Kathambari Novels
காளிகாட் பகுதி!
சேகரன் வீடு முழுதும் தூசி படிந்திருந்தது. வெளியே அலைந்தபடி இருப்பதால் வேலையாள் வரும்போது பூஜா இருப்பதில்லை. அதனால் வீடு சுத்தம் செய்யப் படாமல் இருந்தது. சமையலறையிலிருந்த கிரானைட் மேடையில் கழுவாத டீ கப்புகளும், வெற்று பால் பாக்கெட்களும் கிடந்தன.
இதனுடன் கார் ரிப்பேர் செய்த ரசீது தேடுவதால் சோஃபா, டீபாய், சாப்பாட்டு மேசைகளில் கோப்புகள் கிடந்தன. சிறு காகிதங்கள் வேறு ஹாலில் அங்கே இங்கேயென பறந்து கொண்டிருந்தன.
பூஜா தரையில் படுத்திருந்தாள்!
கண்முழித்து ஒரே இடத்தை வெறித்துப் பார்த்திருந்தாள். அப்பாவைப் பார்த்து இன்றோடு நான்கு நாள் ஆயிற்று. அவரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று மனம் வேண்டியது.
அவளுக்கு இப்போது, ‘என்ன நடக்கிறது?’ என்று புரியாமல் இருந்தது போய், ‘என்ன நடக்கப் போகிறது?’ என்ற பயம் வந்திருந்தது.
அக்கணம் கைப்பேசி அழைப்பு வர எண்ணங்கள் கலைந்து நிகழ்கணத்திற்கு வந்தவள், தொடுதிரையைப் பார்த்தாள். அரவிந்த் அழைப்புதான். மெதுவாக எழுந்து அமர்ந்து, “ஹலோ” என்றாள்.
“என்ன பண்ற?” என்று கேட்டான்.
“சும்மாதான் இருக்கேன். ஏன்… என்ன சொல்லுங்க?”
“ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா?”
“எந்த ஸ்டேஷன்?”
“மானிக்டாலா”
‘இதுவரை இப்படி சொன்னதில்லையே?’ என்ற பதற்றத்தில், “ஏன்… என்னாச்சு? கேஸ் சம்பந்தமா எதுவுமா?” என்று பதறினாள்.
“நீ வா… சொல்றேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
கடகடவென வீட்டைப் பூட்டிவிட்டு மானிக்டாலா கிளம்பிவிட்டான்.
மானிக்டாலா காவல் நிலையம்!
ப்ரீபெய்டு டாக்ஸியில் வந்து இறங்கிய பூஜா, காவல்நிலைய வாயிலில் நின்ற தப்பானைப் பார்த்துப் புன்னகைத்தாள். ‘காய்ச்சல் எப்படி இருக்குது?’ என்று சைகையால் கேட்டபடி அவரருகில் வந்தாள்.
“ஐ அம் ஓகே” என்றார்.
‘என்ன விஷயம்?’ என்று அவர் கேட்க, அரவிந்த் வர சொன்னதாக சொல்லும் போது, வழக்கறிஞர் ஒருவரிடம் பேசியபடி அவன் வெளியே வந்தான். அவரிடம் பேசி அனுப்பிவிட்டு பூஜா முன் வந்தவன், “அப்பவே வந்திட்டியா?” என்றான்.
“இப்பதான். எதுக்காக கூப்பிட்டிங்க?” என்றாள்.
“இரு வர்றேன்” என்று உள்ளே சென்றவன் கையில் டிபன் பாக்ஸோடு திரும்பி வந்து, “உனக்கு இங்க சாப்பாடு பிடிக்கல, சமைச்சி சாப்பிட மனசில்லைனு சொன்னேல… அதான் உனக்கு தமிழ்நாடு ஸ்டைல் ஃபுட் எடுத்திட்டு வந்தேன்.
என்னோட ப்ரீபரேஷன். ஆனா சுமாராதான் இருக்கும். ஏன்னா இந்த ஸ்டைல் ஃபுட் ரொம்ப நான் குக் பண்ணதில்லை. இதுக்குத்தான் கூப்பிட்டேன். ம்ம் இந்தா” என்று பாக்ஸை கொடுத்தான்.
வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்படிப் பார்த்துக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? சாப்பிடு” என்று அவளிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
தப்பான், “கம் பூஜா… கம் ஈட்” என்று சொன்னதும், அவருடைய நாற்காலியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள். அப்படியே இருவரும் அவர்களது ப்ரோக்கன் இங்கிலீஷில் பேசிக் கொண்டனர்.
‘நேத்து வந்தப்போ என்னை தேடினியா பூஜா?’
‘ம்ம்ம்’
‘ஃபோன் பண்ணி வரமாட்டேன்னு சொல்ல நினைச்சேன். ஆனா முடியலை’
‘பரவாயில்ல’ என்றபோது, அவளுக்குள் ஏதோ பொறி தட்டியது. யோசித்தபடி சாப்பிட்டு முடித்துவிட்டு, கைப்பையிலிருந்த சேகரன் அலைபேசியை எடுத்துக் பார்த்தாள். அவள் முகம் ஒருமாதிரி மாறியது.
அந்தநேரம் வெளியே வந்த அரவிந்த், “சாப்பிட்டியா?” என்று வரிசையாக நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் பக்கம் செல்ல, “தேங்க்ஸ்…” என்றவள், “ஒன்னு ஞாபகம் வந்தது” என்றாள்.
“என்ன சொல்லு?” என்றான் பைக்கை வெளியில் எடுத்தபடி.
“மூணாவதா ஐடி எம்பிளாய் மர்டர் நடந்ததுல… அன்னைக்கு நான், அப்பா வெளிய போறதா பிளான் பண்ணியிருந்தோம். ஆனா… அப்பாக்கு வேலை இருந்ததால போகலை.
வரமுடியாதுனு அப்பா எனக்கு ஃபோன்ல சொன்னாரு. அப்படிச் சொல்றப்போ, ‘ஒரு கால் வந்தது. வெளிய போகணும். இம்பார்ட்டன்ட் ஒர்க்’னு சொன்னாரு”
“ஸோ அந்த ஃபோன் நம்பர் யாரோடதுனு தெரிஞ்சா… கேஸ்க்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு சொல்ற. அப்படித்தான?”
“ம்ம்ம்”
“உன் அப்பா மொபைல் வச்சிருக்கியா?”
பதில் சொல்லாமல் குனிந்தபடி நின்றாள்.
“பூஜா எனக்கு லேட்டாகுது. சீக்கிரம் சொல்றியா?” என்று சொல்ல, “அது… அது என் அப்பா ஃபோன்ல கால் ஹிஸ்டரி டெலீட் ஆகியிருக்கு” என்று மெல்ல மெல்ல சொன்னதும், எதுவுமே பேசாமல் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
“ப்ளீஸ்… இப்படிப் பேசாம போகாதீங்க” என்று பைக்கை பிடித்தாள்.
“வேற என்ன பண்ண சொல்ற?” என்று கோபப்பட்டான்.
“ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
“ம், அன்னைக்கு உன் அப்பா வீட்டுக்கு வர்றப்போ எப்படி இருந்தாங்க?”
“டல்லாதான் இருந்தாரு” என்றாள்.
“ஓகே… டெலிகாம் சர்வீஸ் சென்டர்ல கேட்கலாம்”
“எப்போ?”
“இன்னைக்கு நான் லீவ் பூஜா”
“அப்ப போகலாமே?” என்று அவள் அவசரப்பட்டாள்.
“ஹே சாரி! பர்சனல் ஒர்க் இருக்கு” என்றான்.
“சாரி” என்று சொல்லிக் கொண்டாள்.
“எனக்கு ஒரு அக்கா இருக்கிறது உனக்கு தெரியுமா?”
“ம்ம்ம்”
“அவ ஹஸ்பன்ட்… என்னோட மாமா. மிலிட்ரி ஆபிசர். அவர் ஒரு அலைன்ஸ் சொல்லிருக்காரு. இன்னைக்கு நானும் அக்காவும் போய் அந்தப் பொண்ண பார்க்கணும்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர். அதான் லீவ்”
‘இதுக்கு பேசாமலே போயிருக்கலாம்’ என்று முணுமுணுத்தாள்.
“எதுவும் சொன்னியா?” என்று கேட்டான்.
இல்லை என்று தலையசைத்தாள்.
“ஓகே பை. அக்கா வெய்ட் பண்ணுவாங்க” என்று கிளம்பினான்.
பூஜா முகம் ஒருவித ஏமாற்றத்தைக் காட்டியது. மெதுவாக வந்து தப்பான் அருகில் அமர்ந்தாள். அவர் ‘என்ன?’ என்று கேட்க, ‘ஒன்றுமில்லை’ என்றாள். அவர் பேசுவதைச் சற்றுநேரம் கேட்டுக் கொண்டிருந்தவள், வந்த ப்ரீபெய்டு டேக்சியிலே காளிகாட் காவல்நிலையம் சென்றாள்.
உள்ளே செல்லவில்லை. வெளியவே நின்று கொண்டாள். அப்பாவைப் பார்க்க வேண்டுமென்ற ஏக்கம் எக்கச்சக்கமாக இருந்ததால், காவல் நிலையத்தைப் பார்த்தபடி வெகுநேரம் நின்றுவிட்டே சென்றாள்.
******************
கொல்கத்தா நகரின் ஒரு பகுதி!
சிறு சன்னல் வழியே காட்டமாக வந்த வெயில் முகத்தில் விழுந்தபடி இருக்க, அதைப் பொருட்படுத்தாமல் பார்வை ஒரே இடத்தில் நிலைத்து நிற்க தேவேஷ் அமர்ந்திருந்தான்.
யோசனையுடன் ஸ்டூலில் அமர்ந்திருந்த அலோக், ‘அவ விடாம ஸ்டேஷன் வர்றதைப் பார்த்தா… அவ அப்பா அவகிட்ட ஏதும் சொல்லிருப்பானோ?’ என்று சந்தேகமாக கேட்டான்.
பார்வை மாறாமல், ‘அப்படியிருந்தா அவ அத போலீஸ்கிட்ட சொல்லிருப்பா. நம்மள தேடி போலீஸ் வந்திருக்கும்’ என்று தேவேஷ் பதில் சொன்னான்.
‘பேசாம இவளையும்…’ என்று கோபமாக அலோக் ஆரம்பிக்கும் போதே, ‘இந்த நேரத்தில நாமளா ஏதாவது செஞ்சி மாட்டிக்க கூடாது’ என்றான் தேவேஷ்.
அந்தநேரம் கட்டிலிலிருந்து படக்கென்று எழுந்த கரண், ‘அந்தாளு பேசாம இருக்க வரைக்கும்தான், அவன்மேல போலீஸ்கு சந்தேகம் இருக்கும். அவன் மட்டும் பேசிட்டா?’ என்று பாதியிலே நிறுத்தினான்.
‘ப்ச், பேசினா என்னாகும்னு அவனுக்குத் தெரியும். அவன் வாயைத் திறக்க மாட்டான்!’ என்றான் தேவேஷ்.
அப்போது தேவேஷ் முன் வந்தமர்ந்த அவனது இன்னொரு கூட்டாளியான ஜாதவ், ‘அவகூட இருக்கிறவன் போலீஸ்னா… உன்னையும் அலோக்கையும் பார்த்திருந்தா… நீங்க யாரு, என்னென்னு கண்டுபிடிக்க நினைப்பான்ல?! நீ அத யோசிக்கலயா?’ என்று நிதானமாக கேட்டான்.
சிலநொடிகள் பேசாமல் இருந்த தேவேஷ், ‘இப்போ என் யோசனையெல்லாம், அவன்னு இல்ல… போலீஸ் யாராவது நம்மள ஸ்மெல் பண்ணி வர்றதுக்குள்ள, நாம என்ன செய்யணும்தான்’ என்றான்.
அதன்பின் அந்த நால்வரிடமும் பெரிய அமைதி நிலவியது!
*****************
துர்கா நகரிலிருந்து மானிக்டாலா செல்லும் சாலை!
அக்கா தம்பி இருவரும் துர்கா நகர் பகுதியிலுள்ள கஃபேயில் வைத்து பெண் வீட்டாரைச் சந்தித்துவிட்டு காரில் வந்து கொண்டிருந்தனர்.
“ஏன்டா பொண்ணு பிடிக்கலைனு சொன்ன?” என்று வாணி கேட்க, “எதுக்கு இந்தக் கேள்வி கேட்கிறேன்னு தெரியும் க்கா. பேசாம வா” என்றான்.
“அப்படியெல்லாம் வர முடியாது. ஏன்னு சொல்லுடா?”
“பார்த்தேன்… பேசினேன்… பிடிக்கலை. அவ்வளவுதான். அப்புறமா மாமாகிட்ட சொல்லிடு” என்றவன், “பொண்ணு அமையும் க்கா. வருத்தப்படாத” என்றான்.
“அதெல்லாம் நான் வருத்தப்படலை” என்றவள், “பூஜாவை டெய்லி பார்த்துப் பேசறியே… உனக்கு என்ன தோணும்டா?” என்று கேட்டாள்.
“எஸ்பெக்ட் பண்ணேன்… இந்தக் கொஸ்டினை!”
“பதில் சொல்லு அரவிந்த்”
“சொல்லவா… சொன்னா கோபிச்சிக்க மாட்டியே?”
“சொல்லு… சொல்லு” என்றாள் ஆர்வமாக.
“அவ அப்பாமேல எனக்கு டவுட் அதிகமாயிட்டே போகுது”
“ச்சே… எப்ப பார்த்தாலும் கேஸ் பத்தியே யோசிப்பியா?”
“வேற என்னக்கா யோசிக்கணும்?” என்றதும் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது.
அதன்பின், “இன்னைக்கு சமைச்சி எடுத்திட்டு போனியே அவளுக்குத்தான!? அதுக்கும் கேஸ்கும் என்னடா சம்பந்தம்?” என்றதும், அவன் சாலையிலிருந்து பார்வையை எடுத்து அக்காவைப் பார்த்தான்.
“என்ன நான் கவனிக்கலைனு நினைச்சியா… கவனிச்சேன்” என்றாள்.
“அப்படிலாம் நினைக்கலை. கவனிச்சிருப்பேன்னு தெரியும். ஆனா ஏன் காலையிலயே கேட்கலைனு நினைச்சேன்?”
“அதைவிடு அரவிந்த்… பூஜா என்ன சொன்னா?”
“ஒன்னும் சொல்லலை க்கா. என்னை பார்த்துக்கிட்டே நின்னா. நான்கூட கேஸ் பத்தி பேசறது விட்டுட்டு சாப்பிட சொல்றியேனு என்மேல கோபப்படுவானு நினைச்சேன். நல்லவேளை அப்படி எதும் நடக்கலை”
“ஏன்டா… என்ன கேள்வி கேட்டாலும் கேஸ்னு வந்து நிக்கிற?”
“வேற என்ன செய்ய? வேலை அப்படி…” என்று சிரித்தான்.
“நான் நேரடியா கேட்கிறேன். உனக்கு பூஜாவை பிடிச்சிருக்கா? அதனாலதான் அவளுக்காக இவ்ளோ பண்றியா?” என்று கேட்டாள்.
“உனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அதான் அவளைப் பத்தியே பேசற. அவ நம்பர் தர்றேன். பேசி அவகூட ஃபிரண்டாயிடு” என்று சிரித்ததும், வாணியும் சிரித்து, “பாட்டில் ஆர்ட்க்கு திங்ஸ் வாங்கணும்டா. போறப்ப வாங்கிட்டுப் போயிடலாம்” என்றதும், பேச்சின் போக்கு மாறியது.
அரவிந்தும் அதைப் பற்றிப் பேசியபடி காரை செலுத்தினான்.
************
காளிகாட் டெலிகாம் சர்வீஸ் சென்டர்!
தன்னுடன் பூஜாவை அழைத்துக் கொண்டு அடுத்தநாள் அரவிந்த் டெலிகாம் சர்வீஸ் சென்டர் வந்திருந்தான்.
சேகரன் அலைபேசி எண்ணை கொடுத்து, மூன்றாவது கொலை நடந்த அன்று அவர் அலைபேசி அழைப்பு விவர பட்டியலைக் கேட்டு வாங்கியிருந்தான். ஒரு சிறிய கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்த சர்வீஸ் சென்டரின் வெளியே வந்து இருவரும் அதைப் பார்த்தார்கள்.
“மொத்தம் அஞ்சு நம்பர் இருக்கு. ஒன்னொன்னா ட்ரை பண்ணலாம்” என்றான்.
முதல் இலக்கத்தைப் பார்த்துவிட்டு, “இது பெமிலியரா இருக்குது” என்று அவள் அப்பா அலைபேசியில் தட்டச்சு செய்துவிட்டு, “இது அப்பாவோட ஒன்னுவிட்ட அண்ணன் பேர்… என் பெரியப்பா. மைசூர்ல இருக்காரு” என்றாள்.
“நெக்ஸ்ட் ட்ரை பண்ணு”
“பார்த்தவுடனே சொல்லிடுவேன். இது கண்ணா நம்பர்” என்று அவன் முகத்தைப் பார்த்துச் சொல்ல, “அது யாரு?” என்றான் அவள் முகம் பார்த்து.
“என் அத்தை பையன்”
“ஓ! அந்தப் பையனை ஏன் ஹெல்ப்புக்கு கூப்பிடலை?”
“அவன் அப்ராட்ல இருக்கான். இன்னும் நாலு நாளுல வந்திடுவான்னு அத்தை சொன்னாங்க”
“அப்போ அந்தப் பையன் வந்தப்புறம் ஹெல்ப் வேணும்னு என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேல?”
“நான் உங்களை டிஸ்டர்ப் பண்றேனா?” என்று அவனது கண்களைப் பார்த்துக் கேட்க, “இல்லயா பின்ன?” என்று அவனும் அவள் கண் பார்த்துச் சொன்னான்.
உடனே வேறு புறம் முகத்தை திருப்பிக் கொள்ள, “ஹே பூஜா கூல். சும்மாதான் சொன்னேன். சீரியசா எடுத்துக்காதா?” என்றவன், “லிஸ்ட் பாரு” என்றான்.
“நாலாவதா இருக்க நம்பர் என்னோடது. அப்ப மூணாவது நம்பர்லருந்துதான் அப்பாக்கு கால் வந்திருக்கும். ஃபர்ஸ்ட் அஞ்சாவது ட்ரை பண்றேன்” என்று அந்த எண்ணை சேகரன் அலைபேசியில் தட்டச்சு செய்தாள்.
கான்டக்ட் லிஸ்ட் காட்டிய பெயர் பார்த்து, “இது என் அப்பா வேலை பார்க்கிற பேங்க் அசிஸ்டன்ட் மேனஜர் நம்பர்” என்றவள், “இப்போ மூணாவது நம்பர்க்கு ஃபோன் பண்ணிப் பார்க்கிறேன்” என்று அந்த எண்ணிற்கு அழைத்துப் பார்த்து, “அச்சோ சுவிட்ச் ஆஃப்னு வருதே…” என்றாள்.
அவன் யோசித்தான்.
“எதுக்கும் என் மொபைலருந்து ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்” என்றாள்.
“வேண்டாம்” என்று தடுத்தான்.
“ஏன்?”
“சஸ்பெக்ட் பண்ற நம்பர். யாரோடாதோ தெரியல. உன் ஃபோன்லருந்து ட்ரை பண்ண வேண்டாம்?” என்றவன், “இங்க இரு. நான் போய் இந்த நம்பர் டீடெயில்ஸ் வாங்கிட்டு வர்றேன்” என்று உள்ளே சென்று, சற்று நேரத்தில் திரும்பி வந்தான்.
“யார் நம்பர் இது?” என்று கேட்டாள்.
“மூணாவதா கொலை செய்யப்பட்ட ஐடி எம்பிளாய் பிரணாப் நம்பர்” என்றான்.
பூஜாவிற்கு திகைப்பு… பேசாமல் அப்படியே நின்றாள்!
‘இவன் ஏன் அழைத்திருக்க வேண்டும்?’ என்று யோசித்தனர். இருவரும் ஒரு நொடியில், “அப்ப…” என்று ஒருசேர கூற, “என்னென்னு சொல்லு?” என்றான்.
“ஃபர்ஸ்ட் ரெண்டு கொலை நடந்ததுல… அந்த ரெண்டு பேரும்கூட அப்பாகிட்ட பேசிருப்பாங்களோ?”
“நானும் அதான் யோசிச்சேன். வெய்ட் பண்ணு” என்று சொல்லிவிட்டு, சேகரன் கைபேசி எண்ணின் இருபது நாள் அழைப்பு விவரங்கள் கேட்டு வந்தான். நியூ மார்க்கெட் காவல் நிலையத்திலிருந்து… கொலை செய்யப்பட்ட அந்த இரண்டு மெக்கானிக்கல் என்ஜினீயர்களின் அலைபேசி எண்களை வாங்கினான்.
அதன்பின் சேகரன் அலைபேசி அழைப்பு விவரங்கள் வரவும், அதில் இவர்கள் கைப்பேசி எண் இருக்கிறதா என்று பார்த்தான். ஒருவனது எண் இருந்தது.
அவளும் பார்த்துவிட்டு, “ஒருத்தர் நம்பர்தான் இருக்கு” என்று கேட்டாள்.
“இந்த ரெண்டு மெக்கானிக்கல் என்ஜினீயர்ல ஒருத்தனுக்குத்தான் உன் அப்பா பேங்க்ல அக்கௌன்ட் இருக்கு. இது… அவனோட நம்பர். அவன் பேரு நிர்மல். இன்னொருத்தன் அவன் ஃபிரண்ட்” என்று சொல்லிவிட்டு யோசித்தான்.
“இந்த மூனு பேரும் எப்படிபட்டவங்க?”
கொலை செய்யப்பட்ட மூவருக்கும்… பூஜாவைக் கண்காணிப்பவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகித்தான். அவர்கள் யார், என்ன என்று எப்படிக் கண்டுபிடிக்க என்று யோசித்தபடி, “தெரியலை” என்று அவளுக்குப் பதில் சொன்னான்.
“ஒருவேளை பேங்க் ரிலேட்டட் ப்ராப்ளமா?”
“எனக்கும் இந்த டவுட் முதலயே வந்தது. அது இல்லைனு எப்பவோ சவுரவ் சார் கன்ஃபார்ம் பண்ணிட்டாரு. பேங்க் சம்பந்தமா ப்ராப்ளம்னா பேங்க் கஸ்டமர் மேனேஜரை பேங்க்ல மீட் பண்ணி பேசறது ஓகே. இவங்க எதுக்காக பர்சனல் நம்பர்ல பேசியிருக்காங்க?
அந்த ஐடி எம்பிளாய் ஏன் உன் அப்பாவ வீட்டுக்கு வரச் சொல்லணும்? இவரும் முக்கியமான வேலைனு ஏன் உடனே போகணும்? அன்ட் எல்லாத்துக்கும் மேல எதுக்கு உன் அப்பா கால் ஹிஸ்டரியை டெலீட் பண்ணனும்??” என்று மீண்டும் யோசித்தான்.
அப்பாவிற்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட பிரச்சனை இருந்திருக்குமோ? என்ற பயம் வரவும், “அடுத்து என்ன செய்ய?” என்று பூஜா அவனிடம் கேட்க, அவன் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தான்.
“என்ன யோசிக்கிறீங்க?”
“ஒன்னுமில்லை வா போகலாம்”
நடந்து கொண்டே, “இல்லை ஏதோ இருக்கு. சொல்லுங்க” என்றாள்.
அவள் பின்னே நடந்தபடி, “சவுரவ் சாரும் உன் அப்பா மொபைல் நம்பரோட கால் லாக் [call log] செக் பண்ணிருப்பார்ல?!” என்றான்.
இன்னும் பயந்து போய், “பண்ணிருப்பாரா… அதனால என்ன?” என்றாள்.
“அப்படி பண்ணியிருந்தா என்ன முடிவெடுப்பாருன்னு யோசிச்சேன்”
படிக்கட்டில் இறங்கியபடி, “எ… என்ன முடிவு எடுப்பாரு?” என்று குரல் நடுங்க கேட்டதும், “தெரியலை” என்றான், அவனும் இறங்கிக் கொண்டு.
பின்னால் திரும்பி, “இந்த கால் ஹிஸ்டரி டெலீட் பண்ணது தெரிஞ்சா… அப்பா மேல சந்தேகம் அதிகமாகுமோ?” என்று கேட்டாள்.
அதற்குப் பதில் கூறாமல், “நீ… முன்னாடி பார்த்து இறங்கு” என்றான்.
இறங்குவதை நிறுத்தி, “நீங்க… இத அவர்கிட்ட சொல்லுவீங்களோ?” என்று சந்தேகமாக கேட்க, “வழியில நிக்கிறோம். ஃபர்ஸ்ட் கீழ போகலாம்” என்றான்.
மீண்டும் இறங்க ஆரம்பித்தாள்!
அப்படியே பிரம்மை பிடித்தது போல் பூஜா இறங்கிக் கொண்டிருந்தாள்!!
அப்பா வெளியே வரவே முடியாதோ என்று பயந்து கண்கள் கலங்கி காட்சிகள் மங்கலாகத் தெரிந்தன. அப்பாவையே நினைத்துக் கொண்டு வாகனங்கள் வருவதைக் கவனிக்காமல் சாலையைக் கடந்தவளிடம், “பார்த்துப் போ” என்று சொன்னான்.
“ம்ம் சரி” என்றாள்
அவள் குரல் பேதைமை அறிந்து, “அழறியா?” என்று கேட்டான்.
பதில் ஏதும் பேசாமல் வேகமாக சென்று அரவிந்த் பைக் நிறுத்தப்பட்ட மரத்தினருகே நின்றவளுக்கு கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.
பின்னேயே வந்து நின்றவன், “பூஜா என்னாச்சு?” என்று கேட்க, “ஒன்னுமில்லை கி… கிளம்பலாம்” என்று வேறுபக்கம் திரும்பி கண்ணீரைத் துடைத்து தன்னை உறுதியாக்க முயற்சி செய்தாள்.
அவள் தோள் பிடித்து திருப்பி, “பார்த்துக்கலாம் பூஜா. நீ அழாத” என்று அவன் சமாதானப்படுத்த, சட்டென உடைந்து, “ரொம்ப கஷ்டமாருக்கு அரவிந்த்” என்று அவன் நெஞ்சில் நெற்றியை முட்டிக் கொண்டு அழுதாள்.
இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் உடல்மொழியும், முகமொழியும் வெளிப்படுத்தின!
அவன் டிஷர்ட்டை பிடித்துக் கொண்டு, “இன்ட்டெரகேஷன் டைம்ல அப்பாவை எப்படி நடத்துவாங்களோன்னு பயமா இருக்கு. அதுக்கப்புறமா என்னாகும்னு நினைச்சாலும் பயமாயிருக்கு” என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.
அவளை விலக்கி நிறுத்தவா? வேண்டாமா? என்று அவனது கைகள் தயங்கிக் கொண்டிருக்க, “எப்பவுமே அழாம ஸ்ட்ராங்கா இருப்பேல. அந்த மாதிரி இரு. இன்னைக்கு ஏன் இப்படி?” என்றான்.
“எல்லார் முன்னாடியும் அழுதுக்கிட்டு இருக்க முடியுமா? ஆனா வீட்ல போய் அழுதிருக்கேன்” என்று சங்கடத்தில் அவன்மீது சாய்ந்து நின்று அழுதாள்.
பூஜாவின் சங்கடம் புரிந்தது. இருந்தாலுமே அந்த நிலையை தர்மசங்கடமாக அரவிந்த் உணர்ந்தான்.
“ஜெனரல் மேனேஜரா ப்ரோமோஷன் கிடைக்க சான்ஸ் இருக்குதுனு அப்பா சொன்னாங்க. அவரை அந்த இடத்தில வச்சிப் பார்க்கணும்னு நினைச்சிதான் நான் இங்க வந்தேன்.
இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா சத்தியமா வந்திருக்க மாட்டேன். அப்பாவ அங்க வர சொல்லிருப்பேன்” என்று அழுது அழுது புலம்பினாள்.
அந்தச் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவர்களை வித்தியாசமாக பார்த்துச் செல்வதைப் பார்த்தவனுக்கு ஒருமாதிரி இருந்தது.
“எனக்கு அப்பாவை பார்க்கணும் போல இருக்கு அரவிந்த்… அது முடியாதுனு தெரியும். இருந்தும் நேத்திலருந்து ரொம்ப தோணுது”
“நான் முடியுமானு பார்க்கிறேன்” என்றதும், “நிஜமாவா… முடியுமா?” என்று நிமிர்ந்து அவனது முகம் பார்த்து கேட்கவும், “பார்க்கணும். குணாலை வச்சி சவுரவ் சார்கிட்ட பேசிப் பார்க்கலாம். இப்போ நார்மலா இருக்கப் பாரு. இது பப்ளிக் பிளேஸ்” என்றான் மெதுவாக.
அவன் சொன்னபின்தான் புரிந்தது! சட்டென விலகி நின்றாள்!!
கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “சாரி” என்றாள்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு நொடி முழுவதும் பேசாமல், அழாமல் நின்றாள். அதன்பின், “கொஞ்சம் எமோஷனலாயிட்டேன். சாரி” என்றாள்.
அதற்குமே அவன் பதில் சொல்லவில்லை.
எங்கோ பார்த்து நின்றவனிடம், “நா… நான் கிளம்பறேன்” என்று நடந்து போக பார்க்க, “பூஜா நில்லு. நான் டிராப் பண்றேன்” என்றதும் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டாள்.
அரவிந்த் பைக்கை எடுத்து வரவும் பூஜா ஏறிக் கொள்ள இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
*****************
காளிகாட் காவல் நிலையம்!
சவுரவ் கோஷின் முன்னே ஒரு கோரிக்கையோடு குணால் மித்ரா, அரவிந்த் இருந்தனர். பூஜாவும் அவர்களுடன் இருந்தாள்.
