Kathambari Novels
அத்தியாயம் – 11
இதைச் சிறிதும் வெற்றி எதிர்பார்க்கவில்லை. ஒருநொடி அதிர்ந்து நின்றவன், தமிழ் கைத் தூக்கியபடி நிற்பதை உணர்ந்து, உடனே அவளைத் தூக்கினான். அவளும் அவன் தோளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டாள்.
“என்னாச்சு” என்றான் அங்கே நிற்பவர்களைப் பார்த்து.
அமைப்பின் ஆள் ஒருவர் நடந்ததைச் சொன்னார். தமிழ் மறுத்ததையும்கூடச் சொல்லிவிட்டார்.
“வேண்டாம்னா விட்ருக்க வேண்டியதுதான” என்றான்.
“ம்ம் விட்ருக்கணும்” என்று சொல்லிக் கொண்டார்கள்
வெற்றி வந்ததுமே அங்கிருந்து உடனே போய்விட நினைத்தாள் ராணி. நேற்று பாலத்திற்கு அவன் வந்து இருந்தது தெரியும். பகவதியிடம் அவன் பேசியது, ஆயா அவனிடம் பேசியதும் தெரியாது. அவர்கள் இவளிடம் சொல்லவில்லை. சொன்னால் அதையும் போட்டுக் குழப்பிக் கொள்வாள் என்று.
யாரிடமும் சேராத, யாரையும் தூக்க விடாத தமிழ், வெற்றியிடம் ஏன் இப்படிக் கேட்டு நின்றாள் என்று புரியவில்லை. இதை ராணி எதிர்பார்க்கவுமில்லை.
இப்போது அவள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றாள்.
வேடிக்கைப் பார்த்து நின்ற சில பொதுஜனமும் கலைந்தது. அமைப்பினரும் கிளம்பினர். உடனடியாகக் கிளம்ப நினைத்த ராணி, போகும் முன் சிந்திய சாப்பாட்டைக் குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட நினைத்து, அதை என்னெவென்று பார்த்தாள்.
தமிழ் வெற்றியிடம் அங்கிருந்த பெட்டிக்கடையைக் கை காட்டினாள்.
“பிஸ்கட் வேணுமா” என்றான் குழந்தையைப் புரிந்து.
அவன் முகத்தைப் பார்த்திருந்தவள், ஆமாம் என்று தலையாட்டினாள்.
கடைக்குச் சென்று பிஸ்கட் வாங்கினான். இரு விரல்களைக் காட்டி இரண்டு வேண்டுமென கேட்டு வாங்கிக் கொண்டாள். நாளிதழில் மடித்து தரப்பட்ட பிஸ்கட்டை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
“சாப்பிட்டியா” என்று கேட்டான்.
‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“சாப்பிடறியா” என்றான்.
அவள் சரியென்று தலையசைக்கவும், அதே நடைமேடையில் இருந்த ரயில் பயணிகளுக்கான சாப்பாட்டுக் கடையில், “இட்லி இருக்கா” என்று கேட்டு வாங்கிக் கொண்டு வந்து, ஒரு சாய்வு இருக்கையில் அமர்ந்தான்.
தன் மடியில் தமிழை உட்கார வைத்துக் கொண்டு பொட்டலத்தைப் பிரித்து, சாம்பார் ஊற்றி, இட்லியை அதில் தொட்டுத் தொட்டு ஊட்டிவிட்டான். அவன் ஊட்டும் போதே தமிழ் பிஸ்கட்டை வாயில் வைக்கப் போக, “இட்லி சாப்பிடு, அப்புறம் பிஸ்கட்” என்று சொல்லி இட்லியைக் கொடுத்தான்.
பொறுமையாக இரண்டு இட்லி ஊட்டிவிட்டான். பின் கை கழுவி அவள் முகம் துடைத்துவிட்டு, தண்ணீர் வாங்கி, மெதுவாக அவளைக் குடிக்க வைத்தான்.
ஓரமாக நின்று அவர்களைப் பார்த்திருந்தாள் ராணி. யாரிடமும் தமிழ் சேர மாட்டளே இவனிடம் எப்படி சேருகிறாள், நான் கோபப்பட்டதால் இருக்குமோ, இன்று காலையில் நடந்தது காரணமோ என்றெல்லாம் யோசித்தாள்.
வெற்றி மடியில் உட்கார்ந்து, தாயிடம் ஒண்டிடும் கன்றைப் போல அவனது நெஞ்சில் சாய்ந்தபடி, அவன் ஊட்ட ஊட்ட சாப்பிட்டு முடித்திருந்த தமிழைப் பார்க்கையில் ராணிக்கு ஆச்சரியம். நடப்பதை அவளால் நம்பமுடியவில்லை. அது தொடர்வதையும் அவள் விரும்பவில்லை.
ராணி, “சார் நேரமாயிடுச்சு. கெளம்பனும்” என்று வெற்றியிடமிருந்து தமிழை வாங்கப் போனாள்.
மாட்டேன் என்று வெற்றி நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் தமிழ். அவள் செயலில் அவனுக்குள் புதுவித பொறுப்புணர்வு பிறந்தது. அப்படியே அவளை அரவணைத்துக் கொண்டான்.
சற்று நேரத்திற்கு முன் தமிழைத் தூக்கிய போது, பிறந்த குழந்தையை முதன் முதலாக கையில் ஏந்தும் தகப்பனை போல் உணர்ந்திருந்தான். இப்படியொரு உணர்வை இந்தப் பிறவியில் உணர முடியும் என்று அவன் நினைத்ததுகூட பார்த்ததில்லை.
அந்த உணர்வைக் கொடுத்துவிட்டாள் தமிழ். மேலும் மேலும் அவளை அரவணைத்துக் கொண்டான் வெற்றி.
அவனிடம் குழந்தையும் ஒண்டிக்கொண்டாள்.
தாயில்லா அந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் ஏராளமான ஏக்கங்கள். தந்தை என்று இருப்பவன் நடந்து கொள்ளும் விதத்தால் எக்கச்சக்க காயங்கள். நினைப்பது எதையும் விளக்கிச் சொல்லும் வயதில்லை… வாய் பேசவும் முடியவில்லை.
அம்மாவைத் தவிர யாரிடமும் காட்டாத ஒட்டுதலை தமிழ் வெற்றியிடம் காட்டினாள். அதுவும் இன்றுதான். இதற்கு முன் இப்படியில்லை. அவனைப் பார்த்தால் ஓடத்தானே செய்தாள்.
அவன்தான் வலிய வந்து பேசினான். அன்பாகப் பேசினான். அக்கறையாகப் பேசினான். கோபமாக அதட்டியும் இருக்கிறான். அந்த நேரங்களில் விலகி ஓடத்தான் பார்த்தாள் என்றாலும், அம்மா போல் அன்பு, அக்கறை, அதட்டல், கோபம் என்று எல்லா உணர்வுகளையும் உரிமையாகக் காட்டும் வெற்றியால் அம்மா இல்லையே என்ற காயங்கள் குறைகிறது.
அம்மா இருக்கும் போது இப்படித் தோன்றியதில்லை. ஆனால் இப்போதும் தோன்றுகிறது… அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்று. பகவதி மீனாவை விதவிதமாக அழைத்து செல்லம் கொஞ்சும் போது, அவர்கள் விளையாடும் போது… தனக்கு இப்படி அப்பா இல்லையே என்று காயப்படுகிறாள்.
வெற்றி வந்து பேசியபின் அந்தக் காயம் ஆறுவது போல் இருக்கிறது. அதிலும் அவன் ‘பேபி பேபி’ என்று அழைத்துப் பேசுவது பிடித்திருக்கிறது.
இத்தனை நாள்களில் இவ்வளவு எண்ணவோட்டங்கள் அந்தக் குழந்தைக்குள்!
எல்லாவற்றையும்விட காலையில் கோமதி தள்ளிவிட்டதை, அம்மா இருந்தால் அவள் நெஞ்சில் சாய்ந்தபடி, உதடு பிதுக்கி அழுது… அழுது வெளிப்படுத்தி ஆறுதல் அடைந்திருப்பாள். இப்போது அப்படி வெற்றியிடம்தான் சொல்லத் தோன்றியது.
இன்று அவள் வந்ததும் அதற்காகத்தான்!
இங்கும் இன்று என்னென்னமோ நடந்துவிட, அப்போதும் வெற்றியைத்தான் தேடியது பிஞ்சு நெஞ்சம். அதுதான் அவன் வந்து நின்றதும் தூக்கிக் கொள் என்றுவிட்டாள். அவனுடன் அப்படியே ஒண்டிக் கொண்டாள்.
குழந்தை முதுகில் வருடிக் கொடுத்தபடி ராணியிடம், “நான் கொண்டு வந்து விடறேன்” என்றுவிட்டு, அவர்கள் இருவருக்கும் பயணச்சீட்டு எடுத்து உள்ளூர் ரயில்கள் வந்துநிற்கும் நடைமேடைக்குச் சென்றான்.
வெற்றி, அவனது பையை முதுகில் மாட்டிக் கொண்டு, தமிழின் பையைத் தோளில் போட்டுக் கொண்டு, அவளையும் தூக்கி நடக்க, அவன் கழுத்தைச் சுற்றிக் கைகள் போட்டு… அவன் தோளில் முகம் சாய்த்திருந்தாள் தமிழ்.
ராணிக்கு என்ன செய்ய என்று தெரியாமல் அவர்களைப் பின்தொடர்ந்து அவளும் நடைமேடைக்கு வந்து நின்றாள்.
ரயில் வந்ததும் ஏறிக் கொண்டார்கள். கூட்டம் அதிகம் இல்லைதான், ஆனால் அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தன. கிடைத்த இடத்தில் அமர்ந்தாள் ராணி. வெற்றி தமிழைத் வைத்துக் கொண்டு நின்றான். ரயில் கிளம்பியதும், அவன் வசமாக இருந்தபடி பிஸ்கட்டை சாப்பிட்டாள்.
‘கொடுங்க, தமிழ நான் மடியில வெச்சுக்கிறேன்’ என்று ராணிக்கு சொல்லத் தோன்றியது. ஆனால் கேட்டாலும் அவன் கொடுக்க மாட்டான், குழந்தையும் வர மாட்டாள் என்று தெரிந்ததால் அமைதியாக இருந்தாள்.
வெற்றி பேசினான். “இவ பேரென்ன” என்றான்.
“தமிழரசு” என்றாள் ராணி.
ஏன் பேசவே மாட்டிக்கிறாள் என்று கேட்டான். தமிழைப் பற்றிச் சொன்னாள். அவனுக்கு ஓரளவு புரிந்திருந்தாலும், கேட்டுத் தெரிந்து கொண்டான்.
ராணி தமிழின் அம்மா இல்லை என்று புரிந்தது. “இவ அம்மா… அப்பா” என்று கேள்வியாக நிறுத்தினான்.
“தமிழ் அம்மா இப்போ உயிரோட இல்ல” என்று சொல்லி, இடைவெளிவிட்டு, “அப்பா இருக்காரு” என்றாள்.
இந்தச் சிறு வயதிலே அம்மாவை இழந்துவிட்டாளா என்று தமிழுக்காக அவன் மனம் வருந்தியது. இந்த வயதில் அவனுக்கே அம்மா வேண்டுமென அடிக்கடி தோன்றுகிறதே. தமிழுக்கு அப்பா இருக்கிறார் என்ற ஒன்று அவனுக்குள் பல கேள்விகளை, குழப்பங்களைக் கொண்டு வந்தது.
இரண்டையும் அவன் முகம் பிரதிபலித்தது. அதை ராணி கவனிக்கத்தான் செய்தாள். இதை எப்படி எடுத்துக் கொள்ள என்று குழம்பினாள். அந்த நேரம் ஆயா அலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. கணவன்தான் என்று தெரியும். எழுந்து வாசல் பக்கம் போய் நின்று, “வந்துக்கின்னு இருக்கேன்” என்றாள்.
அவள் குரலில் இருந்த பேதம் உணர்ந்து, “உன் பேச்சு ஏன் டல்லா இருக்கு. தமிழ் உன் கூடத்தான இருக்கா?” என்றான்.
“ம்ம் இருக்கா”
“ஏதோ நீ சரியில்ல ராணி… என்னாச்சுனு சொல்லு”
“நான் தமிழ்ட்ட கோவமா பேசிட்டேன்” என்று அவள் குரல் அழுதது.
“ப்ச் நீ ஏன்…” எனும்போதே, “இங்க ஒரு விசயம் பக்ஸ்… எனக்கு அத எப்படி எடுத்துக்கனே புரியல” என்று அழுதாள்.
“மொதல்ல அழுவுறது நிறுத்து, எதுனாலும் பார்த்துக்கலாம், தூரமா நின்னு இப்படி அழாத, நான் என்னென்னு நினைப்பேன்”
“ம்ம்” என்று தேற்றிக் கொண்டவள், “மீனா என்னய தேடி அழறாளா” என்றாள்.
மீனா அம்மாவைத் தேடி அழுகிறாள். ‘எப்ப வருவ’ என்று கேட்கத்தான் பக்ஸ் அழைத்திருந்தான். மனைவி எதற்கு அழுகிறாள் என்றே தெரியவில்லை. “அதலாம் இல்ல, நீ பாத்து வா” என்றான்.
மீனா அழும் சத்தம் அலைபேசி வழியே கேட்டது. “இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன், போன் வைக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, உள்ளே போகாமல் வாசலிலே நின்று கொண்டாள்.
உட்கார இடம் கிடைத்ததும் தமிழை மடியில் வைத்துக் கொண்டு வெற்றி அமர்ந்தான். பிஸ்கட் சாப்பிட்டு முடித்திருந்தவள் தண்ணீர் வேண்டுமென்று கேட்டாள். வாங்கி இருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க வைத்தான்.
அவன் தண்ணீர் புட்டியை பையில் வைத்ததும், தமிழ் அவள் முழங்கையைக் அவனிடம் காட்டினாள். “என்ன பேபி” என்று பார்த்தான். ரத்தம் கட்டி சிறு வீக்கம் இருந்தது. “இது எப்படி, கீழ விழுந்திட்டியா” என்றான்.
இல்லை என்று தலையாட்டினாள்.
அவள் முகம் பார்த்துப் பேசினான். வாயசைவை வைத்து அவன் பேசுவதைப் புரிந்து கொண்டு, கையசைத்து அவள் நினைப்பதை அவனிடம் சொன்னாள்.
“அப்புறம் எப்படி பேபி” என்றான்.
கைகளை அசைத்து, ‘என்னய தள்ளி விட்டுட்டாங்க’ என்றாள். அவனுக்குப் புரியவில்லை. “என்ன பேபி சொல்ல வர்ற” என்றான். திரும்பவும் செய்து காட்டினாள். “தள்ளி விட்டாங்களா” என்றான் அதிர்ந்து.
ஆம் என்று தலையாட்டினாள்.
“யாரு” என்றான்.
‘அது அங்க…’ என்று கையைத் தூரமாகக் காட்டினாள். ஆனால் அதற்கு மேல் எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. மீண்டும், ‘தள்ளி விட்டாங்க’ என்றே கை அசைத்து கண் கலங்கி, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அவள் முகத்தை நிமிர்த்தி, “என் பேபிய ஏன் தள்ளி விட்டிங்கனு அவங்கள நான் அடிக்கிறேன். நீ அழ கூடாது” என்றான்.
குண்டு கண்களில் கண்ணீர் நிற்க, அதைத் தாண்டி சிப்பி போன்ற உதடுகள் சிரிக்கத் துடிக்க… வேகமாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அவளை அரவணைத்துக் கொண்ட வெற்றி முகத்திலும் சிறு புன்னகை.
இறங்கும் இடம் வரப் போகிறது என்றதும் வெற்றி அவளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வாசல் பக்கம் வந்து நின்றான். தமிழ் தூங்கியிருந்தாள். ரயில் நின்றதும் இறங்கிக் கொண்டான். ராணியும் இறங்கினாள்.
ரயில் நிலையத்திலிருந்து வரும் வழியில் ஒரு கடையில் ரத்தக் கட்டிற்கான மருந்து ஒன்று வாங்கிக் கொண்டான். அவன் நின்றதும், ‘என்னாச்சு’ என்று ராணியும் நின்று, அவன் நடக்க ஆரம்பித்ததும் அவளும் நடந்தாள்.
மேம்பாலத்தின் அருகில் வந்ததும், ராணி வேகமாக வந்து கணவனிடமிருந்து அழுது கொண்டிருந்த மகளை வாங்கி, “அம்மா வந்தாச்சிடா” என்று தோளில் போட்டு முதுகில் தட்டிக் கொடுத்து, “சாப்பிட்டாளா” என்றாள்.
‘சாப்பிட்டா’ என்ற தலையாட்டியவன், “தமிழ் எங்க” என்றான்.
அவள் திரும்பிப் பார்த்தாள். தமிழைத் தூக்கிக் கொண்டு வெற்றி மெதுவாக வந்து கொண்டிருந்தான். கணவனிடம் ராணி, “நீ பார்த்துக்கோ பக்ஸ்” என்று மகளைச் சமாதானப்படுத்தித் தூங்க வைக்கப் போய்விட்டாள்.
பக்ஸ் நெற்றி சுருக்கினான். ‘எப்படி இது’ என்று அவனுக்குள்ளும் ஒரு கேள்வி. வெற்றி வந்து தடுப்புக்கு அந்தப் பக்கம் நின்றதும், “குடுங்க” என்று தமிழை வாங்கப் போனான் இந்தப் பக்கமிருந்தே. நேற்று போல் கோபப்படவில்லை. நிதானமாக பேசினான்.
“எங்கன்னு சொல்லுங்க நானே படுக்க வச்சிடுறேன்” என்றான் வெற்றி. இவன் பேச்சிலும் நிதானம் இருந்தது.
பக்ஸிற்கு பிள்ளையைக் கொடுக்க தயங்குகிறானோ என்று தோன்ற, “உள்ள வரணும்னா சுத்திக்கின்னுதான் வரணும், என்ட்ட குடுங்க” என்றான்.
“பரவாயில்ல, நான் சுத்தி வர்றேன், தூங்கறா. கை மாத்தினா முழிச்சிடுவா” என்று வெற்றி நடந்தான்.
‘இவன் என்ன பெத்தவன் மாதிரி பேசறான்’ என்று பார்த்தான் பக்ஸ். மனைவி சொன்ன, ‘நீ பார்த்துக்கோ’ எதற்கு என்று புரிந்தது.
உள்ளே வந்த வெற்றி, “எங்கு படுக்க வைக்கணும்” என்றான் பகவதியிடம். தமிழின் இடத்தைக் காட்டினான். பலகைகள் வைத்து அதற்கு மேலே துணி போட்டு இருந்த இடத்தில் படுக்க வைக்கும் போது தமிழின் தூக்கம் லேசாக கலைய, தட்டிக் கொடுத்து மீண்டும் தூங்க வைத்தான்.
பகவதி, ‘தமிழ் எப்படி இப்படி ஒட்டுகிறாள்’ என்ற யோசனையுடன் நின்றான். வேறு எதுவும் யோசிக்க முடியவில்லை. ஆயாவைப் பார்த்தான். பேச்சு சத்தம் கேட்டதும் படுத்திருந்தவர் எழுந்து அமர்ந்திருந்தார். ‘வா ஆயா, எனக்கு என்ன செய்யனு தெரியல’ என்ற அவன் பார்வை இருந்தது.
கையை ஊன்றி எழுந்து மெல்ல வந்து பகவதியின் பக்கம் நின்றார். தமிழ் ஆழ்ந்து உறங்கிவிட்டாள் என்று தெரிந்ததும் வெற்றி அவர்கள் அருகில் வந்து, “முழங்கையில அடிபட்டிருக்கு தமிழுக்கு, இப்போ போட்டுட்டேன். நாளைக்கு காலைல போட்டு விட்ருங்க” என்று களிம்பைக் கொடுத்தான்.
பக்ஸ் வாங்காமல் நின்றான். சற்று யோசித்த ஆயா, ‘சரி போட்டு விடுறோம்’ என்று வாங்கிக் கொண்டு, “உன் பேரென்ன” என்றார். அவன் தோளில் தமிழ் தலை சாய்த்து இருந்ததை, தூக்கம் கலைந்தவள் அவன் தட்டிக் கொடுத்ததும் தூங்கியதைப் பார்த்தவரால் நேற்று போல் பேச முடியவில்லை.
“வெற்றிச்செல்வன்” என்றான். அவனுக்குப் புரிந்தது. அவர்களுக்கு அவனைப் பற்றிய கேள்விகள் இருக்குமென்று. தமிழ் மீதான அவனது உணர்வுகளை உரையாடல்கள் மூலமாகக் கடத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் பயத்தைப் போக்க நினைத்தான்.
அவன் அலுவலக முகவரி சொல்லி, “இங்கதான் வேலை பார்க்கிறேன்” என்று ஒரு தாளில் அலுவலக எண்ணை எழுதிக் கொடுத்தான்.
பகவதிக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இதையும் வாங்காமல் நின்றான். ஆயாவிற்குப் புரிந்தது… எதற்கு வெற்றி அவனைப் பற்றிச் சொல்கிறான் என்று. அவன் நீட்டிய தாளை வாங்கியவர், “உன் போன் நம்பர் குடுக்கியா” என்றார்.
“எடுத்துக்கோங்க” என்று அவனது அலைபேசி எண்ணைச் சொன்னான்.
தன் அலைபேசியில் குறித்துக்கொண்டார் ஆயா. ஒரு முறை அந்த எண்ணிற்கு அழைத்து சரிதானா என்றும் பார்த்துக்கொண்டார். “குடும்பம், வீடு” என்று அடுத்து கேட்டார்.
“வீடு ராயபுரத்தில இருக்கு. எனக்கு அம்மா இல்ல. அப்பா, நான், அண்ணா, அண்ணி, அவங்க குழந்தைங்க, ஒரே வீட்ல இருக்கோம். அக்கா இருக்காங்க. அவங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி” என்றான்.
‘அப்படியா’ என்று தலையாட்டியவர், “உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என்று அவன் சொல்லாமல் விட்ட உறவைப் பற்றிக் கேட்டார்.
“ம்ம் ஆயிடுச்சி” என்று மட்டும் சொன்னான்.
கல்யாணம் ஆகிவிட்டது என்கிறான்… ஆனால் அவன் சொன்ன அந்த ‘ஒரே வீட்டில்’ இவன் மனைவி இல்லையா என்று ஆயா யோசித்தார்.
அதுவரை பேசாமல் நின்ற பக்ஸ், “குழந்தைங்க?” என்றான் வெற்றியிடம்.
வெற்றி, “இல்ல” என்றான். சிறு அமைதிக்குப் பின் ராணி இருந்த திசையைக் காட்டி “வரப்போ அவங்க சொன்னாங்க தமிழ் அப்பா இருக்காருனு… அவர் இப்போ எங்க இருக்காரு” என்று கேட்டான். தமிழ் அப்பா பற்றி அவனுக்குத் தெரிந்து கொள்ள தோன்றியது.
இந்த விவரம் இவனுக்கு எதற்கென ஆயா, பக்ஸ் இருவருக்கும் தோன்றியது. “இங்கதான் பக்கத்தில இருக்கான், வேற கல்யாணம் முடிச்சிக்கிட்டான். தமிழ் அம்மா இப்ப இல்லயா, அதான் அப்பன்ட்டயே புள்ளய சேர்த்துடலாம்னு பேசிக்கினு இருக்காங்க” என்றார் ஆயா.
வெற்றி மனத்தில் சிறு ஆசுவாசம் வந்தது. அதேநேரம் மனத்தின் எங்கோ ஒரு மூலையில் பயமும் இருந்தது.
“நேரமாகுது பாரு. நீ கிளம்பு பா” என்றார் ஆயா.
நேற்று போல் அவர் விரட்டவில்லை. ஆனால் இங்கிருந்து அனுப்ப பார்க்கிறார் என்று புரிந்தது. தமிழ் தூங்குவதைப் பார்த்தான். பெருமூச்சு ஒன்று வந்தது. அப்படியே அவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
ஆயாவிற்கு இந்தக்கணம் வெற்றி எப்படிப்பட்டவன் என்ற கேள்வி இல்லை. ஆனால் இவன் என்ன நினைத்து இங்கே வந்து வந்து நிற்கிறான், எதுவரைப் இது போகும், இதை எப்படி எடுத்துக் கொள்ள என்ற கேள்விகள் இருந்தன.
அதே கேள்விகளுடன் பகவதியும் நின்றான். கூடவே அவனுக்குள் ‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்வியும் இருந்தது.
