Kathambari Novels
அத்தியாயம் – 2
தன் முன்னே வந்து நின்றவளை, அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தன அவனது நீலவிழிகள். அவன் பார்வை, அவளுக்குப் புதிய அர்த்தங்களுடன் தெரிந்தது. ஒரு சில நிமிடங்கள் மெளனங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தன அந்த அறையில்!
அவன்தான், “உட்காருங்க” என்று சொல்லி மெளனத்தின் பேச்சை நிறுத்த, சரி எனத் தலையசைத்து அவனது அருகில் அமர்ந்தாள்.
உடனே அவன் சற்று தள்ளி அமர்ந்து கொண்டான். அவளின் அந்த அருகாமை தனக்கு விருப்பம் இல்லை என்பதுபோல் இருந்தது… அவன் செயல். ஒருநொடி, அவள் மனம் பெரும்பாரத்தை ஏற்றி, இறக்கி கொண்டது போல் உணர்ந்தாள்.
இதற்குமேல் இப்படி அமைதியாக இருக்க முடியாதென நினைத்து, “இதுக்கு முன்னாடி வந்ததில்லையா?” என்று கேட்டுவிட்டாள்.
அவன் எதுவும் பதில் சொல்லவில்லை!
“வேற யாரையாவது வர சொல்லவா?” என்று கேட்டுவிட்டு யோசித்தவளுக்கு, அவள் கேள்விக்குள் ‘என்னைப் பிடிக்கலையா?’ என்றொரு கேள்வியும் அடங்கியிருப்பது கண்டு, அவளது உடல் ‘சோகம்’ என்னும் ஆடையை உடுத்திக் கொண்டது.
“நானே இங்க வந்தது தப்புன்னு நினைக்கிறேன். நீங்க வேற?” என்றான் அவள் கேள்விக்குப் பதிலாய்! ‘தனக்கு விருப்பமில்லை’ என்று சொல்லிவிட்டுப் போக நினைத்தவன், பேச்சை வளர்க்க ஆரம்பித்தான்.
“ஏன் திடீர்னு?” என்று புன்னகையுடன் கேட்டு, அவளும், அவன் அருகிலிருந்து நன்றாக விலகி, நகர்ந்து, நல்ல இடம் விட்டு… அமர்ந்து கொண்டாள்.
அக்கணம் அவன் உணர்ந்தது, ‘இவளுக்கும் இதேபோலவே வலித்திருக்குமோ, தன்னுடைய விலகல்’ என்றே! இதற்கு என்ன அர்த்தம்? தனக்கு அவள் விலகல் வலிக்கின்றதா??
கேள்விப் புரவிக்குக் கடிவாளம் இட்டுக் கொண்டு, “யாரையோ கஷ்டப்படுத்த நினைச்சி, யாருக்கோ தண்டனை கொடுக்கணும்னு, யாரு மேலயோ இருக்க கோவத்துக்கு… இப்படி ஒரு முடிவு!” என்றான் வருத்தத்துடன்.
அவள் இப்போது நன்றாகவே சிரித்தாள்.
“எதுக்காக சிரிக்கிறீங்க?” என்றான் ‘தன் நிலைமை இவளுக்குச் சிரிப்பாக இருக்கிறதா’ என்று நினைத்து!
“இங்க இருக்கிறது நீயும் நானும்தான்! வாழ்க்கையைப் பகிர்ந்துக்க முடியாத ஒருத்தியோட வாலிபத்தை மட்டும் பகிர்ந்துக்கிற உனக்கு… இது தண்டனை! விருப்பமே இல்லாம விருப்பம் இருக்கிற மாதிரி நடந்துக்க போற… எனக்கும் தண்டனை! இதுல எங்க மூனாவதா ஒருத்தர் வர்றாங்க?” என்று நியாயமான வாதமாக பதில் வந்தது அவளிடமிருந்து!
சரியென்று தலையசைத்துவிட்டு “இதையேதான் நானும் நினைச்சிக்கிட்டு இருந்தேன்னு சொன்னா, உங்களால நம்ப முடியாது இல்லையா?” என்றான்.
‘ஆம் முடியாது’ என்று வாய் வார்த்தையாக பதில் சொல்ல அவள் நினைக்கும் முன், அவளது மனம் அவனை முழுமையாக நம்பியிருந்தது. ஆதலால் அங்கே பதில்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.
எனவே அடுத்த கேள்விக்குப் போனாள்!
“இங்க நீ வந்திருக்கிறது, உன் வாழ்க்கையில வரப்போற பொண்ணுக்கு, நீ செய்ற துரோகம் கிடையாதா?” என்றாள்! எத்தனையோ பேரிடம் கேட்க நினைத்த கேள்வியை, இன்று அவனிடம் கேட்டாள்.
“எனக்கு அந்த துரோகம் நேத்தே நடந்திருந்தா?” என்று அவளைக் கேட்டான்.
அவளுக்குச் சற்று புரிந்தது! நிறைய புரியவில்லை! என்ன நடந்ததென கேட்க தயக்கமாக இருந்தது.
ஆனால் அவன் ஆரம்பித்தான்! “உங்களுக்கு விருப்பம் இருந்தா… சம்மதம்னா, நேத்து வரைக்கும் எனக்கு என்ன நடந்ததுன்னு சொல்லவா… நான் ஏன் இங்க வந்தேன்னு புரிஞ்சுக்க முடியும்” என்று அனுமதி கேட்டான்.
முதல் முறையாக ‘விருப்பம்’ ‘சம்மதம்’ என்ற வார்த்தைகளைக் கேட்கின்றாள்.
“ம்ம் சொல்லு” என்றாள் சிரித்துக் கொண்டே.
“வந்ததிலிருந்து பார்க்கிறேன். மரியாதை கொடுத்து பேச மாட்டிக்கிறீங்க?”
“எந்த மனுசனுக்கும் மரியாதை கொடுக்கனும்னு தோனதில்ல” என்றாள் விட்டேற்றியாக!
இவள், தனக்கு மரியாதைக் கொடுக்க வேண்டுமென்று ஏக்கத்துடன் கேட்டது அவன் மனம்! இருந்தும்… தன்னைக் கடந்து போன காதலை பகிர்ந்து கொள்ள யத்தனித்தான், கடந்தகாலத்தை என்றும் திரும்பிப் பார்க்க நினைக்காதவன்!
இப்பொழுது கழுத்து வலிக்காதா?? தெரியவில்லை!!
“உனக்குத் தெரியும் இல்லையா, கோவால பைக் ரென்ட்டுக்கு எடுத்திட்டு சுத்தலாம்னு?” என்று அவனுமே… அவளுக்கான மரியாதை விகுதியைத் தவிர்த்துவிட்டான்.
“ம்ம்… கேள்விப்பட்டிருக்கிறேன்”
“அந்த மாதிரி ஒரு இடத்திலதான் அந்தப் பொண்ண முதல்முதலா பார்த்தேன். தூரத்திலிருந்து பார்க்கிறப்பவே ஒரு ஈர்ப்பு… பக்கத்தில போய் பார்க்கனும்னு அவ்வளவு ஆசையா இருந்திச்சு”
“ஓ! அங்க என்ன வேல, அந்தப் பொண்ணுக்கு?”
“தூரமா இருந்து பார்க்கிறப்ப, அங்க இருக்க பசங்களோட ஏதோ பேசிக்கிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது. ஆனா பக்கத்துல போய் பார்த்தாதான் தெரிஞ்சது, அவ அந்தப் பசங்களோட சண்டை போட்டுக்கிட்டு இருந்தானு”
“சண்டை போட்டாங்களா அவங்க? ஏன்… ஏன்?” என ஆச்சரியங்களை அள்ளி வீசினாள்.
அவனுக்கும் ஆச்சரியமாக இருந்தது?! முன்னால் உட்கார்ந்திருக்கும் தனக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறாள். இதுவரை பார்த்திராத ஒரு பெண்ணிற்கு மதிப்பு கொடுத்துப் பேசுகிறாள்… என்ன பெண் இவள்? இவளைப் படிப்பது அத்தனை எளிதல்ல என்று முன்னே அமர்ந்திருந்தவளைப் பற்றி நினைக்க தொடங்கினான்!
அவளோ அவன் நினைவுகளைக் கலைக்கும்படி இரு கைகளைத் தட்டி ஓசை எழுப்பி, “ஏன்னு கேட்டேனே… பதிலே சொல்லலை! என்ன… உன் லவ்வர் பத்தி கனவா?” என்றாள் நய்யாண்டி புன்னகையுடன்.
‘இல்லையே, நான் இவளைப் பற்றியல்லவா நினைக்கிறேன்’ என திரும்பவும் யோசித்தான். கேள்விப் புரவியைவிட யோசனைப் புரவி பயங்கற வேகமாக சென்றது. இரண்டிற்கும் கடிவாளம் கட்டி நிறுத்தினான்.
“பெரிய பிரச்சனை ஒன்னும் இல்லை. பைக் ரென்ட்டுக்கு எடுத்திட்டு போயி, கண்ணாடிய உடைச்சி கொண்டு வந்தா, திட்ட மாட்டாங்களா?” என்றான்.
“அச்சச்சோ… பைக் கண்ணாடிய உடைச்சிட்டாங்களா? அப்புறம்…”
“அங்க இருந்த பசங்க, ‘உடைச்ச கண்ணாடிக்குப் பணம் கொடுத்துட்டுப் போனு’ சொன்னாங்க. இவ ‘தர முடியாதுனு’ சண்டை போட்டா”
“அப்பதான் உன்னுடைய என்டிரீயா? ஹீரோ மாதிரி!”
‘ஆமாம்’ என்பது போல சிரித்து, “அவகிட்ட கேட்டேன்… ‘நான் வேணா பணம் தரவா’னு. ‘சரி’னு சொன்னா. ஸோ பணம் கொடுத்துட்டு அங்கருந்து ரெண்டு பேரும் கிளம்பிட்டோம். அப்புறமா பேசிக்கிட்டே நடந்தோம்” என்று அவளது பழுப்பு விழிகளுக்கு முன்னே, தனது கடந்த காலத்தைக் காட்டினான்.
கடந்து போன காதல்…
“தேங்க்ஸ்” என்று அவனுடன் நடந்தாள், அவனது முன்னாள் காதலி!
“பைக் எப்படி ஆக்சிடெண்ட் ஆச்சு?” என்று கேட்டான்.
“அது ப்ரண்ட்ஸோட சேர்ந்து பைக் ரைடு ப்ளான் பண்ணேன். சொதப்பிருச்சி. அதான்” என்றாள் தலையைச் சொரிந்து கொண்டே.
“ஓ, ஓகே… லீவ் இட்”
அப்படியே இருவரும் பேசிக்கொண்டே ‘கார் பார்க்கிங்’ இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
“நான் கார்ல ட்ராப் பண்ணவா?” என்று, இன்னும் சிறிதுநேரம் அவளோடு பேச வாய்ப்பை உருவாக்க பார்த்தான்.
அவன் முன்னால் காதலியோ நிறுத்துமிடத்தில் முதலில் நிறுத்தப்பட்டிருந்தது ஜாக்குவாரைப் பார்த்ததும், “இதுதான் உங்க காரா?” என்றாள் அளவில்லா சந்தோஷத்துடன்.
“இல்லை. இந்த ரோல மூனாவதா நிக்கிறது” என்று அவன் காரை காட்டிவிட்டு, பின் அவளைப் பார்த்தான். ஆனால் அவளுடைய பார்வை மொத்தமும், அந்த ஜாக்குவார் மேல் தான் இருந்தது.
அவளுக்கு இந்தக் கார் பிடிக்கும் போல என்று நினைத்து “இந்த ப்ராண்ட் கார் பிடிக்குமா?” என்று கேட்டான்.
“ரொம்ப பிடிக்கும்… லைஃப்ல ஒரு தடவையாவது இந்த மாதிரி கார்ல ரைடு போகனும்” என்றாள் அந்த ஜாக்குவாரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே!
“சரி வா… நான் டிராப் பண்றேன்”
“வேண்டாம். பிரண்ட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ஸோ, அவங்களே டிராப் பண்ணிடுவாங்க”
“ஓகே, பை”
“நீங்களும் வாங்களேன். எல்லார்கிட்டயும் உங்களை இன்ரடூயூஸ் பண்றேன்” என்று இன்னும் சிலநொடிகள் பேச, அவளே வாய்ப்பை வழங்கினாள். அவன் சரியென்றதும், அவளுடைய நண்பர்கள் இருக்கும் இடம் நோக்கி இருவரும் நடந்தனர்.
“நீ என்ன பண்ற?” என்று கேட்டான்.
“படிச்சி முடிச்சிட்டு வேலைக்காக வெயிட்டிங்”
“அப்பா… அம்மா?”
“அப்பா ஒரு சின்ன பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறாரு… அம்மா ஹவுஸ் வைஃப்… நான் ஓரே பொண்ணு”
“அப்பாவோட பிசினஸை நீ…?”
அவன் முடிக்கும் முன்பே, “சான்ஸே இல்லை! அவரோடது ரொம்ப சின்ன பிசினஸ். அதுல ஒன்னும் பண்ண முடியாது” என்றாள்.
அவள் திரும்பி அவனிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், “நானும் பிஸினஸ்தான் பண்றேன்” என்றான்.
“வாவ், சூப்பர்! நல்லா ப்ராபிட் வருமா??” என்றாள்.
“ம்ம்ம்” என்று சொன்னவுடன், வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள். அவளின் நண்பர்கள் இருக்கும் இடம் வந்தவுடன், “சரி பை! ம்ம்ம் நாம நாளைக்கு மீட் பண்லாமா??” என்று கெஞ்சலாக கேட்டாள்.
அவளுக்கும் அவனிடம் ஈர்ப்பு வந்திருந்தது… காரணம் அவனது தோற்றமாக இருக்கலாம்! அவளை மட்டுமல்ல, அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும் அவனுடைய வசீகரம்! அதை நவீனத்திற்குள் தினித்து வைத்திருந்தான்!!
‘ஜெல்’ போட்டு படியவைத்த லோ பேட் (low fade) பாணி கேசம்! இரண்டு நாள் வளர்க்கப்பட்டிருந்த ‘கருப்பு புற்கள்’ உதட்டின் மேலேயும், கன்னங்களிலும்! முழுக்கை சொக்காயை முழங்கைக்குள் அடக்கி வைத்திருந்தான்!
‘ஜாக்கர் ஜீன்ஸ்’ (jogger jeans) வேறு அவனுக்கு சாதாரண பாணி தோற்றத்தை தந்தது! ஸினீக்கர்ஸீற்குள் பாதங்கள் ஒளிந்திருந்தன!
இருவரும் பெயர், கைப்பேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டு மட்டுமே, அன்று பிரிந்தனர்.
இன்றைய இரவு…
சில வினாடிகளுக்கு… கடந்தகால காதலைச் சாவி கொண்டு பூட்டியவனுக்கு, ஒன்று தோன்றியது. அது, ‘தான் மட்டும் அவளைப் பற்றி இத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறோம். ஆனால் அவள் தன்னைப் பற்றி எதுவும் கேட்கவில்லையே‘ என்பதுதான்!
“பார்த்தவுடனே காதலா?” என்று கேட்டாள், நிகழ்கால சாவியைக் கையில் வைத்திருப்பவள்.
“ம்ம்ம், லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்”
‘எப்படி’ என்றபடி கைகளை விரித்துக் கேட்டாள்.
“தெரியல. ஆனா அவள பார்த்தவுடனே பிடிச்சது. அவளோட அழகு ஒரு காரணமா இருக்கலாம்”
“ஓ!”
“அன்னைக்கு அவ எப்படி இருந்தானு கூட எனக்கு ஞாபகம் இருக்கு. ப்ளாக் கலர் பேடட் ஜீன்ஸ். ரெட் கலர் கிராப் டாப்! அதுல அங்கங்க வொயிட் கலர் ஹார்ட் ஸேப்ல ப்ரின்ட போட்டிருந்திச்சு. அன்ட் கண்ணுக்கு நல்லா காஜல் போட்டிருந்தா.
லைட் பிங் கலர் லிப்ஸ்டிக்! ஒரு சின்ன செயின். அதுலயும் ஹார்ட் ஸேப்ல பென்டன்ட். ஹேர் லேயர் கட் பண்ணி, ஒரு சின்ன கிளட்ச் போட்டிருந்தா! அப்புறமா…” என்று யோசித்தான்.
அவளுக்கு, அவனின் நீல விழிகளுக்குள், அந்த முன்னாள் காதலி நன்றாகவே தெரிந்தாள். அந்தக் காதலியின் தோற்றத்தை தன்னுடைய அலங்காரத்துடன் ஒப்பிடுகையில் தன்னிறக்கம் கொண்டாள்.
அவளுள் ஏதோ ஒரு உணர்வு தோன்றியது.
அந்த உணர்வு அவளுக்கு எரிச்சலை வரவழைத்தது. அது என்ன உணர்வு என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லையா? அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறாளா? எனினும் “போதும் போதும்” என்றாள்.
“ஏன்?” என்றான் ஒற்றை சொல்லாக!
“ஏன்னா, ஏன்னா?” என யோசித்தவள், “ஹாங்… கதை சொல்றேன்னு சொல்லி, இதையே சொல்லிக்கிட்டிருந்தா, மீதி கதையைக் கேக்கிறது நான் நாளைக்கு உன் பின்னாடி வர முடியாது பாரு. அதான்” என்று நன்றாக சமாளித்தாள்.
‘அப்படியா?!’ என்று இருந்தது அவன் முகம் போன போக்கும்… புன்முறுவலும்! “நான் வேற ஏதோனு நினைச்சேன்” என்றான்.
“எ… என்… என்னென்னு?
“ம், பொறாமையோனு…” என்று இழுத்தான்.
அவளுக்கோ, முதல் முறையாக ஒருவன் தன் மனதினை வாசிக்கிறான் என்று தோன்றியது. அதைவிட முக்கியமாக இவன் காதலியைப் பற்றி கூறும்போது தனக்கு ஏன் பொறாமை உணர்வு உண்டாக வேண்டுமென்றும் தோன்றியது!
பழுப்பு விழிகள், ‘தனக்கு என்னாயிற்று’ என்று தடுமாறத் தொடங்கின! நீல விழிகளோ அந்தத் தடுமாற்றத்தை ரசிக்கத் தொடங்கின!!
