Kathambari Novels
அத்தியாயம் – 12
சக்திவேலின் காதல் பரிசை அருகில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த சயனா கைப்பேசி அதிர்ந்தது.
அலைபேசி அழைப்பை ஏற்றவளிடம் ரேவ் மூலமாக, ‘அமைச்சரிடம், சக்திவேல் பெயர் சொல்லப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
‘சரி உடனே கிளம்பி வரேன்’ என்று அழைப்பைத் துண்டித்துக் கொண்டாள்.
அருகில் இருந்த பூச்செண்டை பார்த்தவள், ‘நீதான் தூக்கத்தை கெடுக்கிறன்னு நினைச்சா, இப்போ இவளும் ஆரம்பிச்சிட்டா?’ என்று கிளம்பிச் சென்றாள்.
இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில், சிறிதும் பதட்டமோ பயமோ இல்லாமல் என்பீல்ட் ஓட்டி வந்து சிஐடி அலுவலகத்துக்குள் நிறுத்தினாள்.
பயத்துடன் நின்ற செக்யூரிட்டியை, சுற்றி நின்ற ஆட்களை… புருவங்கள் நெறிய பார்த்துக் கொண்டு சைட் ஸ்டேண்ட் போட்டுவிட்டு இறங்கினாள்.
படியேறி நேராக ரேவ், கனகா மேம் இருந்த அறைக்குப் போனாள்.
அங்கே ரேவ் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். அவளின் கண்ணீரைத் துடைத்துச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார் கனகா மேம்.
‘ப்ச்…’ – எரிச்சலுடன் கனகா மேம் முன்னே வந்து நின்றாள் சயனா.
‘ஏன் இப்படி?’ என்பது போல் பார்த்தாள். பார்வையின் கேள்விக்கேற்ப வாயில் சுவிங்கம் மெல்லப்பட்டது.
“சயனா…” – கனகா மேம் ஆரம்பிக்கும் போதே, அறை வாயிலில் நிழலாடியது.
காவலேதான்!
திரும்பிப் பார்த்தாள்… சயனா.
நிமிர்ந்து பார்க்கவில்லை… ரேவ்.
முறைத்துப் பார்த்தார்… கனகா மேம்.
‘என்ன’ என்பது போல் தனது புருவத்தை உயர்த்தினாள் சயனா.
“வா, அமைச்சர் வெயிட் பண்றாரு” – இது காவலின் கடுஞ்சொல்.
“இங்க பேசிட்டு, அங்க வரேன்னு சொல்லு” – இது சயனாவின் சாட்டையடி.
“ஏய்! அவர் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு. தெரியாதா?”
“அது தெரியாமதான் சொன்னேன்னு நினைக்கியா?” என்று கேட்டுக் கொண்டே காவலின் அருகே வந்தாள் சயனா.
ஒரு, ஒரே ஒரு சாண் அளவாவது காவலின் கால்கள் பின்னோக்கிச் சென்றன.
கனகா மேம் கண்களில் சிறு திருப்தி!
“நான் ஏன் சொல்றேன்னா, விடிஞ்சா ஆளுங்க நடமாட்டம் வரும். ஏன் என்னனு கேள்வி வந்தா… அமைச்சருக்கு பிரச்சனை. யோசி” – காவல் கலவரப்பட்டது.
“அது உன் பிரச்சினை. நான் ஏன் அதுக்கு யோசிக்கனும்?” – கவணிலிருந்து பறக்கும் கல் போல் சயனா வார்த்தை வந்தது.
காவலின் நிழல் கூட அங்கில்லை… போய்விட்டது.
திரும்பவும் கனகா மேம் எதிரில் வந்து நின்றாள். “சொல்லுங்க மேம், ஏன் இப்படி பண்ணீங்க?”
“உனக்காகத்தான் சயனா!”
“புரியல. இதுல எனக்கு என்ன லாபம் இருக்கு”
“சயனா, நீ மனோகர கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்காக…”
“ஐயோ மேம், அதான் புரியலனு சொல்றேன். மனோவ கல்யாணம் பண்றதுக்கு இந்த மூவ் எதுக்கு?”
“எதுக்குனா? நேத்து நீ சக்திவேல மீட் பண்ணப் போயிருக்கதான”
“ஆமா…”
“சக்திவேல் பத்தி அமைச்சர்கிட்ட சொல்லிட்டா, அவங்க அவன பார்த்துப்பாங்க. அதுக்கப்புறம் உனக்கு வேற ஆப்ஷன் இருக்காது”
“ஒரு விஷயம் மட்டும் தெளிவா சொல்லிக்கிறேன் மேம். லவ் லைஃப்ல எனக்கு ஆப்ஷனே கிடையாது. சக்தி மட்டும்தான்”
“சயனா, உன் அம்மாவோட கஷ்டம்… நீ பார்க்கிற வேல. உன்னோட லைஃப்ல சக்திவேல் இருந்தா அது உன் வேலைக்கு நல்லதில்லை”
“அப்படியே நீங்க எனக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சீங்கனா, அன்னைக்கு உட்கார்ந்து பேசனீங்க பாத்தீங்களா, அந்தமாதிரி என்கிட்ட, வீட்டுக்கே வந்து பேசியிருக்கலாம். இப்படிச் செஞ்சிருக்க வேண்டாம்”
இவளிடம் பேசியிருக்கலாமோ என்று தோன்றியது. அமைதியாக நின்றார்.
“மேம், முதல இத சொல்லுங்க, சக்தி என்னோட லைஃப்ல இருக்கிறதுக்கும், என் வேலைக்கும் என்ன சம்பந்தம்?”
‘இது என்ன கேள்வி’ என்று கனகா மேம் முறைத்துப் பார்த்தார். “சக்திவேல் ஹேக் பண்ணியிருக்கான். அவன் ஒரு அக்யூஸ்ட்!!”
‘இதையே எத்தனை தடவைதான் சொல்லப் போறீங்க’ என்பது போல் பார்த்தாள். “சக்தி எப்படி அக்யூஸ்ட்?”
“இப்பத்தான சொன்னேன். அவன்தான் ஹேக் பண்ணிருக்கான்!!”
“ஓ…ஹேக் பண்ணியிருக்கான்!!? சரி, அது யாருக்குத் தெரியும்”
“உனக்கு, எனக்கு, அமைச்சர்… ப்ச் அதான் அந்த நாலு பேருக்குத் தெரியும் “
“இப்ப சொல்லுங்க மேம். இதுல யாரு வெளியில போய் சொல்லுவாங்க?”
“ஏற்கனவே சொல்லிட்டேன். அமைச்சருக்கு இப்போ சக்திவேல் ஹேக்கர்னு தெரிஞ்சிருச்சி. ஸோ…”
“மேம், இதான் பிரச்சனைனா, அன்னைக்கு இங்க வச்சி, சக்திய அக்யூஸ்ட்னு நீங்க சொல்றப்ப… நேத்து மால்ல இவ சொல்றப்ப… நான் சொல்ல வந்தத, ஒரு நிமிஷம் கேட்டிருந்தீங்கனா இப்படி நடந்திருக்காது”- அவர் பேச்சை பாதியிலே இடைவெட்டினாள்.
அவருக்குப் புரியவில்லை. ரேவும் புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள்.
“மேம்! முத நாள் இந்த கேஸ் பத்தி தெரிஞ்சதும், அந்த நாலு பேரும் பிரஸ்மீட் வச்சி நாங்களே முன்வந்து வரி கட்டினோம்னு சொல்லிட்டாங்க. இப்ப போய் அக்கவுண்ட்ட ஹேக் பண்ணிட்டாங்கனு, சொன்னாருனு வைங்க, பைத்தியம்னு நினைக்க மாட்டாங்க?!
அதவிடுங்க, ஏன் ஹேக் பண்ணாங்கனு கேள்வி வரும், அப்ப என்ன சொல்வாரு? அந்த நம்பிக்கையிலதான், நான் இந்த கேஸ டிலே பண்ணலாம்னு சொன்னேன். சக்தி மேல வச்சிருக்கற லவ்வுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இத யோசிக்காம, ரெண்டு பேரும் எவ்ளோ பெரிய விஷயத்த பண்ணிருக்கீங்க” என்றவள், “ஸாரி மேம், நான் இப்படி பேச கூடாது. எனக்கு ரைட்ஸ் கிடையாது. பட், ஒரு தடவை நீங்க என்கிட்ட கேட்டிருக்கலாம்” என்றாள்.
“ஏன் மேம்… சக்திய பார்க்க போகாதானு வார்ன் பண்ணிருக்கலாமே. அந்த உரிமை உங்களுக்கு இல்லயா? இல்ல இவளுக்கு இல்லயா?” என்றாள் மேலும்.
இதைக் கேட்டவுடன், ரேவ் அழுதுகொண்டே வெளியே போனாள்.
சயனா, “இத தவிர வேற எதும் தெரியாது” என்று முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களை எடுத்துப் பார்த்தாள்.
முதலில் அந்த பில்டர்!
அடுத்து சில காவலர்கள்!
கடைசியாக அமைச்சரின் துரோகிகள்!!
இப்படி அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். யாரை, எப்படி, எந்த விதத்தில், எந்த இடத்தில் பயன்படுத்தலாம் என்று கவனமாகச் சிந்தித்தாள்.
“சயனா, அமைச்சர் வெயிட் பண்றார்”
“மேம், இனிமே அங்க போய் சும்மா நிக்க முடியாது. ஏதாவது ஸ்டார்ங் கண்டன்ட் வேணும்” – கவனம் சிதறாமல் பதில் சொன்னாள்.
கனகா மேம், அவள் அருகில் வந்தார். “சயனா…”
“மேம், அப்புறமா பேசலாம். ப்ளீஸ்” – கெஞ்சலாகக் கேட்டாள்.
“நான் ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லணும்” – அவர் குரலில் அவ்வளவு வருத்தம்.
“சொல்லுங்க மேம்” – ‘இப்போ வருத்தப்பட்டு என்ன செய்ய’ என்ற பெருமூச்சுடன் சொன்னாள்.
“நம்ம ரேவ அடிச்சிட்டாங்க”
சயனா அதிர்ந்துவிட்டாள்!
இதுதான் ரேவின் கண்ணீருக்கு காரணமா? தனக்குத் தெரியாமல் இப்படி ஒரு காரியம் செய்ததால்தான் அழுகிறாள் என்று நினைத்தாளே!!
சயனாவின் அமைதி, கனகா மேமை மேலும் சொல்ல ஊக்கியது.
“ரேவ, அந்த போலீஸ் அடிச்சிட்டான்” என்று நடந்ததை எல்லாம் சொன்னார்.
இதற்கு இடையே காவல் வந்து, “சீக்கிரம் வா” என்று இருமுறை எச்சரித்துவிட்டுச் சென்றது.
சயனா யோசித்தாள்.
எப்போதும், யார் வரம்புமீறினாலும் அவளிடம் வந்து சொல்லுவாள். இப்படி இன்று நடந்திருக்குறது! எதுவும் சொல்லவில்லை. சயனாவிற்கு கோபம் வந்தது.
உடனே ரேவ் இருக்கும் அறைக்குச் சென்றாள்.
இன்னும் ரேவ் அழுது கொண்டுதான் இருந்தாள்.
சயனா, ரேவ் அருகே சென்று அவள் நாடியைப் பிடித்து உயர்த்தினாள். “அவன் அடிச்சானா?” – சங்கடத்துடன்… கோபத்துடன் கேட்டாள்.
அவள் கேட்டது ஆறுதல் தந்தாலும், ரேவின் அழுகையும் அதிகரித்தது.
“ரேவ், இதல்ல சொல்லி என்னய நீ கூப்பிட்டிருக்கனும்” என்றாள்.
இன்னும் அழுகைதான் ரேவிடம்!
“முதல்ல அழறத நிறுத்து. என்கூட வா, நான் கேட்கிறேன்”
“நான் வரல. அவனுங்கள பார்க்கவே பிடிக்கல. டிஜிபி, ஹையர் அபிஷியல்ஸ்னு யார்கிட்டயாவது அவனை பத்தி கம்ப்ளைன்ட் கொடுக்க போறேன்” – அத்தனை அழுத்தமாக, அவர்களது அத்துமீறல் மேலான கோபத்தை வெளிப்படுத்தினாள்.
“என்ன கம்ப்ளைன்ட் பண்ணப் போற?”
“இங்க வந்து ஸ்மோக் பண்றாங்க. ஒரு சிஐடி ஆபீஸர கை நீட்டி அடிக்கிறாங்க. ஹவ் சீப் தே ஆர். சிசிடிவி ஃபுட்ஏஜ் இருக்கும்ல… பாரு அத வச்சி கம்பளைண்ட் பண்ணுவேன்” – உறுதியான குரலில் சொன்னாள் ரேவ்.
“ஓ”
“என்ன ஓ?? இவ்வளவு சொல்றேன், உனக்கு கோபமே வரலையா?”
“வருது, ஆனா உன்மேலதான்”
“நான் என்ன தப்பு பண்ணேன்?”
“ஃபர்ஸ்ட் மீட்டிங் அரேஞ்ச் பண்ணது. செகன்ட், சிஐடி ஆபிஸ்ல மீட்டிங் அரேஞ்ச் பண்ணது. லாஸ்ட், இவன்தான் ஹேக்கர்னு சொல்லிட்டு வராம, எதுக்கு தேவையில்லாதது பேசணும்?”
“அப்போ அவன் அடிச்சது தப்பில்ல. அப்படித்தான” – ரேவ்.
“அவன் அடிச்சானா, நீயும் திருப்பி அடிச்சிருக்க வேண்டியதான” – பழிக்குப் பழி என்ற கோணத்தில் சயனா பேசினாள்.
“ஒரு போலீஸ் ஆபிஸர யாராவது அடிப்பாங்களா?” – ரேவ். இது நியாயமான கேள்வி.
“ஓ, சிஐடி ஆபிஸர அடிக்கலாமா ரேவ்?” – சயனா. இதுவும் நியாயமான கேள்வி.
தனது நிலையை அருவருப்பாக உணர்ந்தாள் ரேவ். தலை கவிழ்ந்துவிட்டது.
“ரேவ், நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே. சக்தி செஞ்சதயோ, உனக்கு நடந்ததையோ… யார்கிட்டயும் சொல்லி நியாயம் கேட்க முடியாது”
“ஏன்?” – ரேவ் குரலில் கனம் கூடிவிட்டது.
“ஏன்னா? அது உங்க ரெண்டு பேரையும் நல்ல விதமா காட்டாது. புரிஞ்சுக்கோ”
சரிதானே!
சக்திவேல் செய்ததையோ, ரேவிற்கு நடந்ததையோ வெளி உலகத்திற்கு சொன்னால், அவர்கள் இருவருமே இழிவான பார்வைக்கு உள்ளாவார்கள்.
“அப்போ என்ன பண்ண?” – ரேவ் குரலில் இயலாமை தெரிந்தது.
“என்னய நம்புங்க. நான் உங்க ரெண்டு பேருக்கும் நியாயம் வாங்கித்தரேன்”
“எப்படி?”
“எப்படினு எனக்குத் தெரியாது. ஆனா வாங்கித்தரேன். நீ வேடிக்கை மட்டும் பாரு. சரியா?”
“இங்க நியாயமா எதுவுமே பண்ண முடியாதுல” என்றாள் ரேவ் வெறுமையாக.
“ஆமா ரேவ். அது உண்மை.” – கனகா மேம் குரலும் வெறுமை காட்டியது.
பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிட்டாள் சயனா. “அய்யய்ய! என்ன பெரிய நியாயம். இந்த கேஸ் வந்தப்ப தெரியாதா? இது நியாயமில்லனு. அவங்க வரியே கட்டல. அது நியாயமா? அப்ப அமைதியாதனா இருந்தீங்க. அப்ப எங்க போச்சு உங்க நியாயம்?”
நிச்சயமாக சயனாவின் பேச்சில் நியாயம் இருந்தது!
“என் ஹையர் அபிஷியல் எனக்கு என்ன சொல்றாங்களோ அதத்தான் நான் கேட்டேன். அவ்ளோதான்” என்றாள் ரேவ்.
“அவ்ளோதான. உன் வேல முடிஞ்சதுல. ஒதுங்கிக்கோ. நான் பாத்துக்கிறேன்”
“என்ன பார்க்கப்போற சயனா?”
“பொறுத்திருந்து பாரு”
கனலினி, ரேவ் எல்லாம் ஒரே ரகம். தன் அதிகாரத்திற்கு உட்பட்டு நின்று, அட்டூழியத்தை எதிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் அது எல்லா நேரங்களிலும் உதவாது!
பூனைக்கு யாராவது மணி கட்டியே ஆக வேண்டும் அல்லவா!?
அதிகார துஸ்பிரயோகத்தை எதிர்க்க, இன்னொரு அதிகாரம் தேவையில்லை. அதை அலட்சியப்படுத்தி… துணிந்து எதிர்த்து நின்றாலே போதும்.
சயனா யோசித்தாள். “மேம், இறங்கி அடிக்கலாமா?” என்றாள் கனகா மேமிடம்.
“நான் உன்கூட நிக்கிறேன். ஆனா ஒன்னே ஒன்னு! அவனுங்க கூட பேச பிடிக்கல. ஹையர் ஆபீசர்கிட்ட ஹெல்ப் வேணும்னா, பார்த்துப் பேசி வாங்கித் தரேன்”
தன் முழுக்கைச் சட்டையை… முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டே அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
இது பொறுப்பதில்லை
எரிதழல் கொண்டு வா – என்பது போல் சயனாவின் சினம் இருந்தது.
சட்டையின் ஒவ்வொரு மடிப்பிற்கும், சயனாவின் மூளை வழக்கின் ஒவ்வொரு மூலையிலும் போய் மோதிக்கொண்டு வந்தது.
செய்வது துணிந்து செய்
சொல்வது தெளிந்து சொல் – என்பது போல் சயனா செயல்பட நினைத்தாள்.
முதலில் அவர்களது பலம்… நால்வர் கூட்டணி!
இன்று அதில் இரண்டை கழட்டி விட வேண்டும்.
இதுதான் முதற் கட்டம்!
நால்வர் இருக்கும் அறைக்குள்…
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
இப்படி ஒரு இடிமுழக்கம் போலத்தான் – நுழைந்தாள் சயனா.
சயனா உள்ளே நுழையும் போதே காவல் தடுத்தது.
“கொஞ்ச நேரம் கழிச்சி வா, இப்ப அமைச்சர் பேச மாட்டார். போ போ” – காவல் பழிவாங்குகிறதாம்!!
மற்ற மூவரும் சிரிக்க வேறு செய்தார்கள்.
காவலையும் மீறி சயனா உள்ளே நுழையப் பார்த்தாள்.
உடனே காவல் அவள் முன்னே வந்து, “உனக்கும் அடி வேணுமா?” என்று கேட்டு முடிக்கும் முன்பே…
…
….
….
காவல்,
அமைச்சரின் முன் இருந்த மேசை முன்னே…
கைகள் பின்னே முறுக்கப்பட்ட நிலையில்…
காவலின் கரங்கள் சயனாவின் காவலில்…
இப்படி இருந்த நிலையில், “டீல் பேசலாமா??” என்றாள் சயனா.
என்ன நடந்தது என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. ஒரு நிமிடம் மூளையை ‘ரிவைன்ட்’ செய்து ஸ்லோமோஷனில் காட்சியை ஓட்டிப் பார்த்தார்கள்.
அதில் தெரிந்தது…
“உனக்கும் அடி வேணுமா?” என்று கேட்ட காவலிடம், கேட்டது கொடுக்கப்பட்டது.
திரும்பவும் கை உயர்த்த முயன்ற காவல் மணிக்கட்டைப் பிடித்து, பின்புறமாகக் முறுக்கினாள் சயனா.
காவல் முதுகில், தன் கை முட்டி கொண்டு குத்தினாள். காவல் பலம் இழந்ததும், முன்னே தள்ளிச் சென்றாள்.
காவல் வலியில் முணங்கியது!
மேசையின் அருகே கொண்டு சென்று காவலின் தலையை… ஓங்கி மேசையின் மேல் கிடத்தினாள்.
வலி கொஞ்சம் அதிகம் போல! காவல் கதற ஆரம்பித்தது!!
இப்படி இருந்த நிலையில், “டீல் பேசலாமா??” என்றாள் சயனா.
இன்னும் கனகா மேம் உட்பட யாரும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
சயனா நாசி மேலும் கீழும் சென்று வந்தது. புகை நெடியை உணர்ந்தாள்.
தொழில் இன்னமும் புகைவண்டி ஓட்டிக்கொண்டிருந்தது. அதனால்!
தொழிலின் சிகரெட்டை ஒரு கையால் சைகை செய்து கேட்டாள் சயனா.
காவலுக்கு வலி அதிகமாகியது போல! கதறல் கத்தலாக மாறியது!!
தொழிலோ ‘டூ யூ ஸ்மோக்! ‘ என்று யோசித்தபடியே சயனாவிடம் கொடுத்தது.
அதை வாங்கியவள் காவலின் கைகளில் வைத்து நசுக்கினாள்.
கண்டிப்பாக நன்றாக எரியும் காவலுக்கு!
“இது என் ஆஃபீஸ். இங்க நான் சொல்ற மாதிரிதான் இருக்கனும். உன் இஷ்டத்துக்கு எல்லாம் நடக்க முடியாது” – சயனா வருகையால் தொழிலுக்கு ஏற்பட்ட முதல் நட்டம் இது.
அந்தக் குரல்… உயிரற்ற அறையே நடுங்கும் கணீர் குரல். உயிருள்ள ஆட்கள் கதி என்னவாகுமோ?
“போதும். விஷயத்துக்கு வா. விடியப் போகுது. இங்க நான் இருக்கிறது தெரிஞ்சி பிரஸ் வந்தா பிரச்சனை ஆயிடும்” – கடுப்புடன் அமைச்சர் சொன்னார்.
“என்ன பிரச்சனை? பிரஸ் கேட்டா… நான், நீ, இந்த போலீஸ் சேர்ந்து ஏதோ கேஸ் டீடெயில்ஸ் பேசிட்டு இருக்கோம்னு சொல்லுங்க”
‘நீ-யா? அவ்ளோ திமிரு உனக்கு? நிச்சயம் நான் யாருனு காட்டுவேன்’ – தனக்குள் அமைச்சர் சொல்லிக் கொண்டார். அதேநேரம், “ம்ம். சமாளிச்சிடலாம் இதான் உன்கிட்ட இருக்கிற பிளஸ்” என்று மெச்சியும் கொண்டார்.
சயனா, “ஓ, நான் உங்கள மறந்திட்டேன். ஸாரி” என்று தொழிலதிபரைப் பார்த்து பரிதாபப்பட்டாள்.
‘இவளுக்கு, பிஸினஸ் மேல் ஏன் இந்த கரிசனம்?’ – யோசித்தார் அமைச்சர்.
“அமைச்சரும் மறந்துட்டார் போல” என்றாள் அடுத்து.
இது கரிசனமல்ல! சயனாவின் கைங்கரியம்!
அமைச்சர் பற்றி, அவர் முன்னேயே தொழிலதிபரிடம் ‘பற்ற’ வைத்திருக்கிறாள்.
தொழில் யோசிக்க ஆரம்பித்தது. பிரச்சனையின் போக்கு மாறுவது போல் இருந்தது, தொழிலதிபருக்கு.
“இப்ப டீல் பேசலாமா?” – சயனா மீண்டும் அமைச்சரிடம் கேட்டாள்.
“என்ன மிரட்டுறியா? எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு. இப்போ யார், யார் இதுல சம்பந்தப்பட்டு இருக்காங்கனு தெரியும். இனிமே உன் தேவை வேண்டாம்”
“இப்பவும் கேட்கிறேன், டீல் பேசலாமா?” – அமைதியான குரலில் திரும்பவும் அமைச்சரிடம் கேட்டாள். காவலுக்கு வலிக்கும்படி இன்னும் அவள் பிடி இருந்தது.
“இந்த ஹேக்கிங் மேட்டர யார்கிட்ட சொல்லப் போறியா?” – தொழில்.
தொழிலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் புரிய ஆரம்பித்தது.
அவள், அதனைக் கவனித்துக்கொண்டாள். ‘ஆமாம்’ என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள். அதில்தான் எவ்வளவு அழுத்தம்!!
“என்ன? இத வெளிய பப்ளிக்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறியா?” – இது அமைச்சரின் முதல் கணிப்பு.
‘இல்லை’ – தலையசைப்பு மட்டுமே சயனாவிடம்.
“எதிர்க்கட்சியில சொல்ல நினைக்கியா?” – இது அவரின் இரண்டாவது கணிப்பு.
இம்முறை தலையசைப்பு இல்லை அவளிடம்! நய்யாண்டிப் புன்னகை மட்டும்!!
கனகா மேம்… கொஞ்சம் சிரித்துக் கொண்டார்.
“மீடியாகிட்ட…??” – இது அமைச்சரின் மூன்றாவது கணிப்பு.
‘இல்லவே இல்லை’ என்று தோள் குலுக்கினாள்.
அமைச்சரின் கணிப்புகள் தோற்பதைப் பார்த்த தொழிலுக்கு, அவரின் மீது ஒரு அதிருப்தி உண்டானது.
“பப்ளிக்கிட்ட கொண்டு போனா, இதவிட பெரிய பிரச்சினையைக் காட்டி, இத மறக்கடிச்சிருவ. எதிர்க்கட்சிகிட்ட சொன்னா, அவங்களுக்கு எப்ப தேவையோ, அப்பதான் யூஸ் பண்ணுவாங்க. மீடியாகிட்ட…. ப்ச் இங்கதான இருக்கு” என்று பத்திரிகையைக் காட்டினாள்.
“அப்புறம், என்ன பண்ணப் போற” – அதிகாரமாக அமைச்சர் கேட்டார்.
ஆனால், அது அதிகாரம் போல் இல்லை. ‘என்னதான் செய்யப் போற…’ என்று புரிய முடியாமல் கேட்டது போல் இருந்தது.
“ஒன் கட்சியில, உன்னய கீழ தள்ளிட்டு வரனும்னு நினைப்பான்ல, அவன்கிட்ட போய் சொல்லுவேன். இங்க எதிரியைவிட துரோகிக்கு ஸ்டெர்ன்த் அதிகம்.
எதிரி சொல்றதகூட உண்மையா பொய்யானு யோசிப்பாங்க. ஆனால் துரோகி சொல்றது யோசிக்கவே மாட்டாங்க. அப்படியே நம்புவாங்க. சொல்லு இப்போ டீல் பேசலாமா?” – மீண்டும் மீண்டும் சயனா இதையே கேட்டாள்.
அமைச்சர் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார்.
அதன்பின்னே சயனா… காவலை விடுவித்தாள். உடனே காவல் சீறிக்கொண்டு வந்தது.
“ஏன் வாங்கனது பத்தலையா?” – சயனா.
மூன்று சிரிப்பொலிகள் வந்தன.
ஒன்று சயனா.
இரண்டாவது கனகா மேம்.
மூன்றாவது தொழில்!!
“நான் பேசி முடிக்கிற வரைக்கும், இந்த ஆள்” என்று காவலைக் கை காட்டினாள், “பேசக்கூடாது. அப்படினா நான் பேசறேன்” என்று முடித்தாள்… சயனா.
“உட்காருய்யா” என்றார் அமைச்சர் காவலிடம்… சயனாவைப் பார்த்தபடி.
“இல்ல, நான் தெரியாமத்தான் கேட்கிறேன். அவங்களுக்கு ஒரு பிரச்சனைனு, ரேவ அடிச்சியே! இவ்ளோ நேரம் உன்னய பிடிச்சி வச்சிருந்தேன். இன்னைக்கு உனக்கு ஒரு பிரச்சினைனா இவங்க வந்தாங்களா? யோசி” – சயனா.
இன்றைக்கு சயனாவால் இந்தக் கருத்து காவல் மனதில் விதைக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அறுபடை நடக்கும்.
அமைச்சரைப் பார்த்தது… காவல்.
“யோவ், முதல உட்காருய்யா” – எரிச்சலில் இருந்தார் அமைச்சர். அது அவர் குரலில் நன்றாகத் தெரிந்தது.
அந்த மேஜையின் மீதிருந்த ரேவ் ஒப்படைத்த கோப்புகளை எல்லாம் ஒன்றாக சேகரித்தாள் சயனா. தொழிலதிபரைப் பார்த்து, “லைட்டர் இருக்கா” என்றாள்.
‘எதற்காக’ என்பது போல் தொழிலின் பார்வை இருந்தது.
“ஆங்! எரிக்க” என்று இடைவெளிவிட்டு “பேப்பரை” என்றாள் சயனா.
கோப்புகளையும், லைட்டரையும் கனகா மேமிடம் கொடுத்து, “மேம் இதலாம் எரிச்சிடலாம்” என்றாள்.
அவரும் வாங்கிக் கொண்டு ஓய்வறை நோக்கி சென்றார்.
‘யார் தலைமை?’ என்ற கேள்வி நால்வரிடமும் வந்தது. நடப்பதைப் பார்த்து, நிச்சயம் வந்தே ஆக வேண்டும்.
“ஏன் அத எரிக்கனும்??” – காவல்.
“ஓகே, இப்ப நம்ம பேசலாமா?” – முன்னிருந்த நாற்காலியில் நன்றாக அமர்ந்து கொண்டு கேட்டாள் சயனா.
“ஏன் இந்த எவிடென்ஸ என்னால கலெக்ட் பண்ண முடியாதா?” – அமைச்சர்.
“ரொம்ப குழப்பம் போல. இதை நான் வெளில சொல்லக் கூடாதுனுதான் இப்ப நம்ம டீலே பேசப் போறோம்”
“அப்புறம் எதுக்கு எரிச்ச?”
“ரிலாக்ஸா உட்கார்ந்து யோசிச்சிப் பாருங்க, உங்களுக்கே புரியும்”
“கொரியரா?” – இம்முறை தொழில் கணித்துப் பார்த்தது.
“அதாதான் இருக்கும். ஏன்? அந்த கொரியர் ஆபீஸ் போய் இந்த டிடெயில்ஸ் திரும்ப வாங்க முடியாதா?” என்றார் அமைச்சர்.
“திரும்பவும் சொல்றேன். நான் இத வெளியே சொல்லக் கூடாதுனுதான் டீல்”
ஏனோ, “ம்ம்ம் எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன்” என்றது தொழில்.
“ஏன்யா?” – அமைச்சர் புரியாமல் கேட்டார்.
“எனக்கென்னவோ இது சாதாரண பிரச்சனை மாதிரி தெரியல” – தொழில்.
சயனா நினைத்துபடி… நால்வர் கூட்டணியில் வேறுபாடு வந்துவிட்டது.
“யோவ்! நம்மள குழப்புறாய்யா அவ. பேசாம உட்காரு” – தொழிலை அமைச்சர் சமாதானம் செய்யப் பார்த்தார்.
“நீ குழம்பிட்ட. அந்த பொண்ணு டிடெயில்ஸ் கொடுத்தப்ப பேசாம வாங்கிட்டுப் போயிருக்கனும்” – தொழில்.
நால்வர் கூட்டணியில் முரண் முளைத்துவிட்டது.
“தேவையில்லாம அவளை அடிச்சி, அழவச்சி பிரச்சனைய பெரிசாக்கிருக்கீங்க. அதான், இந்தப் பொண்ணு இப்படி நடக்குது” – தொழில்.
நால்வர் கூட்டணியில் விரிசல் விழுந்தது.
“என்னய்யா பேசற? இது சாதாரண விஷயம்” – அமைச்சர்.
“எனக்கு, இது தேவையில்லாத பிரச்சனை. இவ உன்னய மட்டும்தான் டார்கெட் பண்ணுறா. நான் எதுக்கு மூக்க நுழைக்கனும்” – தொழில்.
“உன் பணமும் போயிருக்கில”
“என் பிசினஸ்ல நட்டம்னு நினைச்சிப் போய்கிட்டே இருப்பேன்” – தொழில்.
தொழிற்ச்சந்தையில்…. அமைச்சர் சரிவைச் சந்தித்தார்!
தொழிலுக்கும் நட்டம்தான்!!
ஆனால் அதைப்பற்றி அதிக நாட்டமில்லை. எழுந்து போய்விட்டார்.
‘போனா போறான்’ என்றபடி அமைச்சர், “சொல்லு, உன் டீல் என்ன?” என்றார்.
இப்போது சயனாவின் பார்வை பத்திரிகையின் மீது விழுந்தது!
‘அடுத்து நான்தானா’ என்று செய்தி கூறியது பத்திரிகையின் முகம்!
“நியூஸ் சேனல் வச்சிருக்கீங்கள, சேனலுக்கு, கண்டன்ட் இருக்கா?” – சயனா.
“கண்டன்ட்டா?” – புது நியூஸ் சேனல் ஆரம்பித்திருந்த பத்திரிகை முழித்தது.
“அதான் பிரேக்கிங் நியூஸ்?”
“இது என்ன??” – சிறு சந்தேகம் வந்த அமைச்சர் பத்திரிகையைப் பார்த்தார்.
“அன்னைக்கு, அவரு இங்க வந்தப்ப, கன்டென்ட் வேணும்னு கேட்டாரு” – சயனா.
அமைச்சரின் பார்வையில் அளவுக்கு அதிகமான சந்தேகம்… பத்திரிகை மேல்.
“ஐய்யா, அது அப்போ” – சேனல் அமைச்சரை சாந்தப்படுத்த பார்த்தது.
“ஆனா இன்னைக்கு உங்களுக்கு நிறைய கிடைச்சிருச்சில. போலீஸ் ஆபிஸர் சிஐடி ஆபிஸரை அடித்தார். பேரெல்லாம் கூட போட வேண்டாம். பப்ளிக்கே பில் பண்ணிப்பாங்க” – சயனா.
”ச்சே ச்சே… அப்படிலாம் செய்ய மாட்டேன்” – சேனல் அமைச்சரிடம் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னது.
“வேண்டாமா?? சிஐடி ஆபீஸில் அமைச்சர்! இது ஓகேவா” – சயனா.
அமைச்சரின் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது!
‘யாரை நம்ப’ என்ற குழப்பம் வந்தது!!
அதனால் பத்திரிகையைப் பார்த்து, ” நீ கிளம்பிப் போ. நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு வரோம். ராத்திரி மீட் பண்ணலாம்” என்றார் அமைச்சர்.
“ஐயா, அந்தப் பொண்ணு சொல்றத நம்பாதீங்க” – சேனல்.
“நீ போப்பா. இது எங்க பிரச்சனை. நாங்க பார்த்துப்போம்” – அமைச்சர்.
இன்றைய செய்திகள்… இத்துடன் நிறைவடைந்தன. அதாவது பத்திரிகை வெளியேறியது.
செய்திகள் வாசித்தது, வேறு யார்?? சயனாதான்.
இப்போது இருவர் கூட்டணியாகிவிட்டது நால்வர் கூட்டணி!!
அமைச்சரை நேருக்கு நேராகப் பார்த்தாள்!
அவரும் பார்த்தார்!!
இனி நடக்கப் போவது சயனாவிற்கும் அமைச்சருக்கும் இடையே போர்!
போர்களத்தில், அவர் அதிகாரம் உள்ள இடமாகப் பார்க்கப்படப் போவதில்லை! அவள் அதிகாரியும் அல்ல!!
இருவருக்குமான தனிப்பகை.
சயனாவின் பார்வை மொத்தமும்… அமைச்சரைப் பார்த்தது.
அமைச்சரின் பார்வை மொத்தமும்… சயனாவைப் பார்த்தது.
இருவரின் கண்களில் வெறி தெரிந்தது.
‘யார் யாரைத் தோற்கடிக்க போகிறார்கள்?’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பது போல் இருந்தது.
இருவரின் மூளையும் ‘அநியாயமாக’ செயல்படத் தொடங்கியது.
சயனா பார்வைதான் அமைச்சர் மேல் இருந்ததே தவிர, அவள் மூளை முழுவதும் காவலிடம்தான் இருந்தது.
“உன் டீல் என்ன?” – அமைச்சர்.
“உன் ப்ளான் என்னனு சொல்லு. அதுல எனக்கு தேவையானதைக் கேட்கிறேன்”
“இன்னைக்கு தேதிக்கு கனலினி, சக்திவேல் இந்த ரெண்டு பேருமே என்னோட எதிரிங்க”
சக்திவேல் பெயர் கேட்கும் போதே உள்மனம் உருகியது. சரிய ஆரம்பித்தாள். இருந்தும், “ஓகே, எனக்கு கனலினி மேடம்க்கு எதும் ஆகக்கூடாது” என்றாள்.
“கனலினி மேல, உனக்கு எதுக்கு இவ்வளவு பாசம்”
“டீல் பேசறப்ப காரணம் எதுக்கு? டீல் ஓகேவா?” – சாதாரணமாகக் கேட்டாள்.
“ஓகே, அந்தப் பைத்தியத்த வச்சி நான் என்ன செய்யப் போறேன். எனக்கு தேவையில்ல. எனக்கு தேவை சக்திவேல்!”
சயனா எதிர்பார்த்ததுதான். “சக்திவேல கூட்டிட்டு வந்து உன்கிட்ட ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு”
“அவனை வச்சி நான் என்ன செய்யப் போறேன்”
“அப்புறம்??”
“அவன் எனக்கு வேண்டாம்”
“புரியல”
“அவன் யாருக்கும் வேண்டாம்!! வேண்டவே வேண்டாம். இப்ப புரியுதா?”
இதயம் முழுக்க காதலை வைத்துக் கொண்டு, எதிரில் இருப்பவர் முன் அதைக் காட்டாமல்… காட்டத்தைக் காட்டுவது கொடுமை. இந்தநொடி சயனா அந்தக் கொடுமையை அனுபவிக்கிறாள்.
“சக்திவேல் வேண்டாம். ஆனா அவன் உயிர் வேணும்!”
சயனா, சூழலை மறந்து சுருண்டு கொண்டாள்!
அவளது உயிரை… அவளிடமே கேட்கிறாரே!!
சயனா, தன் காதலை சாதல் இன்றி காப்பாற்றுவாளா? காப்பாற்ற முடியுமா??
