Kathambari Novels
அத்தியாயம் – 13
ராஜா வீடு!
தன் தந்தையும் நுழைவுத் தேர்வு முறைகேட்டிற்குத் துணை போயிருக்கிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்து அமைதியாக இருக்கிறான்.
கட்சித் தலைவர் அழைத்த போது, அழைப்பை ஏற்று பேசினான். அதன்பின் கட்சியின் உறுப்பினர்கள், அவன் நலன் விரும்பிகள் அழைத்தார்கள். யார் அழைப்பையும் ஏற்காமல், யாரிடமும் பேசாமல் இருக்கிறான்.
இக்கணத்தில், தன் அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த அவனும் கவியும் இருக்கும் புகைப்படத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.
புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்கள் கலங்கின. கவியுடன் பேசிய நினைவுகள் எத்தனையோ இருந்தாலும், ‘உங்ககூட நிக்கிறேனே’ என கடைசியாக அவள் பேசியது, நெஞ்சத்தை நிந்தித்துக் கொண்டிருந்தது.
‘கவி’ என்று உதடுகள் முணுமுணுத்ததும், கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
அப்படியே அசையாமல் இருந்தவனுக்கு, அந்த விபத்துச் சம்பவம் கண்முன் வந்ததும், பெற்றவரை நினைத்தான். ‘மினிஸ்டர் ஆகிறதுதான் உங்க கனவு. அது நிறைவேறதுக்கு முன்னாடி இப்படி ஆயிட்டே’ என்று வருந்தினான்.
மேலும், ‘அப்பா இப்படி-ன்னு தெரியாதா-ம்மா?’ என்று கேள்வியும் கேட்டுக் கொண்டான்.
மீண்டும் சிலபல நிமிடங்கள் அப்படியே இருந்தவன், வளர்த்தவரிடம் நடந்து கொள்ளும் முறையை நினைத்தான்.
‘தெரிஞ்சே உங்களை கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கேன்! இதுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனா எனக்கு வேற வழி தெரியலை’ என்று கவலைப்பட்டான்.
இப்படித் தனியே உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தான். இன்று மட்டுமல்ல, அந்த விபத்திற்குப் பின்னான அவன் தனிமைப் பொழுதுகள் இப்படித்தான் கழிகின்றன.
**********
அடுத்தநாள், மாறன் பேச்சின் எதிரொலியாக தமிழ்நாட்டின் சில இடங்களில், ‘நுழைவுத் தேர்வு முறைகேடு குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என மாணவர்கள் போராட்டம் செய்தனர்.
அவர்களுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆதரவாக இருந்தனர். இரண்டு மூன்று நாட்கள் இது தொடர்ந்தது.
ஆறு நாட்களுக்குப் பின், ‘முறைகேட்டில் தொடர்புடையவர்கள் என்று விசாரணை ஆணையத்தால் வெளியிட்டிருந்த பல்கலைக்கழக அலுவலர்கள் அனைவரும் பதவிநீக்கம் செயப்படுகிறார்கள்’ என்ற அறிவிப்பை பல்கலைக்கழக துணைவேந்தர் வெயிட்டியிருந்தார்.
இதற்குமேலும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பல்கலைக்கழகம் மீது மாணவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய்விடும் என்ற காரணத்தினால், அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, ‘குற்றவாளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்பும், நடவடிக்கை எடுக்க ஏன் காலதாமதம்? ஏன் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை?’ என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
********
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம்!
அன்றைய அலுவல்களைப் பார்த்திருந்தவன், அப்படியே இருக்கையின் பின்புறமாகச் சாய்ந்து கொண்டான்.
அன்று அந்த நிருபர் கேட்ட கேள்விகள்… அதற்கடுத்த நடந்த விவாதங்கள்… மாணவர்களின் போராட்டங்கள்… பல்கலைக்கழகத்தின் முடிவுகள்… இன்று நீதிமன்றத்தின் கேள்விகள்… என எல்லாம் வரிசையாக ஓட்டிப் பார்த்தான்.
ஆரம்பத்திலிருந்து இந்த முறைகேடு சம்பந்தமாக நடந்த அனைத்தையும் நினைவிற்குக் கொண்டு வந்தான். அது அவனுக்கு யாரோ தன்னிடம் உதவி கேட்டது போல்… யாரோ தன்னை முன்னிறுத்தியது போல்… யாரோ தனக்கு உதவி செய்வது போல்… தோற்றம் தந்தது.
சற்று யோசித்தவன், அலுவலக உதவியாளரை அழைத்து சில விடயங்கள் கூறி, “எனக்கு இந்த டீடெயில்ஸ் வேணும்” என கேட்டு அனுப்பினான்.
மூன்று நாட்கள் கழித்து… ஏற்கனவே இந்த நுழைவுத் தேர்வு முறைகேடு வழக்கில் ராக்கெட் லீடரும், சில இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இடைத்தரகர்கள் தேடிப் பிடித்து கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த வழக்கை விசாரணை செய்ய முயன்ற ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்களின் சாலை விபத்திற்குக் காரணமான ஒன்பது பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அன்று ஊடக விவாதங்கள் எல்லாம், ‘இந்த கைது நடவடிக்கை தொடருமா?’, ‘அதிகாரத்தில் இருப்பவர்களை விட்டுவிட்டு, அடிமட்டத்தில் இருப்பவர்களை கைது செய்கிறார்களா?’ என்ற பொருள்களில் இருந்தன.
ஜெகதீஷின் விபத்து வழக்கு… முறைகேட்டிற்கும் ஜெகதீஷிற்கும் தொடர்பு இருப்பதால், அவரது விபத்து வழக்கு விசாரணை முக்கியமடைந்திருந்தது.
மேலும் ஒன்றரை வருடங்கள் பிறகு விசாரணையில் முன்னேற்றம் இருந்தது. விபத்து ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த டேங்கர் லாரியின் ஓட்டுநர் பிடிபட்டிருந்தான். அவனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தியாகுவின் விபத்து வழக்கு… விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனருக்கு ஓரளவு காயங்கள் சரியானதால், அவனிடம் காவல்துறையினர் விசாரித்திருந்தனர். மேலும் அவன் கைகாட்டிய ஆட்களையெல்லாம் விசாரித்து வருகின்றனர்.
இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக அலுவலர்கள் ‘ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்’ காவலர்களால் கைது செய்யப்பட்டனர்.
இன்னும் இரண்டொரு நாளில் முறைகேட்டிற்குக் காரணமான அமைச்சர்கள் கைது செயப்படுவார்கள் என்றொரு செய்தி உலாவியது.
இதன்பின் என்ன நடக்கும்? சிபிஐ விசாரணை இருக்குமா? வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை இருக்கும்? என்ற தலைப்புகள் ஊடங்களின் பேசுபொருளாக இருந்தன.
மக்கள், மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என அனைவர்க்கும் ஒரு திருப்தி வந்தது.
ஜெகதீஷின் விபத்து வழக்கில், டேங்கர் லாரி ஓட்டுனரைக் காவல்துறையினர் விசாரித்ததில் முன்னாள் அமைச்சர் லிங்கம் சொன்னதன் பேரிலே விபத்து நடந்திருக்கிறது என்று தெரிய வந்திருந்தது.
அவன் அப்பருவராக மாறி வாக்குமூலம் அளித்திருந்தாலும், சில கைப்பேசி ஆதாரங்கள் கிடைத்தாலும் இந்த வழக்கு தொடர்பாக லிங்கத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவரிடமும் விசாரணை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
தியாகுவின் விபத்து வழக்கில்... கார் ஓட்டுனர் கைகாட்டிய ஆட்களிடம் காவல் துறையினர் விசாரித்ததில், லிங்கம், ராகினி சொன்னதாலே தியாகு விபத்து நடந்திருக்கிறது என்று தெரிந்தது.
மேலும் சில வலுவான ஆதாரங்கள் கிடைத்ததும், வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
அடுத்து ஐந்து நாளுக்குப் பின் செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா! கைப்பேசியில் கவனத்தை வைத்துக் கொண்டிருந்த மகனிடம், “மாறன்! பிரேக்பாஸ்ட்க்கு டைம் ஆகுது” என்று திலோ மெதுவாக அழைத்தார்.
“இதோ” என்று வந்து அமர்ந்தவனிடம், “கிளம்பலயா? ஃபோன்ல என்ன பார்த்துகிட்டு இருக்க?” என்று கேட்டார்.
மாறன் சாப்பிட்டுக் கொண்டு, “சுடருக்கு ஃபோன் பண்றேன். அட்டன் பண்ண மாட்டிக்கிறா!? இடையிலே கொஞ்ச நாள் ஃபோன் பேசாம இருந்தேன்” என்று அப்பாவின் மறைவிற்குப் பின்னரான நாட்களைச் சொன்னவன், “பட் அத அவ புரிஞ்சிப்பா. இப்போ ஏன் எடுக்க மாட்டிக்கிறான்னு தெரியல” என்றான்.
“சார்” என்ற காசியின் குரல் முன்னறையில் கேட்டது.
“இருங்க ம்மா. காசிதான். பார்த்திட்டு வர்றேன்” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த மாறன் எழுந்து வெளியே சென்றான்.
அவன் சென்றதும், ‘இன்னும் அந்தப் பொண்ண இவன் மறக்கலையா?’ என்று நினைத்த திலோ, மாறனின் கைப்பேசியிலிருந்து சுடரின் எண்ணை எடுத்துக் கொண்டார்.
இதே நேரத்தில் முன்னறைக்கு வந்து, “என்ன காசி?” என்று கேட்டதும், “சார்! இன்னைக்கு மினிஸ்டர்ஸ் அரெஸ்ட் இருக்கலாம்னு சொல்லி, உங்களுக்கு எக்ஸ்ட்ரா செக்யூரிட்டி அரேஞ் பண்ணியிருக்காங்க” என்றார்.
எட்டி வெளியே பார்த்தவன், “சரி வெயிட் பண்ணுங்க. வர்றேன்” என மீண்டும் வந்தவனிடம், “காஃபி எடுத்திட்டு வர்றேன்” என திலோ எழுந்து சென்றார்.
அலுவல் பார்ப்பது, அம்மாவிடம் பேசுவது என்று இருந்தாலும், சுடருடன் பேச உள்ளுக்குள் தவித்தான். ‘ஒருதடவை ஃபோன் அட்டன் பண்ணு சுடர். எனக்கு உன்கூட பேசணும்” என்று மனதில் சொல்லிக் கொண்டே இருந்தான்.
மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்த்தான். இந்த முறையும் அவன் அழைப்பு ஏற்கப்படவில்லை. ‘ஏன்? என்னாச்சு சுடர்? நீ என்னதான் நினைக்கிற?’ என்ற கேள்விகளுக்குளே குழம்பி நின்றான்.
நடக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தவனுக்கு… இனிமேல் அவளிடம் பேச முடியாமலே போய்விடுமோ என்ற பயம் வந்தது.
‘அப்படி நடக்காது. பேசிடலாம். பேசிடலாம். எப்படியாவது பேசிடலாம்’ என்று உரு போட்டுக் கொண்டே இருந்ததால், ஏற்கனவே இதே போல் பயத்தை அனுபவித்த நாளை உள்ளம் நினைத்துப் பார்த்தது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 12
கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.
அன்று மாறனுக்கு கடைசித் தேர்வு. இன்று சுடரிடம் பேசப் போகிறேன் என்ற எண்ணம் காலையில் இருந்தே அவன் நாழிகைகளை நாட்டியமாட வைத்துக் கொண்டிருந்தது.
தேர்வு முடிந்ததும் சுடரைத் தேடி, அவள் வகுப்பறை இருக்கும் கட்டிடத்திற்கு ஓடினான். சில மாணாக்கர்கள் நின்றனர். மாறனின் கண்கள் சுடர் முகத்தை தேடின. அவள் அங்கில்லை என்பதைச் சற்று நேரத்தில் தெரிந்து கொண்டன.
உடனே, ‘எங்கே போனாள்?’ என்று தவித்து நின்றான். பின், ‘தேர்வு முடிந்ததும் விடுதிக்குச் சென்றிருப்பாளோ?’ என்ற கேள்வி வந்ததும், விடுதி நோக்கி ஓடினான்.
முதலில் தயங்கி… பின்பு அங்கிருந்தவரிடம், ‘சுடர் ஃபர்ஸ்ட் இயர் ஜர்னலிசம். பார்க்கணும்’ என்று சொல்லிவிட்டான். சில நொடிகளில் அந்த ஒருவர் வந்து, ‘அப்படி யாரும் ஹாஸ்டல்ல இல்ல’ என சொல்லிச் சென்றார்.
‘சுடர் ஹாஸ்டல் கிடையாதா?’ என்று முணுமுணுத்தவன், அவள் வகுப்பருகே நின்றவர்களிடம் கேட்கலாம் என நினைத்து வகுப்பு நோக்கி ஓடினான்.
அங்கே இக்கணத்தில் யாரும் நிற்கவில்லை. ‘கிளம்பியிருப்பாங்களோ?’ என்ற கேள்வி வந்ததும், வாகன நிறுத்துமிடம் நோக்கிப் போகையில், “மாறன்! எங்க போற?” என்று ஆஷிக்கின் குரல் கேட்டது.
கேள்விக்குப் பதிலளிக்காமல் நின்றவன் அருகில் வந்து, “உன் அம்மா-அப்பா வந்திருக்காங்க” என ஆஷிக் சொல்ல, “சொல்லவேயில்ல” என ஆச்சரியங்கள் அடங்கிய குரலில் சொன்னான்.
“சர்பிரைஸ்னு சொன்னாங்க. வாடா” என்றதும், வேறுவழியில்லாமல் மாறன் பெற்றோர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
மகனைப் பார்த்ததும், “மாறன்” என்று சந்தோஷமாக அழைத்தபடியே திலோ அவன் அருகில் வந்து நின்று கொண்டார்.
“எக்ஸாம் எப்படி எழுதிருக்க?” என தியாகு கேட்க, “இதெல்லாம் கேட்கணுமா தியாகு?” என்று மகனின் கல்வித் தகுதியைத் தெரிந்த திலோ பெருமைப் பட்டுக்கொண்டார்.
புன்னகைத்தபடியே, “என்ன திடிர்னு வந்திருக்கீங்க?” என்று கேட்டான்.
“உன்னைக் கூட்டிட்டுப் போகத்தான். டெல்லில ஒரு கோச்சிங் இன்ஸ்டிடியூட் பத்தி என் பிரண்ட் சொன்னான். ஸோ ஃபர்ஸ்ட் அங்கே போய் பார்க்கிறோம். அதுக்கப்புறம் ஜார்கண்ட் போகலாம்” என்றார்.
இதைச் சற்றும் எதிர்பாராதவன், சுடரிடம் பேச வேண்டுமென்ற தவிப்பில், “ஒரு ஒன் ஆர் டூ டேய்ஸ்க்கு அப்புறமா போகலாமே ப்பா?” என்று கேட்டுப் பார்த்தான்.
“ஏன்? ப்ரண்ட்ஸ் ஏதாவது பிளான் பண்ணியிருந்தீங்களா?” என ஆஷிக்கிடம் கேட்டதற்கு, “அப்படி எதுவும் இல்லையே அங்கிள்” என்று சொல்லி, ஆஷிக் மாறனைப் பார்த்தான்.
அவன் கல்லாய் நிற்பதைப் பார்த்த தியாகு, “இப்படி நிக்கிற மாறன்? போய் பிரண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு வா” என்றதும், “வாடா” என ஆஷிக் அழைத்துச் சென்றான்.
விடுதிக்கு வரும் பொழுதில்… லக்கேஜ் எடுக்கும் பொழுதில்… நண்பர்களிடம் விடைபெறும் பொழுதில்… என்று ஒவ்வொரு நொடியும் சுடரை நினைத்துக் கொண்டே இருந்தான்.
அன்றே பேசியிருக்கலாமோ? என தோன்றியது. தொடர்பு கொள்ள கைப்பேசி எண்ணும் இல்லையே!? இனி எப்பொழுது பேச முடியும்? என்ற ஏக்கம் வந்தது. பேசவே முடியாமல் போய்விடுமோ? என்ற பயம் வந்தது.
கடைசியில் இன்று எதுவும் செய்ய முடியாது என்று புரிந்தது. வேறு வழியில் முயற்சிக்க வேண்டும் என்று மனமேயில்லாமல் பெற்றோருடன் கிளம்பிச் சென்றான்.
யாழோவியம் அத்தியாயம் – 13 தொடர்கிறது…
காஃபி கொண்டு வந்த திலோ, “என்ன மாறன் சாப்பிடலையா?” என்று கேட்க, நினைவிலிருந்து மீண்டவன், “இதோ ம்மா” என ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு, காஃபியை குடித்துவிட்டுக் கிளம்பினான்.
போகின்ற மகனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
***********
லிங்கம் வீடு!
லதா… தான் வளர்த்த பையன் குடும்பத்தை இழந்து நிற்பதற்கு காரணம், தன் கணவர்தான் என்பது அவரை புரட்டிப் போட்டிருந்தது. ‘என்ன மனிதர் இவர்?’ என்ற எண்ணத்தை உருவாக்கியிருந்தது.
அதுவரை கணவரிடம் பேசாதிருந்தவர், இது தெரிந்ததும் கணவரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தார்.
‘ராஜாக்கு ஏன் இப்படி பண்ணீங்க?’ ‘இப்படி பண்ணி எப்படி மனசு வந்துச்சி?’ ‘இவ்ளோ பண்ணிட்டு, எப்படி குற்றவுணர்ச்சியே இல்லாம இருக்க முடிஞ்சது?’ என்று கேட்டு, லிங்கத்திடம் திட்டும் அடியும் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
சுடர்… தியாகுவின் விபத்து வழக்கு விசாரணை செல்லும் விதத்தைப் பார்த்து, மாறனை எதிர்கொள்ளவும், அவனிடம் பேசவும் மனம் ஒருமாதிரி இருந்தது. ஆதலால்தான் அவன் அழைப்புகளை ஏற்காமல் இருக்கிறாள்.
ராஜாவிடமாவது இதைப் பற்றிச் சொல்லலாம் என்றால், குடும்பத்தை இழந்து அவன் இப்படி நிற்பதற்கு காரணம் லிங்கம் என்பது, அவளைப் பேசவிடாமல் கட்டிப்போட்டது
‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் சுவரையே வெறித்துப் பார்த்திருந்தவள், “சுடர்” என்ற லதாவின் அழைப்பு கேட்டு விழியசைத்தாள்.
அவளருகே வந்து லதா அமர்ந்ததும், “ம்மா! என்ன?” என்றதும், “எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. பேசாம ராஜா வீட்டுக்குப் போயிடலாமா?” என ஏக்கமும் தயக்கமும் நிறைந்த குரலில் கேட்டார்.
உடனே, “எப்படிப் போக? இன்னைக்கு ராஜாண்ணா இப்படி இருக்கிறதுக்கு காரணம், இந்த வீட்ல இருக்கிற ஒருத்தர். அப்புறம் எப்படி அவங்க முகத்தில முழிக்க முடியும்?” என்று கேட்டு, சுடர் கவலைப்பட்டாள்.
சற்று நொடிகள் இருவருமே பேசாமல் இருந்தனர்.
எதையோ யோசித்த லதா, “ஏன் சுடர், உங்கப்பா பண்ணதுக்குத்தான் என்கூட பேசாம இருந்தானா? அப்படின்னா உன்கிட்ட மட்டும் பேசினானே? அது ஏன்?” என்று குழப்பம், வலி நிறைந்த குரலில் கேட்டார்.
‘அதானே ஏன்?’ என யோசிக்கையில், ‘ஆனா இப்போதான இதெல்லாம் தெரிய வருது. ராஜாண்ணா முதலருந்தே அம்மாகூட பேசாம இருந்தாங்களே? அது ஏன்?’ என்ற கேள்வி வந்ததும், தலை விண்விண்ணென்று வலித்தது.
“எனக்கு மனசே சரியில்லை சுடர். ராஜாவைப் பார்க்கணும் போல இருக்கு. அவன்கூட பேசணும்” என்று லதா புலம்பி அழுதார்.
அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது. அவளுமே, மாறன்-ராஜா இருவரின் அன்பிற்குரியவர்கள் இழப்பிற்குக் காரணம் தன் அப்பா என்ற உண்மையில் அவர்களிடம் ‘எப்படிப் பேச?’ என்று உழன்று கொண்டிருந்தாள்.
அதுமட்டுமல்லாமல், ‘ஊழல்வாதியின் மகள்’ என்ற அடையாளத்தோடு வெளி உலகத்தை எதிர்கொள்ள வேண்டியதை நினைத்ததும் கண்கள் கலங்கியது.
இருந்தும், “ம்மா! அழாதீங்க. அழுது இனி ஒன்னும் ஆகப்போறதில்லை” என கண்ணீரைத் துடைத்து, நிறைய பேசி அவரைச் சமாதானப்படுத்தினாள்.
மேலும், “இப்படி அழுதுகிட்டே இருக்காதீங்க. கொஞ்ச நேரம் இங்க படுங்க” என்று எழுந்ததும், லதா கட்டிலில் படுத்துக்கொண்டார்.
சுடர், அம்மா பக்கத்தில் அமர்ந்ததும், “இனிமே நம்ம ராஜா நம்மகூட பேசவே மாட்டானா? நினைச்சாலே ஒருமாதிரி இருக்கு” என்று வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டே இருந்தார்.
சுடர் ஆறுதல் கூறும் நிலைமையில் இல்லை. ஆதலால் அமைதியாக அம்மா தோளைத் தட்டி மட்டும் கொடுத்தாள். அதுவே ஆறுதல் போல இருந்ததோ? என்னவோ? லதா கண்ணயர்ந்தார்.
சுடரும் கண்மூடிக் கொண்டாள். வெகுநேரத்திற்குப் பின், கைப்பேசி சத்தம் கேட்டு இமை திறந்தாள். திரையில் புதிய எண்ணைக் கண்டதும், அழைப்பை ஏற்று, “ஹலோ” என்றாள்.
“நான் மாறன் அம்மா பேசறேன்” – திலோ.
இதை எதிர்பார்க்கவே இல்லை என்பதால், “ம்ன்” என்ற சத்தத்தில் கேள்வி எழுப்பியிருந்தாள்.
“நான் மாறன் அம்மா திலோ பேசறேன்” என அழுத்தமாகச் சொன்னதற்கும், “ம்ம்!” என்றாள்.
“நீங்க…?” என திலோ சந்தேகமாய் கேட்டதும், “ம்ம், ஓவியச்சுடர்தான்” என உறுதிப்படுத்தினாள்.
“ஓகே! இன்னைக்கு நாம மீட் பண்ண முடியுமா?” – திலோ.
யோசித்தாள். மாறனை எதிர்கொள்ளவே கூச்சமாக இருந்தது. இதில் இவரை எப்படி எதிர்கொள்ள என்று நினைத்தவள், “ஏன்? எதுக்கு?” என்று கேட்டாள்.
“பேசணும்” – திலோ.
‘இவர் என்னிடம் என்ன பேச வேண்டும்!?’ என்ற கேள்வி வந்தாலும், “அம்மா கொஞ்சம் டிப்ரஷ்டா பீல் பண்றாங்க. ஸோ முடியாது” என்று மறுத்து பதில் சொன்னாள்.
“கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே?” – திலோ.
இதை எப்படியாவது தவிர்த்துவிடவே எண்ணி, “உங்களுக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியல. எனக்கு ஒரு அட்டாக் நடந்துச்சு. கைல காயம் பட்டிருந்தது. அது இன்னும் சரியாகலை. ஸோ, என்னால ட்ரைவ் பண்ண முடியது” என்றாள்.
“ட்ரைவர் யார்கூடவாது வரலாமே?” – திலோ.
“இங்க பாருங்க. நீங்களும் நானும் பப்ளிக் பிளேஸ்ல மீட் பண்ணா, மாறா-க்கு ப்ராபளம் வர சான்ஸ் இருக்கு. நான் அவனுக்காக யோசிச்சிதான் பேசறேன். புரிஞ்சிக்கோங்க”
“நான் என் பையனுக்காகத்தான் பேசவே போறேன்” என்றதும், சுடர் முகம் மாறியது. ‘என்ன செய்ய?’ என்று குழம்பி மௌனம் காட்டினாள்.
கடைசியில், “இட்ஸ் எ ரெக்வெஸ்ட். ப்ளீஸ்” என்று கெஞ்சியதும், ‘ஐயோ’ என்று கண்மூடித் திறந்தவள், அதற்கு மேல் மறுக்க முடியாமல், “ஓகே. சென்னை செங்கல்பட்டு ரோட்ல மீட் பண்ணலாம்” என்றாள்.
“தேங்க்ஸ்” என்று திலோ சொன்னதும், சுடர் அழைப்பைத் துண்டித்தாள்.
கைப்பேசியை வைத்ததும், தூங்கிக் கொண்டிருந்த லாதவைப் பார்த்தாள். ‘அம்மாவிடம் சொல்லவா? வேண்டாமா?’ என மனதிற்குள் ஒரு போராட்டமே நடந்தது.
அழுது அழுது அயர்ந்து போய் தூங்குபவரைப் பார்த்தவள், ‘வேண்டாம்’ என்று முடிவெடுத்தாள். பின் வேலைக்காரர் ஒருவரை அழைத்து, ’வெளிய போறேன். அம்மாவைப் பார்த்துக்கோங்க. கொஞ்ச நேரத்தில வந்திடுவேன். எந்திரிச்சா சொல்லிடுங்க’ என்று கூறிவிட்டு, திலோவைப் பார்க்க கிளம்பினாள்.
***********
ராகினி கட்சி அலுவலகம்!
முறைகேட்டில் தொடர்புடைய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியைத் தகுதி நீக்கம் செய்யுமாறு கட்சித் தலைமையின் சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவை ஆய்வு செய்த சபாநாயகர் அவர்கள் மூவர் பதவியைத் தகுதி நீக்கம் செய்வதாகவும், இந்த உத்தரவு இன்றிலிருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்தச் செய்திதான் இன்று காலையிலிருந்து ஊடகங்களில் ‘பிரேக்கிங் நியூஸாக’ ஒளிபரப்பட்டது.
தலைமைச் செயலகம், முதலமைச்சர் அறை!
ராகினி!
நுழைவுத் தேர்வு முறைகேட்டின் இரண்டாவது முக்கிய குற்றவாளி! சுடரை தாக்குவதற்கு ஆள் அனுப்பியது, லிங்கத்துடன் சேர்ந்து தியாகு விபத்தை திட்டமிட்டது இவர்தான்!!
முதலமைச்சரைச் சந்தித்து, ராகினி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுக்க வந்திருந்தார்.
ராகினி முகம் கருத்திருந்தது. ஒரு அகங்காரம், அதிகாரம், அடங்கா தன்மை எதுவுமில்லை. முதல்வர்தான், எனினும் கட்சித் தலைவரும் அவரே என்பதால் ராகினியிடம் சில விடயங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
பேச்சு தொடர்கிறது…
“அரெஸ்ட் வேண்டாம். அது நல்லா இருக்காது. நீங்களே கோர்ட்ல சரண்டர் ஆகிடுங்க” என்று தலைவர் சொன்னதும், “ம்ம்ம்” என்று அமைதியான குரலில் ஒத்துக் கொண்டார்.
“மேற்கொண்டு விசாரணை… ம்ம்” என யோசித்தவர், “எவிடென்ஸ் எல்லாம் கிளியரா இருக்கு. பெரிசா எதும் செய்ய முடியாது” என்று முடித்துவிட்டார்.
முகத்தில் கடுப்புடன், “ப்ச்! எல்லாத்துக்குமே அந்த கலெக்டர்தான் காரணம் தலைவரே!! இன்னும் அவன் மேல இருக்கிற கோபம் போகல” என்று ராகினி பொருமினார்.
“ரூல்ஸ்படியே போறான்னு கட்சி ஆளுங்களுக்கும் அவன் மேல ஒரு அதிருப்தி இருக்கு. பார்க்கலாம்… என்ன செய்யலாம்னு?” என நிதானமாகப் பேசினார்.
“உடனே ஏதாவது செய்ங்க தலைவரே?” என அவன் மேலிருக்கும் ஆத்திரங்கள் போகாத நிலையில் பேசினார்.
“இந்த நேரத்தில நாம என்ன செஞ்சாலும், அது பழிவாங்கிற மாதிரி இருக்கும். கொஞ்ச நாள் போகட்டும். என்ன செய்யலாம்னு பார்க்கிறேன்” என்றதும், தன் நிலையை நொந்தபடியே ராகினி கிளம்பிச் சென்றார்.
அவர் சென்றதும், இப்படி ஒரு ஆட்சியர் இருப்பது ஆட்சிக்கு நல்லதில்லை என தெரிந்தது. ஒன்று பணிமாற்றம் செய்ய வேண்டும். இல்லை வாய்ப்பு வந்தால் அதைப் பயன்படுத்தி, மக்களுக்கு அவன் மேலிருக்கும் நல்லெண்ணத்தைக் குலைக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்.
மேலும் இந்த முறைகேட்டினால், ஆட்சிமேல் மக்களுக்கு இருக்கும் அதிருப்தி விலகி, இழந்த செல்வாக்கை எப்படி மீட்டெடுக்க வேண்டும்? என ஆட்சியின் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்காக யோசிக்க ஆரம்பித்தார்.
லிங்கத்தின் கட்சி அலுவலகத்தில்!
லிங்கம்!
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்!
முதிர்ந்த தேர்ந்த அரசியல்வாதி என அறியப்பட்டவர். இன்று நுழைவுத் தேர்வு முறைகேட்டின் ஆரம்பப்புள்ளி, முக்கியப்புள்ளி, முதலாவது குற்றவாளி என்று அறியப்படுகிறவர்
ராகினியுடன் பேசிய ஆண்குரலுக்குச் சொந்தக்காரர்! ஆட்சி மாற்றம் நடந்து, கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட ராகினி, லிங்கம் முன் செய்த ஊழலை வெளிக்கொண்டு வராமல், முறைகேட்டை அப்படியே தொடர்ந்தார்.
அதனால்தான் எதிர்கட்சியாக இருந்தாலும், ‘இதிலிருந்து தப்பிவிட வேண்டும்’ என்ற எண்ணத்தில், லிங்கம் இத்தனை நாள் ராகினியுடன் பேசி, திட்டங்கள் தீட்டி வந்தார். ஆனால் அவை எதுவும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.
தியாகு… ஜெகதீஷின் விபத்துகளைத் திட்டமிட்டது லிங்கம்தான். இந்த ஊழல் தொடர்பாக நடந்த கொலைகளில் தொண்ணூறு சதவீதம், இவர் சொன்னதன் பேரில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அது அவருக்கு ஒரு கொடூரமான பிம்பத்தை பொதுமக்களிடம் உருவாக்கியிருக்கிறது.
தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இவரது அரசியல் பாதை ஆரம்பித்த இடத்திலிருந்து, முறைகேட்டில் முடிந்தவரையிலான கதையை ஒளிபரப்பி வருகின்றனர்.
கைதிற்காக காவல்துறையிடம் இருந்து சம்மன் வந்திருந்ததால், அகங்கார, அதிகார, அடக்கமுடியாத ஆண்குரலுக்குச் சொந்தக்காரர், இப்பொழுது அயர்ந்து போய் இருந்தார்.
சென்ற தேர்தலில் லிங்கத்தின் கட்சி தோல்வியைத் தழுவியிருந்தாலும், அவர் வெற்றியே பெற்றிருந்தார். அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பற்றிக் கட்சித் தலைவருடன் பேச, கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
தலைவர் முடிவிற்கு லிங்கம் ஒத்துக் கொள்ளாமல் இருந்தார். கட்சியில் அவர் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால், எடுக்கும் முடிவு கட்சியைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற கவனத்துடன் தலைவர் பேசி வருகிறார்.
பேச்சு தொடர்கிறது…
“லிங்கம் புரிஞ்சிக்கோங்க! நீங்களே ராஜினாமா பண்ணிடுங்க. தகுதி நீக்கம் பண்ணா, உங்க ஆதரவாளர்களுக்கு கட்சி மேல அதிருப்தி வரும்” என்று கட்சி நலனிற்காகத் தலைவர் கேட்டார்.
மேலும், “இந்த கேஸ முதலருந்தே ராகவன் பாலோவ் பண்றாரு. இதைப் பத்தி ஏற்கனவே என்கிட்ட பேசிட்டாரு. எவிடென்சும் பக்காவா இருக்குதாம். என்ன விசாரணை கேட்டாலும் ஒன்னும் பண்ண முடியாதாம்” என்று லிங்கத்திற்கு அவரின் இன்றைய நிலையைப் புரிய வைக்கப் பார்த்தார்.
ராகவன் பெயரைக் கேட்டதும், “சரி விடுங்க! அப்படியே அரெஸ்ட் ஆகிட்டுப் போறேன்” என்று லிங்கம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
“நல்லா இருக்காது லிங்கம். ஆப்போசிட் பார்ட்டில தகுதி நீக்கம் நடந்திருக்கு. நம்மகிட்டயும் பப்ளிக் எதிர்பார்ப்பாங்க. எப்படியும் இடைத்தேர்தல் வரும். அதுல உங்க ஆதரவாளர்களும் கட்சிக்காக வேலை செய்யணும்.
இப்போ எடுக்கிற முடிவு, கட்சியோட வெற்றியைப் பாதிக்காம இருக்கணும். கொஞ்சம் கட்சியைப் பத்தியும் யோசிங்க” என்று தலைவர், எதிர்காலத்தைப் பற்றி யோசித்துப் பேசினார்.
ஒரு அமைதி நிலவியது.
நிறைய யோசித்த லிங்கம், “எனக்கு ஒரேயொரு கோரிக்கை இருக்கு. அதை செஞ்சீங்கன்னா, நான் ராஜினாமா செய்றேன்” என்று சமரசத்துக்கு வந்தார்.
“சொல்லுங்க என்ன?” – தலைவர்.
“போன தடவையே ‘அடுத்த எலெக்க்ஷன்ல ராஜாக்கு சீட் கொடுக்கணும்னு’ முடிவு பண்ணியிருந்தோம்” என்று இடைவெளி விட்டார்.
‘ராஜாக்கு சீட் கொடுக்கச் சொல்வாரோ?’ என்று நினைத்த தலைவர், கட்சி வேலைகளில் ராஜாவின் பங்களிப்பு குறிப்பிடும்படி இல்லையென்பதால், ‘அதெப்படி கொடுக்க முடியும்?’ என உடன்படா மனநிலையுடன் இருந்தார்.
ஓர் ஆழ்ந்து மூச்செடுத்த லிங்கம், “இடைத்தேர்தல்ல ராஜாக்கு எம்எல்ஏ சீட் கொடுக்கக் கூடாது” என அசையா விழிகளில் ஆத்திரங்கள் காட்டாறு போல் ஓடும் சீற்றத்துடன் சொன்னார்.
“ஏன் லிங்கம் இப்படி?” என்று தலைவர் கேட்டேவிட்டார்.
“இதான் என் கோரிக்கை” என்றவர், “முடிஞ்சா, அவன்கிட்ட இருக்கிற ஐடி விங் செக்ரட்டரி போஸ்ட்டயும் வாங்கிடுங்க” என ராஜாவைப் பழிவாங்க துடிக்கும் குரலில் சொன்னார்.
‘ஏன் இந்த பழியுணர்வு?’ என்று தலைவர் யோசித்தாலும், ‘முன்ன மாதிரி கட்சி வேலை ஒழுங்கா செய்றதே இல்லை. கட்சி ஆளுங்ககிட்டயும் பேசறதில்லை’ என்று ராஜாவின் குறைகளை மனதிற்குள் பட்டியலிட்டுப் பார்த்தார்.
ஏற்கனவே உடன்பாடில்லாத நிலையில் இருந்தவர், “நீங்க சொல்ற மாதிரியே அடுத்து வரப்போற எலக்க்ஷன்ல ராஜாக்கு சீட் கொடுக்கல” என லிங்கத்தின் கோரிக்கையை ஏற்பது போல் பேசினார்.
மேலும், “ஆனா செக்ரட்டரி போஸ்ட் பத்தின முடிவெல்லாம் நாம ரெண்டு பேரும் மட்டும் எடுக்க முடியாது” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதற்குமேல் எதையும் எதிர்பார்க்க முடியாது என புரிந்தது. மேலும் கட்சியில் ராஜாவின் முன்னேற்றத்திற்கு தான் முட்டுக்கட்டைப் போட்டுவிட்ட திருப்தி
வந்திருந்தது. அதே மனநிலையில், “சரி ராஜினாமா பண்றேன்” என்று எழுந்து சென்றார்.
அவர் சென்றதும், கட்சிக்குப் பாதகமில்லாமல் முடிவெடுத்ததில் தலைவர் முகம் திருப்தி கண்டிருந்தது.
ஆனாலும், லிங்கம்தான் ஜெகதீஷ் விபத்திற்குக் காரணம் என்று அவர் மேல் ராஜாவிற்கு கோபம் இருப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் லிங்கத்திற்கு ஏன் ராஜாவின் மீது கோபம்? என்ற கேள்வி வந்தது.
இது கட்சியை எந்த விதத்திலாவது பாதிக்குமா? இப்படியொரு சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்தால் எப்படி மக்களைச் சந்திப்பது? என்று அடுத்தடுத்த கட்சியின் செயல்பாடுகள் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.
*************
செங்கல்பட்டு – சென்னை சாலை…
இரண்டு கார்கள் நின்றன. அனல் காற்று வீசியது. சாலையின் ஓரத்தில் சுடர், திலோ நின்று கொண்டிருந்தனர்.
