Kathambari Novels
அறை விளக்கைப் போட்டுவிட்டு மெத்தையில் சாய்ந்து கால்நீட்டி சற்றே சோர்வாக அமர்ந்திருந்தாள் வாணி. காலையில் தூங்கி எழுந்து பல்விளக்க நினைக்கையிலே தலைசுற்றி வாந்தி வந்துவிட்டது.
அதனால்தான் இந்த சோர்வு!
காலையில் உடற்பயிற்சிக்காக எழுந்த அரவிந்த், அக்கா அறையில் விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு வந்தான். வாணி தேநீர் கேட்க, அதைப் போட்டுக் கொடுத்துவிட்டு அவளருகில் அமர்ந்து கொண்டான்.
“இப்ப எப்படி க்கா இருக்குது?”
“லைட்டா கிடிநெஸ் மட்டும் இருக்குடா. மத்தபடி ஓகே” என்று டீ குடித்தாள்.
அக்காவின் சோர்வைப் பார்த்தவன், “சரியா சமைக்க மாட்டிக்கிறேனா? அதான் இப்படி இருக்கா” – அக்கறையாகக் கேட்டான் தம்பி.
“நீ சமைக்கிறப்ப நானும் உன்கூட நிக்கிறேன்ல, அப்புறம் என்னடா அரவிந்த்? இந்த நேரத்தில இப்படித்தான் இருக்கும்” என்றாள்.
இன்னும் அக்காவைப் பற்றியே யோசித்து இருந்தான்.
“நீ ஜாகிங் போ” என்றாள் வாணி.
“இன்னைக்கு வேண்டாம். உன்கூட இருக்கேன்” என்றுவிட்டான்
அக்கா, தம்பி இருவரும் கல்லூரியில் படிக்கையில் அம்மா, அப்பாவை ஒரு இரயில் விபத்தில் இழந்தார்கள். அன்றிலிருந்து ஒருவருக்கு மற்றொருவர் துணை என வாழ்ந்து வருகின்றனர்.
அதன்பின்னும் கொல்கத்தாவிலேதான் இருந்தார்கள். உறவுகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்தாலும் அங்கே செல்லவில்லை.
ஆனால் அந்த உறவினர்களின் ஆதரவில்தான் கல்லூரி படித்து முடித்தார்கள். அதன்பின் யாரிடமும் உதவி கேட்கவில்லை.
வேலை தேடிக் கொண்டு, அம்மா அப்பா இல்லாத வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டனர்.
வாணி திருமணத்தை நடத்தி முடித்தது அரவிந்த் என்றாலும்… வரன் கொண்டு வந்தது தமிழ்நாட்டிலிருக்கும் உறவினர்களில் ஒருவர்தான். வாணி கணவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்தான்.
அக்கா, தம்பி இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்குப் பாசம் அதிகம். ஆனால் அதைப் பெரிதாக வெளிக்காட்ட மாட்டார்கள். வாணி தம்பியை நிறைய கேலி பேசுவாள்.
அதேசமயத்தில் மற்றவர்களை ஒரு சொல் சொல்ல விடமாட்டாள்!
அதுபோல்தான் அரவிந்தும்!
இன்னும் அக்காவின் அசதியைப் பற்றியே யோசித்தவன், “உன் மாமியார துணைக்கு கூப்பிடுவோமா?” என்று கேட்க,
“வர மாட்டாங்க. வந்தாலும் எதும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நாமளே சமாளிச்சிடலாம்” என்றாள்.
தம்பியின் தோளில் சாய்ந்து, “காலையில ப்ரேக்பாஸ்ட் பண்ணிட்டு ஸ்டேஷன் போறது கஷ்டமா இருக்கா” என்று கேட்டாள்.
“க்கா, அதலாம் ஒரு கஷ்டமா? டெய்லி ஒரு தடவையாவது வாமிட் பண்ணிற. அதான் கஷ்டமா இருக்கு” என்றான்.
சட்டென எழுந்து, “திரும்பத் திரும்ப அதையே பேசாத. அப்புறம் நாசியா பீல் இருந்திட்டே இருக்கும்” என்றாள்.
“பால்கனி டோர், விண்டோஸ் ஓபன் பண்ணிவிடவா? கொஞ்சம் ஃபிரஷ் ஏர் வரட்டும்” என்று அரவிந்த் கேட்டதும், சரி என்றாள்.
இன்னும் அவன் முகம் ஒருமாதிரி இருந்தது.
“அரவிந்த்… அந்தப் பொண்ணு வீட்லருந்து கால் பண்ணிருந்தாங்க” என்று பேச்சை மாற்றினாள்.
“எந்தப் பொண்ணு?”
“அந்த பூஜா…”
“ஓ! என்னவாம்?”
“அவ அப்பா சொன்னாரு. அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்” என்று சொல்லும் போதே,
“க்கா… நான் சொன்னதைச் சொன்னியா, இல்லயா” என்று குறுக்கிட்டான்.
“பொறுடா! நான் இன்னும் முடிக்கலை” என்றவள், “அந்தப் பொண்ணுக்கும் உன்னை பிடிக்கலையாம்” என்றாள்.
சன்னல் கதவைத் திறந்துவிட்டு, “ரொம்ப நல்லது” என்றான் சாதரணமாக.
“ரீசன் என்னென்னு கேட்டா… நீ டென்சன் ஆயிடுவ” என்று சிரித்தாள்.
“என்ன ரீசன்?” என்று கேட்டு வந்து அவள் முன் நின்றான்.
“போலீஸ்னா வேண்டாம்னு சொல்லிருக்காடா?!”
உடனே, “என்னது போலீஸ்னா வேண்டாமா? ஏன் க்கா நாளைக்கு இவளுக்கு ஒரு பிரச்சனைனா… இவ யார்கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணுவா?” என்று சீரியசாக கேட்டான்.
“என்ன பேச்சு இது? முதல வாயை சானிடைஸ் பண்ணு!” என்றாள் கோபமாக.
“பின்ன என்னக்கா? வேண்டாம்னு சொல்றதுக்கு இந்தப் பொண்ணுக்கு வேற காரணமே கிடைக்கலயா?” என்று எரிச்சலடைந்தான்.
சிரித்துக் கொண்டே, “நான் சொன்னேன்ல நீ டென்சனாவன்னு?” என்று வாணி சொல்ல,
“நீ வேணா பாரேன். அந்தப் பொண்ணுக்கு… ஒரு போலீஸ்காரன்தான் லைஃப் பார்ட்னரா வரப்போறான்” என்றான்.
“நீ எப்போடா ஜோசியக்காரான மாறின?” என்று சொல்லுகையிலே வாணிக்கு அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்து, “அரவிந்த்… உன் மாமா” என்றாள் முகம் மலர!
“உடனே எப்படி உனக்கு இவ்ளோ எனர்ஜி வந்திச்சு?” என்று சிரித்துக் கொண்டே அக்காவின் அருகில் வந்து அமர்ந்தான்.
சிலவினாடிகள் பேசிவிட்டு… அக்காவும், அவள் கணவனும் பேசட்டும் என்று காலை உணவைத் தயாரிக்க சமையலறை சென்றுவிட்டான்.
****************
காளிகாட் பகுதி!
சேகரன் வங்கி சென்றிருந்தார். இன்று அப்பாவும் மகளும் சேர்ந்தே சமையல் செய்திருந்தார்கள். அப்பா சென்றதும் பாத்திரங்களை எடுத்து போட்டுவிட்டு, துணிகளை மெஷினில் போட்டு வந்து வேலைவாய்ப்புச் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நேரம் பதினொன்றைத் தாண்டிய போது வேலையாள் வந்து பாத்திரம் சுத்தம் செய்து, வீடு பெருக்கிச் சென்றார். அவர் போனதும், குளித்து முடித்து வந்தாள்.
ஸ்லீவ்லெஸ் டாப், லாங் ஸ்கர்ட் உடையில் வேகமாக ஓடும் டேபிள் பேன் முன் நின்று முடியை உலர வைத்துக்கொண்டே டிவி பார்த்தாள்.
அப்படியே நேரம் கடந்தது. இரண்டு மணி இருக்கும் போது சாப்பிட்டு முடித்து ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள். இன்று அப்பாவும் மகளும் வெளியே செல்ல நினைத்திருக்கின்றனர். சேகரன் மூன்று மணியளவில் வருவதாக சொல்லிச் சென்றிருந்தார்.
ஜடை பின்னலிடும் போது சேகரன் அலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்ற பூஜா, “என்னப்பா பேங்க்லருந்து கிளம்பிடீங்களா?” என்றாள்.
“இல்ல பூஜா… இன்னைக்கு வெளிய போக முடியாது. அப்பாக்கு ஒரு வேலை இருக்கு. அதைச் சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்” என்றார்.
“அச்சோ அப்பா… என்ன திடிர்னு இப்படிச் சொல்றீங்க? நான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்”
“திடிர்னுதான் ஃபோன் வந்தது. முக்கியமான வேலை. வீட்டுக்கு வரவே லேட் ஆகலாம். அதான் உன்கிட்ட சொல்லிடலாம்னு ஃபோன் பண்ணேன்”
“அப்போ… உங்க பெர்த்டே ஷாப்பிங் பண்ண முடியாதா?”
“இவ்ளோ வயசாயிடுச்சி அதெல்லாம் எதுக்குன்னு கேட்கிறேன்… நீதான் கேக், புது ட்ரேஸ்னு சொல்ற…” என்று அவர் இழுத்தார்.
“இதுக்கு முன்ன பர்த்டேனா ஃபோன்லதான் உங்களுக்கு விஷ் பண்ணுவேன். இப்ப உங்ககூட இருக்கதால, இதலாம் கண்டிப்பா வேணும்” என்றாள் அடமாக.
“சரி, சரி ஷாப்பிங் நாளைக்குப் போகலாம். ம்ம்?” என்றார் மகளைச் சமாதானம் செய்யும் விதமாக.
சரியென்றாள்.
“உனக்கேதும் ஹெல்ப்…” என்று சேகரன் ஆரம்பிக்க,
“த்ரீ ஸிரோ ஒன்ல அபார்ட்மென்ட் செக்ரெட்டரி இருப்பாரு. அப்பா கூட அவருக்கு ரொம்ப நல்ல பழக்கம். அவர் இப்போ ஒர்க் ரிலேட்டடா டெல்லி போயிருக்கிறதால… அவர் வொய்ப்கிட்ட நீ கேட்கலாம். இதானப்பா? எத்தனை தடவை சொல்வீங்க?” என்றாள்.
சேகரன் சிரித்துக் கொண்டார்.
“நான் பார்த்துப்பேன் ப்பா. நீங்க இம்பார்ட்டன்ட் ஒர்க்னு சொன்னதைப் பாருங்க” என்றாள்.
“சரிம்மா” என்றவர், “அப்புறம் பூஜா இன்னொரு அலைன்ஸ் வந்திருக்கு. இது கேஷியர் சொன்னது. அதைக் கொஞ்சம் பார்க்கணும்” என்றார்.
“ம்ம்ம்” என்றவள், “போலீஸ் அலைன்ஸ் ஒன்னு வந்ததே ப்பா… அவங்களுக்குப் பதில் சொல்லிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“சொல்லிட்டேன் பூஜா. ஆனா அவங்களுமே வேண்டாங்கிற முடிவிலதான் இருந்தாங்களாம். அந்தப் பையனுக்கு பெங்காலி தெரிஞ்ச பொண்ணுதான் வேணுமாம். தமிழ் தெரியலைனாகூட பரவாயில்லைனு சொல்றானாம்”
“இப்படி ஒரு கண்டிஷனா?” என்று வியந்தவள், “இவன் தமிழ்காரன்தான ப்பா?! எப்படி இவனால இப்படிப் பேச முடியுது?” என்றாள் எரிச்சலில்.
“எதுக்கு இவ்ளோ கோபம்?” – மகளைக் கண்டித்தவர், “தமிழ்தான். பையன் இங்கயே பிறந்து வளர்ந்ததால… தமிழ் பேசத்தான் தெரியுமாம். எழுத, படிக்கத் தெரியாதாம்” என்றார்.
இன்னும் கோபம் குறையாமல், “நீங்க வேணா பாருங்கப்பா… இவனுக்கு இந்த சிட்டி, அப்புறம் பெங்காலி லாங்குவேஜ் பத்தி ஸீரோ நாலேட்ஜ் இருக்கிற ஒரு பொண்ணுதான் கிடைக்கப் போகுது” என்றாள்.
சட்டென, “என்ன பூஜா இது… சாபம் மாதிரி? அது அவனோட இஷ்டம். இதோட இந்தப் பேச்ச விடு” என்றார்.
மெல்லிய குரலில், “சாரி” என்றாள். பின், “அத்தை ஃபோன் பண்ணிருந்தாங்க ப்பா” என்றாள் சாதரணமாக.
“காயத்திரி எப்படி இருக்கா? கண்ணா எப்ப வர்றானாம்?” என்று தங்கை பிள்ளைகளைப் பற்றிக் கேட்டார்.
“காயத்திரி நல்லா இருக்காளாம். பட் டெலிவரி கொஞ்சம் காம்ப்ளிகேட்டடா இருக்குமாம். அத்தை ரொம்ப பயப்படறாங்க. பத்து நாளைக்கு அப்புறம்தான் கண்ணா வருவான் போல” என்றாள்.
பூஜாவிற்கும் அவள் மாமாவிற்கும்தான் ஒத்து வராதே தவிர, அத்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் இவளுடன் அவ்வளவு ஒட்டுதலாக இருப்பார்கள். இவளுக்கும் அவர்கள் மேல் தனிப்பட்ட பாசம் உண்டு!
“அப்பாக்கு லேட்டாகுது பூஜா” என்றதும், “பை ப்பா” என்று வைத்துவிட்டாள்.
அப்பாவிடம் பேசிவிட்டு வெகு நேரத்திற்கு சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டவள், அதற்கடுத்து காயப் போட்ட துணிகளை எடுத்து வைத்தாள். காஃபி போட்டுக் குடித்துவிட்டு, இரவு உணவிற்கான வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
காளிகாட் பகுதி வங்கி!
மகளிடம் பேசிவிட்டு வெளியே சென்றுவிட்டு தோராயமாக மூன்றரை மணி நேரம் கழித்து மீண்டும் சேகரன் வங்கி வந்தார்.
‘பேங்க் டைம் முடிய போகுது சார்’ என்று செக்யூரிட்டி பெங்காலியில் கூற, ‘தெரியும்’ என சொல்வது போல் தலையசைத்துவிட்டு அவர் அறைக்குள் வந்தார்.
சன்னலின் வெனிஷிய மடக்குத் திரையை இழுத்துவிட்டு வந்து அமர்ந்தார். குளிரூட்டப்பட்ட அறையிலும் வியர்வைத் துளிர்த்தது. உடல் வேறு நடுங்கிக் கொண்டிருந்தது.
அடுத்து ‘என்ன செய்யணும்?’ என்று யோசிக்க முடியாமல் மூளை வெற்றிடமாக இருந்தது.
அப்படியே அமைதியாக இருந்தார். படபடவென்று வருவது போல் இருந்ததும், மேசையிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்தார்.
கைகள் நடுங்கின!
தண்ணீர் குடிக்காமல் சில நிமிடங்கள் பாட்டிலை கையில் வைத்திருந்தார். பாட்டிலை மீண்டும் மேசையில் வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து ஆமர்ந்தார்.
அவர் மனமும், மூளையும் ஒருநிலையில் இல்லாமல் இருந்தன!
ப்யூனை அழைத்து டீ எடுத்து வர சொன்னார். சில நிமிடங்களில் ப்யூன் வந்து டீயை வைத்துச் சென்றார். ஆனால் அதையும் அவர் குடிக்கவில்லை.
ஆறிப் போக விட்டிருந்தார்!
தன் செய்கைகளைப் பார்த்தவர், இப்படியே இருப்பது சரியல்ல என்று தோன்ற நேராக நிமிர்ந்து அமர்ந்தார்.
அடுத்த நொடி, ‘ஐயோ… இப்படி நடந்திடுச்சே!? நான் என்ன செய்ய?’ என்று கிட்டத்தட்ட புலம்பலாக முணுமுணுத்தார்.
‘என் பொண்ணு நல்லா இருக்கணும். அதுக்கு நான் என்ன பண்ணனும்?’ என்ற கேள்வி மேலோங்கி வந்தவுடனே, மேசை ட்ராயரிலிருந்து சில காகிதங்களை எடுத்தார். பேப்பர் ஸ்ரெட்டர் [shredder] இயந்திரத்தில் ஒவ்வொரு காகிதமாகக் கொடுத்தார்.
அதிலிருந்து சிறு குச்சிகுச்சியாக நீளவாக்கில் வெளியே வந்த காகிதங்களை எடுத்துக் குப்பை கூடையினுள் போட்டார்.
இப்படிச் செய்வது சரியா? தவறா? இதனால் என்னாகும்? வேறு பிரச்சனை வருமா? சுயநலமா யோசிக்கிறேனா?
எதற்கும் பதிலில்லை! என்ன செயவென்றும் தெரியவில்லை!
‘ஆனா இதை தவிர எனக்கு வேறு வழியில்லயே’ என முணுமுணுத்தார். அதன் பின்னர் ஒரு அலைபேசி அழைப்பு மட்டும் செய்துவிட்டு, சேகரன் வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
காலிங் பெல் சத்தம் கேட்டு, பீப்ஹோல் கேமரா வழியே பார்த்துவிட்டு அப்பா என்றதும் கதவைத் திறந்தாள்.
அப்பா முகம் பார்த்ததும், “ப்பா என்னாச்சு, என்ன ஒருமாதிரி இருக்கீங்க” என்றாள்.
எதுவுமே பேசாமல் இருந்தார் சேகரன்.
“ப்பா, உடம்புக்கு எதுவுமா?” -சற்று பதட்டத்துடன், அப்பா உடல்நிலையில் அக்கறையுடன் கேட்டாள்.
“கொஞ்சம் பிபி ஷூட்அப் ஆகுற மாதிரி இருக்கு” என்று அவர் அறைக்குச் செல்லப் போனார்.
அப்பா பின்னேயே போனவள், “டாக்டர்கிட்ட போலாமா?” என்றவள் முகத்தில், ‘அப்பாக்கு என்னவோ?’ என்ற பயம் தெரிந்தது.
“ஒன்னுமில்லை. டேப்லட் போட்டு ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்” என்றார் மகளிடம்.
“நைட் டின்னர் கிச்சடிதான். ஃபாஸ்ட்டா செஞ்சிடுவேன். சாப்பிட்டு டேப்லட் போடறீங்களா?”
“வேண்டாம் பூஜா. ஸ்ட்ராங்கா காஃபி மட்டும் போட்டுக் கொண்டு வா” என்று முகம் கழுவச் சென்றதும், “இதோ” என்று பூஜா சமையலறை விரைந்தாள்.
காஃபி தயாரித்து எடுத்து வந்தபோது சேகரன் படுத்திருந்தார். கட்டில் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தவள், “ரொம்ப முடியலையா ப்பா…? ஹாஸ்பிட்டல் போலாமா?” என்று மீண்டும் கேட்டாள்.
எழுந்து அமர்ந்து காஃபியை பருகியவர், “ரெஸ்ட் எடுத்துப் பார்க்கிறேன். சரி ஆகலைனா நாளைக்குப் போகலாம்” என்று சொன்னார்.
“டேப்லட் போட்டீங்களா?”
“ம்… அப்பா தூங்கிடுவேன். நீ சாப்பிட்டுத் தூங்கு”
“சரி ப்பா” என்றவள் அறையின் பால்கனி கதவைப் பூட்டிவிட்டு, இரண்டு சன்னல் திரைகளை இழுத்துவிட்டு வந்து அப்பா அருகில் அமர்ந்தாள்.
காஃபி குடித்து முடித்த சேகரன் படுத்துக் கொள்ளவும், ஏசியைப் போட்டுவிட்டு அவருக்குப் போர்வையை மூடிவிட்டு, “இடையில பசிச்சா கேளுங்க பா” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள்
‘என்னாச்சி? ஏன் இப்படி இருக்கிறார்?’ என்ற கேள்வியுடன் வெளியே வந்தவள், சாப்பாடு செய்யவும் மனமில்லை… சாப்பிடவும் மனமில்லை. அவளுக்கும் ஒரு காஃபி போட்டுக் குடித்துவிட்டு வரவேற்பறையிலே படுத்து உறங்கினாள்.
அடுத்த நாள் காலை!
பால்கனி வழியே வந்த சூரிய ஒளி முகத்தில் பட பூஜா கண்விழித்தாள். நேரம் எட்டரையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. இரவில் அப்பாவை சென்று பார்ப்பதும்… பின் வந்து படுப்பதுமாக இருந்ததால் அவளால் சரியாக உறங்க முடியவில்லை. அதனாலே இவ்வளவு தாமதம்.
எழுந்ததுமே அப்பாவைப் பார்க்க சென்றாள். அவர் விழித்திருந்தார். ஆனால் படுத்திருந்தார்.
ஒருமாதிரி முகம் மாற, “என்னப்பா இன்னும் சரியாகலயா? ஹாஸ்பிட்டல் போவோமா?” என்று கேட்டாள்.
“இப்போ பரவாயில்லை”
“சரிப்பா. ப்ரஷ் பண்ணிட்டீங்களா? காஃபி போடவா? இல்லை, பிரேக்பாஸ்ட் பண்ணிடட்டுமா?”
“பசிக்குதும்மா. பிரேக்பாஸ்ட்டே பண்ணிடு” என்று சொல்லும் பொழுதே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“நான் பார்க்கிறேன் பா” என்று பூஜா சொல்லுகையில் வேகமாக கதவு தட்டப்பட்டது. “யார் இப்படித் தட்றது?” என்று முணுமுணுத்துக் கொண்டே பூஜா போனாள்.
சேகரன் பதற்றமானார்!
உடனே எழுந்தவர், “பூஜா… டோர் ஓபன் பண்ணாதமா. அப்பா வர்றேன்” என்று வெளியே வரும் பொழுதே, அவள் கதவைத் திறந்திருந்தாள்.
அங்கே நின்ற காவலர்களைக் கண்டதும் சேகரனுக்குள் ஒரு பயம் வந்தது.
பூஜாவோ, ‘என்ன வேண்டும்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.
அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பெங்காலியில் அவர்கள் ஏதோ சொன்னார்கள்.
‘நீங்க பேசறது புரியல’ என்று ஆங்கிலத்திலே சொல்லிவிட்டு… அப்பாவைப் பார்த்து, “என்னப்பா பேசறாங்க. ஒன்னும் புரிய மாட்டிக்குது” என்றாள் தமிழில்.
அதுவரை அமைதியாக நின்ற சேகரன், ‘என்ன விஷயமா வந்திருக்கீங்க?’ என பெங்காலியில் கேட்டுக்கொண்டே வாசல் வரை வந்ததும், வந்திருந்த துணை ஆய்வாளர் அமைதியாகவே பதில் சொன்னார்.
அதற்கு சேகரன் ஒத்துக் கொள்வது போன்று தலையசைக்க, இரு காவலர்கள் வீடு முழுதும் சோதனை செய்ய ஆரம்பித்தனர். மற்றொரு காவலர் வாகனம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டறிந்து காரில் சென்று சோதனையிட்டார்.
இதற்கிடையே, “என்னப்பா நடக்குது? ஒன்னுமே புரியலை” என்ற மகளிடம், “பொறுமையா இரு” என்று சொல்லிக் கொண்டார்.
அக்கம்பக்கத்து வீட்டினர், ‘என்ன இங்கே?’ என்று எட்டிப் பார்த்தனர்.
சற்று நேரத்தில் வீட்டில் சோதனையிட்ட காவலர்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். ஆனால் காரில் சோதனை செய்த காவலர் அலைபேசி வாயிலாக துணை ஆய்வாளருக்கு ஏதோ சொல்லவும், அதை அப்படியே அவர் சேகரனிடம் பெங்காலியில் சொன்னார்.
சேகரனுக்கு பெருத்த அதிர்ச்சி!
இதை எதிர்பார்க்கவில்லை என்பது போன்ற அதிர்ச்சி!
மேலும் துணை ஆய்வாளர் பேச, சேகரன் அசையாமல் அப்படியே நின்றார்.
இரண்டு காவலர்கள் அவரை அழைத்துச் செல்வது போல அருகில் வர, ‘என்ன நடக்குது!?’ என்று பூஜா புரியாமல் இருந்தாள். சேகரனைக் கூட்டிக் கொண்டு வெளியே செல்ல அவர்கள் தயாரானார்கள்.
“என்ன பண்றீங்க? ஏன்…?” என்று வார்த்தை வராமல் அவள் தடுமாறினாள்.
காவலர்கள் சேகரனை அழைத்துக் கொண்டு லிஃப்டை நோக்கிச் செல்ல, “என் அப்பாவை எங்க கூட்டிட்டுப் போறீங்க? விடுங்க” என அவள் கத்திக் கொண்டு பின்னேயே போனாள்.
அவள் கத்தியதை பொருட்படுத்தாமல் அவர்கள் நடந்தார்கள்.
“சொல்லிக்கிட்டே இருக்கேன்ல? நீங்க பாட்டுக்கு கூட்டிட்டுப் போறீங்க. நில்லுங்க” என்று அவள் அப்பா கையை வலுவாக பற்றிக் கொண்டாள்.
துணை ஆய்வாளர் பெங்காலியில் ஏதோ சொல்ல, ‘நான் எங்கயும் அப்பாவை விடமாட்டேன்’ என்று ஆங்கிலத்தில் கத்தி ஒரு காவலர் கையைத் தட்டி விட, கோபத்தில் அந்தக் காவலர் அவளை நோக்கி வரவும், ‘சார், சார்… ப்ளீஸ் சார்’ என்று சேகரன் பெங்காலியில் நிறைய பேசி அவரைச் சமாதானப்படுத்தினார்.
பின் மகளைப் பார்த்து, “சட்டு சட்டுன்னு கோபப்படாத பூஜா… அதுவும் இப்படி போலீஸ்காரங்ககிட்ட…” என்றார்.
“சரி நான் கோபப்படல. நம்ம வீட்டுக்குப் போகலாம் வாங்க” என்று அப்பாவின் கைப்பிடித்து இழுத்தாள்.
மகள் கையிலிருந்து மெல்ல தன் கையை உருவிக் கொண்டு, “நீ இங்க இருக்க வேண்டாம். தமிழ்நாட்டுக்கே போயிடு. அப்பா சொல்றதைக் கேளு” என சொல்லி முடிக்கும்போது லிஃப்ட் வந்துவிட காவலர்களுடன் சென்றார்.
தன் அப்பா பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் ஒருநொடி அப்படியே நின்றாள். அதிர்ச்சி விலகியதும் லிஃப்ட் கதவைப் போட்டுத் தட்டிக் கொண்டிருந்தாள்.
அப்பாவைக் கூட்டிச் சென்று விட்டார்கள் என்று புரிந்ததும், பூஜா கடகடவென படிக்கட்டு வழியே கீழே இறங்கினாள். தரைத்தளம் வந்து, ஓடி அவள் வெளியே சென்றபோது பார்த்தது காவலர் ஜீப் அடுக்குமாடிக் குடியிருப்பு வாயிலைத் தாண்டி சாலைக்குப் போனதைத்தான்.
‘என்ன? ஏது?’ என்று புரியாமல், “ப்பா…” என ஜீப் சென்ற திசையைப் பார்த்துக் கத்தியவள், ஏங்கி ஏங்கி அழுதபடி தரையில் மண்டிபோட்டு அமர்ந்தாள்.