Kathambari Novels
சாருலதா வீடு!
ஆறரையிலிருந்து இரண்டு மணி நேரத்திற்கு முன், அதாவது நாலரை மணி!
அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சீக்கிரமாக சாரு வந்திருந்தாள். பேத்திக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர், சாருவின் மாமனார் மாமியார்.
சாரு வந்ததைப் பார்த்து, “என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்திருக்க?” என்று அவள் மாமியார் கேட்டார்.
“அது… அத்தை…” என்று தயங்கி ஆரம்பித்தவள், “ரெஃப்ரஷ் பண்ணிட்டு வந்து ஒரு… ஒன்னு சொல்லணும்” என்று லேசான தடுமாற்றத்தோடு முடித்தாள்.
“சரி போ” என்று மீண்டும் பேத்தியிடம் கவனத்தைத் திருப்பினார். சாரு சற்று நேரத்தில் முகம் கழுவி வந்து, “அத்தை” என்று அவர் அருகில் அமர்ந்தாள்.
“ம்ம், சொல்லு சாரு. என்ன சொல்லணும்?”
“ஐஞ்சரைக்கு ஒருத்தர் வீட்டுக்கு வர்றதா சொல்லிருக்காரு” என்று முன்னுரை ஏதுமின்றி பேசினாள்.
“யாரு?”
“அது…. பேரு பாபி. லாயர்”
“ஓ! கோர்ட் கேஸ் விஷயமாவா?”
“இல்ல மாமா. இது வேற…”
“வேறென்னா என்ன?” என்ற கேள்விக்கு, சாரு விளக்கவுரை எழுத முடியாமல் தவித்தாள்.
அவளின் அமைதியைப் பார்த்த மாமனார், “சரி… வரட்டும் பார்க்கலாம்” என முடிவுரை எழுதினார்.
அதன்பின் நடந்து சென்ற ஒவ்வொரு நொடிகளும், சாருவின் நாடித் துடிப்பை ஓடச் செய்தன. நேரம் ஐந்தரையைக் கடந்து சென்றது. பாபி வரவில்லை. ஆறு மணியளவில் சாரு மாமனார், “என்னாச்சு, அவர் வரலயா?” என்று கேட்டார்.
‘என்ன பதில் சொல்ல?’ என்று சாருவிற்குத் தெரியவில்லை.
“ஃபோன் பண்ணிப் பாரேன்”
“ம்” என்று பாபியின் எண்ணிற்கு அழைத்துப் பார்த்தாள். அழைப்பு போய்க் கொண்டே இருந்தது.
“என்னாச்சு சாரு?”
“கால் அட்டன் பண்ணலை அத்தை. ரிங் போய்க்கிட்டே இருக்கு”
“ஓ” என்றவர், “மாலி தூங்கிட்டா, உள்ள கொண்டு போய் படுக்க வை” என்றார்.
மாமியாரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றாள். மகளை மெத்தையில் படுக்க வைத்தாள். வெளியில் செல்ல மனமில்லாமல் அவளும் மெத்தை மேல் சாய்ந்து கொண்டாள்.
அலைபேசி எடுத்து மீண்டும் ஒருமுறை பாபி எண்ணிற்கு முயற்சி செய்தாள். தற்போதும் அழைப்பு ஏற்கப்படவில்லை. அலைபேசியைத் தூக்கி மெத்தை ஓரத்தில் எரிந்துவிட்டு… நன்றாக படுத்துவிட்டாள்.
நேரம் செல்லச் செல்ல எரிச்சல் வந்தது. கடிகார முள் ஏழு என நிற்கும் போது, அவளை ‘எந்திரி’ என்று சொல்லும் விதமாக அறைக் கதவு தட்டப்பட்டது.
எழுந்து சென்று திறந்தாள். சாரு மாமியார்தான். வரவேற்பறை சோஃபாவில் பாபி அமர்ந்திருப்பது தெரிந்தது. எதிரிலிருந்த நாற்காலியில் சாரு மாமனார் இருந்தார்.
“சாரு வா, நீ சொன்னவரு வந்திருக்காரு” என மாமியார் சொல்ல, “இதோ” என தலையை சற்று சரி செய்துகொண்டு வரவேற்பறையில் வந்து நின்றாள்.
பாபி ஒருபக்கம், சாருவின் மாமனார், மாமியார் ஒருபக்கம் என்று இருந்தனர். சாரு நடுவில் நின்று கொண்டாள். மெல்லிய ஒலியில் தபேலா இசை கேட்டுக் கொண்டே இருந்தது.
மாலி உறங்கியதும் இப்படி இசை கேட்பது இந்த வீட்டின் வழக்கம் போல!
‘யார் தொடங்குவது?’ என்றொரு மௌனக் கேள்வி, அங்கே சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது.
“சாரு எதும் சொல்லலை. நீங்க வருவீங்கன்னு மட்டும்தான் சொன்னா” என்று மாமனார் பேச ஆரம்பித்தார்.
“ஃபர்ஸ்ட் என்னைப் பத்திச் சொல்லிடுறேன். நான் பாபி… லாயர்”
“அதெல்லாம் சொன்னா… ” என்ற மாமியாருக்கு, அதற்கு மேல் என்ன கேட்க என்று தெரியவில்லை. மீண்டும் மௌனம். தபேலா இசை மட்டும் கேட்டது.
“சாருவோட ப்யூச்சர் பத்தி பேசணும்” என பாபி மௌனத்தை விரட்டினான்.
*********
ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்! ஏழு மணி. இத்தனை வருட காத்திருப்பை எல்லாம் தோற்கடிக்கும் காத்திருப்பு என்று உணர்ந்து கொண்டிருந்தாள், தாரா!
மேசை மேலிருந்த புத்தகத்தை திறந்து பார்க்கவும்… பின் மூடி வைக்கவும், என்று காத்திருப்பு காலத்தைக் காகிதங்களில் கடந்து கொண்டிருந்தாள்.
திடீரென்று வருவானா? மாட்டானா? என்ற சந்தேகம்! உடனே அலைபேசியை எடுத்து தேவாவிற்கு அழைத்தாள். பைக்கை ஓரத்தில் நிறுத்தி அழைப்பை ஏற்றவன், “சொல்லுங்க தாரா” என்றான்.
அவன் நிற்கும் சாலையின் வாகன ஒலிகள் அலைபேசி வழி வந்தாலும், “எங்க இருக்கீங்க தேவா?” என்று கேட்டாள்.
“ஆன் தே வே”
“ஓ! இதைக் கேட்கத்தான் ஃபோன் பண்ணேன்”
“சரி வச்சிடறேன்” என்றவனிடம், “தேவா வந்திடுவீங்கள??” என்று கேட்டாள்.
“வந்துக்கிட்டு இருக்கேன்னு சொல்றேன், இப்படிக் கேட்கிறீங்க”
“ஸ்ஸ்… ஸாரி”
“இருபது நிமிசத்தில அங்க இருப்பேன்”
“ம்” என்று அலைபேசியை வைக்கப் போனவளிடம், “ஒரு நிமிசம்” என்றான்.
“சொல்லுங்க தேவா”
“பைக் ஓட்டிக்கிட்டு இருக்கேன்… இனிமே கால் பண்ணாதீங்க”
‘இதுக்குத்தான?’ என்ற சலிப்புடன், “ஓகே ஓகே” என்று சொல்லி வைத்துவிட்டு, திரும்பவும் சுற்றியுள்ள அலங்காரங்களைப் பார்த்தாள். வருடங்கள் தாண்டி காதலைக் காக்க வைத்தவளுக்கு, வழியில் வருகின்றவனுக்காகக் காதலை காக்க வைக்க இயலவில்லை!
தேவா சொன்ன இருபது நிமிடம் கழித்து அந்த ரூப் டாப் ரெஸ்டாரன்ட். கீழே பைக் பார்க் செய்துவிட்டு வந்தவன்… மின்தூக்கியில் ஏறி கட்டிடத்தின் மேல் தளத்திற்கு வந்தான். அங்கே அமைக்கப்பட்ட அலங்காரங்களைப் பார்த்து ஒருகணம் திகைத்தான்.
இருந்தும், தாரா அமர்ந்திருக்கும் மேசையை நோக்கி நடந்து வந்தான். தேவா அருகில் வந்ததும், அவள் எழுந்து நின்றாள். அவள் முகம் முழுதும் புன்னகை பூக்கள்!
“ஹாய்” என்றாள். இருக்கையைக் காட்டி, ‘உட்காருங்க’ என்பது போல் சைகை செய்தாள்.
அவனும் அமர்ந்துகொண்டான். அவளும் அமர்ந்தாள். மேசையின் மேலிருந்த புத்தகத்தின் தலைப்பு, பலூன்களின் வடிவங்கள், இசைக்கப்பட்ட பாடல் என ஒவ்வொன்றும் அவளின் இதயத்தை இயம்பியது.
இத்தனையையும் தேவா இமைகள் அசையாமல் பார்த்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென ‘லவ் யூ தேவா’-னு சொன்னா எப்படி இருக்கும் என்று நினைத்தாள்.
ஆனால் கண்ணாடி முன் சொன்ன ‘லவ் யூ தேவா’, முன்னாடி இருப்பவனைப் பார்த்து வெட்கம் கொண்டன! “தேவா” என்ற பெயர் அழைப்பிலேயே, அவளது மனதினைக் காட்டினாள்.
ஆனால் அவன் மௌனம் காட்டினான். கைக்கெட்டிய தூரத்தில் தன் காதல் அமர்ந்திருப்பதை காண்கையில் கன்னியவள் காற்றில் மிதந்தாள்!
மீண்டும், “தேவா” என்று அழைத்தாள்.
“ஏன் இப்படி ஒரு அரேஞ்மென்ட்?” என்று கேட்டான்.
“பேசணும்னு சொன்னேன்ல… பேசட்டுமா?”
“அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசலாமா?”
“இல்லை, நான் பேசி முடிச்சதுக்கு…”
“வேண்டாம். இன்னைக்கு நான் பேசுறேன்… நீங்க கேளுங்க” என்று பேச ஆரம்பித்தான்.
**********
சாருலதா வீடு!
“ப்யூச்சர்??” என்று யோசித்த சாருவின் மாமனார், “உங்க வீட்டைப் பத்திச் சொல்லுங்க. சாருவை எப்படித் தெரியும்?” என்று கேள்வி கேட்டார்.
பாபி பதில் சொன்னான். அதன் பின்னும் நிறைய கேள்விகள்… நிறைய பதில்கள். அவருக்குத் திருப்தி வந்த பின்னே நிறுத்தினார்.
‘அடுத்து என்ன பேச?’ என்று தெரியாத ஒரு அமைதி. தபேலா இசை மட்டும் கேட்டது.
“நீங்க… உங்க முடிவு?” என்று பாபி கேள்வியாக நிறுத்தினான்.
“இதுல சாருவோட முடிவுதான். நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்” என்று விசாரித்தப் பின், அவள் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். “அப்பா ஏன் வரலை?”
அவரைப் பற்றி மேலோட்டமாக சொன்னான் பாபி.
“ஓ! அப்படியா” என்றவர், “எங்க பையன்கிட்ட பேசறீங்களா?” என்று கேட்டார்.
” ம்ம் பேசறேன்”
“சாரு, நீ போய் காஃபி போட்டுக் கொண்டு வா” என்றார் சாருவின் மாமியார்.
“இல்ல, இப்போ வேண்டாம்” என்றான் பாபி. இதற்கிடையே மூத்த மகனிற்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசிக் கொண்டிருந்தார் சாரு மாமனார்.
நடப்பதைப் பார்த்தால், தான் வந்ததன் காரணத்தை சாரு சொல்லும் போதே கணித்திருப்பார்கள் என பாபிக்குப் புரிந்தது. மகனிடம் பேசிவிட்டு வந்தவர், அலைபேசியை பாபியிடம் கொடுக்க, வாங்கிக் கொண்டு வெளியே சென்று பேசிவிட்டு வந்தான்.
பாபியிடமிருந்து அலைபேசியை வாங்கிக் கொண்ட சாரு மாமனார், “என்ன சொல்றான்?” என்று கேட்டார்!
“அது… நீங்க அப்புறமா அவர்கிட்ட கேட்டுக்கோங்க” என்றுவிட்டான் பாபி.
அதற்கு மேல் அவர்கள் எதுவும் கேட்கவில்லை. சாருதான் ‘என்ன நடக்கிறது?’ எனப் புரியாமல் தவித்தாள்.
“எங்க பக்கமிருந்து ஒரு சின்ன ரெக்வஸ்ட்” – மாமனார்.
“சொல்லுங்க” – பாபி.
“மேரேஜ் ரெஜிஸ்டர் ஆஃபீசில வச்சிக்கலாம்”
“ம்ம்ம் சரி. ரிசப்ஷன் மாதிரி வைக்கணும்னு எதிர் பார்க்கிறீர்களா?”
“அது… அதெல்லாம் எதுக்கு. ஆனா உங்களுக்கு…”
“பரவாயில்லை, அது வேண்டாம். எஃக்ஸிபிட்(exhibit) பண்ண வேண்டாம்னு நீங்க நினைக்கிறீங்க. புரியுது எனக்கு”
“ம், அப்புறம் மேரேஜ் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க”
“ம்ம்ம் சரி”
“அப்பாகிட்ட கேட்டு டேட் சொல்லுங்க. நான் பையன், பொண்ணுங்களுக்குச் சொல்லணும்”
“ம்ம்ம், வேற எதுவும் என்னைய பத்தித் தெரியனுமா?”
“இல்ல போதும்” என்றவர், “மாலி பத்தி என்ன முடிவு எடுத்துருக்கீங்க?” என்று தயங்கித் தயங்கி விடயத்திற்கு வந்தார்.
“அது நான் சாருகூட பேசிட்டு… சொல்றேனே…” என்றான், பாபி தயங்காமல்.
அவன் பதில், சாருவுக்குத் திருப்தியில்லாமல் இருந்தது.
“சரி, சரி… ஆனா உங்களால முடியலைனா சொல்லுங்க… என் பெரிய பையன் பார்த்துப்பான்”
மீண்டும் அமைதி. தபேலா இசை மட்டும் ஒலித்தது.
“தப்பா எடுத்துக்காதீங்க… சாருகூட கொஞ்ச நேரம் தனியா பேச முடியுமா?” என்று பாபி அனுமதி கேட்டான். அவர்கள் யோசித்தார்கள்.
“ஹெசிட்டேட் பண்ணீங்கனா வேண்டாம்”
“அப்படியெல்லாம் இல்லை. பேசுங்க. பேசி… மாலி பத்தி முடிவெடுங்க”
வெளியே செல்ல எழுந்தவனிடம், “வெளிய வேண்டாம். இங்க பேசுங்க” என்று சொல்லிவிட்டு இருவரும் அவர்களது அறைக்குள் சென்று விட்டார்கள்.
மீண்டும் அமைதி. தபேலா இசை மட்டும் இசைத்தது. எழுந்து அவளருகில் வந்தான். “என்னாச்சு சாரு?” என்று அக்கறையாகக் கேட்டான்.
“ஏன் இவ்வளவு லேட்?”
“லேட்டாகும்னு மெசேஜ் அனுப்பியிருந்தேனே… பார்க்கலையா?”
“நீ ஃபோன் அட்டென் பண்ணலங்கிற கோபத்தில, எதுவும் பார்க்கலை” என்று மெல்லிய சத்தத்துடன் சிடுசிடுத்தாள். பாபி சிரித்தான்.
“அதை விடு! நேத்தே மாலி பத்திப் பேசியாச்சுல. அவங்க கேட்கிறப்போ, நீ சொல்லியிருக்கலாமே”
“அப்புறம் சொல்லிக்கலாம்”
“இது என்ன பதில் பாபி?” என்று பொறுமினாள்.
“ரிலாக்ஸ் சாரு. அவங்க பையனும் ஃபோன்ல திரும்பத் திரும்ப இதைத்தான் கேட்டாங்க”
“நீ என்ன பதில் சொன்ன?”
“இவங்ககிட்ட சொன்னதைத்தான் சொன்னேன்”
“ப்ச்”
“இங்க பாரு. அவங்களுக்கும் ஒரு தயக்கம் இருக்கும்”
“என்ன தயக்கம்? அதான் ஓகே சொன்னாங்கள”
“அது உன்னோட விஷயத்தில. ஆனா மாலி விஷயத்தில அவங்களால அப்படி இருக்க முடியாதுன்னு தோணுது”
‘ஏன்?’ என்று விளங்காமல் விழித்தாள்.
“நான் மாலியைப் பார்த்துப்பேனா… மாட்டேன்னானு… ஒரு சின்ன பயம்”
“அதுக்காக மாலிய விட்டு… நான் இருப்பேன்னு எப்படி…” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
“சாரு… “
“நீ பதில் சொல்லிருக்கலாமே பாபி” என்று கலங்கினாள்.
“உனக்கென்ன பதில் சொல்லனும். அவ்வளவுதான??” என்று பாபி சொல்லும் போதே குழந்தை அழும் சத்தம் கேட்டது. பாபி சாருவைப் பார்த்தான்.
“மாலி” என்றாள்.
“தூக்கிட்டு வா. நான் பார்க்கனும்” என்று பாபி சொன்னதும், “இரு” என்று சாரு போய் மகளைத் தூக்கி வந்தாள். தூக்க கலக்கத்தில் குழந்தை இருந்தது.
“என்கிட்ட கொடு சாரு”
“அழுவா பாபி… வேண்டாம்”
“பரவால்ல கொடு” என்றவன் சாருவிடமிருந்து மாலியை வாங்கி தோளில் போட்டுக் கொண்டான். மகளின் முதுகில் சாரு தட்டிக் கொடுத்தாள். மீண்டும் உறங்கிவிட்டது குழந்தை.
“சாரு, நீ போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா… நாம வெளியில போகலாம்”
“இப்பவா?”
“ம்ம்ம்”
‘எதுக்கு வெளிய போகணும்?’ என்று நினைத்தாலும், அவன் சொன்னது போல் முகம் கழுவி வந்தாள். அதே நேரத்தில் சாருவின் மாமனார் மாமியாரும் அறையிலிருந்து வெளியே வந்தனர்.
சாரு மாமியார், “ஓ, மாலி முழுச்சாச்சா?” என்று பாபியின் அருகில் வந்தார்.
“இல்லை அத்தை. தூங்குறா” என்று சாரு பதில் சொன்னாள்.
“கொடுங்க… நான் பார்த்துக்கிறேன்” என்று பாபியிடமிருந்து மாலியை வாங்க கரம் நீட்டினார்.
“இல்ல. இனிமே நானே பார்த்துக்கிறேன்” என்று கொடுக்க மறுத்துவிட்டான்.
அனைவருக்கும் அப்போது கேட்ட கேள்விக்கு இக்கணம் பதில் சொல்கிறான் என்று புரிந்தது.
மேலும், “நாங்க மூனு பேரும் கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வர்றோம்” என்றான். இதற்குமுன் கேட்ட அனுமதி குரல் அவனிடம் இக்கணம் இல்லை என்று தெரிந்தது.
“சரி” என்று சாருவின் மாமனார் சொன்னார்.
“திரும்பி நானே கொண்டு வந்து விட்டுருவேன்” என்றான் பொறுப்பாய்!
“ம்ம்ம் சரி”
சாரு, பாபி இருவரும் அப்பார்ட்மெண்ட் வெளியே வந்தனர். சாருவின் முகம் தெளிந்திருந்தது.
“போதுமா? பதில் சொல்லியாச்சு”
மட்டியைக் கடித்துக் கொண்டு மென்னகைப் புரிந்தாள்.
“அப்படிப் பார்த்துப்பேன்… இப்படிப் பார்த்துப்பேன்னு சொல்றதுக்கு… ‘நாங்க மூனு பேரு’னு சொல்லிட்டா முடிஞ்சு போயிடும்”
மனம் திறந்து புன்னகைப் புரிந்தாள்.
“சரி சொல்லு, எங்க கூட்டிட்டுப் போகப் போற?” என்று கேட்டாள்.
“ஒரு லாங் டிரைவ் போகலாமா?” என்று அவள் அபிப்பிராயம் கேட்டான்.
வழித்துணை நீயானால் போகும் வழியைப் பற்றி பயமென்ன என்பது போல் பார்வை சாருவிடம்! பாபிக்குப் புரிந்தது!
சிரித்துக் கொண்டே சாருவிடம் மாலியைக் கொடுத்து, “ஏறு” என்று கதவைத் திறந்து விட்டான். தானும் ஏறிக் கொண்டு காரைக் கிளப்பினான்.
மூவரின் பயணம் இனிதே தொடங்கியது. பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சாரு மாமனார் மாமியார் முகங்களிலும் ஒரு சந்தோஷம்!
***********
இதே நேரத்தில் ரூஃப் டாப் ரெஸ்டாரெண்டில்… பிண்ணனியில் த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடல்… பேசப் போகிறேன் என்று சொன்னவனிடம், “என்ன பேசப் போறீங்க?” என்று கேட்டாள்.
“ஸீ தாரா. என்னால ஈஸியா கெஸ் பண்ண முடியுது”
‘என்ன?’ என்பது போல் பார்வை தாராவிடம்!
“அரேஞ்ஜ்மென்ட்ஸ் பார்த்தாலே தெரியுது, இட்ஸ் எ ப்ரோபோஷல். நான் சொல்றது சரிதான”
“ஹண்ட்ரட் மார்க்ஸ் தேவா” என்றாள் மனதைச் சொல்லாமல், அதனைப் படித்தவனுக்கு மதிப்பெண் தந்து!
“பட் யூ ஃபெயில்டு (you failed)” என்றான்.
மறுப்பான் என்று தெரியும். அவள் மனம் தெளிவாக இருந்ததால், “தேவா நான் பேசினா…” என்றபோதே, “நீங்க என்ன பேசினாலும் உங்க ப்ரோபோஷல நான் அக்சஃப்ட் பண்ண போறதில்ல” என்றான்.
தன் காதல் வாசத்தை, இத்தனை அருகில் கொண்டு சென்றும் சுவாசிக்க மறுப்பவனை என்ன செய்ய என்று புரியாமல் விழித்தாள்!
திடீரென்று, “ஒரு உதவி” என்றான்.
“சொல்லுங்க”
“அந்த பாட்ட நிறுத்த சொல்றீங்களா? இட்ஸ் ரியலி அனாயிங்” என்று அவன் மறுப்பை மேலும் அவள் மனதில் பதிய வைத்தான்.
அவன் மறுப்பை உணர்ந்தவள் முகம் கொஞ்சம் சிறுத்துப் போனது. எனினும், தூரத்தில் நின்ற சிப்பந்தியிடம் பாட்டை நிறுத்தும்படி சைகையில் கூறினாள்.
பாட்டு நின்றதும், “தேங்க்ஸ்” என்றான்.
“தேவா…”
“வெயிட்! நானும் எவ்வளவோ அவாய்ட் பண்ணிப் பார்த்தேன். ஆனா நீங்க புரிஞ்சிக்கிட்ட மாதிரியே தெரியலை”
‘எல்லாம் புரிஞ்சது’ என்று கத்த வேண்டும் போல இருந்தது தாராவிற்கு!
“ஒருவேளை காரணம் சொன்னா புரிஞ்சிப்பீங்களானு பார்க்கிறேன்”
உதவி செய்ய வேண்டும், நேரம் செலவிட முடியாது… என்று தன் காதலை மறுக்க, அவன் காரணம் கூறுவான் என்று தெரிந்ததால் தாரா சலிப்புடன் இருந்தாள்.
“தாரா லீஸன்”
“எஸ், ஐ டு (I do)” என்று அவன் விழிகளைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.
“நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்” என்று தன் மனதைத் திறந்தான்.
அவளின் புன்னகை மெல்ல மெல்ல குறைந்து, பின் மறைந்தது!
“என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா. அதனால இதுமாதிரி பண்றதை, இதோட நிறுத்திக்கோங்க” என்று சூழலின் காதல் அலங்காரங்களைச் சுட்டிக் காட்டினான்.
நம்பமாட்டாமல், “நீங்க பொய் சொல்றீங்க. என்னை அவாய்ட் பண்ண இப்படி சொல்றீங்க. கரெக்டா தேவா…?” என்றவளுக்கு, அதுவரை இருந்த ஒரு தெளிவு தொய்வடைந்தது.
“என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க? இதுல யாரும் விளையாடுவாங்களா?” என்று எரிச்சலடைந்தான்.
ஏக்கமாக அவனைப் பார்த்தாள்.
“நான் லவ் பண்றது உண்மைதான். அத பொய்னு சொல்லாதீங்க” என்றவன் குரலில் உண்மைக் காதலுக்கான கோபம் இருந்தது.
“ஸாரி” என்றவளுக்கு ஒரு உண்மை புரிந்தது. அது… எனக்கானவன் என்று நினைத்தவன், எனதில்லை என்பது!
“ஆக்சுவலி, பாபி சொன்னான்தான் வந்தேன். அதுவும் பேசப் போறீங்கன்னு சொன்னான். ஆனா நீங்க… ” என்று பாதியிலேயே நிறுத்தி விட்டான்.
நேற்று பேசும்போது அவனைக் கணித்தது சரியே! தாராவின் மனம் கனத்தது. “யாருன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டுப் பார்த்தாள்.
“தட்’ஸ் பியான்ட் (beyond) யுவர் லிமிட்ஸ்” என்று அவள் எல்லையைக் கோடிட்டுக் காட்டினான்.
“அகைன் ஸாரி” என்றாள், அவன் வாழ்வில்… தான் எங்கே நிற்க வேண்டும் எனப் புரிந்து!
“பரவாயில்ல. அன்ட் இன்னொரு விசயம்” என்று இடைவெளிவிட்டவன், “இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றான்.
கழுத்து நரம்புகள் புடைக்க, “ம்” என்று சொன்னாள். அதற்கு மேல் அவனைப் பார்க்க முடியவில்லை. மறுபுறமும் திரும்பி கொண்டாள். அவள் நயனங்கள் இரண்டிலும் நீர்ப்படலம்… நட்சத்திரக் கூட்டத்தை மறைத்தன!
“தாரா” என்ற அவனது அழைப்பில், சட்டென அவளால் திரும்ப இயலவில்லை. விழிநீரை விரலால் துடைத்தாள்.
“தாரா”
“ம்ன்” என்று திரும்பியவள், இமைகள் நனைந்திருந்தன. அதைக் கண்டவன், “நீங்க ஓகேவா? நான் கிளம்பட்டுமா?” எனக் கேட்டான்.
“ம்ம், ஐ அம் ஓகே. அன்ட் இனி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று உதட்டில் புன்னகை ஏந்திக் கொண்டு உள்ளத்தின் ஏக்கத்தை மறைத்தாள்.
“புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்க்ஸ்” என்று கிளம்பிவிட்டான்.
அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விழித்தெழும் போது விடைபெற்றுச் செல்லும் கனவைப் போல, தன் காதல் ஆயிற்றே என்று வருந்தினாள்! உரத்த கேவல்கள் வருவது போல் இருந்தது. ஆனால் இது அதற்கு உரித்தான இடமல்ல எனத் தெரிந்தது!
வாய் கசப்பது போல இருந்தது. முன்னிருந்த கேக்கை இரண்டு வில்லைகள் எடுத்து உண்டாள். கசப்பு போகவில்லை! புரிந்தது! வாய் கசக்கவில்லை. தன் வாழ்க்கை கசத்து விட்டதென்று!!
கையிலிருந்த ஸ்பூனை மேசையில் தூக்கிப் போட்டாள். என்றோ ஒருநாள் திருமணம் செய்ய மாட்டேன் என சொன்னவன், இன்றும் அதே எண்ணத்தில் இருப்பான் என நினைத்தது… முட்டாள்தனம் என மூளைக்குப் புரிந்தது!
மனதிற்கு? குமுறியது! பாச உண்டியலைப் போல, காதல் உண்டியலும் நிரம்ப போவதில்லை என்ற உண்மை உணர்ந்து மனம் குமுறியது! நெஞ்சத்தில் சேர்த்து சேர்த்து வைத்த நேயங்கள், சோர்ந்து போய் காயங்கள் தர ஆரம்பித்தன! இருள் மண்டிக்கிடந்த இரவு வானைப் பார்த்தாள். சிதறிய காதலை நினைத்து, அவள் மனம் கதறி அழ ஆரம்பித்தது!!

