Kathambari Novels
அத்தியாயம் – 10
அசையாமல் அங்கேயே நின்ற பூஜாவை, “ஸோ உன் அப்பாக்கு உண்மை தெரிஞ்சிருக்கு. இனி தேர்ட் டிகிரி ட்ரீட்மென்ட் கொடுத்தாவது உண்மையை சொல்ல வைக்கிறேன் பாரு” என்ற சவுரவின் பேச்சு கலைத்தது.
அவள் திரும்பி அவரைப் பார்க்க, “என் முன்னாடி நிக்காத, முதல இங்கிருந்து கிளம்பு!” என்று கோபமாக சொல்லி வேலையைக் கவனிக்கலானார்.
வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பூஜா வெளியே வந்தாள். அங்கே அரவிந்த் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
பேசி முடித்தவுடன் பைக்கை நோக்கி அரவிந்த் செல்ல, பூஜா சற்று வேகமாக நடந்து அவன் முன்னே வந்து நின்றாள். அவன் அவளைக் கண்டு கொள்ளாமல் ஒரே வரிசையாக நிறுத்தப்பட்ட பைக்குகளிலிருந்து, தன் பைக்கை எடுத்துக் கொண்டிருந்தான்.
“சாரி” என்றாள்.
அதற்கு ஒன்றும் சொல்லாமல் பைக்கை வெளியே எடுத்தவனிடம், “நீங்க என் அப்பாவ பத்தி தப்பா பேசனீங்க. அதான் நான் அப்படி ரியாக்ட் பண்ணேன். சாரி அரவிந்த்… ரியலி சாரி” என்றாள்.
“என்ன தப்பா பேசினேன்? உன் அப்பா அவருக்குத் தெரிஞ்ச ஒரு உண்மையை மறைக்கிறதைச் சொன்னேன். அவ்ளோதான்”
இதையே பேசினால் கோபப்படுவான் என்று தோன்ற, “ரெசிப்ட் தேடித் தர்றதா சொன்னீங்களே…” என்றாள்.
“ஹெல்ப் கேட்காதனு சொன்னேன்ல…”
உடனே பேசவில்லை. சில நொடிகள் கழித்தபின், “சவுரவ் சார்… தேர்ட் டிகிரி ட்ரீட்மென்ட்னு சொன்னாரு. ஏன் அப்படிச் சொல்றாரு?” என்றாள்.
“இவ்ளோ பேசிட்டு… திரும்ப எங்கிட்ட வந்து கேட்டா எப்படிச் சொல்லுவேன்னு நினைக்கிற. அவர்கிட்ட போய் கேட்டுக்கோ” என்றவன், “முதல யூனிஃபார்ம்ல இருக்க போலீஸ்கிட்ட மரியாதையா நடந்துக்க பாரு” என்றான்.
“சரி நடந்துக்கிறேன். சாரி அரவிந்த். இனிமே இப்படிப் பேச மாட்டேன்”
“நீ பேசு… இல்லை பேசாம போ எனக்கென்ன? என் மரியாதையை நான்தான் காப்பாத்திக்கணும்” என்று பைக்கில் ஏறினான்.
“எனக்கு உங்கமேல நிறைய மரியாதை இருக்கு” என்று அவன் பைக் அருகே வந்து நின்று சொன்னாள்.
“அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன பார்த்தேனே…” என்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
“அ… அது” என்றவள் அதைப் பற்றி எதுவும் சொல்லாமல், “இவ்ளோ பிரச்சனை இருக்கு. இப்படி பாதியில விட்டுட்டுப் போகாதீங்க… ப்ளீஸ்” என்றாள்.
“உனக்குதான் பிரச்சனை?! எனக்கென்ன வந்தது?” என்றவன், “இன்னொன்னு சொல்லிக்கிறேன்… இனி எனக்கு ஃபோன் பண்ணாத… என் ஸ்டேஷன் பக்கமே வந்திடாத. உன் நம்பரை டெலீட் பண்ணிடறேன்” என்று சென்றுவிட்டான்.
சற்றுநேரம் அப்படியே நின்றாள். அன்று போல் திரும்பி இன்றும் வருவான் என காத்திருந்தாள். வரவில்லை என்றதும் ஆட்டோ கிடைக்குமா என்று பார்த்தாள். கண் கலங்கிக் கொண்டே இருந்தது.
அந்தநேரம் வெளியே வந்து ஜீப்பில் ஏறப்போன சவுரவிடம் பூஜா ஏதோ பேச போக, ‘இன்னும் நீ போகலையா? உன்னய பார்க்க பார்க்க… உன்மேல இருக்க கோபத்தை உங்க அப்பாகிட்டதான் காட்டுவேன். பேசாம போயிடு’ என்று ஆங்கிலத்தில் சொல்லி சென்றுவிட்டார்.
நிரம்பவே கஷ்டமாக இருந்தது பூஜாவிற்கு. கண்ணில் நீர் வரவர துடைத்தபடி ஆட்டோ பிடித்து வீட்டிற்குப் போனாள்.
**********
மானிக்டாலா பகுதி!
காளிகாட் காவல் நிலையத்திலிருந்து நேராக மானிக்டாலா சென்றிருந்தான் அரவிந்த். அடுத்தடுத்து அவன் பொறுப்பில் இருக்கும் வேலைகளை முடித்து, வீட்டிற்கு வரும் போது எட்டு மணி ஆகியிருந்தது.
அப்படி வந்தவன் நேராக வாணி இருக்கும் அறையில் வந்தமர்ந்து கொண்டு வெகுநேரம் எதுவும் பேசாமல் இருந்தான். அவளும் கவனமாக பாட்டில் ஆர்ட் செய்து கொண்டிருந்ததால் அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை.
பாட்டிலின் ஒரு பக்கம் மட்டும் வரைந்து முடித்தவள், அதையெல்லாம் எடுத்து வைத்துவிட்டு வந்து தம்பி அருகில் அமர்ந்ததும், “முடிச்சிட்டியா க்கா?” என்று அரவிந்த் கேட்க, “பாதிதான் முடிச்சேன்” என்றாள்.
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்”
“சொல்லு”
“உனக்கு பிடிச்ச பொண்ணு ஒருத்தி இருக்காளா?” என்றதும், “ஏன்… உனக்குப் பிடிக்காதா?” என்று கேலி செய்ய, “சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்” என்று கோபப்பட, “சரி சொல்லு” என்று பேச்சின் தொனியை மாற்றினாள்.
“இவ்வளவு நாளா அவளுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு… நல்ல மரியாதையைக் கொடுத்திட்டா?” என்று நடந்ததைச் சொன்னான்.
“சவுரவ் சாரை பேசறப்பவே நான் கண்டிச்சிருக்கணும். நான் சும்மா இருக்க போய்தான இன்னைக்கு என்னை இப்படிப் பேசியிருக்கா?” என்று பொருமித் தள்ளியவன், “போலீஸ்னா வேண்டாம்னு சொல்லிட்டு ஏன் என்கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தா?” என்றான்.
“அப்படிச் சொன்ன பொண்ணுக்கு நீயேன் ஹெல்ப் பண்ண?”
“ஐயோ பாவம்னு நினைச்சேன்”
“பாவம்னு ஹெல்ப் பண்ணறது ஓகே… ஆனா குக் பண்ணி எடுத்திட்டுப் போய் கொடுக்கிறதை என்ன சொல்லுவ?”
“சாப்பிடாம இருக்காளேன்னு நினைச்சேன்”
“அவ சாப்பிட்டா உனக்கென்ன… சாப்பிடலைனா உனக்கென்ன?”
“க்கா… நீ திருப்பி எதுக்கு வர்றன்னு தெரியுது. கேஸ் பத்தி மட்டும் பேசணும்”
“ஏன்டா… நீ கேஸ் பத்தியே யோசிக்கிற?”
“ஒரு இன்ஸ்பெக்டரா வேற என்ன யோசிக்கணும்னு நினைக்கிற?”
“கரெக்ட்! வா, சாப்பிடலாம்” என்று சமையலறை சென்றுவிட, சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் எழுந்து வாணி அருகே சென்று நின்று, “என்ன எதுவும் சொல்லாம வந்துட்ட?” என்றான்.
“என்ன சொல்லணும்?”
“நான் அவகிட்ட அப்படிப் பேசிட்டு வந்தது தப்பா?”
“அதெப்படி நான் சொல்ல முடியும் அரவிந்த். இன்ஸ்பெக்டரா இருக்கிறப்ப நீ என்னென்ன எதிர்பார்க்கனு உனக்குதான் தெரியும். அதுல நான் தலையிட மாட்டேன்”
“தேங்க்ஸ் புரிஞ்சிகிட்டத்துக்கு”
“பட் நான் பூஜா இடத்திலருந்தும் பார்ப்பேன்” என்றவள் அவனை அழைத்துச் சென்று சாப்பாட்டு மேசையில் அமரவைத்து பரிமாறி, “சாப்பிடு” என்றதும், “பூஜா இடத்திலருந்து பார்த்தா என்ன பேசுவ?” என்றான்.
“உனக்கு, சவுரவ் சார்னு சொல்றியே அவருக்கு… லாக் அப் அப்படிங்கிறது பழகிப் போன ஒன்னு. ஆனா அவளுக்கு அப்படி இல்லைல!? அந்த இடத்தை, அங்க அவ அப்பாவ பார்த்தும்… அவளுக்குள்ள ஒரு பயம் வந்திருக்கும்ல?
அன்ட் இத்தனை நாள் கழிச்சி லாக் அப்ல இருக்கிற அப்பாவ பார்க்க போற பொண்ணு… என்ன மனநிலையில இருந்தாளோ… அவகிட்ட போய், நீங்க இத கேளு… அத கேளுன்னு சொன்னா எப்படி?”
“அப்போ அது தப்புங்கிறயா க்கா? அது அவளுக்காகவும் அவ அப்பாக்காகவும் நாங்க பண்ண விஷயம். அதைப் புரிஞ்சிக்கோ”
“தப்புன்னு சொல்லலை… ஆனா பூஜா அவ அப்பாவை பார்த்ததும் அழுதிருக்க மாட்டாளா? நீங்க கேட்க சொன்னதை அவர்கிட்ட கேட்டாளோ, இல்லையோ, தெரியலை. ஆனா… ம்” என்ற வாணி, ‘இவனுக்கு எப்படிப் புரிய வைக்க?’ என தெரியாமல் யோசித்தாள்.
பின், “ஓகே அரவிந்த்… இந்த மாதிரி ஒரு இடத்தில என்னை நீ பார்த்தா… எப்படி ரியாக்ட் பண்ணுவ?” என்று கேட்டவுடனே, “போதும்… இந்த மாதிரி நேரத்தில இப்படிப் பேசாதா?” என்று கோபப்பட்டான்.
“உனக்கு இதை கேட்கவே முடியலை. ஏன்னா உனக்கு என்மேல பாசம் அதிகம். அதேமாதிரிதான அவளுக்கும் அவ அப்பா மேல பாசம் இருக்கும். அப்படி ஒரு இடத்தில அப்பாவைப் பார்த்திட்டு வந்த பொண்ணுகிட்ட எல்லாருமா சேர்ந்து இப்படிப் பேசலாமா?”
“அப்போ அவ பேசினது சரின்னு சொல்றியா?”
“கண்டிப்பா சொல்ல மாட்டேன். எனக்கு மத்தவங்களைப் பத்தி தெரியாது. ஆனா நீ இப்படி ஹார்ஷா பேச மாட்டியே… ஏன் பேசினா?”
“அவ பேசினா க்கா. அதான் நானும் பேசினேன்!”
“அவ பேசினா… பேசினானு சொல்ற. எப்படி அவ அப்பா பத்திப் பேசறதைக் கேட்டுக்கிட்டு சும்மா இருப்பானு நினைக்கிற? இல்ல, அவ அப்பா உள்ள இருக்காரு. ஸோ நீங்க என்ன பேசினாலும் அவ கேட்டுக்கணும் அப்படினா, அதுக்கு என்கிட்ட பதில் இல்ல”
“ப்ச் அவ அப்பா அவருக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டா பிரச்சனையே இல்ல. மறைக்க போய்தான் இவ்ளோ பிரச்சனை!”
“தெரிஞ்சத மறைக்கிறாருனு ஏன்டா சொல்ற? ஏற்கனவே அவர் எதையோ தெரிஞ்சிக்க போய் இப்ப மாட்டிக்கிட்டு இருக்கலாம்ல? அன்ட் தெரிஞ்சதை உங்ககிட்ட சொன்னா, வெளிய இருக்க அவர் பொண்ணு மாட்டிப்பாளோன்னு பயப்படுறாரோ என்னவோ?”
அரவிந்த் அமைதியாக இருந்தான்.
பேசியபடி சாப்பிட்டு முடித்திருந்தால், தட்டை எடுத்துக் கொண்டு கைகழுவ சென்றாள் வாணி. அவள் பேசிப் போனதை அசைபோட்டுப் பார்த்தவனுக்கு, பூஜாவைக் கண்காணித்தவர்கள் ஞாபகத்தில் வந்தனர்.
திரும்பி வந்தவள், இன்னும் சாப்பிட்டு முடிக்காமல் யோசித்திருப்பவனைப் பார்த்துவிட்டு, “அரவிந்த்” என்று அவனருகில் உட்கார்ந்தாள்.
“உன் அக்காவா இருந்து சொல்றேன்டா. இவ்ளோ குழப்பிக்காதா. இப்படி நீ இருக்கவே மாட்ட. உன்னை இப்படி பார்க்க ஒருமாதிரி இருக்கு. முதலயே சொன்னேல, இது என் ஸ்டேஷன் கேஸ் இல்லைனு. அந்த மாதிரியே நினைச்சி இதை விட்டுடு” என்றாள்.
சற்று யோசித்தவன், “ஏன் க்கா… யார் பக்கமும் இல்லாம இருந்தா நீ என்ன சொல்லுவ?” என்று கேட்டான்.
வாணி முகத்தில் புன்னகை வரவும், “நீ ஏன் சிரிக்கிறன்னு தெரியுது. இப்போ பதில் சொல்லு” என்றான்.
“அரவிந்த் உனக்கு அவளைப் பிடிக்கலை… பிடிச்சிருக்கு… அதெல்லாம் விட்ரு. அவ கொல்கத்தா வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. அவளுக்கு இங்க எதுவுமே தெரியாது. ஹெல்ப் பண்றேன்னு சொல்லி ஒரு நம்பிக்கையை கொடுத்திட்டு, இப்படி பாதியிலயே விடறது தப்பில்லையா?” என்றாள்.
மேலும், “இப்ப யோசிச்சது போதும்… அப்புறமா யோசிச்சிக்கோ. கடகடன்னு சாப்பிட்டு முடி அரவிந்த்” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் தம்பியைச் சாப்பிடவும் வைத்தாள்.
அக்காவுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தவன், அவள் உறங்க சென்ற பின்னர் அறைக்கு வந்தான். இலகு உடைக்கு மாறிவிட்டு, உறங்கலாம் என்று நினைத்தால் உறக்கம் வரவில்லை.
பூஜா ஞாபகமாவே இருந்தது!
அவள் சொன்ன, ‘இப்போ அப்படிச் சொல்ல மாட்டேன்’ என்பதுதான் திரும்பத் திரும்ப அவனுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது! ஆம், அவள் சொன்னதை கவனித்திருந்தான்!!
இப்போது என்னை வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்கிறாள். இதற்கு என்ன அர்த்தம்… வேண்டுமென சொல்கிறாளா? அப்படியென்றால் அவளுக்கு என்னைப் பிடிக்கிறதா? அவளது சில பார்வைகள், செயல்களை வைத்துப் பார்த்தால் பிடித்தம்தான் அவள் நிலைப்பாடு என்று தோன்றியது!!
இந்த அளவு மட்டும் யோசித்துவிட்டு, அலைபேசி எடுத்து அவளிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்த்தான். வரவில்லை என்றதும் மீண்டும் யோசிக்கலானான்.
அவள் நிலைப்பாடு இருக்கட்டும்… தன் நிலையென்ன என்று யோசித்தான்!
வேண்டாமென சொல்லி ஆயிற்று. அதுவும் ஒரு காரணத்தோடு. ஆனால் அது அவளுடன் பேசிப் பார்ப்பதற்கு முன்னர்! நாலைந்து நாட்கள் அவளுடன் பேசி பழகி இருக்கிறேனே?! இப்போது என்னென்ன காரணங்கள் இருக்கிறது என்று தேடினான்.
எதுவும் இல்லை. மொழி தெரியவில்லை என்பது மட்டுமே!
ஏன் இதையெல்லாம் பார்க்கிறேன் என்று யோசிப்பதை நிறுத்தினான். மீண்டும் அலைபேசியை எடுத்து, ‘சைலன்ட் மோடில் இல்லயே? அழைப்பு ஒலி அளவு குறைவாக இல்லயே?’ என்று பார்த்துவிட்டு வைத்தான்.
அலைபேசி அழைப்பின் அமைவுகள் இப்படி இருந்து ஒருவேளை அவள் அழைப்பை கவனிக்காமல் போய்விட்டால்? அதற்காகவே இந்த சரிபார்த்தல்!
கூடவே கவனிக்காமல் போனால்தான் என்ன… என்ற கேள்வியும் வந்தது!
திரும்ப யோசிக்க ஆரம்பித்தான். வேண்டாம் என்று சொல்ல இதெல்லாம் ஒரு காரணமா என்று தோன்றியது. அன்று தகுந்த ஒரு காரணமாக இருந்தது. இன்று அப்படித் தோன்றவில்லை.
மீண்டும் அலைபேசி எடுத்தான். அவளுக்கு அழைத்துப் பார்க்கலாமா என்று தோன்றியது. ஆனால் அவள் பேசிய விதத்தில் இருந்த கோபம் கடுகளவும் போகவில்லை. அதனால் அப்படியே வைத்துவிட்டான்.
வேண்டாம் என்பதற்கு ஒரு காரணமாவது இருக்கிறது. ஆனால் வேண்டுமென சொல்வதற்கு காரணமே இல்லையே என்ற கேள்வி வர படுத்துக் கொண்டான். ஆனால் உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்திருந்தான்.
வேண்டுமென சொல்ல ஏன் காரணம் தேடுகிறாய் என்று மனம் கேட்டது. அதற்கு பதில் எழுதுவதற்குள், ‘அப்போதே முகம் அழுத மாதிரி இருந்தது. இன்னும் அழுது கொண்டிருப்பாளோ? சாப்பிட்டிருப்பாளா? தூங்கியிருக்க மாட்டாளோ?’ என்று அடுக்கடுக்காய் கேள்விகள் வந்துவிட்டன.
இத்தனை நாள் இல்லாமல், இன்றைக்கு பூஜா பற்றி இவ்வளவு யோசனைகள் ஏன் வருகிறது? பூஜாவை எனக்குப் பிடித்திருக்கிறதா? என்ற கேள்வி வரவும் சட்டென எழுந்து அமர்ந்து கொண்டான்.
சற்றுநேரம் இரவு விளக்கு ஒளி சூழ்ந்திருந்த அறையில் நடந்தான்.
ஓர் நெடுமூச்சு எடுத்துவிட்டு வந்தமர்ந்தவன், முதலில் வழக்கு பற்றிப் பார்க்க வேண்டும் என்று அதற்காக யோசித்துவிட்டுத் தூங்க ஆரம்பித்தான்!
************
காளிகாட் காவல் நிலையம்!
இரவு வீட்டிற்குப் போகும் முன், சவுரவ் கோஷ் சென்று சேகரனைப் பார்த்தார். ‘தெரிஞ்சதை சொல்ல மாட்டிங்க. அப்படித்தான?’ என்றுதான் ஆரம்பித்தார்.
சேகரன் நிமிர்ந்து பார்த்தார். ஆனால் பேசவில்லை.
‘கிடைக்கிற ஆதாரம் எல்லாமே உங்களுக்கு எதிரா இருக்கு. போலீஸ் கஸ்டடி முடிஞ்சதும் என்னாகும்னு யோசிச்சீங்களா? நீங்க ஜூடிசியல் கஸ்டடிக்கு போயிடுவீங்க. ஜெயில்ல இருக்கணும்… புரியுதா?
சப்போஸ் நீங்க இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகாம, வேற யாரும் இன்வால்வ் ஆகியிருந்து நாங்க தேடிப் போறதுக்குள்ள அவங்க தப்பிச்சிப் போயிட்டா? இதையெல்லாம் யோசிச்சாவது தெரிஞ்சதை சொல்ல பாருங்க’
அப்போதும் சேகரன் பேசாமல் இருந்தார்.
‘நீங்க கவர்ன்மென்ட் சர்வன்ட். அதான் இப்படிப் பேசிக்கிட்டு இருக்கேன். ஒரு ரிப்போர்ட்காக வெய்ட் பண்றேன். அதுவும் உங்களுக்கு அகைன்ஸ்ட்டா வந்திருச்சினா… இப்படிப் பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்’ என்று எச்சரிக்கை போல் சொல்லிவிட்டுப் போனார்.
சேகரன் கார் குறித்து குணால் சொன்னதை கேட்கவா என்று யோசித்தார். என்ன நினைத்தாரோ வேண்டாம் என்று முடிவெடுத்து போய்விட்டார்.
*************
காளிகாட் பகுதி!
நேரம் பத்து மணியைக் கடந்து சென்றது. பூஜா இன்னும் உறங்கவில்லை. ஒரு ஸ்டூலில் அமர்ந்து சாப்பாட்டு மேசைமீது தலைசாய்ந்திருந்தாள். வீட்டின் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, பால்கனியிலிருந்த விளக்கை மட்டும் ஒளிரவிட்டிருந்தாள்.
காலையில் காவல் நிலையத்திலிருந்து நேராக வீட்டிற்கு வந்திருந்தாள். ட்ரான்ஸ்லேட் ஆப் வைத்து கார் ரசீதுகளைத் தேடலாம் என்று தோன்றியது. செக்ரெட்டரி மனைவியிடம் சென்று சேகரன் கார் ரிப்பேர் விடும் கடை பற்றி கேட்கலாம் என்று தோன்றியது.
ஆனால் எதற்குமே மனநிலை ஒத்துழைக்காமல் மந்தமாக இருந்தது!
முழுவதும் அப்பா ஞாபகம்தான்!
அப்பாவைப் பார்த்து பேசியதிலிருந்து… அப்பா சீக்கிரமாக வீட்டிற்கு வர வேண்டும், அப்பாவின் அருகிலே இருக்க வேண்டும் என்று ஏங்கி, ஏங்கி மனம் அமைதியற்று தவித்துக் கொண்டிருந்தது.
வீட்டிற்குள் இருப்பது மூச்சு முட்டும் உணர்வைத் தந்ததும்… அலைபேசி எடுத்து, அருகில் கோவில் உண்டா என்று பார்த்தாள். இருந்தது. உடனே ஒரு டேக்ஸி பதிவு செய்து அடுத்த அரைமணி நேரத்தில் பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிகாட் காளி கோவிலுக்கு வந்திருந்தாள்.
வரிசையாக இருந்த பூமாலை, பித்தளை விளக்கு, தேங்காய், சாமி படங்கள், குங்குமம் விற்றுக் கொண்டிருந்த கடைகள் வழியே மெதுவாக நடந்து கோவிலை நோக்கிச் சென்றாள். காளி தெய்வத்தைக் காண இருந்த வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தாள்.
சற்றுநேரம் அங்கே கிடைத்த ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தாள். அரவிந்திடம் பேசிய விதம் தப்புதான்! அது அப்போதே தெரிந்திருந்தது. அதனால்தான் மன்னிப்பு கேட்டிருந்தாள். அதைப் பற்றி அதற்குமேல் யோசிக்கவில்லை.
அரவிந்த் பற்றிய தன்னுடைய எண்ணத்தை, மனமாற்றத்தை அப்பாவிடமும் அவனிடமும் சொன்னதை நினைத்தால், ஏன் இன்று… இந்தச் சூழ்நிலையில் அதைச் சொன்னோம் என்றுதான் இருந்தது.
கூடவே, வேண்டாமென்று இப்போது சொல்ல மாட்டேன் என்று கூறியதை அவன் கவனிக்ககூட இல்லை என்பது மனதை ஒருமாதிரி பிசைந்தது!
ஆனால் இது எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியிருந்தது சவுரவ் சொன்ன ‘தேர்ட் டிகிரி டிரீட்மென்ட்’.
அதைப் பற்றிய யோசனை மட்டும்தான் அவளுக்கு. அப்பாவை அடித்து துன்புறுத்துவார்களோ என்று பயம் வந்தது. அப்பா எப்படி அதைத் தாங்குவார் என்று நினைக்கவும் கண்ணீர் வந்தது.
துடைத்துக்கொண்டாள். இனிமேல் யாரும் உதவி செய்ய மாட்டார்கள். எனவே தான் இப்படி அழாமல் யோசிக்க வேண்டும். அப்பாவிற்குச் சாதகமாக எதுவும் கிடைக்குமா என்று யோசித்தாள். அப்படி யோசித்துக் கொண்டு நடந்து வந்து ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு வந்திருந்தாள்.
மைக்கிரேன் தொடங்குவது போலிருந்தது. அதனால் டீ போட்டுக் குடித்து, இப்படி வந்து உட்கார்ந்தவள்தான். இன்னும் அதே நிலையிலே இருக்கிறாள். அப்பாவுடன் பேசியதையே திரும்ப திரும்ப ஓட்டிப் பார்த்தாள்.
இரவெல்லாம் உறங்காமலே இருந்ததால் அடுத்தநாள் காலையில் தாமதமாக எழுந்தவள் குளித்துவிட்டு, ஜீன்ஸ் டாப்பில் வெளியே கிளம்பிச் சென்றாள்.
காளிகாட் பகுதி வங்கி!
பூஜா இங்குதான் வந்திருந்தாள். இந்த வங்கியின் உதவி மேலாளரான ரித்திகா பட்டேலை பார்க்க வேண்டுமென காத்திருந்தாள். அவளுக்கான நேரம் வரவும் உள்ளே சென்றாள். சேகரன் மகள் என்பதால், ‘எப்படி இருக்கிற?’ என்று ரித்திகா ஆங்கிலத்தில் நலம் விசாரித்தார்.
‘ம்’ என்று மட்டும் சொன்ன பூஜா, “மேம், என் அப்பாக்கு தெரிஞ்ச ஒரு விஷயம், அப்பா மறைக்கிற விஷயம் உங்களுக்கும் தெரியுங்கிறது எனக்குத் தெரியும். ப்ளீஸ் அது என்னென்னு சொல்லுங்க” என்று கேட்டாள்!
