Kathambari Novels
கொல்கத்தா!
மேற்கு வங்காளத்தின் தலைநகரம்! இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று! ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த நகரம், இந்தியாவின் கலாச்சார வளாகம் என்றும் கூட அறியப்படுகிறது!
கை ரிக்ஷா வண்டிகள், மஞ்சள் நிறத்திலான டாக்சிகள், நெருக்கடியான நகர பேருந்துகள், ட்ராம் வண்டிகள்… இவையாவும் கொல்கத்தா நகர் சாலையின் முக்கிய அம்சங்கள்.
மேலும் இவையெல்லாம் சுற்றுலா வாசிகளைக் கவர்கிற ஒன்றும்!
கொல்கத்தாவில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு. அவற்றில் ஒன்று விக்டோரியா மெமோரியல் கட்டிடம்! வெள்ளை பளிங்குக் கற்களால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ராணி விக்டோரியா மரணத்தின் நினைவுச் சின்னம் இதுவாகும்!
அழகிய தோட்டங்கள்! பசுமையான புல்வெளிகள்! கண்கவர் ஏரி! இதனுடன் சேர்ந்து வெற்றிக்கான கிரேக்க பெண் தெய்வமான நைக் அவர்களின் சிலை!
உள்ளே இருக்கும் அருங்காட்சியகத்தில் பல வரலாற்று நினைவுச் சின்னங்கள், சுவாரஸ்யமான ஓவியங்கள், சிற்பங்கள், புத்தகங்கள், ஆயுதங்கள், பண்டைய பொக்கிஷங்கள் உண்டு.
இங்கே சாயங்கால நேரத்தில் பிரமிக்க வைக்கும் ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி நடைபெறும்.
இதைப் பார்க்கத்தான் பூஜாவை, அவளது அப்பா சேகரன் இங்கே அழைத்து வந்திருக்கிறார்!
மத்தியானமே வந்துவிட்டதால் அப்பா கைபிடித்து முதலில் அருங்காட்சியத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.
உயரமான ‘டோம்’ அமைப்புடன் கூடிய கட்டிடத்தை அன்னாந்து முன்னூற்றி அறுபவது டிகிரி கோணத்தில் சுற்றிப் பார்த்த பூஜா, “ப்பா… சூப்பரா இருக்கு” என்றதை, சேகரன் ஒரு மென்னகையுடன் கேட்டுக் கொண்டார்.
சேகரனுக்கு… இந்த கொல்கத்தா நகரம், இந்நகரத்தின் வழக்கங்கள், மொழி, உணவுகள், தெருக்கள்… என எல்லாம் பழகிப் போன ஒன்று.
ஏனெனில் அவர் பிறந்து வளர்ந்தது தமிழ்நாடு என்றாலும், வேலை இங்கேதான்.
சேகரனுக்கு திருமணம் முடிந்து, பூஜா பிறந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை தமிழ்நாட்டில்தான் இருந்தார். அதுவும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அதன்பின்னர் அவருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிடமாற்றம்!
அது கொல்கத்தாவிற்கு!!
மனைவி, மகளை தமிழ்நாட்டில் விட்டுவிட்டு சேகரன் மட்டும் இங்கே வந்தார். காரணம் அவர் மனைவியின் அரசாங்க வேலை. கிடைத்த வேலையை விட்டு வர அவருக்கு விருப்பமில்லை என்று கூற முடியாது. விட்டுவரும் நிலையில் புகுந்த வீட்டின் பொருளாதார சூழல் இல்லை.
அதனாலே சேகரனும் அவருக்குக் கிடைத்த வாய்ப்பை மறுக்கவில்லை!
அப்பாவின் தொழிலில் ஏற்பட்ட பெருநஷ்டம், தங்கை கல்யாணக் கடன் என்ற பொறுப்புகளை மகனான தன் தோள்களில் போட்டுக் கொண்டார்.
வீட்டுப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்ட பின் மனைவி, மகளை கொல்கத்தா அழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் அவர் மட்டும் இங்கே வந்தார்.
அதேநேரத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தமிழ்நாடு சென்று மகளையும், மனைவியையும் பார்த்து விடுவார். அவர்கள் இருவரும் இங்கே வருவது வெகு அரிதான ஒன்று.
கொல்கத்தா வந்த ஒரு வருடத்தில் இந்த வாழ்க்கைமுறை, வேலையிடத்திற்கு ஏற்ப சேகரன் தன்னை மாற்றிக் கொண்டார். ஒருசில வருடங்களிலே வீட்டுப் பொருளாதார நிலையை ஓரளவிற்கு சரிசெய்திருந்தார்.
அதன்பின்பு மனைவி, மகளை கொல்கத்தா வருமாறு கேட்டார். ஆனால் பூஜா பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வயதில் இருந்ததால், மகளைக் கல்லூரியில் சேர்த்தபின் வருவதாக அவர் மனைவி சொல்லிவிட்டார்.
சொன்னதுபோல் பூஜா கல்லூரி சென்றதும், விருப்பஓய்வு பெற்றுக் கொண்டு சேகரன் மனைவி கொல்கத்தா வந்தார். சேகரன் அளவு இல்லையென்றாலும் ஓரளவிற்கு இந்த வாழ்விற்கும் அவரும் பழகிக் கொண்டார்.
ஆனால் பூஜாவிற்கு அப்படியல்ல!
கல்லூரி பயிலும் போது கொல்கத்தாவிற்கு அவள் வந்ததே இல்லை. அவளுக்கு விடுமுறை என்றால் சேகரன் தம்பதியினர் தமிழ்நாடு செல்வார்கள். பெற்றோர்கள், அத்தை, அவர் பிள்ளைகளுடன் சேர்ந்து விடுமுறையைக் கொண்டாடுவாள்.
இந்த இரண்டு வருடங்கள்தான்… அடிக்கடி என சொல்ல முடியாது, அதிகமுறை கொல்கத்தா வருகிறாள். நான்கைந்து நாட்கள் அப்பாவுடன் தங்கிவிட்டுச் செல்வாள். போகும்போது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
தந்தை, மகள் பாசப் பிணைப்பு? ஆமாம் சேகரனுக்கு மகள்மீது பிரியம், பாசம் சற்றே அதிகம்! பூஜாவிற்கும் அப்படித்தான்!!
ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்புவரை பூஜாவிற்கு தன் அப்பாமீது இந்தப் பிணைப்பு இருக்கவில்லை!!
என்னதான் சேகரன் முடிந்தவரை தமிழ்நாடு சென்று மகளைப் பார்த்துவிட்டு வந்தாலும், பூஜாவிற்கு அம்மாவுடன் இருந்த ஒரு பிணைப்பு அப்பாவுடன் இருக்கவில்லை.
அப்பா என்ற பாசம் இருந்தது. ஆனால் ஓரிரு நாட்கள் மட்டும் இருந்துவிட்டுச் செல்லும் அப்பாவிடம் பெரிதாக பேசிடவே நேரமிருக்காது.
அம்மாவிடம்தான் நிறைய விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுவாள். எதுவும் தேவை என்றாலும் அது அம்மா வழியாகத்தான் அப்பாவைச் சென்றடையும்.
எனவே அவளுக்கு அப்பாமீது பாசப் பிணைப்பு சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை! அதில் சேகரனுக்கு ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருந்தது!!
ஆனால் சிறுநீரக கோளாறு காரணமாக பூஜா அம்மா இரண்டு வருடத்திற்கு முன் தவறிவிட்டார்.
அதன்பிறகிலிருந்தே தந்தைமீது இப்படி ஒரு பிணைப்பு!
ஏன், எப்படி என்று கேட்டால் அவளுக்குச் சொல்லத் தெரியாது!!
இப்போதெல்லாம் தந்தையிடம் நிறைய பேசுகிறாள். தனக்கு வேண்டியதை அப்பாவிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறாள். கூடவே செல்லமான கோபமும் அப்பாமீது வருகிறது!
சிலநேரம் அடமும் பிடிப்பாள்!!
இதெல்லாம் அவளுக்கும் சரி… சேகரனுக்கும் சரி புதிது!
மனைவி மறைந்தபின், சேகரன் மகளை கொல்கத்தா வரும்படிச் சொல்லிப் பார்த்தார். அக்கணம் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருந்ததால் அவள் வர மறுத்துவிட்டாள். அதனால் எப்போதும் போல் அவரே தமிழ்நாடு சென்று மகளைப் பார்த்தார்.
முன்புபோல் அல்லாமல் மாதம் ஒருமுறை சென்று மகளைப் பார்த்துவிடுவார். ‘என்ன வேண்டும்?’ என கேட்டு கேட்டு செய்ய ஆரம்பித்தார். தினமும் இரண்டு மூன்று முறை அவளை அலைபேசியில் அழைத்துப் பேசிவிடுவார்.
அம்மா இல்லை என்ற உணர்வு மகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் சேகரன் கவனமாக இருந்தார்.
அதன்பின்தான்… அம்மாவைப் போல் அப்பாவிற்கும் தன்மீது பிரியம், அன்பு இருக்கிறது என்று பூஜாவிற்குப் புரிய வந்தது.
பொருளாதார சூழ்நிலையால் அப்பா எடுத்த முடிவைப் புரிய முடிந்ததோ… இல்லை, இயல்பாகவே அப்பா என்ற பாசம் இருந்ததாலோ… பூஜாவிற்கு தந்தைமீது பிணைப்பு ஏற்பட்டது.
‘தனியாக இருக்கிறோம்’ என்ற உணர்வு தந்தைக்கு வந்துவிடக் கூடாது என்று சிலசமயங்கள் அவளும் கொல்கத்தா வர ஆரம்பித்தாள். மேலும் அப்பாவிடம் மனம்விட்டு பேசவும் தொடங்கினாள்.
அதில் சேகரனுக்கு அவ்வளவு சந்தோஷம்!!
இதோ இப்பொழுதுகூட முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை ஒரு வாரம் முன்புதான் முடித்திருந்தாள். ஆனால் அப்படி முடித்து ஆய்வை சமர்பித்ததும், இங்கே கிளம்பி வந்துவிட்டாள்.
இனிமேல் திரும்பிப் போகும்பொழுது வரும் கஷ்டம் இருக்கப் போவதில்லை. ஏனெனில் இனி இங்குதான்… அப்பாவுடன்தான் இருக்கப் போகிறாள்.
தன் சிறு வயதிலிருந்து அப்பாவுடன் செலவிடாத நேரங்களுக்கு சேர்த்து வைத்து இனி நேரம் செலவிட வேண்டுமென ஆசைப்படுகிறாள்.
வந்தவுடன் படிப்பிற்கு ஏற்ற வேலைத் தேட ஆரம்பித்தாள். இன்று காலைதான் அவளுக்கு முதல் நேர்முகத் தேர்வு இருந்தது. அப்பாவுடன் சென்றுதான் அதில் கலந்து கொண்டிருந்தாள்.
தமிழ்நாடு என்றால் எங்கு வேண்டுமானாலும் தனியாகவே சென்றுவிடுவாள். அங்கே பூஜாவிற்கு அவ்வளவு பரிட்சியம். ஆனால் இங்கே வந்தால் தனியாக எங்கேயும் செல்லமாட்டாள்.
தொண்ணுற்று ஒன்பது சதவீதம் வெளியே போவது அப்பா துணையுடன்தான்!
ஏனெனில் பூஜாவிற்கு கொல்கத்தா மொழி சுத்தமாக தெரியாது. இந்த நகரின் உணவுகள் பரிட்சயம் இல்லை. இங்கே இருக்கும் தெருக்கள், சாலைகள் பற்றி துளியும் அவளுக்கு அறிமுகம் கிடையாது.
இதையெல்லாம் இனிமேல்தான் அவள் கற்றுக் கொள்ள வேண்டும்!
தேர்வு முடிந்ததும் அப்பாவும் மகளும் வெளியே வந்திருக்கின்றனர். இருவரும் சேர்ந்து அருங்காட்சியத்தைப் பார்த்துவிட்டு… மாலை நேரம் நடந்த ஒளி, ஒலி நிகழ்ச்சியை ரசித்துவிட்டு டேக்சியில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்பாவின் தோளில் பூஜா சாய்ந்து தூங்கியிருந்தாள். மெமோரியலை சுற்றிப் பார்த்தது மட்டுமில்லாமல், சேகரன் மகளை நியூமார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தார்.
கால்கள் வலிக்க வலிக்க நடந்து… கை நிறைய பொருட்கள் வாங்கியிருந்தாள். அதனால் வந்த சோர்வில்தான் இந்த உறக்கம். போக்குவரத்துக்கு நெரிசலில் டாக்சி வளைந்து நெளிந்து சென்று கொண்டிருக்க, மகளது தூக்கம் கெடாமல் அவளை அரவணைத்துப் பிடித்திருந்தார் சேகரன்.
இரவு ஒன்பதரை போல வீட்டிற்கு வந்தனர்.
காளிகாட் என்ற பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் சேகரன் வசித்து வருகிறார். அங்கே ஐந்தாவது தளத்தில் உள்ளது இவரது சொந்த வீடு. இரண்டு படுக்கையறை, ஒரு பால்கனி வசதியுள்ள வீடு அது.
வெளியிலே சாப்பிட்டு வந்திருக்கலாம். ஆனால் மகளுக்கு இந்த ஊர் உணவு பரிட்சயம் இல்லை என்பதனால்… வீட்டிற்கு வந்ததும் முகம், கைகால்களைச் சுத்தம் செய்துவிட்டு, சட்னி அரைத்து மேசையில் கொண்டு வந்து வைத்தார்.
மேலும் தோசை சூட ஆரம்பித்துவிட்டார்.
பால்கனியை ஒட்டி சாப்பாடு அறை இருந்தது.
அங்கிருந்த சாப்பாட்டு மேசையில் அசதி தீர குளித்து முடித்து வந்தமர்ந்தாள் பூஜா. ஏற்கனவே சுட்டு வைத்திருந்த தோசையை எடுக்கப் போகையில், “அது ஆறிருக்கும். இதைச் சாப்பிடு” என்று சுடசுட முறுகலான தோசையை அவள் தட்டில் வைத்துவிட்டுச் சென்றார்.
நான்கைந்து தோசையை உண்டு முடித்ததும், “ப்பா… எனக்குப் போதும், நீங்க சாப்பிடுங்க” என்றதும்,
தனக்கு மூன்று தோசை சுட்டுக்கொண்டு மேசையில் வந்து அமர்ந்தவர், “இதைக் கொஞ்சம் பாரு” என கைப்பேசியைக் கொடுக்க, “அலைன்ஸா ப்பா” என்று கேட்டு வாங்கிக் கொண்டாள்.
“ம்ம்!” என்றார் சமீபமாக மகளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கும் சேகரன்.
பூஜாவிற்கு கொல்கத்தா பழக்கமில்லை என்பதால், ‘நீ தமிழ்நாட்டிலயே இரு. மாப்பிள்ளை அங்கேயே பார்க்கலாம். அப்பா வீ.ஆர்.எஸ் வாங்கிட்டு உன்கூட வந்து இருக்கிறேன்’ என்று சேகரன் சொல்லிப் பார்த்தார்.
ஆனால் இவள்தான், அம்மாவின் கடைசி நாட்கள் இந்த வீட்டில்தான். எனவே இங்கு இருக்கவே விருப்பப்படுகிறேன் என்று காரணம் கூறி, மறுத்துவிட்டாள்.
அவள் அப்பாவிற்காகவும் இங்கே வந்திருக்கிறாள். ஆனால் அதை அவரிடம் இன்னும் சொல்லவில்லை.
அதற்குமேல் சேகரன் எதுவுமே சொல்லவில்லை. மனைவி மறைந்து ஒன்றரை வருடத்திற்குப்பின் மகளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார். இதோ இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறார்
“பேரு அரவிந்த். பேரன்ட்ஸ் இல்ல. அக்கா மட்டும்தான். அவங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சி. அவங்க ஹஸ்பன்ட் மிலிட்டரில இருக்காராம். இவங்க ரெண்டு பேரும் மானிக்டாலா ஏரியால இருக்காங்க” என்று வரன் விவரம் சொன்னார்.
“மேரேஜ்க்கு அப்புறமா… நீங்க என்கூடத்தான் இருப்பீங்கன்னு அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா பா?”
“சொல்லிட்டேன். அதுக்கெல்லாம் அவங்க ஒன்னும் சொல்லலை” என்றவர், “நீ போட்டோ பாரு பூஜா” என்றார்.
திருமண தளத்தில் இருந்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே, “பையன் என்ன வேலை பார்க்கிறாங்க பா?” என்று கேட்க,
“அதே மானிக்டாலா ஏரியா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா இருக்கிறாரு” என்று சொன்னார்.
உடனே கைப்பேசியை வைத்துவிட்டு, “இது வேண்டாம் ப்பா” என்றதும்,
“ஏன் பூஜா? அப்பா விசாரிச்சிட்டேன். நல்ல பையன். ஏன் நீ வேண்டாங்கிற?” என்று கேட்க,
“போலீஸ்னா வேண்டாம் பா” என்று கைகழுவ எழுந்துவிட்டாள்.
“உன் மாமாவை பார்த்திட்டு எல்லா போலீசையும் நீ தப்பா நினைக்க கூடாது” என்று தங்கை கணவரைப் பற்றிச் சொன்னார்.
சேகரனின் தங்கை கணவரை பூஜாவிற்கு பிடிக்காது. அதற்கு காரணம் அவர் லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரி என்பதால். அவர், லஞ்சம் வாங்கியதற்காக ஒருமுறை பணியிடை நீக்கத்தில் இருந்திருக்கிறார்.
அப்போது அவர்கள் பகுதியில் இருப்பவர் முன் அந்தக் குடும்பத்திற்கு பெரிய தலைகுனிவு. சில பத்திரிக்கையில்கூட இவரைப் பற்றிச் செய்தி வந்திருந்தது. சிலநாட்கள் குடும்பத்தினர் வெளியே வராமல் இருந்தனர்.
ஆனால் மீண்டும் அவர் வேலையில் சேர்ந்து, நாட்கள் செல்லச் செல்ல அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதைக் கடந்து வந்தார்கள். காலப்போக்கில் அதை மறந்தும்விட்டார்கள்.
பூஜாவைத் தவிர!
இதனால் அவளுக்கும், அவள் மாமாவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் வந்தது.
பூஜாவின் தயார்தான், ‘அவர் வேலைல இது சகஜம் போல. நீ இப்படிச் சண்டை போட்டா, அத்தைக்கும் அவங்க பிள்ளைங்களுக்கும்தான் சங்கடமா இருக்கும். பேசாம இரு’ என்று சொல்லிவிட்டார்.
அதன்பின் அவள் அவருடன் பேச மாட்டாள். ஆனால் இது எப்படி சகஜமாகும்? இவரைப் போய் எப்படி திரும்ப வேலையில் சேர்த்தார்கள்!? இந்தப் பணியில் இவர் போலத்தான் எல்லாருமா? என்று நிறைய கேள்விகள்.
அதனாலே, ‘போலீஸ்’ என்றால் பூஜாவிற்குப் பிடிக்காது. இதனால்தான் இந்த வரனை வேண்டாம் என்கிறாள்.
கைகழுவி வந்தவளிடம், “நல்லா யோசிச்சி சொல்லுமா” என்றார் சேகரன்.
“யோசிக்க தேவையில்ல பா. இது… வேண்டவே வேண்டாம்”
“அப்போ அவங்க அக்காகிட்ட வேண்டாம்னு சொல்லிடவா?”
“ம், சரிப்பா” என்று சொன்னதும்… இருவரும் சேர்ந்து பாத்திரங்களை எடுத்துப் போட்டுவிட்டு, தூங்கச் சென்றனர்.
***********
மானிக்டாலா பகுதி!
காலை சுமார் ஐந்தரை மணி! சூரியன் இன்னும் வரவில்லை. ஆனாலும் இரவு முடிந்துவிட்டது என்று சொல்வது போல் வெளிச்சம் இருந்தது.
சற்றே அகலமான சாலையின் ஓரத்தில் நின்ற சில மஞ்சள் நிற டாக்ஸிகளை அதன் உரிமையாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். மாநகர துப்புரவு பணியாளர்கள் ஒருபக்கம் பெருக்கிக் கொண்டிருந்தனர்.
இச்சாலையில்… ஒரு முக்கால் மணிநேரம் வேகமாக ஓடியதற்கான வியர்வை அடையாளத்துடன்… லேசாக மூச்சு வாங்க ஒருவன் வந்து நின்றான். ஷார்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ, டேங்க் டாப், ஸ்போர்ட் ஹெட்ஃபோன் சகிதமாக நின்றவன் ஓட்டத்திற்குப் பின்னான பயிற்சிகளை முடித்து, வீட்டிற்கு நடந்தான்.
இவன்தான் பூஜா ‘வேண்டவே வேண்டாம்’ என்று மறுத்த அரவிந்த்!
வீட்டிற்கு வந்ததும் ஷூ, ஹெட்ஃபோனை கழட்டிவைத்து, முகம் கைகால்கள் சுத்தம் செய்துவிட்டு சமயலறைக்குள் நுழைந்தவன், “க்கா… நீ ஏன் இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்ச” என்று அவன் அக்கா வாணி அருகே வந்து நின்றான்.
“முழிப்பு வந்திருச்சுடா” என்று பால் சூடு செய்ய ஆரம்பித்தாள்.
“விடு க்கா நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்ல,
“ரொம்ப பண்ணாத” என்று கொஞ்சம் நகர்ந்து நின்றதும்,
“நான் என்ன பண்ணேன். உன் ஹஸ்பன்ட்தான் உன்னை பத்திரமா பார்த்துக்கச் சொல்லிருக்காரு” என்றவன், கடகடவென மாதுளையை உரித்து அக்காவிற்கு ஜூஸ் தயாரிக்க ஆரம்பித்தான்.
வாணிக்கு கணவனின் அக்கறையை நினைத்து மெலிதாய் முகம் மலர்ந்தது.
ஆம்! அவள் கருவுற்று மூன்று மாதங்கள் முடிந்திருக்கிறது. ‘மார்னிங் சிக்நெஸ்’ நிரம்பவே இருக்கிறது. அதனால்தான் அவள் கணவனிடமிருந்து இப்படியொரு கோரிக்கை அரவிந்திடம்.
வாணி, வீட்டிலே ‘பாட்டில் ஆர்ட்’ செய்து விற்பனை செய்யும் தொழில் புரிந்து வருகிறாள். இப்போது முன்போல் முழு மூச்சாக அவள் செய்ய முடியவில்லை. ஆனாலும் விடாமல் தொடரத்தான் செய்கிறாள்.
மற்ற வீட்டு வேலைகள் செய்ய ஆட்கள் உதவிக்கு உண்டு. ஆனால் சமையல் வேலையை மட்டும் அக்காவும் தம்பியும் பகிர்ந்து கொள்வார்கள்.
ஜூஸ் டம்பளரை அக்காவிடம் தந்துவிட்டு, தனக்கு காலை காஃபி போட்டுக் கொண்டே காலை உணவிற்கான வேலையில் இறங்கினான்.
“அரவிந்த்… ஒரு அலைன்ஸ் வந்திருக்கு. எனக்கு இது கொஞ்சம் பிடிச்சிருக்கு” என்று ஆரம்பிக்க,
“பொண்ணு டீடெயில்ஸ் சொல்லுக்கா” என்றான் வேலையில் கவனம் இருந்தபடி.
“பொண்ணு பேரு பூஜா. அவ அப்பா ஒரு பேங்க் மேனேஜர். இங்கதான் ரொம்ப வருஷம் இருக்காரு. சொந்த வீடுகூட இருக்காம்” என்று சொல்ல,
“க்கா, பொண்ணு பத்தி சொல்லு” என்றான் அழுத்தமாக.
“பொண்ணு படிச்சது, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடுல” என்றாள் மெதுவாக.
“அப்ப பெங்காலி தெரியாது” என்று அக்காவைப் பார்த்தான்.
“என்னடா நீ?” என்று வாணி அலுத்துக்கொண்டாள்.
“அக்கா… நீ சொல்ற மாதிரி நேட்டிவ் ஸ்டேட் தமிழ்நாடாவே இருக்கட்டும். பட் இங்கயே பிறந்து வளர்ந்த பொண்ணா இருக்கனும். தமிழ் தெரியலைனாகூட பரவாயில்ல. பெங்காலி கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும். இங்க இருக்க ஃபுட் பத்தி பேசிக் நாலேட்ஜ் இருக்கணும்” என்று தன் எதிர்பார்ப்பைச் சொன்னான்.
அரவிந்த் பிறந்தது, வளர்ந்தது, படித்தது என எல்லாமே கொல்கத்தாவில்தான். பெங்காலி சரளமாக பேச, எழுத, படிக்க தெரியும். இங்குள்ள உணவு வகைகள்தான் அவன் விருப்பவுணவு. அவனுக்கு கொல்கத்தாவின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் அத்துபடி.
அதனால்தான் தனக்கு வரப்போகும் துணையிடம் இப்படி ஒரு எதிர்பார்ப்பு!
“போ அரவிந்த். ரொம்ப கண்டிஷன் போடறடா. இந்தப் பொண்ணு எனக்குப் பிடிச்சிருக்கு. என்னமோ எங்களுக்குள்ள ராசியா இருக்கும்னு தோணுது”
“நீ எனக்கு பொண்ணு பார்க்கிறியா? உனக்கு நாத்தனார் தேடறியா?”
“ரெண்டு ஒன்னுதான?”
“எனக்குப் பிடிச்சி… நான் மேரேஜ் பண்ணற பொண்ணு உனக்கு நாத்தனாரா வரணும். உனக்கு டேர்ம்ஸ் சரியா இருக்கும்னு நினைக்கிற பொண்ண, நான் மேரேஜ் பண்ண முடியாது”
“என்னமோ போ”
“இத பார்த்துக்கோ. குளிச்சிட்டு வர்றேன்” என்று காஃபியை எடுத்துக் கொண்டு சென்றவன், பதினைந்து நிமிடங்களுக்குப் பின் கொல்கத்தா காவலர்களின் வெள்ளை நிற சீருடையில் வெளியே வந்தான்.
மீண்டும் சமையலறை சென்று, “இனி நான் பார்த்துக்கிறேன் க்கா. நீ டைனிங் டேபிள்ல போய் உட்காரு” என்று வாணியிடம் சொல்லிவிட்டு, படபடவென சில வேலைகள் செய்தான்.
இருபது நிமிடத்திற்குப் பின் சாலட், ஆம்லெட், சில உப்பிய பூரிகளை எடுத்து வந்து வாணி முன்பு வைக்க, “சப்ஜி என்னடா?” என்றாள்.
“மட்டர் கரி. இரு கொண்டு வர்றேன்” என அதையும் எடுத்து வந்து வைத்துவிட்டு, அக்காவுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
சாலட் சாப்பிட்டுக் கொண்டே, “கடைசியா என்னதான் சொல்ற?” என்று கேட்க,
“அந்தப் பொண்ணு போட்டோ இருக்கா?” என்று கேட்டான்.
பெண்ணின் புகைப்படம் பார்த்தால் இவனுக்குப் பிடிக்க வாய்ப்பிருக்கு என்ற ஆசையில், திருமண தளத்திலிருந்த பூஜாவின் புகைப்படத்தை கைப்பேசியில் எடுத்து வாணி காட்டினாள்.
அதை வாங்கிப் பார்த்தவன், மீண்டும் அவளிடம் கொடுத்துவிட்டான்.
“இப்போ என்னடா சொல்ற?”
“இப்பவும் அதேதான்” என்றான் வேகமாக சாப்பிட்டபடி!
“அப்புறம் ஏன்டா போட்டோ கேட்ட?”
“தப்பித்தவறி இந்தப் பொண்ண எங்கயாவது பார்த்தா… நான் வேண்டாம்னு சொல்லிருக்கேன்னு ஞாபகம் இருக்கணும்ல அதுக்குத்தான்”
“கொழுப்புடா” என்று மெல்ல அடித்தவள், “ஏன்டா இப்ப இப்படிச் சொல்லிட்டு, அப்புறமா, ‘இந்தப் பொண்ண எனக்குப் பிடிச்சிருக்கு க்கா’னு வந்து நிக்க மாட்டியே?!” என்று ஏதோ கேட்க தோன்றியதைக் கேட்டாள்.
“ஏன் இப்படிக் கேட்கிற? வேண்டாம்னு சொல்லிட்டு, அப்புறம் ஏன் வேணும்னு சொல்ல போறேன்”
“கொஞ்சம் யோசிக்கலாம்ல அரவிந்த்?”
சாப்பிட்டு முடித்தவன், “க்கா, யோசிச்சிதான் சொல்றேன். இந்தப் பொண்ணு எனக்கு வேண்டாம்… வேண்டவே வேண்டாம். நீ வேற அலைன்ஸ் பாரு” என்று முடிவாகச் சொல்லிவிட்டு, எழுந்து கைகழுவ சென்றான்.
மேலும், “க்கா, சாப்பிட பிடிக்கலைனா ஜுஸ் போட்டாவது குடிச்சிருக்கணும். சாப்பிடாம இருந்திடாத. எதும் முடியலனா உடனே கால் பண்ணிடு. பை” என்று காவல்நிலையத்திற்குக் கிளம்பினான்.
வாணியின் கைப்பேசியிலிருந்த புகைப்படத்தில் ஹை நெக் டீ-ஷர்ட், காதில் சிறு வளையம், சராசரி நீளமுள்ள அலை மாதிரியான சிகை என்று இருந்தாள், அரவிந்த் ‘வேண்டவே வேண்டாம்’ என்று சொன்ன பூஜா!
