Kathambari Novels
அத்தியாயம் – 12
அடுத்த நாள் காலை! சென்னை உயர்நீதிமன்றம்!
‘கடைசி கட்ட அறிக்கையைச் சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்’ என்று உயர்நீதிமன்றம் அனுமதி தந்துமே, ‘டிலே வேண்டாம்’ என்று சொல்லி அலெக்ஸ் அறிக்கையைச் சமர்பித்திருக்கிறார். அவருடன் சில துணை ஆய்வாளர்கள் இருந்தனர்.
முதன் முதலாக நுழைவுத் தேர்வு முறைகேடு சம்பந்தமாக 2015 ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து நிறைய வழக்கு பதிவுகள் இருந்திருக்கின்றன. முதல் கட்ட அறிக்கையில் சொன்னது போல் மொத்தமாக 127 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.
இந்த முறைகேட்டில் பதினேழு மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதே போல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முறையாக விசாரிக்கவென ஆர்வம் காட்டிய பதினோரு காவலர்களில் நான்கு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இவர்களின் மரணங்கள் இயற்கையானதாக அல்லாமல் சாலை விபத்தாக இருந்திருக்கிறது. இது குறித்து ‘ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்’ விசாரித்ததில் ஒன்பது பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அவர்களைத் தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் இந்த அறிக்கையில் முறைகேட்டிற்கு காரணமான, துணைபோனவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
இடைத்தரகர்கள், ராக்கெட் லீடருக்கு அடுத்தபடி முறைகேட்டிற்குத் துணை போன பல்கலைக்கழக அலுவலர்கள் பெயர் பட்டியல் இருந்தது.
இதில் மாணவர்களின் ஒஎம்ஆர் விடைத்தாளை மாற்றியமைத்த தேர்வு குழு அதிகாரிகளும், விடைத்தாளை வெளியிட்ட தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கணினி ஆய்வாளர்களும் அடக்கம்.
மற்றும் முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த இரண்டு உயர் கல்வித்துறை இயக்குனர்கள் பெயரும் இருந்தது. அடுத்து முறைகேட்டில் தொடர்புடைய ஆளும் கட்சி, எதிர்கட்சி அமைச்சர்களின் பெயர்கள் இருந்தன.
- கோபாலன் – சட்டமன்ற உறுப்பினர் (ஆளுங்கட்சி)
- மூர்த்தி – சட்டமன்ற உறுப்பினர் (ஆளுங்கட்சி)
- சாரதி – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (எதிர்க்கட்சி)
- ஜெகதீஷ் – முன்னாள் நிதி அமைச்சர் (எதிர்க்கட்சி)
இதில் கடந்த வருடம் ஒரு சாலை விபத்தில் ஜெகதீஷ் உயிரிழந்திருக்கிறார். அந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த முறைகேட்டிற்குக் காரணமான ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உயர் கல்வித்துறை அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இவர்களே நுழைவுத்தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றாவாளிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முறைகேட்டில் எழுநூறு கோடி பண மதிப்பில் ஊழல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக எண்ணூறு பக்கம் கொண்ட அறிக்கையை முக்கியமான ஆதாரங்களுடன் அலெக்ஸ் குழு சமர்பித்திருந்தது.
அறிக்கை சமர்ப்பித்து வெளியே வந்தவரிடம், ஊடக நபர்கள் கேள்வி கேட்க முட்டி மோதிக் கொண்டிருந்தனர். அவர்களையெல்லாம் சில காவலர்கள் விலக்கிவிட்டதும், வேகமாகத் தன் காரை நோக்கி அலெக்ஸ் சென்றார்.
நுழைவுத்தேர்வு முறைகேடு விசாரணையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேன்டும் என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் விசாரணை குழுவில் இருக்கின்ற காவலர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர வேண்டும் என அரசிடம் கேட்டிருந்தது.
அதன் அடிப்படையில் அலெக்ஸின் பாதுகாப்பிற்காக தமிழகஅரசு கூடுதல் காவலர்களை நியமித்திருந்தது. கார் கதவை காவலர் திறந்துவிட்டதும் ஏறி அமர்ந்தவர் சொன்னதின் பேரில் கார் செங்கல்பட்டு ஆட்சியர் பங்களாவை நோக்கி விரைந்தது.
அனைத்து ஊடகங்களிலும் நுழைவுத் தேர்வு முறைகேட்டிற்குக் காரணமான அமைச்சர்களைப் பற்றிய செய்திகள்தான் ஆக்கிரமித்திருந்தன. சில சிறப்பு விவாதங்கள், கல்வித்துறை தொடர்புடைய அதிகாரிகளின் நேர்காணல்கள் இருந்தன.
இடையிடையே மற்ற செய்திகளும் ஒளிபரப்பப்பட்டன. அந்தச் செய்திகளில் விசாரணை ஆணைய அதிகாரி தியாகு மரணம் முன்னிலை பெற்றிருந்தது.
இறுதி கட்ட அறிக்கையைச் சமர்பிப்பதற்காக நேற்று செங்கல்பட்டிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த தியாகு சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
தியாகு பயணம் செய்த காரும் கட்டுப்பாட்டை இழந்த வந்த கார் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது. மோதிய வேகத்தில் தியாகு பயணம் செய்த காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து, சாலையோர பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இதில் ஒரு ஆய்வாளர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ஓய்வூ பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான தியாகுவின் உயிர் மருத்துவமனை செல்லும் வழியிலே பிரிந்தது.
இந்தத் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு துணைஆய்வாளரும் ஓட்டுனரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எதிரில் வந்த கார் ஓட்டுநர் படுகாயத்துடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.
விபத்து தொடர்பாக கார் ஓட்டுனர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த செய்தி காவல்துறை வட்டாரத்தில் பெரிய சோகத்தை உருவாக்கியிருக்கிறது. மேலும் இதற்கும்
நுழைவுத்தேர்வு முறைகேட்டின் குற்றவாளிகளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது.
இதுதான் அந்தச் செய்தியின் விரிவாக்கம்.
************
செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா!
வீட்டின் முன்னே இருந்த இடத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது. திலோ மற்றும் தியாகுவின் உறவுகள் வந்திருந்தனர். மூன்று மாநிலங்களில் முக்கியமான பொறுப்புகளில் இருந்ததால், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த தியாகுவின் நண்பர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
வந்திருந்தவர்களின் முகங்கள் சோகத்தைத் தாங்கியிருந்தன. தியாகுவின் நெருங்கிய உறவுக்காரப் பெண்களில் சிலர் கண்ணீரோடு இருந்தனர்.
வீட்டின் முன்னறையில் இருந்த சோஃபாவில் திலோவும் மாறனும் இருந்தனர். நேற்றைய உடைகள் மாற்றப்படாமல் இருந்தனர். திலோ, மகனின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தார்.
இடிந்து போன தோற்றத்துடன், இறுக்கமான நிலையில் மாறன் இருந்தான். அடிக்கடி அப்பா நினைவில் கண்கள் கலங்குவதும், அதை ஒற்றைவிரலால் ஒற்றி எடுப்பதுமாக இருந்தான்.
நேற்று தியாகு பற்றிய செய்தி வந்ததிலிருந்து இருவருமே இப்படித்தான் இருக்கிறார்கள். சசிதான் மாறனுக்கு ஆறுதல் கூறுவதும் வருவோர்களிடம் நடந்ததைக் கூறுவதுமாக இருந்தான். அவனின் தாயாரும் வந்திருந்தார்.
சற்று நேரத்தில் அலெக்ஸும் வந்து சேர்ந்தார். அவருடன் விசாரணைக் குழு உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் நேராக அமர்ந்த திலோ அடக்கப்பட்ட அழுகையுடன் இருந்தார்.
மாறன் அருகில் அமர்ந்த அலெக்ஸ், “சாரி ஃபார் யுவர் லாஸ்” என்றதும் அவன் லேசாகத் தலையாட்டினான்.
தியாகு இழப்பின் கோபத்தில், “ஸ்கேம்ல குற்றம் சாட்டப்பட்டவங்கதான் இத பண்ணிருக்கணும்னு எல்லாரும் டவுட் பண்றாங்க. டவுட் என்ன!? நிச்சயமா அவங்கதான் செஞ்சிருக்கணும். இதை விட்றாத மாறன்” என்றார்.
அலெக்ஸ் சொன்னதை, ‘ஏன் இப்படிப் பண்ணாங்க?’ என்ற அதிர்ச்சியுடன் திலோ கேட்டிருந்தார். அப்பொழுதும் மாறன் அமைதியாக இருந்தான்.
அதன்பின்னும் நிறைய பேசி, இருவருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு அலெக்ஸ் சென்றதும், “இந்த ஸ்கேம்ல இன்வால்வ் ஆனவங்க ப…பண்ணதா இது?” என்று மாறனிடம் திலோ கேட்டார்.
இது விபத்தல்ல என்று மாறனுக்குத் தெரிந்தும் அழுத்தமாக இருந்தான்.
“சொல்லு மாறன்! பிளான் பண்ணி அப்பாவை இப்படி …” என்றவர்க்கு, அதற்கு மேல் பேச முடியாமல் கேவல் வர, “மா! இப்ப இதைப் பத்தி பேச வேண்டாம்” என்று முடித்துவிட்டான்.
மீண்டும் அழ ஆரம்பித்தவரிடம், “ஆக்சிடென்ட் பண்ணவன் உயிரோடதான் இருக்கான் ம்மா. அவனை விசாரிச்சா போதும், உண்மையெல்லாம் வெளிய வந்திடும்” என்றவன், “இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். ஆனா இப்போ எதையும் யோசிக்க வேண்டாம்” என்றான்.
கண்ணீரைத் துடைத்துவிட்டு சற்றுநேரம் அமைதியாகவே இருந்தவர், “அப்பா இல்லைங்கிறதை டைஜஸ்ட் பண்ண முடியலை மாறன்” என்று மீண்டும் அழ ஆரம்பித்தார்.
“அழாதீங்க ம்மா” என்று அவரைத் தோளோடு சாய்த்துக் கொள்ள, “என்னால இதை நம்பவே முடியலை” என்று கண்ணீர் விட்டுக் கதற ஆரம்பித்தார்.
“ம்மா! ம்மா! அழாதீங்க” என மாறன் பதறியதும், திலோவின் உறவினர்களும், சசி மற்றும் அவனது அம்மாவும், அவர்களது அருகில் வந்தனர்.
“அப்பா திரும்ப வந்திட்டா நல்லா இருக்கும். இல்லையா மாறன்? எனக்கு என் தியாகு வேணும்…” என்று மேலும் மேலும் துடித்தவரை எல்லோரும் சேர்ந்து சமாதானப்படுத்தினர்.
அதிகமாக அழுததால் கண்கள் சொருகி திலோ மயங்கும் நிலைக்குச் செல்ல, “சசி தண்ணீ எடுத்திட்டு வா” என்று மாறன் படபடத்தான்.
உடனே சசியின் தாயார், “சூடா எதும் கொண்டு வர்றேன்” என்று சமயலறை சென்று காஃபி தயாரித்துக் கொண்டு வந்து திலோவைக் குடிக்க வைத்தார்.
சிறிது நேரத்திற்குப் பின்…
திலோ அமைதியாகியிருந்தார். கண்ணீர் குறைந்திருந்தது. ஆனால் கண்கள் சிவந்திருந்தது. மாறனுமே ஒருமாதிரித்தான் இருந்தான். அக்கணம் சசி வந்து, “மாறன் வா” என்று மெதுவாகச் சொன்னதும், மாறன் எழுந்தான்.
“மாறன், தனியா விட்டுப் போகாத… ப்ளீஸ்” என்று அவன் கைப்பிடித்து திலோ அழ, “நீங்க இப்படி அழுதா… அவனும் என்னதான் செய்வான்?” என்ற சசியின் தாயார், “சசி, மாறனை கூட்டிட்டுப் போ” என்றார்.
தயங்கி நின்ற மாறனிடம், “நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க” என்று அனுப்பி வைத்தார்.
மகனாக, அப்பாவிற்கு செய்யும் கடமைகளை செய்து முடித்தான். அன்றைய வாக்குவாதத்திற்குப் பின் இருவரும் சரியாகவே பேசிக் கொள்ளவில்லை.
முன்பிருந்த அலுவலக சம்மந்தமான பேச்சுகள், விளையாட்டு ஏதும் இல்லை. ஆனால் இரண்டு மூன்று முறை இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்திருந்தது. திலோதான் பேசி, சமாதானப்படுத்தியிருந்தார்.
காவல்துறை வேலை மீது அப்பா கொண்டிருந்த ஈடுபாடு, தங்கள் மூவரின் ஜார்கன்ட் வாழ்க்கை… தனது பதவி, பொறுப்பை எண்ணி அப்பா பெருமைப் பட்டுக்கொள்ளும் விதம்… என அனைத்தையும் நினைத்துப் பார்த்தான்.
அடுத்த நிமிடமே அதுவரை அடக்கி வைக்கப்பட்ட கண்ணீரை எல்லாம் “சசி” என்று, நண்பனின் தோளில் மாறன் இறக்கி வைத்தான்.
தியாகு இறந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் உறவுகள் எல்லோரும் சென்றிருந்தனர்.
தியாகுவைச் சார்ந்தே வாழ்ந்து பழகியதால், தனியாக திலோவால் ஏதுமே செய்ய இயலவில்லை. யாழ்மாறனும் அப்பாவின் மறைவிலிருந்து மீண்டு வரமுடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
இருவருக்குமே ‘உண்ண, உறங்க’ ஒருவர் சொல்ல வேண்டியதாக இருந்தது.
திலோ, மாறன் நிலையைப் பார்த்து சசி, அவன் அம்மா மேலும் இரு நாட்கள் அவர்களுடன் இருந்துவிட்டுச் செல்லலாம் என முடிவெடுத்திருந்தனர்.
இதே நேரத்தில் வெளி உலகத்தில்… தியாகு விபத்து தொடர்பான வழக்கில் விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
மொத்த ஊடங்களில் ஒருபாதி பேர் தியாகுவிற்கு நடந்தது விபத்தா? இல்லை நுழைவுத்தேர்வு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளால் திட்டமிடப்பட்டதா? என்ற கோணத்தில் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
மறுபாதி ஊடகத்தினர் நுழைவுத்தேர்வு இறுதிகட்ட அறிக்கை, முறைகேட்டில் தொடர்புடைய பல்கலைக்கழக அலுவலர்கள், அமைச்சர்கள் என்பதை பேசு பொருளாக வைத்துக் கொண்டனர்.
அடுத்து பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்… ஓரளவிற்கு திலோவும் மாறனும் தங்களைத் தேற்றிக் கொண்டனர். எத்தனை நாட்கள் மற்றொருவர் இருந்து தங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணம் வந்தவுடன் இருவரும் எழுந்து நடமாட ஆரம்பித்தனர்.
இருந்தாலுமே திலோ பொட்டிக் போகவில்லை. ஆனால் மாறன் தன் அன்றாட அலுவலில் ஈடுபடத் தொடங்கினான். இருவருமே உள்ளுக்குள் நிரம்ப அழுது கொண்டிருந்தனர். எனினும் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
தனியாக இருக்கும் பொழுது தியாகு ஞாபகம் வந்தால் வீட்டு வாசலில் காஃபி கோப்பையுடன் திலோ அமர்ந்துகொள்வார். அதேபோல் மாறனும் அப்பாவின் நினைவு வருகையில் ஷட்டில் கார்க் சகிதமாக சங்கடப்பட்டான்.
ஆனால் இருவரும் சேர்ந்து இருக்கும் நேரங்களில் மனதை மாற்றும் விதமாக ஏதாவது பேசிக் கொள்வார்கள். இருவரின் மாற்றம் கண்ட பிறகுதான் சசியும் அவனது அம்மாவும் கிளம்பினர்.
அலெக்ஸ் இல்லத்தில்! முழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நுழைவுத்தேர்வு முறைகேடு விசாரணை குழுவிலிருந்து உயர்நீதிமன்றம் அவரை விடுவித்து, அவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு தொடரவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்து முடித்தாயிற்று என்றாலும், சமர்ப்பித்த அறிக்கை பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அலெக்ஸிற்கு பெரும் அதிருப்தியைத் தந்திருந்தது.
தனது அதிகாரம் அறிக்கையைத் தாக்கல் செய்யும் வரையே, அரசையோ நீதிமன்றத்தையோ கேள்வி கேட்க கிடையாது என்பதால் அமைதியாக இருந்தார்.
ஊடங்களில்… வேறொரு தலைப்புச் செய்தி… மற்றொரு முக்கியச் செய்தி… அடுத்தொரு அண்மைச் செய்தி என்று அவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். விவாதிக்கும் தலைப்புகள் மாறின. விவாதிப்பவர்கள் மாறினார்கள்.
வெளியுலகில்…. பொதுமக்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக அலுவலர்களிடம் இந்த முறைகேடு செய்தவர்களுக்கு, ‘என்னதான் தண்டனை கிடைக்கும்?’ என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது.
அடுத்து இரண்டு நாட்கள் கழித்து! செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம்!
எவ்வளவு முயற்சி எடுத்து விசாரணை ஆணையம் வரை கொண்டு சென்ற விடயம், இன்று கிணற்றில் போட்ட கல்லாக இருப்பது கண்டு கடுகடுவென மாறன் இருந்தான்.
அக்கணம் காசி வந்து, “சார் முகாம்?” என்றதும், சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “போங்க காசி! வர்றேன்” என்று கிளம்பினான்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் எட்டு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினான்.
பல்வேறு உதவிகள் வேண்டி கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டான். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலகர்களிடம் சொன்னான்.
அதன்பின்னர் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பியதில், ‘கவர்ன்மென்ட்டோட எல்லா திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கிற பணியை, மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செய்யும்’ என்றான்.
மேலும் மேலும் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வருகையில், “சார்! உங்க அப்பா மரணத்துக்கும் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஸ்கேம் அக்கியூஸ்ட்டு-களுக்கும் தொடர்பு இருக்கா?” என்று விவகாரமான கேள்வி வந்தது.
உடனே மாறன் உதவியாளர்கள் கேள்வி கேட்ட நிருபரை அங்கிருந்து அகற்ற பாதுகாவலர்களிடம் சொன்னதும் அந்த இடத்தில் சிறு சலசலப்பு, பரபரப்பு ஏற்பட்டது.
‘நகரவே மாட்டேன்’ என முரண்டு பிடித்துக் கொண்டிருந்த நிருபரைக் கண்ட மாறன், பதில் சொல்லவில்லை என்றால்தான் பிரச்சனை பெரிதாகும் என்று உணர்ந்து, “அவரை விடுங்க” என்று தனது பாதுகாவலர்களிடம் கூறினான்.
அவர்கள் நிருபரை விட்டுவிட்டு பாதுகாவலர்கள் மாறன் பின்னே வந்து நின்ற சில நொடிகளில் பரபரப்பு அடங்கி மீண்டும் சகஜ நிலைக்கு வந்தது.
அந்த நிருபர், “தேங்க்ஸ் சார்!” என்றதும், “கேஸ் ரெஜிஸ்டர் பண்ணி, முறையா விசாரணை நடக்கு. இந்த சிச்சுவேஷன்ல இந்த கேள்வி தேவையில்லாதது” என வழக்கை பின்தொடர்ந்து வருபவன் என்ற முறையில் பதில் சொன்னான்.
“சார்! இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஸ்கேம் வெளிவந்ததுல உங்களுக்கு முக்கிய பங்கு இருக்கு. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” – அதே நிருபர்.
மற்ற நிருபர்கள் தங்கள் கேள்விகளை முன்வைக்கையில், ‘ஸ்கேம் பத்தி ஏன் இப்போ பேசணும்?’ என்றுதான் மாறனுக்குத் தோன்றியது. அதேசமயம் வெகு நாட்களுக்குப் பிறகு முறைகேடு பற்றிய கேள்வியைப் பதிலில்லாமல் விடவும் மனமில்லை.
எனவே, “சாதாரண ஒரு வழக்கா பதியப்பட்டு… முறைகேடு நடந்திருக்குன்னு தெரிஞ்சதும் விசாரணை கமிஷன் அமைச்சி, முறையா விசாரணை நடந்தது நல்ல விஷயம்” என்றான்.
“இந்த வழக்குல எப்ப சார் தீர்ப்பு வரும்?” என அதே நிருபர் கேட்க, மற்ற ஊடக நபர்கள் அவரைப் விகற்பமாகப் பார்த்தனர். மாறன் உதவியாளர்கள், ‘எதற்கு இந்தக் கேள்வி?’ என அதிருப்தியான உடல்மொழியுடன் இருந்தனர்.
தட்டிக் கழிப்பது போல் இருக்கும் என்றாலும், “தீர்ப்பு கோர்ட் முடிவு பண்றது. நீங்களோ நானோ முடிவு பண்ண முடியாது” என பதவிக்குரிய பொறுப்புடன் பதில் சொல்லிவிட்டு, மாறன் கிளம்பப் பார்த்தான்.
மற்ற ஊடக நபர்கள் விலகிக் கொண்டாலும், ” சரி சார்! பட் இவங்கதான் தப்பு செஞ்சிருக்காங்கனு தெரிஞ்சப்புறமும், கவர்ன்மென்ட் சைடுலருந்து ஏன் ஒரு கைது நடவடிக்கைகூட இல்லை? அப்போ நடவடிக்கை எடுக்காம அப்படியே விட்டுட்டாங்களா?” என அதே நிருபர் மைக்கை மாறன் முன்வந்து நீட்டினார்.
“சார், நீங்க வேணா போங்க சார்” என மாறன் உதவியாளர்கள் சொன்னாலும், அரசாங்கத்தைச் சாடும்படியான கேள்விக்குப் பதில் சொல்லாமல் சென்றால் நன்றாக இருக்காது என்று நினைத்தான். அதே நேரத்தில் தனக்குச் சாதகமாக ஏதாவது பேச முடியுமா என்றும் யோசித்தான்.
யோசித்ததின் முடிவில், “விசாரணை கமிஷன் அமைச்ச அரசாங்கம், சப்மிட் பண்ண அறிக்கையின் பேர்ல நடவடிக்க எடுக்காம இருக்க மாட்டாங்க” என அரசிற்கு ஆதரவா? அழுத்தமா? என்ற கேள்வியுடன் பதிலளித்தான்.
“யார் மேலெல்லாம் நடவடிக்கை எடுப்பாங்க?” – அதே நிருபர்.
“கமிஷன் ரிப்போர்ட்ல குற்றவாளிகள்னு யார் யார் பேர் இருக்கோ அவங்க மேலெல்லாம்!” என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.
“என்ன! பேர் சொல்ல பயமா?” என்று மரியாதையையே இல்லாமல் கேட்டதும், மாறன் பாதுகாவலரில் ஒருவர் அந்த நிருபரின் மைக்கை பிடிங்கி, அவரைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டார்.
மற்றொருவர் ஏனைய ஊடகநபர்களை ஒதுங்கி நிற்க உத்தரவிட்டு, “சார்! இது ஏதோ வேணும்னே பண்ற மாதிரி இருக்கு. நீங்க போங்க சார்” என்றார்.
மேலும், “சார்! ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய் விசாரிக்கிறோம். நீங்க போங்க”
என்றதும், “வாங்க சார்! போலாம்” என்று காசி வந்து மாறனை அழைத்தார்.
உடனே ஒதுங்கி நின்ற ஊடக நபர் ஒருவர், “ஏன் சார் மிரட்டிறீங்களா? கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லையா?” என கோபமாகக் கேட்டார்.
‘யாரிவன்? ஏன், எதற்கிந்த கேள்விகள்?’ என நினைத்தாலும், ‘ஊடக சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என்று விடயம் பெரிதாக வேண்டாமென நினைத்த மாறன், பாதுகாவலரைப் பார்த்து, “அவரை விடுங்க” என்றான்.
அவர், “சார்!” என்று தயங்க, “விடுங்கன்னு சொல்றேன்” என்றவன், அவர்கள் விட்டதும், “மைக்கை கொடுத்திருங்க” என்றான்.
மைக்கை வாங்கிய நிருபரிடம், “கேள்வி கேட்கிறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா எப்படிக் கேட்கணுங்கிறதும் இருக்கில்லையா?” என்றான்.
அனைவரும் அமைதியாக நின்றார்கள். யாரும் எதிர்த்துப் பேசவில்லை. அப்படியே மாறன் சென்றிருக்கலாம். ஆனால் அவன் செல்லவில்லை.
மாறாக, “தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சரான ராகினி, முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் லிங்கம்… இவங்கதான் இந்த முறைகேடோட முக்கிய குற்றவாளிகள்.
இதை நான் சொல்லலை. விசாரணை கமிஷன் ரிப்போர்ட்ல இவங்க முக்கிய குற்றவாளிகள்னு ஆதாரத்தோடு சொல்லிருக்காங்க. உங்க கேள்விக்கு பதில்! நடவடிக்கை எடுக்காம அப்படியே விட்டுருவாங்கன்னு சொல்லாதீங்க. அரசு நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகலாம்.
போதுமா? வேற யாரும் ஏதும் கேள்வி கேட்கணுமா?” என்று கேட்ட பின்னரும் அமைதி நிலவியதால், “காசி. போகலாம்” என்று கிளம்பிவிட்டான்.
போகும் போதே மாறன், அந்த நிருபரை திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.
அனைத்து ஊடங்களிலுமே அப்போதைய பிரேக்கிங் நியூஸ், ‘செங்கல்பட்டு ஆட்சியரிடம் வரம்பு மீறி கேள்வி கேட்ட ஒரு நிருபர். அதை பொறுமையாகக் கையாண்ட ஆட்சியர்’ என்று போடப்பட்டு, அங்கே நடந்ததை முழுவதுமாக ஒளிபரப்பி விளக்கிக் கொண்டிருந்தனர்.
அதேநாள் இரவில், ‘நுழைவுத்தேர்வு முறைகேடு வழக்கின் குற்றவாளிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும்?’, ‘ஊடகத்துறையின் சுதந்திரமானது பறிக்கப்படுகிறதா?’ என்று பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் இருந்தன.
சுருக்கமாக மீண்டும் முறைகேடு வழக்கு பற்றிய பேச்சுக்கள் தொடங்கின.
**********
லிங்கம் வீடு!
லதாவிற்கு, கணவர் ஊழல் குற்றத்தின் முக்கிய குற்றவாளி என்று தெரிந்தது. பல பேரின் மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறார் என்பது, இந்த வீடு சொத்துக்கள் எல்லாம் ஊழல் செய்த பணத்தில் வந்தது… இவையெல்லாம்
அவரை வெகுவாகப் பாதித்திருந்தது.
இது தெரிந்ததிலிருந்து கணவருடன் பேசுவதையே நிறுத்திவிட்டார். லிங்கம் மனைவியைக் கண்டு கொள்ளவில்லை. ‘பேசினால் பேசு! இல்லையென்றால் எனக்கொன்றுமில்லை’ என்ற ரீதியில்தான் இருந்தார்.
வழக்கறிஞர்களுடன் ஆலோசிப்பது, தன் கட்சித் தலைமையை சரிகட்டுவது, கட்சிக்குள் தனக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வது, அதிகாரிகளுடன் பேசிப் பார்ப்பது என்றே லிங்கம் இருந்தார்.
கணவரின் அலட்சியப்போக்கு, ‘இவ்ளோதானா இவருக்கு நான்?’ என்ற ஒரு எண்ணம், ‘இதுவரை வாழ்ந்த வாழ்க்கை பொய்யா?’ என்ற கேள்வி, எல்லாம் சேர்ந்து கொண்டு லதாவின் பாதிப்பைப் பன்மடங்காக்கியது.
கூடவே, இதன்பின் வரும் நாட்களை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற பயமும், கவலையும் இருந்தது.
சுடர், அப்பாதான் குற்றவாளி என்பதை அறிந்ததும், ‘அப்பாவா இப்படி?’ என்று வேதனை அடைந்தாள். அழுகின்றாள். அறைக்குள்ளே அடைந்து கிடக்கிறாள். அப்பாவிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாள்.
மனைவியிடம் காட்டிடும் அலட்சியத்தை, லிங்கம் மகளிடம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் அவள் முன் சென்று ஏதேதோ பேசி, அவளைப் பேச வைக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் பேச மறுத்துக் கொண்டிருக்கிறாள்.
அப்பாவிடம் மட்டுமல்ல, அம்மாவைத் தவிர யாரிடமும் அவள் பேசவில்லை. மருத்துமனையில் இருந்தபோதும், வீட்டிற்கு வந்தபின்பும் ராஜா, மாறன் இருவருடனும் பேசிக் கொண்டுதான் இருந்தாள்.
ஆனால் இந்த மூன்றாம் கட்ட அறிக்கை வந்தபின்பு, மூவரின் மனநிலையும் மாறிவிட்டது. தந்தை இழப்பில் மாறன் உழன்று கொண்டிருக்கிறான். சுடரும், தன் அப்பாவின் குற்ற செயலை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறாள்.
இதுகூடவே தியாகுவின் மரணத்திற்குக் காரணம் முறைகேட்டில் தொடர்பு உடையவர்களாக இருக்கலாம் என்ற ஊடக சலசலப்புகளை கேட்டதிலிருந்து, சுடருக்குள் ஒரு தயக்கம் வந்திருந்தது.
மாறனிடம் பேசி, அவன் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வேண்டுமென மனம் நினைத்தது. ஆனால் அந்த இழப்பை ஏற்படுத்தியது அப்பவாக இருக்கலாம் என்பது அவளைத் தடுத்தது.
இன்னும் சிறிது நாட்கள் கழித்து… வீட்டில், அலுவலகத்தில் ஓரளவு நிலைமை சமன்பட்ட பிறகு, மாறனே அழைத்துப் பேசுவான் என்று தெரியும்.
ஆனால் அதற்குமுன்பே தான் அழைத்துப் பேசுவதே சரியாக இருக்கும் என்று நினைத்தாலும், ‘எப்படி அவனிடம் பேச?’ என நெற்றியைப் பிடித்துக்கொண்டு விசனப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
சுருக்கமாக இரண்டக மனநிலையில் இருந்தாள்.
மாறனிடம் பேசுவதற்கு இப்படி தயக்கம் வருமென்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்றாலும், ஏற்கனவே இப்படியொரு தயக்க நிலையைக் கடந்து வந்த நாளை நோக்கி மனம் சென்றது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 11
கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. அன்றுதான் சுடரின் கடைசித் தேர்வு நடக்கும் நாள்.
சற்று முன்னதாகவே தேர்வெழுதி முடித்து, விடைத்தாளைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த சுடர், அங்கு நின்ற தோழிகளிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டுக் கிளம்பினாள்.
மெதுவாக வாகன நிறுத்துமிடம் நோக்கி நடந்தவள் நினைவினில் மாறனைப் பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தன.
அன்று மாறன் அப்படிச் சொன்னபின், அவனைப் பார்க்கவேயில்லை. ஆனால் ‘இங்கேதானே’ இருக்கிறான் என்ற உணர்வே இதயத்திற்கு இதமாக இருந்தது. ஆனால் இனிமேல் அது கிடையாதே என்பது இதயத்தை ஏதோ செய்தது.
அவனுக்கு இது இறுதிஆண்டு. தேர்வு முடிந்ததும், அவன் கல்லூரியை விட்டுச் சென்றுவிடுவான். அதன்பின் பார்க்கவே முடியாது என்ற உண்மை உள்ளதை உலுக்கி எடுத்தது.
தன் வாழ்க்கைக்குள் அவன் இல்லை என்றாலும், இந்த வளாகத்திற்குள்தான் இருக்கிறான் என்பது ஒருவித அமைதியைக் கொடுத்திருந்தது. இனி, அது இருக்கப் போவதில்லை என்பது மனதை அரிக்க ஆரம்பித்தது.
அவனிடம் பேசிப் பார்த்தால் என்ன? என்று கூட தோன்றியது. ஆனால், ‘இது சரிவராது’ என்று சொன்னவனிடம் போய் ‘எப்படிப் பேச?’ என்ற தயக்கம் வந்து, அதைத் தடுத்தது.
இப்படி யோசித்துக் கொண்டே வாகனம் நிறுத்துமிடம் வந்திருந்தாள். ஓரிரு நிமிடங்கள் அப்படியே நின்றாள். கல்லூரி கட்டிடத்தைப் பார்த்தாள். அங்கே நிற்க நிற்க இதயத்தின் பாரம் ஏறிக் கொண்டே போவது போல் இருந்தது.
அதற்குமேல் தாமதிக்காமல் கல்லூரியிலிருந்து கிளம்பிவிட்டாள்.
யாழோவியம் அத்தியாயம் – 12 தொடர்கிறது…
கல்லூரி நினைவிலிருந்து மீண்டவள், ஓராயிரம் முறையாக கைப்பேசியை எடுத்து வைத்துக் கொண்டு, தயக்கத்தில் தவித்துக் கொண்டிருந்தாள்.
புன்னகையா… புறக்கணிப்பா?
ஊட்டியின் பசுமை மலைத்தொடர்களில், பனிமூட்டம் படர்ந்த அதிகாலையில் கதிர்வேல் மனதோடு ஒரு ரயில் பயணம்.
Read Now →