Kathambari Novels
அபத்தமா? ஆபத்தா?
உலகம், வருடம் 2043!!
“ஐயோ!” என்ற அலறலுடன் தரையில் வீழ்ந்தாள் ஹீரா!
விழுந்தவள் தூக்கத்திலிருந்து பட்டென்று கண் திறந்தாள்!
கண்டது கனவுதான்! தெளிவாகவே தெரிந்தது!!
கனவின் பயத்தில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்து கட்டிலில் ஏறி அமர்ந்தாள். ‘ஏன் இப்படி ஒரு கனவு?’ என்று குழம்பினாள்.
எழுந்து தண்ணீர் குடித்து வந்து நேரத்தைப் பார்க்க, ஐந்து என்று அலைபேசி காட்டியது.
திரும்ப உறக்கம் வரும் போல் தெரியவில்லை!
ஏன் இந்தக் கனவு? – யோசித்தபடியே ஹீரா அலுவலகத்திற்கு தயாராக ஆரம்பித்தாள்.
ஹீரா கேம் 24/7 ஸ்டூடியோவில்‘கேம்டெவலப்மென்ட் டீமில்’ ப்ரோக்ராமராக பணிபுரிகிறாள்.
கிளம்பி அலுவலகம் சென்றவளுக்கு… வேலை, நண்பர்களுடன் அரட்டை என்று அந்த நாள் முடிந்தது. அதன் பின்னரான நாட்களில் அந்தக் கனவு வரவில்லை.
அவளும் அதை மறந்துவிட்டாள்.
ஒருவாரம் கடந்திருந்தது!
அன்று அலுவலகத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தவள் அருகில், “ஹாய்” என்று ஒருவன் வந்து அமர்ந்தான்.
திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
எங்கோ அவனை பார்த்த மாதிரி இருந்தது. ‘எங்கே பார்த்தோம்?’ என்ற கேள்வி மூளைக்குள் ஓடிக் கொண்டேயிருக்க,”யார் நீங்க? என்ன வேணும்?” என்றாள்.
“நான் சஞ்சய். ஜியோலாஜிஸ்ட். சேவ் ஹியூமன்ஸ்னு (Save Humans) ஒரு ப்ராஜெக்ட். அதுக்கு உங்க உதவி தேவைப்படுது”
“ப்ராஜெக்டா? ம்ம் எதும் கேம் டெவலப்மென்ட்டா? அததான் இப்படிச் சொல்றீங்களா? பட் அதுக்கும் நீங்க ஸ்டூடியோ வந்துதான் பேசணும்”
“கேம் இல்லைங்க. இது மனித இனத்தைப் பாதுகாக்க ஆரம்பிச்ச ப்ராஜெக்ட். அத பத்தி உங்ககிட்ட பேசணும்”
‘மனித இனத்த பாதுகாக்கணுமா?’ யோசித்தாள். “நீங்க யாருனே தெரியாது. திடீர்னு வந்து ப்ராஜெக்ட்னு சொன்னா எப்படி? அதோட எனக்கு ஒர்க் லோட் அதிகம். இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது” என்று மறுத்தாள்.
“ஒரு ஹியூமனா இருந்திட்டு… இப்படி சொல்லலாமா? நான் சொல்றத…” – சஞ்சய் ஏதோ பேச ஆரம்பிக்க,
“டைம் இல்லைனு சொல்றேன்ல? எதுக்கு நீங்க என்னலாமோ பேசிக்கிட்டு இருக்கீங்க?” – முகம் சுருக்கினாள்.
“ஒரு தடவை நான் பேசறத கேட்டுட்டு அதுக்கப்புறமா முடியுமா முடியாதானு சொல்லுங்க ப்ளீஸ்” – அவன் கெஞ்ச,
“எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல. வேற யார்கிட்டயாவது கேளுங்க” என்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டாள்.
அவன் இன்னும் போகாமல் இருக்கிறான் என்று தெரிந்தும், புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்தாமல் இருந்தாள்.
“உங்களாலதான் இது முடியும். நான் என்ன பேச வர்றேன்னு தெரியாம முடியாதுனு சொல்லாதீங்க. கொஞ்சம் யோசிங்க” – மீண்டும் அவன் கேட்டான்.
“ப்ச், ஏன் இப்படித் தொல்லை பண்றீங்க? முதல இங்க உட்காராம வேற பக்கம் போய் இருங்க” – எரிச்சலுடன் ஹீரா குரல் உயர்த்தினாள்.
அவள் சத்தம் போட்டதில், அந்தப் பெட்டியில் இருந்தவர்களின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பியது. அவனை ஒருமாதிரி பார்த்தனர்.
அதன்பின் சஞ்சய் பேசவில்லை. அதற்குமேல் எப்படிக் கேட்க என்றும் தெரியவில்லை. அடுத்த நிறுத்தம் வந்ததும் இறங்கிக் கொண்டான்.
அரைமணி நேர பயணத்திற்குப் பின் அலுவலகம் வந்திருந்தாள்.
அன்று அவளை டீம் ஹெட் அழைத்து, “கேம் ப்ரொடுயூசர் ஒருத்தர் நியூ கேம் டிசைனோட அப்ரோச் பண்ணிருந்தாரு. தீம் கேட்சியா இருக்குது. நீங்க போய் பார்த்து கேம் டீடெயில்ஸ் வாங்கிக்கோங்க. நீங்க நெக்ஸ்ட் டெவலப் பண்ண போற கேமிங் சாஃப்ட்வெர் அதுதான்” என்று விவரங்கள் சொன்னார்.
“ஓகே சார்” என்று வந்த ஹீரா, பதினோரு மணியளவில் டீம் ஹெட் சொன்ன இடத்திற்குச் சென்றாள். அங்கே அவளை ஒரு அறையில் காத்திருக்கச் சொல்ல, அவளும் சென்று காத்திருந்தாள். சற்று நேரத்தில் கண்ணாடி கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“ஹாய், ஐ அம் ஷான்ட்டோ. கேம் பப்லிஷர் அன்ட் டிசைனர்” என்று ஒருவன் உள்ளே வந்தான்.
“ஹலோ! ஐ அம் ஹீரா, கேம் டெவலப்பர்” என்றவளுக்கு, ‘இவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே?’ என்று எண்ணங்கள் எங்கோ போயின!
வந்தமர்ந்த ஷான்ட்டோ சிலநொடிகள் விட்டுவிட்டு, “என்ன யோசிக்கிறீங்க?” என்று அவள் சிந்தனையைக் களைத்தான்.
“நத்திங்!” – தன் எண்ணவோட்டத்தை நிறுத்திவிட்டு, “கேம் பிளான், ரூல்ஸ் என்ன, கேம் ஸ்பேஸ் எப்படி இருக்கணும், காம்போனென்ட்ஸ், மெக்கானிக்ஸ் அன்ட் கோல் பத்தி சொல்லுங்க?” என்று விவரங்கள் சேகரிக்க ஆரம்பித்தாள்.
“ஃபைன்! ஹியூமன் வெர்சஸ் நியூஹியூமன்… இதுதான் கேமோட ஒன்லைன்” என்றவன், “நேச்சுரல் ரீசோர்சஸ்காக நடக்கிற சிவிலைசேஷன் வார் மாதிரி ஒரு கான்செப்ட்” என்று மொத்தத்தையும் விளக்கினான்.
“நல்ல தீம்” என்றாள்.
“தேங்க்ஸ், இந்த கான்செப்ட் சக்ஸஸ் ஆக நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”
“கண்டிப்பா… ஹண்ட்ரெட் பர்ஸன்ட் ஹெல்ப் பண்ணுவேன்”
மேலும் விவரங்கள் வாங்கிவிட்டு அங்கிருந்து அலுவலகத்திற்கு திரும்பினாள். சற்றுதூரம் ரயில் பயணித்திருந்த வேளையில், ஏனென்றே தெரியாமல் ஹீராவிற்கு அன்றைக்கு கண்ட கனவு ஞாபகத்தில் வந்தது!
முதலில் மங்கலாக தெரிய ஆரம்பித்து… பின் தெளிவாகிக் கொண்டே போனது!
தெளிவாக ஞாபகம் வர வர… தடதடவென இதயத் துடிப்புடன் திடுக்கிட்டாள்!
இதய ஓட்டம் தாறுமாறாக போக கனவை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள்!!
வளிமண்டல புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, விண்ணிற்குச் சென்ற விண்ணோடத்திலிருந்து விண்கலம் ஒன்று பிரிந்து, விண்வெளியில் சூரிய குடும்பத்தின் சுற்றுப் பாதையில் பயணத்தைத் தொடங்கியது.
இவை மனிதர்கள் விண்வெளியில் பயணிப்பதற்காக இருக்கும் பயணியர் விண்கலன். நாலைந்து பேர் சேர்ந்தும் பயணிக்கும் இந்த விண்கலனில் ஹீரா என்ற பெண்ணும் இருந்தாள்.
இந்தப் பயணத்தில் இணைந்திருந்த விண்வெளி வீராங்கனைதான் ஹீரா
பெரிய அளவு பம்பரம் அமைப்பில் விண்கலன்!
அழுத்தம் ஏற்றப்பட்டு, வெப்ப கட்டுப்பாடுகள் உள்ள உட்புறம்! பிரதிபலிப்பு பூச்சு பூசப்பட்ட வெளிப்புறம்! பயணிகள் அனைவர்க்கும் விண்வெளி தெளிவாக தெரியும்படியிருந்த பல சதுர வடிவ சன்னல்கள்!
நூலிழைகள் வெளிவந்த கருப்பு நிற போர்வையில் அங்கங்கே சிவப்பு, ஊதா, பச்சை வர்ண பஞ்சு மிட்டாய்கள் ஒட்டிக்கொண்டது போன்று காட்சியளித்து பால்வெளி! அதை அதிசயத்தில் வாய்பிளந்து பார்த்தபடி ஹீராவும், மற்ற ஐந்து பேரும் பயணித்தனர்!
தீங்கிழைக்கா சில விசித்திர வானியல் நிகழ்வுகள்!
மிதப்பது போல பயணம் செய்யும் பொருள்கள்!
ஒளி உமிழ்ந்து கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்!
சில பல பில்லியன் ஆண்டுகள் பழைமையான மங்கிய விண்மீன்கள்!
அதற்கென்றே உரிய தனித்தன்மையுடன் ஒரு பட்டையில் சுற்றிவரும் சிறிய மற்றும் பெரிய கோள்கள்!
– என்றிருந்த விண்மீன்திரளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்!
அங்கே நுகர்வுணர்வு என்பது இருக்காது!
இருந்தும் அவர்களின் நாசி இரும்பு பட்டறை புகையின் வாசத்தை உணர்ந்தது!
எவ்வித இடர்பாடுகளின்றி நினைத்தபடி போய் கொண்டிருந்த விண்கலனின் திசை சட்டென மாறியது!
பட் பட்டென்று வேகம் அதிகரித்தது!
இதுதான் வேகமென கூற முடியா அசூர வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது!!
ஹீரா உட்பட உள்ளிருந்த அனைவரின் முகத்திலும் மரண பீதி! திரும்ப பூமிக்கு போக முடியுமா? உயிர் பிழைக்க முடியுமா? என்ற பயம்!!
தலைசுற்றியது. உடலின் ஒவ்வொரு அணுவும் ஓங்கி ஓங்கி அடிக்கப்படுவது போல் உணர்ந்தனர்.
அடர்த்தி நிரப்பப்பட்டது போல் இரு காதுகளும் கணமாய் கணத்தது. கை, கால் எலும்புகள் நீண்டு கொண்டு போவது போல் இருந்தது.
இதை எல்லாம் சமாளித்து… ஹீரா விண்கலன் விசையைத் தன் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இருந்தாள்.
ஆனால் விண்கலம் புவி விண்வெளி மையத்தின் தொடர்பிலிருந்து விடுபட்டு, எதற்கும் கட்டுப்படாத, மட்டுப்படாத வேகத்தில் பால்வெளியில் பறந்தது.
உண்மையில் சீறிப் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது!
மற்ற கோள்களின் ஈர்ப்புவிசையில் இழுத்துக் கொள்ளப்படாமல் பயணித்து பால்வெளியின் ஒரு விளிம்பிற்கு வந்தது. விண்கலத்தின் வேகம் வெகுவாக குறைந்திருக்கிறது என்று தெரிந்தாலும் யாருக்கும் கண் திறந்து வெளியே பார்க்க தைரியம் துளியும் இல்லை.
ஹீரா மட்டும் எதிரே என்ன இருக்கிறது என்று கூர்ந்து பார்த்தாள்.
எடை அதிகமான, அடர்த்தி செறிந்த கரும்பொருள் போன்று இருந்தது. ஹீரா, ‘கருந்துளையா? புழுத்துளையா?’ என்று யோசிக்கையில் விண்கலன் அதற்குள் செங்குத்தாக வீழ்ந்தது.
மீண்டும் பழையபடி வேகமெடுத்த விண்கலன், இதுதான் வரைவிலக்கணம் என்று வரையறுக்க முடியா பாதை வழியே பயணித்தது!
அடுத்த சில நிமிடங்களுக்கு விண்கலத்தின் வேகமும், வெளிப்புறம் பரவிய இருளும்… ஆயிரமாயிரம் அடிகள் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுக்குள் தலைகுப்புற விழுவது போன்ற அதீத அச்சத்தை உள்ளிருப்பவர்களுக்குத் தந்தது.
அந்த நிமிடங்கள் நடந்து முடிந்ததும், விண்கலன் வேகம் குறைந்து ஒரு சீரான வேகத்தில் பயணித்தது.
‘பால்வெளி மண்டலத்திற்கு வந்துவிட்டோமா?’ என்ற கேள்வியுடன் மெதுவாக விண்வெளி சூழலை ஹீரா பார்த்தாள்.
இல்லை! வரவில்லை!
இது வேறேதோ புதிதான விண்மீன்திரள் என்று தெரிந்தது. எந்த திசையில் பயணித்து இங்கு வந்திருக்கிறோம் என்று புரியாமல் ஹீரா பதைபதைத்தாள்.
கண்களில் பெரும் கலக்கத்துடன் விண்கலனை கட்டுக்குள் கொண்டு வரவும், பூமியிலிருக்கும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ளவும் தொடர்ந்து தீவிரமாக முயற்சி செய்து பார்த்தாள்.
அவளின் எந்த வினைகளுக்கும் கட்டுப்படாமல்… தூரத்தில் தெரிந்த பூமியின் நகல் போன்றிருந்த கோளை நோக்கி விண்கலம் போனது. அந்தக் கோளின் கோள்பட்டையில் சுற்றி… பின் வளிமண்டல அடுக்குகளைத் தாண்டி வந்ததும் கோளின் ஈர்ப்புவிசயையால் விண்கலன் இழுக்கப்பட்டது.
பின் வான்குடை உதவியுடன் விண்கலமானது அந்தக் கோளில் தடதடவென்று சத்தத்துடன் தரையிறங்கியது.
இறங்கிய வேகத்தில் அங்கே வெளிப்பட்ட வெப்பக்காற்றில் தரையிலிருந்த சிறுகற்கள் போன்ற பொருட்கள் எல்லாம் பறந்து, சூழலில் புழுதியைப் பரப்பிக் கொண்டு விண்கலன் நின்றது.
சில நிமிடங்களுக்குப் பின் தூசி புயல் போன்றதெல்லாம் மறைந்தது. ஹீரா உள்ளிருந்தபடியே அந்தப் புதிய கோளைப் பார்த்தாள்.
ஏன் இப்படி… எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்று எதுவும் தெரியாமல் திருதிருவென விழித்திருந்தாள்.
என்ன ஆபத்து வரப்போகிறதோ என்ற பயம் வேறு வந்து பயம் காட்டியது!
ஏதும் புரியாவிட்டாலும் இப்படியே இருக்க கூடாதென நினைத்தவள், திரும்பி விண்வெளி சுற்றுலா பயணத்திற்காக வந்திருந்த பயணிகளைப் பார்த்தாள். எல்லாரும் மயக்க நிலையில் இருந்தனர்.
உடனே ஹீரா எழுந்துவிட்டாள்.
ஒவ்வொருவர் அருகிலும் சென்று அவர்களை எழுப்பிட முயன்றாள்.
யாருமே கண்திறக்கவில்லை!
வெளிப்புற சூழல் உணர்த்திய பாதுகாப்பற்ற தன்மை, உட்புற சூழல் தந்த தனிமை… இரண்டும் அவளை விதிர்விதிர்க்கச் செய்ததில்… என்ன செய்யவென்று தெரியாமல் நின்றாள்.
சற்றுநேரம் அப்படியே அசையாமல் இருந்தாள்.
‘வெளியே போய் பார்க்கலாமா?’ என்று நினைத்தாள். ஆனால் போக பயமாக இருந்தது. அதேநேரம் போகாமல் இப்படியே எவ்வளவு நேரம் இருப்பது என்றும் தோன்றியது.
சில நொடிகள் பலமாக யோசித்துவிட்டு, பார்த்து பார்த்து நடந்து கவனமாக விண்கலத்திலிருந்து இறங்கினாள்.
ஈர்ப்புவிசை எப்படி இருக்கும் நடக்க முடியுமா என்ற பயத்துடனே தரையில் பார்த்துப் பார்த்து கால் வைத்தாள். பின் ஒரு அடி எடுத்து வைத்தாள்.
நடக்க முடியும் என்றே தோன்றியது. ‘புவியை ஒத்த ஈர்ப்புவிசையா?’ என்ற கேள்வியுடன் விண்கலத்திலிருந்து இரண்டு அடிகள் தள்ளி சென்றாள்.
ஒளிர்விடும் சிறுகற்கள் போன்றிருந்த தரைபரப்பு! அதில் அங்கங்கே அடர்நீல நிற குழிகள் இருந்தது!!
வெகு தூரத்தில் நீண்ட மலைத்தொடர் தெரிந்தது! அது கரும்புகையைக் கக்கிக் கொண்டேயிருந்தது!!
இதைப் பார்த்தபடி நடந்து சற்றுதூரம் வந்திருந்தாள்.
வரும் வழியில் வறண்ட படுகைகள், மணிவடிவில் செதுக்கப்பட்ட ஸ்தூபிகள் தென்பட்டன.
சட்டென சுவாசம் பற்றிய கேள்வி வந்தது. சீராக சுவாசிக்க முடிகிறதே? பூமியில் உள்ளதைப் போன்றுதான் இங்குள்ள காற்றிலும் வாயுக்களோ என்ற எண்ணத்துடன் இன்னும் முன்னேறிச் சென்றாள்.
தட்ப வெப்ப நிலையை பார்த்தவள் பூவியை விட சற்று அதிகமாக தெரிகிறது என்று நினைக்கையில் அருகாமையில் பேச்சு சத்தம் கேட்டது. அதுவரை சற்றே மட்டுப்பட்டிருந்த பயம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.
இருந்தும் சத்தம் வரும் திசையை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி நடந்தாள்.
சில நிமிடங்களில் பள்ளத்தாக்கு வந்தது. அப்பகுதியிலிருந்த கட்டிடங்களின் கட்டமைப்பு பெரியளவிலான எக்சிமோக்கள் வீடு போன்றிருந்தன. அதன் மேற்கூரை ஆமை ஓடு போலிருந்தது.
அதனருகிலே கண்ணாடியால் ஆன உயரமான கட்டிடம் இருந்தது. தரையிலிருந்து ஒவ்வொரு தளத்திற்கும் சுருள்வட்ட படிக்கட்டுகள் இருப்பது… இங்கிருந்து பார்த்தாலே தெரிந்தது.
இவையனைத்தின் மீது செவ்வூதா நிற ஒளி பாய்ந்திருந்தது!
இடையிடையே நேர்கோடுகளாக பச்சை நிற ஒளிக்கற்றைகளும் போய்க் கொண்டிருந்தது!!
உயிர் உறையும் தயக்கத்துடன், பயத்துடன் பள்ளத்தாக்கில் இறங்கி செல்ல செல்ல, அவையாவும் ஆய்வுக்கூடமா இருக்குமோ என்ற சந்தேகமும் வந்தது. இப்போது பேச்சு சத்தமும் நன்றாக கேட்டது. குரல் வரும் பக்கமாக சென்று ஹீரா அங்கே கண்ட காட்சியில் விக்கித்து நின்றாள்.
கூட்டமாக ஆட்கள்… வேற்று கிரக வாசிகள்தான்! சந்தேகமில்லை! ஆனால் ஏறக்குறைய மனிதர்கள் போன்றே இருந்தனர்! என்ன ஒன்று உயரம் மட்டும் அதிகம்!
அவர்களை ஆராய்ந்து முடித்தவள், அந்தக் கூட்டத்தின் முன்னே நின்று ஒருவன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
அவன்தான் இவர்களை வழிநடத்துபவன் என்று நினைத்துக் கொண்டாள்!
என்ன பேசுகிறான்? என்று உன்னிப்பாக கவனித்தாள்.
“நம்ம லெரோன் கிரகத்திலருந்து ஒன்னரை மில்லியன் தூரத்தில இருக்கிற ஓலோரிக்ஸ் கிரகத்த மாசிவ் காஸ்மிக் எனர்ஜி தள்ளினதால… அது அதோட ஆர்பிட்லருந்து விலகி… நம்ம லெரோன நோக்கி வந்துக்கிட்டு இருக்கு. அது கொலீஷன் பாய்ன்ட் ரீச் பண்றதுக்குள்ள நாம இங்கிருந்து வெளியேறணும்” – தலைவன் போல் நின்றவன் பேசினான்.
“இதை சரி செய்ய முடியாதா?” – கூட்டத்தில் ஒருவன் கேட்டான்.
“ட்ரை பண்ணிட்டுதான் இருக்காங்க. அதோட பாதையை மாத்திவிட்டாலும், க்ராவிட்டேஷன் புல் லெரோன ஷேக் பண்ணிடும். கூடவே நிறைய சி-டைப் அஸ்ட்ராய்ட்ஸ் லெரோன் மேல மோதி… மீள முடியாத அழிவை ஏற்படுத்தும். அப்புறம் நாம இங்க நாம உயிர் வாழற சூழல் இல்லாம போயிடும்”
“அப்படினா நம்ம இனம் அழிஞ்சிடுமா?”
“அப்படி அழியக்கூடாது. அழியவும் நான் விட மாட்டேன்” என்று மிக தீவிரமாக சொன்னவன், “அது நடக்காம இருக்கணும்னா… நாம வாழறதுக்கு வேற ஒரு பிளானட் தேவை” என்றான்.
“அப்படியொரு பிளானட் இருக்கா?”
“இருக்கு. சைன்ஸ் ஆஃப் லைஃப் வேற எங்க பாசிபிள்னு கேலக்ஸில… அதைத் தாண்டியும் தேடினப்பதான் லெரோன் மாதிரி இருக்க பூமி பத்தி தெரிஞ்சது. லெரோன்லருந்து 1300 லைட் இயர்ஸ் தூரத்தில இருக்கு”
“இதெப்படி தெரிஞ்சது?”
“அந்த பிளானட் அஸ்ட்ராநட்ஸ் 1977ல வாயேஜர் 1 & 2 ஸ்பேஸ்ஷிப் அனுப்பி இருக்காங்க. அதுலருந்த ஒளி, ஒலி தகடுகளை டீகோட் பண்ணி பார்த்தேன். அங்கிருக்க நேச்சுரல் ரீசோர்சஸ், லைஃப் ஸ்டைல், அவங்க டிஎன்ஏ, மியூசிக், கல்ச்சர்னு… எல்லா டீடெயில்ஸ் இருக்கு. அதைவச்சிதான் சொல்றேன்”
“ஆனா அங்க இருக்க மனுஷங்க நம்மளை அக்ஸப்ட் பண்ணுவாங்களா?”
“அதெப்படி பண்ணுவாங்க?”
“அப்போ?”
“அங்க இருக்க இயற்கை வளத்துக்கு எந்த பாதிப்பும் வராம மனித இனத்தை மட்டும் அழிச்சிட்டோ, அடிமைப்படுத்திட்டோ… நம்ம அங்க குடிபோகணும்” என்றான் தீர்க்கமாக.
“இது முடியுமா?”
“முயற்சி செய்யணும்”
“இது எப்போ… எப்படி நடக்க போகுது?”
“கூடிய சீக்கிரமே ஸ்பேஸ் டைம்ல வார்ம்ஹோல்ஸ் கிரியேட் பண்ணி பூமிக்கு ட்ராவல் செய்ய போறேன். அங்க போய் நம்ம எனர்ஜிக்கு ஈக்வலா இருக்கிற ஒருத்தரை என்னோட கட்டுப்பாட்க்குள்ள கொண்டு வரணும். அதான் ஃபர்ஸ்ட் ஸ்டெப்” என்றான் தீர்க்கமாக.
அதுவரை பேச்சைக் கேட்ட ஹீரா, ‘இந்த எண்ணத்தில இருக்கவனுக்கு யாரு ஹெல்ப் பண்ணுவா?!?’ என்று முணுமுணுப்புடன் திரும்பி நிற்க அவளெதிரில் ஒருவன் நின்றான்.
பயந்து போய் கண்கள் மூடி கத்த பார்க்க, கையால் அவள் வாயை மூடி, “ஷ்ஷ்! கத்தாத” என்றான்.
மெல்ல மெல்ல கண் திறந்து, ‘இவன் யார்? இந்தக் கிரகத்தைச் சார்ந்தவனா?’ என்ற கேள்வியுடன் ஹீரா விழிவிரித்து அவனைப் பார்க்க, “சொல்லு அவங்க பேசினதெல்லாம் கேட்டியா?” என்றான்.
‘ஆம்’ என்றால் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில், ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“பொய் சொல்லாத”
பொய் சொன்னால் எதுவும் செய்துவிடுவானோ? பயத்தில் ‘கேட்டுவிட்டேன்’ என்பது போல் மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.
“என்ன தோணுது?”
“ஒன்னும் தோணலை”
“ப்ச் அதெப்படி? நம்ம மனுஷ இனத்தை இப்படி மொத்தமா ஒருத்தன் அழிக்க நினைக்கிறான். உனக்கு ஒன்னும் தோணலையா?” என்றான் கோபமாக.
‘இவன் மனிதனா? எப்படி இங்கே வந்தான்?’ ஹீரா குழம்பிப் போய் நின்றாலும், “தோணுது” என்றாள்.
“நான் மனுஷங்களை காப்பாத்தணும்னு நினைக்கிறேன். நீ அதுக்கு ஹெல்ப் பண்ணுவியா?” என்று கை நீட்டினான்.
அவள் பதில் சொல்ல யோசித்தாள்!
சற்று தூரத்தில் வேற்று கிரக வாசிகள் கூட்டம் வந்து கொண்டிருந்தது!
அதைப் பார்த்தான். “சொல்லு ஹெல்ப் பண்ணுவியா” என்று அவளிடம் அவசர அவசரமாக அழுத்திக் கேட்டான்.
“உன்னதான் துரத்தி வர்றாங்களா?” – பதில் சொல்லாமல் அவனிடம் கேட்டாள்.
“ம்ம்” என்றான் பதற்றத்துடன்.
“ஏன்?”
“சொல்றேன். நீ ஹெல்ப் பண்ணுவியான்னு சொல்லு?” என்றான் வேகமாக.
“ம்ம்” என்று அவன் கரத்தில் கைவைக்க, அவளது கையை அழுத்திப் பிடித்து, “தேங்க்ஸ்! முதல நாம இங்கிருந்து தப்பிக்கலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.
பின்னேயே வேற்று கிரக வாசி மனிதர்கள் சிலர் துரத்தி வந்தனர்.
தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த இருவரும் ஒரு பெரிய பாதாளத்தின் முன் வந்து நின்றனர். திரும்பி பார்த்த மனிதன், “வா குதிக்கலாம்” என்றான்.
“மாட்டேன்” என்றாள் பாதாளத்தின் இருளைப் பார்த்து பயந்து.
“குதிச்சாதான் தப்பிக்க முடியும்” என்று படபடத்தான்.
“முடியாது”
“இல்லைனா மாட்டிக்கிடுவோம். ப்ளீஸ்” என்றதும், “சரி சரி” என்று கண்ணை மூடிக்கொண்டு ஹீரா குதித்துவிட்டாள்.
“ஐயோ!” என்ற அலறலுடன் தரையில் வீழ்ந்தாள் ஹீரா!
அன்றைய கனவு இதுதான்!!
கனவினை நினைத்துப் பார்த்தவளின் இதய ஓட்டம் இப்போது தாறுமாறாக ஓடவில்லை! தடைபட்டுவிடுமோ என்ற நிலையில் இருந்தது!
ஷாண்ட்டோ, சஞ்சய் இருவரையும் எங்கோ பார்த்தது போல் இருந்ததற்கான காரணம்… தன் கனவில் அவர்களைப் பார்த்ததால்தான்!
ஷாண்ட்டோ… வேற்று கிரக வாசிகளை வழிநடத்தியவன்!
சஞ்சய் அங்கே தன் கைப்பிடித்து ஓடிய மனிதன்!
இதெப்படி சாத்தியம்? கனவில் பார்த்தவர்கள் எப்படி நேரில்? ‘ஐயோ’ என்று தலையில் கைவைத்து விட்டாள்!
இன்றைய நிகழ்வுகள் தற்செயலான ஒன்றா? இல்லை தன் செயல்களால் பாதிக்கப்பட போகும் நிகழ்வுகளா… என்ற கேள்வி ஹீராவிற்கு!
அன்றைய கனவையும்… இன்றைய நிகழ்வுகளையும் சம்பந்தப்படுத்துவது அபத்தமோ? சம்பந்தப்படுத்திப் பார்க்காவிட்டால் ஆபத்தோ? – விடை தெரியாத வினாவால் பெரும் குழப்பத்துடன் இருந்தாள் ஹீரா!!
