Kathambari Novels
அத்தியாயம் – 16
அறையில் படுத்திருந்த வெற்றியின் முகம் அத்தனை சோர்வை, அயர்வைக் காட்டியது. நேற்று நடந்ததை நினைக்க நினைக்க, ஏன் இப்படி என்றுதான் தோன்றியது. அதை நினைக்கக்கூட பிடிக்கவில்லை என்பதுபோல் கண்களை மூடிக்கொண்டான். மனம் அழுத்தியது… வலித்தது.
நேற்று எழுந்ததும் சீக்கிரம் கிளம்பி தமிழைப் பார்க்கப் போக வேண்டும் என்றுதான் எழுந்திருந்தான். அன்று அங்கிருந்து கிளம்புகையில் அவளிடம் அப்படித்தானே சொல்லித் தேற்றி வந்திருந்தான். அவளை மட்டுமல்ல, அவன் மனதையுமே அப்படித்தானே தேற்றி இருந்தான்.
அதனால்தான் எழுந்ததும் தமிழைப் பார்க்கக் கிளம்பினான். அறையிலிருந்து அவன் வெளியே வந்தபோது சாந்தியும் சந்திரனும் பேசிக் கொண்டிருந்தனர். ‘வா க்கா’ என்றுவிட்டு யோசனையோடு குளிக்கப் போனான்.
சனி, ஞாயிறுகளில் சாந்தி இங்கே வருவது அரிது. வார இறுதிச் சிறப்புச் சமையல், அடுத்த வாரத் தேவைக்கான பொருட்கள் வாங்குவது, வீட்டைச் சுத்தம் செய்வது, பிள்ளைகளைக் கவனிப்பது என்று வேலை நிமிர விடாமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.
இன்று அதிசயமாக அவள் வந்திருக்கவும், ‘என்ன விசயமா இருக்கும்’ என்ற யோசனையில் குளித்து முடித்து கிளம்பி வந்தான்.
அவன் வந்ததும், “என்னடா இது” என்று அவன் நேற்று எடுத்துப் போயிருந்த பையைக் காட்டிக் கேட்டாள் சாந்தி.
தண்ணீர் புட்டியும், பாதி தீர்ந்துபோன பிஸ்கட் பொட்டலமும் இருந்தது. ‘என்ன சொல்லப் போகிறான்’ என்று அவன் அப்பாவும் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு நொடி ஒன்றும் சொல்லாமல் நின்றான். அடுத்த நொடி, “நேத்து வெளிய போயிருந்தேன், அப்ப எடுத்துட்டு போனது. அப்பாட்ட கூட சொல்லிட்டு தானே போனேன் க்கா” என்று சமாளித்தான்.
“சும்மா சொல்லாதடா, நீ இப்படி வெண்ணி தண்ணி பிஸ்கட்ன்னு எல்லாம் எடுத்துட்டு என்னைக்கு வெளிய போயிருக்க” என்றாள்.
என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாமல் நின்றான். அவன் அப்பா வேறு கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அது எதற்கு என்றும் தெரியவில்லை.
“ஹரிணி சொல்றா… என்னமோ நீ சின்ன பிள்ளைக்கு செய்ற மாதிரி சாப்பிட செஞ்சு எடுத்துட்டு போறதா, எதுக்குடா” என்றாள் சாந்தி.
இது எப்படித் தெரிந்தது என்று திகைத்தான் வெற்றி.
குழந்தைகளுக்குப் பிடித்தது போல் உணவு எடுத்துப் போக என்ன அவசியம் வந்தது இவனுக்கு. என்ன முடிவில் இருக்கிறான் இவன் என்று சந்திரனுக்குக் கோபம். “நேத்து வெளிய போறதா சொல்லிட்டு எங்கடா போன” என்றார்.
வெற்றி பேசாமல் நின்றான்.
“அப்பா கேட்கிறார்ல, சொல்லுடா” என்று குரல் உயர்த்தினாள் சாந்தி.
அங்குதான் கலை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு தோசை எடுத்து வந்து வைத்த ஹரிணி, “அத ஏன் அவன்கிட்ட கேக்கிறீங்க” என்று ஒரு தாளை எடுத்து வந்து, “முயல் கஃபே பில். வெற்றி கொண்டு போன பேக்ல இருந்தது. உங்க தம்பி கிண்டி சில்ட்ரன்ஸ் பார்க் போயிருக்கான்” என்றாள்.
கலை என்ன மனநிலையில் இருந்தானோ… “வெற்றி என்ன செய்றான், ஏது செய்றான்னு செக் பண்ணிட்டே இருக்காதா” என்றான் மனைவியிடம். “அவன் இன்னும் சாப்பிடல, முதல சாப்பிடட்டும், அப்புறம் பேசுங்க” என்றான் அக்கா, அப்பாவிடம். “நீ வாடா, வந்து உட்காரு” என்றான் தம்பியிடம்.
அக்கா, அப்பாவைத் தாண்டிப் போய் வெற்றி உட்காரவும்… சந்திரன், ” நானும் அக்காவும் நேத்து உனக்கு ஃபோன் போட்டப்ப ஏன்டா எடுக்கல” என்றார்.
என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்றதும், கலை பேசாமல் மகளுக்கும் மகனுக்கும் ஊட்டிவிட்டான். அதைப் பார்த்ததும் வெற்றிக்கு தமிழ் ஞாபகம் அதிகமானது. அவளைப் பார்க்க கிளம்பியவனுக்கு, அப்பா, அக்கா பேசுவதைப் பார்த்தால் சீக்கிரம் விடமாட்டார்கள் போல் தெரிந்தது.
வெற்றி இன்னமும் அமைதியாகத்தான் இருந்தான்.
சாந்தி, “வெற்றி ஏதாவது பேசுடா” என்றாள். சந்திரன், “இத அப்புறம் பேசலாம். நீ என்கிட்ட சொன்னத, அவன்கிட்ட சொல்லு” என்றார் மகளிடம்… என்னமோ அதுதான் முக்கியம் போல.
அப்பா சொன்னதும், “வெற்றி, ஸ்வேதாக்கு இரண்டாவது கல்யாணம் பண்ண, அவ வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்” என்றாள் சாந்தி.
இதை வெற்றியிடம் சொல்லவே நேற்று அவனுக்கு அழைத்திருந்தாள் சாந்தி. அவனிடம் சொல்ல முடியவில்லை என்றதும் அப்பாவிடம் சொல்லிவிட்டாள். இதைச் சொல்லத்தான் நேற்று சந்திரனும் மகனுக்கு அழைத்திருந்தார்.
முதலில் அவரால் இதை நம்ப முடியவில்லை. ஆனால் மகள் சொல்கிறாளே? எப்படி நம்பாமல் இருக்க முடியும். உண்மை என்றதால்தான் தன்னிடம் வந்து சொல்லியிருக்கிறாள். இல்லை என்றால் அப்படியே விட்டிருப்பாளே.
அதோடு ஸ்வேதா அம்மா ஈஸ்வரி இப்படிச் செய்கிறவர்தான். ஈஸ்வரியிடம் போய், ‘என்ன இதலாம்’ என்று சண்டை போடும் அளவிற்கு கோபம் வந்தது சந்திரனுக்கு. இன்னும் அவரிடம் கோபமும் எரிச்சலும் மண்டிக் கிடந்தது. ஏன் இவன் வாழ்க்கை இப்படி என்று மகனைப் பாவமாகப் பார்த்தார்.
தோசை எடுத்து வந்து ஹரிணி அதிர்ந்து, “அச்சோ என்ன இதலாம்” என்றாள். வெற்றியிடம், “உனக்கு இது தெரியுமா” என்று கேட்டாள்.
“அவனுக்கு தெரிஞ்சா நம்மகிட்ட சொல்லிருப்பானே” என்றார் சந்திரன்.
அவர்கள் பேச்சைக் கேட்கக் கேட்க வெற்றிக்கு எங்காவது ஓடிவிடலாம் போல இருந்தது.
அவனைப் பார்த்த ஹரிணி, “எப்படித்தான் இத தாங்க போறானோ வெற்றி. வாயை திறந்து எதும் கேட்டுக்கவும் மாட்டான்… பாவம்” என்றாள்.
“நாங்கலாம் இருக்கிறப்ப அவன் ஏன் தனியா தாங்கணும்” என்றார் சந்திரன்.
“அவன் கேட்கலைனா என்ன, நாங்க இருக்கோமே அவனுக்காக கேட்க” என்ற சாந்தி, “வாங்க பா, போய் என்னென்னு கேட்கலாம்” என்றாள் அப்பாவிடம்.
உடனே, “க்கா வேண்டாம்” என்று எழுந்துவிட்டான் வெற்றி.
கலை, “க்கா, இன்னைக்கு சனிக்கிழமை, லீவு நாள். நாகுவும் வீட்ல இருப்பான். அவன் வீட்டு முன்னாடி போய் நின்னு கத்தி, தேவையில்லாம பிரச்சனையை பெருசாக்காத” என்றான். “அவங்க இன்னொரு கல்யாணம்னு யோசிக்கிறப்ப, நாமளும் அப்படி யோசிக்கலாமே” என்று முனுமுனுத்தான்.
“அதுக்காக இத அப்படியே விட சொல்றியா? இவனுக்காக கேட்க ஆள் இல்லனு நினைச்சுட்டாங்களா? நாகு இருந்தா என்ன, நான் போய் கேட்பேன்” என்றாள். “பிரச்சனை ஏற்கனவே பெருசாத்தான் இருக்கு” என்று முனுமுனுத்தாள்.
“இவன் இப்படியே சொல்லிட்டு இருக்கட்டும், வாமா நாம போய் கேட்டு வந்திடலாம்” என்று சந்திரன் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.
“ப்பா, வேண்டாம்! ப்ளீஸ், நான் சொல்றத கேளுங்க” என்று வெற்றி அக்கா அப்பாவிடம் கெஞ்சினான்.
அவர்கள் கேட்பதாக இல்லை. செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினார்கள். வெற்றி “வேண்டாம் வேண்டாம்” என்று அவர்கள் பின்னேயே போனான்.
அவர்களுடன் போக நினைத்து கலை எழுந்தான். அவன் முன் வந்து, “எங்க கிளம்பிட்டிங்க நீங்க?” என்று ஹரிணி வந்து நின்றாள்.
“ஏய் இவங்க தேவையில்லாத வேலை பாக்குறாங்க. நாகு எப்படினு, எவ்ளோ மோசமா பேசுவான்னு தெரியும்ல?”
“நாகு மட்டும் இல்ல, அந்த வீட்ல எல்லாரும் அப்படித்தான்”
“அதான் நான் அவங்க கூடப் போறேன்”
“போய்? அவங்க பேசறதலாம் கேட்டு அசிங்கப்பட போறீங்களா? வெற்றிக்கு தலையெழுத்து இதலாம் கேட்கணும்னு, உங்களுக்கு என்ன? பேசாம இருங்க! அவங்க என்னமோ பண்ணிக்கிடட்டும்” என்றவள், “பசங்களுக்கு சீக்கிரமா சாப்பாடு கொடுத்து முடிங்க” என்றுவிட்டுச் சென்றாள்.
“சே!” என்று அமர்ந்துவிட்டான் கலை.
‘க்கா, ப்பா வேணாம் ப்ளீஸ்’ என்று வெற்றி கெஞ்சிக் கொண்டு வருவதைக் கேட்காமல், சாந்தியும் சந்திரனும் ஸ்வேதா வீட்டு முன் வந்து நின்றார்கள். “ஏய், ஸ்வேதா! ஸ்வேதா! வெளிய வா!” என்று சாந்தி கத்தி அழைத்தாள்.
சாந்தி கத்தியதும் தெருவில் இருந்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் நின்று வேடிக்கைப் பார்த்தனர். “க்கா ஏன் இப்படி பண்ற, பேசணும்னா வீட்ல போய் பேசலாம்ல, இப்படி ரோட்ல நின்னு எதுக்கு” என்றான் வெற்றி.
“இவ வீட்டுக்குள்ள என்னய போக சொல்றியா” என்றுவிட்டு, “ஸ்வேதா வாடி வெளிய” என்றாள். இரண்டாவது தளத்தில்தான் ஸ்வேதா வீடு. அங்கிருந்தே சன்னல் வழியாகப் பார்த்த ஸ்வேதா வேக வேகமாக கீழே இறங்கி வந்தாள். வரும்போது அவளுடன் அவள் அண்ணன் நாகுவும் வந்தான்.
“எதுக்கு இப்படி வந்து நின்னு என் தங்கச்சி பேரை ஏலம் போட்டுக்கிட்டு இருக்கீங்க” என்றான் நாகு சத்தமாக. அப்படியே வெற்றியைப் பார்த்தான்.
வெற்றி நாகுவிடம் பேசுவது கிடையாது. குழந்தையில்லாததிற்கு வெற்றிதான் காரணம், இவனைத் திருமணம் செய்ததால் தங்கை வாழ்வு பாழாகிவிட்டது என்று நாகு வெற்றியை மோசமாகப் பேசியிருக்கிறான். இப்போது அவன் பார்த்ததும், வெற்றி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“சில விஷயம் தெரிய வந்தது என்னன்னு கேட்டு போக வந்தோம்” என்றாள் சாந்தி.
அந்த நேரம் தண்ணீர் பிடித்து வந்த ஈஸ்வரி, குடத்தை இறக்கி வைத்துவிட்டு, “அப்படி என்ன விசயத்தை கேள்விப்பட்ட” என்றார்.
“ஸ்வேதா ரெண்டாவது கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறீங்களாமே, அதான் என்னென்னு கேட்டு போக வந்தேன்”
உடனே ஸ்வேதா வெற்றியைத்தான் பார்த்தாள். ‘நான் சொல்லலை’ என்று வாயசைத்துச் சொன்னான். அவள் அதை நம்பியது போல் தெரியவில்லை.
ஈஸ்வரிக்கும் நாகுவிற்கும் ஒரு சிறு அதிர்ச்சி. வெற்றி வீட்டிற்குத் தெரியாமல் இதைச் செய்ய நினைத்திருந்தார்கள். இப்போது தெரிந்துவிட்டதே என்று எரிச்சல். வெற்றிதான் சொல்லியிருப்பான் என்று நினைத்தார்கள்.
“இவன்கிட்ட சொல்ல வேண்டாம்னு அன்னைக்கே சொன்னேன்ல, கேட்டியா நீ” என்று ஈஸ்வரி மகளைத் திட்டினார்.
“இவர் இப்படி பண்ணுவாருனு நான் நினைக்கலமா” என்று ஸ்வேதா வெற்றியைப் பார்த்தாள்.
அவர்கள் பேச்சை வைத்து, ‘அப்ப இது வெற்றிக்கு முன்னாடியே தெரியுமா, நம்மகிட்ட சொல்லவே இல்லயே’ என்று சாந்திக்கும் சந்திரனுக்கும் கோபம் கோபமாக வந்தது வெற்றிமேல். வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
சாந்தி, “நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள்.
“ஆமா பார்க்கிறோம் இப்ப அதுக்கென்ன” என்று எகிறினார் ஈஸ்வரி.
“இப்படி பேச வெட்கமா இல்ல? என் தம்பிகிட்டருந்து இன்னும் டைவர்ஸ் எதும் வாங்கல, அதுக்குள்ள உங்க பொண்ணுக்கு அடுத்த மாப்பிள்ளை பார்க்கிறது அசிங்கமா இல்லையா உங்களுக்கு” என்று சாந்தி கத்தினாள்.
“நல்லா கேளுமா இதுங்கள” என்றார் சந்திரன் கோபமாக.
“ஏய், வெட்கமா இல்லயா… அசிங்கமா இல்லயா… அது இதுன்னு பேசினா, அப்புறம் நடக்கிறதே வேற” என்று நாகுவும் கத்தினான்.
அக்கம் பக்கத்து ஆட்கள் வேடிக்கைப் பார்த்தபடி நின்றனர். ஸ்வேதாவிற்கு ஒருமாதிரி ஆகிப்போனது. “நான் அன்னைக்கே சொன்னேன்ல, உங்க வீட்ல சொல்லாதீங்கனு. இப்ப பாருங்க உங்க அக்கா என்ன பண்றாங்கனு. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு” என்றாள் கலங்கிய குரலில்.
“நான் பேசறதுதான் உனக்கு அசிங்கமா இருக்கா, உன் அம்மா மாப்பிள்ளை பார்க்கிறது அசிங்கமா இல்லயா” என்று நறுக்கென்று கேட்டாள் சாந்தி.
“க்கா ப்ளீஸ் இப்படிலாம் பேசாத” என்ற வெற்றி, “நான் யார்கிட்டயும் இத பத்தி சொல்லவே இல்ல” என்றான் ஸ்வேதாவிடம்.
“இதை என்னை நம்ப சொல்றீங்களா?” என்றாள் ஸ்வேதா.
“நிஜமா” என்று முன்னோக்கி வெற்றி வர, நாகு வந்து, “ஏய், சும்மா பக்கத்துல வந்து பேசற வேலை வச்சுக்காத” என்று வெற்றியின் நெஞ்சை பிடித்து தள்ளி நிறுத்தப் பார்க்க, அதில் தடுமாறி விழப் போன வெற்றி அங்கிருந்த ட்ரம்பில் விழுந்து, கீழே விழாமல் இருக்கச் சுவரை பிடிக்கப் போய், அங்கே சாய்த்து வைக்கப்பட்டிருந்த தகரத்தின் விளிம்பு கையைக் கிழித்துவிட்டது.
சாந்திக்கு சுர்ரென கோபம் தலைக்கு ஏறியது. “தள்ளி விடற வேலை எல்லாம் வச்சிக்காத” என்று நாகுவிடம் கத்தினாள். “ஐயோ என்னடா என்னாச்சு” என்று தம்பியை பார்த்தாள். “ப்பா ரத்தம் வருது பா” என்று அப்பாவிடம் பதறினாள். “கைய காட்டு டா பார்க்கலாம்” என்றாள் தம்பியிடம்.
“ஒன்னும் இல்லக்கா, வா போலாம்” என்றான் வெற்றி.
“என்னடா ஒன்னுமில்ல என்ன ஒன்னுமில்ல” என்று அவனிடம் கோபப்பட்டாள். நாகுமேல் இருந்த கோபத்தில், “என்ன ப்பா நீங்க ஒன்னுமே பேசாம சும்மா நிக்கிறீங்க, எதும் கேட்க மாட்டிங்களா” என்றாள் அப்பாவிடம்.
“நீ அவன பாரு” என்று மகளை மகனைப் பார்க்கச் சொல்லிவிட்டு, “புருஷன் இருக்கிறப்ப உன் பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண பாக்குற. அசிங்கமா இல்லையா ஈஸ்வரி உனக்கு” என்றார்.
“அந்த உறவே இல்லைனு எத்தனை தடவ சொன்னாலும் உங்களுக்கெல்லாம் அறிவே இல்லயா?” என்றார் ஈஸ்வரி.
அப்பாவைச் சொன்னதும் சாந்திக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஈஸ்வரி முன் வேகமாக வந்து நின்று, “ஏய் யாருக்கு அறிவில்லனு சொல்ற, உனக்கும் உன் பெண்ணுக்குத்தான் அறிவில்ல” என்றாள்.
அம்மாவைச் சொன்னதும் நாகுவிற்கு கோபம். “சாந்தி வேண்டாம், அம்மாவ மரியாத இல்லாம பேசின, நான் ரொம்ப மோசமா பேசுவேன். உனக்கு அது நல்லது இல்ல சொல்லிட்டேன்” என்று கையை நீட்டி எச்சரித்தான் நாகு.
அக்காவைப் பேசியதும் வெற்றியால் பேசாமல் இருக்க முடியவில்லை. ரத்தம் வருவதை, காயத்தின் எரிச்சலைப் பொருட்படுத்தாது, “இப்படிலாம் பேசற வேலை வேண்டாம், மரியாதையா பேசு நாகு” என்று வந்து நின்றான்.
நாகு, “மரியாதைலாம் கொடுக்க முடியாது. முதல என்ட்ட வாங்கின கடனை கொடு. அப்புறம் மரியாதை கொடுக்கிறத பத்தி யோசிக்கிறேன்” என்றான்.
“கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துட்டுதானே இருக்கேன்” என்றான் வெற்றி.
இது சாந்திக்கும் சந்திரனுக்கும் தெரியாது இல்லையா… வெற்றி நாகுவிற்கு பணம் கொடுக்கிறானா? இன்னும் என்னென்ன இவன் மறைகிறான் என்று வெற்றிமீது கோபம் வந்தது. “நீ ஏன்டா கொடுக்க, அது அவன் தங்கச்சிக்காக அவன் செலவழிச்சதுதான” என்றாள் சாந்தி.
“ஏன் செலவழிச்சேன், உன் தம்பியாலதான?” என்றான் நாகு.
“நீ இருடா நான் பேசிக்கிறேன்” என்றார் ஈஸ்வரி மகனிடம். “நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன், அதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்று சாந்தி, சந்திரன் முன் வந்து நின்றார்.
அவரின் அமைதியான குரலில் சாந்தியும் சந்திரனும் எதுவும் பேசாமல் நின்றனர்.
ஈஸ்வரி, “ஒருவேளை என் பொண்ணுக்குத்தான் பிரச்சனைனா, நீங்க என்ன பண்ணிருப்பீங்க இந்நேரம்… வெற்றியை இவளை விவாகரத்து பண்ண வச்சு, அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டீங்க?” என்றார்.
“கண்டிப்பா சொல்வாங்க இவங்க” என்றான் நாகு.
“சத்தியமா அப்படி செஞ்சிருக்க மாட்டேன்” என்றான் வெற்றி.
உடனே ஸ்வேதா, “யாருக்குத் தெரியும்” என்றாள்.
இருந்த கோபத்தில் சந்திரன், “நீ ஏன்டா இப்படிச் சொல்லிட்டு இருக்க, ஆமா அப்படித்தான் செய்வேன்னு சொல்லு” என்றார் மகனிடம்.
“என்னப்பா பேசறீங்க நீங்க… வெற்றி அப்படியா?” என்றாள் சாந்தி.
வெறுத்துப் போனான் வெற்றி. என்னைப் பற்றி என்னதான் நினைக்கிறார்கள் இவர்கள்? இன்னும் எத்தனை தடவைதான் இப்படித் தெருவையே கூட்டி வைத்து, என் பிரச்னையைப் பேசப் போகிறார்கள்? அதற்கு மேல் அங்கே நிற்க அவனுக்குப் பிடிக்கவில்லை… முடியவுமில்லை.
தகரம் அறுத்தது வேறு வலித்தது. அப்போதே யாரோ ஒரு பெண்மணி வந்து, ‘இத சுத்திக்கோப்பா’ என்று துணி கொடுத்திருந்தார். அதைக் கையில் சுற்றி வைத்துதான் இவ்வளவு நேரம் நின்றிருந்தான். இப்போது அதையும் தாண்டி ரத்தம் கசிந்தது. வீட்டிற்கு நடந்தான்.
அவன் போவதைப் பார்த்த சந்திரன், “உனக்காகத்தான இங்க உன் அக்கா பேசிக்கிட்டு இருக்கா, நீபாட்டுக்கு போற” என்றார் கோபமாக.
அவனுக்கு கைக்காயம் வலிக்கிறதோ? சாந்திக்கு அதன்பின் அங்கே நின்று பேச மனம் வரவில்லை. கடைசியாக, “அவன் டைவர்ஸ் கொடுக்க மாட்டான். டைவர்ஸ் கொடுப்பான்னு நினைச்சி, வேற கல்யாணம் பண்ண நினைச்சி கேஸ் வாங்கிக்காதீங்க” என்று ஈஸ்வரியை எச்சரித்தாள்.
அடுத்து நாகுவைப் பார்த்தவள், “நீ என் தம்பிய தள்ளிவிட்டதுக்கு கண்டிப்பா கேஸ் கொடுப்பேன் பாரு” என்று கோபமாகச் சொல்லிவிட்டு, “வாங்க ப்பா” என்று அப்பாவை அழைத்துக் கொண்டு வேகமாகச் சென்றுவிட்டாள்.
ஸ்வேதா பயந்து போய் நிற்க, “நீ வாமா, இதுங்கள பார்த்து பயப்படுற ஆள் இல்ல நான்” என்று தங்கையை அழைத்துச் சென்றான் நாகு. ‘இதுக்கெல்லாம் பயந்திருவேனா’ என்று குடத்தைத் தூக்கிக் கொண்டு ஈஸ்வரியும் போனார்.

வீட்டிற்கு வெற்றி வந்ததும், அவன் கையைப் பார்த்துப் பதறி கலை, “ஏன்டா, என்னாச்சு? ரத்தம் வருது” என்று வந்து நின்றான்.
“ஒன்னும் இல்ல, விடுண்ணா…” என்று அறைக்குள் போக பார்த்தான். தனியாக இருக்க வேண்டும் போல் இருந்தது.
சுற்றியிருந்த துணி அங்கங்கே ரத்தத்தில் நனைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, “விடவா. ஹாஸ்பிட்டல் போனும்டா” என்று சொல்லும் போதே சாந்தி, சந்திரன் வந்துவிட்டனர். ஓட்டமும் நடையுமாக வந்திருந்தனர்.
சந்திரன் தளர்ந்து அமர்ந்துவிட்டார். மகன் வாழ்க்கையை நினைத்து மனம் வெகுவாக பயந்து போனது. சாந்தி போய் அப்பாக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அப்பாவை அப்படிப் பார்த்த கலை மனைவியைக் கூப்பிட்டு அவருக்கு காஃபி போட்டு எடுத்து வரச் சொன்னான்.
“என்ன நடந்தது, வெற்றி கைல ரத்தம் வருது” என்றான் அக்காவிடம்.
“அந்த நாகு இவனை பிடிச்சு தள்ளிவிட்டான்” என்றாள் சாந்தி.
குளியல் அறையில் காயத்தைச் சுத்தம் செய்து வந்த வெற்றி, “தள்ளி விடல, தடுத்தான். நான் தடுமாறி விழ போனதுல தகரம் இழுத்திடுச்சி” என்றுவிட்டு அறைக்குள் சென்று கதவடைத்தான்.
அக்காவிடம் கலை, “என்னக்கா நடந்தது அங்க” என்றான்.
சாந்தி, “ஸ்வேதாக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறது இவனுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. இவன் நம்மகிட்ட சொல்லவே இல்லை பாரு. இவனுக்கென்ன பைத்தியமா? ஸ்வேதா ஹாஸ்பிட்டல் செலவுக்கு நாகு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துக்கிட்டு இருக்கான்” என்றாள்.
அமைதியாக நின்றான் கலை. ஹரிணி மாமனாருக்கு காஃபி கொடுத்தாள். சாந்தி பேசியதைக் கேட்டிருந்தாள். இப்போது கணவனிடம் எதுவும் கேட்க முடியாது. அப்புறம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
சந்திரன், “இவன் வாழ்க்கைய காப்பாத்த… நாம எடுக்கிற முயற்சிகூட இவன் எடுக்க மாட்டிக்கிறானேமா” என்றார் வருத்தமும் கோபமுமாக.
சாந்தி, சந்திரன் இருவருக்குமே வெற்றி மீதி கோபம். அவர்களிடம் எதையும் அவன் சொல்லவில்லை என்று. சாந்தி, அப்பா பக்கத்தில் போய் அவருக்கு ஆறுதலாக அமர்ந்தாள்.
“இது என்ன பார்க் போறது, சின்ன பிள்ளைக்கு மாதிரி சமைச்சு எடுத்துட்டு போறது. அத பத்தி அவன் ஒன்னும் சொல்ல மாட்டிங்கிறான்” என்றார்.
“அத கேட்கலாம். முதல அவனை ஹாஸ்ப்பிட்டல் கூட்டிப் போய்ட்டு வர்றேன்” என்று வந்தாள்.
கலை வந்து அக்கா முன் நின்றான். “இன்னைக்கு லீவு நாள், வீட்ல சமைக்க வேண்டாமா, நீ போ க்கா, நான் அவனை கூட்டிப் போறேன்” என்றான்.
சனி ஞாயிறுகளில் பிள்ளைகளைப் பார்க்காமல், சமையல் செய்யாமல், மாமியார், மாமனாரைக் கவனிக்காமல் இப்படி அப்பா வீட்டிலே இருந்தால் நன்றாக இருக்காது. அதனால் சாந்தி மறுக்கவில்லை. அப்பாவிடம், “கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரிங்க பா” என்று சொன்னாள்.
அவரும் “நீ கிளம்பு மா” என்று படுத்துக் கொண்டார். வெற்றியின் அறையைப் பார்த்தாள். கலையிடம், “பார்த்துக்கோடா” என்றுவிட்டுக் கிளம்பினாள்.
கலை போய் வெற்றி அறைக் கதவைத் தட்டி, “வா டா ஹாஸ்பிடல் போய்ட்டு வந்திடலாம்” என்றான். “எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ணா, ப்ளீஸ் அப்புறமா போய்க்கலாம்” என்றான் வெற்றி.
பெருமூச்சோடு கலை அவன் அறைக்குச் சென்றான். மனைவியுடன் சற்று நேரம் பேசியிருந்துவிட்டு வந்து வெற்றி அறையைத் தட்டினான். இப்போது வெற்றி, “இது சின்ன காயம்தான், ஹாஸ்பிடல்லாம் வேண்டாம்” என்றான்.
கலை நேரத்தைப் பார்த்தான். “சரி, போக வேண்டாம். நீ காலைல சாப்பிடல. இப்பவாது வந்து சாப்பிடு” என்றான்.
“எனக்கு பசிக்கல” என்றான் வெற்றி.
கலை திரும்பிப் பார்த்தான். அவனைத்தான் ஹரிணி, அவன் மகன், மகள் பார்த்துக் கொண்டிருந்தனர். மனைவியிடம், “சாப்பாடு எடுத்து வை, நாம சாப்பிடலாம்” என்றான். “எந்திரிச்சி சாப்பிட்டு தூங்குங்க” என்று அப்பாவை எழுப்பிப் பார்த்தான்.
கண்ணைத் திறக்காமலே, “அப்புறமா” என்றார்.
கலை மனைவி, பிள்ளைகளுடன் சாப்பிட்டு முடித்தான். தன் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு, “அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்துடறேன்” என்று ஹரிணி கணவனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
வெற்றி அறையைப் பார்த்தபடி கலை உட்கார்ந்தான். சாந்தியிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் என்ன கேட்டாளோ, “அவன் எனக்கும் தம்பிதான், பார்த்துப்பேன் க்கா. வை” என்று அழைப்பைத் துண்டித்தான்.
நேரம் ஆக ஆக கலைக்கு, ‘இவன் என்ன இப்படி இருக்கிறான்’ என்று தம்பி மேல் கோபம் வந்தது. இதற்குமேல் விட்டால் சரிவராது என்று எழுந்து போய் வேகமாகக் கதவைத் தட்டி, “டேய் இப்ப நீ கதவைத் திறக்கல, அப்புறம் நான் கதவை உடைச்சு உள்ள வருவேன்” என்றான் சத்தமாக.
வெற்றி வந்து கதவைத் திறந்தான். தூங்கியிருப்பான் போல. அவன் முகம் பாதி தூக்கத்தில் இருந்தது. சோர்ந்து போயிருந்தான். சன்னல் திறக்காமல் இருந்ததால், காற்றாடி இருந்தும் வியர்த்திருந்தான்.
“போய் முகம் கழுவிட்டு வா” என்றான் தம்பியிடம். கலை போட்ட சத்தத்தில் சந்திரன் முழித்திருந்தார். அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொடுத்து, சாப்பிடச் சொல்லிவிட்டு, வெற்றியை அந்தப் பகுதியில் இருந்த சிகிச்சையகத்துக்கு கூட்டிப் போனான்.
காயத்தை சுத்தம் செய்து, தையல் போட்டு, கட்டுப் போட்டு, வலி நிவாரணி எழுதிக் கொடுத்தார் மருத்துவர். அங்கிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஜூஸ் குடித்தான் வெற்றி. காலையிலிருந்து சாப்பிடாதது, ரத்தம் வெளியேறியது அயர்வைத் தந்திருந்தன. ஒரே நாளில் ஓய்ந்து போனது போல் இருந்தான்.
இரவாகியிருந்தது. வெற்றி இரவு உணவிற்காக பிரட் வாங்கிக் கொண்டான். மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரையும் வாங்கினான்.
கலை ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. இருவரும் வீட்டிற்கு வந்தபோது ஹரிணி வந்திருந்தாள். சந்திரன் சாப்பிட்டுப் படுத்துவிட்டார். குழந்தைகள், ஹரிணி டிவி பார்த்து கொண்டிருந்தனர். வெற்றி நேராக அவன் அறைக்குள் போக பின்னேயே கலையும் போனான்.
வெற்றி சோர்ந்து போய் கட்டிலில் அமரவும், “பேசணும் டா” என்று கலையும் அமர்ந்தான். இப்போதே இதையெல்லாம் பேசணுமா என்று தயங்கினான். பேசாவிட்டால் ஹரிணி சண்டை போடுவாள். அதற்கு பேசிவிடலாம் என்று, “நேத்து பார்க்கா [park] போன” என்றான் தம்பியிடம்.
“இத அப்புறமா பேசலாமே ணா” என்றான் களைப்பான குரலில்.
“சரி அத விடு” என்றவன், “அக்கா சொன்னா… நீ நாகு தந்த பணத்தை திருப்பி கொடுக்கிறேன்னு. ஏன்டா வீட்டு வாடகைகூட ஷேர் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டு… இப்ப இப்படி பண்ற” என்றான்.
“நான் கேட்டேன், நீதான் நீயே பார்த்துகிறதா சொன்ன” என்றான்.
பட்டென கலை, “உனக்கு கடன் இருக்கேனு சொன்னேன். இப்படி அவன்கிட்ட போய் நீ பணத்த கொடுப்பனு தெரியாதே எனக்கு” என்றான். கலைக்கு இந்த விடயத்தில் வெற்றிமீது மிகுந்த அதிருப்தி.
கடனாக வாங்கிய பணத்தைத் திருப்பிக் தருவதுதான் கௌரவம். அதுவும் எப்படிக் கொடுக்கிறேன்… கொஞ்சம் கொஞ்சமாக… நகையை விற்று. இதைச் சொன்னாலும் அண்ணன் புரிந்து கொள்வானா என்பது கேள்வியே. “உனக்கு வாடகை ஷேர் பண்ணனும்னா சொல்லு… கொடுக்கிறேன்” என்றான்.
“அதுக்கு நீ தனியா வீடு பார்த்துக்கலாமே. ஹரிணி அம்மா வந்து எங்ககூட இருப்பாங்க. பாவம் அவ பிள்ளையை வச்சுக்கிட்டு கஷ்டப்படுறா” என்றான். உடனே, “சரி சரி சாப்பிட்டு, மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு. இதை அப்புறம் பார்க்கலாம்” என்றுவிட்டுப் போனான்.
வெளியே வந்த பெரிய மகனை சந்திரன் பார்த்தார். “அவன் பிரட் சாப்பிட்டு, மாத்திரை போட்டு தூங்கிடுவான்… நீங்க தூங்குங்க” என்றான்.
மகளுக்கு அழைத்து அதைச் சொன்னார் சந்திரன். திடீரென அவள் கணவன் வருவதாகச் சொன்னதால் அவளால் வெற்றியைப் பார்க்க வர முடியவில்லை. அதைச் சொல்லி, “நாளைக்கே வர்றேன் பா” என்று வைத்தாள்.
வெற்றி இரண்டு ரொட்டியை சாப்பிட்டு, மாத்திரைப் போட்டுக் கொண்டான். காலையிலிருந்து சரியாகச் சாப்பிடாதது, கைக் காயம், அதன் வலி, நடந்தது எல்லாம் சேர்ந்து அவன் உடலைத் தொய்வடையச் செய்தன.
அவன் மனமும் சரி, உடலும் சரி, உறக்கத்தைக் கேட்டது. ஓய்வைத் தேடியது. படுத்ததும் எதையும் யோசிக்க முடியாமல் கண்ணயர்ந்து விட்டான்.
காலையில் கண் விழிக்கும் போது பத்து மணி ஆகியிருந்தது. அதுவும் சாந்தி வந்து கதவைத் தட்டிய பின்தான் எழுந்து வந்தான். “கை எப்படிடா இருக்குது, ரொம்ப வலிக்கா” என்றாள்.
“ம்ம்” என்று குளியல் அறை சென்றான்.
“பார்த்து டா, கைல தண்ணீ பட்டுடாம” என்று வெற்றியிடம் சொல்லிவிட்டு வந்து, “அப்பவே எழுப்பிருக்கலாம்” என்றாள் அப்பாவிடம், “நீ பார்த்துக்கறதா அப்பா சொன்னாரு, நீயாவது எழுப்பி விட்டுருக்கலாமே கலை” என்றாள்.
என்ன மனநிலையில் இருந்தானோ கலை, “அவனை கூட்டிட்டுப் போய், ரத்த காயம் வர வச்சிட்டு, நீ என்னய சொல்லாத” என்றான்.
அமைதியாக அப்பா அருகில் அமர்ந்து கொண்டாள். மருமகன் வந்திருப்பது தெரியும். போய் பார்க்க வேண்டும். “அப்பா சாயங்காலமா அங்க வர்றேன் சாந்தி” என்றார். “வேலையெல்லாம் முடிச்சிட்டியா” என்று கேட்டார்.
“போய்தான் மத்தியானத்துக்கு சமைக்கணும்” என்றாள்.
வெற்றி வந்தமர்ந்தான். யாரும் எதுவும் அவனிடம் பேசவில்லை. அவனுக்குப் புரிந்தது. அவர்களுக்கு அவன்மீது கோபம் இருக்கிறதென்று. ஆனால் கோபம் வருமளவு அப்படி என்ன செய்துவிட்டேன் நான்?
ஸ்வேதா சொல்ல கூடாது என்றதற்காக அவன் சொல்லாமல் இருக்கவில்லை. அவள் அப்படிக் கேட்காமல் இருந்தாலும் சொல்லி இருக்கமாட்டான். அதை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க பிடிக்கவில்லை.
தன் மரியாதைக்காக நாகுவிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருகிறான்.
இதில் ஏதோ தவறு செய்தது போல் அவர்கள் கோபப்பட என்ன இருக்கிறது?
எப்போதும் அந்த வீட்டில் வெற்றிக்குச் சங்கோஜமாகத்தான் இருக்கும். இன்று அது அதிகமாக தெரிந்தது. சாப்பிடவே பிடிக்கவில்லை. ஆனால் மாத்திரை போட வேண்டுமே. அதற்காக இரண்டு இட்லி எடுத்து வைத்துச் சாப்பிட்டான்.
கலை வந்து தம்பியிடம், “நேத்தே சொல்லிருப்பேன். டயர்டா இருப்பன்னுதான் சொல்லல, ஸ்டேஷன் போய் அந்த நாகு மேல கம்பளைண்ட் கொடுத்துட்டு வந்திடலாம்… வா” என்றான்.
வெற்றிக்கு அதிர்ச்சி. “ஏன் இப்ப அதலாம்” என்றான் சோர்வாக.
“அவனாலதானடா உனக்கு இப்படி” என்று வெற்றி காயத்தைக் காட்டிவிட்டு, “இத அப்படியே விட சொல்றியா?” – எப்போதுமே கலைக்கு நாகுமேல் கோபம் இருக்கும். இருவருக்கும் அடிதடி சண்டை நடந்திருக்கிறதே. தன் கோபத்தை இப்படித் தீர்த்துக் கொள்ள நினைத்தான் கலை.
வெற்றிக்கு புகார் கொடுக்கும் எண்ணம் துளியும் இல்லை. இப்போது அவன் தனியாள் இல்லை. தமிழும் இருக்கிறாள். அவளைப் பார்க்க வேண்டும். ஆயா சொல்லியிருந்தார்… உமா தமிழை மருத்துவரிடம் காட்டிய போது, வாய் பேச வைக்க முடியும் என்று அவர் சொன்னதாக.
அது என்னவென்று பார்க்க வேண்டும். செவித்திறன் கருவி வாங்க வேண்டும். புகார் கொடுத்துவிட்டு அதற்காக அலையவோ, செலவழிக்கவோ அவனால் முடியாது. ‘மாட்டேன்’ என்றால் அண்ணன் விடமாட்டான். “இப்பவும் ரொம்ப டயர்டா இருக்குது ணா” என்றான்.
சந்திரன் மூத்த மகனிடம், “என்ன பேசற, நாகு மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா, ஸ்வேதா எப்படி வெற்றி கூட சேர்ந்து வாழுவா” என்று கடிந்தார். “நேத்து நீயும் இப்படித்தான பேசின, கொஞ்சம் கூட யோசிக்காம” என்றார் மகளிடம்.
“அப்ப இருந்த கோபத்தில பேசிட்டேன் ப்பா. அப்புறம் யோசிச்சேன், அதான் திரும்ப பேசல” என்றாள்.
இன்னும் வெற்றியின் திருமண வாழ்வை இழுத்துப் பிடிக்கத்தான் பார்த்தார்கள்; மனைவி நடத்திய திருமணம் என்று சந்திரனும், வெற்றி தனியாக நின்று விடுவானோ என்ற பாசத்தில் சாந்தியும்.
‘இவ்ளோ நடந்தப்புறமும் எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்களோ?’ என்று கலை நின்றான்.
அதே கேள்விதான் வெற்றிக்கும். அவர்களிடம் பேசிப் புரிய வைக்க முடியாது என்பதால் பேசாமல் அறைக்குப் போய்விட்டான்.
சற்றுநேரம் வீட்டில் அமைதி நிலவியது. சாந்தி அப்பாவைப் பார்த்தாள். அவர் முகம் யோசனையில் இருந்தது. அவளுக்கு அவரைப் புரிந்தது. வெற்றி பூங்கா சென்றது ஏன்? எதற்காக? அவன் என்ன முடிவில் இருக்கிறான்? அப்பா அதை யோசிக்கிறார் என்று புரிந்தது.
அவளுக்கும் அந்தக் கேள்விகள் இருக்கின்றன. அவள் வீட்டுப் பொறுப்புகள், வெற்றியின் கைக் காயம், அவளுக்கு அவன் மீதிருக்கும் கோபம்… அதனால் இப்போது தம்பியிடம் எதுவும் அவள் கேட்கவில்லை.
சந்திரன் மகளைப் பார்த்தார். “சாந்தி, நீ போய் மாப்பிள்ளைய பாரு. அவர் நாளைக்கு கிளம்பிருவார்ல. மத்ததை அப்புறம் பேசிக்கலாம். அதுவரைக்கும் வெற்றிய எங்கயும் போக விட வேண்டாம்னு நினைக்கிறேன்” என்றார்.
“சரி ப்பா” என்று எழுந்து கலையிடம் வந்து, “அப்பா சொன்ன மாதிரி அவனை வெளிய போக விடாத, உங்க மாமா கூட வந்து பார்க்க நினைப்பாரு, வீட்லயே இருக்க சொல்லு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
நேரம் நண்பகலைத் தாண்டி ஓடியிருந்தது.
அறையில் வெற்றி படுத்திருந்தான். நேற்று மன உளைச்சலும், உடல் வலியும் இருந்ததால் உடனே உடனே தூங்கியிருந்தான். இன்றும் வலி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஓய்வெடுக்கத் தோன்றவில்லை. காலையிலிருந்து தமிழ் ஞாபகம்தான் அவனுக்கு.
அப்பா சீக்கிரம் வருவேன் என்று சொல்லிவிட்டு வந்தேனே. மகள் என்னைத் தேடுவாளே… என்ற ஒன்று அவனை உறுத்தியது; உடனே அவளைப் பார்க்கப் போ என்று உந்தித் தள்ளியது… படாரென எழுந்து வெளியே வந்தான்.
“என்னடா, எதும் வேணுமா” என்றான் கலை.
“வெளிய ஒரு வேலை, போகணும்” என்றான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்ன ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்ன. இப்ப வெளிய போகனுங்கிற. என்ன நினைச்சிக்கிட்டு இருக்க? மாத்திர போட்டேல… போய் ஒழுங்கா ரெஸ்ட் எடு” – கலை. நாகுமீது புகார் கொடுக்க மறுக்கிறானே என்று கலைக்கு கோபம். அது அவன் குரலில் தெரிந்தது.
“ண்ணா போய்ட்டு வந்து ரெஸ்ட் எடுத்துக்கிறேன்” என்றான் வெற்றி.
“இந்த நிலையில உன்னய தனியா போக விட்டா, உங்க அக்கா வந்து இவரை திட்டுவாங்க. உன்னய பார்க்க உங்க மாமா வர்றதா அவங்க சொன்னாங்க. அப்ப நீ வீட்ல இருக்க வேண்டாமா” என்று ஹரிணி வந்து சொன்னாள்.
“மாமா வர்றதுக்குள்ள வந்திடுவேன் அண்ணி” என்றான்.
“சரி வா, உனக்கு டயர்டா இல்லனா ஸ்டேஷன் போய் நாகு மேல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம். அதுக்கப்புறம் எங்கனாலும் போ” என்றான் கலை.
சந்திரன், “கலை” என்றார் கண்டனக் குரலில். வெற்றியிடம், “முக்கியமான வேலை என்ன… பார்க் போறதாடா” என்று கோபமாகக் கேட்டார்.
இந்த விஷயம் பற்றி இன்னும் கேட்கவில்லையே என்ற கேள்வி மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. இப்போதிருக்கும் மனநிலையில் அவனால் எதையும் சரியாக புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒன்றும் சொல்லாமல் திரும்பவும் அறைக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டான்.
படுக்காமல் நடந்து கொண்டே இருந்தான். தமிழ் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்தாக வேண்டுமென மனம் அரற்றியது. ஆயாவிடம் கேட்கலாம் என்று அலைபேசி எடுத்தான். அது அணைந்திருந்தது. அதற்கு மின்னூட்டினான்.
உள்ளம் ஏனோ பாரத்தை உணர்ந்தது. மதியம் சாப்பிடவும் அவன் வெளியே போகவில்லை. அவன்மீதிருந்த கோபத்தில் சந்திரனோ, கலையோ சாப்பிடு என்று சொல்லவும் இல்லை. பிற்பகல் நேரத்தில் அவன் அக்காவும், மாமாவும் வந்தார்கள். சாந்தி கணவன் முதலில் வெற்றியை நலம் விசாரித்தான்.
அதன்பின் சந்திரன் கலையிடம் பேசிக் கொண்டிருந்தான். எல்லாம் வெற்றி வாழ்க்கைப் பற்றித்தான் பேசினார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், வெற்றி என்ன செய்யலாம் என்றே பேசினார்கள். சம்பந்தப்பட்டவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
வெகுநேரம் இருந்துவிட்டே சாந்தியும், அவள் கணவனும் போனார்கள்.
அவர்கள் போனதும் வெற்றி அறைக்கு வந்து அலைபேசியை உயிர்ப்பித்தான். ஆயாவிடமிருந்து அத்தனை தவறவிட்ட அழைப்புகள். உடனே புரிந்துவிட்டது, மகள் தன்னைத் தேடுகிறாள் என்று. புரிந்த நொடியிலிருந்து உயிர்க்காற்றுத் தடைப்பட்டது போல் அவன் நெஞ்சம் தத்தளித்து வந்தது.
