Kathambari Novels
இன்று காலையில் ஸ்வேதா வெற்றியிடம் பேசியிருந்தாள். அதுவும் அவர்கள் இருக்கும் பகுதியில் வைத்துப் பேசவில்லை. அவள் அவனைத் தேடி அவன் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வந்து பேசியிருந்தாள்.
வெற்றி அலுவல்களில் ஆழ்ந்து இருந்த போது, ‘ஸ்வேதானு ஒருத்தங்க உங்கள பார்க்க வந்திருக்காங்க’ என்று ஒருவர் வந்து சொன்னதும், அவன், ‘எதற்காக இருக்கும்’ என்று புருவம் சுருக்கினான்.
வேலை செய்யும் இடத்தில் இருந்து வெளியே வந்தவன், அமர்ந்து பேசுவதற்கு அவன் அலுவலகத்தில் இடம் இல்லை என்பதால், ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த சிறு உணவகத்திற்குச் சென்றான்.
“என்ன இங்க வரைக்கும் வந்திருக்க” என்றான்.
“உங்ககிட்ட நான் ஒரு விசயம் சொல்லணும். ரொம்ப முக்கியமானது. நம்ம ஏரியாலயே பேசிருக்கலாம். நம்ம பேசறத உங்க வீட்டுல யாரும் பார்த்திட்டா, எதுவும் கேட்பாங்க… பேச்சு வரும். அதான் இங்க வந்துட்டேன்”
“சரி சொல்லு. என்ன விசயம்”
“அது டிவோர்ஸ் பத்தி”
“நான் யோசிக்கிறேன்னு சொன்னேன்ல”
“இல்ல இல்ல நீங்க யோசிங்க, நான் சொல்ல வந்தது வேற” என்றுவிட்டு, உடனே அமைதியானாள்.
எப்படிச் சொல்ல என்று தடுமாறுகிறாள் என்று வெற்றிக்குப் புரிந்தது. அவளே சொல்லட்டும் என்று பேசாமல் இருந்தான்.
சற்றுநேரம் பேசாமல் இருந்துவிட்டு ஸ்வேதா, “நான் சொல்றது உங்களுக்கு இந்த விசயம் தெரியணும்னு நினைச்சிதான். நீங்க இத உங்க வீட்ல சொல்ல கூடாது. உங்களுக்குள்ள வச்சிக்கணும். அப்புறம் என்னய தப்பாவும் நினைக்க கூடாது. புரிஞ்சுக்கணும்” என்றாள் கோரிக்கை போல்.
“ம்ம்” என்று மட்டும் சொன்னான்.
“அது அம்மாவும் அண்ணனும் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்க. அம்மா அன்னைக்கே உங்க வீட்ல வச்சி சொல்லி இருக்காங்க. நீங்க கவனிச்சீங்களா என்னன்னு தெரியல” – விசயத்தை நேரடியாகச் சொல்லத் தயங்கினாள்.
வெற்றி அமைதியாக அவளையே பார்த்திருந்தான்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். பின் பெருமூச்சு எடுத்தவள், “அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க” என்றாள் பட்டென்று.
வெற்றி முகத்தில் அதிர்ச்சி. அதைப் பார்த்ததால் பேச்சை நிறுத்தி இருந்தாள். அவன் கண்களில் அதிருப்தியும் தெரிந்ததால், தன்னை… தன் அன்னையின் செயலை விளக்க ஆரம்பித்தாள்.
“டைவோர்ஸ் வாங்கற முடிவுலதான் நான் இருக்கிறேன். அதுல இருந்து நான் மாற மாட்டேன். டைவோர்ஸ் கிடைச்சப்புறம் மாப்பிள பார்த்தா மேரேஜ்க்கு நாளாகும் இல்லயா? செகண்ட் மேரேஜ் வேற… எனக்கு நிறைய டிரீட்மென்ட் வேற நடந்திருக்கு, ஏஜ் வேற ஆயிடுச்சினு அம்மாக்கு ஒரே கவலை.
அதோட என் லைஃப் செட்டில் பண்ணிட்டுதான் நாகு அண்ணா மேரேஜ் பண்ணிப்பேன்னு சொல்லிட்டான். அதான் இப்பவே எனக்கு ஆரம்பிச்சுட்டா அண்ணா மேரேஜ்க்கு டிலே ஆகாது இல்லயா” என்று அவன் முகம் பார்த்தாள்.
வெற்றி அப்போதும் அமைதியாக இருந்தான்.
“என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க”
“என்ன சொல்லணும், நீ என்கிட்ட சொல்ல வந்தது சொல்லிட்டுனா நான் என் வேலைய பார்க்கப் போறேன்” என்றான் உயிர்ப்பசை இல்லாத குரலில்.
“என்ன கோபப்பட்டுப் பேசறீங்களா? உங்களுக்கு கோபப்பட ரைட்ஸ் இல்ல. உங்களால என் வாழ்க்கையே பாழாப்போச்சி. உங்ககிட்ட சொல்லனுமானு அம்மா கேட்டாங்க? நான்தான் சொல்லிடலாம்னு நினைச்சி வந்தேன்” என்று சட்டென்று எழுந்துவிட்டாள்.
“சொல்லிட்டேன். தயவு செஞ்சி டிவோர்ஸ் குடுங்க. இழுத்து அடிச்சி, இன்னும் என்னய கஷ்டப்படுத்தாதீங்க” என்று போகப் போனவள் வந்து, “பாருங்க, உங்க வீட்ல யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது. உங்களுக்குள்ளயே வச்சிக்கோங்க சொல்லிட்டேன்” என்று கறாராக சொல்லிப் போய்விட்டாள்.
ஸ்வேதா போனபின்னும் வெற்றி அங்கேயே உட்கார்ந்து இருந்தான்.
அவள் எதிர்பார்ப்பு புரிகிறது. குழந்தை, குடும்பம் என்று வாழ ஆசைப்படுகிறாள். அதில் எந்தத் தவறும் இல்லை. அவள் ஆசையை அவனால் பூர்த்தி செய்ய முடியாது. விவாகரத்து கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.
சரியென்று தெரிந்த பின்னும் அந்த முடிவை எடுக்க ஒரு பயம்.
அவளைச் சமாதானம் செய்து சேர்ந்து வாழும் ஆசையெல்லாம் அவனுக்கு துளியும் இல்லை. இதன் பின்னும் அவள் கையை இறுக்கப் பிடித்து வைக்க முடியாது. பிடித்து வைக்கும் எண்ணமும் இல்லை.
ஆனால் அவள் கையை விடுவதற்குப் பயமாக இருக்கிறது.
அவன் அம்மா இறந்தபின் ஏற்பட்ட வெறுமையிலிருந்து ஸ்வேதா அவனைப் பார்த்துக் கொண்ட விதத்தில்தான் மீண்டிருந்தான். அவள் கையை இறுக்கப் பிடித்துதான் அந்தத் துயர நாட்களை அவன் கடந்து வந்திருந்தான்.
அதுதான் அந்தக் கைகளை விடப் பயமாக இருக்கிறது.
அவளுக்கு இதுபோல் எண்ணங்கள் என்னிடத்தில் இருக்காதா என்ற கேள்வி அடிக்கடி வரும்.
முன்புதான்! இப்போதில்லை!!
அவளுக்கு அப்படி எதுவும் இல்லை என தெரியும் என்பதால் இப்போது அந்தக் கேள்வி வருவதில்லை. ஆனால் நான் மட்டும் ஏன் இப்படி என்று நெருடல் வந்து அழுத்திவிடும் அவனை.
எது எப்படியோ, இதன்பின் முடிவெடுக்காமல் இருக்க முடியாது. அவனுக்கும் அவளுக்குமான தூரத்தை அவள் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.
ஒவ்வொரு சந்திப்பிலும் எவ்ளோ முடியுமோ அவ்வளவு அதிகப்படுத்துகிறாள்.
தலை முணுமுணுத்தது வெற்றிக்கு. ஒரு காஃபி வாங்கி குடித்து, சற்றுநேரம் அங்கே இருந்துவிட்டு, பின் போய் வேலையைத் தொடர்ந்தான்.
ஸ்வேதா பேசியதையே யோசித்தபடி ரயில் நிலையத்தில் இருந்தான். தமிழ் விழும் வரை அவனுக்கு சுற்றுப்புறம் எதுவும் கவனத்தில் இல்லை. அதுவரை இருந்த இடத்தில் அசையாமல் இருந்தவன், தமிழ் விழுந்ததைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்து ஓடினான்.
அதற்குள் அவள் எழுந்து நின்றிருந்தாள். விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் இன்னும் கீழேதான் கிடந்தன. நான்கைந்துதான் இருக்கும்.
“ஒன்னும் இல்லைல” என்று தமிழிடம் கேட்டான். அவளோ கீழே விழுந்திருந்த பையை எடுத்து, வெளியே வந்திருந்த படப்புத்தகங்களை உள்ளே அவசர அவசரமாக வைத்துக் கொண்டிருந்தாள்.
வெற்றி மீண்டும் கேட்டான். “அடி ஏதும் பட்டு இருக்கா?”
தமிழ்… அவன் கையில் எடுத்து வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைப் பார்த்தபடி இருந்தாள். அவன் அவைகளை அவளிடம் நீட்டவும், அதை வாங்கி பைக்குள் போட்டுக் கொண்டு வேக வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
வெற்றியும் எழுந்து அவளைப் பின் தொடர்ந்து போனான். என்னமோ போகத் தோன்றியது. பூக்கள் போட்ட கவுன், குண்டு கண்கள், குழி விழும் கன்னங்கள் என்றிருந்த அந்தக் குழந்தை முகம்… அவனைப் போக வைத்தது.
குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது. வெற்றிக்கும் பிடிக்கும்.
தன் அக்கா, அண்ணன் பிள்ளைகளுடன் நன்றாகப் பேசி, விளையாடுவான். பூங்கா கடற்கரை என்று வெளியே அழைத்துச் செல்வான். சின்னச் சின்ன விளையாட்டு பொருட்கள் வாங்கி தருவான். வார இறுதிகளில் அவர்களை பைக்கில் ஏற்றி ஊர் சுற்றுவான்.
அந்தப் பிள்ளைகளும், ‘சித்தப்பா… மாமா’ என்று வெற்றியிடம் நல்ல ஒட்டுதல் வைத்துதான் இருந்தார்கள்.
குழந்தை இல்லாதது ஒரு பிரச்சனையாக ஆனபின், பிள்ளைகளிடம் அவன் காட்டும் அன்பு, பாசம்… அவனது ஏக்கமாகப் பார்க்கப்பட்டது. அக்கா, அண்ணன், அப்பா அப்படித்தான் பார்த்தார்கள். அவனைத் தேற்ற நினைத்து, ‘ஒரு பிள்ளை உனக்கும் சீக்கிரம் வந்திடும்’ என்றார்கள்.
அது அவன் மனதை என்னவோ செய்தது.
வீட்டுக் குழந்தைகளிடமிருந்து சற்றுத் தள்ளி நிற்கப் பார்த்தான். மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அலைந்ததில், ஸ்வேதாவை அதிக கவனமெடுத்துக் பார்த்துக் கொண்டதில் குழந்தைகளிடம் சிரித்து பேசி விளையாட நேரமில்லாமல் போனது.
வெளியே கூட்டிப் போகச் சொல்லி குழந்தைகளும் அவனைக் கேட்டு ஓய்ந்து போனார்கள். ஒரு கட்டத்தில் பைக் வேறு இல்லாமல் போனதும், அவர்களுக்கு பிடித்தமாறு வண்டியில் ஊர் சுற்ற கூட்டிப் போக முடியவில்லை.
எல்லாம் சேர்ந்து இப்போதெல்லாம் அண்ணன், அக்கா பிள்ளைகளுக்கும் அவனுக்கும் தொடர்பே இல்லாமல் போனது.
தோன்றும்… அவனுக்கும் தோன்றும். அப்பா என்று அழைக்க ஒரு குழந்தை வேண்டும் என்று நிறைய முறை தோன்றி இருக்கிறது.
இதுதான் பிரச்சனை என்று தெரிந்து, அதற்காகச் சிகிச்சைகள் எடுத்த போது, தனக்கு அப்பா என்ற பொறுப்பைத் தர பிள்ளை வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தான்.
சில நேரங்களில் அனைவரும் சொல்வது போல், தனக்குள் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருக்கிறதோ என்ற கேள்வியும் எழும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்வதைப் பார்த்தால், அவனுக்குள் ஒரு ஆசை எழுந்து, ‘ஆம்’ என்று அந்தக் கேள்விக்குப் பதில் எழுதும்.
அதனாலே குழந்தைகள் பக்கம் கண்களைக் கொண்டு போகவே மாட்டான். விசேஷங்களில், பொது இடங்களில் என்று எங்கும் அப்படித்தான் இருப்பான்.
ஆனால் இன்று அவனால் அப்படி இருக்க முடியவில்லை.
தமிழ் வந்து நின்ற நடைமேடையில், அவள் பின்னேயே வந்து வெற்றியும் நின்று கொண்டான். “உன் பேரென்ன” என்றான். என்னமோ தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தது.
தமிழ் கண்களில் கலக்கத்துடன் ரயில் வருகிறதா என்றே பார்த்தாள்.
“எங்க பேபி போனும் நீ?” என்று கேட்டான். பெயர் தெரியவில்லை, அவளும் சொல்லவில்லை என்றதும் பேபி என்று அழைக்கத் தோன்றியது. அழைத்தும் விட்டான். “கேட்கிறேன்ல” என்றான்.
தமிழ்… ரயில் எப்போ வரும், இங்கிருந்து போகலாம் என்றபடியே நின்றாள்.
தனியே வந்திருக்கிறாள் என்று வெற்றிக்கு புரிந்தது. அவள் பேசாவிட்டாலும், அவனுக்கு விட்டுப் போக மனமில்லை. ரயிலில் ஏற்றிவிட்டு போகலாம் என்று நின்று கொண்டான். தமிழ் வெற்றி நிற்பதை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
சற்றுநேரத்தில் ரயில் வந்தது.
மக்கள் வேலைக்கு, கல்லூரிக்கு சென்று திரும்பும் நேரம்! கூட்டம் இருந்தது. முதுகில் பையோடு முண்டி அடித்துக் கொண்டு ஆண்கள், பெண்கள் ரயிலில் ஏறினார்கள்.
கூட்டத்தோடு கூட்டமாக தமிழும் ஏறிக்கொண்டாள்.
அவள் ஏறியது பொதுப்பெட்டியில். தன் அம்மாவுடன் வரும்போது இதில்தான் ஏறியிருக்கிறாள்.. இதில் பயணக்கட்டணம் குறைவு என்பதால் எப்போதும் இந்தப் பெட்டியில்தான் உமா பயணம் செய்வாள்.
இவளுக்குப் பயமே இல்லையா என்று வெற்றிக்கு தோன்றியது.
ஏறியவர்கள் எல்லாம் பெரியவர்கள். அவர்கள் முட்டி உயரத்திற்கு இருக்கும் குழந்தையைக் கவனிக்காமல் தள்ளி விட்டுவிட்டால், என்னவாகும் என்ற பயம் அவனுக்கு வந்திருந்தது.
பாதுகாப்பான இடத்தில் அமர்ந்துவிட்டாளா என்று அவன் கண்கள் ஒவ்வொரு சன்னல் வழியாகவும் அவளைத் தேடின. கடைசியில் ஒரு சன்னல் ஓரத்தில் அவள் இருப்பதைக் கண்ட பின்தான், ‘அப்பாடி’ என்றிருந்தது.
அத்தனை கூட்டத்திற்கு நடுவே அவளைப் பார்ததவனுக்கு, ‘என்ன இது, சின்ன குழந்தைய தனியா விட்டுருக்காங்களே’ என்று அவள் பெற்றோர்கள் மேல் கோபம் வந்தது. பத்திரமாகப் போவாளா என்ற பயத்தில், அவள் இறங்குமிடம் வரை கூடப் போகலாம் என்று ரயிலில் ஏறிக்கொண்டான்.
தமிழ் இருக்கும் இடம் பக்கம் போய் நின்று கொண்டான். கூட்டம் இருந்ததால், அவனுக்கு அமர இடமில்லை. ரயில் புறப்பட்டது. அடுத்த நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள். தமிழ் எதிரே இருந்த இருக்கையில் சென்று உட்கார்ந்தான்.
அவள் பார்த்ததும், புன்னகைக்கவும் செய்தான்.
முகத்தை உர்ரென்று வைத்துவிட்டு, சன்னல் வழியே இருட்டாகத் தொடங்கும் வானத்தைப் பார்த்தபடி இருந்தாள்.
காற்றுக்குப் பறக்கும் முடிக் கற்றைகள் மறைக்கும் அந்த முயல் குட்டி முகம், மீண்டும் அவனைப் பேசச் சொல்லியது. “உன் பேரு என்ன?” என்றான்.
அவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்றதும், அவள் கையைத் தொட்டு அவளை தன்னை பார்க்கச் செய்து, “பேர் என்ன” என்று கேட்டான்.
அவன் வாய் அசைவதைப் பார்த்தாள் தமிழ். ஆனாலும் எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல், மீண்டும் வெளியே பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
மீண்டும் அவள் கையைத் தட்டி, “பதில் சொல்ல மாட்டியா?” என்றான்.
அவளோ சன்னல் வழியே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பார்த்தாள். தான் இறங்கும் இடம் வந்துவிடும் என்று புரிந்தது. உடனே எழுந்து கூட்டத்திற்கு இடையில் புகுந்து சென்று, வாசல் பக்கமாக போய் நின்றாள்.
“பேபி பார்த்து போ” என்று வெற்றியும் பின்னேயே போய் நின்றான். “அடுத்த ஸ்டேஷன்ல இறங்கணுமா?” என்றான் அவளிடம்.
அங்கே அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக நின்றவர்கள், வெற்றி வந்து நின்றதை, அவன் தமிழிடம் கேட்டதை, அவள் பதில் சொல்லாமல் இருப்பதை வித்தியாசமாகப் பார்த்தனர்.
வெற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழை விட்டு அவன் கண்கள் சிறிதும் நகரவில்லை.
ரயில் நின்றது. தமிழ் இறங்கினாள். வெற்றியும் இறங்கிக் கொண்டான். அவள் வேகமாக நடக்கப் போக, அவனோ, “எங்க போகணும்னு தெரியுமா” என்று அவளை நிறுத்தப் பார்த்தான்.
சிறு கோபத்துடன் முகத்தைச் சுளித்தவள், நிற்காமல் அவள் பாதையைப் பார்த்து நடக்க ஆரம்பித்தாள்.
இந்த இரவு நேரத்தில் தனியாக செல்கிறாளே என்ற பதைபதைப்பு அவனுள் வந்தது. கூடவே நடந்தான்.
ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து, சாலை ஓரத்திலிருந்த நடைபாதை வழியே நடந்தாள். அடிக்கடி பின்னால் திரும்பி வெற்றியைப் பார்த்தபடி போனாள். அவள் கண்களில் சிறு மிரட்சி இருந்தது.
குழந்தை பயப்படுகிறது என்று புரிந்தது. ஆனாலும் பெரிதாக வெளிச்சம் இல்லாத சாலையில் அவள் போகும் விதத்தைப் பார்த்தவன், அவள் கையைப் பிடித்து, “பார்த்து போ… கார் பஸ் வருது பாரு” என்றான் அக்கறையாக.
எரிச்சலுடன் அவன் கையை உதறிவிட்டு வேகமாக ஓடியவள், சற்றுதூரம் தள்ளிச் சென்று நின்றாள். ‘ஏன் நின்றுவிட்டாள்’ என்று வெற்றியும் ஓடி அங்கே சென்றுவிட்டான்.
சாலையைக் கடந்தால் பாலத்தின் பக்கமாகப் போய்விடலாம். வாகனங்கள் வருகிறதா என்று பார்ப்பதற்காகவே தமிழ் நின்றாள். அவள் கண்களில் பயம் தெரிந்தது.
சாலையைக் கடக்க வேண்டும் என்று புரிந்து கொண்டவன், “என் கையப் புடிச்சுக்கோ, கிராஸ் பண்ணலாம்” என்றான்.
வாகனம் வரவில்லை என்றதும், அவளே கடந்துவிட்டாள். பகவதி நிற்பதைப் பார்த்து பயந்தவள், அவனுக்குத் தெரியாமல் போக நினைத்து, முடிந்தவரை ஒளிந்து ஒளிந்து போய் அவள் இடத்தில் படுத்துக் கொண்டாள்.
இருந்தாலும் அவள் வந்ததை, அவள் பின்னேயே வந்து வெற்றியைப் பார்த்த பக்ஸ், “யாரு சார் நீ, என்ன வேணும்? எதுக்கு இங்க வந்து நிக்கிற” என்றான். பதில் சொல்லாமல் வெற்றி தமிழைப் பார்க்க, “என்ன சார் குழந்தைய பாக்க. என்ன வேணும்” என்று பக்ஸ் உரத்த குரலில் கேட்டான்.
அவன் சத்தம் கேட்டு, படுத்திருந்த ஆயா எழுந்து அமர்ந்தார். வேலை முடிந்து அந்தநேரத்தில் அங்கே வந்த ராணி, வெற்றி நிற்பதைப் பார்த்துவிட்டு, “என்ன பக்ஸ், எதுனா பிரச்சினயா?” என்றாள்.
தமிழைப் பின்தொடர்ந்து வந்திருக்கானே! யார், எதற்காக என்று கோபம், பயம் பகவதிக்கு. மனைவி கேள்விக்குப் பதில் சொல்லாமல், “என்ன வேணும் உனக்கு, போலீச கூப்டவா புள்ளய கடத்த வந்திருக்கேன்னு. போ போ, முதல்ல இந்த இடத்த காலி பண்ணு” என்று வெற்றியை விரட்டினான்.
இவர்கள்தான் அவள் அம்மா, அப்பாவா? என்னமோ வெற்றி மனம் கனத்தது. அதைவிட பக்ஸ் கத்தியதில், அங்கே உள்ளவர்கள் வேடிக்கைப் பார்க்க வந்து நிற்க, அவனுக்கு ஒருமாதிரியாயிற்று. உடனே கிளம்பிவிட்டான்.
ரயில் ஏறி வீட்டிற்கு வந்தவன், தன்னிடம் இருந்த சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே வந்தான். சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு விழித்தவர், “என்னடா இவ்ளோ லேட், சாப்பிட்டியா” என்றார்.
“சாப்பிடணும் ப்பா”
“உன் அண்ணிய சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிக்கோ” என்று தூக்க கலக்கத்தில் சொன்னவர், “ஹரிணி” என்று அழைத்தார்.
“நீங்க தூங்குங்க ப்பா” என்றவன், சமையலறை விளக்கைப் போட்டு, அப்பா தூக்கத்திற்கு இடைஞ்சலாக இல்லாமல் இருக்க திரையை இழுத்துவிட்டு, சாப்பாடு எடுத்து வைத்தான்.
மாமனார் கூப்பிட்ட குரல் கேட்ட ஹரிணி வெளியே வந்து, “இவ்ளோ லேட்டா வந்தா எப்படி, இப்ப தூங்கினாதான காலைல சீக்கிரம் எந்திரிச்சு என்னால சமைக்க முடியும்” என்றாள் வெற்றியிடம்.
“நான் பாத்துக்கிறேன், நீங்க போங்க” என்றான்.
“உங்க அப்பா எதும் சொல்வாங்க”
“அப்பா தூங்கிட்டாங்க. அப்படியே கேட்டாலும் நான் சொல்லிக்கிறேன். நீங்க போய் தூங்குங்க”
சிலநொடிகள் யோசித்தவள், “இன்னைக்கு பாப்பாக்கு ரொம்ப ஹோம்ஒர்க் இருந்தது வெற்றி. பாத்திரம் கழுவ நேரமேயில்ல, சாப்பிட்டு எல்லாம் கழுவி வச்சிடறியா” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டாள்.
“சரி அண்ணி”
அவள் போனதும், அவன் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டான். உண்ணும் போது, பாத்திரம் கழுவும் போது, உறங்க வரும்போது என்று எல்லாம் நேரமும் தமிழ் பற்றிய எண்ணமே அவனுக்கு.
“ஏன் பேசவில்லை? பேர் என்னவா இருக்கும்? அவர்கள்தான் அவள் அம்மா, அப்பாவா? அப்படினா ஏன் தனியா வந்திருந்தா? தெரியாம வந்திருப்பாளோ? தெரிந்து வந்திருந்தால், தினமும் வருவாளா?” என்ற கேள்விகள் அவனிடம்.
அவன் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருந்தாலும், அவனிடம் அத்தனைக் கேள்விகள் பெயர்கூடத் தெரியாத அந்தக் குழந்தைகாக இருந்தன.

தமிழ் முன் சென்று அமர்ந்த பக்ஸ், அவளை அவன் முகம் பார்க்க வைத்து, “உனக்கு எத்தினி டைம் சொல்றது இப்படி போ கூடாதுனு, கேக்க மாட்டியா. யார்னா பிடிச்சிட்டு போயிடுவாங்க. கொஞ்சமாது பயப்பிடு. இங்கதான் இருக்கணும். வேற எங்கயும் போ கூடாது” என்று கடுமையாகச் சொன்னான்.
தமிழ் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த மிரட்சியைப் பார்த்த ராணி, “வுடு. இனி போ மாட்டா, சாப்டலாம்” என்றாள்.
“நீ என்ன சீக்கிரமா வந்திருக்க” என்றான் மனைவியிடம்.
“ஓனரம்மா எங்கயோ போணுமா, சாயங்கால டிப்பன் போடல” என்றபடி சாப்பாட்டை எடுத்து வைத்தவள், “ஆயா நீ சாப்பிட்டியா” என்றாள்.
‘அப்பவே சாப்பிட்டாச்சு’ என்பது போல் சைகை செய்துவிட்டு, மீண்டும் படுத்துவிட்டார்.
இன்று இரவு உணவு சோறு, தயிர், ஊறுகாய் மட்டும்தான். பக்ஸ் மகளை மடியில் வைத்து ஊட்டினான். தமிழ் பக்கத்தில் ராணி உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டாள். பக்ஸ் மீனாவிற்கு ஊட்டுவதை பார்த்த ராணி, கொஞ்சம் சோறு எடுத்து தமிழ் வாயருகே கொண்டு சென்றாள்.
தமிழ் வாங்கவில்லை. அவளே சாப்பிட்டாள். பிஞ்சுக் கரங்களால் சோற்றை அள்ளி சாப்பிடுவதைப் பார்த்த ராணிக்கு, ‘என்னதான் இந்த புள்ள நினைக்கு. ஏன் யாரோடயும் ஒட்ட மாட்டிக்கு’ என்று சாப்பிடாமல் தமிழையே பார்த்தாள்.
“ராணி சாப்பிடு” என்று கணவன் சொன்ன பின்தான், சாப்பிட்டாள்.
சாப்பிட்டு முடித்தும், பாத்திரங்கள் கழுவி, தமிழை உறங்கச் சொல்லிவிட்டு, மகளையும் உறங்க வைத்துவிட்டு சற்றுநேரம் ஆயாவிடம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு பக்ஸ், ராணி உறங்கியிருந்தனர்.
தூங்கிய சற்றுநேரத்திலே தமிழுக்கு விழிப்பு வந்துவிட்டது. எழுந்துவிட்டாள். அங்கே எல்லாரும் உறங்கியிருந்தனர். ஊரே அடங்கிக் கொண்டிருந்தது.
தமிழுக்கு அம்மா ஞாபகம். எழுந்து சென்று கம்பியை பிடித்து, உமாவிற்கு விபத்து நடந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக அவள் பார்த்தது ரத்த வெள்ளத்தில் கிடந்த அம்மாவைத்தான்.
‘அம்மாக்கு என்னாச்சு, அம்மா ஏன் பேச மாட்டிக்கிறாங்க’ என்று வாய்விட்டு கேட்க முடியாமல், ஒவ்வொருவர் முகம் பார்த்துப் பார்த்து அழுதிருந்தாள். அவளிடம் வானத்தைக் காட்டி, ‘அம்மா மேல சாமிகிட்ட போயிட்டாங்க’ என்று
சொல்லிப் புரிய வைக்கப் பார்த்தார்கள்.
ஆனால் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவள் புரிந்து கொண்டாள். அம்மா திரும்பி வரப் போவதில்லை என்று. நாளாக நாளாக தனியாகத்தான் இருக்க வேண்டுமென உணர்ந்தும் கொண்டாள்.
ஆனால் அம்மா இல்லாமல் இருக்க பிடிக்கவில்லை. ‘மீனாக்கெல்லாம் அம்மா இருக்காங்க, எனக்கு என் அம்மா வேணும்’ என்றே நினைக்கிறாள் குழந்தை.
எப்படியாவது அம்மா என்னிடம் திரும்ப வந்திட முடியுமா என்று வானத்தைப் பார்த்தவளின் உதடுகள் பிதுங்கி… கண்கள் கலங்கின… அழுகைக்கு.
