Kathambari Novels
அத்தியாயம் – 18
குணா வந்து நின்றதும் ஆயா, பக்ஸ், ராணி அதிர்ச்சியாக நின்றனர். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், வந்து நிற்பது யார் என்று வெற்றி நின்றான்.
ராணிதான், “சார், இது குணா ண்ணா” என்றாள்.
சட்டென்று வெற்றி முகமெங்கும் பதற்றம் பரவிவிட்டது. தமிழை இறுக்கப் பிடித்துக் கொண்டான். ஏதோ ஒரு பயம் உள்ளுக்குள் உணர்ந்தவன், சற்றே பின்னுக்குப் போய் நின்று கொண்டான்.
ஆயா, ‘பாத்துக்கலாம் பயப்படாத’ என்பது போல் அவனருகே வந்து நின்றார்.
குணா பக்ஸிடம், “ஹோம் பாத்தாச்சு. கொண்டு போய் வுடுறது மட்டும்தான் பாக்கி” என்று சொல்லும் போதே வெற்றியைப் பார்த்துவிட்டு, “யாரிது? தமிழ இவரு ஏன் தூக்கி வெச்சிருக்காரு” என்றான்.
யார் பேச என்ற கேள்வியில் சற்றுநேரம் யாருமே பேசாமல் நின்றனர்.
பக்ஸ் குணாவிடம், “அந்த சாரு கொஞ்ச நாளா தமிழ வந்து பார்த்துகின்னு இருக்காரு. நல்லவரு… தமிழ அவரு வளக்க போறதா சொல்றாரு” என்றான். குணாவிற்குப் புரிய வேண்டும். அவன் எதுவும் பேசக்கூடாது, விதண்டாவாதம் செய்யக்கூடாது என்று பக்ஸ் பொறுமையாகப் பேசி இருந்தான்.
பக்ஸ் என்ன சொல்கிறான் என்று குணா கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் எப்படிப் பேசுகிறான் என்பதைத்தான் கவனித்தான். இதுவரை அவன் இப்படி தன்னிடம் பேசியதே இல்லை. “என்ன பக்ஸ் பம்முற, என்னா நடக்குது இங்க… ஆங்” என்று சிரித்தான்.
ராணி, “ண்ணா… அவரு நல்லா பாத்துப்பாரு ணா தமிழ” என்றாள்.
சிரிப்பதைவிட்டு குணா யோசித்தான். “இது வரைக்கும் பொண்டாட்டியும் புசஷனும் என் வூட்டுக்கு வந்து எங்களால பாத்துக்க முடியாது, உன் புள்ளய நீயே பாத்துக்கோனு சொன்னீங்க, இப்ப என்ன மாத்திப் பேசறீங்க”
“ஆமா குணா… சொன்னோம்! இனிமேட்டு சொல்ல மாட்டோம். சொம்மா வளவளனு பேசாம போறியா நீ” – இவன் ஒரு ஆள், இவனுக்கெல்லாம் விளக்கம் சொல்லனுமா என்ற சலிப்புடன், எரிச்சலுடன் பக்ஸ் பேசியிருந்தான்.
வெற்றியால் அப்படி இருக்க முடியவில்லை. மகளுக்காக தான்தான் பேச வேண்டும். வந்ததிலிருந்து குணாவின் பொறுப்பற்றப் பேச்சுகளில் அவனைப் புரிந்தது. என்ன பேசுகிறார்கள் என கண்டுகொள்ளாமல், மற்றவரைப் பற்றி யோசிக்காமல் இஷ்டத்திற்குப் பேசிக்கிறவன் இவன் என்று.
அவன் எப்படியும் பேசட்டும்… தான் நிதானமாகப் பேச வேண்டும். அவனைக் கோபப்படுத்தக் கூடாது. மெல்ல குணா அருகே சென்றான்.
அப்பா கைகளிலிருந்து நடப்பதை வேடிக்கைப் போல் பார்த்திருந்த தமிழ், குணா அருகே வெற்றி போவதைப் பார்த்துப் பயந்துவிட்டாள். அழுகைக்குத் தயாராவது போல் முகம் துடித்தது. மகளைப் புரிந்த வெற்றி, ‘பேபி இதலாம் நீ பார்க்காத’ என்று அவள் முகத்தைத் தோளில் சாய்த்துக் கொண்டான்.
குணா முன் சென்ற வெற்றி, “பாருங்க” என்று பேச ஆரம்பிக்கையிலே, “நீயே ஏன் என் புள்ளய வளக்க போற” என்றான் குணா.
உரிமையாக வந்த குணாவின் வார்த்தைகள் உண்மையாகவே இருந்தாலும், வெற்றிக்கு உவப்பானதாக இல்லை. ‘என் பொண்ண நான்தான வளக்கணும்’ என்பதை அவன் உதடுகள் உச்சரிக்க முயன்றாலும், உள்ளுக்குள் உழன்று கொண்டிருந்த மனத்தால்… அது முடியாமல் போனது.
குணா, “ஏய் பக்ஸ்! நாந்தான் அன்னிக்கு வந்து சொன்னேன்ல தமிழ ஹோம்ல வுடறத நான் பாத்துக்கிறேன்னு, அப்பலாம் ஒன்னும் சொல்லல, இப்ப திடீர்னு என்ன வந்திச்சி. இவர்ட்ட பணம் கிணம் வாங்கின்னு பேசறியா?” என்றான்.
பக்ஸிற்கு அப்படியொரு கோபம். “உன் புத்தி இப்டித்தான்டா போகும்! உன்ன மாதிரியே என்னயும் நினைக்காத. அந்த சாரு பாசம்லாம் உனக்கு எவ்ளோ எடுத்துச் சொன்னாலும் புரியாது. சொல்றதே வேஸ்ட்” என்றுவிட்டான்.
ராணி, “பக்ஸ் பொறுமையா இரு, நான் பேசிக்கிறேன்” என்றாள்.
“பொறுமையா இருக்க போய்தான் அவனை இன்னும் அடிக்காம நிக்கேன்” என்றுவிட்டு, ‘நீயே பேசு’ என்பது போல் பக்ஸ் ஒதுங்கிக் கொண்டான்.
ராணி குணாவிடம் பேசினாள். “ண்ணா எங்கள இப்டிலாம் பேசாத. அது தப்பு ணா, உண்மையும் இல்ல. அன்னிக்கு நீ வந்து சொன்னப்ப, எங்களுக்கு எதும் உறுதியா தெரியாது ணா. அதான் நாங்க உன்ட்ட சொல்லல.
அந்த சாரு… தமிழ்மேல பாசமா இருக்காரு. தமிழுக்கும் அவருனா உசுரு. பாரு எப்படி அவர் தோள்ல சாய்ஞ்சி இருக்குனு. புரிஞ்சுக்கோ ணா. நீ எதுவும் அந்த புள்ளைக்காக பண்ணல. இத மட்டும் பண்ணு. அவரே தமிழ வளக்கட்டும்”
கிட்டத்தட்ட கெஞ்சும் தோரணையில் ராணி பேசியிருந்தாள். குணா போன்ற ஒருவனிடம் இப்படிப் பேசியதில், நிச்சயம் பகவதிக்கு கோபம் இருக்கும் என்று அவன் பக்கம் திரும்பாமல் நின்று கொண்டாள்.
குணா சற்று யோசித்துவிட்டு வெற்றி முன் போய், “நீயே தமிழ பாத்துப்பேல? எதுனாலும் என் வூட்டு முன்னாடி வந்து நிக்க மாட்டியே” என்றான். அவனுக்கு என்ன தேவையோ அதைப் பற்றிப் பேசினான்.
பணம் வாங்கிட்டியா என பக்ஸிடம் கேட்டபோதே வெற்றிக்கு கோபம் வந்திருந்தது. இது கோபப்படும் நேரமல்ல என்று கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான். குணா பேச பேச, அவன் பதற்றம், பயம் கூடிக் கொண்டே போனது. “மாட்டேன் மாட்டேன். நானே பார்த்துப்பேன்” என்றான் படபடவென்று.
“இப்ப இப்டி சொல்லினு… அப்பறம் வூட்டாண்ட வந்து நிக்க கூடாது” – குணா.
‘பார்த்துக்கிறேன்னு சொன்னா, சரினு போக மாட்டானா’ என்று குணாமீது எரிச்சல் வந்திருந்தாலும், இவன் என்ன சொல்வானோ என்ற பயம் இன்னும் இருந்ததில் இதயம் தடதடவென்று துடிக்க, “இல்ல, கண்டிப்பா வந்து நிக்க மாட்டேன்” என்றான் வெற்றி.
“சார்… நீயேன் சார் இவன மதிச்சி பதில் சொல்லிக்கினு இருக்க. இவன்லாம் அதுக்கு வொர்த்தே கிடையாது” என்றான் பக்ஸ்.
உடனே குணா, “நீயேன் நடுவுல வர்ற? பெத்தவன் நான், வளக்கப் போறவரு அவரு, நாங்க என்னவும் பேசினு போறோம்னு வுடு பக்ஸ்” என்றான். அடுத்து வெற்றியிடம் “சாப்பாடு செலவுகூட நீயே பாத்துப்பேல” என்றான்.
எந்த விதத்திலும் தமிழின் பொறுப்பை அவன் எடுத்துக்கொள்ள மாட்டான்; முடியாது… அதை வெற்றிக்கு தெளிவாக்கிட நினைத்தான் குணா.
பக்ஸ், “என்னமோ இத்தன நாள் இவந்தான் பாத்துக்கிட்ட மாதிரி கேட்கிறத பாரு” என்றான் எரிச்சலுடன். “நீ பேசாத” என்றாள் ராணி.
குணா இங்கே நிற்க நிற்க… வெற்றி மூச்சுக்காற்றை சிறைப்பிடித்து வைத்தது போல் தவித்துக் கொண்டு நின்றான். மகள் எப்படித் தவிக்கிறாள் என்பதை, வேக வேகமாகச் சுருங்கி விரியும் அவள் நெஞ்சம் அவனுக்கு உணர்த்தியது. அவள் முதுகில் தட்டிக் கொடுத்தபடி, “பாத்துப்பேன்” என்றான் குணாவிடம்.
அவ்வளவு சொன்ன பின்னும்கூட குணா, “இப்ப எல்லாத்துக்கும் செரி செரினு சொல்லிட்டு, அப்புறம் காய்ச்ச கீச்சனு ஒடம்புக்கு எதுனா நோவு வந்தா… ஏன் உசுருக்கே எதுனா ஆனாலு…” என்ற நொடி, “ஏய்!!” என்று குணா சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான் வெற்றி.
குணா வார்த்தைகளின் தாக்கத்தில் வெற்றிக்கு உயிரே நடுங்கிவிட்டது. என் மகளை எப்படிப் பேசுகிறான் இவன் என்ற கோபத்தில், “இதுக்கு மேல எதும் பேசின… அவ்ளோதான்” என்று குணாவை எச்சரித்தான்.
பக்ஸ், “இவன்ட்ட பேசுறதே வேஸ்ட்டு! அடிச்சிடு சார், இவனலாம் அடிக்காம வுட்டாதான் தப்பு” என்றான் கோபத்தில். எப்படி இப்படி பேச முடியுது ராணி முகத்தைச் சுளித்தாள்.
மற்றவர்களை குணா பார்க்கவில்லை. வெற்றியைத்தான் பார்த்தான். சற்று சிரித்து, “என் புள்ளய கைல வெச்சிக்கினு என்னயவே அடிப்பியா? குடு, நான் அவளை ஹோம்லயே வுட்டுறேன்” என்று தமிழை வாங்கப் போனான்.
பட்டென்று குணா சட்டையை வெற்றி விட்டுவிட்டான். சட்டையை நேராக்கி, கசங்கி இருந்ததைத் தேய்த்து சரி செய்தபடி, “இல்ல நா… நான் அடிக்கலாம் செ… செய்யல” என்றான் ஓடிக் களைத்த குரலில். மகளைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவானோ என்ற பயத்தில் கண் கலங்கினான்.
தமிழைப் பிடித்து இழுத்தபடி குணா, “ஒழுங்கா தமிழ குடுத்திடு. நான் போய் ஹோம்ல வுட்டப்புறம், யார்னாலும் எடுத்து வளத்துக்கோங்க” – தமிழை யார் வளர்த்தாலும் குணாவிற்கு அதுபற்றி கேள்வியோ, அக்கறையோ கிடையாது. வெற்றி இவன் சட்டையைப் பிடித்தக் கோபத்தில் விதண்டாவாதம் செய்தான்.
குணா செயலால்… தமிழ் கண்களை இறுக்க மூடி, வெற்றி கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதாள். வெற்றி ஒருகையால் அவளை அழுத்தமாக அணைத்துக் கொண்டு, மறுகையால் குணாவை தள்ளி நிறுத்தப் பார்த்தான். கைக்காயம் இருந்ததால் வலிந்து தடுக்க அவனால் முடியவில்லை.
வெற்றி முகம் கலங்கினாலும், தமிழ் அழுதாலும்… அவளை இழுப்பதை குணா விடவில்லை. வீம்புக்கென்று அவர்கள் உணர்வுகளுடன் விளையாடினான்.
வெற்றி படும்பாட்டைப் பார்த்து… வேகமாக வந்த பக்ஸ், “ஏ வுடு குணா” என்று அவனை இழுத்தான். ஆயாவும் வந்து குணாவை வெற்றியிடமிருந்து பிரித்து இழுக்கப் பார்த்தார். இருவரின் பிடி, குணா பிடியை வலுவிழக்கச் செய்தது. மெல்ல மெல்ல தமிழை இழுப்பதை நிறுத்திவிட்டான்.
ஆயா வெற்றியிடம், “புள்ளய அழ வுடாத, அழுதழுதுதான் காய்ச்ச வந்திச்சி, திரும்ப அழுதா நல்லதில்ல” என்றார். அதற்குள் கோபமாக பக்ஸ் குணாவிடம் பேசப் போக, “நீ இரு, நான் பேசிக்கிறேன்” என்று குணாவைப் பார்த்தார்.
‘நீ பாத்தா பயந்திடுவேனா… நீ பேசினா கேட்டுக்குவேனா’ என்றுதான் குணா நின்றான். “மரியாதயா தமிழ குடுக்க சொல்லு, இல்ல என் புள்ளய குடுக்க மாட்டிக்காங்கனு கம்ப்ளைண்ட் குடுப்பேன்” என்று பயமுறுத்தினான்.
ராணி, ‘ஐயோ இந்த குணா ணா இப்டி பண்ணுதே’ என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். பக்ஸ்கூட ‘சே இவன் இப்டி பேசினா என்ன செய்ய’ என்று தடுமாறி நின்றான்.
குணா பேச்சால்… வெற்றியோ திடுக்கிட்டுப் போனான். மகளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தவன் மனம் அலைக்கழிந்து வந்தது.
ஆயாதான், “நானும் கம்பளைண்ட் குடுப்பேன்” என்றார் நிதானமாக.
“நீ என்னய பத்தி குடுக்க என்ன இருக்கு” என்றான் குணா தெனாவட்டாக.
“நீ எவ்ளோ பெரிய கிரிமனல் தெரியுமா? விவாகரத்து பண்ணாம இன்னொரு கல்யாணம் பண்ணிருக்க. உமா அடிக்கடி என்ட்ட உன்னய ஒன்னுமே பண்ண முடியலனு சொல்லி வருத்தப்படுவா.
உன்னய பத்தி தெரிஞ்சும் நாங்களும் எதுவும் பண்ணல. எங்களுக்கு அப்போ சரியா வெவரம் தெரியல. செலவழிக்கவும் தெம்பில்ல.
இப்ப அப்படியில்ல!
எதுனா தெரியலனா இந்த தம்பி சொல்லும். செலவானாலும் பரவால்ல, இப்டி பிரிச்சனை பண்றவன சும்மா வுடகூடாதுனு தோணுது. என்ன கம்ப்ளைன்ட் கொடுக்கட்டுமா? கம்பி எண்ண ரெடியா இருக்கியா?” என்றார்.
என்ன பேசிடுவார் என்று குணா திமிராக நின்றிருந்தான். ஆனால் அவர் பேசப் பேச பீதியடைந்து போய்விட்டான். “என்ன ஆயா டக்குன்னு இப்டி பேசிட்ட. தமிழ அவரு நல்லா பாத்துப்பாறானு தெரிஞ்சிக்க வேணாமா. அதான் பேசினேன். மத்தபடி நான் ஏன் டேசன் போ போறேன்” என்றான் பவ்வயமாக.
பயத்தில்… சற்றுநேரம் முன் பேசியதற்கும், இப்போது பேசியதற்கும் சம்பந்தமே இல்லாமல், அப்படியே மாற்றிப் பேசியிருந்தான்.
ஆயா பற்றி அவனுக்குத் தெரியும். கடுமையானவர்தான். தயவு தாட்சண்யம் எல்லாம் பார்க்க மாட்டார். சொல்வதைச் செய்வார். அவரிடம் சண்டையிட்டு, என் வாழ்க்கையை ஏன் கெடுத்துக்க வேண்டும் என்றுதான் தலைகீழாக மாற்றிப் பேசியிருந்தான்.
பேசிவிட்டு வெற்றியை நோக்கிச் செல்லப் போனான் குணா. அவனை ஆயா கை நீட்டி தடுக்கவும், “தமிழ நீயே வளத்துக்கோனு சொல்லதான் போறேன்” என்றதற்கு, “அத இங்கருந்தே சொல்லு” என்றார்.
ஆயா சொன்னபடி குணா செய்தான். ராணியிடம், “இனி என் வூட்டு முன்ன வந்து நிக்காத” என்றான். பக்ஸிடம், “கடைசி வர இப்படி தெருவோரம்தான் நீ இருக்க போற” என்றான்.
உள்ளுக்குள் இருக்கும் கோபத்தை குணா இப்படி வெளிப்படுத்திக் கொண்டான்.
பக்ஸ் கோபப்பட போனான். வேண்டாம் பேசிட்டுப் போகட்டும் என்று ஆயா மகனைப் பிடித்துக் கொண்டார். அப்படிக் கோபப்பட்டுப் போவதில்தான் குணாவிற்குத் திருப்தி என்றால், கோபப்பட்டுக் கொள்ளட்டும்… தமிழுக்காக, அந்தக் குழந்தையின் நலனுக்காக…!
பக்ஸ் புரிந்து கொண்டான்.
என்னதான் குணாவிற்குக் கோபம் இருந்தாலும்… மனைவி கோமதி, மகன் என்ற வாழ்க்கைதான் அவனுக்கு முக்கியம். அதற்கு பங்கம் விளைவிக்கும் எதையும் செய்ய அவனுக்கு விருப்பமில்லை. ‘இனி இதுங்க மூஞ்ச பாக்கவே கூடாது’ என்று நினைத்தபடி கிளம்பிப் போய்விட்டான்.
அவன் போன பின்தான் ராணிக்கும், பகவதிக்கும் பதற்றம் போனது. ‘ஷப்பா, ஒருவழியா போயிட்டான்’ என்று மூச்சுவிட்டனர். ஆயா வெற்றி முன் வந்தார்.
வெற்றிக்கு இன்னுமே இதயம் படபடவென்று துடித்தது. ஆயாவிற்கு நன்றி சொல்வது போல் இரு கை கூப்பினான். பக்ஸ், ராணியையும் நன்றியோடு பார்த்தான். அடுத்து, “நாங்க கிளம்புறோம்” என்றான்.
அவன் கைகளை இறக்கிவிட்டவர், “சரி… கிளம்புப்பா” என்றார்.
ராணி கண் கலங்கினாள். இத்தனை நாளாக தமிழைப் பார்த்திருக்காளே. சொல்லத் தேவையில்லை என்று தெரிந்தும், “தமிழ நல்லா பாத்துக்கோங்க. முடிஞ்சா எப்பவாது இங்க வந்து புள்ளய காட்டிட்டு போங்க சார்” என்றாள்.
“கண்டிப்பா இங்க வருவோம். நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க. அப்புறமா ஃபோன் போட்டு அட்ரஸ் சொல்றேன்” என்றான் வெற்றி.
“படிக்கலாம் வெப்பேல சார்” என்றான் பக்ஸ். “கல்லூடா சார்” என்றான் பக்ஸ்.
பக்ஸின் கேள்விகளுக்கு, ‘ம்ம்’ என்று சொல்லியிருந்தான் வெற்றி.
பக்ஸ், “அப்புறமென்ன தமிழு சந்தோசமாய் சிரிச்சிக்கினே இரு” என்றான் இன்னும் விசும்பல் இருந்த தமிழிடம்.
ஆயாவிற்கு அந்தக் கணத்தில் ஒரு யோசனை வந்தது. வெற்றியிடம், “இந்த நேரத்துல இதகேக்கேனு தப்பா எடுத்துக்காத பா. பக்ஸ்க்கு வேலை இல்லனு உனக்கு தெரியும்ல. அவனுக்கு உன்னால எதுனா வேலை ஏற்பாடு பண்ணித் தர முடியுமா?” என்றார்.
ஆயா இப்படிக் கேட்பார் என்று ராணி நினைக்கவில்லை. அவர் கேட்டதும் ராணிக்கும் வெற்றியிடம் உதவி கேட்கலாமே என்று தோன்றியது. “நல்லா வேல பாப்பாரு. எந்த பிரச்சனையும் பண்ண மாட்டாரு. எங்கயாவது தெரிஞ்ச இடத்துல வேலை இருந்தால் சொல்லுங்க சார்” என்றாள்.
பக்ஸை வெற்றிக்குப் பிடிக்கும். இத்தனை நாள் பழக்கத்தில் என்று சொல்ல முடியாது. பார்த்ததில்… அவன் குடும்பத்தை ஆயாவைப் பார்த்துக் கொள்ளும் விதத்தில் பிடிக்கும். தன்னால் முடிந்த உதவியைச் செய்ய நினைத்தான். ஆனால் அவனுக்கு நட்பு வட்டம் என்று பெரிதாகக் கிடையாது.
யாரிடம் கேட்க என்று யோசித்தாலும், “ட்ரை பண்றேன்” என்றான்.
வெற்றி அப்படிச் சொன்னதும் பக்ஸ், “சார் நான் நல்லவன்னு நம்புறியா நீ?” என்றான்.
என்ன கேள்வி இது என்று ஆயா, ராணி நின்றனர்.
“என்ன இது… இப்படி கேட்டுட்டிங்க” என்றான் வெற்றி. அதிலேயே, “கண்டிப்பா நம்புறேன்” என்ற பதில் இருந்தது.
“அந்த காவாக்கு பின்னால தெரியுதுல அப்பார்ட்மென்ட்… அங்க ஒரு வேலை இருக்கு சார். அஞ்சு மாடி கட்டடம். மொத்தம் இருபது வூடு இருக்கு. ஒவ்வொரு வீட்லயும் குப்பை எடுக்கணும்; அப்புறம் படிக்கட்டு, வரண்டா, காம்பவுண்டு எல்லாம் பெருக்கி தொடைக்கணும்.
வேல இருக்குனு தெரிஞ்சி நேத்து போய் கேட்டேன் சார். இப்படி ரோட்டோரம் இருக்கதால நம்ப மாட்டிகிக்கிறாங்க. உள்ள வுட பயப்படறாங்க. யாரையாது கேரண்ட்டி கொடுக்க சொல்லு வேல தர்றோம்னு சொன்னாங்க. நீ எனக்காக வந்து பேசுறியா சார்”
எங்கே உதவி செய்ய முடியாதோ என்று இருந்த வெற்றி… பக்ஸ் இப்படிக் கேட்டதும், “நீங்க எப்பனு சொல்லுங்க, கண்டிப்பா வந்து பேசறேன்” என்றான்.
ராணி, “நேத்து ஒருமாதிரி இருந்தியே. இதனாலதானா… நான் கேட்டதுக்கு ஒன்னுமில்லைனு சொன்ன” என்றாள் கணவனிடம்.
“நேத்து இருந்த நிலைமைல சொல்ல தோணல” என்றான் பக்ஸ்.
ஆயா, “கிளம்புப்பா. இன்னும் டிப்பன் நீங்க சாப்டல. ரெண்டு பேரும் மாத்திர போடனும்ல. இங்க சாப்டறியா… இல்ல எப்படி?” என்றார் வெற்றியிடம்.
“போறப்ப சாப்பிட்டுகிறோம்” என்றான்.
“உங்க வீட்ல சொல்லிட்டியா, அவங்க என்ன சொல்லுவாங்க” என்றார்.
“இல்ல, ஆனா நான் பார்த்துக்கிறேன்” என்றான் உறுதியான குரலில்.
“சரி தம்பி கிளம்பு” என்று ஆயா போய்ப் படுத்துக்கொண்டார்.
வெற்றி தமிழின் கட்டைப்பை, தோள் பையை எடுத்துக் கொண்டு… ராணி, பக்ஸிடம் வந்து நின்றான். “முதல அவங்ககிட்ட போய் என் நம்பர் கொடுங்க. என்கிட்ட பேசட்டும். நேர்ல வந்து பேசணும்னாலும் பேசறேன்” என்றவன், அவர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
ராணி கொஞ்சம் அழுதாள். பக்ஸ், “சொம்மா அழாத. தமிழு அவர்ட்டதான் சந்தோசமா இருக்கும்” என்று சமாதானப்படுத்தினான்.
“நானும் இங்க இருக்கணும்னு சொல்லல பக்ஸ். உமா மேலருந்து பார்த்து சந்தோசப்படுவா” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
“நல்ல மனுசன். நம்மளலாம் யாருனா வீட்டுக்கு கூப்ட்டுவாங்களா? இதோ இன்னிக்கி ஒருத்தரு கூப்டிறப்ப… எப்படி இருக்கு தெரியுமா? என்றான்.
படுத்திருந்த ஆயா, “பக்ஸ் பேசிக்கினே இருக்காம… வெற்றி சொன்ன மாதிரி மொதல போன் நம்பர குடுத்து வேலைய கன்பாம் பண்ண பாரு. இதில் அந்த தம்பி எடுத்துக்கோ” என்று அவர் அலைபேசியை எடுத்துக் கொடுத்தார்.
சட்டென ராணி முகத்தில் ஒரு மலர்ச்சி. என்னமோ வேலை கிடைத்துவிடும் என்று உள்ளுணர்வு சொன்னது. “சரியா நம்பர் பாத்து எழுதிக்கோ” என்று கணவன் அருகே வந்து நின்றாள்.
“நீ வேலைக்கு கிளம்பலயா?” என்றார் ஆயா அவளிடம்.
“மத்தியானத்துக்கு மேலதான் போனும்” என்று சோறு பொங்கப் போனாள். என்னமோ நல்லது நடக்குமென அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருந்தது. கணவனும் மகளும் வந்து சாப்பிட ஏதாவது இனிப்பும் செய்து வைத்துவிட்டு போக நினைத்தவள் மலர்ந்த முகத்துடன் வேலை பார்த்தாள்.
“பக்ஸ் அப்படியே வீடும் பாரு” என்றார் ஆயா.
“மொதல வேல கெடைக்கட்டும் ஆயா. நாலஞ்சி மாசம் சேர்ந்தா போல கைல பேமெண்ட் வாங்கினுதான் வீடு பத்தி யோசிக்கணும்”
“அதெல்லாம் கெடைக்கும். ராணியோட ரெண்டு மாச சம்பளம் சேத்து வச்சது இருக்குல. நானும் கொஞ்சம் தர்றேன்” என்றார்.
பாதுகாப்பான கூட்டுக்குள் குடும்பத்தை கொண்டு போக நினைக்கிறான். அதை தாமதப்படுத்த வேண்டாம். அவரிடம் சேமிப்பு எதுவுமில்லை. கழுத்தில் கருமணி போட்டிருப்பார். அதில் நான்கு தங்கமணிகளும் இருக்கும். அதை விற்று மகனுக்கு கொடுக்க நினைத்தார்.
அதனால்தான் துணிந்து வீடு பாரு என்றிருந்தார்.
ஆயா இதுவரை இப்படிச் சொன்னதில்லை என்பதால், “சரி பாக்கிறேன், நீ ரெஸ்ட் எடு, நான் போய்ட்டு வர்றேன்” என்றான் ஆயாவிடம். “நான் மீனாவ கூட்டிட்டு போறேன். வர லேட்டாகும். நீ சாப்ட்டு வேலைக்கு கிளம்பு” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, மகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான்.
காற்று போல் வெயில் அடித்த சாலையில் மகளைக் கையில் சுமந்தபடி பக்ஸ் நடந்தான். மனைவி முகத்தில் தெரிந்த மலர்ச்சியைப் பார்த்திருந்தான். இந்த வேலை கிடைக்கும் என்று நம்புகிறாள். அவள் நம்பிக்கை… ஆயா நம்பிக்கை பொய்யாகிடக் கூடாது என்று நினைத்தபடி நடந்தான்.
ஒரு வேலை மட்டும் கிடைத்துவிட்டால், நினைத்தது போல் மகளைப் படிக்க வைக்கலாம்… அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைத்துக் கொடுக்கலாம். இந்த வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசையோடும்… கிடைத்திடும் என்ற நம்பிக்கையோடும் நடந்தான்.
அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே தடுமாறி நின்ற இடத்திலிருந்து, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற அன்றாடத்திற்குள் போவதற்கான அடிகள் எடுத்து வைத்தான் பக்ஸ்.
இதே நேரத்தில் வெற்றி ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தான். எல்லாம் கடந்து மகள் மடியில் இருப்பது அவனுக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது. கூடவே வீட்டினரை நினைத்து இருந்த பயத்தில், ‘இதுக்கு மேல எங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாமே’ என்று கடவுளை வேண்டியபடி இருந்தான்.
