Kathambari Novels
அத்தியாயம் – 17
உடனே வெற்றி ஆயாவிற்கு அழைத்தான்.
ஒரு அழைப்பிலே ஆயா எடுத்துவிட்டார். “ஏய், என்னப்பா நீ இப்படி இருக்க? தமிழு உன்னய தேடி தேடி தவிச்சு காய்ச்ச வந்து கெடக்கு. நீ என்னடானா போனை ஆப் பண்ணி போட்ருக்க. உனக்கு புண்ணியமா போகும் ஒரு தடவ அந்த புள்ளய பாரு” – எக்கச்சக்க எரிச்சலில் ஆயா பேசினார்.
அவர் பேசப் பேசப் பதற்றத்துடன் நெகிழிப்பையில் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, “கிளம்பிட்டேன், வந்திடுவேங்க” என்று அழைப்பைத் துண்டித்து அவசரமாகப் பணப்பையை எடுத்தவனிடம் சட்டென தயக்கம் வந்துவிட்டது; வீட்டில் யாரவது தடுத்தால்… என்ன செய்ய… என்று!
தயகத்தின் ஊடேயே உறுதியாய், ‘யார் தடுத்தாலும் போவேன்’ என்று மனம் சொல்லிக் கொண்டது.
இருந்தாலும், ‘கடவுளே யாரும் இருக்க கூடாது’ என்று வேண்டியபடி அறையிலிருந்து வந்தான்.
வீடு அமைதியாக இருந்தது. பேரப் பிள்ளைகள் அடம்பிடித்ததால் சந்திரன் அவர்களை அழைத்துக் கொண்டு பூங்கா போயிருந்தார். கலை, ஹரிணி அவர்களது அறையில் இருந்தார்கள்.
வெற்றி அவரசர அவசரமாக செருப்பை மாட்டிக் கொண்டு, கடகடவென்று படிக்கட்டுகளில் இறங்கி, ரயில் நிலையத்திற்கு வேகமாக நடந்தான். இரண்டு ரயில்கள் மாறி பாலத்திற்குச் சென்றான்.
ஆயா, ‘வெற்றி வர்றானாம்’ என்று ராணி, பகவதியிடம் சொல்லியிருந்தார்.
அவன் கம்பித் தடுப்பு பக்கம் வந்து நின்றதும், பக்ஸ் போய் அவன் சட்டயைப் பிடித்து, “ஏய் நீயெல்லாம் என்ன மனுசன். உன்னய இங்க வர வுட்டதே தப்பு. பாரு அந்த புள்ள எப்படி இருக்குதுனு” என்று சத்தம்போட்டான். வெற்றி தமிழைப் பார்க்க வரவில்லை என்று இதுவரை அடக்கிவைக்கப்பட்ட கோபத்தைக் காட்டினான்.
ஆயா, “அவனுக்கு என்ன பிரச்சனயோ, வுடு” என்று பகவதியைப் பிடித்து இழுத்தார். வெற்றி வந்து நின்றதும் அவன் தோற்றத்தைப் பார்த்திருந்தார்.
கசங்கியிருந்த உடை, கலைந்திருந்த கேசம், சோர்ந்திருந்த முகம், கண்களில் இருந்த அயர்வு, இரண்டு நாட்கள் வளர்ந்திருந்த தாடி, கையிலிருந்த கட்டு எல்லாம் பார்த்ததால் கோபத்தைக் காட்டாமல் நிதானமாக இருந்தார்.
ராணியும் வெற்றி வந்து நின்ற நிலையைப் பார்த்து, ‘ஐயோ என்னாச்சு இந்த சாருக்கு’ என்று அதிர்ந்திருந்தாள். ஆயா பக்ஸை பிடித்து இழுத்ததும், “என்ன பக்ஸ் இவ்ளோ கோவம், பொறுமையா இரு” என்றாள் ராணி.
அதன்பின்தான் பக்ஸ் நிதானத்திற்கு வந்து வெற்றியைப் பார்த்தான். அவன் கைக்கட்டைப் பார்த்தபின், “வுடு ஆயா, நான் கோவப்படல” என்றான்.
அதற்குள் வெற்றி வேகமாகக் கம்பித் தடுப்பைச் சுற்றி உள்ளே வந்து தமிழ் பக்கத்தில் போய் அமர்ந்தான்.
வாடிப்போன பூ போல் படுத்திருந்தாள் குழந்தை. அன்று பூங்கா போகையில் போட்ட கவுன், கையில் உடைந்த பலூன் நூலை இன்னமும் பிடித்திருந்தாள். உறங்கவில்லை. ஆனால் காய்ச்சல் இருந்ததால்… சரியாக சாப்பிடாததால் வந்த சோர்வில் கண்களை மூடியிருந்தாள். அனத்தவும் செய்தாள்.
‘என்னால்தானே இப்படி’ என்று கண் கலங்கினான்.
“பேபி” என்ற அவளைத் திருப்பித் தூக்கப் பார்த்தான். உடல் சூட்டை வைத்து காய்ச்சலின் அளவு தெரிந்துவிட்டது. அவன் வந்திருக்கான் என்பதை அவள் உணரவேயில்லை. “பேபி இங்க பாரு அப்பா வந்துட்டேன்” என்றான். அவன் கைப்பிடியில்தான் உட்கார்ந்திருந்தவள் சோர்ந்து மீண்டும் சாய்ப்போனாள்.
பயந்துவிட்டான் வெற்றி. பயத்தில் கண்ணீர் வந்துவிட்டது.
ஆயா வந்து, “ஆஸ்பத்திரி கூட்டிப்போனா சரியாயிடும் பா” என்றார்.
“ம்ம்ம்” என்றான் குரல் நடுங்க. தோள் பக்கச் சட்டையில் கண், முகத்தைத் துடைத்துவிட்டு, அவளைத் தூக்கிக் கொண்டு கம்பித் தடுப்பைத் தாண்டிப் போய் நின்று சாலையின் இருபுறமும் பார்த்தான்.
உடனே பக்ஸ், “என்ன சார் வேணும்” என்றான் வெற்றியிடம்.
வெற்றி வந்ததும் கோபப்பட்டிருந்தான். ஆனால் அவனுக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்ததும் பக்ஸால் கோபத்தைக் காட்டவும் முடியவில்லை. அதை பிடித்துக் கொண்டு இருக்கவும் தோன்றவில்லை. அதுதான் உதவி வேண்டுமா என்ற பொருளில் அப்படிக் கேட்டிருந்தான்.
பக்ஸ் கோபத்தில் நியாயம் இருப்பதாக வெற்றி நினைத்தான். அதனால் அவன் கேட்டதும், “ஆட்டோ” என்றான். அதற்குமேல் வார்த்தை வரவில்லை. தொண்டை அடைத்திருந்தது. வார்த்தைகள் வருவதற்கு சிரமப்பட்டது.
“இரு சார்” என்று கம்பியைத் தாண்டிக் குதித்து, “ண்ணோவ் ண்ணோவ், இங்க வா ண்ணா. ஆஸ்பத்திரி போனும் சீக்கிரம் வா ணா” என்று தூரத்தில் நின்ற ஆட்டோவை அழைத்தான்.
அந்த நேரத்தில் வெற்றி, “காய்ச்சல் எப்பருந்து இருக்கு” என்றான். மருத்துவர் கேட்டால் விவரம் சொல்ல வேண்டுமே.
“காலைலருந்து காய்ச்ச இருக்கு சார். சரியா சாப்பிடல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பால் குடிச்சா. ஆனா வாந்தி எடுத்திட்டா” என்றாள் ராணி.
ஆயா, “கைல கட்டுப் போட்ருக்கு, தனியா கூட்டிட்டு போயிடுவியா” என்றார்.
‘போயிடுவேன்’ என்பது போல் தலையாட்டினான்.
ஆட்டோ வந்து நின்றது. “ஏறிக்கோ சார்” என்றான் பக்ஸ்.
வெற்றி ஏறியதும் ஆட்டோ கிளம்பியது. ஓட்டுனரிடம், “பக்கத்தில இருக்க ஆஸ்பத்திரிக்கே போயிடுங்க” என்றுவிட்டு, தமிழை மடியில் வைத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
விரைவாக அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு வந்து நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர்.
இறங்கியதும் வெற்றி, “பார்த்துட்டு வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க” என்றான் படபடவென்று. இரவில் ஆட்டோ கிடைப்பது சிரமம். அதுவும் இன்று ஞாயிறு வேறு.
“வெயிட்டிங் போடுவேன்” என்றார்.
தலையாட்டிவிட்டு உள்ளே விரைந்தான்.
மருத்துவரைப் பார்க்கப் பெயர் சொல்லி பதிந்தான். ‘காச்சல் ரொம்ப அடிக்கு, சீக்கிரமா பார்க்க முடியுமா’ என்று கேட்டான். ‘பார்க்கிறோம்’ என்றார்கள் அவர்களும். காத்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.
அமர்ந்த சற்றுநேரத்தில் தமிழ் மெது மெதுவாக கண் திறந்து திறந்து மூடினாள். பின் முழுதாகக் கண் திறந்து சுற்றிப் பார்த்தாள். அதன்பின்தான் வெற்றியின் முகம் பார்த்தாள். “பேபி” என்றான்.
அவனுக்கு கண்கலங்கியது. அவளுக்கும் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. மட்டியைக் கடித்து அழுகையை அடக்கினாள்.
“அப்பா வந்துட்டேன்ல, அழ கூடாது” என்றான். ‘இல்லப்பா அழுவேன்’ என்பது போல் உதட்டைப் பிதுக்கி… அப்படியொரு அழுகை அழ ஆரம்பித்துவிட்டாள். ஏங்கி ஏங்கி அழுதாள். அத்தனை ஏக்கம் வெளிப்பட்டது அவள் அழுகையில். மகளின் கண்ணீர், ஏக்கம் அவனை நிலைகுலையவைத்தது.
அங்கே காத்திருப்போர் என்னவென்று பார்த்தனர்.
“அழாத பேபி” என்று அவளைத் தூக்கி நடந்தான். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, தோளில் முகம் புதைத்து அழுதாள். எப்படிச் சமமாதானப்படுத்த என்று தெரியாமல், ‘அழாத பேபி’ என்று முதுகில் தட்டிக் கொடுத்தபடி, அந்த நடைகூடத்தில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு நடந்தான்.
படிப்படியாக அவள் அழுகை குறைந்தது.
அந்தநேரம் கலையிடமிருந்து அழைப்பு வந்தது. எடுக்கவா, வேண்டாமா என யோசித்தான். சொல்லாமல் வந்திருக்கோம் என்று எடுத்துவிட்டான்.
“டே! எங்கடா போன, உன்னால எங்க எல்லாருக்கும் தலைவலிதான்” என்றான் கலை கோபமாக.
“வீட்டுக்கு வந்து சொல்றேன் ணா. நீங்க தூங்குங்க, நான் நாளைக்குத்தான் வருவேன், அப்பாகிட்டயும் சொல்லிடு” என்றுவிட்டு வைத்துவிட்டான். கலை அடுத்துப் பேசவே இடம் கொடுக்கவில்லை.
நேரில் பேசினாலே புரிந்து கொள்வார்களா என்று தெரியவில்லை. இதில் அலைபேசியில் எப்படி? அத்தோடு இது அலைபேசியில் பேசும் விடயமில்லை. அதுபோல் இன்று… இந்த இரவில் வீட்டுக்குப் போய் நிற்கவும் மனமில்லை. நாளை போய் நிற்பதை நினைத்தால், தலை இப்போதே முனுமுனுத்தது.
முதலில் அவன் மகளைப் பார்க்க வேண்டும். மற்றது… மற்றவர்கள் எல்லாம் அப்புறம்தான் என்று நினைத்தான்.
அப்படி நினைத்த நேரத்தில் ஸ்வேதாவிடமிருந்து அழைப்பு வந்தது. ‘இவ ஏன் இப்ப கூப்பிடறா’ என்று அலைபேசி திரையைப் பார்த்து இருந்தான். எடுத்துப் பேச மனம் துளியும் நினைக்கவில்லை. அப்படியே விட்டுவிட்டான்.
ஆனால் திரும்பத் திரும்ப அழைப்பு வந்ததும் எடுத்து, “நான் இப்ப எதுவும் பேசற நிலைமையில இல்ல” என்றான்.
“ப்ளீஸ் ஒன்னே ஒன்னே கேட்டுக்கிறேன், நேத்துலருந்து பேச நினைச்சேன். நீங்க போன் எடுக்கல. அப்புறம் ஸ்விச் ஆஃப்னு வந்தது” என்றாள்.
“ப்ச் சீக்கிரம் சொல்லு”
“நாகு அண்ணா பத்தி போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கிறதா நேத்து உங்க அக்கா சொன்னாங்க” எனும்போதே எதற்காக அழைத்திருக்கிறாள் என்று புரிந்துவிட்டது. “எனக்கு அதுமாதிரி ஐடியாவே இல்ல. போதுமா உனக்கு. வேற எதுனாலும் அப்புறமா பேசறேன்” என்று வைத்துவிட்டான்.
மனம் உடைந்து போனான் வெற்றி.
‘சாப்பிட்டியா’ என்று கேட்காத அண்ணனும், அப்பாவும். கைக்காயம் பற்றிக் கேட்காமல் அண்ணனுக்காக பேசும் மனைவி. அவர்களிடம் அவன் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், கேட்கத் தோன்றாதா என்ற கேள்வி வந்தது.
அன்பு செலுத்த வேண்டிய உறவுகளிடமிருந்து வெளிப்பட்ட விலகல்தன்மை விரக்தியைக் கொடுத்தது. என்னமோ அந்த நேரத்தில்… இது அன்பில்லாத உலகம் என்ற ஒரு எதிர்மறை எண்ணம் வந்து வந்து அவனை வாட்டியது.
அவனைத் தேற்ற யாருமில்லை. மனம் ஆறாமல் காயம்பட்டுக் கொண்டே இருப்பது போலிருந்தது. மீண்டும் மகள் முதுகில் தடவிக் கொடுத்து அவளைத் தேற்றியபடி நடந்தான்.
இவர்கள் முறை வந்தது. வெற்றி விவரம் சொன்னான். மருத்துவரும் தமிழைப் பரிசோதித்தார். பயம், அழுகை காய்ச்சலுக்குக் காரணம் என்றார். நீரிழப்பு இருப்பதாகவும் சொன்னார். வாந்தி எடுத்திருப்பதால், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கொஞ்சமாக நீர் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்.
“கொஞ்ச நேரம் இங்கயே இருங்க. வாமிட் வரலைனா போகலாம்” என்று சில மருந்துகள் எழுதிக் கொடுத்தார்.
மருந்துச்சீட்டை வாங்கிக் கொண்டான். மருத்துவரைப் பார்த்ததுமே தமிழ் மீண்டும் அழ ஆரம்பித்தாள். பரிசோதிக்கும் போது, எடை பார்க்கும் போது அழுதவள்… இன்னும் அழுது கொண்டிருந்தாள். ‘அவ்ளோதான் முடிஞ்சிருச்சு, அழ கூடாது” என்று அவளைச் சமாதானம் செய்தபடி வெளியே வந்தான்.
தண்ணீர் எடுத்துவரவில்லை. பக்கத்தில் கடை இருந்தால் பிளாஸ்க் வாங்கி, வெந்நீர் நிரப்பி, தமிழுக்குக் கொடுக்க வேண்டும். செவிலியர்களிடம் கடை விவரம் கேட்டுவிட்டு மருத்துவமனை வாயில் வந்து இருபுறமும் பார்த்தான்.
அவன் வந்ததுமே ஆட்டோ ஓட்டுநர் வந்து நின்றார்.
“இன்னும் கொஞ்சம் நேராகும், வெய்ட் பண்ணுங்க” என்றான். இவ்வளவு அழுகிறாள். நடந்து போக முடியாது என்று, “பக்கத்து தெருல இருக்க கடைக்கு போகணும், ஆட்டோ எடுத்திட்டு வாங்க சார்” என்றான் அவரிடம்.
அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தியபடி அவன் கேட்டதும், “எதுனா வாங்கணுமா தம்பி, நான் போய் வாங்கின்னு வர்றேன்” என்றார்.
என்ன தேவை என்று அவரிடம் சொல்லிவிட்டு, மருத்துவமனை உள்ளே வந்து அமர்ந்தான். சற்றுநேரத்தில் ஆட்டோகாரர் வெந்நீருடன் பிளாஸ்க் கொண்டு வந்து கொடுத்தார். “தேங்க்ஸ் சார்” என்று வாங்கிக் கொண்டான்.
மருத்துவர் சொன்னபடி தண்ணீர் கொடுத்துப் பார்த்தான். அரைமணி நேரம் ஆகியிருந்தது. வாந்தி எதுவும் இல்லை. செவிலியரிடம் சொன்னான். அவர்கள் மருத்துவரிடம் சொன்னார். மருந்துகள் சரியாகக் கொடுக்கும் படி சொல்லி, வீட்டுக்குப் போகச் சொன்னார்கள்.
தமிழ் அழுகை நன்றாகவே குறைந்திருந்தது. ஈரத் துடைப்பான்கள் வைத்து அவள் முகம், கழுத்து எல்லாம் துடைத்துவிட்டான். ஆட்டோவில் ஏறி மீண்டும் பாலம் நோக்கிப் பயணித்தார்கள்.
சற்றுநேரம் அசையாமல் அவன்மேல் சாய்ந்து வந்தவள், அதன்பின் அடிக்கடி அவன் முகம் பார்ப்பதும், நெஞ்சில் சாய்வதுமாக இருந்தாள்.
சாலை விளக்கு வெளிச்சத்தில் மகள் பார்வையின் பொருள் விளங்கவும், “உன்னவிட்டு அப்பா எங்கேயும் போமாட்டேன். என் கூடத்தான் இருப்ப. பயப்படாத” என்றான்.
‘இப்படித்தான பா அன்னைக்கும் சொன்னீங்க’ என்பது போல் குழந்தை முகம் அழுகைக்குத் தயாரானது. அதைப் புரிந்தவன், “அது… அப்பாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல பேபி” என்று கைக்காயத்தைக் காட்டிவிட்டு, “அதான் அப்பா வரல” என்று மகளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
ஒரு கையால் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு, வாகாக அவன்மேல் சாய்ந்து, இன்னொரு கையால் அவன் காயத்தை தடவிக் கொடுத்தாள்!
அவனின் எல்லா காயத்திற்கும் மகளின் அந்தச் செயல் மருந்து!!
மேம்பாலம் வந்ததும் பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கினான். பாலத்தின் அடியில் செல்லாமல் எதிரே இருந்த பூங்கா பக்கம் போனான். பூங்காவை ஒட்டிச் செல்லும் நடைபாதையில் போட்டிருந்த ஒரு சிமெண்ட் இருக்கையில் தமிழை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
வரும்போது வாங்கியிருந்த இட்லியை வெந்நீர்ல் தொட்டுக் கொடுத்தான். அவன் கொடுக்க கொடுக்க கொஞ்சம் கொஞ்சமாக உண்டாள். ஒன்றரை இட்லிதான் சாப்பிட்டாள். காய்ச்சல் இன்னும் இருந்ததால், இதுவே போதும் என்று வெந்நீர் கொடுத்தான்.
பின் மருந்து தந்தான். “தூங்கு” என்றான். கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருந்தாள். தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு எழுந்து நடந்தான்.
இரண்டு நாளாக அழுது… ஏங்கி… சாப்பிடாது… காய்ச்சல்… என்று வாடிய தமிழ், இப்போது அழுகை நின்று… சாப்பிட்டு… காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக் கொண்டதோடு, இப்படி அப்பாவின் தோளில் சாய்ந்தே இருந்ததில்… உடனே உறக்கத்திற்குச் சென்றுவிட்டாள்.
பக்ஸ், ராணி, ஆயா… பாலத்தின் எதிரே இருந்து அவ்வளவு நேரமும் அவனது செயல்களையே பார்த்திருந்தார்கள். “தூங்கிட்டா இங்க வந்து படுக்க போடு சார், எவ்ளோ நேரம் கைல வெச்சிருக்க முடியும்” என்றான் பக்ஸ். சாலையின் அந்தப் பக்கம் இருந்தே கத்தினான்.
“பரவாயில்ல” என்றான் வெற்றி. “ஊசி வேண்டாம்னு டாக்டர் மருந்து மட்டும் கொடுத்தாரு. சாப்பிட வச்சி கொடுத்திருக்கேன், சரியாயிடுவா” என்றான். அவர்கள்தான் இரண்டு நாளாகப் பார்த்துக் கொண்டதால், மருத்துவமனை சென்று வந்து விவரத்தைச் சுருக்கமாகச் சொன்னான்.
ஆயாதான், “பக்ஸ் அந்த தம்பி சாப்பிட்டுச்சான்னு கேளு” என்றார்.
அவர்கள் சாப்பிட்டு முடித்திருந்தனர், ஆனால் பொங்கிய சோறு கொஞ்சம் இருந்தது. இன்னும் ஆயா சாப்பிடவில்லை. பக்ஸ் சாலையைக் கடந்து வெற்றி அருகே போய் நின்று, ” சாப்பிட்டியா சார்?” என்றான்.
“இல்ல, பசிக்கல” என்றான் தமிழின் முதுகில் தட்டிக் கொடுத்தபடியே.
அங்கிருந்தே ஆயாவைப் பார்த்து பக்ஸ், ‘சாப்பிடல’ என்று கையசைத்தான். ஆயா அவனை வரச் சொல்லி, “பக்ஸ், அந்த தம்பிக்கு கடைல எதுனா வாங்கி கொடுப்போமா” என்று கேட்டார்.
“உனக்கும் சேர்த்தே வாங்கின்னு வர்றேன். நீயும் உன்னும் சாப்டல” என்று போகப் போனவன் ராணி நிற்பதைப் பார்த்து, “நீ தூங்கு, அவர் இங்கதான் இருப்பார் போல. நான் பாத்துக்கிறேன்” என்றான். சரியென்று சென்று ராணி கூடாரத்தில் மகளருகில் படுத்துக் கொண்டாள்.
பக்ஸ் இட்லி வாங்கி வந்தான். அதை எடுத்துக்கொண்டு ஆயா பூங்கா பக்கம் வந்து, சிமென்ட் இருக்கையின் ஒரு ஓரம் அமர்ந்து, “வா, சாப்டலாம்” என்றார் வெற்றியிடம். “இல்ல, எதுக்கு” என்று வராமல் நின்றான். “கைல அடிபட்ருக்கு சாப்டாம எப்படி இருப்ப, வா வந்து சாப்டு” என்று பொட்டலத்தைப் பிரித்தார்.
இருக்கையின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்தான். இருக்கையின் மேல் பிரித்து வைத்திருந்த பொட்டலத்தின் இட்லியில் சாம்பார் ஊற்றி, “சாப்பிடு” என்றார். அவருக்கு வாங்கிய இட்லி பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டார்.
சாப்பிட ஆரம்பித்த பின்தான் பசி அளவே வெற்றிக்குத் தெரிந்தது. இரண்டு நாளாக சரியாகவும் சாப்பிடவில்லை. கடகடவென்று சாப்பிட்டான். அவன் சாப்பிடும் வேகம் பார்த்து, “கொஞ்சம் சோறு இருக்கு, எடுத்து வர சொல்லவா. சாப்பிட்டுக்கிறியா?” என்றார்.
அப்படி அன்பாகக் கேட்பவரிடம் நாசுக்கெல்லாம் பார்க்கத் தோன்றவில்லை வெற்றிக்கு. சரியென்றான்.
பகவதியிடம் சோற்றை எடுத்து வரச் சொன்னார். அவனும் கொண்டு வந்து வைத்துவிட்டு, “கொழம்பு இல்ல சார், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றான்.
“பரவாயில்ல” என்று இட்லிக்கு கொடுத்த சாம்பாரை வைத்துச் சாப்பிட்டான் வெற்றி. “நீங்க சாப்பிட்டிங்களா” என்றான் பகவதியிடம்.
“என் பொண்ணுக்கு ஊட்டிவிட்டுக்கினே சாப்ட்டேன் சார்” என்றவன், “தமிழ் படுக்கிற இடத்தில மாத்திர கவர் இருக்கு. நீ போடணுமா சார்” என்றான்.
தமிழை மருத்துவமனை அழைத்துச் செல்லும் அவசரத்தில் கொண்டு வந்த மருந்துகளை அப்படியே வெற்றி விட்டுப் போயிருந்தான். இப்போது பக்ஸ் கேட்டதும்தான் ஞாபகத்திற்கு வந்தது. ஆமாம் என்றான்.
உடனே பக்ஸ் போய் அதை எடுத்து வந்தான். கொஞ்சம் தண்ணீரும் எடுத்து வந்திருந்தான். எல்லாம் கொடுத்துவிட்டு, வழக்கமான நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டான்.
அங்கே ஆட்டோக்காரர்… இங்கே ஆயா, பக்ஸ்… சின்னச் சின்னச் செய்கைகள் மூலம் இவர்கள் காட்டும் அன்பில்… உலகமே அன்பானது என்ற ஒரு நேர்மறை எண்ணம் அந்த நேரத்தில் வந்திருந்தது வெற்றிக்கு.
ம்! அன்பிலார் அங்கங்கே தென்படலாம், மற்றபடி இது அன்புசூழ் உலகுதான்!
அவன் சாப்பிட்டதும் ஆயா தமிழை வாங்கிக் கொண்டு, “போ… போய் கை கழுவிக்கின்னு வந்து மாத்திரை போட்டுக்கோ” என்றார். அவனும் அப்படியே செய்துவிட்டு, தமிழை வாங்கிக் கொண்டான்.
“என்னப்பா, எதுனா பிரச்னையா, கைல எப்படி அடிபட்டது” என்றார்.
மனதின் அலைக்கழிப்பை அவரிடம் சொல்லத் தோன்றியது. ஆனால் எங்கே ஆரம்பித்து, எப்படி முடிக்க என்று தெரியவில்லை. “அது… ஆளாளுக்கு ஒரு பக்கம் இழுக்குறாங்க. எந்த பக்கம் சாயறதுனேதெரியல” என்றான்.
அமைதியாக இருந்தார். என்ன பிரச்சனையில் இருக்கிறான் என தெளிவாகப் புரியாவிட்டாலும், அவன் நிலை புரிந்தது. எதுவும் சொல்லமால் எழுந்து போகப் போனவர்… நின்று திரும்பினார்.
அவன் நெஞ்சில் சாய்ந்து நிம்மதியாக உறங்கும் குழந்தையைப் பார்த்தார். “எந்தப் பக்கமும் சாயாமா நேரா நில்லுப்பா, பாரு புள்ள உன்மேல எப்படி சாஞ்சிருக்குன்னு. நீ சாஞ்சா அது வுழுந்திடும், பாத்துக்கோ” என்று மட்டும் சொல்லிச் சென்று படுத்துவிட்டார்.
சட்டென அவனுக்கு ஒரு தெளிவு வந்தது. இனி வெற்றியாக யோசிக்க கூடாது. தமிழரசியின் தந்தையாக யோசிக்க வேண்டும், முடிவுகள் எடுக்க வேண்டும். ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்துக் கொண்டான்.
அமர்ந்தே இருந்தால் கொசுக்கடி தெரிந்தது. எழுந்து திரும்பவும் நடந்தவன், நான் வீட்டில் இல்லை என்று அக்காவிற்குத் தெரியுமா… தெரிந்தால் இந்நேரம் அழைத்திருப்பாளே. மாமா வந்திருப்பதால் சொல்லியிருக்க மாட்டார்கள்.
இன்று அவளுக்கு சமையல், வீட்டுப் பொறுப்புகள் அதிகம் இருந்திருக்கும். இல்லையென்றால், ‘சாப்பிட்டியா… கை வலி எப்படி இருக்கு’ என்று அவனைக் கவனித்திருப்பாள். என்னமோ அக்காவிற்கு அழைத்துப் பேச நினைத்தான். நேரம் பார்த்துவிட்டு, நாளை பேசிக்கலாம் என்று நடந்தான்.
பக்ஸ் வந்து, “தூங்கலயா சார், மாத்திர வேற போட்ருக்க” என்றான்.
“கொசு ரொம்ப கடிக்குது. அதான் நடக்கிறேன்” என்றான் வெற்றி.
“கொசுவத்தி இருக்கு சார், எடுத்து வரட்டுமா”
சரியென்ற வெற்றி, அந்த இருக்கையில் படுத்து, அவனது நெஞ்சில் தமிழைப் படுக்க வைத்துக் கொண்டான்.
கொசுவர்த்தி கொண்டு வந்து வைத்த பக்ஸ், ஒரு போர்வையைக் கொடுத்து, “கீழ விரிச்சிக்கோ சார்” என்றான். தமிழ் இடத்தில் வந்து படுக்கச் சொல்ல நினைத்தான். அங்கே படுக்க வெற்றி யோசிக்கலாம் மாட்டான். என்னமோ தனியாக இருக்க நினைக்கிறான் போல என்று எதுவும் சொல்லவில்லை.
வெற்றி போர்வையைக் கீழே விரிக்காமல், நெஞ்சில் படுத்திருந்த மகளுக்கு மூடிவிட்டான். காய்ச்சல் அடிக்கிறது. இரவு ஆக ஆக குளிர வேறு செய்தது.
அவன் செயலைப் பார்த்த பக்ஸ் முகத்தில் ஒரு சின்ன புன்னகை. “நிம்மதியா தூங்கு சார், நான் அந்த சேர்லதான் உக்காந்துகினு இருப்பேன்” என்றான்.
“ஐயோ எதுக்கு, நீங்க தூங்குங்க” என்றான் வெற்றி.
“எனக்கு இது பழக்கம்தான். ஆயா, என் பொண்டாட்டி, புள்ள தூங்குறாங்க. இந்த டைம்ல நானும் தூங்குறது சேப் இல்ல சார், டெய்லியும் இப்படித்தான். நீ பயப்படாம தூங்கு சார்” என்று போய் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
வாகனங்கள் போகாத சாலை அருகில், வானம் பார்த்துப் படுத்திருந்தான் வெற்றி. தூங்கக் கூடாது படுத்து மட்டும் இருக்க வேண்டுமென நினைத்தான். ஆனால் இருந்த அயர்வில் தன்னையும்மீறி உறங்கிவிட்டான்.
காலை ஆனது. சாலைப் போக்குவரத்து ஆரம்பித்திருந்தது. ஆட்கள் நடமாட ஆரம்பித்திருந்தனர். அன்று வானம் மேகமூட்டமாக இருந்தது. அதனாலா, இல்லை இரண்டு நாளாக சரியாக உறங்காததாலோ, வெற்றியும் தமிழும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
அந்தப் பக்கம் ஆட்கள் சத்தம், வாகன ஒலி அதிகமான பின்தான் கண்ணைத் திறந்தான். சூழலைப் பார்த்ததும் மகளைக் கவனமாகப் பிடித்துக் கொண்டு எழுந்தான். அவனிடம் அசைவு வந்ததும் அவளும் விழித்துவிட்டாள்.
அவள் நெற்றி, கழுத்தைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் இல்லை. லேசான சூடு மட்டும் இருந்தது. சற்றுத்தள்ளி இருந்த கடையில் தண்ணீர் வாங்கி முகம் கழுவிக் கொண்டான். அவளுக்கும் கழுவிவிட்டான். அவளுக்குப் பால் வாங்கி ஆற்றிக் கொடுத்துவிட்டு, அவன் தேநீர் குடித்துக் கொண்டான்.
எழுந்ததிலிருந்து அவன் முகத்தை முகத்தைப் பார்த்தாள். “அப்பா கூடத்தான் பேபி இனி நீ இருப்ப, அப்பாக்கும் நீ இல்லாம இருக்க முடியாது” என்று அவள் பார்வையைப் புரிந்து சொன்னான். அப்படியே அவளைத் தூங்கிக் கொண்டு, பாலத்திற்குச் சென்றான்.
அவன் வந்ததும் ராணி பக்ஸூம் வந்து நின்றனர். ஆயாவும் வந்துவிட்டார்.
அவன் முடிவை அவர்களிடம் சொல்ல வேண்டும். தமிழ் இனி என்னிடம்தான், என் மகளாகத்தான் வளர்வாள் என்று தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அதை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல வரவில்லை. “நான் தமிழ கூட்டிட்டு போறேன்” என்று மட்டும் சொன்னான்.
அவன் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் ராணிக்கும், பகவதிக்கும் புரிந்தது. அதேநேரம் தெளிவாகச் சொன்னால் நன்றாக இருக்குமென இருந்தது. ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் எந்தக் கேள்வியைக் கேட்க என்று யோசித்து நின்றார்கள்.
ஆயா வெற்றியைப் பார்த்தார். அவனுக்கும் பதில் சொல்ல எளிதாக இருக்க வேண்டும். அதேநேரம் அவர்களுக்கும் தெளிவான, விளக்கமானப் பதிலாக அது இருக்க வேண்டும். அப்படி ஒரு கேள்வி கேட்டால் போதும்.
எப்போதும் கேட்கும், ‘எப்ப கொண்டு வந்து விடுவ’ என்று கேள்வியைச் சற்று மாற்றி, “திருப்பிக் கொண்டு வந்து வுடுவியா” என்று கேட்டார்.
கண்ணோரம் கலங்க, ‘மாட்டேன்’ என்று அழுத்தமாகத் தலையசைத்தான்.
ராணிக்கு கண்ணீர் வந்துவிட்டது. பக்ஸ், “கூட்டிட்டு போ சார், அந்த புள்ள நீ இல்லாம இருக்காது” என்றான். ஆயாவும் மலர்ந்த முகத்துடன் நின்றார்.
சிறு புன்னகையுடன் வெற்றி, “நம்ம போலாமா” என்றான் தமிழிடம். அவளும் வேகமாகத் தலையசைத்து அவன் தோளில் முகம் சாய்த்தாள்.
அந்தநேரம் குணா வந்து நின்றான்!
