Kathambari Novels
அத்தியாயம் – 14
காளிகாட் காவல் நிலையம்!
சேகரன் தவிப்பு குறையாமல் அதிகமாகி கொண்டே போனது. ‘பயப்படாம இருங்க’ என்று சவுரவ் சொல்லியிருந்தாலும், அவரது உள்ளுணர்வு மகள் பற்றிய பயத்தைக் கொடுத்திருந்தது. ‘என்ன செய்ய?’ என்று தெரியாமல், அந்த அறைக்குள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
இதற்கிடையே வந்திருந்த வழக்கறிஞருடன் சவுரவ் பேசி முடித்திருந்தார். அதேநேரம் முதன்மை காவலர் அபார்ட்மென்ட் செக்யூரிட்டியை அழைத்து வந்திருந்தார். இரண்டு காவலர்களை அழைத்து, விவரங்கள் சொல்லி அவனிடம் விசாரித்து உன்மையை வாங்குமாறு உத்தரவிட்டார்.
இதேபோலே துணை ஆய்வாளர் கூட்டி வந்த ரிப்பேர் ஷாப் ஆட்கள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அவர்கள் உண்மையைச் சொல்ல வெகுநேரம் ஆகாது என்பதால், வீட்டுக்குப் போகாமல் இருந்தார். சற்று நேரத்திற்குப் பின் செக்யூரிட்டியை விசாரித்த காவலர்கள் சவுரவ் முன் நின்றதும், ‘ஏதாவது சொன்னானா?’ என்று கேட்டார்.
சேகரன் பற்றிக் காவலர்கள் விசாரித்தால், கொலை செய்யப்பட்ட மூவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூற வேண்டும். மேலும் சேகரன் கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவில் அனைவரும் தூங்கியதும், சேகரன் காரில் துப்பாக்கியை வைக்க வேண்டும்.
யாரோ ஒருவன் வந்து நிறைய பணம் தந்து, இப்படிச் சொல்ல சொன்னதாக விசாரணையில் செக்யூரிட்டி சொல்லியிருந்தான். பணத்திற்கு ஆசைப்பட்டு தானும் பொய் சொன்னதாக ஒத்துக் கொண்டிருந்தான்.
காவலர்கள் இதை சொன்னதும், “கார் எப்படி ஓபன் பண்ணான்?” என்று கேட்க, “செக்யூரிட்டிகிட்ட… அவன் ஒரு டூப்ளிகேட் கீ கொடுத்து காரை ஓபன் பண்ண சொல்லிருக்கான்” என்றதும், அவர்களைப் போக சொல்லிவிட்டார்.
ரிப்பேர் ஷாப் ஆட்களும் நடந்ததைச் சொல்லியிருந்தார்கள். ‘சேகரன் கார் வேண்டும். உடனே சரி செய்து கொடு. எடுத்து போய் திரும்ப கொண்டு வந்து கொடுத்திடறேன். அன்றே அவரிடம் டெலிவரி செய்துவிடு’ என்று ஒருவன் சொல்ல சொன்னதாகவும், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தாங்கள் இப்படிச் செய்ததாகவும் சொல்லியிருந்தார்கள்.
துணை ஆய்வாளர் வந்து இதைப் பற்றி சொல்லிச் சென்றிருந்தார்.
இவர்களிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்திருந்தது. ஆனாலும் இப்படிச் செய்ய சொன்னவன் பற்றிய விவரங்கள் ஏதும் இவர்களுக்கு தெரியவில்லை. அடையாளம் தெரியும், பார்த்தால் அவனை அடையாளம் காட்டுவோம் என்று கூறியிருந்தார்கள்.
கொலை குற்றத்திற்கு உதவியதாக வழக்கு பதிந்து அவர்களைச் சிறையில் அடைக்க சொல்லி காவலருக்கு உத்தரவிட்டு, கொலை செய்தவனை எப்படி அடையாளம் காண என்று சவுரவ் யோசித்தார்.
செக்யூரிட்டியை… அவன் சந்தித்துப் பேசியது அபார்ட்மென்ட் கேட் பக்கத்தில். முதல்முறை அப்பார்ட்மென்ட் வாசிகளை விசாரித்ததை ஞாபகப்படுத்திப் பார்த்தார். அபார்ட்மென்ட்டில் சிசிடிவி வைத்திருப்பது தரைத்தள முகப்பில் மற்றும் மின்தூக்கி உள்ளே மட்டுமே!
கார் ரிப்பேர் ஷாப் இருந்த இடத்தின் அருகில் சிசிடிவி அமைப்புகள் ஏதும் கிடையாது என்று துணைஆய்வாளர் சொன்னார். அந்த சாலையில் இருக்கும் மற்ற கடைகளில் கேட்டுப் பார்க்கலாம். ஆனால் இரவாகிவிட்டது. கடைகளை அடைத்திருப்பார்கள். நாளைகூட கேட்கலாம்!
ஆனால் இவ்வளவு திட்டமிட்ட கொலைகாரன்… இவர்கள் இருவரை அழைத்து விசாரித்தது தெரிந்து தப்பித்துவிட்டால்?
சற்றுநேரம் யோசித்த சவுரவ், துணை ஆய்வாளரை அழைத்து, “உடனே போரன்சிக் ஆர்ட்டிஸ்ட் யாரு அவைலபிலா இருக்காங்கனு பார்த்து வர சொல்லுங்க” என்று உத்தரவிட்டார்.
****************
பூஜா அழைப்பை ஏற்கவில்லை என்றாலும் திரும்ப திரும்ப அரவிந்த் விடாமல் அழைத்துக் கொண்டிருந்தான். எங்காவது வழி கிடைக்குமா? அதில் நுழைந்து அவளைத் தேடி போய்விடலாம் என்று அவன் கண்கள் அலைபாய்ந்து கொண்டு வந்தன.
தீடிரென ஒரு நொடியில், “ஹலோ” என பூஜா அழைப்பை ஏற்று ஓய்ந்து போன குரலில் சொல்ல, “பூஜா என்னாச்சு!?” என்று பதறிப் போய் அரவிந்த் கேட்டதும், மூச்சு வாங்கிக் கொண்டே, “எனக்கு ஹெல்ப் வேணும்” என்றாள் வலி நிறைந்த மெல்லிய குரலில்.
“சொல்லு என்னென்னு…?” என்று பதறினான்
“இது… இங்க… அரவிந்த் இந்த ஏரியா பேரு தெரியல. ஷாப்லலாம் ஏதோ, ஏதோ பெங்காலியில எழுதியிருக்கு. ப்ச் ஒன்னும் புரியல” என்று மூச்சு வாங்கிக் கொண்டவள், “இங்கருந்து நா… நான் காளிகாட் போகணும், எப்படினுதான் தெரியலை” என்று நடுங்கிடும் குரலில் சொன்னாள்.
தன் பதற்றம் மேலும் அவளைப் பதற்றமாக்கும் என்பதால், “பூஜா… பயப்படாத, முதல என்ன ப்ராப்ளம்னு சொல்லு?” என்று பொறுமையாக பேசினான்.
யாரும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு, “அரவிந்த் நான் ரொம்ப நேரமா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கேன். எனக்கு தப்பிச்சிப் போகணும்” என்றாள்.
அவளைப் பின்தொடர்ந்த இரண்டு பேர் ஞாபகம் வர, “எதுக்கு தப்பிக்கணும், என்ன பிரச்சனைனு சொல்லு?” என்று வேக வேகமாக பதற்றத்தை தவிர்க்க முடியாத குரலில் கேட்டான்.
முகத்தில் வழிந்த வியர்வையைக் கையால் துடைத்தபடி, “முதல… மூனு பேரு துரத்தினாங்க… இப்போ நாலு பேரு… அரவிந்த்” என்று சீராக மூச்சு விட முடியாமல் தவித்தபடி சொன்னாள்.
‘ரெண்டு பேர்தான ஃபலோவ் பண்ணது. இதென்ன நாலு பேர்னு சொல்றா?’ என்று அதிர்ந்து நின்றான்.
“அரவிந்த்… ரொம்ப நேரமா ஓடிட்டே இருக்கேன். எங்க போனாலும் தப்பிக்க முடியலை. நீங்க ஹெல்ப் பண்ணு முடியுமா?” என்று கரகரப்பான குரலில் கேட்டாள்.
வேறு யாருமா, என்ற சந்தேகம் வரவும், “அவங்க ஏன் உன்னைத் துரத்தணும்? எப்படி மாட்டிக்கிட்ட?” என்று கேட்டான்.
“நானா போய் மாட்டிக்கலை… காயம்பா வந்தேன். நான் வந்த டேக்சி பஞ்சர். அதனால வேற டேக்சில ஏறினேன்… அந்த டிரைவர்… அவன்… ப்ச், அவன்தான் பிராடு” என்று கோபம் வெளிப்படுத்தும் குரலில் பேசினாள்.
“அங்க ஏன் நீ போகணும்?” என்றான் புரியாமல்.
“அங்கதான் ஒரு ரெஸ்டாரன்ட்ல தப்பு நடக்குது… நான் தெரிஞ்சிகிட்டேன்”
வந்த கோபத்தில், “உன்னை யாரும் இதெல்லாம் பண்ண சொன்னா?” என்று கத்தினான்.
உதவி கேட்டால்… இத்தனை கேள்வி கேட்கிறானே என்ற எரிச்சல் வர, “நீதான உன் பிரச்சனைனு விட்டுவிட்டுப் போன… அப்போ நான் என்ன பண்ணுவேன்? சும்மாவே வீட்ல உட்கார்ந்திருப்பேன்னு நினைச்சியா…?” என்று அமைதியான குரலில் அழுத்தமாக கேட்டாள்.
“விட்டுட்டு எங்க போனேன்… இப்பவும் உனக்காகத்தான் அலைஞ்சிக்கிட்டு இருக்கேன்” என்று இன்னும் கத்தினான்.
“இப்போ உன்னால ஹெல்ப் பண்ண முடியுமா… முடியாதா?” என்று கோபமாக கேட்டு, “நான் உங்ககிட்ட திரும்பவும் சாரி கேட்டுக்கிறேன். இனி உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். எப்படியும் இந்தப் பிரச்சனை முடிஞ்சிடும்.
நான்… என் அப்பாவ கூட்டிட்டு தமிழ்நாடு போயிடுவேன். ப்ளீஸ் இந்த ஒரு தடவை ஹெல்ப் பண்ணுங்க” என்று கெஞ்சிய போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
அரவிந்தின் உயிர்க்கு மூச்சு நின்று போனது போலிருந்தது!
“பூஜா…” என்று மெதுவாக அழைத்துப் பார்த்தான். பதிலேயில்லை. சட்டென்று அலைபேசி அழைப்பும் துண்டிக்கப்பட்டது. திரும்ப அழைத்துப் பார்த்தாலும் எடுக்கவில்லை. அவளுக்கு என்னாகியிருக்கும் என்று யோசிக்ககூட பயமாக இருந்தது அரவிந்திற்கு.
இது ஒரு பக்கம்!
இன்னொரு பக்கத்தில் பூஜா மறைந்திருந்த தகரத்தை நோக்கி சுட்டிருந்தான் தேவேஷ். அந்த சத்தத்தில் அலைபேசியை கீழே போட்டிருந்தாள். அதில்தான் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
பயமிருந்தாலும் அலைபேசியை எடுத்துக் கொண்டு அந்த கடை வரிசையில் நிறுத்தியிருந்த டேக்சிகளுக்கு பின், கைப்பையை இறுக்கமாக பிடித்தபடி முட்டி போட்ட நிலையிலே தவழ்ந்து, தவழ்ந்து அடுத்த தெருவிற்குச் சென்றாள்.
பின் எழுந்து ஓட ஆரம்பித்தாள்!
தேவேஷ் ஒருமுறை துப்பாக்கியால் சுட்டான். குறி தவறி, அந்த குண்டு மஞ்சள் நிற டேக்சியில் பட்டது. அதன்பின் சுடவில்லை. அவளைத் துரத்தினான்.
பின்னாலயே ஒருவன் துரத்தி வருவது தெரிந்ததும் பூஜா வேகமாக ஓடினாள். திரும்ப ஒருமுறை தேவேஷ் சுட்டான். சரியாக அந்த நிமிடம் ஓட முடியாமல் கிழே விழுந்ததில், பூஜா தப்பித்தாள்.
அந்த தெருமுனை வந்ததும், அடுத்த தெருவுக்குள் நுழைந்து… நொடி நேரத்தில் அங்கிருந்த பொது கழிவறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.
அவன் இந்த இடத்தை கடக்கும் வரை மூச்சு விடக்கூடாதென்று வாயை மூடிக் கொண்டாள். கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. அரவிந்த் வேறு அழைத்துக் கொண்டிருந்தான்.
காலணி சத்தம் வைத்து அவன் போய்விட்டான் என தெரிந்ததும், அலைபேசி அழைப்பை ஏற்றாள். உடனே அரவிந்த், “பூஜா… உனக்கு…” என்று அதற்குமேல் கேட்க முடியாமல் நிறுத்தவும், “இருக்கேன்” என்று மட்டும் சொன்னாள்.
அவளுடைய உயிருக்கு ஆபத்தில்லை என்ற பின்தான், அவனுடைய உயிர்க்கு மூச்சு விட முடிந்தது!
“அரவிந்த்… எனக்கு சுத்தமா முடியல. ரொம்ப டயர்டா இருக்குது. தலை வேற பயங்கிறமா வலிக்கு அரவிந்த்…” என்று மூச்சிரைக்க சொன்னவள், “எனக்கு தெரிஞ்சத உனக்கு மெசேஜ் பண்ணிட்டு… பேசாம கொல்லணும்னா கொ… கொன்னுக்கோங்கனு அவனுங்க முன்னாடி போய் நின்றலாம்னு தோணுது அரவிந்த்” என்று உயிரோட்டமே இல்லாத குரலில் சொன்னாள்.
அவள் பேசிக் கொண்டிருந்த போதே, “ஏய் பூஜா… அப்படி எதும் பண்ணிடாத ப்ளீஸ்…” என்று அவன் யாசிக்க, “என்னால முடியலை” என்று அழுதாள்.
சட்டென அரவிந்த் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
எந்த அறையின் வாசல் வழியே நுழைந்தாள் என்று தெரியவில்லை, ஆனால் இதயத்தின் அறைகளில் எல்லாம் அவள்தான் இருக்கிறாள் என்பதை அவன் கண்ணீர் துளி அவனுக்கு உணர்த்தியது!
அழுது கொண்டே, “அரவிந்த் என்ன பண்ணன்னு சொல்லேன்” என்று கேட்க, “அழாத பூஜா. அழுதா இன்னும் டயர்டா ஆகும்” என்றான்.
“சரி. எனக்கு ஹெல்ப் பண்ணுவியா… மாட்டியா?” என்று கேட்டாள்.
அவன் நின்ற இடத்திலிருந்து வலப்பக்கம் இடப்பக்கம் நீண்டிருந்த போக்குவரத்து நெரிசல், அனைத்து ரக வாகனங்களின் முகப்புவிளக்கு ஒளிகள், ஒலிப்பான் சத்தங்கள் என்றிருந்த இரவுச் சூழலைப் பார்த்தவன், ‘இங்கிருந்து எப்போது வெளியேறி… எப்படிப் போய் அவளுக்கு உதவ?’ என்று பதற்றத்துடன் யோசித்தான்.
அவன் அமைதியைக் கண்டு, “என் நிலைமையை பார்த்தியா… வேண்டாம்னு சொன்ன உன்கிட்ட போய் எவ்ளோ கெஞ்சிக்கிட்டு இருக்கேன்” என்று அழுதாள்.
“ப்ச், அதலாம் எதுக்கு நினைக்கிற?” என்று அதட்டினான். கூடவே, “இப்ப அப்படி சொல்ல மாட்டேன்” என்றான் அவளை, தன்னை, இருவர் மனதை அறிந்து!
அதை அவள் கவனித்தாள். ஆனாலும் அழுதபடியே இருந்தாள். அவன், “அழாத பூஜா. சத்தம் கேட்கும்” என்றதும், வாய் மூடிக்கொண்டாள்.
மேலும் அரவிந்த், “பூஜா நான் சொல்ற மாதிரி செய்” என்றவன், “உன் கரென்ட் லொக்கேஷனை வாட்சப்ல ஷேர் பண்ணு. பேட்ரோல் போலீஸ்கிட்ட சொல்லி, அங்க வர சொல்றேன்” என்றான்.
“அரவிந்த்… நீ வரமாட்டியா… ப்ளீஸ் நீ வா”
“ட்ராபிக்ல இருக்கேன். வர லேட்டாகும். நான் அங்க வர்றது முக்கியமில்ல. அங்கருந்து நீ எஸ்கேப் ஆகணும். அதுக்குத்தான் இப்படி. போதும் பேசினது. சென்ட் பண்ணு” என்று அழைப்பைத் துண்டித்தான்.
அவள் இருப்பிடத்தை பகிர்ந்து கொண்டதும், அந்தப் பகுதி எந்த பிரிவின் கீழ் வருகிறதோ அங்கிருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்தான். அவர்களிடம் விடயத்தை சொல்லி, விரைவாக ‘பேட்ரோல் காப்ஸ்’ யாரையாவது அனுப்பும் படி கூறினான்.
திரும்ப பூஜாவிற்குப் அழைத்தான். அழைப்பை ஏற்றவள், “அரவிந்த்… பைக்ல துர… துரத்திறானுங்க” என்று உயிருக்குப் பயந்து ஓடிக் கொண்டே பேசினாள்.
அவளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என மனம் கிடந்து அடித்துக் கொள்ள, “ஏன் ஓடிக்கிட்டே இருக்க. ஏதாவது ஒரு இடத்தில மறைஞ்சி இரு” என்றான்.
“இங்க அந்த மாதிரி எதும் இல்ல” என்று ஒரு சந்திற்குள் புகுந்து கொண்டாள். உடலெங்கும் வியர்வை வழிய… வறண்டு போன குரலில், “எல்லா கடையும் பூட்டிருக்கு அரவிந்த்” என்றாள்.
‘நீ அவள தனியா விட்டுருக்க கூடாது’ என்று தன்னையே குற்றம் சொல்லிக் கொண்டவன், “பூஜா நான் சொல்றது கேளு… இப்படித் தெருக்குள்ளயே ஓடிக்கிட்டு இருக்காம மெயின் ரோட்டுக்கு போ” என்றான்.
எவனாவது வருகிறானா என்று சந்தின் இருபுறமும் பார்த்துவிட்டு, “அவ்ளோ தூரம் ஓடினா மாட்டிக்குவேன்” என்று மறுத்ததும், “மாட்ட மாட்ட. போ…” என்று மட்டும் சொன்னான்.
“வர்றப்பவே பார்த்திட்டேன். அங்க ஷாப்லாம் இல்ல. ரொம்ப இருட்டா வேற இருந்திச்சி” என்று இன்னும் அங்கேயே நின்று சொல்ல, “இருட்டா இருந்தாலும் பரவால்ல… போ. அந்த ஏரியால கன்ஸ்ட்ரெக்ஷன் ஒர்க் நடக்கு. வொர்க்கர்ஸ் யாராவது இருப்பாங்க. அதான் சொல்றேன். போ” என்றான் அழுத்தமாக.
“ம்ம்” என்று அந்த சந்திலிருந்து வெளியே வந்து கிளைச் சாலையில் ஓடினாள். விளக்கொளி தெரியும் வரை வந்தவள், “அரவிந்த் இதுக்கப்புறம் ஒரே இருட்டா இருக்குதே?!” என்று நின்றாள்.
“ப்ச் அவனுங்க வர்றதுக்குள்ள போ பூஜா” என்று எரிச்சலடைந்தான்.
கிளைச்சாலை முடியும் இடத்தில வந்து நின்று, மூச்சு வாங்கி கொண்டு இருள் சூழ்ந்திருந்த முக்கியசாலையின் இருபுறம் பார்த்தாள். வலப்பக்கம் போகவா? இடப்பக்கம் போகவா?’ என்று ஒரு நொடி யோசித்துவிட்டு வலப்பக்கமாக ஒடினாள்.
வெகுநேரம் அவள் பேசவில்லை என்றதும், “பூஜா…?” என்று அழைத்துப் பார்க்க, “இரு… போய்க்கிட்டே இருக்கேன். ஓட கஷ்டமா இருக்குது. அதோட பின்னாடி கார் சவுன்ட் கேட்குது” என்று எரிச்சலில் பேசியதும், “சரி சரி… பார்த்துப் போ, பயப்படாம போ… டென்சன் ஆகாத” என்றான்.
சற்றுதூரம் ஓடியவள், “அரவிந்த் ரைட் சைடுல ஒரு பில்டிங் இருக்குது. அங்க சின்ன டீயூப் லைட் போட்டுருக்காங்க. அந்த பில்டிங் மேல ஏறிடவா? ஏன்னா பின்னால அவனுங்க வர்ற மாதிரி இருக்கு” என்று படபடவென கேட்டாள்.
“வேண்டாம். அங்க சிமென்ட், மட்ரியல் ஸ்டோர் பண்றதுக்குன்னு சின்ன ரூம் இருக்குதானு பாரு… இருந்தா அதுல ஒளிஞ்சிக்கோ”
புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் முன் வந்து நின்றவள், “ம்கூம் வேண்டாம் அரவிந்த். மாட்டிக்குவேன்…” என்று சுவாச ஓட்டம் வேகமாக இருந்த குரலில் மறுத்தாள்.
“அப்புறம் எதுக்கு என்கிட்ட கேட்கிற?” என்று கோபப்பட்டவன், “தேடினா பில்டிங்லதான் தேடுவாங்க. சீக்கிரம் போ” என்று அவசரப்படுத்தினான்.
ஓடிச் சென்று, மெதுவாக தகர கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். கதவை தாழிட பார்த்து, “ப்ச் லேட்ச் மட்டும்தான் இருக்கு” என்று சொல்ல, “பரவாயில்ல. லேட்ச் போட்டுட்டு… ஏதும் கம்பி இருந்தா. அதை கிராஸா வச்சி கிளோஸ் பண்ணு” என்றான்
“கம்பி…” என்று கேள்வியாக கேட்டபடியே தேட, “மொபைல் டார்ச் வச்சி தேடு பூஜா” என்றதும், “ப்ச் அப்படித்தான் தேடறேன். நீ ரொம்ப இன்ஸ்ட்ரெக்ட் பண்ணாத” என்றவள் மரத்துண்டு ஒன்றை எடுத்து, “வுட்பீஸ்தான் கிடைச்சது, அத வச்சி பூட்டிட்டேன்” என்றாள்.
“இனி நீ ஒரு வார்த்தை பேச கூடாது”
“அரவிந்த…”
“பேசாத பூஜா. நீ இருக்கிறேன்னு தெரிய கூடாது” என்றதும், “ம் சரி” என்று தகரத்தின் ஓட்டை வழியே பார்த்துவிட்டு, “அரவிந்த்… கார், பைக்ல அவனுங்க வந்… வந்திட்டாங்க” என்று பயத்தில் வார்த்தைகள் நடுங்க ஆரம்பித்தன.
அவள் மாட்டிக் கொள்வாளோ என்று அவனுக்கும் மரணபீதி இருந்தது. அதை வெளிக்காட்டாமல், “தேடினா பில்டிங்லதான் தேடுவாங்க. அமைதியா இரு பூஜா” என்று சொன்னான்.
மீண்டும் தகரத்தின் ஓட்டை வழியாக பார்த்துவிட்டு “நாலு பேரும் இங்கதான் வர்றானுங்க… போச்சு… போச்சு மாட்டிக்க போறேன்” என்று மெல்லிய குரலில் பயந்தவள், “நான் உன்னய வேண்டாம்னு சொன்னதுக்குப் பழிவாங்கிறியா? உனக்கு என்னய பிடிக்காதுனு தெரிஞ்சும் நீ சொன்னதைக் கேட்டேன் பாரு, என்னை சொல்லணும்” என்று பயம் அதிகமாகி என்னென்னவோ பேசினாள்.
“உளராத பூஜா… உன்னைப் பிடிக்குதுன்னுதான் இவ்ளோவும் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லும் பொழுதே, தகரம் தட்டப்படும் ஓசை கேட்டது.
அரவிந்திற்கும் கேட்டது. பயத்தில் இதயம் வேகமாக துடிக்க, “பேசிடாத பூஜா. அமைதியா இரு” என்று மெதுவாக சொன்னதும், ஒரு மூலையில் சென்று நின்று தன்னைக் குறுக்கிக் கொண்டாள்.
வெளியே நின்று கரண், ஜாதவ் இருகைகளால் தகரக் கதவைக் கோபத்துடன் ஓங்கி ஓங்கி தட்டிக் கொண்டேயிருந்தனர். திறக்கவில்லை என்றதும் கதவை உடைக்க இருவரும் சேர்ந்து முயற்சித்தனர்.
அதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் அதிகமாகி… பின்னால் சென்றிருந்த அந்த கட்டிடத்தின் செக்யூரிட்டிக்கு கேட்டிருந்தால், அவர் முன்பக்கம் வந்திருந்தார். அவர்களிடம் ஏதோ பெங்காலியில் அவர் கேட்க… அதற்கு கரண் கோபப்பட்டு பேசியதும், அந்த செக்யூரிட்டி குரலை உயர்த்தினார்.
கரண் மீண்டும் கோபமாக பேசப் போக, ‘பிரச்சனை வேண்டாம். வா’ என்று அவனை ஜாதவ் அழைத்துச் சென்றான்.
இருவரும் சாலையில் நிற்கும் தங்கள் வாகனங்கள் அருகே சென்று நின்றனர். கட்டிடத்தினுள் சென்று அவளைத் தேடிவிட்டு வந்த அலோக், தேவேஷ், ‘அவள் உள்ளே இல்லை’ என்று சொல்லவும், நால்வரும் சேர்ந்து ‘என்ன செய்ய?’ என்று பேச ஆரம்பித்தனர்.
இதற்கிடையில், அங்கே போடப்பட்டிருந்த நாற்கட்டிலில் சென்று செக்யூரிட்டி படுத்துவிட்டார். தகர அறைக்குள் இருந்த பூஜா, “அவங்க போய்ட்டாங்கனு நினைக்கிறேன். யாரோ வெளிய இருக்காங்க போல” என்றாள் மிக மெதுவான குரலில்.
“யார் இருந்தாலும் வெளிய போக வேண்டாம் பூஜா. போலீஸ் வர்றவரைக்கும் வெய்ட் பண்ணு” என்று அவன் சொல்லும் போதே, சைரன் ஒளி கேட்டது. உடனே “அரவிந்த்… ” என்று அவள் அழைக்க, “வெய்ட் பண்ணு பூஜா, அவங்களே வந்து கதவைத் தட்டுவாங்க. நான் சொல்றேன்” என்றான்.
சைரன் ஒலி கேட்டதுமே நால்வரும் உச்சகட்ட கோபத்தில் இருந்தனர். எப்படி அவள் தப்பித்தாள்? மாட்டிக் கொள்வோமோ? என்ற கோபத்தில் இஷ்டத்திற்கு துப்பாக்கி கொண்டு சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
துப்பாக்கி சத்தம் கேட்ட செக்யூரிட்டி, ‘இவர்களிடமா கோபப்பட்டோம்’ என்ற பயத்தில் அப்படியே அசையாமல் படுத்திருந்தார். அலைபேசி வழியே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால், “பூஜா” என்று நடுங்கும் குரலில் அரவிந்த் அழைக்க, “ஒன்னும் ஆகல” என்றாள்.
அதன்பின் இருவரிடம் மௌனமே!
சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. பூஜா பயந்து போய் கதவைப் பார்க்க, “அவங்க வந்துட்டாங்க. போ போய் கதவைத் திற” என்று அரவிந்த் பைக்கில் ஏறினான்.
ஒரு அங்குலம் கூட நகராமல், “அரவிந்த் இவங்களை நம்பலாமா… யாருன்னே தெரியாது. எப்படி நம்பறது?” என்று கதவைத் திறக்காமல் இருந்தாள்.
“அந்த ஏரியா ஸ்டேஷன்லருந்து அவங்க நம்பர் வாங்கி அவங்ககூட மெசேஜ்ல கம்யூனிகேட் பண்ணிட்டுதான் இருந்தேன். நீ என்னய நம்பறலே… போ, போய் கதவைத் திற”
மெதுவாக சென்றவள், கதவு ஓட்டை வழியே பார்த்தாள். காவலர்கள் சீருடை தெரிந்ததும், மரத்துண்டை எடுத்து, கதவைத் திறந்தாள். அரவிந்த், “பூஜா…?” என்று கேள்வியாக அழைக்க, “ம்ம், வெளிய வந்துட்டேன். இப்போ என்ன பண்ண…?” என்று அமைதியாக கேட்டாள்.
அடுத்தநொடி, “அவங்களோட காளிகாட் போய்க்கோனு மட்டும் சொல்லாத அரவிந்த். நான் போ மாட்டேன்” என்று படபடத்தாள்.
“சொல்லலை, சொல்ல மாட்டேன். நீ அங்க இரு… அவங்களும் இருப்பாங்க. பயப்படாத… எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வந்திடுவேன். பைக் ஓட்டணும். ஃபோன் வைக்கிறேன். எதும்னா கால் பண்ணிடு” என்று கடகடவென சொன்னான்.
“ம்ம் சரி” என்றதும், அழைப்பைத் துண்டித்துவிட்டு பைக் ஸ்டார்ட் செய்தான்.
அவன் அவ்வளவு பேசி முடித்த பின்னும் ஓரளவிற்கே போக்குவரத்து நெரிசல் குறைந்திருந்தது. பூஜாவிடம் பேசும் முன் வழி கிடைத்தால் போகலாமென்றே ஓட்டி வந்திருந்தான். ஆனால் இப்போதோ கிடைத்த வழியியெல்லாம் புகுந்து புகுந்து சென்றான்.
இங்கே பூஜா வெளியே வந்திருந்தாள். மூன்று காவலர்கள் வந்ததைக் கண்டு செக்யூரிட்டி எழுந்து வந்திருந்தார். அங்கே நடந்ததையும் சொல்லியிருந்தார். பூஜாவை நாற்கட்டிலில் வந்து அமருமாறு சொன்னார்கள்.
முக்கால்வாசி இருள் சூழ்ந்த இடத்தில், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் யாரென்றே தெரியாத பயத்தில் மெல்ல வந்து உட்கார்ந்தாள்.
‘எங்கே போக வேண்டும்… கொண்டு போய் விடுகிறோம்’ என்று அவளுக்குப் புரியும் மொழியில் கேட்டார்கள். ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாள். தண்ணீர் தந்தார்கள். அதையும் ‘வேண்டாம்’ என்று மறுத்துவிட்டாள்.
அதன்பின் அவளிடம் எதுவும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. சற்றுத் தள்ளியிருந்த PCR [Police Control Room] வேன் பக்கமாக சென்று ஒரு காவலர் நின்றார். மற்ற இரு காவலர்கள், ‘யாரும் மறைந்து இருக்கிறார்களா?’ என்று சோதனை செய்ய ஆரம்பித்தனர்.
PCR வேனின் விளக்கொளி, கட்டிடத்தின் டியூப்லைட் வெளிச்சம் என்று சூழல் இருந்தது. அமர்ந்திருந்தவள் முன்னே நின்று ஏதேதோ பெங்காலியில் பேசிக் கொண்டிருந்தார் செக்யூரிட்டி.
சற்றுநேரத்தில் அரவிந்த் பைக்கில் வந்து இறங்கினான். அடுத்த நொடி அவன் கண்கள் பூஜாவைத் தேடின. அதற்குள் மூன்று காவலர்கள் வந்து, ‘என்னாச்சு? யாரவர்கள்?’ போன்ற விவரங்களை அவனிடம் கேட்டார்கள். மேலும் சுற்றித் தேடிப் பார்த்ததில் யாருமில்லை என்றும் சொன்னார்கள்.
அவன் வந்தது தெரிந்ததும் பூஜா எழுந்து வந்தாள். செக்யூரிட்டியும் அவளுடன் வந்து நின்றார். ‘பார்த்துக்கிறேன்’ என்று அரவிந்த் சொன்னதால் காவலர்கள் கிளம்பிச் சென்றார்கள்.
செக்யூரிட்டியிடம் நன்றி தெரிவித்தான். சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
‘வா’ என்று பூஜாவைப் பார்த்து தலையசைத்து, அவளை அழைத்துக் கொண்டு பைக் நிறுத்திய இடத்திற்கு வந்தான். தண்ணீர் பாட்டில் எடுத்து தந்தான். வாங்கியவள், பாட்டில் நீரை மடமடவென குடித்தாள்.
அவனிடம் ஓர் அடர் மௌனம்!
பூஜாதான், “தேங்க்ஸ்… நீங்க ஹெல்ப் பண்ணதுக்கு” என்று சோர்வான குரலில் சொல்லிவிட்டு, “போகலாமா?” என்று கேட்டாள்.
அவன் பதிலேதும் சொல்லாமல், இருள் சூழ்ந்திருந்த சாலையில் பைக் முகப்பு விளக்கொளியில் நின்றவளைப் பார்த்தான். அவள் கையில் வைத்திருந்த சிறு பையை வாங்கி பைக்கில் வைத்தான்.
‘எதற்கு?’ என்று புரியாமல் பார்த்தாள்.
மென்மையாக அவள் கைப்பிடித்து, மெல்ல மெல்ல அவன் கைவளைவிற்குள் கொண்டு வந்து நிறுத்தினான். இவ்வளவு நேரமாக அவனது அலைப்புறுதலை வெளிப்படுத்தும் வண்ணம் அவனுக்குள் அவள் இருக்கும் இடத்தில் அவளைச் சாய்த்துக் கொண்டான்!
பின் இத்தனை நாட்களாக அவளது அலைச்சலுக்கு ஆறுதல் கூறும் வகையில் இருகைகளாலும் அவளை அரவணைத்துக் கொண்டான்! பின் அவன் அன்பை தெரிவிக்கும் விதமாக அந்த அணைப்பில் ஓர் அழுத்தம் தந்தான்!!
அபத்தமா? ஆபத்தா?
“ஐயோ!” என்ற அலறலுடன் தரையில் வீழ்ந்தாள் ஹீரா! விழுந்தவள் தூக்கத்திலிருந்து பட்டென்று கண் திறந்தாள்! கண்டது கனவுதான்! தெளிவாகவே தெரிந்தது!! கனவின் பயத்தில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்து கட்டிலில் ஏறி அமர்ந்தாள். ‘ஏன் இப்படி ஒரு கனவு?’ என்று குழம்பினாள்.
Read Now →