Kathambari Novels
அத்தியாயம் – 11
சக்தியைப் பார்க்கவில்லை என்றாலும் அவன் காதலை உணர்ந்த சந்தோஷம் சயனாவிற்கு. தான் காதல் செய்பவன், தன்னைக் காதல் செய்கிறான் என்ற பூரிப்பு அவள் முகத்தில்.
ராயலில், ‘ரொமான்டிக் ராட்சசியாய்’ அப்பார்ட்மென்டிற்குள் நுழைந்தாள். சக்தி தந்திருந்த பூச்செண்டை ஏந்திக்கொண்டு படியேறத் தொடங்கினாள்.
படபடவென்று படியேறினாள்.
சடசடவென பூச்செண்டின் பூவிதழ்கள் விழுந்தன.
‘அய்யோ’ என்று நின்றுவிட்டாள்.
இன்று படியேறுதல் வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.
முதல் முறையாக மின்தூக்கியில் வீடு வந்து சேர்ந்தாள்.
நேரே அம்மா அறைக்குத்தான் சென்றாள். ஒரு நிமிடம் அம்மா புகைப்படம் முன் நின்றிருந்தாள். அந்த நிமிடம் முழுதும், ‘சக்திய உனக்கும் பிடிக்கும். கண்டிப்பா பிடிக்கும் பாரு’ என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
அக்கணம் காதல் கிரகத்திலிருந்து அழைப்பு!
கைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டாள். சக்தியின் காதலை முழுவதுமாக உணர்ந்த பின்பு, காதல் கிரக அழைப்பை ஏற்பதில் சயனாவிற்கு மிகுந்த தடுமாற்றம்.
இனி இதைத் தொடர்வது அத்தனை எளிதல்ல என்று தோன்றியது.
“ஹாய் ட்டேபீ” – எதிர்முனையின் குரல் துள்ளலாக வந்தது.
“ஹாய்” – தடுமாற்றம் தந்த தயக்கத்துடன் சயனா.
“என்ன வாய்ஸ் டல்லா இருக்கு”
இத்தனை தொலைவில் இருந்தும் எப்படி என்னைப் புரிந்து கொள்கிறான்? அத்தனை அருகில் இருந்தும் சக்தி ஏன் என்னைப் புரிந்து கொள்ளவில்லை?- சயனாவிற்கு இந்தக் கேள்வி வந்தது.
“சொல்லு ட்டேபீ? என்ன பேசவே மாட்டேங்குற”
சக்தியின் ‘சயனா சக்திவேல்’ விட, இந்த ட்டேபீ என்ற அழைப்பு… உள்ளுக்குள் ஏதோ ஒன்றை கிளர்ந்தெழச் செய்கிறதோ? சயனா பேசாமல் இருந்தாள்.
“என்னாச்சி சயனா??”
அவன் உச்சரிப்பில் என் பெயர் எழுத்துகள்! மனதில் காதல் போர் முழக்கங்கள்! சக்தியின் உச்சரிப்பில்தானே இதை நான் உணர வேண்டும்? – சயனா குழம்பினாள்.
“சயனா, சொல்லு என்னாச்சி?”
“நத்திங்”
“ஹேப்பி பர்த்டே மை டியர் ட்டேபீ” – காதல் கிரகத்திலிருந்து வாழ்த்து வந்தது.
சக்தி சொல்லிக் கேட்க விரும்பியது! இவன் சொல்லிக் கேட்கிறோமே? காதல் கிரகத்தின் கொண்டாட்டத்தில்… சயனாவால் கலந்து கொள்ள முடியவில்லை.
“பர்த்டே அன்னைக்கு இப்படி இருக்காத சயனா?” – காதல் அவளைப் புரிந்து கொண்டு சொன்னது.
அருகிலிருந்த பார்த்த சக்தியால் தன்னைப் புரிய முடியவில்லை. ஆனால் இவன் இத்தனை எளிதாகப் புரிந்து கொள்ளகிறானே!!
“சயனா”
“ம்ம்ம்” – என்னிடத்தில் எதற்காக இத்தனைக் காதல் கொள்கிறாய் என்று முதல் முதலாக யோசித்தாள்.
“நீ இப்படி இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கும் ட்டேபீ”
“ம்” – தன் மனம் இரட்டை வேடம் போடுகிறதோ? இது மிகப் பெரிய தவறல்லவா என்ற யோசனைகள் மீண்டும்.
“ஏதாவது பேசு”
“நாம இனிமே பேச வேண்டாம்”
“ஏன்? எதுக்கு?” – காதல் விளையாட்டாய் எடுத்துக் கொண்டது அவள் பேச்சை.
“நான் சக்திய லவ் பண்றேன்”
“ய்யா ஓகே. எனக்குத் தெரியுமே” – இன்னும் அதன் குரலில் விளையாட்டுதான்.
“நான், சக்திய மட்டும்தான் லவ் பண்ணனும்னு நினைக்கிறேன்”
காதல் மௌனமாகிவிட்டது.
“ஆனா நீ பேசறப்ப என்னையவே அறியாம எனக்கு.. என.. ஏதோ ஒரு.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. ப்ளீஸ் இனிமே எனக்கு போஃன் பண்ணாத”
காதல் மௌனம் தொடர்கிறது.
“ப்ளீஸ், ஐ மீன் இட் அன்ட் ஐ நீடு(need) இட்”
எல்லா இடத்திலும் மௌனம் சம்மதத்தின் வெளிப்பாடு. ஆனால் காதல் கிரகத்தின் இந்த மௌனம் சங்கடத்தின் வெளிப்பாடு.
“ப்ளீஸ், ஐ… ” – எப்படிச் சொல்ல என்று சயனா தடுமாறினாள்.
“கூல் கூல் ட்டேபீ. புரியுது. உனக்கு பிடிக்காத எதயும் நான் செய்ய மாட்டேன். நீ சந்தோஷமா இருந்தா போதும்”
அங்கே ஒருவன் நான் கவலைப்படுவேன் என்று தெரிந்தும் விட்டுச்சென்றான். இங்கே இவனோ ‘விட்டுப்போ’ என்கிறேன்; ‘சந்தோஷமா இரு’ என்கிறானே!!
“நான் இனிமே ஃபோன் பண்ணல. ஆனா உனக்கு எப்பவாவது என்கிட்ட பேச நினைச்சா பேசு” – சூழ்நிலையை பக்குவமாகக் கையாண்டது காதல்.
“நீ எப்ப பார்க்கணும்னு சொன்னாலும் வருவேன் ட்டேபீ… உனக்காக” – காதல் பரிவும் காட்டியது.
“போதும், நான் ஃபோன் கட் பண்ணப் போறேன் ” – இதற்குமேல் இந்தப் பக்குவம், பரிவு… சரியல்ல என்று தோன்றியது.
“ஸாரி சயனா” – அழைப்பைத் துண்டித்துக் கொண்டது காதல்.
நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?
எதற்கிந்த அன்பை எடை போடும் நடவடிக்கை?
எதற்காக இந்த ஒப்பீடு?
அன்பை ஒப்பீடுவது காதல் இல்லை.
ஒப்பில்லாத அன்புதானே காதல்!?
சக்திவேல் தந்த பூச்செண்டை அணைத்துப் பிடித்துக் கொண்டு படுத்துவிட்டாள். சக்தியிடம் பேச விரும்பியதை, பூச்செண்டிடம் பேசுகின்றாளா? இல்லை…. சக்தி பூச்செண்டிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாளோ?
கடைசியில் எல்லாவற்றையும் மறந்து, தன் முழுமுதற் காதலை, சக்திவேல் என்ற ஒற்றைப் புள்ளியில் நிறுத்தி, மனதைச் சமாதானப்படுத்தி உறங்கினாள்.
************
அன்றைய வெகு அதிகாலை பொழுது!
அமைச்சரின் உதவியாளரிடம் கனகா மேம் பேசியிருந்தார்.
அமைச்சர் உடனே சந்திக்கலாம் என்றுவிட்டார். ‘எவன் அவன்’ என்று தெரிய வேண்டும் அவருக்கு! அவரே சிஐடி அலுவலகம் வருவதாகச் சொல்லிவிட்டார்.
இங்கே ‘ஏன்?’ என்ற கேள்வி வந்தாலும், அதைக் கேட்கத் தோன்றவில்லை. சரியென்று ஒப்புக் கொண்டார் கனகா மேம்.
நான்கு மணிக்கு முன்பாக சந்திப்பு நேரம் குறிக்கப்பட்டது!
அமைச்சரின் வருகை யாருக்கும் தெரியக்கூடாது என்று இந்த ஏற்பாடு!!
இதுவும் நல்லதுதான்.
சயனா அலுவலகம் வரும் முன்னே அவரிடம் எல்லாம் சொல்லி, இதை முடித்து விடவேண்டும் என்று கனகா மேமும், ரேவும் நினைத்தனர்.
சிஐடி அலுவலக விசாரணை அறையில் கூட்டம்! அந்தக் கட்டடத்தின், மற்ற எந்த அறையிலும் விளக்குகள் வெளிச்சம் இல்லை. இந்த ஒரு அறையில் மட்டும் விளக்கு எரிந்தது.
ரேவ் மற்றும் கனகா மேம், அவர் அறையில் இருந்தனர்!
இருவருமே பதட்டத்தை உணர்ந்தனர்.
வேறு எதற்காகவுமில்லை.
சயனா வந்து கேட்டால், ‘என்ன சொல்லி சமாளிக்க’ என்று இருவரின் மூளையும் பதில்களை யோசித்து யோசித்து பதட்டமானது.
“ரேவ்” என்று பின்னிருந்து தோளைத் தொட்டார் கனகா மேம்.
ஒருகணம் பயந்து கைகளில் வைத்திருந்த காகிதத்தைக் கீழே நழுவ விட்டாள்.
“ஏய்! என்னாச்சி”
“ஒன்னுமில்ல மேம். கொஞ்சம் நெர்வஸா இருக்கு”
இதுவரை சயனாவை எதிர்த்துப் பேசி இருக்கிறாள். சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கிறது. ஆனால் இதுதான் முதல்முறை தோழிக்கு எதிராகவே நடக்கப் போகிறாள்.
இதுதான் அவளினது பதட்டத்தின் காரணமா??
இதுதவிர இன்னொன்று உண்டு.
அமைச்சருடன் வரும் அந்த போலீஸ்காரன் பார்வை. அதை எதிர்கொள்ள பிடிக்கவேயில்லை. அதோடு அமைச்சர்… அந்த மூவர்… என்ன யோசனையில் இருக்கிறார்கள்? சக்திதான் என்று சொன்னால்… என்ன முடிவெடுப்பார்கள்?
என்ன பதட்டமானாலும்… தோழிக்காக இதைச் செய்ய வேண்டும்!!
“முதல கீழ கிடக்கிற பேப்பர்ஸ எடு” என்றார் மேம்.
எல்லாவற்றையும் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள், ரேவ்.
“எல்லாம் கரெக்டா இருக்குல?”
“இருக்குது மேம்”
அப்போது அறைக் கதவு தட்டப்பட்டது. நால்வர் கூட்டணி வந்துவிட்டது போல!
ரேவ்தான் சென்று திறந்தாள்.
அங்கே காவல் நின்று கொண்டிருந்தது. திரும்பவும் அனாவசியப் பார்வைகள்.
இன்னும் சிறிது நேரம் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.
“அமைச்சர் வந்தாச்சி. சீக்கிரம் வா”
“ம்ம்ம்” – குனிந்து கொண்டே பதில் சொன்னாள்.
“உன் ஃப்ரண்ட் இல்லையா?” – தேவை இல்லாத கேள்வி கேட்டது காவல்.
“நீங்க போங்க, நாங்க வரோம்” என்று சொன்னார் கனகா மேம்.
அவர்கள் இருவரையும் சந்தேகமாகப் பார்த்துச் சென்றது காவல்.
“ரேவ் இப்படி இருக்காத. முகம் பார்த்து தெளிவா பேசு”
“ம்ம்ம்” என்றவளின் குரல் மட்டுமல்ல உடலே நடுங்கியது.
“ப்ச் வா!” என்று கனகா மேம் அவளைக் கூட்டிச்சென்றார்.
ரேவ், கனகா மேம்… எல்லா கோப்புகளையும் எடுத்துக்கொண்டு நால்வர் இருக்கும் அறைக்குப் போனார்கள்.
அந்த அறையில்… நால்வரும் அமர்ந்திருந்தனர்.
என்றுமில்லாமல் இன்று தொழிலதிபரும் காவலும் புதிதாய் புகை மண்டலத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
உள்ளே போனதுமே புகை நெடி முகத்தில் மோதியது!
சிஐடி அலுவலகத்தில் இத்தகைய செயல்!
இரு பெண்களையும் மிகவும் கொதிப்படையச் செய்தது!
உடனே ரேவ், “இது சிஐடி ஆபீஸ். இங்க ஸ்மோக் பண்ணக்கூடாது” – அவள் குரல், தட்டிக் கேட்பது போல் இல்லை! தடதடத்து வருவது போலிருந்தது!
அவர்கள் பார்வையே சொன்னது, ‘என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ, நாங்க நிறுத்தப் போறதில்லை’ என்று.
சயனா இருந்தா இப்படி பண்ணுவாங்களா? – ரேவ் மனக்குரல் கேட்டது.
கனகா மேம், ரேவ் காதில், “வந்த வேலையைப் பார்க்கலாம். தேவையில்லாம பேசாத” என்றார்.
“சொல்லு, எதுக்காக இந்த மீட்டிங்? ” – இது ஆளுகின்ற அமைச்சர்.
“ஏற்கனவே சொன்னேனே. அந்த…” என்று கனகா மேம் ஆரம்பிக்கையில், “நீங்க பேச வேண்டாம். இன்னைக்கு இந்த மேடம் பேசட்டும்” என்று காவல் ரேவைக் கை காட்டியது.
நால்வர் கூட்டத்திடம் ஒரு சிரிப்பலை வேறு!
ரேவ், கனகா மேமை பார்த்தாள்.
“ம்ம் ரேவ் நீ பேசு” என்றார் தலைமைக்குறிய குரலில். ‘ஏன் இப்படிச் செய்றாங்க? ஆள் யாருனு தெரிஞ்சிட்டு போக வேண்டியதுதான? இத்தனை நாள் சயனா பேசின கோபத்தை எங்ககிட்ட காட்றாங்களா? ம்ம் இருக்கலாம்’. அதற்கு இடம் கைகொடுக்க கூடாது என்று முடிவெடுத்தார்!
“அது வந்து..” என்று என்று ரேவ் பேச வருகையில், “ஒரு நிமிஷம் நிறுத்து!” என்று காவல் குறுக்கிட்டது.
“என்னய்யா பிரச்சனை? ” – தூக்க கலக்கத்தில் தொழிலதிபர் கேட்டார்.
“சயனா எங்க? எப்பவும் அவதான பேசுவா. இன்னைக்கு என்ன புதுசா நீ? அவ எங்க போனா?” – காவல் கேள்வி கேட்டது.
“அதான? இதுல ஏதோ விஷயம் இருக்கு” – இட்டுக்கட்டிப் பேசியது பத்திரிக்கை.
ரேவ், திரும்பவும் கனகா மேமைப் பார்த்தாள். இம்முறை அவள் முகத்தில் பயம் தெரிந்தது.
‘அவங்களுக்கு எதுவும் தெரியாது. நீ காட்டிக் கொடுக்காத’ என்று கனகா மேம் கண்களால் பேசினார்.
“எப்போ பதில் சொல்லப் போறீங்க?” – பல் தெரிய பத்திரிக்கை கேட்டது.
“சயனா வராம இருக்கிறதுதான் இப்ப பிரச்ச்னையா? நான்தான் இங்க டிஎஸ்பி. நான் சொன்னா போதாதா உங்களுக்கு” – அழுத்தமாகக் கேட்டார் மேம்.
“நீங்கதான் டிஎஸ்பி. ஆனா என்னைக்கும் அவதான பேசுவா. நீங்க பேசுனத நாங்க கேட்டதே இல்ல” – தொழிலதிபர் குரலில், சயனா இல்லாததால் கிடைத்த லாபத்தின் நக்கல் தெரிந்தது.
“சயனாவுக்கு உடம்பு சரியில்ல. அதான் வரல. எதுக்காக இந்த மீட்டிங்கோ… அத பார்க்கலாமா” – சமாளிப்பும் கறாரும் கலந்த குரல் மேம் சொன்னார்.
“ம்ம் சொல்லு!” – அமைச்சர் ரேவைப் பார்த்தார்.
“அது… வந்து.. கேஸ் முடிஞ்சிருச்சி. அதான் யாரு ஹேக்கருனு சொல்லலாம்னு வந்தோம்” – ஏனோ சொல்லி முடிக்கும் போது ரேவ் வியர்த்துப் போனாள்.
“ஏய்! ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து கேட்டேன்ல. அப்போ கூட எதுவுமே சொல்லல” – எழுந்து, ரேவ் அருகே வந்து நின்று கத்திக் கொண்டது காவல்.
ரேவால், அந்த அருகாமையையும் சகிக்க இயலவில்லை! அந்த அலறலையும் பொறுக்க முடியவில்லை! உடல் முழுவதும் வியர்வை அரும்பியது!!
“மேம்…” என்று கனகா மேமின் அருகில் சென்றாள் ரேவ்.
“அதுக்கு காரணம் இருக்கு” என்று கனகா மேம் ஆரம்பிக்கும் போதே,
“நான் இவகிட்ட கேட்டேன். நீங்க பேசாதீங்க” – கண்டிப்புடன் காவல் சொன்னது.
“நீ சொல்லு ரேவ்! கேட்கிறாங்கள” என்றார் அழுத்தமாக கனகா மேம்.
“இப்பதான கேஸ் முடிஞ்சது” என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.
“சத்தமா பேசச் சொல்லுய்யா” என்றது தொழில்.
“அவர் சொன்னது கேட்டதுல… சத்தமா சொல்லு” என்றது காவல்.
“கம்பிளீட்டா முடிஞ்சாதான, கரெக்ட் இன்பர்மேஷன் கொடுக்க முடியும். அதான் நீங்க வந்தப்ப சொல்லல!” – படபடவென்று சொல்லி முடித்தாள் ரேவ்.
“என்ன இந்தப் பொண்ணு, இவ்ளோ பயப்படுது? இதலாம் சிஐடியா?” – காவல்.
காவல் சொன்னது நகைச்சுவை என்று நினைத்து… மற்ற மூன்றும் சிரித்தது!
கண்கள் கலங்க… கனகா மேமைப் பார்த்தாள் ரேவ்.
இப்போது தெளிவாகிவிட்டது கனகா மேமிற்கு. இத்தனை நாள் சயனா பேசிய பேச்சின் வெளிப்பாடுதான்… இவர்களது எள்ளல், நக்கல் எல்லாம்!
“ரேவ், நீ டிடெயில்ஸ கொடுத்திட்டு வா, நாம போகலாம்” என்றார்.
கையிலிருந்த கோப்புகளை அமைச்சர் மேசை முன்னால் வைத்தாள். “இதுல, உங்க ஈமெயில் ஹேக் பண்ண டிடெயில்ஸ் இருக்கு. கொரியர் டீடெயில்ஸ் இருக்கு…” என்று ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினாள்.
சில கோப்புகளை அவளிடமிருந்து பிடுங்கி காவல் பார்த்தது. அதிலிருந்த கொரியரையும் பார்த்தது! “அன்னைக்கு நான் வந்து கேட்டேன்ல. அதே நாள்லதான இந்த கொரியர் வந்திருக்கு. ஏன் என்கிட்ட இதபத்தி சொல்லல?” – காவல் தன் விசாரணையை சிஐடியிடம் ஆரம்பித்தது.
என்ன சொல்லவென்று தெரியாமல்… ரேவ் கனகா மேமைப் பார்த்தாள்.
“என்னய பார்த்துப் பேசு” – ரேவ் அருகே நின்று காவல் சொன்னது.
“அன்னைக்கு முழுசா எதும் கண்டுபிடிக்கல. ஆப்டர் பினிஷிங் ஆல் தே…”
“எங்களுக்குப் புரியற மாதிரி பேசறியா” – அவள் பேச்சை இடையிட்டு, இம்சித்து, ரசித்தது காவல்.
“இல்ல, அவ என்ன சொல்ல வர்ற…” என்று கனகா மேம் இடையில் வந்தார்.
“நான் அப்பவே சொன்னேன்ல, நீங்க பேசாதீங்க” – அமைச்சர் கத்தினார். அவர் முழு ஆதரவும் காவலுக்கே இருந்தது!
“நீ சொல்லு… இத சொல்லி இருக்கலாம்ல. ஏன் சொல்லல?” – ரேவின் மிக அருகில் நின்று கொண்டு காவல் கேட்டது.
ரேவ் திணறினாள்… தின்னாடினாள்… வார்த்தைகளைத் தேடினாள்… ‘சயனா, சீக்கிரம் வா’ என்பதைத் தவிர வேறு எதுவும் மூளைக்குள் வரவில்லை.
“விடுய்யா. நீ யாருனு சொல்லு” – அவளுக்காகப் பரிதாபப்பட்டு பத்திரிக்கை பரிந்து கொண்டு பேசியது.
காவல் விலகிக் கொண்டது!
“நீங்… நீங்க.. கனலினினு ஒருத்தங்கள பொய்யா கேஸ் போட்டு..” என்று ரேவ் ஆரம்பித்ததுமே,
“ஆன்ங்… திருப்பிச் சொல்லு ” – நால்வரிடமிருந்து மொத்தமாகக் குரல் வந்தது.
அவளின் ஆரம்பமே அவர்களுக்கு ஆத்திரம் ஊட்டுவதாக இருந்தது.
“ரேவ், தெளிவா சொல்லு. அவங்கள கோபப் படுத்திற மாதிரி எதுவும் இப்ப பேச வேண்டாம்” – அவளுக்குச் சூழ்நிலையைப் புரிய வைக்கப் பார்த்தார் மேம்.
“திருப்பித் திருப்பிச் சொல்றேன் நீ பேசாத!” – அமைச்சரின் கோபம் இது. அவர் பேச்சில் கனகா மேமிற்கான மரியாதை விகுதி குறைந்து கொண்டு வந்தது.
“எங்க நீ சொல்லு…” என்றது ரேவிடம் தொழில்.
“கனலினி, இன்.. இன்கம்டாக்ஸ் ஆபிஸர் இருக்காங்கள… அவங்கள உங்களுக்கு தெரியும்ல” என்று கேட்டாள் ரேவ்.
“நீ யாரம்மா சொல்ற? கனலினி யாருனே எங்களுக்குத் தெரியாதே” – அமைச்சர், தனது நாடகத்தை ஆரம்பித்தார்.
“ஐயோ! உங்களுக்குத் தெரியும்!! பொய் சொல்லாதீங்க…” என்றாள் ரேவ்.
“யாரப் பார்த்து? என்ன கேள்வி கேட்கிற?” – காவல் ரேவ் கையைப் பிடித்து வதைக்க ஆரம்பித்தது.
“அவ கைய விடு!!” – காவலைப் பிடித்து இழுத்தார் கனகா மேம்.
“அவள முதல சொல்ல சொல்லு” – ரேவை விடாமல் வதைத்துக் கொண்டே காவல் பேசியது.
“என்ன சொல்ல?! பேப்பர்ல கூட நீயூஸ் வந்திருக்கு. நீங்க பொய் சொல்றீங்க. எங்கிட்ட பேப்பர் கட்டிங்ஸ் இருக்கு” என்று எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லி முடித்தாள் ரேவ்… கோபத்தில்!
“ஓ நாங்க பொய் சொல்றோமா?” – பத்திரிக்கை பரிகாசம் செய்தது.
“யோவ், அந்தப் பொண்ணு கைய விடுய்யா” – சட்டென அனுதாபம் வந்துவிட்ட அமைச்சர் சொன்னார்.
காவல் கையை விட்டதும்… ரேவ் மணிக்கட்டைத் தேய்த்துக் கொண்டாள்.
“ஆமா. நாங்க பொய்யா கேஸ் போட்டோம். அதுக்கு என்ன?” – இது அமைச்சரின் அதிகார ‘என்னவோ ஒன்று’.
“கனலினிதான் இதலாம் செஞ்சாளா?” -தூக்கப் பார்வையுடன் தொழிலதிபர்.
“இல்ல. அவங்களுக்கு மனநிலை பாதிச்சிருச்சி” என்றார் கனகா மேம்.
“ஐயோ பாவம். அப்புறம் என்னாச்சி” – கதை கேட்பது போல் காவல்.
“அவங்க பையன்தான் உங்களை பழிவாங்க இப்படிப் பண்ணிருக்கான்” – ரேவ் கடைசியில் சொல்லி விட்டாள்.
“பையனா? அவன் பேரென்னமா??” – அமைதியாக அமைச்சர் கேட்டார்.
“சக்திவேல்”
சிறிதுநேரம் நிசப்தம் நிலவியது! நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தனர்! அவர்களுக்குள் பேச்சு தொடர்ந்தது…
“அன்னைக்கே சொன்னேன்ல. அவளோட கதைய ஜெயில்லயே முடிச்சிடலாம்னு. நீங்கதான் வேண்டாம்னு சொல்லி, இப்ப பாருங்க” – தூக்கம் தொலைந்து துடிப்புடன் தொழில் கோபப்பட்டது.
“அவள ரெண்டு மாசம் ஜெயில்ல வச்சியும் திருந்தலனா? அவளுக்கு எவ்ளோ திமிர் இருக்கும்” – தன் கடமை என்னவென்று மறந்த காவல் கொதித்துப் போய் பேசியது.
“ஜெயில்ல நம்ம பண்ண டார்ச்சர்தான்யா அவள பைத்தியமா ஆக்கிருக்கு. அதான் அவ பையன் இப்படி வந்து நிக்கிறான்” – பிரச்சனையின் ஆணிவேரைப் பிடித்துவிட்டார் அமைச்சர்.
“அம்மா மேல ரொம்ப பாசம் போல” – பத்திரிக்கை.
“அதான் தெரியுமே! ரெண்டு மாசமா ஜெயில் வாசல்ல வந்து வந்து நிப்பான்ல” – சிரித்துக் கொண்டது காவல்.
அதைக் கேட்டு மற்ற மூவரும் சிரித்தனர்.
“அவன் அம்மாவை கஸ்டடில வச்சிருந்த பில்டிங் வாசல்லயும் நின்னுருக்கான். என் ஸ்டேஷன்ல போட்ட எப்ஐஆர்… எதுக்கு… ஏன்னு தெரியாம என்கிட்ட வந்து கெஞ்சிக்கிட்டு நின்னுருக்கான்” – காவல்.
மேலும் மேலும் சிரிப்புச் சத்தம் அந்த அறையில் ஒலித்தது.
“இப்ப என்ன செய்யனும்னு யோசி. பழசையே பேசிக்கிட்டு இருக்காத” – அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கத் தொடங்கிய அமைச்சர் கேட்டார்.
“அவனுக்கும் ஏதாவது ஒரு பொய்யா கேஸ் போட்றலாம்? அவன உள்ள வச்சு அடிக்கிற அடியில நம்மள இனி யாரும் எதிர்க்கனும்னா பயப்படனும்” – காவல்.
அவர்கள் பேசப் பேச… அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர், ரேவ் மற்றும் கனகா மேம். இருவருக்கும் சக்திவேல் செயலில் நியாயம் இருக்கிறதோ என்று யோசிக்கத் தோன்றியது.
ஆனால் காலம் கடந்த யோசனை!
கனகா மேம் பொறுமையாகக் கையாளலாம் என நின்றார். கோபத்தில் இருந்த ரேவ் எப்போது வேண்டுமானாலும் வெடித்து எழலாம் என்று நின்றாள்.
“சரியா சொன்ன. பொய் கேஸ் போட்டு, அவன உண்டு இல்லைனு பண்ணனும்” – சட்டத்தை தன் கையிலோ… பையிலோ வைத்திருந்த தொழில் சொன்னது.
“அடப்பாவிகளா! நீங்க இவ்ளோ மோசமானவங்களா?” – கோபத்தில் ரேவ் வெடித்தாள்.
நால்வரின் பார்வையும்… அவள் மேல் திரும்பியது.
“ரேவ், சும்மா இரு” – அவளைத் தடுக்கப் பார்த்தார் கனகா மேம்.
“இப்பதான் புரியுது. இதனாலதான் சயனா கேஸ பத்தி எதும் சொல்ல கூடாதுனு சொல்லிருப்பா மேம். நாமதான் தப்பு பண்ணிட்டோம்” – உணர்ச்சிவசப்பட்டுப் பேசி சிக்கலைப் பெரிதாக்கினாள் ரேவ்.
“ரேவ், என்ன பண்ணிக்கிட்டு இருக்க. பேசாம இரு” – கனகா மேம் அவள் கையை அழுத்திப் பிடித்தார்… அழுத்தமாகவும் சொன்னார்.
“என்ன சொன்ன நீ?” என்று ரேவ் அருகே விரைந்தது காவல்.
உடனே ரேவ் அறையை விட்டு வெளியே ஓடப் போனாள்.
“அவளைப் புடிய்யா?” – அமைச்சர் குரல் அதிகாரத்துடன் வந்தது.
ரேவ், காவலால் பிடித்து இழுத்து வரப்பட்டு அமைச்சர் முன் நிறுத்தப்பட்டாள்.
“விடு என்னய!!” – எரிச்சலுடன் ரேவ் காவல் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தாள். முடியவில்லை என்றதும் அழுகை வருவது போலாகிவிட்டது.
“அவளை விடுங்க” என்று சத்தம் போட்டார் கனகா மேம். கூடவே, “செக்யூரிட்டி செக்யூரிட்டி” என்று கூப்பிட்டார்.
உடனே அமைச்சர் யாருக்கோ அழைத்து, “நம்ம ஆளுங்கள வந்து கீழ நிக்க சொல்லு. இங்க என்ன நடந்தாலும் யாரும் மேல வரக் கூடாது” என்றார்.
“ஒரு சிஐடி ஆபிஸர இப்படி பண்றதலாம் ரொம்ப தப்பு! விடுங்க” – குரல் சற்று கெஞ்சுவது போல் மாறிவிட்டது ரேவிற்கு.
“ஏன், இதுக்கு முன்னாடி தெரியாதா நீங்க சிஐடி ஆபிஸர்னு?” – துளைக்கும் பார்வையுடன் தொழில் கேட்டது.
“சொல்லு…” – ரேவை, காவல் பலவழிகளில் கஷ்டப்படுத்தியது.
“என்ன சொல்ல?” என்றாள் லேசான விம்மல்களுக்கு ஊடே.
“உன் ஃப்ரண்ட் வராததுக்கு அப்ப ஒரு காரணம் சொன்ன, இப்ப வேற சொல்ற. அது என்னனு சொல்லு” – காவல் சரியான புள்ளியில் கேள்வியை வைத்தது.
“அப்படியா சொன்னேன். இருக்காது” – சமாளிக்கப் பார்த்தாள்.
“ஐயா, இவளுங்க ஏதோ ப்ளான் போடறாளுங்க. நம்பாதீங்க” – பத்திரிக்கை.
“ஒழுங்கு மரியாதையா அந்த பையன் எங்க இருக்கான்னு சொல்லு” – அமைச்சர் அவளை அரட்டிப் பாத்தில் வாங்கப் பார்த்தது.
“சக்திவேல்னு பேர் மட்டும் தெரியும். வேற எதும் தெரியாது” – உண்மையைச் சொன்னாள் ரேவ். கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு.
“அதெப்படி தெரியாம இருக்கும். ஒழுங்கா எல்லாம் சொல்லு” – அப்படியொரு அதட்டல் அமைச்சரிடமிருந்து வந்தது.
“அவன் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். நிஜமா அவ்ளோதான் தெரியும். அதுக்கு மேல எதும் தெரியாது” என்று சொல்லும் போது கண்ணீர் வந்துவிட்டது.
“அதான் இந்த வேலைய பண்ணிருக்கான்!” – காவலின் அரிய கண்டுபிடிப்பு இது.
“அவனுக்கும் சயனாவுக்கும் என்ன சம்பந்தம், அத சொல்லு” – தொழில் கேட்டது.
“ஐயோ ஒரு சம்பந்தமும் இல்லை” – முந்திக் கொண்டு வந்தார் கனகா மேம்.
“அவளை மிரட்டி கொரியர் அனுப்பிருக்கான். அப்புறமும் அவனுக்கு சப்போர்ட் பண்றானா, நிச்சயமா இதுல என்னவோ இருக்கு” – காவல் புள்ளிகளைச் சரியாக இணைக்கத் தொடங்கியது.
“இல்ல, நீங்க நினைக்கிற மாதிரி எதும் இல்ல” – மறுத்தார் கனகா மேம்.
“நீ, அவகிட்ட கேளுய்யா” – ரேவிடம் காவலை கேட்கச் சொன்னார் அமைச்சர்.
“உண்மையைச் சொல்லு” – ரேவை மிக மோசமாக உலுக்கியது காவல்.
“எனக்குத் தெரியாது… தெரியாது” – கத்திக் கொண்டே அழுதுவிட்டாள் ரேவ்.
“ஏ! கத்தாத! வெளிய கேட்க போகுது!!” – அமைச்சர் கத்தினார்.
ரேவ் மேலும் மேலும் கத்திக் கொண்டு அழதாள்.
“கத்தாதனு சொல்றோம்ல!” – ரேவின் கன்னத்தில் காவல் ஓங்கி அறைந்தது.
ரேவ் கத்தவில்லை. அதிர்ந்து உறைந்து நின்றுவிட்டாள்.
“அந்தத் திமிர் பிடிச்சவளுக்குப் ஃபோன் பண்ணி வரச் சொல்லு. அப்பத்தான் உண்மை என்னனு தெரியும்” – தொழிலதிபர்.
உடல் நடுங்க, “அவ எதுக்கு” என்று எழும்பாத குரலில் கேட்டாள் ரேவ்.
திரும்பவும் சீறீ வந்த காவலைப் பார்த்தவள், “இதோ, பண்றேன்” என்று கைகள் நடுங்க கைப்பேசி எடுத்துவிட்டாள்.
“சீக்கிரம் வரச் சொல்லு” – காவல்.
“ம் சீக்கிரமா! அப்புறம் விடிஞ்சா பிரச்சன ஆயிடும்” – அமைச்சர் எரிச்சலானார்.
வரிப்பணம் கேட்வரின் மேல் இருந்த கோபத்தை விட, வரிப்பணம் எடுத்தவன் மற்றும் அதை மறைக்க நினைத்தவள் மேல் உண்டான கோபம் இரண்டு மடங்கு அதிகமானது… அந்த நால்வருக்கும்.
அதாவது அவர்கள் கோபம் மொத்தமும், ‘சயனா சக்திவேல்’ என்ற ஒற்றைப் புள்ளியில் வந்து நின்றது.
