Kathambari Novels
அத்தியாயம் – 10
நான்காவது நாள்!
அந்த நாள், அவள் எழுந்து கொள்ளும் போதே அத்தனை அலுப்பாக இருந்தது. உடலில் லேசான சூடு தெரிவது போன்றும் இருந்தது. நேற்றைய கடுமையான பயணம் மற்றும் மழையில் நனைந்ததின் விழைவு என்று நினைத்தாள்.
சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என எண்ணினாள். ஆதலால் எழுந்து குளித்து முடித்து வந்தாள். அன்று அவள் பிறந்த குழந்தை பாதத்தின் நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள். இதுவரை இல்லாமல் இன்று கூந்தலை பின்னல்களுக்குள் அடக்கியிருந்தாள்!
அவளது அறையை விட்டு வெளியே வந்தவள், அவன் கணினியில் கவனமாக வேலை செய்வதைப் பார்த்துவிட்டு, நேராகச் சாப்பாட்டு மேஜைக்குச் சென்று அமர்ந்து கொண்டாள்.
சில நொடிகளுக்குப் பின் நிமிர்ந்து பார்த்தவன், தன் வேலையை விட்டுவிட்டு அவளருகே வந்து, “நல்ல டயர்டா? ரொம்ப நேரம் தூங்கிட்ட” என்று கேட்டான்.
“ம்ம்ம்” என்பதை தவிர வேறு எதுவும் அவள் சொல்லவில்லை!
“நல்லா சாப்பிட்டுக்கோ. இன்னைக்கு நிறைய எனர்ஜி தேவை”
திரும்பவும், “ம்” என்று மட்டும் சொல்லி சாப்பிட ஆரம்பித்தாள். அவள் உண்டு முடித்தவுடன், இருவரும் கிளம்பினர்.
அன்று அவர்கள் சென்ற இடம் பாண்டவா குகைகள் (pandava caves or arvalem caves)! இது… கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகளைத் தாண்டி கோவாவின் எழிலைக் காட்டிடும், பாரம்பரிய சின்னமாக இருக்கிறது!
அவன் இங்கே கூட்டி வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! ஏனெனில் வீட்டில் அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும் அவனுக்கு வரலாறும், வரலாற்று இடங்களும் பிடிக்குமென்று!
காரை விட்டு இறங்கியவுடன், “நிறைய நடக்கணும். தெம்பு இருக்கா?” என்று கேட்டபடியே ஆரம்பித்தான்.
உடலுக்குள் இருக்கும் தண்ணீரை எடுத்து, வெளியில் வியர்வையாக தள்ளும் அளவிற்கு வெயிலின் காட்டம் இருந்தது. அவளுக்கு உடல் சுடுவதின் அளவும், அதிகமாவது போல தெரிந்தது. ஆனாலும் “சரி” என்று சொன்னாள்.
ஒவ்வொரு குகைக்கும் ஒரு கதை சொன்னான். இப்படியே பேச்சும், நடையும் ஒரு மணி நேரம் சென்றது. உடல் ஒத்துழைப்பு தராவிட்டாலும், அவனுக்காக அதைப் பொருத்துக் கொண்டு நடந்தாள்.
அவனுக்கும் அவள் ஏதோ ஒட்டுதல் இல்லாமல் இருப்பது போல் தெரிந்தது!
குகைகளை பார்த்துக் கொண்டு போகையில் அவனுக்கு கைப்பேசி அழைப்பு வந்தது. அவளிடம் “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு” என்று சொல்லி, தனியே சென்றான்.
அவளால் அதற்குமேல் நிற்க முடியவில்லை. வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால், சற்றுத் தொலைவில் மரத்தின் நிழலில் போடப்பட்டிருந்த சாய்வு மேடையில் சென்று அமர்ந்தாள். பேசி முடித்து திரும்பியவன், அவள் மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அங்கே வந்து நின்றான்….
நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் சோர்வு தெரிந்தது.
“ஹே என்ன அதுக்குள்ள டயர்டா? இன்னும் நிறைய நடக்கணும். இங்கிருந்து பார்த்தா ஒரு பால்ஸ் தெரியும். அதையும் பார்க்கலாம். வா” என்றான்.
ஆனால் அவள் எழுந்து கொள்ளவில்லை!
“என்னாச்சு?” என்று அவளருகே அமர்ந்து, “வா போகலாம்” என்று கைப்பிடித்து அழைத்தான். அந்தக்கணம் அவள் உடல் சுடுவதை அவன் உணர்ந்தான். பின் அவள் நெற்றி, கழுத்தில் தொட்டுப் பார்த்தான்.
“பீவரா?” என்றான்.
“ம், அப்படித்தான் இருக்கு” என்றவளின் குரல் அத்தனை சோர்வைத் தாங்கி வந்தது.
“இதான் காலையில டயர்டா இருந்தியா?” என்றதும், அவனைப் பார்த்து மெல்லிய கீற்றாய் புன்னகை தந்தாள்.
“சொல்லிருக்கலாமே. சரி வா, வீட்டுக்குப் போகலாம்”
“இல்ல. இன்னைக்கு பார்க்கவேண்டிய இடத்தை பார்த்திடலாம். அடுத்து இந்த மாதிரி சான்ஸ் கிடைக்குமான்னு தெரியல”
“சான்ஸ் கிடைக்காது. நாமதான் உருவாக்கணும். பேசாம வா” என்று கையை பிடித்து அழைத்துச் சென்றான். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் மனதை அவளுக்கு எளிதாக சொல்லி விடுகின்றான்.
வரும்வழி முழுவதும், பரிவுடன் அவளைப் பார்த்தவாரே வந்தான். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். மருத்துவமனை போக வேண்டிய தேவையில்லை என சொல்லி, வாங்கி வந்திருந்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு, அவளது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இரவு ஆரம்பிக்க சற்று முன்தான் எழுந்து வெளியே வந்தாள்!
வரவேற்பறையில் அவன் இல்லாததால், அவனது அறையில் இருந்து வேலை செய்வான் என்று நினைத்தாள். என்ன செய்வது என்று தெரியாமல், அங்கும் இங்கும் நடந்தவள், கடைசியில் சாப்பாட்டு மேஜையில் வந்தமர்ந்தாள்.
இதேநேரம் அவனது அறையில் அவன் கவலை பூசிய முகத்துடன் இருந்தான். இந்த பத்து வருடங்களில் இதேபோன்று காய்ச்சலோ, வேறு பிரச்சனைகளோ அவளுக்கு வந்திருக்கலாம். இன்று தன்னிடம் சொல்லாதது போல யாரிடமும் சொல்லாமலேயே அன்றைய பொழுதுகளையும் கடந்து வந்திருப்பாள் என்று நினைக்கும்போதே வேதனையாக இருந்தது.
பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டியன அந்தப் பழுப்பு விழிகள் என்று எண்ணிக் கொண்டன நீலவிழிகள்!
வேதனையை மறைத்து வெளியே வந்தவன் அங்கு அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அருகில் வந்து நின்றான்.
“இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டு ‘காய்ச்சல் இருக்கிறதா?’ என நெற்றி, கழுத்தை தொட்டுப் பார்த்தான். அவளது கண்கள் அவன் கண்களை நேராக சந்தித்தன.
அப்போதிருந்த நிலையில், அவன் தொடுகை எந்த உணர்வையும் அவளுக்கு உணர்த்தவில்லை. ஆனால் இப்போது அவன் தொடுகையிலிருந்த அக்கறை, அவளை மேலும் மேலும் அவன் பக்கம் சாய்ந்திட சொன்னது.
“சாப்பிடுறியா?” என்றான்.
“… “
“ரூம்ல சும்மாதான் இருந்தேன். என்னை கூப்பிட்டிருக்கலாமே? ஏன் தனியா உட்கார்ந்திருக்க?”
“….. “
“சரி சாப்பிடு” என்று அவளுக்கு எல்லாம் எடுத்து வைத்தான்.
பதில் சொல்லவே தோன்றவில்லை. அவனை, அந்தச் சூழ்நிலையை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!
சாப்பிட ஆரம்பித்தவளிடம், “தப்பா எடுத்துக்காத. இதுக்கு முன்னாடி இப்படி உடம்பு சரியில்லாம போனா என்ன பண்ணுவ?” என்றான்.
“ஹாஸ்பிட்டல் போவேன்” என்று அவன் கேள்வி புரிந்தும், புரியாதது போல் பதில் தந்தாள்.
“நான் அதை கேட்கலை. யாரு டேக் கேர் பண்ணுவாங்க?” என்று அவளுக்குப் புரிய வைத்தான்.
அருகில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகியவள், “நானேதான்” என்றாள், லேசான தழுதழுக்கும் குரலில்.
நம்மை நாமே கவனித்துக் கொள்வதில் எந்தவொரு கவலையும், வருத்தமும் இல்லை. ஆனால் அதை ஒருவர் கவனித்துக் கேட்கும் பொழுதுதான், அதன் தன்மையான ‘தனிமை’ உணரப்படும்! அவளும் உணர்ந்தாள்!!
“டேப்லெட் போட்டுட்டு. போய் ரெஸ்ட் எடு” என்றான் கனிவாக.
“தூக்கம் வரலை. கொஞ்ச நேரம் இங்கயே உட்கார்ந்து இருக்கிறேன்” என்று வரவேற்பு அறையில் இருந்து குஷன்களை காட்டினாள்.
சாப்பிட்டு முடித்ததும், அங்கு அவளை அழைத்துச் சென்று அமர வைத்தவன், “டிவி பாக்கிறியா?” என்றான்.
“வேண்டாம். நான் டீவி பார்க்கறதில்லை. சும்மா உட்கார்ந்து இருக்கேனே?”
“ப்ச், சும்மா எப்படி? இன்னைக்குப் பாரு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் ரூம்ல இருந்து பார்க்கப் போறேன். அதான் சொல்றேன் டிவி பாருன்னு. சரியா?” என்று சொல்லிவிட்டு, அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.
ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே வந்தவள்… செய்தி சேனல் ஒன்றை வைத்துவிட்டு அப்படியே இருந்தாள். அந்தநேரத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக, அன்று நடந்த சாலை விபத்து பற்றிய செய்தி வந்தது.
அந்தக் கோர காட்சிகள், அது விவரிக்கப்பட்ட விதங்கள், மற்ற உறவுகளின் பரிதவிப்புகள் என்று அனைத்தையும் உள்வாங்கின அவளது விழிகள். அது, அவளைத் திரும்பவும் பத்து வருடம் பின்னோக்கி இழுத்துச் சென்றது.
முழங்காலை மடித்துக்கொண்டு, அதில் முகம் புதைத்தாள்!
தற்செயலாக வெளிவந்தவன், “என்ன பண்ற?” என்றான். அவள் கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹே என்னாச்சு? பீவர் இன்கிரிஸ் ஆகுதா? ஹாஸ்பிட்டல் போலாமா?” என்று அவன் கேட்டதுமே டிவியைப் பார்த்தாள். அது அவனுக்கு… அவளது கலங்கிய கண்களின் காரணம் சொன்னது.
“டிவிய ஆஃப் பண்ண வேண்டியதுதான?”
“ரிமோட் எங்க?”
“உன் பக்கத்துலதான் இருக்கு. எடு”
“ஓ” என்று ரிமோட்டை எடுத்து அவனிடம் தந்தாள். டிவியை நிறுத்திவிட்டான். தரைத் தளத்தோடு போடப்பட்டிருந்த குஷனில் அமர்ந்திருந்தவளின் எதிரே ஒரு ‘பீன் பேக்’ எடுத்துப் போட்டு அமர்ந்தான்.
“என்னாச்சுன்னு சொல்லு?”
“ஒன்னுமில்ல. நடந்ததெல்லாம் ஞாபகம் வந்துருச்சி. இதுக்குத்தான் நான் டிவி பார்க்கிறதில்ல. பாட்டு மட்டும்தான் கேட்பேன்” என்று அவன்மீது குற்றம் சுமத்தினாள்.
“ம் புரியுது”
“புரியாது… யாருக்கும் புரியாது” என்றாள் விரக்தியாக!
உடனே அவன், “திரும்பத் திரும்ப எதுக்கு நடந்து முடிஞ்சதையே பேசிக்கிட்டு இருக்க? எல்லாத்தையும் மறந்திட்டு வாழப் பாரு” என்றான். அதில் அக்கறை, கோபம் சரிவிகிதத்தில் இருந்தது.
“என்னமோ இன்னைக்கு அம்மா அப்பா ஞாபகம் ரொம்ப வந்திருச்சி. அதான் உங்கிட்ட சொன்னேன். ப்ச் ஸாரி” என்றவள், உதடுகளைக் கடித்துக்கொண்டு பேசாமல் இருக்க முயற்சித்தாள்.
தீடீரென கண்கள் கடந்து வந்த ஒரு துளி கண்ணீர் துளியை ஒற்றை விரலால் சுண்டிவிட்டாள். அவள் அழவேண்டாம் என்று நினைக்கிறாளென அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.
“நான் அந்த…” என அவன் ஆரம்பிக்கும்போது அவள் இடையில் புகுந்து, “நான் பேசறது உனக்குப் பிடிக்கலையா? உன்கிட்ட இத சொல்லணும்னு தோணுச்சு, அதான் சொன்னேன். நீ பேசறதெல்லாம் கேட்கிறேன்ல. அதேமாதிரி நீ, நான் பேசறதை கேட்கலாம்ல?” என்று உடைந்து போன குரலில் கெஞ்சினாள்.
“ம்ம், கேட்கிறேன். ஆனா நான் பேசறது உனக்கு புரியுதா??” என்று நயமாக, அவளைத் திசை திருப்பினான்.
“ஏன் புரியாம? நல்லாவே புரியுது. ஏன் பேசற? எந்த அர்த்தத்தில இதெல்லாம் நீ பேசிக்கிட்டு இருக்கிற? எல்லாமே புரியுது” என்றாள், அவன் எழுதிய காதல் கடிதங்கள், கவிதைகள் மற்றும் காவியங்களைப் படித்து முடித்தவளாய்!
“அப்போ நான் பேசறது புடிச்சிருக்கா?”
ஒரு சிறு புன்னகையுடன், “எதையும் டைரைக்டா கேட்கணும் இன்டேரைக்டா கேட்டா எனக்கு பிடிக்காதுன்னு சொல்வ. ஆனா இதை மட்டும் ஒரு நாளாவது நேரடியா கேட்டிருக்கியா? ஏன்னா…” என அவள் முடிக்கும் முன்னே, “உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. என்னை பிடிச்சிருக்கா?” என்று சட்டென தன் காதலை சொன்னான்.
“ரொம்ப ஈசியா கேட்கிற, ஆனாலும் சொல்றேன். பிடிச்சிருக்கு! அதுக்கு மேல எதுவும் கிடையாது. நீயா கற்பனை பண்ணிக்காத” என்று கட்டளை இட்டாள்.
“ரொம்ப சோதிக்கிற” என்றவனின் குரலில் வருத்தம் எட்டிப் பார்த்தது.
“எனக்கு எப்படி இருந்திருக்கும், நீ பேசறப்ப” என்று சிரித்தாள். அப்பொழுதும் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் கரை புரண்டன.
“அப்போலாம் என் மேல கோபம் வந்திச்சா?”
“இல்ல. எனக்கு யார் மேலயும் கோபம் வராது. ஆனா சில சமயம் தம்பி மேல மட்டும் கோபம் வரும்”
“உன் தம்பி மேல… உனக்கு கோபம் வருமா? நம்பற மாதிரி இல்ல”
“நிஜமா சொல்றேன் அவன்மேல கோபம் வரும். அவன் மட்டும் அன்னைக்கு அடம் பிடிக்காம இருந்தா… நாங்களும் பஸ்லதான இருந்திருப்போம்”
“தேவையில்லாம பேசற. ம்ம் உன்னை ஃபர்ஸ்ட் பார்த்தப்போ எப்படி பேசின? நான்கூட தெளிவான பொண்ணுனு நினைச்சேன். ஆனா அதுக்கப்புறம்…”
“என்ன அதுக்கப்புறம்?”
“இந்த மூணு நாள்ல சில நேரம் தெளிவா பேசிருக்க. ஆனா மத்த நேரம் அந்த அளவுக்கு தெளிவில்லை”
“அன்னைக்கு என்னைப் பார்த்துக்க யாரும் இல்லை. அதனால நான் அப்படி பேசியிருப்பேன். ஆனா இந்த மூனு நாளா என்னைப் பார்த்துக்க நீ இருக்கிற! அதான் இப்படி” என்றாள் ஒரு புன்னகையுடன்!
“மூனு நாள் மட்டுமில்ல. எப்பவும் பார்த்துக்கிறேன்” என்றான் விடாமல்!
“திரும்பவும் ஆரம்பிக்கிற” என்று சலித்துக் கொண்டாள்.
“நிறுத்தினாதான திரும்ப ஆரம்பிக்கிறதுக்கு. நான் நிறுத்தவே இல்லையே. அன்ட் நிறுத்தவும் மாட்டேன்”
உடனே அவள் கண்கள் குளமாகியதைப் பார்த்தான். கட்டியணைத்து, ‘நான் இருக்கிறேன். உனக்காக’ என்று காதலை உணர்த்த வேண்டும் என்ற வேகம் அவனுள்ளே! ஆனால் இவளிடம் மிகுந்த கவனத்துடன்தான் நெருங்க முடியும் என்பதால், அவனும் தடுமாறினான்!
“தப்பா நினைக்கலைனா என்னோட ரூமுக்கு வர்றியா? உன்கிட்ட ஒன்னு காட்டனும்” என்றான்.
“என்ன கேள்வி இது? உன்னைப் போய் தப்பா நினைப்பேனா?” என்றாள்.
அவள் வாழ்ந்த சூழலில், ஒருவனை மூன்று நாளில் நம்புகிறாள் என்றால், எந்த அளவுக்கு அவன் மீது காதல் கொண்டிருக்கிறாள், என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது!
“சரி வா” என்று அவன் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
அன்றுதான் முதன்முதலாக அவனது அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள். மற்ற அறைகளைப் போலவே இதுவும் வித்தியாசமாக இருந்தது. தரையிலே போடப்பட்டிருந்த மெத்தைகள்! படுக்கையின் பக்கவாட்டில் கேம்ப் ஃபயர் (camp fire) வடிவில் இருந்த நைட் லேம்ப்!
சுவரில் வட்டவடிவமாக பெரியதாக ஒட்டப்பட்டிருந்த இலக்கங்கள்! நடுவில் கடிகார முட்கள்! ஒரு பக்க சுவர் முழுதும் தத்துவங்கள் சொல்லும் சுவரொட்டிகள்!
“இதென்ன?” என்று ஆரம்பித்தவளிடம், “போதும். அங்க பார்த்தது. நான் அதை பார்க்க கூட்டிட்டு வரல. கொஞ்சம் திரும்பி பாரு” என்றான்.
அவன் பார்க்க சொன்ன இடத்தில், பார்த்தவளுக்கு ஆச்சரிய அவஸ்தையாக இருந்தது. அந்தப் பக்க சுவர் முழுவதுமே அவளுடைய புகைப்படங்கள்! இந்த மூன்று நாட்களில் அவளது சந்தோஷ தருணங்களை எல்லாம், அவன் அறைச் சுவரில் சிறை செய்து வைத்திருந்தன, அந்தப் புகைப்பட சட்டங்கள்!
“எப்படி இருக்கு?” என்றான்.
“தேவையில்லாத வேலை பார்க்கிற”
“எப்படி இருக்கு?” என்று திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டு பதில் வேண்டி அடம்பிடித்தான்!
“எப்ப இதெல்லாம் பண்ற?” என்றாள் இன்னும் ஆச்சரியம் அடங்காமல்! அதே நேரத்தில் பதிலும் சொல்லாமல்!
“போட்டோஸ் எடுத்தப்புறமா… ஃப்ரேம் போடறது என்ன பெரிய வேலையா?” என்றான் எளிதாக!
அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்!
“சில போட்டோஸ் சரியா எடுக்கலையோ? கரைக்ட்டா ப்ரேம் பண்ணலயோ?” என கவலையுடன் யோசித்தான். ‘எப்படி இருக்கு?’ என்ற கேள்விக்கு இப்போது பதில் வரும் என்ற நம்பிக்கையுடன்!
“ச்சே ச்சே ரொம்ப அழகா இருக்கு” என்று பதில் சொல்லிவிட்டு, “ஐயோ” என நாக்கை கடித்தாள்!
அவன் வேண்டிய பதில் கிடைத்ததால் சிரித்துவிட்டு, “எல்லாம் நீதான்” என்று கண் சிமிட்டல் செய்தவன், “சரி அந்த கார்னர்ல பாரு” என கைகாட்டினான்.
அவன் கைகாட்டிய மூலையில் இருந்தது ஒரு பீங்கான் பூஜாடி! அது முழுதும் விதவிதமான வண்ணங்களில் மலர்களால் நிரப்பப்பட்டிருந்தது!!
“இதையும் வாங்கிக்கிட்டயா?”
“ம்ம்ம்”
“எங்க வாங்கன?”
“ஆன்லைன்ல. சரி இதுல எந்த கலராவது மிஸ்ஸாகுதா? சொன்னேனா, அந்த கலர் பிளவரும் வாங்கிப் வைக்கலாம்” என்று சிரித்தான்.
“ம் பார்க்கிறேன்” என்று விதவிதமான வடிவங்களில் இருந்த, பூக்களை ரசித்து ரசித்துப் பார்த்தவள், “இதுமாதிரி என் ரூம்லயும் வாங்கி வைக்கலாமா?” என ஆர்வத்துடன் கேட்டாள்.
இதை அவளிடமிருந்து அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவனது பார்வையும், புன்னகையும்… ‘உனக்கில்லாததா!?’ என்பது போல் இருந்தது.
கேள்வி கேட்ட பின்னரே, ‘என்ன கேட்டோம்’ என்று புரிந்தது அவளுக்கு! அதை மாற்றும் எண்ணத்தில், “ஆனா உன் ரூமுக்கு, இந்த மாதிரி போட்டோஸ், இந்த பூஜாடி… செட்டே ஆகலப்பா” என்றாள்.
“ம், எனக்கும் அப்படித்தான் தோணுச்சி. ஆனா என்னோட லவ்வருக்கு இப்படி இருந்தாதான் பிடிக்கும்” என்று முதன்முறையாக அவளை ‘நீதான் என் காதலி‘ என்ற இடத்தில் வைத்தான்!
இதைக் கேட்டதும் இடக்கரத்தால் தொண்டையில் மெல்ல தட்டிக் கொடுத்துக் கொண்டே விழிகளை அங்கும் இங்கும் அலைய விட்டாள்!
அவள் சற்று அதிகமாக உணர்ச்சிவசப்படுவதைப் பார்த்தவன், “போதும் வா வெளியில போய் பேசலாம்” என்று கதவைத் திறக்க யத்தனித்தான். ஆனால் அவளோ அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
“என்ன?” என்றான்.
“அங்க பார்க்கணும்” என்று அவன் அறை பால்கனி நோக்கி கை நீட்டினாள்.
“வா” என்று அவளை அழைத்துச் சென்றான்.
செயற்கை புற்தரை அமைப்பு கொண்ட பால்கனி தரை! ஒரு புறத்தில் இருந்த கேனோப்பி (canopy)! மறுபக்கத்தில் சில உடற்பயிற்சி உபகரணங்கள்! எதிரே தெரிகின்ற இரவு நேரத்து கோவா நகரத்தின் அழகு!
“இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுவோமா?” என்றாள்.
“ம் உட்காரு” என்று அங்கிருந்த கேனோப்பியை காட்டிவிட்டு, அவன் பால்கனி சுவரில் சாய்ந்து நின்று கொண்டான்.
அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான், அவளருகில் அவன் அமராதது!
“உனக்கு செடியெல்லாம் வைக்கப் பிடிக்காதா?” என்றாள்.
“பிடிக்காது. உனக்கு பிடிக்கும்னா சொல்லு. வச்சிடலாம்”
“ஐயோ நீ வேற?! எனக்கும் பிடிக்காது… ஆனா எங்க பெரியம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்”
“ஓ”
“உன்னைப் பத்தி சொல்லேன்”
“என்னைப் பத்தி என்ன சொல்ல? உனக்கே தெரியுமே!”
“நான் அதைக் கேட்கலை. உன் அம்மாவைப் பத்திச் சொல்லு. அவங்க எப்ப உன்னைவிட்டு… அதுபத்தி…”
“நான் செவன்த் படிக்கிறப்ப”
“அப்பவேவா? எப்படி சமாளிச்ச?”
“பாட்டி இருந்தாங்க. அவங்கதான் எல்லாமே பார்த்துக்கிட்டாங்க. அப்புறமா அண்ணி வந்தாங்க. அதுக்கப்புறம் அவங்க பேமிலிய கைடு பண்ணாங்க”
“உன்னோட அப்பா?”
“அப்பா ரொம்ப பேச மாட்டாரு. பேங் முடிஞ்சா வீடு. வீட்டை விட்டா பேங்குனு, ரிட்டயர்ட் ஆகிற வரைக்கும் அப்படியே இருந்தாரு. அப்புறம் நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மறந்திருச்சி… மறக்கலை பழகிருச்சு”
“நல்ல கூட்டுக் குடும்பம் இல்லையா?”
“நீ வேற… பாட்டிக்கும் அண்ணிக்கும் ஒத்தே வராது. ரெண்டு பேருக்கும் சண்டை வேற வரும். பாட்டி கொஞ்சம் ஓவரா பேசுவாங்க. ஆனா அண்ணி நல்லா சமாளிச்சிருவாங்க. இப்போ அடிக்கடி பாட்டி என்கிட்ட சொல்றது, ‘உனக்கு கல்யாணம் ஆனதும்… நான் உன்கூட வந்துருவேனுதான்’.
அண்ணாதான் சொல்வான், ‘பாவம்டா உன்னைக் கல்யாணம் பண்ணப்போற பொண்ணு’னு பட் யாரு என்ன சொன்னாலும், எனக்கு என்னோட பாட்டிதான் பிடிக்கும்”
“நீ உன்னோட பாட்டி பத்திச் சொல்லச் சொல்ல, அவங்களப் பார்க்கனும்னு தோணுது”
“வர்றியா? கூட்டிட்டுப் போறேன். பாட்டியைப் போயி பார்த்துட்டு வந்துரலாம்” என்றான் ஆவலாக!
“வேண்டாம். வேற ஏதாவது பேசு”
“சரி, திருச்சிக்கு கூட்டிட்டு போகவா?”
“அங்க போனாலும்… பழைய ஞாபகம்தான் வரும். எனக்கு இந்த மூனு நாளா, கொஞ்சம் எல்லாத்தையும் மறக்கிற மாதிரி இருக்கு… அதான் வேண்டாம்”
“உனக்கு கோவா பிடிக்குதா?”
“இதை ஒரு நாலு நாளைக்கு முன்னாடி கேட்டிருந்தா, நிச்சயமா பிடிக்கலைனு சொல்லிருப்பேன். ஆனா இப்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.
அவனது பார்வையில், ‘தான் அவள் மனதை ஜெயித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று தெரிந்தது!
“எதுக்கு நின்னுகிட்டே இருக்க? வந்து உட்காரு” என்றாள்.
“ம்” என கேனோப்பியின் ஒரு ஓரத்தில் உட்கார போனவனை, “இங்க… என் ப… பக்க… பக்கத்தில உட்காரேன்” என்று விழிகளால் யாசித்தாள்.
‘இவளுக்கு என்னாச்சி இன்று?’ என யோசித்தபடி அவளருகில் வந்தமர்ந்தான். சில நிமிடங்கள் அல்ல… அதிகமான நிமிடங்கள் இருவரின் மெளனங்களிலே கடந்தன. என்ன பேசவென்றே தெரியாத கட்டத்தில் இருந்தனர்.
திடிரென்று அவள், “உன்னை ஏன்டா பார்த்தோம்னு இருக்குது? பார்க்காமலே இருந்திருக்கலாம். அப்படியே வாழ்ந்திட்டு போயிருப்பேன். ஆனா இப்ப பாரு” என்றாள் திரும்பி அவன் கண்களைப் பார்த்து.
“இப்பவும் ஒன்னுமில்லை” என்றான் அவனும் அவள் கண்களைப் பார்த்து.
மறுப்பாக தலையை மட்டும் அசைத்தாள்!
“உன்கிட்ட ஒன்னு கேட்கனும்… ஆனா நீ வேற எதுவும் நினைக்க கூடாது… நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்க கூடாது… அதோட வேற எந்த மாதிரியும் இதை நீ எடுத்துக்க கூடாது” என்று பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தாள்.
“கேளு”
“நான்… நான்… கொஞ்ச… கொஞ்ச… நேர… நேரம் உன்… உன்னோட… தோள்ல சாஞ்சிக்கவா?” என்று தயங்கித் தயங்கி, தடுமாறிய குரலில் கேட்டாள்.
“இதுக்கெல்லாம்கூட நீ என்கிட்ட பெர்மிஷன் கேட்பியா? இல்ல கேட்கனுமா?”
“இல்ல. ஏற்கனவே ஒரு தடவை…”
“உன்னை ஹேர்ட் பண்ணிட்டேனா?”
‘ஆம்’ என்பது போல் தலையாட்டினாள்.
“எனக்கு தெரிஞ்சே…”
“ச்சே ச்சே… அப்புறமா நீ பழகறப்ப புரிஞ்சிருச்சி. நீ வேணும்னு செஞ்சிருக்க மாட்டேன்னு”
“எப்போன்னு சொல்றீயா?”
“அன்னைக்கு நைட்டு உன்னோட புது பிசி… பிசினஸ் பத்தி சொ… சொல்றப்ப நா… நான் கன்க்ராட்ஸ்-னு சொல்லிட்டு கைய நீட்டினேன். ஆனா நீ கை கொ… கொடுக்கவே இல்லை. ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.
அப்புறம் எனக்கு நானே சமா… சமாதானம் சொல்லிக்கிட்டேன். ந, நம்ம தகுதி என்ன…” என்று அவள் தழுதழுக்கும் குரலில் முடிக்கும் முன், “சாய்ஞ்சிக்கிட்டே பேசிறியா?” என்றான் அவளின் வேதனை தாங்காமல்!
“ம்ம்ன்?” என்று நீர்கோர்த்த விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள்.
“தோள்ல சாய்ஞ்சிக்கிட்டே பேசிறியா?” என்றவன் குரலும் பாரம் தாங்கி வந்தன!
ஆயிரம் ஏக்கங்களுடன்… அவள் விழிகள் அங்குமிங்கும் அலைப்புற்றது. மனம் முழுவதும் பெரிய சஞ்சலத்துடன், ஒவ்வொரு நொடியும் யோசித்து யோசித்து தலையை சாய்த்துக் கொண்டு வந்தவள், அவன் தோளில் மெதுவாக, வாகாக தலை சாய்த்துக் கொண்டாள்!
சில நொடிகளில் அவள், அவன் தோள் வளைவுகளில் நிம்மதியுடன் தலையை அழுந்த புதைத்துக் கொண்டாள். அதன்பின் அவள் பேசவே இல்லை!
அவனும்தான்!!
நீலவிழிகளுக்கோ…
நட்சத்திரங்கள் பூத்த வானம்….
நடுநிசி தந்திடும் அமைதி…
நிலவொளியில் நானும் நீயும்…
நிசப்தங்களும் புரிந்திடும் தனிமை…
நீதான் வேண்டுமென நிர்பந்திக்கும் எனதுள்ளம்…
நின்னைத் தாங்கும் என் தோள்கள்…
நீள வேண்டும் ஆயுள் முழுதும்!
பழுப்பு விழிகளுக்கோ…
பிரகாசமாய் நட்சத்திரங்கள்…
பால்நிலவொளியில் நீயும் நானும்…
பார்வைகள் பேசிடும் தனிமை…
பிரியம் காட்டிடும் காதலன்…
பாதுகாப்பு தந்திடும் தோள்கள்…
பாசம் உணர்த்தும் உன் நெஞ்சம்…
புதிதாய் என்னுள் பூத்த காதல்…
பகையாய் எந்தன் கடந்த காலம்!
