Kathambari Novels
அத்தியாயம் – 10
அடுத்த நாள் காலை!
எழுந்து கொள்ளும் போதே இத்தனை வருடம் இல்லாத வெறுமை சயனாவிற்கு. அம்மா இல்லாத முதல் பிறந்தநாள் என்று நெஞ்சம் விம்மியது.
இதுவரை இந்த நாளை பெரிதாகக் கொண்டாடியது இல்லைதான்!
ஆனால் அம்மாவிடமிருந்து வரும் வாழ்த்து… பெரிய கொண்டாட்ட… பிறந்தநாள் முழுமை அடைந்த உணர்வைத் தந்துவிடும்.
இன்று அம்மா இல்லாமல் அவள் மனம் திண்டாடிக் கொண்டிருந்தது!!
வீட்டிற்குள்ளே அங்கும் இங்கும் நடந்து பார்த்தாள். அதையும் இதையும் செய்து பார்த்தாள். எதுவும் எந்தப் பயனும் அளிக்கவில்லை.
தனிமை உணர்வு மேலோங்கிய அடுத்தக் கணம், வாசல் அழைப்பு மணியின் சத்தம் கேட்டது.
வாசல் நோக்கி சயனா விரைந்தாள்.
கதவு திறந்தாள்.
அங்கே ரேவ் நின்றாள்!!
‘வீட்டுக்கு வராதே’ என்று சொன்ன பின்னும், விடியற்காலையே வந்து நிற்பதெல்லாம் விலையில்லா நட்பு!!
“ஹேப்பி பர்த்டே!” – ரேவ். ‘போனா போகுது வச்சுக்கோ’ என்ற தோரணையில் சொல்லப்பட்டது போல் இருந்தது.
“உள்ளே வா”
இருவரும் உள்ளே வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தனர். வழக்கமாக அவர்களது உரையாடல் அரங்கேறும் இடம் இதுதான்.
இன்று சயனா எதுவும் பேசவில்லை.
“என் மேல கோபமா?” – ரேவ்.
‘இல்லை’ என்பது போன்று தலை ஆட்டல்கள்.
“நீ ஏன் இப்படி இருக்க?”
“ஒன்னுமில்ல”
“இல்ல, ஏதோ இருக்குது. அம்மாவ மிஸ் பண்றீயா?”
“ப்ச்”
“மனோகர்கிட்ட பேசுனியா?”
“…”
“உனக்கு அம்மா ஞாபகம் வருதா?”
“சும்மா நொய்யு நொய்யுனு பேசி உயிர வாங்காத ரேவ்!”
“போ. எனக்கு அழுகையா வருது தெரியுமா? எனக்கு அம்மா ஞாபகம் ரொம்ப வருது. அதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன். என் அம்மா அப்பாவ, வரச் சொல்லலாம்னு, கேட்டியா?” என்று அழ ஆரம்பித்தாள் ரேவ்.
“போதும் ரேவ். ஏற்கனவே ஒரு மாதிரி இருக்கு. நீ வேற…”
“சரி, நான் அழல. நீ போய் குளிச்சிட்டு வா. கனகா மேம் நம்மள லஞ்ச்க்கு கூப்பிட்டாங்க. நாம அங்க போய் சாப்பிடலாம். ஓகே வா”
‘சரி’ என்று எழுந்து, கிளம்பத் தயாரானாள். அதற்குள் மறுபடியும் அழைப்பு மணியின் ஓசை கேட்டது.
“நீ போய் குளி. நான் பார்க்கிறேன்” என்று ரேவ் சென்றாள்.
அதற்குள் இங்கே சயனா இருதயம் இரும ஆரம்பித்தது.
திறந்த கதவின் முன் அந்த அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி நின்றார். “மேடம், இந்த கவர சயனா மேடம்கிட்ட கொடுக்கச் சொன்னாங்க”
“தேங்க்ஸ்” என்று கூறி ரேவ் வாங்கிக் கொண்டாள்.
“அண்ணே ஒரு நிமிஷம்” என்று சயனா கைப்பேசியுடன் வாசலுக்குப் போனாள். செக்யூரிட்டியிடம் சக்திவேல் புகைப்படத்தைக் காட்டி, “கவர் தந்தது இந்த போட்டோல இருக்கிறவங்களா? பார்த்துச் சொல்லுங்க” என்றாள்.
“ஆமாம் மேடம்”
“தேங்க்ஸ் அண்ணே” என்றதும், அவர் சென்றுவிட்டார்.
சக்தி அவளைத் தேடி வீடு வரை வருகிறான். சயனாவிற்கு இது பிறந்தநாள் பரிசாகத் தோன்றியது.
‘கவரை’ ரேவிடமிருந்து வாங்கினாள். அளவற்ற ஆவலுடன் திறந்து பார்த்தாள். அதில் எழுதியிருந்ததை வாசித்தாள்.
சயனா,
சந்திப்போம்
மாலை 4:30
போஃனிக்ஸ் மார்கெட் சிட்டி
சக்திவேல்.
ரேவும் வாசித்து விட்டாள்.
என்ன விசயம் என்று வாசித்த பின், சயனா செயலற்று நின்றாள். நிமிர்ந்து தோழியைப் பார்க்க இயலவில்லை. இது செயல்பட வேண்டிய தருணம். ‘இப்படி நிற்காதே சயனா, யோசி’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
ஏனெனில் ரேவைச் சமாளிக்க வேண்டும்!
விருவிருவென தன் அறை நோக்கி நடந்தாள்!!
“நீ போகப் போறியா” – ரேவ்.
‘ஸ்ஸ்ஸ்’ என்று ஒரு கண்ணைச் சுருக்கி சயனா நின்றாள்.
“கேட்கிறேன்ல போறியா நீ? இப்ப இது தேவையா?”
“தேவைதான்! கேஸ் டிலே பண்றோம்னு சக்திகிட்ட சொல்ல போறேன். இந்த மிரட்ற வேல வேண்டாம்னு வார்ன் பண்ணிட்டு வந்திடறேன்” – ‘ரேவ் நம்புவாளா’ என்ற பெரும் பயத்துடனே சயனா கூறினாள்.
“ம்ம்… ஐடியா சூப்பர். அப்படியே உனக்கு மேரேஜ் ஆகப் போகுதுனு சொல்லிடு”
‘எங்க சுத்தினாலும், அங்கயே வந்து நிற்கிறாளே’ என்று சயனா பார்த்தாள். “உனக்கு டவுட் இருந்துச்சுனா நீயும் என்கூட வா” – ரேவ் கண்டிப்பாக வர விரும்ப மாட்டாள் என்ற நம்பிக்கையில் கேட்டாள்.
“அப்கோர்ஸ் டவுட் இருக்கு. கண்டிப்பா வரேன். எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல”
‘ச்சே, கேட்டிருக்கக் கூடாது’ என்ற மனநிலையில் சயனா நின்றாள்.
“மேம்கிட்ட சொல்லிட்டு வரவா?” – ரேவ்.
“வேண்டாம்… வேண்டாம். வந்து சொல்லிக்கலாம்” என்று அறைக்குப் போனாள்.
‘என்ன உடை?’ என்று பட்டிமன்றம் நடப்பதற்கு அவசியமே இல்லை. ஏனெனில் உடைகள் பெரும்பாலும் நீலம் மற்றும் வெள்ளையாக இருந்தது. ‘ப்ளு ஜீன்ஸ் வொயிட் பேன்ட்’ அணிந்து கொண்டாள்.
மதிய உணவிற்கே ‘மால்’ சென்றுவிட்டனர். ‘சாப்பிட வாங்க’ என்று கனகா மேம் சொன்னது மறுக்க/மறக்க வேண்டிய ஒன்றாகிவிட்டது காதலில்.
போஃனிக்ஸ் மார்க்கெட் சிட்டி!
இருவரும் வந்தனர். உண்டனர்.
மணி 3:30!
சயனா விழிகள் இரண்டும் மனம் விரும்புகிறவனைத் தேடின.
காத்திருந்த நேரத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, விந்தையான, ஓர் ஒப்பற்ற உணர்வை உணர்ந்தாள் சயனா.
போஃனிக்ஸ் பார்க்கிங்!
ஒரு வெண்ணிற ராயல் என்பீல்டு சரேலென்று வந்து நிறுத்தப்பட்டது. சயனா எப்படி இரண்டு கால்களை ஊன்றி ஸ்டேண்ட் போடுவாளோ… அதே பாணியில் ஸ்டேண்ட் போடப்பட்டது.
வண்டி புதியது போல! பதிவு எண்கூட இன்னும் மாட்டவில்லை! காதலியின் தாக்கம்தான் இந்த ‘புது ராயல்’.
முழுவதும் கருப்பு நிறத்தில் ஆடை. இறங்கி நடந்து வந்தான் சக்திவேல்.
அவனைப் பற்றி என்ன சொல்ல? சில நேரங்களில் வார்த்தைகள் தேவைப் படாது ஒருவரை வர்ணிக்க. அவர்கள் வாழும் வாழ்க்கையே போதும்.
தன்னைச் சுமந்த தாய்க்காக சற்றும் தயங்காமல் தன் எதிர்காலத்தைச் சுமையாக்கிக் கொண்டவன். அது அவன் அகத்தின் அழகைச் சொல்லப் போதும்.
அவன் கண்களில் எழுத்துகள் எழுத இயலாத கவலைகள். எப்போதும் கொஞ்சம் கலங்கியே இருந்ததோ? அந்த கவல் கொண்ட கண்கள் ஊடே காதல் சேர்ந்த போது… கவர்ச்சி!!
இதையெல்லாம் தாண்டி அவனுக்கு சிறப்பினைத் தரும் விடயங்கள் இரண்டு.
ஒன்று கழுத்துப் பகுதியில் வரையப்பட்டிருந்த ‘டேட்டூக்கள்’.
காண்போரைக் கவர்ந்திழுத்திடும்.
மற்றொன்று அவனது பெயர்.
‘சக்தி’ என்று யார் அழைக்கும் போதும் அதில் ஏதோ ஈர்ப்பு உணரப்படும்.
‘எங்கே என் என்பீல்டு’ என்று விழி மொழி பேசியபடி வந்தான் சக்தி. சயனாவின் ராயலைப் பார்த்தவன், அதன் அருகில் சென்று நின்றான்.
இலட்சம் ஆசைகளுடன் ராயலை வருடிக் கொடுத்தான். கலங்கிய கண்களுடன், மெல்லிய கீற்றாய் முறுவல். – சயனா பார்க்கத் தவறவிட்ட… சக்தியின் காதல் முகம் இது.
சுவிங்கம் ‘பாக்கெட்’ ஒன்றினை வண்டி மேலே விட்டுவிட்டுச் சென்றிருந்தாள் சயனா. அதிலிருந்து ஒன்றை எடுத்துச் சுவைக்கத் தொடங்கினான் சக்தி.
சிறிது நேரம் சுவைத்தான். அவனால் முடியவில்லை. அந்தச் சுவை அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘எப்படி இவளால் இதை எல்லா நேரமும் சுவைக்க முடிகிறதோ?’ என்ற எண்ணம் வந்தது.
வாழ்க்கை முழுவதும் இந்தச் சுவையை ‘சகி’க்காக சகித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துச் சிரித்தான்.
‘சகிப்புத்தன்மை’ என்கின்ற போதும், முகம் சிரிப்புத்தன்மை கொள்கிறது என்றால்… அதெல்லாம் காதலின் பெரிய பெரிய சறுக்கல்கள்.
அதற்குமேல் தாமதம் கொடியது.
மால் உள்ளே வந்துவிட்டான். இரு கருவிழிகளும் இருபுறம் சென்று காதலியைத் தேடின. ‘இதயத்தில் இருக்கிறாள்’ என்று தெரியும். ‘இங்குதான் இருக்கிறாள்’ என்றும் தெரியும். ஆனாலும் பதட்டம் சக்திக்கு.
அது காதல்!!
சற்றுநேரத் தேடலின் முடிவில் பார்த்துவிட்டான் காதலியை!!
சட்டெனத் தோன்றியது ‘இன்னைக்கும் இதே கலர் டிரஸ்ஸா’ என்றுதான்.
சயனாவிற்குச் சற்று அருகில் சென்றான் சக்தி!
சாயங்கால வேளையில் சர விளக்குகள் ஒளி மழையில் சயனா காதலனைத் தேடிக் கொண்டிருந்தாள். “என்ன ரேவ், இன்னும் காணும்” – காதல் காத்திருப்பு தாங்க முடியாமல் சயனா விழிகள் அங்கே இங்கே என்று ஓடின.
“4:30 க்குத்தான் வரச் சொன்னான். நாம சீக்கிரமா வந்துட்டோம்” – ரேவ்.
மங்கிய விளக்கொளியின் அடியில் நின்ற சக்தியும், அவன் காதலும்… காதலி விழிகள் அலைப்புறுகின்றனவா? இல்லை அதில் அலையடிக்கின்றனவா? என்று ஆசையுடன் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தன.
விதவிதமாகப் புத்தகங்கள் அடுக்கிய கடைக்குள்… புதுப் புத்தக வாசனையுடன் சயனாவின் தேடல் தொடர்ந்தது…
“பேசாம, சக்தி.. சக்தினு சத்தமா கூப்பிட்டுப் பார்க்கவா ரேவ்” – காதல் முற்றிய நிலையில் இருந்த சயனா கேட்டாள்.
“ஆங்!!” – ரேவ், திரும்பி சயனாவை வாய்பிளந்து பார்த்தாள்.
“இல்ல, சும்மாதான் கேட்டேன்” என்று சயனா சமாளித்துவிட்டாள்.
சயனா குரலில் அவன் பெயர் ஒலித்ததை, புத்தக அலமாறியின் பின்புறத்தில் நின்ற சக்தி கேட்டிருந்தான்!
கோலக் குயிலோசை உனது
குரலின் இனிமை அடி!!
– சத்தமாய் சொல்லிக் கொண்டது சக்தி மனதும், அவன் காதலும்.
காதல் முற்றிய காதலியின் நிலையைக் கண்டவன், ‘ஐயோ சயனா’ என்று தன் தலையில் லேசாகத் தட்டிச் சிரித்துக் கொண்டான்.
இப்போது சயனா பூச்செண்டுகள் விற்கும் கடைக்குள் நின்றாள். விதவிதமான வண்ண மலர்கள்… அவைகளின் வாசனைகளுக்கு இடையே அவள் விழிகள் சக்தியைத் தேடின.
“சக்திய வார்ன் பண்ணதான வந்த?” – ரேவ், சந்தேகிக்க ஆரம்பித்தாள்.
“இல்ல. சக்திய பிடிச்சதாலதான் வந்தேன்” – சட்டென சொல்லிவிட்டாள் சயனா.
மலர்கொத்துகளுக்கு பின்னே மறைந்து நின்ற சக்தி… தனக்கானக் காதலை காதலியின் வாய்மொழி வார்த்தையாகக் கேட்டுவிட்டான்.
அடுத்த நொடி அவளுக்காக சிகப்பு வர்ண பூக்களால் ஆன அழகிய பூச்செண்டு வாங்கியும்விட்டான். அதில் காதலிக்காக ஏதோ சேதியும் எழுதினான்.
அவை காதல் கிறுக்கல்கள்!
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்!!
– சயனாவிற்காக மலர்ச்செண்டுடன் நிற்கும் சக்தியின் நிலை இதுதான்.
திடீரென்று அவள்… அவன் பார்வை எல்லைக்குல் விழவில்லை.
‘எங்கே அவள்?’ துடிதுடித்துவிட்டான் காதலன்… கலங்கின அவன் கண்கள்.
சற்றே சற்று நேரத்திற்குப் அவள் பிம்பம் அவன் இரு விழிகளையும் நிறைத்தது. காதலனது கலங்கிய கண்கள்… அதன்பின்தான் களிப்பைக் காட்டின.
புஷ் புஷ்ஷென்று மென்மையான பொம்மைகள் உள்ள ‘டெடி பியர்’ கடையில் சயனா கண்களும் காதலும் சக்தியைத் தேடின!
“என்ன சொல்ற?” – சயனா பின்னேயே வந்த ரேவ்.
“ப்ச், என்னயக் கொஞ்சம் தேட விடுறீயா? இங்கதான் பக்கத்துல சக்தி இருக்கிற மாதிரி தோனுது”
“அதெப்படி சொல்ற?”
“அது ஒரு ஃபீல். உனக்குப் புரியாது”
“ஃபீலா?!” – ரேவிற்கு சயனா தன்னை ஏமாற்றுகிறாள் என்று புரிந்தது.
ஆளுயர டெடியின் பின் நின்று… காதலியின் காதல் உள்ளுணர்வைக் கேட்டான் சக்தி! அது காதலனை
அன்னியம் ஆகநம்முள் எண்ணுவதில்லை – இரண்டு
ஆவியும்ஒன் றாகும்எனக் கொண்டதில்லையோ??
– என்று கொஞ்சம் காதல் கிறக்கம் கொள்ளச் செய்தது.
பளபளத்து மின்னிய வைரம், தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணக் கடைக்கு உள்ளே சயனாவின் பார்வை சக்தியைத் தேடிப் பரிதவித்து வந்தன!
“வா சயனா, நம்ம திரும்பிப் போகலாம்” – சயனா நிலை ரேவிற்கு புரிந்துவிட்டது.
“ரேவ், நானே எரிச்சல்ல இருக்கேன். பேசாம இரு”
“உனக்கென்ன எரிச்சல்”
“எவ்ளோ நேரம் வெயிட் பண்ண வைக்கிறான். ச்சே” – குறுங்கோபத்தில் அவள் நெற்றி சுருங்கி… முகம் சிவந்தது.
ஆபரணக் கடை வாசலில் ஒளிந்து நின்ற சக்தி… காதலியின் சிறு கோபத்தைக் கூடப் பொறுக்க முடியாமல்…
சற்றுன் முகஞ்சிவந்தால் – மனது
சஞ்சல மாகுதடீ!
நெற்றி சுருங்கக்கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ!! – என்று அரற்றிக் கொண்டான்.
சயனா, சக்தியை ஒவ்வொரு கடையிலும் போய்ப் போய்த் தேடி வந்தாள்!
அவள் அறியாமல் அவளைப் பின் தொடர்ந்தான் சக்தி!!
திடீரென்று ஒரு இடத்தில் நின்றாள்!
சுற்றும் முற்றும் பார்த்தாள்!
காதலன் வாசம் காதலியின் நாசியைத் துளைத்துச் செல்கிறதோ??
எதையோ யோசித்தவள், ஒரு கடையில் வைத்திருந்த கண்ணாடி முன் சென்று, ‘எந்தவித அலங்காரமும் இல்லையோ’ என்று தனக்குள் கேள்வி கேட்டாள்.
சுற்றிலும் நடந்த பெண்களைப் பார்த்தாள். அரிதாரம் எழுதிய முகங்கள். தான் வெற்றுக் காகிதமாக இருப்பது போல் உணர்ந்தாள். காதலனுக்கு இது பிடிக்குமா என்ற கேள்வி கண்களில் தெரிந்தது.
காதலியின் கேள்வி சக்திக்குப் புரிந்தது. ‘பிடிக்குமடி சகியே, சயனா’ என்று முணுமுணுத்துக் கொண்டான்.
“ரேவ், ரெஸ்ட்ரூம் போனும்” – சயனா.
“இப்பவா? நானும் வரேன்”
“இல்ல! நீ இங்கயே இரு” என்று சில பல கடைகளுக்குச் சென்று வந்தவள் வேகா வேகமாக ஓய்வறைக்குப் போனாள்.
அங்கே… முதல் முறையாகக் கண்ணாடி முன்பு நின்றாள்! சொப்பனத்திலும் நினைக்கவில்லை ஒப்பனை செய்வாளென்று!!
ஒப்பனைக்காக ஐந்து நிமிடம்தான் செலவிட்டிருப்பாள்.
அதுவே கடின உழைப்பு போல உணர்ந்தாள்.
வெளியே வந்தவள் நயனங்கள் நாணத்தைக் காட்டின!
புதிதாய் பூசப்பட்ட அரிதாரத்தால்!!
அவள் வெட்கம் பார்த்த சக்தி, ‘தேவையில்லாத வேலை சகியே சயனா’ என்று தலை சரித்து… ஒரு முகில் நகையை உதிர்த்தான்.
“எவ்வளவு நேரம் சயனா?” – சலித்துக் கொண்டே சயனாவைப் பார்த்தாள் ரேவ்.
துருவித்துருவிக் கேட்கப் படும் கேள்வியைக் காட்டிலும் வலிமை கொண்டது துளைக்கும் பார்வையே!!
ரேவ், சயனாவின் நாடியைப் பிடித்து உயர்த்தினாள்.
“ரேவ், விடு”
“என்ன இது? எதுக்கு இது?”
“அது… அது…”
“எதுக்கு இந்த மேக்கப்?”
“அது… இன்னைக்கு பர்த்டேல! அதான்”
“காலேஜிலிருந்து உன்கூட இருக்கேன். இப்படி என்னைக்கும் நீ பண்ணது இல்ல”
“ஆமா பண்ணதில்ல…”
“அப்புறம் இப்போ எதுக்கு?”
“சக்திக்காக”
காதலியின் வார்த்தையைக் கேட்ட சக்தி, பேச்சற்று நின்றான். தனக்காக ஒருத்தி, தன் ‘தனதை’ மாற்றுகிறாள் என்றாள்.
சயனாவின் தேடல் இன்னும் தொடர்ந்தது… வண்ண வண்ண நிறங்களில் மாட்டி விடப்பட்ட துணிமணிகள் நிறைந்த துணிக்கடையில்!
“ஏன் சயனா இப்படிப் பண்ற?”
“இப்ப நான் என்ன பண்ணிட்டேன் “
“நேத்து சக்திய லவ் பண்றீயானு கேட்டதுக்கு தெரியலனு சொன்ன. ஆனா இப்ப ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்க?”
“ஏன்னா? சக்திய கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்”
“ஓ!! ஒரு சிஐடி ஆபிஸரோட ப்யூச்சர் ஹஸ்பண்ட் இந்த மாதிரி ஒரு அக்யூஸ்ட்டா இருக்கனும்மா??”
“ரேவ், உனக்கு…”
சயனாவைப் பேச விடாமல் ரேவ் பேசினாள். “போதும்! நீ அமைச்சர மட்டும் வச்சி சொல்ற. பேங்க்ல, இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்ல இது தெரிஞ்சா?? என்ன நடக்கும் சக்திக்கு?? ஜெயில்ல போடுவாங்க!”
“ரேவ்! இப்படிப் பேசாத!!”
“எப்படிப் பேசாம இருக்க முடியும். சக்தி உன் லைஃப்ல இருந்தா, நம்ம பழகிற இடத்தில உன் மரியாதை என்னாகும்னு யோசிச்சியா?”
“நீ தேவையில்லாம பேசற ரேவ்…” என்றாள் சயனா எரிச்சலுடன்.
அலங்காரத் துணிப் பொம்மை மறைவில் நின்ற சக்தி… அனைத்தையும் கேட்டு, துடித்துக் கொண்டிருந்தான். ‘போதும்’ என்று திரும்பிச் செல்ல யத்தனித்தவன் கண்கள் கலங்கின.
கலங்கிய கண்கள் காட்டிய காட்சிகள் அனைத்தும் காதலியாய் தெரிந்தாள்!
பார்த்த இடத்தில்எல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி கண்ணம்மா!
– கண்ணீரில் சக்தியும்… அவன் காதலும் கரைந்தன!!
வாங்கிய பூச்செண்டை அந்தத் துணிக்கடைச் சிப்பந்தியிடம் தந்து.. சயனாவை நோக்கி கை காட்டி, ‘அங்க கொடுத்திடுங்க’ என்று சைகை செய்தான்.
இழப்பா? இருக்கா? என்று தெரியாத ஒரு பெரு மூச்சு அவனிடம்!!
விருவிருவென ‘பார்க்கிங்’ போனான். என்பீல்டு தெரிந்தது. அருகில் சென்றான்.
இலட்சம் ஏக்கங்களுடன் என்ஃபீல்டை வருடிக் கொடுத்தான்.
சக்திக்கு, தன் மேலேயே கோபம்.
காதலியை இப்படி ஒரு சூழ்நிலையில் நிறுத்தியிருக்கிறோம் என்று!
“சயனா” – என்று சொல்லி ராயலின் உச்சந்தலை மேல் இதழ் பதித்தான்.
ஒரு வெந்துளி வெளியேறி… வீழ்ந்து… நின்றது!
காத்திருப் பேனோடீ – இதுபார்
கன்னத்து முத்தம் ஒன்று!
– வெறுமையில் சக்தியும்… அவன் காதலும்.
இன்னும் துணிக்கடையில்தான் நின்றனர் ரேவும் சயனாவும்…
“ஏன் இப்படி பேசற? கோபப்பட வைக்காத ரேவ்” என்று சொல்லும் போது, கடைச் சிப்பந்தி வந்து பூச்செண்டு தந்தார்.
யார் தந்திருப்பார் என்று தெரியும் என்பதால், எந்தக் கேள்வியும் கேட்காமல் சயனா வாங்கிக் கொண்டாள்.
ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்துக் கொண்டு, “சந்தோசமா?” என்று பூச்செண்டைத் தூக்கி ரேவிடம் காட்டினாள். “போய்ட்டான். இதத்தான ரேவ் எதிர்பார்த்த” என்று சொல்லிவிட்டு பார்க்கிங் பகுதிக்கு வந்துவிட்டாள்.
உடனே ரேவ் கனகா மேமை கைப்பேசயில் அழைத்தாள்.
“ஹலோ ரேவ், ஏன் லஞ்ச்க்கு வரல?”
“மேம், அத விடுங்க. நம்ம கேஸ குளோஸ் பண்ணிடலாம்”
“ஏன் திடீர்னு?”
“மேம், சயனா மாறவே இல்ல” என்று சயனா நடந்து கொண்ட விதத்தைச் சொன்னாள்.
சற்று யோசித்துவிட்டு கனகா மேம், “நாளைக்கு ஏர்லி மார்னிங் அமைச்சர மீட் பண்ண முடியுமானு கேட்கிறேன். அவர்கிட்ட எல்லாம் சொல்லிடலாம். ரேவ், நீ சக்திவேல் பத்தின டிடெயில்ஸ் எடுத்து வச்சிக்கோ” என்றார்.
“ஓகே மேம் “
இருபுறமும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
பார்க்கிங்கில்….
சிந்தனை முழுவதும் அங்கனை நிரம்பியிருந்தாள்… ஒரு தூணின் மறைவில் நின்ற சக்திக்கு.
பார்க்கிங் வந்த சயனா… தன் ராயல் நிறுத்திய இடத்தை நோக்கி நடந்தாள்.
யோசனை முழுவதும் சக்தியின் வாசனை. காரணம்… சயனாவின் கரங்களில் குடிகொண்டிருந்த சக்தி தந்த பூச்செண்டு.
அதில்…
பிறந்தநாள் வாழ்த்துகள்!!
சயனா சக்திவேல்.
– என்று எழுதியிருந்தான்.
கண்ணீர் சுரக்காமல் கவலைக் காட்ட முடியுமா? சயனா கண்கள் காட்டின!
சயனாவின் பார்வையைத் தாங்க முடியவில்லை சக்திக்கு!!
வண்டியை உயிர்ப்பிக்க சாவியைப் பொருத்தப் போனாள். சக்தி சிந்திச் சென்ற வெந்துளி, அவள் கண்களில் தெரிந்தது. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள்.
புரிந்தது!
அவன், தன்னை பின் தொடர்ந்திருக்கிறான். ‘இங்குதான் இருக்கின்றான்’ என்று தோன்றியது. ‘இதயத்தில் இருக்கின்றான்’ என்றும் தோன்றியது.
இந்தக் காதலை நாம் இழக்கப் போவதில்லை! ‘என்றும் இது நிலைத்து இருக்கும்’ என்பது போல் இதழ்களை அந்த வெந்துளி மேல் வைத்தாள்!!
அதைப் பார்த்த சக்திக்கு, ஓடிச்சென்று அவளை அணைத்திட மனம் துடித்தது!
அடி கண்ணே எனதிருகண் மணியே – – உனைக்
கட்டித் தழுவ மனம் கொண்டேன்!
– தனிமையில் சக்தியும்… அவன் காதலும் புலம்பின.
சயனா சென்றுவிட்டாள்!
தன் ஆவல் மொத்தமாய் கவல் ஆன வருத்தத்தில் சக்தி நின்றான்!!
சயனா
காதல் சொல்லிக்
காயம் தேற்றிட
வந்தேனடீ…
காதலும் காயமாய்
போனதடீ!!
– காயப்பட்டு சக்தியும், அவன் காதலும் நின்றன!!!
