Kathambari Novels
முதலில் ஒரு ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டதில் சந்தேகப்படும் நபராக சேகரன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இப்போது இரு மெக்கானிக்கல் ஊழியர்கள் கொலையிலும் சந்தேகப்படும் குற்றவாளியாக இருக்கிறார்.
ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டிருந்தது காளிகாட் பகுதியிலுள்ள அவனது வீட்டில். அவனுடைய பெற்றோர்கள் வேறு இடத்தில் இருக்க, இங்கே தனியாக வசித்து வந்திருக்கிறான்.
மெக்கானிக்கல் ஊழியர்கள் கொலை நடந்தது நியூமார்க்கெட் பகுதியிலுள்ள ஒரு சாலையில். இவர்கள் நண்பர்கள். இந்த இருவரும் பைக்கில் வருகையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது இரட்டைக் கொலை.
மூன்று கொலையும் துப்பாக்கி கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இதுதான் அரவிந்த் பார்த்த டிவி காட்சிகள் கூறும் செய்தி!
அதிர்ச்சியில் இருந்து மீண்ட பூஜா… விறுவிறுவென நீதிமன்ற நுழைவாயிலை நோக்கிச் செல்ல, “இப்ப எங்க போற, நில்லு!” என்று பின்னே வந்த அரவிந்த் சொல்ல, “இன்ஸ்பெக்டர் சவுரவ் இருக்காருல… அவர பார்க்க போறேன்” என்று கோபமாக சொன்னபடி வெளிப்புற சாலைக்கு வந்திருந்தாள்.
“அவரை ஏன் பார்க்கணும்?”
“அவரைப் பார்த்து… சில கேள்வி கேட்கணும்”
“அவர்கிட்ட என்ன கேட்கப் போற?” என்று அரவிந்த் கேட்டதும், “இந்த ரெண்டு நாளா என்ன நடக்குதேனு புரியல? போலீஸ்தான் ஏதோ பண்றாங்களோன்னு எனக்கு டவுட்டா இருக்கு” என்று புலம்பியவள் நடக்காமல் நின்றுவிட்டாள்.
அவனும் நின்றான்.
“முதல ஒரு கொலைனு சொன்னாங்க. இப்ப இன்னும் ரெண்டுனு சொல்றாங்க. அப்பா மேல வேணும்னே பழி போடறாங்க. யாரு கொலை பண்ணான்னு இவங்களுக்கு கண்டுபிடிக்க முடியலை. அதுக்கு என் அப்பாதான் கிடைச்சாங்களா?” என்று கோபத்தை வெளிப்படுத்தினாள்.
“உனக்கு பர்சனலா போலீஸ் மேல நல்லெண்ணம் இல்ல. அதான் இப்படிச் சொல்ற. தப்பு பூஜா! இப்படி சொல்லாத”
“அப்படிதான் சொல்வேன். என் அப்பா ரொம்ப நல்லவர் தெரியுமா? அவரைப் போய்…” என்று அவள் பேச்சு தடுமாறி நின்றது.
“உனக்கு அவர் நல்லவராவே இருக்கலாம். ஆனா போலீஸ் பார்வையில அவர் மேல சந்தேகம் நிறைய இருக்கு” என்றான்.
“அவரை ஏன் சந்தேகப்படணும்?”
“தெரியாத மாதிரி கேட்கிற? உன் அப்பாவ அரெஸ்ட் பண்றதுக்கு முன்னாடி அவர் கார் சர்ச் பண்ணிருக்காங்க. அதுல ஒரு கன் கிடைச்சிருக்கு. உனக்கும் இது தெரியும்னு நினைக்கிறேன்”
“முதல தெரியாது. நியூஸ் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்”
“இது போதாதா ஒருத்தரை சந்தேகப்படறதுக்கு?”
“அது யாரோ கொண்டு வந்து வச்சிருக்கலாமே? இந்த கன்னையும் அந்தக் கொலையையும் எப்படி கனெக்ட் பண்ணறாங்க?”
“உன் முதல் கேள்விக்கான பதிலை சவுரவ் சார் இன்வெஸ்டிகேட் பண்ணி கண்டுபிடிப்பாரு. ஆனா ரெண்டாவது கேள்விக்கு பதில் இருக்கு. உங்க அப்பா கார்லருந்து எடுத்த கன் வச்சி, டெஸ்ட் ஃபயரிங் பண்ணிப் பார்த்திருக்காங்க.
அந்த புல்லட் சைட்ஸ்ல இருக்கிற மார்க்கும்… அந்த ஐடி எம்பிளாய் பிரணாப் பாடிலருந்து எடுத்த புல்லட்ல இருக்க மார்க்கும் ஒத்துப் போகுது. ஏன்னா ஷூட் பண்றப்போ கன் பேரல் புல்லட்டோட சைட்ஸ்ல கிளியர் மார்க் உண்டு பண்ணும். அதைவச்சுதான் உன் அப்பாவை சந்தேகப்படுறாங்க”
அவள் அமைதியாக நின்றாள்.
“இதெல்லாம் விடு. இது இப்ப வந்திருக்கிற ரிப்போர்ட்ஸ். பட், இந்த கொலை நடந்த அடுத்தநாள் காலையிலயே உங்க வீட்டுக்கு போலீஸ் வந்து நிக்க காரணம் என்னவா இருக்கும்?”
“ஏன்…? எப்படி? என்ன காரணம்?”
“அந்த ஐடி எம்பிளாய் வீட்டுக்கு உன் அப்பா போயிருக்காரு” என்றதும், அவள் ஏதோ சொல்ல வர, “இல்லை… அப்படி இருக்காதுனு சொல்லாத… அது ஒரு அபார்ட்மென்ட். ஸோ சிசிடிவி புட்டேஜ் இருக்கு. இதைத்தான் இப்ப சவுரவ் சார் எங்கிட்ட சொன்னாரு” என்றான்.
“அபார்ட்மென்ட்ல சிசிடிவி எல்லா ப்ளோர்லயும் இருக்குமா? ம்ம், கிரௌண்ட் ப்ளோர்லதான இருக்கும்?”
“எஸ். கிரௌண்ட் ப்ளோர் வரைக்கும் உன் அப்பா வந்த புட்டேஜும் இருக்குது. அந்த ஐடி எம்பிளாய் டோர் ஸ்டெப்ல நெஸ்ட் கேம் வச்சிருந்திருக்கான். ஸோ அவன் வீட்டுக்கு வந்து போனதுக்கான புட்டேஜும் இருக்குது. போதுமா?”
மீண்டும் அமைதியாக நின்றாள்!
“என்ன பேச்சே காணும்… இப்ப பேசு! உங்க அப்பா ஏன் அந்த பையன் பிரணாப் வீட்டுக்குப் போகணும்?”
“அப்பா…” என்று என்ன சொல்ல என்று தெரியாமல் நிறுத்தியவள், “ஃபர்ஸ்ட் ரெண்டு கொலையிலயும் ஏன் அப்பாவை சந்தேகப்படறாங்க?” என்றாள்.
“அந்த மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் பாடில இருந்து எடுத்த புல்லட்… இந்த ஐடி எம்பிளாய் பிரணாப் பாடில இருந்த புல்லட்டும் ஒன்னுதான்”
அவள் முகம் ஒருமாதிரி போக, “ஓகே… இதெல்லாம் விட்ரு. நீ சொல்றது போல வேணும்னே போலீஸோ, யாரோ பழி போடறாங்கனே இருக்கட்டும். ஆனா இன்வெஸ்டிகேட் பண்றப்போ உங்க அப்பா ஏன் அமைதியா இருக்காரு?
இது நான் பண்ணல… இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல… இப்படி ஏதாவது சொல்லணும் இல்லையா. உன் அப்பா ஒரு வார்த்தை பேசலையாம். இதையும் சவுரவ் சார்தான் சொன்னாரு” என்றான்.
‘ஏன் அப்பா பேச மாட்டிக்கிறாங்க?’ என்று பூஜா யோசிக்க, “எதுவும் தெரியாம சும்மா போலீஸ்தான் வேணும்னே பண்றாங்கனு சொல்லாத” என்றான் சற்று கோபமாக.
உடனே, “சரி. நான் ஒன்னும் சொல்லலை” என்று சமாதானமாகி, “வாங்க நம்ம லாயர் போய் பார்ப்போம்” என்றதற்கு… அவன் நகராமல் நின்றதும், “போலீஸ் பத்தி இனி எதுவும் சொல்ல மாட்டேன். வாங்க ப்ளீஸ்” என்றாள்.
அவளை ஒருநொடி பார்த்தவன், “நான் வரலை” என்று சொல்ல, “ஏன் இப்படிச் சொல்றீங்க? நான் சொன்னதுனால கோபமா?” என்று கேட்டாள்.
‘இல்லை’ என்று தலையசைத்துவிட்டு, “நான் யோசிக்கணும் பூஜா” என்றான்.
“என்ன யோசிக்கணும்?”
“உனக்கு இங்க எதும் தெரியாது… ஐயோ பாவம்னு நினைச்சி ஹெல்ப் பண்ண நினைச்சேன். பட் மூணு கொலை பண்ணிருக்கிறதா சந்தேகப்படுற ஒருத்தர் பக்கம் நிக்கிறதுக்கு… நான் கொஞ்சம் யோசிக்கணும்”
அதற்குமேல் எதுவும் கேட்டுக் கொண்டு நிற்காமல், “தேங்க்ஸ் இவ்ளோ தூரம் வந்து ஹெல்ப் பண்ணதுக்கு. நான் போய் லாயரை பார்த்துக்கிறேன்” என்று நடக்க ஆரம்பித்தாள்.
அவனும் ஒன்றும் சொல்லவில்லை. ஆட்டோ கிடைக்குமா என்று பார்த்தான். அக்கணம், சற்றுத் தள்ளி நின்ற ஒரு இளைஞன் பூஜா போவதையே பார்த்துக் கொண்டிருப்பது அரவிந்த் கண்ணில் பட்டது.
யாரிவன்? எதற்காக இவளைப் பார்க்க வேண்டும்? என்ற கேள்வி வந்த சமயம் ஆட்டோ வந்துவிட, அதில் ஏறி அவன் காவல் நிலையம் சென்றான். அதன்பின் அந்த இளைஞன் பற்றி அவன் யோசிக்கவில்லை.
இன்று பூஜாவைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பெயர் அலோக்! அவன் பார்வையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது! அவ்வளவுதான் இப்போதைக்கு!
ஆனால் அந்த ‘அவ்வளவு’கூட பூஜாவிற்கும், அரவிந்திற்கும் தெரியாது!!
மானிக்டாலா காவல் நிலையம்!
சேகரன் எப்படிப்பட்டவர்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும், அவருக்கும் என்ன, எப்படி சம்பந்தம் இருக்க முடியும்? அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்திருக்கும்? என்று அரவிந்த் யோசித்தான்.
ஆனால் எப்படிப் பதில் தெரிந்து கொள்ள என்று தெரியவில்லை. சேகரனது வங்கியில் கேட்கலாம். ஆனால் அது சவுரவின் விசாரணையில் தலையிடுவது போலாகிவிடும். என்ன செய்ய என்று யோசித்தபடி இருந்தான்.
***********
காளிகாட் காவல் நிலையம்!
நேரம் எட்டு மணி இருக்கும் போது, சவுரவ் கோஷ் ஜீப்பில் வந்து இறங்கினார். யோசித்தபடி அறைக்குள் சென்றார்.
மாலை நேரத்தில், சேகரன் வங்கி சென்று அவரைப் பற்றி விசாரித்திருந்தார். வங்கி உதவி மேலாளரிடம் கேட்டபோது, ‘எனக்கு தெரிந்தவரை நல்ல மனிதர். ஜெனரல் மேனேஜர் பதவி கிடைக்கப் போவதாக இருந்தது’ என்றிருந்தார்.
‘கொலை செய்யப்பட்ட பசங்களை உங்களுக்குத் தெரியுமா? அவங்களுக்கும் சேகரனுக்கும் என்ன தொடர்பு?’ என சவுரவ் கேட்கவும், ‘பர்சனலா தெரியாது. பட், அதுல ரெண்டு பேருக்கு எங்க பேங்க்ல அக்கௌன்ட் இருக்கு சார்’ என்று சொல்லியிருந்தார்
‘யாருக்கெல்லாம் அக்கௌன்ட் இருக்கு?’
‘இந்த ஐடி எம்பிளாய் பிரணாப், மெக்கானிக்கல் என்ஜினியர் நிர்மல். இவங்க ரெண்டு பேருக்கும் இங்க அக்கௌன்ட் இருக்கு’
‘இந்த பசங்களுக்கு பேங்க் ரிலேட்டட் ப்ராப்ளம் ஏதும் இருந்திருக்கா? இல்லை பர்சனலா அவருக்கும் இவங்களுக்கும் ஏதும் பிரச்சனையா?’
‘பேங்க்ல எந்த ப்ராபளமும் இல்ல. பர்சனலா இருந்திருக்குமானு எனக்குத் தெரியல’
‘மூணாவதா நடந்த கொலை ஒர்க்கிங் டேல நடந்திருக்கு. அன்னைக்கு அவர் ஆபிஸ் வந்திருக்காரு. இங்க எப்படி இருந்தாரு?’
‘சார் அன்னைக்கு நான் லீவ்’ என்றதும் அவரிடம் விசாரணை முடிந்தது என்று சொல்லிவிட்டு, இதே கேள்வியை வங்கி ப்யூனிடம் கேட்டார்.
‘படபடன்னு வெளியே கிளம்பிப் போனாரு சார். திரும்பி வர்றப்போ பயங்கிற டென்ஷனா வந்தாரு. என்கிட்ட டீ கேட்டாரு. கொண்டு வந்து தந்தேன். ஆனா அதைகூட குடிக்கலை சார்’ என்றதும், வங்கியில் மற்றவர்களிடமும் சேகரன் பற்றி விசாரித்துவிட்டு, அவர் வசிக்கும் குடியிருப்புக்குச் சென்றார்.
குடியிருப்பு வாசிகளிடம் சேகரன் பற்றி விசாரித்த வரையில், ‘எங்களுக்குத் தெரிந்தவரை நல்ல மனிதர்’ என்றே சொன்னார்கள்.
ஆனால் குடியிருப்பு செக்யூரிட்டியிடம் விசாரித்தபோது, ‘அவர் உண்டு… அவர் வேலை உண்டுனு இருப்பாரு சார். ஒரே ஒரு நாள்தான் இந்த கேட்கிட்ட வச்சி அவருக்கும்… மூணு பசங்களுக்கும் இடையில வாக்குவாதம் நடந்திச்சு’ என்று சொல்லியிருந்தான்.
கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படத்தைக் காட்டி, ‘இவர்களா?’ என்று கேட்க, ‘ஆம்’ என்று செக்யூரிட்டி சொல்லியிருந்தான்.
இதன்மூலமாக சவுரவ் கோஷ் மற்றும் அரவிந்த் இருவரின் கேள்விகளுக்குப் பதில் கிடைத்திருந்தது.
வங்கியில் பிரச்சனை இல்லை. சேகரனும் வாய் திறக்கவில்லை. செக்யூரிட்டி மற்றும் ப்யூன் சொன்னதை வைத்துப் பார்த்தால், ‘இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடத்தப்பட்ட கொலைகளா? அப்படி என்றால் என்ன அது?’ என்ற கேள்வி சவுரவிற்கு வந்தது.
***********
மானிக்டாலா பகுதி!
ஒன்பது மணிபோல் வீட்டுக்கு வந்திருந்தான். தாமதமாகியிருந்ததால் வாணி சமைத்து இருந்தாள். புத்துணர்ச்சியாக உணர குளிர்ந்த நீரில் ஒரு குளியல் போட்டு வந்து அரவிந்த் சாப்பிட ஆரம்பித்தான்.
அவன் சாப்பிடும் அளவையும் வேகத்தையும் பார்த்த வாணி, “என்னடா லஞ்ச் சாப்பிடலையா?” என கேட்க, “ம்கூம் வேலை” என்றான். மேலும், “க்கா, அந்தப் பொண்ணு பூஜா, இன்னைக்கு என்னைப் பார்க்க வந்திருந்தா” என்றான்.
“நான் சொன்ன மாதிரி வந்திருந்தாளா?” என்று ஆச்சரியப்பட்டவள், “நீ என்ன பண்ணடா? நேத்து என்கிட்ட சொன்ன மாதிரியே சொல்லி அனுப்பிச்சிட்டியா அவளை?” என்று கேட்டதும், அரவிந்திற்கு புரை ஏறிவிட்டது.
“மெதுவா சாப்பிடு” என்று அவன் தலையில் தட்டி தண்ணீர் தந்துவிட்டு, “இப்ப சொல்லு என்ன சொன்ன?” என்றதும், “அது…” என்று தயங்கியவன், “சாப்பிட்டு சொல்லவா?” என்று கேட்டான்.
“ஏன்? சாப்பிடறப்போ பேசக் கூடாதுனு சொல்ல போறியா?” என்று சிரிக்கவும், அவனும் சிரித்தபடியே சாப்பிட்டான்.
அரவிந்த் சிரிப்பைப் பார்த்து, “நீ என்கிட்ட சொன்னதை அந்த பொண்ணுகிட்ட சொல்லலைனு தெரியுது. வேற என்ன சொன்னனு சொல்லு” என்று கேட்கவும் நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடித்தான்.
முழுவதும் கேட்டவள், “அடப்பாவி! வேண்டாம்னு சொல்லிட்டு, பார்த்த முதல் நாள்லயே அவளுக்காக சாப்பிடாம அலைஞ்சிருக்க! என்னடா நடக்குது” என திகைப்பாக கேட்டாள்.
“ஒன்னுமில்லை. அந்தப் பொண்ண பார்த்தா பாவமா இருந்தது. ஸோ ஹெல்ப் பண்ணேன்”
“இதைத்தான நான் நேத்து சொன்னேன்”
“சொன்ன…” என இழுத்தவன், “இன்னைக்குதான் எனக்குத் தோணிச்சி” என்று எளிதாக முடித்துவிட, “அப்படியாடா?” என்று அவள் நம்பாமல் பார்க்க, “நிஜமா அக்கா” என்று சத்தியம் செய்தான்.
“நம்பிட்டேன் அரவிந்த்” என்றவள், “இப்ப நான் வேற அலைன்ஸ் பார்க்கவா? வேண்டாமா?” என்று கேலி செய்யவும், “ஏன் இப்படிக் கேட்கற? எப்பவும் போல பாரு க்கா” என்றான் சாப்பிடுவதில் கவனமாக இருந்தபடி.
“சரி சரி” என்றவள், “தூங்க போறேன்? இதெல்லாம் எடுத்து வச்சிடறியா?” என சமையல் பாத்திரங்களைக் காட்டி கேட்கவும், “என்னாச்சு?” என்று பதற்றப்பட, “தூக்கம் வருது. அவ்ளோதான்” என்று எழுந்து கொண்டாள்.
“ஏதும் வேணும்னா சொல்லு” என்று சொல்ல, “சரிடா” என அறை வாசல் வரை சென்றவள், “உன்னோட ஃபோன் நம்பர் அந்த பொண்ணுகிட்ட கொடுத்திட்டு வந்தியா அரவிந்த்?” என்று கேட்டு நின்றாள்.
“இல்லையே க்கா. ஏன் கேட்கிற?”
“அவ தனியா இருக்கிறா. எதும் ஹெல்ப் வேணும்னா என்ன பண்ணுவா?” என பூஜாவிற்காக பார்த்துக் கேட்க, “அதைப் பத்தி வொரி பண்ணிக்காத. அவங்க அபார்ட்மென்ட்ல ஹெல்ப் பண்றாங்க. ஏன்னா லாயர்ஸ் லிஸ்ட் அவங்கதான் கொடுத்ததா சொன்னா. அப்புறம் என் ஃபோன் நம்பர் எதுக்கு?” என்றான்.
“அப்போ ஓகே. குட் நைட்” என்று உறங்க சென்றதும் அலைபேசி பார்த்தபடியே சாப்பிட்டு முடித்தான். பின் ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து சமையலறையில் போய் வைத்துவிட்டு உறங்க சென்றான்.
***********
காளிகாட் பகுதி!
நீதிமன்றத்திற்குள் வந்த பின்புதான் வழக்கறிஞர் பெயர் விவரம் கேட்காமல் விட்டது பூஜாவிற்குத் தெரிந்தது. வெளியே வந்து ‘அரவிந்த் இருக்கிறானா?’ என்று தேடினாள். அவன் இல்லை என்றதும், வேறு வழக்கறிஞரைப் பார்த்து விவரம் கேட்டுவிட்டு, ப்ரீபெய்டு கேப் பதிவு செய்து வீட்டிற்கு வந்தாள்.
‘என்னாச்சு?’ என்று சிலர் கேட்டறிந்தனர். அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தவளுக்கு வழக்கம்போல் அத்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அவருக்கும் பதில் சொல்லி முடித்தாள்.
மெதுவாக கதவைத் தாழிட்டவள், அப்படியே சரிந்து அதில் அமர்ந்து ஓவென ஏங்கி ஏங்கி, ‘ப்பா ப்பா’ என்று அழைத்து அழ ஆரம்பித்தாள்!
அதுவரை ஆட்டோக்காரர், அரவிந்த், கேப் டிரைவர், குடியிருப்பு வாசிகள் என மற்றவர்கள் முன் அழக்கூடாது என்று அடக்கி வைத்திருந்த அழுகை. தனிமை கிடைத்ததும் ஒட்டுமொத்தமாக அதை வெளிப்படுத்தினாள்!
சற்றுநேரத்தில் அழுகை, கவலையை மீறி பசி எடுத்தது. எழுந்து சமையலறை சென்று பிரிட்ஜ்லிருந்து மாவு எடுத்து தோசை சுட்டாள். எதுவும் நினைக்காமல் அலைவதற்கு தெம்பு வேண்டுமென இரண்டு வாய் வைத்தவள், ‘அப்பா இப்ப எப்படி இருக்காங்களோ? சாப்பிட்டிருப்பாங்களா? சாப்பாடு தருவாங்களா?’ என்ற எண்ணம் வரவும் தோசையை சாப்பிட முடியவில்லை.
அப்படியே மிச்சம் வைத்துவிட்டாள். அதன்பின் ஒரு டீ போட்டுக் குடித்துவிட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தவள், ‘ஏன் அப்பா பேச மாட்டிக்கிறாங்க?’ என்ற ஓர் கேள்வி வந்து கொண்டே இருக்க, தூக்கம் வரவே மாட்டேன் என்று ஆனது.
***********
காளிகாட் காவல்நிலையம்!
காவல்நிலையத்தில் சாலை அமைதியாக இருந்தது.
ஆய்வாளர், துணை ஆய்வாளர் யாருமில்லை. இரவு நேர காவலர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் காவல்நிலைய முன்னறையில் அப்போது வந்த புகார் பற்றிக் கேட்டுக் கொண்டு இருந்தனர். அந்த அறையிலிருந்து பிரிந்து சென்ற பகுதியில் லாக்அப் 1, லாக்அப் 2 என்று இரண்டு அறைகள் இருந்தன.
அதில் லாக்அப் 2-ன் கம்பிகளுக்குப் பின் சேகரன் இருந்தார்!
அந்த அறையில் ஒரு திண்டு இருந்தது. அதில் அமர்ந்திருந்தார். அவருக்கென வந்திருந்த இரவு உணவை உண்ணாமல் வைத்திருந்தார். இன்றோடு இங்கே வந்து இரண்டு நாளாகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் தாடையில் முளைத்திருந்த வெள்ளை முடிகளும், உடலின் பெரும் தளர்வும் இருந்தது.
மனம் முழுதும் மகளைப் பற்றிய எண்ணம்தான்!
என்ன செய்வாளோ? எப்படிச் சமாளிக்கிறாளோ? என்றே யோசனை. கூடவே பாதுகாப்பாக இருப்பாளா என்ற கவலை வந்தது. பொறுப்பான பெண்தானே, பார்த்து இருப்பாள் என சமாதானம் செய்து கொண்டார். இருந்தும் மகளைப் பார்க்க வேண்டுமென மனம் துடிக்க, தூங்காமல் உட்கார்ந்திருந்தார்.
நேரம் கழிந்தது. இரவு முடிந்தது பகல் வந்தது.
ஆய்வாளர், துணை ஆய்வாளர் வந்திருந்தனர். இரவு வந்த புகாரைப் பார்த்து முடித்தனர். முன்னறையில் காவலர்களும், சில ஆட்களும் இருந்தனர். காவல் நிலையம் இருக்கும் சாலையானது ஆட்டோகளும், இருசக்கர வாகனங்களும் அவசரகதியில் செல்லும் சத்தம் சூழ்ந்ததாக இருந்தது.
அச்சாலையில் ப்ரீபெய்டு டேக்சியில் வந்து இறங்கிய பூஜா காவல் நிலையம் நோக்கிச் சென்றாள். முன்னறை வந்தவள் காவலர் ஒருவரிடம் ஆய்வாளரைப் பார்க்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.
அவரும் சவுரவ் அறைக்குச் சென்று அதை சொன்னார். முக்கியமான வேலை என்று ஒன்றும் இல்லை. இருந்தும், ‘அந்த பொண்ண வெய்ட் பண்ண சொல்லு’ என்று பெங்காலியில் சொல்லிவிட்டார்.
வெளியே வந்த காவலர் பூஜாவிடம் இதைச் சொல்லவும், ‘சரி’ என்பது போல் ஒரு இடத்தில் அமர்ந்தாள். எவ்வளவு நேரமானாலும் காத்திருக்க வேண்டும். கோபப்பட்டுக் கத்த கூடாதென தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
அரைமணி நேரம் காக்க வைத்துவிட்டு, சவுரவ் அவளை உள்ளே அழைத்தார். அமர்ந்திருந்தவர் முன்னே சென்று பூஜா நின்றதும், அவர் ஏதோ கடகடவென பெங்காலியில் பேசினார்.
தன்னைக் காக்க வைத்தது, இப்போது பெங்காலியில் பேசுவது எல்லாம் தான் கத்திப் பேசியதற்காக என அப்போதுதான் பூஜாவிற்குப் புரிந்தது. அதென்ன புரியாத மொழியில் பேசுவது என்று முணுக்கென்று கோபம் வந்தது.
இருந்தும், ‘சார்… எனக்கு பெங்காலி தெரியாது. நீங்க பேசறது புரியல. ஸோ இங்கிலிஷ்ல பேசுங்க. ப்ளீஸ்’ என்று கோரிக்கை போல சொன்னவுடனே அவர் பேசுவதை நிறுத்திவிட்டு, அவள் பின்னே ஏதோ தேடுவது போல் பார்த்தார்.
‘என்ன பார்க்கிறார்?’ என்பது போல் பூஜாவும் பார்த்த நேரத்தில், ‘இன்னைக்கு யாரையும் கூட்டிட்டு வரலையா… ரெக்கமென்டேஷன் பண்ண’ என்று சவுரவ் ஆங்கிலத்தில் கேட்டதும், அரவிந்தைக் கூப்பிட்டு வந்து பேசச் சொன்னதைச் சொல்கிறார் என்று புரிந்தது.
எதுவுமே பேசாமல் அவள் இருக்கவும், ‘போ… போய் அவனைக் கூட்டிட்டு வா. என்ன சொல்லணுமோ அவன்கிட்டயே சொல்லிக்கிறேன்’ என்றதும், அவளால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியவில்லை.
‘எனக்கு இங்கே என்ன நடக்குன்னு புரியாம இருந்தது. நீங்களும் கோபப்பட்டு பேசினீங்க. ஸோ அவர்கிட்ட ஹெல்ப் கேட்டேன். அவர் வந்து பேசினாரு. அது முடிஞ்சிருச்சு. திரும்ப அதைச் சொல்லாதீங்க’ என சற்று குரல் உயர்த்தினாள் ஆங்கில மொழியில்.
‘நீ எனக்கு ஆர்டர் போடறியா?’ என்றார் சவுரவ் கோபமாக.
‘அப்படியில்லை. எனக்கு சில விவரம் தெரியணும்’
‘சொல்ல முடியாது’ என்றார் எளிதாக.
‘எங்க அப்பா பேசினாரா…? எப்படி இருக்காருன்னு மட்டும் சொல்லுங்க’
‘எதுவும் சொல்ல முடியாது’ என்றார் கறாராக.
அவளுக்கு கோபம் வந்துவிட, ‘ஃபர்ஸ்ட் ரெண்டு கொலை நடந்த இடத்தில என் அப்பா இல்லவே இல்ல. அதையும் அவர் பண்ணாருனு எப்படிச் சொல்றீங்க?’ என்று கேட்டாள்.
‘உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியமே இல்லை’ என்றவர் வெளியே இருக்கும் காவலர் ஒருவரை பெயர் சொல்லி அழைத்தார்.
‘வேணும்னே என் அப்பா மேல பழி போடறீங்க’ என்றாள் குரல் உடைய!
அந்தக் காவலர் வர, அதுவரை ஆங்கிலத்தில் பேசிய சவுரவ், ‘இந்த பொண்ண வெளிய கூட்டிட்டிப் போ’ என பெங்காலியில் உத்தரவிட, அவரும் ஆய்வாளர் சொன்னதைச் செயல்படுத்த வர, ‘வேண்டாம். நானே போயிடுறேன்’ என சைகையில் சொல்லி, சவுரவை கோபமாக பார்த்தபடி வெளியேறினாள்.
அதன்பின் ஒரு நொடிகூட அங்கே நிற்கவில்லை. காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கூடவே இப்படி ஒருவரின் விசாரணையில் அப்பா இருக்கிறார் என்று நினைத்தது கண்ணீர் வந்துவிட்டது.
இரண்டொரு துளிகள் கன்னத்தில் இறங்கியதைத் துடைத்து, ‘இப்போ என்ன செய்யன்னு யோசி பூஜா’ என்று தன்னை தேற்றிக் கொண்டாள். திரும்பவும் அரவிந்தைக் கூட்டி வந்து பேச சொல்லவா? ஆனால் அது அவனுக்கு, அவன் வேலைக்கு இடையூறு செய்வது போல் இருக்குமோ என்று தயங்கினாள்.
ஒருகட்டத்தில் இப்படியே நிற்பதற்கு அவனிடம் சென்று கேட்டுப் பார்க்கலாம் என்று ஆட்டோ பிடித்து மானிக்டாலா சென்றாள்.
தமிழரசியின் தந்தையாகும் நான் – கதையை இங்கே படிக்கலாம்
