Kathambari Novels
அத்தியாயம் – 12
அவனை… அவன் காதலை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அவனது கைப்பாலத்திலே அவளை நிறுத்தி வைத்திருந்தான். பின்தான் மெல்ல தள்ளி நிறுத்தி அவளைப் பார்த்தான். அவளும் மெது மெதுவாக தலையை உயர்த்தி அவனைப் பார்த்து ஒரு கோடு போல் திராணியற்ற புன்னகை தந்தாள்.
அவளுக்குள் ஏதோ மாற்றம் இருப்பது போல் தெரிந்ததால், “ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டான்.
“டயர்டா இருக்கு. அதான்”
“ஃபீவரோட டிராவல் பண்ணிருக்க கூடாது. நீ கேட்டேன்னு நானும் கூட்டிட்டுப் போனேன் பாரு… என் தப்பு. போயிருக்க கூடாது. பட் வேற எதுவும் இல்லைல? உன்னைப் பார்த்தா டிப்பிரஸ்டா இருக்க மாதிரி தெரியுது”
மேலும் மேலும் அவன் செய்கையால்… பேச்சால் உணர்த்தப்படும் காதலால், அவள் சொல்லொன்னா துன்பத்திற்கு ஆளானாள்!
“சரி போ. போய் ரெஸ்ட் எடு”
எப்போதும் சொல்லும், ‘ம்ம்ம்ம்’ என்றுகூட சொல்லாமல் திரும்பி அறைக்குள் சென்றாள். கதவைத் தாழிடும் போது அவன் நிற்பதைக் கண்டு… வரவழைத்த புன்னகையுடன், “குட்நைட். தூங்கு” என்றாள்.
‘அவள் அவளாக இல்லை’ என்று அவனுக்குத் தெரிந்தது. அவளுக்கோ, அவன் பார்வையில்கூட திருப்தியின்மை தெரிந்தது. இருந்தும் கதவைத் தாழிட்டாள்.
ஒருபுறமோ, கதவை மூடியவள் அப்படியே சரிந்து கொண்டே வந்து தரையில் அமர்ந்தாள். காதலை மறைத்ததைப் போல தன் கவலையையும் மறைக்கும் முயற்சியில் வாயை மூடிக்கொண்டு அழுகைக்குள் புகுந்தாள்.
மறுபுறமோ… அவன் தவித்துக் கொண்டிருந்தான். அவள் எதையோ தன்னிடம் மறைக்கிறாள். அவளிடம் கதவைத் திறக்க சொல்லி என்னவென்று கேட்டறிய வேண்டும் என்றது காதல் மனம்!
ஆனால் அவள் தன்னிடம் எதையும் மறைக்க மாட்டாள் என்றது காதலியின் மீது நம்பிக்கை கொண்ட மனம்!!
என்ன செய்வது என்று தெரியாமல், அவனும் குழம்பித்தான் போனான். வெகு நேரத்திற்குப் பின்னரே அங்கிருந்து நகர்ந்து அறைக்குச் சென்றான்!!
அவள் இரவு தூக்கமில்லாமல் கழிந்தது! நாளைய விடியல் பெரிதாக இருக்க போவதில்லை என்று தெரிந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த ஐந்து நாட்களை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டு வாழ்ந்திட வேண்டுமென்று நினைத்தாள்!
அது முடியுமா? என்று அவளுக்கே சந்தேகம்!!
இத்தனை சீக்கிரமாக முடிந்துவிட்டதே இந்த ஐந்து நாட்கள்!! என்று ஏக்கமாய் இருந்தது. அவனுக்கும் அவளுக்கும் இடையேவுள்ள காதலை உணர முடிந்தது. உணர்ந்ததை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை!
ஏற்றுக் கொண்டாலும் சுற்றி உள்ளவர்கள் ‘என்ன நினைப்பார்கள்?!’ என்ற பயம் அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் தனக்குள் விடை தேவையில்லா வினாக்களைக் கேட்டு… அலுத்துப் போய் அசதியில் தூங்கிப் போனாள்!
அதிகாலையிலே விழிப்பு வர, எழுந்து தயாரானாள். அன்றைய தினம் அவன் கண்களின் பாவை நிறத்தில் புடவை அணிந்திருந்தாள். இன்றைய தினத்தை கடப்பது அத்தனை எளிதல்ல என்று தோன்றியது. ஆதலால் நன்றாக மனதை திடப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்!
அவளுக்கு முன்பே அவனும் விழித்தெழுந்து… அவளுக்காகவே காத்திருந்தது போல் இருந்தது அவன் அமர்ந்திருந்த தோரணை!
அவள் வெளியே வருவதைக் கண்டவன், “இப்ப எப்படி இருக்கு. டயர்ட்னெஸ் போயிடுச்சா?” என்று எழுந்து சென்று கேட்டான்.
“ம், சாப்பிடலாமா?” என்றாள்.
“ஒரு ஃபங்கசனுக்கு போகணும். ஸோ அங்கதான் பிரேக்பாஸ்ட்”
“ஓ, அப்போ லக்கேஜ் எப்ப எடுத்துக்க?” என்றாள் முதல் முயற்சியாக!
“லக்கேஜா?” என்று புரியாதது போல் கேட்டான்.
“இன்னைக்கோட ஆறு நாள் முடியுதுல, அதான்” என்று பின்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“அவ்வளவு அவசரம் ஏன்? மேரேஜ்க்கு போயிட்டு வந்தப்புறமா எடுத்துக்கோ” என்றவனுக்குப் புரிந்தது அவளை இங்கே நிறுத்தி வைக்க நிறைய போராட வேண்டுமென!
“மேரேஜா?”
“ம்ம்ம்… ரிசார்ட்டுக்கு மெட்டீரியல் சப்ளை பண்ற ஒருத்தரோட பையனுக்கு மேரேஜ். ஸோ போயிட்டு வந்து மத்ததை பார்த்துக்கலாம்”
“நான் எதுக்கு அங்கெல்லாம்?” என்று ஒதுங்கப் பார்த்தாள்.
“அதான் ஆறுநாளுன்னு நீயே சொன்னேன்ல. இன்னும் ஆறு நாள் முடியலை. நீ வந்தே ஆகணும்” என்றான் அழுத்தமாக.
இவன் காதலை சமாளிப்பதற்கு கல்யாண விழாவைச் சமாளிக்கலாம் என்று எண்ணியவள், “சரி” என்று அவனுடன் கிளம்பினாள்.
ஆனால் அங்கே சென்றபிறகே தெரிந்தது கல்யாண விழாவைச் சமாளிப்பது கடினமென்று! ஏக்கங்களும் கோபங்களும் அவளை ஒருங்கே வாட்டியது!!
அவன் வருகை கண்டு… மணப்பையன் தந்தை வந்து வரவேற்று இருப்பதற்கு இருக்கை ஏற்பாடு செய்தார். சம்பிரதாய நலவிசாரிப்புகள் முடித்ததும், அவர் விடை பெற்றுச் செல்லும்போது ‘இவங்க?’ என்று அவளைக் கை காட்டினார்.
“என்னோட ஃபிரண்ட்” என்று சொன்னான்.
சரி என்று அவளையும் வரவேற்பது போல் ஒரு புன்னகையைத் தந்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் சென்றவுடன், “ஏன் நீ ஃப்ரண்ட்னு சொன்ன?” என்று ‘தன்னை அவருக்கு அறிமுகப்படுத்துதல் தேவையா?’ என்பது போல் கேட்டாள்.
“ஓ, லவ்வர்னு சொல்லிருக்கனும்ல. இரு அவரைக் கூப்பிட்டுச் சொல்லிடலாம்” என்று எழ போனவனைக் கைப்பிடித்து இழுத்து, “பேசாம உட்காரு” என்றாள் கோபமாக!
ஆனால் அவன் உட்காராமல், ‘போவேன்’ என்று நின்றான். அவனைத் திரும்ப அமரவைக்க, அவன் கைப்பிடித்தபடியே போராடிக் கொண்டிருந்தாள். சிறிது வினாடிகளில்… அவனே சிரித்து அமர்ந்து விட்டான்.
“எதுக்கு சிரிக்கிற?” என்றாள் இன்னும் அவன் கையை விடாமல்!
“இல்ல, நானா போய் சொல்லிருந்தா அவருக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கும். பட் இப்போ…” என அவள் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தான்.
அவளும் பார்வையைச் சுழல விட்டாள். அனைவரின் பார்வையைச் சந்திக்க முடியாமல், “ப்ச்” என்று அவன் கைகளை விடுவித்து, கவனத்தை வேறு பக்கம் திருப்பும் எண்ணமாக மணமேடையைப் பார்த்தாள்.
விமர்சையாக அங்கு நடந்து கொண்டிருந்த கல்யாண சடங்குகளை பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “என்ன அப்படி பார்க்கிற?” என்றான்.
“….”
“நோட்ஸ் எடுக்கிறியா?”
‘புரியல எனக்கு’ என்பது போல பார்த்தாள்…
“நம்ம மேரேஜ்க்கு நோட்ஸ் எடுக்கிறியா?”
“கிரான்டா நடக்குதே அதான் பார்த்தேன். நீ வேற”
“நம்ம கல்யாணம் இதைவிட கிரான்டா நடக்கும்”
‘எதற்கு இப்படி?’ என்பது போல் பார்த்தாள்.
“என் பாட்டியோட ஆசை மறந்திடுச்சா?” என்று கண் சிமிட்டல் செய்தான்.
‘எவ்வளவு நம்பிக்கை இவனுக்கு என்மீது!’ என்ற பார்வை பார்த்தாள் அவன் விழி நோக்கி!
“அப்போ ஒன்னு ரெண்டு பேருக்கு டவுட் இருந்தாலும், இப்போ நீ பார்க்கிறதுல கன்ஃபார்ம் பண்ணியிருப்பாங்க” என்றான் சிரித்துக் கொண்டே! வேறுபக்கம்
திரும்பிக் கொண்டாள்.
தற்செயலாக அவர்கள் அமர்ந்திருந்த பக்கம் வந்த யாரோ ஒரு நடுத்தர வயது மனிதர், அவனைக் கண்டவுடன் அருகில் வந்து நலம் விசாரித்தார். அவனிடம், தொழில் சார்ந்த பேச்சுகள் சற்றுநேரம் பேசி முடித்தவர், விடைபெறுகையில் அவளைப் பார்த்தார்.
உடனே, “உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. நீங்க கோவாவ?” என்று அவளிடம் கேட்டார். பதில் சொல்ல முடியாமல் துடிதுடித்துப் போனாள்.
அவன், “கோவாலதான் பத்து வருஷமா இருக்காங்க. ஸோ நீங்க பார்த்திருக்க சான்ஸ் இருக்கு” என்றான் எளிதாக.
அவரும், “இருக்கலாம், இருக்கலாம்” என்று விடைபெற்றார்.
அதன்பிறகு அவளுக்கு அங்கே இருக்க முடியவில்லை. “போகலாமா?” என்று கேட்டாள்.
“வந்து கொஞ்ச நேரம்கூட ஆகல. அதுக்குள்ள எப்படி போகமுடியும்? வெயிட் பண்ணு” என்றதும் அமைதியானாள். சிறிது நேரத்தில் மீண்டும் அவனிடம் திரும்பி, “எனக்குப் போகணும்” என்றாள்.
“ஒரு பத்து நிமிஷம்கூட வெயிட் பண்ண முடியாதா?”
“கார் கீ கொடு. நான் கார்ல வெயிட் பண்றேன்” என்று கை நீட்ட, “சொல்றதை கேட்கிறதே இல்ல” என்று சாவியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
வாங்கிக் கொண்டவள், “தேங்க்ஸ்” என்று அந்த இடத்திலிருந்து கடகடவென வெளியேறினாள். காரின் அருகே வந்த பின்தான், நின்று மூச்சு வாங்கினாள். ‘ஏன் இங்கே வந்தோம்?’ என்று கோபம் வந்தது. ‘இப்பவே போய் விடலாமா?’ என்று நினைத்தாள்.
ஆனாலும் அது எளிதல்ல என்பது போல் தோன்றியது. காத்திருந்தாள்! சிறிது நிமிடங்களுக்கு பின் அவன் அங்கு வந்தான்.
“கார் கீ வாங்கிட்டு வந்துட்டு, வெளியில நிக்கிற?”
“சும்மாதான். போகலாமா?” என்றதும், “ம் ம்” என்றான். இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். சிறிது நேர பயணத்திற்குப் பின், வீடு வந்தவுடன் வேகமாக இறங்கி வந்தாள். அதே வேகத்தில் கதவை நோக்கி நடந்தாள்!
ஆனால் அவனோ எவ்வளவு மெதுவாக வரமுடியுமோ அவ்வளவு மெதுவாக வந்து கதவைத் திறந்தான். “எதுக்கு இந்த அவசரம்?” என்றும் கேட்டான்.
“ஒன்னுமில்லை” என்று சொன்னவள் விறுவிறுவென சென்று, தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
உள்ளே வந்தவள் பரிதவிப்புகள் அதிகமாயின. இரு விழியிலும் கவலைதான் பரவிக்கிடந்தது. அவனது காதலை மறுப்பது கொடுமை என்றால், அவனுடன் சேர்ந்து வாழப் போகும் வாழ்வு அதனினும் ஒருபடி மேல் கடுமையுடையதாக தோன்றியது!
நேற்று அந்தப் பெண் கேட்டாளே ‘பர்சேஸா?’ என்று! அந்தப் பெண் கேட்டதின் அர்த்தத்தில் இவள் மனம் ஒருகணம் நடுங்கியது! தன்னுடன் இருக்கும் போது அவனும் சேர்ந்தல்லவா தவறாக பார்க்கப்படுவான்! இன்றைக்கு கூட ஒருவர் கேட்டாரே, ‘பார்த்த மாதிரி இருக்கிறது’ என்று!
அவனுக்கு அது தர்மசங்கடமான நிலையோ, இல்லையோ? ஆனால் தன்னால் அவன் அப்படி ஒரு நிலைக்கு உள்ளாக கூடாது!
அதற்காகவாது தன் காதலை மறைக்க வேண்டும்!!
நூற்றில் ஒரு சதவீதமாக… தனது முடிவு அவனுக்குத் துன்பத்தை தருமானால், என்ன செய்வது என அவள் காதல் மனது ஆசையாக துடித்தது. அந்த மனதை அடித்து, அடக்கி வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே அவனோ, அவள் நடவடிக்கையை யோசித்தபடியே இருந்தான். நேற்று தன்னுடைய பரிதவிப்பின் வெளிப்பாட்டை தவறாகப் புரிந்து கொண்டாளோ என்று மனம் பதறியது. ஆனால் அதற்கு முன்னரே அவளது முகம் சரியில்லை என்று மூளை உணர்த்தியது.
‘லக்கேஜ்’ எடுத்து வெளியே வந்தவளிடம், “ஏன் இந்த முடிவு?” என்று கேட்டான்.
“ஆறு நாள் முடிஞ்சிருச்சி. அதான்” என்றாள் முகத்தை சமநிலையில் வைத்து! ஆனால் மனம் என்னவோ ஊசலாடிக் கொண்டிருந்தது!!
“ஆறு நாள் முடிஞ்சிருச்சா? அதுபத்தி பேசாத சரியா? முதல, என்கிட்ட நேத்து நடந்துகிட்டத்துக்கும், இன்னைக்கு நடந்துக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. அது ஏன்னு சொல்லு?”
“அப்படி எல்லாம் இல்ல. நீயா எதும் நினைச்சிக்கிட்டா, நான் என்ன பண்றது?”
“நான் நினைக்கிறேனா? நீ எதுவும் நினைக்கலைனு சொல்லு?” என்று அவன் அவளைப் பார்க்கும் பார்வையில்… நேற்று அவள் அவனிடம் நடந்துகொண்ட விதம் தெரிந்தது.
“நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல. பிடிச்சிருக்குது! ஆனா அதுக்கு மேல எதுவும் இல்லைன்னு” என்றாள் தன் காதலைச் சாகடிக்கும் முயற்சியாக!
“அதை விடு. நேத்து நடந்ததை பத்தி மட்டும் பேசு” என்று சற்று கடினமான குரலில் பேசினான்!
“பாஸ்ட்ட பத்தி பேசக்கூடாதுனு சொல்லுவ. இப்போ நீயே பேசற?” என்று ஒரு சிரிப்பு சிரித்தாள்.
அந்தப் பதிலுக்கு, ‘என்ன ரொம்ப தெளிவா பேசுறோம்னு நினைப்பா?’ என்ற அவன் பார்வையே அவளைக் குத்தி… அவள் சிரிப்பை மரிக்க செய்தது.
“மேரேஜ் பங்சன்ல அவர் கேட்டதை தப்பா எடுத்துக்கிட்டனு நினைக்கிறேன். அந்த இடத்தில யாரு இருந்தாலுமே அவர் அந்தக் கேள்விதான் கேட்டிருப்பாரு. நீயா எதும் யோசிக்காத” என்று, அவள் முடிவிற்கு காரணம் தேடினான்.
அதிகமாக பேசினால்… அவனைச் சமாளிப்பது கடினம் என்று நினைத்ததால், “சரி” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டாள்.
“என்ன சரி!? இதுக்குத்தான் நேத்தே நான் தெளிவா சொன்னேன். ‘யார் என்ன சொன்னாலும் உன்னோட முடிவில ஸ்ட்ராங்கா இரு’னு! இப்ப பாரு” என்றான் விரக்தியாக.
“இதுதான் என் முடிவு!” என்றாள் விற்றேற்றியாக.
“இதான் முடிவா! அதென்ன எனக்கு மட்டும் இப்படி? பாதியிலயே விட்டுட்டுப் போறீங்க!?” என்றான் கனத்த குரலில்.
அந்தப் பேச்சில் உள்ளுக்குள் அழுதாள். அவன் பார்க்காத போது பரிதவிப்பை ஏந்தியும், பார்க்கின்ற போது பற்றற்று பார்த்தும்… மாறி மாறி உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அவள், “அப்படி நினைக்காத. நீ ரொம்ப நல்லவன். அதான்…” என்று சொல்லும் போதே, “நான் உங்கிட்ட சர்டிபிகேட்டா கேட்டேன்!?” என்றான் எரிச்சலாக.
“நான் சொல்றதை கேளு”
“சொல்லு”
“உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு, சீக்கிரமாவே…”
“போதும் நிறுத்து” என கத்தியவன், “ஒரு பொண்ணோட பிரேக்அப் ஆனதுமே உன்னை லவ் பண்றேனுதான இப்படிப் பேசிக்கிட்டு இருக்க? அதான் உனக்கு என் லவ்வடோ டெப்த் என்னனே புரியலை” என்றான் ஆழ்ந்த, அதே நேரத்தில் கோபமான குரலில்.
“நீயேன் காதல் அப்படி இப்படினு எல்லாம் யோசிக்கிற?” என்று கேட்டு அவன் கோபத்தை நிறுத்தி வைக்க முயன்றாள்!
“என்னமோ இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம் சொல்ற மாதிரி பேசற”
“கோவா சுத்திக் காட்டிறதுதான ப்ளான். நீயேன்…” என அவள் முடிக்கும் முன், “அன்னைக்கு அப்படித்தான் நினைச்சேன். ஆனா… நான் என்னென்ன கேள்வி ஒரு லவ்வர்கிட்ட எதிர்பார்த்தேனோ, அதெல்லாம் உங்கிட்ட இருந்து வர்றப்ப, எவ்வளவு கன்ஃபீயூஸ் ஆனேன் தெரியுமா? அதனாலதான்… நீ கை கொடுக்க வந்ததைக் கூட கவனிச்சிருக்க மாட்டேன்” என்றான்.
முதல் நாளே அவனுக்குள், தான் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறோமா? என்ற உணர்வே அத்தனை மகிழ்ச்சி தந்தது அவளுக்கு!
இருந்தும் அதை அனுபவிக்கும் நேரம் இதுவல்ல என்று நினைத்து, “ஏற்கனவே முடிவு பண்ணதுதான? அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு பண்ற?” என அவள் மனச்சுவரில்… அவன் வரைந்த ஓவியங்களின் மீது வாளி வாளியாக தண்ணீர் ஊற்றி அழிக்க முயற்சித்தாள்!
“தொந்தரவா? இன்னைக்கு என்கிட்ட நீ நடந்துக்கிறது வித்தியாசமா இருக்கு. அது ஏன்னுதான கேட்டேன்”
“சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்க. ஒன்னுமே பண்ண முடியாது. நான் கிளம்புகிறேன்” என்று செல்ல யத்தனித்தவள், நின்று திரும்பி “தேங்க்ஸ். இந்த அஞ்சு நாளுக்காக” என்றாள்.
“உன் தேங்க்ஸ தூக்கி குப்பைல போடு” என்றவன், “நீ என்னைத் திரும்ப வந்து பார்ப்பேன்னு தோணுது. அதனால சொல்றேன், எனக்கு இப்ப இருக்க பிசினஸ் டென்சன்ல, கண்டிப்பா வீட்ல இருக்க மாட்டேன். ஆபீஸ்லதான் இருப்பேன்.
இதே ரோட்டுக்கு பேரலலா இருக்கிற ரோட்லதான் என் ஆபீஸ் இருக்கு. ஸ்டார் டவர்ஸ்ல பிஃப்த் ப்ளோர். புரியுதா?” என ‘நீ என்னை பார்த்திட வருவாய்’ என்ற நம்பிக்கையில் சொன்னான்.
“அவ்வளவு வேலை இருந்தா, எதுக்கு அதைவிட்டுட்டு இப்படி தேவையில்லாத வேலை பார்த்த?” என, ‘உன்னை மறுமுறை பார்க்க நான் வரமாட்டேன்’ என்று நாசுக்காக சொன்னாள்.
“எது தேவை, எது தேவையில்லைன்னு எனக்குத் தெரியும். நான் என்னைக்கும் எனக்குப் பிடிச்சதைப் பண்றவன். இந்த அஞ்சு நாளும் அப்படித்தான். போதும் பேசுனது! நீ உன் பேரு, ஃபோன் நம்பர் சொல்லு” என்றான்.
அலைபேசி எண்ணை சொன்னவள், பெயர் சொல்லாமல் மெளனம் காத்தாள்.
“ஹலோ பேர் சொல்லு”
“இல்ல வேண்டாம்”
“ப்ச், என்ன வேண்டாம்?”
“நான் யார்கிட்டேயும் பேர் சொல்றது இல்ல” என்றாள்.
முதல் நாள் பார்த்தபோது இப்படித்தான் இருந்தது அவள் பேச்சு! அதே பேச்சு இன்று திரும்புகிறது. இந்த ஐந்து நாட்களில் இருந்த ‘அவள்’ இப்போது இல்லை என்று அவனுக்குப் புரிந்தது.
“நான் எங்கிட்டதான சொல்லச் சொல்றேன்” என்றான்.
“…. “
“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? எனக்குப் புரியலை”
“உனக்குப் புரியற மாதிரி சொல்லனும்னா, இந்த பத்து வருஷத்தில என்னைக் கடந்து போன யார்கிட்டயும் என்னோட பேர சொன்னதுமில்ல. யார் பேரயுமே கேட்டதுமில்ல. அதேதான் உனக்கும்” என்றாள் அழுத்தம் திருத்தமாக!
இப்படி சொல்லிவிட்டு அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவள் பார்வையில் அத்தனை வெறுமை இருந்தது!!
இதற்கு அவன் என்ன பதில் சொல்லிட முடியும்? வார்த்தைகளற்று நின்றான். அவளுக்கு ஈடாக அவனும் வார்த்தைகளைப் பிரயோகிக்க முடியும். ஆனால் அது இன்னும் அவளைக் காயப்படுத்தும். அந்தக் காரணத்தால் அமைதியாக நின்றான்.
“புரிஞ்சிடுச்சா?” என்றாள் மட்டியைக் கடித்துக் கொண்டு!
“நல்லாவே! கடைசியா என்ன சொல்ல வர்ற… இங்க இருக்க மாட்ட! அதான?” என்றான் வலிகளுடன்.
தான் எடுத்த முடிவை அவன் கூற கேட்கும்போது, அது தந்திடும் வேதனையும், வெறுமைகளும், ஆற்றாமைகளும் பெரிதாக தோன்றியது. இருந்தும் “ஆமாம்” என்றாள்.
“நீ ரொம்ப குழம்பிட்ட. அதான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க. அதனாலதான் என்னை கஷ்டப்படுத்திற மாதிரி பேசவும் செய்ற”
“ச்சே ச்சே நான்… நா… நான்… ஏன் குழ… குழம்பணும்… கஷ்டப்படுத்தணும்” என்றவளின் சத்தம் குறைந்த போயிருந்தது.
பார்வையை அங்கும் இங்கும் அலையவிட்டு, “அத நீதான் சொல்லனும்! விடு, உனக்கா என்னைக்கு பேர் கேட்க தோணுதோ அன்னைக்கு கேளு” என்றவன், பார்வையை அவள் மேல் நிறுத்தி, “அவ்வளவுதான?” என்றான்.
வேறு வார்த்தைகள் கூறினால் உரையாடல் தொடருமோ என பயந்து, “ம்ம்ம்” என்றாள்.
ஏதாவது பேசினால், அவளுள் ஏற்பட்டிருக்கும் தன் மீதான பாதிப்பு குறைந்து விடுமோ என்று எண்ணியவன், ஏதும் சொல்லாமல் அமைதியாக அறைக்குள் சென்றுவிட்டான்.
தன்னையே அறியாமல் கண்ணீர் சொறிந்தாள். இதற்குத்தானே ஆசைப்பட்டு இத்தனை களேபரம் செய்தாய்! பின் ஏனிந்த கண்ணீர்? என அவள் சாகடிக்க நினைத்த காதல், சாகாமல் அவளை எள்ளி நகையாடியது.
சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்தவனையே சங்கடப்படுத்தி பார்த்தாயிற்று! இனிமேல் அந்த நீலவிழிகளைப் பார்ப்போம் என்ற நம்பிக்கை அறவே அற்று, கடந்தகால சங்கிலியில் தன்னைத்தானே கட்டியது பழுப்பு விழிகள்!
