Kathambari Novels
ராஜசேகர் ஒரு மருத்துவர். கோவையில் ஒரு சிறிய கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். திருமணமானவர். சரத், ஜெகன் என்று இரு பிள்ளைகளின் தந்தை. மனைவியை இழந்தவர்.
அவர் மனைவி ஜெகனைப் பிரசவிக்கும் போது இறந்துவிட்டார்.
அவருக்கு உறவுகள் பக்கபலமாக இருந்ததால்… பிள்ளைகள், வீடு, வேலை என எல்லா இடங்களிலும் பொறுப்பாகத் தன் கடமையைச் செய்ய முடிந்தது. சிறு கிளினிக் என்றாலும், அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்தமான மருத்துவர்.
காரணம்? அவரது எளிமை, கனிவு, பொறுமை இதெல்லாம் கூட இருக்கலாம்!
சரத், ஜெகன் இருவரும் கீதா வேலை செய்யம் பள்ளியில் படித்து வந்தார்கள். இந்த நிலையில் சரத் படிப்பிற்காக உதவி கேட்டு, அவன் படிக்கும் பள்ளியை ராஜசேகர் நாடினார். அறிவியல் பாடத்திற்கு சிறப்பு வகுப்பு வேண்டுமென்று சரத் வகுப்பாசிரியரிடம் கேட்டார்.
அறிவியல் ஆசிரியரைக் கேளுங்கள் என அவர் கீதாவைக் கை காட்டினார்.
சரத்தின் அறிவியல் ஆசிரியர் என்ற முறையில்தான், ராஜசேகர் கீதாவைச் முதன் முதலில் சந்தித்தார். அப்படித்தான் அவர்கள் அறிமுகம் நடந்தது.
ராஜசேகர், தன் வேண்டுகோளைக் கீதா முன் வைத்தார். அதுபோல் சிறப்பு வகுப்புகள் யாருக்கும் எடுப்பதில்லை என்று கீதா மறுத்தார்.
மேலும் மேலும் ராஜசேகர் வற்புறுத்தி கேட்கவே, கீதா ஒத்துக் கொண்டார். அதன்படி பள்ளி முடிந்ததும், அமுதாவையும் சரத்தையும் கீதா வீட்டிற்குக் கூட்டிச் செல்வார்.
ராஜசேகர் வந்து ஜெகனை அழைத்துச் செல்வார்.
கீதா சற்றுநேரம் சரத்திற்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். பின் கிளினிக் முடிந்ததும் ராஜசேகர் வந்து அவனை அழைத்துச் செல்வார்.
ஒருநாள் ஜெகனை அழைத்துச் செல்ல ராஜசேகர் வர தாமதம் ஆனது. அன்று ராஜசேகருக்குத் தகவல் சொல்லிவிட்டு ஜெகனையும் தன்னுடன் அழைத்துச் சென்றார் கீதா.
பின் அதுவே வழக்கமாயிற்று! பின்னர் அதுவே பிடித்துப் போயிற்று!!
யாருக்கு?? – கீதா? சரத்?? ஜெகன்? பதில் மூவருக்கும்தான்!!
ராஜசேகர் கிளினிக் முடிந்த பின்னர், கீதா வீட்டிற்கு வந்து சரத், ஜெகனை அழைத்துச் செல்லுவார். ராஜசேகர் தாமதமாக வரும் நாட்களில்… சரத்தும், ஜெகனும் இரவு உணவை கீதா வீட்டிலே முடித்துக் கொள்ளவர்கள்.
சில சமயம் ஜெகன் தூங்கிவிட்டால்… ராஜசேகர் வரும் வரையில் சரத்தும் கீதாவும் பேசிக் கொண்டிருப்பார்கள். அது, அவர்கள் இருவருக்கும் மிகப் பிடித்தமான நேரச் செலவிடல்கள்.
அமுதா??
அவளின் பாச உண்டியல், அப்பாவின் பாசம் கொண்டு மட்டுமே நிரம்பும். அதற்காக அவள் தனித்திருக்கவில்லை. சரத், ஜெகன் இருவருடன் சேர்ந்து படிப்பாள், விளையாடுவாள், இரவு உணவு உண்பாள்… இப்படி நிறைய!
நாள்காட்டியின் நாள்கள், இதுபோன்ற முரண்பாடுகளின் பாதையில் சென்று கொண்டிருந்தன.
சரத்திற்கும் ஜெகனிற்கும் கீதாவை மிகவும் பிடித்திருந்தது. அவர் மீது நிரம்ப மரியாதை வைத்திருந்தனர். அதிலும் சரத், கீதாவை மிகவும் சார்ந்திருந்தான். முதலில் அறிவியல் பாடம் என்று மட்டும் ஆரம்பித்து, அதன்பின் அவன் கல்வி சம்பந்தமான விடயங்களைக் கீதாவே பார்த்துக் கொள்ளும் நிலை வந்தது.
அது அவனுக்கும், கீதாவுக்கும் பிடித்திருந்தது. அந்தப் பாசத்தை, ஏன்? எதற்கு? என்ன காரணம்? என்ன பிரதி பலனிற்காக? என்று எந்தக் கேள்வி பதிலுக்குள் அடக்கி வைக்க முடியாது.
சில நேரங்களில் கீதாவை யாரும் ஏதும் சொல்லிவிட்டால் சரத்தால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த அளவில் இருந்தது அவனது பாசம்!
சில நேரங்களில் பள்ளி மைதானத்தில் பிள்ளைகளை விளையாடவிட்டு, ராஜசேகரும், கீதாவும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
சண்டை போடுவதற்கு மட்டுமே வார்தைகளைப் பயன்படுத்திய கீதாவிற்கு, இப்படிச் சாதாரணமாகப் பேசப் பயன்படுத்தியது பிடித்திருந்தது.
அமுதா??
இன்னும் வாரக் கடைசியில் அப்பாவுடன் செலவிடும் நாட்களுக்காகவே, வார நாட்களை வாழ்ந்து வந்தாள். கீதா எவ்வளவு பாசமாக இருந்தும் அமுதாவின் மனம் தந்தையைச் சுற்றித்தான் வந்தது.
இதற்கிடையே கீதாவிற்கு விவாகரத்தும் கிடைத்திருந்தது. இந்தச் சூழலில் ராஜசேகர் எம்எஸ் படிப்பதற்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்திருந்தார்.
சரத், ஜெகன் இருவரையும் தன் உறவு வழியில் இருந்த பெரியவர் பொறுப்பில் ஒப்படைத்திருந்தார். அவரிடம்… வீட்டை கவனித்துக் கொண்டு, சரத் ஜெகன் இருவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் கீதாவிடமும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டே சென்றார். கீதா இல்லையென்றால்… சரத்தும் ஜெகனும்… அப்பாவின் இந்தப் பயணத்தை ஏற்றிருப்பார்களா என்றால்… சந்தேகம்தான்.
கீதா என்ற பெண் இல்லாமல் இருந்திருந்தால் இப்படி வெளிநாடு போகும் முடிவை ராஜசேகர் எடுத்திருப்பாரா என்றால் சந்தேகம்தான்.
ராஜசேகரைத் தவிர வேறு யாரும் இப்படி ஒரு உதவி கேட்டிருந்தால் கீதா சம்மதிருப்பாரா என்றால் சந்தேகம்தான்.
நால்வருக்கும் இடையே அப்படி ஒரு பாசம் இருந்தது.
நாள்காள்டியின் நாட்கள், கீதா, சரத், ஜெகன் மூவருக்கும் ஒரு புது உலகத்தை நோக்கிப் பயணித்தன.
இதற்கிடையே, கீதாவின் தாயார் இறந்திருந்தார். ஆகையால் பத்து நாட்கள், கிணத்துக்கடவில் கீதா இருந்தார். ஆனால் அந்த பத்து நாட்களில் சரத்தும் ஜெகனும் தவித்துப் போயினர்.
ஏன்… கீதாவும்தான்!
இந்த நிலையில் ராஜசேகர் எம்எஸ் முடித்துவிட்டு வந்தார். இனி கோவையில் பணி செய்ய வேண்டாம், சென்னை சென்றால் இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கும் என்று நினைத்தார்.
எடுத்த முடிவை உறவினர்களிடம் கூறினார். அவர் முடிவை ஏற்றுக் கொண்ட உறவினர்கள், ராஜசேகரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். அது, கீதாவைத் திருமணம் கொள்ள வேண்டுமென! ராஜசேகர் காரணம் கேட்கையில்… சரத், ஜெகனை கீதா பார்த்துக்கொண்ட விதத்தால் இந்த முடிவு என கூறினார்கள்.
திருமணத்தில் ராஜசேகருக்கு உடன்பாடு இருந்தது. ஏற்கனவே நிறைய முறை கீதாவிடம் நட்புடன் பேசியிருப்பதால் அவரைப் பற்றித் தெரியும்.
கீதா, சரத்தையும் ஜெகனையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார். அதேபோல, தானும் அமுதாவைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசை கொண்டார். பெண்பிள்ளை இல்லை என்பதால் இந்த ஆசை ராஜசேகருக்கு அதிகமாகவே இருந்தது.
கீதா போன்ற பெண், வாழ்வின் நீளத்திற்குத் துணை வருவது ராஜசேகருக்கு மகிழ்ச்சியே!
திருமணத்திற்குச் சம்மதித்தார். எனினும் கீதாவிடம் கேட்க வேண்டும், முக்கியமாக அமுதாவைக் கேட்க வேண்டும் என்றார். மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடப்பவர்.
உண்மையில் ராஜசேகர் ஒரு நல்ல மனிதர்!
ராஜசேகரின் உறவினர்களே கீதாவின் வீட்டிற்கு வந்து இதுபற்றிக் கேட்டனர். மறுப்பதற்கு காரணம் இல்லையென்று கீதாவிற்குத் தோன்றியது.
எனினும் யோசித்தார். சரத், ஜெகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது என்று தோன்றியது. அதிலும் சரத்தை! சாத்தியமில்லை!!
இன்னொன்று, தன் மகள் தனியாக வளராமல், சரத் ஜெகனோடு வளர்வாள் என்ற நினைப்பே மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் சிறுவயதிலிருந்து தந்தை இல்லாமல் தனியாக வளர்ந்தாயிற்று. கணவன் என்று வந்தவரிடமிருந்தும் சரியான கவனிப்பு இல்லை.
உறவென இருந்த தாயும் இல்லை. இன்னும் வாழும் நாள் முழுதும் இதுபோல் தனியாக ஏன் வாழ வேண்டும்? அதுவும் தோழனாக தோள் கொடுக்க இப்படி ஒரு நல்லவர் இருக்கும் போது!
அமுதா? அவளிடம் கேட்டாரா?? இல்லை, கேட்கவில்லை! இந்த இடத்தில் கீதா சற்றே சுயநலமாக செயல்படுகிறாரோ?
கீதா திருமணத்திற்குச் சம்மதித்தார்.
திருமணம் பற்றி, அதிபனிடம் சொன்னார். ஊரில் வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கீதா வாழ்வில் தான் முடிவெடுக்கும் ஸ்தானத்தில் இல்லை என்று தெரியும். ஆதலால் அதிபன் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் அமுதா?
“அமுதா” என்றார், ஒற்றை வார்த்தையாக! அது வார்த்தை மட்டுமல்ல. அவரது வாழ்க்கை.
“எங்க கூடத்தான் இருப்பா” என்று ஒற்றை வரியில் முடித்து விட்டார்.
அதிபன் எதுவும் மறுத்துப் பேசவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது!
ராஜசேகர் கீதா பதிவுத் திருமணம் நடந்தது. ஐவரும் சென்னைக்குக் கிளம்பத் தயாராகினர்.
அமுதா??
வாரத்திற்கு ஒரு முறை அப்பாவைச் சந்தித்து… பாச உண்டியலை நிரப்பிய அமுதா, இனி மாதத்திற்கு ஒரு முறை அப்பாவைச் சந்தித்து அதை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டாள்.
போகும் முன், அப்பாவின் முன் நின்றாள். “அமுதா” என அதிபன் ஆரம்பிக்கும் போதே, ‘முடியாதுப்பா’ என்பது போல் மறுத்து தலையசைத்து தன் முடிவைச் சொன்னாள்.
ஆணித்தரமான முடிவு என்று சொல்வார்களே அதுபோல தலையசைப்பு அது! சத்தம் வராமல் கண்ணீர் வடித்தாள். அதிபன் கண்களிலும் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
“ப்பா ப்ளீஸ்… நான் உங்க கூடவே இருக்கேனே. அவங்க மட்டும் போகட்டுமே” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.
இதற்கு முன்னுமே அமுதா, அவள் அப்பாவைப் பிரிந்து இருந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இப்படி கெஞ்சிக் கொண்டு நிற்கவில்லை. ஏனென்றால் அம்மாவுடன்தானே இருக்கிறோம்… அம்மா வீட்டில்தானே இருக்கிறோம்… என்ற உணர்வு.
ஆனால் இன்று நிலைமை வேறு! ஏதோ ஒரு தயக்கம் அவளுள்! ஏதோ ஒரு கோபம் அவளுள்! ஏதோ ஒரு ஏக்கம் அவளுள்! ஆதலால் இப்படி!!
“அமுதா…”
“முடியாது ப்பா. நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்ற ஒற்றைப் புள்ளியில் கால் கடுக்க நின்றாள்.
“அமுதா… அப்பா சொல்றதைக் கேளு” என்று தொடங்கும் போதே, அவரது இடுப்பை இரு கைகளால் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“நீ கொஞ்ச நாள் அம்மாகிட்ட இரு. அப்பாக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வந்து, அப்பா அமுதாவைக் கூட்டிட்டு வந்துருவேன்”
“நீங்க பொய் சொல்றீங்க-ப்பா” என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.
“அப்பா உன்கிட்ட பொய் சொல்வேனா?”
“நிஜமா கூட்டிட்டு வந்திருவீங்களா?” என்றவள் கண்களில், ‘எப்ப-பா அந்த நாள் வரும்?’ என்ற கேள்வி இருந்தது.
“கண்டிப்பா அமுதா! நிறைய பிள்ளைகளோட படிப்பு விஷயமா… அப்பாக்கு ஒரு வேலை”
‘புரியலையே ப்பா’ என்கின்றது போல் பார்த்தாள்.
‘இந்த வயதில் எப்படிப் புரியும்? என்ன புரிய வைக்க முடியும்?’ என தவித்தார். அதிபனின் உள்ளத்தை இலட்சம் ஊசிகள் கொண்டு குத்துவது போல வலி.
“அப்பாவை நம்பு அமுதா. கண்டிப்பா உன்னைக் கூட்டிட்டு வந்திடுவேன்”
மகளைச் சம்மதிக்க வைக்க இன்னும் நிறைய நிறைய பேசினார். கடைசியில் அரைமனதாகத்தான் அப்பாவும் பெண்ணும் பிரிந்தனர்.
‘போகமாட்டேன்’ என்ற மகளை அனுப்புவதில் அதிபனுக்கு சற்றும் உடன்பாடு இல்லை. ஆனால் அவர் இப்படிச் சொல்லக் காரணம் இருந்தது.
அந்த ஊரில் தனியார் பள்ளி தொடங்கும் பிரச்சனையில், இதுவரை இருந்த எதிர்கட்சி உடன்பிறப்பு, அந்த நிலையிலிருந்து ஆளும் கட்சி உடன்பிறப்பு என்று ஆகியிருந்து.
ஊரில் கால்வாசி பேருக்கு தனியார் பள்ளி ஆரம்பிப்பது சம்மதம்! கட்டணம் அவர்களால் கொடுக்க முடிந்ததால் அரசுப் பள்ளியின் தேவை அவர்களுக்கு கிடையாது.
ஆனால் இயலாதவர்கள்! அரசுப் பள்ளி இல்லை என்றால் அதில் படிக்கும் மாணவர்களின் நிலை?? கேள்விக்குறிதான்!
ஊர் மக்களுக்காக ஒரு விடயத்தில் இறங்கியாயிற்று. இனிமேல் முன் வைத்த காலை பின் வைக்க கூடாது என்று நினைத்தார். மேலும் அதிபனுடன் நிறைய இளைஞர்கள் களத்தில் இருந்தனர். அவர்களை அப்படியே விட்டுவிட்டு வர முடியுமா?
மேலும் ஊரின் முக்கால்வாசி மக்கள், அவரை மலை போல் நம்பியிருந்தனர். இதற்காகப் போராட்டம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். அது போன்ற நேரங்களில் யார் அமுதாவைப் பார்த்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தது.
பதிலில்லா கேள்வி!
தன் தாயார் இருந்திருந்தாலாவது அமுதாவை தன்னுடன் வைத்துக் கொள்ள முடிந்திருக்கும் என்று அதிபன் வருந்தினார். அமுதாவைப் பார்த்துக் கொள்ள யாரையாவது நியமித்தால் என்ன என்று தோன்றியது.
ஆனால் தான் பார்த்துக் கொள்ளவே கீதாவிடம் பெரிய வாக்குவாதம் செய்ய வேண்டியிருக்கும்! இதில் வேறு ஒருவர் என்றால் எப்படி? மேலும் விவாகரத்து கிடைத்த போதுகூட… அமுதாவை அதிபன் உரிமை கொண்டாடவில்லை.
காரணம், மகளைப் பிரிந்து கீதாவால் இருக்க முடியாது என்று அதிபனுக்குத் தெரியும். ஆதலால்! ஆனால் இன்று கீதாவின் முடிவை எப்படி ஏற்றுக்கொள்ள என்று தெரியவில்லை!
தந்தை ஸ்தானத்தில் தான் இருக்கும் போது, வேறொருவர் தன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதை அதிபன் சற்றும் விரும்பவில்லை.
இந்தப் பிரச்சினை முடிந்தவுடன், கீதாவுடன் சண்டை போட்டாவது மகளைத் தன்னிடம் அழைத்துக் கொள்ள வேண்டுமென எண்ணிக் கொண்டார்.
சுருக்கமாக அதிபன் இங்கே சூழ்நிலைக் கைதி! இப்படித்தான் ராஜசேகர், கீதா, சரத், அமுதா, ஜெகன் சென்னை வந்தனர்.
சென்னை வந்ததும், கீதா செய்த முதல் வேலை, மகளுக்குத் தன் விருப்பப்படி ‘தாரா’ என்று பெயர் மாற்ற நினைத்தது. ராஜசேகர், ‘இது தப்பு. வேண்டாம்’ என்று கூறினார். ஆனால் கீதா கேட்கவில்லை.
கீதா… ‘தாரா’ என்று பெயர் மாற்ற நினைத்ததற்கு காரணம்… ‘அமுதா’ என்று பெயர் வைத்ததற்கு அதிபன் சொன்ன விளக்கமாகக் கூட இருக்கலாம்.
அதுபோல் சென்னையில் கிடைத்த நட்புகளுக்கு கீதா-ராஜசேகர் அவர்கள் தனிப்பட்ட வாழ்வு பற்றிச் சொன்னதில்லை. இருவரும் மூன்று பிள்ளைகள் கொண்ட தம்பதிகள் என்ற அடையாளத்துடனே வலம் வந்தனர்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை, ராஜசேகர் தாராவைக் கோவை அழைத்துச் செல்லுவார். கோவை வரை விமானத்தில் செல்வார்கள். அதன்பின் கார் பயணம்!
காரிலிருந்து இறங்கியதும், ஓடிச் சென்று காத்திருக்கும் அப்பாவைக் கட்டிக் கொள்ளுவாள். ஓரிரு முறை இப்படிக் கூட்டி வந்தபின்னர் தாராவின் இந்த மகிழ்ச்சியைச் சென்னையில் பார்க்கவில்லை என்பதை ராஜசேகர் உணர ஆரம்பித்தார்.
அதிபன், அமுதா… இருவரும் கோவையிலிருந்து அரசம்பாளையத்திற்கு பேருந்தில் பயணம் செய்வார்கள்.
பேருந்து பயணத்தில்… சுள்ளென அடிக்கும் காலை வெயில்! சரேலென வீசும் மரங்களின் காற்று! சன்னலோர இருக்கை! – அவளின் சந்தோஷ குவியலாய் அப்பா!
சிறகை விரித்துப் பறந்திடும் பறவையின் மகிழ்ச்சியை அமுதா உள்ளத்தில் உணர்வாள். அந்த நாள் வரை சேமித்து வைத்த வார்த்தைகளையெல்லாம், அன்று அப்பாவுடன் பேசிப் பேசியே செலவு செய்வாள்.
அப்பா பேசும் வாக்கியங்களை சென்னை சென்றபின் உதவும் என்று பாச உண்டியலில் போட்டு வைப்பாள்!
“ப்பா… அங்க எல்லாரும் என்னைய தாரான்னு கூப்பிடறாங்க. ஏன்ப்பா?” என்று கேட்டாள்.
அதிபனுக்கும் புரிந்தது. மகளின் பெயரை, கீதா மாற்ற முயற்சிக்கிறார் என! அதிபன் ஆட்சேபனை செய்யலாம். ஆனாலும் அவர் அதை விரும்பவில்லை.
அவரின் அந்த ஒரு நிமிட யோசிப்பிற்குள், ஓராயிரம் முறை ‘ப்பா… ப்பா’ என உச்சரித்திருப்பாள்.
“யார் எப்படிக் கூப்பிட்டா என்ன? அப்பாவுக்கு நீ என்னைக்கும் அமுதாதான்”
“ப்பா” என்றதிலே தெரிந்தது, அதில் அவளுக்கு உடன்பாடு இல்லை என்று!
“விடும்மா. கொஞ்ச நாளைக்குத்தான. அப்புறமா அப்பா உன்னைக் கூட்டிட்டு வந்திடுவேனே?! “
“எப்ப ப்பா அந்த நாள் வரும்?” என்றவள் குரலில் ஏகப்பட்ட ஏக்கங்கள்!
அதிபன் வெளியே சிரித்துச் சமாளித்தார். ஆனால் உள்ளே சித்திரவதையை உணர்ந்தார். நடத்துனர் வந்ததும், பயணச்சீட்டு வாங்கிக் கொண்டார்.
“ப்பா… அந்த டிக்கெட் கொடுங்க” என்று கை நீட்டினாள்.
“எதுக்கும்மா??”
“ஃபர்ஸ்ட் கொடுங்கப்பா” என்று அமுதா அவர் கையிலிருந்த பயணச்சீட்டை வாங்கினாள். ‘எதற்காக?’ என்பது போல் பார்த்தார்.
“இதைப் பத்திரமா வச்சுக்குவேன். உங்க ஞாபகமா…” என்றவள் மறக்காமல் தன் பைக்குள் அதைப் பத்திரப் படுத்தினாள்.
அதிபன் நிலை… என்ன தவம் செய்தேன் யான் இவளை என் மகளென பெற?! என்பதுதான்.
“ப்பா…”
“என்னம்மா?”
“இது, இந்த டைம் மட்டும் கிடையாது. ஒவ்வொரு டயமும், மறக்காம டிக்கெட் கொடுக்கணும். சரியா?” என்று அன்புக் கட்டளையிட்டாள்!
‘சரியென்று’ என்று தலையசைத்தவர், ஊர்ப் பிரச்சினை முடிந்தவுடன், தன் மகளுடன் நிறைய நிமிடங்கள் செலவிட வேண்டும் என ஆசை கொண்டார்.
அன்று ஒருநாள் முழுவதும், தன் அப்பாவுடன் பேசி, சிரித்து, உண்டு… என வாழ்வாள்.
நாள்காட்டியின் மற்றொரு நாலாவது ஞாயிறு…
ஒரு சில நேரம், இப்படி அரசம்பாளையம் வரும் நாளில் அப்பாவின் மார்பில் படுத்துக் கொள்வாள். ஆனால் அக்கணமும் வீணாக்காமல் பேசுவாள்.
“ப்பா, ஸம் டைம்ஸ் நீங்க பக்கத்தில இல்லனா, ரொம்ப டவுனா பீல் பண்றேன் ப்பா” என்றபோது மகளின் பாஷை, பழக்க வழக்கம் மாறுவதை… அதிபன் உணர்ந்தார்.
அவர், அந்த ஒரு நிமிடம் யோசிக்கையில், அவள் ஓராயிரம் முறை ‘ப்பா ப்பா’ என்று அழைத்திருந்தாள்.
எது மாறினாலும், அவளின் இந்த பாசம் மாறவில்லை என்றும் உணர்ந்தார்.
“அப்படித் தோணுச்சுனா… நீயே உனக்கு நம்பிக்கை தர்ற மாதிரி பேசிக்கனும்”
‘ம்ம்ம்’ கொட்டினாள்.
“அப்பாகிட்ட வந்திட்டா, அந்த மாதிரி நினைக்க மாட்ட. சரியா?”
“எப்ப ப்பா அந்த நாள் வரும்??”
“வரும்மா…” என்று அவள் தலை கோத ஆரம்பித்து விடுவார். இந்த ஒருநாளில் வாழ்வதுதான் வாழ்க்கை என நினைக்கும் அளவிற்கு, அப்பாவின் மீது பாசம் வைத்திருந்தாளோ??
நாள்காட்டியின் நாள்கள் அமுதாவின் பதினான்கு வயது வரை இப்படியே பந்தாடப்பட்டன.
நாள்காட்டியின் இன்னுமொரு நாலாவது ஞாயிறு!
அதிபன் அன்றைக்கு மிகவும் சுணக்கமாக தெரிந்தார். மகள் எவ்வளவுதான் பேசினாலும் மனம் அதில் ஒன்றாமல் இருந்தார். அப்பா மனதைத் தெளிவாகப் படித்தவள், “ஏன் ப்பா ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை. நீ பேசும்மா”
“ரியலீ” என்று ஆச்சரியம் காட்டினாள். அதிபன் சிரித்தார்.
“சிரிச்சது போதும் ப்பா. என்னன்னு சொல்லுங்க” என்று சிடுசிடுத்தாள்.
“அம்மாக்காக, உனக்காக… அப்பா நேரம் ஒதுக்கியிருக்கனும். இல்லயா?”
“அப்படியெல்லாம் இல்லைப்பா. பட் ஸடனா ஏன் இப்படி யோசிக்கிறீங்க?”
“எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வந்திருக்காதுல… அதான்”
“ப்பா… என்னாச்சு ப்பா?”
“அம்மா நிறைய கஷ்டப்பட்டாங்களோனு தோணுது”
அமைதியாக இருந்தாள்.
“நீயும் அம்மாவைக் கஷ்டப்படுத்திடாத” என்று வேண்டுகோள் வைத்தார்.
“இதை ஏன் இப்ப யோசிக்கணும்?” என்று புரியாமல் கேட்டாள்.
“அது வந்து…” என்று தயங்கினார்.
“சும்மா சொல்லுங்கப்பா…”
“தேவான்னு ஒரு பையன். நம்ம ஊர் பையன்தான். அப்பாகூட இந்த ஸ்கூல் விஷயமா போராட்டத்தில இருக்கான். நல்ல பையன். அவனோட எண்ணங்கள் எல்லாம் அப்பாவுக்கு ரொம்பவே பிடிக்குது. இப்பெல்லாம் அப்பா… அவன்கூட நிறைய நேரம் பேசிக்கிட்டு இருக்கேன்”
சிறு வயதில் எப்படியோ தெரியாது. ஆனால் இந்த வயதில் அவளுக்கு அப்பா செய்யும் சேவைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால் அப்படிப்பட்டவர் ஒருவனைப் புகழ்கிறார் என்றால்… அவன் எத்தகையவன் என்ற எண்ணம் முதன் முதலாக அவளுக்குள் உருவானது.
“அவனுக்கு நான்தான் முன்னுதாரணம்னு சொல்றான்மா”
“நீங்க நிறைய பேருக்கு ரோல் மாடல் ப்பா” என்றாள் பெருமையாக!
அதிபன் மெல்ல புன்னகைத்துவிட்டு, “அவனுக்கு அம்மா, அப்பா கிடையாது. அப்படிப்பட்ட பையனுக்குத் தப்பா வழி காட்றனோன்னு தோணுது” என்றார்.
“நீங்களா? சான்ஸே இல்லைப்பா” என்று அடித்துச் சொன்னாள்.
“இல்லம்மா. அன்னைக்கு ஒரு நாள் பேசிறப்ப, எதிர்காலத் திட்டம் என்னன்னு கேட்டேன்?”
“என்ன சொன்னான்?”
“மரியாதை கொடுத்து பேசும்மா. இந்த வயசிலயே இப்படியொரு சிந்தனை இருக்கிற பையன். மரியாதை கொடுக்கனும்” என்றார் கண்டிப்புடன்!
“என்ன ஏஜ் ப்பா?”
“ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் போகப்போறான்”
“ஓ! ஸாரி ப்பா. சரி, என்ன சொன்னாங்க?” என்று திருத்திக் கொண்டாள்.
“தேவைப் படுறவங்களுக்குத் தேடித் தேடி உதவி செய்யனும். இந்த மாதிரி பிரச்சனை வந்தா… அதுக்காக முதல் ஆளா குரல் கொடுக்கணும்”
“ப்பா, இது நல்ல விஷயம்தான??”
“நல்ல விஷயம்தான். ஆனா கல்யாணம் முடிக்க மாட்டேன்னு சொல்றான்”
“ஏன் ப்பா?”
“கல்யாணம் பண்ணிக்கிட்டா… குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கனும்… சேர்த்து வைக்கனும். அது சரி வராதுன்னு நினைக்கிறான்” என்றதும், அமுதா சிரித்து விட்டாள்.
“எதுக்கும்மா சிரிக்கிற?”
“இது அவங்க டெசிஷன். இதுக்கு நீங்க எப்படி காரணமா இருக்க முடியும்?”
“இல்லம்மா. அப்பாகூட, அம்மா சண்டை போடறதைப் பத்தி, ஊர்ல எல்லாரும் பேசுவாங்க. அப்பாவுக்கும் அது தெரியும்”
“அதை நினைச்சு பீல் பண்றீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“ச்சே ச்சே! இந்தப் பையன் அதையெல்லாம் கேட்டுட்டுத்தான் இப்படியொரு முடிவு எடுத்திருப்பான்னு தோணுது”
“நீங்களா ஏதாவது நினைக்காதீங்கப்பா” என்று சமாதானம் கூறினாள்.
“இல்லம்மா. அவன் பேச்சிலருந்தே தெரியுது. கல்யாணம் பண்ணா தன்னால யாருக்கும் உதவ முடியாதுன்னு நினைக்கிறான்”
“ஓ!”
“அதையும் மீறி உதவி செஞ்சா, அந்தக் கல்யாண வாழ்க்கை கேள்விக்குறியா மாறிடுமோன்னு பயப்பிடறான்” என்று கவலைப்பட்டார்.
“வொரி பண்ணாதீங்க ப்பா. சும்மா சொல்லுவாங்களா இருக்கும்”
“இல்லைம்மா. ரொம்பத் தெளிவான பையன். ஸ்கூல் விஷயத்தில, அவன் பேசுறதைக் கேட்டா… நீ இப்படிச் சொல்ல மாட்ட”
இந்த இடத்தில், தன் பாசத்துக்குரியவர் பாராட்டிப் பேசுபவனால், அவளுள் ஒரு பாதிப்பு வந்தது.
“அவனுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும்”
“ப்பா, என்னை விடவா??” என்று கேட்ட விதத்தில் பொறாமை இருந்தது.
எனினும் இந்த இடத்தில்… அப்பாவை பிடிக்கும் ஒருவன் மேல், அவளுக்கு லேசான பிடிப்பு வந்தது.
நன்றாகச் சிரித்துவிட்டு, “யாராவது அப்பாவை எதும் சொல்லிட்டா அவனுக்கு அப்படியொரு கோபம் வருது” என்றார்.
இந்த இடத்தில்… அன்பேயில்லாமல் அம்மா, அப்பாமீது கோபப்படுவதைப் பார்த்து வளர்ந்தவளுக்கு, அப்பாவிற்காக மற்றவர்கள் மீது கோபப்படுபவன் மேல் கிஞ்சித்து அன்பு வந்தது.
“பட்டு பட்டுன்னு பேசறான். கொஞ்சம்கூட பொறுமை இல்ல. கோபம் நிறைய வருது”
அமுதா சிரித்துக் கொண்டே, “ப்பா, நீங்க எதும் அட்வைஸ் பண்ணீங்களா?” என்றாள்.
“இப்பவே இது மாதிரி முடிவெல்லாம் எடுக்காதன்னு சொல்லிருக்கேன். பார்க்கலாம் “
“ம்ம்ம்” என்று யோசித்தவள், “என்ன பேர் சொன்னீங்க? மறந்திடுச்சு ப்பா” என்று கேட்டாள்.
“தேவா”
இனி மறந்து போக மாட்டாள். ஏனெனில் அந்தப் பெயர் மனதின் ஓரத்தில் எழுதி வைத்துக் கொண்டாள்.
அதன்பின்னும் நிறைய விடயங்கள் இருவரும் பேசினார்கள். இதுதான் தேவாவைப் பற்றி அமுதாவிற்கு(தாரா) தெரிய வந்த தருணம்.
நாள்காட்டியின் சில நாலாவது ஞாயிறுகளில்!
ஒவ்வொரு முறை வரும் போதும், அதிபன் தேவாவைப் பற்றி நிறைய சொல்ல ஆரம்பித்தார். தேவாவின் எண்ணங்கள் பற்றிச் சிலாகித்துச் சொல்லுவார். அந்தச் சிலாகிப்பு, அவளின் சிந்தைக்குள் சென்றது.
மேலும் மேலும் தேவா பற்றி பேசப் பேச அவனின் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. அந்த ஈர்ப்பே, அதிபனிடம் தேவாவைப் பற்றிய விடயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தூண்டியது.
தெரிந்தும் கொண்டாள்!
மேலும் ஒரு முறை அரசம்பாளையம் வரும் பொழுது, வீட்டின் முன் கூடிய கூட்டத்தில் ‘தேவா யார்?’ என்று அப்பாவிடம் கேட்டு, அவனைப் பார்த்துக் கொண்டாள்.
அவனுடன் ஒரு வார்த்தைக் கூடப் பேசியதில்லை. ஆனால் பார்த்ததும் அவன் உருவம்… அவள் மனதில் அழுத்தமாக பதிந்து போனது. இந்த இடத்தில் அவன் மேலிருந்த ஈர்ப்பு, அடுத்த கட்டமான விருப்பம் என்ற நிலையை அடைந்தது.
அடுத்தடுத்து அவள் வருகையில்… சில முறை தேவாவைப் பார்த்திருக்கிறாள். பலமுறை தேவா பற்றிப் பேசியிருக்கிறாள். அவன் மேலிருந்த ஒரு விருப்பம் நேசமாக மாறியது.
சுருக்கமாக, அவளுக்குத் தேவாவைப் பிடிக்க ஆரம்பித்தது.
நாள்காட்டியின் ஒரு நாலாவது ஞாயிறு, அதிபனுடன் பேசும் பொழுது!
“ஏன் ப்பா, அந்தப் பையன்… தேவா மாறிட்டாங்களா?”
“இல்லம்மா… இன்னுமே அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்கான். கஷ்டமா இருக்கும். தனியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்பா இப்போ இருக்கேன் பாரு”
“நீங்க ஏன் ப்பா தனியா இருக்கனும்? நான்தான் உங்ககூட வந்து இருக்க போறேன்ல”
“அதுவும் சரிதான்… ” என்றார் சிரித்துக் கொண்டே!
“எப்ப ப்பா அந்த நாள் வரும்?” என்றாள் எக்கச்சக்க ஏக்கங்களுடன்!
அவரின் பதில் அமைதிதான்.
“இன்னும் அந்தப் பிராப்ளம் சால்வ் ஆகலையா ப்பா?”
‘இல்லை’ என்று தலையசைத்தார். மேலும், “தேவா தனியா இருந்து கஷ்டப் படுவானோன்னு கவலையா இருக்கு-ம்மா” என்றார்.
அவளிடம் அமைதி.
“இப்போவே அவன் செய்ற விஷயத்துக்கு வீட்ல பெரிசா சப்போர்ட் இல்லை. கண்டிப்பா மாற மாட்டான். இப்படித்தான் இருப்பான் எதிர்காலத்தில என்ன செய்ய போறானோ?”
அவளிடம் இன்னும் அமைதிதான்.
“ஆணோ, பெண்ணோ… இந்த மாதிரி சமுதாயத்துக்கு நல்லது செய்யனும்னு எண்ணம் இருக்கிறவங்களுக்கு துணையா வீட்ல யாராவது இருக்கனும்மா”
“ப்பா…”
“சொல்லும்மா”
“நான் வேணா தேவாக்கு சப்போர்ட்டா இருக்கட்டா?” என்று அவளின் அமைதி போய் அடிமனதின் ஆசை வெளியே வந்தது.
“என்ன சொல்லறம்மா?” என்றார் அதிர்ச்சியுடன்!
அப்பாவிடம், “நான் தேவாவைப் பார்த்துக்கிறேன்” என்று தன் ஆசையைப் பிரகடனப்படுத்தினாள்.
“இந்த வயசுல இப்படிப் பேசக் கூடாது” என்று கோபப்பட்டார்.
“நான் இப்ப சொல்லலை ப்பா. வளர்ந்து… பெரியவளா ஆனதும்… தேவாவை நான் பார்த்துக்கிறேன். அவங்களைத் தனியா இருக்க விடமாட்டேன்”
“இது படிக்கிற வயசு. இப்படிப் பேசக் கூடாது” என்றார் மீண்டும் கோபத்துடன்.
“இப்ப போய் தேவா முன்னாடி நிக்க மாட்டேன் பா. படிச்சி, லைஃப்ல செட்டில் ஆனதுக்கப்புறம்… தேவாகிட்ட போய் சொல்லுவேன்” என்றாள் உறுதியாக!
அதிபனுக்கு என்ன பேசவென்று தெரியவில்லை.
“நீங்கதானப்பா சொன்னீங்க, யாராவது சப்போர்ட் பண்ணனும்னு. அந்த சப்போர்ட்ட நான் கொடுக்கிறேன் ப்பா”
அதிபன் பேச முடியாமல் அமைதியாக நின்றார்.
“அவங்ககிட்ட எதையும் நான் எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன். அவங்க என்ன ஹெல்ப் பண்ணாலும், நான் நோ சொல்ல மாட்டேன். அதான அவங்களுக்கு வேணும்…” என்று தொடரப் போனவளை, “போதும் நிறுத்து” என்று அதட்டி, அவள் பேச்சை நிறுத்தினார்.
ஆனால் அவள் மனம் நிற்காமல் தேவாவின் பின்னேதான் ஓட ஆரம்பித்தது. அதன்பின்னும் ஓரிரு முறை தேவாவின் எண்ணத்திற்கு, உறுதுணையாக இருப்பேன் எனச் சொன்னாள்.
அதிபனுக்கும் புரிந்தது. தான் விரிவாக தேவா பற்றிப் பேசியதால், தன் மகளுக்கு விருப்பம் வந்திருக்கிறது என்று!
அதனால் அதிபன், அதன்பின் தேவா பற்றிப் பேசவில்லை. அவர் பேசவில்லை என்றாலும், தேவா மீதிருந்த பிடித்தம் அவளுக்குப் போகவில்லை.
நாள்காட்டியின் நாள்கள், பாச உண்டியலில் பயணச்சீட்டு நிரப்புதல் என்ற ரீதியில் பயணம் செய்தன.
இந்த நிலையில் சரத், ஜெகன், தாரா மூன்று பேருக்கும் விடுமுறை என்பதால், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலா முடித்து… தோராயமாக இருபது நாட்கள் கழித்து சென்னைக்கு வந்தனர்.
வந்தடைந்த பின்தான் கீதாவிற்குத் தெரிந்தது… ஆறு நாட்களுக்கு முன்னாக அரசம்பாளையத்திலுள்ள உறவினரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது என்று.
கவனிக்க தவறியிருந்தார்! திரும்ப அவருக்கு அழைத்தார். உறவினர் கூறிய விடயத்தைக் கேட்ட கீதாவிற்கு எப்படி எதிர்வினை புரிய என தெரியவில்லை.
சட்டென அழைப்பைத் துண்டித்து ராஜசேகரிடம் சென்று கூறினார்.
“நானும் தாராவும் போயிட்டு வர்றோம்” என்று கிளம்ப ஆரம்பித்தார்.
“நானும் வரவா கீதா?”
“வேண்டாம் ராஜ். அந்த ஊருக்குள்ள… ப்ச் வேண்டாம். நல்லா இருக்காது” என்று மறுத்துவிட்டு தாராவைக் கூட்டிக்கொண்டு கிளம்பினார்.
அரசம்பாளையம் வரும் வரைக்கும் என்ன நடக்கிறது என்று தாராவிற்குப் புரியவில்லை. அம்மா ஏன் கூட வருகிறார்கள் என்று விளங்கவில்லை. ஆனால் மனம் ஏதோ பாரமேற்றிய பறவை போல் உணர்ந்தது.
ஊருக்கு வந்து இறங்கியதும் தெரிந்துவிட்டது. அதிபன் கோயம்புத்தூரில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்று! அதுவும் ஏழு நாட்கள் முன்பே!!
கீதா, அதிபன் வீட்டில் வந்து சிறிதுநேரம் இருந்தார். அதிபன் நலன் விரும்பிகள் சிலரிடம் பேசினார். ஆனால் கீதாவிடம் யாரும் பெரிதாகப் பேசவில்லை.
இருந்தும், எப்படி நடந்தது? எங்கே நடந்தது? என்ற விவரங்கள் கீதா கேட்டுக் கொண்டார். ‘இப்படியொரு நல்லவருக்கு, ஏன் இப்படி ஒரு மரணம்?’ என்ற வருத்தம் தவிர கீதாவிற்கு வேறு ஒரு வருத்தமும் இல்லை.
அடுத்த நாளே தாராவை அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னை வந்தடைந்தார். அன்று வீட்டில் ராஜசேகர், கீதா ஒருபுறமும், சரத் ஜெகன் மறுபுறமும்… வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
தாரா?
அதே வரவேற்பறை ஓரத்தில் பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.
பேசிக் கொண்டிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்தாள். இனி எப்பவும் இவர்கள் கூடத்தானா? அப்பா, தன்னைக் கூப்பிட்டுக் கொள்ளும் நாள் இனி வரவே வராதா? பாச உண்டியலை,இனி பயணச்சீட்டு கொண்டு நிரப்ப முடியாதா?
பத்திரப்படுத்திய பயணச்சீட்டுகள் மட்டும்தான் இனி தனக்குத் துணையா? ‘எப்ப ப்பா அந்த நாள் வரும்?’ என்ற கேள்விக்கு இனி வேலை இல்லையா? உயிர் பிரியும் வேளையில், அவரின் உயிரான தன்னைத் தேடியிருப்பாரே அப்பா? எப்படி இது நடந்தது?
இத்தனை கேள்விகள் கேட்டுக் கொண்டே… பாச உண்டியலை உடையாமல் பிடித்துக் கொண்டு தாரா உடைந்து கொண்டிருந்தாள்.
அக்கணம் கீதா பேசுவதைக் கேட்டவள்… “எப்படி உங்களால இப்படிப் பேச முடியுது?” என்று கத்த ஆரம்பித்தாள்.

