Kathambari Novels
அத்தியாயம் – 11
ஐந்தாவது நாள்!
அடுத்தநாள் சூரிய கதிர்கள் வந்து, அவள் கன்னம் தொட்டு எழுப்பிய பின்னே விழிப்பு வந்தது. ‘அப்படியே தூங்கிவிட்டோம்’ என்று உணர்ந்தாள். நன்றாக விழித்துப் பார்த்தவளுக்கு, அவன் ‘ஸிட்டப்’ செய்வது தெரிந்தது. அரக்க பரக்க அவள் எழுந்து அமர்ந்தவுடன், “ரிலாக்ஸ்… குட் மார்னிங்” என்றான் அப்படியே அமர்ந்துகொண்டு.
“ஸாரி. அப்படியே தூங்கிட்டேன்”
“இட்ஸ் ஓகே… இப்போ பீவர் இருக்கா?”
“போயே போச்சு” என்று கைகளை விரித்தாள். அவன் புன்னகைத்தான்!
“இன்னைக்கு எங்க போகப் போறோம்?” என்று கேட்டவளின் முகத்தில் புதிய விடியலுக்கான சந்தோஷம் தெரிந்தது.
“நீயே சொல்லு”
“எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு போட்ல போகணும்னு ஆசையா இருக்கு. அதேநேரம் உங்கூட தனியா இருக்கனும்னு தோணுது” என்றாள் தெளிவாக!
நேற்றைய பேச்சிற்குப் பின்னர் அவளிடம் பெரிய மாற்றத்தைக் கண்டவன், அமைதியாக யோசித்தான்.
“என்ன யோசிக்கிற?”
“நத்திங்… ஒரு ப்ளேஸ் இருக்கு. நீ போய் ரெடியாகிட்டு வா. நாம போகலாம்”
“சரி, அரைமணி நேரத்தில வந்திடுவேன்” என்று அவள் அறைக்குச் சென்றாள்.
குளியல் முடித்தவள், முகம் காட்டும் கண்ணாடி முன் வந்து நின்றாள். அன்று அவளுடைய முகம் அத்தனை அழகாக தெரிந்தது. இன்று அகமும் காட்டியது கண்ணாடி! அகத்தின் அழகு முகத்தின் அழகைத் தோற்கடித்தது! காரணம்!?
வேறென்ன… அவன் வாழும் வீடல்லவா!!
அவளுக்கு இன்றுதான் புதிதாய் பிறந்தது போல் இருந்தது. அவளது இன்றைய மனநிலை, அவன் காதலை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தது. உலகம் என்ன பேசும்? என்ன பேசினால் என்ன? ‘என் உலகம்… அவன்!’ என்கையில் வேற்றுக் கிரகத்தைப் பற்றி எனக்கென்ன கவலை?
வேற்றுக் கிரகமாகிப் போனது வாழும் உலகம்!! காதல்நிலை யாதெனில், இதுதான்!
கோவில் குளத்தின் படிக்கட்டுகளில் படர்ந்திருக்கும் பாசி நிறத்தில் புடவை அணிந்திருந்தாள். மிதமான ஒப்பனைகள் பூசிக் கொண்டு அறையை விட்டு வந்தவள், கூந்தல் முழுவதையும் ஒருபுறமாக கொண்டு வந்து போட்டாவாறே, அவன் முன்வந்து நின்றாள்!
வந்தவளோ, அவன் நீலவிழிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது உலகம் ஒரு நிமிடம் நின்றுவிட்டு, பின் மீண்டும் சுழல ஆரம்பித்தது.
“ம்கு… ம்கு” என செருமினான். இப்போதும் அவனுள் எழும் கேள்வி, ‘எதற்கிந்த விழிப்பார்வை மட்டும்?’ என்றே!
“ம்ம் போகலாமா?” என்று கேட்டாள். அடுத்தநொடி இருவரும் கிளம்பினர்.
இன்று அவன் அவளை அழைத்துச் செல்லும் இடம், அவன் காதலி அவனிடம் யாசித்த தனிமை!
பட்டர்பிளை கடற்கரை (Butterfly Beach)!
இந்தக் கடற்கரையை அடைய தரைவழி மார்க்கம் இல்லாததால் பாலோலெம் கடற்கரை (palolem Beach) மூலம் படகு வழி பயணம் மட்டும் சாத்தியம்.
இருவரும் கிளம்பி வெளியே வந்தனர். காரை அவன் எடுக்க, யத்தனிக்கும் போதுதான், “உங்கிட்ட பைக் இல்லையா??” என்று கேட்டாள்.
“பைக் ரென்ட்டுக்கு விடறேன். எங்கிட்ட பைக் இருக்காதா? என்ன கேள்வி இது?” என்றவனுக்கு திடீரென்றுதான் மூளைக்குள் மணி அடித்தது. “ஹே, நீ எதுக்கு பைக் பத்தி கேட்ட? ரீயலி… யூவான ரைட் வித் மீ” என்றான்.
ஆம் என நாண முகமூடி அணிந்து கொண்டாள். எப்போதும் போல் குனிந்தோ திரும்பியோ அதை மறைக்காமல், ‘இந்தா… இதுதான் உன் காதல் என்னிடம் செய்கின்ற அமளி, துமளி!’, என்று அவனுக்கு நன்றாக காட்டினாள்.
“வெயிட்” என வீட்டிற்குள் சென்று, ஐந்து வினாடிகளுக்குப் பின் திரும்பி வந்து, “எங்கூட வா” என வீட்டினை ஒட்டியவாரு குடோன் மாதிரி இருந்த இடத்திற்கு கூட்டிச் சென்றான்.
“இதுவும் உன்னோடதா?” என்றாள்.
“ம்ம்” என்று குடோனின் கதவுகளைத் திறந்து, “ம், உள்ள வா” என்றான்.
உள்ளே நுழைந்தவளுக்கு, ‘இத்தனை பைக்கா?!’ என்றிருந்தது. விதவிதமான வடிவங்கள், வித்தியாசமான மாதிரிகள் என பலவகை ரகங்களில் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.
“என்ன இவ்வளவு பைக் வச்சிருக்க?”
“எனக்கு பைக்தான் பிடிக்கும். ஸோ தேட்! ஆமா ஏன் கேட்ட?”
“கார்தான பெரிசா, நல்லா இருக்கும். நீ என்னடானாஆஆ…” என பாடல் போல் பாட, “எனக்குப் பிடிச்சதைதான நான் வாங்கணும்” என்று அவளது பாட்டிற்கு சுருதி சேராமல் ஒலித்தது அவன் குரல்.
“ம்ம்ம், சரிதான்”
“ஓகே ஃபைன். இதுல எந்த பைக்ல போகலாம்னு சொல்லு?” என்று சந்தோஷம் கொப்பளிக்கும் குரலில் கேட்டான்.
“நான் கிரீன் கலர் சேரி கட்டியிருக்கேன்… அதனால இன்னைக்கு கிரீன் கலர் பைக். அதோ அங்க இருக்கு பாரு” என்றாள் குதூகலமாக! அவன் சந்தோஷம் அவளையும் தொற்றிக் கொண்டது!!
“குட் சாய்ஸ்” என்று பைக்கை வெளியே எடுத்து வந்தவன், “ரெடியா?! லெட்ஸ் ஹேவ் எ ரைட்” என்றான்.
“ம்” என்று அவள் ஏறப்போகும் போது, “உன்கிட்ட ஒன்னு கேட்கணும். ஆனா நீ வேற எதுவும் நினைக்க கூடாது. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்க கூடாது! எந்த மாதிரியும் எடுத்துக்க கூடாது” என்று, நேற்று அவனிடம் அவள் சொன்ன அதே வார்த்தைகளை, அதே தொணியில் அவளிடமே திருப்பிப் பேசினான்.
“கேளு” என்றாலும், ‘எதற்கு அடிபோடுகிறான்?’ என உள்ளுக்குள் உதறியது.
“பைக்ல போறப்ப ஒரு சின்ன சலுகை” என்றவனுடைய கண்களும், கைகளும் ‘சலுகை வேண்டும்’ என்பது போல் ஜாடை செய்து கெஞ்சின!
“என்ன?” என்றாள் புரியாமல்!
“பைக் டிராவல்ல தோள்ல கைப் போட்டுக்க முடியுமா?”
‘இவ்ளோதானா?’ என நேற்று அவன் தந்த பதிலை திருப்பி அவனிடம் சொல்ல நினைத்து, “இதெல்லாம் நீ கேட்பியா?” என்று ஆரம்பித்தவளுக்கு அதற்குமேல் ஞாபகம் இல்லை. ‘அப்புறம் என்ன சொன்னான்?’ என்று யோசித்தாள்.
“இதுவே மறந்திடுச்சி… இதுல, ‘நீ பேசறதெல்லாம் எனக்கு மனப்பாடம்’னு ஒரு டயலாக் வேற?! வண்டில ஏறு” என்றான். சிரித்துக்கொண்டு அவள் ஏறியபின் இருவரும் விரும்பியபடி பயணம் இருந்தது.
பாலோலெம் கடற்கரைக்குச் சென்று, அங்கிருந்து படகில் பயணத்தைத் தொடங்கினர். நாலாபுறம் கடல்நீரும், நனவுகளில் நாயகனும் சூழ்ந்திருந்த படகுப் பயணம், சற்று அவளை உணர்ச்சிவசப்படச் செய்தது.
பட்டர்பிளை பீச்சை வந்தடைந்தனர். அவர்கள் இறங்கிய பின், படகு திரும்பிச் சென்றது. அவள் சுற்றிலும் பார்த்தாள். பசுமை பறைசாற்றும் மலைகள்! தங்க மணற்பரப்புகள்! வந்த வழியில் மட்டும் தெரிகின்ற நீலக்கடல்நீர்! மனிதர்கள் நடமாட்டமே தெரியவில்லை.
கைகளைப் பிசைந்து கொண்டு நின்றுவிட்டாள்!
“என்ன அப்படியே நின்னுட்ட?” என்றான்.
“யாருமே இல்லையே?”
“நீதான கேட்ட! தனியா… அது… இதுனு”
“அதுக்காக இப்படியா?”
“ஏன் பயமா இருக்கா?”
“இல்ல. இவ்வளவு காடா இருக்கே… ஆளுங்களும் இல்லை”
“சுத்தி காடுதான். மே பீ டிரக்கிங் போயிருப்பாங்க. இல்லைனா பட்டர்பிளை ஐலேன்ட்ல இருப்பாங்க. பயப்படாத”
“பயப்படல… ஆனா இங்க நம்ம என்ன செய்ய சொல்லு”
“இப்படியே நடக்கலாம். இல்ல உனக்கு எதும் பேசனும்னா பேசலாம்”
“ம்ம்ம்… ஒன்னே ஒன்னு கேட்கனும்”
“திரும்பவுமா?”
“இது வேற. என்னை ஏன் உனக்குப் பிடிக்கும்?”
“ம்ம்ம்… எப்படி சொல்ல? அன்னைக்கு ஃபோர்ட்ல வச்சி சொன்னேல, ‘பணம் எல்லாருக்கும் முக்கியமில்லை. ம், பணம் இருந்தாலும் இல்லனாலும்’ சம்திங் லைக் தேட். அது ரொம்ப இம்பார்ட்டன்ட் ஒருத்தனுக்கு. முக்கியமா பிசினஸ் பண்றவனுக்கு. அதான்” என்றான், அவள் குணத்தை நன்கு புரிந்தவன் என்ற முறையில்!
“அப்போ அதுக்கு முன்னாடி இருந்தது?”
“மே பி அட்ராக்சன்! பட் இப்போ ஹண்ட்ரட் பர்சென்ட் என் முடிவுல உறுதியா இருக்கேன். அண்ட் அதுலருந்து நான் பின்வாங்கவே மாட்டேன்”
சட்டென மொட்டுகள் விரிந்து மலரானால், செடிக்கு எவ்வளவு மகிழ்ச்சியும், அழகும் கிடைக்கும். அதுபோல் ஒரு உணர்வை அவளுக்குத் தந்தது அவனது குரலில் தெரிந்த உறுதி!
அதைக் கண்டவன், அவள் மேல் இருந்த நம்பிக்கையில் சாவியிலிருந்து கை எடுத்துக் கொண்டான்.
“நீ ஏதாவது சொல்லணுமா எங்கிட்ட?” என்றாள்.
“எஸ். என்ன ஸடனா இவ்ளோ சேஞ்ச்” என்றான் நேரடியாக.
“ஏன் தப்பா?”
“தப்புனு சொல்லலை. பட் நீ எக்ஸைட்மென்ட்ல இருக்கிற மாதிரி இருக்கு”
“புரியற மாதிரி சொல்லேன்”
“நேத்து நடந்த ஒரு சின்ன விஷயத்தில அட்ராக்ட் ஆகியிருக்க. ஸோ அதோட ரியாக்ஷன்தான் இது. இப்படி இருக்கிறது ஓகே. பட் என்ன நடந்தாலும்… யார் என்ன சொன்னாலும்… இப்படியே ஸ்டடியா இருக்கனும்”
“ம்ம்ம்”
“சரி வா நடக்கலாம்”
அவன் கைகோர்த்துக் கொண்டே, அந்தக் கடற்கரையின் மணல்வெளி, தரை தெரிகின்ற கடல்நீர், பாறை இடுக்குகள் என்று எல்லா இடங்களிலும் ஓயாது காதல் நடைபழகினாள்.
கறைகள் பூசப்பட்ட அவள் இதயத்தின் சுவரிலெல்லாம் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தான் அவன்!
சற்றுநேரத்தில், “போகலாமா?” என்றான்.
“என்ன அதுக்குள்ளயே?”
“ஈவ்னிங் சாட்டர்டே மார்க்கெட் போலாம். ஸோ இப்ப ஸ்டார்ட் பண்ணாதான் கரெக்ட்டா இருக்கும்” என்றதும், கிளம்பினார்கள்.
அடுத்ததாக, சொன்னது போலவே மார்க்கெட் அழைத்து வந்தான். ‘சாட்டர்டே நைட் மார்க்கெட்’ மாலை நான்கு மணிக்கு பின்னர்தான் ஆரம்பம் ஆகும். இது முடிவடைய நள்ளிரவு ஆகும்.
எல்லா பொருட்களும், கோவாவின் அனைத்துக் கொண்டாட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ‘நைட் பார்’,’ ஆட்டம், பாட்டம்’ என்ற கேளிக்கைகளும் உண்டு!
“என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு? எனக்குப் பிடிக்கல” என்றாள்.
“அதெல்லாம் பார்க்காத. நான் இருக்கேன்ல. இங்க உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கிக்கோ. பட் அதுக்கு முன்னாடி சாப்பிடலாமா?”
“ம்ம்ம் எங்க?”
“பீச் ஷெக் டைனிங் (beach shack dinning) உண்டு. அங்க ஓகேவா?”
“ம்ம்ம்”
‘பீச் ஷெக் டைனிங்’ என்பது கடற்கரை அருகே நாற்காலிகள் அமைத்து, கோவான் உணவுகள் (goan food) பரிமாறப்படுவது.
மெல்லிய மேற்கத்திய இசை! அதைவிடவும் மெல்லிய விளக்கு ஒளிகள்! சற்று தூரத்திலே அலைகள் அடங்கிப்போன இரவுநேர கடல்! அருகிலேயே ‘அவளின் அவன்’! வேறென்ன வேண்டும் அந்த ரம்மியமான சூழ்நிலையில்!!
நீலவிழிகளையே பார்த்திருந்தாள்.
தான் தொலைத்ததாக நினைத்த சந்தோஷங்களைத் தேடிப்பிடித்து, தன் கண் முன்னே நிறுத்துகின்றான். அவனுக்குத்தான் தன்மீது எவ்வளவு காதல் என்று நினைத்துக் கொண்டாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்து கடைகள் இருக்கும் பக்கம் நோக்கி நடந்தனர்.
“ஃபர்ஸ்ட் என்ன வாங்கணும்?” என்றான்.
“ம்ம்ம்… கம்மல் வாங்கலாம்”
“ஓகே! பட் நீதான் கேட்கப்போற. அதுவும் ஹிந்தில”
“ஹிந்திலயா?” என்று உதடு சுழித்து யோசித்தாள்.
“எஸ்”
‘சரி’ என்று காதணிகள் அணிவகுத்த கடைக்குள் நுழைந்து, “இது எவ்வளவு?” என்று மயில் வடிவ ஜிம்காவை எடுத்துக் கேட்டாள்.
“க்யா?” – கடைக்காரர்
“ச்சே ச்சே… ஹித்னே?”
“சௌ ருபே” என்று கடைக்காரர் சொன்னவுடன் அவனைப் பார்த்தாள்.
“ஹண்ட்ரட்” என்றான்.
“இது நூறு ரூபாயா. ரொம்ப அதிகம். இவ்வளவு சொல்றாங்க. நான் வாங்க மாட்டேன்… அநியாயம்” என்று படபடவென பொங்கினாள்.
“பேசாம வாங்கு”
“அப்படினா அவங்ககிட்ட எழுபத்திஞ்சிக்கு ரூபாய்க்கு கேளேன்” என்றாள் பேராசை பொங்கும் குரலில்!
‘என்ன இந்தப் பொண்ணு?’ என பார்த்தவன், “ஹே என்னை என்ன நினைச்ச? சிக்ஸ், செவன் டேய்ஸ் முன்னாடிதான் எவ்வளவு பெரிய டீலிங் முடிச்சேன். எங்கிட்ட வந்து…” என்று பெருமை பேசினான்.
“இல்லப்பா… நூறுனா ஜாஸ்தி. ஏமாத்திறாங்க. கம்மி பண்ணிக் கேட்டுப் பாரேன்?” என்று அறிவுரைகள் வேறு அவனுக்குத் தந்தாள்!
“சான்ஸே இல்ல. ஆள விடு” என்று போக போனவனை கைப்பிடித்து நிறுத்தி, “ப்ளீஸ் ப்ளீஸ்… எவ்வளவு அழகா இருக்குன்னு பாரு” என்று காதில் வைத்துக் காட்டினாள். ‘ப்ளீஸ்’ என்று கண்களாலும் கெஞ்சினாள்!
“தள்ளு” என்று எரிச்சலுடன் சொன்னவன், சற்று குறைத்து தரும்படி இந்தியில் கடைக்காரரிடம் பேரம் பேசினான். ‘எவ்வளவு தருவீங்க?!’ என்று அவர் கேட்க, ‘ஐம்பது’ என்று இவன் சொன்னான். கடைசியில் பேரம் எழுபத்தைந்தில் வந்து முடிந்தது.
அந்தத் தொகையைக் கொடுத்து வாங்கியவன்… கம்மலை அவள் கைகளில் திணித்து, “இதான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட். வேற கடையில வந்து இதேமாதிரி கேட்டேன்னு வச்சுக்கோ? அவ்வளவுதான்” என்று எச்சரித்தான்.
“சரி… சரி” என்றவள், விதவிதமான வண்ணங்களால் நிறப்பப்பட்ட வளையல் கடைக்குள்ளே நுழைந்தாள். சிறிது நேரத்தில் எதுவுமே வாங்காமல் வெளியே வந்தவளைப் பார்த்தவன், “என்ன வாங்கலையா?” என்றான்.
“வேண்டாம்பா” என்று அலுத்துக்கொண்டாள்.
சற்றுமுன் அவ்வளவு பேச்சு பேசியவன், “ஏன்? நான் வேணா பேசவா?” என்று வெட்கமே இல்லாமல் கேட்டான்.
“வேண்டாம். எனக்கு எந்த டிசைனும் பிடிக்கல”
அதன் பின்னரும் ‘ஷாப்பிங்’ நடந்தது! சோழிகள் அலங்கரிக்கப்பட்ட பைகள், கற்கள் பதித்த மோதிரங்கள் என சின்னச் சின்ன தொகைகளில், தன் பெரிய பெரிய ஆசைப் பைகளை நிரப்பினாள்.
“போதுமா?”
“எனக்கு இந்த… சின்னதா பெட்டி மாறி இருக்கும் இல்லையா… அந்த மாதிரி ஹேன்ட் பேக் வேணும்”
“பாக்ஸி ஹேன்ட் பேக்! இங்க இருக்குமான்னு தெரியல. மால்ல பார்க்கலாம்”
“ம்ம்ம் சரி”
இந்த இடத்தில் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதற்கு முன்னும் ஒரு பெண் இதேபோல்தானே தன்னிடம் கேட்டாள்!? கேட்ட விதமோ… கேட்ட பொருளோ வேண்டுமானால் வேறு! ஆனால் அர்த்தம் ஒன்றுதானே! ஆனால் அன்றைக்கு கோபம் வந்தது!! இன்று அந்தக் கோபம் எங்கே போயிற்று??
காரணம்? இங்கு வார்த்தைகளின் அர்த்தம் என்பது சொல்லப்படும் நபரைப் பொருத்ததே தவிர, வார்த்தைகளைப் பொருத்தது அல்ல!!
அடுத்த நொடி அவனுக்கு அழைப்பு வந்தது. அவளைப் பார்த்து “இந்த ரோல பாத்துக்கிட்டே இரு. பேசிட்டு வர்றேன்” என்று சத்தம் குறைவாக இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றான்.
பேசி முடித்துத் திரும்பி வந்தவன், அவன் விட்டுச் சென்ற பகுதியில் அவளைக் காணவில்லை என்றவுடனே பதறினான். முடிந்தவரை அந்த வரிசையிலிருந்த அனைத்து கடைகளிலும் உள்ளே சென்று தேடினான்.
ஒன்றில் கூட அவள் இல்லை!
அங்கே இங்கே என அவளைத் தேடி அலைந்தான். நேரம் போகப் போக ‘எங்கு போயிருப்பாள்?’ என்ற பயம் அதிகமானது. வேறு பக்கமும் தேடித் தேடி அவள் கிடைக்காமல் போனதால், காதல் கடலில் இன்னும் நன்றாகவே மூழ்கினான்.
ஒருநொடி ‘விட்டுப் போயிருப்பாளோ?’ என கேள்வி வந்தது. ‘சான்சே இல்லை’ என்ற பதிலும் அவனிடம் இருந்தது. ஏனெனில் இன்று காலையிலிருந்து அவள் பழகிய விதத்தில் அவனால் அந்தப் பதிலை உறுதியாக சொல்ல முடிந்தது!
‘கால் பண்ணி கேட்கலாம்’ என்று நினைத்த போதுதான் தெரிந்தது, இதுவரை பெயரோ, அலைபேசி எண்ணோ அவளிடம் கேட்கவில்லை என்று! கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து கொண்டிருந்தன அந்த நீலவிழிகள்!
மற்றொரு பக்கமோ வழியைத் தவறவிட்டு பரிதவித்தன பழுப்பு விழிகள்!
அவளுக்கும் அதேதான்! ‘ஃபோன் நம்பர், பேர் தெரியாம… என்ன நான்?’ என்று அலுத்துக்கொண்டாள். அப்போது, “சேச்சி” என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். ஒரு பெண் நின்றாள்.
அந்தப் பெண்… அந்தக் கட்டிடத்தில் அவளுடன் வசிப்பவள்!
“சேச்சி… நிங்கள் எஞ்ஞன இவ்விடே?” என்றாள்.
அதன்பின், “பர்சேஸா?” என்று கேட்டாள். ‘நானும்தான்’ என்றாள். ‘எப்ப வருவ?’ என்றும் கேட்டாள். எதற்கும் பழுப்பு விழிகள் பதில் சொல்லவில்லை.
அப்பொழுது அந்தப் பெண்ணை ஒரு குரல் அழைத்தது. உடனே அவள், “ஷரி, விளிக்குன்னூ… பை” என்று கிளம்பிவிட்டாள்.
அந்தப் பெண் போனதும், அதிர்ந்து… அப்படியே அருகிலிருந்த கடை ஸ்டூலில் அமர்ந்தாள். மறந்தது எல்லாம் ஞாபகம் வந்து… அவள் மனதிற்குள் கொட்டம் அடித்தது. தான் மறந்தாலுமே, தன் கடந்த காலத்தை யாராவது வந்து இப்படி ஞாபகப்படுத்தினால் என்ன செய்வது?
முதலில் அவனுக்கு எப்படி இருக்கும்? அவன் குடும்பம் இதை எப்படி எடுத்துக் கொள்ளுமோ? அவர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளவார்களா? என யோசித்துக் கொண்டே இருந்தாள்!
அவள் யோசிக்கும் போது தவறியும் அவன் கூறிய, ‘யார் என்ன சொன்னாலும் ஸ்டடியா இரு’ என்ற வார்த்தைகள் ஞாபகத்தில் வரவேயில்லை. யோசிப்பின் முடிவில் விருப்பமே இல்லாமல் முழுவதுமாக சாவியிலிருந்து கையை எடுத்து விட்டாள்.
அந்தக் கணத்தில் அவள் தோள்மீது ஒருவன் கைபட்டது. அவளுக்குத் தெரியும் யாரென்று! ஆனாலும் திரும்பவில்லை.
“எங்க இருக்க சொன்னா… எங்க வந்து இருக்க? உன்னை எப்படித் தேடினேன் தெரியுமா?” என்றான் பரிதவிப்பின் உச்சத்தில்!
அவள் முகத்தில் சற்றுமுன் இருந்த மகிழ்ச்சி துளியும் இல்லை என தெரிந்தது. அவளும் பயந்திருப்பாள் என்று எண்ணிக் கொண்டு, “போகலாம்” என்றான்.
அவளும் எழுந்தாள்… ஆசைப் பைகளைத் தனியே தவிக்க விட்டு!
“என்ன வாங்கினதெல்லாம் வச்சிட்டு வர்ற? எடுத்துக்கோ” என்று அவன்தான் ஞாபகப்படுத்தினான்.
பேசா நிமிடங்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். எதுவும் பேசாமல் அவளது அறைக்குள் போக போனவளை, அவன் கைப்பிடித்து நிறுத்தினான்.
‘என்ன?’ என்பது போல் பார்த்தாள். அவன் இருவிழிகளில் வழிகின்ற காதலை கண்டவளுக்கு, அதை எப்படி ஏற்பது என்று தெரியாமல் ஓர் தவிப்பு வந்தது.
“என்னை விட்டு எங்கயும் போகக்கூடாது. சரியா?” என்றான் ஆழ்ந்த குரலில்
வெற்றுப் புன்னகையை வெறுமை கலந்து தந்தாள்!
“கொஞ்ச நேரத்தில… நா…” என்று அவள் தலையை வருடியபடி தடுதாறியவன், அப்படியே அவளை இதயத்தின் மேல் சாய்த்துக் கொண்டான். மெல்ல மெல்ல அவன் கரங்களால் அவளைச் சுற்றி அன்புப்பாலம் ஒன்றை அமைத்தான்.
ஒவ்வொரு நொடியும் அவளின் மீதான காதல் அதிகமானது.
வழி தவறி நிற்கும்பொழுது அவளுக்கும் தோன்றியது! அவனைக் கண்டவுடன் கட்டியணைத்து காதலைச் சொல்லி விடவேண்டும் என்று! ஆனால் இக்கணம், கையைக்கூட உயர்த்தாமல் இருந்தாள்!!
ஆனாலும் அவன் அணைப்பு உணர்த்திய காதலை, அவள் உணர்ந்த காதலை, உதறித் தள்ளவும் முடியாமல்… உரிமையுடன் சொல்லவும் முடியாமல்… அவன் அமைத்த பாலத்தின்மீது நடக்கவும் முடியாமல், அதை கடக்கவும் முடியாமல், உடைக்கவும் முடியாமல்… இப்படி எதுவுமே ‘முடியாமல்’ அவள் திண்டாடித் திண்டாடி தோற்றுப் போய்க் கொண்டிருந்தாள்!!
