Kathambari Novels
அத்தியாயம் – 12
பேராநகர் பகுதியிலுள்ள ஓர் உணவகம்!
காளிகாட் பகுதியிலிருந்து நாற்பத்தைந்து நிமிட பயண தூரத்திலே இப்பகுதி இருக்கிறது. ஆனாலும் போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக, பூஜா இங்கே வந்து சேர்வதற்கு இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது.
புதிய சூழலைச் சுற்றி சுற்றிப் பார்த்தபடி பூஜா காத்திருந்தாள்!
ஏழுமணி ஆனதும் இரவு நேர உணவு வகைகள் தயார் என்பது போல் வாயில் செக்யூரிட்டி வெளியே வந்து நின்றார். அதைக் கண்ட பூஜா மெல்ல படிகளில் இறங்கி வந்தாள். அந்த செக்யூரிட்டி கண்ணாடி கதவுகளைத் திறந்துவிட்டார். உணவகத்தின் உட்பகுதியைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
பூஜா உள்ளே வந்ததிலிருந்து அலோக் கண்கள் அவள்மீதே இருந்தன. அங்கே இங்கேயென பார்வையை நகர்த்தாமல் பார்த்துக் கொண்டிருந்தான்!
வேறு யாரும் வரவில்லை என்பதால், உணவக ஊழியர்களும் பூஜாவும் மட்டும் இருந்தனர். சட்டென, ‘ரெஸ்டாரன்டிலதான் ஏதோ தப்பு இருக்கு’ என ரித்திகா கூறியது ஞாபகத்தில் வந்தது. மங்கிய விளக்கின் ஒளியால் சூழ்ந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பெரிய பயம் வந்தது.
‘என்ன செய்ய?’ என்று ஒருநொடி தயங்கினாள். பின் மனதை தைரியத்திற்குத் தயார் படுத்திக்கொண்டு, ஏதும் ஆபத்து என்றால் வெளியே தப்பி ஓடுவதற்கு வசதியாக இருக்கும் இருக்கையில் வந்தமர்ந்தாள்.
அந்த நேரத்தில் இரண்டு பேர் உணவகத்தின் உள்ளே நுழைந்தனர்!
இவர்கள் சாப்பிட வந்தவர்களா? வேறு எதற்குமா? என்று சந்தேகத்தில் அவர்களையே பார்த்திருந்தாள். அந்த இரண்டு பேர் சாப்பிட அமர்ந்த பின்தான், ‘ஷப்பா’ என்று மூச்சுவிட்டாள்.
இதற்கிடையே இவளைக் கண்காணித்துக் கொண்டிருந்த அலோக் சமையல் செய்கின்ற பகுதியைத் தாண்டி இருந்த இடம் சென்று தனது கூட்டாளிகளில் ஒருவனான தேவேஷ்க்கு அலைபேசியில் அழைத்தான்.
அவன் அழைப்பை ஏற்றதும், “அவ… இங்க வரைக்கும் வந்திட்டா. இப்ப என்ன செய்ய?” என்று அவர்கள் தாய்மொழியில் கோபமாக பேச்சை ஆரம்பித்தான். கூடவே அவளுக்கு ஏதும் தெரித்துவிடுமோ என்ற பதற்றமும் இருந்தது.
“யாரு… அந்த பேங்க்காரன் பொண்ணா?” என்று கேட்டான் தேவேஷ்.
“ஆமா” என்று அலோக் சத்தமாக அழுத்திச் சொன்னதும், “டென்சன் ஆகாத… டென்சன் ஆகாத நீ!” என்று பேச்சு அதே மொழியில் தொடர்ந்தது.
“எப்படி இருக்க முடியும்? அவ எதையாவது கண்டுபிடிச்சிட்டா?”
“அது முடியாது. அவ அப்பாவும், அந்த பசங்களும் எப்படி வந்து விசாரிச்சிட்டு போனாங்களோ அதே மாதிரி அவளும் விசாரிச்சிட்டு போயிடுவா. நீ இப்படி இருக்காத. நார்மலா இரு… அப்பதான் டவுட் வராது! அவகூட போலீஸ்காரன் ஒருத்தன் இருப்பான்ல… அவனும் வந்திருக்கானா?”
“வந்த மாதிரி தெரியலை… தனியாதான் உட்கார்ந்திருக்கா”
“எதுக்கும் இன்னொரு தடவை பார்த்திடு. அப்புறம் அவளோட ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் வாட்ச் பண்ணு. போ… போய் என்ன பண்றானு பாரு” என்று அவசரப்படுத்தியதும், அழைப்பைத் துண்டித்துவிட்டு வந்தான் அலோக்.
சேகரன், பிரணாப், நிர்மல் மூவரும் வந்து உணவக மேலாளரை கேட்கையில் அலோக், அவனைப் போல மற்ற சிப்பந்திகள் அங்கேதான் இருந்திருந்தனர். அதனால் சேகரன், பிரணாப், நிர்மல் பற்றி அவனுக்குத் தெரியவந்தது.
அவன் கூட்டாளிகளிடம் சொல்லவும் செய்தான்!
இவர்களை அப்படியே விட்டால் காவல்துறையில் புகார் அளிப்பார்கள் என்று நால்வரும் திட்டமிட்டு நிர்மல், பிரணாப்பை கொலை செய்து, அதை சேகரன் மீது போட்டு அவரை இப்படியொரு நிலைக்குத் தள்ளி இருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் தங்கள் மீதிருக்கும் பயத்தில் சேகரன் வாய் திறக்க மாட்டார் என்று இவர்களுக்குத் தெரியும்!
அவர் வாய்திறந்து பேசும் வரையில் இந்த கொலைகளைச் செய்தது அவர்தான் என்ற சந்தேகம் காவல்துறைக்கு இருக்கும்… காவல்துறை பார்வை இவர்கள் மேல் விழாது என்று நம்பினர்!
ஆனாலும் சேகரன் மகளிடம் எதுவும் சொல்லியிருந்தால் என்ற கேள்வியும் சந்தேகமும் இருந்தது. அதனால்தான் அவள் காவல்நிலையம் வரும்போது கண்காணித்தனர். இதில் அவளுடன் இருந்த அரவிந்தால் பிரச்சனை வருமா என்று சரியாகத் தெரியாமல் சிறு பயமும் இருந்தது.
அதனால் காவல்துறையினர் தங்களைப் பற்றி எதையும் கண்டுபிடிக்கும் முன் இங்கிருந்து தப்பிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடனும், அதற்கான யோசனைகளுடனும் இப்போது இருக்கின்றனர்.
இந்த நேரத்தில்தான் பூஜா இங்கே வந்திருக்கின்றாள்!
அலோக் திரும்பி வரும்போது இன்னும் ஆர்டர் செய்யாமல் பூஜா திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள். ஆட்கள் யாரும் வரவில்லை என்பதால் அலோக் ஓர் ஓரத்தில் நின்று அவளைக் கவனிக்க ஆரம்பித்தான்.
பூஜா இருந்த மேசையருகே வந்த சிப்பந்தி, ‘துமி கி கேச்’ என்று பெங்காலியில் கேட்டதற்கு, ‘ம்ன்?’ என்று புரியாமல் பார்த்தவள், “இங்கிலிஷ்” என்றதும், “மேம் ஆர்டர்” என்று கேட்டார்.
“டூ மினிட்ஸ்” என்று சொல்லி, ‘கழிச்சி ஆர்டர் பண்றேன்’ என்பதை சைகையில் சொன்னதும்… போக போனவரிடம், “வாட்டர்” என்று கேட்டாள். அவர் சென்று ஒரு மினெரல் வாட்டர் பாட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார்.
தண்ணீர் குடித்தபடியே, இங்கு என்ன தப்பு இருக்கும் என்று சுற்றி ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.
இதை பார்த்த அலோக் மீண்டும் தனியே சென்று தேவேஷ்கு அழைத்து, “அவ யார்கிட்டயும் எதுவும் கேட்கல. சுத்திப் சுத்தி பார்த்துகிட்டு இருக்கா?” என்று கோபமாக சொன்னான்.
“அதுக்கு இப்ப என்ன? பார்த்திட்டுப் போறா… ” என்றான் தேவேஷ்.
“எனக்கு வர்ற கோபத்துக்கு… அவளை!” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கோபப்பட, “அவ முன்னாடி மட்டும் போய் நின்றாதா… சரியா? அவளை வாட்ச் பண்ண மட்டும் செய்” என்று தேவேஷ் அழைப்பைத் துண்டித்தான்.
மீண்டும் அலோக் வந்தபொழுது, ஐந்து பேர் சாப்பிட நுழைந்தனர். அவனிடம் மேலாளர் அவர்களைக் கவனிக்க சொல்ல, ‘என்னென்ன வேண்டும்?’ என்று அவர்களுக்குப் பார்த்தபடியே, ‘என்ன செய்கிறாள்?’ என்று பூஜா அமர்ந்திருந்த மேசையையும் கண்காணித்தான்.
சற்றுநேரம் யோசித்த பூஜா, ஒரு சிப்பந்தியை அழைத்து, “வைஃபை” என்று இரண்டு முறை சொல்லிவிட்டு, ‘இங்க உண்டா?’ என்று சைகையில் கேட்கவும், அவளை ஒருமாதிரி பார்த்தவர், ‘இல்லை’ என்று தலையசைத்துவிட்டு, எதுவும் ஆர்டர் செய்வாள் என்று நின்று கொண்டிருந்தார்.
இப்பொழுதும் ஒரு நிமிடம் கழித்து ஆர்டர் செய்கிறேன் என்று கையசைத்துச் சொன்னதும் அவர் சென்றுவிட்டார்.
இதுபோல் பொதுவெளியில் இருக்கும் ‘பப்ளிக் வைஃபை [wifi]’ பயன்படுத்தும் போது அலைபேசியை ‘ஹேக்’ செய்ய முடியும் அல்லவா!? அதுபோல் எதுவுமா என்றுதான் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாள். ஆனால் அவர் இல்லை என்று சொன்னதும், வேறு என்னவாக இருக்கும் என்று யோசித்தாள்.
இங்கே யூபிஐ பேய்மென்ட் [UPI Payment] முறைகளில் ஏதும் ஒன்று பயன்படுத்த படுகிறதோ? அதன் மூலமாகதான் அலைபேசிகள் ஹேக் செயப்படுகிறதோ? என்ற சந்தேகம் வந்தது.
‘என்ன கேட்க?’ என்று யோசித்துவிட்டு, அதே சிப்பந்தியை திரும்ப அழைத்து, “பில் பில்…” என்று சொல்லி, ‘எந்த மாதிரி அக்ஸ்ப்ட் பண்ணுவீங்க?” என்று சைகையில் கேட்கவும், “டெபிட், கிரெடிட் கார்ட்ஸ், கேஷ் மேடம்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
ஆனால் போனவர்… மேற்பார்வை செய்து கொண்டிருந்த மேலாளரிடம், பூஜா விசாரிப்புகள் பற்றிச் சொன்னார். உடனே மேலாளர் அவள் இருக்கும் மேசையைப் பார்த்தார்.
பூஜாவும் இதைப் பார்த்துவிட்டாள். மேலாளர் சொன்னதாக ரித்திகா கூறியது ஞாபகத்தில் வரவும்… ஒருவேளை இந்த ஆள்தான் மோசடிக்கு காரணமோ என்று கேள்வி வந்த நொடி… பயம் உண்டாகி, இதயம் வேகமாக அடித்தது!
ஆனாலும், ‘சந்தேகம் வராம இருக்கணும்னா ஆர்டர் பண்ணனும்’ என்று நினைத்தாள். அதே சிப்பந்தியை அழைத்து, “மெனு கார்டு” என்று கேட்டதும், மேலாளர் அவர் வேலையைப் பார்க்க போய்விட்டார்.
சிப்பந்தி மேசையில் இருந்த க்யூஆர் குறியீட்டைக் காட்டி, “ஸ்கேன்” என்று இருமுறை சொல்லி, “இக்கன் ஈ மெனு கார்ட்’ என்று சொல்லிச் சென்றார்.
அதையே பார்த்திருந்தாள். அங்கே இங்கே கருவிழிகள் செல்ல யோசித்தாள்!
கூடவே மேலாளர் அவளைப் பார்க்கிறாரா என்றும் கவனித்துக் கொண்டாள். மோசடி செய்வது யாரென்று தெரியாது… இருந்தாலும் அவளுக்கு அவர்மேல் ஒரு சந்தேகம் வந்திருந்தது. அதனால் அவள் கவனமெல்லாம் அவர் அவளைப் பார்த்து விடகூடாது என்பதிலே இருந்தது.
இதற்கிடையே அலோக்… ஐந்து பேர் ஆர்டர் செய்ததை மேசையில் எடுத்து வைத்தபடி பூஜாவை கவனித்து கொண்டிருந்தான். ‘கண்டுபிடிச்சிடுவாளோ?!’ என்று பதற்றத்தில் அவன் முகத்தில் வியர்க்க ஆரம்பித்தது.
‘க்யூஆர்’ குறியீட்டையே பார்த்த பூஜாவிற்கு சந்தேகம் வர அலைபேசி எடுத்து, ‘க்யூஆர்’ குறியீடு ஸ்கேனர் செயலியை தரவிறக்கம் செய்தாள். பின் மெனு பார்ப்பதற்காக மேசையிலிருந்த ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்ய, அது ஒரு வலைத்தளத்திற்கு அழைத்துச் சென்றது.
இங்கே உணவு வகைப்பட்டியல் இருந்தது.
ஏதும் தவறாக தெரியவில்லையே என்று மீண்டும் யோசித்தாள்!
தற்செயலாக க்யூ ஆர் குறியீடு அட்டையிலிருந்த உணவகத்தின் பெயரினைப் பார்த்தாள். அடுத்ததாக வலைத்தள முகவரியைப் பார்த்தாள். வேறு வேறு என்று பார்த்ததும் சொல்லிட முடியாது. ஆனால் சிறு வேறுபாடு இருந்தது.
எப்படியென்றால்? உணவகத்தின் பெயர், ‘THAI CHILLI’ என்பதாகும். ஆனால் அது வலைதளத்தின் முகவரியில் எப்படி இருந்தது என்றால், ‘THAAI CHILLI’ என்று! ஒரே ஒரு எழுத்துதானே அதிகமாக இருக்கிறது என்று கடந்துவிட முடியாது!
ஏனென்றால் இது நிச்சயமாக எழுத்துப்பிழையாக இருக்க முடியாது!!
இது… இந்த உணவக வலைத்தளம் மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ளதா?! அப்படியென்றால் இந்த வலைத்தளம் தீங்கிழைக்கும் வலைத்தளமா?! இங்கிருந்துதான் மோசடி ஆரம்பிக்கிறதா?!
இப்படி பல கேள்விகள் அவளுக்குள்!!
வலைத்தளத்தை ‘ஸ்க்ரோல்’ செய்து கீழே வந்தாள். சிறப்பு உணவு வகைகள் பார்க்க, உணவகம் பற்றி பின்னூட்டம் தர கீழே சொடுக்கவும் என்று இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது.
சற்று யோசித்தாள்! மற்ற மேசைகளை பூஜா பார்த்தாள்!!
இந்த சமயம் முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பியிருந்தன. ஒவ்வொருவரும் தங்கள் ஸ்மார்ட் ஃபோன் வைத்து உணவு வகைப்பட்டியல் காட்டும் உணவகத்தின் ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்து கொண்டிருந்தனர்.
இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது என்று புரிந்துவிட்டது!
உணவு வகைப்பட்டியல் காட்டும் இந்த ‘க்யூஆர்’ குறியீடு மோசடி செய்பவன் அமைத்த ‘க்யூ ஆர்’ குறியீடு. இதனுடன் ஒரு தீம்பொருள் பதிக்கப்பட்டிருக்கும். இந்த உணவகத்திற்கு உண்ண வருபவர்கள் இந்த குறியீடை ஸ்கேன் செய்யும் போது தீங்கிழைக்கும் வலைத்தளத்திற்குப் போய்விடும்.
பின் யாரெல்லாம் கீழிருக்கும் இரண்டு இணைப்புகளை சொடுக்கிறார்களோ அவர்கள் அலைபேசி ஹேக் செய்யப்படுகிறது. அதன்பின் மோசடிக்காரர்கள் எளிதாக அந்த அலைபேசிக்குள் நுழைந்து, அந்ததந்த நபர்களின் தனிப்பட்ட விவரங்களை அறிய முடியும்.
இப்படித்தான் ஒவ்வொருவரின் வங்கி பற்றிய விவரங்களைத் தெரிந்திருக்க முடியும் என்று புரிந்தது!
ஓரளவிற்கு புரிந்ததும் யார் இதை செய்திருப்பார்… மேலாளரா? என்ற கேள்வி வந்தது. தான் அதைக் கண்டறிய முடியும் என்று தோன்றவில்லை. சரி இருக்கட்டும்! ‘அடுத்து என்ன செய்ய?’ என்று யோசித்தாள். இதை எடுத்துக்கொண்டு வெளியே போய் விட வேண்டும்.
எங்கேயும் நின்று மேலாளர் கவனிக்கிறாரா என்று பார்த்தாள். இல்லை. இருந்தும் சிப்பந்தியை அழைத்து சப்பாத்தி ஆர்டர் செய்து இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.
இதற்கிடையே பூஜாவின் ஒருவொரு செயலையுமே கவனித்து வந்த அலோக் கண்களில் கடுங்கோபத்துடன் தனியே சென்று தேவேஷ்க்கு அழைத்து, “அவ கண்டுபிடிச்சிட்டா! இப்ப என்ன பண்ண? இப்பவே அவளை நான்…” என்று ஆரம்பிக்க, “பொறு” என்று அவன் யோசித்தான்.
சில நொடிகளுக்குப் பின்பு, “போ… நீ போய் அவ என்ன பண்றானு பார்த்துச் சொல்லு. கரண், ஜாதவ்கிட்ட சொல்றேன். யோசிக்கலாம். ஆனா அவளை விட்டுட கூடாது. புரியுதா?” என்று படபடவென கோபத்தைக் கொட்டினான்.
அழைப்பைத் துண்டித்துவிட்டு அலோக் வெளியே வந்து பூஜா இருந்த மேசையைப் பார்த்தான்.
அங்கே அவளில்லை. கூடவே அந்த க்யூ ஆர் குறியீடு அட்டையும் இல்லை.
உடனே மேலாளரிடம், ‘ஒரு நிமிடம்’ என்று அனுமதி கேட்டு வெளியே வந்தான். பூஜா டேக்சியில் ஏறிச் செல்வதைப் பார்த்ததும் தேவேஷ்க்கு அழைத்து, “அவ கிளம்பி போய்ட்டா?” என்றான் உச்சகட்ட எரிச்சலில்.
“உன்னால ஃபாலோவ் பண்ண முடியுமா?”
“கேட்டுப் பார்க்கிறேன்…. மேனஜர் விடுவாரானு தெரியலை”
“ம்ம்… நிர்மல், பிரணாப்” என்று சொல்லி யோசித்த தேவேஷ், “ஓகே, அடுத்ததா கரண் வேலை செய்ற ரெஸ்டாரன்ட்தான் போவா. நான் அவன்கிட்ட பேசறேன். முடிஞ்சா வெளிய வர பாரு. இல்லனா நாங்க மூணு பேரும் பிளான் பண்ணி முடிச்சிறோம்” என்றான்.
“அவ ரெஸ்டாரன்ட் போகலைனா?”
‘போகலைனா, போகலைனா’ என்று யோசித்தவன், “ஓகே, டேக்ஸி நம்பர் தெரியுமா… அத சொல்லு, பார்த்துக்கலாம்” என்றான் வேகமாக.
“ம்ம்ம்” என்று வண்டி எண்ணை சொன்னதும், பெங்காலியில் பேசப்பட்டிருந்த அந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
டேக்சியில் சென்று கொண்டிருந்தவள், ‘அடுத்து போலீஸ் ஸ்டேஷன் போகவா? இல்ல… இன்னொரு ரெஸ்டாரன்ட்டையும் பார்த்திட்டுப் போகவா?’ என்று சற்று யோசித்தாள். ‘சரி அதையும் பார்த்திடலாம்’ என்று அந்த உணவகத்தின் பெயர், அது இருக்கும் பகுதியை ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு, வெளியே பார்த்தாள்.
ஏனோ அக்கணம் அரவிந்தின் ஞாபகம் வந்தது. தான்… இப்படி அவனை நினைப்பது போல, அவன் தன்னை நினைப்பது இல்லையோ… அதனால்தான் அழைக்கவில்லையோ என்று மனம் யோசித்து… கஷ்டபட்டுக் கொண்டது.
சற்று நேரத்திற்குப் பின், ‘காயம்பா’ பகுதி வந்ததும் ஓட்டுநர் ஒரு இடத்தில் நிறுத்திவிட, அச்சாலையில் நடந்து உணவகத்திற்குள் போனாள்.
அந்த சமயம் அவளைக் கடுங்கோபத்துடன் பார்த்தபடி கரண் வெளியேறி, அவள் வந்த டேக்சி நிற்கும் இடம் நோக்கி போனான்.
உணவகத்தின் உள்ளே வந்தமர்ந்த பூஜாவிற்கு, ‘என்ன செய்ய வேண்டும்?’ என்று தெரியுமென்பதால் சிப்பந்தியை அழைத்து ஏதோ ஆர்டர் செய்துவிட்டு அலைபேசி எடுத்து ‘க்யூ ஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்தாள். கூடவே மேலாளர் யாரும் பார்க்கிறாரா என்று கவனித்தும் கொண்டாள்.
இங்கே உணவகம் பெயர், ‘KILLER KABOBS’ ஆகும். ஆனால் வலைதள முகவரியில் பெயர் ‘KILLER KABABS’ என்றிருந்தது.
நேரம் எட்டரையைத் தாண்டியதால் கூட்டம் இருந்தது. அதனால் சிப்பந்திகள் முழுமூச்சுடன் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஆர்டர் செய்தது வருவதற்குள், பூஜா, ‘க்யூ ஆர்’ குறியீடு அட்டையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அதுவரை உணவக மேலாளரரோ… அங்கே இருக்கும் வேறு யாரவது பார்த்து விடுவார்களோ என கவனம் கவனம் என்று இருந்தவள், இனி பிரச்சனை இல்லை என்று இலகுவானாள்.
என்னமோ இத்தனை நாட்களுக்குப் பிறகு எல்லாம் சரியாக நடப்பது போல் இருந்தது. அப்பாவை வெளியே கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்திருந்தது. வேக வேகமாக டேக்சி நிற்கும் இடம் நோக்கிச் சென்றாள்.
ஆனால் சற்றுத் தள்ளி இருந்த டேக்ஸியையும், ஓட்டுனரையும் பார்த்தவளின் வேகம் படிப்படியாக குறைந்து அவரருகில் வந்து நின்றாள்.
‘என்னாச்சு? எப்படி இப்படி ஆனது?’ என்று ஆங்கிலத்தில் அவள் கேட்க, அவர் பெங்காலியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுவது புரியவில்லை என்றாலும், பார்ப்பதிலிருந்தே டேக்சி டயர் பஞ்சர் என்று புரிந்தது.
ஓட்டுனரிடம், ‘ரிப்பேர் பண்ண எவ்ளோ நேரமாகும்?’ என்று சைகையில் கேட்க, அதற்கும் ஏதோ பெங்காலியில் சொன்னார். சுத்தமாக புரியவில்லை.
இதுவரையில் ஆட்டோவோ, ப்ரீபெய்டு டேக்சியோ ஏறியதும் போக வேண்டிய இடம் சொல்வாள். இறங்குகையில் ஜி.பேயோ, சைகையில் கேட்டோ பணம் கொடுத்துவிடுவாள்.
இன்று ஏழு மணிநேரத்திற்கு பதிவு செய்திருந்தாள். இப்போது இப்படி ஆனதும்
என்ன செய்யவென்று தெரியாமல் நின்றாள். ஓட்டுனரோ, “மெக்கானிக்” என்று சொல்லி, ‘வர அரைமணி நேரமாகும்’ என்று சைகை செய்து, “கேன்சல்… ட்ரிப் கேன்சல்” என்று அவளிடம் சொன்னார்.
‘எல்லாம் சரியா வர்றப்போ இப்படி ஆகுதே?’ என்று எரிச்சல் வந்தது. இருந்தும் அந்தப் பயணத்தை ரத்து செய்து பணம் கொடுத்துவிட்டு, ‘எப்படி காளிகாட் போக ஆட்டோவிலா, டேக்சியிலா?’ என்று யோசித்தாள்.
இதற்குமுன் இந்தப் பகுதிக்கு வந்ததே இல்லை. அதனால் ஆட்டோவில் போய் அங்கே இங்கே என்று அலைக்கழித்துவிட்டால்? வழியும் தெரியாது. இரவு நேரம் வேறு. எனவே டேக்சியில் போகலாமென முடிவெடுத்து, அலைபேசியில் டேக்சி புக் செய்ய பார்த்தாள்.
எல்லாம் இங்கே வர முக்கால்மணி நேரத்திற்கு மேலாகும் என்று காட்டியது. மோசடியின் ஆரம்பம் இங்கேதான் என்று தெரிந்தபின், அவ்வளவு நேரம் இந்த இடத்தில் இருப்பது சரியல்ல என்று டேக்சி புக் செய்வதை விட்டுவிட்டாள்.
‘இன்னைக்கு ஏன் இவ்ளோ ட்ராபிக்?’ என்று நொந்துகொண்ட நேரம், ஓட்டுனர் ஒருவனிடம் பேசுவதைப் பார்த்தாள். ‘அவனும் டேக்சி டிரைவரா’ என்ற கேள்வி வந்ததும்… அவர்கள் அருகில் சென்று ஓட்டுனரிடம் சைகையில் கேட்டாள்.
அவர் ஆம் என்றதும், ‘காளிகாட்…’ என்று இவள் ஆரம்பிக்கவும், ஓட்டுனர் அவனிடம் ஏதோ சொன்னார்.
அவன்… அதுதான் கரண், “மேம், இன்னைக்கு அந்த பக்கம் ஃபுல்லா ட்ராபிக். இன்னேரத்தில அங்க வரைக்கும் போய்ட்டு ரிட்டர்ன் வர்றது கஷ்டம்” என்று அழகான ஆங்கிலத்தில் சொன்னான்.
அவன் அப்படியொரு ஆங்கிலத்தில் பேசியது ஏதோ பெரிய உதவி கிடைத்தது போலிருந்தது பூஜாவிற்கு.
ஓட்டுனரை தவிர்த்து அவளே கரணிடம் பேசினாள். காளிகாட் போகணும் என்றாள். முக்கியமான விடயம் என்றாள். அவசரமாக போக வேண்டியுள்ளது என்றாள். இரண்டு மடங்காக பணம் தருகிறேன் என்றாள்.
இது எல்லாவற்றுக்கும் அவன் தூய ஆங்கிலத்தில் மறுத்து கொண்டிருந்தான். அவளை அழைத்து வந்த ஓட்டுனர்கூட அவளுக்காக கரணிடம் கெஞ்சினார்.
இல்லை இருவரும் அப்படி காட்டிக் கொண்டார்கள்!
உணவகத்திலிருந்து கரண் வெளியே வந்ததும் தேவேஷ் கூறிய டேக்சி எண் வைத்து ஓட்டுனரைக் கண்டுபிடித்தான். கொஞ்சம் பணம் கொடுத்து, ‘பூஜா வந்ததும் இப்படிச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டான்.
மறுத்தார். நிறைய பணம் கொடுத்தான். ஒத்துக்கொண்டார்.
மேலும் பூஜாவே பயணத்தை ரத்து செய்துவிட்டதால் யாரும் வந்து அவரிடம் கேள்வி கேட்கும் வாய்ப்புகள் குறைவு அல்லவா? அதனால் அவர் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒத்துக் கொண்டார்.
இதோ… பூஜாவிற்காக அவனிடம் கெஞ்சுவது போல் அவர் காட்டிக் கொள்ள, கரண் மறுக்க, பூஜா திரும்பத் திரும்ப கேட்க, கடைசியில் அவன் ஒத்துக் கொண்டான்.
“வாங்க மேம்” என்று கரண் அவளை அழைத்துச் சென்று ஒரு டேக்சியில் ஏற சொன்னதும் ஏறிக் கொண்டாள். கரணும் ஏறி டேக்சியை எடுத்தான். டேக்சி காயம்பா பகுதியிலிருந்து கிளம்பியது.
ஆனால் காளிகாட் நோக்கி அல்ல!
எதையோ யோசித்துக் கொண்டு வந்தவளிடம், “மேம், நியூஸ் பேப்பர் இருக்கு. படிக்கணும்னா படிங்க” என்று ‘ரியர்வியூ மிர்ரர்’ வழியாக அவளைப் பார்த்து சொல்ல, மிர்ரரில் தெரிந்த அவன் கண்களைப் பார்த்து, “சரி” என்றாள்.
மேலும், முன்னிருக்கையின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த நெட் மேகஸின் ஹோல்டரில் இருந்த ஆங்கில செய்தித்தாள்களை எடுத்துப் பார்த்தாள்.
சற்றுதூரம் பயணித்ததும், “மேம் இந்த ரூட் டிராபிக் அதிகம். லேட்டா போனா ஓகேனா இப்படியே போறேன். இல்லனா நெக்ஸ்ட் ஒரு சிக்னல் வரும். அதுல ரைட்ல கட் பண்ணி ஷார்ட் கட்ல போறேன்” என்றான்.
சீக்கிரம் போய் சவுரவை பார்க்க நினைத்ததால், “எனக்கு இங்க ரொம்ப தெரியாது. ஆனா சீக்கிரமா போகணும்” என்றாள்.
“ஓகே மேம். நோ ப்ராப்ளம். ஷார்ட் கட்லயே போயிடலாம்” என்றவன்… அடுத்து வந்த போக்குவரத்து சமிக்கையில் வலப்பக்கம் எடுத்துக் கொண்டான்.
உடனே கூட்டாளிகளுக்கு, ‘மாட்டிக் கொண்டாள். வந்துடுங்க’ என்று செய்தி அனுப்பிவிட்டு, செல் ஃபோன் சிக்னல் ப்ளாக்கரை [Blocker], ஆன் செய்தான்!
இது… யாரிடமும் அவள் உதவி கேட்கவோ, யாரும் அவள் இருக்கும் இடத்தை அறியவோ கூடாது என்பதற்காக!!
செய்தித்தாளைப் பார்த்திருந்தவள், சற்றுதூர பயணத்திற்குப் பின் சூழலைப் பார்த்தாள். இருள் சூழ்ந்து இருந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லை. அங்கங்கே ஒன்றிரண்டு கடைகள் இருந்தன. வாகன போக்குவரத்தும் பெரிதாக இல்லை. சில கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன.
சட்டென பூஜாவிற்குள் ஓர் அபாய மணி அடித்தது!
ரியர்வியூ மிர்ரரில் தெரியும் கரணின் கண்களைப் பார்த்தாள். அவனும் அதில் தெரியும் அவள் முகத்தைப் பார்த்தான். மெல்ல சிரித்து, “இன்னும் டென் மினிட்ஸ் மேம்” என்றதும், “ம்ம்” என்று அவளும் சிரித்து வைத்தாள்.
ஏதோ தவறாகப் பட்டது!
அலைபேசி எடுத்துப் பார்த்தாள். அதில் சமிக்கை துளியும் இல்லை! திடீரென ஏன் இப்படி? இவன்தான் மோசடி செய்பவனா? மாட்டிக் கொண்டோமோ? என்ற கேள்விகள் தந்த பயத்தில் உடலெங்கும் வியர்க்க தொடங்கியது… பூஜாவிற்கு!
