Kathambari Novels
அத்தியாயம் – 11
சென்னை உயர் நீதிமன்றம்…
அலெக்ஸ், தியாகு குழு இரண்டாவது கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்திருந்த நிலையில், அதன் சாராம்சத்தை ஊடங்களின் செய்திகளுக்காக தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் மதிப்பெண்களை அதிகரிக்க, இந்த முறைகேட்டில் இன்னும் இரண்டு வழிகள் பின்பற்றப் பட்டிருக்கின்றன.
ஒன்று, கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் மதிப்பெண் ஆவணங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பது. அதாவது இவர்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதன்படி கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் ஓஎம்ஆர் ஷீட்டில் விடைகளை நிரப்பாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அல்லது சரியாகத் தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும்.
பின், முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக அலுவலர்கள், அவர்களின் குறைவான மதிப்பெண்ணை அதிகமான மதிப்பெண்ணாகத் திருத்தியிருக்கின்றனர்.
மேலும் தணிக்கையின்(AUDIT) போது மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த மாணவர்களின் ஓஎம்ஆர் ஷீட்டை பெற்று, கூடுதலாகப் போடப்பட்ட மதிப்பெண்ணுக்கு ஏற்றார் போல ஓஎம்ஆர் ஷீட்டில் விடைகளை நிரப்பியிருக்கின்றனர்.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் பட்டியலில் இருக்கும் சிலருக்கு, அவர்களின் பெயர் மற்றும் பதிவு எண்ணை பயன்படுத்தி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக அலுவலர்களால் விடைத்தாள் பெறப்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த ஆதாரம் தரகர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.
மேலும் இதுபோல் ஆள்மாறாட்டம் செய்யும் போது தேர்வு அறையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு, நுழைவுச் சீட்டில் இருக்கும் ‘பெய்டு ப்ராக்ஸியின்’ புகைப்படம், தேர்வு முடிந்ததும் கல்வியில் பின்தங்கிய மாணவரின் புகைப்படமாக மாற்றப்பட்டிருக்கிறது.
இதற்கு ஆதாரம், பெய்டு ப்ராக்ஸி புகைப்படங்கள் உள்ள நுழைவுச் சீட்டுகள், சில தரகர்களிடமிருந்து பறிமுதல் செயப்பட்டிருக்கிறது.
முறைகேட்டில் மற்றொன்று விடைத்தாள்கள் வெளியீடு. இங்கே குறிப்பிட்ட மாணவர்களுக்கு, அவர்கள் தரும் பணத்தின் அடிப்படையில் விடைத்தாள் லீக் செய்யப்ட்டிருக்கிறது.
இதற்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பெயர் பட்டியல் வெளியிடப்படும்.
ராக்கெட் லீடர் பிடிபட்டு, அவனிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்து வரும் கடைசி கட்ட அறிக்கையில், முக்கிய குற்றவாளிகளின் பெயர் மற்றும் முறைகேட்டிற்குத் துணை போனவர்களின் பெயர் பட்டியலுடன் வெளியிடப்படும்.
இதுவே இரண்டாவது கட்ட அறிக்கையின் சாராம்சமாகும்.
இதே நாள் மாலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுபோன்ற முறைகேட்டுச் செயல்களைப் பல்கலைக்கழகம் ஒருநாளும் அனுமதிக்காது. இதற்குத் துணை போன பல்கலைக்கழக அலுவலர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டதும், அவர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்படுவர் என்பதே அந்த அறிக்கை ஆகும்.
அன்றைய முக்கிய செய்திகள், ஊடங்களின் விவாதப் பொருட்கள், யூடூயூப் காணொளிகளின் பேசுபொருள் என எல்லாம் நுழைவுத் தேர்வு முறைகேடு குறித்து வெளிவந்த இரண்டாவது கட்ட அறிக்கை பற்றியே இருந்தன.
அதிலும் முக்கியமாக பல்கலைகழக அலுவலர்கள் சிலரும் இதற்குத் துணை போயிருப்பது, கல்வித்துறை அமைச்சர்களுக்கும் இதில் தொடர்பு இருக்குமா? போன்ற தலைப்புகளில் விவாதங்கள் இருந்தன.
இதன்பின் விசாரணை எப்படிப் போகும்? இந்த முறைகேட்டில் தொடர்பு உடையவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? நீதிமன்ற உத்தரவின்படி தவறான வழியில் பட்டம், வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களிடமிருந்து, அவைகள் திரும்பப் பெறப்படுமா?
அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதால் கைது நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்படுமா? இப்படி இன்னும் நிறைய கேள்விகள் மக்கள் மனதிலும் வந்திருக்கத் துவங்கியது.
சுருக்கமாக டீக்கடை பெஞ்சில் அமர்ந்து சாமானியனும் பேசும் அளவிற்கு செய்தி பரவியிருந்தது.
***********
பிரபல தனியார் மருத்துவமனை
மற்ற நாளிலிருந்து வேறுபட்டு, இன்று மருத்துவமனை வளாகத்தில் சில ஊடக நபர்கள், கட்சி ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.
‘சூப்பர் டீலக்ஸ்’ அறைப் பிரிவின் வெளியே போடப்பட்டிருந்த குஷன் நாற்காலியில் லதா அமர்ந்திருந்தார். மகள் நிலை குறித்த கவலையில் அழுதபடியே இருந்தார்.
லதா அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி இருந்த லிங்கத்திற்கு, அவரின் கட்சி உடன்பிறப்புகள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.
மருத்துவமனை படுக்கையில் சுடர் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவள் எதிரே இரு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர்.
புருவத்தின் கீழே, கண் இமைக்கு மேலே அடிபட்டிருந்தது. அதற்கு மருந்திட்டு பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அதையும் தாண்டி வீக்கம் தெரிந்தது. வலது முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை இருந்த காயத்திற்கு பெரிய கட்டு போடப்பட்டிருந்தது.
நடந்ததைப் பற்றி காவலர் அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். முன்னே பின்னே வந்த வண்டிகளை பற்றிச் சொன்னாள்.
உடனே, “கார் நம்பர் நோட் பண்ணீங்களா?” என்று கேட்டார்.
“ம்ம்ம்” என்று முன்னே சென்ற வண்டி எண்ணைச் சொன்னவள், “பேக்ல வந்த கார் நம்பர் தெரியலை” என்றாள்.
“ஆக்சுவலா என்ன நடந்தது? எத்தனை பேர் அட்டாக் பண்ணாங்க?”
“ரொம்ப நேரமா பிரன்ட் அன்ட் பேக்ல கார் வந்துகிட்டு இருந்தது. ஓவர்டேக் பண்ண ட்ரை பண்ணேன். பட் அது முடியலை. ஒரு ஸ்டேஜ்ல டிரைவ் பண்ண முடியாம ஸ்டாப் பண்ணதுமே, முன்னாடி போன கார்லருந்து ரெண்டு பேர் இறங்கினாங்க. பின்னாடி வந்த கார்லருந்து ஒருத்தன் இறங்கினான்.
ஃபர்ஸ்ட் பயமா இருந்தது. என்ன செய்யன்னே தெரியாம நான் கார்லருந்தே இறங்கவே இல்லை. வந்தவனுங்க கார் க்ளாஸ்ஸ ஒடைச்சி என்னை அட்டாக் பண்ண ஆரம்பிச்சாங்க. முடிஞ்ச அளவு தடுக்கப் பார்த்தேன். ஆனா அவங்க மூணு பேர். என்னால சரியா ப்ரொடெக்ட் பண்ண முடியலை. அதுனாலதான் கைலயும் கண்லயும் காயம்.
பட் அந்த நேரத்தில அந்தப் பக்கம் வெஹிகிள் வந்ததும், வந்த கார்-லேயே தப்பிச்சுப் போயிட்டாங்க” என்று தப்பித்து விட்டோம் என்ற தைரியத்தில் தடையின்றி பேசினாள்.
“அடிச்சவங்க யாருன்னு அடையாளம் காட்ட முடியுமா?”
“ம்ம்! பார்த்தா சொல்லுவேன்”
“மர்டர் அட்டெம்ப்ட் மாதிரி தெரியுதா? இல்லை, அட்டாக் மட்டும்தான் பண்ண வந்தாங்களா?”
“அட்டாக் மட்டும்தான் பண்ண வந்திருப்பாங்க. நிச்சயமா சொல்ல முடியும்”
“ஏன் அட்டாக் பண்ணாங்கன்னு தெரியுமா?”
மதி மற்றும் வேறு சில காரணங்களையும் மனதில் வைத்துக் கொண்டு, “தெரியலை” என்றாள்.
“ஓகே! அப்பாகிட்ட பேசிக்கிறேன்” என்று வெளியில் சென்றார்.
வெளியில் வந்த காவலர் லிங்கத்தின் அருகில் சென்று, “சார்! அவங்க கார் நம்பர் நோட் பண்ணியிருக்காங்க. அதை வச்சிப் பார்க்கலாம்” என்றார்.
“ம்ம்”
“எதுக்காக அட்டாக் பண்ணாங்கன்னு தெரியலைன்னு சொன்னாங்க. உங்களுக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?”
‘ஏன் இப்படிச் சொல்றா?’ என்று புரியாமல், ‘இல்லை’ என்று தலையசைத்தார்.
சுடரை மருத்துவமனையில் அனுமதித்தவர்களிடம், “அவங்களைப் பிடிக்க நீங்க ட்ரை பண்ணலையா?” என்று காவலர் கேட்டார்.
“நாங்க பைக்-அ நிறுத்தினதும், அவங்க எஸ்கேப் ஆகிட்டாங்க” என்றதும், லிங்கத்திடமும் அவர்களிடமும் மேலும் சில தகவல்கள் சேகரித்துவிட்டு காவலர் சென்றார்.
***********
செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா
மாலை ஆறு மணிக்கு மேல் சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு தியாகு திரும்பியிருந்தார். இளைப்பாறிவிட்டு வரவேற்பறையில் திலோவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஒருபக்கம் டிவி ஓடியது. அதைப் பார்ப்பதும் திலோவுடன் பேசுவதுமாக நேரம் கடந்தது.
ஏழு மணிக்கு மேல் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்த மாறன் அப்பாவைப் பார்த்ததும் அப்படியே அவரருகில் உட்கார்ந்து, “எப்ப ப்பா வந்தீங்க?” என்று கேட்டான்.
“அரௌன்ட் சிக்ஸ்” என்று சொல்லியதும், அவனின் களைத்த தோற்றத்தைக் கண்டு, “மாறன் காஃபி?” என திலோ கேட்டதற்கு, “பசிக்குதுமா. ரெப்ஃபிரேஷ் பண்ணிட்டு வர்றேன். சாப்பிடலாம்” என்று எழுந்தவன், டிவியில் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்த ஓவியச்சுடர் தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டுவிட்டு அசையாமல் அதிர்ந்து நின்றான்.
மகனின் முகமாற்றத்தைக் கண்ட தியாகு, “மாறன் என்ன?” என்று கேட்டதும், “சுடர்” என டிவியைக் காட்டினான்.
“உனக்கு அந்த பொண்ண தெரியுமா?” என்று தியாகு கேட்டதும், “ம், தெரியும்” என்றவன், செய்திகளைப் பார்த்தபடி, “நான் லவ் பண்ற பொண்ணு” என்றதும், திலோவும் தியாகுவும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துவிட்டு இருவரும் ஒரு சேர மாறனைப் பார்த்தனர்.
சில நிமிடங்கள் அசைவில்லாமல் நின்றவன், அம்மா அப்பாவிடம் சொன்னது விளங்கவும், “சாரி… இப்படி ஒரு சிச்சுவேஷன்ல சொல்லுவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை” என மீண்டும் அமர்ந்து கொண்டான்.
நீளமான அமைதி நிலவியது. இலகுவாக பேசிக் கொள்பவர்களுக்கிடையே இதுவரை இருந்திடாத ஒரு இறுக்கம் வந்திருந்தது.
தியாகு பேசுவது போல் தெரியவில்லை என்றதும், “ஏன்…?” என்று ஆரம்பித்த திலோ, அது சரியான கேள்வியல்ல என நினைத்து, “எப்படி அந்த பொண்ணு தெரியும்?” என்று கேட்டார்.
“ஒரே காலேஜ்” என்று மட்டும் சொல்லி, அப்பாவை பார்த்து, “ப்பா” என்றதுமே, “இது சரியா வராது! விட்ரு” என்று தியாகு எழுந்ததும், மாறனும் எழுந்தான்.
“ப்பா! நான் சொல்றதை” என பேச ஆரம்பிக்கையில், “இது சரிவராது மாறன்” என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்னார்.
“ஃபர்ஸ்ட் நானும் அப்படித்தான் நினைச்சேன். பட்…” என்று மாறன் முழுதாய் சொல்லி முடிக்கும்முன், “இத பத்திப் பேச வேண்டாம்” என்று தன் மறுப்பை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
“ஏன்? ஏன் பேசக் கூடாது?”
கோபத்துடன் “பாரு” என்று தியாகு டிவியை காண்பித்து, “டுடே’ஸ் பிரேக்கிங் நியூஸ் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஸ்கேம்தான். பட் அதைப்பத்தி பேசாம… இதைப் பத்திப் பேசறாங்க. இஸ் திஸ் ஸோ இம்பார்ட்டன்ட்?” என்று அவனிடமே கேட்டார்.
என்ன சொல்வான்? என்ன சொல்ல முடியும்? எதுவும் சொல்ல முடியாது. எனவே அமைதியாக நின்றான்.
“ஐ திங்க் இதெல்லாமே டிராமா! ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி… ரெண்டு பேருமே சேர்ந்து பண்ற ட்ராமா. இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் கேஸ்லருந்து மக்களைத் திசை திருப்பிறாங்க” என்று எரிச்சலுடன் சொன்னார்.
மேலும், “ஓகே! அவங்க அரசியல் எதுக்கு நம்ம வீட்டுல?” என்று அழுத்தமாய் கேட்டவர், “இது வேண்டாம்” என மாறனிடம் தெளிவாகச் சொன்னார்.
அடுத்த நொடியா? இல்லை, அதனினும் குறைவான நொடியிலா? சரியாகக் கணிக்க இயலவில்லை! ஆனால், “அது முடியவே முடியாது” என்று மாறன் சொல்லியிருந்தான்.
“ஏன்? ஏன் முடியாது? ‘நானும் ஃபர்ஸ்ட் அப்படித்தான் நினைச்சேன்-னு’ இப்ப கூட சொன்னியே? அப்புறமென்ன?”
“ஆமா நினைச்சேன். ஆனா அதுக்கப்புறம்” என்று ஒரு வேகத்தில் ஆரம்பித்து, ‘எப்படிச் சொல்ல?’ என்று தவித்தவனிடம், “அதுக்கப்புறம் என்ன?” என தியாகு தயக்கமின்றி கேட்டார்.
அந்தக் கேள்வியில் எரிச்சலடைந்து, “ம்மா! இதெல்லாம் எப்படி எக்ஸ்பிளேன் பண்ண முடியும்?” என்று கேட்டு அம்மாவிடம் தனக்காக ஆதரவு தேடினான்.
உடனே, “தியாகு பொறுமையா பேசுங்க” என்ற மனைவியிடம், “திலோ! முதல அவனை அந்தப் பொண்ணுகூட பேச வேண்டாம்னு சொல்லு” என்று கோபத்துடன் சொன்னார்.
“அதெல்லாம் முடியாது. ஏற்கனவே அப்படி இருந்திருக்கேன்! அப்படி இருந்தா, சுடர் எப்படிக் கஷ்டப்படுவான்னு எனக்குத் தெரியும். ம்மா, அந்தக் கஷ்டம் எனக்குள்ள பெரிய பெயின் கிரியேட் பண்ணும்.
நான் நானாவே இருக்க மாட்டேன்! எல்லா செஞ்சிக்கிட்டு இருந்தாலும் எதும் செய்யாத மாதிரி ஒரு பீல் இருக்கும். ஒரு எம்ட்டிநெஸ் வரும் மா” என்று தன் காதல், காதலி பற்றிச் சொன்னான்.
மகனின் பேச்சைக் கேட்ட தியாகு, “இவன் உளறிக்கிட்டு இருக்கான் திலோ” என்று விட்டேற்றியாகச் சொன்னார்.
அப்பாவின் பேச்சில் எழுந்த கோபத்தில், “நான் உளறலை ம்மா! உள்ளதைச் சொன்னேன்” என்று மாறன் குரலை உயர்த்தினான்.
“திலோ! எதுக்குத் தேவையில்லாம பேசிக்கிட்டு? இந்த பொண்ணு வேண்டாம். நீ வேற பொண்ணு பாரு” என்று தியாகு எளிதாக முடிவெடுத்தார்.
“வேற பொண்ணா?” என்றான் எரிச்சலுடன். “ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோங்க” என தீர்மானமாய் பேசப் போகும் குரலில் சொல்லவும் திலோவும் தியாகுவும் மகனைக் கூர்ந்து பார்த்தனர்.
“சுடர் என்கிட்ட எடுத்துக்கிற உரிமையை… வேற எந்த பொண்ணுக்கும் நான் கொடுக்க முடியாது. கொடுக்கவும் மாட்டேன். அன்ட் நான் சுடர்கிட்ட பேசற மாதிரி வேற எந்த பொண்ணுக்கிட்டயும் பேச முடியாது. பேசவும் மாட்டேன். எனக்கு சுடர்தான்! சுடர் மட்டும்தான்!” என தெளிவாய் சொன்னான்.
சொல்லி முடித்ததும் ஆவேசமாக அறைக்குள் சென்றுவிட வேண்டுமென நினைத்தான். ஆனால் அது மரியாதைக்குரிய செயலாக இருக்காது என்ற எண்ணத்தில் அப்படியே நின்றான்.
ஆனால் தியாகு, “இவன்கிட்ட பேசறதே வேஸ்ட் திலோ” என்று கோபத்துடன் அறைக்குள் சென்றதும், சுடருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே மாறனும் அவனது அறைக்குச் சென்றான்.
கணவரின் பின்னே வந்த திலோ, “ஏன் இவ்ளோ கோபம் தியாகு?” என்றார்.
“உனக்கும் புரியலையா திலோ?” என்று இயலாமையுடன் கேட்டவர், “இது அவன் கெரியரை ஸ்பாயில் பண்ற விஷயம்!” என்றதும், திலோ விழிகள் விரித்துப் பார்த்து நின்றார்.
“அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணா, இவனோட முடிவுகளை ‘மாமனார் கட்சிக்கு ஃபேவரா நடக்கிறான்னு’ எதிர்க்கட்சி அரசியலாக்க பார்ப்பாங்க! இவன் மேல ஒரு கட்சியோட சாயம் விழும்!
அன்ட் இப்போ எடுக்கிற மாதிரி தன்னிச்சையா முடிவுகளை அப்பவும் எடுக்க முடியுமா?
அந்தப் பொண்ணு, அவ அப்பா கட்சிக்கு எதிரா எதுவும் பண்ணாதீங்கன்னு இவன்கிட்ட கேட்க மாட்டான்னு என்ன நிச்சயம் திலோ? அப்ப இவன் என்ன பண்ணுவான்?
இவன் கண்டிப்பா அப்படிப் பண்ண மாட்டான். அது அந்தப் பொண்ணுக்கும் இவனுக்குமான ரிலேஷன்ஷிப்ப பாதிக்காதா?! பெர்சனல் லைஃப்… கெரியர் லைஃப் ரெண்டும் ஸ்பாயில் ஆயிடும்!
சப்போஸ் அந்தப் பொண்ணே அவளோட அப்பாகூட சேர்ந்து பாலிட்டிக்ஸ்ல இறங்கிட்டா என்ன செய்ய? பார்க்கிற வேலையை விட்டுட்டு, இவனும் அந்தப் பொண்ணு கூட சேர்ந்து கட்சி வேலை பார்ப்பானா? இதுக்குத்தான் படிக்க வச்சோமா?” என மறுப்பதற்கான காரணங்களை விளக்கிச் சொன்னார்.
பிறகும் தாளாமல், “உனக்கு நியாபகம் இருக்கா திலோ? காலேஜ் லாஸ்ட் டே எவ்வளவு ஆசையா இவனைக் கூட்டிட்டுப் போய் ஐஏஎஸ் கோச்சிங் சென்டர்-ல சேர்த்தோம்.
அப்புறமும், தே வே ஹி கிராக்டு தி எக்ஸாம்! டாப் ரேங்க்! மாக் இன்டர்வியூல அசத்தினது! எந்த பார்ட்டிக்கும் ஃபேவரா நடக்காத சிவில் சர்வன்ட். இப்பவும் இந்த ஸ்கேம் விசில் ப்லோவர்!
அவனை நினைச்சி எவ்ளோ பெருமையா இருந்தேன். பட் பர்சனல் லைஃப்ல இப்படியொரு முடிவு எடுப்பான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல” என தன் ஆதங்கத்தைச் சொல்லி அமைதியாகினார்.
திலோவிற்கு, கணவரின் ஆதங்கம் புரிந்தது. இருந்தாலும் இந்த விடயத்தில், மகனிற்காக அவரிடம் பேசி, சம்மதிக்க வைக்கலாமா? என்றும் யோசித்தார்.
இதே நேரத்தில் சுடர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில்…
லேசாகச் சாய்ந்து அமர்ந்திருந்த மகளிற்கு, லதா ஊட்டிக் கொண்டிருந்தார். அக்கணம் உள்ளே வந்த லிங்கம், “உன் ஃபோன்” என சுடரின் கைப்பேசியைக் கொடுத்தார்.
இடக்கையால் வாங்கிக் கொண்டவளிடம், “கவனமா இருன்னு சொன்னேன்ல? அப்புறம் ஏன் தனியா போன?” என்று கண்டிக்கும் தொனியில் கேட்டார்.
“அப்பா, அந்த வீடியோ அப்லோட் பண்ணி நிறைய நாளாச்சு. போட்டவுடனே பிரச்சனை வரலை… அப்புறம் நான் எடிட் பண்ணிக் கொடுத்த பையனும் இப்படின்னு எதுவும் சொல்லலை. அதான்…”
“அந்தப் பையன் சொல்லலைன்னா? நீ அவன்கிட்ட ‘சேஃபா இருக்கியா? எதும் பிரச்சனையா?’னு கேட்டிருக்க வேண்டாமா?”
‘கேட்டிருக்கலாம்’ என்று தோன்றியதால் அமைதியாக இருந்தாள்.
“சரி! போலீஸ் கேட்டப்போ ஏன் எதுவும் சொல்லலை?” என்று அடுத்த கேள்வி கேட்டார்.
“அதுக்கும் காரணம் இருக்கு. நான் எடிட் பண்ணிக் கொடுத்தது யாருக்கும் தெரியாது. அந்தப் பையன் எதுவும் சொல்ல மாட்டேன்னு இருக்கான். நான் மட்டும் இப்படிச் சொன்னா, அது பெரிய இஸ்யூ ஆகும்.
கேஸ் டைவர்ட் ஆகும். இன்வெஸ்டிகேஷன் ப்ராப்பரா போய்க்கிட்டு இருக்கு. அதை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன். அதோட எனக்கு எதுவும் ஆகலைல? இப்படியே போகட்டுமே”
“ரொம்ப ஈஸியா சொல்றமா!? எனக்கு எப்படி இருக்குன்னு தெரியுமா?” என்று வருந்தியவர், “இனிமே எங்க போகணும்னாலும் அப்பாகிட்ட சொல்லு. நான் அரேஞ் பண்றேன்” என்றார்.
இருவரின் பேச்சின் இடையே, “என்ன பேசறீங்க ரெண்டு பேரும்?” என்று லதா புரியாமல் கேட்டதும், “அம்மா உங்களுக்கு இது தெரியாது” என்றாள் சுடர்.
“லதா! உனக்கும்தான். இனிமே எங்கேயும் தனியா போறேன்னு சொன்னா, விடக்கூடாது” என்று மனைவியிடமும் லிங்கம் சொன்னார்.
“எப்பவும் ராஜாதான் கூட்டிட்டுப் போவான். இந்த தடவை என்னமோ தனியா போறேன்னு சொன்னா… சரி பகல்தானன்னு ஒன்னும் சொல்லலை” என்றார்.
பிறந்தநாளுக்குப் பின் சுடர் ராஜாவிடம் பேசவில்லை. அவனும் பேசவில்லை. வந்தும் பார்க்கவில்லை. அதுவே சுடருக்கு மனவேதனையைத் தந்தது. கூடவே இன்று இன்னும் ராஜா வராமலிருப்பது வேதனையைக் கூட்டியது.
“சுடர், ‘மாறா’ங்கிற பேர்லருந்து கால் வந்தது” என்று லிங்கம் மகளைப் பார்க்க, சுடர் திருதிருவென முழித்தாள்.
மகளுக்குச் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த லதா, “யாரு அது?” என்று கேட்டார்.
முதலில், ‘சொல்லவா? வேண்டாமா?’ என்ற தயக்கத்தில் இருந்தாள். பின், சொல்லிவிடலாம் என நினைத்து, “ம்மா! அது மாறன்! முழுப்பேர் யாழ்மாறன். செங்கல்பட்டு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர். நாங்க லவ் பண்றோம்” என்றாள்.
“இது எப்போலருந்து?” என்று லதா குரல் உயர்த்தினார்.
“காலேஜ்லருந்து”
லதா ஒருமாதிரி பார்த்ததும், “ம்மா! மறைக்கணும்னு நினைக்கலை. படிப்பு முடிஞ்சதும் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள ராஜாண்ணா விஷயம்… அவங்க கொஞ்சம் சாரியாகட்டும்னு நினைச்சேன்” என்று அப்பா, அம்மாவை மாறி மாறி பார்த்துச் சொன்னாள்.
“ராஜாக்குத் தெரியுமா?” என்றார் லதா.
“தெரியும் மா” என்றாள்.
ஒன்றுமே சொல்லாமல் நின்ற கணவரிடம், “நீங்க என்னங்க ஒன்னும் சொல்ல மாட்டிக்கிறீங்க?” என்று கேட்டார் லதா.
“இன்னைக்கு இருக்கிற மனநிலையில எதையும் யோசிக்க முடியலை” என்றார் லிங்கம்.
‘நீங்களாவது ஏதாவது சொல்லுவீங்களா?’ என்று அம்மாவைப் பார்த்தாள் சுடர்.
“அப்பா முடிவு சொல்லட்டும். அப்புறமா ராஜாகிட்ட பேசிட்டுப் பார்க்கலாம்” என்றுவிட்டார்.
அதற்குமேல் மூவருக்குள்ளும் அமைதிதான் நிலவியது. சுடர் சாப்பிட்டதும், லிங்கம் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொடுத்தார். “படுத்து ரெஸ்ட் எடு” என்றார்.
படுக்காமல் அப்படியே இருந்தாள்.
“என்ன சுடர்?”
“ஃபோன் பேசணும் ப்பா” என்றாள்.
“இந்த நிலைமையில பேசணுமா? ரெஸ்ட் எடு” என்று லிங்கம் சொல்ல, “அதான?! பேசாம படு” என்று லதாவும் சொன்னார்.
“கொஞ்சம் நேரம் பேசிக்கிறேனே பா?” என சுடர் கெஞ்சியதும், சிறிது நேரம் லிங்கம் அமைதியாக இருந்துவிட்டு, “வா லதா” என்றார். இருவரும் வெளியே சென்றனர்.
உடனே மாறனுக்கு அழைத்தாள்.
அவன் அழைப்பை ஏற்றதும், “மாறா” என்று பதட்டத்துடன் ஆரம்பித்தவளிடம், “சுடர்! உயிரே போயிடுச்சி தெரியுமா?” என்றான் பரிதவிப்புடன்.
“ஏன் இப்படிப் பேசற? உயிரோடதான இருக்கேன். அப்புறமென்ன?”
“வாயிலயே அடிப்பேன்” என்று அன்பின் வெளிப்பாடாய் அதட்டிய மாறன், “கேர்ஃபுல்லா இருக்க சொன்னேன்ல? அப்புறம் ஏன் இப்படி சுடர்?” என்று அக்கறையாகக் கேட்டான்.
யாழ்மாறனின் அதட்டல்… அக்கறை இரண்டையும் அனுபவிக்கும் விதமாக அமைதியாக இருந்தாள்.
“என்ட்ரன்ஸ் எக்ஸாம் நியூஸ் சம்பந்தமாதான் இந்த அட்டாக் இருக்கும். உனக்கும் அது தெரிஞ்சிருக்கும். அப்புறம் நியூஸ்ல ஏன் அந்த மாதிரி எதுவும் வரலை?” என்று கேட்டான்.
தன் அப்பாவிடம் சொன்னதை மீண்டும் சொல்லி முடித்தவள், “அதை விடு மாறா! வேற ஒரு முக்கியமான விஷயம் இருக்கு” என்றாள்.
“என்ன?”
“நம்ம விஷயம் வீட்ல தெரிஞ்சிடுச்சி” என்ற சுடர் குரல் மெதுவாக ஒலித்தது.
“ஓ! நான் கால் பண்றப்போ ஃபோன் உங்கிட்ட இல்லயோ?”
“ம்! அப்பாகிட்ட இருந்தது” என்று அசதியுடன் சொன்னாள்.
“என்ன சொல்றாங்க?”
“எதுவுமே சொல்லலை” என்று சொல்லும் பொழுது, குரல் இன்னும் இறங்கிப் போயிருந்தது.
“ஓ! நானும் எங்க வீட்டுலயும் சொல்லிட்டேன்”
“என்ன திடிர்னு?” என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.
“சிச்சுவேஷன் அப்படி”
சிறு பதைபதைப்புடன், “உங்க வீட்ல என்ன சொன்னாங்க?!” என்று கேட்டாள்.
மாறன் அமைதியாக இருந்தான்.
அவன் அமைதி வாசித்துக் காட்டிய வார்த்தைகள் அவளுக்குப் புரிந்தது. அது அவளை வருத்தியது. கூடவே அவன் வருந்துவதும் தெரிந்தது. அமைதியாக இருந்தாள்.
‘என்ன நினைத்தானோ?’, “பார்க்கணும் போல இருக்கு சுடர்” என்று ஏக்கமாகச் சொன்னான்.
“ம்ம்ம்” என்றவளின் கண்கள் குளமாயின.
அந்த ‘ம்ம்ம்’ சொன்ன விதத்தில் அவளின் உணர்வைப் புரிந்தவன், “எதையும் யோசிக்காத. வீட்ல எதும் சொல்லலைனு நினைச்சி கவலைப்படாத. சரியா? பார்த்துக்கலாம்” என அவள் வாட்டத்தை விரட்டும் குரலில் சொன்னான்.
இப்போது தொண்டை அடைத்ததில், சுடருக்கு அந்த ‘ம்ம்ம்’ கூட வர மறுத்தது.
அதையும் புரிந்து, “சொல்றேன்ல சுடர். இப்படி இருக்காத. பார்த்துக்கலாம்” என்றவன், “ரொம்ப வலிக்குதா?” என்று சங்கடத்துடன் கேட்டான்.
மீண்டும் சத்தமேயில்லாமல் இருந்தாள்.
அவள் படும் வேதனையின் வேகத்தில், “நீ சொன்னா கேட்க மாட்ட. நான் ஹாஸ்பிட்டல் வந்து பார்க்கிறேன். அப்பத்தான் நீ சரியா இருப்ப” என்று அவளுக்காகப் பேசினான்.
உடனே, “இங்கெல்லாம் வர வேண்டாம் மாறா. கட்சி ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க. இன்னும் அப்பா எதுவும் சொல்லலை. நீ வந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ? அதுக்கு கட்சிக்காரங்க என்னென்ன பேசுவாங்களோ? உனக்கும் தேவையில்லாத கேள்வி வரும்” என அவனுக்காக வாய் திறந்தாள்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான்.
மீண்டும் அவளே, “மாறா, டேப்லெட் போட்டுருக்கேன். தூங்கட்டுமா?” என்று கேட்டாள்.
“எதையும் யோசிக்காம தூங்கு. எல்லாம் சரியாயிடும். சரி பண்ணிடலாம். நாளைக்கு காலைல திரும்ப பேசறேன். பை” என நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
கைப்பேசியை வைத்ததும், ‘அவளை எப்படிப் பார்க்க?’ என்று யோசித்தான். ‘யார் என்ன பேசினாலும், கேட்டாலும்… பரவாயில்லை’ என நேராகப் போய் நின்றுவிடலாம். யோசிக்கத் தேவையேயில்லை.
ஆனால் பதவிக்குரிய பொறுப்புணர்வு அவனை யோசிக்கச் சொல்லியது.
கூடவே அப்பாவிடம் பேசியது மனதிற்குள் ஓடியது. ‘எனக்கு சுடர்தான்! சுடர் மட்டும்தான்’ என்ற இடம் வந்ததும், அவன் இதயம் இப்படி ஒரு முடிவெடுத்த கல்லூரி நாளை நோக்கி ஓடியது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 10
பாண்டிச்சேரி!
அன்று சுடரிடம் அப்படிச் சொன்ன பிறகு, மாறன் அவளைப் பார்க்கவில்லை. ஆனால் பார்க்கும் நாளில் இருந்த தாக்கத்தை விடவும், பார்க்காத நாளின் தாக்கங்கள் அதிகமாக இருந்தன.
அதே கல்லூரி வளாகத்திற்குள்தான் இருக்கிறாள் என்றாலும், தன் காதல் வாழ்க்கைக்குள் அவள் இல்லை என்பது அவனை வாட்டியது. அவள் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கோர்த்துப் பார்க்கையில், மனம் ஒருவித திருப்தியைக் காட்டியது
பல நாட்கள் அவளைச் சந்திக்க நினைத்த தன் மனதை, ஏதேதோ சொல்லி அமைதிப்படுத்தினான். சில நாட்கள் அவளைச் சந்தித்த இடங்களில் சென்று அமர்ந்துவிட்டு வருவான்.
சுருக்கமாக அவளுடன் பேசாத ஒவ்வொரு நாளும் பூமியில் ‘இருத்தலுக்கான’ கணக்கில்தான் வந்ததே தவிர, ‘வாழ்ந்ததிற்கான’ கணக்கில் சேரவேயில்லை.
இப்படியே நிறைய நாட்கள் கடந்தன. அன்று கல்லூரியில் செமஸ்டர்
தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. தேர்வு எழுதி முடித்த மாறன், நிறுவனர் சிலை இருக்கும் இடத்திற்கு வந்தான்.
அங்கே அவனுக்கு முன்பே வந்திருந்த சுடரைக் கண்டதும், ஒரு மரத்தின் பின்புறம் நின்று, ‘அவள் என்ன செய்கிறாள்?’ என்று பார்க்க ஆரம்பித்தான்.
சுடர்… நிறுவனர் சிலை இருந்த இடத்தின் பக்கச்சுவரில் அமர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு இங்கும் அங்கும் பார்த்தபடி இருந்தாள்.
மாறன்… அன்று தானும் அவளும் அமர்ந்திருந்தது… தன் பெயரை அவள் உச்சரிச்சது என எல்லாம் நினைத்துப் பார்த்தான்.
சுடர்… நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த ‘நாட்டுப்புற பாடல்கள்’ தொகுப்பு அடங்கிய புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள். இதை வாங்குவதற்கு, அவனிடம் எடுத்துக் கொண்ட உரிமையை நினைத்துப் புன்னகை வந்தது.
மாறன்… இதே புத்தகத்தால் அன்று அவள் தட்டிவிட்டு போன இடத்தை, இன்று லேசாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
சுடர்… கழுத்திலிருந்த அடையாள அட்டையை கழட்டி, கையில் வைத்து சுற்ற ஆரம்பித்தாள். பின் சுற்றுவதை நிறுத்தி, அதை தூக்கிப் பிடித்து, ‘இதில்தானே ஆரம்பித்தது’ என்ற பார்வை பார்த்தாள்.
சட்டென மூண்ட கோபத்தில் அதைத் தூக்கி எரிந்து விடலாம் என்று கையை உயர்த்தியவள், ‘அதுதான் முடியாதே’ என்று உணர்ந்ததுமே, இரு கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டாள்.
மாறன்… அவளது உணர்வுகளை உணர்ந்தவன், ‘என்னாலயும் முடியாது சுடர்’ என்று முணுமுணுத்தான்.
ஒரு சில வினாடிகள் கழித்து சுவரிலிருந்து குதித்துக் கிளம்பினாள்.
அவள் போகும் திசையைப் பார்த்தவன், ‘தன்னிடம் பேசாமல் ஓவியச்சுடர் சரியாகயில்லை’ என்று உணர்ந்தான். அதைவிட ‘அவள் சரியாக இல்லை என்றால், தான் சரியாக இருக்கப் போவதில்லை’ என்பதை யாழ்மாறன் புரிந்து கொண்டான்.
‘இந்த காதல் வேண்டாம்’ என்று ஒதுக்கி, வாழ்க்கையில் சாதித்து வெற்றிகள் கண்டாலும், அவளிடம் பேசாமல் இருந்தால் தனக்குள் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகும் என்பதைக் கண்டுகொண்டான்.
‘இது சரி வராது’ என சொன்னவனே, ‘இவள்தான் சகலமும்’ என்று சொல்வது போல போய்க் கொண்டிருப்பவளைப் பார்த்தான்.
அடுத்த நொடியே தேர்வுகள் முடிந்ததும் இதுபற்றிச் சுடரிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான். தன் தனிப்பட்ட வாழ்வில் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு இதுவாக இருக்காது என்று தெரியும்.
எனினும் ‘தனக்கு சுடர்தான்! சுடர் மட்டும்தான்’ என்ற முடிவிலிருந்து மாறப் போவதில்லை என்ற உறுதியுடன் இருந்தான். அந்த உறுதி அவன் உதடுகளில் ஒரு மென்னகையைக் கொண்டு வந்தது.
வெகு நாட்களுக்குப் பின்னர் வருகின்ற மென்னகை. ஆம்! இத்தனை நாட்கள் சுடருடன் பேசவில்லை என்றதும் மென்னகைக்கு கூட பஞ்சமாகிப் போய்க் கிடந்தது அவன் இதழ் தேசம்.
யாழோவியம் அத்தியாயம் -11 தொடர்கிறது…
அவள் நினைவிலிருந்து மீண்டவன், அவளது நிலையை நினைத்து மெல்லிய சோகத்துடன் அப்படியே வெகுநேரம் அமர்ந்திருந்தான்.
இதே நேரத்தில் மருத்துவமனையில்…
கூட்டங்கள் குறைந்திருந்தது. சுடர் அனுமதிக்கப்பட்ட அறை முன் லதாவும், லிங்கமும் இருந்தனர். அந்தநேரம் படபடவென வந்து, ராஜா அங்கே நின்றான்.
அரக்கப்பரக்க வந்து நின்ற ராஜாவிடம், “இவ்ளோ நேரம் எங்க போயிருந்த? உனக்கு இப்பத்தான் வரணும்னு தோணிச்சா?” என்று கேட்டபடியே லிங்கம் அவனெதிரில் வந்து நின்றார்.
“கட்சி வேலையா வெளிய போயிருந்தேன்” என்று லிங்கத்திற்குப் பதிலளித்து, சுடர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் செல்லப்போனான்.
“பொய் சொல்லாத! அப்படியென்ன கட்சி வேலை?” என லிங்கம் நேரடியாகக் கேட்டதும், “என்ன இப்படிப் பேசறீங்க?” என லதா குறுக்கே வந்தார்.
கோபத்தில், “நீ கொஞ்சம் பேசாம இரு லதா” என்று அதட்டியவர், “சொல்லு! என்ன வேலைனு?” என்று ராஜாவைப் பார்த்துக் கேட்டார்.
லிங்கத்தின் கண் பார்வையில் ‘நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்ற அழுத்தம் இருந்தது. கணவரைப் பார்த்த லதா, “அவனைப் போக விடுங்க. எந்த நேரத்தில கேள்வி கேட்டுக்கிட்டு நிக்கிறீங்க?” என்றார்.
“ஏன் கேட்க கூடாது? இவ்ளோ லேட்டா வர்றான். அவன்கிட்ட எதுவும் கேட்கக் கூடாதா? முதல உன்கூட ஏன் பேசாம இருக்கான்னு சொல்லச் சொல்லேன்”
“அதெல்லாம் இன்னொரு நாள் கேட்டுக்கலாம். இப்ப போய் பார்க்க விடுங்க” என்றதும், “நீ அவனுக்காகப் பேசாத” என எரிச்சல் அடைந்தார்.
“போதும்!” என அறைக்குள் செல்லப் போனவனின் முன்னே சென்று, “நானும் கவனிச்சிக்கிட்டுதான் வர்றேன். நீ கட்சி வேலை எதுவும் பார்க்கலை. என்ன பண்றேன்னு தெரியலை. இப்பவும் பொய் சொல்ற. எங்கே போயிருந்தன்னு சொல்லிட்டு, தாராளமா போ” என்று அவனைச் சந்தேகிக்கும் தொனியில் பேசினார்.
கணவரின் சந்தேகத்தைக் கவனிக்காமல், “எந்த நேரத்தில…” என்று வந்த லதாவை, “நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணாத” என்று கோபப்பட்டார்.
அக்கணம் இவர்களது சத்தத்தில் விழித்த சுடர், “ப்பா!” என்று உள்ளிருந்து சோர்வாக அழைக்க, “என்ன சுடர்?” என லிங்கம் கதவைத் திறந்து கேட்டார்.
“ராஜாண்ணாவ பார்க்கணும்” என்றதும், எதுவும் பேசாமல் “போய்க்கோ!” என சொல்லி, அங்கிருந்த குஷனில் அமர்ந்தார். ‘நான் சொன்னா கேட்கலை. அவர் பொண்ணு சொன்னதும் கேட்கிறாரு’ என முணுமுணுத்துக் கொண்டே, லதாவும் அமர்ந்தார்.
ராஜா உள்ளே வரும் பொழுது சுடர் கண்மூடிப் படுத்திருந்தாள். மெதுவாக அவள் அருகில் சென்று, “சுடர்” என்றதும், கஷ்ட்டப்பட்டுக் கண் திறந்துப் பார்த்தாள்.
‘ஏன் இவ்வளவு நேரம்?’ என்று கேட்பாள் என நினைத்தான். ஆனால் அவளோ, “உட்காரு ராஜாண்ணா” என்றாள்.
பக்கத்தில் அமர்ந்து, “ரொம்ப வலிக்குதா” என்றான்.
“இல்லை” என்று சோர்வுடன் சொன்னாள்.
கட்டு போடப்பட்டிருந்த கையைப் பார்த்தவன், “எங்கயும் நீ போகணும்னா என்னைக் கூப்பிடு. நான் கூட்டிட்டுப் போறேன். இப்படித் தனியா போகாத! சரியா?” என்றான்.
“சரி” என்றவள், “மாறா விஷயம் வீட்ல தெரிஞ்சிடுச்சி. அம்மாவும், அப்பாவும் ஒன்னுமே சொல்லலை. அவனும் வீட்ல சொல்லிட்டான். அவங்க ஒத்துக்கலை போல. பயமா இருக்கு” என முடிக்கும் போது, கண்கள் கலங்கியிருந்தன.
ஆறுதலாக அவள் கைப்பிடித்து, “உடனே என்ன சொல்லணும்னு நினைக்கிற? பொறுமையா இரு” என்றவன், “இதெல்லாம் இப்ப யோசிக்காத. தூங்கு. நான் வெளிய இருக்கேன்” என்று எழுந்தவனின் கையை விடாமல் பிடித்திருந்தாள்.
“என்ன?” என்று மீண்டும் அமர்ந்தனிடம், “நான் இனி எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன். இப்படி பேசாம இருக்காத ராஜாண்ணா. ரொம்ப கஷ்டமாயிருக்கு. பர்த்டே அன்னைக்கு எப்படி அழுதேன் தெரியுமா?” என்று கரகரத்தக் குரலில் சொன்னாள்.
அமைதியாக இருந்தான். பின், “இப்போ இந்தப் பேச்சு அவசியமா? எதையும் நினைக்காம ஒழுங்கா தூங்கு” என அண்ணனாய் அதட்டினான். பிடித்திருந்த அவள் கையை மெதுவாகத் தட்டிக் கொடுத்தான்.
அந்த அன்பில் கண் மூடியவள், “கொஞ்ச நாள்தான் நீ என்கூட பேசாம இருந்த. அதையே என்னால தாங்க முடியலை. அம்மா, பாவம் ராஜாண்ணா. இத்தனை நாள் பேசாம இருக்க. எப்படித்தான் தாங்குறாங்களோ?” என்றாள்.
அந்த நொடியில், ராஜாவின் கண்ணில் ஒரு துளி கண்ணீர் துளிர்த்தது. அதை பெருவிரலால் துடைத்துக் கொண்டான். அந்தத் கண்ணீர் துளி யாருக்காக?
***********
இரண்டு நாட்கள் கழித்து ராகவன் அலுவலக அறையில்…
நுழைவுத்தேர்வு முறைகேட்டின் இரண்டாம்கட்ட அறிக்கை பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். நெற்றியை தேய்த்தபடியே, ‘அடுத்து என்ன செய்ய?’ என்று எண்ணியவர், ஒரு முடிவெடுத்து தன் கைபேசியை எடுத்தார்.
இதே நாள் ராகினி வீட்டில்…
சற்று முன்புதான் ராகினியின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது. அதில்தான் பேசிக் கொண்டிருந்தார். முதலில் நெடு நேரத்திற்கு வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தன.
அதன்பின், “ரெண்டாவது கட்ட அறிக்கையும் சப்மிட் பண்ணியாச்சு. இப்போ என்ன செய்யணும்னு பேசுங்க? இப்படியே விட்டா, எவிடன்ஸோட நம்ம பேரு வெளி வந்திடும்” என்று ராகினி விடயத்திற்கு வந்தார்.
“ம்ம்ம்” என்று மட்டும் அந்த ஆண்குரல் சொன்னது.
“கட்சில, மக்கள்கிட்ட கெட்ட பேர் வந்திடும். எல்லாம் அவனாலதான். அவனை ஏதாவது பண்ணனும்” என ஆரம்பத்திலிருந்ததை விட மாறனை பழிவாங்கும் வெறி அதிகமான குரலில் ராகினி பேசினார்.
“கண்டிப்பா பண்ணலாம்!” என்று அந்த ஆண்குரல் ஒரு முடிவுடன் பேசியது.
“என்ன பண்ண?”
“நாம கஷ்டப்படுற மாதிரி, அவனும் கஷ்டப்படணும். அதோட நாம செய்யப் போறதினால… அடுத்தகட்ட அறிக்கை சப்மிட் பண்றது தள்ளிப் போகணும்” என அழுத்தமாய் சொன்ன ஆண்குரல், “அதோட மட்டும் விடக்கூடாது. அவன் பேருக்கு கலங்கம் வர்ற மாதிரியும் ஏதாவது பண்ணனும்” என்றது.
அனைவர் ஆட்காட்டி விரலும் தன்னைச் சுட்டும் என்றாலும் யாழ்மாறன் மேல் கொண்ட அடங்காத ஆங்காரத்தில், அந்த ஆண்குரல் திட்டத்தைக் கூறியது. அதைக் கேட்க கேட்க ராகினி முகத்தில் அப்படி ஒரு திருப்தி வந்தது.
மேலும், “ஆட்சி உங்ககிட்ட இருக்குது. அதனால என்கொயரி கமிஷன் முழுசா ரிப்போர்ட் சப்மிட் பண்ணப்புறம், எந்த ஆக்ஷனும் எடுக்க விடாம நீங்க பார்த்துக்கோங்க” என்று வழிகாட்டியது.
“ம்ம் சரி”
“அப்புறம், இந்த வழக்குக்கு சிபிஐ விசாரணை வேணும்னு ஹைகோர்ட்ல மனு தாக்கல் பண்ணலாம். அதை பத்தி கொஞ்ச நாள் பேச்சு போகும். அதுக்குள்ள வேற எப்படியாவது, மக்களை திசை திருப்ப பார்க்கணும்” என்று ஆண்குரல் அடுத்தடுத்த திட்டங்களைத் தீட்டியது.
அதன்பின்னும் சில விடயங்களைப் பேசிவிட்டே, இருபுறமும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
***********
பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்…
சென்னை செங்கல்பட்டு நெடுஞ்சாலை!
மூன்றாவது கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க தியாகு சென்னை சென்று கொண்டிருந்தார். அவருடன் துணை ஆய்வாளர்களும் இருந்தார்கள்.
அனைவரும் பொதுவாகப் பேசியபடி இருந்தனர். சாலையில் கவனம் வைத்து ஓட்டுநர் கார் ஒட்டிக் கொண்டிருந்தார். அதே சாலையில், தியாகு பயணிக்கும் காருக்கு எதிரே கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் வந்து கொண்டிருந்தது!
