Kathambari Novels
அத்தியாயம் – 11
மானிக்டாலா பகுதி!
காலை உணவை அரவிந்த் சமைத்துக் கொண்டிருந்தான். சமையலில் கவனம் ஓரளவிற்குத்தான் இருந்தது. அடிக்கடி கவனம் கலைந்து கண் அலைபேசி தொடுதிரையைத் தொட்டுவிட்டு வந்தன.
பூஜாவிடமிருந்து அழைப்பை அவன் மனம் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தது.
‘தனியாக என்ன செய்வாள்?’ என்று யோசித்தபடி இவன் நிற்க, உள்ளே வந்த வாணி, ‘என்னாச்சு இவனுக்கு?’ என்று அடுப்பிலிருந்த காய்கறிகளைக் கிண்டிவிட்டாள்.
அக்கா வந்ததை உணர்ந்து, “விடு, நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“ஏன் இப்படி இருக்க அரவிந்த்?”
“ஒன்னுமில்ல” என்றான்.
அவன் முகம் பார்த்தாள். வாட்டமாக இருந்தது. பூஜா பற்றி யோசிக்கிறானோ என்று தோன்ற, “நேத்து நடந்ததை நினைச்சி இப்படி இருக்கிறியா?” என்றாள்.
சில வினாடிகள் அமைதியாக நின்றான். பின்பு, “சொல்ல மறந்துட்டேன் க்கா. இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு. வர்றதுக்கு லேட்டாகும்” என்று ஏதோ சொன்னான்.
“சரி” என்று மட்டும் சொன்னாள். வேறேதும் கேட்கவில்லை. அவன் நிதானமாக யோசிக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.
சமையல் முடித்தவன், குளித்து, சாப்பிட்டு காவல் நிலையம் சென்றுவிட்டான்.
மானிக்டாலா காவல் நிலையம்!
ஜீப்பில் வந்து இறங்கியதும் அரவிந்தின் கண்கள், பூஜா வந்திருக்கிறாளா? என்றுதான் தேடின. இல்லை என்றதும், ‘ப்ச், நான் கோபமா பேசிட்டு வந்தா, இவ திரும்ப வந்து பேச மாட்டாளா?’ என்று அவள் பேசியதை மறந்து எரிச்சல்பட்டுக் கொண்டு வேகமாக உள்ளே போய்விட்டான்.
என்ன நினைத்தானோ போன வேகத்தில் வெளியே வந்து, தப்பானிடம் ‘பூஜா வந்தாளா?’ என்று கேட்டான். அவர் இல்லை என்றதும், ஒருசிறு ஏமாற்றம் வந்துவிட, கடகடவென உள்ளே சென்று, ‘அழைத்திருக்கிறாளா!?’ என்று அலைபேசியைப் பார்த்தான்.
அழைப்பு ஏதும் இல்லை!
‘ஃபோன் பண்ணிடாதனு நான்தான கோபப்பட்டேன். அப்படினா நான்தான முதல அவகிட்ட பேசணும்’ என்று தோன்ற ஆரம்பித்தது. கூடவே அப்படி என்ன அவளிடம் பேசியே ஆக வேண்டிய அவசியம் என்ற கேள்வியும் தோன்றியது!
கடைசியில் பூஜா பற்றிய எண்ணங்களை ஓரமாக வைத்துவிட்டு, பிரச்சனை பற்றிப் பார்க்கலாமென நினைத்தான். முதலில் இது தனிப்பட்ட விரோதமா? வங்கி சார்ந்த பிரச்சனையா? என்று பார்க்க வேண்டுமென நினைத்தான்.
ஒரு காவலரை அழைத்து, ‘மத்த ஸ்டேஷன்ல, பேங்க் ரிலேட்டட் கேஸ் ரீசென்ட்டா என்னெல்லாம் ரெஜிஸ்டர் ஆகியிருக்குனு பார்த்துச் சொல்லுங்க” என்று பெங்காலியில் கூறிவிட்டு, தன் வேலைகளைக் கவனிக்கலானான்.
வெகு நேரத்திற்குப் பின், அந்தக் காவலர் வந்து அவன் கேட்டிருந்த விவரங்களைத் தந்துவிட்டுச் சென்றார். அதைப் பார்த்தான். சமீப நாட்களாக சில வங்கிகளின் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து மொத்தமாக பணம் காணாமல் போயிருப்பதாக புகார்கள் வந்திருந்தன.
அதாவது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பட்டிருக்கிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் இதை செய்யவில்லை. அதனாலதான் புகார்கள் தரப்பட்டுள்ளன.
‘கஸ்டமர் அக்கௌன்ட் நம்பர்லருந்து எந்த அக்கௌன்ட்-கு மணி ட்ரான்ஸ்பர் ஆகியிருக்குனு பார்த்து, அந்த அக்கௌன்ட் நம்பர் யார் பேர்ல இருக்குன்னு கண்டுபிடிக்கலாமே’ என்று தோன்றியது. மோசடி செய்வது யாரென இன்னும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? என்று யோசித்தான்.
விவரம் பெற வேண்டி, தனக்கு அறிமுகம் உள்ள காவலர்கள் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்துப் பேசினான்.
எந்த வங்கி கணக்கு எண்ணிற்கு பணம் பரிமாற்றப்பட்டதோ, அதை வைத்து இதுபோல் மோசடி செய்வது யாரென்று கண்டுபிடித்திட முயற்சித்தார்களாம். ஆனால் மோசடி நபர் சிந்தெட்டிக் ஐடென்டிட்டி [Synthetic Identity] பயன்படுத்தி வங்கிக் கணக்கு தொடங்கியிருப்பதாக சொன்னார்கள்.
அதாவது போலி மற்றும் உண்மையான விவரங்கள் வைத்து வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. வாடிக்கையாளர் பெயர் மட்டுமே உண்மையாக இருக்கலாம்… அடையாள சான்று மற்றும் முகவரி ஆதாரம் போலிதான் என்று சொன்னார்கள்.
முக்கியமாக இதற்கு அடையாள சான்றாக குழந்தைகளின் ஆதார் எண்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும்… இந்த மோசடி செயலில் ஈடுபடுபவன் வங்கிக் கணக்கை, வங்கியில் கூறி முடக்குவதற்கு முன்னே அதிலிருக்கும் பணத்தை எடுத்துவிடுவதாகவும், நிறைய வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.
இவ்வளவு விவரங்கள் கிடைத்தபின், ‘நன்றி’ கூறி அழைப்பைத் துண்டித்தான். இன்னொரு காவல்நிலையத்தில் கேட்டுக் கொண்டான். அங்கேயும் இதையே சொன்னார்கள்.
இதுபோல் சேகரன் வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து பணம் பறி போயிருக்குமோ என்ற கேள்வி வந்தது. ஆனால் விசாரித்ததில் வங்கியில் ஏதும் பிரச்சனை இல்லை என்று சவுரவ் சொன்னாரே என்ற பதிலும் இருந்தது.
தனிப்பட்ட பிரச்சனை இல்லாமல், வங்கி சம்பந்த பிரச்சனை என்றால் பூஜாவை ஏன் கண்காணிக்க வேண்டும் என்ற அடுத்த கேள்வி வந்தது. ஆனால் அதற்குப் பதிலில்லை. யோசித்துக் கொண்டேயிருந்தான்.
அச்சமயம் ஒருவன் வந்து, ‘சாப் ச்சா’ என்று களிமண் குவளையில் தேநீர் வைத்துவிட்டுப் போனான். அதைப் பார்த்ததும் பூஜாவின் ஞாபகம் வந்தது. இருவரும் சேர்ந்து டீ குடித்த, சாப்பிட சென்ற, பைக்கில் போன தருணங்கள் எல்லாம் வரிசையாக கண்முன் வந்து நின்றன.
‘என்னதான் செய்றா? ஃபோன் பண்ண மாட்டாளா? பேசாம நானே ஃபோன் பண்ணிடவா?’ என்ற நிலைக்கு வந்திருந்தான். ‘ச்சே… பிரச்சனை பற்றி யோசிக்காமல் நான் ஏன் அவளைப் பற்றி இவ்வளவு முறை யோசிக்கிறேன்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.
‘இந்தப் பிரச்சனைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்!? அதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறாய்?! ஒருவேளை எனக்காகத்தான?’ என்று பூஜா அவன் இதயத்தின் ஒவ்வொரு அறை வாசலில் நின்று கேட்பது போலிருந்தது.
தலையை உலுக்கிக் கொண்டு, வலுக்கட்டாயமாக அவள் ஞாபகத்திலிருந்து மீண்டு வந்தான். முதலில் அவளைக் கண்காணித்த இரண்டு பேரைப் பிடிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய என்று யோசித்தான்.
*************
காளிகாட் காவல் நிலையம்!
மூன்றாவதாக கொலை செய்யப்பட்ட பிரணாப் வீட்டு பால்கனி சுவர் மற்றும் பின்பக்க பைப்புகளில் ஒரு கைரேகை கண்டுபிடிக்கப்பட்டு, அது தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கப்பட்டிருந்தது. அது சேகரன் கைரேகையுடன் ஒத்துப் போகவில்லை.
அன்று சவுரவ் கேட்டிருந்த ஆய்வு முடிவு இன்று வந்திருந்தன. அதைப் பார்க்கையில்… கொலை நடந்தபோது சேகரன், பிரணாப் தவிர வேறு யாரோ ஒருவன் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. சவுரவிற்கு, அந்த ஒருவன் பிரணாப்பை சுட்டிருக்கலாமே என்ற சந்தேகமும் வந்திருந்தது.
‘அது யாராக இருக்கும்?’ என்று சவுரவ் யோசித்தார்.
சற்று நேர யோசிப்புக்குப் பின் லாக்அப் எண் இரண்டிற்குச் சென்றார். ‘என்ன கேட்க வந்திருக்கிறார்??’ என்பது போல் சேகரன் பார்த்தார்.
‘உங்களுக்கு சாதகமாக ஒரு எவிடென்ஸ் கிடைச்சிருக்கு. இப்பவாது பேசுங்க. இல்ல இப்படித்தான் இருப்பேனா… நீங்க இங்கயேதான் இருக்க வேண்டியதா இருக்கும்’ என்று பெங்காலியில் ஆரம்பித்தார்.
கண்களில் சிறு நம்பிக்கையுடன் சேகரன்… சவுரவைப் பார்த்தார்.
உடனே, “கார் ரிப்பேர் பண்ண நீங்க கொடுத்திருந்தீங்களா… அப்படினா எந்த ஷாப்ல கொடுத்தீங்க… அது எங்க இருக்கு?” என்று கேட்டார்.
சேகரன் பதில் சொல்லவும், “எப்ப நீங்க கொடுத்தீங்க? அவங்க எப்ப திருப்பிக் கொடுத்தாங்க?” என்று அடுத்த கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் சொன்னார் சேகரன்.
‘நிர்மல் கொலை நடக்கிறதுக்கு முந்தின நாள் கொடுத்திருக்கீங்க. நாலு நாளாகும்னு சொல்லிட்டு, பிரணாப் கொலை நடந்த முந்தின நாள் லேட் நைட்ல… ரிப்பேர் பண்ணிட்டோம்னு வந்து கார விட்டுட்டுப் போயிருக்காங்க’ என்று தனக்குள் சொல்லிப் பார்த்துவிட்டு, போகப் போனார்.
அக்கணம் சேகரன், “சார் என் பொண்ணு… பூஜா” என்றார் பயந்த குரலில்.
“அவ இன்னைக்கு ஸ்டேஷன் பக்கம் வரலை. கோர்ட்க்கும் போயிருக்க மாட்டா. ஏன்னா, அப்படி போயிருந்தா குணால் எனக்கு ஃபோன் பண்ணிருப்பாரு. வீட்லதான் இருப்பா… நீங்க பயப்படாம இருங்க” என்று கடகடவென சொல்லிவிட்டு, அவர் அறைக்கு வந்தார்.
இரண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் கொலை பற்றி சவுரவ் யோசித்தார். இவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் சேகரன் கார் நின்றிருந்தது. சேகரன் சொல்வதை வைத்துப் பார்த்தால்… ரிப்பேர் செய்யும் ஷாப்பிலிருந்து யாரோ ஒருவன் காரை எடுத்து வந்து, நிர்மலையும், அவனது நண்பனையும் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்.
பிரணாப்பை கொலை செய்ததும் துப்பாக்கியை சேகரன் காரில் வைக்க வேண்டுமென்பதற்காக, சொன்ன நாளுக்கு முன்பாக ரிப்பேர் செய்து காரை கொடுத்திருக்கின்றனர்.
அப்படி என்றால் ரிப்பேர் ஷாப்பிலுள்ள ஆட்களை விசாரித்தால், இந்த மூன்று கொலைகள் செய்தது யாரென்ற உண்மை வெளிவந்துவிடும். உடனே துணை ஆய்வாளரை கூப்பிட்டு, அவர்களை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
கூடவே இன்னொரு காவலரை அழைத்து பிரணாப் அபார்ட்மென்டின் பின்புற பகுதி வழி யாரவது வந்து போனார்களா என்று அந்தச் சாலையில் இருக்கும் கடைகளில் விசாரிக்கும்படி உத்தரவிட்டார். அப்படியே சிசிடிவி கேமராக்கள் இருந்தால் அதிலும் பார்க்கும்படி கூறி அனுப்பினார்.
இருக்கையில் வந்தமர்ந்த சவுரவ், விசாரணையின் போது இந்த வழக்கு திசை திருப்பட்டிருக்கிறது. ‘அது எங்கெல்லாம்?’ என்று யோசித்தார்.
**********
காளிகாட் பகுதி வங்கி!
பூஜா அப்படிச் கேட்டதும், “என்ன நீ சொல்ற… எனக்குப் புரியல?” என்று ரித்திகா ஆங்கிலத்தில் கேட்டார்.
“மேம், என் அப்பாகிட்ட நேத்து நான் பேசினேன். உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்கன்னு கேட்டேன். அப்ப அவரை அறியாமலே ஒரு இடத்தில ‘நாங்க’ அப்படினு யூஸ் பண்ணாரு. அதனாலதான் கேட்கிறேன், ப்ளீஸ் உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்க”
“அந்த ‘நாங்க’ நானாதான் இருக்கணும்னு என்ன அவசியம்… பிரணாப், நிர்மல் கூட இருக்கலாம்ல?”
“அவங்களும் இருக்கலாம்… தெரியல. ஆனா இப்போகூட பாருங்க, கொலை செய்யப்பட்டது மூணு பேர். நீங்க… உங்க பேங்க்ல அக்கௌன்ட் இருக்கிற ரெண்டு பசங்க பேர்தான் சொல்றீங்க. இதுலருந்தே தெரியுது மேம்… அந்த ‘நாங்க’ல நீங்களும் உண்டுனு.
இன்னொன்னு… பிரணாப் மர்டர் நடந்த அன்னைக்கு, அப்பா எனக்கு கால் பண்ணதுக்கு அடுத்து… ரொம்ப நேரம் கழிச்சி… மே பி பிரணாப் வீட்டுக்குப் போய்ட்டு வந்தப்புறமா இருக்கலாம், உங்களுக்குத்தான் ஃபோன் பண்ணி பேசிருக்காங்க. அதான் மேம் கேட்கிறேன், ப்ளீஸ் தெரிஞ்சதை சொல்லுங்க”
அவர் அமைதியாக இருந்தார்.
“அன்னைக்கு வீட்டுக்கு வர்றப்பவே அப்பா டென்சனா இருந்தாங்க. அப்படினா ஆபிஸ்ல அதவிட டென்சனா இருந்திருப்பாங்க. அப்படி இருந்தப்பவும் உங்ககிட்ட பேசியிருக்காங்கனா அது எதும் முக்கியமானதாதான் இருக்கும். மறைக்காம சொல்லுங்க மேம், ப்ளீஸ்… ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
“மறைக்காம என்னய சொல்ல சொல்ற!? எனக்குத் தெரிஞ்ச விஷயம் உங்க அப்பாக்கும் தெரியும்ல? அவர் எதுக்கு மறைக்கிறாருனு சொல்லு?” என்று ரித்திகா வாய்திறந்தார்.
“என் அப்பா… பயப்படறாரு மேம்” என்று இயலாமையுடன் சொல்லவும், “உன் அப்பாக்கு மட்டும்தான் பயம் இருக்குமா? எனக்கு இருக்காதா? நான் பயப்பட மாட்டேனா?” என்று அவரும் இயலாமையுடன் கேட்டார்.
“யாருக்கு பயப்படறீங்க? உண்மை தெரிஞ்சவங்க இப்படி பயந்து அமைதியா இருந்தா எப்படி?” என்றபோது கண்ணீர் துளி துளிர்த்ததும், “பூஜா ரிலாக்ஸ். டீ கொண்டு வர சொல்லவா?” என்று கேட்க, “எனக்கு… டீடெயில்ஸ் சொல்லுங்க. போதும்” என்றாள்.
அதன்பின்னும் ரித்திகா பேசாமல் இருக்கவும், “எனக்கென்னமோ இங்கதான் ஏதோ ப்ராபளம்னு தோணுது. கெஞ்சிக் கேட்கிறேன் சொல்லுங்க” என்றாள்.
“இங்கதான் பிரச்சனை. ஆனா எங்களால இல்லை. அதேமாதிரி யாராலனும் தெரியாது. என்ன பிரச்சனைனு மட்டும் தெரியும்”
கண்ணீர் துளியை துடைத்துவிட்டு, “என்ன பிரச்சனை?” என்றாள்.
“கொலை செய்யப்பட்ட மெக்கானிக்கல் என்ஜினீயர் நிர்மல்… ஐடி எம்பிளாய் பிரணாப் ரெண்டு பேருக்கும் எங்களோட பேங்க்ல அக்கௌன்ட் இருக்கு. இந்த ரெண்டு பேருமே ஒருநாள் அவங்க அக்கௌன்ட் பத்தி கம்ப்ளைன்ட் கொண்டு வந்தாங்க”
“ரெண்டு பேரும் ஒரே நாள்லயா?”
“இல்லை. வேற வேற நாள். பட் கம்ப்ளைன்ட் ஒன்னுதான்”
“என்ன கம்ப்ளைன்ட்?”
“அவங்க அக்கௌன்ட்லருந்து வேறொரு அக்கௌன்ட் நம்பருக்கு அமௌன்ட் ட்ரான்ஸ்பர் ஆகியிருக்குனு சொன்னாங்க. பட் அந்த டிரான்ஸ்பர் அவங்க பண்ணலை. அதாவது அன்ஆத்தரைஸ்டு டிரான்சாக்ஷென்.
பேங்க் ஸைட்லருந்து செக் பண்ணிட்டு என்னென்னு சொல்றோம்னு சொல்லி அன்னைக்கு அனுப்பிட்டோம். பட் அக்கௌன்ட்ட ப்ரொடெக்ட் பண்ண என்ன பண்ணணுமோ அதையும் பண்ணோம்.
பட் அடுத்த நாளே இந்த ரெண்டு பசங்களும் வந்து எங்களுக்கு மணி ரீஃபன்ட் வேணும்னு கேட்டாங்க. அதை செட்டில் பண்ணலைனா… பேங்க் இன்டெர்னல் ஓம்பட்ஸ்மேன்கிட்ட [ombudsman] கம்ப்ளைன்ட் செய்வோம்னு சொன்னாங்க”
“அச்சோ கம்ப்ளைன்ட்டா!?”
“அது யூஸ்வெல். அதவிடு. இப்போ இந்தமாதிரி பணம் போய் மூணு நாள்ல பேங்க்ல வந்து சொல்லிட்டாங்கனா… பேங்க் ரீஃபன்ட் பண்ணனும்.
ஆனா அதுக்கு முன்னாடி சிலது செக் பண்ணனும். அவங்க பின் நம்பர், ஓடிபி, அக்கௌன்ட் ரிலேட்டட் இன்ஃபார்மேஷனை… யார்கிட்டயும், எங்கயும் ஷேர் பண்ணிருக்காங்களானு பார்க்கணும்.
அப்படிப் பண்ணிருந்தா ரீஃபன்ட் கொடுக்க முடியாது. ஏன்னா அது பேங்க் சைடு மிஸ்டேக் கிடையாது. இத பார்க்கிறதுக்கு தனியா பேங்க் எம்பிளாய் இருந்தாலுமே, நாங்களும் ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்கிட்டோம். கஸ்டமர் சேவிங்ஸ்க்கு நாங்கதான பொறுப்பு?
ஒவ்வொரு ரூபாயுமே கஷ்டப்பட்டு உழைச்சி சம்பாதிச்சு இருப்பாங்க. அதை எவனோ ஒருத்தன் ஒரே நாள்ல திருடறது எவ்ளோ அநியாயம்னு சேகரன் சார் கேட்டாங்க. அது சரிதானா?” என்று கேட்டார்.
“நீங்க என்ன பண்ணீங்க?” என்று பிரச்சனையைப் பற்றிக் கேட்டாள்.
“இப்போ உன் பேங்க் அக்கௌன்ட்லருந்து மணி ட்ரான்ஸ்பர் பண்ணனும்னா, உன் பேங்க் லாகின் கிரடிண்ஷியல்ஸ் தெரிஞ்சிருக்கணும். நிர்மல், பிரணாப் பேங்க் டீடெயில்ஸ் எப்படி இந்த பிராடுங்க கைக்கு போனதுனு அவங்களை யோசிக்க சொன்னோம்.
எங்கெல்லாம் அவங்க பேங்க் லாகின் ஐடி, பாஸ்வர்ட் யூஸ் பண்ணாங்கனு கேட்டோம்” என்றவர், “ஒன் செகன்ட்” என்று கணினியில் சில நொடிகள் வேலை பார்த்துவிட்டு இரண்டு ப்ரிண்டஅவுட் ஷீட் எடுத்தார்.
அதை அவளிடம் தந்து, “நிர்மல், பிரணாப் பேங்க் அக்கௌன்ட் ஸ்டேட்மென்ட் இது. போன மாசம் மூனாம் தேதி வரைக்கும், ரெண்டு பேர் அக்கௌன்ட்லயும் பணம் இருந்திருக்கு.
அடுத்த பத்து நாளைக்கப்புறம், அதாவது பதிமூனாம் தேதில பணம் காணாம போயிருக்குது பூஜா. ஐ மென்ட் வேற ஒரு அக்கௌன்ட்க்கு மணி ட்ரான்ஸ்பர் ஆகியிருக்கு” என்றதும், அவர் கொடுத்ததைப் பார்த்தாள்.
“அதான் மூனாம் தேதியிலருந்து பதிமூனாம் தேதி வரைக்கும் ரெண்டு பேரும் என்னென்ன பண்ணாங்கன்னு யோசிக்கணும். கரெக்ட்டா?” – ரித்திகா.
“அதுக்கு முன்னாடிகூட பேங்க் டீடெயில்ஸ் திருடு போயிருக்கலாம்ல?”
“இருக்கலாம். அதையும் யோசிக்க சொன்னோம். இந்த டென் டேய்ஸ் சான்ஸ் அதிகமா இருக்கு இல்லையா?”
“ம்ம்ம், இந்த ஆன்லைன் பர்ச்சேஸ்… பில் பேய்மென்ட் இப்படி எது மூலமாவது டீடெயில்ஸ் எடுத்திருப்பாங்களோ? அவங்க பர்ச்சேஸ் ஹேபிட்ட [purchase habit] செக் பண்ணீங்களா?”
“இதுல எதுவுமே இல்லை. அந்தப் பசங்க ஆன்லைன்ல ரீசென்ட்டா பர்ச்சேஸ் பண்ணலனு சொன்னாங்க. எங்கயும் அவங்களோட அக்கௌன்ட் ரிலேட்டட் இன்ஃபர்மேஷன் ஷேர் பண்ணலைனும் சொன்னாங்க”
“அப்புறம் எப்படி?”
“எதும் பிஷ்ஷிங் மாதிரி இருக்குமோனு நினைச்சி ஈமெயில், வாட்சப்ல வந்த லிங்க் எதையும் கிளிக் பண்ணீங்களானு சார் கேட்டாங்க. ‘அவ்ளோ அவர்னஸ் இல்லாதவங்க இல்ல நாங்க’ன்னு அவங்க தெளிவா சொன்னாங்க”
“ப்ச்… அப்புறம் எப்படி மேம்? ஃபோன் ஹேக் பண்ணிருப்பாங்களோ?! ஆனா எப்படி?” என்றாள் புரிபடாத முகமொழியுடன்.
“எஸ். இதே மாதிரிதான் நாங்களும் இருந்தோம். பிஷ்ஷிங் லிங்க் எதும் கிளிக் பண்ணலை! இவங்களும் ஃபோன் நம்பர் ஷேர் பண்ணலை. திரும்பத் திரும்ப யோசிச்சோம். அப்ப உன் அப்பாதான் அவங்ககிட்ட ரீசன்ட்டா எங்கெல்லாம் போயிருக்கீங்கனு கேட்டாங்க.
நிறைய இடம் சொன்னாங்க. வேற வேற இடமா இருந்தது. பட் ரெண்டு பேரும் சொன்னதுல ஒரே மாதிரி இருந்த இடம்… ‘ரெஸ்ட்டாரென்ட் போயிருக்கோம்!’ அப்படிங்கிறதுதான்”
‘ரெஸ்ட்டாரென்ட்?’ என்று அவள் யோசிக்கும் பொழுது, “இரு” என்றவர், “இந்த ரெண்டு ரெஸ்டாரன்ட் நேம்… அவங்க சொன்னது. இங்கதான் அவங்க ரெண்டு பேரும் போயிருக்காங்க” என்றார்.
“நிர்மல், பிரணாப் ரெண்டு பேரும் போனது வேற வேற ரெஸ்ட்டாரன்ட்டா?”
“ம்ம்ம், ஸோ அங்க தப்பு நடக்க சான்ஸ் இருக்கும்னு… சேகரன் சார், நிர்மல், பிரணாப் அங்க போய் கேட்டுப் பார்த்தாங்க. ஆனா ரெஸ்ட்டாரன்ட் மேனேஜர், ‘இப்படி நடக்கிறதுக்கு சான்ஸே இல்ல. ரெஸ்ட்டாரன்ட் பேர ஸ்பாயில் பண்ண பார்க்கிறீங்களா’னு கேட்டு… போ சொல்லிட்டாரு” என்று நிறுத்தினார்.
“பேசாம ஸ்டேஷன்ல கம்பளைண்ட் கொடுத்திருக்கலாமே?”
“அந்த முடிவுக்கு நாங்களும் வந்திருந்தோம்”
“ஆனா கம்ப்ளைண்ட் கொடுக்கலயே… ஏன் மேம்?”
“இன்னொரு ரெஸ்டாரன்டலயும் கேட்டுக்கலாம்… எங்களோட வேற பிரான்ச்ல இந்த மாதிரி கம்ப்ளைண்ட் வந்திருக்கானு பார்த்துக்கலாம்னு… ஒருநாள் போனது. அடுத்தநாள் சார் லீவ்… இப்படி இடையில ஒரு சின்ன டிலே ஆகிடுச்சி”
“ஆனா இந்த தப்ப பண்ணவங்க வேகமா இருந்திருக்காங்க… இல்லயா?”
சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, “நிர்மல், பிரணாப் மர்டர்… சேகரன் சார் அரெஸ்ட்… இதெல்லாம் நடந்தது ரெஸ்டாரென்ட்ல இவங்க கேட்டதுக்கு அப்புறம்தான்.
அப்போ அங்க கேட்டதிலருந்து இவங்க மூணு பேரையும் யாரோ ஃபாலோவ் பண்ணிருக்காங்க… அப்படினா அங்கதான ஏதோ தப்பு நடக்குது… இல்லையா பூஜா?” என்று கேட்டார்.
என்ன சொல்லவென்று தெரியாமல், “ஃபர்ஸ்ட் மர்டர் நடந்ததும்… நீங்க அலர்ட் ஆகியிருக்கலாமே? அட்லீஸ்ட் போலீஸ்க்கு சொல்லிருக்கலாமே?” என்றாள்.
“எங்களுக்கு தெரியாது. நிர்மலோட மர்டர் நடந்தது நியூமார்க்கெட். அது வேற ஏரியா. அன்னைக்கு சேகரன் சார்கூட லீவ் இல்லையா?”
“ம்ம்ம்… என்னய இன்டெர்வியூ கூட்டிட்டுப் போயிருந்தாங்க”
“அடுத்தநாள் நான் லீவ். சேகரன் சார் பேங்க் வந்திருந்தாங்க. அவங்களுக்குத் தெரிய வந்ததே, பிரணாப் ஃபோன் பண்ணி, ‘நிர்மல யாரோ ஷூட் பண்ணிக் கொலை பண்ணிருக்காங்க சார். நீங்க என் வீட்டுக்கு வாங்க இதைப் பத்திப் பேசணும்’னு சொன்னதுக்கப்புறம்தான்.
சார்கூட ‘வேண்டாம் ஸ்டேஷன் போயிடலாம்’னு சொன்னாங்களாம். ஆனா பிரணாப் ‘வாங்க சார்’னு வற்புறுத்தினதால… சார் போயிருக்காங்க”
“அந்தப் பையன் கம்பெல் பண்ணா… அப்பா ஏன் அங்க போகணும்? கொஞ்சம் யோசிச்சிருக்க கூடாதா?”
“நீ சொல்றது கரெக்ட். பிரணாப்கூட யோசிச்சிருக்கலாம். ஆனா அவனோட சூழ்நிலை அப்படி?”
“என்ன சூழ்நிலை?”
“சேகரன் சார் அங்க போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சிருக்கு பிரணாப் அவரை வர சொல்லலை. இந்த பிராட பண்ணவன்… பிரணாப்ப மிரட்டி சேகரன் சார வர வச்சிருக்கான்னு”
“அப்படினா… பிரணாப் கொலை அப்பா முன்னாடிதான் நடந்திருக்கா?” என்று அசதியான குரலில் கேட்டுவிட்டு, பூஜா அமைதியாக இருந்தாள்.
கண்முன்னே ஒரு கொலையைப் பார்த்திருக்கிறார். எப்படி இருந்திருக்கும் அவருக்கு? அதனாலதான் அன்று அத்தனை தவிப்பு, தடுமாற்றம். இன்றோ செய்யாத கொலைக்காக தண்டனை வேறு அனுபவிக்கிறார்!
அப்பா நிலைமை கஷ்டம்தான்!
இருந்தாலுமே நிர்மல், பிரணாப் முடிவை நினைத்து, “இவ்ளோ நடந்திருக்கு, அப்பா இதெல்லாம் போலீஸ்கிட்ட சொல்லலாமே… ஏன் இப்படி பேசாமலே இருக்கிறாங்க” என்றாள்.
“உன் அப்பா பயப்படறாங்க பூஜா. அந்த பிராடு… ‘நீ கண்டுபிடிச்சதெல்லாம் அழிச்சிடு, இவனுங்ககூட பேசிக்கிட்டு இருந்த ரெக்கார்ட டெலீட் பண்ணிடு, போலீஸ்கிட்ட போ கூடாது… இதையும் மீறி ஏதாவது பண்ணா, போலீஸ்ல சொன்னா… உன் பொண்ணு உயிரோட இருக்க மாட்டா. அவளுக்கும் இதே கதிதான்’னு மிரட்டியிருக்கான்”
‘தமிழ்நாடு போய்விடு’ என்று அப்பா சொன்னது ஏன் என்று புரிந்தது. அவர் அலைபேசி அழைப்பு விவரங்கள் அழிக்கப்பட்டிருந்ததன் காரணம் புரிந்தது. “அப்போ எனக்காகதான் அப்பா பேச மாட்டிக்கிறாங்களா?” என்று குறைந்து போன குரலில் கேட்டாள்.
“ம்ம்… அன்னைக்கு பேங்க் வந்ததும் எனக்கு ஃபோன் பண்ணி எல்லாத்தையும் சார் சொன்னாங்க. இதுக்கப்புறம் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணா, பூஜாவ எதும் பண்ணிடுவாங்களோனு பயமாருக்குது. அவளுக்கு ஒன்னுனா என்னால தாங்கிக்க முடியாதுனு சொன்னாங்க.
அடுத்த நிமிஷமே இல்ல இல்ல போலீஸ்கிட்ட சொல்லிடணும். என் பொண்ணு கூடதான் நான் இருக்கிறேன்ல… அவளைப் பத்திரமா நான் பார்த்துப்பேன்னு சொன்னாங்க.
உண்மையைச் சொல்லணும்னா… அந்த சூழ்நிலையில என்ன செய்யனே சாருக்கு தெரியலை… அவ்ளோ குழப்பம், பயம். இப்ப வீட்டுக்குப் போங்க, நாளைக்கு பேங்க் வந்து பேசி முடிவெடுக்கலாம்னு நான்தான் சொன்னேன்.
ஆனா அடுத்தநாளே சார போலீஸ் பிடிச்சிட்டுப் போய்ட்டாங்க. கூட இருந்து பார்த்துக்க முடியும்ங்கிறப்பவே சார் உனக்காக அவ்ளோ பயந்தாங்க. கூட இருக்க முடியாதப்போ… உனக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோனு எவ்ளோ பயப்படுவாங்க சொல்லு?”
பூஜா எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள்.
“ஆனா நான் சுத்தமா எதிர்பார்க்கவேயில்ல… அந்த பிராடு சார இப்படி மாட்டிவிடுவான்னு” என்று உண்மையாக வருத்தப்பட்டார்.
“இவ்ளோ வருத்தப்படற நீங்க… போலீஸ் விசாரிச்சப்ப சொல்லிருக்கலாமே? உங்களைத்தான் யாருமே மிரட்டலையே”
“சேகரன் சார மிரட்டினதோட விடல… மாட்டியும் விட்ருக்கான். அப்ப எவ்ளோ பிளானோட இருந்திருக்கான் பார்த்துக்கோ. சர்வ சாதரணமா மூணு கொலை பண்ணிருக்கான்! அதுல ஒருத்தன்… இது எதுலயுமே சம்பந்தப்படாதவன். அப்படினா அந்த பிராடு எவ்ளோ மோசமானவன்னு யோசி.
எனக்கும் பிள்ளைங்க இருக்காங்க. அவங்களுக்கு ஆபத்து வந்திடுமோனு பயம் இருக்குது. அதான் போலீஸ் வந்து விசாரிச்சப்ப பேங்க்ல பிரச்சனை இல்லைனு சொன்னேன். மத்தவங்களும் அதேதான் சொன்னாங்க”
“இப்போ பயம் இல்லையா… என்கிட்ட எல்லாம் சொல்றீங்க?”
“ரெண்டு நாள் விசாரிச்சிட்டு, சாரை விட்டுருவாங்கனு நினைச்சேன். ஆனா அப்படி எதும் நடக்கலை. இதுல சம்பந்தப்பட்ட ரெண்டு பேர் இப்ப உயிரோட இல்ல. சேகரன் சார் லாக் அப்ல இருக்காங்க. நான் இப்படி தப்பிச்சிக்கிறதை நினைச்சா குற்றவுணர்ச்சியா இருக்கு”
“அதைவச்சி என்ன மேம் பண்ண?” என்று கோபமாக தொடங்கி, “எல்லாரும் சேர்ந்து என் அப்பாவ மாட்டி விட்டுட்டிங்க” என்று வருத்தத்துடன் முடித்தாள்.
“உன் கோபம் புரியுது பூஜா. நாளைக்கு வேணா பேங்க் ரீஜினல் ஹெட்கிட்ட இதுபத்தி பேச பார்க்கிறேன்”
அவர் பேச்சில் நம்பிக்கையே இல்லை. எனவே எழுந்து, “ம்ம்… இந்த பிரின்ட் அவுட் பேப்பர்ஸ் எடுத்துக்கலாமா?” என்று கேட்டாள்.
அவர் யோசித்தார்.
“ப்ளீஸ் மேம்…” என்று பூஜா கெஞ்சினாள்.
“சரி எடுத்துக்கோ” என்று சொன்னார்.
“தேங்க்ஸ், வர்றேன்” என்று கிளம்பினாள்.
வங்கியிலிருந்து வெளியே வந்தவள், ‘என்ன செய்ய… இத சவுரவ் சார்கிட்ட சொல்லலாமா?’ என்று யோசித்தாள். தன்னைப் பார்த்தால் அவருக்கு கோபம் வரும், அந்தக் கோபம் அப்பாவிடம்தான் காட்டப்படும்… என்ற பயத்தில் அந்த யோசனையை விட்டுவிட்டாள்.
அரவிந்திடம் சொல்ல தோன்றியது. அவன்தான், ‘இது உன் பிரச்சனைனு சொல்லிட்டானே, வேண்டாம்’ என்று அதையும் விட்டுவிட்டாள்.
ஆனாலும் ஒரு எதிர்பார்ப்பில் அலைபேசி எடுத்து அழைத்திருக்கிறானா என்று பார்த்தாள். அவனிமிருந்து அழைப்பு ஏதும் இல்லை! தனக்குத்தான் அவன்மீது ஏதேதோ எண்ணங்கள்… பிடித்தங்கள்! அவனுக்கு அப்படி ஒன்றும் இல்லை போல என்று நினைத்ததும் கண்கள் கலங்கியது!!
அடுத்தகணம், ‘ச்சே இப்போ இத ஏன் யோசிக்கிறேன்?’ என்று தோன்ற, ரித்திகா தந்த உணவக முகவரிகளைப் பார்த்தாள். ‘ரெஸ்டாரன்ட் போய் பார்த்தா என்ன… அப்படி அங்க என்னதான் இருக்கு?!’ என்ற கேள்வி வந்தது. நேரம் பார்த்தாள். நான்கு முப்பது என கைக்கடிகாரம் காட்டியது.
உணவக முகவரியைச் சொல்லி ப்ரீபெய்டு டேக்சி ஏற்பாடு செய்தாள். டேக்சி வந்ததும் அதில் ஏறி அமர்ந்தாள். கடும் போக்குவரத்து நெரிசலைத் தாண்டி, உணவகம் வருவதற்கு ஆறு முப்பது ஆனது. ஆனால் ஏழு மணிக்குத்தான் உணவகம் திறக்கப்படும் என்பதால் வெளியே காத்திருந்தாள்.
ஒரு சிறிய கட்டிடத்தின் அடித்தளத்தில் அந்த உணவகம் அமைந்திருந்தது. பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்கள், ஆளுயரத்திற்கு மேலான உயரத்தில் கண்ணாடி கதவுகள் என்ற அமைப்புடன் இருந்தது.
எல்லா கண்ணாடிகளிலும் ‘கோல்ட் விண்டோவ் பிலிம்’ ஒட்டப்பட்டிருந்தது.
விளக்கு கம்ப விளக்கொளியில் இருந்த சாலை ஓரத்தில் நின்ற பூஜா, பின்னே திரும்பிப் பார்த்தாள். உள்ளே ஒன்றுமே தெரியவில்லை. இன்னும் ‘டைன்னிங்’ தொடங்காததால் சிப்பந்திகள், மேலாளர், சமையல் ஆட்கள் மங்கலான ஒளி வெளிச்சத்தில் இருந்த உணவகம் உள்ளே நடந்து கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒரே ஒருவன் மட்டும் அசையாமல் ஓரிடத்தில் நின்று வெளியே காத்திருக்கும் பூஜாவையே பார்த்துக் கொண்டிருந்தான்! அப்படியொரு கோபம் கொட்டிக் கிடந்தது… அவன் பார்வையில்!
அந்த ஒருவன் அலோக்!!
