Kathambari Novels
அத்தியாயம் – 15
சற்றுநேரம் அதே நிலையில் இருந்த அரவிந்த்… பின் அவளிடமிருந்து விலகி நின்றான். பூஜாவும் தள்ளி நின்று கொண்டாள். ஓரிரு நொடிகள் பேசாமல் இருந்துவிட்டு, “போலீஸ் ஸ்டேஷன் போகணும் அரவிந்த்” என்றாள்.
“என்னது ஸ்டேஷனா… இவ்ளோ நடந்திருக்கு, இப்படி சொல்ற? இந்த நேரத்தில வேண்டாம். முதல வீட்டுக்குப் போகலாம்”
நேரத்தைப் பார்த்துவிட்டு, “இப்பவே போகணும்” என்றவள், “கொஞ்ச நேரத்தில டுவெல் ஆயிடும். அப்பா பர்த்டே. அதுக்காக நிறைய பிளான் வஞ்சிருந்தேன். எதுவும் இல்லாம போயிடுச்சி. அது பரவாயில்ல.
இதை சவுரவ் சார்கிட்ட கொடுத்தா… நாளைக்கு அப்பா வீட்டுக்கு வர சான்ஸ் இருக்கும்ல… அட்லீஸ்ட் ஒருதடவை அப்பாவ பார்க்க விடுவாங்கள” என்றாள்.
அதன்பின்னும் அவன், “இப்ப போறது சரியா இருக்காது. அதோட ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர் இருக்க மாட்டாங்க பூஜா” என்று மறுத்தான்.
“போய் பார்க்கலாமே, அதுக்கு முன்னாடியே…” என்று பாதியிலே நிறுத்தி, பைக்கிலிருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு, “ஆட்டோ மட்டும் பிடிச்சி தாங்க, நான் போய்க்கிறேன்” என்றாள்.
‘ஆட்டோவா?! இவ்ளோ நேரம் அனுபவிச்சதே போதும்’ என்று முணுமுணுத்தபடி பைக்கில் ஏறியவன், “கூட்டிட்டுப் போறதுக்காக சொல்லலை. நீ டயர்டா இருக்கிறியேன்னு சொன்னேன்” என்று பைக் ஸ்டார்ட் செய்து, “வா” என்றதும் பூஜாவும் ஏறிக் கொள்ள, இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
காளிகாட் காவல் நிலையம்!
சவுரவ் காவல் நிலையத்தில்தான் இருந்தார். செக்யூரிட்டி, கார் ரிப்பேர் ஷாப் ஆள் சொன்னதை வைத்து போரன்சிக் ஆர்ட்டிஸ்ட் வரைந்து கொடுத்த இரண்டு படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டும் வேறு வேறு. அப்படியென்றால் நடந்த கொலைகளுக்கான காரணம்… இந்த இருவர்.
எல்லா சோதனை சாவடிகளிலும் இதைக் கொடுக்க வேண்டுமென நினைத்த வேளையில், இரவு நேர காவலர் வந்து பூஜாவும், அரவிந்தும் வந்திருப்பத்தைச் சொன்னார். ‘இந்நேரத்தில் எதற்காக?’ என்று யோசித்தார். ஆனாலும் உள்ளே அனுப்புமாறு சொல்லிவிட்டார்.
இருவரும் உள்ளே நுழைந்ததும், “இவ்ளோ நேரத்துக்கப்புறமா ஒரு பொண்ண ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர கூடாதுனு தெரியாதா?” என்று எடுத்ததுமே ஆங்கிலத்தில் அரவிந்தை கடிந்து கொண்டார்.
“வேண்டாம்னு அரவிந்த் சொன்னத கேட்காம, நான்தான் இப்பவே வரணும்னு சொன்னேன்” என்று பூஜா சொல்ல, அவள் தோற்றத்தைப் பார்த்தவர், “உனக்கு என்னாச்சு, எதுக்கு இப்படி இருக்க?” என்றார்.
“நாலு பேர் துரத்திட்டு வந்தாங்க”
‘யார், என்ன’ என்று விவரம் கேட்க நினைத்தவர், “ப்ச் முதல வீட்டுக்குப் போ. ஃபர்ஸ்ட் எய்ட் எடுத்துக்கோ” என்றார்.
“அப்புறமா பார்த்துக்கிறேன். எனக்கு உங்ககிட்ட சிலது சொல்லணும்” என்று நிற்க… அவர் அரவிந்தைப் பார்க்க, “நானும் சொன்னேன். கேட்கல” என்றதும், “சரி சொல்லு. யாரு… ஏன் துரத்தினாங்க?” என்று அமைதியாக ஆரம்பித்தார்
உணவக பெயர்கள், பிரணாப், நிர்மல் வங்கி கணக்கு விவரங்கள், ‘க்யூஆர்’ குறியீடு அட்டைகளை அவர்முன் வைத்துவிட்டு, ரித்திகா கூறியதை எல்லாம் சொன்னாள்.
“இது ரெஸ்டாரன்ட்ல இருந்த க்யூஆர் கோட்… மெனு பார்க்கிறதுக்காக. ஆனா இது என்னய துரத்தினவங்க செட் பண்ணது… நீங்க வேணா ஸ்கேன் பண்ணி பாருங்க, வெப்சைட் அட்ரஸ்ல ரெஸ்டாரன்ட் நேம்ல டிஃபர்ன்ஸ் இருக்கும்.
இந்த சைட்ல கீழ ரெண்டு லிங்க் இருக்கு. ஸ்பெஷல் மெனு பார்க்க ஒன்னு, ரெஸ்டாரன்ட் பத்தி பீட்பேக் கொடுக்கிறதுக்கு ஒன்னு. இது மாலிசியஸ் லிங்க்.
நிர்மல், பிரணாப் அக்கௌன்ட்லருந்து அன்ஆத்தரைஸ்டா மணி ட்ரான்ஸ்பர் ஆகியிருக்கு. அவங்க மெயில், வாட்ஸப்ல வர்ற மாதிரியான லிங்க் எதையும் க்ளிக் பண்ணலைனு ரித்திகா மேம் சொன்னாங்க.
அப்ப இந்த ரெண்டுல ஏதாவது ஒன்ன க்ளிக் பண்ணிருக்கணும். அப்டித்தான் அவங்க மொபைல் ஹேக் ஆகியிருக்கும். இது எனக்கு தெரிஞ்சதாலதான், அவனுங்க என்னய துரத்தினாங்க” என்றாள் படபடவென.
கூடவே தப்பிக்க அரவிந்த் உதவி செய்ததையும் சொன்னாள்.
பூஜா பேச பேச, அவள் கொடுத்த விவரங்களை சவுரவ் பார்த்தார். க்யூஆர் குறியீட்டு அட்டைகளை அலைபேசியில் ஸ்கேன் செய்து பார்த்து முடித்ததும், அரவிந்த் பேச ஆரம்பித்தான்.
“சில ஸ்டேஷன்ல கேட்டப்ப, நிறைய பேரோட பேங்க் அக்கௌன்ட்லருந்து அன்ஆத்தரைஸ்டா மணி ட்ரான்ஸ்பர் ஆகியிருக்குனு கம்ப்ளைன்ட் வந்ததா சொன்னாங்க. ஆக்சுவலி இது பேங்க் ஸ்கேம்” என்று காவல் நிலையங்களில் விசாரித்ததைச் சொன்னான்.
மேலும், “சார் சிட்டில நடக்கிற இந்த பேங்க் ஸ்கேம் இப்படி க்யூஆர் கோட் வச்சிதான் நடந்திருக்கும். ரெஸ்டாரன்ட் வர்ற கஸ்டமர் யாரெல்லாம் அந்த பிராடுங்க செட் பண்ண மாலிசியஸ் லிங்க க்ளிக் பண்றாங்களோ, அவங்க ஃபோன் ஹேக் ஆகும்.
ஃபோன ஹேக் பண்ணப்புறம் எப்ப அந்த ஃபோன்லருந்து பேங்க் வழியா ஆன்லைன் பர்ச்சேஸ், பேய்மென்ட், ட்ரான்ஸ்சேக்ஷன் நடக்குதோ, அப்ப அந்த பர்சனோட பேங்க் அக்கௌன்ட் டீடெயில்ஸ் எடுத்திடலாம். அதுக்கப்புறம் மணி ட்ரான்ஸபர்லாம் பெரிய விஷயமே இல்ல” என்றான்.
பூஜா, “ஆனா நிர்மல், பிரணாப் ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ணலைனு ரித்திகா மேம் சொன்னாங்க…” என்றாள்.
“அவங்க மொபைல் பேங்க் ஆப் யூஸ் பண்ணிருக்கலாம்… இல்லனா பேங்க் அக்கௌன்ட் டீடெயில்ஸ் ஃபோன்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கலாம்” என்று அவளைப் பார்த்துச் சொல்லி, “அவங்க ரெண்டு பேர் ஃபோன செக் பண்ணிப் பார்த்தா தெரிஞ்சிடும் சார்” என்றான் சவுரவிடம்.
சொல்லிவிட்டு… தன்னிடமிருந்த பென் ட்ரைவ் மற்றும் சில தாள்களை எடுத்து மேசையில் வைத்து, “இதுல ரெண்டு வீடியோ இருக்கு. ரெண்டலயும் ஓரொரு பர்சனை மார்க் பண்ணிருப்பேன். அவங்க பூஜாவை ஃபாலோவ் பண்ணிட்டு வந்தவங்க.
இந்த பேப்பர்ல அவங்க பைக் நம்பர், வீட்டு அட்ரஸ் இருக்குது.
ரெஸ்டாரன்ட்ல தப்பு நடந்திருக்கோனு பூஜா அப்பா கெஸ் பண்ணிருக்காரு. அது பூஜாக்கும் தெரிஞ்சிருக்குமோனு டவுட் இருந்திருக்கும். அதான் அவளை ஃபலோவ் பண்ணிருக்காங்க. இனி நீங்க பார்த்துக்கோங்க சார்” என்றான் பொறுமையாக.
பென்ட்ரைவை மடிக்கணினியில் போட்டு, வட்டமிட்டுக் காட்டப்படும் அந்த இருவரின் முகங்களைப் பார்த்தார். பின் போரென்சிக் ஆர்ட்டிஸ்ட் வரைந்த இரண்டு படங்களைப் பார்த்தார். நான்கும் வேறு வேறு!
அதன் பின்னர், “இது உங்க ஸ்டேஷன் கேஸ், நீங்களே பார்த்துக்கோங்கனு சொல்லிட்டு, இவ்ளோ பண்ணிருக்க… ஏன்?! ஆமா உன் ஸ்டேஷனுக்காக நீ வேலை பார்ப்பியா… இல்லையா?” என்று அரவிந்திடம் கேட்டார்.
அவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.
அடுத்து பூஜாவைப் பார்த்து, “தேவையில்லாத வேலை பார்த்திருக்க. எதுக்கு இதெல்லாம் நீ பண்ணனும்… அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்?!” என்றார்.
“தேவையில்லாத வேலை இல்லை சார். என் அப்பாக்காக… இத செஞ்சேன். நீங்கதான் எதுவும் செய்யாம இருக்கீங்க” என்று சொன்னதும், “பூஜா சும்மா இரு” என்று அரவிந்த் கண்டித்தான்.
சவுரவ், “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, இப்படிப் பேசுவ? நான் எதும் பண்ணலைனு உனக்குத் தெரியுமா?! எனக்கு இங்க இந்த ஒரு கம்ப்ளைன்ட் மட்டுமில்ல. நிறைய இருக்கு. எல்லாத்தையும் பார்க்கணும். எல்லாத்துக்கும் ஈக்குவல் இம்பார்டென்ஸ் கொடுக்கணும்” என்று கோபப்பட்டார்.
“ஏன் கோபப்படறீங்க… நாங்க கண்டுபிடிச்சதால, உங்களுக்கு கிரெடிட் கிடைக்காதுனு நினைக்கிறீங்களா, எங்களுக்கு எந்த கிரெடிட்டும் வேண்டாம். நீங்களே எடுத்துக்கோங்க” என்றாள்.
அதுவரை ஆங்கிலத்தில் சவுரம் பேசியிருந்தார். ஆனால் பூஜா இப்படிப் பேசப் பேச, அவர் கோபமாக பெங்காலியில் பேசி முடித்திருந்தார்.
அரவிந்தோ தமிழில், “நீ ஏன்தான் இவ்ளோ பேசறியோ பூஜா… போதும். வா, போகலாம்” என்று அழைக்க, “அத அவர் சொல்லட்டும்” என்று அவனிடம் கோபப்பட்டு, அப்படியே நின்றாள்.
‘திடீர்னு என்மேல ஏன் கோபம்?’ என்று புரியாமல் இருந்தாலும், “ப்ச் அவர் பெங்காலில நம்மளை எப்பவோ போக சொல்லிட்டாரு. வா” என்று சொன்ன போது, “ஒரு நிமிஷம்” என்றார் சவுரவ்.
பின், அரவிந்த் தந்த காணொளியில் இருந்தவர்களை, போரன்சிக் ஆர்ட்டிஸ்ட் வரைந்த படங்களை காட்டி, “உன்னை துரத்தின நாலு பேர் இவனுங்களா, பார்த்து சொல்லு” என்று பூஜாவிடம் கேட்டார்.
படங்களைப் பார்த்த பூஜா, “இதெப்படி சார் கிடைச்சது?” என்று அவரிடம் ஆங்கிலத்தில் கேட்க, ‘நீ சொன்ன மாதிரி நான் எதும் செய்யாம இருந்திருந்தா, இது கிடைச்சிருக்காது’ என்று பெங்காலியில் சொன்னார்.
அவர் பேசியது புரியாமல், முழித்துக் கொண்டு நின்றாள்.
‘இவங்களோட’ என்ற சலிப்புடன், “பூஜா, அது அவர் கண்டுபிடிச்சிருக்காரு, ஆமாவா… இல்லையானு மட்டும் சொல்லிட்டு வா” என்று அரவிந்த் தமிழில் சொல்ல… தீர்க்கமாக எல்லாம் பார்த்தவள், “ம்ம்ம் இவனுங்கதான்” என்றாள் ஆங்கிலத்தில்.
‘நீங்க போகலாம்’ என்று சவுரவ் சைகையில் சொல்ல, “சார், அப்பாவ எப்ப விடுவீங்க?” என்று கேட்க, அவர் ஒன்றும் சொல்லவில்லை. “இப்ப பார்க்கவாது விடுங்களேன்” என்று கேட்டு பார்த்தாள். முடியாதென தலையசைத்து, “முதல நீ இங்கிருந்து கிளம்பு” என்றார்.
பூஜா நகராமல் நிற்க, “காலையில வந்து பேசலாம். வா” என்று சொல்லி அரவிந்த் அவள் கைப்பிடித்து வெளியே கூட்டிக் கொண்டு போனான்.
சவுரவ், இரண்டு காவலர்களை அழைத்து அரவிந்த் தந்த வீட்டு விலாசத்தைக் கொடுத்து, ‘இந்த வீடு… வீடு இருக்க ஏரியா முழுசும் இந்த நாலு பேர் இருக்காங்களானு தேடுங்க’ என்று புகைப்படங்களை காட்டி, அவர்களை அனுப்பினார்.
அடுத்து ஒரு காவலரை அழைத்து… வண்டி எண் கொடுத்து, ‘இந்த பைக் எங்க இருக்குன்னு ட்ராக் பண்ணுங்க’ என்று சொன்னார்.
நான்கு பேர் புகைப்படங்களை கொல்கத்தா நகர சோதனைச் சாவடிகளுக்கு அனுப்பினார். இவர்கள் வங்கி பணமோசடியில் தொடர்புடையவர்கள் என்று தகவல் தெரிவித்து, உடனடியாக பிடிக்குமாறு சொன்னார்.
இதை முடித்தபோது ஒரு காவலர் வந்து, ‘சார், சேகரன் ஒருமாதிரி இருக்காரு. அப்பருந்து அவர் பொண்ண பார்க்கணும் சொல்றாரு… இல்லனா பேசவாது செய்யணும்னு கேட்டுக்கிட்டே இருக்காரு’ என்றார்.
‘என்ன செய்ய?’ என்று யோசித்த சவுரவ், ‘நீங்க போங்க. நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்’ என்று லாக்அப் எண் இரண்டு நோக்கிச் சென்றார்.
பூஜா வெளியே வந்ததுமே, அரவிந்த் கையிலிருந்து தன் கையை வேகமாக உருவிக் கொள்ள, “புரியல… எதுக்கு இப்ப என்மேல கோபம்?” என்றான்.
அவளோ, “ச்சே இவ்ளோ கொண்டு வந்து கொடுத்தப்புறமும், அப்பாவ விட மாட்டாங்களா?” என்று எரிச்சல்பட்டாள்.
“நீயும் நானும் கொடுத்தது பேங்க் பிராடு டீடெயில்ஸ். மர்டர் நடந்திருக்குதே, அது இன்னும் அப்படியேதான இருக்கு? உன் அப்பாவ அந்த கேஸ்லதான் விசாரிச்சிட்டு இருக்காங்க”
உடனே அமைதியாகிவிட்டாள்.
அவள் இப்படி இருக்கும் போதே சொல்லிவிட நினைத்தவன், “பூஜா… நீ சவுரவ் சார்கிட்ட பேசற விதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை. அவரோட வயசுக்கு, அனுபவத்துக்கு மரியாதைக் கொடுத்துப் பேசு” என்றான்.
அவள் அமைதியாகவே இருந்தாள்.
“பூஜா, நீ கோபமா பேச போய்தான், அவரும் கோபமா பேசறாரு. நீ மட்டும் ஒழுங்கா பேசியிருந்தா… உன் அப்பாவ பார்க்க விட்டுருப்பாரு”
இன்னும் அமைதிதான் அவளிடம்.
“உன் இஷ்டத்துக்கு கோபப்பட்டு பேசறதெல்லாம் கேட்டுட்டு… நான் வேணா சும்மா இருப்பேன். மத்தவங்களும் அப்படி இருப்பாருங்கனு நினைக்காத”
அவன் சொன்னதுமே விழுக்கென நிமிர்ந்து பார்த்து, “யாரு…? நீ, நான் என்ன பேசினாலும் கேட்டுக்கிட்டு இருப்பியா? அன்னைக்கு என்கிட்ட எப்படிலாம் பேசிட்டுப் போன தெரியுமா…” என்றாள்.
“அதான் என்மேல கோபமா இருக்கியா?”
“எதுக்கு இப்ப இதெல்லாம், டயர்டா இருக்கு… வீட்டுக்குப் போறேன்”
“இரு… நான் ட்ராப் பண்றேன்”
“வேண்டாம், நானே போயிடுவேன்”
“கூட்டிட்டு வர்றப்ப வேண்டாம்னு சொல்லலை… இப்ப மட்டும் ஏன்?”
“அப்ப பயமா இருந்தது. இப்ப இல்ல” என்று நடக்க போக, “ஆனா உன்னைத் தனியா விடற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல” என்று அவள் கைப்பிடித்து நிறுத்திவிட்டு, “வெய்ட் பண்ணு” என்று பைக் எடுத்து வந்து நின்றான்.
இருந்த சோர்வில் அதற்கு மேல் அவனுடன் வாக்குவாதம் செய்யாமல், அவள் ஏறிக் கொண்டதும், அங்கிருந்து கிளம்பினார்கள்.
காளிகாட் பகுதி!
இருவரும் பைக்கில் வந்திறங்கிய நேரத்தில் சில குடியிருப்புவாசிகள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். “என்னாச்சு, எதுக்கு ஆளுங்க நிக்கிறாங்க?” என்று கேட்டான்.
“தெரியலை. ம், நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்ல, “பைக் பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்றான்.
அவன் வருவதற்குள், அங்கே நின்ற செக்ரெட்டரி மனைவியிடம் சென்று இவ்வளவு நேரம் உறங்காமல் இருக்கிறீங்க? என்ன நடந்தது? என்று பூஜா ஆங்கிலத்தில் கேட்டாள். செக்யூரிட்டியை காவலர்கள் விசாரிக்க அழைத்துச் சென்றது பற்றி கூறினார். பின் அவள் காயம், சோர்வு பற்றிக் கேட்டார்.
மேலோட்டமாக நடந்ததைச் சொல்வதற்குள் அரவிந்த் வந்து நின்றான்.
“இது… நீ ஹெல்ப் பண்றதா சொன்ன பையனா?” என்று கேட்க, “ம்ம், டயர்டா இருக்கு ஆண்ட்டி. மேல போறேன்” என்று சொல்லிச் சென்றாள்.
அரவிந்தும் அவளுடனே வந்தான்.
லிப்ட் அருகே சென்றதும், “இதுக்கு மேல நானே போய்டுவேன். நீங்க போங்க” என்றதற்கு, “திரும்பத் திரும்ப இதையே சொல்லாத. இன்னைக்கு நான் இங்கதான் இருக்க போறேன்” என்றான்.
“ப்ச்” என்று எரிச்சலில் ஏதோ பேசப் போக, “இங்க பாரு… இன்னும் யாரையும் அரெஸ்ட் பண்ணல… அதான் இருக்கேன். போ போனு சொல்லாத” என்றான்.
அவள் எதுவும் சொல்லவில்லை.
லிஃப்ட் ஏறி வீடு வந்ததுமே நேரே சமையலறை சென்று பிரிட்ஜிலிருந்து பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தாள். பசி, சோர்வு, தலைவலி… இதனால் வந்ததும் இதைத்தான் செய்ய தோன்றியது. இதைத்தவிர வேறேதுவும் அவள் யோசிக்கவில்லை.
நண்பன் ஹிமான்ஷுக்கு அழைத்து, காலை வரை அக்காவிற்குத் துணையாக இருக்குமாறு சொல்லிவிட்டு, சமையலறை வந்து நின்றவன், “நீ போய் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வா. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
அவள் போகாமல் நிற்கவும், “சொன்னா கேளு. டயர்டா இருக்க. போ…” என்று திரும்ப அழுத்தமாக சொன்ன பிறகே அவள் அறைக்குப் போனாள்.
குளித்து உடைமாற்றி, கைகளின் சிராய்ப்புகளுக்கு களிம்பு போட்டு, நெற்றிக் காயத்திற்கு பேன்ட்எய்டு போட்டுவிட்டு வெளியே வந்தாள். அவளிடம் சென்று காஃபியை நீட்டினான்.
“நானே போட்டுப்பேன்” என்று அவனைக் கடந்து செல்ல போக, “ஹெல்ப் கேட்ட, பண்ணிட்டேனே பூஜா! அப்புறமும் எதுக்கு இவ்ளோ கோபம்? எனக்கு சத்தியமா புரியல” என்றான் கோபத்துடன்.
அவள் சமயலறைக்குள் போக போனதும், “எதுக்கோ கோபப்பட்டுக்கோ. பட் இப்ப வேண்டாம். டைம் என்னென்னு பாரு. ஒழுங்கா காஃபி குடிச்சிட்டு போய் தூங்கு” என்று அதட்டியதும், அவனிடம் காஃபியை வாங்கிவிட்டு, ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
அவனுக்கான காஃபியை எடுத்து வந்து… அவளருகே அமர்ந்து, “பசிக்குதா, எதும் செஞ்சி தரவா?” என்று கேட்க, அமைதியாக இருந்தாள்.
“தலவலிக்கு டேப்லட் போட்டியா?” என்று கேட்க, “போட்ருக்கேன்” என்றாள்.
அதன்பின் இருவருக்கும் இடையே மௌனம்தான். காஃபி குடித்து முடித்தவள் அப்படியே மேசையில் தலை சாய்க்கவும், “உள்ள போய் தூங்கு பூஜா” என்று சொல்லிப் பார்த்தான். கேட்காமல்… கண்களை மூடிக் கொண்டாள்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து கண் திறந்து, “மர்டர் யார் பண்ணிருக்காங்கனு தெரிஞ்சாதான் அப்பாவ விடுவாங்களா… இதெல்லாம் வச்சி ஒன்னும் பண்ண முடியாதா?” என்று கேட்டாள்.
“செக்யூரிட்டியை விசாரிக்க கூட்டிட்டுப் போனதை வச்சி சொல்றேன்… சவுரவ் சார் இத கண்டுபிடிச்சிருப்பாரு” என்றதும், மீண்டும் கண்மூடிக் கொண்டாள்.
திரும்ப கண் திறந்தவள், “அவனுங்க இங்கயும் வருவாங்களோ?” என்று கேட்க, “எதையும் யோசிக்காம தூங்கு” என்று சொன்ன பிறகுமே, கண்மூடாமல் அவனைப் பார்த்து, “அதான் நீங்க இங்க இருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“அதான் இருக்கிறேன்ல… ரூம்ல போய் பயப்டாம தூங்கேன்” என்று இவ்வளவு அயர்விலும் பேசிக் கொண்டேயிருக்கிறாளே என்ற எரிச்சலில் சொன்னான்.
“சொன்னேன்ல பயம் போயிடுச்சினு. நான் இருந்துப்பேன். நீங்க போங்க”
அவன் பேசாமல் இருக்க, “சரி போறப்போ… டோர் ஆட்டோ லாக்ல போட்டு பூட்டிட்டுப் போயிடுங்க” என்று எழுந்து அறைக்குச் சென்றாள்.
அவள் போகவும், தான் அமர்ந்திருந்த நாற்காலியில் தலைசாய்த்த அரவிந்த், இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு, கால்களை அதில் நீட்டிக் கொண்டு கண்கள் மூடினான்.
இரவு இப்படியே கழிந்தது. காலைப் பொழுதும் வந்தது. வீட்டிற்குள்ளே லேசாக சூரிய கதிர்கள் வந்திருந்தன. நேரம் ஆறரை என்று சுவர் கடிகாரம் காட்டியது. அரவிந்த் எழுந்திருந்தான். வீட்டிற்குப் போக நினைத்ததும் அறையில் தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பினான்.
மெதுவாக கண் திறந்தவள், “டேப்லட் போட்ருக்கேன் அரவிந்த்… ஏன் எழுப்பற? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கணும்” என்றாள்.
“நான் கிளம்பணும் பூஜா… “
“ம்ம்ம், சரி” என்று கண்மூடிக் கொண்டாள்.
“வேலை இருக்கு. இல்லனா இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருப்பேன்”
“நான்தான் உங்களை இருக்கவே சொல்லலையே?” என்று தூக்கத்திலே கூற, “என்னமோ பண்ணு” என்று கோபத்தில் சொல்லிவிட்டு எழுந்து வாசல் வரை போய்விட்டு… மனம் கேட்காமல் திரும்பி வந்து, “எதும்னா கால் பண்ணிடு. எங்கயும் தனியா போயிடாத” என்றும் சொல்லிச் சென்றான்.
மானிக்டாலா பகுதி!
இன்று வாணி இன்னுமே எழுந்து கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்த அரவிந்த், நண்பனுடன் சேர்ந்து தேநீர் குடித்தான். பின் அவனை அனுப்பிவிட்டு காலை உணவு தயாரித்து முடித்து குளிக்கச் சென்றான். திரும்பி வரும்போது வாணி எழுந்து, தம்பி செய்த உணவுகளை மேசையில் எடுத்து வைத்திருந்தாள்.
அவனைப் பார்த்ததும், “எப்போ வந்த?” என்றாள்.
“இப்பத்தான்” என்றதும், “என்னடா சொல்ற, ஏன் இவ்ளோ லேட்?” என்று திகைப்புடன் கேட்க, நடந்ததை அவன் சொல்ல, “என்ன இப்படி நடந்திருக்கு, பூஜாக்கு ஒன்னும் இல்லைல?” என்று பதறிப் போய் கேட்டாள்.
“லைட்டா கைல ப்ரூஸ்சஸ்… நெத்தில சின்னதா காயம்” என்றவன், “க்கா அவனுங்களால திரும்ப அவளுக்குப் பிரச்சனை வருமோனுதான், அவங்க வீட்ல நைட் தங்கினேன். உன்கிட்ட ஃபோன்ல சொல்ல நினைச்சேன். பட் லேட்டாயிட்டதால ஹிமான்ஷுகிட்ட மட்டும் சொன்னேன்” என்றான்.
அதுபற்றிக் கேட்காமல், “இதுக்கப்புறம் ஒன்னும் பயமில்லயே?” என்று கேட்க,
“இல்லைனுதான் நினைக்கிறேன்” என்று வேகமாக சாப்பிட்டான்.
“நைட் சாப்பிடலையா அரவிந்த்?” என்று அக்கறையாக விசாரிக்க, “ம்ம்ம், பட்
இப்போ ஒரு அக்கியூஸ்ட கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணனும்” என்றான்.
அவனது கண்களில் தெரிந்த சோர்வைப் பார்த்தவள் எழுந்து செல்லவும், “க்கா சாப்பிடாம எங்க போற நீ?” என்று கேட்க, “இருடா வர்றேன்” என்றவள், சற்று நேரத்தில் ஒரு கோப்பையில் இஞ்சி டீயுடன் வந்தாள்.
“இந்த டீய குடிடா” என்றதும், “நானும் ஹிமான்ஷும் குடிச்சோம். இருந்தாலும் குடிக்க தோணுது… கொடு” என்று வாங்கி குடித்தான்.
அவனருகே அமர்ந்து, “நல்ல பையன். டைம்லி ஹெல்ப் பண்ணிருக்க” என்ற வாணிக்கு, பூஜாவிற்காக… இவ்வளவு பார்க்கிறானே என்று தோன்ற, “இந்த நல்ல பையனுக்கு அலைன்ஸ் ஒன்னு வந்திருக்கு. இந்த வீக்என்ட் போய் பார்த்திடலாமா?” என்று கேட்டுப் பார்த்தாள்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை!
சாப்பிட்டு முடித்தவன், சமையலறை சென்று ஜூஸ் எடுத்து வந்து, “இந்தா உனக்காக போட்டு வச்சேன்” என்று கொடுத்துவிட்டு, “ஃபுல்லா குடிச்சிடு. சாப்பிடவும் செஞ்சிருக்கணும். சீக்கிரமா வர பார்க்கிறேன்” என்று சொல்லிக் கிளம்பினான்.
அவன் மனமாற்றத்தை நினைத்து, சிறு புன்னகையுடன் ஜூஸ் குடித்தாள்!
***********
காளிகாட் பகுதி
அரவிந்த் சென்றபின் வெகுநேரம் தூங்கிவிட்டுத்தான் பூஜா எழுந்தாள். அப்பா ஞாபகம்தான் எழுந்ததும் வந்தது. அப்படியே அமர்ந்திருந்தாள். பின்பு எழுந்து பல் துலக்கிவிட்டு வந்தவளுக்கு நல்ல பசி எடுத்தது.
சேமியா உப்புமா கிண்டி சாப்பிட்டாள்.
வீட்டைப் பார்த்தாள். தூசியாக இருந்தது. இன்று அப்பா பிறந்தநாள். இந்த வீடு இப்படி இருக்க வேண்டாமென சுத்தம் செய்ய தொடங்கிவிட்டாள். காஃபி, டீ கோப்பைகளை கழுவி வைத்தாள். அடுப்பு, சமையல் மேடையை துடைத்து எடுத்தாள். வீட்டை பெருக்கி, துடைத்துவிட்டாள்.
திரும்பவும் பசித்தது. மீதமிருந்த உப்புமாவை சாப்பிட்டு முடித்தாள்.
இதற்கிடையே அவள் அத்தை வேறு அடிக்கடி அலைபேசிக்கு அழைத்துக் கொண்டிருந்தார். நேற்றும் அழைத்திருந்தார். எப்படி இருக்க வேண்டிய நாள், இப்படி இருக்கிறதே என்று வருத்தத்தில் அழைப்பை ஏற்காமல் இருந்தாள்.
துணிகளைத் துவைக்க போட்டு, காயப்போட்ட போது வேறொரு அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்ததும்… எதிர்முனையில் பேச பேச, “ஓகே சார்… ஓகே சார்” என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பின் முகமலர்ச்சியுடன் அலைபேசியை வைத்தாள்.
சேகரன் இனி லாக்அப்பில் இருக்க வேண்டியதில்லை என்ற தகவலை கேட்டு, அவள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! அன்று சென்ற காளி கோயிலுக்குப் போக தோன்றியது. அதன்பின்னர் காவல் நிலையம் போக வேண்டும் என்று நினைத்தாள்.
அதற்குமுன்னே அத்தைக்கு சொல்லிவிட நினைத்து, அவருக்கு அழைத்தாள். உடனே அழைப்பை ஏற்றவர், “என்னாச்சு… ஏன் ஃபோன எடுக்க மாட்டிக்கிற? நேத்தும் எடுக்கல. எவ்ளோ பயந்திட்டோம் தெரியுமா?” என்று கோபப்பட்டார்.
“நேத்து ரொம்ப வேலை அத்தை”
“என்ன வேலை… ரெண்டு நிமிஷம் பேச முடியாதா? இதோ இப்போ பேசறியே, இந்த மாதிரி” என்றவர், “சரி ஸ்டேஷன்ல என்னதான் சொல்றாங்க?” என்றார்.
“அத உங்க அண்ணங்கிட்டயே கேட்டுக்கோங்க”
“என்ன பூஜா சொல்ற… அண்ணன் வீட்டுக்கு வந்தாச்சா?”
“வர போறாங்க அத்தை” என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு, “கண்ணனை நேரா சென்னைக்கே வர சொல்லிடுங்க. காயத்திரி டெலிவெரி டைம்ல உங்களுக்கு உதவியா இருக்கும்” என்றாள்.
“அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்டி. முதல இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடுச்சா… அத சொல்லு”
“அப்படித்தான் நினைக்கிறேன். இன்னைக்கு அப்பா வந்ததும் உங்களுக்கு ஃபோன் பண்ண சொல்றேன்”
“சரிம்மா. நீ பார்த்துக்கோ” என்றவர், “சாப்பிட்டியா?” என்று கேட்கவும், “ம்ம்ம் சாப்பிட்டேன். நான் ஸ்டேஷன்க்கு கிளம்பி போகணும். இப்போ வச்சிடறேன்” என்றதும், “சரி சரி அப்புறம் பேசலாம்” என்று அழைப்பைத் துண்டித்தார்.
நேரம் பார்த்தவள் உடனே குளிக்க ஓடினாள். குளித்துவிட்டு வந்தவள், இன்று அப்பாவின் பிறந்தநாள் என்பதால் புடவை அணிந்து கொண்டாள். இத்தனை நாள் முகத்தில் இருந்த சோகம் போய், மலர்ச்சி வந்திருந்தது.
கடகடவென்று கிளம்பிக் கொண்டிருக்கும் போது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. வேகமாக அறையிலிருந்து வந்து பீப்ஹோல் வழியே பார்த்தாள். அரவிந்த் என்றதும், கதவைத் திறக்காமல் யோசித்துக் கொண்டே நின்றாள்.
மீண்டும் மீண்டும் அழைப்பு மணி அடிக்க… கதவைத் திறந்தாள்.
அதுவரை ஜீன்ஸ், டாப் என்ற உடையிலே பார்த்த பூஜாவை, இன்று புடவையில் பார்க்கவும்… விழியெடுக்காமல் அவளையே பார்த்து நின்றான், அரவிந்த்!
