Kathambari Novels
அத்தியாயம் – 12
மகளைத் தூங்க வைத்து, படுக்கப் போட்டு வந்த ராணி, “அவர் போயிட்டாரா, நீங்க எதுனா கேட்டீங்களா” என்று வந்து நின்றாள்.
பக்ஸ், “உனக்கு பசிக்கலயா? நேரம் என்னென்னு பாரு, போ போய் சாப்பாடு எடுத்து வந்திட்டு பேசு” என்று அங்கே கிடந்த பெரிய கல்லில் உட்கார்ந்தான். அங்கிருக்கும் உடைந்த நாற்காலியில் ஆயாவும் உட்கார்ந்தார்.
சோறு எடுத்து வந்த ராணி… காக்கி அட்டையைக் கீழே போட்டு அதன் மேல் அமர்ந்து, “இப்ப சொல்லுங்க” என்று சாப்பிட ஆரம்பித்தாள்.
அவர்கள் இருவரும் பேசாமல் இருந்தனர்.
“பக்ஸ் என்ன சைலன்ட்டா இருக்க, தமிழ பாக்க வர்றது, அவட்ட பேச நினைக்கிறதலாம் வேண்டாம்னு கண்டிசனா சொல்லலயா நீ. பாத்துக்கோனு உன்ட்ட நான் சொல்லிட்டுதான போனேன்” என்றாள் ராணி.
ஆயா அவளைக் கண்டனமாகப் பார்த்து, “புள்ளய கூட்டிட்டு வர்றேன்னுதான போன, நீ தூக்கிட்டு வராம, ஏன் அந்த பையன தூக்க விட்ட” என்றார்.
“நான் கேட்டேன், அவர் தரல. தமிழும் அவர்ட்ட இருந்து வர மாட்டேன்னு சொல்லிடுச்சி. நீ பாக்கணுமே ஆயா… தூக்க சொல்லுது, பிஸ்கட் வேணும்னு கேக்குது, ஊட்டிவிட்டா சாப்பிடுது, அவர் மடியில உக்காந்துகிட்டு இறங்க மாட்டிக்குது” என்று கடகடவென சாப்பிட்டபடியே சொன்னாள்.
பகவதிக்கு மனைவி சாப்பிடும் வேகம் பார்த்தே, அவள் எவ்வளவு பசியோடு இருந்திருக்கிறாள் என்று தெரிந்தது. இப்படி ஒரு அலைச்சல் தேவையா என்று தோன்றியது. கூடவே இத்தனை நாளாகக் கவனிக்கிறோம் எங்களிடம் வராத ஒட்டுதல், எப்படி அவனிடம் வந்தது என்ற கேள்வியும் இருந்தது.
ஆயாதான், “எங்களுக்கும் தமிழு அவன்ட்ட ஒட்டுதலா இருக்கது புரிஞ்சது, கோவம்லாம் பட முடியல. அவன பத்தின விவரம் மட்டும் கேட்டுக்கிட்டோம்” என்று வெற்றியைப் பற்றிச் சொன்னார்.
“ஓ புள்ள இல்லங்க போய்தான் தமிழ இப்படி கவனிக்கிறாரா”
“என்ன பேசற நீ, அப்படினா அது பாசமா ஆகுமா, அது ஏக்கம் இல்லயா… அது மட்டும் ஏக்கமா இருந்தா தமிழு எப்படி அந்த பையன்ட்ட இவ்ளோ பிடிப்பா இருப்பா சொல்லு? புள்ள இல்லங்கிற ஏக்கம் இருக்காதுனு சொல்லல, ஆனா அவனுக்கு உண்மையாலுமே தமிழ் மேல அன்பு இருக்கு”
“எப்படி அடிச்சி சொல்ற ஆயா”
“குணா பத்தி கேக்கிறப்ப அவன் கண்ணுல பயம் தெரிஞ்சது… எங்க அவள பெத்தவன் உரிமை கொண்டாட வந்திருவானோங்கிற பயம் இருக்கு”
“ஆயா அவருக்கு புள்ள இல்ல…” என்று ராணி பேசும் போதே, “ஏய் நிறுத்து, எத்தினி டைம் புள்ள இல்ல புள்ள இல்லனு சொல்லிக்கினே இருப்ப? இவனும் அப்படித்தான், கல்யாணம் ஆயிடுச்சினு சொல்லி நிறுத்தறவன்கிட்ட போய் விவஸ்த இல்லாம குழந்தைனு கேக்கிறான்” என்று பக்ஸை சொன்னார்.
அமைதியாக அவர்கள் பேசியதைக் கேட்டிருந்த பக்ஸ், “ஆயா… நான் அவன கஷ்டப்படுத்தி பாக்கணும்னு கேட்கல, எதார்த்தமாதான் கேட்டேன். இப்படினு எனக்கு எப்படி தெரியும்” என்றான்.
ராணி, “சரி, இப்போ இதுக்கு என்னதான் முடிவு” என்றாள்.
“நீ யாரு முடிவு எடுக்க, உனக்கு என்ன உரிமை இருக்கு தமிழ் மேல” என்றார் ஆயா பட்டென்று
அவர் கேட்ட விதத்தில் ராணி பேசாமல் இருந்தாள்.
பக்ஸ், “ஆயா எங்களுக்கு தமிழ் மேல உரிமை இல்லதான், ஆனா நாங்கதான இப்ப அவளை பொறுப்பா பாத்துக்கிறோம், அப்ப எங்களுக்கு இந்த கேள்வி வரும்ல” என்றான்.
அவன் கேட்பது சரிதான். ஆயாவால் பதில் சொல்ல முடியவில்லை. மூவரும் யோசனையில் இருக்க, அங்கே சில வினாடிகள் அமைதி நிலவியது.
பக்ஸ், “ஆயா… சத்தியமா என்னால எதும் யோசிக்க முடியல. ஏற்கனவே என் மண்டைக்குள்ள ஆயிரம் விசயம் ஓடிக்கின்னு இருக்கு. இதுல இது வேற… நீ எதுனா சொல்லு கேட்டுக்கிறேன்” என்றான்.
ஆயா அவனைப் பார்த்தார். வேலையில்லை, வீடில்லை, சில நேரங்களில் சாப்பாட்டிற்குகூட கஷ்டப்படும்படி ஆகிறது. இதற்கிடையில் தமிழுக்காக யோசிக்கிறான். மனதிற்குள் மகனை மெச்சிக் கொண்டார்.
“இங்க பாரு பக்ஸ்… அந்த பையன் கெட்டவன் இல்ல. அதுனால புள்ளைக்கு என்னாகுமோனு பயப்படாத. மத்தத நடக்க நடக்க பாத்துக்கலாம், இப்பவே முடிவு எடுக்கணும்னு இல்ல, போ… போய் தூங்கு” என்று எழுந்து கொண்டார்.
பகவதியும் எழுந்தான். இன்னும் யோசனையிலிருந்த ராணி கணவனிடம், “நீ அவர்ட்ட இங்கலாம் வர கூடாதுனு அழுத்தி சொல்லிருக்கலாமே” என்றாள்.
உடனே ஆயா, “போதும்! அவன தூண்டி விடாத! நேத்தே அவன் கோவப்பட்டு அந்த பையன்கிட்ட நல்லா பேச்சு வாங்கிட்டான்” என்று நேற்று நடந்ததைச் சொன்னார்.
இப்படி ஒன்று நடந்திருக்கா என்று ராணிக்கு சிறு அதிர்ச்சி. கணவனிடம், “பக்ஸ், இதுக்காகத்தான் காலையில குணாண்ணா வீட்டுக்கு தமிழ கூட்டிட்டு போனியா? இத ஏன் நீ என்கிட்ட சொல்லல, சொல்லிருந்தா நான் உன்மேல கோவப்பட்ருக்க மாட்டேனே” என்றாள்.
இதற்கும் ஆயா, “சொல்லிருந்தாலும், நீ அவன புரிஞ்சிக்காம கோவம்தான் பட்டிருப்ப” என்றார்.
உடனே பக்ஸ், “ஆயா… ஆயா வுட்ரு. காலைல வேற நான் பேசிருக்கேன், நீயும் இப்படி பேசாத. அப்புறம் நைட் புல்லா அழுதுக்கினு இருப்பா. போ… போய் படு” என்றான்.
ஆயாவிற்கு தூக்கம் வந்திருந்தது. அதற்குமேல் இருந்து பேசிக் கொண்டிருக்க முடியாது என்பதால் போய் படுத்துவிட்டார்.
தெளிவில்லாத முகத்துடன் இருந்த மனைவியைப் பார்த்தான். “தூங்கலாம் வா” என்று அவளை எழுப்பிவிட்டான். தட்டை வைத்துவிட்டு, கை கழுவி வந்து அவர்களது சிறு கூடாரத்துக்குள் போய் படுத்தாள். கிடந்த பாத்திரங்களைக் கழுவிவிட்டு வந்தவன் மகளுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்தான்.
“காச்சல் இல்ல, நான் பார்த்துட்டேன்” என்றாள் ராணி.
“ம்ம், ஆனா ரொம்ப அசந்திட்டா” என்று படுத்துக் கொண்டான் பக்ஸ்.
மனைவியைப் பார்த்து, “ரொம்ப யோசிக்காத, கண்ண மூடி தூங்கு” என்றான். அவள் இமை மூடாமல் இருக்க, “நீ காலையில நான் பேசினதயும் யோசிக்கனு தெரியுது, வேணாம் வுட்ரு. நாம நல்லா இருப்போம்…” என்றான்.
சட்டென, “இனி இப்படி மட்டும் பேசாத பக்ஸ், பயமா இருக்கு” என்று அவன் நெஞ்சில் முகத்தை அழுத்தி அழுதுவிட்டாள்.
“ஒரு நாள்ல எத்தினி டைம்தான் அழுவ, தூங்கு டயர்டா தெர்ற, எனக்கும் அசதியாத்தான் இருக்கு, தூங்கலாம்” என்றான்.
சரியென்பது போல் கண்மூடினாள். அயர்வில் இருந்தவள் அடுத்த நொடியே உறங்கியும்விட்டாள். சில நொடிகளில் அவனும் உறங்கியிருந்தான்.
சற்றுநேரத்தில் அந்தப் பகுதியில் எல்லாரும் உறங்கியிருந்தனர். இரவு வெகு நேரமானதால் நகரமே உறக்கத்திற்குச் சென்றிருந்தது.
வெற்றி மட்டும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தான்!
அப்படியொரு இடத்தில் தமிழ் தனியே இருக்க அவனால் இங்கே இருக்க முடியவில்லை. தமிழ் உறங்கியிருப்பாளா, இடையில் விழித்தால் என்னைத் தேடுவாளா, பாதுகாப்பபாக இருப்பாளா என்ற கேள்விகள் இருந்து கொண்டே இருந்ததில், அவனுக்கு உறக்கமே வரவில்லை.
அடுத்தநாள் அலுவலகம் முடிந்ததுமே தமிழைப் பார்க்க ஓடி வந்தான் வெற்றி. அவன் வரும்போது ஆயாவிடம் பேசியபடி பக்ஸ் மகளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்.
தோள் பையை நெஞ்சோடு அணைத்துப் பிடித்தபடி தமிழ் படுத்திருந்தாள். வெற்றி வந்ததை உணர்ந்ததும் எழுந்தமர்ந்தாள். அவனும் கம்பி தடுப்பைத் வேகமாகச் சுற்றி வந்து அவளைத் தூக்கிக் கொண்டான்.
அப்படியே அவளும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் கைக் காயத்தைப் பார்த்தான். “இன்னும் வலிக்குதா பேபி” என்றான்.
தமிழ் ‘ஆம், இல்லை’ என்று தலையாட்டாமல், சாலையைக் காட்டினாள்.
“என்ன பேபி, இங்கதான் தள்ளிவிட்டாங்களா”
‘இல்லை’ என்று தலையசைத்து, மீண்டும் மீண்டும் சாலையைக் காட்டினாள். வெற்றிக்கு என்னவென்று புரியவில்லை.
ஆயாதான், “கார் மோதி அவ அம்மா உசுரு இங்கதான் போச்சு, அததான் அவ சொல்றா” என்றார்.
பகவதி கோமதி தள்ளிவிட்டதைக் கூட இவனிடம் தமிழ் சொல்லியிருக்காளா என்ற ஆச்சரியத்தில் நின்றான்.
வெற்றி, “அம்மா ஞாபகம் வந்திருச்சா பேபிக்கு” என்றான் தமிழிடம்.
ஒன்றும் சொல்லாமல் அவனிடமிருந்து இறங்கி, அவளது தோள் பையிலிருந்த அம்மா புகைப்படத்தை எடுத்து வெற்றியிடம் காட்டினாள்.
“இவங்கதான் உன் அம்மாவா” என்றான்.
‘ம்’ என்று தலையாட்டினாள்.
ஆயா, “தமிழ் அம்மா உமா டேசன்லதான் புக் விப்பா, அதான் அடிக்கடி இவ அங்க போறா. எவ்ளோ டேஞ்சர் அது. எங்களுக்கு அதுனால பயம். இன்னிக்கி நாங்க இங்கனயே இருக்கதால போகாம இருக்கா” என்றார்.
“நான் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போட்டுமா” என்று தமிழிடம் கேட்டான்.
‘ம்’ என்று தலையாட்டி அவள் தோள் பையை எடுத்துக் கொள்ள, “இது எதுக்கு பேபி” என்றான் வெற்றி.
“அது இல்லாம அவ இருக்கமாட்டா தம்பி” என்றார் ஆயா.
‘அப்படியா?’ என்பது போல் தமிழ் முகம் பார்த்தான் வெற்றி. ‘அப்படித்தான்’ என்று வேகமாகத் தலையாட்டினாள். பையை தோளில் போட்டுக் கொண்டு, அவளையும் தூக்கிக் கொண்டு, ஆயாவிடம் வந்து நின்று, “தமிழ ஸ்டேஷன் கூட்டிட்டு போறேன்” என்றான்.
“எப்போ தம்பி கொண்டு வந்து விடுவ”
“எட்டு எட்டரைக்குள்ள வந்திடுவோம்”
“சரி கூட்டிப் போய்ட்டு வா” என்றதும் கிளம்பினான்.
ஆயாவிற்கோ, பக்ஸிற்கோ ‘ஏன் திரும்ப திரும்ப வர்ற’ என்று வெற்றியிடம் கேட்கவில்லை. தமிழ் அவனிடம் பழகும் விதம் பார்த்து, அவர்களால் எதுவும் கேட்கவும் முடியவில்லை.
வெற்றி வந்து செல்லும் வரை எதுவும் பேசாமல் நின்ற பக்ஸ் ஆயாவைப் பார்த்தான். அவன் முகத்தில் குழப்பங்கள், கேள்விகள் தெரிந்தன. எதற்கும் இப்போது அவரிடம் பதில் இல்லை. அமைதியாக இருந்துகொண்டார்.
ரயில் நிலையம் போய்விட்டு வெற்றி வந்திருந்தான். நேற்று போல் இன்றும் தமிழைச் சாப்பிட வைத்து, தூங்கு வைத்துவிட்டே வந்திருந்தான். இரண்டு போர்வைகள் வாங்கியிருந்தான். ஒன்றைக் கீழே விரித்து, அவளைப் படுக்க வைத்தான். இன்னொரு போர்வையால் அவளுக்கு போர்த்திவிட்டான்.
ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லும் வரை அவளைத் தட்டிக் கொண்டிருந்தவன், குழந்தை நன்றாகத் தூங்கிவிட்டாள் என்றதும், ஆயாவிடம் சொல்லிவிட்டுச் சென்றான். அங்கிருந்து போகவே மனமில்லை வெற்றிக்கு. கஷ்டமாக இருந்த மனதோடுதான் சென்றான்.
வெற்றி போகும்போதுதான் ராணி வந்திருந்தாள். ‘என்ன இவரு இன்னிக்கும் வந்திருந்தாரா’ என்று புருவம் சுருக்கிக் கேட்டாள்.
பக்ஸ், ஆயா இருவருமே அமைதியாக அந்தக் கேள்வியைக் கடந்துவிட்டனர்.
அடுத்த நாளும் வெற்றி வந்தான். அவன் வருவான் என்று தமிழ் கம்பியைப் பிடித்துக் காத்துக் கொண்டிருந்தாள். அவன் வரும் பாதையைப் பார்த்தபடி நின்றாள். எப்போதும் அந்தக் கம்பிப் பக்கத்தில் நின்று தன் அம்மா இறந்த இடத்தையே பார்ப்பாள். இன்று அதைத் தாண்டிப் பார்க்கிறாள்.
ஆயாவிற்கும் பக்ஸிற்கும் ஏதோ ஒரு சிறு நிம்மதி வந்து போனது.
வெற்றி வந்தவன் தமிழ் காத்து நிற்பதைப் பார்த்ததும் வேகமாக வர, அவளும் ஓடிப் போய் தூக்கு என்று இரு கைகள் விரிக்க, அப்படியே கைகளில் அவளை அள்ளிக் கொண்டு சுற்றினான். கண், மூக்கு என்று முத்தம் வைத்தான். அவன் செயல்களில் குழந்தைச் சிரித்தாள்.
இன்று எதிரில் இருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான். அங்கே அவளை விளையாட வைத்தான். நேரமானதும் அருகிலிருந்த கடைக்கு கூட்டிப் போய் சாப்பாடு வாங்கி ஊட்டிவிட்டான். பின் அவளைத் தூங்க வைத்து, படுக்க போட்டுவிட்டு, ஆயாவிடம் வந்து நின்றான்.
“நான் சொல்லிருக்கேன் அவகிட்ட, இனி ஸ்டேஷன் போ மாட்டா, பயப்படாம இருங்க” என்று சொன்னான்.
“இப்பதான் நிம்மதி பா” என்றவர், “கெளம்பிட்டியா” என்றார்.
“ம்ம்” என்றவன் போகாமல் நின்றான்.
அவன் ஏதோ கேட்க வருவது போலவும், கேட்காமல் தயங்குவது போலவும் இருந்தான். “எதுனா கேட்கணுமா தம்பி”
“அது… தமிழ் அப்பா வந்தாரா…” – அவனுக்கு தமிழ் அப்பாவை நினைத்து ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது. யார் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவன் வந்து தமிழைக் கூட்டிக் கொண்டு போய்விட்டால்? அதை நினைத்துப் பார்த்தாலே மனம் நடுங்குகிறது.
“இல்லப்பா” என்றார். வெற்றி பயப்படுகிறான் என்று தெரிகிறது. துணிந்து, ‘அவன்லாம் வர மாட்டான், நீ பயப்படாத’ என்று உறுதியாகச் சொல்லவும் முடியவில்லை. தமிழ் விடயத்தில் வெற்றி என்ன முடிவில் இருக்கிறான் என்று அவரால் அனுமானிக்க முடியவில்லை.
அதேசமயம் குணா என்ன முடிவெடுக்கப் போகிறான் என்று தெரியவில்லை. இதுவரை அவன் தமிழைப் பார்த்துக்க முடியாது என்றுதான் சொல்கிறான். ராணி நிறைய முறை அவனிடம் சென்று பேசியிருக்கிறாள். பகவதியும், ‘நீயே ஆசிரமத்தில கொண்டு போய் விட்டுக்கோ’ என்று பேசியிருக்கிறான்.
இதனால் குணா முடிவு ஏதும் மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை. அவன், ‘நானே பார்த்துகிறேன்’ என்று சொல்லமாட்டான்தான். இருந்தும் நூற்றில் ஒரு சதவீதமாக அப்படிச் சொல்லிவிட்டால்?
யாரால் என்ன சொல்ல முடியும்? என்ன செய்ய முடியும்?
ஆயா சொன்னதில் சிறு நிம்மதி வர அங்கிருந்து கிளம்பிவிட்டான் வெற்றி.
இரண்டு நாள்கள் கடந்திருந்தன. அன்று வெற்றி வேலைக்குப் போகும் முன் சாந்தி வந்திருந்தாள். அவள் வந்ததுமே ஹரிணி, “உங்க தம்பி பத்து நாளா வீட்டுக்கு வர லேட்டாகுது, என்னன்னு நீங்க கேளுங்க” என்று வெற்றியைப் பற்றிப் புகார் வாசித்தாள்.
தமிழ் பற்றி வெற்றி வீட்டில் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. சொன்னால் புரிந்து கொள்வார்களா என்பது சந்தேகமே. குழந்தை தத்தெடுக்கலாம் என்று அவன் சொன்ன போது யாருமே அதை ஒத்துக் கொள்ளவில்லையே? அப்படி இருக்கையில் தமிழ் பற்றி எப்படிச் சொல்லுவான்?
“அண்ணி வேலை இருந்தது, அதான் லேட்” என்றான் வெற்றி.
“தினமுமா?!” என்றாள் நம்பாத குரலில் ஹரிணி.
சாந்தி, “நீ ஏன்டா அவளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க” என்றாள்.
மகளுக்கு சாக்ஸ் போட்டுவிட்டுக் கொண்டிருந்த கலை, “ஏன் லேட்டா வர்றனு கூட அவனைக் கேட்க கூடாதா கா” என்றான்.
“அவன்தான் வேலை இருந்ததுனு சொல்றான்ல, உன் பொண்டாட்டி அத நம்பலனா என்ன பண்ண” என்றாள் சாந்தி.
ஹரிணி ஏதோ பேச வர, “வெற்றி காரணம் சொல்லிட்டான்ல, போதும் விடு இத” என்று கலை மனைவியைப் பேசவிடவில்லை.
சந்திரன் மகளிடம், “உனக்கு வேலைக்கு நேரமாகலையா, கிளம்பு” என்றார்.
“வெற்றிகிட்ட ஒன்னு சொல்லணும்” என்ற சாந்தி, “ஒரு ஜோசியர் பார்த்தேன். இன்னிக்கு வடபழனி கோயில் போய்ட்டு வந்தேனா உன் பிரச்சனை எல்லாம் சரியாயிடும்னு சொன்னாரு” என்று தம்பியைப் பார்த்தாள் .
“நீ ஏன் கா இப்படி இருக்க? ஒரு நாள் ஹாஸ்பிடல் அட்ரஸ் எடுத்திட்டு வர… ஒரு நாள் பூஜை பரிகாரம்னு வந்து நிக்கிற” என்றான் கலை சலிப்புடன்.
“அவ தம்பி நல்லா இருக்கணும்னு அவ நினைக்கிறா” என்றார் சந்திரன்.
“இத ஒன்னு சொல்லிடுங்க” என்று கலை மகளைப் பள்ளிக்கு கிளப்பினான்.
கெஞ்சிக் கேட்டாவது தம்பியைக் போகச் சொல்ல நினைத்த சாந்தி, “வெற்றி” எனும் போதே, “போய்ட்டு வர்றேன் கா” என்றுவிட்டான் அவள் தம்பி.
மகளைக் கிளம்பிக் கொண்டிருந்த கலை, மகனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த ஹரிணி சட்டெனத் திரும்பி வெற்றியைத்தான் பார்த்தனர்.
அவர்களுக்கு ஆச்சரியம்! ஏன் சந்திரன், சாந்திக்கும் ஆச்சிரியமே!!
குழந்தை இல்லை, மனைவியும் விவாகரத்துக் கேட்கிறாள்… வெற்றிக்கு ஒரு வழி கிடைக்க வேண்டுமென சிகிச்சை, பரிகாரம் என்று சாந்தி ஏதாவது சொன்னால், அக்கா சொல்வதை வெற்றி அப்படியே கேட்டுச் செய்வான். தன் மீதான பாசத்தில்தான் சொல்கிறாள் என்று புரியும்.
ஆனால் அது முதலில்தான்! அதன் பின்னர் அப்படி வெற்றி இருக்கவில்லை. அக்கா, தன்னைப் புரிந்து கொள்ள மாட்டிக்கிறாளே என்று அவனுக்குத் தோன்றும். போகச் சொல்லி அவனை வற்புறுத்த வேண்டியதாக இருக்கும். சிலநேரம் அழுத்திச் சொன்னாலும் போகாமலே இருந்துவிடுவான்.
இப்போது சட்டென அவன் சரியென்றது ஆச்சரியமாகவே இருந்தது அவன் குடும்பத்தினருக்கு.
சாந்தி, “சரிடா பார்த்து போய்ட்டு வா, நான் கிளம்பறேன்” என்று தம்பியிடம் சொல்லிவிட்டு, அப்பா, கலையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
சற்றுநேரத்தில் வெற்றி வேலைக்குக் கிளம்பினான். அன்றும் வேலை முடிந்து தமிழைப் பார்க்கப் போனான். அவன் வருவான் என்று சாலையில் வந்து தமிழ் நின்றாள். அவன் வந்ததும், ஓடிப் போய் அவன் கால்களைக் கட்டிக் கொண்டாள்.
இந்த இரண்டு நாள்களில் இன்னும் இன்னும் அவனுடன் ஒட்டிக் கொள்கிறாள்.
அவளைத் தூக்கியவன், “இப்படி வந்து நிக்க கூடாது, உள்ளதான் இருக்கனும், சரியா” என்றுவிட்டு, ஆயாவிடம் போய் நின்றான்.
“சொன்னேன் கார், பஸ்ஸு வருது, அங்க நிக்காதனு, கேட்கல” என்றார்.
“நான் சொல்லிருக்கேன் கேட்டுப்பா, இல்லயா பேபி” என்று அவன் தமிழின் முகம் பார்க்க, ‘கேட்டுப்பேன்’ என்று தலையாட்டினாள். “இன்னைக்கு நாங்க கோயிலுக்கு போறோம்” என்றான் ஆயாவிடம்.
“அப்படியா” என்று யோசித்தவர், “எப்ப கொண்டு வந்து விடுவ” என்றார்.
“ஒன்பது மணி போல” என்றுவிட்டு… தமிழிடம், “வேற டிரஸ் போட்டுக்கலாமா பேபி” என்றான்.
ஆயா, “அந்த கட்ட பையில அவ துணிலாம் இருக்கும், இருப்பா கொஞ்சம் மொகத்த கழுவி விடறேன்” என்று எழுந்து கொள்ளப் போக, “இல்ல, நான் பார்த்துக்கிறேன்” என்றுவிட்டான்.
அருகிருந்த பொதுக் கழிப்பிடத்திலிருந்து வாளியில் தண்ணீர் பிடித்து வந்து தமிழுக்கு முகம், கை, கால் கழுவினான். வாளிக்குள் கைவிட்டு தண்ணீரைச் சுற்றிச் சுற்றி விளையாண்டாள் குழந்தை. சிறு கைகளில் நீரை அள்ளி, அவன் மேல் தெளித்து விளையாடினாள்.
வறண்டிருந்த வாழ்வில் குளிர் நீரூற்று பாய்ந்தது போல் ஈரப்பதத்தின் இதம். இருந்தும், “பேபி சும்மா இரு” என்று சுடுநீரூற்றாய் இருக்க முயற்சித்தான். முடியாமல் போக முறுவலித்தபடி இருந்தான் வெற்றி.
ஆயா சொன்ன கட்டைப் பையைப் பார்த்தான். மூன்று கவுன்கள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்துக் போட்டுவிட்டான்.
அவள் கைவிரல்களில் நகம் வளர்ந்து, அதில் அழுக்குத் தேங்கியிருந்ததைப் பார்த்திருந்தால் நகவெட்டி எடுத்து வந்திருந்தான். மடியில் அமரவைத்து பார்த்துப் பார்த்து மெதுவாக நகம் வெட்டிவிட்டான்.
அடுத்து தலை கட்டிவிடப் பார்த்தான். பின்னால் திரும்புவதும், அவன் முகம் பார்ப்பதுமாக இருந்தாள். “கோயிலுக்கு போ வேண்டாமா, நேர நில்லு” என்று சிரித்தபடி சொன்னவன், தோள் வரை இருந்த முடியை தூக்கி எப்படியோ ஒரு குடுமி போட்டுவிட்டான்.
வெற்றி தமிழுக்குச் செய்வதையே பார்த்திருந்தார் ஆயா. பகவதி மீனாக்கு செய்வது போலவே இருந்தது. “இவ அம்மா உமா என்கூடத்தான் பூ கட்ட வருவா தம்பி, தினமும் ஒரு சான் பூ மகளுக்கு எடுத்து வந்து தல சீவி பூ வச்சி விட்டு அழகு பார்ப்பா” என்றார்.
புன்னகையுடன் கேட்டவன், “கிளம்பறோம்” என்று அவரிடம் சொல்லிவிட்டு, சற்று தள்ளிப் போய் ஆட்டோ பிடித்துக் கோவிலுக்குச் சென்றான்.
போக்குவரத்து நெரிசலுக்கிடையே, வாகனம் இல்லாத சாலையில் காற்று முகத்தில் அடிக்கும் வேகத்தில் ஒரு பயணம். அவள் வேடிக்கை பார்த்து வர, அவளை மடியில் வைத்து பத்திரமாகப் பிடித்திருந்தான் வெற்றி. காற்றுக்கு ஏற்றபடி பறக்கும் அவள் முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டபடி வந்தான்.
கோயில் வந்ததும் ஆட்டோவிலிருந்து இறங்கி, வெற்றி கைப்பிடித்தபடி தமிழ் நடக்க நினைத்தாள். செருப்பில்லாத அவள் கால்களைப் பார்த்தவன், “வா பேபி, அப்புறம் நடந்துக்கோ” என்று தூக்கிக்கொண்டான்.
கோயில் அருகே சென்றதும், செருப்பு கழட்டிப் போட வேண்டிய இடத்தில் போட்டவன், பெரிய ரோஜா மாலை மட்டும் வாங்கிக் கொண்டான். பொது வரிசைக்கான வழி வழியே உள்ளே சென்றான். குண்டு கண்களால் புதிதாக எல்லாம் பார்த்தபடி அவன் கைகளில் இருந்தாள் தமிழ்.
சன்னிதானம் அருகே சென்றதும், பூசாரியிடம் மாலையைக் கொடுத்துவிட்டு கண் மூடி மனம் உருகி முருகனிடம் வேண்டினான். வேண்டுதல் முடிந்ததும் தமிழைப் பார்க்க, அவள் இவன் சாமி கும்பிடுவதைத்தான் பார்த்திருந்தாள். சில நொடிகள் அவளையே பார்த்திருந்தான்.
அவள் மெல்ல மெல்ல புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான்.
பூசாரி தீபாராதனை தட்டு எடுத்துக் கொண்டு வரவும், அவனும் தொட்டுக் கும்பிட்டு, குழந்தைக்கும் தொட்டு வைத்தான். திருநீர் எடுத்து அவளுக்கு வைத்துவிட்டு, அவனும் வைத்துக் கொண்டான்.
வழிபட்டு வெளியே வந்தவன் அவளை இறக்கிவிட்டு, “கைப் பிடிச்சுக்கோ” என்று பிரகாரம் சுற்றி வந்தான். பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று அதை வாங்கிக் கொண்டு, ஓரமாக வந்து உட்கார்ந்தான்.
அவன்தான் அவளுக்கு ஊட்டிவிட்டான். அங்கே இங்கே ஓடி விளையாடியபடி வந்து வந்து பொங்கலை அவனிடம் வாங்கிச் சென்றாள் தமிழ்.
சற்று நேரம் அமர்ந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். போகும்போது அந்தப் பகுதியில் இருந்த கடையில் அவளுக்குச் செருப்பு வாங்க நினைத்தான். ஸ்டூலில் அவளை உட்கார வைத்து, அவன் தரையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து அவள் காலுக்குப் போட்டுவிட்டான்.
செருப்பு பிடித்திருந்தால் அதைப் போட்டுக் கொண்டு நடந்தாள். குதித்தாள். பிடிக்காவிட்டால் அப்படியே அசையாமல் இருந்தபடி அவனைப் பார்த்தாள். ‘இது சூப்பரா இருக்கும் பேபி, நடந்து பாரு’ என்று அவன் சொன்னாலும், பிடிக்கவில்லை என்றால் அப்படியே அமர்ந்திருந்தாள்.
கடைசியில் அவளுக்குப் பிடித்தமான ஒன்றை வாங்கிவிட்டு, அங்கே வைத்தே அவளுக்குப் போட்டும் விட்டான். கூடவே கொஞ்சம் பூ வாங்கி வைத்துவிட்டான்.
அவன் வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமென்று எதிர்பார்த்திருக்கவில்லை அல்லவா. நடக்கையில், என்னமோ குழந்தையில்லை என்று அவன் சுமந்த ஏக்கங்கள் எல்லாம் போன ஜென்மம் போலத்தான் ஆகியிருந்தது.
பச்சை நிற சிறு பூ போட்ட மஞ்சள் நிற கவுன், காலில் ஊதா நிற செருப்பு, சின்னதாக குடுமி, அதில் கொஞ்சமாக பூ, நெற்றியில் திருநீர் என்று இருந்த குழந்தையைப் பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை.
அருகிலிருந்த உணவகத்திற்கு சென்று அவளைச் சாப்பிட வைத்து, அவனும் சாப்பிட்டுவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அங்கிருந்து கிளம்பினான். திரும்பவும் பாலத்திற்கு வரும் போது ஒன்பது மணிக்கு மேல் ஆயிருந்தது.
அவன் மடியிலேயே தமிழ் உறங்கி இருந்தாள். அவளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு இறங்கியவன், “திரும்பப் போகணும்” என்று ஆட்டோவை நிற்கச் சொல்லிவிட்டு வந்தான். தமிழ் இடத்தில் அவளைப் படுக்க வைத்து, அவளுக்கு மூடிவிட்டு, சற்றுநேரம் தலைகோதிவிட்டபடி இருந்தான்.
இப்போது பக்ஸ் இருந்தான். மாலையில் வெற்றி வரும்போது, சுமை தூக்கும் வேலை வந்திருந்தால் அங்கே சென்றிருந்தான் பக்ஸ். அவன் வந்ததும் ஆயா வெற்றி தமிழைக் கூட்டிப் போயிருப்பத்தைச் சொல்லிவிட்டார். ராணியும் வேலைக்குப் போய்விட்டு வந்திருந்தாள். ஆயாவும் முழித்துதான் இருந்தார்.
எழுந்து வந்த வெற்றி, “கோவிலுக்கு போயிருந்தோம்” என்று எடுத்து வந்த திருநீரை அவர்களுக்குக் கொடுத்தான். எடுத்துப் பூசிக் கொண்டார்கள்.
“கிளம்புறேன், ஆட்டோ நிக்குது” என்றுவிட்டு வெற்றி கிளம்பினான்.
அவன் வீடு வரும்போது பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. அந்தப் பகுதியில் அப்போது மின் தடை வேறு. அலைபேசி டார்ச் உதவியுடன் நடந்து வந்தான். குடும்பம் குடும்பமாக வெளியே அமர்ந்திருந்தார்கள்.
இவன் வீட்டில் உள்ளவர்களும் எமர்ஜென்சி லைட்டை வைத்துக் கொண்டு வெளியில் அமர்ந்திருந்தார்கள். கலையும், ஹரிணியும் படியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தன் தோழி சாரதாவுடன் சாந்தி மாமியார் வீட்டு நடப்புகளைப் பேசிக் கொண்டிருந்தாள்.
சந்திரன், அவர் வயது ஆட்களுடன் இருந்தார். சாந்தி, கலை பிள்ளைகள் வெளிச்சம் இருக்கும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இவன் வந்து நின்றதும், “இன்னைக்கும் லேட்டா, கரண்ட் வேற இல்ல, நான் எப்படி தோசை சுட உனக்கு?” என்றுதான் கேட்டாள் ஹரிணி.
“ரெண்டு தோசை சுட்டுக் கொடுக்க போறதுக்கு இத்தனை சலிப்பு” – சாந்தி.
“அவ்ளோ அக்கறை இருந்தா நீங்க செஞ்சி கொடுங்க” – ஹரிணி.
“செஞ்சி கொடுக்கத்தான் செய்றேன். என் அக்கறை பத்தி நீ பேசாத” – சாந்தி.
விட்டால் வார்த்தை வளரும். வெற்றி, “அண்ணி நான் சாப்பிட்டேன்” என்று அவர்கள் பேச்சை முடித்து வைத்தான். பின், “விபூதி எடுத்துக்கோ ண்ணா, கோவிலுக்குப் போயிருந்தேன்” என்று அண்ணனுக்குக் கொடுத்தான். அடுத்து அண்ணிக்கும் கொடுத்தான்.
அவள் வெற்றியை ஆராய்ந்தாள். அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. இவன் இப்படி இருக்க மாட்டானே? எப்போதும் எதையோ இழந்தது போலவே இருப்பான். இப்போ எப்படி இப்படி? இது என்னென்னு பார்க்கணும் என்று எண்ணிக் கொண்டாள்.
அடுத்து அப்பாவிற்குக் கொடுத்துவிட்டு அக்காவிடம் வந்து நின்றான். திருநீர் எடுத்துக் கொண்டவள், “நீ பாரேன்… நிச்சயம் ஏதாவது நல்லது நடக்கும் டா. முருகன் கண்டிப்பா உனக்கு வரம் கொடுப்பார்” என்றாள்.
புன்னகையோடு, ‘ஐயோ அக்கா, நான் வரத்தோடு போய்தான் முருகனையே பார்த்திட்டு வர்றேன்’ என்று நினைத்தபடி இரண்டிரண்டு படிக்கட்டுகளாகத் தாவித் தாவிச் சென்றான் வெற்றி.
