Kathambari Novels
அத்தியாயம் – 15
அதிகாலை இரண்டு மணியளவில் சயனாவிற்கு விழிப்புத் தட்டியது. அதன்பின் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாள். உறக்கம் வரவில்லை.
எழுந்து அமர்ந்துவிட்டாள்.
நிறைய விடயங்கள் சிந்தைக்குள் சிக்கிச் சுற்றிக் கொண்டே இருப்பது போல் இருந்தது. அவள் அறையிலிருந்து நேராக அம்மா அறைக்குச் சென்றாள்.
அம்மா மறைவிற்குப் பின் படுக்கை விரிப்புக் கூட மாற்றவில்லை. அந்த வாசம் இதற்கு முன்பு ஒருமுறை, இந்த வழக்கில் தடைபட்டு நிற்கும் போது சுவாசமாக இருந்தது.
இப்பொழுதும் அதே!!
நிதானமாக நடந்துசென்றவள் படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.
யோசித்தாள்! அமைச்சரின் திட்டம் வேறாக இருந்தால்? நான் எப்படி அதனைச் சமாளிக்கப் போகிறேன்!?
எதற்கும் ஒருமுறை அந்த ‘பில்டர்’ எண்ணிற்கு அழைப்பு விடுத்துப் பார்க்கலாம் என்று அவளது அறைக்கு விரைந்து சென்றாள்.
கைப்பேசி எடுத்தாள்.
அழைப்பு விடுத்தாள்.
நடுராத்திரியில் அழைப்பு வந்ததாலோ என்னவோ எரிந்து விழுந்தார், பில்டர்.
அந்த எரிச்சல் அவளையும் ஒட்டிக் கொண்டது. டிரெட் மில்லை ஓடவிட்டு, அதில் சிறிது நேரம் ஓடி, தன் எரிச்சலை எரித்துக் கொண்டாள்.
அந்தக் களைப்புடன் உறங்கினாள்.
இரவில் தூங்காமல் இருந்தது, பகலில் மதியம் இரண்டு மணிவரைக்கும் தூக்கம் தந்தது. அதன்பின்தான் எழுந்தாள். எழுந்தவுடன் சயனா செய்தது பீட்டருக்கு அழைப்பு விடுத்ததுதான்.
“ஹலோ யாரு?” – பீட்டர்.
“நான் சயனா, நேத்து நைட்டு…” – பாதியில் நிறுத்தினாள் பேச்சை. அதற்கு மேல் பீட்டர் புரிந்து கொள்வார் என்று நினைத்ததால்.
“சொல்லுங்க. நம்பர் பதிஞ்சி வைக்கல. அதான் அப்படிக் கேட்டேன்” – அவள் நினைத்தது போல் புரிந்து கொண்டார்.
“ஓகே ஓகே, ஆட்டோ ரெடியா?”
“ம்ம்ம்”
“ஆட்டோல நம்பர் பிளேட் வேண்டாம். சந்தேகம் வரும். ஏன்னா அவங்க எல்லா வெகிக்கிளும் செக் பண்ணிக் கிளியர் பண்ணுவாங்க. நான், திரும்பி ஒரு எட்டு மணிக்கு கால் பண்ணி, எக்சாக்ட் பிளேஸ் என்னன்னு டிடெயில்ஸ் சொல்றேன்.
நீங்க பத்து மணிக்கு முன்னாடியே போயிரனும். அதேமாதிரி ஸ்பாட்ல ஏதாவது சத்தம் கேட்டவுடனே வந்திருக்கனும். அப்புறம் ஸ்பாட்ல, நீங்களும் நானும் மட்டும்தான் இருப்போம். அப்போ என்ன நடக்குதோ, அதுக்கு ஏத்தமாதிரி நம்ம பிளான் மாறலாம்”
“ம்ம்ம் சரி”
“சரி, வச்சிடறேன்” – அதற்குமேல் பீட்டரிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. அதனால் அத்துடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.
வீட்டிலிருந்து கிளம்பினாள்.
அலுவலகத்திற்கு நுழைந்தாள்.
இதற்கிடைப்பட்ட தூரம் ராயலின் மீது அமர்ந்தபடியே கழிந்தது.
கனகா மேம் அவளுக்கு முன்னரே வந்திருந்தார். அவருக்கு எதிரே சென்று அமர்ந்து கொண்டாள் சயனா. நிமிர்ந்து பார்த்தார் கனகா மேம். பார்த்ததும் சிரித்தாள் சயனா.
“வா, என்ன இவ்வளவு லேட்டா வந்திருக்க?”
“நைட்டு சரியா தூக்கமில்ல. அதான் காலைல தூங்கிட்டேன்” – சயனாவின் குரல் கூட அவள் மூளை போல் யோசனையிலே இருந்தது.
“டிப்பிரஸ்டா பீல் பண்றியா?”
பதில் சொல்லவில்லை. “மேம்.. ரேவ் எங்க?” என்று வேறு பேசினாள்.
இன்னும் ரேவ் சயனாவிடம் பேசவில்லை. முடிந்து போன வார்த்தை பரிமாற்றம் திரும்பவும் தொடரவில்லை. அலைபேசியில் அழைத்துப் பார்த்தாள் சயனா. அதற்கு பலன் எதுவுமில்லை.
“நான்தான் ரேவ வேற ஒரு கேஸ் விசயமா வெளிய அனுப்பியிருக்கேன்” என்றார் கனகா மேம்.
“எப்ப வருவா?”
“இன்வெஸ்டிகேஷன் முடிஞ்சப்புறம் வீட்டுக்கு போகச் சொல்லிட்டேன்”
“ஏன் மேம்?” – கனகா மேம் முன்னர், ரேவ் கூடப் பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தாள். அது முடியாமல் போன ஏமாற்றம், இந்த ‘ஏன் மேம்?’.
“இது அவளுக்குத் தெரிய வேண்டாம். தெரிஞ்சா, வேற மாதிரி ரியாக்ட் பண்ணுவா. பயந்து போய் பிரபுகிட்ட போய் சொல்லுவா. ஏன்னா, அன்னைக்கு நாம பேசறத கேட்டிருப்பா”
“ம்ம்ம், அதுவும் சரிதான்”
“ஆமா, நீ எதுக்கு அவளைத் தேடுற”
“தெரியல. போறதுக்கு முன்ன அவளை பார்த்திட்டுப் போலாம்னு நினைச்சேன். என்னமோ அப்படித் தோனுது மேம்”
“ஃபோன் பண்ணி வரச் சொல்லவா”
“வேண்டாம் மேம்” – திட்டம் முக்கியம் என்பதால் இந்தப் பதில் சொன்னாள்.
“பிளான் என்ன? என்ன யோசிச்ச? அத முதல்ல சொல்லு”
“சொல்றேன் மேம். பட் எனக்கு ஒரு டவுட். நான் கன் யூஸ் பண்ணா… யூஸ் பண்ற மாதிரி ப்ளான் போடல. ஆனா, யூஸ் பண்ணற மாதிரி சிச்சுவேஷன் வந்தா, சமாளிக்க முடியுமா… என்னோட வேலைக்குப் பிராப்ளம் வராம”
“கன் யூஸ் பண்றத அவாய்ட் பண்ணு! ஏன்னா, அமைச்சர் அத வச்சி மாட்டிவிட பிளான் பண்ணிட்டா? நம்ம டிபார்ட்மென்ட் ஹையர் ஆபிஸியல்கிட்டருந்து உனக்கு சப்போர்ட் கிடைக்காது. சோ இதலாம் யோசிச்சிக்கோ”
அவள் யோசனையில் இருந்தாள்.
“சரி உன் பிளான்தான் என்ன?”
அப்போது கதவைத் திறந்து கொண்டு காவல் வந்தது.
‘இதுதான் என் ப்ளான்’ என்பது போல் கனகா மேமை பார்த்தாள் சயனா.
நேற்றைய நிகழ்வுகளை நினைத்து… காவல் குறைபட்டபடி வந்தமர்ந்தது.
நேற்று அடிகளைக் கொண்டு காயப் படுத்தியவள், இன்று அலட்சியம் கொண்டு காயப்படுத்தினாள்!
“ரெடியா இருக்கியா?” – காவல்.
“ம்ம்ம், ‘கன்’ எங்க?” என்றாள் சயனா.
தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொடுத்தது, காவல்.
சயனா, துப்பாக்கியைக் கையில் வைத்து முன்னும் பின்னும் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.
“எல்லாம் ஸ்டேஷன் ‘கன்’-தான். லெட்ஜர்ல சைன் பண்ணிதான் எடுத்திட்டு வந்திருக்கேன்”
‘என்ன ஒரு விவரம்? லெட்ஜர்ல வேற சைன் போட்டிருக்கியா” என்றதை சிந்தைக்குள் இருத்திக் கொண்டாள் சயனா. “ஏரியா டிடெயில்ஸ் சொல்லு?”
காவல், சம்பவம் நடக்கப் போகும் சாலையின் அடையாளம் சொன்னது.
அதன்பின் அங்கே பேச்சுக்குரல் இல்லை. ஆனால் மூவரின் மனக்குரல் பேசியது.
‘இவன், நம் கூட வந்து விடுவானோ?’ – இது சயனா.
‘இவள், தன்னைக் கூப்பிடுவாளோ?’ – இது காவல்.
‘சயனா திட்டம் வெற்றியடையுமா?’ – இது மேம்.
சற்று நேரம் மனக் குரல்களின் ஒலி மட்டுமே அவ்வறையில்.
காவல் புறப்பட எழுந்து கொண்டது. நேற்றைய அவமானத்திற்குத்தான் பதில் சொல்ல முடியவில்லை. இன்றைய அலட்சியத்திற்காகவாது பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்தது காவல்.
சயனா அமர்ந்திருந்த நாற்காலி பின்புறம் நின்று கொண்டு, “ஆமா, உனக்கு குறி பார்த்துச் சுடத் தெரியுமா?” என்று நக்கலாக கேட்டது.
சிக்கலை விட்டுவிட்டு, இந்த நக்கலை முதலில் சம்மட்டி அடி அடிக்க வேண்டும் என்று நினைத்தாள் சயனா.
“சோல்டர் ஸ்டெர்ன்த் இருக்கா? இல்லனா சோல்டர் போயிடும்” – காவல்.
சட்டென எழுந்தாள். நாற்காலியை காலால் பின்னாடி தள்ளிவிட்டாள். அந்தத் துப்பாக்கியைக் காவலின் நெற்றிப் பொட்டில் அழுத்தமாக வைத்தாள். “சொல்லு வேணும்னா, இங்கயே ஒரு டிரையல் பார்க்கலாமா?”
பயத்தில், காவலின் தொண்டைப் பகுதி எச்சிலை விழுங்குவது தெரிந்தது. சிறு சிறு வியர்வைக் குமிழ்கள் கூட ஆங்காங்கே!!
“எப்ப பார்த்தாலும் நீயே வந்து நிக்கிற? இத உன்னய எங்க போய் நிக்க வைக்க போகுதோ. பார்த்து இரு” – இதுவும் காவல் மனதில் சயனா தூவிய விதைதான். என்றாவது அறுபடை நடக்கும்!
சயனா கரத்தைத் தட்டிவிட்டு, “கிளம்புறேன்” என்று காவல் போய்விட்டது.
பீட்டருக்கு அழைத்து சாலை விவரங்களைச் சொன்னாள். அடுத்து அவளும் கிளம்ப ஆரம்பித்தாள்.
கனகா மேம் எழுந்து வந்து அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டார். “இன்னும் இந்த கேஸ்னால உனக்கு எதும் பெரிய பிராப்ளம் வந்திடுமோனு பயம் இருக்கு. கொஞ்சம் பாத்து நடந்துக்கோ”
“ம்ம்ம்”
“கேர்ஃபுல்லா இரு. நான் முழிச்சிதான் இருப்பேன். எதுனாலும் ஃபோன் பண்ணு. பிரபுவும் ஹெல்ப் கேட்டா பண்ணுவார்”
‘சரி சரி’ என்று தலையாட்டியபடியே கிளம்பினாள்.
ராயல், ரௌத்திரமாகக் கிளம்பியது.
அன்றைய இரவு! இருளின் நேரம் 11 : 30.
சிறிது நேரம் இருளில் நனைந்து பாதையில் வந்தாள்.
சிறிது நேரம், மரத்தின் கிளை வழியே விழுந்த சாலை விளக்கு வெளிச்சத்தின் வழியாக வந்தாள்.
காவல் சொன்ன சாலைக்கு சயனா உடனே செல்லவில்லை. அந்தச் சாலையை சுற்றியுள்ள மற்ற சாலைகளுக்குச் சென்று நோட்டம் விட்டாள்.
திட்டப்படி அந்த ஒரு சாலை மட்டுமே ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அதைப் போல் சாலை கொஞ்சம் ஒதுக்குபுறமாகத் தெரிந்தது.
அமைச்சரின் திட்டம்தான் என்ன??
எல்லாம் பார்த்துவிட்டு யோசித்தபடியே மீண்டும் அந்தச் சாலைக்கு வந்தாள்.
இரவின் இருளின் நேரம் 12:30.
திட்டங்கள் திசைமாறுகிறதோ! தான் அதீத எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று நினைத்துக் கொண்டாள்.
சட்டென முந்தைய நாள் போல் இன்றும் சக்தி பின் தொடர்வானோ என்ற பயம்! அப்படி மட்டும் இருக்கக் கூடாது! வண்டியை நிறுத்தித் திரும்பிப் பார்த்தாள்.
இல்லை! அவன் இல்லை! ஒரு நிம்மதி!
இரவின் இருளின் நேரம் 12:45.
ராயல், தார் ரோட்டில் வேகமாகச் சென்றது.
வந்து கொண்டிருந்த முக்கிய சாலை முடிந்தது.
கிளைச் சாலைப் புறமாகத் திரும்ப வேண்டும்.
ஒருமுறை யோசித்தாள்.
தெளிவாய் முடிவெடுத்து கிளைச் சாலையின் உட்புறத்தில் வழியே சென்றாள்.
கடைகளின் எண்ணிக்கை பெரிதாக இல்லை. வீடுகள் அரவே இல்லை. ‘ஏன் இப்படி ஒரு இடத்தை தேர்வு செய்தார்கள்’ என்று யோசித்தபடியே போனாள்.
சில இடங்களில் என்பீல்டின் முகப்பு விளக்கு ஒளி, அவளை முன்னடத்திச் சென்றது. சில சாலைகளில் இருபுறமும் மரங்கள் நிற்க, தெரு விளக்கின் ஒளியில் என்பீல்ட் சென்றது. சில வழிகளில், பூச்சிகள் கண்கள் முன் ஆய்ந்தன.
சிறிது தூரம் சென்றதும், ஒரு சாலையின் முடிவில் வந்து நின்றாள். மறைவான இடத்தில் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டாள்.
இறங்கியதும் கண்களைச் சுழல விட்டு ஆட்டோ நிற்கிறதா என்று பார்த்தாள். தூரத்தில் நிற்பது தெரிந்தது. ‘பீட்டர் இருக்கிறார்’ என்று ஒரு நிம்மதி நிச்சயம் அவள் முகத்தில் இருந்தது.
விடியலுக்கு மிக மிக முந்தைய உலகம்!
இரவின் இருமை அதீத அளவு இருந்தது!
அரவமே இல்லாத அல் பொழுது!
வரையறுக்க முடியா அமைதி!!
இரவின் இருளின் நேரம் 1:00.
தன்மீது இருளும் வெளிச்சமும் சரிவிகிதத்தில் விழும்படியான ஒரு இடத்தைத் தேடினாள். அப்படி ஒரு இடம் கிடைத்ததும், அங்கிருந்த மரத்தின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள்.
சிலையாய் நின்றபடியே சில நிமிடங்கள் சென்றன.
சூழலில் என்னமோ சரியில்லை! சுற்றுப் புறத்தின் ஒவ்வொரு திசையையும் செவியால் வாசித்தபடி காத்திருந்தாள்!!
சுற்றிலும் அவர்கள் செய்திருந்த ஆள்நடமாட்டமின்மை அவளுக்குச் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆனால், தேர்தல் வருவதால் அமைச்சர் பெரிதாய் எதுவும் செய்ய மாட்டார் என்று நம்பிக்கை இருந்தது.
இரவின் இருளின் நேரம் 1:35.
அந்தக்கணம் மனிதக் காலடிப் பாதங்கள் நகர்ந்திடும் ஓசை கேட்டது!
நன்றாகச் செவியைத் திறந்து வைத்துக் கேட்டாள்.
இப்போது மூன்று ஜோடி காலடிச் சத்தங்கள் கேட்டன.
அந்த ஓசைகள் தன்னை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதைப் போல் உணர்ந்தாள். முதலில் எந்தப் பக்கத்திலிருந்து சத்தம் வருகிறது எனப் பார்க்க வேண்டும். செவியை செம்மையாகப் பயன்படுத்தினாள்.
தெரிந்துவிட்டது. பின்புறம் இருந்து ஒன்று… முன்புறம் இருந்து இரண்டு.
ஆக மொத்தத்தில் மூன்று பேர் தன்னைச் சூழ்ந்துள்ளனர் என்று தெரிய வந்தது
அவளுக்குப் புரிந்துவிட்டது. அமைச்சரின் திட்டம் என்னவென்று!
தன் கையிலுள்ள துப்பாக்கியைப் பயன்படுத்த முடியாது.
தற்காப்புக்காக என்ன செய்ய என்று யோசித்தாள். அதுவும் உடலை இரு புறமும் அசைவு கொடுத்துக் கொண்டே யோசித்தாள்.
முடிவு எடுக்க வேண்டும் ஆனால் என்ன முடிவு எடுக்க… குழம்பினாள்.
ஆனால் சயனா முடிவெடுக்கும் முன்பே, முன்னிருந்த உருவத்தின் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து வெளி வந்த தோட்டா, அவளின் இடது தோள் பட்டையை உரசிக்கொண்டு சென்றது.
சைலன்சர் துப்பாக்கி அல்லவா!
சத்தம் வரவில்லை.
சயனா பக்கத்து… ஒரே நபரான பீட்டரால் உதவிக்கு வர இயலவில்லை.
இங்கே அவள் உடலின் அசைவினால் குறி தவறியிருக்கிறது.
தோட்டா உரசிய வேகத்தில் வலி தாங்க முடியாமல் குனிந்துவிட்டாள். ஆனாலும் சத்தம் செய்யவில்லை.
அடுத்த நிமிடமே மற்றொரு தோட்டா வந்தது!
அவள் குனிந்திருந்ததால் மரத்தின் பட்டையை உரசி எடுத்துச் சென்றது!
சயனா தோள் பட்டையிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது!!
