Kathambari Novels
அத்தியாயம் – 29 [Final]
மேடையிலிருந்த பாவை கவனத்தில் இருந்தது எல்லாம் வேணிம்மா கற்றுக் கொடுத்த இசையும், அவர்கள் இருவரின் கனவுதான்! மெல்லிசையாய் வீணையின் மீட்டலோடு கச்சேரித் தொடங்கியது!
வீணை மற்றும் மிருந்தங்க இசையுடன் சேர்ந்து, “எல்லாம் இன்பமயம்” என்று தேன்பாவை பாட ஆரம்பித்து கானமழை பொழியத் தொடங்கினாள்!!
“எல்லாஆஆம் இன்ப மயம் புவி மேல்…” என்று ஒவ்வொரு முறையும் ‘எல்லாம்’ என்று பாடுகையில் பொடிப் பொடிச் சங்கதிகள் போட்டுப் பாடினாள்.
“அல்லாஆஆதனவும்” என ‘உம்’ ஆலாபனைப் பாடியவள், “ஆஆஆ… ஆ… ஆஆ” என்று ‘ஆ’ என்ற சப்தம் கொண்ட நீண்டதொரு ஆலாபனை பாடினாள்.
பின் ஒரு சிறு முறுவலுடன் முன்னிருக்கும் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டே,
“அல்லாஆதனவும்…” என்ற வரியை பாடி முடித்த நொடியிலே, “எல்லாம் இன்ப மயம்…” என்று மீண்டும் பல்லவி பாடுகையில், பாடலின் தாளத்திற்கு ஏற்ப மிருதங்க வித்வான் வாசித்தார்.
வாய்ப்பாட்டில் ஒரு நொடி நிறுத்தம்!
அதன்பின், “மலையின் அருவியிலே… வளர் மழலை” என்ற வரியை இருமுறை பாடிட லகரங்களும் ழகரங்களும் அவள் உச்சரிப்பில் உவகை கொண்டன!
மேலும் கேட்போரின் கண் முன்னே மலையும் மழலையும் வந்து போயின!
முட்டிகளில் மெல்லிய அசைவு கொடுத்து, “மலரின் மணந்தனிலே…” என்ற வரியை முக்கனிச் சுவையில் தோய்த்தெடுத்தக் குரலில் பாடி முடித்தாள்.
மேலும் மலரிதழ், வயல்வெளி, நிலவொளி, ஆழ்கடல்… இவையாவும் எட்டிப் பார்த்துப் போனது, தன் இசையால் கேட்போரைக் கட்டிப் போட்டிருப்பவளின் கச்சேரியை!
முன்னிருந்த மைக்கை லேசாக சரிபடுத்தி, “கலைஞன் சிலையிலும்…” என்ற வரியை ஒரே மூச்சில் பாடிவிட்டு முதல் வரியில் வந்து முடிக்கையில் தோகை விரித்தாடும் மயிலின் அழகு குரலில் கொட்டிக்கிடந்தது!
கண் மூடி கண் திறக்கும் காலஅளவில் ஓர் நிறுத்தம்!!
அதன் பன், சில ஸ்வர வரிசைகள் தாளங்கள் போட்டபடி பாடியவள், “எல்லாம் இன்பமயம்” என தொடங்கிய இடத்திலே முடித்தாள். இந்த இடத்தில் மிரட்டும் மிருதங்கமும், தேன்மிட்டாய் போன்ற தேன்பாவை குரலும் போட்டி போட்டுக் கொண்டன.
“ரிகரிஸரிகக… ஆஆஅ… ஆ… ஹா” என்ற ஆலாபனையை அலட்டாமல் பாடி, வீணை இசைக் கலைஞரைப் பார்த்து ஓர் மெல்லிய நகையாடும் முகத்தோடு, “இன்ப மயம்” என முடித்தாள்.
“தஸகபதப கபகக தப” என கைகள் உயர்த்தி, கண்கள் மூடி கமகங்களுடன் ஸ்வர கோர்வை பாடுகையில் களைப்பெல்லாம் களிப்பாய் மாறும் விந்தை நடந்தது அரங்கத்தில்!
இன்னும்… ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் எல்லாம் சேர்ந்த ஸ்வர கோர்வைகளை வலக்கரத்தை காற்றில் அசைத்தபடி பாடி, அரங்கத்தில் இருப்போர் இதயத்தை இன்னிசையால் இயக்கினாள்.
“பதம பஸநி பதம பகரி ஸரி நிச தநி ஸநிதபமப” என்று இன்னும் சில ஸ்வரக் கோர்வைகளை, முன்வரிசையில் அமர்ந்திருக்கும் சில கர்னாடக இசைப் பாடகர்களைப் பார்த்துப் முகமலர்ந்து பாடினாள்.
அது இன்னும் அழகூட்டின கச்சேரிக்கு!
கடைசியில் கருஞ்சிவப்பு அட்டிகை அணிந்த கழுத்தை நிமிர்த்திக் கொண்டு, கண்மூடி அட்சரம் மாறாமல் அனாசியமாக சில ஸ்வர கோர்வையைப் பாடி, “எல்லாம் இன்பமயம்” என்று கண் திறந்து பல்லவியைப் பாடுகையில் கேட்போரின் கரகோஷமும் சேர்ந்து கொண்டது.
அந்தச் சந்தோஷத்தில், “எல்லாம் இன்ப மயம்…” என்று பாடி பாடலை நிறைவு செய்தாள் தேன்குரலாள் இந்தத் தேன்பாவை!
கைதட்டல்கள் தொடர்ந்தன! இன்முகத்தோடு இருகைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தாள்!!
பாவையின் இன்னிசையை நேரலையில் கேட்டவர்களின் இதயத்தில், அவள் குரல் மற்றும் இசையறிவின் மேல் ஒரு பிரமிப்பு, ஒரு நன்மதிப்பு வந்திருக்கும்!
நம்பிக்கையோடு இருந்ததால் நன்மதிப்பு கிடைத்தது. இந்த நன்மதிப்பை நற்பெயராக மாற்றிக் கொள்ள இனிமேல் முயற்சிக்க வேண்டும்!
நிச்சயம் முயற்சிப்பாள்!! சரி, அவள் கச்சேரியை முன்வரிசையில் அமர்ந்து கேட்ட உறவுகள் எப்படி உணர்கின்றனர்?
செண்பகம் பெருமையாக உணர்ந்தார்! மகனும் மருமகளும், அவர்களுக்குப் பிடித்த விடயத்தைச் செய்து பேரும் புகழும் அடைய வேண்டும் என மனதார ஆசிர்வதித்தார்!
சிவபாண்டியன் உயிர்துணையின் இசைக் கச்சேரியைக் கேட்டு மெய்மறந்து இருக்கின்றான்!! வேறென்ன சொல்ல?!
அதன்பின் சற்றுநேரத்திற்கு ஏனையோரின் கச்சேரி! தனி ஆவர்த்தனங்கள்! இசையில் சாதித்தோருக்கு சால்வை அணிவித்து பாராட்டுதல்! இவை மட்டுமே அந்த அரங்கத்தில்!!
எல்லாம் முடிந்ததும் இன்று கச்சேரி செய்தவர்களில் அவள் வயதையொத்த பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருந்தாள் பாவை.
சுற்றுப் புறத்தைக் கவனிக்காமல் ராகமொழி பேசுபவர்களுடனான பேச்சு சுவாரஸ்யமாக சென்றது. பரஸ்பரம் அலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றார்கள்.
பின் அவளுக்காக காத்துக் கொண்டிருந்த செண்பகம், சிவாவுடன் சேர்ந்து, அரங்கத்திலிருந்து வெளியே வந்தாள். பாடல் பாடி முடித்ததிலிருந்து, பாவை முகமெங்கும் சிரிப்புதான்! மனதெங்கும் பூரிப்புதான்!
வேணிம்மா ஆசை, கனவு நிறைவேறிவிட்டது அல்லவா? அது தந்த பூரிப்பு!
தனியே பாடி, தனக்கென்று பிரத்யேக கைதட்டல்கள் பெற்ற தருணங்களை நினைக்கையில், மனம் தரையில் நின்று தாவிக் குதித்துக் கொண்டிருந்தது!!
அதே மனநிலையுடன் காரை நோக்கிப் போய்க்கொண்டிருக்கையில், “கேட்க நல்லா இருந்தது பாவை” என்றார் செண்பகம்.
“தேங்க்ஸ் செண்பாம்மா” என சந்தோஷத்தில் சிரித்தவள், அமைதியாக வந்த கணவனைப் பார்த்து, “நீங்க ஒன்னும் சொல்ல மாட்டிக்கிறீங்க?” என்றாள்.
“நல்ல வாய்ஸ். இதெல்லாம் எப்படி ஞாபகம் வச்சிருக்க?” என்று கேட்டான்.
“நாலு வயசிலருந்து வேணிம்மாகிட்ட கத்துக்கிறேன்” என்று பெருமையாகச் சொன்னாள்.
இப்படியே மூவரும் பேசிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். வீடு வந்ததும், ‘நேரமாச்சு, சாப்பிடலாம்’ என்று செண்பகம் சொன்னதற்கு, ‘பூஜை செய்த பிறகே உணவு’ என்று குளிக்கச் சென்றாள் பாவை.
பசி மிகுதியாக இருந்ததால் சிவாவும் செண்பகமும் பேசிக் கொண்டே இரவு உணவு எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர். சாப்பிட்டு முடித்ததும் சிவா, ‘ஃபோன் பண்ணனும் மா’ என்று அறைக்குச் சென்றான்.
சற்று நேரத்தில் குளித்துவிட்டு வந்த பாவை அவளுக்காக வரவேற்பறையில் அமைக்கப்பட்டிருந்த பூஜை மாடத்தின் முன் அமர்ந்துகொண்டு, விளக்கேற்றி கடவுளை வழிபட ஆரம்பித்தாள். அதன்பின்னரே சாப்பிட வந்தாள்.
வால் செய்வதை எல்லாம் பார்த்திருந்த செண்பகம்… அவளுக்குப் பரிமாறிக் கொண்டே, “இது பழக்கமா?” என்றார்.
“ம்ம்! வேணிம்மா இப்படித்தான் செய்யச் சொல்வாங்க” என்று சாப்பிட ஆரம்பித்தாள். “அப்புறம் செண்பாம்மா, நளினி கங்கிராட்ஸ்னு மெசேஜ் அனுப்பிருக்காங்க” என்றாள் மகிழ்ச்சியாக!
“நல்லது” என்று சிரித்தவர், “கொஞ்ச நாள்ல உன்னைப் புரிஞ்சி நடந்துப்பா. நீ எதையும் நினைக்காத” என்று மனதிலிருப்பத்தைச் சொன்னார்.
இதழ்கள் விரிந்த ஒரு புன்னகையோடு தலையாட்டினாள்.
நளினி, பாவை இரண்டு பேருக்கும் பெரிய வயது வேறுபாடில்லை. இருவரின் உறவுநிலையும் உரிமையை எடுத்து கொள்ளல், விட்டுக் கொடுத்தல், கட்டிக் காத்தல் போன்றவற்றைச் சார்ந்து உள்ளது!
எனவே உரசல்கள் வந்து போகலாம். எனினும் உறவுநிலை மாறாது!
உதட்டளவு பேச்சுகள் ஆரம்பித்து… அவை உரிமையான பேச்சுகளாக மாறி, உள்ளன்பு வருவதற்கு சற்று காலஅவகாசம் தேவை!
இப்படி மாமியாரும் மருமகளும் பேசுகையில் அறையிலிருந்து வெளியே வந்த மதி, ” எப்போ வந்தீங்க?” என்றார் செண்பகத்திடம்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், தூங்கிட்டு இருந்தீங்களா” – செண்பகம்.
“ம்ம், சிவா சாப்பிட்டானா” என்று கேட்டுக் கொண்டே, அலமாரியிலிருந்து ஒரு பூங்கொத்தை எடுத்து மேசையில் வைத்தார்.
“சாப்பிட்டான்” என்ற செண்பகம், “யாருக்கு இது?” என்று கேட்டார்.
“மாப்பிள்ளை ஹைத்ராபாத் போனதால கச்சேரிக்கு வர முடியலைல. அதான் பாவைக்காக அனுப்பியிருக்காரு” – மதி.
“நல்லாருக்கு மாமா” என்று ஆசையாக பூங்கொத்தை தன் பக்கமாக இழுத்து வைத்துக் கொண்டாள் பாவை.
“சாப்பிடு மா” என்று மதி பாவையைப் பார்த்துச் சொல்லிவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டார்.
இரண்டு நாளில் மதி மனநிலை மாற்றம் இந்த அளவே! அதாவது ‘சாப்பிடுங்க’ என்று பொதுவாக சொன்னவர், ‘சாப்பிடு’ என்று பாவை முகத்தைப் பார்த்துச் சொல்லும் அளவிற்கு!! இன்னும் மாற்றம் வரும்!
சற்றுநேரம் செண்பகத்திடம் பேசிவிட்டு, பாவை அறைக்குப் போனாள்.
கண்ணாடித் தரை, வண்ண கூழாங்கற்கள், போன்சாய் மரங்கள், பாண்டியன் எடுத்த புகைப்படங்கள் என்றிருந்த அறையில்… ஒரு பக்க சுவரில் மட்டும் ஓர் சிறிய மாற்றம் வந்திருந்தது.
பாவை தந்த பாண்டியனின் பிறந்தநாள் பரிசு புகைப்படமும், பாண்டியன் எடுத்ததில் பாவைக்குப் பிடித்திருந்த ‘கிரிஸ்டல் பால்’ புகைப்படமும் அழகிய வேலைப்பாடுககள் கொண்ட சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தன!
பாவை வந்தபோது பாண்டியன் ‘ராக்கிங் சேரில்’ கண் மூடிச் சாய்ந்திருந்தான்.
கண்ணாடித் தரையின் மேல் பூனை போல் நடந்து கணவனருகில் சென்றதும், அவன் மடியில் அமர்ந்து அவன் மனதில் தலைசாய்த்துக் கொண்டாள். திடீர் பாரத்தை தித்திப்பாய் தாங்கி, தாரத்தை ஆரத்தழுவிக் கொண்டான்.
சற்று நேரத்திற்கு பொதுவானப் பேச்சுகள் பேசிக் கொண்டிருந்த பாவை, சலனங்கள் தெரிந்த கணவனின் கண்களைப் பார்த்ததும், சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டாள். அவள் சத்தங்கள் நின்று போனதும், ஒரு மென்சிரிப்போடு மனதில் சாய்ந்திருந்த சரிபாதியை சற்றே நிமிர்த்தி அவளது முகம்தனில் முத்தங்கள் வைக்க ஆரம்பித்தான் பாண்டியன்.
அவன் இதழ் பதித்த இடத்திலெல்லாம்… சின்ன சின்ன இதயங்கள் உருவாகி ‘என்ன? என்ன?’ என்று வினாயெழுப்பித் துடிக்கத் துவங்கின.
கன்னத்துப் பருக்கள் வெட்கத்தை வெளிப்படுத்த, “நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டோமா?” என்று மனைவி கேட்க, ‘ஆமாமடீ சரிபாதியே’ என்பது போல் மையலாய் முகிழ்நகை புரிந்தான் கணவன்!
அதன்பின் வார்த்தைகளுக்கு விடுமுறை விட்டாயிற்று!
இவ்வாறு இயல்புகள் மாறாமல் இதயங்கள் பரிமாறிக் கொள்வது எவ்வளவு அழகு!? அவ்வாறு இதயங்கள் பரிமாறிக் கொண்ட பின், இதழ்கள் பரிமாறிக் கொள்வது எத்தனை இதமானது!? இயல்பானது!?
இன்றியமையாததும் கூட!
இங்கேயும் அதுதான்! ஆதலால்தான் வார்த்தைகளுக்கு விடுமுறை!! ஆம்! வார்த்தைகள் உச்சரித்த உதடுகள் முத்தத்தை உச்சரிக்க ஆரம்பித்திருந்தன!
கறை நல்லது! ஆம் முத்தத்தின் கறை நல்லது!!
முத்தத்தின் பின்?? அதன் பிறகு தாமதம் கொடிது! தாம்பத்தியம் இனிது!!
இரண்டு நாட்கள் பின்னர் வந்த ஒரு நாளின் அதிகாலை பொழுது! நாகலாபுரம் அருவி!!
சில இடங்களில் பாசிகள் படர்ந்து மிகவும் வழுவழுப்பாக மாறிய பாறைகள்! பெரும்பான்மையான இடங்களில் சொரசொரப்பான பாறைகள்!
பச்சை பசேலென இருந்த செடிகளின் கிளைகள், பாறை இடுக்குகளிலிருந்து ‘என்னை பார்?’ என்று சொல்வது போல வெளியே நீட்டிக் கொண்டிருந்தன!
கொஞ்சம் பெரிய மரங்கள் ஆங்காங்கே! நிமிர்ந்து பார்த்தால் அதிகாலைப் பொழுதின் நீலவானம்! குனிந்து பார்த்தால் கணுக்கால் அளவு நீர்!
இப்படி ஒரு இடத்தில் நின்று, “இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று பாவை கேட்க, “இங்க இருக்கப்பதான் உன்னைப் பத்தி அம்மா சொன்னாங்க” என்றான் பாண்டியன் மனைவியின் கேள்விக்குப் பதிலாய்!
“ஓ!” என்று வியந்தாள்.
“அதான்! உன்னை இங்க கூட்டிட்டு வரணும்னு ரொம்ப நாள் ஆசை!” என்றான் விருப்பமாக!
“அப்படியா?” என்றாள் ஆச்சரியம் விலகாத குரலில்!
“ம்! ரெண்டு மூணு டைம் உன்கிட்ட சொல்லியிருப்பேனே” என்று தண்ணீரின் ஊடே நடக்க ஆரம்பிக்க, பாவை யோசித்துப் பார்த்தாள். கல்யாணப் புடவை எடுத்த அன்று கேட்டது மட்டும் ஞாபகத்திற்கு வந்தது.
‘இன்னொரு நாள்’ என்று யோசித்துக் கொண்டிருக்கையில், “பாவை வா” என பாண்டியன் அழைத்தும், புடவையை லேசாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, அவனை நோக்கி நடந்து சென்றாள்.
கையில் கேமராவுடன் நின்றவன் அருகில் வந்து, “நீங்க போட்டோ எடுக்கப் போறீங்களா?” என்று கேட்க, “ம்ம்ம்” என்றவன் ஒரு பாறையைக் காட்டி, “நீ அங்க உட்கார்ந்துகோ” என்றான்.
“ஐயோ! பட்டுப்புடவை பாழாயிடும்” என்று போகாமல் நின்று கொண்டாள்.
“பாழான நான் வாங்கித் தர்றேன்” என்று சொல்லி, ‘போய் உட்காரு’ என்பது போல் சைகை செய்தான்.
“இப்படித்தான் சொல்லுவீங்க. ஆனா வாங்கித் தர மாட்டிங்க” என்றாள் குறையாக!
‘எதைச் சொல்கிறாள்?’ எனப் புரியாமல் குழம்பிப் போய் பார்த்தான்.
“முத நாள் பேசினப்போ… ஒரு லிப்ஸ்டிக்க பாழாக்கிட்டு வாங்கித் தர்றேன்னு சொன்னீங்க” என்று நினைவுபடுத்தி, “இன்னும் வாங்கித்தரலை?!” என்றாள் நையாண்டித்தனத்துடன்!
“சாரி! நிஜமா மறந்திட்டேன். பட் இந்த தடவை கண்டிப்பா மறக்க மாட்டேன். போ” என்று சிரித்துக் கொண்டே சொல்லி அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் சென்றதும் நீருக்குள் இருந்த சிறு பாறைகள் மீது பார்த்து பதனமாக நடந்து ஒரு பாறையின் மேல் அமர்ந்து கொண்டாள். இலையும் தழையுமாக இருக்கும் இடத்தில், ‘எதைப் புகைபடம் எடுப்பான்?’ என்று பார்த்தாள்.
பாண்டியனும் சற்றுநேரம் வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள் என்று சுற்றி வந்தான். பின் பாவை அருகில் வந்து அமர்ந்தான்.
“போட்டோ எடுத்தாச்சா?” என்றாள்.
“ம் , பாரு” என்று கேமராவை அவளிடம் கொடுத்துவிட்டு, கைகளைத் தலைக்கு ஏதுவாக வைத்து பாறை மேல் படுத்துக் கொண்டு இயற்கையை ரசித்தான்.
ஆறடி உயர பாறையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி! அங்கிருந்து விழுந்து, சற்று பெரிய கூழாங்கற்கள் மேல் ஓடும் நீர் மற்றும் அதன் சலசலப்பு! அருகே ஓர் கற்பாறை! நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் தெரித்ததால் ஈரமாகியிருந்த பாறை!
அந்த ஈரத்தை சிவபாண்டியனால் உணர முடிந்தது. காரணம் அதன் மீதுதான் படுத்திருந்தான். இப்பொழுது ரசனையுடன் தன்னருகில் அமர்ந்திருப்பவளை பார்த்தான்.
சுற்றிலும் இருக்கும் சூழலுக்கு பொருத்தமாக இலைப் பச்சை வர்ண புடவை உடுத்தியிருந்தாள்! ஒரு சான் அளவிலாலான கறுப்பு கரை! கரை முழுவதும் தங்க ஜரிகையில் சரியான இடைவெளியில் உலகப்புகழ் காதல் சின்னமான தாஜ்மஹால் இழையப்பட்டிருந்தது!
ஒரே நேரத்தில் இயற்கை ரசிகனாகவும், இல்லாள் ரசிகனாகவும் அவதாரம் எடுத்திருந்தான் போல!!
இதே நேரத்தில் பாண்டியன் எடுத்த புகைப்படங்களை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை!
முதலில் வண்ணத்துப் பூச்சியின் படம்! இறக்கைகளைத் தூக்கிக் கொண்டு ஆறு கால்களையும் பழுப்பு நிற மரப்பட்டையில் ஊன்றி நின்ற ஊதா நிற வண்ணத்துப் பூச்சி!
உணர் கொம்புகள், உறிஞ்சி குழல்கள், உடற்பகுதி, பரிசம்… இவையாவும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன!!
அடுத்தது ஒரு வண்டின் புகைப்படம்! மலரின் மகரந்த மடலிலிருந்து எடுத்த மகரந்தத்தை பின்னங்காலில் சேர்த்து வைத்திருந்த தேனீ! அது மலரிதழில் நின்று இளைபாறிக் கொண்டிருந்த நிலையில்!
அதற்கடுத்தது பச்சை இலையின் ஒற்றை நீர்த்துளியில் அடங்கிய பாறைகள் மற்றும் நீர்வீழ்ச்சி!
“சின்ன சின்னதெல்லாம் பெரிசா தெரியுது” என்றாள்.
“ஹனி, இது மேக்ரோ போட்டோகிராபி. அப்படித்தான் இருக்கும்” என்றான் எழுந்து அமர்ந்தபடி!
“காஃபி குடிப்போமா?” என்று பாவை கேட்டதும், “ம்ம்” என்றான் எழுந்து நின்று சோம்பல் முறித்தபடி!
வீட்டிலிருந்து வரும்போதே காஃபி தயாரித்து பாவை எடுத்து வந்திருந்தாள். பிளாஸ்கிலிருந்த காஃபியை இரண்டு காகித கோப்பையில் ஊற்றி, ஒன்றை நின்று கொண்டிருந்தவனிடம் நீட்டினாள்.
இரண்டு மிடறு குடித்ததும், “பாவை” என அழைத்து, “ஒன்னு கேட்கட்டுமா?” என்று கேட்டான் ஏடாகூடத்தின் முன்னறிவிப்பாக!
நிமிர்ந்து பார்த்து, “நீங்க என்ன கேட்கப் போறீங்கனு நானே சொல்லட்டுமா?” என்றாள் அவன் எண்ணத்தை படித்தவளாக!
அவன், “ம்ம்” என்றதும், “காஃபி கூட நல்லா போட தெரியாதா, அதான?” என்று முறைப்பாகக் கேட்டாள்.
“ப்பா! அன்டர்ஸ்டான்டிங் வேற லெவல் ஹனி” என்று முறுவலிக்க, “உங்களை” என்று முகத்தைச் சுருக்கி எழுந்து அடிக்க வருகையில் அவளிடமிருந்து தப்பிக்க ஓட ஆரம்பித்தான்.
பாறைகளைக் கடந்து… காட்டு வழிப் பாதையில் ஓடும் கணவனைத் துரத்திப் போனாள் கானங்களின் காதலி! காதலில் விழுந்தவர்கள் ஓடுவதால் காட்டு வழிப்பாதை காதல் வழிப்பாதையாக மாறியது!!
காதல் மிக அழகானது! மறுக்க முடியாத ஒன்றுதான்! ஆனால் புரிதலுடனான காதல் ஆழமானதாகிறது! இவர்களுக்குள் முதலில் இருந்தது அழகான காதல்!
இப்போதிருப்பது ஆழமான காதல்! எப்பொழுதும் மாறாமல் இருக்கும்!!
அருவியின் சத்தத்தைத் தோற்கடிக்கும் ஆனந்தச் சிரிப்புடன் இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்! காதல் வழிப்பாதையில் தூரங்கள் அழகல்லவா? எனவேதான் நிற்காமல் ஓடுகிறார்கள் பாண்டியனும், பாவையும்!
சுருக்கமாக இசை… இயற்கை மற்றும் இந்த இருவரோடு, இப்போது இன்பமும் இணைந்து கொண்டது!!

Ithoda 3 rd time padikuren athy maari solapona inum azhagaa eruku padikka. Nethu night intha kathaila vara oru episode paduchutu azhuthen four years munnadi first time padikirapovum azhuthen. Athan yethume maarala athy feel athan unga writing ❣️ nice story author ji.
Thank you so much Salma 🙂