக்கு…” என்று கண்ணீர் வடித்தான்.
அவன் அழுகிறான் என்றதும் லதாவிற்கும் கண்களில் நீர் கோர்த்தது. ஆறுதல் வார்த்தைகளே வரவில்லை. ‘எப்படித் தேற்ற?’ என்று யோசித்தவர், மெல்ல அவனைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.
மேலும் விழிநீரை உள்ளிளுத்துக் கொண்டு, “கவிகிட்ட எதும் சொல்லலையா?” என்று கேட்டார்.
“இல்ல மா. அந்த மாதிரி நேரத்தில சொல்லி அவளை ஏன் கஷ்டப்படுத்தணும்னு சொல்லவேயில்ல. அவ கவனிச்சிக் கேட்டப்பக்கூட, நான் எதுமே சொல்லல” என்று பேச்சை நிறுத்தினான்.
அவன் வேதனை புரிந்து ஆறுதலாகத் தலை கோதி, “ம்ம்ம்… நானும் அதைக் கவனிச்சேன். ஆனா கேட்கலை” என்று மட்டும் சொன்னார்.
அன்றைய கோர காட்சிகள் நியாபகத்தில் வந்ததுமே, “இந்தாளுக்கு கோபம் என்மேலதான இருந்திருக்கும்… அத என்மேல மட்டும் காட்டியிருக்கலாமே? அதைவிட்டு இப்படி ஏன்…?”என்று நடுங்கிய குரலில் சொல்லி, அவர் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.
எல்லாம் சொல்லி அழுதால் பலவீனமாவேன் என்று சொன்னானே… அந்த பலவீனத்தை அடைத்திருந்தான். இன்னும் நன்றாக அவர் மடியில் புதைந்து கொண்டு, “கவி ஞாபகமாவே இருக்கு மா” என்று கண்ணீரில் கரைந்தான்.
அவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் அழாதே என்று சொல்லவில்லை. அவன் மனதின் பாரம் எல்லாம் சொல்லி அழட்டும் என்று விட்டுவிட்டார்.
இன்னும் இன்னும் அழுது கொண்டேதான் இருந்தான்.
வேறு என்ன சொல்லி அவனைத் தேற்ற என்று தெரியாமல், “தூங்கு” என்று தட்டிக் கொடுக்க மட்டும் செய்தார். நிரம்ப நேரம் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
மனதின் பாரத்தை பகிர்ந்து கொண்டது… கண்ணீர் விட்டு அழுதது… இதோ இத்தனை நாட்களாக வேண்டாம் என மறுத்து வந்த ஆறுதல், அரவணைப்பு எல்லாம் சேர்ந்து, அவன் சோர்ந்திருந்த விழிகளை மூட வைத்தது.
அப்படியே கண்ணயர்ந்தான்.
லதாவும் திவானின் தலைப் பகுதியில் சாய்ந்து கண் மூடிக் கொண்டார்.
அவரும் சிறிது நேரத்தில் உறங்கிவிட்டார்.
வெகு நேரத்திற்குப் பின், ராஜாவிற்கு முழிப்பு தட்டியது. எழுந்து லதாவைப் பார்த்தவன், அவர் நன்றாக உறங்குகிறார் என்றதும், வெளியே வந்தான்.
அங்கே… சுடர் தூங்காமல் எழுந்து அமர்ந்திருந்தாள்.
‘இவ ஏன் இப்படிப் பண்றா?’ என்று அவள் அருகில் வந்து நின்று, “சுடர் தூங்கலையா? எதுக்கு இப்படி உட்கார்ந்துகிட்டு இருக்க?” என்று கேட்டான்.
அமைதியாக இருந்தாள்.
அவள் முகத்தை நிமிர்த்தி, “உன் அப்பா பேசினது நினைச்சி இப்படி இருக்கியா?” என்று கேட்டான்.
பதில் சொல்லமால், அவன் முகத்தையே பார்த்தாள். அழுதிருக்கிறான் என்று தெரிந்தது. இத்தனை நாட்கள் கழித்து அம்மாவிடம் மன அழுத்தங்களைக் கொட்டியிருப்பான் என்றும் புரிந்தது. நடப்பது ஏதும் சரியில்லை என்றாலும், அவன் மனதின் பாரங்களைப் பகிர்ந்திருக்கிறான் என்பது சுடருக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது.
அந்த நிம்மதியில், “அம்மா சொன்னாங்களா?” என்று சத்தம் வெளியே வராத குரலில் கேட்டாள்.
அவள் பேச ஆரம்பிக்கிறாள் என்ற நிறைவில், “ம்ம்ம்” என்று சோஃபாவில் அவளருகே அமர்ந்தான்.
கொஞ்சம் யோசித்தாள். பின், “ராஜாண்ணா… எங்களைப் பத்தி… அம்மா வேற ஏதாவது சொன்னாங்களா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
‘சொல்லவா? வேண்டாமா?’ என்று ராஜா யோசித்தான்.
அவன் முகம் பார்த்தே, “அம்மா ஏதோ சொல்லிருக்காங்க” என்று கணித்து, “ப்ளீஸ் சொல்லேன்” என்றாள்.
லதா பேசியதைச் சொன்னான். மேலும், “கொஞ்ச நாள் கழிச்சி, இதைப் பத்தி அம்மாகிட்ட பேசறேன். பொறுமையா இரு” என்று ஆறுதலாகச் சொன்னான்.
விழிநீர் தேங்க, “ஆனா… இப்படி… எல்லாரும் வேண்டாம்னு சொன்னா… நானும் என்னதான் பண்ண?” என்று விரக்தி புன்னகையுடன் முடித்தாள்.
வருந்துகிறாள் என்று தெரிந்தது. ஆனால் அதை விரட்ட வழி தெரியவில்லை. ஓரிரு நொடிகள் பேசாமல் இருந்தவன், ‘எல்லாரும்’ என்ற அவனது வார்த்தை பிரயோகத்தினால், “வேற யார் வேண்டாம்னு சொன்னா?” என்று கேட்டான்.
அவன் கேட்டவுடனே சொல்லவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பின் திலோ பேசியது அனைத்தையும் சொல்லி முடித்து, தன்னைத் தேற்ற ஏதாவது சொல்வான் என்று பார்த்திருந்தாள்.
ஆனால் அவனோ, “நான் அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன்ல, வெளிய போறதா இருந்தா என்கிட்ட சொல்லுன்னு? ஏன் சொல்லலை” என கண்டனக் குரலில் கேட்டான்.
இதை எதிர்பார்க்கவில்லை என்பதால், “அது… அது… நான் வரலைனுதான் சொன்னேன் ராஜாண்ணா. அவங்க ப்ளீஸ் பண்ணி கேட்டாங்க…. அதான்” என்று காரணம் சொன்னாள்.
“என்கிட்ட சொல்லவாது செஞ்சிருக்கலாமே” என்று அதிருப்தி காட்டினான்.
யாரிடமும் சொல்லாமல் போனதை சுடர் ஒருமாதிரிதான் உணர்ந்தாள்.
அவர் பேசியது நியமாக இருந்தாலும், சுடர் அப்படியொரு சூழலில் நின்றது ராஜாவிற்குப் பிடிக்கவில்லை என்பதால், “இனிமே இப்படி ஏதும்னா… என் அண்ணன்கிட்ட பேசிக்கோங்கன்னு சொல்லிடு” என்றான்.
‘சரியென்று’ என்று அவள் தலையசைத்ததும், “இது டிசிக்கு தெரியுமா?” என்று கேட்க, “அவங்க அம்மா சொல்லிருக்கலாம்” என்றதும், “போ டிசிக்கு ஃபோன் பண்ணி சொல்லு” என்று கொஞ்சம் கட்டளை தொனியில் சொன்னான்.
உடனே எதுவும் சொல்லவில்லை. நேரமெடுத்து, “அதான் முடியல ராஜாண்ணா” என்று இதயத்தின் இயலாமையைச் சொல்லி, “அவன்கூட நான் பேசியே… ரொம்ப நாளாச்சு” என்றபோது, அவள் குரலில் அவ்வளவு வலி.
“ஏன்?” என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.
சில நொடிகள் அமைதியாக இருந்து, “அவங்க அப்பாக்கு இப்படி ஆனப்புறம் பேசலை. அவன்கிட்ட முன்ன மாதிரி பேச முடியுமானும் தெரியலை” என்று ஒரு அசௌகரியமான குரலில் சொன்னாள்.
“ஏன் இப்படி இருக்க? நீ ஃபோன் பண்ணி அவனுக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா? நீ பண்றது தப்பு” என கொஞ்சம் கடுமையாகவே சொன்னான்.
சற்று நேரம் கண்களை மூடித் தவித்தவள், “எப்படிச் சொல்ல? அவங்க அப்பா இல்லாததுக்கு காரணம்… என் அப்பா. அப்படி இருக்கிறப்ப எப்படிச் சொல்ல முடியும்? என்று கேட்டாள்.
அப்படிக் கேட்டபிறகு, அவள் உள்ளமெங்கும் அடர்த்தியான அழுத்தம் சூழ்ந்து கொண்டது. ராஜா ஏதும் பேசவில்லை. அமைதியாக அவள் விழியில் தெரியும் வலிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
விழியின் ஓரத்தில் ஒருதுளி கண்ணீர் நின்றபடி, “உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்… நீங்க இப்படி நிக்கிறதுக்கு காரணம் என்னோட அப்பான்னு நினைக்கிறப்ப… உங்க ரெண்டு பேரையும் பேஸ் பண்ணவே கஷ்டமாயிருக்கு இருக்கு.
ஏதோ தப்பு பண்ண பீல்… கொஞ்சம் குற்றவுணர்வு கூட… எனக்கு இதுலருந்து வெளிய வரமுடியுமான்னு தெரியலை… லைஃப் புல்லா இது இருக்கும் போல” என மனதில் அழுத்தங்களைச் சொன்னாள்.
“ஏன் சுடர், இப்படியெல்லாம் நினைக்கிற? உன் அப்பா பண்ணதுக்கு, நீ என்ன பண்ணுவ சொல்லு?” என்று கேட்டான்.
கொஞ்ச நேரம் நெற்றியைப் பிடித்துக் கொண்டு இருந்தாள். பின், “தெரியலை ராஜாண்ணா… எனக்கு இப்படித்தான் நினைக்கத் தோணுது” என்றாள்.
என்ன சொல்லி அவளை வழிக்கு கொண்டு வர என்று யோசித்து, “ஒருவேளை உன் அப்பா பண்ற தப்பு முன்னாடியே தெரிஞ்சி, எங்க ரெண்டு பேர்கிட்டயும் சொல்லாம இருந்தா… நீ பீல் பண்றதுல ஒரு அர்த்தம் இருக்கு.
உனக்கே இப்பதான் தெரியும்ங்கிறப்போ… நீ என்ன பண்ண முடியும் சுடர்? தேவை இல்லாம உன் அப்பா பண்ண தப்பை, நீயேன் உன் மேல தூக்கிப் போட்டுக்கிற?” என்றான்.
அவன் சொல்வதை முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் சில சதவீதங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென தோன்றியது.
குறைந்து போன குரலில், “எனக்கு… ஊழல் செஞ்சவரோட பொண்ணுங்கிற அடையாளம் இருக்கும்ல ராஜாண்ணா… அது வேற கஷ்டமா இருக்கு” என்று, மனதின் மற்றொரு அழுத்தத்தைச் சொன்னாள்.
“எனக்கும் அதே அடையாளம்தான் இருக்கு. நம்மதான் மாத்தணும். இப்படியே உட்கார்ந்துகிட்டு இருந்தா எதையும் மாத்த முடியாது” என்று நம்பிக்கையாக சொன்னான்.
யோசித்துப் பார்த்தாள். யோசிப்பின் முடிவில் அவன் சொல்வதை நூறு சதவீதம் ஒத்துக் கொள்ள வேண்டுமென தோன்றியது.
கொஞ்சமாவது அவளை இந்த எண்ணங்களில் இருந்து வெளியே கொண்டு வர நினைத்தவன், “அம்மாகிட்ட நான் பேசாததுக்கு காரணம் தெரிஞ்சதா?” என்று அவள் யோசனைகளை வேறு பாதைக்கு அழைத்துச் சென்றான்.
“ம்ம்ம் புரிஞ்சது… ஆனா… என்கிட்ட மட்டும் ஏன் பேசின?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“பேசலைனா, ‘இவன் என்ன செய்றான்?’னு உனக்கு டவுட் வரும். கண்டுபிடிக்க பார்ப்ப. அப்புறம் இந்தப் பிரச்சனைக்குள்ள நீயும் வருவ… அது எதுக்குனு யோசிச்சிதான் இப்படி!”
“ஓ! அதான் அன்னைக்கு ரூம்ல நான் எடிட் பண்ண நியூஸ் பார்த்தியா?” என கேட்கையில் அவள் குரல் கொஞ்சம் சரியாக ஆரம்பித்தது.
“பார்த்தேன். தடுக்க நினைச்சேன். தடுத்தாலும், உனக்கு டவுட் வரும்னுதான் விட்டுட்டேன்” என்றவன், “வேற ஏதாவது கேள்வி இருக்கா?” என்று கேட்டான்.
“நீயேன் அந்த எவிடென்ஸ் வச்சிருந்தனு கேள்வி அப்போ இருந்தது… இப்போ இல்லை” என்றவள் குரல் கொஞ்சம் சாதரணமாக இருந்தது.
“ஆக்சுவலா அன்னைக்கு உன்மேல அவ்வளவு கோபம்”
“ஏன் ராஜாண்ணா? உனக்குத் தெரியாம எடுத்திட்டுப் போயிட்டேன்னா?”
“இல்லை. அது இந்த வருஷம் முறைகேடு நடந்ததுக்கான எவிடென்ஸ். பெய்டு பிராக்சி போட்டோ இருந்த அட்மிட் கார்டு, எந்த ஸ்டுடென்ட்ஸ்-க்காக அவங்க பெய்டு பிராக்சியா இருந்தாங்கங்கிற டீடெயில்ஸ்.
நீ அதைக் கண்டிப்பா நியூஸா மாத்துவன்னு தெரியும். அது இந்த இயர்னால, ராகினி மூலமா உனக்குப் பிரச்சனை வரும்ல?
ஏன்னா நீ என்ன செஞ்சாலும், கேட்டாலும் உன் அப்பா உன்னை எதும் செய்ய மாட்டாருன்னு தெரியும். பட் ராகினி அப்படி கிடையாதே. அதான் கோபம்”
அவன் சொல்வது சரியென்றே தோன்றியது. தான் இந்த முறைகேடு பற்றி எழுதுவதாகச் சொன்ன பின்பும், ‘கவனமா இரு’ என்று சொன்னாரே தவிர, வேறு எதுவும் சொல்லவில்லை.
அதுவே இந்த ஆதாரங்கள் கொண்ட காணொளி பதிவேற்றலுக்குப் பின் நடந்த தாக்குதலைப் பற்றி யோசித்தாள். அது ராகினியின் ஏற்பாடாக இருக்கும் என்று புரிந்தது.
கூடவே அம்மா நலனிற்காக யோசித்து நடந்து கொண்டது… தனக்காகப் பார்ப்பது… முறைகேட்டை வெளிக்கொணர செயல்பட்டது… என்று, ராஜா செயல்களை நினைத்தவளுக்குப் பெருமையாக இருந்தது.
ஆனால் அதேநேரத்தில் இதனால் அவனுக்கு என்ன ஆதாயம் கிடைத்தது? ஒன்றுமேயில்லை. ஆதாயம்கூட வேண்டாம். இந்த இழப்பவாது இல்லாமல் இருந்திருக்கலாமே? என்று தோன்றியது.
எவ்வளவு பெரிய இழப்பு அவனுக்கு!
அடுத்த நொடியே அதற்கு காரணமாவர் தன் அப்பாதானே என்ற உண்மை உள்ளத்தை உறுத்தியது. மீண்டும் குற்றஉணர்ச்சிக்குள் சிக்கிக் கொண்டாள்.
அதற்கடுத்த நொடி சட்டென்று எழுந்தாள். “மாறாகிட்ட பேசறேன்னு மெசேஜ் பண்ணிருந்தேன். அதான் போறேன்” என்று சொல்லி முடிக்கும்போது கண்கள் கலங்கியிருந்தது.
அவனும் அவசரமாக எழுந்து, “சரியாயிட்டன்னு நினைச்சேன். திரும்ப இப்படி இருக்க?” என்று கவலையுடன் கேட்டான்.
“உடனே சரியாக முடியுமான்னு எனக்குத் தெரியலை. கொஞ்ச நாளாகலாம். நிறைய நாள்கூட ஆகலாம்… எனக்குத் தெரியலை” என்றாள்.
சிறிது இடைவெளி விட்டு, “அவன் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பான். நான் போறேன்” என்று போகப் போனவள், ஒரு நிமிடம் யோசித்து நின்றாள். பின் திரும்பி ராஜாவைப் பார்த்தாள்.
‘என்ன?’ என்பது போல் அவளைப் பார்த்தபடி நின்றான்.
“யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா யாருக்கும் இது தெரியப் போறதில்லை. பட் நான் சொல்லுவேன். ஏன்னா எனக்குத் தெரியும்” என்று கரகரத்த குரலில் சொன்னாள்.
கொஞ்சம் கூட அவள் பேச்சு புரியாமல், ‘என்ன சொல்லப் போகிறாள்?’ என்று கேள்வியுடன் நின்றான்.
ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், “விசில் ப்ளோவர் ஆஃப் திஸ் ஸ்கேம் ராஜாதான். நீதான்… என் அண்ணன்தான்…” என்று சொல்லி முடிக்கும் போது, பெருமை எந்தளவுக்கு இருந்ததோ அதே அளவிற்கு கண்ணீரும் இருந்தது.
தங்கையின் பேச்சில் உணர்ச்சிகளில் பிடியில் நின்று கொண்டிருந்தவனால் எதுவுமே பேச முடியவில்லை.
“மாடிக்குப் போறேன் ராஜாண்ணா” என்று கடகடவென ஓடிவிட்டாள்.
அப்படியே அமர்ந்துவிட்டான்.
சுடரின் கண்ணீர்… மாறனின் நிலைமை… தனது இழப்பு… இப்படித் தங்களின் தவிப்புகளை நினைத்து… அப்படியே அசையாமல் இருந்தான். கவி நினைவில் கண்கள் கலங்க ஆரம்பித்தன. வழக்கம் போல் தனியாக அமர்ந்து தவிக்கத் தொடங்கினான்.
அவன் தவிக்கிறான் என தெரிந்ததோ என்னமோ, ஓரிரு வினாடிகளில் லதா அங்கே வந்து, “தூங்கலையா? இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்றார்.
நேராக அமர்ந்தவன், “தூங்கணும் மா. சுடர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்” என்றதும், அவனருகில் அமர்ந்து கொண்டார்.
“நீங்க போய் தூங்குங்க” என்று சொன்னதற்கு, லதா எதுவும் சொல்லவில்லை. அதே நேரத்தில் எழுந்தும் செல்லவில்லை.
சிலபல நொடிகள் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது. அதன்பின் வந்த நொடிகளில் ஏதேதோ நினைத்து ராஜாவின் மனம் அரற்றிக் கொண்டு வந்தது.
அதன்பின் வந்த ஏதோ ஒரு நொடியில், “ம்மா!” என்று மீண்டும் அவர் மடியில் தலைசாய்த்து ஆறுதல் தேடினான். அவரது கரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.
மெல்ல அவனை… அவன் மனப்பாரத்தை தாங்கிக் கொண்டார். “தூங்கு” என்று பரிவுடன் சொல்லி, தோளில் தட்டிக் கொடுத்தார். அப்படியே அவரும் சோஃபாவில் சாய்ந்து கண்மூடிக் கொண்டார்.
சிலபல நொடிகள் கடந்த பின்னர் வந்த ஏதோ ஒரு நொடியில் இருவரும் உறங்கியிருந்தனர்.
லதா, இதுவரை வாழ்ந்த வாழ்வு பொய்யாக போன வருத்தத்தில் இருக்கிறார். வாழவேண்டிய வாழ்வை இழந்த வருத்தத்தில் ராஜா இருக்கிறான்.
ராஜா இழந்ததை திருப்பித் தர யாராலும் முடியாது! ஆனால் இழப்பின் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க லதாவின் பாசம் ஒன்றே போதுமானது!
இனிமேல் தனது பாசத்திற்காக லதாவை, ராஜா ஏங்க வைக்க மாட்டான். மேலும்… கணவரின் செயல்களினால், பேச்சினால் அவர் அடைந்த மன வருத்தங்களை போக்கும் சக்தி ராஜாவின் பாசத்திற்கு உண்டு.
இருவருக்கும் இடையே இருப்பது ஒருவித விசித்திர பந்தம். அந்தப் பந்தமும், அவர்களின் பாசப் பிணைப்பும் ஒருவரின் காயத்தை மற்றொருவர் ஆற்றும் மருந்தாகும்!
காலப்போக்கில் காயம் ஆறும்! ஆம், காலப்போக்கில்தான்!!
இதே நேரத்தில் மாடி அறையில்… மாறனிடம் பேச என்று மாடிக்கு வந்த சுடர், கதவைத் தாளிட்டு அதில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.
திலோ பேச்சிலிருந்த நியாயம், லதா பேச்சில் இருந்த கவலை… என எல்லாம் சரிதான் என்று தோன்றியது. கூடவே லிங்கத்தின் பேச்சினால் வந்த பயம், அவள் மனதை சரியில்லாமல் ஆக்கியது.
இந்தக் காதல் சரி வராதோ என்ற கேள்விக்கு… பெரிய கேள்விக்குறிதான் பதிலாக கிடைத்ததில், ‘என்னதான் செய்ய?’ என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள், யாழோவியத்தின் மறுபாதியான ஓவியச்சுடர்!!
