Kathambari Novels
மண்டிபோட்டு அமர்ந்த பூஜா எழாமல் அப்படியே இருந்தாள். சூழலை மறந்து இருந்தாள். ஒரு கட்டத்தில் இப்படியே இருப்பதால் எந்த பயனும் இல்லை என்று எழுந்த போதுதான் சுற்றிலும் கவனித்தாள்.
அபார்ட்மென்ட் செக்யூரிட்டி, பார்க்கிங் பகுதியிலிருந்தவர்கள், பால்கனியில் நிற்கும் குடியிருப்புவாசிகள் என்று நடந்ததை, அவள் அழுவதை வேடிக்கைப் பார்ப்பவர்களைப் பார்த்தாள்.
பாஷை தெரியாத ஊர், பழகிடாத ஜனங்கள்… சட்டென்று பூஜாவிற்கு உலகம் நிரம்ப அன்னியமாகத் தெரிந்தது!
கண்ணீரைத் துடைத்து, வேகமாக லிஃப்ட்டில் வீட்டிற்குச் சென்றாள். கடகடவென இரவு உடையிலிருந்து ஒரு ஜீன்ஸ், டிஷர்ட்-க்கு மாறினாள். முகம் மட்டும் கழுவிவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு மூன்றாவது தளம் விரைந்து சென்றாள்.
அத்தளத்தில் இருந்த குடியிருப்பு செயலாளர் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவு திறந்தவுடன், “ஆண்ட்டி” என்றாள்.
‘இப்பதான் விஷயம் தெரிஞ்சது. ஏன் அப்பாக்கு இப்படி? என்னாச்சு?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
‘தெரியல’ என்றவள், ‘ஒரு உதவி. நீங்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் என் கூட வரமுடியுமா?’ என்று அதே மொழியில் கேட்க,
‘சாரி. அது முடியாது. வேற என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளு’ என்றார்.
இதுதானே இப்போதைக்கு தேவை என்றாலும், அவரை வற்புறுத்த முடியாது. ‘போலீஸ் ஸ்டேஷன் போறதுக்கு ஆட்டோ அரேஞ் பண்ணித் தர முடியுமா?’ என்று கேட்க,
‘என்கூட வா’ என்று சொல்லி கீழே சென்றார்.
அவருக்கு நன்கு தெரிந்த ஆட்டோக்காரர் ஒருவரை வரச் சொல்லி, காளிகாட் காவல் நிலையத்திற்குப் பூஜாவைக் கூட்டிச் சென்று… காத்திருந்து மீண்டும் அவளை இங்கே கொண்டு வந்து விட்டுச் செல்லும்படி சொன்னார்.
அதையே ஆங்கிலத்தில் பூஜாவிடம் சொன்னதும், ‘தேங்க்ஸ் ஆண்ட்டி… தேங்க்ஸ்’ என்று ஆட்டோவில் ஏறிச் சென்றாள்.
காளிகாட் காவல் நிலையம்!
ஆட்டோவிலிருந்து இறங்கியதும், அந்த ஆட்டோக்காரர் ஏதோ பெங்காலியில் சொன்னார்.
ஒரு வார்த்தைக் கூட பூஜாவிற்கு புரியவில்லை.
‘வெயிட், வெயிட்’ என்று சொல்லிவிட்டு, ‘காளிகாட் காவல் நிலையம்’ என ஆங்கிலத்தில் எழுதியிருந்த அடர்நீல நிற பலகையைப் பார்த்தபடி வேகமாக நடந்தாள்.
அங்கங்கே மஞ்சள் நிற டேக்ஸிகள் சில நின்றன. சாலை ஓரங்களில் பல இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
புடவை முந்தானையால் முக்காடு போட்டும், ஜீன்ஸ், சுடிதாரிலும் இருந்த பெண்கள் மற்றும் கொல்கத்தா பாணி வேஷ்டி கட்டியும், பேன்ட் ஷர்ட்டிலும் இருந்த சில ஆண்கள் அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தனர்.
இப்படி நிறைய விடயங்கள் அவளை சுற்றிலும் இருந்தாலும், எதிலுமே கவனம் இல்லாமல் காவல் நிலையம் உள்ளே சென்றாள்.
முன்னறையைத் தாண்டி கடகடவென உள்ளே போகும் போது காவலர் ஒருவர் அவளை நிறுத்தி, ‘என்ன வேண்டும்?’ என்றார் பெங்காலியில்.
“மை ஃபாதர், என் அப்பா. ஹியர்…” என்றவளுக்கு, அதீத பதற்றத்தில் எந்தவொரு மொழியும் கைகொடுக்கவில்லை.
அவர் உடனே, ‘வெயிட்’ என்று உள்ளே சென்று மற்றொரு காவலரை அழைத்து வந்தார்.
அந்தக் காவலர் சேகரனை கூட்டிச் சென்றவரில் ஒருவர் என்றதும், ‘சார் நான் என் அப்பாவ பார்க்கணும். ஏன் அவரை கூட்டிட்டு வந்திருக்கீங்க?’ என அவர் முன்னே சென்று ஆங்கிலத்தில் கேட்டாள்.
அவர் அவளுக்குப் பதில் சொல்லவில்லை!
ஆனால் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். பின்பு பூஜாவை அடுத்த அறையில் வந்து காத்திருக்க சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
ஏன் எதுவும் சொல்ல மறுக்கிறார்கள் என்று கோபம் வந்தது பூஜாவிற்கு.
ஆனால் இந்நிலையில் கோபப்படுவது நல்லதில்லை என்று அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
சுற்றிப் பார்த்தாள்!
நம்மூர் காவல் நிலையம் போலில்லை. ஏதோ அலுவலகம் போன்று இருந்தது. முன்பக்கம் இரண்டு பெரிய சன்னலுக்கு இடையே பெரிய ‘கிரில் கேட்’ இருந்தது.
சன்னல் வழியே வெளியே பார்த்தாள்!
வெளிர்நீல நிறத்தில் போலீஸ் வாகனம் நின்றது. அதன்மேல் அடர்நீல மற்றும் சிவப்பு நிற விளக்குகள் இருந்தன.
எல்லாமே வித்தியசமாக, புதிதாய் இருந்தது. என்னவோ உடனே அவளுக்குக் கண்ணீர் ததும்பிக் கொண்டு வந்தது. இருந்தும் அழவில்லை. தைரியத்திற்கு மனதை தயார் படுத்திக் கொண்டு காத்திருந்தாள்.
அவரவர் அவரவர்களுக்கான வேலையைப் பார்த்தடி இருந்தனர்.
வெகுநேரம் காத்திருந்தவளுக்கு தன்னை மறந்துவிட்டார்களோ என தோன்றியது. இப்படி எதுவும் கேட்காமல் இருக்ககூடாதோ என்று எழுந்து சென்று ஒரு காவலரிடம் கேட்டுப் பார்த்தாள்.
அவரும் காத்திருக்க சொல்லிவிட்டுச் சென்றார்!
எரிச்சலாக இருந்தாலும் மீண்டும் வந்து அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
திரும்ப ஒருமுறை சென்று கேட்டாள்!
திரும்பவும் அதே பதில்தான் கிடைத்தது.
மிகவும் சோர்வாக இருந்ததால் தண்ணீர் குடித்துவிட்டு வந்து அமர்ந்தாள்.
அதன்பின்னும் நெடுநேர காத்திருப்பு. அலைபேசி பார்த்தாள். பன்னிரெண்டு என்று காட்டியது. அதற்குமேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.
எழுந்து விறுவிறுவென உள்ளே சென்றவள் அங்கு அமர்ந்திருந்த காவலர் முன் நின்று, ‘சார் எனக்கு என் அப்பா எங்க இருக்காரு, எதுக்காக அவரை கூட்டிட்டு வந்திருக்கீங்கனு தெரியணும். வெயிட் பண்ண சொல்லாதீங்க, ரொம்ப நேரம் நான் வெய்ட் பண்ணிட்டேன்’ என்று ஆங்கிலத்தில் சத்தமாக பேசினாள்.
அவள் பேசிய சத்தத்தில் வேறு வேலையாக அங்கே வந்திருந்த பொது மக்கள், காவலர்கள் அனைவரும் அவளைப் பார்த்தனர். இன்னொரு அறையிலிருந்த துணை ஆய்வாளர் வெளியே வந்திருந்தார்.
இவளைப் பார்த்ததும், ‘உள்ள அனுப்புங்க’ என பெங்காலியில் சொல்லிவிட்டுச் சென்றார்.
அதை ஒரு காவலர் சைகையில் சொல்ல உள்ளே சென்றாள்.
அங்கு இரண்டு பேர் இருந்தார்கள்.
ஒருவர் துணை ஆய்வாளர். நின்றபடி இருந்தார். மற்றொருவர், ‘சவுரவ் கோஷ், இன்ஸ்பெக்டர்’ என்று சிறு செவ்வக வடிவ பலகையில் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
துணை ஆய்வாளர் ஏதோ சவுரவிடம் சொன்னார். சவுரவ், ‘போலீஸ்கிட்ட மரியாதையா நடந்துக்கணும்னு தெரியாதா? எதுக்கு வெளிய கத்திக்கிட்டு இருந்த?? வெய்ட் பண்ண முடியாதா?’ என்றார் ஆங்கிலத்தில்.
‘ப்ளீஸ் சார், ஐ வான்ட…” என்று பூஜா ஆரம்பிக்க,
‘பேசாத! அமைதியா இரு’ என்றார் அதே மொழியில்.
கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி பூஜா வாய் மூடிக் கொண்டாள்.
‘வெளிய வெய்ட் பண்ணு! இவர் வந்து என்னென்னு சொல்வாரு’ – சவுரவ்.
“சார்!” என்று போகாமல் நின்றாள்.
‘நான் வெய்ட் பண்ண சொன்னேன்’ என்று அழுத்திச் சொன்னார்.
மேலும், காவலர் ஒருவரை அழைத்து பூஜாவை கூட்டிச் செல்லும்படி அவர்கள் மொழியில் சொன்னார்.
அந்தக் காவலர் அவளை அழைத்ததும்… தான் நடந்து கொண்ட விதத்திற்கும், கத்தியதிற்காகவும் இப்படிச் செய்கிறார்களோ என்ற கேள்வி வந்தது. அழுதுகொண்டே வெளியே வந்துவிட்டாள்.
பூஜா அழுவதைப் பார்த்த அந்தக் காவலர் அவள் மேல் பரிதாபப்பட்டு, ‘இங்க வாங்க’ என்று ஆங்கிலத்தில் சொல்லி காவல்நிலையம் வெளியே அழைத்துச் சென்றார்.
‘என்ன சொல்ல போகிறார்?’ என்று கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.
‘ஒரு கொலை குற்றத்திற்காக உன் அப்பாவைக் கைது பண்ணியிருக்கோம்’ என்று விவரம் சொன்னார்.
ஆம்! காளிகாட் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த பிரணாப் என்ற ஒரு ஐடி ஊழியரைக் கொலை செய்யப்பட்ட விடயத்தில் சேகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பெரிய அதிர்ச்சி பூஜாவிற்கு! அந்த அதிர்ச்சியில் அழுகைகூட நின்றுவிட்டது!! கண்ணை கட்டிக் கொண்டு வந்தது!!
தவறாக கேட்டுவிட்டோமோ என்று திரும்பச் சொல்லச் சொன்னாள்.
அவரும் சொன்னார்.
‘அப்படி இருக்காது சார். இருக்கவே இருக்காது’ என்று அழுதாள்.
அவரோ, ‘போய் லாயரோட வா. அதுதான் நல்லது’ என்று அறிவுரை கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அவருக்கு நன்றி சொல்லும் நிலையில் கூட அவளில்லை.
கொலையா? அதுவும் அப்பாவா? இதை அவள் துளியும் நம்பவில்லை. கைதா? என்னோட அப்பாவையா? இதை அவளலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இது நடந்திருக்கிறது.
இப்படியே நிற்பதும், அழுவதும் எதற்கும் பிரயோஜனப் படப்போவதில்லை. அடுத்து என்னசெய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். அந்தக் காவலர் சொன்னது போல் ஒரு வழக்கறிஞருடன் வந்து பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
உடனே, ‘ஆட்டோ எங்கே?’ என்று பார்த்தாள். சாலையின் எதிர்பக்கம் நின்றது. இரண்டு மூன்று வாகனத்தில் மோத பார்த்த மனநிலையுடன் அச்சாலையைக் கடந்து ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றாள்!
*********
மானிக்டாலா பகுதி!
அக்கா, தம்பி இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு ஹாலில் இருந்தனர். சோஃபாவில் கால்நீட்டி படுத்து அரவிந்த் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். வாணி ரெக்லைனரில் அமர்ந்தபடி அவனுடன் பேசுவதும், அலைபேசியைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
“நம்பவே முடியல. தற்செயலா நியூஸ் பார்க்கிறப்போ இந்த நியூஸ் கண்ணுல பட்டுச்சி. வேற யாரோவா இருக்கும்னு நினைச்சேன். ஆனா இன்ன பேரு, இந்த பேங்க் மேனேஜர்னு சொன்னதும் பயங்கற ஷாக் ஆயிட்டேன்” என்றாள்.
“ம்ம்ம்” என்றான் டிவியில் கவனத்தை வைத்தபடி.
“இந்த உலகத்தில யார் நல்லவங்க… யார் கெட்டவங்க… யார் எந்த நேரத்தில என்ன தப்பு பண்ணுவாங்கனு தெரியல. இல்லயா அரவிந்த்?”
“ம்ம்ம்” என்றான் அதற்கும்.
“நல்லவேளை நீ வேண்டாம்னு சொல்லிட்ட. இல்லைனா இப்படி ஒரு இடத்தில சம்பந்தம்னா நினைச்சிப் பாரு. உன் மாமாகிட்ட இதைச் சொன்னா… நல்லா விசாரிக்கலையானு என்னைத்தான் திட்டுவாங்க. அடுத்து அலைன்ஸ் எதுவும் வந்தா ஒழுங்கா விசாரிக்கனும்” என்றாள்.
“ம்ம்ம்” என்று மட்டுமே சொன்னான்.
“என்னடா, ‘ம்’ மட்டும் சொல்லிக்கிட்டு இருக்க. ஒன்னும் பேச மாட்டிக்கிற”
“அக்கா” என்று அழுத்திச் சொல்லி எழுந்தவன், “சொல்றேன் கேட்டுக்கோ. எனக்கு ரெண்டு டவுட் இருக்கு க்கா. ஒன்னு கொலை பண்ணனும்னா… அதுக்கு முன்னாடியே பிளான் போட்டுருக்கணும். இல்லையா?” என்று கேட்டான்.
“ஆமா”
“அப்படி ஒருபக்கம் பிளான் பண்ணவரு… இன்னொரு பக்கம் எப்படி மகளுக்கு கேஷூவலா மாப்பிள்ளை பார்ப்பாரு?”
“ஓ!” என்று யோசித்தாள்.
“இன்னொரு டவுட்! அவருக்கு என்னைப் பிடிச்சிருக்கிறதா சொன்னேல…”
“ம்ம் ஆமா. அவர்தான் சொன்னாரு”
“இந்த பிளானோட இருக்கிறவரு, பொண்ணுக்கு மாப்பிள்ள பார்க்கிறதகூட கேஷூவலா இருக்க ட்ரை பண்றாருனு ஒத்துக்கலாம். ஆனா போலீஸ்காரன் மாப்பிள்ளையா வர பிடிச்சிருக்குனு சொல்றதை… எப்படி எடுத்துக்க?”
“அப்போ அவர் கொலை பன்னிருக்க மாட்டாரா?”
மீண்டும் கால்நீட்டி படுத்துக் கொண்டவன், “அப்படிலாம் சொல்லிட முடியாது. அவர் அந்தச் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுருக்கலாம் இல்லையா? பிளான்டு மர்டரா இல்லாம இருக்கலாம்” என்றான்.
அவன் சொன்னதை சற்று யோசித்துவிட்டு, “எது எப்படியோடா… எனக்கு அந்த பொண்ண நினைச்சா வருத்தமா இருக்கு?” என்றாள்.
“நீ ஏன் க்கா அவளை நினைச்சி வருத்தப்படுற?”
“பாஷை தெரியாத ஊர்ல அப்பாக்கு இப்படினா, அவ என்ன செய்வா சொல்லு? பாவம் இல்லயா? டேய் அரவிந்த்… நீ எதுவும் ஹெல்ப் பண்ண முடியாதா?”
“அது என் ஸ்டேஷனே கிடையாது”
“அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்ட எதும் பேசி…”
“அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சவுரவ். மனுஷர் பயங்கற கோபக்காரர்” என்றவன், “அதோட நான் போய் என்ன கேட்க? முதல எதுக்கு கேட்கணும்? இது எனக்குத் தேவையே இல்லாத வேலை” என்றான்.
“சப்போஸ் அந்தப் பொண்ணு உன்கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தா?”
“உனக்கு ஏன் க்கா இப்படியெல்லாம் தோணுது??”
“பதில் சொல்லுடா…”
“ஹெல்ப் கேட்டு வந்தா… ம் வந்தா…” என யோசித்தவன், “மேரேஜ் பண்ணிக்க போலீஸ் வேண்டாம். பட் எதுவும் ஹெல்ப்னா மட்டும் போலீஸ் வேணுமாம்னு கேட்பேன்” என்று சிரித்தான்.
“திமிர் பிடிச்சவன்டா” என்று அருகில் கிடந்த குட்டிக் குட்டி தலையணைகளை தம்பி மேல் வாணி தூக்கி எறிய, சிரித்தபடியே அதை வாங்கிக் கொண்டான்.
இப்படி விளையாட்டாகவே சிறிதுநேரம் பேசிவிட்டு உறங்கச் சென்றார்கள்.
***********
காளிகாட் பகுதி!
இரவு ஒன்பது மணி.
காவல்நிலையத்திலிருந்து வீட்டிற்கு வந்ததுமே குடியிருப்பு வாசிகள் சிலர், ‘எதற்காக அப்பாவை போலீஸ் கூட்டிச் சென்றது?’ என்று எதுவும் தெரியாமல் கேட்டார்கள்.
பலர் தொலைக்காட்சி பார்த்து செய்தி தெரிந்து பேசினார்கள்.
எல்லாருக்கும் ஆங்கிலத்தில் ஒரு பதில் சொல்லிவிட்டு, வழக்கறிஞர் பற்றிய விவரங்கள் கேட்டுவிட்டு வீட்டிற்கு வந்திருந்தாள் பூஜா.
சாயங்காலமாக பக்கத்து வீட்டிலிருந்து தேநீர் எடுத்து வந்து கொடுத்து குடிக்க சொன்னார்கள். காவல் நிலையம் செல்ல கூட வரவில்லையே தவிர, அவர்கள் ஓரளவிற்கு ஆறுதலாகத்தான் இருந்தார்கள்.
அந்த தேநீரைக் குடித்துவிட்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.
இப்போது அவளது அத்தையிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். காலையிலிருந்து இங்கே நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு, அவர் ஆறுதல் கூறுவார் என எதிர்பார்த்தாள்.
ஆனால் அவரோ, ‘என் அண்ணனுக்குப் போய் இப்படியா?’ என்று ‘ஓவென’ அழ ஆரம்பித்துவிட்டார்.
“அத்தை… இப்படி அழாதீங்க” என்று பூஜா சமாதனம் செய்ய,
“என்னால தாங்க முடியலடி. இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சி கூட பார்க்கலையே” என்று இன்னும் அழுதார்.
மேலும், “தனியா எப்படி பூஜா சமாளிப்ப? காயத்திரிக்கு வேற டெலிவரி டைம். இல்லைனா நானே வந்து உன்கூட இருந்திருப்பேன்” என்று தன் அண்ணன் மகளுக்காக வருத்தப்பட்டார்.
“நான் சமாளிச்சிக்குவேன். நீங்க அழாதீங்க. அப்புறமா காயத்திரியும் கஷ்டப்படுவா. அது அவளுக்கு நல்லதில்லை அத்தை”
“பாஷை தெரியாத ஊர்ல நீ தனியா கஷ்டப்படறப்போ… நான் அழாம இருக்க முடியுமாடி?” என கரைந்தவர், “கண்ணாகிட்ட சொல்லி டிக்கெட்ட முன்னாடி தேதிக்கு மாத்திக்கிட்டு வரச் சொல்றேன். சரியா?” என்றார்.
“ம்ம்ம்”
அழுகையைக் குறைத்துக் கொண்டு, “பூஜா… அதுவரைக்கும் உன் மாமாவை துணைக்கு வர சொல்லவா?” என்று மெல்ல கேட்டுப் பார்த்தார்.
“வேண்டாம் அத்தை” என்றாள் உடனே.
“அவரும் போலீஸ்தானடி”
“ப்ச் வேண்டாம்னா விடுங்க. அவருக்கும் எனக்கும் கொஞ்சமும் ஒத்துவராது. அவர்… அவருக்கு தெரிஞ்ச வழியில ஏதும் செய்ய சொல்வாரு. அது எனக்குப் பிடிக்காது. சண்டைதான் வரும். அதனால வேண்டாம்”
“ரொம்ப பண்றடி” என்றவர், “ஆனா அவருக்கு விஷயத்தைச் சொன்னாலும் உனக்காக வருவாரோ என்னவோ? வர மாட்டாருனுதான் நினைக்கிறேன்” என்று புலம்பினார்.
“நான் பார்த்துப்பேன் அத்தை” என்றாள்.
“அவ்ளோ பெரிய ஊர்ல ஒரு தமிழ் தெரிஞ்ச போலீஸ்கூட இல்லையா?”
“இனி போலீஸ் பார்த்து ஒன்னும் ஆக போறதில்ல. லாயர்தான் பார்க்கணும்” என்று சொல்லும் போதே கதவு தட்டும் ஓசை கேட்டது.
“அத்தை யாரோ கதவைத் தட்றாங்க. நான் போய் யாருன்னு பார்க்கிறேன்”
“இந்த நேரத்தில யாருடி? யாரு, என்னென்னு கேட்டுட்டு கதவைத் திறக்கனும். நீபாட்டுக்கு திறந்திடாதடி”
“சரி அத்தை ஃபோன் வைக்கிறேன்”
“அடிக்கடி ஃபோன் பண்ணிடுவேன். கண்ணாவைச் சீக்கிரமா வர சொல்றேன். தைரியமா இரு பூஜா. அழுதுகிட்டே இருக்க கூடாது. சாப்பிடவும் செய்யணும். சரியாமா?” என்றார் அனுசரணையாக.
“சரி அத்தை” – அழைப்பைத் துண்டித்துவிட்டுப் போய் கதவைத் திறந்தாள்.
அப்பார்ட்மென்ட் செக்ரட்டரி மனைவி நின்றார். ஒரு டிபன் பாக்ஸை கொடுத்து, ‘இன்னைக்கு சமைச்சிருக்க மாட்ட. அதான் சாப்பாடு எடுத்து வந்தேன். ஆலூ தர்காரி, லூச்சி. சாப்பிடு’ என ஆங்கிலத்தில் சொல்லிச் சென்றார்.
இப்படிச் செய்வார்கள் என்று பூஜா எதிர்பார்க்கவில்லை. பாக்ஸை மேசையில் வைத்துவிட்டு கைகழுவி வந்து அமர்ந்தாள். இந்நேரம் அப்பா என்ன செய்வார் என்று நினைத்ததும் அழுகை அழுகையாக வந்தது.
ஒரு மூச்சு அழுதாள்!
அப்பாவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும். அதற்காக மனம், உடல் இரண்டுமே தைரியமாக, தெம்பாக இருக்க வேண்டும். அதற்கு இரண்டு வாய் சாப்பாடாவது உள்ளே போக வேண்டும்.
டிபன் பாக்ஸை திறந்தாள். பூரி மற்றும் உருளைக்கிழங்கு இருந்தது. ஒரு வாய் எடுத்து வாயில் வைத்துப் பார்த்தாள்.
நம்ம ஊர் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் போல் இல்லை. வேறு ஏதோ எண்ணெய் மாதிரி இருந்தது. என்னது என்று தெரியவில்லை.
ஆனால் வாசமும், சுவையும் பிடிக்கவில்லை.
உடனே அப்பா தோசை சுட்டுக் கொடுத்தது ஞாபகம் வந்துவிட்டது.
மீண்டும் அழுதாள்.
நேற்று இரவிலிருந்தே சாப்பிடாமல் இருப்பதால் ஒரே ஒரு பூரியை மட்டும் உண்டுவிட்டு, காஃபி போட்டுக் குடித்துவிட்டு சோஃபாவிலே படுத்துக் கொண்டாள்.
இன்று அழுதது, முந்தின நாள் உறக்கமின்மை சேர்ந்து கொண்டதால் உடனே உறங்கிவிட்டாள். ஆனாலும் சற்று நேரத்திலே முழிப்புத் தட்டியது. அப்போதே செயலாளர் மனைவியிடம் வழக்கறிஞர் யாரையும் தெரியுமா என கேட்டாள்.
கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அவரும் சரி… மற்றவர்களும் சரி அப்பா விடயம் சம்பந்தமாக பெரிதாக உதவ முன்வரமாட்டார்கள் என தெரிந்தது. அது அவர்கள் விருப்பம். அதை ஒன்றுமே சொல்ல முடியாது என்று புரிந்தது.
ஆனால் இந்த அளவு ஆறுதலாக இருப்பதே போதும் என்றே தோன்றியது.
மேலும் சில வழக்கறிஞர்களை அவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். நாளை அவர்கள் அனைவரையும் சென்று பார்க்க வேண்டும்.
கூடவே அத்தை கூறிய தமிழ் தெரிந்த போலீஸ் யாராவது என்பது நினைவில் வந்தது. அப்பா பார்த்த வரன் போலீஸ்தானே?! தமிழ் தெரியும். பெங்காலியும் தெரியும். நான் பேச எளிதாக இருக்கும். மேலும் ஆய்வாளர், வழக்கறிஞரிடம் பேசவும் சரியாக இருக்கும்.
அவன் பேரென்ன என்று யோசித்தாள். ஞாபகத்தில் வரவில்லை!
எந்த ஸ்டேஷன் என்று யோசித்தாள். மானிக்… மானிக்… மானிக்டாலா என்று நினைவில் வந்துவிட்டது. அவனைப் போய் பார்த்து… உதவி கேட்டால் என்ன? என்று தோன்றியது.
அதை பற்றி யோசித்தபடி கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தாள். மீண்டும் விழிப்பு. மீண்டும் உறக்கம். இடையிடையே எழுந்து அமர்ந்தவள் அப்பாவை நினைத்து அழுதாள்.
விடியும் வரை இப்படித்தான் பூஜா இருந்தாள்.
***********
மானிக்டாலா காவல் நிலையம்!
இதுவும் ஒரு அலுவலகம் போன்று இருந்தது. கடல்நீல நிறத்தில் சன்னல்களும், கதவுகளும் இருந்தன. நுழைவாயிலில் ஒரு திறந்த கேபின் அமைப்பு போன்று இருந்தது. அங்கே வெள்ளை சீருடையில் காவலர் நின்றார்.
அவருக்கு அருகில் பூஜா நின்று கொண்டிருந்தாள்.
ஆம்! மானிக்டாலா காவல்நிலைய ஆய்வாளரைப் பார்க்க வந்திருக்கிறாள்!
சற்று நேரத்தில் மஹிந்திரா போலெரியோ வந்து நின்றது. அதிலிருந்து அந்தக் காவல்நிலைய ஆய்வாளர் அரவிந்த் இறங்கினான்.
வெளியே நிற்கும் காவலர் வைத்த சல்யூட்டிற்கு தலையசைத்துவிட்டு உள்ளே போகப் போனவன், அவர் பக்கத்தில் நின்ற பூஜாவைப் பார்த்ததும்… அப்படியே நின்றான்.
