Kathambari Novels
‘இங்கே நின்று பேச வேண்டாம்’ என நினைத்த மாறன், “அவங்களை உள்ளே அனுப்புங்க” என்று காசியிடம் கூறிவிட்டு, அலுவலக அறைக்குள் சென்றான்.
அந்தப் பெண்மணிக்கு கொஞ்சம் தண்ணீர் தந்து, ‘அழாம போங்க. எல்லா விவரத்தையும் சொல்லுங்க’ என்று மாறனிடம் பேச அனுப்பி வைத்தார்.
உள்ளே வந்தவரைப் பார்த்த மாறன், “உட்காருங்க” என்று முன்னிருந்த இருக்கையைக் காட்டினான்.
தயங்கி நின்றவர், “ஐயா இது” என அழுது கொண்டே மனுவை நீட்டினார்.
“முதல உட்காருங்க” என்றதும், இருக்கையில் அமர்ந்து கொண்டு மீண்டும் மனுவை அவனிடம் கொடுக்கப் பார்த்தார்.
“வச்சிருங்க!” என்று வாங்க மறுத்தவன், “எனக்குக் கொஞ்ச விவரம் வேணும். அழாம பேசுங்க. அப்போதான் ஏதாவது உதவி பண்ண முடியும்” என்றான்.
வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “சரிங்கய்யா” என்றார்.
“இன்ஜினீரியங் படிச்ச பையன் சரியா?” என்ற பதில் தெரிந்த கேள்வியோடு ஆரம்பித்தான்.
“ஆமாங்க”
“எங்கே?”
“எங்க ஊரு தெண்ணூர்ங்க. ஆனா, என் புள்ள படிச்சது சென்னையிலதான்”
“ஓ!” என்றவன், “வேலை ஏதாவது…?” என்று கேட்டான்.
“இல்லைங்க. வேல பார்க்கல”
“சரி! எதுக்காக உங்க பையன் போலீஸ் ஸ்டேஷன் போகணும்?” என்று பிரச்சனைக்குள் வந்தான்.
“போலீஸ்காரங்கதான் கூட்டிட்டுப் போனாங்க” என்று சொல்லி, மகனின் முடிவை நினைத்து மீண்டும் அழுதார்.
“அரெஸ்ட் பண்ணாங்களா? அதைத்தான் இப்படிச் சொல்றீங்களா?” என்று விளக்கமாகக் கேட்டான்.
சேலை முந்தானையில் கண்ணீரைத் துடைத்தபடியே, “ஆங்! அப்டித்தான் சொல்றாக” என்றார்
“எதுக்கு அரெஸ்ட் பண்ணாங்க?” என கைது செய்யப்பட்டதன் காரணம் கண்டறிய முயற்சித்தான்.
“அது தெரியலையே” என்று மீண்டும் அழுதார்.
“ப்ச்!” என கொஞ்சம் எரிச்சலடைந்தவன், “உண்மையைச் சொன்னாதான், என்னால உதவ முடியும்” என்று சொல்லிப் பார்த்தான்.
“ஐயா அவன் வீட்ல இருக்கப்ப புடிச்சிட்டுப் போகல. எனக்கு நிசமா எதுவுமே தெரியாதுங்க. நீங்கதான் உதவணும்” என்று மேலும் மேலும் அழுதார்.
“நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல எதுவும் கேட்கலையா?”
அழுகையைக் கட்டுப்படுத்தியபடியே, “கொஞ்சம் சொன்னாக. எனக்குப் புரியல…” என்று வாய்பொத்தி அழுதார்.
“எதும் புரியலைன்னு சொல்றீங்க, மனு எழுதியிருக்கீங்க, கொடுக்க கலெக்டர் ஆபிஸ் வரைக்கும் வந்திருக்கீங்க. அது எப்படி?”
கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ஆஸ்பத்திரில ஒருத்தர் சொன்னாங்கய்யா” என மூக்கை உறிஞ்சி கொண்டவர், “இப்டி இப்டி பண்ணுங்கன்னு” என்றார்.
‘ஓ!’ என்பது போல் தலையசைத்துக் கொண்டான்.
“ஆஸ்பத்திரிலதான் என் புள்ளைய வச்சிருக்காக. தற்கொல பண்ணிட்டான்னு சொல்லி, புணத்த கைநாட்டுப் போட்டு வாங்கச் சொன்னாக”
‘எதற்காக அந்தப் பையனை கைது செய்ய வேண்டும்?’ என்று மட்டுமே மாறன் மூளை யோசித்துக் கொண்டிருந்தது.
“அதெப்படிங்கய்யா… நல்லா இருந்த பையன்… திடிர்னு செத்துட்டான்னு சொன்னா… எப்டி நம்ப?”
“நீங்க தனியாவ வந்திருக்கீங்க? உங்க கூட யாரும்… உங்க வீட்டுக்காரர்?”
“அவரு இப்ப இல்லை. ஒத்தாசைக்கு அக்கா இருக்கு. எனக்காக அது இப்ப ஆஸ்பத்திரில உக்காந்திருக்கு”
ஒரு முடிவுக்கு வந்தவனாய், “எந்த போலீஸ் ஸ்டேஷன்?” என்று கேட்டான்.
அவர் சொன்னதும், “நீங்க வெளிய இருங்க. கொஞ்ச நேரத்தில கூப்பிடுறேன்” என்றான்.
“ஐயா இது” என மீண்டும் மனுவை நீட்டியவரிடம், “வச்சிருங்க. பார்க்கலாம்” என்று சொல்லி, அவரை அனுப்பிவிட்டான்.
அவர் சென்றதும், மாவட்ட கண்காணிப்பு ஆய்வாளர் சசியை கைப்பேசியில் அழைத்தான். சசி மாறனின் நண்பனும் என்பதால் அழைப்பை ஏற்றதும், “சொல்லு மாறன்” என்றான்.
காவல் நிலையத்தின் விவரம் சொல்லி, “அங்கே ஒரு லாக்அப் டெத்! உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“லாக்கப் டெத்?” என ஒரு நொடி யோசித்தவன், “ம் தெரியும். ஆக்சுவலா இட்ஸ் சூசைட். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சு” என விவரங்கள் சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது, “என்ன கேஸ்? கேஸ் டீடெயில்ஸ் வேணுமே சசி” என்று மாறன் குறுக்கிட்டான்.
“ஒரு டென் மினிட்ஸ் கொடு, ஆபிஸ் போய்ட்டு கால் பண்றேன்”
“சரி சசி” என்று அழைப்பைத் துண்டித்தான்.
பார்த்துக் கொண்டிருந்த வேலையைத் தொடரலாம் என்று நினைத்தவனை, வெளியே அழுது கொண்டிருந்த பெண்ணின் குரல் கலைத்ததும், காசியை வரவழைக்க மணி அடித்தான்.
நொடி நேரத்தில், “என்ன சார்?” என்று கேட்டுக் கொண்டே, காசி உள்ளே நுழைந்தார்.
“அவங்ககிட்டருந்து மனுவை வாங்கிட்டு வாங்க” என்றதும், காசி சென்று மனுவை வாங்கி வந்து, மாறனிடம் தந்துவிட்டு வெளியே போய்விட்டார்.
மாறன் மனுவை வாசித்துக் கொண்டிருக்கையிலே சசியிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்று, “சொல்லு சசி!” என்றதும், “அந்தப் பையன் இன்ஜினீயரிங் என்ட்ரன்ஸ் டெஸ்ட் நடக்கிறப்ப பார்த்து எழுத ஹெல்ப் பண்ணியிருக்கான்” என்று ஆரம்பித்து, வழக்கு பற்றிய விவரங்ககள் சொல்லி முடித்தான்.
“ஓகே. பட் சூசைட் எதுக்குப் பண்ணான்?”
“தப்பு பண்ணது எல்லோருக்கும் தெரிஞ்சிடும்… இனிமே லைஃப் எப்படி பேஸ் பண்ணறது… அப்படின்னு சூசைட் பண்ணியிருக்கலாம்”
அப்பதிலில் திருப்தி இல்லாதது போன்ற ஓர் அமைதியில் மாறன் இருந்தான்.
“சஸ்பெக்ட் பண்ணற மாதிரி எதுவுமில்லை. போஸ்ட் மார்ட்டம்ல கிளியரா இருக்கு. நான் ரிப்போர்ட் பார்த்திட்டேன். பட், பையனோட பேமிலி டவுட் பண்றாங்க போல. இன்னும் பாடியை வாங்கலை”
பதிலாக எதுவும் பேசாமல், மனுவையே பார்த்துக் கொண்டிருந்தான், மாறன். அதில், மறு உடற்கூறாய்வு வேண்டுமென எழுதப்பட்டிருந்தது.
“வேற டீடெயில்ஸ் வேணுமா? ஏன்னா ஸ்டேஷன்ல சூசைட்னு கேஸ் கிளோஸ் பண்ணப் போறாங்க”
“அதெப்படி? அந்தப் பையன் மேல யார் கம்பளைன்ட் கொடுத்தாங்கன்னு தெரியுமா?”
“கம்பளைன்ட் வரலை. பட், ஹால் சூப்பர்வைஸ்ஸர் கண்டுபிடிச்சி, போலீஸ்-க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டாரு”
“சம்திங் இஸ் பிஷ்ஷி” என்றவன், “நான் ஆர்டர் இஸ்யூ பண்றேன். செகண்ட் போஸ்ட் மார்ட்டம் போகலாம்” என்றான்.
“அந்தப் பையனயோட பேமிலி கிளைம் பண்றாங்களா மாறன்?”
“அதுக்காக மட்டுமில்லை சசி. ஸ்டேஷன் இன்ப்ளூயன்ஸ் இல்லாம போஸ்ட் மார்ட்டம் நடந்தா பெட்டர்னு தோணுது”
“சரி. நீ ஆர்டர் இஸ்யூ பண்ணு. நான் பார்மாலிட்டீஸ் பார்க்கிறேன்”
“ஓகே!” என்றவன், “அப்புறம் இன்னொன்னு. அந்தப் பையனோட அம்மாவை ஸ்டேஷன்கு அனுப்புறேன். அவங்களைக் கொஞ்சம் கைட் பண்ணுங்க. பாவம் அவங்களுக்கு எதுவுமே தெரியலைன்னு சொல்றாங்க” என்றான்.
“ம்ம்ம்! நான் ஸ்டேஷன்கு இன்பாஃர்ம் பண்றேன்” என்று சொன்னதும், “பை சசி” என்று மாறன் அழைப்பைத் துண்டித்தான்.
உடனே, “காசி” என்று அழைத்தான். அவர் வந்ததும், “அவங்களை உள்ளே வர சொல்லுங்க” என்றான்.
காசி சென்று, அந்தப் பெண்மணியை உள்ளே அனுப்பியதும் “நீங்க போலீஸ்
ஸ்டேஷன் போங்க. என்ன செய்யணும்னு அவங்க சொல்வாங்க” என்றான்.
“ரொம்ப நன்றிங்கய்யா. என் புள்ள சாவுக்கு நியாயம் கிடைக்கணும்”
“நியாயமா? பாருங்கம்மா! உங்க பையன் தப்பு செஞ்சிருக்கான். நியாயம் அது இதுன்னு பேசாதீங்க” என்று குரல் உயர்த்திப் பேசினான்.
“என்ன தப்பு? எனக்கு எதுவும் தெரியாதே” என்று கண்கள் கலங்கப் பேசினார்.
“சரி ஸ்டேஷன் போங்க. பார்க்கலாம்” என்றதும், அவர் கிளம்பப் போகையில்,
“உங்க பையன் இன்ஜினீயரிங் முடிச்ச பையனா?” என்று கேட்டதற்கு, திரும்பி நின்று தலையாட்டினார்.
“சரி போங்க” என்று அவரை அனுப்பிவிட்டான்.
அதன்பின் அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. அத்தனையையும் மும்முரமாகப் பார்த்தாலும், மூளைக்குள் ‘இன்ஜினீயரிங் முடிச்ச பையன் எதுக்கு திரும்பவும் என்ட்ரன்ஸ் டெஸ்ட் எழுதணும்??’ என்ற கேள்வி வந்து கொண்டே இருந்தது.
*********
லிங்கத்தின் வீடு! ஒருநாள் கழித்து மாலை நேரம்!!
லதா, லிங்கம், சுடர் மூவரும் வரவேற்பறையில் இருந்தனர். கட்சி ஆட்கள் முன்னறையில் நின்றார்கள். லிங்கம் சில தாள்களைப் பார்த்தபடி மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பா, மகள் பேசுவதைக் கேட்டபடியே லதா வாரப் பத்திரிகைப் படித்துக் கொண்டிருந்தார். பேச்சின் போக்கிலே, “படிப்பு முடிஞ்சு சும்மாவே இருக்க சுடர். என்ன பண்றதா பிளான்?” என்று லிங்கம் கேட்டார்.
கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே, “சேனல் ஸ்டார்ட் பண்ண பிளான் இருக்குப்பா. பட் இப்ப மைன்ட் செட் அதுக்கேத்த மாதிரி இல்லை. இன்னும் கொஞ்ச நான் கழிச்சிப் பார்க்கணும்” என்றாள்.
கையில் இருந்த தாள்களிலே கவனத்தை வைத்தபடி “நீ எப்ப எந்த மாதிரி வேணும்னு சொல்லு, அப்பா எல்லாம் அரேஞ் பண்ணித்தரேன்” என்றார்.
“ஓகேப்பா” என்று சந்தோஷமாகச் சொல்லி நிமிர்ந்தவள், “நீங்க என்னப்பா பார்க்கிறீங்க?” என்றாள்.
“என் தொகுதி லைப்ரரிக்கு கொஞ்சம் புக்ஸ் வாங்கிக் கொடுக்கிறேன். அந்த லிஸ்ட். பசங்க எல்லாம் பார்த்திட்டாங்க. இருந்தாலும் என்னன்னே தெரியாம இருக்கக் கூடாதுல. அதான் பார்த்துகிட்டு இருக்கேன்”
“உட்கார்ந்து மெதுவா பார்க்கலாமே”
புத்தகப் பட்டியலில் கவனம் வைத்துக் கொண்டே, “கட்சி ஆளுங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க சுடர்” என்றவர், “இரு. நான் இதை அவங்ககிட்ட கொடுத்திட்டு வந்திடுறேன்” என அங்கிருந்து சென்றார்.
‘சரி’ என்று தலையாட்டியவளுக்கு நூலகம், புத்தகம் பற்றிய பேச்சுக்களில் மாறன் நினைவு வந்துவிட்டது.
உடனே ராஜாவிற்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்றதும், “ராஜாண்ணா எங்கே இருக்க?” என்று கேட்டாள்.
“ஏன்? என்ன வேணும் சுடர்?”
“வீட்டுக்கு வர முடியுமா? பார்க்கணும்”
“ம்ம் வர்றேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
அவள் கைப்பேசியை வைத்ததும், “அவனை ஏன் தொந்தரவு பண்ற? ஏதாவது வேலையா இருக்கப் போறான்!?” என லதா கடிந்தார்.
“ராஜாண்ணா வர்றேன்னு சொல்லிட்டாங்கம்மா” என்று அவள் சொன்னதும், அவரும் அவனைக் காண ஆவலுடன் இருந்தார்.
நேரம் கடந்தது! லிங்கம் வீட்டிற்கு ராஜா வந்து சேர்ந்தான். காரை நிறுத்தும் போதே, முன்னறையில் அவரும் கட்சி ஆட்களும் நிற்பது தெரிந்தது.
காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தவனிடம், “என்ன ராஜா?” என்று லிங்கம் கேட்டார்.
“சுடர் பார்க்கணும்னு சொன்னா”
“ஓ! ஹால்லதான் இருக்கா. போ” என அவர் சொன்னதும், ஆமோதிப்பது போல் லேசாகத் தலையசைத்தான்.
பின் அங்கே நின்றிருந்த கட்சி ஆட்கள், “நல்லா இருக்கியாண்ணே?” என்று கேட்டதற்கு, ‘ம்ம்ம்’ என்ற ஒரு சிறு சத்தம் மட்டும் தந்துவிட்டு கடகவென உள்ளே சென்றுவிட்டான்.
உடனே, “இப்பெல்லாம் அண்ணே முன்ன மாதிரி இல்லீங்கய்யா” என்று சிலர் குறையாகச் சொன்னதும், “நீங்க உங்க வேலையைப் பாருங்கப்பா” என்று லிங்கம் முடித்துவிட்டார்.
இருந்தாலும் ‘ஏன் ராஜாவிடம் இப்படி ஒரு மாற்றம்? லதாவிடமும் பேசாமல் இருக்கிறானே?’ என குழம்பிய லிங்கத்திற்கு, ‘இவன் என்ன செய்கிறான்? என கவனிக்க வேண்டுமோ?’ என்ற கேள்வி எழுந்தது. பின், கவனித்துப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தும் கொண்டார்.
வீட்டின் வரவேற்பறை! மடித்துக் கட்டியிருந்த வேஸ்டியை இறக்கி விட்டபடி வந்தவனைப் பார்த்ததும், “வா ராஜா” என இன்முகமாக லதா வரவேற்றார்.
“ம்ம்” என்று கவனமேயில்லாமல் சொன்னவன், “எதுக்கு சுடர் கூப்பிட்ட?” என்று கேட்டு, அவளருகில் அமர்ந்தான்.
சுடர் பதில் சொல்லும் முன்னே, “ராஜா! நீ காஃபி குடிக்கிறியா?” என்று லதா கேட்டதற்கு, சற்று யோசித்தவன், “ம்ம்” என்றதும், படபடவென லதா எழுந்து சமயலறைச் சென்றார்.
“அண்ணனுக்கு காஃபி போடவா?” என்று வேலைக்காரப் பெண் கேட்டதற்கு, “இல்லை! நானே பார்த்துப்பேன்” என விருப்பத்துடன் சொன்னார். அடுப்பின் முன் வந்து அவர் நின்றதும், சமையல் செய்து கொண்டிருந்த மற்றவர்களும் ஒதுங்கிக் கொண்டனர்.
“முன்னெல்லாம் அடிக்கடி வருவான். ‘ம்மா காஃபி’-ன்னு அவனே வந்து கேட்பான்” என்று பால் எடுத்து சூடு செய்தார்.
“இப்போ அப்படியில்லையே” என்று ஏக்கத்துடன் சொல்லிக் கொண்டே, காஃபி-க்கு தேவையானவற்றை எடுத்து சமையல் மேடையில் வைத்தார்.
“இதோ இங்கதான் உட்கார்ந்து என்கூட பேசிக்கிட்டே இருப்பான்” என்று சமையல் மேடையைக் காண்பித்தார்.
“நடந்ததையே நினைச்சுக்கிட்டு இருக்கான். அதான் யார்கிட்டயும் சரியா பேசறதில்லை. யாரும் தப்பா எடுத்துக்காதீங்க” என வேலையாட்களைப் பார்த்துச் சொன்னார்.
அவர்களுக்குச் சொன்னாரா? இல்லை… தனக்கே சொல்லிக் கொண்டாரா? என்று பிரித்தறிய முடியாததால், வேலையாட்கள் அவரைப் பரிதாபத்துடன் பார்த்தனர்.
கடைசியில் ராஜாவிற்குப் பிடித்த சுவையில் காஃபி தயாரித்து, வரவேற்பறை வந்து, அவன் கைகளில் கொடுத்து, அவன் எதிரில் அமர்ந்து கொண்டார்.
அவன் சிறுகச் சிறுகக் குடிக்கும் போது, “ம்மா! பாண்டிச்சேரி வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்று சுடர் கேட்டாள்.
“இப்பவா? இப்போ எதுக்கு?” என்று ஆட்சேபிக்கும் குரலில் லதா கேட்டார்.
“முடியாதுனு சொல்லாதீங்கம்மா. ப்ளீஸ் போகணும்?” என கெஞ்ச ஆரம்பிக்க,
“இந்த நேரத்தில தனியா எப்படி போவ? அதெல்லாம் வேண்டாம்” என்று லதா மறுத்தார்.
“தனியா இல்லைம்மா! ராஜாண்ணா கூடத்தான்” என்றதும், அதுவரை இருந்த தயக்கம், மறுப்பு போய், “அப்ப சரி! ஆனா, என்ன திடிர்னு?” என ‘கேட்கணுமே’ என்று கேட்டார்.
“சும்மாதான். பெரிசா ஒன்னுமில்லை” என்று சுடர் எழுந்து கொண்டாள்.
“உனக்கு ஏதும் வேலை இருக்கா ராஜா?” என்று லதா ராஜாவைக் கேட்டதும்,
‘இல்லை’ என தலையசைத்து, காஃபி கோப்பையை டீ-பாயில் வைத்தான்.
“சரி பார்த்துப் போயிட்டு வாங்க!” என்று சம்மதம் தெரிவித்ததும், ராஜாவும் எழுந்து கொண்டான்.
லதாவும் எழுந்து, “வேறெதுவும் சாப்பிட்டுப் போறியா ராஜா?” என்று கேட்டுப் பார்த்தார்.
“வேண்டாம்” என்றவன், “சுடர் வா” என நடக்க ஆரம்பித்தான். அவளும், “ம்மா போய்ட்டு வர்றேன்” என கிளம்பினாள். போகும் போதே முன்னறையிலிருந்த அப்பாவிடமும் விடயத்தைச் சொல்லி, விடைபெற்றுச் சென்றாள்.
சென்னை-பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில்! கார் ஓட்டிக் கொண்டே, “என்ன திடிர்னு பாண்டிச்சேரி?” என்று ராஜா கேட்டான்.
“என்னவோ மாறாவ பார்க்கணும்னு போல இருக்கு ராஜாண்ணா”
“அதுக்கு எதுக்கு பாண்டிச்சேரி? பையன் இங்கேல இருக்கான்”
“பையனா? இது மட்டும் அவனுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்!?”
“சரி டிசி [District Collector]” என்று திருத்திக் கொண்டவன், “அவன் இங்க இருக்கிறப்ப, நீயேன் பாண்டிச்சேரி போகணும்?!” என்று கேட்டான்.
“அப்போ செங்கல்பட்டு கலெக்டர் ஆஃபீஸ் போகலாமா?” என்று ஆர்வத்துடன் கேட்டதற்கு, ” ஏன் அவன்கிட்ட திட்டு வாங்கவா?” என்று சிரித்தான்.
அவளும் சிரித்துக் கொண்டே, “தெரியிதுல! அதான் பாண்டிச்சேரி” என்று சொல்லி, இருக்கையின் பின்னே சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.
அவள் சரியாயில்லை என தெரிந்ததால், அதன்பின் ராஜா ஏதும் பேசவில்லை. சுடர் கண்கள் மூடிக் கொண்டாலும், அடுத்ததாகத் தனக்கும் மாறனுக்கும் இடையே நடந்த சந்திப்பு காட்சிகளாக விரிந்தது.
காதல் ஓவியம், அத்தியாயம் – 3
கல்லூரி நூலகம்!! சீராக நிறுத்தப்பட்ட அலமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில அலமாரிகளுக்கு இடையே, படிப்பதற்காக மேசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
சில மாணவர்கள் புத்தகம் தேடியபடி, சிலர் புத்தகத்தைப் பதிவு செய்தபடி, சிலர் அங்கேயே அமர்ந்து படித்தபடி, இப்படி ஒரு சூழல்தான் நூலகத்திற்குள் நிரம்பியிருந்தது.
சுடரும், அவள் வகுப்புத் தோழியும் வெகுநேரமாக ‘நாட்டுப்புறப் பாடல்கள்’ அடங்கிய புத்தகம் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார்கள். தேடின பின்பும் கிடைக்காததால், இருவரும் உதவி கேட்டு நூலகர் முன்பு வந்து நின்றார்கள்.
“சார், எங்க கல்ச்சுரல் ப்ரோக்ராம்காக ஃபோக் சாங் கலெக்ஷன் இருக்க புக் வேணும். அந்த ரெண்டு ரேக்லயும் தேடிப் பார்த்தோம். கிடைக்கலை” என்று சுடரின் தோழி கேட்டுக் கொண்டிருக்கையில், சுடர் கண்கள் நூலகத்தைச் சுற்றி வந்தன.
“அதை போர்த் இயர் ஸ்டுடென்ட்ஸ் இப்போதான் எடுத்திட்டுப் போனாங்க” என்றவர், “அதோ அங்கே இருக்காங்களே” என்று இருவரைக் கை காட்டினார். அவர் கை காட்டிய திசையில் இருந்த மாறனையும், அவன் தோழனையும் பார்த்த சுடர் சிரித்தாள்.
“இப்போ எதுக்கு சிரிக்கிற?” என்ற சுடரின் தோழி, “வா, அவங்ககிட்ட கேட்டுப் பார்க்கலாம்” என அவளை அழைத்துச் சென்றாள். ‘கேட்கலாமே?’ என்பது போல் புருவச் சிரிப்புச் சிரித்து, சுடர் தோழியுடன் சென்றாள்.
மேசையின் அருகே சென்று, “அண்ணா” என சுடரின் தோழி அழைத்ததைக் கேட்டு, மாறனின் தோழன் ஆஷிக் நிமிர்ந்து பார்த்தான்.
ஆனால் மாறனோ புத்தகத்திற்குள் தலையைப் புதைத்திருந்தான். நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ‘இவன் ஏன் எப்பவும் இப்படிப் படிக்கிறான்?’ என்று சுடர் எரிச்சல் அடைந்தாள்.
“என்ன வேணும்?” என்று ஆஷிக் கேட்டான்.
மேசையிலிருந்த புத்தகத்தைச் சுட்டிக் காட்டி, “கல்ச்சுரல் ப்ரோக்ராம்காக, இந்த ஃபோக் சாங் புக் வேணும்” என்றாள் சுடரின் தோழி.
“எங்களுக்கும் வேணும். நீங்க நெட்ல செர்ச் பண்ணிக்கோங்க” என ஆஷிக் மறுக்கும் போதே… ஞாபகம் வந்தவனாய், “ஏய்! அன்னைக்கு இவன் மேல ஐடி கார்டு எறிஞ்சது நீதானா?” என்று சுடரைப் பார்த்துக் கொஞ்சம் சத்தமாகக்
கேட்டான்.
அந்தச் சத்தத்தில் மாறன் நிமிர்ந்தான். பின் நூலகத்தில் சத்தமாகப் பேசும் நண்பனை முறைத்தான். அதன்பின்னே அங்கே நின்ற சுடரைப் பார்த்தான்.
“அன்னைக்கு சாரி கேட்க சொன்னதுக்கு கேட்கலை. இன்னைக்கு புக் மட்டும் கேட்பாங்களாம்?” என ஆஷிக் நக்கலாகச் சொன்னதும், “ப்ளீஸ் அண்ணா கல்ச்சுரல்ஸ்-க்கு நேம் கொடுத்துட்டோம்” என்று சுடர் தோழி கெஞ்சினாள்.
இதற்கிடையே சுடர், ‘நிமிர்ந்து பார்க்கவில்லை’ என்ற கோபத்தில் மாறனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடம், ‘புக் வேணுமா?’ என்பது போல் மாறன் கண்களால் கேட்டான்.
‘வேண்டும்… வேண்டாம்’ என்ற பதில்களில் எதை ஒன்றையும் தராமல், மேசையில் இருந்த புத்தகத்தை சுடர் எடுத்துக் கொண்டாள்.
“ஏய்! ஏன் புக்க எடுக்க?” இது ஆஷிக் கேள்வி.
“அவங்ககிட்ட கேட்காம ஏன் புக் எடுக்க?” இது சுடர் தோழியின் கேள்வி.
இருவர் கேள்வியையும் சுடர் கண்டு கொள்ளாமல், ‘ஏன் என்னை முதலிலே பார்க்கவில்லை?’ என்று கேட்பது போல், கையில் வைத்திருந்த புத்தகத்தால் மாறனின் தோளில் லேசாகத் தட்டினாள்.
சுடரின் செய்கையை எதிர்பார்த்திராத மாறன், ‘ஏய்!’ என்ற தேக மொழியுடன் எழுந்து நிற்கையில், ஒரே ஒரு பார்வை பார்த்தாள்.
ஒரு பார்வைதான்! ஆனால், ‘நான் இப்படிச் செய்யக் கூடாதா?’ ‘எனக்கு அந்த உரிமையில்லையா?’ இப்படிப்பட்ட அர்த்தங்கள் கொண்ட பார்வை அது!!
அதிகப்படியேதான்!
அதுவும் மூன்றாவது சந்திப்பில் இத்தகைய பார்வை அதிகப்படியேதான்!! ஆனாலும், ‘உரிமையிருக்கு’ என்பது போல் அப்படியே அமர்ந்து… குனிந்து… அளந்து… அளவாய்… அழகாய் மாறன் சிரித்துவிட்டானே! அப்புறம் எப்படி அதிகப்படியாகும்?!
அவன் சிரிப்பை கண்டு சுடரும் சிரித்தபடி தோழியின் தோளில் கைபோட்டு, ‘வா போகலாம்’ என்பது போல் நடந்தாள்.
“என்னாச்சுடா உனக்கு?” என்று ஆஷிக் கேள்வி கேட்க, பதிலெழுத முடியாமல் யாழ்மாறன் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பம்பரம் விளையாட ஆரம்பித்தன.
அதேபோல், “என்னடி ஆச்சு?” என்ற தோழியின் வினாவிற்கு, விடையெழுத முடியாமல் ஓவியச்சுடர் இதயச் சுவர்களில் தட்டான் பூச்சுகள் தடதடத்தன.
அந்தச் சந்திப்பின் முடிவில், இருவரும் தங்களுக்கு ‘ஏதோ ஆயிற்று!’ என்று உணர்ந்தனர்.
யாழோவியம் அத்தியாயம் – 4 தொடர்கிறது…
மூன்று மணி நேரம் கழித்து பாண்டிச்சேரி கடற்கரையில்!
மணி எட்டரையைக் கடந்திருந்தது. கடற்கரையை ஒட்டியுள்ள சாலைக்கு வந்திருந்தனர். வாரநாட்கள் என்பதால் மக்கள் நடமாட்டம் வெகுவாக இல்லை.
விசாலமான நடைபாதையின் ஒருபுறம் நீளவாக்கில் ஒரேமாதிரி சிமெண்ட் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மற்றொரு புறம் சீரான இடைவெளியில் மரங்கள் இருந்தன.
அதில் ஒன்றில் சுடரும் ராஜாவும் அமர்ந்திருந்தார்கள். கால்களை மடித்து இருக்கை மேல் வைத்து அமர்ந்திருந்தாள். அவர்கள் அருகில் யாருமில்லை. எப்போதாவது இரவு நேர நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சிலர் கடந்து சென்றார்கள்.
பின்புறம் அலையடிக்கும் இரவு நேர கடல். அந்தக் கடலின் காரிருளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் காதலனை நினைத்து ஒரு ஏக்கம் தெரிந்தது.
முதலில் இருவரின் படிப்பு முடியட்டும் என காத்திருந்தது. இப்பொழுது ‘ராஜா சரியாகட்டும்’ என்று காத்திருப்பது. நினைத்துப் பார்த்ததில் கலக்கம் வந்தது.
அதைப் புரிந்த ராஜா, “சுடர்! நான் ஒன்னு சொன்னா கேட்பியா?” என்று கேட்க, கடலிலிருந்து கண்பார்வையை விலக்காமலே, “ம்ம்ம்” என்றாள்.
“வீட்ல உன்னோட லவ் பத்திச் சொல்லி, டிசியை மேரேஜ் பண்ணிக்கோ”
உடனே, “ம்ம்ம் சரி” என்று அவனைப் பார்த்தவள், “ஆனா அதுக்கு முன்னாடி நீ சரியாகணும். அம்மாகிட்ட முன்னமாதிரி பேசணும். கட்சி வேலை ஒழுங்கா செய்யணும்” என்று அடுக்கினாள்.
“ப்ச்! என்னைப் பத்தி யோசிக்காத சுடர்”
“அதெப்படி ராஜாண்ணா? எனக்கு எதும் ஒரு கஷ்டம்னா நீ என்னை அப்படியே விட்டுட்டுப் போவியா?”
‘கண்டிப்பாக போகமாட்டேன்’ என்ற அர்த்தத்தில் தலையாட்டினதும், “அப்ப நானும் அப்படித்தான்” என்றாள்.
“சொல்றதைக் கேட்கறதேயில்லை” என்று முணுமுணுத்தவன், மணிகட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்து, “கிளம்பலாமா?” என்று கேட்டான்.
“மாறாக்கு மெசேஜ் பண்ணேன். கொஞ்ச நேரம் கழிச்சுப் பேசறேன்னு ரிப்ளே பண்ணியிருக்கான்” என்கின்ற போதே கைப்பேசி அழைப்பு வந்தது.
திரையைப் பார்த்து சுடர் சிரித்ததும், “டிசியா?” என ராஜா கேட்க, ‘ஆம்’ என்று
தலையாட்டிட, “சரி பேசிட்டு வா! வெயிட் பண்றேன்” என்று சென்றுவிட்டான்.
ராஜா நகர்ந்ததும்… அழைப்பை ஏற்று, “உன்கூட பேச ரொம்ப நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று சுடர் ஆரம்பித்தாள்.
‘என்ன இது இப்படி ஸ்டார்ட் பண்றா? ரொம்ப தேடறாளோ?’ என நினைக்கும் போதே, “என்னமோ மாறா, இன்னைக்கு உன் நியாபகம் ரொம்ப வருது” என, காதலனை ஒரு வழியாக்கிவிடும் குரலில் சொன்னாள்.
சொற்ப நொடிகள் அந்தக் குரலின் பிடியில் சிற்பமாக நின்றவன், “ஓகே! நீ வீட்ல சொல்லு. நானும் வீட்ல சொல்றேன். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்” என காதலையும் காதலியையும் வழி நடத்தும் குரலில் சொன்னான்.
“இப்போ வேண்டாம் மாறா! ராஜாண்ணா இன்னும் கொஞ்சம் சரியாகி, எங்க வீட்டுக்கு வந்துகிடட்டும்”
“அட போ சுடர்!” என வேகமாகச் சொன்னவன், “என் மச்சான்தான் எனக்கு வில்லன் போல” என்று விளையாட்டு போல பேசினான்.
“ப்ச்! வாயைக் கழுவு! இப்படிப் பேசாத மாறா!!” என்று சிடுசிடுத்தாள்.
“சாரிம்மா! உன் அண்ணனைப் பத்தி பேசலை” என்றதும், “சரி! சரி!” என விட்டவள், “நான் எங்கே இருக்கேன்னு சொல்லு” என்று கேட்டாள்.
“இது என்ன கேள்வி? வீட்லதான் இருப்ப”
“இல்லையே! கரெக்ட்டா சொல்லு”
“இட்ஸ் பெட் டைம் சுடர். வீட்லதான் இருப்ப. அப்படி இல்லைன்னா எங்கன்னு தெரியலை. நீயே சொல்லு?”
“பாண்டிச்சேரி பீச் ரோடு”
‘எழுந்து செல்! கடற்கரையில் காதலி கைப்பிடித்து அமர்ந்து கொள்ள’ என்று உந்திய மனதை அழுத்தி, அமுக்கி, அடக்கி “மேடம்கு என் நியாபகம் ரொம்ப வந்துடுச்சு போல?” என அசட்டையாகக் கேட்டான்.
“ஆமா” என ஒற்றை வார்த்தைக்குள் ஒளிந்து கொண்டாள். அதுவே சொன்னது அவனுக்கான அவள் காதலின் ஆழத்தை!
அந்தக் காதல் ஆழத்திற்குள் காலத்திற்கும் விழுந்து கிடக்க வேண்டுமென்று அவனது மனம் நினைத்தாலும், “சில்லி கேர்ள்! அதுக்கு எதுக்கு பாண்டிச்சேரி போகணும்?” என்று கேலியாகக் கேட்டான்.
அவன் நினைவு அதிகமாக இருந்ததால் மௌனமாக இருந்தாள்.
“அப்புறம் சுடர்! ஸெல்ப் டிரைவ்வா? இல்லை, டிரைவர்கூட வந்தியா?” என்று அவளைச் சரிசெய்யும் கேள்வி கேட்டான்.
“ரெண்டும் இல்லை! ராஜாண்ணா கூட்டிட்டு வந்தாங்க”
“அப்போ நான் சொன்னதுதான்”
“என்ன நீ சொன்னது?” என்று புரியாமல் கேட்டாள்.
“அதான் டிரைவர் கூட வந்திருக்க” என்று அவளைச் சீண்டினான்.
“ஓவரா பேசாத மாறா!” என சீறியவள், “கலெக்டர்னு பார்க்கிறேன். என்னைப் பேச வைக்காத” என்று சினத்துடன் சொன்னாள்.
“இல்லைனாலும் நீ என்னைப் பேசவே மாட்டியா? உன் அண்ணனைப் பத்திச் சொன்னதும்தான் வாய்ஸ் வெளிய வருது”
“ஆமா! அப்படித்தான்!! ராஜாண்ணா பத்தி யாரும், எதுவும் சொல்லக் கூடாது” என்றவள், “கட்சில அவருக்கு எவ்வளவு…” என்று தொடங்கும் போதே, “கட்சி பத்தி பேசாத” என்று கத்தரித்தான்.
“சாரி! ரியலி சாரி!! நான் சொல்ல வந்தது என்னென்னா? நல்ல நாலெட்ஜபில் பெர்சன். நிறைய புக்ஸ் படிப்பாங்க. எப்பவும் அப்டேட்டா இருப்பாங்க …” என அடுக்கிக் கொண்டே போனாள்.
“போதும் உன் அண்ணன் புராணம்” என்று சலித்துக் கொண்டவன், “அப்புறம், அந்த நாலெட்ஜபில் பெர்சன்… அதான் என் மச்சான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?” என்று கேட்டான்.
கார் நிற்கும் இடத்தில் ராஜாவைப் பார்த்தவள், “பேப்பர் படிச்சுக்கிட்டு இருக்காங்க” என்றாள்.
“ஏன் சுடர்? காலைல வந்த பேப்பரையே இப்போதான் படிக்கிறான். அவன் உனக்கு அப்டேட்டடா இருக்கானா?” என்று ராஜாவை வம்பிழுத்தான்.
“அது ஈவினிங் பேப்பரா கூட இருக்கலாமே?” என்று வாதம் செய்யும் போதே, “சுடர்! செகண்ட் லைன்ல அப்பா” என்றதும், “ஓகே பை! நாங்க கிளம்புறோம் மாறா” என்றாள்.
“வேண்டாம்! எனக்கு உன்கூட நிறைய பேசணும்” என்று அடம்பிடித்தான்.
“சரி! கார்ல போறப்போ பேசறேன்”
“நோ! நீ பாண்டிச்சேரில இருக்கிறப்பதான் பேசணும்” என்று சிறுபையனைப் போல சொன்னான்.
“என்னை சில்லி கேர்ள்னு சொல்லிட்டு, நீ சில்லி பாய் மாதிரி பிஹேவ் பண்ற”
“வாவ்! சில்லி கேர்ள்… சில்லி பாய்… லவ்லி காம்போ” என மாறன் உளறியதும், ‘இவனோட’ என்று சுடர் உரக்க சிரித்துவிட்டாள்.
“அப்படியே சிரிச்சிக்கிட்டு இரு! அப்பாகிட்ட பேசிட்டு கால் பண்றேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
அதுவரை இருந்த ஏக்கம், கலக்கம் இரண்டும் அக்கம் பக்கம் கூட நில்லாமல், தூரதேசம் போய்விட்டது போல உணர்ந்தாள்! இல்லை, அவன் அப்படி உணர வைத்திருந்தான்!!
அன்று இதே இடத்தில் மாறன் பேசிய பேச்சுகள் எல்லாம், இன்னும் கடற்கரை காற்றில் மிதந்து கொண்டிருப்பதை வாசித்தாள். பின் அதைச் சுவாசித்தாள். அதில் கலந்திருந்த காதலன் பேச்சின் வாசத்தை நுகர்ந்தவளது முகம் மெல்ல மெல்ல விகசித்தது.
இதே நேரத்தில்… காரின் என்ஜின் பகுதிக்கு மேல் செய்தித்தாட்களை விரித்து வைத்து ராஜா படித்துக் கொண்டிருந்தான்.
அரியலூர் மாவட்ட பொறியியல் நுழைவுத் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டம் பற்றிக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பார்த்ததும் சட்டைப் பையிலிருந்து பேணா எடுத்து, அந்தச் செய்தியை வட்டமிட்டான்.
ஈரோடு மாவட்ட பொறியியல் நுழைவுத் தேர்வில் இரண்டு மாணவர்களுக்குப் பார்த்து எழுத உதவிய மாணவன் பிடிபட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டான்.
இதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஒரு மாணவன் பார்த்து எழுத உதவியதாகப் பிடிபட்டுள்ளான். ஆனால் அந்தத் துன்பம் தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த இரு செய்திகளையும் வட்டமிட்டான்!
