Kathambari Novels
அத்தியாயம் – 13
உயிராய் ஆனவனின் உயிரைக் கேட்டதும், சயனா காதல் மனம் காயப்பட்டது.
“இது சாதாரண ஹேக்கிங். இதுக்கு ஏன் இப்படி…” – அமைச்சரிடம் கேட்டாள் சயனா. காயப்பட்ட மனதால் சற்றே பின்னோக்கி அடி எடுத்து வைத்தாள்.
“சாதாரண ஹேக்கிங்தான். போன பணத்த ஒரே நாள்ல சம்பாதிக்க முடியும். ஆனா இன்னைக்கு இவன இப்படியே விட்டுட்டா, நாளைக்கு என்னெல்லாம் செய்வானோ?”
அவர்களின் எதிர்காலப் பயத்திற்காக, அவளின் ‘எதிர்காலத்தை’ கேட்கிறார்கள்.
“நான் கொஞ்சம் யோசிக்கனும்”
“டீல் பேசறப்ப யோசிக்க முடியாது” என்றார் அமைச்சர் அலட்சியமாக.
சயனா… காதல் மனம் சில்லுச் சில்லாய் உடைந்தது!
“நீ முடிவு எடுக்கலைனா…” என்று அமைச்சர் எழுவதற்கு யத்தனித்தார்.
“சரி… சரி… ஒத்துக்கிறேன்” – சட்டென்று சயனா சொல்லிவிட்டாள்.
“என்ன ஒத்துக்கற? தெளிவா சொல்லு” – நக்கல் சிரிப்புடன் சொன்னார்.
சயனாவிற்கும் சக்திவேலுக்கும் ஏதோ இருக்கிறது. அதை அவள் பேச்சிலிருந்து அமைச்சர் புரிந்து கொண்டார். அவனைக் கொல்லச் சொன்னால்… இவள் முகம் மாறுகிறது… உடைகிறாள் என்று புரிந்தது.
உடைந்தவளை மேலும் உடையச் செய்து பார்க்க அமைச்சர் ஆசைப்பட்டார்!
“நீங்க சொன்னதுக்கு” – உத்தேசமாகச் சொல்லிப் பார்த்தாள் சயனா.
“நாங்க என்ன சொன்னோம்?” – உத்தேசமாக வேண்டாம்! உறுதியாகச் சொல் என்று உந்தி அவள் உறுதியை உடைக்கப் பார்த்தார் அமைச்சர்.
“சக்திவேலோட உயிர எடுக்கனும். அதான?? எடுத்திடலாம். இப்ப பிளான் பத்தி பேசலாம்?” – என் உறுதியைச் சோதிக்கும் எந்த உணர்வுக்கும் இடமில்லை என்று பதில் தந்தாள் சயனா.
கனகா மேம் மற்றும் இருவர் கூட்டணி அவளை விதிர்த்துப் போய் பார்த்தனர்.
“யோசிக்கனும்மா?” என்று அவள் எழுந்து கொள்ள பார்த்தாள்.
“ஏ உட்காரு” என்றவர் “முதல ஸ்பாட் பிக்ஸ் பண்ணலாம். இவன் ஏரியா போலீஸ் ஸ்டேஷன் இருக்கிற இடம்தான். எந்த தெருனு நாளைக்குச் சொல்வான்” என்று அருகிலிருந்த காவலைக் காட்டினார்.
“ம்ம்ம்”
“சக்திவேல அங்க எப்படியாவது வரவச்சி… நீ அவன ஷூட் பண்ற. உயிர் போனதும்… இவனுக்குப் ஃபோன் போட்டு இன்பார்ம் பண்ணிடு”
“ம்ம்ம் அப்புறம்”
“அடுத்து இவன் போலீஸ் ஸ்டேஷன்லருந்து ஆள் வந்துருவாங்க. அவங்க ஏதாவது கேஸ் போட்டு… தப்பிச்சி ஓடப் பார்த்தான்… அதான் ஷூட் பண்ணனோம்னு சொல்லிடுவாங்க”
“இன்னுமா இத நம்புறாங்க!! இல்ல இன்னுமா இதெல்லாம் நம்புறாங்க” – சயனா.
“சொல்ற மாதிரி சொன்ன நம்புவாங்க. நான் சொன்னத நீ பண்ணு… உனக்கும் எனக்கும் டீல் ஓகே ஆயிடும்”
“சரி என்னைக்கு?” – சயனா.
“இன்னைக்கே”
“இன்னைக்கு கண்டிப்பா முடியாது. நாளைக்கு நைட்டு ஓகேவா”
“சரி, நாளைக்கு நைட்! ரெண்டலருந்து நாலு மணிக்குள்ள”
“ம்கூம்! நாலு மணிக்கு பேப்பர், பால் போடற ஆளுங்க வர ஆரம்பிச்சிருவாங்க. அதனால் ஒன்னுலருந்து மூனு மணிக்குள்ள”
“சரி”
“ஆனால் அந்த ரோடுல ஏதாவது வெகிக்கிள் வந்தா? நான் மாட்டுவேன்ல”
இருவரும் யோசித்தார்கள்!
“நான் ஒரு ஐடியா சொல்லவா?” என்றவள், “டிராபிக் போலீஸ் வச்சி பதினோரு மணிலருந்து, அந்த ரோட்லல எந்த ஒரு வண்டியும் நுழையாம டைவர்ட் பண்ணச் சொல்லுங்க” என்றாள்.
“சரி”
“ரோட்ல கடை ஏதும் இருந்தா… ஐ மென்ட் 24 அவர்ஸ் ஷாப்”
“அன்னைக்கு நைட்டு என்னோட ஸ்டேஷன் கான்ஸ்டபில்ல வச்சி, அந்தமாதிரி கடை எல்லாத்தையுமே குளோஸ் பண்ணச் சொல்லிறேன்” என்றது காவல்.
“ஓகே. பட், ரொம்ப முக்கியமானது. நான் வெப்பன் எடுத்தா, லெட்ஜ்ர்ல சைன் பண்ணனும்… ஏன் எதுக்குனு தேவையில்லாம கேள்வி வரும்”
“அதபத்தி நீ கவலைப் பட வேண்டாம். உனக்கு கன் எடுத்துத் தர வேண்டியது என் வேலை” – மறுபடியும் காவல் பேசியது.
“சக்திவேல எப்படி வர வைப்ப?” – அமைச்சர் கேட்டார்.
“அது என்னோட வேலை. நான் பார்த்துப்பேன்”
“உன்னை எப்படி நம்புறது?”
“இந்தக் கேள்விய நானும் கேட்கலாம்ல, நீங்க என்னய நம்பித்தான் ஆகனும்”
அமைச்சர் யோசித்தார். அறையைச் சுற்றிப் பார்த்தார். அங்கே சிசிடிவி கேமரா இல்லை. “நம்ம இங்க வந்துட்டு போனதுக்கான அடையாளம் எதும் இருக்க கூடாது. பார்த்துக்கோ” என்றார் காவலிடம்.
“செக்யூரிட்டி டீம்ல நம்ம ஆளு இருக்கான் சார். சிசிடிவி மெய்ன்டெனன்ஸ் மோட்ல இருக்கு. ரெக்கார்ட் இருக்காது சார்” என்றது காவல்.
‘ம்’- யோசனையுடன் தலையாட்டினார். “இங்க நடந்தத வெளிய சொல்லணும்னு கனவிலயும் நினைச்சிடாத” என்று சயனாவை எச்சரித்தார்.
“டீல் பேசியாச்சுனா கிளம்புங்க” – சயனா தைரியமாகவே தன்னைக் காட்டிக் கொண்டாள்.
அமைச்சரும், காவலும் கிளம்பினார்கள். போகும் போது செக்யூரிட்டியையும் எச்சரித்துவிட்டுத்தான் போனார்கள்.
தனியாக இருந்த சயனா அருகில் கனகா மேம் வந்து அமர்ந்து கொண்டார்.
“சயனா பேசாம ரேவ் சொன்ன மாதிரி கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்”
“அது முடியாதுனு சொன்னேனே மேம். அதோட கம்பளைன்ட் கொடுக்க ஆதாரம் வேணும். யார்ட்ட கம்பளைன்ட் பண்ணுவீங்க? நம்ம ஹையர் ஆபிஸியல்ஸ்? அவங்க சொல்லித்தான இந்த ஹேக்கிங் கேஸ அன்அபிஷியலா பார்த்தோம்”
“சரி அத விடு! ஆனா சக்திய கொல்.. இப்படிப் பண்றதுக்கு எதுக்கு ஒத்துகிட்ட”
“நான் இல்லனா கண்டிப்பா வேற யாரையாவது வச்சி இந்த வேலையைப் பண்ணுவாங்க. நான் இருந்தாதான் சக்திய காப்பாத்த எனக்கு சான்ஸ் இருக்கும். அதான் ஒத்துக்கிட்டேன்” – இதைச் சொல்லுகையில் அவள் குரல் கமறியது.
“கஷ்டமா இருக்கா… சக்திக்கு எதும் ஆயிடும்னு?”
‘இல்லைனு சொல்ல மாட்டேன்’ என்பது போல் ஒரு அமைதி அவளிடம். உள்ளே உடைந்து, குழம்பி, குமுறிக் கொண்டிருந்தாள்.
காதலனும் காதலும் அவளை இப்படிப் பார்த்தால், அவளைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லுவார்கள்.
கனகா மேம்… அவள் கையில் ஆறுதலாகத் தட்டினார். அப்போது ரேவ் அறைக் கதவைத் திறந்து காலைக் காஃபியுடன் உள்ளே வந்தாள்.
இருவரின் முன்னேயும் காஃபி கோப்பைகளை வைத்தவள், எதுவும் சொல்லாமல் சென்றாள்.
“ரேவ், தேங்க்ஸ்” என்றாள் சயனா.
ஆனால் ரேவ் எதுவும் பேசவில்லை. சென்றுவிட்டாள்.
உள்ளே எரிந்து கொண்டிருந்த காதல் கனலை, மேலும் எரியச் செய்யும்படி சூட்டிலிருந்த காஃபியை உறிஞ்சிக் கொண்டாள் சயனா. கண்கள் கலங்கியது.
“சயனா அழனும்னா… அழுதிடு”- அவள் நிலையைப் பார்த்து கனகா சொன்னார்.
“அழலாம் வரல மேம்”
“உன்னைப் பார்த்தா அப்படித் தெரியல”
“விடுங்க மேம். கண்ணீர்தான! இங்கதான இருக்கும். எங்க போயிடப் போகுது”
இனி சீராகச் சிந்திக்க முடியாது!
சிக்கல்களுக்கு ஊடேயே சிந்திக்க வேண்டும்!
காஃபியைக் குடிக்கும் போதே மூளைக்குள் வேலை நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் அவளுக்கு உதவலாம் என்ற வரிசையில் இருப்பவர்கள் மூன்று பேர்தான். அமைச்சரின் துரோகி, அந்த பில்டர், சில பத்திரிக்கைகள்.
ஆனால் இவர்களால் எந்த அளவு உதவ முடியும் என்று தெரியவில்லை.
முதலில் பில்டரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தாள்.
“மேம் ஒரு நிமிஷம்” என்று வெளியே சென்றாள்.
பில்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நூறு சதவீதம் நம்பிக்கை இல்லை.
இருந்தும் கேட்டுப் பார்த்தாள்.
கெஞ்சியும் பார்த்தாள்.
பலன் பூஜ்யம்.
திரும்பவும் உள்ளே வந்துவிட்டாள். முகத்தில் வாட்டம் தெரிந்தது.
“என்னாச்சி சயனா?”
பில்டர் விஷயத்தைச் சொன்னாள். “சாட்சியே சப்போர்ட்டுக்கு ஆள் கேக்குது. என்ன செய்ய சொல்லுங்க?” – அப்படியே நாற்காலியில் அமர்ந்து, பின்னோக்கி தலை சாய்த்துக் கண் மூடிக் கொண்டாள்.
கனகாவிற்கு… சயனா என்ன யோசிக்கிறாள், என்ன செய்யப் போகிறாள் புரியவில்லை. அவருக்கும்… ஏதாவது ஒரு வகையில் அமைச்சரை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அவரும் யோசித்தார்.
வெகுநேரம் யோசித்தார்கள். காலைப் பசி காதை அடைத்தது.
மற்றொரு பக்கம் சிஐடி அலுவலகத்தின் அன்றாடப் பணிகள் தொடங்கின். மற்ற அலுவலர்கள் வர ஆரம்பித்தனர்.
யாருக்கும் நடந்தது தெரியுமா… தெரியாதா… தெரிந்தும் கண்டுக்கலையா – எதுவும் இவர்களுக்கு தெரியவில்லை. பிரச்சனை அமைச்சர்-சயனா-சக்திவேல் என்ற கோட்டில் இருப்பதால், யாரிடமும் இதுபற்றி பேசவும் நினைக்கவில்லை.
திரும்பவும் வந்தாள் ரேவ். “மேம், சாப்பிட வாங்க” என்று அழைத்துப் போனாள்.
“இவ ஏன் மேம் இப்படிப் பண்றா ப்ச்?” – சலிப்படைந்தாள் சயனா.
“நீ திட்டினேல. அதான். நீ வா, வந்து சாப்பிடு”
இருவரும் சாப்பிடப் போனார்கள்.
இட்லி வில்லையை விழுங்கும்போது, வேதனையினால் தொண்டையில் அது விக்கி நின்றது சயனாவிற்கு. இருந்தும் விருவிருவென விழுங்க ஆரம்பித்தாள். பசியோடு இருந்தால் எதையும் யோசிக்க முடியாது அல்லவா.
கனகா மேம், “சயனா, என்ன யோசிக்கிறனு ஒழுங்கா சொல்லு?” என்றார்.
“அமைச்சரோட டார்கெட் சக்திதான். அவர் கோபம் அவன் மேலதான். என்னய வச்சி அந்தக் கோபத்த தீர்த்துக்க பார்க்கிறாரு.
சக்திக்கு எதும் ஆயிடக் கூடாது. அதேநேரம் அமைச்சர் இதுக்கப்புறம் சக்திய, இந்த விசயத்த யோசிக்கவே கூடாது. அதுக்கு என்ன செய்யனு யோசிக்கேன்.
அண்ட் கனலினி மேல போட்ட கேஸ எப்படி ஹேண்டில் பண்ணனு பார்க்கணும்”
கனகா மேம் யோசித்தார். “சயனா எனக்கு ஒரு ஐடியா! டிஜிபிக்கு கால் பண்ணி, கனலினி த்ரெட் (threat) கேஸ்ல ஃபேர் அண்ட் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் வேணும்னு சொல்லி சிஐடி டிபார்ட்மென்ட்க்கு மாத்த சொல்லி கேட்கலாம்”
சயனா முகத்தில் சிறு நம்பிக்கை! “நம்ம இன்சியேட் பண்ண முடியுமா?”
“அவர்கிட்ட இப்படி பண்ணுங்கனு கேட்போம்”
“ஏன்-னு கேட்க மாட்டாரா?”
“கண்டிப்பா கேட்பாரு. இந்த பில்டர் விசயத்த சொல்லலாம்”
“பில்டர் பயப்படுறாரே மேம். அதான் யோசிக்கிறேன்”
“இப்படியே பேசிக்கிட்டு இருக்கிறதுக்கு கேட்டு பார்க்கலாம்” என்றவர், காவல்துறை டிஜிபி பிரபுவிற்கு அழைத்துவிட்டார்.
“குட் மார்னிங் கனகா. என்ன விசயம், காலைலயே கால் பண்ணிருக்கீங்க”
“குட் மார்னிங் பிரபு. ஒரு சின்ன ரெக்வஸ்ட்” என்று கனலினி வழக்கு பற்றிய எல்லா விவரங்களையும் சொன்னார்.
“ஸ்டேஷன்ல, சிபிஐல இன்வெஸ்டிகேஷன் போய்க்கிட்டு இருக்கே, அப்புறம் ஏன் உங்க டிபார்ட்மென்டுக்கு கேஸ ட்ரான்ஸ்பர் பண்ணனும்”
“ஃபேர் இன்வெஸ்டிகேஷன் (fair investigation) வேணும் பிரபு”
“என் டிபார்ட்மென்ட் பத்தி என்கிட்டயே கம்பளைண்ட் பண்றீங்களா… சரி சொல்லுங்க எத வச்சி ஸ்டேஷன்ல தப்பு நடக்குதுனு சொல்லுங்க”
அந்த ‘பில்டர்’ பற்றி கனகா மேம் சொன்னார்.
“அப்ப பில்டர் கூட்டிட்டு இங்க வாங்க. அவர்கிட்ட விசாரணை பண்ணலாம்”
‘பில்டர கூட்டிட்டு வரவா?’ என்று முணுமுணுத்தபடி சயனாவைப் பார்த்தார்.
‘நான் பேசட்டுமா மேம்?’ என்று அனுமதி கேட்டு, அவரிடமிருந்து அலைபேசியை வாங்கி, “சார், நான் சயனா பேசறேன்” என்றாள்.
“நீயும் இதுல இருக்கியா? சொல்லு என்னாச்சு… திடீர்னு ஏன் இப்படி”
“சார் கேஸ இங்க ட்ரான்ஸபர் பண்ணா ஒரு நிரபராதிய காப்பாத்த உதவியா இருக்கும் சார்”
“விட்னெஸ் இருக்குனு சொல்றீங்க, அப்புறம் எதுக்கு இதலாம்”
“இருக்கு சார், ஆனா அது எந்த அளவுக்கு ஸ்ட்ராங்னு தெரில. நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்” என்றாள் உறுதியில்லாமல்.
“ஸ்ட்ராங்கா இல்லாத விட்னஸ் வச்சிக்கிட்டு ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டா எப்படி”
“யாருமே ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொன்னா, நானும் என்னதான் பண்றது” – வெறுமையின் உச்சத்தில் சயனா புலம்பினாள்.
“சயனா! உனக்கு என்னாச்சு? புலம்பற, கான்பிடென்ட்டா பேச மாட்டிக்கிற. உங்க டிபார்ட்மென்ட்ல ஹெல்ப் கேட்காம, என்கிட்ட கேட்கிறீங்க. எதுலயாவது மாட்டியிருக்கீங்களா?” – டிஜிபி அல்லவா? புரிந்து கொண்டார்.
“இல்லனு சொல்ல மாட்டேன். ஆனா அதுக்குமேல எதும் இப்ப சொல்ல முடியாது சார். ப்ளீஸ் சார், நீங்களும் யார்கிட்டயும் எதும் சொல்லிக்க வேணாம். கேஸ் மட்டும் ட்ரான்ஸ்பர் பண்ணித் தாங்க”
“நீ பேசறத பார்த்தா, ஹை ப்ரொபைல் கேஸ் மாதிரி இருக்கும் போல. அதுக்காக நீ கேட்டதும் உடனே ட்ரான்ஸ்பர் பண்ண முடியாது. பட் இந்த மாதிரி ஒரு ரெக்யூஸ்ட் இருக்குனு எடுத்துக்கிறேன். வேற எதும் நான் செய்ய முடியுமா?”
“இப்போதைக்கு இல்ல சார். ஒன்னே ஒன்னு மட்டும் டிபார்ட்மென்ட்ல இதப்பத்தி எதும் கேட்டுக்க வேண்டாம் சார்”
“புரியுது! வச்சிடறேன்” என்று அழைப்பைத் துண்டித்தார்.
கைப்பேசியை கனகா மேம் கைகளில் தந்தாள்.
“நம்ம டிபார்ட்மென்ட் ஹையர் ஆபிசியல்ஸ்தான் அமைச்சருக்கு சப்போர்ட். நீ பிரபுகிட்ட அமைச்சர் பத்தி சொல்லலாமே?” – கனகா மேம்.
“ஹேக் பண்ணது யாருனு கண்டுபிடிச்சது அன்அபிஷியலா நடந்திருக்கு… பில்டர் எந்தளவுக்கு ஸ்ட்ராங்கா இருப்பாருனு எனக்கு தெரியல. அமைச்சர் இங்க வந்து பண்ணதுக்கு, பேசினதுக்கு எவிடென்ஸ் இருக்காது. அப்படி இருக்கிறப்ப எப்படி சொல்ல மேம்”
“சரி இப்ப என்னதான் செய்ய?” – மேம்.
“ம்ம் என்ன செய்ய?” என்று யோசித்தவள், “எனக்கு இந்த அமைச்சர் கூட சுத்துற போலீஸ் மேல செம்ம கோவத்துல இருக்க ஒருத்தர் வேணும்” என்றாள். “அவனை பார்த்தாலே அடிச்சி, துவைச்சி, புரட்டி எடுக்கிற மாதிரி கோவத்துல இருக்கிற ஒரு ஆள் வேணும்”
“அது நீதான்!” என்றார் கனகா மேம்
“விளையாடாதீங்க. நான் என்னைத் தவிர கேட்டேன்”
“அப்ப உன் லவ்வர், சக்திவேல்”
இதைக் கேட்டவுடன் ரேவ் மேசைமீது தட்டினாள்.
கனகா மேம் புரியாமல் பார்த்தார்.
“அவளும் இருக்காளாம் மேம். அத சொல்லலனு கோபம்” – சயனா.
“கோபம்தான்! ஆனா அதுக்காக இல்ல மேம். சக்திய இவ லவ்வர்னு சொன்னால. அதுக்காக!” – ரேவ்.
“நீ இன்னும் இத விடலயா ரேவ்” – சலிப்புடன் கேட்டார் கனகா மேம்.
“மேம், டீவியேட் ஆக வேண்டாம். நான் சொல்ற மாதிரி ஒரு ஆள் வேணும். அந்த ஆள் அந்த போலீஸ்காரன் ஸ்டேஷனலயே இருக்கனும்” – சயனா.
“பீட்டர்!!”- இது ரேவின் குரல்
“என்ன பீட்டர்?” – மேம்.
“பீட்டர்னு ஒருத்தர் அங்க இருப்பாரு. அவருக்கும் இவனுக்கும் ஆகவே ஆகாது”
“பீட்டர் பத்தி உனக்கு எப்படி தெரியும்” – சயனா.
ரேவ் பதில் சொல்லவில்லை.
“மேம்… நீங்க கேளுங்க மேம். எனக்கு பதில் சொல்ல மாட்டா” என்று சயனா சொன்னதும், கனகா மேம் அதே கேள்வியைக் கேட்டார்.
“ஹேக்கர் பத்தி பேப்பர்ல இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணேன்ல? அப்ப நிறைய பேப்பர்ல கனலினி பத்தி தப்பா எழுதினப்ப, சில பேப்பர்ல அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி… அதாவது உண்மைய எழுதிருந்தாங்க”
“ஓ”
“எப்படி இதுனு யோசிச்சேன்? அந்த ஸ்டேஷன்ல யாரோ ஒருத்தர்தான் இத பத்தி சொல்லிருக்கனும். விசாரிச்சப்பதான் தெரிஞ்சது பீட்டர் பத்தி”
“சூப்பர்” – சயனா.
“அப்போ பீட்டர் நமக்கு ஹெல்ப் பண்ணுவாருனு சொல்லு” – மேம்.
“கண்டிப்பா மாட்டாரு!” – உறுதியாகச் சொன்னாள் ரேவ்.
“ஏன்?” – கனகா மேம்.
“ஏன்னா?? அவர் ரொம்ப நியாயவாதி. இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாரு” என்று அறையைவிட்டு வெளியேறினாள் ரேவ்.
“பாருங்க மேம், என்மேல எவ்வளவு கோபம்னு” என்றாள் சயனா பாவமாக.
“அத விடு” என்றவர், “இந்த பீட்டர நாம நம்பலாமா?” என்றார் .
“நம்பித்தான் ஆகனும். வேற ஆப்ஷன் இல்ல. அவரை போய் பார்க்கலாம் மேம், ஆனா இப்ப வேண்டாம். நைட்டுல போகலாம்”
“ம்ம், உன் ப்ளான் என்னனு சொல்ல மாட்டிக்கிற. அட் லீஸ்ட் சக்திவேல எப்படி வரவைக்கப் போறனாவது சொல்வியா?” என்றார்.
‘சத்தியமா தெரியல மேம்’ என்பது போல் தலையசைத்து, மேசை மேல் தலை சாய்த்துக் கொண்டாள்.
காவலர் பீட்டர் வீடு! இரவு நேரம்!
நன்றாக இரவு நேரமாக இருந்தது. சயனா, கனகா மேம் இருவரும் பீட்டர் முன் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களைப் பற்றிய விவரங்கள் சொன்னாள். கனலினி வழக்கு விவரங்கள் சொல்லிவிட்டு, “அந்த போலீஸ் மேல உங்களுக்கு எதுக்கு இவ்வளவு வெறுப்பு வந்தது” என்றாள் சயனா.
“உங்களுக்கு ஏன் அந்த ஆள் மேல இவ்ளோ கோபம்” என்றார் பீட்டர்.
“மோசமான ஆளு… அதான்”
“அதேதான் எனக்கும். அநியாயமா நடந்துப்பான்… ரொம்பவே!”
“அந்த போலீஸ் மேல இருக்க கோபத்திலதான், கனலினி மேம் கேஸ்ல உண்மை எதுனு சில நியூஸ் பேப்பருக்கு நியூஸ் கொடுத்தீங்க” – சயனா.
“இல்ல… இல்ல. நான் அவங்க கேஸ்ல மட்டும் அப்படி பண்ணல. அங்க வர பொய் கேஸ் எல்லாத்துக்கும் அப்படித்தான் நியூஸ் கொடுத்திருக்கேன். ஆனா பெருசா எதுவும் உதவல… எல்லாம் சின்ன பத்திரிகை-ங்கிறதால.
ஆனா இந்த கேஸ் மனச கொஞ்சம் பாதிச்சிருச்சி என்னவோ உண்மை. அந்த அம்மா பையன் ஸ்டேஷன் வந்து அவ்ளோ கெஞ்சிருக்கான். அத பார்க்கிறப்ப எல்லாம் பாவமா இருக்கும்.
அந்தப் பையனுக்கு அவன் அம்மா மேல ரொம்ப பாசம்னு கூட நின்ன ப்ரண்ட்ஸ் சொன்னாங்க. ஏன் அம்மாமேல இப்படி ஒரு கேஸ்னு புரியாம… கஸ்டடில என்ன நடக்குதுனும் தெரியாம எப்படித் தவிச்சிருக்கும் அந்த பையன்”
சட்டென்று சகலமும் சங்கடமாக இருந்தது சயனாவிற்கு. “ஒரு நிமிஷம்” என்று ஓரமாக ஒதுங்கி கொண்டாள். அவளுக்கு அவளைச் சாதாரணமாக காட்டிக் கொள்ள முடியவில்லை
ஒருவனது காயங்கள், தன்னுள் ஏன் இத்தனை நேயங்களைக் கொடுத்தது என்று புரியவில்லை… ஒரு ஆழ்மூச்செடுத்து தன் உணர்வுகளை, துடிப்புக்களை ஆழக் குழி தோண்டி புதைத்தாள்!!
மீண்டும் பீட்டர் முன் வந்து, “எனக்கு உங்க ஹெல்ப் வேணும்” என்றாள்.
“என்னால என்ன ஹெல்ப் பண்ண முடியும். அதும் உங்களுக்கு?”
“கனலினி மேடத்துக்கு நியாயம் கிடைக்கனும். அதுக்காக உங்க உதவி வேணும்”
“நியாயத்துக்காகனு சொல்றீங்க. நான் ஏதாவது செய்ய முடியும்னா, நிச்சயமா செய்றேன்” – பீட்டர்.
“நீங்க மட்டும்தான் செய்யறதுக்கு இருக்கீங்க” – உணர்ச்சிவசப்பட்டாள் சயனா.
“அதான் பண்றேன்னு சொல்றாரு-ல, ப்ளான் சொல்லு சயனா” – கனகா மேம்.
“உங்களுக்கு ஆட்டோ ஓட்டத் தெரியுமா?” – சயனா பீட்டரிடம் கேட்டாள்.
“ரொம்ப நல்லா தெரியாது. ஆனா ஓட்டிருவேன்”
“சரி. நான் சொல்ற இடத்துக்கு நாளைக்கு ஒரு ஆட்டோ எடுத்துட்டு வரனும். எந்த ஏரியான்னு நாளைக்கு உங்களுக்கு ஃபோன்ல சொல்றேன்.
ஆட்டோ புதுசா இருக்க வேணாம். வெளிய பார்க்கிறப்ப ஓடாத கண்டிஷன்ல இருக்கிற மாதிரி தெரியனும். ஆனா ஒர்க்கிங் கண்டிஷன்ல இருக்கனும். நீங்க ஆட்டோக்குள்ளயே மறஞ்சி இருங்க. அப்பத்தான் யாருக்கும் தெரியாது”
‘என்ன இவள் திட்டம்?’ என்று பார்த்துக் கொண்டிருந்த கனகா மேம், “யாரு சயனா” என்றார்.
“யாரு?” – பீட்டரும் கேட்டார்.
“தெரியல… நிஜமா தெரியல”
சிறு அமைதிக்குப் பின், “சரி… நீங்க மேல சொல்லுங்க” என்றார் பீட்டர்.
“ஏதாவது ஒரு சத்தம் கேட்டவுடனே நீங்க வரனும். அந்த மாதிரி ஒரு மைன்டல இருந்துக்கோங்க. பீல்டுல நாம ரெண்டு பேரும் மட்டும்தான் இருப்போம். இப்ப வரைக்கும் இவ்வளவுதான் பிளான்”
“சரி”
“உங்க ஸ்டேஷன்ல யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்”
“அதெப்படி சொல்வேன்? எப்படியோ ஒருத்தருக்காவது நியாயம் கிடைச்சா சரி!”
“ம் நாங்க கிளம்பறோம்” என்று கிளம்பினாள். சற்று தூரம் போய்விட்டு, திரும்ப பீட்டர் நிற்கும் இடத்திற்கு வந்தாள். “ஒன்னு கேட்கனும்” என்று தலையைச் சொறிந்து கொண்டு நின்றாள்.
“என்னனு சொல்லுங்க?”
“நீங்க பொய் சொல்வீங்களா?” – உண்மையிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டாள்.
அவர் யோசித்தார்.
இதற்கிடையில் கிளப்பியிருந்த கனகா மேமும் வந்து சேர்ந்து கொண்டார்.
“எத்தனை பொய் சொல்லனும்?” – உண்மையே இந்தக் கேள்வி கேட்டது.
“ஒன்னு ரெண்டுதான் சொல்லனும்”
கொஞ்சம் யோசித்தார். பின், “ட்ரை பண்றேன்” என்றார். “ஒன்னு ரெண்டு ஓகே. அதுக்கு மேல முடியாது. ஆனா அதுவும் யாரையும் பாதிக்க கூடாது” என்று அவர் அறத்தைச் சொன்னார்.
“ம்ம் தேங்க்ஸ்” என்று விடைபெற்றாள் சயனா.
கனகா மேம், சயனா… இருவரும் அவர்களது வாகனங்கள் இருக்கும் இடத்திற்கு நடந்து வந்தனர்.
“ஸாரி மேம், ரேவ் இல்லாததால… நீங்க பீல்டுக்கு…”
“அதவிடு சயனா, உன் பிளான்தான் என்ன? பீட்டர் எதுக்கு இதுல? அவர்கிட்ட என்னெல்லாமோ சொல்ற? எனக்குப் புரியல?”
“தெரியல மேம்”
“உனக்கு தெரியும்! பட் சொல்ல மாட்டிக்கிற. என்னய இதுக்குள்ள கொண்டு வர வேண்டாம்னு நினைக்கிற. உனக்கு எதுவும் ஆயிருமோனு நான் பயப்படறேன்”
“ச்சே ச்சே… அப்படி பயப்படாதீங்க”
“இது இப்போ வந்த பயம் இல்ல. இந்த கேஸ் ஸ்டார்ட் ஆகிறப்ப வந்தது”
“நீங்க கிளம்புங்க. நாளைக்கும் சில டீடெய்ல்ஸ் கலைக்ட் பண்ணனும். நானும் கிளம்புறேன். பை… குட் நைட்” என்று விடை சொல்லாமல் நழுவிச் சென்றாள் சயனா.
நல்ல இருளான இரவாகிப் போன சாலையில் என்பீல்ட் பொதுவான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.
சற்றென்று சயனா இதயமும், என்பீல்டின் இன்ஜினும் இரும ஆரம்பித்தன.
வாகனத்தின் பொதுவான வேகம் மிதமான வேகத்திற்கு மாற்றப்பட்டது.
காதலி என்பீல்டின் அருகில் காதலன் ராயல் வந்து சேர்ந்து கொண்டது.
சக்திவேல் – சயனாவின் காதலன்!
தற்போது இரு வாகனமும் இதமான வேகத்தில்…
அண்டத்தின் உள்ளே…
ஆகாசத்தின் கீழே…
அஞ்சன இரவின் பிடியிலே…
தார் சாலையின் தனிமையிலே…
தலைக்கவசத்தின் உள்ளே காதல் முகங்கள்!
தலைக்கவசத்தைத் தாண்டி அங்கே காதல் தெரிந்தது!
இருவருக்கிடையே காதல் விபத்து நடந்தது!
இரு இதயங்களும் அடிபட்டுக் கொண்டன!
காதலி, காதலின் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும், காதலனைக் கிறுக்குப் பிடிக்க வைத்தாள்.
திடீரென்று காதலி என்பீல்ட் வேகம் எடுத்துக் கொண்டு முன்னேறிச் சென்றது. அந்தச் சாலையின் முனைக்குச் சென்றதும், அதே வேகத்தில் அரைவட்டமடித்து திரும்பிக் கொண்டு காதலன் என்பீல்ட் எதிரே வந்து நின்றது.
காதலன் காதலி எதிரெதிரே! காதல் நடுவே!!
சிறிது காதல் இளைப்பாறல்கள்!!
ஆக்ஸிலேட்டரை உறுமச் செய்தது காதலி என்பீல்ட்.
அச்சுப்பிசறாமல் அதே சுருதியில் உறுமிக் காட்டியது காதலன் என்பீல்ட்.
இது காதல் கச்சேரி!!
ஒலி வடிவக் காதலுடன், ஒளி வடிவக் காதல் சேர்ந்தது!
அதாவது காதலன், காதலி என்பீல்டின் முன் விளக்குகள் எரிந்து, அணைந்து, மீண்டும் எரிந்து அணைந்து… வெளிச்சக் காதல் பேசின.
இது காதல் ஒலியும் ஒளியும்!!
இப்போது கச்சேரியில் சுருதி கூட்டிட… என்பீல்டின் ஒலிப்பான்கள் ஒலித்தன.
ஆக மொத்தத்தில் சாலை முழுவதும் காதல் ஆராரோக்கள்! ரசித்தான் காதலன்! சிரித்தாள் காதலி!
இவையாவும் காதலர்களின் சிறுபிள்ளைத்தனங்கள்!!
“உங்களுக்கு வேற வேலையே இல்லையா? தூங்கிற நேரத்துல வந்து உயிர வாங்கிக்கிட்டு… ச்சே” – இப்படி இன்னும் இன்னும் சாலையோர சாமானியனின் குரல்கள் கேட்டன.
உடனே இரு என்பீல்டும் கிளைச் சாலையை விட்டுவிட்டு… முக்கியச் சாலைக்கு வந்தன!
காதலி என்பீல்ட் முன்னே!
காதலன் என்பீல்ட் பின்னே!
காதலன் பின் தொடர்கிறானா எனப் பார்த்துக் கொண்டே காதலி சென்றாள்.
அடிக்கடி திரும்பிப் பார்த்தாள். அதன் விளைவு… எதிரே வந்த வண்டியின் மேல் இடித்து நின்றது காதலி என்பீல்ட்.
முதன் முதலாக சயனா என்பீல்ட் தடுமாறியது!
“சயனா பார்த்து…” – பதறினான் சக்தி.
“ஏய்! என்ன பார்த்து வரமாட்ட… எவ்ளோ பெரிய ரோடு. இதுலயே வண்டி மேல வந்து இடிச்சிக்கிட்டு நிக்கிற” – எதிரே வந்த வண்டியில் இருந்தவர் கத்தினார்.
“ஸாரி அண்ணே… ஸாரி அண்ணே மன்னிச்சிக்கோ”
சில திட்டல்கள் அந்த ஆளிடமிருந்து.
பல மன்னிப்புகள் சயனாவிடமிருந்து.
சக்தி, தன்னால் சயனா தடுமாறித் தடம்புரள்கிறாள் என்று கிளம்பினான்.
திரும்பிப் பார்த்தாள் சயனா!
சக்தி சற்றே தூரமாகப் போய்க் கொண்டிருந்தான்.
கண்களில் ஒருவித காதல் கோபம் கொண்டு, “சக்தி.. சக்தி” என்று கழுத்து நரம்புகள் புடைக்கக் கத்தியபடி இரு கால்கள் ஊன்றி எழுந்து நின்றாள் சயனா.
உள்ளுக்குள் சாகாத காதல் ஆசைகள் இருக்குதடி, ‘சகியே சயனா’. அதனை நான் உணர்த்திட, நீ உணர்ந்திட… இதுவல்ல தருணம்.
எண்ணங்கள் இப்படி இருக்க, சரெலென சக்தியின் என்பீல்ட் அரைவட்டமடித்து திரும்பி நின்றது. இந்தமுறையும் அவளைத் தவிக்க விட்டுச் செல்ல அவனால் முடியவில்லை.
என்பீல்டிலிருந்து இறங்காமலே இரு கால்களையும் ஊன்றி எழுந்து நின்றான்.
சயனா அவனையே பார்த்தாள்!!
சாலை விளக்கொளியின் அடியில், மிகப் பெரிய இடைவெளியில் காதலர்கள் நின்றார்கள்.
சக்தி பரிதவித்தான்! இரு உள்ளங்கையை, தன் இதழ் மேல் ஒற்றி எடுத்து, சயனாவை நோக்கி நீட்டினான்.
தூரத்து முத்தம்!
தலைக்கவசம் தாண்டி அவன் காதல் தெரிந்தது!
சற்றுநேரம் இது நீடித்தது.
அதன்பின் போய்விட்டான் சக்தி.
போதவில்லை சயனாவிற்கு.
கோபத்தோடு வீட்டிற்கு வந்தாள் சயனா. யாரிடமாவது பேசவேண்டும் என்று தோன்றியது. முதல் முதலாகக் காதல் கிரகத்திற்கு சயனா அழைப்பு விடுத்தாள்.
“ஹலோ” – சயனா.
“ஹேய் ட்டேபீ, என்ன சொல்லிட்டு நீ ஃபோன் பண்ணிருக்க. என்கூட பேசாம இருக்க முடியலையா?” – காதலின் மொத்தக் கொஞ்சல்கள் குரலில் தெரிந்தது.
“ப்ச். அப்படிலாம் இல்ல”
“முதல்ல இத சொல்லிக்கிறேன். டோன்ட் மிஸ்அன்டர்ஸ்டன்ட் மீ” என்றவன், “ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ மை டியர் ட்டேபீ ” என்றான்.
“ம்ம்ம்”
“என்ன டல்லா இருக்க?? அந்த ஹேக்கரா?”
“எப்படிக் கண்டுபிடிச்ச?”
“இன்னைய தேதிக்கு உன் கேஸவிட பெரிய பிராப்ளம் ஒன்னு இருக்குதுனா, அது அவன்தான்”
அவள் சிரிப்பாள் என நினைத்து காதல் சொல்லியது.
“சிரிக்ககூட முடியலயே கூஃபி?” என்றாள் அவள்.
“ஏம்மா? என்னாச்சி சயனா?”
“கூஃபி, கிளம்பி இங்க வர்றியா? எனக்கு நீ என் பக்கத்தில உட்கார்ந்து என்கிட்ட பேசனும்னு தோனுது” என்றாள் சயனா.
