Kathambari Novels
அத்தியாயம் – 10
கடிகாரத்தில் மணி பன்னிரண்டு அடித்ததும் ராஜா, மாறன் இருவருமே ஒரே நேரத்தில் சுடரின் கைப்பேசிக்கு அழைக்க முயற்சித்தனர். ஆதலால், ‘கால் குடின்ட்(couldn’t) பி கனெக்ட்ட்’ என்ற செய்தி வந்தது.
சென்னையில் இருந்து அழைத்திருந்த ராஜா, ‘டிசி-யாத்தான் இருக்கும்’ என்று நினைத்தவாறே மீண்டும் அழைத்ததும், அந்த அழைப்பை சுடர் ஏற்றாள்.
“சுடர்” என்று ராஜா பேச்சை ஆரம்பித்ததும், “ம்ம்ம்” என்று சொன்னாள்.
“ஹேப்பி பர்த்டே” என வாழ்த்துச் சொன்னதற்கும், “ம்ம்ம்” என்றே சொன்னாள்.
அடுத்து, “என்ன கிஃப்ட் வேணும்?” என்று சாதாரணமாகக் கேட்டதற்கு, பெரிய பெரிய குழப்பத்தில் இருந்தவள், “எதுவும் வேண்டாம்” என்றாள்.
“ஏன்? ஏதாவது வாங்கித் தர்றேனே?” என ஆசையாக கேட்டுப் பார்த்ததற்கும், “வேண்டாம்” என்று மறுத்துவிட்டாள்.
அவளைப் பார்த்து வெகு நாட்களாயிற்று என்பதால், “சுடர், வீட்டுக்கு வந்து பார்க்கவா?” என்று மெதுவாக கேட்க, “வேண்டாம்” என்று திட்டவட்டமாகச் சொன்னாள்.
கடைசியில், “வேற என்னதான் வேணும்?” என்று கேட்டுவிட்டதும், ‘எப்படா அப்படிக் கேட்பான்?’ என காத்திருந்தவள், படபடவென கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள்.
“அம்மாகூட ஏன் பேச மாட்டிக்கிற? அம்மா ரொம்பவே கவலைப்படறாங்க. எனக்கும் கஷ்டமா இருக்கு. ஏன் இப்படி இருக்கன்னு சொல்லேன்?
அப்புறம் வீட்லருந்து ஒரு பைல் எடுத்திட்டு வந்தேன். அதுபத்தி எதும் கேட்க மாட்டிக்கிற? அது என்னென்னு பார்த்திட்டேன்! எதுக்கு அந்த எவிடென்ஸ்-ஸ மறைச்சி வைக்கணும்? உனக்கும், அந்த நியூஸ்-க்கும் என்ன சம்ப… ” என்று கேட்க வரும்பொழுது, ராஜா அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள், அப்படியே ஓரிரு நொடிகள் சிலையாக இருந்தாள். கண் மூடிக் கொண்டாள். சிலபல கண்ணீர் துளிகள் வந்தன. அந்த நேரத்தில் மாறனிடமிருந்து அழைப்பு வந்தது.
‘இதுபற்றி இவனிடம் அப்புறம் சொல்லிக்கலாம்’ என கடகடவென கண்ணீரைத் துடைத்துவிட்டு, “சொல்லுங்க கலெக்டரே” என்று சாதாரணமாக ஆரம்பித்தாள்.
‘என்ன சொல்லி, எப்படி ஆரம்பிக்க?’ என்று தயங்கியவன், “அது வந்து…” என்று தயங்கியதும், “சொல்லு மாறா சொல்லு” என சுடர் கதை கேட்கும் தொனியில் சொன்னதும், மாறன் பேச்சை நிறுத்துவிட்டான்.
“சும்மா சொல்லு! எப்பவும் சொல்லுவியே, ‘நானும் ட்ரை பண்ணேன். பட் டிஸ்டன்ஸ் பேஸிஸ்-ல ஆர் டோட்டல் நம்பர்-ல ஹையர் லோயர் பார்த்து கால் கனெக்ட் ஆகியிருக்கும்’ இதான மாறா?” என்றாள்
வேறுவழியேயில்லாமல் அமைதியாக இருந்தான்.
“வருஷ வருஷம் இதேதான். ஒரு வருஷம் கூட ஃபர்ஸ்ட் விஷ் பண்ண முடியல” என்று அவனது அமைதியை அடித்து துவைக்கும் குரலில் சொன்னாள்.
“உன் அண்ணன் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணிட்டானா??”
“ம்ம்ம்”
“சுடர் நீ வேணா பாரு! நெக்ஸ்ட் இயர் நான்தான் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவேன்”
“நீ இன்னும் இந்த வருஷமே விஷ் பண்ணலை!” என்று நியாபகப்படுத்தியதும்,
“ஓ! சாரி? பிலேடட் பர்த்டே விஷ்ஷஸ் சுடர்” என்று வாழ்த்தினான்.
“இந்த உலகத்தில பர்த்டே அன்னைக்கு ‘பிலேடட் பர்த்டே விஷ்’னு சொல்றவன் நீயாதான் இருப்ப?!” என்று சிரித்தாள்.
“ஆமால! இதுக்கு ஏதாவது வழி பண்ணேன்?” என பாவமாக கேட்டதும், “நான் என்ன பண்ண முடியும்? முதலயே நல்லா யோசிச்சிருக்கணும். அன்னைக்கு
பீச் ரோடுல என்ன பேச்சு பேசுன தெரியுமா?” என்றாள்.
“அது நீ ரொம்ப அழுதியா? அதான் பாவமா…” என சொல்லி முடிக்கும் முன்பே,
“அழ மட்டும்தான் செஞ்சேனா?” என்று குறுக்கிட்டாள்
“சரிம்மா! நீ அடிச்ச அடி! பேசின பேச்சு! அதுல உணர்ச்சிவசப்பட்டு தெரியாம வார்த்தையை விட்டுட்டேன் போதுமா?” என்று சலிப்புடன் சொன்னான்.
“ஏன் மாறா, நான் அப்படிப் பேசறது பிடிக்காதா?”
“ச்சே! ச்சே! நீ அப்படி உரிமையா பேசறதுதான் பிடிக்கும். இன்ஃபாக்ட் நீ அந்த மாதிரி பேசலைன்னா, எனக்கு ஏதோ மிஸ் பண்ற மாதிரி இருக்கும்” என்று வார்த்தைகளாலே அவளை வாரிச் சுருட்டியிருந்தான்.
அந்தக் குரலுக்குள் சுகமாய் சுருண்டு கொண்டு, “மாறா” என உயிர் உறையும் குளிரின் குரலில் அழைக்க, சில்லென்ற நீரில் சிறகை நனைத்துச் சிலிர்த்துக் கொள்ளும் பறவை போல் உணர்ந்தான்.
அப்படிச் சிலிர்த்தவாறே சிரித்துக் கொண்டு, “ஓகே வேறென்ன? சொல்லு பர்த்டே கேர்ள்!!” என்றான்.
“சொல்றதுக்கு பெரிசா ஒன்னுமில்லை. பட் ஆல் தி பெஸ்ட்” என்றதும், “ஏன்?” என்று புரியாமல் கேட்டான்.
“அடுத்த வருஷமாவது ஹாப்பி பர்த்டே-ன்னு சொல்றதுக்கு” என்று கேலி செய்ததும், செல்களெல்லாம் கூடச் சேர்ந்து சிரிக்கும் வண்ணம் சிரித்தான்.
அவன் சிரிப்பைக் கேட்டுச் சிரித்து, “எப்பவும் சொல்வியே அதைச் சொல்லு மாறா” என கேட்டதும், அவன் மேலும் சிரித்தபடி, “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்றதும் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 12:25 எனக் காட்டியது.
இன்று எப்படி வாழ்த்துச் சொல்கிறான். ஆனால் அன்று கல்லூரியில் ‘எனது பிறந்தநாள்’ என்று சொன்ன பின்பும், ‘ஒரு வாழ்த்துச் சொன்னானா?’ என்று நினைக்கும் பொழுது சிரிப்பு வந்தது. சிரித்தும் கொண்டாள்.
ஆனால் அன்று வலித்தது. நிரம்ப வலித்தது. முகத்தில் புன்னகையுடனே, வலித்த அந்த நாளை நோக்கி மனம் பயணித்தது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 9
பாண்டிச்சேரி!
கல்லூரி நாட்களில் அன்று சுடரின் பிறந்தநாள்!
காலையில் ராஜா, லதா வந்து வாழ்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தனர். அதன்பிறகு தோழிகளிடமிருந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் இருந்தன. பின், மதிய இடைவெளியில் மாறனைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள்.
அவன் வகுப்பிருக்கும் நடைகூடப் பகுதிக்குள் நடந்து வரும் போதே, மாறனும் அவனைச் சுற்றி சில மாணவியரும் நிற்பது தெரிந்தது. ஒரு மாணவி கையில் புத்தகம் திறந்திருக்க, அதில் ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
‘இவனுக்கு வேற வேலையே கிடையாதா!?’ என சிறு பொறாமையுடன் நடந்து வந்து, ஒரு தூணின் அருகில் நின்றாள். ‘எப்படிக் கூப்பிட?’ என்று தயங்கியவள், சட்டென யோசித்துக் கை தட்டி அழைத்தாள். சரியான திசையில் சடேலென திரும்பிப் பார்த்தான்.
அவன் பார்த்ததும், ‘ஹாய்’ என்பது போல் கொஞ்சம் புன்னகையுடன் கைகள் ஆட்டினாள். கூடுதல் ஒப்பனையுடன் இருந்தவளை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதன்பின் கவனத்தைப் புத்தகத்தில் புகுத்திக் கொண்டு, மீண்டும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். ‘ப்ச் இவனுக்கு என்னாச்சு?’ என்று சிடுசிடுத்த சுடர், திரும்பவும் கைதட்டி அழைத்தாள்.
ஆனால் இந்தமுறை மாறன் மட்டுமல்ல, மாணவியரும் சேர்ந்தே திரும்பிப் பார்த்தனர். இத்தனை பேரும் பார்த்ததால், ‘எப்படிச் சொல்ல?’ என கூச்சம் இருந்தாலும், ‘இன்னைக்கு என் பர்த்டே’ என்று சுடர் வாயசைத்தாள்.
உடனே மாணவிகளிடம் ஏதோ சொல்லிவிட்டு, சுடரின் முன் வந்து நின்றான். “இன்னைக்கு என்னோட பர்த்டே” என்று அவனிடமிருந்து வாழ்த்தை வாங்கும் ஆசையில் சொன்னதற்கு, “உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்.
“என்ன சொல்லணும்?”
“உங்கப்பா மினிஸ்டரா?” என்று கேட்டதும், “ம்ம்” என ‘இதில் என்ன இருக்கு?’ என்ற குரலில் சொன்னாள்.
“கலெக்டர் ஆகிறதுதான் என்னோட கனவு. அதுக்காகத்தான் படிச்சுக்கிட்டு இருக்கேன். இது தொடர்ந்தா, பியூச்சர்ல என் போஸ்ட்டுக்கு சரிவராதுன்னு தோணுது. சிவில் சர்வன்ட்டா இருக்கிறப்ப எந்த ஒரு கட்சியோட அடையாளம் இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.
இப்ப தெரியாது. பட், பிராக்டிகலா போகிறப்போ, நிறைய பிரச்சனை வரும். ஸோ, நமக்குள்ள இது சரிவராது” என்று சொல்ல வேண்டியத்தைச் சொல்லி முடித்தான்.
ஏதும் சொல்லாமல் அமைதியாக நிற்பவளைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. எனினும், “நான் சொல்ல வர்றது புரியுதா?” என கேட்டான்.
“நல்லா புரியுது” என மென்சிரிப்புடன் எளிதாக சொன்னவள், “அதான் நேத்து பவுன்டர் ஸ்டேச்சுக்கு வரலயா? இது தெரியாம நான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். இதை நேத்தே சொல்லிருக்கலாம்” என மனதின் பாதிப்பைக் குரலில் வெளிப்படுத்தாமல் பேசினாள்.
“சொல்லியிருக்கலாம். பட் எனக்கும் இப்படிச் சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு. அதான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன்”
இருவருக்கும் இடையே ஒருசில நொடிகள் ஒரு அமைதி நிலவியது.
அந்த நொடி முடிந்ததும் கொஞ்சம் தயங்கியபடி, “இனி இந்த மாதிரி பார்க்க வர வேண்டாம்” என மாறன் சொன்னதும், சுடரின் மனதில் ஒரு வலி வந்தது.
அவன் சொன்னதற்கு ‘சரி’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படிச் சொல்வதால் மட்டும் அவன் பக்கம் சரிந்த மனது எழுந்துவிடுமா?? பெரிய கேள்விக்குறிதான்!
இருந்தும், உள்ளத்தின் மொழி அழ, உடலின் மொழி புன்னகைக்க… ‘சரி’ என்று சொல்லும் விதமாக அழுத்தமாக தலையசைத்தாள்.
பின், “கிளாஸுக்கு டைம் ஆச்சு” என்று சொல்லி, சுடர் நடக்க போனாள். என்ன நினைத்தாளோ? மெல்ல திரும்பி, “மாறா” என யாரும் அவன் பெயரை அப்படி ஒரு உரிமையுடன் உச்சரித்திருக்க முடியாதவொரு குரலில் அழைத்தாள்.
‘என்ன?’ என்ற ஒற்றை அர்த்தத்துடன் பார்த்தவனிடம், ‘ஒன்னுமில்லை’ என்று ஓராயிரம் அர்த்தங்களுடன் தலையசைத்துவிட்டுப் போகின்றவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தான் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லாததைக் குறையாக நினைப்பாளா? என தெரியவில்லை! ஆனால் அவளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் நிற்பதை மிகப் பெரிய குறையாக உணர்ந்தான்.
நேற்று ‘வர்றேன்’ என்று சொன்னது இந்தக்கணம் வரை ஞாபகத்தில் நின்று கொண்டு நிந்தித்தது.
கூடவே, தனக்காகக் காத்திருந்திருக்கிறாள் என்ற விடயம் வலியா? சுகமா? என்று பிரித்தறிய முடியாத ஒரு நிலைக்கு அவனைக் கூட்டிச் கொண்டு சென்றது.
அதிலிருந்து வெளியேற யாழ்மாறன் கண்களை மூடிக் கொண்டாலும், பள்ளத்தில் விழும் மழையாய், அவன் உள்ளத்தில் விழுந்து… நிறைந்து… நிரம்பி வழிந்து… ஓவியச்சுடர் சித்திரவதை செய்தாள். விலகிச் செல்ல நினைத்தவன் கலங்கிப் போய் நின்றான்.
காதல் ஒரு விசித்திர பாதை!
இங்கே தூரத்தை அதிகப்படுத்திக் கொண்டே போனால் போக நினைக்கும் இடம் விரைவில் வந்துவிடும் என்பதால், காதல் ஒரு விசித்திர பாதை!!
யாழோவியம், அத்தியாயம் – 10 தொடர்கிறது…
நினைத்துப் பார்த்து முடித்தவள், ‘நமக்குள்ள இது சரிவராது’ என்று மாறன் போல சொல்லி, சத்தமாகச் சிரித்துக் கொண்டாள்.
சற்று நரம் எல்லாம் மறந்து காதலனுடன் பேசிய பூரிப்பினில் இருந்தவளுக்கு, ஏனென்றே தெரியாமல் சட்டென ‘இது சரிவராது’ என்று வேறு யாரும் சொல்ல நேர்ந்தால்? என்ற கேள்வி வந்ததும், சிரிப்பு சுத்தமாக மறைந்திருந்தது. அன்று வலித்தது போல் வலித்தது.
உடனே, ‘ச்சே! இப்படியெல்லாம் நினைக்க கூடாது’ என்று தலையை வேகமாக உலுக்கிக் கொண்டிருக்கையில் கதவு தட்டும் சத்தம் கேட்டதும், ‘அப்பா’ என்று கணித்து, எழுந்து சென்று கதவைத் திறந்தாள். லிங்கம் நின்றார்.
“ப்பா” என்று சுடர் புன்னகைத்ததும், “ஹேப்பி பர்த்ட சுடர்” என்று மனதார மகளை வாழ்த்தினார்.
“கிஃப்ட் எங்கப்பா?”
“இந்த வருஷம் கிஃப்ட் சேனல் ஆரம்பிக்கிறதுதான். எப்பனு நீதான் சொல்லணும்?”
சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே, “சொல்றேன் ப்பா” என்றவள், “அம்மா எங்க?” என்று கேட்டாள்.
“ராஜா உனக்கு விஷ் பண்ணிட்டானா?”
“ம்ம். ஏன்ப்பா கேட்கிறீங்க?” என்று கேட்ட மகளிடம், “அவன் வருவான்னு நினைச்சி வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா” என்றார்.
“ஐயோ இந்த அம்மாவோட” என்று நொந்து கொண்டு, “இருங்கப்பா நான் போய் சொல்றேன்” என போகப்போனவளை, “வேண்டாம் சுடர்” என்று தடுத்தார்.
“ஏன்ப்பா?”
“நீ போனா, அம்மா ராஜாவைப் பத்தி ஏதாவது பேசி வருத்தப்படுவா. அப்புறம் நீயும் கவலைப்படுவ. இன்னைக்கு உன் பிறந்தநாள். அதனால நீ சந்தோஷமா இருக்கனும்”
“ப்பா அதுக்காக?”
“நான் அம்மாகிட்ட சொல்றேன். நீ போய் தூங்கு. சரியா?” என்றதும், “சரிப்பா” என்று அறைக்குள் வந்துவிட்டாள்.
உள்ளே வந்தமர்ந்தவளுக்கு மனம் மீண்டும் சுணக்கம் கொண்டது. அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டாள்.
‘ஏன் ராஜாண்ணா கால் கட் பண்ணீங்க?’ என்ற கேள்வியில் கண்கள் கலங்கி மனம் கஷ்டப்பட்டது. ‘எதுக்கு இப்படி மாறிட்டிங்க?’ என்று வருத்தியவளுக்கு மீண்டும் கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்தது.
‘இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் கேஸுக்கும் உங்களுக்கும் என்னதான் சம்பந்தம் ராஜாண்ணா?’ என்ற கேள்வியில் மனம் குழம்பிக் குழம்பித் தவித்தது.
பின் அதே மனம், விசாரணை முடிவில் எல்லாம் தெரிந்துவிடும். அதற்கு முன் ஏனிந்த குழப்பம் என்று சமாதானமும் செய்து கொண்டது.
‘ஆனால் அதுக்கப்புறம் என்ன நடக்கும்? ராஜாண்ணா சரியாடுவாங்களா? இல்ல, இப்படியேதான் இருப்பாங்களா?’ என்ற கேள்வி வந்ததும், பயத்தில் எழுந்து அமர்ந்துவிட்டாள்.
தூக்கம் வரவில்லை. ‘கஷ்டமாருக்கு ராஜாண்ணா” என்று முணுமுணுக்கும் போதே, கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்தப் பார்த்தாள். முடியவில்லை. கடைசியில் நன்றாக அழுதுவிட்டாள்.
இதே நேரத்தில் லிங்கம் வீட்டின் கீழ்தளத்தில்…
முன்னறையில் கிடந்த திவானில் லதா அமர்ந்திருந்தார். லிங்கம் வந்து சொல்லிப் பார்த்த பின்பும், தூங்கச் செல்லாமல் அப்படியே இருக்கிறார்.
முதலில் அவருக்குள், ‘ஏன் பேசவே மாட்டிக்கிறான்?’ என்ற கேள்வி வந்ததும், கஷ்டமாக இருந்தது. பின், ‘முன்ன மாதிரி எப்போ பேசுவான்? என்ற கேள்வி வந்ததும், கண்கள் கலங்கியது.
அதன்பின், ‘இப்படியே பேசமால்தான் இருப்பானோ?’ என்ற கேள்வி வந்ததும், கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
அம்மா, மகள் இருவருமே ராஜா நடந்து கொள்ளும் விதத்தை நினைத்து வருந்தினார்கள். ரத்த சம்பந்தமே இல்லாத உறவுதான்! இருந்தாலும், அவன் மீது அவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கு அளவேயில்லை.
அவர்கள் வாழ்வில் எவ்வளவு சந்தோஷங்கள் கொட்டிக் கிடந்தாலும், அவன் சரியாகப் பேசாமல் இருந்தால்… அவன் பாசம் கிடைக்காமல் போனால்… இருவரும் இப்படித்தான் சங்கடப்பட்டுப் போவார்கள்.
அவனிடம் அவ்வளவு எதிர்பார்ப்பு இருவருக்கும்! அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது ஏக்கங்களாக மாறி, எக்கச்சக்க கண்ணீர் துளியாக வெளிவந்தன.
அவர்கள் எதிர்பார்ப்பில் எந்த ஒரு தவறும் இல்லை. காரணம், இதற்குமுன் ராஜா, அப்படியொரு பாசத்தைக் கொட்டிக் கொடுத்திருந்தான். இனி வரும் காலங்களில்??
**********
அடுத்து ஒரு பதினைந்து நாட்கள் கடந்திருந்த நிலையில்…
அரசு அமைத்த விசாரணைக் குழு முதற்கட்ட அறிக்கையைத் தயாரித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் சமர்பித்திருந்தது.
நுழைவுத்தேர்வில் முதலாவது முறைகேடு ஆள்மாறாட்டம் ஆகும். கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர் ஒருவருக்குப் பதிலாக, மற்றொரு திறமையான மாணவர் தேர்வு எழுதுவது.
இரண்டாவது ‘பார்த்து எழுதுவது[copy]’. அதாவது தேர்வு அறையில் பார்த்து எழுதுவதற்கு உதவுவது. கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் பார்த்து எழுத, அவர்கள் அருகில் திறமிக்க மாணவர்கள் ‘டம்மி கேன்டிடேட்’ என்ற பெயரில் உட்கார வைக்கப்படுகிறார்கள்.
இது போன்று செயல்களில் திறமிக்க மாணவர்கள் மற்றும் வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதற்காக இவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் திறமையை வைத்து ₹25000 – ₹50000 வரை கொடுக்கப்படுகிறது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பதிலாக தேர்வு எழுதும் இவர்கள் ‘பெய்டு பிராக்சி [paid proxy]’ என்று சொல்லப்படுகிறார்கள்.
இது போன்று தேர்வு எழுதுவதற்காக கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் ₹1,50,000 – ₹4,00,000 வரை மதிப்பிலான பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
இங்கே ஆள்மாறாட்டம் செய்யும் பொழுது, தேர்வு எழுதும் அறையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக நுழைவுச் சீட்டில் [hall ticket] தேர்வெழுதுபவரின் புகைப்படம் ஆள்மாறாட்டம் செய்யும் ‘பெய்டு ப்ரோக்ஸி’ன் புகைப்படமாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஆதலால் தேர்வு மேற்பார்வை செய்பவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரம் சில தேர்வு அறை மேற்பார்வையாளர்கள் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் சில மேற்பார்வையாளர்கள் ‘பார்த்து எழுதும்’ மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களைக் கண்டுபிடித்து காவல்துறையிடம்
ஒப்படைத்து இருக்கிறார்கள். மேலும் அந்த மாணவர்கள் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதற்கு ஒரு சான்று செங்கல்பட்டு சம்பவம்.
ஆனால் இப்படி பதிவு செய்யப்படும் வழக்குகள் மீது முறையான விசாரணை நடைபெறவில்லை. சில காவல்நிலையங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் உண்மையைச் சொல்லும் பட்சத்தில், செங்கல்பட்டு காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் போன்று நிகழ்ந்திருக்கின்றன.
இந்த நுழைவுத்தேர்வு முறைகேடு ஆறு வருடமாக நடந்து வருகிறது. நூற்றி இருபத்தேழு வழக்குகள் மொத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைது நடவடிக்கையும் நடந்திருக்கிறது.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் பதினேழு பேர் மர்மமான முறையில்
இறந்திருக்கிறார்கள். சிலர் பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள். மற்றும் சிலர் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.
இங்கு இடைத்தரகர் மூலமாக கல்வியில் பின்தங்கிய மாணவர்களும் ‘பெய்டு ப்ராக்சி’யும் இணைக்கப் படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு இடைத்தரகர்கள் இருக்கிறார்கள்.
முறைப்படுத்தப்பட்ட இந்த முறைகேட்டின் தலைவன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற இடைத்தரகர்கள் ஒருங்கிணைந்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாவட்ட இடைத்தரகர்கள் சிலரிடம் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இவர்களை ஒருங்கிணைக்கும் தலைவன், அதாவது ‘ராக்கெட் லீடர் ஆஃப் திஸ் ஸ்கேம் [ rocket leader]’ என சொல்லப்படும் நபர் தலைமறைவாயிருக்கார்.
அவனைத் தேடும் பணியில் ‘ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்’ காவலர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அந்த ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டு, அவனிடம் விசாரணை நடத்தினால் இன்னும் பல தகவல்கள் வெளிவரும்.
இதுவே முதற்கட்ட அறிக்கையின் சாராம்சமாகும். இதை சமர்ப்பித்துவிட்டு வந்த அலெக்ஸையும் தியாகுவையும் ஊடக நபர்கள் சுற்றிக் கொண்டார்கள்.
இடைப்பட்ட நாட்களில் ஊடங்களில் வழக்கு பற்றி தீவிரமாக பேசப்பட்டதன் வெளிப்பாடாக முன்பை விட அதிக எண்ணிக்கையில் ‘மைக்’ இருந்தன.
“சார் வேற யாருக்கெல்லாம் இந்த ஸ்கேம்ல தொடர்பு உண்டு?” – ஊடகம்.
“இப்போதான் விசாரணை ஆரம்பிச்சிருக்கு. அடுத்தடுத்த விசாரணைகள்ல தெரிய வரும்” என்று சொல்லிக் கொண்டே, அலெக்ஸ் ஊடக நபர்களைக் கடந்து சென்றார்.
“சார்! இதுல சம்மந்தப் பட்டவங்களுக்கு தண்டனை என்னவா இருக்கும்?” – ஊடகம்.
“ரிப்போர்ட் கொடுக்கிறது மட்டும்தான் எங்க வேலை. ஜட்ஜ்மென்ட் கோர்ட்-தான் சொல்லணும்” என்று தியாகு காரில் ஏறிக்கொண்டார்.
‘ராக்கெட் லீடர்தான் முக்கிய குற்றவாளியா?’ ‘ராக்கெட் லீடர் எப்போ பிடிபடுவான்?’ ‘டம்மி கேண்டிடேட்-க்கு எப்படி ஹால் டிக்கெட் கிடைச்சது?’ என அடுத்தடுத்து கேள்விகள் எழுந்தாலும், பதில்கள் ஏதும் சொல்லாமல் அலெக்ஸும் தன் காரில் ஏறினார்.
இந்த அறிக்கை சமர்ப்பித்த பின், முறைகேடு வழக்கு அடிக்கடி ஊடங்களின் விவாதப்பொருளாக மாறியிருந்தது. பொதுமக்களிடமும் இதுபற்றி பேச்சுகள் இருந்தன.
இதற்கு அடுத்த நாள் நீதிமன்ற தரப்பிலிருந்து, ‘இதுபோன்று பெய்டு பிராக்சி பயன்படுத்தி தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியல் வேண்டும்’ என விசாரணைக் குழுவிடம் கோரிக்கை வைத்தது.
‘அப்படித் தேர்வு எழுதிய மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தால் பாதியிலே படிப்பு நிறுத்தப்படும். வேலையில் இருந்தால், அவர்களது வேலை மற்றும் படிப்பிற்கான சான்றிதழ் பறிக்கப்படும்’ என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
அடுத்து ஒரு பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்…
அமைச்சர் ராகினி அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். நேரம் 8:30 என்று சுவர் கடிகாரம் காட்டியது. சூழல் நாற்காலியில் கண்மூடிச் சாய்ந்து, கால் மேல் கால் தூக்கிப் போட்டபடி சுற்றிக் கொண்டே இருந்தார்.
எப்படி முயற்சி செய்துமே விசாரணைக் குழுவின் விசாரணையைத் தடுக்க முடியவில்லை. ஆளுங்கட்சி அமைச்சர் என்ற அதிகார பலம் இருந்தும் இப்படி ஏதும் செய்ய முடியாமல் நிற்பதை நினைத்தால் ‘ச்சே!’ என்று இருந்தது.
ஊடக விவாதங்களில் இந்த முறைகேடு பற்றி நிறையவே விவாதித்தார்கள். யூடியூப் காணொளிகளில், வாட்ஸ்அப் பார்வேர்டுகளில், சுருக்கமாக சமூக வலைத்தளங்களில் இது பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருந்தன.
ஆனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதைத் தொடரவிடாமல் பார்த்துக் கொண்டார். இருந்த போதிலும் நிம்மதியாக மூச்சுவிட முடியாமல் யாரோ கழுத்தை நெறிப்பது போல் இருந்தது.
அக்கணம் அறைக் கதவை தட்டிவிட்டு உதவியாளர் ஒருவர் உள்ளே வந்து ஏதோ சொன்னதும், ‘வரச் சொல்’ என சைகை செய்தார். சில நொடிகளில் ராகினி முன் அவரது பினாமிகளில் ஒருவர் அமர்ந்திருந்தார்.
“என்ன சொல்லுங்க?” என ராகினி அசதியாய் கேட்க, “இந்த வீடியோ பாருங்க” என்று பினாமி கைப்பேசியை நீட்டியதும், வாங்கிப் பார்க்க ஆரம்பித்தார்.
‘வணக்கம்! மதி நியூஸ் சேனலுக்காக நான் உங்கள் மதி’ என்று ஆரம்பித்த காணொளியைக் காணக் காண ராகினி முகம் கடுங்கோபம் கொண்டதாக மாறியது.
“இந்த எவிடன்ஸ் எப்படி இந்தப் பையனுக்குக் கிடைச்சது. முதல இவன் யாரு? இவ்வளவு தைரியமா பேசியிருக்கான்” என்று இருந்த கோபத்தை எல்லாம் கொட்டித்தீர்க்கும் குரலில் கேட்டார்.
“யாருன்னு தெரியலை. ஆனா இது நம்மளை பத்தின ரெண்டாவது வீடியோ”
“அவனை அடிச்சிக் கொல்லாம… என்கிட்ட வந்து கவுன்ட் சொல்லிக்கிட்டு இருக்க? வீடியோ பார்க்கச் சொல்ற?” என்று கத்தினார்.
“மேம்! நீங்க டென்ஷன் ஆகாதீங்க. ஆள் அனுப்பியாச்சு. எவிடென்ஸ் சோர்ஸ் எங்கன்னு கேட்கச் சொல்லியிருக்கேன். நாங்க பார்த்துகிறோம்” என்று சமாதானப்படுத்தினார்.
இதே நேரத்தில் மதி வீட்டில்…
பெரிய வீடெல்லாம் இல்லை. இரண்டு சிறு அறைகள் கொண்ட வீடுதான். அங்கிருந்த மடிக்கணினி உட்பட அனைத்துப் பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
உள்ளறையின் ஒரு மூலையில், உடலில் அங்கங்கே ரத்த காயங்கள் இருக்க, சில இடங்களில் ரத்தம் வடிய, பயத்தில் நடுங்கியபடி மதி ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.
சுற்றிலும் நான்கு குண்டர்கள் நின்று, “உண்மையைச் சொல்லு, உனக்கு யார் இதைக் கொடுத்தா?” என்று தெரிந்து கொள்ளும் வெறியுடன் கேட்டனர்.
மீண்டும், “நானே…” என்று ஆரம்பித்ததும், குண்டர்கள் தங்கள் கையிலிருந்த உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடிக்கத் தொடங்கினார்கள். வலியைப் பொறுத்துக் கொண்டு, வாயைத் திறக்காமல் தாக்குப்பிடித்தான்.
இப்படித்தான் வெகுநேரமாக தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் எவ்வளவுதான் அடி தாங்க முடியும். நான்கு பேர் சேர்ந்து கொண்டு ஒருவனை அடித்தால், எப்படித் தாங்க முடியும்? எப்படித் தடுக்க முடியும்?
இதில் ‘உயிரை எடுத்துவிடுவார்களோ?’ என்ற பயம் வேறு இருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் வலி தாங்க முடியாமல், “சொல்லிடுறேன். சொல்றேன்” என கை எடுத்துக் கும்பிட்டு, “சுடர் அக்காதான் கொடுத்தாங்க. அவங்கதான் எடிட் பண்ணிக் கொடுத்தாங்க” என்று உண்மையைச் சொல்லிவிட்டான்.
“அது யாரு?” என உலுக்கி கேட்க, “எக்ஸ் மினிஸ்டர் லிங்கத்தோட பொண்ணு” என்று சொன்னபின்பு அடிப்பதை நிறுத்தினார்கள். அப்படியே அந்த விடயம் ஒவ்வொரு நிலை அடியாட்களைக் கடந்து பினாமியிடம் வந்தது.
அதை ராகினியிடம் கூறிவிட்டு, “அதெப்படி? அந்த பொண்ணுக்கு கிடைச்சது” என பினாமி குழம்பும் போது, ராகினி பொறுமையாக யோசித்துப் பேசினார்.
“தலைவரும் பெரிசா சப்போர்ட் பண்ண தயங்கறாரு. அவருக்குக் கட்சி பேரு முக்கியம். அது தப்பில்லை. என்னை நான்தான் காப்பாத்திக்கணும்” என்று தன் நிலையைச் சரியாகப் புரிந்து பேசினார்.
பினாமி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“அப்படிக் காப்பாத்திக்க முடியலைனா… அட்லீஸ்ட் நான் இப்படி நிக்கிறதுக்கு காரணமானவங்களை பழி வாங்கணும்” என்று சொல்லும்போது யாழ்மாறன் முகம்தான் கண்முன்னே வந்தது.
“அங்க கேட்கலையா?” என பினாமி அந்த ஆண்குரலைச் சுட்டிக் காட்டினான்.
“அப்புறமா சொல்லிக்கிறேன். இப்போ நான் சொல்ற மாதிரி செய்ங்க” என்று அதிகார தோரணையில் சொன்னார்.
“சொல்லுங்க மேம்” என்று பினாமி பணிந்தார்.
“முதல அந்த சேனல்காரனை ரெண்டு விடீயோவையும் டெலீட் பண்ணச் சொல்லுங்க. ‘இத எதையும் வெளிய சொன்னா, உயிரோட விடமாட்டோம்’னு மிரட்டி விட்ருங்க”
“சரி மேம்”
“அப்புறம் அந்த அமைச்சர் பொண்ண…” என்றதும், “எதுக்கு அதெல்லாம்? அமைச்சர் பொண்ண ஏதாவது பண்ணா நாம மாட்டிப்போம்” என்றார்.
“இதெல்லாம் ஆரம்பித்திலயே அடக்கி வைக்கணும். இப்படியே விட்டா, அப்புறம் ஒவ்வொருத்தரா பேசிக்கிட்டு இருப்பாங்க” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.
“சரி! என்ன பண்ணனும்னு சொல்லுங்க?”
“சொல்றேன். ஆனா, இன்னைக்கு வேண்டாம். கொஞ்ச நாள் கழிச்சி நான் சொல்ற மாதிரி பண்ணுங்க” என்று சுடரை, ‘என்ன செய்ய வேண்டும்?’ என பினாமியிடம் சொல்லி முடித்தார்.
*********
சில நாட்கள் கழித்து…
சென்னை பாண்டிச்சேரி நெடுஞ்சாலை! தோழியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறாள். நேரம் மதியம் 2:20 என்று காரிலிருந்த கடிகாரம் காட்டியது.
சாப்பிட்டு ஓய்வெடுக்கும் வேளை என்பதால், சாலையில் பெரிதாக வாகனப் போக்குவரத்து இல்லை. காரை ஓட்டியபடி பாடல்கள் கேட்டு வந்தவளுக்கு மதியிடமிருந்து அழைப்பு வந்தது.
பாடலை நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்று, “சொல்லு மதி. எப்படி இருக்க?” என்றாள்.
“அக்கா” என்று சோர்வுடன் அவன் அழைத்ததும், “ஏய்! என்னாச்சு மதி?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
“க்கா! என்ட்ரன்ஸ் எக்ஸாம் பத்தி யூடூயூப் சேனல்ல போட்ட வீடியோவைப் பார்த்திட்டு வந்து நாலஞ்சி பேரு அடிச்சாங்க” என வலியின் தாக்கம் இன்றும் குறையாத குரலில் சொன்னான்.
“இது எப்போ மதி? நீ ஏன் அப்பவே சொல்லலை? இப்போ நீ எப்படி இருக்க?”
என்று படபடப்புடன் கேள்விகளை அடுக்கினாள்.
“கொஞ்ச நாள் முன்னாடி. அப்ப முடியலை க்கா. ஈரோடுல இருக்க பயந்திட்டு, எங்க ஊருக்கு வந்துட்டேன். இப்போ பரவால்ல” என்று காயங்களின் வலிகள் வெளிப்படும் வண்ணம் பேசினான்.
மேலும் நடந்ததைச் சொல்லி, “உங்களை கேர்ஃபுல்லா இருக்க சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்” என்றான்.
“ம்ம் சரி மதி. நான் பார்த்துக்கிறேன்” என்றவள், “ஆனா இதை இப்படியே விட வேண்டாம். நீ கிளம்பி வா போலீஸ் கம்பளைன்ட் கொடுக்கலாம்” என்றாள்.
“வேண்டாம். இப்படியே இது முடியட்டும். என்னால இதுக்கு மேல முடியாது. ப்ளீஸ் யார்கிட்டயும் எதும் சொல்லிடாதீங்க” என பயத்துடன் கெஞ்சினான்.
“பயப்பிடாத மதி நான்…” என்கையிலே, “அக்கா ப்ளீஸ்… உங்களுக்கு ஈஸியா இருக்கும். பட் எனக்கு போலீஸ் ஸ்டேஷன் அலையறதெல்லாம் கஷ்டம். வீட்ல விடமாட்டாங்க. இதுக்கே ரொம்பப் பயந்து போய் இருக்காங்க” என்று அவன் நிலைமையைச் சொன்னான்.
அதைப் புரிந்து கொண்டு, “சரி மதி, இப்ப வேண்டாம். உனக்கு சரியாகட்டும், அப்புறம் பார்க்கலாம். டேக் கேர்” என்று சொல்லி, பேச்சை முடித்தாள்.
வேறேதும் சொல்லாமல், “வச்சிடுறேன் க்கா” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.
கைப்பேசியை வைத்துவிட்டு மதி சொல்லியதை அசைபோட்டுக் கொண்டே காரை ஓட்டியவளுக்கு, தீடீரென்று சாலையில் வேறுபாடு தெரிந்தது.
வெகுநேரமாக முன்னே ஒரு கார் சென்று கொண்டிருப்பதையும், பின்னே ஒரு கார் வந்து கொண்டிருப்பதையும் சுடர் கவனித்தாள். கானல்நீர் தெரிந்த சாலையில் பெரிதாக வாகனங்கள் இல்லை என்பதையும் உணர்ந்தாள்.
பின் தொடர்ந்து வரும் காரை கண்ணாடி வழியே பார்த்தாள். சட்டென ஏதோ நெருடல் தோன்றியதும், முன் செல்லும் காரை கடந்து செல்ல நினைத்து வேகத்தை அதிகப்படுத்தினாள்.
ஆனால், அதற்கு முன்னே சென்று கொண்டிருந்த கார் விடவில்லை. ‘என்ன நடக்கிறது?’ என்று யோசிக்கும் போது, ‘கவனமா இருக்கனும்’ என்று மாறன், லிங்கம், மதி சொன்னது நியாபகத்திற்கு வந்து, ‘ஏதோ நடக்கப் போகிறது?’ என மனம் அடித்துக் கொண்டது.
ஏதோ மாட்டிக் கொண்டது போல் உணர்வு வந்ததும், சுடருக்கு உள்ளுக்குள் பயம் வர ஆரம்பித்தது.
