Kathambari Novels
நிமிர்ந்து பார்த்த தாரா, “நீதானா…” என்று அசட்டையாகச் சொன்னாள்.
விறுவிறுவென தாரா அருகில் வந்தவன் அவள் கைப்பிடித்து இழுத்தபடியே, “அக்கா வா என்கூட” என்றதும், “எங்க ஜெகன்?” என்றாள் சலிப்புடன்!
“எமர்ஜென்சி பில்டிங்”
“இப்போ எதுக்கு? எனக்கு ஒரு ஐவிஎஃப் கேஸ் இருக்கு”
“அக்கா ப்ளீஸ்… ப்ளீஸ். ஒரு ப்ராப்ளம்”
“ஜெகன்… அங்க இருக்க டாக்டர்ஸ்கிட்ட கேளு”
“தெரியும் தாரா. பட் அவங்க டெசிஷன் எடுக்க மாட்டிக்காங்க”
‘தாராவா?’ என்பது போல் அவள் புருவத்தை உயர்த்தவும், “ஸாரி… ஸாரிக்கா. ப்ளீஸ் வா” என்று அவள் நாடியைப் பிடித்துக் கெஞ்ச ஆரம்பித்தான்.
அதற்குமேல் தாராவால் மறுக்க இயலவில்லை. மறுக்கவும் மாட்டாள். “போதும், போகலாம்” என்று ஜெகனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
வெளியே நின்ற செவிலியரைப் பார்த்து, “சிஸ்டர். அந்த ஐவிஎஃப் கேஸ டென் மினிட்ஸ் வெயிட் பண்ண சொல்லுங்க. இதோ வந்துடறேன்” என்று ஜெகனுடன் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் நோக்கிச் சென்றாள்.
அவசர சிகிச்சை பிரிவு செல்லும் முன்னர் ஜெகன் பற்றி… மருத்துவன்தான். ஆனால் வெறும் எம்பிபிஎஸ் மட்டும் கையில் வைத்திருக்கிறான்.
தாராமீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பவன். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி யாரேனும் தாராவை கலங்க வைத்தாலோ… கவலைப்பட வைத்தாலோ தாங்கமாட்டான்.
மேலும் வீட்டின் கடைசி பிள்ளை என்பதால் வீட்டு உறுப்பினர்களிடம் சலுகை கிடைக்கும். தாராவிடம் சற்று அதிகமாகவே கிடைக்கும்.
எதற்கெடுத்தாலும் ‘அக்கா, அக்கா’ என அவளைச் சுற்றி வருபவன். தாராவின் தம்பி என்றும், இந்த மருத்துவமனையின் உரிமையாளர் மகன் என்றும் இவன் அறியப்படுபவன்.
இதுவே ஜெகன்!!
ஐந்தாவது தளத்திலிருந்து மின்தூக்கி வழி மூன்றாவது தளத்திற்கு சென்றனர். அங்கிருந்து அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்குச் செல்ல பாலம் உண்டு. இது மருத்துவர்கள்… நோயாளிகள் மட்டும் உபயோகிக்கும் வழியாகும்.
அவசர சிகிச்சைப் பிரிவின் மூன்றாவது தளத்திலிருந்து இறங்கி, இருவரும் தரைத் தளத்திற்கு வந்தனர்.
“ப்ராப்ளம் எங்க ஜெகன்?”
“ரிசப்ஷன் பக்கத்தில க்கா”
இரண்டு பேரும் வேகமாக நடந்து வரவேற்பு பகுதிக்குச் சென்றனர். அருகில் செல்லும் முன்னரே… அங்கே தெரிந்த கூட்டத்தைப் பார்த்து, “என்ன ஜெகன் இதெல்லாம்?” என்று தாரா கடிந்துகொண்டாள்.
“அதான் கா உன்னய கூப்பிட்டேன்”
ஒற்றை விரலால் நெற்றியில் தடவியபடியே கூட்டத்தை நோக்கிச் சென்றாள். அங்கே கூடி நின்றவர்கள்… இரண்டு மருத்துவர்கள்! இரண்டு வார்டு பாய்ஸ்! நான்கைந்து செவிலியர்கள்!
இன்னும் இருவர்! ஆனால் அவர்கள் மருத்துவர்கள் போல தெரியவும் இல்லை. மருத்துவ உடையிலும் இல்லை. வெளி ஆட்கள் போல! இந்த இரண்டு பேரும் தாராவிற்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தனர்.
அவள் வருவதைப் பார்த்த ஒரு மருத்துவர், “தாரா மேம் வர்றாங்க” என்றார்.
அதுவரை இருந்த பேச்சுகள் எல்லாம் நின்று, அனைவரும் அவள் வருவதைப் பார்த்தனர். அவர்களுடன் சேர்ந்து, அந்த இரண்டு வெளி ஆட்களும் திரும்பிப் பார்த்தார்கள்.
திரும்பியவர்களைப் பார்த்ததும், தாராவிற்குள் ஒரு கேள்விதான் எழுந்தது. அது ‘தேவா… இவன் எப்படி இங்கே?’ என்பதே!
ஆம்! அந்த இருவரில் ஒருவன் தேவா.
அங்கே நின்ற அத்தனை பேரையும் தவிர்த்துவிட்டு, தேவா முன்னே சென்று நின்றாள். கனவிலும் தாரா நினைக்கவில்லை, இப்படியொரு சூழ்நிலையில் தேவாவைச் சந்திக்க நேரும் என்று!
தேவாவை ஒரு நொடிக்கும் குறைவான நேரமே தாரா பார்த்திருந்தாள்!
அதற்குள், “மேம்” என்று ஒரு மருத்துவர் அழைப்பில் சுயம் உணர்ந்து, தன்னை அழைத்த மருத்துவரை நோக்கி திரும்பும் போதுதான் தலையிலிருந்து ரத்தம் கொட்டிய நிலையில் ஸ்ட்ரெச்சரில் இருந்தவரைப் பார்த்தாள்.
அதற்கு அடுத்த நொடி அவள் அங்கே ஒரு மருத்துவர். ஒட்டுமொத்த கவனமும் வலியில் முணங்கிக் கொண்டிருப்பவர் மேல் வந்துவிட்டது. “என்னாச்சு?” என தேவாவைப் பார்த்துக் கேட்டவள், ஸ்ட்ரெச்சரின் பக்கம் சென்று நின்றாள்.
முதல்முறை! இதுதான் முதல்முறை!! தாரா… தேவாவிடம் பேசியிருக்கிறாள்! அதாவது ஒரு கேள்வி கேட்டிருக்கிறாள்!!
தாரா கேட்ட ஒரு கேள்விக்கு தேவா பதில் சொல்லப் போகிறான். அவன் பேசப் போவதை, இத்தனை அருகிலிருந்து கேட்கப் போகிறாள். அவனும் பேசினான். அதாவது பதில் சொன்னான்.
அந்தப் பதில், “இன்னும் நீங்க யாரெல்லாம் கூப்பிடணுமோ… அவங்களையும் கூப்பிட்டிருங்களேன்” என்று!!
பதில் சொன்னவனைப் பார்த்து திருதிருவென்று முழித்தாள். முதன் முதலாக அவளிடம் பேசுகிறான். ஆனால் அவன் பேச்சு அவளுக்குப் புரியவில்லை.
“ஐ டிட்டின்ட் கெட் இட்” என்றாள் மிக மெல்லிய குரலில்.
“ப்ச்” என்று சலித்துக்கொண்டு, “என்ன நடந்ததுனு, ஃபர்ஸ்ட் வார்டு பாய்கிட்ட சொன்னேன்! அப்புறம் இங்கிருந்த நர்ஸ்கிட்ட சொன்னேன்! அப்புறமா இந்த டாக்டர்ஸ்கிட்ட!” என்று அங்கே நின்ற மருத்துவர்களைக் காட்டினான்.
தாராவின் பார்வை அந்த மருத்துவர்கள் மேல் திரும்பியது.
“அப்புறம் இவர் வந்தாரு” என்று ஜெகனைக் காட்டியவன், “ஏதாவது டெசிஷன் எடுப்பாருன்னு நினைச்சித்தான் இவர்கிட்ட சொன்னேன். ஆனா இவர் போய் உங்களைக் கூட்டிட்டு வந்திருக்கார்” என்றான்.
தாரா ஜெகனைப் பார்த்தாள்.
மேலும் தேவா, “இப்போ நீங்க வந்திருக்கீங்க! உங்ககிட்ட சொன்னா… நீங்க ஏதாவது டெசிஷன் எடுப்பீங்களா?? இல்லை நீங்களும் போய் யாரையாவது கூட்டிட்டு வருவீங்களா??” என்று கேள்வியாக நிறுத்தினான்.
தாராவிற்குப் புரிந்தது.
“உங்ககிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க நேரத்தில, வேற ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிருக்கலாம். பக்கத்தில இருக்கேன்னுதான இங்க தூக்கிட்டு வந்தேன்?!”
‘தூக்கி வந்தேன்’ என்ற வார்த்தையில், அவனை ஆராயும் பார்வை பார்த்தாள். அவன் சட்டையில் அங்கங்கே ரத்த கறைகள். இரண்டு மணிநேரத்துக்கு முன் நன்றாகத்தானே பார்த்தேன். அதற்குள் எப்படி இப்படி என்று யோசித்தாள்.
அவள் யோசிக்கும் போதே, “எங்ககிட்ட பேசின மாதிரி இவங்ககிட்டயும் பேச வேண்டாம்” என்று தாரா, ஜெகனைக் கைகாட்டி, அங்கு நின்ற மருத்துவர் கோபப்பட்டார்.
“ஏன்? எதுக்கு?” என்று தேவாவும் கோபத்தைக் காட்டினான்.
“ஏன்னா? அவங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிட்டல் ஓனர் பசங்க”
“யாரா இருந்தா எனக்கென்ன?” என்று சர்வ சாதாரணமாக சொன்னவன், “ஒரு உயிரைக் காப்பாத்த… இவ்வளவு கெஞ்சணுமா?” என்று முணுமுணுத்தான்
சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில் இதுபோல் வாக்குவாதம் தாராவிற்குப் பிடிக்கவில்லை. அதனால், “ப்ளீஸ்… கொஞ்சம் அமைதியா இருங்களேன்” என பொதுவாகச் சொன்னாள்.
அதன்பின் யாரும் பேசவில்லை.
“சிஸ்டர் க்ளோவ்ஸ்” என்று தாரா கேட்டவுடனே… செவிலியர் அவள் கேட்டதை எடுக்கச் சென்றார். தாரா… ஸ்ட்ரெச்சரில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பவரைக் கவனமாக பார்த்தாள். கொஞ்சம் ஆபத்துதான் என்று தெரிந்தது.
“இது எமர்ஜன்சி கேஸ். ஏன் டிலே பண்ணீங்க” என்று கோபத்துடன் மருத்துவர்களிடம் கேட்டாள்.
“மேம்… இது ஆக்சிடென்ட் கேஸ்”
“ஸோ வாட்”
“மேம்… இது போலீஸ் கேஸாகும்”
“தெரியும்… இட்ஸ் ஜஸ்ட் எம்எல்சி (MLC-medicolegal case). ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிட்டு, போலீஸூக்கு இன்ஃபார்ம் பண்ணியிருக்கலாமே?” என்கையில், செவிலியர் கையுறை எடுத்து வந்திருந்தார். அதை வாங்கி மாட்டிக்கொண்டு பரிசோதிக்க ஆரம்பித்தாள்.
“மேம்” என்று மீண்டும் மருத்துவர் அழைத்தார்.
“வாட்?” என்றவளின் கவனம் அடிபட்டவரிடமே இருந்தது.
“அது எங்களுக்கும் தெரியும் மேம். ஆனா சரத் சார்கிட்ட இன்ஃபார்ம் பண்ணி, அதுக்கப்புறம்…” என்று மிகவும் தயங்கித் தங்கிச் சொன்னார்.
“இன்ஃபார்ம் பண்ண வேண்டியதான”
“இல்லை மேம். சார் கொஞ்சம் பிஸி போல… ஃபோன் அட்டென் பண்ணல”
பதிலேதும் சொல்லாமல், அடிபட்டவரைப் பரிசோதித்தவள், ‘ஸ்கல் லைட்டா ஓபன் ஆகியிருக்கு’ என்று தனக்குள் பேசியவள், “நியூரோ சர்ஜெனுக்கு கால் பண்ணு… ஜெகன்” என்றாள்.
“பர்டிக்குலரா நேம் சொல்லு க்கா”
“ப்ச் யாருக்காவது…” என்று சொன்னவள், “ஓகே கால் டாக்டர் ஷீலா” என்றாள்.
ஜெகன் அழைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரம், “மேம்… சரத் சாருக்கு தெரிஞ்சி… ஏன் இன்ஃபார்ம் பண்ணலைன்னு கேட்டா??” என்று மீண்டும் அந்த மருத்துவர் கேட்டார்.
“அப்படி அவர் கேட்கணும்னா என்கிட்ட வந்து கேட்க சொல்லுங்க” என்றவள் குரலில் சற்று எரிச்சல் தெரிந்தது. அதன்பின் யாரும் பேசவில்லை. அதுவரை அவள் பேசியதை தேவாவும் பாபியும் பார்த்துக் கொண்டுதான் நின்றனர்.
“பாய்ஸ்” என்று அழைத்தாள். முழுதும் வெள்ளைச் சீருடையில் இருந்த இருவர் வந்து நின்றதுமே, “ம், டேக் ஹிம் டு லெவன்த் பிளோர்” என்று அடிபட்டவரைக் காட்டினாள்.
“எஸ் மேம்” என்று ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.
இதற்கிடையே ஷீலா அழைப்பில் வந்திருந்தார். ஜெகன் எதுவும் பேசாமல், “அக்கா” என்று அலைபேசியைத் தாராவிடம் கொடுத்தான்.
உரையாடல் அலைபேசி அலைவரிசையில்…
ஜெகனின் செல்பேசி இலக்கங்கள் தெரிந்ததால், “சொல்லு ஜெகன்” என்று ஷீலா சாவகாசமாகப் பேச்சை ஆரம்பித்தார்.
“தாரா ஹியர்”
“சொல்லுங்க தாரா” என்றவரின் குரலில், சடுதியில் மாற்றம் வந்திருந்தது.
அந்த மருத்துவமனையில்… தாராவைவிட வயதில் பெரியவர்கள் அவளைப் பேர் சொல்லி, மரியாதை விகுதியோடு அழைப்பார்கள்.
“ஒரு எமர்ஜென்சி கேஸ். வித்தவுட் பர்தர் டிலே, ஸ்டார்ட் தே டிரீட்மென்ட். அன்ட் இட்ஸ் ஆன் எம்எல்சி. அட்மிட் பண்ணி பார்மாலிட்டிஸ் பார்த்துக்கோங்க”
“ஓகே… பட் சரத்கிட்ட இன்ஃபார்ம் பண்ணியாச்சா” என்று அவரும் கேட்டார்.
இன்னும் தாமதம் கூடாது என்ற எண்ணத்தில், “ஜஸ்ட் பாலோவ் வாட் ஐ செட்” என்று கொஞ்சம் கட்டளைக்கான தொனியில் பேசினாள்.
“ஷூர் ஷூர்” என்று ஷீலா அழைப்பைத் துண்டித்திருந்தார்.
ஜெகனிடம் அலைபேசியைத் தந்துவிட்டு, அங்கே நின்றிருந்தவர்கள் பக்கம் திரும்பி, “கேரி ஆன் வித் யூவர் வொர்க்” என்றாள். ‘ஓகே மேம்’ என்று அவர்கள் சென்றுவிட்டார்கள்.
“ஜெகன் நீயும் போ” என்றாள். சரியென அவனும் அதே தளத்திலிருந்த அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
அடுத்ததாக அங்கே நின்று கொண்டிருந்த தேவாவைப் பார்த்தாள். ஒரு நொடி கூட முழுமையாக முடிந்திருக்காது, “தேங்க்ஸ்” என்றான் தேவா நண்பன்.
பார்வையை தேவா நண்பன் பக்கம் திருப்பினாள். ஆனால் அவள் இதயமோ தேவாவைப் பார்த்துக் கொண்டிருந்தது. “இட்ஸ் ஓகே… பட் எப்படி நடந்தது?” என்று கேட்டாள்.
“ஸ்பீட் பிரேக்கர் இருந்ததை பார்க்காம, பைக்ல ஓவர் ஸ்பீட்ல வந்திருக்காரு. அதான் ஆக்சிடென்ட். அவர் ஹெல்மெட் போடலை. ஸோ இவ்வளவு மோசமா அடிபட்டிருக்கு. நாங்க பக்கத்தில டீக்கடையில இருந்தோம். அதான் ஹெல்ப் பண்ணலாமேன்னு…”
“ஓ!”
“நான் பாபி, வக்கீல்” என்று தேவாவின் நண்பன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ம்ம்” என்றுவிட்டு, தேவா ஏதும் பேசுவானா என்று மீண்டும் அவனைப் பார்த்தாள். ஆனால் அவன் பேசவில்லை.
“அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சு. வந்திருவாங்க. ம்… நாங்களும் இருக்கணும?” என்று மீண்டும் பாபியே கேள்வி கேட்டான்.
தேவாவிடமிருந்து விழிப் பார்வையை வலிய பிரித்தெடுத்து, தாரா பாபியைப் பார்த்தாள். மேலும், “ஒருத்தர் இருந்தா போதும்” என்றும் பதிலளித்தாள்.
“அப்போ பாபி நீ பார்த்துக்கோ. ஷர்ட் எல்லாம் ரத்தமா இருக்கு. ஸோ நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு, தேவா நகர ஆரம்பித்தான்.
தாராவின் கண்கள் தேவாவைப் பின் தொடர்ந்தன. இரண்டு எட்டுகள் எடுத்து வைத்தவன், சட்டென்று திரும்பி நின்று தாராவைப் பார்த்தான். ‘என்ன பேசப் போகிறான்? தேவா ஏதாவது பேசினால்… தானும் பேசலாமே’ என்று ஒருநூறு ஆசைகள் நிரம்பிய பார்வைப் பார்த்தாள்.
“தேங்க்ஸ்” என்று ஒற்றை வார்த்தைச் சொல்லிவிட்டு, தேவா திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
அக்கணத்தில் மழைத் தூரல் நனைக்காத மரத்தடி பூமிப் பரப்பின் ஏமாற்றம் தாராவிற்குள் நிலவியது. தொண்டைக்குள்ளே நிராசைகள் வந்து அடைத்தது. அதைச் சரி செய்து கொள்ள திணறினாள்.
“தேவா, இங்க ரெஸ்ட்ரூம்ல ஷர்ட்ட கொஞ்சம் கிளீன் பண்ணிட்டு போ” என்று பாபி சொன்னதற்கு, ‘சரி’ என்று பெருவிரலை மட்டும் உயர்த்திக் காட்டியபடி தேவா நடந்தான்.
தேவா செல்வதையே விழியசையாமல் தாரா பார்த்துக் கொண்டு நின்றாள்.
“லெவன்த் ஃபுளோர் எப்படி போகணும்?” என்று மீண்டும் பாபி குறுக்கிட்டான்.
கவனம் முழுதும் தேவாமீது இருந்ததால், பாபியின் கேள்வியை தாரா காதில் வாங்கவில்லை.
“எக்ஸ்க்யூஸ் மீ” என்று பாபி சற்று அழுத்தமாக அழைத்தான்.
அதில், “ம்ம்ம்” என்று கேட்டுக்கொண்டே திரும்பினாள்.
“லெவன்த் ஃபுளோர் இப்படியே போகலாமா” என்று தாரா வந்த வழியைக் காட்டினான்.
“இது டாக்டர்ஸ்க்கும், பேஷன்ட்டுக்கும் மட்டும்தான். நீங்க மெயின் பிளாக் என்ட்ரன்ஸ் வழியா லெவன்த் ஃபுளோர் போயிடுங்க”
“ஓ! ஓகே. நீங்களும் டாக்டரா”
“ம்ம். Gynecologist” என்றதும், மற்றொரு முறை நன்றி சொல்லிவிட்டு, பாபியும் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தான்.
இன்னும் தாரா அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
சட்டையில் இருந்த கறையைச் சுத்தம் செய்ய வேண்டி, சற்றுத் தள்ளியிருந்த ஓய்வறைக்குள் தேவா நுழைந்திருந்தான். அவன் வெளியே வரும்போது ஏதும் பேசலாம் என்று நினைத்து… தூரத்தில் தாரா காத்திருந்தாள்.
ஆனால் தேவா வெளியே வரும்போது, ‘நானும் வர்றேன்’ என்று இங்கிருந்து சென்ற பாபி அவனுடன் சேர்ந்து கொண்டான். பாபியுடன் பேசிக் கொண்டே போகும் தேவாவைப் பார்த்தபடி நின்றாள்.
அந்த நடைக்கூடத்தின் பிரம்மாண்டம் அனைத்தையுமே புறந்தள்ளிவிட்டு, தேவா என்ற ஒற்றை மனிதனை மட்டும் தாராவின் விழிகள் பிரத்யேகமாக பார்த்தன.
இதுதான் முதல் சந்திப்பு!
இந்தச் சந்திப்பின் முடிவில் சரியாக பேசக்கூட முடியவில்லை. தன் பெயரைக் கூட அவனிடம் கூற முடியவில்லை. தனியாக சந்தித்து இருந்தாலோ, இல்லை மருத்துவமனை தவிர வேறு இடத்தில் சந்திப்பு நடந்திருந்தாலோ… கொஞ்சம் சங்கோஜமின்றி பேசியிருக்கலாமோ??
இனி அடுத்த சந்திப்பிற்காக நான் காத்திருக்க வேண்டுமா? இப்படியெல்லாம் நினைத்து, தாராவின் மனம் அடர்த்தியான கவலை கொண்டது. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் சென்றுவிட்டாள்.
தேவாவும்… பாபியும் … நடந்து செல்லுகையில் பேசிக் கொண்டே சென்றனர்.
“நீ லெவன்த் ஃபிளோர் போகாமா என்கூட வர்ற??” – தேவா.
“மெயின் பிளாக் வழிதான் போகணுமாம். நல்லவேளை அந்த லேடி டாக்டர் ஒரு டெசிஷன் எடுத்து, டிரீட்மென்ட் நடக்க ஹெல்ப் பண்ணாங்க!”
“ம்ம்ம். பட் இது அவங்க கடமையும் கூட”
“கரெக்ட்தான். அவங்களும் டாக்டர்தான். Gynecologist. ஆனா அவங்க பேரைக் கேட்க மறந்துட்டேன்”
“விடு! டெய்லியா பார்க்கப்போறோம்?! பேர் தெரிஞ்சிக்க! அதான் தேங்க்ஸ் சொல்லியாச்சுல… போதும்” என்று தேவா சாதரணமாகச் சொன்னான்.
இப்படியே பேசிக்கொண்டே இருவரும் நடந்து சென்றனர்.
இவர்கள் விடைபெறும் முன் பாபியைப் பற்றி, தேவா நண்பன். வழக்கறிஞர்.
சமூக நலனிற்காக தேவா செய்யும் விடயங்களாலோ… அவன் பேச்சினாலோ ஏதெனும் வழக்கு பதிவு செய்யப்பட்டால், பாபி தேவாவிற்காக வாதாடுவான்.
தேவாவிற்கு, ‘இதைச் செய்’, ‘இப்படிச் செய்’ என்றெல்லாம் சொல்ல மாட்டான். ஆனால் எப்போதாவது பாபி அப்படிச் சொல்லிவிட்டால்… தேவா அதைத் தட்ட மாட்டான்.
பாபி திருமண ஆகாதவன். தேவாவைவிட வயதில் மூத்தவனும் கூட!
இதுவே பாபி!
*********
திரும்பவும் ஐந்தாவது தளம்! தாரா, காத்திருந்த ஐவிஎஃப் கேஸைப் பார்த்து முடித்தாள். அது முடிந்து வர மதியம் மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் சாப்பிடவில்லை. பசிக்கவும் இல்லை.
மனதில் ராட்டினம் போல, அத்தனை அருகில் தேவாவை சந்தித்த கணங்கள் சுற்றிக் கொண்டு வந்தன. அந்த நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு, சரத் என்பவன் உள்ளே வந்து நின்றான்.
“கொஞ்சம் பேசணும்” என்று தாரா மேசையின் முன் வந்து நின்றான்.
அவசர சிகிச்சை பிரிவில் நடந்தது பற்றி, அங்குள்ள மருத்துவர்கள் சரத்திடம் சொல்லி இருப்பார்கள் என்று தெரியும். அவன் இங்கே வந்து நிற்பான் என்றும் தெரியும்.
ஆதலால் தாரா எவ்வித வியப்புகளும் பதில்களும் தராமல் இருந்தாள்!
“தாரா…” என்று அழுத்தி அழைத்தான்.
“எதுக்கு பேசணும் சரத்” என்று அலுத்துக் கொண்டாள்.
“நீதான சொல்லிருக்க… சரத் வந்தா என்கிட்ட வந்து பேச சொல்லுங்கன்னு”
பதிலேதும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
“தாரா…”
“சரி பேசு”
“எம்எல்சி-ன்னு தெரிஞ்சும் ஏன் அட்மிட் பண்ண?”
“ஏன், அதுல என்ன ப்ராப்ளம்”
“என்ன ப்ராப்ளம்மா?? உனக்கு… ” என்று, இவர்கள் வாக்குவாதம் ஆரம்பிக்கும் போதே அறைக்குள் இருவர் நுழைந்தனர். ஒருவர் வயதானவர். மற்றொருவன் ஜெகன்.
“இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேட்டபடியே அந்தப் பெரியவர் சரத்தின் அருகில் வந்தார்.
“அதான! ரெண்டு வார்த்தை இவளை கேள்வி கேட்டற கூடாதே. எப்படித்தான் கண்டுபிடிச்சு வருவீங்களோ” என்று வந்தவர் மேலயும் கோபப்பட்டான்.
“நான் என்ன கேட்கிறேன். நீ என்ன சொல்ற?” என்று பொறுமையாக கேட்டார்.
“தேவையில்லாம அக்காவ திட்ட வந்திருப்பான் பா” என்று ஜெகன் இடையில் புகுந்து தாராவிற்கு ஆதரவாகப் பேசினான்.
“ஓ! இவளை நான் திட்டப் போறேன்னு தெரிஞ்சிதான்… நீ இவரைக் கூட்டிட்டு வந்திருக்கியா?” என்று ஜெகன் மீதும் பாய்ந்தான் சரத்.
“நீ சும்மா இரு” என்று பெரியவர் ஜெகனைக் கண்டிக்க, “சரிப்பா” என்று அவன் அமைதியானான்.
ஆம்! வந்திருப்பவர் மருத்துவமனை உரிமையாளர்! பெயர் ராஜசேகர்.
“சரத் சொல்லு. எதுக்கு இங்க வந்து கத்திக்கிட்டு இருக்க?” – ராஜசேகர்.
“அவ என்ன பண்ணியிருக்கா தெரியுமா??” – சரத்.
“தெரியும். ஒரு உயிரைக் காப்பாத்தியிருக்கா…”
“ஐயோ அப்பா ப்ளீஸ்… என்னமோ எனக்கு ஒரு உயிர் மேல அக்கறை இல்லாத மாதிரி போர்ட்டரை பண்ணாதீங்க. நானும் டாக்டர்தான்”
ஆம்! சரத்தும் மருத்துவமனை உரிமையாளர் ராஜசேகர் பையன்தான்! அவர் மூத்த மகன்!!
“சரி சரத். ஆனா அந்த நேரத்தில அவ என்ன பண்ணிருக்க முடியும்?”
“ஃபர்ஸ்ட் எய்ட் முடிச்சி… கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிருக்கணும். இப்போ இது எம்எல்சி… நம்ம டாக்டர்ஸ் போலீஸூக்கு அக்நாலேட்ஜ்மென்ட் பண்ணனும். எக்ஸ்ட்ரா பர்டன்”
“சரி விடு. இதுக்காக அவமேல இவ்வளவு கோபப்படாத”
“ப்பா!! நான் அதுக்காக மட்டும் கோபப்படலை. டாக்டர் ஷீலாகிட்ட ‘பாலோவ் வாட் ஐ செட்’-னு இவ சொல்லியிருக்கா. அவங்க எவ்ளோ எக்ஸ்பிரியன்ஸ்டு டாக்டர். அவங்ககிட்ட அப்படிப் பேசலாமா”
சரத் பேசுவது நியாயம் என்பதால், “அவ உன்னைவிட ரெண்டு வயசு சின்னவ. நீ சொல்லிக் கொடுத்தா… கத்துக்க போறா” என்று அமைதியாகச் சொல்லிப் பார்த்தார்.
“யாரு?? இவ! நான் சொல்லிக் கேட்பாளா??” என்றவன், “விடுங்க. என்னைக்கு நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கீங்க?! அவளுக்குத்தானா உங்க ஃபுல் சப்போர்ட்டும்” என்றான் அலுத்துப்போய்.
“அப்படியில்லை சரத்….” என்று அவனைச் சமாதானப் படுத்த வார்த்தைகளைத் தேடினார்.
ஆனால் அதற்குள், “வேண்டாம்-ப்பா. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் அம்மாகிட்ட சொல்லிக்கிறேன்” என்றவன் தாராவைப் பார்த்து, “வீட்டுக்கு வா. அம்மா முன்னாடி மிச்சத்தை கண்டின்யூ பண்ணறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான்.
இப்படிச் சொல்லிவிட்டு வெளியேறிச் சென்ற சரத் பற்றி… இவன் குழந்தைகள் நல மருத்துவன். தாராவைவிட இரண்டு வயது மூத்தவன். ஆதலால் அவளைக் காட்டிலும் அனுபவம் சற்று அதிகம். இருவருக்கும் நிர்வாகத்தில் சரிசமமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.
இருந்தும் அங்கே மருத்துவர்கள் சரத் முடிவிற்குத்தான் செவிசாய்ப்பார்கள்.
காரணம் மருத்துவ நிர்வாகத்தில் அவன் எடுக்கின்ற ஒரு அக்கறை! தாராவும் நிர்வாக பொறுப்புகளை ஏற்று நடத்துபவளே!! ஆனால் சரத்தை விட இரண்டு வருடங்கள் அனுபவம் குறைவு என்பதன் வெளிப்பாடுகள் சில தருணங்களில் வெளிப்படும்.
அது சரத்தைக் கோபம் கொள்ளச் செய்யும்.
தந்தை கஷ்டப்பட்டு உருவாக்கிய மருத்துவமனையை, அதன் நல்லபெயரை எந்த ஒரு காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க கூடாதென முனைப்போடு இருப்பவன்.
இவர்களின் நோக்கங்கள் ஒன்றாகவே இருந்தாலும், அதைச் செயல்படுத்தும் விதத்தினால் மாறுபட்டிருந்தனர். எனவே தாரா, சரத்… இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் வரும்.
மேலும் சரத்திற்கு அம்மா என்றால் உயிர். அவனுக்கு அம்மாதான் எல்லாமே! அவ்வளவு பிடிக்கும்!!
இதுவே சரத்!!
அவன் சென்றதும் தாரா அருகில் வந்த ஜெகன், “அக்கா… நீ வொரி பண்ணாத. அண்ணாக்கு அம்மா மட்டும்தான் சப்போர்ட். பட், உனக்கு நானும் அப்பாவும் இருக்கோம். டூ வோட்ஸ். நீதான் மெஜாரிட்டி” என்றான் ரகசியமாக!
அவ்வளவு களேபரத்துக்குப் பின் அவன் சொன்னது… சொன்ன விதம்… தாரா முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்தது.
“ஜெகன்” என்று ராஜசேகர் அழைத்தார்.
“அப்பா” என்று முன்னே சென்று நின்றான்.
“ED-ல நீதான இருந்த, நீயே டெசிஷன் எடுத்திருக்கலாம். எதுக்கெடுத்தாலும் அவ முன்னாடி வந்து நின்னு, அவளுக்குப் பிரச்சனையைக் கொண்டு வராத”
“சரி ப்பா”
“கொஞ்ச நாள்ல, நீ எம்.எஸ் படிக்கப் போகணும். ஸோ பி ரெஸ்பான்சிபிள்”
“ம்ம்ம்” என்று தலையைக் குனிந்து கொண்டே சொன்னவன், “தாரா வரேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.
அவன் ‘தாரா’ என சொல்லிச் செல்வதைப் புன்னைகையுடன் பார்த்தவளுக்கு, அப்போதுதான் அங்கு நின்றுகொண்டிருந்தவர் கருத்தில் வந்தார். தலையை குனிந்து கொண்டாள்.
அந்த அறை பெரியதுதான். ஆனால் அது இன்னும் பெரியதாக தெரிந்தது.
காரணம்… உள்ளே இருந்த இருவருக்கும் இடையே படர்ந்திருந்த அமைதி!
இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளி!!
“தாரா” என்று அழைத்துக் கொண்டு ராஜசேகர், அவளருகே வந்தார். அவள் இருக்கையைவிட்டு எழுந்து கொள்ளவும் இல்லை…. தலையை நிமிர்த்தவும் இல்லை.
“தாரா… சரத் சொல்றது சரிதானே! நம்ம டாக்டர்ஸ் யாரையும் அப்படி பேசக் கூடாது” என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் சொன்னார்.
அவர் பேசுவதைக் கவனிக்கின்றாளா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு தாராவின் உடல்மொழி இருந்தது.
“அப்பா என்ன….” என்று அவர் ஆரம்பிக்க, “ப்ச்” என்று எரிச்சல் காட்டினாள்.
உடனே, “சரி…சரி… நீ எது செஞ்சாலும் சரியாதான் இருக்கும்” என்றார்.
அவர் அப்படிச் சொன்னாலும் தாரா முகத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை.
“சரத் சொன்னானே…” என்று மீண்டும் ஆரம்பிக்கப் போனவரை, “ப்ளீஸ், சரத் எதும் சொன்னா, அதுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன். நீங்க இடையில” என நிறுத்தியவள், “பீலிங் டயர்ட். ஸோ… ” என்று பாதியிலேயே நிறுத்தினாள்.
அவள் முகத்தில் தெரிந்த களைப்பை பார்த்து, “சாப்பிட்டியா? சாப்பிடலனா, சாப்பிடு. மணி நாலாகப் போகுது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று கனிவுடன் சொல்லிவிட்டு வெளியேறினார்.
அவர் சென்ற பிறகே, தாரா நிமிர்ந்து நிம்மதியாக மூச்சு விட்டாள்.
வெளியே சென்ற ராஜசேகர் அங்கிருந்த, அந்த தளத்தின் செவிலியர்களைப் பார்த்து, “சிஸ்டர் இங்க வாங்க” என்று பொதுவாக அழைத்தார்.
மொத்த செவிலியர்களும், ‘என்ன டாக்டர் வேணும்?’ என்று கேட்டுக்கொண்டு வந்து அவர் முன் நின்றனர்.
“ஒருத்தர் போதும்…” என்றாலும் யாரும் செல்லவில்லை. ஏனெனில் அவர்மீது இருந்த மரியாதை அப்படி!
“சொல்லுங்க டாக்டர்” என்றார் ஒரு செவிலியர்.
“உங்க மேம் டயர்டா இருக்குனு சொன்னாங்க. இனிதான் சாப்பிடுவாங்க போல”
“ஆமா டாக்டர். ஒரு ஐவிஎஃப் கேஸ் முடிச்சிட்டு இப்போதான் வந்தாங்க”
“ஓ! கொஞ்சம் அவங்க ரிலாக்ஸானதுக்கு அப்புறமா மத்த கேஸ் அனுப்புங்க”
“ஓகே டாக்டர்”
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்”
“ஷூர் டாக்டர்”
“சரி, நீங்க போங்க” என்று அவர் சொன்ன பிறகே, செவிலியர்கள் கலைந்து சென்றனர். ராஜசேகரும் தன் அறை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.
ராஜசேகர் சென்று கொண்டிருக்கும் போதே அவரைப் பற்றி… தன் மருத்துவப் படிப்பு முடிந்ததுமே, சின்ன இடத்தில் மருத்துவப் பணியைத் தொடங்கினார். கடும் முயற்சிகள் செய்து, படிப்படியாக முன்னேறி இன்று இத்தகைய பெரிய பன்முக சிறப்பு மருத்துவமனை உருவாக காரணமானவர்.
மிகவும் எளிமையானவர். தன்னிடம் வேலை செய்பவர்களிடம் கூட அதிர்ந்து பேசாதவர். மருத்துவமனை வெளியிலும், உள்ளேயும் நிறைய மரியாதையை சம்பாதித்து வைத்திருக்கிறார்.
ஜெகன் எப்படியோ… அப்படித்தான் ராஜசேகரும்!
தாரா கண்கள் லேசாகக் கலங்கினாலும், முகம் சற்று கலக்கம் காட்டினாலும் அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
இதுவே டாக்டர் ராஜசேகர்!
உள்ளே தாரா! சரத் சொல்லிச் சென்றதையே யோசித்துக் கொண்டிருந்தாள். டாக்டர் ஷீலாவிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டோமோ? என்று சந்தேகம் வந்தது.
அப்படி எண்ணம் வந்த அடுத்த நொடியே, டாக்டர் ஷீலாவை அலைபேசியில் தொடர்பு கொண்டாள்.
சிறிது நேரம் பேசிவிட்டு, கடைசியாக தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டாள். அதற்கு அவரோ, ‘தாரா பேசினதுக்காக, நான் ரெக்ரெட் பண்றேன்’ என்று சரத் சொன்னதாகச் சொன்னார்.
‘சரி’ என்று அழைப்பைத் துண்டித்தாள்.
சற்று நேரம் எந்த இடையூறும் இல்லாமல் தனியாக இருக்க வேண்டும் என்று தோன்ற, வெளியே சென்று செவிலியரிடம், ‘கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்’ என சொன்னதற்கு, ‘ஏற்கனவே உங்க அப்பா சொல்லிட்டுத்தான் போனாங்க மேம்’ என்று சொன்னார்.
ஏதும் சொல்லாமல் உள்ளே வந்துவிட்டாள். மேசை மீது சாய்ந்து நின்றபடியே, ஏன் இப்படி ஒரு சூழ்நிலையில் தேவாவை சந்திக்க நேர்ந்தது?! மேலும் அவன் முகத்தைக் கூடச் சரியாக பார்த்துப் பேச முடியவில்லையே? இதை நினைக்க நினைக்க மனம் கனத்துக் கொண்டே போனது.
காலையில் தேவாவைப் பார்த்த போதிருந்த ஒரு உற்சாகம் வடிந்துவிட்டது போன்ற உணர்வு.
சட்டென, ‘ச்சே’ என்று தலையை உலுக்கிக் கொண்டு, ‘தாரா இப்படி இருக்கக் கூடாது’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். அறையிலிருந்த ஓய்வறைக்கு சென்றாள். வாஷ் பேசின் முன்னே சென்று நின்றாள். டேப்பை திறந்துவிட்டு முகத்தில் தண்ணீரை வாரி வாரி அடித்தாள்.
அதன்பின் எதிரில் இருந்த முகக்கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு, ‘சீயர் அப் தாரா. தேவா மாதிரி ஒருத்தன… நீ வேற எந்த மாதிரி சிச்சுவேஷனல மீட் பண்ணிருக்க முடியும்னு நினைக்கிற?
பக்கத்தில பார்க்கணும்னு நினைச்ச பார்த்திட்ட. நெக்ஸ்ட் டைம் பார்க்கிறப்ப உன் பேர் சொல்லிக்கோ. அவ்ளோதான். ஹேவ் ஃபெய்த் இன் யூ அன்ட் இன் யுவர் லவ் கேர்ள்!’ என்று மனதை ஆறுதல் செய்து கொண்டாள்.
மனம் லேசாகுவது போல் இருந்தது.
பிடிப்பானுக்குள் இருந்த கூந்தலை… விரித்துவிட்டாள். நன்றாக முடிகளைக் கோதிவிட்டுக் கொண்டு, முகத்தை இருகைகளாலும் துடைத்துவிட்டு… முகக் கண்ணாடி பார்த்தாள்.
முகம் காட்டும் கண்ணாடி அவள் அகம் காட்டியது. அகத்தில் இருந்த காதல், அதில் தெரிந்தது. அந்தக் காதலைக் கண்டவுடன், களைப்பாக இருந்த முகம் களிப்பைக் காட்டத் தொடங்கியது.
மீண்டும் மனம் உற்சாகம் கொண்டது. இப்போது முகக்கண்ணாடி அகத்தில் இருபவனைக் காட்டிச் சிரித்தது.
அந்தக் காதல் காட்சிப்பிழையை ரசித்தவள், தண்ணீரைக் கண்ணாடி மீது வீசிவிட்டு, ‘லவ் யு தேவா’ என்று சொல்லிக் கொண்டாள்.

