Kathambari Novels
அத்தியாயம் – 10
தமிழைக் கைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு குணா வீட்டிற்கு வந்திருந்தான் பகவதி. நேற்று இரவு வெற்றி மீண்டும் வந்து நின்றது, பேசியது பயத்தையும் கோபத்தையும் கொடுத்திருந்தது. தமிழும் தன் பேச்சு கேட்க மாட்டிக்கிறாள் என்ற கோபமும் இருந்தது.
எனக்கு ஏன் இந்தப் பொறுப்பு, பெற்றவனிடமே அதை ஒப்படைத்துவிடலாம் என்று காலையில் எழுந்ததும், தமிழையும் எழுப்பி இங்கே வந்துவிட்டான்.
உமா இறந்தபோது, அவள் காரியத்திற்காக குணாவிடம் பேசி இருக்கிறான் பக்ஸ். அப்போது குணா பேசிய பேச்சில் எக்கசக்க கோபம் வந்தது. அன்று ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஓரிருமுறை தமிழுக்காக பேச வந்த போது, குணா பேச்சில் கோபமாகி அவனைத் திட்டிவிட்டுத்தான் சென்றான்.
ராணியை மரியாதை இல்லாமல் பேசியதால் ஒருமுறை குணாவை அடித்தும் இருக்கிறான். தமிழின் பொறுப்பை குணா ஏற்கமாட்டான் என்று புரிந்த பின், பக்ஸ் அவனிடம் பேசுவதில்லை. அவனிடம் பேசுவதே பிடிக்காது.
இருந்தும் இன்று பேச வந்திருக்கிறான்.
அங்கங்கே சாக்கடை நீர் போகும் தெருக்கள், அழுக்கேறிய சிறு வீடுகள் என்று இருந்த பகுதியை பக்ஸ் பார்த்தான்.
இப்படி ஒரு வீடு இருந்தால்கூட போதுமே என்ற ஏக்கம் வந்திருந்தது. அரசின் இலவச வீடு பெற விண்ணப்பிக்கலாம். அதற்கும் சில ஆவணங்கள் தேவைப்படுகிறது. அதற்குச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதையும் ஒருபக்கம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.
வந்த வேலையை பார்ப்போம் என்று குணா வீட்டிற்கு முன் நின்று அவனை அழைத்தான் பகவதி.
தன் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுத்தபடி வெளியே வந்த கோமதி, “வா ண்ணே” என்றவள், “என்னத்துக்கு இத இங்க இட்டாந்திருக்க” என்று தமிழைப் பார்த்துக் கேட்டாள்.
“நீ இவ அப்பன கூப்பிடு, அவன்ட்ட நான் பேசணும்” என்று பகவதி சொல்லும் போதே, “வா பக்ஸ், என்ட்ட என்ன பேசணும்?” என்று குணா லுங்கியைச் சரி செய்தபடி வந்து நின்றான்.
பகவதி எதுவும் பேசவில்லை. அவன் என்ணமெல்லாம் பெற்ற பிள்ளை வந்து நிற்கிறது, பார்க்கிறானா? என்ன அப்பன் இவன் என்றுதான் இருந்தது.
குணா வாளித் தண்ணீரில் முகம் கழுவி, வாய் கொப்பளித்துவிட்டு, “சொல்லு பக்ஸ்” என்றான்.
“தமிழ நீ பாத்துக்கோ, இனி எங்களால முடியாது” – பக்ஸ்.
“கொஞ்ச நாளுக்கு முன்னதான் ராணி வந்து பேசுச்சு. அவகிட்ட தெளிவா என் முடிவ சொல்லிட்டேனே. உன்கிட்ட அது எதும் சொல்லலயா”
“குணா கோபத்த கெளப்பாத, ஒழுங்கா உன் புள்ள பொறுப்ப எடுத்துக்கோ. அதான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது”
“என்னண்ணே சண்ட போட வந்திருக்கியா? இந்த புள்ளய எங்க தலையில கட்டணும்னு நெனைக்காத” என்ற கோமதி, “அது இங்க இருக்க நான் வுட மாட்டேன் சொல்லிட்டேன். இத வூட்ல வச்சிக்கின்னு இருக்க சந்தோசத்த நிம்மதிய கெடுத்துக்க முடியாது” என்றாள் கணவனிடம் கறாராக.
“உன் புள்ளய பத்தி இப்படி சொல்லுது உன் சம்சாரம், பாத்துட்டு சைலன்ட்டா நிக்க… வெட்கமா இல்ல” என்று பக்ஸ் கோபமாக குணாவிடம் கேட்டான்.
“நீ கம்முனு இரு. நான் பேசிக்கிறேன்” என்றான் குணா மனைவியிடம். “என்ன செய்யனுங்கிற, அவ சொல்றது உண்மதான” என்றுவிட்டு, “நீ மொதல தமிழ இங்க இருந்து கூட்டிட்டு போ” என்று விரட்டாத குறையாகச் சொன்னான்.
அடுத்து, “என்னால இவள பாத்துக்க முடியாதுனு இவ அம்மாட்ட தெளிவா சொல்லிருக்கேன். எப்பவும் இவள நான் பாத்துக்கிட்டது கெடையாது. திடீர்னு பார்த்துக்கோ பார்த்துக்கோனா எப்படி” என்றான்.
“இனிமே புருஷனும் பொண்டாட்டியும் இப்டி எங்க வூட்டு முன்னாடி வந்து நிக்காதீங்க” என்று கோமதியும் பகவதியை விரட்டவே பார்த்தாள்.
பகவதிக்கு கோபம் தலைக்கேறியது. ‘எனக்கென்ன தலையெழுத்தா? இப்படி இதுங்க வூட்டு முன்ன வந்து நிக்கணுமுனு’ என்று எரிச்சலும் கிளம்பியது. “என்னால தமிழ பாத்துக்க முடியாது” என்றான் மீண்டும்.
“அப்போ எதுனா ஹோம்ல வுட்டுரு பக்ஸ்” – குணா.
“அந்த பாவத்த நான் ஏன் செய்யணும், நீயே செய்” என்று தமிழைத் தூக்கி அங்கே கிடந்த ஸ்டூலில் உட்கார வைத்துவிட்டு, பக்ஸ் நடந்தான்.
இன்னும் தூக்க கலக்கத்தில்தான் இருந்தாள் தமிழ். அவர்கள் படபடவென்று பேசியிருக்க, ஒன்றும் புரியவில்லை. ஆனால் அம்மா இல்லாமல் தன்னைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்று புரிந்தது. கண்கள் கலங்க, மட்டியைக் கடித்து அழுகையை அடக்கி, பக்ஸ் உட்கார வைத்தபடி உட்கார்ந்திருந்தாள்.
கோமதிக்கு கோபம் வர, “ச்சே எப்படி வந்து உட்காந்திருக்கு பாரு, ஏய்… வேற எங்கயாவது போய் உட்காரு” என்று தமிழைத் தள்ளிவிட, தூக்கம் தெளியாமல் இருந்த குழந்தை நிற்க முடியாமல் விழுந்துவிட்டாள்.
சற்றுதூரம் நடந்திருந்த பக்ஸ், கோமதி கத்தியதும் திரும்பிப் பார்த்தவன் ஓடி வந்து தமிழைத் தூக்கிவிட்டான். அடிபட்டிருக்கா என்று அவள் கைப் பிடித்துப் பார்க்கப் போக, அவள் கையைத் தட்டிவிட்டு அந்தத் தெரு வழியே ஓடினாள்.
அனைத்தையும் வேடிக்கைப் போல் பார்த்துக் கொண்டிருந்த குணாவைப் பார்த்து, “நீ எல்லாம் ஒரு அப்பன் ச்சீ தூ” என்று பக்ஸ் தமிழைப் பிடிக்க ஓடினான்.
அவன் வருமுன் தமிழ் முக்கிய சாலைக்கு வந்திருந்தாள். “ஏய் நில்லு” என்று வேகமாக வந்து அவள் கைப் பிடித்து, அவளை நிறுத்தினான். கேவிக் கேவி அழுதாள். அவன் பிடியிலிருந்து விடுபட்டு ஓடவே முயற்சித்தாள்.
“கை பிடிச்சுக்கோ” என்று அதட்டினான். கண்கள் அவளுக்கு அடிபட்டிருக்கா என்று ஆராய்ந்தன. தூக்கிக் கொண்டு நடக்க நினைத்தான். அதற்கு அவள் விடவில்லை. இப்படி அழுபவளை நடத்திக் கூட்டிப் போக மனமில்லை.
அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தினான். அவளை ஏற்றிவிட்டு, அவனும் ஏறிக்கொண்டான். தமிழ் விக்கி விக்கி அழுது கொண்டே வந்தாள்.
அவள் முகம் பார்க்கப் பார்க்கப் பாவமாக இருந்தது. குழந்தை! இதற்கு என்ன புரியும்? இதற்கு ஏனிந்த நிலைமை? அவள் நிலை தெரிந்தே, தானும் இப்படிச் செய்திருக்க கூடாதோ என்ற கேள்வி மனத்தைக் குடைந்தது.
கூடவே பயமாகவும் இருந்தது.
தமிழைப் இப்படிப் பார்த்தால் ராணி என்ன சொல்வாளோ என்ற பயம்!
நேற்று இரவு மீனாவிற்கு காய்ச்சல். சரியாகத் தூங்கவில்லை. வெந்நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுத்தபடி, ராணிதான் மடியிலே வைத்துப் பார்த்தாள். அதிகாலையில்தான் மகளும், அம்மாவும் உறங்கியிருந்தார்கள்.
ராணிக்குத் தெரியாமல்தான் குணாவைப் பார்க்க வந்திருந்தான் பகவதி. அவர்கள் சென்று பேசுவது சரி… ஆனால் தமிழைக் கூட்டிச் சென்று பேசுவது ராணிக்குப் பிடிக்காது. இதில் இங்கே நடந்தது தெரிந்தால் கோபப்படுவாள். அவளை எப்படிச் சமாளிக்க என்று பயம்.
ஆட்டோவில் மேம்பாலம் வந்து இறங்கியதும், “எவ்ளோ ணா?” என்றான் பக்ஸ் ஓட்டுநரிடம்.
“நூத்தி நுப்பது” என்றார்.
“என்ன ணா இங்கனக்குள்ள வரதுக்கு நூத்தி நுப்பதா”
“பீக் டைம் பா” என்றார்.
நூறு ருபாய் எடுத்துக் கொடுத்தான். அவர் வாங்காமல் ஒருமாதிரி பார்க்க, “என்ட்ட இவ்ளோதான் இருக்கு, வாங்கிக்கோ ண்ணா” என்று பாவமாகப் பார்த்தான். அவர் பாலத்தின் அடியில் ஒரு பார்வை பார்த்தார். பேசாமல் அவன் கையிலிருந்த பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
ஆட்டோவில் இருந்து இறங்கியதும், தமிழ் அழுது கொண்டே அவள் இடத்தில் போய் படுத்துவிட்டாள். பக்ஸ் வந்து, கடகடவென தண்ணீர் புட்டியிலிருந்த நீரைக் குடித்து முடித்து, பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டான்.
இதைப் பார்த்த ராணி பதட்டமாகத் தமிழைப் போய் பார்த்தாள். ‘என்னாச்சு, என்ன செய்து’ என்று அவளைத் தூக்கப் பார்க்க, அவள் விடவில்லை. ‘சரி சரி அழாத’ என்று அவள் தலைக் கோதிவிட்டாள். அதற்கும் தமிழ் விடவில்லை என்றதும் ராணி கணவனிடம் வந்து நின்றாள்.
“என்ன, இவ இப்படி அழறா, என்னாச்சு” என்று அவனிடம் கேட்டாள். அடுத்து, “காலையிலயே எங்க அவளை கூட்டிப் போன, எந்திரிச்சி பார்த்தா ரெண்டு பேரும் இல்ல, எங்க போயிருந்தீங்க” என்று படபடத்தாள்.
அவள் பதட்டத்தைப் பார்த்தவன், அவன் எழுந்து அவளை உட்கார வைத்து, “நான் சொல்றத பொறுமையா கேளு” என்று நடந்ததைச் சொல்லிவிட்டான்.
ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் கோபமாக அவனைப் பார்த்தாள். அடுத்து, “ஏன் பக்ஸ் இப்படி பண்ண, உமா போனதும் குணாகிட்ட தமிழ விடப் போனப்ப நடந்தது தெரியும்ல. அவங்க எப்படி பேசுவாங்க, எப்படி நடந்துப்பாங்கனு.
எதுனாலும் நம்மதான போய் பேசணும்னு சொல்லிருக்கோம். எதுக்கு அவள கூட்டிப் போன, அந்த புள்ள மனசில என்ன நினைக்குதோ… சொல்ல கூட முடியாது. பாவமா தெரியலயா உனக்கு” என்று உதடு துடிக்கப் பேசினாள்.
அவனுக்கும் தமிழைக் கூட்டிப் போயிருக்க கூடாது என்று தோன்றுகிறது. நேற்று வெற்றி வந்து பேசியதில் ஒரு கோபம்… ஒரு குழப்பம். அவன் கேட்டது போல் வேறு யாரும் கேட்டால்… ஒவ்வொருத்தருக்கும் போய் தன்னை விளக்க வேண்டுமா? என் வாழ்க்கை இருக்கும் நிலைக்கு இதெல்லாம் தேவையா?
நேற்று வெற்றி வெகுநேரம் இங்கேயே அமர்ந்துவிட்டுத்தான் சென்றிருந்தான். யாரிவன்? ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? இவன் எப்படிப்பட்டவன் என்று அவனுக்குள் தமிழின் பாதுகாப்பை நினைத்து நிறைய கேள்விகள். தன்னால் அவளைப் பாதுகாக்க முடியாதோ என்று பயம்.
பெற்றவனிடமே பொறுப்பைக் கொடுத்துவிடலாம் என்று நினைத்துவிட்டான். ஆனால் தமிழ் அழுவதைப் பார்க்கப் பார்க்க, நிதானமாக யோசித்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. பதில் இல்லாமல் நின்றான் பக்ஸ்.
கண்ணீர் ததும்பி நிற்க, “அதுக்கு என்ன என்ன செலவாகிட போகுது. நம்மால அத பாத்துக்க முடியாதா?” என்றாள்.
அவர்கள் நிலைக்கு முடியாது என்பதுதான் உண்மை. இவளுக்குத் தெரியாதா என்று எரிச்சல். “குணா வீட்டுக்கு கூட்டி போயிருக்க கூடாதுதான், புரியுது. நீ வேற எதும் பேசாம இருக்கிறியா” என்றான் பொறுமையாக இருக்க முயன்று.
தமிழ் ஏங்கி அழுவதைப் பார்த்தவள், “தப்பு பக்ஸ், நீ பண்ணது பெரிய தப்பு. அன்னிக்கி கல்லு மனசுனு சொன்னப்ப மட்டும் கோபம் சுர்ன்னு வந்தது. நீ இப்போ பண்ணிட்டு வந்திருக்க காரியம் அப்படித்தான இருக்கு” என்றாள்.
அப்போதுதான் பூ கட்டிக் கொடுத்துவிட்டு ஆயா வந்தார். அவள் பேசியதைக் கேட்டிருந்தவர், “ஏ காலங்காத்தாலயே என்ன அவனை நிக்க வச்சி கேள்வி கேட்டுக்கின்னு இருக்க, இதயே ஏன் திரும்ப பேசற” என்றார் ராணியிடம்.
பக்ஸ், “ஆயா நீ பேசாம போ. என்மேலதான் தப்பு, நானே அவளை எப்படி காம்ப்ரமைசிங் பண்ணனு தெரியாம கடுப்புல நிக்கேன்” என்றான்.
அவன் முகத்தைப் பார்த்தார். அவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்பது தெரிந்தது. “பேசாம எந்திரிச்சி வேலய பாரு ராணி” என்றார்.
“நீ அவருக்கே சப்போர்ட் பண்ணு, இவரு என்ன பண்ணிருக்காரு தெரியுமா ஆயா, தமிழ குணா அண்ணாட்ட கொண்டு வுட பாத்திருக்காரு, எதுக்கு இந்த வேலை சொல்லு. பாரு ஆயா அந்த புள்ள எப்படி அழுவுதுனு, பாவமாவே இல்லயா இவருக்கு” என்றாள் ராணி.
“என்னமோ உனக்கு மட்டும்தான் நல்ல மனசு இருக்க மாதிரி பேசாத” என்று ராணியைச் சத்தம் போட்டார் ஆயா.
“சொம்மா என்னயவே சொல்லாத ஆயா” என்று பட்டென்று எழுந்தாள்.
அங்கிருந்தால் எதுவும் பேசிவிடுவோம் என்று தெரிய, “ஆயா வுடு, அவளுக்கு வேலைக்கு லேட்டாகுது, கெளம்பட்டும்” என்று மகளைப் பார்க்கப் போகப் போனான் பக்ஸ்.
“அவன் சொல்றான்ல, கெளம்பு” என்றார் ஆயாவும்.
“இன்னிக்கி வேலைக்கு போகவே மனசில்ல ஆயா, வுடு” என்று நாற்காலியில் அயர்ந்து போய் அமர்ந்துவிட்டாள்.
பக்ஸ் போனவன் விருட்டென வந்து அவள் முன் நின்று, “போகாத, இப்படியே இருந்துக்க. ஏதோ ஒரு வேலை கெடச்சிருக்கு, வருமானம் வரும், எப்டியாது வாழ்க்கைய மாத்திக்கலாம்னு நினச்சிருக்கேன். அது இல்லாம பண்ணிடு.
இந்த வேலை போயிடுச்சினா, இப்படி ரோட்லயே வாழ வேண்டியதுதான். வீடு வாசல்னு இல்லாம கடைசி வரைக்கும் இப்படி தெருவுலயே இருக்க போறோம் பாரு… மாறவே போறதில்லை” என்று கத்திவிட்டான்.
ஒரு நிமிடம் அவன் முகத்தையே பார்த்திருந்தாள். பின் எழுந்து கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
ஆயா, “என்ன பக்ஸ், நீயேன் இப்டி பேசற. ராத்திரிலாம் முழிச்சிருந்து புள்ளய பார்த்திருக்கா, அவளுக்கும் டயடா இருக்காதா? தமிழு அழுதுகிட்டு இருக்கு, மீனாக்கு காய்ச்சல், அவ எப்படி போய் நிம்மதியா வேலை பார்ப்பா, கொஞ்ச நேரம் இருந்திட்டு போனா என்ன” என்றார்.
தலையில் அடித்துக் கொண்டான் பக்ஸ். “ப்ச் இருந்த டென்சன்ல பேசிட்டேன் ஆயா” என்றவன், “மீனாவ, தமிழ பார்த்துக்கோ, இப்போ வந்துடறேன்” என்று மனைவியைப் பார்த்துப் பேச ஓடினான்.
சாலையைக் கடந்து ராணி, அடுத்த பக்கத்து நடைபாதையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். வேகமாக வந்த பக்ஸ், அவள் தோளைப் பிடித்து நிறுத்தி, அவள் முன்னால் வந்து நின்றான்.
அவளும் நின்றாள். கோபப்பட்டு போகவெல்லாம் இல்லை.
ஆட்கள் வருவதும், போவதுமாக இருந்ததால் ‘ஓரமா நிக்கலாம் வா’ என்பது போல் அவளை அழைத்து வந்தான். அவளும் வந்தவள், மூடியிருந்த கடையின் வாசற்படியில் அமர்ந்துவிட்டாள்.
சாப்பிட்டாளா என்று தெரியவில்லை. கூடையைப் பார்த்தான். சாப்பாடு எடுத்திருந்தாள். அவளைப் பார்த்தான். இரவு உறக்கம் சரியாக இல்லாததால் சோர்ந்து தெரிந்தாள். ஓடிப் போய் எதிரே இருந்த கடையில் தேநீர் வாங்கி வந்து, ‘குடி’ என்பது போல் அவளிடம் நீட்டினான்.
வேண்டாம், குடிக்க மாட்டேன் என்று மறுக்கவில்லை. வாங்கிக் கொண்டாள். ஆனால் குடிக்கவில்லை. மனைவி முகம் பார்த்தான். அதில் பயம் தெரிந்தது. அவன் பேச்சினால் விளைந்த பயம்… வாழ்க்கை இப்படியே போய்விடும் என்று அவனே சொல்லிவிட்டதால் வந்த பயம் தெரிந்தது.
எதுவும் சொல்லாமல், அவள் தலையை தடவிக் கொடுத்தான். இரண்டு முறை தடவிக் கொடுத்தப் பின் தேநீரைக் குடிக்க ஆரம்பித்தாள். “மீனா, தமிழ நான் பார்த்துக்கிறேன், நீ நிம்மதியா வேலைக்கு போய்ட்டு வா” என்றான்.
தலையை ஆட்டினாள். பாதிக் குடித்ததும், டம்பளரை அவனிடம் நீட்டினாள். ‘வேணாம், நீ குடி’ என்று மறுக்கவில்லை. வாங்கிக் குடித்தான். “அவசியம்னா ஓனரம்மா போனுக்கு கூப்பிடு, வந்திடுவேன்” என்றாள்.
சரியென்று தலையாட்டினான்.
“லேட்டாகுது, கிளம்பறேன்” என்று எழுந்து போனாள்.
ஒரு நொடி யோசனையில் நின்றவன், மீண்டும் மனைவி முன் சென்று, “நல்லா இருப்போம், பயப்பிடாத” என்றான்.
அவனையே பார்த்து நின்றாள்.
“நான் இருக்கேன்ல, பார்த்துப்பேன்” என்றான்.
அவர்கள் வாழ்வைப் பற்றி அவன் பேசியது அவள் மனதைப் பாதித்திருந்தது. அப்போது வராத கண்ணீர், ‘நானிருக்கேன்’ எனும்போது வந்துவிட்டது.
“ராணி அழாத, சாப்பிட்டியா” என்றான்.
முந்தானையில் முகத்தைத் துடைத்தவள், “இப்ப பசிக்கல பக்ஸ், நான் அங்க போய் சாப்பிடுகிறேன்” என்றாள்.
“சரி கெளம்பு, சாப்பிட்டிருக்கணும், நான் அவங்க ரெண்டு பேரயும் சாப்பிட வச்சிடுவேன். நீ அத யோசிச்சிக்கினே சாப்டாம இருந்திடாத” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு வந்தான்.
வந்ததும் மகளைப் பார்த்தான். இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். கழுத்து, நெற்றி தொட்டுப் பார்த்தான். லேசாக சுட்டது. முன்னெற்றி முடிகளை ஒதுக்கி முத்தம் வைத்தவன், மகளருகில் சற்றுநேரம் படுத்திருந்தான். அடுத்து எழுந்து வந்து தமிழைப் பார்த்தான். அவளும் உறங்கியிருந்தாள்.
அமர்ந்திருந்த ஆயாவைப் பார்த்து, “நீ படுத்துக்கோ ஆயா, நான் பார்த்துக்கிறேன்” என்று சோறு எடுத்து வைத்துச் சாப்பிட அமர்ந்தான்.
“நேத்து அந்த பையன் வந்து உட்காந்து இருந்ததுல பயந்திட்டியா, இவ்ளோ பேர் இருக்கோம் இங்க, இத தாண்டி அவன் என்ன செஞ்சிட முடியும்” என்று ஆயா வெற்றியைச் சொல்லிப் பேசினார்.
“அது மட்டுமில்ல ஆயா. தமிழ் இங்கயே இருந்தா ஏன் பயப்பட போறேன், இது அடிக்கடி டேசன் போயிடுதே, அத்தன கூட்டம் வந்து போற எடம், பொம்பள புள்ள வேற. எனக்கு பயம் இருக்காதா” என்று ஆயாவிடம் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்த போது, “ப்பா” என்று மீனா எழுந்து வந்தாள்.
“வா செல்லம் வாடா வா” என்று மகளைத் தூக்கினான். காய்ச்சலில் முகம் வாடியிருந்தது. சுடுநீர் வைத்து, அவளுக்கு முகம் கழுவிவிட்டான். கடையில் இட்லி வாங்கி வந்து ஊட்டினான். உடல் சூடு இருந்ததால் மீனா அனத்திக் கொண்டே இருந்தாள். இட்லியையும் சரியாக வாங்கவில்லை. தூக்கி வைத்து அங்கும் இங்கும் நடந்து மகளை எப்படியோ சாப்பிட வைத்துவிட்டான்.
அடுத்து தமிழைப் பார்த்தான். அவள் இப்போது முழித்திருந்தாள். “எந்திரி தமிழ், சாப்பிடனும்ல” என்றான். அவள் எழாமல் படுத்திருந்தாள். எழுப்பிவிட பார்த்தான். எழ முடியாது என்று உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள். அவனும் எப்படி எப்படியோ கெஞ்சிப் பார்த்தான். அவள் எழவேயில்லை.
ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் விட்டுவிட்டான்.
ஆயா வந்து, “ஒழுங்கா எந்திரிச்சி சாப்பிடு” என்று அரட்டி அவளை எழுப்பி உட்கார வைத்தார். தமிழுக்கும் இட்லி வாங்கியிருந்தான். ஊட்டி விட்டாலும் வாங்க மாட்டாள் என்பதால் தட்டில் வைத்துக் கொடுத்தான்.
தட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆயாதான் அருகில் உட்கார்ந்து அதட்டியும், உருட்டியும் சாப்பிட வைத்தார். சாப்பிட்டதும் மீண்டும் படுத்துக் கொண்டாள். அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பக்ஸிடம், “தூங்கி முழிச்சா சரியாயிடுவா, வுடு” என்று சொல்லிவிட்டுப் போய் படுத்தார்.
அவ்வளவு நேரம் ஆயா அமர்ந்திருந்ததே பெரிது. உடனே தூங்கிவிட்டார்.
சற்றுநேரத்தில் அவன் கையிலிருந்த மீனாவும் தூங்கிவிட்டாள். அவளைக் கொண்டு போய் படுக்கப் போட்டுவிட்டு வந்து பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தான். மனம் அப்படியொரு அயர்வில் இருந்தது.
பன்னிரண்டு மணியளவில் ‘லோடு’ ஏற்ற ஆள் தேவை என்று கூப்பிட்டார்கள். காலையில் நூறு ரூபாய் ஆட்டோவிற்கு கொடுத்தாயிற்று. இன்னும் ஒரு வாரத்திற்கு வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை.
இரு பிள்ளைகள் இருக்கும் நிலையில் சோறு மட்டும் கொடுத்தால் அவர்கள் சாப்பிடுவது, சாப்பிட வைப்பது கஷ்டம் என்றே தோன்றியது. மீனாவிற்கு காய்ச்சல் விடவில்லை என்றால் மருத்துவமனை போக வேண்டும். எதற்கும் கையில் காசு வேண்டும். ஆயாவைப் போய் எழுப்பினான்.
“லோடு ஏத்த கூப்பிடறாங்க ஆயா. ரெண்டு பேரும் தூங்கிறாங்க. கொஞ்சம் பார்த்துக்கிறியா, நான் போய்ட்டு வந்துறேன்”
“நீ போ ப்பா நான் கவனிச்சிக்கிறேன்” என்று எழுந்து ஒரு கல்லில் அமர்ந்தார்.
பக்ஸ் வேலை முடிந்து இரண்டு மணிக்கு வந்தான். ஆயா மீனாவைத் தூக்கி வைத்து அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தார். “என்ன ஆயா, திரும்பவும் காய்ச்சலா” என்று வேகமாக வந்து மகளை வாங்கிக் கொண்டான்.
“எந்திரிச்சதும் உன்னய தேடி அழுதா. அதான் பார்க் பக்கமா போய் நின்னு அழுகைய நிறுத்த பார்த்தேன். இப்ப பரவாயில்ல” என்றார்.
இன்னும் விசும்பல் இருக்கும் மகளிடம், “அழுதீங்களா அப்பாவா தேடி” என்று மகளின் முகம் முகர்ந்து, “சாப்பிடுவோமா” என்றான். “எவ்ளோ நேரம் தூக்கி வெச்சி நடந்த, முட்டி வலிக்கலயா, போய் படு ஆயா” என்றான்.
ஆயா போகாமல் நின்றவர், அவனிடம் தமிழ் படுத்திருக்கும் இடத்தை, ‘பாரு’ என்று காட்டினார். அவனும் பார்த்தான். அங்கே தமிழ் இல்லை. “என்ன ஆயா, டேசன் போயிடுச்சா” என்றான்.
“இங்க இருக்க வரைக்கும் எந்திரிக்கவே இல்ல. நான் அந்த பக்கம் போனதும் போயிருக்கும் போல”
தமிழை நினைத்து, ‘நான் என்னதான் செய்ய’ என்ற இயலாமையுடன் பக்ஸ் நின்றான்.
“அம்மா இல்ல, அப்பனும் இப்படி இருக்கான். வயசுக்கு மீறின வேதனை அது மனசில இருக்கு. பாவம், எதயும் வாய திறந்து சொல்லவும் முடியாது. எனக்கு புரிஞ்சத சொல்றேன், கண்ணு முன்னால அவ அம்மா சாவ பார்த்த இடம் இது, இங்க அதால இருக்க முடியல, கஷ்டப்படுது”
அவன் இன்னும் அப்படியே நிற்க, “வந்துடுவா, பயப்பிடாத” என்றவர், “பக்ஸ் மீனாக்கு சாப்பாடு குடு, என்ட்ட வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா. அப்படியே நீயும் சாப்பிடு” என்று போய் படுத்துக்க கொண்டார்.
தமிழ் பற்றிய யோசனையோடு பகவதி மகளைக் கவனித்தான்.
ராணி அன்று சீக்கிரமே வேலையை முடித்து வந்தாள். ஓனரம்மா எங்கோ செல்ல வேண்டி இருந்ததால் இரவு உணவு போடவில்லை. வந்ததும் மகளை கணவனிடமிருந்து வாங்கிக் கொண்டு ராணி, “அப்புறம் காய்ச்சல் வரலைல, சாப்பிட்டாளா” என்று விசாரித்தாள்.
‘இல்லை’ என்று தலையசைத்தான்.
அவன் முகம் ஒருமாதிரி இருக்கவும், “என்ன பக்ஸ்” என்றாள்.
தமிழ் படுக்கும் இடத்தைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். அவளுக்குப் புரிந்து போயிற்று. ‘என்ன செய்ய?’ என்று கணவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த பயத்தைப் பார்த்தவன், “வந்திடுவா, ஆயா அப்படித்தான் சொல்லிச்சி” என்றான்.
ராணி யோசனையோடு நின்றாள். மற்ற நாள் என்றால் இப்படி இருந்திருக்க மாட்டாள். இன்று காலையில் நடந்ததை நினைத்தவளுக்கு, தமிழ் என்ன மனநிலையில் இருக்கிறாளோ என்ற குழப்பம். வருவாளா… வராமல் வேறு எங்கும் போய்விட்டால் என்ன செய்ய என்ற பயம்.
“நான் போய் ஒரு எட்டு பார்த்து கூட்டிட்டு வரட்டுமா” என்று, அவன் என்ன சொல்வானோ என்ற பயத்துடன் கேட்டாள்.
“போ” என்று மகளை வாங்கிக் கொண்டான். அவனுக்கும் அப்போதே போய் பார்க்கத் தோன்றியது. மகள் உடல்நிலை இருந்த நிலையில், உடல் சோர்வில் அவளைத் தூக்கிக் கொண்டு போகவோ, தனியே விட்டுச் செல்லவோ மனமில்லை. அதுதான் ராணி கேட்டதும் போகச் சொல்லிவிட்டான்.
ராணி போவதைப் பார்த்ததும், ‘அம்மாட்ட போனும்’ என்று மீனா அழுதாள். ராணி தயங்கி நிற்க, “போ, நான் பாத்துக்கிறேன். இந்தா போன் வெச்சிக்கோ, எதுனா தேவைனா ஆயா போனுக்கு போன் போடு” என்று கொடுத்தான்.
ஒரு அலைபேசிதான் இருவருக்கும். பெரும்பாலும் பக்ஸ் கையில் இருக்கும். அப்படி இல்லையா யாருக்குத் தேவையோ அவர்களிடம் இருக்கும்.
“பாத்து போய்ட்டு வா” என்றவன் முகத்தில் கோபம் இருந்தது. தமிழ் இப்படிப் போனதினால் வந்த கோபம் என்று புரிந்தது. ‘இவ ஏன் இப்படி பண்றா’ என்று அவளுக்கும் தமிழ்மீது கோபம் வந்தது. ‘வேற எங்கயும் போயிருக்க கூடாது’ என்றும் இருந்தது. ரயிலில் ஏறி எழும்பூர் சென்றாள்.
உமா எந்த நடைமேடையில் புத்தகம் விற்பாள் என்று தெரியுமென்பதால் நேராக அங்கே சென்றாள். முழு பகுதியும் தேடினாள். அங்கே தமிழ் இல்லை. ‘ஐயோ வேற எங்க போயிருக்கும் புள்ள’ என்று பதற்றம் வந்துவிட்டது.
அடுத்த நடைமேடையில் தேட ஓட்டமும் நடையுமாக, நடைமேடை பாலத்தில் வந்தாள். மேலிருந்து பார்த்த போதுதான் அடுத்த நடைமேடையில் தமிழ் நிற்பதும், அவளை சுற்றி ஆட்கள் இருப்பதும் தெரிந்தது. ‘ஐயோ என்னாச்சு’ என்று வேகமாக ஓடினாள்.
அந்த இடம் கூட்டமாக இருந்தது. எதோ ஒரு அமைப்பிலிருந்து வந்த ஆட்கள் ஐந்து பேர் நின்றனர். அந்த அமைப்பின் பட்டை அணிந்திருந்தார்கள். பொது மக்கள் சிலரும் அங்கே நின்றனர்.
அந்த ஐந்து பேர்களில் ஒருவர் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் தமிழைத்தான் பேசினார். என்ன எதுவென சரியாகத் தெரியவில்லை. ராணி, “என்ன சார், என்னாச்சு” என்று கேட்டாள்.
“இந்த பிளாட்பார்ம சுத்திக்கிட்டு இருக்க பிள்ளைங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தோம். இந்த பொண்ணும் இங்கதான் இருந்தது. சரின்னு கொடுத்தா தூக்கி வீசிடுச்சி” என்று சாப்பாடு பொட்டலம் கிடந்த இடத்தை பார்த்தார்.
தயிர்சாதம் பொட்டலத்திலிருந்து வெளியே வந்து சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்ததுமே ராணிக்கு கோபம். தமிழை அவள் முகம் பார்க்க வைத்தாள்.
“ஏன் தமிழ் இப்படி பண்ண? சாப்பாட தூக்கி எறியலாமா சொல்லு. முதல நீ இங்க வரக்கூடாதுனு சொல்லிருக்கோம்ல. அப்புறமும் எதுக்கு வந்த?” என்று தமிழிடம் தன் கோபத்தைக் காண்பித்தாள் ராணி.
தமிழுக்கு ராணி பேசுவது புரிந்தது. அவர்கள் சாப்பாடு கொடுத்த போது வாங்க மாட்டேன் என்று தமிழ் மறுத்திருந்தாள். என்னமோ இப்படி யாரும் சாப்பாடு கொடுத்தால், ‘வேண்டாம் சார்’ என்று உமா மறுத்துவிடுவாள்.
அம்மா செய்ததையே தமிழும் செய்தாள். அவள் மறுப்பையும் மீறி அவர்கள் பொட்டலத்தை அவள் கையில் கொடுத்ததும், தூக்கி எறிந்துவிட்டாள்.
“சாப்பாட்ட மதிக்க தெரிய வேண்டாமா” என்றார் இன்னொருவர்.
“எதும் கேட்டா பதில் சொல்ல மாட்டிக்கு” என்றார் மற்றொருவர்.
“ஐயோ சார் அதுக்கு வாய் பேச வராது” என்றாள் ராணி.
அவர்கள் இப்போது தமிழைப் பாவமாகப் பார்த்தார்கள்.
ராணிக்கு அங்கே நிற்கவே பிடிக்கவில்லை. “வா” என்று தமிழை இழுத்தாள். தமிழ் வராமல் நின்றாள். “வா” என்று அவளைத் தூக்கப் பார்த்தாள். அதற்கும் தமிழ் விடவில்லை. ராணிக்கு அப்படியொரு கோபம் வந்தது.
அந்தநேரம் வெற்றி வந்து நின்றான். எப்போது போல் இன்றும் வந்திருந்தான். கூட்டம் இருப்பது கண்டு இங்கே வந்தான். வந்தபின்தான் தமிழ் நிற்பதைப் பார்த்தான். சட்டென மனம் பதற்றமாக, “உனக்கு ஒன்னுமில்லைல” என்றான் தமிழ் முகம் பார்த்து.
தமிழும் அவன் முகத்தைப் பார்த்துதான் இருந்தாள்.
பரிதவிப்புடன், “சொல்லு பேபி… ஒன்னுமில்லைல” என்றான் மீண்டும்.
என்ன நினைத்தாளோ தமிழ்… வெற்றி அருகே சென்று நின்று, ‘தூக்கு’ என்பது போல் கைகளை அவன் முகத்தை நோக்கி உயர்த்தினாள்.
