Kathambari Novels
அத்தியாயம் – 19
வெற்றி, மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு ஆட்டோவில் வந்து இறங்கினான். இங்கே வருவதற்கு முன் முக்கிய வேலை ஒன்றைப் பார்க்க நினைத்தான். இன்று அலுவலகத்திற்கு அவனால் வர இயலாது என்று தகவல் சொல்லிவிட்டு, அந்த வேலையைப் பார்த்துவிட்டு வர மாலை ஆகியிருந்தது.
தமிழ் தூங்கியிருந்தாள். மகளைத் தோளில் போட்டுக் கொண்டு இறங்கி, ஆட்டோ பணம் கொடுக்கையில், சாந்தி தோழி சாரதா பார்த்துவிட்டு, “யார் குழந்தை வெற்றி இது?” என்றாள்.
‘என் பொண்ணு’ என்று சொன்னால், புரிந்து கொள்வாரா? அதோடு அந்தப் பதிலுக்கு அடுத்து வேறு கேள்வி கேட்காமல் இருப்பாரா? தெரியவில்லை. மற்றவர்களிடம் விளக்கிச் சொல்லும் நிலையில் அவன் இல்லை. முதலில் வீட்டினரிடம் பேச வேண்டும்.
“அப்புறம் சொல்றேன்கா” என்று படியேறினான். எப்படியும் தன் அக்காவிடம் உடனே சாரதா சொல்லக்கூடும் என்று நினைத்தபடி மேலே சென்று, வீட்டுக் கதவை தட்டிக்கொண்டு நின்றான்.
சந்திரன், மாடி முகப்பில் அமர்ந்து பேரப் பிள்ளைகளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். வேலைக்குப் போய்விட்டு வந்த கணவனுக்கு, ஹரிணி மாலை நேர தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
முகம் கழுவிட்டு வந்த கலை கதவைத் திறந்தான். வெற்றியைப் பார்த்துமே, “எங்கடா போயிருந்த…” என்றான் கோபமாக. அடுத்து அவன் கையிலிருந்த தமிழைப் பார்த்ததும், “யார் குழந்தடா இது?” என்றான் அதிர்ச்சியாக.
“உள்ளே வந்து சொல்றேன் ணா” என்று வீட்டுக்குள் செல்லப் பார்க்க, அதற்கு கலை விடவில்லை. தம்பியின் முடிவு அவனுக்கு லேசாக விளங்கியது.
“வழிவிடு ணா” என்று உள்ளே செல்லப் பார்த்தான் மீண்டும் வெற்றி.
‘முடியாது’ என்று தலையசைத்து, “ப்பா இங்க வாங்க” என்று கத்தினான்.
சந்திரன் வருவதற்குள் ஹரிணி வந்திருந்தாள். குழந்தையுடன் வந்து நிற்கும் வெற்றியை அதிர்ச்சியுடன் பார்த்தவள், “மாமா, இங்க வாங்க, வெற்றி என்ன பண்ணிட்டு வந்திருக்கான்னு பாருங்க” என்று அவளும் கத்தினாள்
பேரப் பிள்ளைகளை உள்ளே அழைத்து வந்த சந்திரன், வாசலில் நிற்கும் சின்ன மகனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போய் நின்றுவிட்டார். பின் அப்படியே போய் எஃகு இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
வெற்றி எக்கி… கலையைத் தாண்டி அப்பாவைப் பார்த்து, “அப்பா தெளிவா சொல்றேன், முதல என்னய உள்ள விட சொல்லுங்க” என்றான்.
“என்ன சொல்ல போற? நீ சொல்லாமலே என்னால புரிஞ்சுக்க முடியுது. ஏன்டா ஏன் உன் புத்தி இப்படி போயிருக்கு? யார் பிள்ளைய தூக்கிட்டு வந்து நிக்கிற” என்றார். அடுத்து, “யார் புள்ளயா இருந்தா என்ன, முதல அத கொண்டு போய் விட்டு வா, இதலாம் சரிப்பட்டு வராது” என்று கோபத்தைக் கொட்டினார்.
மருந்துகளின் உதவியால் தமிழ் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை உள்ளே படுக்க வைத்துவிட்டு வந்து பேசலாம் என்றால் விடமாட்டிக்கிறார்களே என்று வெற்றிக்கு கோபம் வந்தது.
அந்தக்கணம் சாந்தி வந்தாள். வந்ததும் தம்பியிடம், “டேய், சாரதா, என்னமோ சொன்னா, அப்படிலாம் இருக்காதுனு நினைச்சு வந்தா, நீ என்ன பிள்ளையை வச்சுக்கிட்டு நிக்க” என்று பரபரத்தாள். வேலை முடிந்த நேராக இங்கே வந்திருப்பாள் போல. கைப்பை, உணவுக்கூடை சகிதமாக நின்றாள்.
மகள் வந்ததும் எழுந்து வந்த சந்திரன், “சாந்தி, பாரு உன் தம்பி என்ன முடிவு எடுத்திருக்கான்னு” என்று மகனைப் பற்றி புகார் சொன்னார்.
அந்தக்கணம்… ஸ்வேதாவும், ஈஸ்வரியும் வந்து நின்றனர். வெற்றி கையில் குழந்தையுடன் நிற்பதைப் பார்தது அவர்களும் அதிர்ந்துதான் போனார்கள். சாந்தியும், சந்திரனும் ‘இப்ப இவங்க ஏன் வந்திருக்காங்க’ என்று பார்த்தனர்.
வெற்றி சொல்லாமலே அவன் முடிவுகள் என்னவென்று அங்கே எல்லாருக்கும் புரிந்துவிட்டது. அவர்களுக்குப் புரிந்தது என்று அவனுக்கும் தெரிந்தது. இதோ அவனையும், அவன் மகளையும் இப்படி வாசலில் நிற்க வைத்திருப்பதிலே, அவர்கள் தன் முடிவை எப்படிப் பார்ப்பார்கள் என்றும்கூட தெரிந்தது.
யாருக்கும் எதையும் சொல்லாமல் அப்படியே போய்விடலாம்தான். ஆனால் அவனுக்கும் தமிழுக்குமான பந்தத்தை சொல்ல நினைத்தான். அக்காவிடம், “க்கா, நாந்தான் ஸ்வேதாவ வர சொன்னேன். அண்ணாகிட்ட நீ சொல்லு க்கா. நான் இவளை ரூம்ல படுக்க வச்சிட்டு வந்து பேசறேன்னு” என்றான்.
அவ்வளவு நேரம் அவர்கள் வீட்டு முன்னால் கேட்ட பேச்சு சத்தத்தில் அந்தத் தளத்தில் இருக்கும் மற்ற இரண்டு வீட்டுக்காரர்கள் வெளியே வந்திருந்தனர். கீழ்தளத்தில் இருந்தும் ஆட்கள் மேலே பார்த்தனர்.
சாந்திக்கு, தன் தம்பி அப்படி நிற்பது பிடிக்கவில்லை. கலையிடம், “அவனை உள்ள விடுடா, வெளிய வேடிக்கை மாதிரி பார்க்கிறாங்க” என்றாள்.
“பார்த்தா பார்த்துட்டு போகட்டு மா. என்ன பேசணும்னாலும் அந்த பிள்ளைய போய் விட்டுட்டு வந்து பேசச் சொல்லு” என்றார் சந்திரன் கடுமையாக.
மீண்டும் கலையிடம், “ஏன்டா இப்படி பண்ற, அவன உள்ள விடு” என்று சாந்தி சொன்னாள். அவன் கேட்கவில்லை. அப்பா கோபப்படுவதைப் பார்த்தவள், முதலில் அவரை அமைதிப்படுத்த நினைத்து அவர் அருகில் போய் அமர்ந்து, “நம்ம வெற்றிக்கு பேசி புரிய வைக்கலாம்” என்று பேச ஆரம்பித்தாள்.
தமிழ் தூக்கம் கலையும் முன் எல்லாரிடமும் பேசிவிட நினைத்தான் வெற்றி. ஸ்வேதாவிடம் சென்றான். இவளிடம் தமிழைப் பற்றி, தன் மனத்தைப் பற்றி எந்த விளக்கங்களும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால், “கொடு, சைன் போடுறேன்” என்றான்.
இதற்கு மேல் திருமண வாழ்க்கையில் ஒரு முடிவு எடுக்காமல் தள்ளிப் போட வெற்றி விரும்பவில்லை. இதுவே தாமதம்தான். இருந்தாலும் எடுத்த முடிவில் தெளிவாக இருந்தான். விவாகரத்திற்குச் சம்மதிக்கிறேன் என சொல்லித்தான் அவர்களை வரச் சொல்லியிருந்தான்.
எனவே வரும்போதே வரைவு மனு (draft petition), சம்மதப் பிரமாணப் பத்திரம் (consent affidavit) எடுத்து வந்திருந்தாள் ஸ்வேதா. அவள் கொடுக்கவும், அவன் சம்மதப் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு, அவளிடம் நீட்டினான்.
அதை வாங்கிக் கொண்டு, “டிராப்ட் பெட்டிசன்ல சைன் போடணும், லாயர் ஆபிஸ் போக வேண்டி இருக்கும்” என்றாள்.
“எப்பனு சொல்லு, வர்றேன்” என்றான்.
ஈஸ்வரி பார்வை வெற்றி தோளில் தூங்கும் தமிழ் மீதே இருந்தது. “இது யார் குழந்த, தத்து எடுத்திருக்கியா” என்றார்.
அவ்வளவு நேரம் அவர் ஆராய்ச்சிப் பார்வையைக் கவனித்திருந்தவன், “அது உங்களுக்கு தேவையில்ல!” என்றான் முகத்தில் அடித்தார் போல்.
“ம் ரொம்பதான்” என்று ஈஸ்வரி ஏதோ பேசப் போக, “போதும்! நீங்க என்னை நிறைய பேசி இருக்கீங்க. திருப்பி நான் எதும் பேசினதே இல்லை. இப்பவும் உங்ககிட்ட பேச வேண்டாம்னு நினைக்கிறேன். பேச பிடிக்கல” என்றவன், ஸ்வேதா பக்கம் திரும்பி, “வேறேதும் சொல்லணுமா” என்றான்.
“அண்ணாட்ட வாங்கின கடனையும் சீக்கிரம் கொடுத்திடுங்க. நாகுண்ணா சொல்லிட்டு வர சொன்னான்” என்றாள்.
சரியென்று தலையசைத்துக் கொண்டான்.
வெற்றியைப் பார்த்தாள் ஸ்வேதா. தூக்கம் கலையக் கூடாதென தமிழுக்குத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அதிலே அந்தக் குழந்தை மேல் அவன் வைத்திருக்கும் பாசம் தெரிந்தது. அதைப் பார்க்கப் பார்க்க… யார் குழந்தை இது, எப்படி இவனால் பாசம் காட்ட முடிகிறது என்று தோன்றியது.
யார் மகளையோ, தன் மகளாக நினைத்து வளர்க்கும் வாழ்க்கையை வாழ அவளுக்குத் துளியும் மனமில்லை. அவளால் அது இயலாது. அதை ஏற்கவும் முடியாது. வெற்றிக்கு அது முடிந்தால், அது அவனுடைய விருப்பம். அதனால் அதைப் பற்றி ஸ்வேதா எதுவும் கேட்கவில்லை.
ஈஸ்வரி சொல்லித்தான் ஆரம்பித்தது என்றாலும், விவாகரத்து முடிவில் அவள் உறுதியாக இருந்தது நல்லதுதான் என்று தோன்றியது. இப்போது அவனும் விவகாரத்திற்குச் சம்மதித்திருப்பதில், அவளுக்குப் பெரும் நிம்மதி.
அந்த நிம்மதியுடன், “வியாழக்கிழம லாயர பார்க்க வேண்டியதா இருக்கும்” என்றாள். ஈஸ்வரி, “அதலாம் அண்ணன் பேசிப்பான், நீ வா” என்று மகளைக் கூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார். மகளுக்கு மறுவாழ்க்கை, மகனுக்கும் ஒரு வாழ்க்கை… என்று தன் கடமைகளை நினைத்தபடி போனார்.
காரணம் எதுவாக இருந்தாலும், அவள் எடுத்த முடிவில் ஸ்வேதா தெளிவாக, உறுதியாக இருக்கிறாள். நானும் தடுமாறாமல், முடிவு எடுப்பதை தள்ளிப் போடாமல் இருந்திருந்தால், மனம் காயப்படுவதையாவது தடுத்திருக்கலாம் என்று தோன்றியது வெற்றிக்கு.
‘சரி… இன்றாவது முடிவு எடுத்தேனே’ என்று மனத்தை தேற்றிக் கொண்டான். இன்னும் சில முடிவுகள் எடுத்திருக்கிறான். வீட்டில் உள்ளவர்களிடம் அதைச் சொல்ல வேண்டும். வாசலிருந்து தள்ளி வந்து ஸ்வேதாவிடம் பேசியிருந்தான். மீண்டும் வீட்டு வாசலுக்குச் சென்று நின்றான்.
கலை இன்னும் வாசலில்தான் நின்றான். வெற்றி கையெழுத்துப் போடுவதை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். “இப்பதான்டா சரியான ஒரு முடிவு எடுத்திருக்க” என்றான் தம்பியிடம்.
சாந்தி அப்பாவை அமைதிப்படுத்த, ‘நாம சொன்னா வெற்றி கேட்டுப்பான், நீங்க இப்படி டென்சனாகதீங்க’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்ததில், வெளியே நடந்ததை கவனிக்கவேயில்லை. கலை பேசவும்தான் நிமிர்ந்து பார்த்தாள்.
“அவன் டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போட்டுட்டான், இன்னும் நீங்க இப்படியே பேசிகிட்டு இருங்க” என்றான் கலை.
சாந்திக்கும் சந்திரனுக்கும் அடுத்த அதிர்ச்சி இது. ஓரளவு புரிந்திருந்தாலும், இன்றே வெற்றி கையெழுத்திடுவான் என்று நினைக்கவில்லை. கோபத்திலும் ஆத்திரத்திலும் சந்திரன், “என்னமோ சொன்ன, நாம பேசினா அதெல்லாம் கேட்டுப்பான்னு, இப்ப என்ன சொல்ற” என்றார் மகளிடம்.
சாந்தி வேகமாக வந்து, “ஏன் வெற்றி இப்படி” என்றாள் கண்கள் கலங்க.
அவள் கண்ணோரக் கண்ணீர் துளி பார்த்தவன், “என்னக்கா நீ…” என்றான். “இத நான் எப்பவோ செஞ்சிருக்கணும், இதுவே லேட்” என்றான் “உங்ககிட்ட நான் பேசணும், முதல என்னய உள்ள விட சொல்லுக்கா” என்றான் மீண்டும்.
அங்கிருந்தபடியே சந்திரன், “எங்க பேச்ச கேட்க மாட்ட, நீ பேசறத மட்டும் நாங்க கேட்கணுமா” என்று கத்தினார்.
கலையும் வழிவிடாமல் நின்றான்.
சாந்திக்கு அப்பாமீதும் கோபம் வந்தது. கலைமீதும் கோபம் வந்தது. “நேத்து போனவன் இன்னைக்குத்தான் வந்திருக்கான்! அவன் கைல அடிபட்டிருக்கு!! சாப்பிட்டானா, மாத்திரை போட்டானா… எதுவும் தெரியல. இன்னும் எவ்ளோ நேரம் அவனை இப்படியே நிறுத்தி வைக்கப் போறீங்க” என்றாள்.
அதுவரை ஒன்றும் பேசாமல் நடப்பதை வேடிக்கைப் போல் பார்த்திருந்த ஹரிணி, “புரியாம பேசாதீங்க. வெற்றியை வீட்டுக்குள்ள விட முடியாதுனு இங்க யாரும் சொல்லல. அவன் கைல வச்சிருக்க புள்ளயோட அவனை உள்ள வர வேண்டாம்னுதான் சொல்றாங்க.
யாரு, என்ன, எங்கிருந்து தூக்கிட்டு வந்திருக்கானு எதுவும் தெரியாம எப்படி உள்ள விடறது. அப்படியே தெரிஞ்சாலும், எங்கிருந்தோ வந்த ஒரு பிள்ளைகூட என் பிள்ளைங்க வளரணுமா… அதலாம் முடியவே முடியாது” என்றாள்.
மனைவி சொல்வதை ஆமோதிப்பது போல் கலை நின்றான்.
வெற்றி, “அண்ணி… உங்ககிட்ட சொன்னேனா, இங்கதான் நாங்க இருக்கப் போறோம்னு. நான் எங்களுக்கு வீடு பார்த்திட்டேன். என் திங்ஸ் எடுத்திட்டு போயிடுவேன். அதுக்கு மட்டும் உள்ள விடுங்க போதும்” என்றான்.
பாலத்திலிருந்து கிளம்பிய வெற்றி, நேராக பழவந்தாங்கல் சென்றிருந்தான். அங்கேதான் வீடு பார்த்திருக்கிறான். முன்தொகை தர வேண்டியிருந்தது. கையில் அவ்வளவு பணம் இல்லை. ஒரு வாரத்தில் தந்துவிடுவதாகச் சொல்லி, அலுவலகத்தில் ஒருவரிடம் வாங்கித்தான் கொடுத்திருந்தான்.
இனி வெற்றி இங்கே இருக்கப் போவதில்லை என்றதே ஹரிணிக்கு அவ்வளவு சந்தோசம் தந்தது. இனி அம்மா இங்கே வந்துவிடுவார். அவளுக்கு உதவுவார். அவள் வேலைக்குகூடச் செல்லலாம். அதுவே போதுமானதாக இருந்தது.
அடுத்து எதுவும் அவள் பேசிக் கொண்டிருக்கவில்லை. ‘உங்க வீட்டு பையன், நீங்க என்னவோ பேசிக்கோங்க’ என்பது போல்… தன் பிள்ளைகளை, சாந்தி மகனைக் கூட்டிக் கொண்டு அறைக்குப் போய்விட்டாள்.
கலைக்கு ஒருமாதிரி ஆகிற்று. நேற்றைக்கு முன்தினம் வாடகை, வீடு பற்றிப் பேசியதால்தான் இப்படியா என்று. மெல்ல வாசலிலிருந்து விலகி நின்றான்.
வெற்றி, அவன் இருக்கும் அறைக்குப் போய் தமிழைப் படுக்க வைத்தான். காற்றாடி போட்டு, அவளுக்குப் போர்த்திவிட்டு வெளியே வந்தான். என்ன என்ன கேட்பார்ளோ… எங்களைப் புரிய வைக்க என்ன பேசணுமோ, எவ்வளவு பேசணுமோ என்ற எண்ணங்கள் ஓடி ஓடியே… அவன் மனம் சோர்வுற்றது.
அவன் வந்ததும் சந்திரன், “ச்சே நீ இப்படி பண்ணுவேன்னு நினைக்கலடா. நீ நல்லா இருப்பனு உன் அம்மா பார்த்து பார்த்து பண்ணி வச்ச கல்யாணத்தை முடிச்சிட்டு வந்து நிக்க… எப்படித்தான் மனசு வந்ததோ?” என்றார்.
வெற்றி, “நான் டைவோர்ஸ்க்கு சம்மதிக்கலைனா, ஸ்வேதா என்கூட சேர்ந்து வாழ்ந்திடுவானு நினைக்கிறீங்களா” என்றான்.
“அவகிட்ட நீ உட்கார்ந்து பேசிப் பார்த்திருக்கணும்! நீ எங்க பேசின? நாங்க எடுத்த முயற்சிகூட நீ எடுக்கலையே”
“புரியாம பேசாதீங்க! அவ எப்பவோ நான் அவ வாழ்க்க இல்லனு போயிட்டா. அவ திரும்ப வருவாங்கிற நம்பிக்கை எனக்கும் எப்பவோ போயிருச்சு. நான் இன்னைக்கு எடுத்த முடிவை, முன்னமே எடுத்து இருக்கலாம். எடுக்காததுக்கு நானும் ஒரு காரணம்னாலும், நீங்களும் என்னய முடிவெடுக்க விடல”
வெற்றி எப்போதும் இதுபோன்று பேசியதில்லை. என்றும் பேசாதவன் இன்று அவனுக்காகப் பேசினான். பேச வேண்டிய அவசியம் வந்திருந்தது.
சந்திரனும் பேசினார். மனைவி நடத்தி வைத்த திருமணத்தை முறித்துவிட்டு வந்திருக்கானே மகன்… என்று சந்திரனும் பேசினார்.
“நீ என்ன முடிவெடுப்ப… உனக்கு முடிவெடுக்க தெரியுமா சொல்லு? அம்மா அம்மானு சொல்லிக்கிட்டு இருப்பியே, அவ உனக்காக ஆசைப்பட்ட பண்ண ஒரு விசயத்தை சுலபமா தூக்கிப் போட்டு வந்திருக்கடா நீ!”
“சும்மா அம்மா பேரை சொல்லி சொல்லி என்னைய இதுல பிடிச்சு வைக்க நினைக்காதீங்க. அம்மா இருந்தாலும் இப்ப என் முடிவுக்கு எதுவும் சொல்லி இருக்க மாட்டாங்க. சொல்லப் போனா என்னய புரிஞ்சிருப்பாங்க. எப்பவோ இந்த முடிவை என்னை எடுக்க வச்சிருப்பாங்க”
“உனக்கு உன் அம்மா பத்தி சரியா தெரியல. இப்படி ஒரு முடிவை அவ எடுக்க சொல்லிருக்கவே மாட்டா” என்றார் விடாமல் சந்திரன்.
“என் அம்மாவ எனக்குத் தெரியும், கண்டிப்பா என்னய இந்த முடிவை எடுக்க சொல்லி இருப்பாங்க” – வெற்றியும் விடவில்லை. ஆனால் தன் அம்மா பற்றிப் பேசப் பேச அவன் குரல் உடைய ஆரம்பித்தது. என் அம்மா இருந்திருந்தால், என்னைப் புரிந்திருப்பாரே என்பதில் குரல் தழுதழுத்து வந்தது.
இதை உணர்ந்த சாந்தி, தம்பி அருகே வந்து நின்று கொண்டாள். அப்போதும் அவள் வேறெதுவும் பேசவில்லை.
“போதும்டா, கூடக் கூட அப்பாகிட்ட பேசாத” என்றான் கலை கோபமாக.
“அவரும் பேசறாருல ணா” – வெற்றி.
கலை, “அவருக்கு உன்மேல கோபம்! பேசிட்டுப் போறாருனு விடு” என்றான் தம்பியிடம். அடுத்ததாக அப்பாவிடம், “விவாகரத்துக்கு அவன் ஒத்துக்கிட்டது சரிதான். இனிமே அத பேசாதீங்க. ஏதோ குழந்தைய வளர்க்கப் போறேன்னு சொல்றானே, அத என்னென்னு கேளுங்க” என்றான்.
“என்னத்த கேட்க, அதலாம் பேசவே எனக்கு பிடிக்கல. எங்கருந்து தூக்கிட்டு வந்தானோ, அங்கயே போய் விட்டு வர சொல்லு” என்றார் சந்திரன் முடிவாக.
என்னது தமிழை விடணுமா? எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டார். அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மனம் தவித்து வந்தது.
நானும், என் மகளும் என்றொரு வாழ்க்கை வாழப் போகிறேன் என்று அவன் சொன்னதும், அதை ஏற்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இதைப் புரிய வைக்க நிறைய பேச வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தவனுக்கு, அதைப் பற்றி பேச விட மாட்டிக்கிறார்களே என்று வருந்தினான்.
“பாரு வெற்றி, இந்த விசயத்தில நீ எடுத்திருக்க முடிவு எனக்கு சரியா படல. அப்பா சொல்றது கேளுடா. அதான் உனக்கு நல்லது. டைவோர்ஸ் முடியட்டும், அடுத்து உனக்குனு ஒரு வாழ்க்கை பத்தி யோசிக்கலாம்” – கலை எப்போதும் அவனுக்கு இருக்கும் எண்ணத்தை… இப்போதும் வெளிப்படுத்தினான்.
ஏன், என்னால் சரியாக முடிவெடுக்க முடியாது என்றே பேசுகிறார்கள். அப்படி பேசும்படிதான் நான் இருந்திருக்கேனா? இனி அப்படி இருக்க முடியாது. “அவ என் பொண்ணு, என் கூடதான் இருப்பா, இதுதான் என் வாழ்க்கை. இந்த முடிவு நான் எடுத்தது சரிதான்” என்றான் வெற்றி தெளிவாக… திருத்தமாக.
“டேய்! புரியாம பேசாதடா” – கலை.
“புரியாம பேசல ணா, என்னய புரிஞ்சிக்கோங்கனு பேசறேன்” – வெற்றி.
அவனை… அவன் மனதை… அவனுக்கும் தமிழுக்குமான பிணைப்பை… புரிந்து கொள்ள மாட்டார்களா? புரிய வேண்டும் என்றால் அவனைப் பேச விடணும். அவனைப் பேச விடுவார்கள், அவனாகப் பேசினாலும் கேட்பார்கள் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லை. மனம் சோர்ந்து போனது.
“டே! உன் அண்ணி தெளிவாதான சொல்லிட்டு போனா, அந்த பிள்ளையோட இருந்தா, இந்த வீட்ல இருக்க முடியாதுனு. நீ அத கேட்கலையோ” – சந்திரன்.
“வீடு பார்த்திட்டேன்னு நான் சொன்னத நீங்க கேட்கலையா ப்பா” – வெற்றி.
“அப்போ எங்களைவிட… எங்ககூட இருக்கிறத விட, யாரோ ஒரு பிள்ளைகூட இருக்கிறதுதான் உனக்கு முக்கியம்” என்றார் சந்திரன் எரிச்சலாக. மேலும் மகளிடம், “உன் தம்பி இப்படிப் பேசிக்கிட்டு இருக்கான். என்னமா நீ ஒன்னும் சொல்லாம நிக்கிற” என்று கேட்டார்.
வெற்றி பேசப் பேச சாந்திக்கு வார்த்தைகளே வரவில்லை. அவனைப் புரிந்து கொள்ளவில்லை என்கிறானே. நாங்கள் அப்படியா… நானும் அப்படியா என்ற கேள்விக்குள் சிக்கி நின்றுவிட்டாள். அவன் முடிவுகளைப் பற்றி யோசிக்கும் நிலையிலெல்லாம் அவள் இல்லை.
வெற்றி, “நீங்க முக்கியமில்லைனு நான் நினைக்கல. உங்களுக்குத்தான் நான் சொல்றது முக்கியமா படல” என்றான் அப்பாவிடம்.
“என்னடா இப்படி அப்பாகிட்ட பேசற, ஒழுங்கா அந்த பிள்ளைய போய் விட்டு வா முதல” என்றான் கலை கடுமையான குரலில்.
திரும்பத் திரும்ப இதையே சொல்கிறார்களே என வெற்றி மனம் களைத்துப் போனது. தேய்ந்திருந்த குரலில், “ரோகனை, பாப்பாவ எங்கயாவது கொண்டு போய் விடுனு சொன்னா, உன்னால முடியுமா ணா” என்று கேட்டான்.
“என்னடா பேசற… அவங்க என் பிள்ளைங்க” என்றான் கலை எரிச்சலாக.
“தமிழ் என் குழந்தை ணா” என்றான் சட்டென்று. அடுத்து, “ஐயோ உங்களுக்கு எப்படி நான் புரிய வைக்க” என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். கண்களின் கருவிழி கண்ணீர் சூழ்ந்த நிலையில் இருந்தது.
சந்திரன், “நீ ஒன்னும் புரிய வைக்க வேண்டாம், எங்களுக்கு புரிஞ்சிடுச்சி. உனக்கு எங்க மேல எல்லாம் பாசமே இல்ல” என்றார்.
“கரெக்ட்ட்டா சொன்னீங்க ப்பா” என்றான் கலை.
“எனக்கா பாசம் இல்ல? என் வாழ்க்கைல நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்னு வேற வீடு பார்த்திட்டு போயிருக்கலாம். ஆனா ஏன் இங்க வந்து பேசிக்கிட்டு இருக்கேன். உங்ககிட்ட சொல்லாம போக கூடாதுனுதான.
பாசத்தை பத்தி நீங்க பேசாதீங்க ப்பா. என் கைக் காயம் எப்படி இருக்குனு ஒரு வார்த்தை கேட்டீங்களா? இல்லை! கேட்கல!! என்னதான் உங்களுக்கு என்மேல கோபம் இருந்தாலும், நீங்க என்கிட்ட இத கேட்டிருக்கலாம்.
இதுவே அம்மா-னா, எவ்ளோ கோபம் இருந்தாலும் வலிக்குதா, சாப்பிட்டியா, மாத்திரை போட்டியானு கேட்டிருப்பாங்க ப்பா” என்றவனுக்கு கண்ணோரம் கண்ணீர் துளிர்த்து நின்றது.
அந்தநேரம் தமிழ் தூக்கத்தில் எழுந்திருந்து வெளியே வந்தாள். அங்கே யார் யாரோ நிற்பதைக் கண்களில் மிரட்சியுடன் பார்த்தவள், வெற்றி இருப்பதைப் பார்த்ததும், அவன் அருகே வந்து நின்றாள். அவனது கலங்கிய கண்களைப் பார்த்துமே, முகம் சுருங்கி, கண்களில் நீர் திரண்டு, அழத் தயாரானாள்.
“பேபி ஒன்னுமில்ல” என்று சடுதியில் தன்னைத் தேற்றிக் கொண்டான். அவன் கண்ணைக் காண்பித்து காண்பித்து ஏதோ ஏதோ சைகை செய்தாள்.
தங்களை ஏதோ கேள்வியுடன் அவர்கள் பார்ப்பதை வெற்றி உணர்ந்தான். “டேய் இந்த பொண்ணுக்கு பேச்சு…” என்று கலை கேட்க வருகையில், வெற்றி தமிழைத் தூக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டான்.
இதற்குமேல் பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் எப்படிப் பேசுவார்களோ, அவன் மனம் எப்படி உடையுமோ, அதை எப்படி வெளிப்படுத்துவானோ… அது மகளைக் கஷ்டப்படுத்தினால்? போதும் பேசியது என்று போய்விட்டான்.
“இந்த பிள்ளைக்கு பேச்சு வராது போல” என்றான் கலை. அதற்கு சந்திரன் எதுவோ சொன்னார். வெற்றி உள்ளே போனதுமே, சாந்தியும் தம்பியிடம் பேச வந்துவிட்டாள். தமிழ் இன்னும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அவளைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தான் வெற்றி.
சாந்தி தம்பியைப் பார்த்தபடி நின்றாள். தமிழ் உறங்கியதும், அக்கா முன் வந்து நின்றான்.
“ஏன் நேத்து சொல்லாம போன. எனக்கு நீ போனதே தெரியாது. உங்க மாமா வந்திருந்ததுல, உன்னய கவனிக்க முடியலடா” என்றாள். காலையில் மகனை விட்டுப் போக வந்தபோதுதான் அவளிடம் சொல்லியிருந்தார்கள். வெற்றிக்கு உடனே அழைத்தாள். அந்த அழைப்பை அவன் எடுக்கவில்லை.
“நேத்து சொல்ல நினைச்சேன் க்கா. நைட் லேட் ஆயிடுச்சினு சொல்லல. இன்னைக்கு காலைலருந்து நான் இருந்த நிலைமையில… என்னால ஃபோன அட்டன் பண்ண முடியல”
“போடா” என்றுவிட்டு அவன் கைக்காயத்தைப் பார்த்தாள்.
“வலி இப்போ பரவாயில்ல க்கா. சாப்பிட்டேன், மாத்திரையும் போட்டுட்டேன்”
‘ம்ம்’ என்று லேசாக தலையசைத்தவள், “நீ ஃபோனும் எடுக்கல, சொல்லிட்டும் போகலையா… அதான் என்னென்னு தெரியாம பயந்திட்டேன்” என்றாள்.
“இவளுக்கு காய்ச்சல் க்கா, அதான் அவசர அவசரமா போயிட்டேன்” என்று தன் பொருட்களை, துணிகளை எடுத்து வைத்தான்.
உறங்கும் குழந்தையைப் பார்த்த சாந்தி, “இவ பேரென்ன என்னடா” என்றாள்.
எடுத்து வைக்கப் போன துணியை அப்படியே போட்டுவிட்டான். அக்காவின் கேள்வியில் அப்படி ஒரு ஆசுவாசம் உணர்ந்தான். “தமிழரசி” என்றான்.
அடுத்து தமிழ் பற்றி வேறெதுவும் கேட்கவில்லை. கேட்கத் தோன்றவில்லை. தம்பியைப் பற்றித்தான் அவளுக்கு கேட்கத் தோன்றியது. “தனியா எப்படிடா பார்த்துப்ப” என்றாள்.
“அதலாம் பார்த்துப்பேன். எதும் ஹெல்ப் வேணும்னா, உன்கிட்ட கேட்கிறேன் க்கா. செய்ய மாட்டியா நீ?” என்றான்.
மாட்டேன் என்று சொல்ல அவளால் முடியவில்லை. அதேநேரம் செய்வேன் என சொல்லவும் முடியவில்லை. அப்பா, கலைக்கு இதில் உடன்பாடு இல்லை என்று தெரிகிறது. அவள் கணவன், மாமியார், மாமனார் எல்லாரும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
தம்பியின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேனா என்ற கேள்விக்கும் அவளிடம் விடையில்லை. குழப்பமான மனநிலையில் இருந்தாள்.
அக்கா முகத்தைப் பார்த்தவன்… அவள் முன் வந்து, “க்கா இப்ப எதுக்கு இப்படி இருக்க. கொஞ்ச நாளா அவளை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன், இனியும் பார்த்துப்பேன்” என்றுவிட்டுப் போய் துணிகளை எடுத்து வைத்தான்.
“எங்கடா வீடு பார்த்திருக்க” என்றாள். அவன் சொன்னதும், “எதுக்கு அவ்ளோ தூரமா போய் பார்த்த, இங்கயே பார்த்திருக்கலாமே” என்றாள்.
“ஆபீஸ் பக்கத்தில இருந்தா டிராவல் அதிகமா இருக்காதுல க்கா”
‘என்னய புரிஞ்சிக்கோங்க’ என்று வெற்றி சொன்னானே. எனவே அவனுக்காக அவள் முடிவெடுக்காமல், அவன் முடிவை புரிந்து கொள்ள முயன்றாள்.
விவகாரத்திற்குச் சரியென்று இருக்கிறான். தம்பி… இனி தனியாக நிற்பானே என்று கலங்கினாள். இதிலும் அவள் கலக்கத்தை விலக்கி அவனைப் புரிந்து கொள்ள முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை!
மனத்தை என்னவோ அழுத்தியது!
“உன் லைஃப்… அத பத்தி நீ ஒன்னும் யோசிக்கலயா” என்று கேட்டுவிட்டாள்.
அக்காவிற்குத் தன்மீது பாசம் அதிகம் என்று தெரியும். அவள் என்ன கேட்க வருகிறாள் என புரியவும் செய்தது. “என் லைஃப்” என்று எடுத்து வைப்பதை நிறுத்தினான். அந்தக்கணம் தமிழ் முழித்து எழவும், “ம்ம் இதோ” என்று போய் மகளைத் தூக்கிக் கொண்டான்.
தண்ணீர் வேண்டுமென்று தமிழ் சைகை செய்தாள். வெப்பக்குடுவையில் இருந்து வெந்நீர் எடுத்து குடிக்க வைத்துவிட்டு, கட்டிலில் உட்கார வைக்கப் பார்த்தான். தூக்கியே வைத்திருக்க சொல்வது போல் இறங்க மறுத்தாள்.
“நம்ம வீட்டுக்கு போக வேண்டாமா பேபி. தூக்கி வச்சிருந்தா, அப்பா எப்படி எடுத்து வைக்க முடியும்” என்றான்.
அப்போதும் அவள் இறங்க மறுத்தாள். வண்ணம் தீட்டும் புத்தகம், வண்ண வண்ண விரிசில்கள் கொடுத்து, “கலர் பண்ணிட்டு இரு” என்றதும், ஆரவமாக அதை வாங்கி கட்டிலில் அமர்ந்தாள். பிஸ்கெட் பொட்டலத்தைப் பிரித்து, ஒரு பிஸ்கெட் எடுத்து, “சாப்பிட்டுக்கிட்டு இரு” என்றான்.
‘ப்ப’ என்ற தமிழ், ‘நீங்களும் சாப்பிடுங்க’ என்பது போல் பிஸ்கட்டை அவன் முகமருகே நீட்டினாள். பிஸ்கட்டை ஒரு கடி கடித்தவன், “நீ சாப்பிடு பேபி, சிந்தாம சாப்பிடு” என்று பொட்டலத்தை அவள் பக்கம் வைத்துவிட்டு வந்து மீண்டும் எடுத்துவைத்தான்.
அதைப் பார்த்த சாந்திக்கு கண்கள் கலங்கியது. தம்பி தனியாக இருக்கப் போவதில்லை என்று சொல்லும்படியான இந்தக் காட்சி அவள் மனத்திற்குச் சற்று ஆசுவாசத்தை தந்தது.
அதேநேரம் யார் குழந்தையையோ வளர்க்கப் போகிறான் என்பதை உடனே உள்வாங்கிக் கொள்ள அவளால் முடியவில்லை.
இருந்தும், “எதும் ஹெல்ப் வேணுமா டா” என்றாள்.
எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன், சில நொடிகள் அக்காவைப் பார்த்தே இருந்தான். பின், “கொஞ்சம் இதுல வெண்ணி மட்டும் வேணும் கா” என்று வெப்பக்குடுவையைக் கொடுத்தான்.
“இரு எடுத்திட்டு வர்றேன்” என்று போனாள் சாந்தி.
வெளியே வந்தவளிடம் சந்திரன், “என்னமா சொல்றான் உன் தம்பி, முடிவை மாத்திக்கிறானா” என்றார் கோவமாக.
“அதலாம் மாத்திக்க மாட்டான் ப்பா, நாம அவனை புரிஞ்சிக்க பார்ப்போம்”
மகள் பேசினால் மகன் கேட்டுக் கொள்வான் என்று நம்பியிருந்தார் சந்திரன். ஆனால் சாந்தி இப்படிச் சொன்னதும், அவர் கோபம் இன்னும் கூடியது.
“இவன் நல்லதுக்குத்தான சொல்றோம். இவன் அத புரிஞ்சிக்க மாட்டானா? யார் பிள்ளையையோ வளர்க்க நினைக்கிறது.. அதுவும் தனியா… இவனுக்கு பட்டாதான் அறிவு வரும்.. பாரு கஷ்டப்படத்தான் போறான்” என்றுவிட்டார்.
அப்பாவின் பேச்சில் சாந்திக்கு கண்ணீர் வந்துவிட்டது. “வெற்றி நல்லதுக்குனு சொல்லிட்டு… கஷ்டப்படுவான்னும் சொல்றீங்க!! ஏன் இதுவரைக்கும் அவன் கஷ்டப்பட்டது போதாதா… இன்னும் கஷ்டப்படணும்னு நினைக்கிறீங்களா. போதும் ப்பா… இனி நீங்க ஒரு வார்த்தை பேசக் கூடாது!” என்றாள்.
சாந்திக்கு நிற்காமல் கண்ணீர் வந்தது. மகள் அழுவதை பார்த்த சந்திரனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பேசாமல் இருந்து கொண்டார்.
அக்கா அழுததும், கலை கோபத்தை தணித்துக் கொண்டு அப்பாவை கூட்டிச் சென்று மாடி முகப்பில் உட்கார வைத்தான். “ஹரிணி” என்று மனைவியை அழைத்து, “அப்பாக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வா” என்றான்.
சாந்தி அழுவதை பார்த்தபடி வந்திருந்தவள், “அண்ணி அழறாங்க” என்றாள். “தெரியும், நான் பார்த்துக்கிறேன்” என்றான். அவள் காஃபி எடுத்து வந்ததும், “அப்பாவை பார்த்துக்கோ” என்றுவிட்டு உள்ளே போனான்.
தண்ணீர் எடுத்து வந்து அக்காவிடம் தந்து, “அழாத க்கா” என்றான். “நீ எதுக்கு இப்ப அழற” என்றான்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. தண்ணீர் குடித்து குடித்து தொண்டையில் அழுத்தத்தை குறைத்துக் கொண்டாள்.
“என்னக்கா கைல பிளாஸ்க்” என்றான் கலை.
“வெண்ணீ வேணும்னு வெற்றி கேட்டான்”
“கொடு” என்று வாங்கிப் போய், கலை வெந்நீர் ஊற்றிக் கொண்டு வந்தான். அதற்குள் வெற்றி கிளம்பி வந்திருந்தான். அவனிடமே கலை கொடுத்தான்.
தமிழைத் தூக்கிக் கொண்டு, வெற்றி மாடி முகப்பு போய், “கிளம்பறேன் ப்பா” என்றான்.
அவர் ஒன்றும் சொல்லவில்லை.
அண்ணியிடமும் சொல்லிவிட்டு வந்து, அண்ணனிடமும் சொன்னான்.
கலை லேசாகத் தலையசைத்துவிட்டு அப்பாவிடம் போய் நின்று கொண்டான்.
அவர்கள், அவனைப் புரிந்து கொள்ள நாளாகும் என்று புரிந்தது! இன்றே இந்த நொடியே புரிந்து கொள்ள வேண்டும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. என்றாவது புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் கிளம்பினான்.
இரண்டு பெட்டிகள், ஒரு அட்டைப்பெட்டி என்று கிளம்பி இருந்தான்.
சாந்தி, “நீ தூக்காத, நான் தூக்கிட்டு வந்து தர்றேன்” என்று அனைத்தையும் கீழே கொண்டு சென்று வைத்தாள். வெற்றி அழைத்திருந்த ஆட்டோவில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு, “அவன் கைல அடிபட்டிருக்கு, அங்க போய் எடுக்க ஹெல்ப் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு தம்பியைப் பார்த்தாள்.
“அட்ரஸ் அனுப்புறேன்… நீ வீட்டுக்கு வரணும் க்கா” என்று வெற்றி அன்பான வேண்டுகோள் வைத்தான் அக்காவிடம்.
அப்படி அவன் கேட்கையில்… சாந்திக்கு எல்லாரையும் யோசித்து குழம்பத் தோன்றவில்லை. “வர்றேன் டா” என்றே சொன்னாள்.
“அப்பாவ அண்ணா நல்லா பார்த்துப்பான். நான் இங்க இல்லனா, அண்ணி அவங்க அம்மாவை கூட்டிட்டு வந்திடுவாங்க. நான் அதை தப்புனு சொல்லல. ஆனா அப்பா எப்படி ஃபீல் பண்ணுவாருனு யோசிக்கிறேன்.
நீ கொஞ்சம் பார்த்துக்கோ. என்னால இப்ப பார்க்க முடியாது. பார்க்கிறேன்னு சொன்னாலும், அப்பா ஒத்துக்க மாட்டாரு. அவர் என்னய புரிஞ்சிக்கிட்டதும், நானும் பார்த்துக்கிறேன்” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் சாந்தி தமிழைப் பார்த்தாள்.
தமிழ் பெயரைத் தவிர வேறெதுவும் சாந்தி கேட்கவில்லை. ஆனால் அவர்கள் பிணைப்பின் பயணம் பற்றி அக்காவிடம் சிலது பகிர நினைத்தான். இன்று எதுவும் பேசத் தோன்றவில்லை.
இன்னொரு நாள்… அக்கா அவன் வீட்டிற்கு வரும்போது சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
வெற்றி, “அத்தைக்கு டாட்டா சொல்லு பேபி” என்றான் தமிழ் முகம் பார்த்து. யாரென்று தெரியாததால் குழந்தை தயங்கினாள். அதையே நான்கைந்து முறை வெற்றி சொன்னதும், தமிழ் கையைத் தூக்கி அசைத்தாள்.
இதை எப்படி எடுத்துக் கொள்ள… ஏற்றுக் கொள்ள… என்ற கேள்வி இன்னமும் சாந்திக்கு இருந்தாலும், தம்பியை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருப்பவள், தமிழின் செய்கைக்கு எதிர்வினையாக கையை லேசாக அசைத்தாள்.
“கிளம்புடா” என மிகச்சிறு முறுவலுடன் அவனை அனுப்பிவிட்டு அப்பாவை, கலையைப் பார்த்துப் பேசச் சென்றாள்.
எத்தனை நாள்கள் என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஒருபக்கத்தில் அப்பா, கலை! மறுபக்கத்தில் வெற்றி! அவள்தான் இவர்களைச் சமநிலைப்படுத்தி [balance] கொண்டு செல்ல வேண்டும் என்று புரிந்திருந்தாள்.

அப்பாவும் மகளும் வீடு வந்திருந்தனர்.
ஒரு வரவேற்புறை… அதிலே ஒரு மூலையில் சமையல் செய்ய திண்டு, அதன் மற்றொரு மூலையில் மிகச் சிறிய பகுதிக்கான வாசல்… அங்கே குளியலறை என்றிருந்தது வீடு! மூன்றாவது மாடியில் இருந்தது.
மதியம் வந்து வீடு பார்த்து, எல்லாம் பேசி முடித்து சாவி வாங்கியிருந்தான். அப்போதே வீட்டைச் சுத்தமும் செய்திருந்தான். துடைத்து எடுக்கும்படியான தரையல்ல, அதனால் கழுவி விட்டிருந்தான்.
பின்னர், அருகிலிருந்த கடைக்குச் சென்று பாய், தலையணை, போர்வை, மின் அடுப்பு, வாளி போன்ற அத்தியாவசியப் பொருட்கள், சமையலுக்காக சில பாத்திரங்கள் வாங்கி வைத்திருந்தான்.
அதுதான் இப்போது வந்ததும், கொண்டு வந்ததை எடுத்து வைக்க எளிதாக இருந்தது. அங்கே கதவுகள் இல்லாமல் சுவரோடு பதித்திருந்த பாணியில் ஒரு அலமாரி இருந்தது. அதில் துணிகளை எல்லாம் எடுத்து வைத்தவன், அம்மா புகைப்படத்தை ஒரு அடுக்கின் நடுவில் வைத்தான்.
அவன் போகும் இடமெல்லாம் அவன்கூடவே வந்த தமிழ், ‘இது யார்’ என்று அவனைப் பார்க்க, “பாட்டி, இப்ப அவங்க இல்லை” என்றான். உடனே தோள் பையிலிருந்த அவள் அம்மா புகைப்படத்தை எடுத்து வந்து தந்தாள்.
அவன் அம்மா புகைப்படம் அருகே உமா புகைப்படத்தை வைத்தான்.
இரவு உணவைப் பார்க்கும் முன், வெந்நீர் வைத்து மகளுக்கு லேசாக உடம்பு கழுவி, இடலை (olive) பச்சையில், சின்ன சின்ன சாம்பல் நிற பூக்கள் போட்ட கவுன் போட்டுவிட்டான்.
இப்போது தமிழுக்கு காய்ச்சல் இல்லை. ஆனால் அசந்திருந்தாள். இருந்தும், கடையில் கேட்டு வாங்கிய பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். இரண்டு நாள்களாக நிறைய அழுதிருந்த அவள் கண்களில், இப்போதுதான் சிரிப்பின் கீற்று சற்று தெரிகிறது.
அவளுக்குப் புரிகிறது. இனி அப்பாவுடன்தான் இருக்கப் போகிறோம் என்று. அந்த ஒன்றே அவளை அங்கே இங்கே ஓடி ஓடி விளையாட வைத்தது.
என்னென்ன கஷ்டங்கள், எவ்வளவு கண்ணீர்… எப்படியான மனஅழுத்தம்! இந்தக் கணத்தில் எல்லாம் கரைந்து போன மாதிரி, காணாமல் போன மாதிரி வெற்றி முகத்தில் நிம்மதி தெரிந்தது.
அவன் சமைத்துக் கொண்டிருக்க… அவன் கால்களைச் சுற்றிச் சுற்றி மகள் விளையாட வேண்டுமென என்றோ அவன் ஆசைப்பட்டது, இன்று நடக்கிறது அல்லவா… அதனால்!
சமைத்து முடித்து அவளுக்கு ஊட்டிவிட்டு, மருந்துகள் கொடுத்து, அவனும் சாப்பிட்டு, மாத்திரை போட்டுக் கொண்டு, தூங்க வந்தார்கள். பாயில் வெற்றி படுத்துக் கொள்ளவும், அவன் நெஞ்சில் தமிழ் படுத்துக் கொண்டாள்.
அவன் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கவும், சற்றுநேரத்தில் உறங்கிவிட்டாள்.
வெற்றி உறங்கவில்லை. அவனுக்கு நிறைய யோசனைகள்.
நான்கு நாள்கள் விடுமுறை எடுத்திருக்கிறான்; காய்ச்சலால் ஓய்ந்திருக்கும் மகளை, இந்த நாள்களில் நன்றாகத் தேற்றிட வேண்டும்.
அவனே கொண்டு போய் விட்டு… கூட்டி வர ஏதுவாக, இங்கே பக்கத்திலே ஒரு பள்ளியாகப் பார்த்து மகளைச் சேர்க்க வேண்டும். இப்போதே தனியாக அவளை அனுப்ப அவனுக்கு மனமில்லை.
அவளுக்குச் செவிப்புலன் கருவி வாங்க வேண்டும்… மேலும் பேச்சிற்கு என்ன செய்யலாம் என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
இரண்டு வருடத்திற்குள் கடனை அடைத்துவிட வேண்டும். அப்போதுதான் மகள் மற்ற வகுப்புகளில் சேர விருப்பப்பட்டால், சேர்க்க முடியும். அவளுக்கு சிறுசிறு பூக்கள் அச்சு போட்டு, நிறைய உடைகள் எடுக்க வேண்டும்.
இப்படித்தான்… அசந்து தூங்கும் மகள் தலையை வருடியபடி, அவளுக்குத் தட்டிக் கொடுத்தபடி யோசித்திருந்தான். மகளை முன்னிறுத்தியே அவன் எதிர்கால யோசனைகள் இருந்தன.
மகள்களைச் சுற்றியே யோசிக்கும் அப்பாக்கள் உலகத்திற்கு புதிதாக வந்து சேர்ந்திருந்தான் தமிழரசியின் தந்தையான வெற்றி!

Thank you for reading this story…😊

What a beautiful story. Made me emotional in many places. Wonderful writing
Thanks a lot!
Arumai ya irukkuda. Ezhuthil matravarai azha vaipathu vegu sila writers ku thaan azhaga varuthu naan padithavaraiyil.. Azhugai varatha ennaiye pala episodes azhuga vechutanga Tamizarasi yum umavum. Santhi oru nalla akka. Ithukku mela enna solla theriyala. Love u da Thangam.Vazhthiukal kadhambari
Thank you so much sister