Kathambari Novels
மாவட்ட ஆட்சியர் பங்களா, செங்கல்பட்டு!
அனைத்து மாவட்ட ஆட்சியர் சந்திப்பு இருந்ததால், அடுத்த நாளும் மாறன் சென்னையில் இருந்துவிட்டு, இன்றுதான் செங்கல்பட்டு வந்தான். இரண்டு நாட்களின் பணிகள் இருக்கும் என்பதால், வந்ததும் ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டான்.
அன்றைய பணிகளையெல்லாம் முடித்துவிட்டு, மாறன் வீடு வரும் பொழுதே ஒன்பது மணியாயிற்று. கொஞ்சம் இளைப்பாறி வந்து, திலோ, தியாகுவுடன் இரவு உணவை எடுத்துக் கொள்ளத் தொடங்கினான். உண்ணும் பொழுதே, முதல்வருடனான சந்திப்பு பற்றி அப்பாவிடம் பேசினான்.
“நம்பிக்கையே இல்லப்பா. அடுத்த நாள் கலெக்டர் மீட்டிங்ல சிஎம் இதைப் பத்தி பேசவேயில்லை” என்று சோர்வாகச் சொன்னான்.
“டோன்ட் லூஸ் யுவர் ஹோப்” என அவன் தோளில் தட்டி உற்சாகப்படுத்தினர்.
“ம்ம்” என்றவன், “ஆனா நானே எக்ஸ்பெக்ட் பண்ணாதது இது பத்தி சரியான விசாரணை வேணும்னு, இன்னைக்கு ப்ரொபஸர் ஒருத்தர் ஹை கோர்ட்ல பொதுநல வழக்கு போட்டதுதான்” என்றான்.
“நானும் நியூஸ் பார்த்தேன் மாறன். நீ மீடியாகிட்ட சொன்னதோட பலனா இருக்கலாம். அதான் சொல்றேன். நம்பிக்கையா இருன்னு”
“ம்ம் பார்க்கலாம் என்ன நடக்குதுனு” என்றவன், “ஆனா இதுல சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் தண்டணை வாங்கிக் கொடுக்காம விடக் கூடாதுப்பா” என்று வயதிற்கான வேகத்துடன் சொன்னதும், “ரிலாக்ஸ் மாறன்” என்று அவனை அமைதிப்படுத்தினார்.
மேலும், “இதெல்லாம்…” என்று பேச்சைத் தொடரும் போது, “எனஃப் தியாகு” என திலோ இடையிட்டதும், தியாகு பேச்சை நிறுத்திவிட்டார்.
அம்மா பக்கம் திரும்பி, “என்னம்மா?” என்று கேட்க, “ரெண்டு நாளா வேலைனு இருந்திட்ட. இப்போ வந்தும்… அஃபிஸியலா மட்டும் பேசற. இட்ஸ் அன்ஃபேர் மாறன்” என்று குறைபட்டுக் கொண்டார்.
“ம்மா!” என்று அழுத்திச் சொல்லிக் கொண்டே, திலோவின் அருகில் வந்து அமர்ந்து, “இப்ப நீங்க பேசுங்க. நான் கேட்கிறேன்” என்று சொன்னான்.
“இங்க வேண்டாம். பேசிக்கிட்டே ஒரு வாக் போகலாம்” என்று ஆசைபட்டுக் கேட்டதும், “அவ்வளவுதான? கெட் அப்” என்று திலோவை எழுப்பினான்.
அவர் எழுந்து கொண்டதும், “அப்பா நீங்க?” என்று கேட்க, “நீங்க போங்க. நான் வரலை” என்றவர், “திலோ, அவன் டயர்டா தெரியறான். ஸோ ரொம்ப நேரம் நடக்க வேண்டாம்” என்றார்.
‘சரி’ என்று சொல்லி, திலோ மகனுடன் வீட்டைச் சுற்றி நடக்க கிளம்பினார்.
இரண்டு நாட்கள் வீட்டில், பொட்டிக்கில் நடந்தது அனைத்தையும் திலோ மகனிடம் சொன்னார். பத்து மணி வரை பேசிவிட்டு, இருவரும் வீட்டிற்குள் வந்த நேரம் தியாகு தூங்கியிருந்தார். அம்மாவிடம், ‘குட் நைட்’ சொல்லி, மாறன் தன் அறைக்கு வந்தான்.
அறைக்குள் வந்தவன் உடல் சோர்வு அழுத்தவும் ‘அக்கடா’ என மெத்தையில் அமர்ந்தான். சுடரிடம் பேச ஆசையாக இருந்தது. ஆனால் கண்களில் தூக்கம் சொக்கியது. கைப்பேசியை எடுத்தான். பின் நேரத்தைப் பார்த்தான். பத்திற்கு மேல் எனக் காட்டியது.
‘ரெண்டு வார்த்தைப் பேசிட்டு தூங்கலாம்’ என்று நினைத்து அழைத்தான். ஒரு நொடிக்கும் குறைவான கால அளவில் அழைப்பை ஏற்று, “மாறா” என்றாள்.
“நீ இன்னும் தூங்கலையா?” என்று தூக்க கலக்கத்தில் கேட்டான்.
“ம்கூம் தூங்கலை. பேசி ரெண்டு நாளாச்சு இல்லையா? அதான் உன் ஃபோன்-க்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்”
படு சோம்பலுடன், “நல்ல டயர்ட் சுடர். நாளைக்குப் பேசலாமா?” என்றான்.
“அப்போ சீக்கிரமா ஃபோன் பண்ணிருக்கலாமே?”
அதீத அசதியில் தலையணையில் சாய்ந்தவன், “அம்மாகூட பேசிக்கிட்டு இருந்தேன்” என்றான்.
அவனுடைய நிலைமை புரிந்திருந்தாலும், இரண்டு நாட்கள் ஏற்பட்ட மன உளைச்சலில், “மாறா! எனக்கு உன்னை உடனே பார்க்கணும்” என்றாள்.
“உனக்குத்தான் வீடு தெரியுமே?! பேசாம கார் எடுத்திட்டு வந்து பார்த்திட்டுப் போ” என்று கண்கள் சொருகிப் போய் சொன்னான்.
“பார்த்திட்டுப் போகலாம் மாட்டேன். அப்படியே உன்கூடவே இருந்திடுவேன்”
அவள் நிலைமை தெரியாததால், “ஏன் சுடர் விளையாடுறதுக்கு வேற நேரமே கிடைக்கலையா? தூக்கம் வருது. காலைல பேசவா?” என்று கேட்டதும், “சரி!
ஒன்னே ஒன்னு கேட்கிறேன். அதுக்கு பதில் சொல்லிட்டுத் தூங்கிடு” என்றாள்.
“தயவு செஞ்சி அதைக் கேளு” என்று அவசரப்படுத்தினான்.
மிகுந்த தயக்கத்துடன், “மாறா என்ன நடந்தாலும்… இந்த லவ் சரியா வராதுனு விட்டுட மாட்டியே? காலேஜ்ல பேசாம இருந்தமாதிரி திரும்ப பேசாம போயிட மாட்டியே” என்று ராஜாவின் நடவடிக்கைகள், அவன் வீட்டில் கிடைத்த கோப்பை மனதில் வைத்துக் கொண்டு கேட்டாள்.
அந்தக் கேள்வியில் அவனது தூக்கம் தூரே போய், “சுடர்! என்னாச்சு? எதுக்கு இப்போ இந்த மாதிரி கேட்கிற?” என சோர்வு சென்ற இடம் தெரியாத குரலில் கேட்டான்.
“சும்மாதான் மாறா! வேற ஒன்னுமில்லை”
‘இவளுக்கு என்னாச்சு?’ என்று புரியாமல் எழுந்து அமர்ந்தவன், “சும்மாலாம் கிடையாது. ஏதோ நடந்திருக்கு. இல்லைனா இப்படிப் பேச மாட்ட” என்றான்.
‘எதுவும் நடக்கலை’ என சொல்ல வாய் வந்தாலும், “என்னமோ கேட்கணும்னு தோணிச்சு. அதான் கேட்டேன்” என்று மட்டும் சொன்னாள்.
‘ஏன் இப்படிக் கேட்கிறானு தெரியலையே?’ என குழம்பியவன், “பாண்டிச்சேரி பீச்ல சொன்னது ஞாபகம் இருக்கா?” என்று காதலியையும் காதலையும் வழி நடத்தும் குரலில் கேட்டதும், “இருக்கு மாறா” என நிம்மதியுடன் சொன்னாள்.
“அப்புறம் எதுக்கு சுடர் தேவையில்லாத கேள்வி?” என்று கஷ்டப்படும் குரலில் கேட்டான்.
“சரி! இனிமே கேட்கலை. குட் நைட்” என்று பேச்சை முடிக்க நினைக்கையில், “சுடர் ப்ளீஸ்! கொஞ்சம் நேரம் பேசிட்டுத் தூங்கு” என்றான்.
“உன் வாய்ஸே சொல்லுது, நீ டயர்டா இருக்கேன்னு. தூங்கு மாறா”
“நீயும் தூங்கணும். முழிச்சிருந்து எதையும் போட்டுக் குழப்பிக்க கூடாது. வேல அதிகம். அதான் மீட் பண்ண முடியல. நீ வேற எதும் நினைச்சிக்காத. சீக்கிரம் மீட் பண்ணலாம். சரியா?” என்று அவளைச் சரிசெய்யப் பார்த்தான்.
“ம்ம்ம்”
“வேறு எதுவும் இல்லையே?”
முழுதாக தெரியாமல் ராஜாவைப் பற்றி யாரிடமும் சொல்லப் பிடிக்காததால், “இல்ல மாறா. எனக்குத் தூக்கம் வருது. பை” என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவளிடம், “சுடர் ஒரு நிமிஷம்” என்றான்.
‘என்ன சொல்லப் போகிறான்?’ என அமைதியாக இருந்தவளிடம், “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்று, அவளுக்கென்ற தனிப்பட்ட குரலில் சொல்லி, கைப்பேசியை வைத்தான்.
அவ்வளவு உறக்கமும் மாறனுக்கு உரு தெரியாமல் ஓடிப்போயிருந்தது. ‘இந்த லவ் சரியா வராதுனு பேசாம இருந்திட மாட்டியே மாறா?’ என்று சுடர் கேட்டது மீண்டும் மீண்டும் காதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
அவள் இப்படிக் கேட்டிட காரணம் தான்தானே என்ற உண்மை உள்ளத்தைச் சுட்டது. உடனே அப்படியொரு முடிவெடுக்க காரணமான கல்லூரி நாளை நோக்கி, மனம் வருந்திச் சென்றது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 8
மாறனைப் பார்த்துப் பேசி, அன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. சுடர் ‘இன்றாவது பார்க்க முடியுமா?’ என்ற பரிதவிப்புடன் மாறன் வகுப்பு இருக்கும் கட்டிடத்தை நோக்கி வந்தாள்.
உணவு இடைவேளை என்பதால் மாணாக்கர்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊடே நடந்து வந்து, மாறன் வகுப்பிருந்த நடைகூடத்தில் வந்து நின்றாள். கண்களால் சுற்றித் தேடவும், வகுப்பிற்குள் பார்க்கவும் என்று காத்திருந்தாள்
ஒரு கட்டத்தில் அடுத்த பாடவேளைக்கு நேரமானதால், ‘சரி கிளம்பிவிடலாம்’ என்று திரும்புகையில், கண் எட்டும் தூரத்தில் மாறனும் ஆஷிக்கும் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
அதேநேரத்தில் மாறன் சுடரைப் பார்த்ததால், ஆஷிக்கை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்து அவள் முன்னே வந்து நின்றான்.
‘அவள், தன்னைத் தேடுகிறாள்’ என்பதை அறிந்ததும், உடலில் பள்ளம் விழும் வண்ணம் அவனுடைய உள்ளம் குதித்தது. அந்தக் குஷியை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு புன்னகையுடன் நின்றான்.
அவன் செயல் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆனால் ரசிக்கும் நிலையில் சுடர் இல்லை என்பதால், “எங்க போன? சொல்லிட்டுப் போகணுங்கிற பேசிக் நாலேட்ஜ் தெரியாதா?” என்று, முதன் முதலாக பேசும் பேச்சை அப்படித்தான் சுடர் ஆரம்பித்தாள்.
அதைக் கேட்டதும் ஆஷிக், “என்ன இப்படிக் கேட்கிற?” என தன் அதிருப்தியை வெளிப்படுத்த, ‘நானே என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கேன். இவன் எதுக்காக ஓவரா ரியாக்ட் பண்றான்?’ என்பது போல் மாறன் நண்பனைப் பார்த்தான்.
ஆஷிக் அப்படிக் கேட்டதும், ‘ஐயோ! அதிகமா பேசிட்டோமோ?’ என நினைத்த சுடர், “எங்கே போன?” என சாதாரணமாக கேட்டதும், “அவனுக்கு பீவர்” என்று ஆஷிக் சொன்னான்.
உடனே மாறனின் கண்களைப் பார்த்து, ‘அப்படியா?’ என விழி வழி அவனின் வலி அறிய கேட்டதும், ‘ஆமாம்’ என்று கண் மூடித் திறந்தான்.
“இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டு, மாறனின் நெற்றி அருகே கையைக் கொண்டு போகையில், “இப்ப சரியாயிடுச்சி சுடர்” என ஆஷிக் சொன்னதும், சுடர் சட்டென கையை இறக்கிக் கொண்டாள்.
‘ஏன் இப்படி?’ என்ற ரீதியில் மாறன் நண்பனை முறைத்துப் பார்த்தான்.
ஆஷிக் சிரித்துக் கொண்டே, “பேசிட்டு வா” என்று சொல்லி, வகுப்பறைக்குள் போனதும், சற்று நேரத்திற்கு ஒன்ஸ் அகைன் ‘அவளும் நோக்கினாள். அவனும் நோக்கினான்’ என்ற மொமென்ட்தான்!
அந்த மொமென்ட் முடியவும், “சுடர்! என்னைத் தேடுனியா?” என்று அன்புடன் கேட்டதற்கு, “பின்ன தேட மாட்டாங்களா?” என்று அடிக்கும் குரலில் கேட்டாள்.
“ப்ச்! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு” என்று அரட்டியதும், “ம்ம் ரொம்பத் தேடுனேன்” என்று அடங்கிப் போன குரலில் சொன்னாள்.
“ஏன்?!” என்ற ஒற்றைக் கேள்வி கேட்டதற்கு, “ஈவினிங் பவுன்டர் ஸ்டேச்சுகிட்ட வா, அப்ப சொல்றேன்” என ‘ஓராயிரம் ஆசைகள் உன்னுடன் பேச இருக்கிறது’ என்பது போல் பேசினாள்.
“ஏன்-ன்னு எனக்கே தெரியும். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்”
“அப்போ வர மாட்டியா?”
“அதெல்லாம் வருவேன்” என்று சொல்லும் பொழுதே, “ஏய் சுடர்! இங்க வந்து நிக்கிற? உங்க அப்பா வந்திருக்காங்க. வா” என மூச்சிரைக்க வந்து சுடரின் வகுப்புப் பெண் சொன்னாள்.
“நீ போ. நான் வர்றேன்” என்று சுடர் சொன்னதும், “சரி! சீக்கிரமா வா” என்று, அந்தப் பெண் சென்றுவிட்டாள். இப்போது சுடர் மாறனைப் பார்த்ததும், “சரி போ! ஈவினிங் மீட் பண்ணலாம்” என்றான்.
“அப்பாவைப் பார்க்க நீயும் வர்றியா?” என்று கேட்டதற்கு, “கிளாஸுக்கு டைம் ஆகிடுச்சு சுடர்” என்று மறுத்தான்.
“கொஞ்ச நேரம்தான? வா” என்று வற்புறுத்தியதும், “பட் கிளாஸ கட் பண்றது இதான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்” என்று சொல்லி, அவளுடன் கிளம்பினான்.
கல்லூரியின் இன்னொரு பக்கத்தில்…
ஆளுங்கட்சியின் அமைச்சர் என்பதால் கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு சிறு வரவேற்பு கிடைத்தது. அதன்பின் கல்லூரி வளாக பார்வையாளர் பகுதியில் சுடரின் அப்பாவாக லிங்கம் காத்திருந்தார். கட்சி ஆட்களும் இருந்தனர்.
மாறனுடன் சுடர் அங்கே வந்ததும், “அவர்தான் எங்க அப்பா” என லிங்கத்தைச் சுட்டிக் காட்டியவள், “இங்கேயே நில்லு. நான் போய் பேசிட்டு வர்றேன்” என்று அப்பாவைப் பார்க்கும் ஆவலில் சென்றுவிட்டாள்.
அவள் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்த மாறன், அங்கே கரை வேஷ்டியுடன் நிற்கும் சுடரின் அப்பா, கட்சி பேட்ஜ் குத்திக்கொண்டு நிற்கின்ற ஆட்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
இதற்கு நேர்மாறான மனநிலையில் சுடர் அப்பாவிடம் பேச ஆரம்பித்தாள்.
“அம்மா வரலையா-ப்பா?” என்று கேட்டதும், “நாளைக்கு ராஜா கூட வர்றதா சொல்லிட்டா?” என்றார்.
“அம்மா-பையன் சேர்ந்துக்கிட்டு உங்களைத் தனியா விட்டாங்களா ப்பா?”
“அப்படி இல்ல சுடர். அப்பாக்கு நாளைக்கு கோயம்புத்தூர்ல ஒரு கட்சி மீட்டிங் இருக்கு. இன்னைக்கு சாயங்காலம் கிளம்பனும். அதான் இப்பவே உன்னைப் பார்த்திடலாம்னு வந்துட்டேன்”
சிரித்துக் கொண்டே, “எங்க கிஃப்ட்?” என்றதும், “இதோ” என்று ஒரு பரிசைக் கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார்.
“தேங்க்ஸ் ப்பா” என்று சொல்லி, வாங்கிக் கொண்டாள். “இது நாங்கெல்லாம் சேர்ந்து உனக்கு கொடுக்கிற கிஃப்ட்” என ஒரு பெரிய பரிசை கட்சி ஆட்கள் கொடுத்தார்கள்.
“தேங்க்யூ ஸோ மச்” என்று சொல்லி, அவர்களின் பரிசை வாங்கிக் கொண்ட பின்னும் அவர்களது பேச்சுத் தொடர்ந்தது.
கொஞ்சம் தள்ளி நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாறன்… அங்கே வந்த சுடரின் வகுப்புத் தோழியிடம், “அவர் யாரு?” என்று கேட்டான்.
“சுடர் அப்பா! தமிழ்நாடு மினிஸ்டர்” என்றவள், ஒரு கட்சிப் பேரைச் சொல்லி, “அதுல பெரிய ஆளு” என்று சொல்லி சுடரை நோக்கிச் சென்றாள்.
அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, தன் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று தெரியும். ஏனென்றால் அவர்களின் விருப்பம், எதிர்பார்ப்பு அப்படி!?
உடனே, ‘என் விருப்பம்?’ என்ற கேள்வி உள்ளத்தில் உதித்தது.
ஆனால் அதற்கு… தான் படிக்கப் போகும் படிப்பு, பார்க்கப் போகும் வேலை, சுடரின் குடும்பப் பிண்ணனி, கட்சி ஆட்களுடன் அவளது பழக்கம் இப்படி
எதுவுமே ஒன்றுக்கொன்று ஒத்து வராது என்ற பதில்தான் மூளைக்கு எட்டியது.
சுடர் தன் எதிர்காலம் என்றால், என்னதான் நடுநிலையாக இருந்தாலும், தன் மீது ஒரு குறிப்பிட்ட கட்சியின் சாயம் விழுமல்லவா? என்ற கேள்வி வந்தது. அதற்குப் பதிலில்லாமல் போனது.
சற்று தூரத்தில் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பவளைப் பார்த்தான். இன்றுதான் தன்னிடம் பேசவே ஆரம்பித்தாள். அதற்குள் இப்படியா? என்று கஷ்டமாக இருந்தது. இருந்தும், தன் நிலையை அவளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தான்.
**********
யாழோவியம் அத்தியாயம் – 9 தொடர்கிறது…
அமர்ந்திருந்தவன் அப்படியே தலையணையில் சாய்ந்து கொண்டான். ‘ஏன் திடிர்னு இப்படிக் கேட்கணும்? ரெண்டு நாளுக்கு முன்னாடி நல்லா பேசினவ, இன்னைக்கு ஏன் இப்படிப் பேசணும்? என்ன நடந்திருக்கும்?” என யோசித்துக் கொண்டே உறக்கத்திற்குச் சென்றான்.
அடுத்த நாளிலிருந்து, ‘இந்த முறைகேட்டிற்காக அரசு தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?’ என்ற எதிர்பார்ப்புடன் யாழ்மாறன், சசி அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிச்சமாக இருந்தது.
பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்…
மாணவர் நலனில் அக்கறை கொண்ட ஒரு பேராசிரியர் தொடுத்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது. நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.
அன்றைய விசாரணையின் முடிவில், தமிழக அரசிடம் யாழ்மாறன் கொடுத்த அறிக்கையை சுட்டிக்காட்டி, ‘நுழைவுத்தேர்வு முறைகேடு வழக்கில், இன்னும் ஏன் விசாரணை குழு அமைக்கவில்லை?’ என்று தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு, ‘கால அவகாசம் வேண்டும்’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்ல, நீதிமன்றம் ஒரு வார காலஅவகாசம் கொடுத்து வழக்கை ஒத்திவைத்து. அதே நேரம் இந்த விடயம் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக, ஊடங்களின் விவாதப் பொருளாகவும் மாறியது.
ஆனால் சசியும் மாறனும், ‘எப்படி எல்லாம் டிலே பண்றாங்க?’ என கொதித்து கொண்டிருந்தனர். இருந்தும் அவர்கள் இருவரின் பொறுப்பில் ஒரு மாவட்டம் இருப்பதால், அந்தப் பணிகளில் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.
பதினைந்து நாட்கள் கழிந்திருந்த நிலையில்…
மீண்டும் அதே கேள்வியை நீதிமன்றம் அரசின் முன் வைத்தது. ஆனால் இந்த முறை அரசு தரப்பு தந்த விளக்கத்தில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை.
எனவே சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இது பற்றி விசாரிக்க இரண்டு அதிகாரிகளை நியமித்து, அவர்களின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டது.
அதற்குமேல் தாமதப்படுத்த முடியாது என்பதனால் தமிழக அரசு, ‘ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் [special investigation team]’ என்ற விசாரணைக் குழுவை அமைத்தது.
அந்த குழுவில் நீதிமன்றம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், பணி ஓய்வு அடைந்த ஐபிஎஸ் அலுவலகர் ஒருவர், மூன்று ஆய்வாளர்கள், நான்கு துணை ஆய்வாளர்கள் மற்றும் மூன்று தலைமை காவலர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.
கூடுதலாக வழக்கு சம்பந்தமான கைதுகளைச் செய்வதற்கென்று ‘ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் [special task force]’ என்ற காவல் துறை சிறப்புப் பிரிவையும் அமைத்திருந்தது.
இந்த ஒரு அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து தலைப்புச் செய்தி, முக்கிய செய்தி, அண்மைச் செய்தி, தற்போதைய செய்தி, பிளாஷ் நியூஸ், பிரேக்கிங் நியூஸ் என எல்லா பிரிவுகளிலும் இதுதான் இடம் பெற்றது.
மதிய வேளைக்கு மேல் விசாரணை குழுவில் இடம்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, குழு சார்பாக ஊடங்களைச் சந்திக்க முடிவெடுத்தார். இதற்கான ஏற்பாடு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலே நடந்தது.
ஒரு நீண்ட மேசையில் சிலபல ஊடங்களின் பெயரைத் தாங்கியிருந்த ‘மைக்’ வைக்கப்பட்டிருந்தது. மேலும், பத்திரிகைகள் மற்றும் ஊடங்களின் சார்பில் செய்தி சேகரிக்க வந்த நபர்கள் நின்றனர்.
மைக் எல்லாம் சீராக அமைக்கப்பட்டு முடியவும், அந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் நீதிபதியும் வந்து அமர்ந்தனர்.
இருவரும் நேர்மையான அதிகாரிகளுக்கே உண்டான நிமிர்வுடன், யாருக்கும் பயமில்லை என்ற தைரியத்துடன் அமர்ந்திருந்தனர். பணி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்தான், ஆனாலும் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த தோரணை தவறு செய்வோரை பயங்கொள்ளச் செய்யும்படியாக இருந்தது.
முறைகேடு பற்றி பல கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும், அவர்கள் ‘இதுகுறித்து இப்ப எதுவும் சொல்ல முடியாது’ என்று முடித்துக் கொண்டனர்.
உடனே, “இந்த டீம்ல நீங்க இருக்கிறதை பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்ற பொதுவானக் கேள்விக்குத் தாவியது ஊர் ஊடகம்.
“ரெண்டாவது முறையா ஒரு விசாரணைக்கு லீட் பண்றேன். நேர்மையான முறையில் விசாரணை நடக்கும்” – ஐபிஎஸ் அதிகாரி.
“சார்! ஏதாவது டைம் கொடுத்திருக்காங்களா?” – ஊடகம்.
“ஃபோர்ட்டி டேய்ஸ்ல இந்த ஸ்கேம் பத்தின ஃபுல் ரிப்போர்ட் கவர்ன்மென்ட்-கிட்ட சப்மிட் பண்ணனும்” – ஓய்வு பெற்ற நீதிபதி அலெக்ஸ்.
“சார்! உங்க பையன் கலெக்டர் யாழ்மாறன்தான் இந்த கேஸை இவ்வளவு தூரம் கொண்டு வந்தாரு. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” – ஊடகம்.
பொறுப்பையும் மீறி பெருமையுடன் ஐபிஎஸ் அதிகாரி புன்னகை புரிந்தார். பின், “அவர் அவரோட கடமையைச் சரியா செஞ்சிட்டார். இனி நான் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியா செய்யணும்” என்றார்.
மேலும், “பட் ஒரு அப்பாவா ‘விசில் ப்ளோவர் [whistle blower] ஆஃப் திஸ் ஸ்கேம்’ யாழ்மாறன் அப்படிங்கிறதுல எனக்குப் பெருமைதான்” என்று விசாரணைக் குழுவினில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், யாழ்மாறனின் தந்தையுமான தியாகு சொன்னார்.
அடுத்தடுத்த சில கேள்விகள் கேட்கப்பட்டாலும், எதற்கும் பதில் சொல்லாமல் பேட்டியை முடித்துக் கொண்டனர்.
ஊடங்களில் திரும்பத் திரும்ப இதே செய்தியும், தியாகு, அலெக்ஸ் பேட்டியும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. மேலும் அன்றைய இரவே அது பற்றிய விவாதங்களும் இருந்தது.
இந்தச் செய்தி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான எதிர்வினையை உருவாக்கி இருந்தது.
***********
மாவட்ட ஆட்சியர் பங்களா, செங்கல்பட்டு!
தியாகு இன்னும் சென்னையிலிருந்து வரவில்லை. திலோவும் மாறனும் இரவு உணவை எடுத்துக் கொண்டே தியாகுவின் பேட்டியையும் பார்த்தனர்.
நீதிமன்ற அறிவிப்பிற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அவரிடம் வழக்கு பற்றி, விசாரணைக் குழு பற்றி விரிவாகச் சொல்லப்பட்டு, அவர் சென்னை புறப்பட்டுச் சென்றிருந்தார்.
“இப்போ டென்ஷன் எல்லாம் போயிடுச்சா?” என மகனின் முகத்தைப் பார்த்து திலோ கேட்க, “எஸ்… இனிமே அப்பா பார்த்துப்பாரு. நானும் சசியும் பயங்கிற ஹேப்பியா இருக்கோம்” என்று சிரித்தான்.
“அது உன் முகத்திலயே தெரியுது மாறன்! ஆனா அப்பா வீட்ல இருக்கிற டைம் குறைஞ்சிடும். பொட்டிக்லருந்து வந்தா எனக்கு போரடிக்கும்”
“அதான் நான் இருக்கேன்லமா” என்று சொன்னதும், “நீ ரொம்ப பிஸி மாறன்” என்று சிரித்துக் கொண்டார்.
“அப்பா பார்த்துப்பாங்கனுதான், நான் என் வேலையைப் பார்த்தேன். இப்பவும் அப்படி இருக்க மாட்டேன்” என்றதும், “ஸோ கைன்டு ஆஃப் யூ” என்று மேலும் சிரித்தார்.
இதேபோல் அம்மாவும் மகனும் பேச்சும் சிரிப்புமாக சாப்பிட்டு முடித்தனர்.
இதே நேரத்தில் சென்னை விமான நிலையத்தில்…
கட்சி விழாவிற்கென்று கன்னியாகுமரி சென்றுவிட்டு ராகவனும், லிங்கமும் சென்னை வந்தடைந்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த இருவரையும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு, பொதுவான கேள்விகள் கேட்டனர்.
பின்பு கேட்க நினைத்த விசாரணைக் குழு பற்றிய கேள்வியைக் கேட்டுவிட்டு மைக்கை ராகவன் முன்னே நீட்டியதும், “நானும் இந்த நியூஸ் பார்த்தேன். இது வரவேற்கத்தக்க ஒன்றுதான்” என்று சொன்னார்.
லிங்கத்தை நோக்கி மைக் நீட்டப்பட, “இப்படி ஒரு முறைகேடு நடந்திருக்குனு சொல்றாங்க. முறையான விசாரணை நடக்கிறது நல்லதுதான்” என்றார்.
அதன்பிறகு கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு, இருவரும் கிளம்பினார்கள்.
இதே நேரத்தில் ராஜாவின் வீட்டில்…
வீட்டின் வரவேற்பறையில் ராஜா அமர்ந்திருந்தான். எந்த ஒரு விளக்குகளும் எரியவில்லை. பெரிய டிவியில் இரவு நேர செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சம்தான், அந்த அறையின் இருட்டை விரட்டிக் கொண்டிருந்தது.
விசாரணைக் குழு பற்றிய செய்தி வரவும் கூர்ந்து கவனித்தான். அந்த செய்தி முடிந்ததும், ஹால் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஜெகதீஷின் புகைப்படத்தைப் பார்த்ததும், இமைகளை இறுக்கமாக மூடி சோஃபாவின் பின்புறம் சாய்ந்து கொண்டான்.
‘பொறுமையா… அமைதியா இருக்கணும்’ என்று தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்லியும் கொண்டான்.
இதே நாளில் உயர் கல்வித்துறை அமைச்சர் ராகினி வீட்டில்…
செய்தியைப் பார்த்துக் கொதித்துப் போன ராகினி, பின்புறமாக கைகளைக் கோர்த்துக் கொண்டவாறு அலுவலக அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.
லெதர் செருப்பு கதறும் வண்ணம் அவருடைய நடை அழுத்தமாக இருந்தது. கண்களில் அப்படியொரு சினம் இருந்தது. அதுவும் தியாகு, ‘விசில் ப்ளோவர் ஆஃப் திஸ் ஸ்கேம்’ என யாழ்மாறனை சொன்னது, அவன் மீதான கோபத்தை நூறு மடங்கு அதிகப்படுத்தியிருந்தது.
எப்படிச் சொன்னாலும் கேட்காத அவனால்தானே இந்த விடயம் விஸ்வருபம் எடுத்திருக்கிறது என எண்ணும் போதே கைப்பேசி அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்ற ராகினி, “ஹலோ” என்றதும், “நியூஸ் பார்த்தீங்களா?” என்று கேட்டது அழைத்த ஆண்குரல்.
“ம்ம்! பார்த்தேன். பார்த்திட்டு என்ன செய்யன்னு தெரியாம இருக்கேன்”
“முறையான விசாரணை வேணும்னு கேட்டதும், நமக்கு ஃபேவரா நடந்துகிற ஆளுங்களை போட்டு ஒரு கமிஷன் அமைச்சிருந்தா… இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. என்ன செஞ்சிட முடியும்னு நாம அலட்சியமா இருந்தது, தப்பா போயிடுச்சி!” என்று அந்த ஆண்குரல் பேசியது.
ராகினி அமைதியாக இருந்தார்.
“ப்ச் அந்த ரெண்டு பேரும் கேஸ் பத்தின ஒவ்வொரு விஷயத்தையும் தோண்டி எடுக்காம விடவேமாட்டாங்க. ஏன்னா ரெண்டு பேரோட ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் அப்படி” என்றது அந்த ஆண்குரல்.
“ச்சே! எல்லாம் அந்த கலெக்டராலதான். இப்போ என்ன பண்ண?”
“பொறுமையா இருங்க. இப்போ ஏதாவது செஞ்சா அது தப்பாயிடும்”
“அப்ப எதும் பண்ண வேண்டாமா? அந்த கலெக்டர நம்லாள ஒன்னும் பண்ண முடியாதா?”
“இப்போ வேண்டாம்னு சொல்றேன். நம்ம மிரட்டலுக்குப் பயப்படமாட்டேன்னு சொல்லி, கேஸை இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்கான்ல, அவனுக்கு எதும் பெருசா பண்ணனும்” என்று அந்த ஆண்குரல் பழிவாங்கும் வெறியுடன் பேசி, அதன்பின்னும் சற்றுநேரம் பேசிவிட்டுதான் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
*************
பத்து நாட்கள் கடந்திருந்தது!
சுடரின் அறை! சுவர் கடிகாரம் இரவு 11:57 என்று காட்டியது. மெத்தை மேல் கைப்பேசியை வைத்திருந்தாள். கால்களை மடித்து, கன்னத்தில் கைவைத்து அமர்ந்தபடி கடிகாரத்தைப் பார்ப்பதும், கைப்பேசியைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
கடிகாரம் பன்னிரண்டு என்று காட்டிவிட்டால் சுடரின் பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில், முதலில் யார் அழைத்து வாழ்த்துச் சொல்வார்கள்? ராஜாவா? மாறனா? என்ற கேள்வியுடன் காத்திருப்பாள்.
ஆனால் இன்று ராஜா அழைப்பிற்காகக் காத்திருந்தாள். அவளது பிறந்தநாள் அன்று என்ன கேட்டாலும், ராஜா முடியாதென்று சொல்ல மாட்டான். ஆதலால் அவனிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்ற முடிவுடன் இருந்தாள்.
