Kathambari Novels
சுடரின் காதலன்?
காதலைப் பரிமாறிக் கொண்டதற்குப் பின், இருவரும் கைப்பேசியில் பேசிக் கொள்வதுதான் வழக்கம். எங்கேயும் சந்தித்துப் பேசுவது அரிது.
சுடரின் கல்லூரி படிப்பு முடியும் வரை… ராஜாவைத் தவிர, வீட்டில் யாருக்கும் தங்கள் காதல் தெரிய வேண்டாம் என்ற முடிவுடன் இருக்கின்றனர்.
இருவரும் அருகருகேதான் இருக்கிறார்கள். இருந்த பொழுதிலும், கைப்பேசி வழியே மட்டும்தான் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவெளியில் சந்தித்துப் பேசாததிற்கு, இன்னும் சில காரணங்களும் உண்டு.
இதோ இன்று கைப்பேசியில் விடயத்தைச் சொன்னதும் கன்னாபின்னாவென கத்தினான். ‘தான் எதும் செய்யப் போவதில்லை. ராஜாண்ணாவைத் தேர்தல் வேலையைச் செய்யச் சொல்லப் போகிறேன்’ என்று சொன்னதற்குப் பின்பும் கத்துவது குறையவில்லை.
ராஜாவின் இழப்பு, அவனது இறுக்கம் பற்றிச் சொல்லி, ‘இந்த நேரத்தில் ராஜாண்ணா கூட இருக்க வேண்டும். இருக்கப் போகிறேன்’ என்று சொல்லி முடித்திருந்தாள்.
அப்படிச் சொன்னதின் பின்பு காதலன் அமைதியாகிவிட்டான். ஏனென்றால், ராஜாவிற்கும் சுடருக்கும் இருக்கும் பாசப் பிணைப்புப் பற்றி அவனுக்குத் தெரியுமென்பதால்.
முழுமனதுடன் சம்மதித்தானா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் அவன் கத்தவில்லை என்றதும், அதற்குமேல் சமாதானம் செய்வதற்கு சுடர் முயற்சிக்கவில்லை.
அடுத்த நாளிலிருந்து லிங்கம் கட்சிப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். முழுமூச்சாக மக்களைச் சந்தித்தல், தேர்தல் பிரச்சாரம், சுற்றுப் பயணம் என்று ஓய்விற்கோ, எதைப் பற்றி யோசிப்பதற்கோ நேரமின்றி பறந்து கொண்டிருந்தார்.
ராஜா??
ராகவன் சொல்லிச் சென்றதலிருந்து, ‘எலெக்ஷன் ரிலேடட் ஒர்க் பார்க்கிறியா ராஜாண்ணா??’ என சிலமுறை சுடர் கேட்டுப் பார்த்தாள். பதில் சொல்லாமல் இறுக்கமாகவே இருந்தான்.
அவன் நலனிற்காக, ‘சாப்பிடு, எழுந்திரி’ என்று வற்புறுத்திச் சொன்னவளால், கட்சி நலனிற்காக எதையும் அழுத்திச் சொல்ல முடியவில்லை. அதுவும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் சொல்ல மனமேயில்லை.
இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டால் யாரிடமும் பேசாமல் இறுக்கமாகவே இருந்துவிடுவானோ என்று பயந்தாள். எனவே லிங்கத்திடம் சொல்லி, அவனது அணி உறுப்பினர்களை வீட்டிற்கு வரவழைத்து அவனிடம் பேச வைக்க முயற்சித்தாள்.
‘எப்போடா ராஜாவிடம் பேசுவோம்’ என்று காத்துக் கிடந்தவர்கள், அவனிடம் ‘இது எப்படிப் பண்ண? இந்த பதிவிற்கு எப்படி பதிலடி கொடுக்க? இந்த புலன பகிர்வு சரியா இருக்குமா?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
கடைசியில் வேறுவழியின்றி வாய் திறந்தான். ‘எதையெதை பகிர வேண்டும்? எந்த இடைவெளியில் பதிவுகள் இருக்க வேண்டும்?’ என ராஜா அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கத் தொடங்கினான்.
அதே சமயத்தில் சிலநேரங்களில் யாரையும் அருகில் வரவிடமாட்டான். அத்தகைய தருணங்களில் சுடர் அவனைத் தேற்றி, தேர்தல் வேலைகளில் ஈடுபட வைத்தாள்.
அவள் காதலனைப் பற்றித் தெரியும் என்பதால், ‘வேண்டாம் சுடர்! நீ இதுல இன்வால்வ் ஆகாத’ என்று ராஜா சொல்லிப் பார்த்தான். ‘நான் அவன்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். அதனால நீ இதெல்லாம் நினைக்காத!’ என பதில் சொல்லி, சமாளித்துவிடுவாள்.
இப்படியே தினசரிகளின் தினங்கள் தீர்ந்து போய் கொண்டிருந்தன. தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்திருந்தது. நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அதில் ஒன்று ஆட்சி மாற்றம். லிங்கம், ராஜா சார்ந்திருந்த கட்சி தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தது.
ஆட்சியைப் பிடித்த கட்சி வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத கட்சி, தோல்விக்கான காரணம் குறித்து அலசிக் கொண்டிருந்தார்கள்.
சுற்றுப் பயணம், பிரச்சாரம், தேர்தல், வாக்கு எண்ணிக்கை என பரபரப்பாய் இருந்தது போய், புயல் முடிந்தால் ஓர் அமைதி வருமே? அதுபோல் கட்சிகளும் ஊடகங்களும் இருந்தன.
ஜெகதீஷ் விபத்து பற்றி? இப்போதும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த வேகம் இல்லாமல், விசாரணை மந்தமாகச் சென்று கொண்டிருந்தது.
லிங்கம்? கட்சி தேர்தலில் தோற்றிருந்தாலும், இவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்தார். தொகுதிப் பணிகள், கட்சி வேலைகள் என்று இவருடைய நாட்கள் நகர்ந்தன.
லதா? அனுசியா, ஜெகதீஸ் மறைவு இவரைப் பாதித்ததை விட கவிதாவின் மறைவு மிகவும் பாதித்தது. திருமணம் முடிந்து வந்ததிலிருந்து இவருடன் அவள் இருந்த நேரங்கள் அதிகம் என்பதால் அவள் நினைவிலிருந்து மீள முடியாமல் தவித்தார்.
‘தானே இப்படி என்றால், ராஜா எப்படித் தவிப்பான்?’ என்ற எண்ணம் வேறு அவரை வாட்டி எடுக்கும். என்றைக்கு அந்தத் தவிப்பையெல்லாம் தன்னிடம் வந்து மனம்விட்டு சொல்லி அழுவான் என்று காத்திருந்தார். ஆனால் இதுவரைக்கும் அப்படி ஒரு நாள் வரவேயில்லை.
‘வேதனைகளைத் தனக்குள் வைத்துக் கொள்கிறான்… தைரியமாகத் தாங்கிக் கொள்கிறான்’ என்று மனதைச் சமாதானப்படுத்த நினைத்தவரால், அதுவும் முடியவில்லை.
காரணம் அவன் ஒதுக்கம். சுடருடன் பேசுவது போல் மற்ற யாரிடமும் அவன் பேசவில்லை. மற்றவர்களிடம் பேசும் அளவுகூட லதாவிடம் பேசவில்லை.
அவரே பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் முடித்துக் கொள்வான்.
கவிதாவின் மறைவு, ஏனென்றே தெரியாமல் ராஜாவின் புறக்கணிப்பு இரண்டும் சேர்ந்து வதைத்து, வருத்தத்தைத் தருவதிலே இவருடைய நாட்கள் கழிகின்றன.
சுடர்? அனும்மா, ஜெகாப்பா, கவி அண்ணி என்று உறவாய் பழகியவர்களின் இழப்பு தந்த வேதனையிலிருந்து வலுக்கட்டாயமாகத் தன்னை மீட்டுக் கொண்டு வந்திருந்தாள்.
மேலும் இவள் படிப்பு முடிந்திருந்தது. ஆனாலும் எதிர்காலம் பற்றி யோசிக்க முடியாமல், அம்மாவைத் தேற்றுவதிலே இவளின் நாட்கள் செல்கின்றன.
ராஜா? இத்தனை மாதங்களில் சில நாட்கள் தினாவுடன் சேர்ந்து கட்சி அலுவலகத்திற்குச் செல்வான். வெகு சிலநாட்கள் சுடர் வற்புறுத்தி அழைத்து வந்து விடுவாள். அவ்வளவுதான்!
முன்புபோல் ஒரு ஒழுங்கு இல்லாமல், கட்சி பணிகளில் ஈடுபாடு காட்டாமல், கட்சி ஆட்களுடன் சரிவர பேசாமல்… இப்படியே இவன் நாட்கள் கடக்கின்றன.
இதுகுறித்து கட்சி மேலிடத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இரண்டு மூன்று முறை ராஜாவைக் கூப்பிட்டுப் பேசினார்கள். கண்டிக்கவும் செய்தார்கள்.
ஆனால் அவனிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.
அதுபோல பேசத்தான் இன்றும் கட்சித் தலைவர் அழைத்திருப்பதால், கட்சி அலுவலகம் வந்திருக்கிறான். நேரம் ஒன்பதைத் தாண்டிச் சென்றதால் பெரிய அளவில் கட்சி உறுப்பினர்கள் யாருமில்லை.
கட்சி வளாகத்தினுள் நுழைந்து நிறுத்துமிடத்திற்கு வந்ததும், “நீ காருக்குள்ள இருக்கியா? நான் போய் பார்த்திட்டு வர்றேன்” என, தன்னுடன் வந்திருக்கும் சுடரைப் பார்த்துக் கேட்டான்.
“பரவாயில்லை ராஜாண்ணா! வெளியவே நிக்கிறேன்?” என்று சொல்லி, கார் கதவைத் திறந்து இறங்கினாள்.
ராஜாவும் இறங்கி, “எதுக்கும் கீ வச்சிக்கோ” என்று கார் சாவியை அவளிடம் கொடுக்கையில், “வாண்ணே” என்று அழைத்துக் கொண்டு தினா வந்து நின்றான்.
“தலைவர் வெயிட் பண்றாரோ?” என்று ராஜா கேட்க “இல்லண்ணே! ராகவன் சாரோட மீட்டிங் போய்க்கிட்டு இருக்கு” என்ற தினா, “நீ என்ன சுடர் இங்க வந்திருக்க?” என்று கேட்டான்.
“நீங்க தலைவர் கூப்பிடறாருனு ஃபோன் போட்டப்ப, நானும் கூட இருந்தேன். வர மாட்டேன்னு இருந்தாங்க. பிடிச்சி இழுத்திட்டு வந்திருக்கேன்” என்று சுடர் சொல்லியதும், “ஏண்ணே இப்படி?” என தினா நொந்து கொண்டான்.
‘யாரைப் பற்றியோ பேசுகிறார்கள்?’ என்கின்ற ரீதியில் ராஜா நின்றான்.
“இப்பகூட உன்னை வார்ன் பண்ணத்தான் தலைவர் கூப்பிட்டிருப்பாரு. கட்சி வேலைய ஒழுங்கா பாருண்ணே” என்று ராஜா மேல் அக்கறை எடுத்து தினா பேசினான்.
அதன்பின்பும், ‘எனக்கென்ன?’ என்று நின்றவனைப் பார்த்த சுடர், “இப்ப கூட்டிட்டுப் போங்க தினா. அப்புறமா பேசிக்கலாம்” என்றதும், அவர்கள் இருவரும் தலைவரைப் பார்க்கச் சென்றார்கள்.
அவர்கள் போனதும், கார் மேல் சாய்ந்து கொண்டு, அன்றைய செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தாள். சற்று நிமிடங்களிலே சுற்றம் மறந்து செய்திகளில் மூழ்கியிருந்தாள்.
அக்கணம், தலைவருடன் சந்திப்பு முடிந்து வீட்டிற்குச் செல்ல வந்த ராகவன் கண்களில் சுடர் நிற்பது தெரிந்தது. “இந்தப் பொண்ணு?” என முணுமுணுத்து யோசித்தபடியே நின்றுவிட்டார்.
“லிங்கம் ஐயா பொண்ணுதான்” என்றார் ராகவனின் உதவியாளர்.
“எதுக்கு இங்க வந்து நிக்குது?”
“ராஜாகூட வந்திருக்கும்”
“ராஜாகூடவா?” என்று கேட்டதும், “அப்பப்போ ராஜாவை ட்ராப் பண்ண வரும். வெளியேவே நின்னுட்டு போயிடும். இன்னைக்குதான் புதுசா உள்ளே வந்து நிக்குது” என்று தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்.
“ஓ” என்று வெளிப்படையாக சொன்னவர், ‘தேர்தலுக்காக செய்த ஒரு விடயம் இன்னும் தொடர்கிறதா?’ என்று உள்ளுக்குள் யோசிக்க ஆரம்பித்தார்.
உடனே தன் உதவியாளரை காத்திருக்கச் சொல்லிவிட்டு, சுடரை நோக்கிச் சென்று, “என்னம்மா? படிப்பு எப்படி போய்க்கிட்டு இருக்கு?” என்று கேட்டார்.
ஏற்கனவே அவருடன் அறிமுகம் இருப்பதால், “படிப்பு முடிஞ்சது” என்று இயல்பாகச் சொன்னாள்.
“அதான் இப்ப கட்சி ஆபிஸ் வர்ற அளவுக்கு டைம் இருக்கா?” என நக்கலாகக் கேட்டதும், ‘இப்படிப் பேச என்ன அவசியம் வந்தது?’ என்பது போன்று சுடர் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“லிங்கம், ஜெகதீஷை வச்சி ராஜா கட்சிக்குள்ள வந்தான். இப்போ அவன் பேரைச் சொல்லி, நீ வரப் பார்க்கிறியா?”
அவளைப் பற்றிச் சொல்லும் பொழுது கூட வராத கோபம், ராஜாவைப் பற்றிச் சொன்னதும் வந்துவிட்டது. ஆனாலும் அமைதியாக நின்றாள்.
“அப்பறம்!! கட்சி உறுப்பினர் அட்டை வாங்கியாச்சா?” என ஒருமாதிரி குரலில் கேட்டதும், சுடர் பிடித்துக் கொண்டாள்.
“வாங்கல. வாங்கவும் மாட்டேன். இப்பவும் ராஜாண்ணாகாகத்தான் வந்தேன். அப்புறம் ராஜாண்ணா இதுக்காகவே படிச்சி, இஷ்டப்பட்டுக் கட்சிக்குள்ள வந்திருக்காங்க. யாரோட பேரை வச்சும் வரலை” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
அவள் பேச்சைக் கேட்டதும், கொஞ்ச நேரம் ‘என்ன பேச?’ என்று யோசித்தார். பின், ‘இவகிட்ட எதுக்குத் தேவையில்லாம பேசிக்கிட்டு?!’ என நினைத்த ராகவன், எதுவும் பேசாமல் தன் காரை நோக்கிச் சென்றுவிட்டார்.
‘எப்படி அன்னைக்கு ஒருமாதிரி, இன்னைக்கு ஒருமாதிரி பேச முடியுதோ?’ என்று முணுமுணுத்துக் கொண்டே, மீண்டும் செய்திகளில் கவனத்தைச் செலுத்தினாள்.
அந்த நேரத்தில் வீட்டுக் கிளம்பிக் கொண்டிருந்த லிங்கம், மகள் நிற்பதைப் பார்த்ததும், அவள் பக்கமாக வந்து கொண்டிருந்தார். அப்பா வருவதைக் கண்ட சுடர், “ப்பா! நீங்க இன்னும் வீட்டுக்குப் போகலையா?” என்று கேட்டாள்.
‘இல்லை’ என்று தலையசைத்தவர், “நீ என்ன இங்கே?” என்று கேட்டதும், “ராஜாண்ணா கூட வந்தேன்” என்றாள்.
“ஓ!” என்றவர், “நான் வீட்டுக்குக் கிளம்புறேன். நீ என்கூட வர்றியா? இல்லை, ராஜா ட்ராப் பண்ணுவானா?” என்று கேட்டதற்கு, “நான் ராஜாண்ணா கூட வர்றேன்” என்றாள்.
“சரி! பார்த்து வாங்க. நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு, லிங்கம் கிளம்பிச் சென்றதும் மீண்டும் செய்திகள் படிக்க ஆரம்பித்தாள்.
அவர் சென்ற சில நொடிகளில் கையில் கோப்புகளுடன் ராஜா வந்து, “கார் கீ கொடு” என கேட்டு, அவள் முகத்தைப் பார்த்ததும், ஏதோ சரியில்லை எனத் தெரிந்ததால், “ஏன் ஒருமாதிரி இருக்க?” என்றான்.
கார் சாவியைக் கொடுத்தபடியே, “உனக்கு என்னாச்சு ராஜாண்ணா?” என்று வழக்கமாக கேட்கும் கேள்வியைச் சுடர் கேட்டதும், கார் கதவை மூடிவிட்டு, ‘எனக்கு என்னாச்சு?’ என்ற பார்வை கேள்வியுடன் நின்றான்.
“யார்கூடவும் சரியா பேச மாட்டிக்கிற! எந்த வேலையும் ஒழுங்கா செய்ய மாட்டிக்கிற! உனக்கு பாலிடிக்ஸ்ல இன்ட்ரஸ்ட் உண்டு! அதுக்காக பொலிடிக்கல் சயின்ஸ் எடுத்துப் படிச்ச!?
ஆனா இப்போ கட்சி ஆபிஸ் வர்றதுக்கே ஒருத்தர் பிடிச்சி தள்ள வேண்டியதா இருக்கு. அது ஏன்?” என்று, இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவனிடம் கேட்கும் கேள்விகளைக் குழப்பத்துடன் கேட்டு நின்றாள்.
எப்பொழுதும் போல் அதற்குப் பதில் சொல்லாமல், “நீ இங்க நிக்கிறதுக்கு, யாராவது ஏதும் சொன்னாங்களா?” என கேட்டான். கூடவே, “இப்ப இருந்தது, ம்ம்ம் ராகவன். அவர் ஏதும் சொன்னாரா?” என்று சந்தேகமாகக் கேட்டான்.
“ம்ம்! உறுப்பினர் அட்டை வாங்கிட்டியானு கேட்டாரு” என்றவள், “பட் நான் அதுக்காக கேட்கலை” என்றதும், “சரி எதுக்காக?” என்று கேட்டான்.
“நிச்சயம் நடந்ததை நினைச்சி கஷ்டமா இருக்கும். அதை மனசுக்குள்ள பூட்டி வச்சிக்காம யார்கிட்டயாவது சொல்லி அழுதிடேன் ராஜாண்ணா. அது,” என்று கலக்கத்துடன் சொல்லுகையிலே, “அண்ணே…” என்று சற்று தூரத்திலிருந்து தினாவின் அழைப்பு வந்தது.
திரும்பி தினாவைப் பார்த்து, “என்னடா?” என சலிப்புடன் ராஜா கேட்டதற்கு, “இங்கே வாண்ணே. பேசணும்” என்றதும், “இரு! வந்து உன்கிட்ட பேசறேன்” என்று சுடரிடம் இலகுவாகச் சொன்னான்.
மேலும் கலக்கத்துடன் நிற்பவளைப் பார்த்து, “கட்சி உறுப்பினர் அட்டை வேணும்னு டிசிகிட்ட சொல்லு! வாங்கிக் கொடுத்திட்டுதான் அடுத்த வேலை பார்ப்பான்!” என அவள் காதலன் பற்றிக் கேலி செய்ததும், சுடரின் முகம் கொஞ்சம் இலகுவானது.
கண்களில் ஒரு சிறு புன்னகையுடன் அதைக் கண்டவன், தினாவிடம் பேசச் சென்றான். அவன் சென்றதும் காரில் ஏறி அமர்ந்த சுடர், போகின்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
முன்பு இப்படித்தான் பேசுவான். அந்த நிகழ்விற்குப் பின் வந்த இறுக்கத்தில் சாதாரண பேச்சிற்கே பஞ்சமாகிப் போயிருந்தது. இப்பொழுது மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறான். மெல்ல மெல்ல நடந்ததிலிருந்து மீண்டு வருகிறான் என்ற விடயம் அவள் கலக்கத்தைக் குறைத்தது.
மேலும் மீண்டு வருபவனிடம் நடந்ததைப் பற்றி பேசக்கூடாது. அழுதிடு என்று சொல்ல கூடாது. வேறேதும் கேள்விகள் கேட்கக்கூடாது என முடிவெடுத்ததும் சுடர் முகம் தெளிவானது.
சில நொடிகள் எதையும் நினைக்காமல் அமைதியாக இருந்த சுடருக்கு, ‘கட்சி உறுப்பினர் அட்டை’ என்றதை நினைத்ததும், இதழ்களின் ஓரத்தில் ஒரு சிறு முறுவல் வந்தது.
காரணம்? அது காதலனுடனான முதல் சந்திப்பை நியாபகப்படுத்தியதால். காதலன் ஞாபகம் அவள் கல்லூரி காலத்திற்கு அவளை அழைத்துச் சென்றது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 1
சில வருடங்களுக்கு முன், பாண்டிச்சேரி /புதுச்சேரி!
பிரமாண்ட கல்லூரி வளாகம். அதில் நிறைய குரோட்டன்ஸ் செடி வகைகள் வைத்து, மெனக்கெடல் எடுத்துப் பராமரிக்கப்பட்டிருந்தது. மேலும், நிழல் தரும் வகையில் பெரிய பெரிய மரங்களும் இருந்தன. அதன் அடியில் கல் இருக்கைகளும் இருந்தன.
மதிய வேளையைக் கடந்திருந்ததால் வகுப்புகள் நடைபெறாத மாணவர்கள் அதில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வெயில் அதிகம் என்பதால் பெரிய அளவில் மாணாக்கர் நடமாட்டம் இல்லை.
வளாகத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்றார் போல கல்லூரி கட்டிடம் இருந்தது. அரைவட்ட வடிவில், இருபத்தைந்திற்கும் அதிகமான எண்ணிக்கை கொண்ட படிக்கட்டுகளுக்கு மேல் கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது.
அலுவலக ஊழியர்கள், கல்லூரி முதல்வர், பேராசியர்களுக்கென்று பிரத்யேக அறை ஒருபுறம் ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றொருபுறம், ஆண்டுகள் மற்றும் பாடப் பிரிவுகளின் அடிப்படையில் வகுப்பறைகள் பிரிக்கப்பட்டிருந்தன.
அதில் பத்திரிக்கைத் துறையைச் [journalism] சார்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் இருக்கும் பகுதி!
ஆசிரியர் ஒரு வேலையாகச் சென்றிருப்பதால், ஒருசிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருசிலர் வகுப்பறை வெளியே நின்று பேசினார்கள். ஒருசிலர் உண்ட மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
உறங்கும் அந்த ஒரு சிலரில் சுடரும் ஒருத்தி! மேசை மேலிருந்த புத்தகங்கள் மீது தலை சாய்த்து, அப்படி ஒரு தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தாள்!!
வெளியே நின்ற மாணவர்கள் வகுப்பறை சன்னல் வழியே உறங்குபவர்களை தொந்தரவு செய்யவென்று, தாள்களைச் சுருட்டி அவர்கள் மேல் எரிந்தார்கள். அப்படிச் செய்ததில் ஓரிருவர் எழுந்து கொண்டார்கள். சிலர் அதைத் தாண்டி தூங்கினார்கள்.
உருட்டிய தாளொன்று சுடர் மீது எறியப்பட்டதும், சட்டென விழித்தாள். அவள் விழித்தெழுந்திருக்கும் தோற்றத்தைக் கேலி செய்து சிரித்தார்கள்.
அந்தக் கேலியிலும், தூக்கத்தைக் கலைத்த கோபத்திலும்… அவர்கள் மீது எதையாவது ஏறிய வேண்டும் என நினைத்து, மேசையிலிருந்த கல்லூரி அடையாள அட்டையை எடுத்து எறிந்துவிட்டாள்.
ஆனால், அது அவள் வகுப்பு மாணாக்கர் மேல் படாமல், அந்த வழியே வந்த இரண்டு பேரில் ஒருவன் முகத்தில் பட்டு கீழே விழுந்தது.
கண்கள் மூடி, ‘ஷ்ஷ்’ என்று அடையாள அட்டை பட்ட இடத்தைத் தேய்த்து விட்டான். ‘அச்சச்சோ’ என சுடர் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
கீழே கிடந்த அடையாள அட்டையை எடுத்த மற்றொருவன், “ஏய்! என்ன இது? யாரு எறிஞ்சா?” என்று சத்தமிட்டான்.
மாணவர்கள், “சாரிண்ணா சாரிண்ணா! சத்தம் போடாதீங்க” என்ற போதே, “நீங்க எறிஞ்சீங்களா?” என அட்டையை எடுத்த ஆஷிக் கேள்வி கேட்டான்.
‘இல்லை’ என்று பதிலாகத் தலையாட்டியதும், “எவ்வளவு தைரியம் இருந்தா பைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ் மேல ஐடி கார்டு வீசுவீங்க?” என்று ஆஷிக் கோபத்துடன் கேட்டான்.
“சாரிண்ணா. ஐடி கார்டு கொடுத்திருங்க” என்று மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கெஞ்ச, “யார் எறிஞ்சாங்களோ அவங்களை சாரி கேட்க சொல்லுங்க” என்று திரும்பியிருந்த சுடரைப் பார்த்துக் கொண்டே ஆஷிக் சொன்னான்.
“ஏய் சுடர்! சாரி கேளு” என்று சுடர் வகுப்பு மாணவர்கள், சன்னலருகே சென்று அவளிடம் கோரிக்கை வைத்தாலும், ‘மன்னிப்பா!? ம்கூம், அதெல்லாம் கேட்க முடியாது’ என்ற ரீதியில் சுடர் திரும்பாமல் இருந்தாள்.
‘யார்டா அது? இத்தனை பேர் சொல்லியும் திரும்பாமல் இருப்பது. அந்த முகத்தைப் பார்க்க வேண்டுமே’ என்ற எண்ணம் அடையாள அட்டையால் அடிவாங்கியவனுக்கு வந்தது.
“அண்ணா ப்ளீஸ்ண்ணா! “ஐடி கார்டு கொடுத்துருங்க” என மீண்டும் மீண்டும் மாணவர்கள் கெஞ்சிட, “எறிஞ்சதுக்கு இவன்கிட்ட சாரி கேட்கச் சொல்லுங்க! ஐ.டி கார்டு கொடுக்கிறோம்” என்றான் ஆஷிக்.
“சாரிண்ணா. அவ மேல தப்பில்லை. பேசாம தூங்கிட்டு இருந்தா… நாங்கதான் அவளை எழுப்பனும்னு ஏதோ செய்யப் போய்… இப்படி ஆயிட்டு”
“கிளாஸ் அவர்ல தூங்கிறது தப்பில்லையா? – ஆஷிக்.
“இது லெஸ்ஸர் (leisure) hour ண்ணா” – இப்படியே இவர்களுக்கிடையே வாக்குவாதம் போய்க் கொண்டிருந்த பொழுதே, சுடர் திரும்பிவிட்டாள்.
திரும்பியவள், யார் மீது அடையாள அட்டை பட்டதோ அவனைப் பார்த்தாள். அவன்தான் இக்கணம் வேறுபக்கம் திரும்பியிருந்தானே! ஆதலால் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ‘எப்ப திரும்புவான்?’ என்ற ரீதியில் சுடர் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கும் தன்னை யாரோ பார்ப்பது போல் உணர்வு வந்ததும், மெதுவாகத் திரும்பியவன் சுடர் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
‘அவள் நோக்கினாள்; அவனும் நோக்கினான்’ என்கின்ற ‘மொமென்ட்’.
பார்வையை வேறுபுறம் மாற்ற முடியாதது போல் பார்த்தார்கள். தங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு வேறேதும் இல்லை என்பது போல பார்த்திருந்தார்கள்.
எதற்கென்றே தெரியாமல் அவனுக்கு மௌனமான புன்னகை ஒன்று வந்தது. மன்னிப்பு கேட்க சொல்லாமல், அவன் புன்னகை புரிவது போல் தெரிந்ததும், ‘சிரிக்கிறியா?’ என்று புருவங்களால் கேள்வி கேட்டாள்.
‘ஆமாம்’ என்று அரைகுறையாகத் தலையசைத்தவன், ‘பக்கத்தில் நடக்கும் வாக்குவாதத்தைப் பார்’ என்று கடைக் கண்களால் ஜாடை காட்டினான்.
இப்பொழுது அவன் புன்னகை அவளையும் ஒட்டிக் கொண்டது.
அக்கணம், “ஏய் சுடர்! ஒரு ஸாரி கேட்டா என்ன?” என கேட்கும் போதுதான், இருவரும் நிகழ்கணத்திற்குள் வந்தார்கள். மேலும், பார்க்கும் பார்வையை மாற்றிக் கொண்டார்கள்.
‘கேட்க முடியாது’ என்று சொல்லும் விதமாகவும்… பார்த்தது போதும் என்பது போலவும்… மீண்டும் மேசையில் படுத்து சுடர் கண்களை மூடிக் கொண்டாள்.
‘இங்கே என்ன நடக்கிறது?’ என்ற அர்த்தத்தில் சுற்றி இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘பார்த்தவளை அப்படியே பார்வைக்குள் பத்திரப்படுத்த வேண்டி வருமோ?’ என்ற யோசனையில் அடிவாங்கியவன் நடக்க ஆரம்பிக்க, “என்னடா எதுவும் சொல்லாம போற?” என ஆஷிக் பின் தொடர்ந்தான்.
மேசையில் தலை சாய்ந்திருக்கும் சுடரைப் பார்த்து, ‘என்னமோ செய்’ என்பது போல் தலையில் அடித்துக் கொண்டு மாணாக்கர்கள் வகுப்பறைக்குள் வந்துவிட்டார்கள்.
சில நிமிடங்களில் ஒரு கண்ணை மட்டும் திறந்து சுடர் பார்த்தாள். யாருடைய கவனமும் தன்மேல் இல்லை என்பது தெரிந்ததும், நிமிர்ந்து அமர்ந்தாள்.
திரும்பவும் அவனைப் பார்க்க வேண்டும் என்பது போல் ஓர் வேகம் எழுந்தது. மற்ற மாணவர்கள் அரட்டை அடித்துக் கொண்டு இருக்க, சுடர் சாதாரணமாக எழுந்து வெளியே வந்தாள்.
‘யாரும் பார்க்கிறார்களா?’ என மெல்ல வகுப்பிற்குள் திரும்பிப் பார்த்துவிட்டு, நடைகூடத்தின் இருபுறமும் பார்த்தாள்.
இல்லை! இருபுறமும் இல்லை. ‘எங்க போயிருப்பான்?’ என வகுப்பறை கதவில் சாய்ந்து யோசிக்கும் போது கைதட்டும் ஓசை கேட்டது. சத்தம் வந்த திசை நோக்கிப் பார்த்தாள்.
அவன்தான்! நான்கு வகுப்பறைகள் தாண்டி இருந்த தூணின் பின்னால் மறைந்திருந்தவன், வெளியே வந்து கைதட்டி அழைத்திருந்தான்.
‘தான் ஏன் பார்க்க வந்தோம்? அவன் ஏன் மறைந்து நின்றான்?’ என எதையும் யோசிக்காமல், கொஞ்சம் விரிந்த புன்னகை தந்தாள். அவனும் சிரித்தான்.
பின் அடையாள அட்டையைத் தூக்கிக் காட்டி, ‘அப்புறம் வாங்கிக்கோ’ என்று சைகையால் சொல்லிச் சென்றுவிட்டான்.
ஒருபுறம்… அடையாள அட்டையைக் கொண்டு போகிறவனை அட்டைப் பட நாயகனைப் போல் ரசித்து, சுடர் பார்க்க ஆரம்பித்தாள். மற்றொரு புறம்… அடையாள அட்டையை வைத்திருந்தவன், அதில் எழுதியிருந்த சுடரின் முழுப்பெயரை ரசித்து வாசித்தான்.
முதல் சந்திப்பிலே ஏதோ ஓர் ஈர்ப்பு இருபுறமும் உணரப்பட்டது!
யாழோவியம் அத்தியாயம் – 2 தொடர்கிறது…
காதல் கொண்ட சுடரின் மனது கணநேரத்தில் பாண்டிச்சேரி போய்விட்டு சென்னை திரும்பியிருந்தது.
‘இந்நேரம் தன்னைப் பற்றி நினைப்பானா?’ என்று உள்ளம் கேட்கும் போதே, விக்கல் வந்தது. ‘தன்னை நினைக்கிறான்’ என்று மனம் மகிழும் பொழுதே கைப்பேசியில் அழைப்பு வந்தது.
தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொண்டே திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தவுடன், அழைப்பை ஏற்ற காதிற்கு கொடுத்தாள்.
“கட்சித் துண்டு போட்டிருந்தா… இல்லை கட்சி பேட்ஜ் எதுவும் குத்தியிருந்தா, எடுத்து வச்சிட்டு பேச ஆரம்பி” என கறாராக காதலன் பேச்சு ஆரம்பிக்கப்பட்டது.
ஆம்! அவன் அப்படித்தான்! தன் மீது எந்தக் கட்சியின் சாயமும் விழக்கூடாது என்று தெளிவாக இருப்பவன்! அவன்… அந்தக் காதலன்… செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வகிப்பவன்!!