Kathambari Novels
அடுத்த நாளும் வெற்றி வேலை முடிந்து எழும்பூர் ரயில் நிலையம் வந்து உட்கார்ந்திருந்தான். வீட்டிற்குப் போக பிடிக்காமல், விவாகரத்துப் பற்றி ஒரு முடிவெடுக்க என்று தடுமாறி சில நாள்களாகவே இப்படித்தான் செய்கிறான்.
ஆனால் இன்று அவன் இப்படி வந்து இருப்பது தமிழுக்காக!
தமிழைப் பார்க்க வேண்டும். அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று எண்ணம் அவனுக்குள் வலுத்திருந்தது. ஏனென்று தெரியவில்லை.
இன்று அவளிடம் கேட்டு, அவள் பெயரையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
எப்போதும் ‘பேபி, பேபி’ என்று அழைத்தால் எப்படி? பெயர் தெரிந்தாலும் பேபி என்றுதான் அழைப்பேனோ? ஆம் அப்படித்தான் அழைப்பேன். ஏனோ அப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது.
வெகுநேரம் காத்திருந்தான். ஆனால் தமிழ் வரவேயில்லை. பகவதி அவளிடம் ‘டேசன் போ கூடாது’ என்று கடுமையாகச் சொல்லியிருந்ததால், அவள் இன்று வரவில்லை.
அன்று மட்டுமல்ல அதற்கடுத்து வந்த நாள்களிலும் அவள் ரயில் நிலையம் பக்கம் வரவில்லை.
ஆனாலும் வெற்றி ஒவ்வொரு நாளும் தவறாமல் வந்து அவளைப் பார்க்கக் காத்திருந்து காத்திருந்து தளர்ந்து போனான். வீட்டிற்குத் தாமதமாகப் போய், ஹரிணியிடமும் பேச்சு வாங்கினான்.
சாந்தி சொன்ன மருத்துவரைப் பார்க்காததால், ‘உன் நல்லதுக்காக யோசிச்சி அக்கா ஒன்னு சொன்னா கேட்க மாட்டியா’ என்று சந்திரன் வேறு அவனை வறுத்தெடுக்கிறார். சாந்திக்கு, ‘இப்படி இருக்கானே’ என்று தம்பி மீது கோபம். அவனுடன் சரியாக பேசாமல் இருந்து கோபத்தைக் காட்டுகிறாள்.
அப்பா, அண்ணி பேச்சுகள், அக்காவின் கோபம், ஸ்வேதா பேசிய விடயம் என்று எல்லாம் அவன் மனத்தை அலைக்கழித்தாலும், தமிழைப் பார்த்தால் போதும், அவளைப் பார்த்தால் மனம் இளைப்பாறும் என்று எண்ணம்.
என்ன இது உணர்வு, ஏன் இந்த உணர்வு என்ற கேள்விகள் வேறு வந்தன.
பதில் இல்லாவிட்டாலும் தினமும் வந்து அவளைப் பார்க்க காத்திருந்தான்.
ஒருவாரம் கடந்திருந்தது. அன்று தமிழ் ரயில் நிலையம் வந்திருந்தாள்.
வெற்றி அமர்ந்திருந்த நடைமேடை இருக்கையிலிருந்து பார்த்தபோது, தமிழ் அடுத்த நடைமேடையில் நிற்பது தெரிந்தது. அவ்வளவுதான். விழுந்தடித்து ஓடினான். எங்கே அவன் போகும் முன், வேறு எங்காவது போய்விடுவாளோ என்ற பதற்றத்துடன் ஓடி வந்தான்.
வந்தவன் தமிழ் முன் போய், “பேபி” என்று சொன்னதுதான் தாமதம்… அவள் ஓட்டத்தை ஆரம்பித்துவிட்டாள்.
அவள் உயரத்திற்கு சற்றே குறைவாக இருந்து தோள் பையைப் பிடித்து ஓட முடியாமல் ஓடினாள்.
வெற்றிக்கு ஓடி வந்ததில் மூச்சு இரைத்தது. அயர்வால், திரும்பவும் ஓடணுமா என்று நின்றான். ஆனால் அவள் போவதைப் பார்த்தவனுக்கு எங்கிருந்துதான் சக்தி வந்ததோ, ‘பாத்து போ பேபி, விழுந்துட போற’ என்று மீண்டும் ஓடினான்.
திரும்பித் திரும்பிப் பார்த்து ஓடிக் கொண்டிருந்தாள்.
ரயில் நிலைய நடைமேடைகளில் கூட்டம் இருந்தது. அதனூடே படிக்கட்டு ஏறி நடைமேடை பாலத்தில் தமிழ் போகும் போது, வெற்றி வந்து அவள் முன் நின்றுவிட்டான்.
நன்றாக அவனுக்கு மூச்சிரைத்தது. ‘ஏன் இப்படி ஓடற’ என்று முட்டி போட்டு அவள்முன் அமர்ந்தான்.
அவளிடமிருந்து பையை எடுக்கப் போனான். தரமாட்டேன் என்பது போல் பின்னே சென்றது குழந்தை. “பேபி நான் ஒன்னும் அத எடுத்துட்டு எங்கயும் போயிட மாட்டேன். கொடு” என்றான்.
தமிழ் அசையாமல் நின்று அவன் வாயசைவதைப் பார்த்தாள். அவள் தன் பேச்சைக் கவனிக்கும் விதத்தைப் பார்த்து யோசனையோடே அவள் பையை வாங்கி நீளமாக இருந்த பையின் காதுகளை முடிச்சுப் போட்டு சின்னதாக்கி அவள் தோளில் போட்டுவிட்டு, “இப்ப ஓடுனாலும் விழமாட்ட” என்றான்.
அவன் முகத்தை பார்த்தபடி அவள் அமைதியாக நின்றாள்.
“என்னய பார்த்து பயப்படாதயேன்” என்று கெஞ்சும் குரலில் கேட்டான்.
தமிழ் முகம் பார்த்து பகவதியோ, ராணியோ பேசினால், ‘சரி’ என சொல்லும் விதமாக அவள் லேசாகத் தலையசைப்பாள். இன்று வெற்றி முகத்தையே பார்த்திருந்ததால், அவன் பேசியது புரிந்தது.
ஆனால் ஒரு சிறு தலையசைப்பு கூடச் செய்யவில்லை. முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை.
அங்கே இங்கே பார்த்தபடி நின்றாள் ஒரு நொடி. அடுத்த நொடி குடுகுடுவென ஓடி அடுத்த நடைமேடை செல்லும் படிக்கட்டுகளில் இறங்கினாள்.
‘குட்டி நண்டு மாதிரி இருந்திட்டு என்ன ஓட்டம் ஓடுறா’ என்று நினைத்தபடி வெற்றியும் அவள் பின்னேயே இறங்கினான்.
இருவரும் இறங்கி முடிக்கும் முன்பே ரயில் வந்துவிட்டது. தமிழ் ஓடிச் சென்று ரயிலில் ஏறிக் கொள்ள நிற்கும் கூட்டத்துடன் நின்றாள். வேகநடையுடன் வந்து வெற்றியும் அவளுடன் நின்றான். தமிழ் ஏறப் போகும் போது, அவளைத் தூக்கி உள்ளே ஏற்றிவிட்டு, அவனும் ஏறிக் கொண்டான்.
வாசல் பக்கமாக நின்று கொண்டாள்.
கூட்டம் இருந்தது. உள்ளே போனால் உட்கார இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதனால் வெற்றி உள்ளே போகாமல், அவளையும், ‘உள்ளே போகலாம்’ என்று கூப்பிடாமல், அவளுக்குப் பாதுகாப்பாக வந்து நின்றான்.
அவன் கூப்பிட்டாலும் அவள் வரப்போவதில்லை என்று தெரியும். அதேபோல் அவளைத் தனியே நிற்கவிட்டு, அவனாலும் போக முடியாது என்று தெரிந்தது.
அவன் அவளருகில் வந்து நின்றதும், அவள் வேறு இடத்தில் போய் நின்றாள். இவனும் அந்த இடத்திற்குச் சென்று, “ரயில் வேகமாக போகுது, நடந்துக்கிட்டு இருந்தா, விழுந்திடுவ” என்று அதட்டினான்.
முகத்தைச் சுருக்கி வைத்துக் கொண்டு நின்றவள், சட்டென்று கதவு பக்கம் போய் வெளியே எட்டிப் பார்க்கப் போனாள்.
அவள் கைப் பிடித்து இழுத்து அவன் அருகில் நிற்க வைத்து, “என்ன பண்ற, இப்ப ஏன் எட்டிப் பாக்கிற. ஒரு இடத்தில நிக்க மாட்டியா” என்று கோபப்பட்டான்.
பட்டென்று அவன் கையை உதறிவிட்டு நின்றாள்.
அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அவளைக் கவனமாக இறக்கிவிட்டு, அவனும் இறங்கிக் கொண்டான். அவளைப் போக விடாமல் நிற்க வைத்து, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவளைத் தன் முகம் பார்க்க வைத்தான்.
முகம் பார்த்துதான் பேசுவதைப் புரிந்து கொள்கிறாள் என்று புரிந்தது.
அவள் தோள் பற்றி, “நான் இதுக்கப்புறம் வர மாட்டேன். நீ பின்னாடி திரும்பிப் திரும்பி பார்க்காம, முன்னாடி பார்த்து போகணும். கார், பஸ் வரும்… பார்த்து நடக்கணும்” என்று அக்கறையுடன் சொல்லி, அவளை விட்டான்.
அடுத்தநொடி வேகமாக ஓடிவிட்டாள் தமிழ். அவள் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வரை பார்த்து நின்றவன், அங்கிருந்த சிமென்ட் இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டான்.
அவனுக்கு தமிழுடன் செல்லத்தான் விருப்பம். ஆனால் அங்கே இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற நெருடல்.
இன்று ஊதா நிறத்தில் ரோஜா மற்றும் வெள்ளை நிற பூக்கள் அச்சு போட்ட கவுன் போட்டிருந்தாள். தோள்களில் புரண்ட செம்பட்டை முடிக்கற்றைகள், கோபத்தில் சுருங்கும் குண்டு கண்கள்… பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல, கைகளில் அள்ளிக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது.
ஆனால் குழந்தைதான் அவன் பக்கத்தில்கூட நிற்க மாட்டிக்கிறாளே! அவள் சென்ற திசையைப் பார்த்து பெரு மூச்சு விட்டபடி எழுந்து சென்றான்.
அடுத்தநாளும் எழும்பூர் ரயில் நிலையம் வந்தான்.
இன்று வெற்றி வர தாமதமாகிற்று. நேராகத் தமிழ் ரயில் ஏறும் நடைமேடை வந்து, எங்கிருக்கிறாள் என்று தேடினான். வந்திருக்க மாட்டாளோ, பார்க்க முடியாதோ என்ற ஏக்கத்துடன் தேடியவனுக்கு அவளைப் பார்த்ததும் சிறு மலர்ச்சி முகத்தில்.
அவள் பக்கம் போய் நின்றான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ரயில் வந்து நின்றதும் ஆட்களோடு ஆளாக ஏறிக் கொண்டாள். இன்று எக்கச்சக்க கூட்டம். நன்றாக நிற்ககூட முடியாத நிலை. ஒருவரை ஒருவரை இடித்தபடி நிற்கும் அளவு கூட்டம்.
இந்தக் கூட்டத்திற்கு நடுவே சிறு பிள்ளை எப்படி நிற்கும்? வெற்றி, “வா நான் தூக்கிக்கிறேன்” என்றான் தமிழிடம்.
‘வேண்டாம்’ என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அமர்ந்திருந்த பெண்மணி, ‘பாப்பா இங்க வா, இங்க வந்து உட்காரு” என்று அவள் கைப்பிடித்தார். அவர் கையை உதறிவிட்டு, நிற்கவே செய்தாள்.
‘யார்கிட்டயும் சேர மாட்டியா, ஏன் பேபி இப்படி இருக்க’ என்று வெற்றி மனம் அவளைப் பற்றி எதுவும் தெரிய முடியாமல், புரிய முடியாமல் தவித்தது.
சைதாபேட்டை ரயில் நிலையம் வந்திருந்தது. கூட்டத்தில் தமிழால் வெளியே பார்க்க முடியவில்லை. இங்கே இறங்கணுமா, முன்பே இறங்கியிருக்கணுமா, இல்லை அடுத்துதான் இறங்கணுமா என்று தெரியவில்லை. குழம்பிவிட்டாள். கண்களில் பயத்துடன் நின்றாள்.
“வா, இங்கதான் இறங்கணும்” என்று வெற்றி அவள் கைப் பிடித்துக் கொண்டு இறங்கினான். கீழே இறங்கியதும் அவள் கையை உருவிக் கொண்டாள்.
டி.டி.ஆர் இறங்குபவர்களிடம் பயணச்சீட்டு இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டிருந்தார். அதிக கூட்டம் இருந்தால் முக்கிய நிலையங்களில் இப்படிச் சோதனை நடக்கும்.
வெற்றி இறங்கியதும், “டிக்கெட்” என்றார்.
வெற்றி ‘சீசன் டிக்கெட்’ எடுத்துக் காட்டினான்.
அவனுடன் தமிழும் இறங்கியதால், “குழந்தைக்கு டிக்கெட்” என்றார். உடனே அவனையும் தமிழையும் பார்த்தார். அவர்கள் உடை, தோற்றத்தில் இருந்த வேறுபாடு பார்த்து, “சாரி சார்! உங்க குழந்தைனு நினைச்சிட்டேன்” என்றார்.
அவர், “டிக்கெட் இல்லையா மா” என்றார் தமிழ் முகம் பார்த்து.
அவள் அமைதியாக நின்றாள். பயணச்சீட்டு விவரங்கள் எல்லாம் தெரியவே தெரியாது. இதுவரை இப்படி யாரும் அவளிடம் கேட்டது கிடையாது. டி.டி.ஆர் கேட்பது புரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்.
அவர், “டிக்கெட் இல்லாம ஏறிட்டியா, இனிமே இப்படி ஏறக் கூடாது” என்று சொல்லிப் போய்விட்டார். வேறு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
தமிழும் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
ரயில் கிளம்பியதும், கூட்டம் கலைந்திருந்தது. வெற்றி அப்படியே நின்றான்.
‘குழந்தைக்கு டிக்கெட்’ என்று டி.டி.ஆர் கேட்டதையே யோசித்து இருந்தான். ‘தமிழ், என் மகள்’ என்று நினைத்துக் கேட்டிருப்பார் என்பதால் அந்தக் கேள்வி அவனுக்குப் பிடித்திருந்தது.
அப்படி இல்லை என்று புரிந்து, அவர் மன்னிப்பு கேட்டது பிடிக்கவில்லை!
அவனுக்கு தமிழோடு ஒரு பிணைப்பு உருவாகிக் கொண்டிருப்பது புரிந்தது. அவளுக்கு அப்படி ஏதும் இல்லை என்பதும் புரிந்தது. அது மனதை என்னவோ செய்தது. அதே மனநிலையுடன் வீட்டிற்குச் சென்றான்.
மனம் என்ன நிலையில் இருந்தாலும், அடுத்த நாளும் ரயில் நிலையம் வந்து நின்றான். ஒவ்வொரு நடைமேடைக்கும் திரும்பத் திரும்பச் சென்று அவளைத் தேடினான். அவள் இல்லை. வரவில்லை போல. அவளைப் பார்க்க முடியாத ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.
அன்று மட்டுமல்ல அடுத்த மூன்று நாள்களும் தமிழைப் பார்க்க முடியாமல், அவன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துப் போனது.
நான்காவது நாள் அவன் வந்த போது, தமிழ் உள்ளே இருந்த ஒரு கடையில் முன் நின்று கொண்டிருந்தாள். என்ன செய்கிறாள் என்று பார்க்க, தூரமாகவே நின்று விட்டான்.
அது ஒரு சிறிய பெட்டிக் கடை. அவள் உயரத்திற்கு கடைக்காரரருக்கு அவள் நிற்பது தெரிய வாய்ப்பில்லை. எக்கி எக்கி, தலையைத் தூக்கி, குதிங்காலை உயர்த்தி என்று என்னவெல்லாமோ செய்து கடையின் முன்பக்கம் இருந்த பொருட்களைப் பார்க்க முயன்றாள்.
பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
அதிலும் அந்தத் தோள் பை விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டு குதித்துப் குதித்து பாட்டில்களைப் பார்த்தது, அழகோ அழகு. நாள் முழுவதும்… என்ன நாள் முழுவதும், அவன் நாடித்துடிப்பு இருக்கும் வரை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.
அவளால் எதையும் பார்க்க முடியவில்லை என்றதும் கண்களில் ஏமாற்றம் வந்துவிட்டது. வெற்றி வேகமாக வந்து, “என்ன பேபி வேணும்” என்றான்.
அவன் குரல் கேட்டபின்தான் கடைக்காரர் எட்டிப் பார்த்தார். அவரிடம், கடை முன் பக்கம் வரிசையாக வைக்கப்பட்டிருந்த பாட்டிலில் இருந்த ஒரு பிஸ்கட் வேண்டும் என்பது போல் எக்கி எக்கித் தொட்டு காண்பித்தாள்.
அவர் குழந்தையைப் பார்த்தார். அழுக்கேறிய உடை, முகம்… வாராத தலை, செருப்பில்லா கால்களைப் பார்த்தவர், “உன்கிட்ட காசு இருக்கா, சும்மாலாம் தர முடியாது. கடை முன்ன நிக்காத, தள்ளி போய் நில்லு” என்று விரட்டினார்.
என்ன பேசினார் என முழுதும் புரியவில்லை. ஆனால் அவர் கையசைவுகள், முகத்தின் எரிச்சல் கண்டவள், அங்கிருந்தே உடனே ஓடிவிட்டாள்.
“பேபி… பேபி” என்று போகப் போனவன் நின்று, “எவ்வளவு” என்று கோபமாகக் கேட்டு அவள் ஆசைப்பட்ட பிஸ்கட்டை வாங்கிக் கொண்டு ஓடி, படிக்கட்டு ஏறி இறங்கி அடுத்த நடைமேடைக்குப் போன போது, ஒரு ரயில் கிளம்பியது.
இரு பக்கமும் திரும்பி தமிழைத் தேடினான். அவள் அங்கே இல்லை. அந்த ரயிலில் போயிருப்பாள் என்று புரிந்தது.
அவன் கையைப் பார்த்தான். நாளிதழில் மடித்துக் கொடுக்கப்பட்ட பிஸ்கட் இருந்தது. அப்படியே விரல்களை மூடியவனுக்கு, இந்த உள்ளங்கைக்குள் வைத்து தமிழைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு வந்திருந்தது.
இரவாகப் போகும் நகரத்தைப் பார்த்தபடி தமிழ் போய்க் கொண்டிருந்தாள். அவளுக்கு அந்த வகையான பிஸ்கட் பிடிக்கும். அடிக்கடி வாங்க முடியாது. என்றாவது மகளுக்கு உமா வாங்கிக் கொடுப்பாள்.
ஒன்று மட்டும் போதாது. இரண்டு வாங்கிக் கொடுக்க வேண்டும். ரயிலில் போகையில் வேடிக்கை பார்த்தபடி பிஸ்கட்டை தமிழ் சாப்பிட்டுக் கொண்டே வருவாள். உமா அருகிலிருந்து, ‘சிந்தாம சாப்பிடணும்’ என்பாள். தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு, மகள் கேட்டதும் கொடுப்பாள்.
இன்று என்னமோ அந்த பிஸ்கட் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. கடை முன் சென்று நின்றுவிட்டாள் குழந்தை. வாங்கித் தர அம்மா இல்லையே என்றதும் அழுகை வந்துவிட்டது. அதுதான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள்.
அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு. வெற்றி வீட்டில்தான் இருந்தான். அக்கா வீட்டிற்குச் சென்று பேசி, அவளைச் சமாதானப்படுத்தி வந்தவனுக்கு, அதன்பின் தமிழ் பற்றிய எண்ணம்தான்.
‘பேபி’ ரயில் நிலையம் வந்திருப்பாளோ? போய்ப் பார்க்க மனம் உந்தியது. போனால், வீட்டில் ஆயிரம் கேள்விகள் கேட்கப்படும். திங்களன்று பார்த்துக் கொள்ளலாம் என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தான்.
திங்கள் அன்று வெற்றி வேலை முடிந்து ரயில் நிலையம் வர இருட்டியிருந்தது. ஆட்டோவில் வந்து இறங்கினான். ‘பேபி போயிருப்பாளோ’ என்று வேகமாக உள்ளே போகப் போனவன், வெளியே நிற்கும் காவலர் வண்டி இரண்டைப் பார்த்ததும், ‘ஏன்? எதற்கு?’ என்ற பார்வை மாறியது.
கூடவே மருத்துவ ஊர்தி ஒன்று நிற்பதைப் பார்த்ததும், கடைசியாக அவன் அம்மாவை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்து வந்தது நினைவில் வந்த்துவிட்டது. ‘என்னாச்சு’ என்று ஒருவரிடம் கேட்டான்.
‘ஆக்சிடென்ட், ரயில் முன்ன ஒரு பொண்ணு விழுந்திடுச்சி’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
விரைந்து சென்று தமிழ் இருக்கிறாளா என்று பார்த்தான். அவள் வழக்கமாக ரயில் ஏறும் இடத்தில்தான் பார்த்தான்.
அவள் அங்கே இல்லை!
போயிருப்பாள் என்று தோன்றவில்லை. அவன் உள்ளுணர்வு இங்கேதான் அவள் இருக்கிறாள் என்று சொன்னது. வேக வேகமாக விபத்து நடந்த நடைமேடைக்கு ஓடினான்.
வழக்கமானச் சூழலை இழந்திருந்தது அந்த நடைமேடை. இப்போதுதான் காவலர்கள் வருவதால் இன்னும் மக்கள் கூட்டம் அங்கே இருந்தது. மருத்துவ பணியாளர்கள் வெற்றியைக் கடந்து சென்றனர்.
அங்கே நிற்பவர்கள் பார்வை இறப்பை பார்த்த அதிர்ச்சியையும், பேச்சுகள் ‘ஐயோ பாவம் உயிர் போச்சே’ என்று அனுதாபமாகவும் இருந்தது.
வெற்றிக்கு அங்கே நிற்கவே துளியும் பிடிக்கவில்லை. அம்மாவின் நினைவு அதிகம் வந்து வருத்தியது. போய்விடலாம் என்று நினைத்த போதுதான், தமிழ் அங்கே நிற்பதைப் பார்த்தான்.
அன்று நடந்திருப்பது ஒரு கோரமான விபத்து. விரைவு ரயில் ஒன்று வந்த தண்டவாளத்தில் பெண் ஒருத்தி தவறி விழுந்து, உயிர் போயிருந்தது. அந்த இடமே ரத்தம் வெள்ளமாக இருந்தது.
விபத்து நடந்த இடத்தின் பக்கம்தான் தமிழ் நின்றாள். இவள் என்ன இதைப் போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று வெற்றிக்கு கோபம்.
விறுவிறுவென்று தமிழருக்கே போனவன் அவள் கையைப் பிடித்துச் சற்றுத் தள்ளி இழுத்து வந்துவிட்டு, “இங்க எதுக்கு நிக்கிற, இத யாராவது வேடிக்கை பார்ப்பாங்களா” என்று கேட்ட பின்தான் அவள் முகத்தையே பார்த்தான்.
குழந்தையின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. அவளுக்கு அவள் அம்மா ஞாபகம் வந்துவிட்டது! கடைசியில் இதுபோன்ற நிலையில்தான் அம்மாவை அவள் பார்த்திருந்தாள்.
கண்ணீர் சூழ்ந்த அந்தக் குட்டிக் கண்கள் அவனைப் பெருமளவு பாதித்தது. “என்னாச்சு பேபி, ஏன் அழற… என்ன நினைக்கிற… ஏன் தினமும் இங்க வர்ற, அதுவும் தனியா, என்னடா உனக்கு வேணும்” என்றான். ‘எதுனாலும் என்கிட்ட சொல்லேன், நான் பார்த்துக்கிறேன்’ என்றுதான் அவன் குரல் அழுதது.
அந்த நேரம் மருத்துவப் பணியாளர்கள் ‘ஸ்ட்ரெச்சர்’-ல் இறந்தவர் உடலை எடுத்துப் போவதைப் இருவருமே பார்த்தனர். இருவருக்குள்ளும் அவரவர் அம்மாவை நினைத்து வேதனை.
தமிழ் வானத்தைப் பார்த்தாள்.
அவனுமே பார்த்துக் கொண்டான்.
தமிழ் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அவனும் அவள் கூடவே நடந்தான். வழக்கமாகப் போகும் ரயிலில் இருவரும் ஏறினர். வெற்றி அவளிடம் எதுவும் கேட்கவில்லை. கலங்கிய அவள் முகத்தைப் பார்த்தே இருந்தான்.
இறங்கும் இடம் வந்தது. தமிழ் இறங்கினாள். வெற்றியும் இறங்கிக் கொண்டான்
அவளே போய்க் கொள்ளட்டும் என்று விட மனமில்லை. அங்கே இருப்பவர்கள் என்ன பேசுவார்கள் என்ற கவலையெல்லாம் இன்று இல்லவே இல்லை. என்ன பேசினாலும் பேசிக் கொள்ளட்டும் என்றே தோன்றியது.
தமிழ் பின்னேயே நடந்தான். ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து சற்றுதூரம் நடந்து, சாலையைக் கடந்து போய், மீண்டும் நடந்து, பாலத்தின் அடியில் சென்று அவள் இடத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
அவள் நிலை மனத்தை என்னவோ செய்தது வெற்றிக்கு. அவளை அப்படியே விட்டுப் போக அவனால் முடியவில்லை. மனம் இடம் கொடுக்கவும் இல்லை.
கம்பித் தடுப்புகள் வெளியே நின்று, அவளைப் பார்த்தபடி நின்றான்.
ராணி இன்னும் வேலை முடிந்து வரவில்லை. பகவதிதான் இருந்தான். தமிழ் வந்து படுத்ததை, வெற்றி வந்து நிற்பதைப் பார்த்தவன், ‘இவன் இன்னும் தமிழ் பின்னாடி வாரானா’ என்ற கோபத்தில் நேரே வெற்றி முன் வந்து, “ஏய், அன்னிக்கே சொன்னேன்ல, புள்ள பின்னாடி வராதனு” என்றான்.
வெற்றி இன்னும் தமிழையே பார்த்திருந்தான்.
அது பகவதி கோபத்தை அதிகப்படுத்த, “உனக்கு ஒரு டைம் சொன்னா புரியாதா, இங்க நிக்காத, போ மொதல” என்று வெற்றியின் நெஞ்சில் கை வைத்து தள்ளினான்.
தடுமாறி விழப்போன வெற்றி, சுதாரித்து நின்று கொண்டான்.
சத்தம் கேட்டு எழுந்த ஆயா, “என்ன பக்ஸ்” என்றார்.
“அன்னிக்கு ஒருத்தன் தமிழ் பின்னாடி வந்தான்ல, அவன் திருப்பியும் வந்து நிக்கான் ஆயா” என்ற பகவதி, “இவள சொல்லணும்” என்று தமிழ் பக்கம் திரும்பியவன், “எத்தினி டைம் சொன்னாலும் பயமே இல்லாம டேசனுக்கு ஓடி ஓடி போறாளே இவள சொல்லணும்” என்றான் எரிச்சலாக.
வெற்றிக்கு… தன்னைப் பேசும் போது, தள்ளி விடும் போது வராத கோபம், அவன் பேபியை சொன்னதும் வந்துவிட்டது. “அவளை எதுவும் சொன்னனு தெரிஞ்சது அவ்ளோதான்” என்றான் பகவதியிடம் கோபமாக.
பகவதி வெற்றியின் முகத்தையே பார்த்து நின்றான். படுத்திருந்த ஆயாவும், ‘யாரு இவன்’ என்று எழுந்துவிட்டார்.
“இவ்ளோ சின்ன பிள்ளை தனியா ஸ்டேஷன் வந்து போகுது. எத்தனை கார் பஸ்னு போகுது, குழந்தை எப்படிப் பார்த்துப் போகும்னு நீ யோசிக்கலயா, இல்ல யோசிக்கிற அளவுக்கு உனக்கு அறிவில்லையா.
அவ பைல பேணா, புத்தகம் இருந்தது. அத ஸ்டேஷன்ல விக்க சொல்லித்தான் அனுப்புறியா. ச்சே எப்படி உன்னால முடியுது. எனக்கே தனியா அவ வர்றது போறத நினைச்சா பதறுது… உனக்கு பதறலயா?” என்றான் வெற்றி
பகவதி அமைதியாக நின்றான்.
ஆயாதான், “ஏய்… ஏய் எங்க வந்து என்ன பேசற” என்று எழுந்து வந்தார்.
“உனக்கு இங்க என்ன நடக்குதுனு தெரியுமா, எதும் தெரியாம அவன பத்தி பேசிக்கின்னு இருக்க. அந்த புள்ளய சொன்னதும் உனக்கு ஏன் கோபம் வர்து, அவ என்ன நீ பெத்த புள்ளயா, சொல்லு உன் புள்ளயா, இல்லைல… பேசாம போயிடு, இத நாங்க பார்த்துக்கிறோம்” என்றார் கோபமாக.
பகவதியிடம், “நீ ஏன் இப்படி நின்னுகின்னு இருக்க, போ போய் சோறு ஆக்க பாரு” என்று அங்கே கிடந்த கல்லில் சென்று உட்கார்ந்து கொண்டார்.
ஆயாவின் பேச்சைக் கேட்டபின், வெற்றிக்கு அங்கே நிற்கவும் முடியவில்லை. அங்கிருந்து போகவும் மனமில்லை. எதிரே இருந்த பூங்கா வாசல் திண்டில் போய் அமர்ந்தான். இதற்கு அவர்கள் எதுவும் சொல்ல முடியாதில்லையா?
பகவதிக்கு மனம் வலித்தது. ஒரு சிறு குழந்தையை வேலைக்கும் அனுப்பும் அளவிற்கா நான் கொடூரமாகத் தெரிகிறேன். நான் அப்படியில்லயே. ஆனால் இவன் பேசியதைக் கேட்டு, இங்கிருப்பவர்கள் தன்னை இப்படித்தான் என்று நினைக்கலாம் இல்லையா?
என்னமோ அவன் மனம் குழம்பியது.
வெற்றிக்கு அதைவிட மனம் வலித்தது. ‘நீ பெத்த பிள்ளையா’ என்ற ஆயா வார்த்தைகள், அவனது மனக் காயத்தைக் கீறி விட்டுவிட்டது. எதற்கென்றே தெரியாத தமிழின் கண்ணீர் அவன் மனதை மேலும் காயப்படுத்தியது.
அவள் கண்ணீரைத் துடைக்க முடியாமல் இருக்கிறேனே என்ற சூழ்நிலை அவனது காயங்களை, ரணமாக மாற்றிக் கொண்டிருந்தது.
பகவதி, வெற்றி இருவரின் பார்வையும் தமிழையே பார்த்தபடி இருந்தன.
